ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்

“ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்” என்கிற இந்த அழகிய நூல் (நூல் பற்றிய விவரங்கள் கடைசியில்) ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோவில்களை விவரிக்கின்றது. பரவசமூட்டும் வரலாற்று செய்திகள், அழகிய புகைப்படங்கள், திருக்கோவில்களின் தன்மைகள், என தொய்வின்றி ஆஸ்திரேலியாவின் அனைத்து இந்து கோவில்களையும் இந்நூல் வர்ணிக்கிறது.

2001 ஆம் ஆண்டு குடித்தொகை மதிப்பீட்டின் படி ஆஸ்திரேலியாவில் வாழும் இந்துக்கள் 95,473. இவர்களில் தமிழ் இந்துக்கள் 17,703. 15 இந்து கோவில்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் வெங்கடேஸ்வரர் கோவில் முதல் டார்வின் சித்தி விநாயகர் கோவில் வரை. இந்நூலின் பக்கங்கள் தோறும் ஆசிரியரின்தெய்வீகப் பக்தியும், ஆராய்ச்சி சிரத்தையும் இந்து பண்பாட்டின் மீதும் அதைபேணும் தமிழ் மக்கள் மீதும் அவர் வைத்துள்ள அன்பும் வெளிப்படுகின்றன.

முதன் முதலாக ஆகம நெறிப்படி கட்டப்பட்ட கோவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவில் ஆகும். இதனை கட்ட மூதன்மையாக முயற்சி செய்தவர் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக் கழக விரிவுரையாளரான டாக்டர் பி பாஸ்கரராவ். 1978 இல் இதற்கான முயற்சிகள் ஆரம்பித்தன. 1979 ஆம் ஆண்டு நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக தியான மண்டபத்தில் விநாயகப் பெருமான் திவ்விய திருவுருவம் வழிபடப்பட்டு விக்கினங்கள் தீர்ந்து ஆலயம் எழும்பிட அருள் நாடப்பட்டது. திருப்பதி தேவஸ்தானம் வட்டியில்லா கடனாக ரூபாய் 600000 வழங்கியது. ஆனால் நிருவாக தடங்கல்களினால் ஒரு ஸ்தபதியை அனுப்ப இயலவில்லை. இந்நிலையில் ஆனந்த ராமசேஷன் அவர்கள் மூலமாக ஸ்தபதி ஜானகிரமணன் இத்திருப்பணியில் ஈடுபட்டார். 1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் நாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. “இந்நிகழ்ச்சி ஆஸ்திரேலிய இந்துக்களின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும்” என நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

இன்று இக்கோவிலில் விஷ்ணு கோவில் தொகுதியும் சிவன் கோவில் தொகுதியும் உள்ளன. விஷ்ணு கோவில் தொகுதியில் பத்து தனித்தனி கோவில்கள் உள்ளன, இதில் ஆண்டாளுக்கு சந்நிதி உள்ளது. வெங்கடேஸ்வரர், சந்திர மௌலீஸ்வரர், பார்வதி ஆகியோருக்கு ராஜ கோபுரங்கள் உள்ளன. 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதி தொடக்க பூஜையுடன் ஆரம்பித்து பெப்ரவரி ஒன்றாம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மதியம் வெங்கடேஸ்வரரும் சிவபெருமானும் வீதிவலம் வந்து அருள் பாலித்தனர். ஆசிரியர் இத்திருக்கோவிலின் சமூக சமரச முக்கியத்துவத்தை குறிப்பிட மறக்கவில்லை: “…ஆஸ்திரேலியாவிலுள்ள இலங்கை இந்துக்களுக்குச் சைவ வைணவக் கோவில்கள் ஒரே இடத்தில் இருப்பது ஏற்புடையதே! தற்போது வெங்கடேஸ்வரர் கோயிலின் தலைவராக இருப்பவர் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.” (பக்.31)

திலகர் பெருமான் பாரத விடுதலைக்கு விநாயகர் சதுர்த்தியை பயன்படுத்தினார் அல்லவா? அதைப்போல இந்து இயக்கங்களின் ஒற்றுமைக்கு ஆஸ்திரேலியாவிலும் பிள்ளையார் உதவுகிறார். அந்த நிகழ்ச்சியை ஆசிரியர் விளக்குகிறார்:

“1990 ஆம் ஆண்டு ஸ்ரீ சிவாய சுப்பிரமுனிய சுவாமி சிட்னிக்கு வருகை தந்தார். சிட்னியில் நடந்த கூட்டத்தில் சுவாமி உரையாற்றினார். அக்கூட்டத்தில் முப்பதுக்கும் அதிகமான இந்து சமய அமைப்புகள் பங்கு கொண்டன. அவ்வமைப்புகளிடையே கருத்துப்பரிமாற்றம் மிகக் குறைவாக இருந்தமை தெரியவந்தது. இக்குறைப்பாட்டைப் போக்குவதற்கு விநாயகர் சதுர்த்தியை எல்லா அமைப்புகளும் ஒன்றிணைந்து கொண்டாடுமாறு சுப்பிரமுனிய சுவாமி அறிவுரை வழங்கினார். அதற்குஅமைய விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவதற்குக் குழு ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. நியு சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலே விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட உகந்ததலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1991ஆம் ஆண்டு …முதன்முதலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கிட்டத்தட்ட எல்லா இந்து அமைப்புகளும் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது. [பக்.31]

2001 ஆம் ஆண்டு இறுதியில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மழை பொய்த்தது. புற்றைக் காடுகள் பற்றி எரிந்தனவாம். 2002 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி இந்துக்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலில் வருண வேள்வி நடத்தினர். அன்று இரவு மழை பொழிந்தது.[பக்.33]

சிட்னி திருமுருகன் கோவில் அமைந்திருக்கும் பகுதி ‘Mays Hills’ எனும் புறநகர். நம் மக்கள் அதனை வைகாசிக் குன்று என அழைக்கின்றனராம். மாதமும் பொருந்துகிறது. மலை வாழும் முருகனுக்கும் உகந்ததோர் பெயராகிறது. இலங்கைத் தமிழ் பெருமக்களால் அமைக்கப்பட்ட இத்திருக்கோவில் ‘யாழ்பாணத்தார் கோவில்’ என வழங்கி வருகிறது. 1983இல் சிவஜோதி தணிகை ஸ்கந்தகுமார் எனும் இலங்கை தமிழ் திருமுருக பக்தர் தொடங்கிய வாராந்திர கூட்டு வழிபாடு யாழ்பாணத்திலிருந்து பஞ்சலோக ஆகம முறையிலமைந்த திருமுருக விக்கிரகமாக முருகனை சிட்னிக்கு ஈர்த்து விட்டது. இந்த வாராந்திர வழிபாடு 1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் தேதி வேத ஒலியுடனும் திருமுறைப் பண்ணொலியுடனும் சிட்னி வைகாசி குன்றத்து திருமுருக திருக்கோவில் கும்பாபிஷேகமாக பரிணமித்தது. ஆண்டு தோறும் மகோத்சவ காலங்களில் வள்ளி தெய்வயானை சமேதராக வீதிவலம் வந்து அருள் பாலிக்கிறாராம் முருகக்கடவுள்.

சிட்னி முருகன் கோவில் வைகாசி விசாக கூட்டு வழிபாடு

அனைத்து இந்து மக்களும் பங்கு பெறும் இந்த செந்தமிழ் முருகன் திருக்கோவிலில் மற்றொரு அம்சம் குறிப்பிடத்தக்கது. “யாழ்பாணத்திலுள்ள திருக்கோயில்களில் நடைபெறும் மகோற்சவங்களை அக்கோயில்களை சுற்றி வாழும் கிராமத்தவர்களே பொறுப்பெடுத்து நடத்துவர். ஒவ்வொரு திருவிழாவையும் ஒவ்வொரு கிராமத்தவர் நடத்துவர்…அது போல சிட்னி முருகன் கோயில் திருவிழாக்களையும் ஒவ்வோர் உள்ளூராட்சிப் பகுதியிலும் இருக்கும் இந்துக்கள் பொறுப்பேற்று நடத்துகின்றனர். ‘நமது திருவிழா’ என அவர்கள் உரிமையோடு பேசிக்கொள்வதைக் கேட்கலாம்.” (பக்.49)

சிட்னி முருகன் கோவில் பராமரிப்பிலும் திருப்பணிகளிலும் இந்து இளைஞர்களின் பங்களிப்பு அபரிமிதமானது என மகிழ்ச்சியுடன் குறிப்பிடும் ஆசிரியர் அடுத்ததாக மின்ரோ சிவன் கோவிலுக்கு செல்கிறார். ரிஷிகேசத்தை சேர்ந்த சுவாமி சித்தானந்த சரஸ்வதி 1990 ஆம் ஆண்டு இங்கு சிவாலயம் ஒன்றை கட்டவேண்டும் என அங்கு வாழும் இந்துக்களிடம் கூறியதைத் தொடர்ந்து சிவாலயம் கட்டுவதற்காகவே இந்து மகாசபை எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. நியூ சவுத் வேல்ஸ் மாநில சிவனடியார்களின் நிதி உதவியால் மின்ரோவில் நிலம் வாங்கி
அங்கு தற்காலிக மண்டபம் கட்டப்பட்டு திருவுருவ பிரதிஷ்டையும் பூஜையும் வழிபாடும் நடக்கலானது. 1992 ஆம் ஆண்டு பெயர் குறிப்பிடாத ஒரு சிவபக்தர் இத்திருக்கோவிலுக்கு பாரதத்திலிருந்து விமானம் மூலம் ஒரு சிவலிங்கத்தை அனுப்பினார். வெள்ளிக்கிழமைகளில் கூட்டு வழிபாடு நடைபெறலானது. சிவபுராணம் ஓதப்படுமாம்.

ஆசிரியர் இக்காட்சியை உணர்ச்சி மேலுற வர்ணிக்கிறார்: “குழந்தைகள் உட்பட வழிபாட்டு மண்டபத்திலுள்ள அடியார்கள் அனைவரும் சிவபுராணத்தை ஓதுவர். “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ் பல்லோருமேத்தப் பணிந்து.” என்று சிவபுராணத்தை ஓதிமுடிக்கும் பேரொலி வானத்தைத் தொட்டு நிற்கும்! பூசையின் பின்னர் விபூதிப் பிரசாதம் வழங்கப்படும். பிரசாதத்தை பெற்றுக்கொண்டு எல்லோரும் வெளியே வருவர். கீழேயுள்ள அறையில் உண்பதற்கு பிரசாதம் தயாராக இருக்கும். அவற்றை உண்டு மகிழ்ந்து குடும்பம் குடும்பமாக வீடுகளை நோக்கி அவர்கள் செல்லுகின்ற காட்சியைச் சொற்களால் வருணிப்பது எப்படி?” (பக்.55) 2

மின்ரோ சிவன் கோவில் கும்பாபிஷேகம் முன்னால் யாக பூஜை (பக்.58)

2003 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் தேதி கும்பாபிஷேக திருவிழா. ஆசிரியர் கூறுகிறார்: “வானிலை ஆய்வாளர் 19 ஆம் தேதி மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லையெனக் கூறிவிட்டார். சிவாச்சாரியர்களின் வேத ஒலி எழுந்தது. ஓதுவார் தெய்வத்திருமறைகளை ஓதினர். கும்ப பூசை ஆரம்பமானது. திடீரெனக் கருமேகங்கள் இடிமுழக்கத்தோடு சூழ்ந்தன; ம்ழை சோ என பொழிந்தது. கும்பாபிஷேக நிகழ்வுகளைக் காண வந்த அடியார்கள் வியந்து நின்றனர். “என்றும் இல்லாதவாறு இன்று மழை பொழிந்ததே அற்புதம் அற்புதம்” எனக் கூறி இறைவனின் இன்னருளை வியந்தனர். ஏனைய சமயத்தவர்களும் மழை பொழிந்த அதிசயத்தைக் கண்டு களிப்படைந்தனர்.” (பக்.59). இத்திருக்கோவிலில் சிறுவர் சிறுமியருக்கு இந்து சமய வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்பது மற்றொரு முக்கிய செய்தி.

அடுத்ததாக ஓர்பன் கிருஷ்ணர் கோவில். 1977 இல் கூட்டு வழிபாடாக ஆரம்பித்து திருக்கோவிலாக இது மலர்ந்தது. சில இந்திய இந்துக்களும் இலங்கை இந்துக்களுமாக இணைந்து இக்கோவிலை உருவாக்கினர். அவர்களை முன்னின்று வழி நடத்திய பெரியோர்: டாக்டர் பத்மநாப் ஸ்ரீதர், டாக்டர் ஆனந்த் மற்றும் திரு பிரேம் சங்கர் ஆகியோர் ஆவர். இது ஆஸ்திரேலியாவின் முதல் இந்து கோவில் என பிரபலமடைந்துள்ளது. இக்கோவிலின் நோக்கங்கள் நாம் அனைவரும் சிந்தித்துணர வேண்டியவை: “இந்திய சமுதாயத்தினர் மத்தியில் இந்துக் கலாச்சாரத்தையும் இந்து சமய தத்துவத்தையும் வளர்த்தல். இந்திய இளஞ் சந்ததியினர் இந்துக் கலாச்சாரத்தை பேணி இனிது வாழ்வதற்கு வழி செய்தல் ஆஸ்திரேலியாவிலுள்ள ஏனைய இனத்தவர்கள் இந்து சமயத்தின் மேம்பாட்டையும் சிறப்பையும் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பளித்தல் ” (பக்.68). இத்திருக்கோவில் ஒரு கோவிலாக கும்பாபிஷேகத்துடன் மலர 25ஆண்டுகளாகின.

மெல்பேர்ன் முருகன் கோவிலை உருவாக்குவதில் தம்பிநாயகம் குடும்பத்தாரின் தலைமுறைகளாக தொடர்ந்த பகீரத பிரயத்தனம் கங்காதரனின் மைந்தனின் அருள் எனும் கங்கையை ஆஸ்திரேலியாவுக்கு கொணர்ந்தது எவ்வாறு என்பதை படிக்கும் எவர் உள்ளமும் கரையும். 1986 இல் இனக்கலவரத்தால் புலம் பெயர்கிறார் தம்பிநாயகம். அவர் கனவில் முருகன் தானும் அவருடன் வந்திருப்பதாகவும் இந்நகரில் கோவில் கொள்ளப்போவதாகவும் உரைத்தார். நகர மண்டபத்தில் கூட்டு வழிபாட்டை நடத்தலானார். அவர்தம் புதல்வியிடம் தாம் வழிபட்ட வள்ளி-தெய்வயானை சமேத திருமுருகன் படத்தை அளித்து திருக்கோவில் கனவை எடுத்துரைத்தார் தம்பிநாயகம். திருமதி மணி செல்வேந்திரா தமது தந்தையின் மறைவுக்கு பின்னர் அவர்தம் தெய்வீக கனவை நனவாக்கிட தமது கணவர் டாக்டர் செல்வேந்திராவுடன் உழைத்தார்.

1995 இல் “மெல்பண் முருகன் கலாசாரக் கழகம்” உருவாகியது. ஒரு அந்தணப்பெரியார் தாம் வழிபட்ட பஞ்சலோக வேலை இக்கலாச்சார கழகத்துக்கு அளித்தார். இவ்வேலே ஸ்ரீ ஞானசேகர குருக்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நல்லூரை பூர்விகமாகக் கொண்டவர் தம்பிநாயகம்-செல்வேந்திரா குடும்பத்தவர். மெல்பண்ணிலும் நல்லூர் கந்தசாமி கோவில் போலவே வேலாயுதம் பூசை கொண்டதை முருகன் திருவருள் என்றே கருதி வியக்க வேண்டும். 2000 ஆண்டு ஏப்ரல் மாதம் சைவாகம விதிப்படி கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன. கும்பாபிஷேக தினத்தன்று அக்கோவிலுக்கு இருமயில்கள் குடிவந்தன என்பதே அதிசயத்தின் உச்ச கட்டமாகும். இன்றும் மெல்பண் முருகன் கோவில் வளாகத்தில் இம்மயில்கள் வாழ்கின்றனவாம் (பக்.111-2).

கன்பரா சிவன் கோவிலில் மார்கழி மாதங்களில் தமிழ் இந்துக்கள் அதிகாலையில் மணிவாசகப் பெருமான் அருளி செய்த திருவெம்பாவையைப் பக்தியோடு பாடுவர்.சித்திரை வருடப்பிறப்பு சிவராத்திரி நவராத்திரி கந்த சஷ்டி, மாசி மகம், பங்குனி உத்திரம் தை பூசம் ஆடிப்பூரம் ஆவணி சதுர்த்தி கார்த்திகை விளக்கீடு ஆகிய தமிழ் இந்து பண்டிகைகள் அனைத்து இந்துக்களாலும் அனைத்து இந்து கோவில்களிலும் கொண்டாடப்படுகின்றன. மற்றொரு உருவாகிவரும் இந்து திருக்கோவில் கன்பரா அறுபடைவீடு திருக்கோவிலாகும். இங்கு தமிழ்நாட்டிலுள்ள அறுபடை தலங்களின் திருவுருவங்களையும் ஆஸ்திரேலிய மக்கள் தரிசிக்கும்படியாக அமையப்படும் திருக்கோவில் உருவாகிவருகிறது.

பெர்த் இந்து கோவில் 1981 ஆம் ஆண்டு தமிழ் மன்றத்துக்குச் சொந்தமான தமிழ் இல்லத்தில் நடைபெற்ற கூட்டுவழிபாட்டு அமைப்புகளின் மூலம் உருவாக்கம் பெற்றது. 1985 இல் வட இந்திய இந்துக்களின் கூட்டுவழிபாடு தொடங்கியது. மாதத்தின் முதல் வெள்ளி தமிழ் இந்துக்களின் கூட்டுவழிபாடும் மாதத்தின் மூன்றாம் ஞாயிறு வட இந்திய இந்துக்களின் வழிபாடும் நடைபெறலாயிற்று. இராமகிருஷ்ணா மிஷன் மாதா அஜேய்பிரியானந்தா இந்து கோவில் கட்டும் முயற்சிக்கு நல்லாசி வழங்கினார். இதற்காக இந்து மாமன்றம் உருவாக்கப்பட்டது.1987 இல் பூமி பூஜையும் பின்னர் 1990ஆம் ஆண்டு கும்பாபிஷேகமும் நடந்தது. இங்கும் ஒரு அற்புத செயல் நிகழ்ந்தது. ஒரு நாள் கோவில் நந்த வனத்தில் அடியார்கள் நின்றிருந்தபோது ஒரு வயது முதிர்ந்த சீனர் ஒருவர் வந்து ஒரு சிலையை அளிக்க விரும்புவதாக கூறிடவே அவரை இந்து மாமன்ற தலைவரிடம் அழைத்து சென்றனராம். அவரிடம் அந்த சீனர் சொன்னதாவது: “நான் ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவில் கோவிலுக்கு பக்கத்தில் இருக்கும் காணியில் ஆஞ்சநேயர் சிலை இருக்கிறது. அதை தோண்டி இந்து கோவிலில் கொடுக்க பணிக்கப்பட்டேன். கனவில் கண்ட நிலத்தில் சென்று தோண்டியபோது அவ்வாறே சிலையைப் பார்த்தேன். இதோ அதனை ஒப்படைக்க விரும்புகிறேன்.” என்றாராம். சீனர் சிலையை அளித்துவிட்டு பின்னர் “என் பணி முடிந்தது.” என்று சொல்லி சென்றுவிட்டாராம். இன்றும் இக்கோவிலில் இச்சிலை வணங்கப்படுகிறதாம்.(பக்.163-4).

மெல்பண் சிவ-விஷ்ணு கோவில் சூர சம்கார திருவிழா (பக்.77)

இதைப்போலவே பெர்த் பாலமுருகன் கோவில் விஷயத்திலும் நடந்த அதிசயத்தை ஆசிரியர் குறிப்பிடுகிறார். “ஆஸ்திரேலியாவில் இந்துக் கோயில் கட்டக் காணி வாங்குவது எளிதன்று. நிலத்தை விற்பதற்கு முன்வருபவர்களும் இந்துக் கோயில் என்றவுடன் பின்வாங்கி விடுவார்கள். சைவ மகாசபையினர் வாங்க விரும்பிய நிலங்களுக்கும் இக்கதியே ஏற்பட்டது.” இறுதியில் ஒரு நிலத்தை தேர்ந்தெடுக்க பார்வையிட சென்றபோது “எங்கிருந்தோ ஒரு அழகிய மயில் பறந்து வந்தது; அந்தக் காணியின் மத்தியில் அமர்ந்தது; தோகையை விரித்து ஆடியது. அங்கே நின்ற எல்லோரும் “அற்புதம் அற்புதம் முருகப்பெருமானே நேரில் வந்து கோயில் இடம் பெற வேண்டிய இடத்தைக் காட்டியுள்ளான்.” என்று வியந்தனர்” (பக்.177).

அடிலெய்ட் நகர கணேசபெருமான் கோவில் அங்குள்ள ஒரு விற்கப்பட்ட கிறிஸ்தவ சர்ச்சிலேயே உருவானதாகும். (பக்.187) 1986 இல் இந்த பழைய கிறிஸ்தவ சர்ச் இந்து ஆலயமாக மாறியது. இது ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இந்து கோவில் என்பது
குறிப்பிடத்தக்கது (பக். 187).

இந்த ஆய்வின் முடிவில் முருகன் கோவில்களை கட்டுவதில் இலங்கை தமிழ் இந்துக்களின் பெரும் பங்களிப்பினை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக அவர் சொல்லும் வார்த்தைகள் நெஞ்சை தொடுகின்றன: “1970 ஆம் ஆண்டுகளில் இருந்து இந்துக்கள் ஆஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர்; அவர்கள் தாம் குடியமர்ந்த இடங்களில் வழிபாட்டுத்தலங்களையும் அமைத்துள்ளனர். இந்து சமயம் காட்டும் நெறியில் இந்துக்களாகவே வாழ்வதற்கு அவர்கள் உறுதியான அத்திவாரத்தை இட்டுள்ளனர் என்று துணிந்து கூறலாம். தாம் மட்டுமன்றி இளஞ் சந்ததியினரையும் எதிர்காலத்தில் இந்துக் கலாச்சாரத்தைக் கடைபிடித்து இந்துக்களாக வாழ்வதற்கு வித்திட்டுள்ளனர்.” (பக்.230)

ஆஸ்திரேலியாவின் முதல் இந்து கோவிலில் ஆசிரியர்

இந்நூல் ஆசிரியர் கலாநிதி ஆ.கந்தையா இலங்கையைச் சேர்ந்தவர் உலகெங்கிலும் பல பல்கலைக் கழகங்களில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். 1990 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்தவர். இந்த அழகிய ஆராய்ச்சி+பக்தி நூலை அளித்த இப்பெரியாருக்கு தமிழ்இந்து.காம் வணக்கங்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது.

நூல் பெயர்: ஆஸ்திரேலியாவில் இந்துக்கோயில்கள்
ஆசிரியர்: கலாநிதி ஆ கந்தையா
முதல்பதிப்பு: ஜனவரி 2004
பக்கங்கள்:238
வெளியிட்டோர்: நடனாலயா பதிப்பகம், ஆஸ்திரேலியா
ஆசிரியர் மின்னஞ்சல்: kandiaha at bigbond dot com

7 Replies to “ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்”

  1. ஐயா அவர்களுக்கு,
    அனேக வணக்கங்கள்.தங்குளுடைய வெப்சைட் பார்க்க பார்க்க பரவசமநேயன் உங்கள் தொண்டு மேலும் தொடர நான் எல்லாம் வல்ல
    அந்த முருக பெருமானை மனதார வேண்டுகிறான் .இப்படிக்கு
    முருக பக்தன் வைத்யராமன் சிட்னி. ௧௯ ௨ ௨௦௧௦.

  2. Tahmil hindu publicatios are very good and worthy reading always. vazhga valamudan.
    ts vaidyraman, sydney.19 2 2010

  3. என்னை போன்றவர்கள் இந்து மதத்தைப்பற்றி அறிந்து கொள்வதற்கு மிக பெரும் உதவியை “தமிழ் இந்து இணையத்தளம்” அமைத்து தருகிறது. மனதிற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

    மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *