ஓடிப் போனானா பாரதி? – 08

சில கேள்விகள்

நான் இந்தக் கட்டுரைத் தொடரின் முதல் பாகத்தில் குறித்திருந்த பாரதி அன்பர், பாரதி புதுச்சேரிக்கு ‘ஓடிப் போனதற்கு’ எதிரான கருத்துகளாய்த் தெரிவித்திருந்தனவற்றுள் கவனத்துக்கு உரிய ஒரு கருத்து, ‘இதில் insult added to injury என்னவென்றால், இந்தியா பத்திரிகை ஆசிரியராக உண்மையில் செயல்பட்ட பாரதி புதுச்சேரி செல்ல, ‘நாம் கே வாஸ்தே’ ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் பயந்தாங்கொள்ளி. நீதிமன்றத்தில் தாம் பிரிட்டிஷ் விசுவாசி என்று வாக்கு மூலம் தருகிறார் அந்த அப்பாவி. இதைக் கண்டித்து, புதுவையிலிருந்து பாரதியாரின் ‘இந்தியா’ தலையங்கம் எழுதுகிறது, ‘வீரமாக நின்று போராடியிருக்க வேண்டாமா?’ என்று. (வேடிக்கை. நீதிமன்றத்தில் நின்று குரல் கொடுக்க வேண்டியவர் ஓடி வந்துவிட்டது மட்டுமின்றி, இப்படி ஒரு எழுத்து.) ஓடிவந்த தன் செயலுக்கு வருந்தியதாக பாரதியார் எழுத்தில் ஒரு குறிப்பும் இல்லை.’

மேற்படி அன்பர் குறிப்பிட்டிருப்பதுபோல், இந்தியா பத்திரிகையில் வெளிவந்த அந்தக் குறிப்பிட்ட தலையங்கத்தில் ‘வீரமாக நின்று போராடியிருக்க வேண்டாமா’ என்ற வாசகம் வெளிப்படையாகவும் இல்லை; தொனிப்பொருளாகவும் இல்லை. எனவே, அந்த அன்பர் ‘இந்தியா கேஸ்’ என்ற அந்தத் தலையங்கத்தை நேரடியாகப் படிக்கவில்லை. மாறாக, இன்னொருவர்–ஆய்ந்தோ ஆயாமலோ–வெளியிட்டிருக்கும் முடிவின் அடிப்படையிலேயே இப்படி எழுதியிருக்கிறார் என்பதில் ஐயத்துக்கு இடமில்லை. அது ஒருபுறமிருக்க, இந்தக் குற்றச்சாட்டுக்கு அடிப்படையாக அவர் சுட்டிக் காட்டியிருப்பது முனைவர் பா. இறையரசன் எழுதி வெளிவந்துள்ள ‘இதழாளர் பாரதி,’ என்ற நூலில் இடம்பெற்றுள்ள சில வரிகளை. மறுபடியும் ஒரு முறை சொல்கிறேன். சென்னையில் இருக்கும் மிகத் தீவிரமான பாரதி அன்பர்கள் என்றொரு பட்டியல் தயார் செய்தால், நான் மேலே சொல்லியிருக்கும் கடிதத்தை எழுதிய அன்பரின் பெயர் அந்தப் பட்டியலில் முதல் ஐந்தில் – அல்லது பத்துக்குள் – அடங்கும். இப்படி ஒரு தீவிரமான பாரதி ‘பக்தரின்’ மனத்தில் இப்படியொரு கருத்தை விளைவித்த அந்தப் பகுதியைப் பார்ப்போமா?

“இந்தியா இதழின் வெளியீட்டாளராகப் பதிவு பெற்றிருந்த எம். சீனிவாசன் ஐந்து ஆண்டு கடுங்காவல் விதிக்கப்பட்டதைபப் பற்றிப் புதுச்சேரிக்குச் சென்றபின் பாரதி அங்கிருந்து வெளியிட்ட இந்தியா இதழில் ‘இந்தியா கேஸ்’ என்ற ஆசிரியவுரையில்,

‘ஏதோ பிறர் ஏமாற்றுதலுக்குட்பட்டுப் பிசகி நடந்துவிட்டாரென்றும், அவர் செய்தது குற்றம் என்று தீர்ப்பாகிவிடும் பக்ஷத்தில் அதற்காக அனுதாபப்பட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்றும்….’

சீனிவாசனின் வழக்கறிஞர் கூறியதைக் குறிப்பிட்டிருக்கும் இடம்வரையில் சுட்டிவிட்டு, அந்த மேற்கோளை அப்படியே நிறுத்தி, இந்தத் தலையங்கத்தின் இன்னொரு பகுதியிலிருந்து ஒரு வாசகத்தை எடுத்து இத்துடன் கோத்துக் காட்டுகிறார்.

‘நாம் எது செய்யினும் தேசத் துரோகம் செய்யோம். தேசத் துரோகிக்கு என்றும் மீளாத நரகமே பிராப்தம். ராஜத் துரோகக் கேசிலகப்பட்டுக் கொள்ளும் ஒவ்வொரு பத்திராசிரியரும் சொல்ல வேண்டியதும் அதுவே.’

மேற்படி மேற்கோள் பாரதியின் ‘இந்தியா கேஸ்’ என்ற தலையங்கத்திலிருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. “சீனிவாசனைச் சிக்க வைத்துவிட்டுப் புதுச்சேரி சென்ற பாரதி இவ்வாறு ஆசிரியவுரையில் எழுதுவது பொருத்தமாயில்லை.” என்று இறையரசன் அபிப்பிராயப்படுகிறார்.

இதழாளர் பாரதிஇதற்கு அடுத்த பத்தியில், முனைவர் பா. இறையரசன், ‘தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டுத் தாம் தூரப் போய்விட்டமை பாரதியாரின் சரித்திரத்தில் ஒரு பெரிய களங்கமேயாகும்,’ என்று நாம் சில முறை இந்தத் தொடரில் மேற்கோள் காட்டிய எஸ். ஜி. இராமனுஜலு நாயுடு அவர்களின் குற்றச்சாட்டை மேற்கோள் காட்டியுள்ளார்.

பா. இறையரசன் அவர்களுடைய, ‘இதழாளர் பாரதி,’ மிக அருமையாகவும், ஆழமாகவும், ஒவ்வொரு கருத்துக்கும் ஆதாரங்களை எடுத்து வைப்பதாகவும் செய்யப்பட்ட நூல். இந்நூலாசிரியரின் கூர்மையான பார்வையிலும், நேர்மையான போக்கிலும் குறை சொல்ல முடியாதுதான். ஓரிரு இடங்களைத் தவிர. எடுத்துக் காட்டாக, பாரதி எழுதத் தொடங்கிய 1906ஆம் வருடத்தில் எழுத மேற்கொண்ட பொருளின் தன்மைக்கும், அவனுடைய கடைசி ஆறு ஆண்டுகளில் அவன் எழுத எடுத்துக்கொண்ட பொருளின் தன்மைக்கும் ஒரு சதவீதக் கணக்குப் போட்டு ஆய்ந்திருக்கிறார் ஆசிரியர். ‘பாரதி 1906-இல் 69.1% அரசியலைப் பற்றி எழுதியவர் 1916-21-இல் அரசியலைப் பற்றி 53.6% துணுக்குகளும், 18.5% கட்டுரைகளுமே எழுதியுள்ளார்,’ என்று ஒரு நீண்ட சதவீதக் கணக்குப் பட்டியல் தந்திருக்கிறார்.

முதல் சதவீதக் கணக்கு ஓராண்டு காலத்தில் பாரதி எழுதியதன் மொத்த அளவின் பேரிலும், இரண்டாவது சதவீதக் கணக்கு ஆறு ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதின் அளவிலும் செய்யப்படும்போதே அடிப்படைக் கணித அணுகுமுறையிலேயே தவறு ஏற்படுகிறது. Even for a matter of quantification, you should base your assessment on comparable scales and basis. ஏன் கடைசி ஆறு ஆண்டுகள்? ஏன் அதற்கு மேலோ கீழோ இல்லை என்பன போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை. அங்கேயே உதைக்கிறது. அதுதான் போகட்டும் என்றால் ஓர் எழுத்தாளனுடைய உளப் பாங்கையும், மனப் போக்கையும், அவனை ஈர்த்தது எந்தத் திறக்கு என்பதையும் இப்படிப்பட்ட சதவீதக் கணக்குகளால் எடை போட்டுப் பார்க்க முடியாது. அவனுடைய மனமென்ன காய்கறியா, விறகுக் கட்டையா, துலாக்கோலால் நிறுத்தும், முழம் போட்டுப் பார்த்தும் வேறுபாட்டைக் கணிப்பதற்கு? முனைவர் இறையரசனின் மேற்படி ஆய்வின்படி, இந்து-மகமதிய ஒற்றுமை பற்றி பாரதி 1906-இல் எழுதியது 3.3%; 1916 முதல் அவனுடைய மரணம் வரை (1921) இந்தத் திறக்கில் அவன் எழுதியது 1.8%. அப்படியானால், என்ன முடிவுக்கு வரவேண்டும்? ஆரம்ப காலத்தில் இந்து-மகமதிய ஒற்றுமையின் மீது பாரதி காட்டிய தீவிரம் அவனுடைய கடைசிக் காலத்தில் ஏறத்தாழ பாதியளவுக்குக் குறைந்துவிட்டது என்றா? நல்ல வேடிக்கை. சொல்லப் போனால் ‘இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை,’ என்ற தலைப்பில் முஹம்மது நபியைப் பற்றிய நெடுங்கட்டுரை ஒன்று அவன் இறப்பதற்கு ஒரு வருடத்துக்கு முன்னால் – 1920ல் – வெளிவந்திருக்கிறது. எழுத்தின் தன்மையையும், தீவிரத்தையும் சதவீதக் கணக்கால் நிர்ணயிக்க முடியாது என்பதை ஏனோ முனைவர் இறையரசன் எண்ணிப் பார்க்கவில்லை.

அது ஒரு புறம் இருக்கட்டும். முனைவர் இறையரசன் மேலே மேற்கோள் காட்டியுள்ள பகுதி, ஒரு பொதுவான பகுதியே. அது குறிப்பாக எம். சீனிவாசனுடைய வாக்குமூலத்தைப் பற்றிய விமரிசனம் அன்று. (‘இப்படிச் சொன்ன பாரதி, தான் கைதான போது மன்னிப்புக் கடிதம் எழுதித் தரவில்லையா?’ என்று கேட்கிறார் ஆசிரியர். இதற்கு விடை காணவேண்டுமாயின், இன்னொரு தொடர்தான் தொடங்க வேண்டியிருக்கும். அதையும் செய்ய எனக்கு இறையருள் கிட்டட்டும். பாரதி வரலாற்றில் பதியப்பட்டுள்ள மாறுகண் பார்வைகளை ஓரளவுக்கேனும் தெளிவுபடுத்தவேண்டிய கட்டாயம் இருக்கிறது. போதுமான சக்தியையும் நேரத்தையும் இறைவன் வழங்குவானாக.)

எழுத்து மிக மிக எச்சரிக்கையாகக் கையாளப்பட வேண்டிய ஓர் ஆயுதம். சற்றே பிசகினாலும் சொல்ல வந்த கருத்து மாறிப் போகும். சொல்ல நினைத்தது தப்பிப் போகும். குவிமையம் விலகிப் போகும். மேலே முனைவர் இறையரசன் மேற்கோள் காட்டியுள்ள ‘இந்தியா கேஸ்’ என்ற தலைப்பிட்ட ‘இந்தியா’ பத்திரிகையின் தலையங்கத்தின் இரண்டு பகுதிகளும் அப்படித்தான் ஆகியிருக்கின்றன. இந்த இரண்டு பகுதிகளும் – தலையங்கத்தின் மூன்றாவது பத்தியிலிருந்து ஒரே ஒரு வாக்கியத்தின் ஒரே ஒரு பகுதியும், கடைசிப் பத்தி முழுமையும் – உருவாக்கும் எண்ணம் என்வென்றால், ‘சீனிவாசன் ஒரு தேசபக்த விரோதி. மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததன் மூலம் தேச பக்திக்கு விரோதமான ஒரு செயலைச் செய்துவிட்டார். நாம் அப்படிச் செய்யக் கூடாது. (அல்லது, ‘அந்த இடத்தில் நாம் இருந்திருந்தால் அவ்வாறு செய்திருக்க மாட்டோம்.’)

இந்தப் பின்னணியில் நாம் சில கேள்விகளுக்கு விடை காணவேண்டியிருக்கிறது.

1. மேற்படி பாரதி அன்பர் குறிப்பிட்டிருப்பது போல் ‘நீதி மன்றத்தில் நின்று குரல் கொடுத்திருக்க வேண்டிய பாரதி,’ என்ற கருத்து எந்த வரையில் பொருந்தும்? ஆங்கிலத்தில் mincing one’s words என்று சொல்வார்கள். தன் செயல்பாட்டையோ, அல்லது தனக்கு அவ்வளவாக செளகரியம் இல்லாத இடத்திலோ சுற்றி வளைத்துச் சொல்வது. ‘கொத்து பரோட்டா,’ என்று தமிழில் வேடிக்கையாகக் குறிப்பிடுவார்கள். அப்படிப்பட்ட கொத்து பரோட்டாவாகத்தான் மேற்படி வாக்கியத் துணுக்கு வெளிப்பட்டிருக்கிறது. (‘அயோக்கியத்தனம்’ என்று நேரடியாகச் சொல்லாமல், ‘அவ்வளவாக யோக்கியமற்ற போக்கு,’ என்று சொல்வது வேறு ரகம். இது வேறு ரகம்.)

‘நீதி மன்றத்தில் நின்று குரல் கொடுக்க வேண்டிய பாரதி,’ என்றால் என்ன பொருள்? சென்னை நீதி மன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கும் போது, – எந்த விதமான சம்மனும் இல்லாமல் – பாரதி ஆஜராகி, ‘இதையெல்லாம் நான்தான் எழுதினேன், ஆகவே என்னைக் கைது செய்யுங்கள்,’ என்றோ, ‘சீனிவாசன் மீது தவறில்லை,’ என்றோ சொல்லியிருக்க வேண்டுமா? அப்படி நடந்திருக்க வாய்ப்பிருந்ததா? அப்படி ஒரு வாய்ப்பு இருந்து அதைப் பயன்படுத்தத் தவறினானா பாரதி? வாழ்க்கை நாடக மேடை இல்லையல்லவா? எதிர்பாராத இடத்திலிருந்து வந்து திடீரென்று குதித்து ‘அபலையான’ கதாநாயகியை வில்லனின் கோரப் பிடியிலிருந்து காப்பாற்றுகின்ற டிஷ்ஷூம் டிஷ்ஷூம் செயலாக இல்லாவிட்டாலும், திரைப்படங்களில் பக்கம் பக்கமாக வசனம் பேசி நடிக்கும் கதாநாயகர்களைப் போல் செயல்பட நிஜ வாழ்க்கையிலும் இடமிருக்கிறதா?

நீதிமன்றத்தின் செயல்பாட்டின் இடையில் பாரதி புகுந்து, ‘என்னை ஏன் விட்டுவிட்டாய்?’ என்றெல்லாம் கேட்டிருக்க வேண்டுமா? அப்படிக் கேட்டிருக்க முடியுமா? பாரதியின் மீது சம்மன் ஏதாவது இருந்ததா? நீதி மன்றத்தினதோ அல்லது வேறு அரசு நடவடிக்கைகளோ நிலுவையில் இருந்தனவா? இருந்திருந்தால் பாரதி என்ன செய்தான்? இல்லையென்றால் இந்த வழக்கில் தலையிட்டிருக்க அவனால் முடிந்திருக்குமா? அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் அதற்காகவே துடியாய்த் துடித்துக் கொண்டிருந்த அரசாங்கமும் போலீசும்தான் விட்டிருப்பார்களா?

2. ‘ஓடி வந்த செயலுக்காக வருந்தியதாக பாரதி எழுத்தில் ஒரு குறிப்புமில்லை,’ என்ற (மேற்படி பாரதி அன்பரின்) சுட்டலில் உண்மை இருக்கிறது. பாரதி அப்படி எங்கேயும் எழுதவில்லை. ஆனால், புதுச்சேரிக்கு வந்ததைப் பற்றி பாரதி வருந்தத்தான் வேண்டுமா? அப்படியொரு வெட்கப்பட வேண்டிய செயலா அது? வருந்தவேண்டும் என்றால் ஏன் வருந்தவேண்டும்? வேண்டாம் என்றால் என்ன காரணம் பொருத்தமாக இருக்க முடியும்?

3. புதுச்சேரிக்குப் போவது என்பதான முடிவை பாரதி எப்படி எடுத்தான்? என்ன காரணத்தால் அப்படி ஒரு முடிவுக்கு அவன் வந்திருக்க முடியும்? தன் செயலைப் பற்றி அவன் என்ன நினைத்திருக்க முடியும்?

4. புதுச்சேரி வந்தது பற்றிய தன் நிலைப்பாட்டை அவன் எந்த இடத்திலும் நேரடியாகக் குறிப்பிடாத நிலையில், எந்த அடிப்படையில் அவனுடைய கருத்து – இந்த விஷயத்தில் – இன்னதாக இருக்கும் என்று அனுமானிக்க முடியும்? (தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்து எழுத வேண்டிய அவசியம் ஏதும் அவனுக்கிருந்திருக்கவில்லை. நாட்டில் ஆயிரம் முக்கியமான செய்திகள் இருக்கும்போது, பத்திரிகையில் எழுதுவதற்குத் தன்னுடைய செயலை அவ்வளவு பெரிய முக்கியமான ஒன்றாக அவன் நினைத்திருக்க முடியாது. பாரதியின் இன்றைய பெயரையும், புகழையும் வைத்து 1908-ல் அல்லது 1910-ல் – வேண்டாம் அவனுடைய மரணத் தருவாயிலும் சரி – அவனுடைய சமூக அந்தஸ்தை எடைபோட்டுப் பார்ப்பது பேதைமை. மொத்தம் பதின்மூன்று பேர்களே வந்திருந்தனர் அவனுடைய மரணத்துக்கும், தகனத்துக்கும் சாட்சி சொல்ல. இதைப் பற்றியும் பின்னொருநாள் விரிவாகக் காண்போம்.)

5. முரப்பாக்கம் சீனிவாசன் மன்னிப்பு எழுதிக் கொடுத்ததை பாரதி கண்டித்தானா? முனைவர் இறையரசன் மேற்கோள் காட்டியுள்ள பகுதிகள் தரும் செய்திகள் சரியான விதத்தில்தான் குவியப்படுத்தப்பட்டுள்ளனவா? Have they been focussed properly?

6. எல்லாவற்றையும் விட, ‘சீனிவாசனைச் சிக்க வைத்துவிட்டுப் புதுச்சேரி சென்ற பாரதி இவ்வாறு ஆசிரியவுரையில் எழுதுவது பொருத்தமாயில்லை’ என்று முனைவர் இறையரசன் சொல்லியிருப்பது எவ்வளவு தூரம் பொருத்தமானது? ‘சிக்க வைத்துவிட்டு’ என்றால் என்ன பொருள்? இந்த விஷயத்தில் பாரதியின் நோக்கம் என்னவாக இருந்திருக்க முடியும்? நோக்கம் ஒரு புறம் என்றால், இன்னொரு புறத்தில் அவன் இந்தக் கைது விஷயத்தில் என்ன செய்திருக்க முடியும்?

இவற்றுக்கும், இன்னும் சில வினாக்களுக்கும் விடை கண்டால்தான் நாம் மேற்கொண்டுள்ள இந்த ஆய்வு முழுமையானதாகும்.

தொடர்வேன்…

7 Replies to “ஓடிப் போனானா பாரதி? – 08”

 1. கேள்விகளுக்கு விடை காண ஆவலாய் இருக்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி.

  நன்றி, அன்புடன்

  ப.இரா,ஹரன்.

 2. ஐயா,
  உங்களின் இந்த கட்டுரையை மிக ஆர்வமாக படித்து வருகிறேன். தங்களின் உழைப்பிற்கு நன்றி.

  அன்புடன்,
  ராஜ்

 3. நடுவில் சில நாட்கள் தமிழ் ஹிந்து டாட் காம் இல்லாதிருந்ததால் மிகவும் வருத்தப்பட்டேன். புதுப் போலிவுடன் கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கட்டுரைத் தொடர்ச்சியைக் காணாதது கண்டு இன்னும் மகிழ்ச்சி உண்டாயிற்று.

  தொடருங்கள் தொடருங்கள். பலே! பலே!

  ராஜகோபாலன்

 4. தமிழ் இந்து தளம் மீண்டும் உயிர்பெற்று புதுப்பொலிவுடன் மிளிர்வது சோர்ந்திருந்த நெஞ்சத்துக்கு இதமாயிருக்கிறது. திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களின் இந்தத்தொடரை ஆவலுடன் படித்துவரும் ஆயிரக்கணக்கானவரில் நானுமொருவன். தொடருமாறு வேண்டுகிறேன்.

 5. // திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களின் இந்தத்தொடரை ஆவலுடன் படித்துவரும் ஆயிரக்கணக்கானவரில் நானுமொருவன். தொடருமாறு வேண்டுகிறேன். //

  விரைவிலேயே அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகத் தொடங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

 6. மகாகவி பாரதி வாழ்ந்த நாட்கள் மிகக் குறைவு. அந்த வயதிற்குள் அவன் சாதித்தது மிக மிக அதிகம். அவன் படைத்த இலக்கியங்களை ஆயுட்காலம் முழுவதும் படித்தாலும் நிறைவடையாது. அவ்வளவு ஆழம் உள்ளது. திருவையாறு பாரதி இயக்கம் – பாரதி இலக்கியப் பயிலகத்தின் சார்பில் மூன்று ஆண்டுகளாக ஒரு இலவச அஞ்சல் வழிக் கல்வி நடத்துகிறோம். இதுவரை வெளியான பாடங்களை ஒரு Blog இல் வெளியிட்டிருக்கிறோம். விரும்பினால் படியுங்கள். கருத்துக்களை எழுதுங்கள்: https://www.ilakkiyapayilagam.blogspot.com மற்றொன்று https://www.bharathipayilagam.blogspot.com. நன்றி.

 7. நீங்கள் குறிப்பிடும் அந்த நூலையும், சீனிவாசன் கைது பற்றியும் முழுமையாகப் பல கோணங்களில் பார்த்திருக்கிறேன். நடந்தது என்ன தெரியுமா? அலுவலகம் முடிந்து பாரதி மாடிப்படி இறங்கி வருகிறார். அப்போது சிலர் (போலீஸ் உடையில் அல்ல) வந்து ஆசிரியர் இருக்கிறாரா என்கின்றனர். அப்போது பாரதிக்கு அவர்கள் போலீஸ் என்பதோ அல்லது அவர் தன்னைக் கைது செய்ய வந்திருக்கிறார்கள் என்றோ தெரியாது. சீனிவாசன் பெயர்தான் ஆசிரியர் என்று போட்டிருந்ததே தவிர ஆசிரியர் பனி அனைத்தையும் செய்தது பாரதிதான். என்றாலும் கூட, வந்தவர்கள் ஆசிரியர் இருக்கிறாரா என்று கேட்டதும், அவர்கள் சீநிவாசனைத்தான் கேட்கிறார்கள் என்று சொல்லிவிட்டுப் போனாரே தவிர, சீனிவாசனை மாட்டிவிட்டு ஓடிப்போகும் எண்ணத்தில் இல்லை. அது தவிர அன்று மாலையே வக்கீல் துரைசாமி ஐயர் மற்றொரு போலீஸ் நண்பர் இவர்கள் பாரதியிடம் போய் நடந்ததைச் சொல்லி, உனது நெருப்பு கக்கும் எழுத்துக்கள்தான் இதற்கெல்லாம் காரணம். நீ ஜெயிலுக்குப் போகக்கூடாது. புதுச்சேரிக்கு போய் உன் எழுத்துப் பணியைத் தொடரலாம் என்று சொல்லி அவரை சைதாப்பேட்டை ரயில்நிலையத்துக்கு அழைத்துச்சென்று ரயில் ஏற்றி விடுகிறார் துரைசாமி ஐயர். (இவர் முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் அவர்களின் மாமனார்). இதுதான் நடந்தது. போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும். பாரதி புகழ் மங்கவே மங்காது. அவன் வீரன். கோழை அல்ல. வருவதை எதிர்கொள்ளும் ஆண்மை படைத்தவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *