சொர்க்கமே என்றாலும்…

கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன் என் கிராமத்து மாரியம்மன் கோயிலைப் புணரமைத்து கும்பாபிஷேகம் நடத்தினார்கள். நீண்ட வருடங்களுக்குப் பின் கிராமத்தில் நடந்த விசேஷமென்பதால் மொத்த கிராமமும் உற்சாகமாக இருந்தது. இரண்டு மாதங்கள் தினமும் விழாக்கோலம்! வெளியூரிலிருந்து நிறைய கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். இப்போது போன்று சினிமாவை மட்டுமே சுற்றி வரும் ‘கலக்கப் போகும்’ கலைஞர்கள் இல்லாத காலம். ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. உறுமி போன்ற வாத்தியங்களை அந்தத் திருவிழாவில்தான் நான் முதல் முதலாகப் பார்த்தேன். வெளியூரிலிருந்து வந்த கலைஞர்கள், சாமி ஊர்வலமாக வரும்போது, ஊர்வலத்தில் ஆடிக்கொண்டே செல்வார்கள். அவர்களோடு சேர்ந்து ஊர்மக்களும் ஆடுவார்கள்.

ஒரு நாள் மக்களெல்லாம் ஊர்வலமாக ஆடிக் கொண்டு சாமியை நிலை சேர்த்து வீட்டுக்குக் கிளம்பும் சமயம், கும்பாபிஷேகம் செய்ய வெளியூரிலிருந்து வந்த குருக்கள் ஒரு நிமிடம் எல்லோரையும் நிற்கச் சொன்னார். தினமும் சாமிக்கு முன்னால் வாசித்துச் செல்லும், எவராலும் பெரிதும் கண்டுகொள்ளப்படாத நாதஸ்வரக் கலைஞரை அருகில் அழைத்து அவரிடம் ஒரு ராகத்தை ஆலாபனை செய்தார். நாதஸ்வரக் கலைஞரும் அதை நாதஸ்வரத்தில் அழகாக வாசித்துக் காண்பித்தார். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் குருக்களுக்கும், அந்த நாதஸ்வரக் கலைஞருக்குமிடையே இசை உரையாடல் நடந்தது.

அந்த நாதஸ்வரக் கலைஞர் அவ்வளவு நன்றாக வாசிப்பார் என்று எங்களுக்கே கூட தெரியாது. வழக்கமாக சுண்டலோ, பொங்கலோ பிரசாதமாக வாங்கிக் கொண்டு கலைந்துவிடும் கூட்டமும் மொத்த பதினைந்து நிமிடமும் கலையாமல் நின்று கேட்டது. அத்தனை பேர் முகத்திலும் அப்படியொரு மகிழ்ச்சி. வாசித்து முடித்ததும், குருக்கள் தன் கையிலிருந்த ஆப்பிளையும், தன் தோளில் போட்டிருந்த சால்வையையும் நாதஸ்வரக் கலைஞரிடம் கொடுத்தார். மக்களெல்லாம் உற்சாகமாக கைதட்டினார்கள். நாதஸ்வரக்கலைஞரோ சந்தோஷத்தில் அழுதே விடுபவர் போல் உணர்ச்சிவசப் பட்டவராக இருந்தார். இத்தனைக்கும் என் கிராமத்திலிருக்கும் ஒருவருக்கும் கர்நாடக சங்கீத அறிவு கிடையாது. ஆனாலும் அந்த இசையின் அழகு அத்தனை பேரையும் கட்டிப் போட்டு விட்டது.

பொதுவாகவே இந்த ராகங்களும், அவற்றின் அழகும் இந்த மண்ணின் ஒவ்வொருவருக்கும் சொந்தமானதாக இருந்திருக்கிறது. ஒவ்வொருவரும் தொடர்ந்த இசைப் பாரம்பரியத்தின் காரணமாக, இயல்பாகவே உயர்ந்த இசைரசனை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். என் வீட்டுக்குப் பின் வீட்டிலிருந்த பொன்னம்மா பாட்டி அவ்வப்போது பாடும் அழகான கிராமத்துப் பாடல்களில் மோகனம், கரஹரப்ரியா போன்ற ராகங்கள் இயல்பாகவே கலந்திருந்தது இப்போதுதான் எனக்குப் புரிகிறது.

இந்தத் தொடர்ந்த இசைப் பாரம்பரியத்தில் இன்று பொதுமக்களின் பங்களிப்பு குறைந்து போனதால் அது தொடர்பான அரசியலும் மிக எளிதாக வளர்ந்து விட்டது. மிக எளிதாக ‘தமிழிசை வேறு. கர்நாடக இசை வேறு’ என்று சொல்லி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் இயல்பாகவே தமிழ் இசையை அழித்து, பல்வேறு நுணுக்கங்களைப் புகுத்தி அதை கர்நாடக சங்கீதமாக்கி விட்டார்கள் என்ற முட்டாள்தனமான வாதத்தையும் முன்வைக்கிறார்கள்.

இது போன்ற அத்தனை முட்டாள்தனமான வாதங்களையும் ஒற்றை ஆளாக உடைத்துக் காட்டியிருக்கிறார் இளையராஜா. மிக எளிதான, அழகான கிராமிய மெட்டுகளைக் கொண்ட, கர்நாடக இசையின் ராகத்திலமைந்த பல பாடல்களைத் தந்திருக்கிறார் இவர். கர்நாடக ராகத்திலமைந்த பாடல் என்றவுடனேயே கர்நாடகக் கீர்த்தனையை அப்படியே எடுத்துக் கொண்டு, வரிகளை மாற்றியமைத்த பாடல் என்று நினைக்க வேண்டாம். (அப்படிப்பட்ட பாடல்களும் பிற இசையமைப்பாளர்கள் தயவில் தமிழில் வந்திருக்கின்றன). அந்த ராகத்தின் ஸ்வரபாவங்களையும், அதன் தனித்துவத்தையும் கைக்கொண்டு ஆனால் முற்றிலும் நாட்டுப்புறப்பாடலாகவோ, ஒரு எளிய திரைப் பாடலாகவோ அவரால் தர முடிந்தது.

தன்னுடைய முதல் படமான அன்னக்கிளியில் ‘மச்சானைப் பாத்தீங்களா?’ என்று கரஹரப்ரியா சாயலில் கேட்டபோதே தன்னுடைய ஆளுமையைக் கோடி காட்டி விட்டார் இளையராஜா. தமிழ் சினிமாக்களில் அதுவரை ஒரு வெகு சில விதிவிலக்குகளைத் தவிர கிராமியப் பாடல்கள் இரண்டாம் பட்சமாகத்தான் கருதப்பட்டன. அதே போல் இளையராஜாவுக்கு முன்பு வரை கிராமியப் பாடல்களுக்கு பின்னணி இசையமைப்பும் வெகு சாதாரணமாகத்தான் இருந்து வந்தது. ‘மச்சானைப் பாத்தீங்களா’ பாடலின் பாஸ் கிடாரும், கார்ட் ப்ராக்ரஷன்ஸும் தமிழ் சினிமா அதுவரை அறிந்திராதது.

இளையராஜாவின் வருகைக்குப் பின் தமிழ் சினிமாவின் பாடல்களில், நாட்டுப்புறப் பாடல்களின் மதிப்பு வெகுவாக உயர்ந்தது. கிராமியப் பாடல்களின் வடிவங்களை சிதைக்காமல், ராகங்களையும், மேற்கத்திய இசை வடிவங்களைப் பயன்படுத்துதலை ஒரு கலையாகவே ஆக்கினார் இளையராஜா.

நாம் சென்ற வாரத்தில் பார்த்த ஹம்ஸநாதம் ராகத்தில் கூட ஒரு மிக அழகான கிராமத்து மெட்டைத் தந்திருக்கிறார் இளையராஜா. “சொர்க்கமே என்றாலும், அது நம்மூரைப் போல வருமா?” என்ற பாடல்தான் அது. கலர் கலரான சட்டைகளுக்கும், ரோஸ் கலர் உதட்டுச் சாயத்துக்கும் அறியப்பட்ட ராமராஜன், கனகா, கெளதமி அல்லது வேறொரு நாயகியுடன் ஏதாவது கோயில் கோபுரத்து மேலோ, வயல் வரப்புகளிலோ பாடுவதற்கென்றே மிக அழகான பாடல்கள் இளையராஜாவிடமிருந்து வந்திருக்கின்றன.

“சொர்க்கமே என்றாலும்” பாடலும் ராமராஜன், கெளதமியுடன் வெளிநாட்டுக்குப் போய் நிம்மதியாக வெற்றிலை போட்டுத் துப்ப ஒரு இடம் கிடைக்கவில்லையே என்று நம் நாட்டை நினைத்து ஏங்கிப் பாடும் பாடல். மிக எளிதான மெட்டு. ஆனால் மிக அழகான ஹம்ஸநாதம். அப்பாடலின் பின்னணியில் தாளகதிக்கும், அழகுக்கும் கிடார், ரிதம் பேட் (Rhythm pad) போன்ற மேற்கத்திய இசைக்கருவிகள். கிராமிய மெட்டு, கர்நாடக ராகம், மேற்கத்திய கருவிகள் இந்த மூன்றும் ஏனோதானோவென்று இல்லாமல் மிக முழுமையாக ஒன்றுடன் ஒன்று மிக அழகாகப் பொருந்திப் போயிருக்கும். இந்த முழுமைதான் இளையராஜாவின் மிகப் பெரிய வெற்றி. இந்த முழுமை இந்த மூன்று இசை வடிவங்களிலும் மிக ஆழ்ந்த புலமை இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

இந்தப் பாடலின் சரணத்தில், ‘ஏரிக்கரைக் காற்றும், ஏலேலேலோ பாட்டும்’ என்ற இடத்தில் பின்னணியில் மேற்கத்திய தாளத்தின் ஒவ்வொரு வரிசை முடிவிலும், ஒரேயொரு மிக அழகான தபேலாவின் தாளமும் கேட்கும். இப்பாடலின் ஒரு இண்டர்லூடில் எஸ்.ஜானகியின் அழகிய ஆலாபனையும் அதைத் தொடர்ந்து அழகிய இசைக் கோர்வையும், தொடர்ந்து வரும் சரணத்தை அழகாக இணைக்கும் வயலினும் கேட்கும்.

எல்.சுப்ரமணியத்தின் ஹம்ஸ்நாதத்திலிருந்து ஒரு துளி:

Get this widget | Track details | eSnips Social DNA

‘சொர்க்கமே என்றாலும்’ பாடலில் நான் குறிப்பிடும் இண்டர்லூட்:

Get this widget | Track details | eSnips Social DNA

இதே படத்தில் “தானா வந்த சந்தனமே” என்ற கரஹரப்ரியா ராகத்தில் அமைந்த பாடலும் இருக்கிறது. இப்பாடலின் ப்ரிலூட், இரண்டு இண்டர்லூட்கள் அனைத்தும் மேற்கத்திய இசை வடிவத்தில் இருக்கும். ஆனால் அவை தனித்துக் கேட்காமல் பாடலுடன் மிக எளிதாக ஒன்றியிருக்கும். இப்பாடலை வாய்விட்டுப் பாடிப் பார்த்தால் அது ஒரு மிக அழகான நாட்டுப்புறப் பாடலாக இருக்கிறது. ஆனால் அந்த மெட்டிலும் “தாஆனாஆஆ” என்ற இழுவையில் ராகத்தைக் காட்டி விடுகிறார் இளையராஜா.

‘தானா வந்த சந்தனமே’யின் ப்ரிலூட்+பல்லவி:

Get this widget | Track details | eSnips Social DNA

இப்பாடல்கள் மட்டுமில்லாமல், ராமராஜன் ஒரு மாட்டை அருகில் அழைத்துப் பால் கறக்க குந்தளவராளி (அழகி, நீ பேரழகி – எங்க ஊரு பாட்டுக்காரன்), கோயில் கோபுரம் மீதேறி நாயகியுடன் பாடுவதற்காக மாயாமாளவகெளளை(மதுரை மரிக்கொழுந்து வாசம்), நாயகியுடன் வயல்வெளியில் பாட சாருகேஸி (அரும்பாகி, மொட்டாகி, பூவாகி – எங்க ஊரு காவல்காரன்) போன்ற ராகங்களும் பாடல்களாகியிருக்கின்றன.

‘மதுரை மரிக்கொழுந்து’ பாடலின் ப்ரிலூடை இங்கே கேட்கலாம்:

Get this widget | Track details | eSnips Social DNA

இது போன்ற நாயகன், நாயகி பாடும் காதல் பாடல்கள் மட்டுமில்லாமல், ‘சொப்பன சுந்தரியை இப்போது வைத்திருப்பது யார்?’ என்ற மிக முக்கியமான சந்தேகத்தை எழுப்பிய திரைப்படத்தில் கவுண்டமணி பாடுவதைப் போல் வரும் ‘ஊரு விட்டு ஊரு வந்து’ என்ற பாடலும் சண்முகப்ரியா என்ற கர்நாடக ராகத்தில் அமைந்ததுதான்! இப்பாடலின் பல்லவியின் ஒவ்வொரு வரி முடிவிலும், மேற்கத்திய இசையின் தனித்த அம்சமான பல்வேறு குரல் அடுக்குகளை உபயோகித்திருப்பார் இளையராஜா. (இதை ‘seconds’ என்று சொல்வார்கள். அதாவது ஒரு குரலிலிருந்து இன்னொரு குரல் ஒரு ஸ்கேல் வித்தியாசத்தில் இருக்கும். இது போன்ற பல குரல்கள் ஒன்றன் மேல் ஒன்றாக பாடப்படும்). ராமராஜனை கவுண்டமணியும், செந்திலும் கிண்டல் செய்து, அறிவுரை சொல்லும் பாடலில்தான் இத்தனை பரிசோதனை முயற்சிகளையும் செய்திருக்கிறார். பரிசோதனை முயற்சி என்பதை விட இது போன்ற விஷயங்கள் இவருக்கு இயல்பாகக் கைவந்தன என்று சொல்லலாம்!

‘கிழக்கு வாசல்’ திரைப்படத்தில் நாயகன், நாயகியைத் தூங்க வைக்கும் சுகமான தாலாட்டுப் பாடலான ‘பச்சைமலைப் பூவு’ என்ற பாடல் கீரவாணி ராகத்தில் அமைந்த மிக அழகான கிராமியப் பாடல். அப்பாடலின் இரண்டாவது இண்டர்லூடை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? ஒரு தனி கிடார் முதலில் இசைக்க, அதைத் தொடர்ந்து கீபோர்ட் மீட்டல் தொடர, அதைத் தொடர்ந்து ஒரு அழகிய புல்லாங்குழல் மெலடியைத் தன்னுடையதாக்கிக் கொள்ளும். இந்த கிடார் , புல்லாங்குழல் வடிவத்தை பாக் (Bach) சொனாடக்களில் ஹார்ப்ஸிகார்ட் + புல்லாங்குழல் காம்பினேஷனில் கேட்கலாம்.

அதே சொனாடா வடிவத்தை எவ்வளவு அழகாக ஒரு மேற்கத்திய இசை வடிவம் என்ற உறுத்தலேதும் இல்லாமல், ஒரு கிராமியப் பாடலில் தந்திருக்கிறார் இளையராஜா!

‘பாக்’கின் சொனாடாவை இங்கே கேட்கலாம்:

CD2 Complete JS Bach Flute Sonatas by Laurel Zucker

நான் இங்கே குறிப்பிடும் ‘பச்சமலைப் பூவு’ பாடலின் இண்டர்லூடை இங்கே கேட்கலாம்:

Get this widget | Track details | eSnips Social DNA

சொனாடா மேற்கத்திய வடிவமாக இருந்தாலும் இப்பாடலில் அது ஒரு அழகிய கிராமத்து மெலடியாகத்தான் இருக்கிறது. பாடலின் ராகம் கீரவாணியாக இருந்தாலும், கர்நாடக சங்கீதம் எல்லாராலும் ரசிக்க முடியாத சாஸ்திரிய விஷயம் என்ற கருத்து இருக்கும் நாட்களில், அது ஒரு அழகான கிராமிய மணம் வீசும் தாலாட்டுப் பாடலாக இருக்கிறது. மேற்கத்திய இசை, கர்நாடக இசை என இரண்டு செவ்வியல் மரபுகளிலும் தனக்கிருக்கும் மிகச்சிறந்த ஆளுமையை அவற்றைப் பயன்படுத்திய விதத்தில் (application) மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்து பெரிதும் விலகி தனித்துத் தெரிகிறார் இளையராஜா.

இளையராஜாவின் இதே போன்ற பிற சொனாடா வடிவங்களைக் குறித்து என் நண்பர் விக்னேஷ் ஒரு தனிப்பதிவே எழுதியிருக்கிறார். அவற்றை இங்கே கேட்கலாம்:
https://raagadevan.blogspot.com/2008/06/mini-flute-sonatas.html

கிழக்குப் படங்களின் வரிசையில் ஒன்றான பொன்னுமணியில் வரும் ‘நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் தெரியுமா?’ என்ற பாடலும் கீரவாணி ராகத்தில் அமைந்ததுதான்.

நான் பெரும்பாலும் இக்கட்டுரையில், கிராமியப் படங்களில் மிகவும் சுமாரானவையாகக் கருதப்படும் ராமராஜன் திரைப்படங்களிலிருந்தே உதாரணங்கள் தந்திருக்கிறேன். அன்னக்கிளியில் தொடங்கி, பாரதிராஜா திரைப்படங்கள் உட்பட இளையராஜா இசையமைத்த, எத்தனையோ நுணுக்கமான, ராகங்களின் அடிப்படையிலமைந்த நாட்டுப்புறப் பாடல்களைக் குறித்து நான் இங்கு எழுதவேயில்லை. இப்படிப் பெரிதும் கதைப்படி வாய்ப்பேயில்லாத திரைப்படங்களில் கூட எளிமையை இழக்காமல் நாட்டுப்புறப்பாடல்களை நுணுக்கப்படுத்தியவரை, ஒவ்வொரு பேட்டியிலும் ‘நான் இசையை என் அம்மாவின் தாலாட்டுப்பாடல்களிலிருந்து கற்றுக் கொண்டேன்’ என்று சொல்பவரை,

“மேற்கத்திய இசைக் கருவிகளே இல்லாமல் பாட்டு எடுத்துக் கேட்டால் (நாம் பேண்டையும், சர்ட்டையும் கழற்றியது போல் தான் இருக்கும். அதுவும் மேற்கிலிருந்து வந்தது) வீணை, நாதஸ்வரம் புல்லாங்குழல், மிருதங்கம், தவில் இவைகளில் தான் பாடல் எடுக்க வேண்டும்’’ – சங்கீதக் கனவுகள் – இளையராஜா. பக். 76)”

என்ற கருத்துக்காக விமர்சிக்கிறார் ‘இசை ஆராய்ச்சியாளர்’ என்று அறியப்படும் நா.மம்மது. இளையராஜாவின் “நாம் பேண்டையும், சர்ட்டையும் கழற்றியது போல்தான் இருக்கும்” என்ற வார்த்தைகளுக்கு ‘நம் மண்ணின் இசையை அவமதித்து விட்டார்’ என்று அர்த்தம் கொடுத்து ஒரு தனிக்கட்டுரையே எழுதுகிறார் இவர். எப்படி நமக்கெல்லாம் பேண்ட், சர்ட் என்பது இயல்பான ஒன்றாகிப்போனதோ, அதுபோல நம் இசைக்கும் கிடார், கீபோர்ட் இயல்பாகிவிட்டது. பேண்ட், சர்ட் இல்லையென்றால் நாம் அம்மணமாக இருப்போம் என்ற அர்த்தமில்லை. வேட்டி, சட்டை அணிந்திருப்போம் என்ற அர்த்தத்தில் இளையராஜா சொல்கிறார். இந்த எளிய ஒப்பீட்டை வைத்தே “அப்படி என்றால் உங்களுக்கு முன் இந்த மண்ணில் இசை ஒன்று இருந்ததில்லையா?” என்று இளையராஜாவை கேட்கிறார் மம்மது. இவரைப்போலவே சாரு நிவேதிதாவும் பாப் மார்லி குறித்தான இளையராஜாவின் வார்த்தைகளைத் திரித்து ஒரு அவதூறுக் கட்டுரை எழுதியிருந்தார். உண்மையில் பொருட்படுத்தத் தேவையில்லாத கூச்சல்கள் இவை. ஆனால் இவற்றுக்கு எதிர்வினையாற்றாமல் இருப்பது இவர்கள் சொல்வது உண்மை என்ற பிம்பத்தை ஏற்படுத்தி விடும்.

இளையராஜாவுக்கு முன்பிருந்த இசையமைப்பாளர்கள் பலரும் கர்நாடக சங்கீதத்தில் திரைப்பாடல்களைத் தந்திருக்கிறார்கள். ஆனால் கர்நாடக சங்கீத ராகத்தில் அமைந்த பாடல்களில் எளிமையும், ஒரே ராகத்தில் பல்வேறு மனநிலைகளுக்கும், பல்வேறு சூழ்நிலைகளுக்கும் இசையமைத்ததும், உறுத்தாமல் மேற்கத்திய இசையைக் கலந்து தர முடிந்ததும், பல வடிவங்களின் கலவையைக் கடினமான ஒன்றாகக் காட்டாமல் வெகுஜன மக்களையும் ரசிக்க வைத்ததும் இளையராஜாவை மற்றவர்களிடமிருந்து பெரிதும் வேறுபடுத்திக் காட்டுகிறது. இசையை ‘வடிவமைத்தல்’ (composing) என்பதன் அர்த்தமாக இருக்கிறார் இவர்.

கர்நாடக இசை நம் மண்ணில் நம்மோடு ஒன்றாகக் கலந்திருந்த ஒரு விஷயம் என்பதை கர்நாடக ராகங்களை அடிப்படையாகக் கொண்ட கிராமியப்பாடல்கள் மூலம் நிரூபிக்கிறார் இளையராஜா. நம் தொடர்ந்த இசைப் பாரம்பரிய சங்கிலித் தொடரின் ஒரு இணைப்பாக இருக்கிறார் இவர். ஆனால் இவரைத் தொடரும் இத்திறமையைக் கொண்ட ஒருவர் இதுவரை நம் கண்களில் படாதது இவரே இத்தொடரின் கடைசி இணைப்பாக இருப்பாரோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

பல்வேறு கர்நாடக இசை, திரையிசை ஜாம்பவான்களைப் பார்த்த ‘இசைப் பிதாமகர்’ என்று அறியப்படும் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் தன் படுக்கையறையில் இளையராஜாவின் புகைப்படத்தை மாட்டி வைத்திருந்ததில் வியப்பேதுமில்லை.

10 Replies to “சொர்க்கமே என்றாலும்…”

 1. மிக அருமையான கட்டுரை.

  இசை பாமரனுக்கும் புரியவேண்டும் என்று உழைத்த இளையராஜாவை பாமரர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இந்த கட்டுரைத் தொடர் எழுதப்பட்டு வருகிறது என்று நினைக்கிறேன்.

  இளையராஜாவை தங்களின் அரசியல் சமூக தேவைகளுக்காக பார்க்கும் போக்குகள் மட்டுமே தமிழர்களுக்கு பரிச்சயம். ஆனால், இந்த கட்டுரையோ இளையராஜா என்னும் ஒரு மேதமையை விளக்க முயல்கிறது.

  மேதமையை விளக்குவது மிகவும் கடினம். அதிலும், க்வாண்டம் மெக்கானிக்ஸும், ரெலேட்டிவிட்டி தியரியும் இணையும் இடங்களை விளக்குவது என்பது மிக மிக மிக கடினம். அதை இந்த கட்டுரையின் ஆசிரியர் உணர்ந்து, வாசகர்களின் தளத்திற்கு இரங்கி பேசுகிறார். அவர் எழுதியிருப்பதை கேட்க வைக்கிறார். டெக்னாலஜி மட்டும் அனுமதித்தால் கொன்னக்கோலை கையில் எடுத்துக்கொண்டு, ஒருவித மிரட்டல் தொனியோடு “கத்துக்க” என்று சொல்லிவிடுவார் போலும். மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். அவசியமான பலனுள்ள உழைப்பு.

  வேறுபட்ட இசை வடிவங்கள் ஒத்துப்போகிற இடங்களை விளக்க அந்த இசையையே கேட்கும் வகையில் இந்த கட்டுரை அமைந்திருப்பது எழுதியிருப்பதை கேட்டு விளங்கும் வாய்ப்பை அளிக்கிறது. மிக புதுமையான முயற்சி இது. ம்யூசிக் பற்றி எதுவும் தெரியாதவர்களுக்கு சேதுபதி எழுதியிருப்பது மிக தெளிவாக புரிகிறது.

  இசை குறித்து எந்த அறிவும் இல்லாதவர்கள் இளையராஜாவை இளக்காரமாக பேசிவிடுவதும், அதை இசை குறித்து எந்த ஆர்வமும் இல்லாதவர்கள் ஒத்துக்கொள்வதையும் ஆசிரியர் இடித்துரைத்திருக்கிறார். அவர் சொல்லுவது எவ்வளவு சரி என்பது கட்டுரையை “கேட்டு” உறுதி செய்துகொண்டேன்.

  சொல்லுகிற விசயம் படிப்பவர்களுக்கு புரியவேண்டும் என்று கட்டுரை ஆசிரியர் சேதுபதி மிக உழைத்து எழுதியுள்ளார். அவருடைய இசை ஞானம் மட்டுமல்ல அவருடைய உழைப்பும் பிரமிக்க வைக்கிறது.

  ஆனால், இந்த உழைப்பு, இந்த உன்னத நோக்கம் தமிழர்களுக்கு புரிய வேண்டும். இந்த கட்டுரை சொல்லும் இசைகுறித்த புரிதலை அடைவதையே நோக்கமாகக் கொண்டு தமிழர்கள் இதை படிக்க வேண்டும்.

  ஆனால், எல்லாவற்றையும் ஒருவித ஒற்றை மனப்பான்மையில் பார்க்க மட்டுமே கற்றுக்கொடுக்கப்பட்ட தமிழர்களை இந்த கட்டுரையிலும் இசை தவிர்த்த இதர அம்சங்கள் அதிகம் கவரும். ஆனால், அவற்றோடு இசை குறித்த புரிதலும் அவர்களுக்கு உண்டாக வேண்டும்.

  கம்ப ராமாயணம், இயற்கை, அறிவியல், இசை என்று மேதமையான படைப்புகளை, பாட்டாளிகளும் அறிந்து அறிவில் உயரவேண்டும் என்று இந்த தளம் பாடுபடுகிறது. கம்ப ராமாயணம் குறித்து ஹரி கிருஷ்ணன் என்பவர் எழுதிவருவதும், விவேகானந்தர் என்னும் மேதமை குறித்து மதுரபாரதி என்பவர் எழுதுவதும், சமூகம் குறித்து ஜடாயு, ராஜா ஆர். எஸ் என்பவர்கள் எழுதுவதும் உழைக்கும் மக்கள் உயர் கருத்து அறியாமல் மூடராக இருக்கவேண்டும் என்று நம்புபவர்களுக்கு எதிரானதாக இருக்கிறது.

  தமிழ் பாட்டாளிகளை மேதைகளாக்க மேதைகளால் நடத்தப்படும் தளமாக தமிழ் இந்து விளங்குகிறது. நவீன தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்துகிறது. தனது பெயருக்கேற்ப அனைத்து வகையிலும் உன்னதமாக இருக்கிறது.

  உன்னத முயற்சிகள். உன்னத கருத்துக்கள். உன்னதமான தளம்.

  பாராட்டுக்கள்.

 2. சேதுபதியின் இந்த கட்டுரை ஒவ்வொரு இசை ரசிகனும் படிக்க வேண்டிய கட்டுரை எனக்கூறலாம். ஒவ்வொன்றுக்கும் அவர் எடுத்துத்தரும் ஆதாரங்களும் இளையராஜாவின் இசை மேதமையை நமக்கு மீண்டும் உணர ஒரு வாய்ப்பாக இதைக்கருதுகிறேன். எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இன்றும் புதிய பாடல்போல விரும்பப்படுபவை இளையராஜா இசையமைத்த பாடல்களே என்றால் அது மிகையாகாது.

  மிக அதிகபட்ச உழைப்பினை கொடுத்து சேதுபதி அருணாசலம் எழுதியுள்ள இந்த கட்டுரை எனது நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரைப்பேன்.

  ஸ்ரீதர்

 3. மிக சிறப்பாக எழுதி வருகிறீர்கள் தொடர்ந்து எழுதுங்கள். சில கருத்துக்களோடு உடன்பட முடியவில்லை

  “இந்தத் தொடர்ந்த இசைப் பாரம்பரியத்தில் இன்று பொதுமக்களின் பங்களிப்பு குறைந்து போனதால் அது தொடர்பான அரசியலும் மிக எளிதாக வளர்ந்து விட்டது. மிக எளிதாக ‘தமிழிசை வேறு. கர்நாடக இசை வேறு’ என்று சொல்லி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் இயல்பாகவே தமிழ் இசையை அழித்து, பல்வேறு நுணுக்கங்களைப் புகுத்தி அதை கர்நாடக சங்கீதமாக்கி விட்டார்கள் என்ற முட்டாள்தனமான வாதத்தையும் முன்வைக்கிறார்கள்.”

  நிஜம் தானே! தமிழிசையும் கருநாடக இசையும் ஒன்றுதான் என்றால் அதை ‘தமிழிசை’ என்றே பெயர் வைத்து அழைப்போமே, ஏன் இன்னும் அதை ‘கருநாடக சங்கீதம்’ என்ற அழைத்து கொண்டிருக்கிறோம்? இதன் பின்னால் உள்ள அரசியல் பின்புலம் என்ன என்று விளக்க வேண்டும்?

  “இது போன்ற அத்தனை முட்டாள்தனமான வாதங்களையும் ஒற்றை ஆளாக உடைத்துக் காட்டியிருக்கிறார் இளையராஜா.”

  உடன்பட்டே ஆகா வேண்டும், ராஜா’வுக்கு இசை தவிர வேறு ஏதும் தெரியாது! தெரிந்து கொள்ளும் அவசியமும் இல்லை. நீ என்ன பெயர் வேண்டும் ஆனாலும் வைத்துக்கொள் எனக்கு தெரிந்தது ஏழிசையும் அதை கையாளும் வித்தகமும். தமிழிசையா, கருநாடக இசையா, ஹிந்துஸ்த்தானியா, மேற்கத்திய இசையா, இத்தனை பிரிவினைகளும் மீறி அவர் இசை தோற்றுவிக்கும் உலகளாவிய் வடிவ அழகு மட்டுமே, அதுவரை ‘இசை’யை தங்கள் குல சொத்து என்று வாதிட்டு வந்த முட்டாள்களின் பிதற்றலை அடக்கி ஆண்டது. அவர் இங்கு நடத்தி காட்டியது மிக எளிமையான திரைஇசை பாடல்களின் மூலமாக மிக வலிமையான இசை கலகத்தை. மீண்டும் சனாதனிகள் வந்து மக்களிடம் இருந்து இசையை பிரித்து செல்லாமல் இருக்க ‘நாம்’ விழிப்புடன் இருக்க வேண்டும் 😉

 4. An excellent writeup. It is beyond doubt that Illayaraja is a master when it comes to fusion. The reason why no one seems to mention Illayaraja’s name when it comes to fusion is that he fuses it so well !!! For example, the song quoted here, “Madura Marikozhundu Vasaam”, is a film tune, a folk tune, a Mayamalavagowla, all rolled in one and added to it is the western arrangement which goes with it. Raja’s philosophy seems to be that international, classical or whatever other form of music used, should enhance the song in question and that is how all his songs sound. That is the reason they sound like much of the other fusion experiements, where you have two strands going simultaneously without giving an holistic picture. In the music directors, I can only think of late Salil Chowdary, who had this wonderful ability of bringing in Western Classical music into a film song without drawing attention to that fact.

  There is so much to analyze in Illayaraja’s music and I appreciate the effort taken by the author in this regard.

  S.Suresh

 5. I meant, “That is why they don’t sound like much of the other fusion experiments”

  S.Suresh

 6. very good article indeed.. a small correction..”pacha mala poovu” from Kizhakku vaasalile is neelambari..not keeravani..

 7. //நிஜம் தானே! தமிழிசையும் கருநாடக இசையும் ஒன்றுதான் என்றால் அதை ‘தமிழிசை’ என்றே பெயர் வைத்து அழைப்போமே, ஏன் இன்னும் அதை ‘கருநாடக சங்கீதம்’ என்ற அழைத்து கொண்டிருக்கிறோம்? இதன் பின்னால் உள்ள அரசியல் பின்புலம் என்ன என்று விளக்க வேண்டும்?//

  புலிகேசி,
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கருநாடக சங்கீதம் என்று நீங்கள் குறிப்பிடுவதிலிருக்கும் கர்நாடகம் இப்போதிருக்கும் கர்நாடக மாநிலமில்லை என்ற விஷயம் உங்களுக்குத் தெரியும் என்று நினைத்து அதை விளக்காமல் விடுகிறேன்.

  கர்நாடக இசையும், தமிழிசையும் வேறில்லை என்று நான் சொல்லும்போதே அது தமிழ்நாட்டில் மட்டுமே உருவாகிய இசை என்றோ, தமிழ்நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட இசை என்றோ சொல்லவில்லை. கிட்டத்தட்ட நம் தென்னிந்தியா முழுதுமே இந்த இசைப்பாரம்பரியம் இருந்திருக்கிறது.

  ‘ஆதிக்குரங்கு தமிழ்க்குரங்கு’என்று சொல்பவர்கள்தான், இந்தியாவெங்கும், ஏன் உலகெங்கும் இருக்கும் இசை தமிழிசையில் இருந்து உருவானது என்று சொல்கிறார்கள். நீங்கள் அப்படிப்பட்டவரா என்பது எனக்குத் தெரியாது.

  எந்தவித காழ்ப்புணர்வுமில்லாமல் கர்நாடக சங்கீதத்தின் வரலாற்றை நீங்கள் படித்துப் பார்த்தால் இது புரியும். இல்லையென்றால் வளைத்து, வளைத்து வாதம் செய்து கொண்டேயிருக்க வேண்டியதுதான்.

  அன்புடன்,
  சேதுபதி

 8. sethupathi, arpudhamana katturai. Idhai vida azhagaga explain panna mudiyadhu andha medhayin magathuvathai.

  Carnatic- enbadhu oru region-aiyum kurikkum. Andha region-il valarndha isai enbadhagavum kollalam. Andha region thiruvaiyaru utpada enbadhai ninaviu kondal puriyum. Adhe samayam, samaskruthathil, kaadhukku inimaiyana endra porul padum padam carnatic. Carnatic = Karnataka = Cauvery= pottu thakkuda kannadiganai apdingara manappanmai irundhal onnum panna mudiyadhu.
  Adhe maadhiri, sanadhanigal perai solli kondu aatchikku vandha pudhiya mannargal 40 varushams tamizhagathai surandiya pinnum, sanadhanigal dhaan innum tamizhnattu kashtathukku karanamnu vaadhidubavargalai ennavendru solvadhu?

 9. வாவ்! என்ன ஒரு இனிமையான அரசரைப்பற்றிய இனிமையான கட்டுரை.

  கட்டுரையைப் படிக்கும்போது கட்டுரையாசிரியரின் வீச்சைப் பார்த்து முதலில் பிரமிப்பு ஏற்படுகிறது. பின்னர், அந்த கட்டுரையின் பொருளைக்குறித்து ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது.

  ஆக, (குறைந்த பட்சம்) இரண்டு முறைப் படிக்க வேண்டிய கட்டுரை இது. இளையராசாவின் இன்னிசை தந்த தாக்கம் தமிழிசைக்கு கிடைத்த ஒரு பேறு.

  நன்றி

  ஜயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *