மதியும் காந்திமதியும்

Nellai Kanthimathi Ammanகாந்திமதியம்மன் பிள்ளைத்தமிழ்

நெல்லை நகரில் கோவில் கொண்டிருக்கும் காந்திமதி அம்மையின் பேரில் அழகிய சொக்கநாதர் என்பவர் “காந்திமதி அம்மன் பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார்.சுமார் 150 வருடங்களுக்கு முன்னால் பாடப் பெற்றது.

காப்புப் பருவம், கலைமகள் துதி

அதிகாலையில் எழுந்து நதியில் நீராடி கோவிலுக்குச் சென்று கதவைத் திறந்து பூஜைக்குச் செல்லும் அர்ச்சகர்களைப் பார்க்கிறோம்.சூரியனை இப்படிப் பட்ட ஒரு அர்ச்சகராகப் பார்க்கிறார் புலவர். சூரியன் தினமும் கடலில் மூழ்கி ஒவ்வொரு நாளும் தனது ஆயிரம் பொற்கரங்களால்
[கிரணங்களால்] வெள்ளிக்கோவிலின் கதவைத் திறக்கிறானாம்.

அது என்ன வெள்ளிக் கோவில்? கமலாலயம். வெள்ளைத்தாமரையாகிய கோயில் தான்.வெள்ளிக் கோவிலில் வீற்றிருக்கும் கலைமகள் புலவரின் கண்களிலும், தலையிலும், நாவிலும், நெஞ்சிலும் நிற்கிறாளாம்

“கதிரோன் என்னும் பேர் அருச்சகன் மைக்
கடல் நீர் படிந்திட்டு ஆயிரம் பொற்
கையால் தினமும் திறக்கும் வெள்ளிக்
கதவக் கமல ஆலயத்தும் என்கண்
பதி,நா,அகத்தும் வீற்றிருக்கும்
பவளச் செழுந்தாள்,பைங்கூந்தல்
படிகநிறப் பெண்பாவை தனைப்
பாவால் பரவிப் பணிகுதுமால்

மதியும் காந்திமதியும்

குழந்தை காந்திமதி [அம்மை] சந்திரனைச் ”சந்தமாமா வாவா” என்றழைக்கிறாள். சந்திரன் வரவில்லை கவிஞர் சொல்கிறார், “சந்திரா ரொம்பவும் கர்வப்பட்டுக் கொள்ளாதே.. நீயும் ஒரு சுடர் தான் இல்லையென்று சொல்லவில்லை. எங்கள் காந்திமதியும் உலகெங்கும் நிலவும் அருட்சுடராக விளங்குகிறாள். நீயும் ஒளி தருகிறாய். வெறும் ஒளி மட்டும் தந்தால் போதுமா? இவள் கருணை, அன்பு எல்லாம் நிறந்தவளாக “கருணாரஸ ஸாகரா” என்ற திருநாமத்திற்கேற்ப அருட்சுடராக விளங்குகிறாள்.

சந்திரா, உனக்குக் கலைகள் பதினாறு தினமும் ஒரு கலையாகக் கூடிக் கொண்டே வந்து பௌர்ணமியன்று முழுநிலவாகக் காக்ஷி தருகிறாய். இவளுக்கோ ஆய கலைகள் அறுபத்துநான்குமே அத்துபடி. “சதுஷ்ஷஷ்டி கலாமயீ” என்ற பெயரும் உண்டு. சந்திரா, நீ மாதத்தில் ஓரோரு சமயம் ரிஷபராசியுள் வருவாய். இவளோ எந்தை வேய் முத்தரான [வேணுவன நாதர்] நெல்லையப்பருடன் எப்போதும் ரிஷப வாகனத்தில் வருவாள். அம்மையைப் பிரியாவிடை என்று சொல்வார்கள். ஞானசம்பந்தக் குழந்தை தனது முதற்பதிகத்திலேயே “தோடுடைய செவியன் விடையேறி” என்று அம்மையும் அப்பனுமாக விடையேறி வருவதைப் பாடியது. சந்திரா, நீ அசுரர்களைக் கண்டாலே [ராகு,கேது] ஓடி ஒளிவாய். ஆனால் இவளுடைய செல்வக் குமரனான முருகனைக் கண்டாலே அந்த அசுரர்கள் அஞ்சி நடுங்குவார்கள். அந்த அசுரர்களுக்கே எமனாக முருகன் விளங்குகிறான். தாருகாசுரனும், சிங்கமுகாசுரனும் இவனிடம் என்ன பாடு பட்டார்கள்! முருகன் வேலை எடுத்தான். சூர்ப் பேரணி கெட்டது. தேவேந்திர லோகம் பிழைத்தது. இவ்வளவு பெருமை பொருந்திய காந்திமதி உன்னை அழைக்கிறாள். எனவே அம்புலியே இவளுடன் ஆட விரைந்தோடி வா என்கிறார் கவிஞர்.

நீயும் ஒரு சுடர் ஆவை எனினும் இவள்
எங்கெங்கும் நிலவருட் சுடராயினாள்
நிறைகலைகள் பதினாறு உனக்கு,அறிஞர்
தொன்னூல் நிகழ்த்து கலை எட்டெட்டும்
மிக்கேயும் இவளுக்கு, நீ மாதத்தில்
ஒரோர் கால் இடபத்தில் ஏறி வருவாய்
எந்தை வேய்முத்தரோடும் எப்போதும்
இடபத்தில் ஏறி இவள் பவனி வருவாள்.
தேயும் வெண்மேனி கொடு தானவர்க்கு
அஞ்சுறுவை
செவ்வி இவள் தன் கரத்துச் சிறுவனும்
அவர்க்கு எமன் எனக்குலாவுவான்
உயிர்த்திரள் முதல் பகர் அனைத்தும்
ஆயும் அவைஅல்லாது நிற்கும் இவள்
உளமகிழ அம்புலீ ஆடவாவே
ஆய்ந்த தமிழ் நெல்லை வளர் காந்திமதி
வல்லியுடன் அம்புலீ ஆடவாவே!

இப்படி அழைத்தும் அம்புலி வரவில்லை. புலவர் மேலும் சொல்கிறார். சந்திரா ரொம்பவும் பிகு பண்ணிக் கொள்கிறாயே. உன்னைவிட இவள் எவ்வளவு மேம்பட்டவள் தெரியுமா? சூரியன் முன் நீ ஒளி மழுங்கிப் போகிறாய். கதிரவனிடமிருந்து ஒளியைக் கடன்வாங்கித்தானே நீ பிரகாசிக்கிறாய்? ஆனால் அந்தக் கதிரவனே இவளுக்கு முன்னால் ஒளி மழுங்கிப் போய்விடுவான். இவளுக்கு “பானுமண்டல மத்யஸ்த்தா” என்றும் “ஸஹஸ்ரசூர்ய ஸம்யுக்த ப்ரகாஸாயை” (ஆயிரம் சூரியர்களின் ஒளி பொருந்தியவள்) என்ற நாமமும் உண்டு தெரியுமா? சந்திரா, பல கிரகங்களும் உன்னைச்சுற்றி வரும். ஆனால் ஒரு கிரகமும் இவள் அடியார் பக்கம் கூட நெருங்காது.

“ஞாயிறு, திங்கள், செவ்வாய்
புதன், வியாழன், வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே”’

இவள் அடியார்களுக்கு நவக்கிரகங்களுமே நல்லவை தான். சந்திரா நீ ஈயம் போல் வெளுத்துப் போகிறாயே,சோகை பிடித்தது போல் இருக்கிறாயே, எங்கள் காந்திமதியோ? அவள் பெயரிலேயே காந்தி [ஒளி] இருக்கிறதே! இவள் மாற்றுக் குறையாத பசும்பொன் போன்றவள். நீ, மாதத்தில் ஒருநாள் பூரண சந்திரனாக விளங்குகிறாய். இவளோ என்றும் சுகானந்த வடிவாக விளங்குகிறாள். சங்கரனை அழைக்காமல் அவமதித்த தக்ஷன் யாகத்திற்கு நீ சென்றதால் சங்கரன் உன்னைத் தாளால் அரைத்தான். மணிவாசகர் இதை “சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன் தன் வேள்வியில்” என்பார்.

உன்னைக் காலால் தேய்த்த அந்த சங்கரன் எங்கள் காந்திமதியின் சரணங்களில் வீழ்ந்து
வணங்குவான்.சங்கரனுக்கும் சங்கரிக்கும் ஊடல். அந்த ஊடலைத் தீர்ப்பதற்காக அன்னையின் காலில் வீழ்ந்து வணங்குகிறானாம் ஐயன். சந்திரா உனக்குச் சந்திர மண்டலம் மட்டுமே சொந்தம். ஆனால் இவளோ உலகையே தந்த உதரமுடையவள்.இவள் ஜகஜனனீ. இவள் விஸ்வகர்ப்பாயை!

அகிலாண்டகோடியும் ஈன்ற அன்னை! இப்படிப்பட்ட இவள் கரம் நீட்டி உன்னை அழைக்கிறாள் என்றால் அது லேசான காரியமா? நீ அதற்குக் கொடுத்துவைத்திருக்க வேண்டுமே! எனவே மதியே, காந்திமதியுடன் விளையாட வா” என்கிறார்.

செங்கதிர் முன் நின் ஒளி மழுங்கும், இவள்
அவன் உடல் திகழ் ஒளி மழுங்கல் செய்வாள்
சேர்ந்து பல கோள் உன்னைச் சூழும்,ஒருகோளும்
இவள் சீரடியார் முன்னும் அணுகா
வங்கம் உறழ் எள்ளிய வனப்பன் நீ, இவள்
எண்ணில் மாற்றஉயர் பசும் பொன் அனையாள்
மாதத்தில் ஒருநாள் சுகம் பெறுவை, இவள்
என்றும் வளர் சுகானந்த வடிவாள்
சங்கரன் உன்னைத் தாளினால் அரைத்தான்,இவள்
சரண் பணிந்து ஏவல் புரிவான்
தனி மண்டலத்தன் நீ, இவள்
உலகனைத்தையும் தந்த சிறு பண்டியுடையாள்
அங்கரம் நிமிர்த்து உனை அழைப்பது அரிதல்லவோ
அம்புலீ ஆட வாவே!

(பண்டி—வயிறு; வங்கம்–ஈயம்)

இப்பொழுதும் அம்புலி ஆட வரவில்லை. எனவே தான உபாயத்தைக் கையாளுகிறார் கவி. ஆசை காட்டுகிறார். இங்கு வந்தால் இன்ன இன்ன கிடைக்கும் என்று சொல்லி ஆசைகாட்டி வர வழைக்கப்பார்க்கிறார். நான் சொல்கிறபடி செய்தால் உனக்கு இதையெல்லாம் தருவேன். இதெல்லாம் நடக்கும் என்று சொல்லி வசப்படுத்த முயற்சி செய்கிறார். சந்திரா நீ தினமும் கடலில் நீராடுவதிலும் குறைவில்லை. வான நதியாம் கங்கையிலும் நீராடுகிறாய். ஆனால் என்ன பயன்? நீயே சொல். ஏதாவது நன்மையடைந்திருக்கிறாயா? உன் குருவுக்குச் செய்த துரோகமும், ராகு, கேது என்ற விஷப்பாம்புகள் தீண்டியதால் ஏற்பட்ட விஷமும், உன்னிடமுள்ள முயற்கறையும் உன்னை விட்டு நீங்கி விட்டதா? இல்லையே. அப்படியே தானே இருக்கின்றன. நீ மட்டும் நான் சொல்வதுபோல் கேட்டு நடந்து பார். வேறொன்றும் இல்லை. இங்குவந்து அம்மையின் திருக்கோயில் பொற்றாமரைக் குளத்தில் வந்து நீராடி விட்டு அம்மைக்குச் சார்த்ததிய மஞ்சள்காப்பில் சிறிதளவு உண்டால் போதுமே! அனைத்துப் பாவங்களும் பறந்து போய் விடாதா! எவ்வளவு எளியவழி! ஆனால் நான் என்ன சொன்னாலும் உன் புத்தியில் ஏறவில்லையே! யார் தான் உனக்கு மதி என்று பெயர் வைத்தார்களோ? பலநாளும் அடித்தடித்துப் பால் புகட்ட வேண்டுமா? ஒரு தடவை சொன்னால் புரிந்துகொள்ள வேண்டாமா? அதனால் இனிமேலாவது அம்புலியே ஆடவா என்கிறார்.

ஆனால் சந்திரன் வரவில்லை. எனவே கடைசியாக தண்டோபாயத்தைப் பிரயோகம் செய்கிறார். சந்திரா, இவ்வளவு சொல்லியும் நீ புரிந்து கொள்லவில்லை. இன்னமும் வரவில்லை. வராவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இவள் முகம் கொஞ்சம் வாடினாலும் என்ன நடக்கும் என்று சொல்கிறேன் கேள். இவளுடைய மூத்த பிள்ளை இருக்கிறானே, அவன் தான் விநாயகன் – யானைமுகன். அவன் உன்னை ஒரு கவளம் என்று நினைத்து விழுங்கி விட்டால் என்ன செய்வாய்? இந்தக் காந்திமதியே ஈசனுடைய கண்களை விளையாட்டாகப் பொத்தினால் உலகமே இருண்டு விடுமே! சூரியனோடு நீயும் மறைந்து போக வேண்டியது தான். மேலும் இவனுடைய சின்னமகன் இருக்கிறானே, அவனைப் பற்றி உனக்குத் தெரியாது அவன் அயனைக் குட்டிச் சிறையிருத்தும் கோமான்! பிரமனையே பிரணவத்தின் பொருள் தெரியவில்லையென்று தலையில் குட்டிச் சிறையும் வைத்தவன். அவன் கோபித்து வேலைக் கையில் எடுத்தால் என்ன ஆகும்? நீ எங்கு போவாய்? எங்கு ஓடி ஒளிவாய்? அப்படி ஒருவேளை நீ ஓடி ஒளிந்தாலும் அங்கெலாம் இந்தக் காந்திமதி தானே நிறைந்திருக்கிறாள்! “பார்க்குமிடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணானந்தம்” அவள்! அவள் இல்லாத இடமேயில்லை. இந்த உலகைப் படைத்துக் காக்கும் அவளுக்கு நிகர் அவளே! எனவே அம்புலியே இந்த வடிவழகியுடன் ஆடவா’’ என்றழைக்கிறார்.

இலகு உரிமையின் இவள் மகிழ்தர இதுவரை
இங்கே வந்திலையால்
இனி ஒரு சிறிது உளம் வெகுளுமுன் முதன் மகன்
என்று ஓதும் கரிதான்
உலவுறு உன்னை ஒரு கவளம் அது என எளிது
உண்டால் என் செய்குவாய்?
உதயனொடு இருகர மலரிடை புதைபடல் உண்டோ
இன்று கொலே
அலகறு புகழ்பெறு சிறுமகன் அயில் தொடின்
அந்தோ எங்கடைவாய்?
அகல்வெளிதனில் எங்கு எவண் உற நினையினும்
அங்கு ஆர்கின்றிலளோ?
மலர்தலை உலகினை அருள் மலைமகள் எதிர்
வந்தாடு அம்புலியே!
வளமலி கழைவன வடிவுடையவளிடம்
வந்தாடு அம்புலியே!

இப்படி நாலுவிதமாக அம்புலியைக் காந்திமதியோடு விளையாட வரும்படி அழைக்கிறார் கவிஞர்.

7 Replies to “மதியும் காந்திமதியும்”

 1. பிள்ளைத்தமிழில் ஆண்பால், பெண்பால் என்ற இருவகையுண்டு. அவற்றில் பெண்பாற்பிள்ளைத்தமிழ்களில் பெரிதும் சிறப்பிற்குரியது மீனாட்சியம்மைபிள்ளைத்தமிழ் என்ற குமரகுருபரசுவாமிகளின் பிரபந்தமாகும். ஆண்பாற் பிள்ளைத்தமிழில் உள்ள விஸயங்கள் பெண்பாற் பிள்ளைத்தமிழிற்கு விலக்காகி அம்புலிப்பருவத்தை அடுத்து அம்மானை, நீராடல், ஊஞ்சல் என்பன அமையும் எனக்கூறுவர்.

 2. பிள்ளைத்தமிழ் பற்றி நிறையவே பேசலாம். திருச்செந்தூர்ப்பிள்ளைத்தமிழில் முருகனை பகழிக்கூத்தர்

  “பேராதரிக்கும் அடியவர் தம் பிறப்பை ஒழித்துப் பெருவாழ்வும் பேறும் கொடுக்க வரும் பிள்ளைப் பெருமான் என்னும் பேராளா” என்று வருகைப்பருவத்தில் அழைக்கும் போது உருகாத உள்ளங்களும் உண்டோ?

  பிள்ளையாக இறைவனைப் பார்ப்பதே தனி இன்பம். நம் அனைவருக்கும் அன்னையானவளையும் அப்படிப் பார்ப்பதில் எவ்வளவு நயம் இருக்கிறது. இதனை காந்திமதி, காமாட்சி பிள்ளைத்தமிழ்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

 3. அன்புள்ள ஆசிரியருக்கு
  பிளைத்தமிழ் பாடிய திரு சொக்கநாதரின் வாழ்கை சரிதிரதிரத்தை
  அறிய ஆவலாக உள்ளேன். தயவுசெய்து எழுத முடியுமா?

  நன்றி
  raadha

 4. தமிழ்ப்பிரபந்தங்களுக்கு முதன்மை தரவேண்டும்.

  எல்லாம் வல்ல அன்னையை தமிழில் குழந்தையாகப் பாவித்துப் பாடும் போது எவ்வளவு சிறப்பாக இருக்கிறது. ஆடிப்பூர நாளில் இப்பாடல்களை அம்பாள் முன்றலில் சமர்ப்பிக்கலாம். அன்னையும் குழந்தை உள்ளத்துடன் நம் குற்றங்களை களைந்து கருணை கொண்டு அருள்வாள்.

 5. Indha arumaiyaana akanthimati ammai pillaithamizh puththagam engu kidaikkum? vivarangal kodutthaal magizhvaen.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *