ஓடிப் போனானா பாரதி? – 06

எப்படி நடந்தது?

சீனிவாசனை ‘இந்தியா’ பத்திரிகை ஆசிரியர் மற்றும் உரிமையாளர் பொறுப்பிலிருந்து விடுவித்துவிட்டு – அவரை மாதச் சம்பளம் பெறுகின்ற குமாஸ்தாவாக நியமிக்கும் உத்தரவையும் அவருக்கு வழங்கிவிட்டு – எஸ் என் திருமலாசாரி அவர்களே இரண்டு பொறுப்புகளையும் வகிப்பதாக 1908ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் பதிவு செய்துகொண்டார்.

ஆனால், இதற்கிடையில் பாரதியைக் கைது செய்வதில் தீவிரம் காட்டிய அரசு என்னென்னவோ வழிகளை முயன்று பார்த்தது. அவன் என்ன பத்திரிகை வாங்குகிறான் என்பது முதல் ஒவ்வொரு செய்தியும் கண்காணிக்கப்பட்டது. ஒரு துப்பறியும் அலுவலர் குறிப்பெழுதுகிறார்: ‘Gaelic American’ a prohibited journal – C S Bharati, editor of Bala Bharata, is one of thirteen persons who received Gaelic Amercian in Madras Presidency.’ (Police Abstract Vol. XXI, 1908) சென்னை மாகாணத்தில் மொத்தம் பதின்மூன்றே பேர்கள் சந்தாதாரர்களாக இருந்ததான, தடைசெய்யப்பட்ட காயலிக் அமெரிக்கன் என்ற பத்திரிகைக்கு பாரதியும் சந்தா செலுத்தியிருந்தான் என்பதும் கண்காணிக்கப்பட்டு, குறிப்பெடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த அளவுக்குத் தீவிரமாக காவல் துறையை இயக்கியது பாரதியின் எழுத்துகள் ஒருபக்கம் என்றால், அவனுடைய பேச்சுகள் இன்னொரு பக்கமாக இருந்திருக்கின்றன. எழுத்தைக் காட்டிலும் பேச்சுக்கே இதில் அதிகப் பங்கு இருந்திருக்க முடியும். ஏனெனில், ‘ராஜ துவேஷ‘மாக அவன் எழுதியிருப்பதாக அரசு பட்டியலிடுவனவற்றுள் பல, ‘ஏதோ அகப்பட்ட வரையில் ஆதாரமாக இருந்தால் போதும்’ என்ற ரீதியில் தொகுக்கப்பட்னவாகத்தான் இருக்கின்றனவே தவிர, அரசின் முதன்மையான நோக்கமாயிருந்த ‘பாரதியைச் சிக்கவைப்பதற்குப்’ போதுமானவையாக இல்லை. இருந்திருந்தால் அப்போதே சிறையில் தள்ளத்தான் துடித்துக் கொண்டிருந்தார்கள். அவனுடைய பேச்சுகள் சிஜடி போலீசாரின் கவன வட்டத்துக்குள் வந்திருக்கின்றன. அவையே அவன்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முதல்காரணமாகவும் இருந்திருக்கின்றன. இப்படி அனுமானிக்க இடமிருக்கிறது.

பாரதியின் சொற்பொழிவுகள் நடைபெற்ற இடம். சென்னை சென்ட்ரல் ர.நி. அருகில்.
பாரதியின் சொற்பொழிவுகள் நடைபெற்ற இடம். சென்னை சென்ட்ரல் ர.நி. அருகில்.

சென்னை மாநகராட்சிக் கட்டடத்தை ஒட்டி இருக்கின்ற விக்டோரியா ஹாலில் (இடது பக்கம் மாநகராட்சிக் கட்டடமும், வலது பக்கத்தில் பழைய மூர் அங்காடி, தற்போதைய தென்னக இரயில்வேயும் விளங்கும் இந்தக் கட்டடம் இன்னும் பழைய நிலையிலேயே இருக்கிறது. பாரதி நினைவகமாகப் போற்றப்படவேண்டிய இடங்களில் ஒன்றாக இந்தக் கட்டடத்தை அரசு அறிவிக்கப் போகும் நாளைக் கனவு கண்டுகொண்டிருக்கிறேன்.) பாரதி அடிக்கடி சொற்பொழிவுகளை நிகழ்த்தி வந்தான். இந்தக் கூட்டங்களில் சுப்ரமணிய பாரதியும், அவனுடைய உற்ற நண்பர் சுரேந்திரநாத் ஆரியாவும் பங்கு பெற்றுப் பேசி வந்தனர். விக்டோரியா ஹாலிலும், கடற்கரையிலும் இந்தப் பொதுக் கூட்டங்கள் அடிக்கடி நடந்தன. மூர் மார்க்கெட் அருகே கூட்டங்களை நடத்தக் கூடாது என்று முனிசிபல் தலைவரும், கடற்கரையில் நடத்தக் கூடாது என்று போலீஸ் கமிஷனரும் தடை விதித்துவிட்டார்கள்.

ஒரு முறை, இப்படிப்பட்ட கூட்டமொன்று நடக்க இருப்பதாகக் காவல் துறையே துண்டுப் பிரசுரம் அடித்து வினியோகித்திருக்கிறது. 25.6.1908 அன்று நடந்த சென்னை ஜனசங்கக் கூட்டத்தில் இதைக் குறித்து பாரதி பேசியிருப்பது காவல்துறைக் குறிப்புகளில் காணக் கிடைக்கிறது. ‘இப்படிச் செய்வது அவர்களுடைய பலவீனத்தையே காட்டுகிறது,’ என்று பாரதி குறிப்பிட்டிருக்கிறான். “I think the circulation of notices which announced that there would be a meeting today on the beach is the mischief of the police, because by so doing there will be a large crowd of people in the beach and in case they show any sign of resistance when ordered to disperse, the police could realise the long cherished hope of making Madras like Tinnelvely and other places. The notices do not seem to have been issued by any Saba.” (Bharati’s speech as recorded by the Police, Police Abstract Vol XXI, 1908)

இப்படிப் பலவிதங்களில் தொல்லை கொடுக்க முனைந்தாலும், காவல் துறையே பல சமயங்களில் கோட்டைவிட்டுவிட்டு அசடு வழிய நின்றிருக்கிறது. சமர்ப்பிக்கப்படும் காவல்துறைக் குறிப்புகள் பாரதி மீது நடவடிக்கை எடுக்கப் போதுமானதாக இல்லை என்று அப்போதைய தலைமைச் செயலாளர் அபிப்பிராயப்பட்டிருக்கிறார். சீனி. விசுவநாதன் 4.7.1908 தேதியிட்ட அரசு ஆணை எண் 923ஐ மேற்கோள் காட்டுகிறார்: ‘9 மார்ச், 10 மே ஆகிய தேதிகளில் பேச்சுகள் நிகழ்த்திய சுப்பிரமணிய பாரதி மீது வழக்குத் தொட வேண்டிய அவசியமில்லை என்பதாக ஹிஸ் எக்ஸலன்ஸி இன் கெளன்ஸில் கருதுகிறார்.’

எவ்வளவோ முயன்றும் அவர்களுக்கு பாரதியைச் சிக்கவைக்கும் அளவுக்கும் சிறைசெய்ய வேண்டிய அளவுக்கும் போதுமான, வலுவான காரணங்கள் கிடைக்கவில்லை என்பதும், கிடைத்திருந்தால், கிடைத்த முதல் சந்தர்ப்பத்தை உடனடியாகப் பயன்படு்த்திக் கொண்டிருப்பார்கள் என்பதும் யாருக்கும் எளிதில் விளங்கக்கூடிய விவரங்கள்தாம். வேறு விதமாகச் சொன்னால், சட்ட விரோம், ராஜ துவேஷம் என்று அரசு கருதும் வகையில் பாரதியுடைய பேச்சிலும் எழுத்திலும் போதுமான ஆதாரம் கிடைக்கவில்லை; இருந்த போதிலும், எங்காவது, எதிலாவது, என்ன வகையிலாவது அவனைக் கைதுசெய்ய ஏதேனும் ஒன்றாகிலும் சிக்காதா என்று அரசு காத்துக் கொண்டு கிடந்தது என்பது இந்தக் கடிதப் பரிமாற்றங்களிலும், காவல் துறைக் குறிப்புகளிலுமிருந்து தெரிகிறது.

இப்படி, எட்டி எட்டி வீசப்பட்ட சுருக்குக் கயிறு ஒவ்வொரு முறையும் விலகி விலகி விழுந்துகொண்டிருந்தது. பாரதியே ‘இந்தியா’ பத்திரிகைக்கு(ப் பதிவு பெற்ற) ஆசிரியர் என்று நம்பிய காவல் துறை அவசர அவசரமாக நாம் சென்ற முறை குறிப்பிட்டிருந்ததைப் போல் ‘இந்தியா’ பத்திரிகையில் வெளியாயிருந்த இருபது கதை, கட்டுரை, கவிதைகளை அரசுக்கு எதிரானவை என்று இரகசியமாக அறிவித்து, செக்ஷன் 124A, 153A மற்றும் 505 ஆகியவற்றின்படி நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தது. அப்போதைய தலைமைச் செயலாளர் ‘இந்தியா’ பத்திரிகைக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை மட்டும் கொடுத்தால் போதும் என்று அபிப்பிராயப்பட்டார். ஆனால் ஆளுநரின் கெளன்சிலைச் சேர்ந்த ஜே. என் அட்கின்சன், எம் ஹமிக் ஸ்டோக்ஸ் மற்றும் ஏ. லாலி ஆகியோர் பத்திரிகை ஆசிரியரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

ஆட்சேபகரமான எழுத்து ஏதும் பிரசுரிக்கப்பட்டதாகத் தோன்றினால், அன்றும் சரி, இன்றும் சரி, சம்பந்தப்பட்ட பத்திரிகையின் அதிகார பூர்வமான ஆசிரியரின் மீதுதான் நடவடிக்கை எடுக்க முடியும். அரசாங்கமே நினைத்தாலும் எழுதியவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது; பத்திரிகை ஆசிரியர் மீதுதான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கத்தான் சட்டத்தில் இடமிருக்கிறதே ஒழிய, எழுதியவரின்மேல் நடவடிக்கை எடுக்க இடமில்லை. இது அண்மைக் காலத்தில் அமைச்சர்களையும் எம் எல் ஏக்களையும் கேலி செய்து துணுக்கு வெளியிட்ட ஆனந்த விகடன் விஷயத்திலும் நடந்தது என்பதைக் கண்கூடாகக் கண்டோம். ஆனந்த விகடன் ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார்; அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது; அவர் திரும்ப வழக்குப் போட்டு நியாயம் தேடிக்கொண்டார். எல்லாம் நடந்தது. இந்த நடவடிக்கைகு எல்லாம் காரணமாக இருந்த துணுக்கை எழுதிய படுதலம் சுகுமாரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அல்லவா? அப்படி எடுக்க சட்டத்தில் இடமிருந்தால், சட்டம் அவர்மீதும் பாய்ந்திருக்காதா?

இந்தியா பத்திரிகை நிறுவனர்கள், உரிமையாளர்கள்
இந்தியா பத்திரிகை நிறுவனர்கள், உரிமையாளர்கள்

ஒரு பக்கம் முரப்பாக்கம் சீனிவாசனைப் பொறுப்பிலிருந்து விடுவித்து, திருமலாசாரியார் உரிமையாளராகவும், ஆசிரியராகவும் பதிவு செய்துகொள்கிறார். இன்னொரு பக்கம் அரசு குறிப்பிட்ட சில எழுத்துகளை இராஜ துரோக எழுத்துகளாகத் தீர்மானிக்கிறது. அரசாங்கம் இந்த முறை வேறு மாதிரியான ஒரு குழப்படி செய்துவிட்டது. அது இராஜ துரோக எழுத்தாக அறிவித்த இருபது கதை, கவிதை, கட்டுரைகள் வெளிவந்த காலகட்டம் 29.2.1908 முதல் 27.6.1908 வரை. இருபது எழுத்துகளும் வெளிவந்த நேரத்தில் உரிமையாளராகவும், ஆசிரியராகவும் பதிவுபெற்றிருந்தவர் முரப்பாக்கம் சீனிவாசன்! ‘இந்தியா’ பத்திரிகை மீது கடுங்கோபம் கொண்டிருந்த அரசுக்கு, கிடைத்தவரைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. ‘சென்னை நகர சி ஐ டி போலீஸ் துறை இன்ஸ்பெக்டர் எஸ். பவானந்தம் பிள்ளை, இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி மேற்கண்ட பிரிவுகளில் தாமதமின்றி மேற்கூறிய எம். சீனிவாச ஐயங்கார் மீது தலைமை நடுவர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.’ (அரசு ஆணை எண் 1103, நீதித் துறை, நாள் 11.8.1908)

பாரதியின்மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எந்த அரசாங்கம் துடித்துக் கொண்டிருந்ததோ, அதே அரசாங்கம்தான் முரப்பாக்கம் சீனிவாசனைக் கைதுசெய்யுமாறு காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டிருக்கிறது–சம்பவத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னால். அரசு இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வந்து, யாரைக் கைதுசெய்வது என்று தீர்மானித்து, எந்தக் காவல் துறை ஆய்வாளர் (பவானந்தம் பிள்ளை) அவரைக் கைது செய்யவேண்டும் என்பது உட்படத் தெள்ளத் தெளிவாகப் பெயர் குறித்து அரசு ஆணை பிறப்பித்து ஒன்பது நாட்களுக்குப் பிறகே இந்தக் கைது நடைபெற்றிருக்கிறது. உண்மை இப்படி இருக்க, பாரதி முரப்பாக்கம் சீனிவாசனைச் சிக்கவைத்துவிட்டுத் தான் தப்பித்துக் கொண்டான் என்று நம்முடைய மகத்தான ஆய்வாளர்கள் எங்கிருந்தோ ‘கண்டுபிடித்துச்’ சொல்கிறார்கள்! இந்த ஆய்வாளர்களின்பால்–மற்றபடி–நான் வைத்திருக்கும் பெருமதிப்பின் காரணமாக ‘அரைவேக்காட்டு ஆய்வுகளும் அவசரமான முடிவுகளும்’ என்று சொல்லாமல் விடுகிறேன்.

மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட அடிப்படையான ஆவணங்களைத் தயார் செய்தவரும் பவானந்தம் பிள்ளைதான். தமிழில் இருக்கும் அத்தனைக் கதை, கட்டுரை, கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, குற்றச்சாட்டைத் தாக்கல் செய்து – குற்றச்சாட்டிலும் சீனிவாசனின் பெயரையே குறிப்பிட்டு – கைது நடவடிக்கைக்கான உத்தரவைப் பெற்றார். 20.8.1908 தேதியிட்ட வரான்ட் சொல்வதைப் பாருங்கள்:

“Under the provisions of section 196 of the code of criminal procedure, the Madras Government authorises the institution of criminal proceedings against M. Srinivasa Aiyangar, as Editor, Printer and Publisher of the Tamil Newspaper called the India, under sections 124A, 153A and 505 of the Indian Penal Code in respect of the following articles published in the India newspaper n the dates noted opposite each article….” (இதன் கீழ் இராஜ துரோக எழுத்துகளின் பட்டியல் தரப்பட்டிருக்கிறது.)

குற்றச்சாட்டு தயாரிக்கப்பட்டதும், கைது செய்ய அனுமதி வாங்கப்பட்டதும், அரசாணை பிறப்பிக்கப்பட்டதும், வாரன்ட் கொடுக்கப்பட்டதும் தெள்ளத் தெளிவாக முரப்பாக்கம் சீனிவாசன் பெயரில் இருக்கிறது. இந்த முரப்பாக்கம் சீனிவாசன் உரிமையாளராகவும், ஆசிரியராகவும் பதிவுசெய்துகொள்ள பாரதியா காரணமாக இருந்தான்? வேடிக்கை. அவனால் என்ன செய்திருக்க முடியும்? ‘சீமாச்சுவைக் கைது பண்ண வந்தாய் என்றால் சுப்புணியையும் கைது பண்ணியே ஆகவேண்டும். என்னையும் கைது செய்,’ என்று இரண்டு கைகளையும் விலங்குக்காக நீட்டியபடி நின்றிருக்கவா முடியும்? அப்படிச் செய்திருந்தால் அது நாடகத்தன்மையோடு, விறுவிறுப்பான காட்சியாக இருந்திருக்க முடியும். எமெர்ஜென்சி முடிந்து, அடுத்த ஆட்சி வந்த காலகட்டத்தில், தன்னை அழைத்துச் செல்ல வந்த காவல் துறை அதிகாரிகளிடம் இந்திரா காந்தி அம்மையார், ‘எனக்கு விலங்கு மாட்டி அழைத்துச் செல்லுங்கள்,’ என்று கைகளை நீட்டி வீராவேச வசனம் பேசியதற்கு நிகரான இன்னொரு காட்சியாக அது இருந்திருக்கும். நல்லவேளை. பாரதி அப்படிச் செய்யவில்லை.

தீவிரமான முறையில் எழுதிய காரணத்தால்தான் ‘இந்தியா’ பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றே வைத்துக்கொண்டாலும் கூட, இன்னொரு செய்தி திடுக்கிடச் செய்கிறது. ஹிந்து பத்திரிகையைத் தொடங்கியவர்களில் ஒருவரும், சுதேசமித்திரன் உரிமையாளரும் ஆசிரியருமான ஜீ. சுப்பிரமணிய ஐயரும் அதே சமயத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். சுப்பிரமணிய ஐயர், ஹிந்து பத்திரிகையைக் கஸ்தூரிரங்க ஐயங்காரிடம் ஒப்படைத்துவிட்டு, சுதேசமித்திரன் பத்திரிகையைத் தொடங்கியவர். ஜீ. சுப்பிரமணிய ஐயர் கைதானது, கஸ்தூரிரங்க ஐயங்காரும் கைது செய்யப்படலாம் என்ற ஊகத்தைக் கொடுத்தது என்று ஹிந்து பத்திரிகை எழுதுகிறது.

“There were strong rumours in 1908 following the arrest and later release of G. Subramania Aiyer that Kasturiranga Iyengar would be proceeding against for the editorial in The Hindu in defence of G. Subramania Aiyer. … … … … … Others besides Sastri were also worried and a number of them who called on him advised him to leave for Pondicherry as Subramania Bharati did and return when the trouble blew over.” (A Hundred Years of The Hindu pp 310, 311)

பத்திரிகைகள் மீது அடக்கு முறை எந்த அளவுக்குக் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது என்பதற்குச் சான்று வேண்டுமானால் இந்த ஒரு பத்தி போதும். ‘இந்தியா’ பத்திரிகையின் பதிவு பெற்ற எம் சீனிவாசன் சென்னையில் கைது செய்யப்பட்ட அதே நாளில் குற்றாலம் சென்று ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ஜீ. சுப்பிரமணிய ஐயரும் கைது செய்யப்பட்டார்; அரசுக்கு விரோதமாகப் பேசவோ, எழுதவோ கூடாது போன்ற நிபந்தனைகளும் அவருக்கு விதிக்கப்பட்டன.” (சீனி. விசுவநாதன், மகாகவி பாரதி வரலாறு)

இந்தச் செய்தியை ஹிந்து பத்திரிகையின் நூற்றாண்டு வெளியீடும் சொல்கிறது. ஆனால் கைதான தினம், சீனிவாசன் கைதான தினத்துக்கு மறுநாள் என்று காணப்படுகிறது. “G. Subramania Aiyer was arrested on a charge of sedition in Courtallam where he had gone to recoup his health on August 21, 1908. The charge of sedition was based on some articles written in Swadesamitran. The same day the office of the Swadesamitran in Armenian Street, George Town, Madras was searched on a warrant issued by the Chief Presidency Magistrate. … … … … The Hindu called the action of the Madras Government a ‘step of utmost gravity.'” (Ibid, page 141)

இப்படி, சீனிவாசன் கைதான அதே தினத்தில் – அல்லது அடுத்த தினத்தில் – கைதான சுப்பிரமணிய ஐயர் ஆசிரியராக விளங்கிய சுதேசமித்திரன் பத்திரிகைதான் 16.11.1908 அன்று (அதாவது, இந்தச் சம்பவத்துக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு) இவ்வாறு எழுதுகிறது: “துவக்கத்திலேயே கவர்ன்மெண்டார் எச்சரித்திருந்தார்களானால், இப்போது ஓடிப் போயிருக்கிற எடிட்டரும், புரொப்ரைட்டரும் அப்படிப்பட்ட வியாசங்கள் தோன்ற இடங்கொடுத்திருக்க மாட்டார்கள். அவைகளால் விளையும் தீங்கும் குறைந்திருக்கும்.”

சரி. பாரதிதான் மிகத் தீவிரமாகவும், கடுமையாகவும் அரசாங்கத்தை விமரிசித்தான். அவன் மீது நடவடிக்கை எடுக்க முயன்றார்கள். இது உண்மையானால், ‘மிகவும் மிதமான போக்கை உடையவர்,’ என்று அறியப்பட்ட ஜீ. சுப்பிரமணிய ஐயர் கைதுசெய்யப்படுவானேன், ‘வெதுவெதுப்பான வாக்கியங்களை’ எழுதிவிட்டு, highly defamatory என்று சொல்லிக்கொள்ளும் ஹிந்துவின் ஆசிரியரான கஸ்தூரிரங்க ஐயங்காரும் கைதாகலாம் என்று அஞ்சப்படுவானேன்? (கவனியுங்கள். ‘பாரதியைப் போலவே பாண்டிச்சேரிக்குப் போய்விடுமாறு’ அவருக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அப்படி அறிவுறுத்தியவர்களில் ஒருவர் இந்தியாவின் வெள்ளி நாவுப் பேச்சாளரான சீனிவாச சாஸ்திரியார்.)

பாரதியும், திருமலாசாரியாரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பதற்றமான சூழல் நிலவியது. பாரதி ஒன்றும் முரப்பாக்கம் சீனிவாசன் கைதான உடனேயே பாண்டிச்சேரிக்குச் சென்றுவிடவில்லை. அவனைப் பலர் வற்புறுத்தவேண்டியிருந்தது. அந்தக் கைதுக்குப் பிறகு ஆறு நாள் சென்னையில்தான் இருந்திருக்கிறான் பாரதி. ஆறு நாள் அவகாசம் என்பது காவல் துறைக்கு ஓர் ஆயுள் காலம். இந்தக் காலகட்டத்தில் அவன் மீது நடவடிக்கை எடுக்க முடிந்திருந்தால் எடுத்திருக்கலாம். எடுக்க முடியவில்லை; அதனால் எடுக்கவில்லை என்பது நோக்கத்தக்கது.

இந்த நிலையில் பாரதியின் நெருங்கிய நண்பரான இராமானுஜலு நாயுடு சொல்கிறார்: ”தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டுத் தாம் தூரப் போய்விட்டமை பாரதியாரின் சரித்திரத்தில் ஒரு பெரிய களங்கமேயாகும்.’ நல்ல வேடிக்கை. பாரதியை நம்பியா முரப்பாக்கம் சீனிவாசன் இருந்தார்?

மு. சீனிவாசனின் வாக்கு மூலமும் இந்த ஆய்வில் நோக்கத் தக்கது. அது அடுத்த முறை.

One Reply to “ஓடிப் போனானா பாரதி? – 06”

  1. அழகாக ஆதாரங்களுடன் பிட்டுப் பிட்டு வைக்கிறீர்கள். எத்தனை புத்தகங்களை வாசித்து, ஆதாரங்களை எடுத்து இப்படி எழுதுகிறீர்கள்.?? ஆச்சரியமாய் இருகிறது. பாரதியின் தாசன்களான உங்களைப் போன்றவர்களின் உழைப்பினால் அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நீங்கும்.

    நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும்.

    அன்புடன்,

    ஜெயக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *