5. அனைத்தும் வல்லவனே நல்ல துறவியாக முடியும்
இஸ்லாமியர், கிறிஸ்தவர், சமணர், பவுத்தர் ஆகியோர் தம் வீட்டு மக்கள் இறைப்பணிக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைவர். அதைத் தம் பேறெனக் கருதுவர். சாதாரணமாக வேலையற்ற வீணர்கள், சோம்பேறிகள், எத்தர்கள், குடும்ப பாரத்தைச் சுமக்க அஞ்சுகிறவர்கள், குறுக்கு வழியில் சம்பாதிக்க விரும்புகிறவர்கள் ஆகியோரே சன்னியாசம் வாங்கிக்கொள்வதாக இக்கால இந்துக்களிடையே ஒரு தவறான நம்பிக்கை நிலவுகிறது. காரணம், ஆன்மீகத் தேடல் குறித்த சரியான அறிவின்மை. ஆனால், பொய்வேடமிட்டோர்எந்நாட்டிலும் எம்மதத்திலும் எக்காலத்திலும் இருந்திருக்கின்றனர். பாரதி தன் பாஞ்சாலி சபதத்தில் அத்தினபுரத்தில் யார்யார் இருந்தனர் எனச் சொல்லும்போது:
மெய்த்தவர் பலருண்டாம் – வெறும்
வேடங்கள் பூண்டவர் பலருமுண்டாம்
உய்த்திடு சிவஞானம் – கனிந்
தோர்ந்திடும் மேலவர் பலருண்டாம்
பொய்த்த இந்திர சாலம் – நிகர்
பூசையும் கிரியையும் புலைநடையும்
கைத்திடு பொய்ம்மொழியும் – கொண்டு
கண்மயக்காற் பிழைப்போர் பலராம்.
என்று சொல்லவில்லையா?
நரேந்திரன் எப்படிப்பட்டவன்? அப்படி எதற்கும் உதவாத சாவியா (தானிய உள்ளீடற்ற நெல், பதர்)? அவன் மரத்திலே ஏறியபோது பிரம்மராட்சசன் இருப்பதாக அச்சுறுத்திய பெரியவரைப் பார்த்தோமே. அங்கே இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.
அவருக்கு நரேனின் மேல் மிகுந்த அன்பு இருந்தது. மரத்தில் தொங்கிக்கொண்டு இருந்த நரேனிடம் அவர் மீண்டும் பேசினார். அவர் கேட்டார்
“இப்படியே வீடு வீடாக மரத்தில் தொங்கிக் கொண்டுதான் இருப்பாயா? இல்லை, படிக்கவும் செய்வாயா?”
“ஐயா, நான் படிக்கவும் செய்வேன், விளையாடவும் விளையாடுவேன்” என்றான் நரேன்.
உடனே அவனைச் சோதித்தார் கிழவர். புவியியல், கணிதம் இவற்றில் கேள்வி கேட்டார். கவிதைகள் ஒப்பிக்கச் சொன்னார். இந்தக் கடினமான தேர்வில் சிறப்பாகத் தேறினான் நரேன். கிழவர் அவனை ஆசீர்வதித்து “உன்னை நெறிப்படுத்த யார் இருக்கிறார்கள் என் மகனே? உன் தந்தை லாஹோரில் அல்லவா இருக்கிறார்?” என்றார். நரேனின் தந்தை விஸ்வநாத தத்தா பிரபல வழக்குரைஞர். பல ஊர்களில் அவருக்கு அலுவலகங்கள் இருந்தன.
“தினமும் காலையில் நான் படிக்கும்போது என் தாயார் உதவுகிறார்கள்” என்று சொன்னான். மிகவும் மகிழ்ந்த பெரியவர் “நீ மனிதர்களுக்குள்ளே மகா மனிதன் ஆவாய். நான் உன்னை ஆசிர்வதிக்கிறேன்” என்று முன்னுணர்ந்து சொன்னார்.
ஆங்கிலம், வரலாறு, வடமொழி ஆகியவற்றில் சிறப்பாகத் தேறிய நரேனுக்கு கணிதத்தில் ஆர்வம் குறைவு. அதை “மளிகைக் கடைக்காரன் கலை” என்று கேலி செய்வாராம். இசையில் மிகுந்த பாண்டித்தியமும், அனைவரையும் கட்டிப்போடும் குரலும் நரேனுக்கு இருந்தன. மற்றவரைப் போல அப்படியே பேசிக்காட்டுவான். நடிப்பான், பாடுவான். இவ்வளவு திறமைகளைப் பெற்றிருந்த நரேன் இருக்கும் இடம் எப்போதும் சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும்.
நரேனின் கல்லூரி நாளில் முதல்வர் வில்லியம் ஹேஸ்டி சொன்னார்: “நரேந்திரன் ஒரு மேதை. நான் உலகத்தின் குறுக்கும் நெடுக்கும் எவ்வளவோ பயணம் செய்திருக்கிறேன். ஜெர்மானியப் பல்கலைக் கழகங்களிலாகட்டும், தத்துவவியல் மாணவர்களிடையே ஆகட்டும், இதுவரை அவனைப் போலத் திறமையும் எதிர்காலமும் உள்ள ஒரு இளைஞனைப் பார்க்கவில்லை. வாழ்வில் ஒரு பெருநிலையை அவன் அடைவான்!”
இவன் கையாலாகாததால் உலகைத் துறந்தவனல்ல.
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு
(திருக்குறள், நீத்தார் பெருமை, 27)