அழிவிலிருந்து மீண்டெழுவோம் – தருண் விஜய்

ஆங்கில மூலம்: தருண் விஜய்

தாஜ் ஹோட்டல் மறுதிறப்பு நிகழ்ச்சியைப் பார்த்தபோது நாம் வெற்றிபெற்றதாக உணர்ந்தேன். பெண்நண்பர்களை சந்திக்கவோ, லியோபாட்டில் (தாஜ் ஹோட்டலின் சிறந்த உணவகம்) மாலை நேரத்தைக் கழிக்கவோ அடிக்கடி அங்கு செல்பவன் இல்லை நான். ஆனால், டிசம்பர் 21ஆம் தேதி நடந்த தாஜ் ஹோட்டலின் மறுதிறப்புவிழா என்னை மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் அடையச்செய்தது. நவம்பர் 26ஆம் தேதியக் கோழைகளை நாம் பழிவாங்கிய நாள் இது – இது ஒரு இரண்டாவது சோமநாத்.

என் இந்த உணர்வு பார்ஸிக்களுக்கு நன்றாக புரிந்திருக்கும். பல நூற்றாண்டுகளுக்கு முன், இதே வெறுப்பு வணிகர்களால் அழிக்கப்பட்ட தங்கள் மூதாதையர்களின் பாரம்பரியத் தாயகத்தைப் பார்ஸிக்களால் பின்னால் என்றுமே திரும்பப் பெற முடியவில்லை.

அந்த வெறுப்பு வணிகர்கள் பாமியன் புத்தர் சிலைக்கும் இப்படியே அழிவைக் கொணர்ந்தார்கள். ஹம்பிக்கும் கூட. இன்னும், கோயில் நகரங்களான அயோத்தி, மதுரா, காசி எல்லாவற்றிற்கும். மேலும், கொஞ்சநாள் முன்பு ரகுநாதர் கோயில், சங்கடமோசன கோயில், அக்ஷரதாம் கோயில் ஆகியவற்றிற்கும். தேதிகளையும், முகங்களையும் தவிர இந்த அழிப்புகளில் வேறென்ன மாறிவிட்டது?

தாஜ் ஹோட்டல் சீரமைத்துத் திறக்கப்பட்டதில் வெறுப்புக்குப் பணியாத நம் மனப்பான்மை வெற்றி பெற்றிருக்கிறது.

நாம் சோமநாதர் கோயிலை புனரமைத்தோம், தாஜ் ஹோட்டலையும் மறுபடியும் திறந்துவிட்டோம். ஒன்று ஆன்மீகத்தளம், மற்றொன்றோ நம் விருந்தோம்பலின் அழகிய சின்னம் – என்ற வித்தியாசங்கள் முக்கியமா என்ன? இரண்டு தாக்குதலுமே இந்தியாவின்மீது நடந்தவைதான். இவ்விரண்டிலும், நாம் (தன் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவதாகச் சொல்லப்படும்) பீனிக்ஸ் பறவைபோல அழிவிலிருந்து மீண்டெழுந்தோம்.

ரத்தன் டாடா அவர்கள் தாய்நாட்டிற்காக தன் முழு அர்ப்பணிப்பைத் தரும் இந்தியாவின் தலைசிறந்த ஒரு மனிதர். செல்வத்தாலும் பெற முடியாத மரியாதையை அவர் பெற்றிருக்கிறார். அதற்குக் காரணம் கோடிகளில் செலவிட்டு அவர் வாங்கிய பன்னாட்டு நிறுவனங்களால் அல்ல, அந்த இந்தியனின் தளராத தன்னம்பிக்கையினால்.

somnath3கஜினிகளும், ஔரங்கசீப்பின் நாசகாரப் படைகளும் சோமநாதர் கோயிலைப் பலமுறை அழித்தனர். ஆனாலும், சோமநாதர் கோயிலின் அழிக்கமுடியாத உணர்வு வெறுப்பையும், காட்டுமிராண்டித்தனத்தையும் தோற்கடித்து மீண்டும் மீண்டும் வெளிவந்தது. “ஒரு புதிய சகாப்தத்தின் விடியலில், தன் சாம்பலிலிருந்து ஒரு புதிய கோயில் ஃபீனிக்ஸ் பறவையாய் உயிர்த்தெழுந்தது” என்று எழுதினார் K.M. முன்ஷி 1950ல்.

மீண்டெழுந்த சோமநாதர் கோயில், மீண்டெழுந்த இந்தியாவைக் குறித்தது. அந்த எழுச்சி உணர்வே நம்மை இப்போது மீண்டும் நம்மை வழிநடத்த வேண்டும்.

மும்பையின் வீர முகமும், தாஜ் ஹோட்டலின் மறு-திறப்பும் நம் உறுதியைக் குறிக்கின்றன. நாம் இந்தப் போராட்டத்தை அதன் இயல்பான முடிவுவரை தொடர வேண்டும்.

அமெரிக்க ராணுவத் தலைமை தளபதி அட்மிரல் மைக் முல்லன் அவர்களின் பாகிஸ்தானிய விஜயத்தால் நமக்கு ஏதோ பலன் கிடைக்கப் போவதாக மகிழ்ச்சியடைபவர்களும், பாகிஸ்தானுக்கு பிரணாப் முகர்ஜி கொடுத்த எச்சரிக்கைகளை ஒரு நம்பிக்கையோடு பார்ப்பவர்களும் சீக்கிரம் ஏமாறப் போகிறார்கள். இந்தியா ஒரு போர்ச்சூழலில் ஈடுபடுவதை அமெரிக்கா விரும்பாது. அதனால், தற்போது இந்தியாவில் நிலவிவரும் எழுச்சி உணர்வைத் தணிக்க “ஏதோ நடப்பது” போலக் காட்டி, வரும் தேர்தல்வரை காலம் கடத்துவார்கள். பிரணாப் அண்ணனோ வரும் லோக்சபா தேர்தலுக்கு (நாட்டை) தயார்படுத்தும் வேலைக்குப் பணிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் எதிர்ப்புக் குரலும், முடிந்தால் அங்கிங்கு ஓரிரண்டு சிறு மோதல்களும் அவருக்கு உதவலாம். ஆனால், பாகிஸ்தானை தண்டிப்பதோ அதற்குப் பாடம் கற்பிப்பதோ அரசின் நோக்கம் அல்ல.

புதுடில்லியின் இந்தப் புதிய சூரத்தனமான அணுகுமுறைக்குப் பன்னாட்டு ராணுவ நிபுணர்களும், பாகிஸ்தானியப் பார்வையாளர்களும் கணிக்கும் குறிக்கோள் இதுவே. இந்த கசப்பான உண்மை பொய்யாகிப் போனால் நான் மிகவும் மகிழ்வேன். இடையிடையே சிறு மோதல்களோ அல்லது கொஞ்சலோ இல்லாத, நேர்மையான, நீண்டநாளையப் பாகிஸ்தான் கொள்கை ஒன்றை உருவாக்குவது இன்றைய சூழலின் முக்கிய சவால்.

நாம் எதிர்கொள்ளும் பாகிஸ்தான் ஒருசீரான கட்டமைப்பு அல்ல. பாகிஸ்தானின் பஞ்சாபிய ஆக்கிரோஷத்தையும், அதன் சிந்து, பலூச்சிய, பஃதூன் அம்சங்களையும், இந்தியா மீதான பாகிஸ்தானின் ஆழ்ந்த வெறுப்பையும் கவனத்தில் கொண்டு இந்தியாவின் பாகிஸ்தான் கொள்கை அமைய வேண்டும்.

இதுவரை, இந்தியாவின் எல்லாப் பிரதமர்களும் பாகிஸ்தான் விவகாரத்திற்கு, பொதுவில் அமெரிக்காவை மையமாகக் கொண்ட, புதிய அணுகுமுறையைக் கற்பிக்க முயன்றிருக்கின்றனர். (ஆனால்) இந்தியாவை மையமாக்கிய, நம் நீண்டகால இலக்கை அடையச் செய்யும், கொள்கையோடு பாகிஸ்தானை அணுக வேண்டும். சிந்து, பலூச்சி மாகாணங்களின் சுதந்திர வேட்கைக்கு டில்லி உதவாதவரையில், கைபர் பகுதியில் நமக்கு அமைதி கிட்டாது என்று சில பாகிஸ்தான் விவகார வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

புதுடில்லி இஸ்லாமாபாதை தன் வல்லமையைக் கொண்டே அடக்கவேண்டும் – அமெரிக்காவின் தோளில் ஏறி அமர்ந்துகொண்டு அல்ல. அந்த வசதி நமக்குக் கிடைக்கவும் போவதில்லை. வாஷிங்டன் எப்போதுமே இஸ்லாமாபாதில் அமெரிக்க லாபங்களுக்காகவே இயங்கும். தீவிரவாதக் குழுக்களின் ஜிகாதி கோட்பாட்டு அடிப்படைகளும், அந்தக் குழுக்களின் அரேபியத் தொடர்புகளும் அவர்களின் உண்மையான வலுவின் ஆதாரங்கள். இதில் பாகிஸ்தான் வெறும் ஆடுகளமாக இருக்கிறது, அவ்வளவே.

ஜிகாதிகளின் உள்நாட்டுக் கேடயங்களையும் நாம் புறக்கணிக்க முடியாது. அந்துலேயின் பேச்சு இஸ்லாமாபாதில் ஜர்தாரி பேசியதின் இன்னொரு பிரதி. கர்க்கரேயின் மரணத்தில் சந்தேகங்களை எழுப்பும் அந்துலேயின் உளறல்களை ஒரு நாள் டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்தேன். ஷபானா ஆஸ்மியைத் தவிர எல்லா முஸ்லிம் பங்கேற்பாளர்களும் அவர் பேச்சை கண்டிக்கவோ, தம்மை அதிலிருந்து தூரப்படுத்திக் கொள்ளவோ செய்யாதது ஆச்சரியமாய் இருந்தது. இந்த முஸ்லிம் தலைவர்கள் பல்வேறு கட்சிகளைச்சார்ந்தவர்கள் – அந்துலேயின் சந்தேகங்களை நிராகரித்த காங்கிரஸ் கட்சி உட்பட. ஷாபானாவும் அந்துலேயும் ஒரு முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதியில் போட்டியிட்டால், அந்துலே மிகவும் எளிதாக வென்றுவிடுவார் என்பது தெளிவு.

ஜிகாதிகளைக் குறிவைக்கும் அனைத்தையும் முஸ்லிம்கள் சந்தேகப்படுவது ஏன்?

துரதிருஷ்டவசமாக, இந்தத் தன்மை தீயைப் போல வளர்ந்துகொண்டிருக்கிறது. எந்த ஒரு தீவிரவாதத்தையும் கண்டிக்கும் முக்கிய குழுக்களிடம் நெருங்குவதற்கு மாறாக, தீவிரவாதச் செயல்கள் எல்லாவற்றையும் இந்து-யூத-அமெரிக்க சதியினால் நடப்பதாக இவர்கள் நம்பவைக்கப் படுகிறார்கள். இந்தூரில் பல முன்னணி உருதுக் கவிஞர்கள் பங்கேற்ற ஓரு கவிதை நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். அவர்கள் குஜராத் கலவரத்தையும், மும்பை தீவிரவாதத் தாக்குதலையும் விவாதித்தார்கள்; அதிபர் புஷ் மீது செருப்பு வீசிய பத்திரிக்கையாளரைப் புகழ்ந்தார்கள்; எல்லா முஸ்லிம்களையும் ‘தீவிரவாதிகள்’ என்று முத்திரை குத்துவதாக அவர்கள் நினைக்கும் எல்லோருக்கும் வன்மையாகச் சவால் விட்டார்கள். இவையெல்லாம் நல்லதுதான், ஆனால், காஷ்மீர இந்துக்களின் மீதான தாக்குதல்கள் அவர்களின் இலக்கியப் பார்வையிலில் படாமல் போனது ஏன்? அயோத்தி ‘மசூதி’யை அழித்த ‘ராமரின் தொண்டர்’களைக் கண்டிக்கும் கவிதைகள் இருந்தன. ஆனால், தங்கள் புனிதநூலை ஆதாரமாகக் காட்டிக்கொண்டே ரகுநாதர் கோயில், சங்கட மோசனர் கோயில், அக்ஷரதாம் கோயில்களில் நடந்த குண்டுவெடிப்புகள் அவர்களின் இலக்கியம் சார்ந்த கவலைகளில் காணவில்லையே, ஏன்?

narendra modiநரேந்திர மோதியை வெறும் விசா கொடுக்க மறுத்த சிறிய ‘தண்டனை’யோடு அமெரிக்கா விட்டுவிட்டதாக அவர்கள் குறை சொன்னார்கள்.

அவர்களின் தலைசிறந்த கவிஞர் நிதா பாஸ்லியை சாப்பாட்டு நேரத்தில் ஒரு எளிய கேள்வி கேட்டேன். “தொடர்ந்து வந்த பல கொடூர தாக்குதல்களால் தங்கள் வீடுகளிலிருந்து விரட்டப்பட்ட ஐந்து லட்சம் காஷ்மீர் இந்துக்களைப் பற்றி நீங்கள் எழுதியிருக்கிறீர்களா? குஜராத்தை கண்டிக்கும்போது, கோத்ரா பற்றியும் அப்படியே உணர்ந்து எழுதியிருக்கிறீர்களா?” அவரிடம் இதற்கு பதில் இல்லை.

இம்மாதிரி இலக்கியவாதிகள், நிதா சாயிபு போன்று, பிஜேபி அரசின் சிறந்த விருதுகளை வாங்கிக் கொள்ளத் தயங்காதவர்கள். ஆனால், தன் சக இந்தியர்களான பிற மதத்தினருக்குக் குரல் எழுப்ப முன்வராதவர்கள்.

தீவிரவாதிகளைக் கண்டித்த தேசப்பற்று மிக்க ஆக்கிரோஷ கவிதைகளைப் பாடி அங்குள்ள 7000 நேயர்களை அங்கே மகிழ்வித்தவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். ஆனால், அந்துலே, நிதா பாஃஸ்லி போன்றவர்களின் அடிப்படை மனநிலையைப் புறக்கணிப்பது நம்மைச் சாய்த்துவிடும் அப்பாவித்தனமாகும்.

அந்துலே எனக்கு ஜின்னாவும் மௌலானா அபுல்கலாம் ஆஸாத்தும் குறித்த விவாதத்தை நினைவுபடுத்துகிறார். அந்துலே குறிப்பது தன் மதத்தைப் பற்றிய ஞானத்தில் அல்லது பற்றில் புகழ்பெறாத, மற்றும் மதப்பற்றுள்ளவர்களுக்கான சேவையில் அதிகம் ஈடுபடாத இஸ்லாமியர்களின் ஒரு பகுதியை. மாறாக, மௌலானா வஹீதுத்தின் கான் இஸ்லாத்தின் ஆழ்ந்த மத அறிவுக்காக உலகெங்கும் புகழ்பெற்றவர்.

ஆனால், அந்துலே நியாயமான, தேசப்பற்று உள்ளவர்களை விட வாக்குகளை அதிகம் பெறுவார். ஏன்?

இஸ்லாம் மதத்தைப் பற்றிய அறிவில் ஜின்னாவுக்கும் அபுல் கலாம் ஆசாத்திற்கும் அதிக வித்தியாசம் இருந்தது. ஜின்னாவுக்கும் இஸ்லாத்துக்கும் அதிக சம்பந்தம் இல்லை. ஆனால், ஆசாத் இஸ்லாம் குறித்த ஆழ்ந்த அறிவின் சிகரமாய்த் திகழ்ந்தார். அவர் பழக்கங்களும் அவரின் ஆழமான மதநம்பிக்கையை பறைசாற்றியது. ஆசாத் இணைந்த இந்தியாவிற்காக வாதிட்டார். அவர், இஸ்லாமியர்களின் தலைமையை ஜின்னாவிடம் இழந்தார். ஏன்?

2008ஆம் ஆண்டு 1947 போல இருக்காது என்பதே மிகப்பெரிய நம்பிக்கை.

(ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான தருண் விஜய் அவர்களின் கட்டுரை)

2 Replies to “அழிவிலிருந்து மீண்டெழுவோம் – தருண் விஜய்”

 1. கட்டுரை கேள்விகளை எழுப்புகிறது. இவற்றிற்கு பதில் கண்டுபிடிக்காமல் மனித இனம் வாழ்ந்துவிட முடியாது.

  ஆபிரகாமிய தத்துவங்கள் அழிவின் பலத்தை நம்பி வாழ்கின்றன. அதனால்தான் வெற்றிபெற்ற ஒரு இஸ்லாமிய மன்னன் தோல்வி பெற்ற இஸ்லாமிய மன்னன் கட்டிய மசூதிகளை அழிக்கிறான். மிகக் கொடூரமான அழிவை செய்யும் திறன் உடையவனை, மற்றவனைவிட பலமுள்ளவனாக இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

  ஆனால், ஹிந்து மதமோ ஆக்கத்தின் பலத்தில் வாழ்வை கொண்டாடுகிறது. வெற்றிபெற்ற மன்னர்கள் தோற்ற மன்னன் கட்டிய கோயிலை மேலும் பிரம்மாண்டமாகக் கட்டுகிறார்கள். நேர்மறை பலத்தில் உயர்ந்தவனையே பலமுள்ளவனாக ஹிந்துக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அவ‌னையே கொண்டாடுகிறார்க‌ள்.

  ஹிந்து ம‌த‌ ம‌ன‌ப்பான்மைக்கும், ஆபிரகாமிய மனப்பான்மைக்கும் உள்ள வித்தையாசத்தை மிகத் தெளிவாக நடைமுறை உலகம் காட்டிவிடுகிறது.

  க‌ம்யூனிஸ்ட் க‌ட்சிக‌ளோடு சேர்ந்து அழ‌கிப் போட்டிக‌ளை எதிர்த்து குர‌ல் கொடுக்கும் ஒரு ஹிந்துவைவிட, அப்துல் கலாமையே ஹிந்துக்கள் பலமுள்ளவராகக் கருதுகிறோம். அதனால்தான் ஆர். எஸ். எஸ். அமைப்பின் தலைமை அலுவலகத்தில் ஹெட்கேவார், கோல்வ‌ல்க‌ர் ஆகியோருடைய‌ திருவுருவ‌ப் ப‌ட‌ங்க‌ளுக்கு இணையாக அப்துல் கலாமுடைய திருவுருவப் படமும் உள்ள‌து.

  ஹிந்துக்க‌ளின் விய‌ர்வையிலும், ர‌த்த‌த்திலும் உருவான‌ அவ‌ர்க‌ள‌து சொத்துக்க‌ளை அழித்த‌வ‌ர்க‌ளை ஆபிர‌காமிய‌ம் ம‌ரியாதை செலுத்துகிற‌து. ஆனால், இந்த‌ தீவிர‌வாத‌த்தால் கொடூரமாக பாதிக்கப்பட்ட தாஜ் உண‌வ‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கைவைத்து நிதி உத‌வி செய்து லாப‌ம் பெற‌ப்போகிறோம் என்று சொல்ல தேவையான சக்தியை இந்த மா நிலத்தின் ஹிந்து தத்துவங்கள் அளிக்கின்ற‌ன‌.

  நேர்ம‌றை செய‌ல்க‌ளின் மூல‌ம் பாவ‌ங்களின் விளைவை ம‌ட்டும் அல்ல, பாவ‌ங்க‌ளையே அழித்துவிட‌லாம் என்று ஹிந்து ம‌த‌த்தின் க‌ர்ம‌யோக தத்துவ‌ம் போதிக்கிற‌து.

  நல்ல செயல்களின் மூலம் தன்னிடம் உள்ள குறைகளையும், தனக்கு ஏற்படும் தீமைகளையும் அழிக்க ஒருவன் முயலும்போது அவன் ஒரு ஹிந்துவாக‌ மாறிவிடுகிறான்.அதற்கு எதிரிடையாக மாறான கருத்து இருக்கக்கூடாது அழிக்கப்படவேண்டும் என்று செயல்படுபவன் ஆபிரகாமியனாக மாறிவிடுகிறான்.

  அதனால்தான், பிற தெய்வங்களை வணங்குபவர்களை கொல், எரித்துவிடு, அடிமையாக்கு என்று ஆபிரகாமியம் போதிக்கிறது. ஆனால், ஆபிரகாமிய தாக்கத்தால் ஏற்பட்டுவிட்ட உடன்கட்டை ஏறும் பழக்கத்தை முற்றிலுமாக அழிக்க ஹிந்துக்களால் முடிந்தது.

  ஹ‌ர‌ ஹ‌ர‌ ம‌ஹாதேவ், வீர‌ வேல், வெற்றிவேல் என்னும் முழ‌க்க‌ங்க‌ள் எங்கெல்லாம் வ‌லிமை பெறுகின்ற‌ன‌வோ அங்கெல்லாம் வ‌ள‌மை பெருகுகிற‌து. எங்கெல்லாம் குரானும், பைபிளும், தாஸ் கேப்பிட்ட‌லும் ப‌ர‌வுகின்ற‌ன‌வோ அங்கெல்லாம் வ‌ன்முறையினால் மக்க‌ள் ஒடுக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

  புரிந்துகொள்வ‌தாலும், அனுப‌வ‌த்தாலும் அமைதியை கொண்டுவ‌ர‌ ஹிந்து த‌த்துவ‌ங்க‌ள் முய‌லுகின்ற‌ன‌. கேள்விகேட்காத‌ ந‌ம்பிக்கையாலும், வ‌ன்முறையாலும் அமைதியை உருவாக்க‌ ஆபிர‌காமிய‌ தத்துவ‌ங்க‌ள் முய‌லுகின்ற‌ன‌.

  இந்த‌ இருவேறுப‌ட்ட‌ ந‌ம்பிக்கைக‌ளின் செய‌ல்முறைக‌ளுக்கு சிற‌ந்த‌ உதார‌ண‌மாக‌ தாஜ் உண‌வ‌க‌ம் விள‌ங்குகிற‌து.

  இருப்பினும், இதை சோம‌நாத‌புர‌ கோயில் புண‌ர‌மைப்புக்கு இணையாக‌க் க‌ருத‌முடியாது. ஏனெனில், சோம‌நாத‌புர‌ கோயிலை புண‌ர‌மைக்க‌க்கூடாது என்று ப‌ல‌ முய‌ற்சிக‌ள் ந‌ட‌ந்த‌ன‌. அதையும் மீறி ஹிந்து எழுச்சி ந‌ட‌ந்த‌து. சோமநாதபுர கோயில் புணரமைக்கப்பட்டது. தாஜ் உண‌வ‌க‌ சீர‌மைப்பிற்கு அந்த அளவு எதிர்ப்பு எதுவும் எழுந்துவிட‌வில்லை.

  ஆனாலும், புணரமைக்கப்பட்ட தாஜ் உணவகம் ஹிந்துத்வ பாரம்பரியத்தின் அடையாளம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த செய்தி பல ஹிந்துக்களை வீரியம் கொள்ளச் செய்யும். மேலும் ப‌ல‌ போராட்ட‌ங்க‌ளையும், வெற்றிக‌ளையும் வெளிக்கொண‌ரும். தென்காசி கோயில் நில‌த்தில் ம‌சூதி க‌ட்ட‌ எதிர்ப்பு தெரிவித்து குமார‌ பாண்டிய‌ன் அவ‌ர்க‌ளின் ஏழை குடும்ப‌மே போராடும் வீரமும், ஹிந்துக்களின் சொத்துக்கள் ஹிந்துகளுக்கே என்று போராடும் பல தீரர்களின் சாகசச் செயல்களும் வெளியே தெரியவரும்.

  இந்த சூழலில் போன வாரத்தில் இருந்து தமிழகக் கம்யூனிஸ்ட் கட்சி கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே கொடுத்துவிடவேண்டும் என்ற போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. தவறான நேரத்தில், தவறான காரணத்திற்காக‌ ஆரம்பிக்கப்பட்ட தவறான போராட்டம். ஆபிரகாமியம் எப்போதும் அப்படித்தானே.

 2. அருமையான கட்டுரை. தருன் விஜயின் இந்த கட்டுரையை இத்தளத்தில் வெளியிட்ட உங்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும். வேல்முருகனின் மறுமொழியும் பெரிய நம்பிகையை தருகிறது. எல்லா அழிவிலிருந்தும் நாம் மீண்டு வந்திருக்கிறோம் என்பது நல்ல செய்தியய் இருப்பினும், இதைத் தவிர்க்க நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதே இங்குள்ள விடைகான முடியா பெரிய வினா. ஜெயக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *