பல்லக்கு, சிவிகை, பாரம்பரியம், அறம்

ஆக, பல்லக்கு தமிழக அரசியல் களத்தில் சூடான விவாதப் பொருளாகி விட்டது. மாவட்ட ஆணையர் பல்லக்கு தூக்கக் கூடாது என்று தடையுத்தரவு போடுகிறார். தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் நானே பல்லக்கு சுமக்கத் தயார் என்கிறார் 🙂

பல்லக்கு என்ற சொல் பர்யங்க (சம்ஸ்கிருதம்), பல்லங்க (ப்ராக்ருதம்) என்ற மூலத்திலிருந்து வருகிறது. கன்னடத்தில் பல்லக்கி. தமிழில் இதன் பயன்பாடு மிகவும் பிற்காலத்தியது, 16-ம் நூற்றாண்டுக்கு முன்பு இல்லை. பழைய நூல்களில் பல்லக்கைக் குறிக்கும் சொல் சிவிகை. அதன் மூலம் ஶிபிகா शिबिका எனும் சம்ஸ்கிருதச் சொல்.

“போத ஞானப் புகலிப் புனிதரைச் சீத முத்தின் சிவிகை மேலேற்றிட”,
“துங்க வெண்குடை தூய சிவிகையும்”,
“சோதி முத்தின் சிவிகை சூழ்வந்து பார் மீது தாழ்ந்து வெண்ணீற்றொளி போற்றி”
“வெண்ணிலா மலர் நித்திலச் சிவிகை மேற்கொண்டார்”..

இப்படி, பெரியபுராணத்தின் திருஞான சம்பந்தர் புராணத்தில் சிவிகையின் அழகையும், சம்பந்தர் அதில் அமர்ந்து காட்சி தருவதையும், ஏறி இறங்குவதையும் ஏகப்பட்ட இடங்களில் சேக்கிழார் பரவசத்துடன் வர்ணித்துச் செல்கிறார். இந்த முத்துச் சிவிகை சம்பந்தருக்கு சிவபெருமானே அருளியது என்ற குறிப்பும் அதே புராணத்தில் உள்ளது. இதிலிருந்து, ஆசாரியர் ஒருவர் பல்லக்கில் பவனி வருவது என்பது சைவ சமயத்திலும், அதே போன்று பல இந்து சமய மரபுகளிலும் எவ்வளவு சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது.

“அறத்தாறு இதுவென வேண்டா, சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை”


என்கிறது திருக்குறள்.

“அறத்தின் பயன் இது என்று நீட்டி முழக்கிச் சொல்லவேண்டாம்; சிவிகையில் அமர்ந்திருப்பவனையும் தூக்குபவனையும் பார்த்தாலே போதுமே” என்பது இதன் பொருள்.

அதாவது, இப்பிறவியிலும், முற்பிறவிகளிலும் செய்த தர்மத்தின் பயனாகிய புண்ணியமே சிவிகையில் அமர்ந்திருப்பவனுடைய செல்வச் செழிப்பின் காரணம் என்பது இதன் கருத்து. பரிமேலழகர் “அறத்தின் பயன் இதுவென்று ஆகம வகையான் உணர்த்தல் வேண்டா; சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப் படும்” என்று உரை கூறுகிறார். அதாவது, பல்லக்குக் காட்சியைப் பார்ப்பது என்ற காட்சியளவை (பிரத்யட்ச பிரமாணம்) மூலமே அறத்தின் பயன் தெரிந்து விடும், நூலளவை (ஆகமப் பிரமாணம்) கூறி விளக்க வேண்டாம்.

ஆனால் இதை விடுத்து, இதில் திருவள்ளுவர் ஒரு பயங்கரமான புரட்சிகரமான பொதுவுடைமைக் கருத்தைக் கூறுகிறார்; “ஒருவன் உட்கார்ந்திருக்கிறான், இன்னொருவன் தூக்குகிறான்; இதுதான் அறம் என்று சொல்லவேண்டாம்” என்கிறார் – இப்படி நகைப்பிற்குரிய வகையில் சில இருபதாம் நூற்றாண்டு உரையாளர்கள் பொருள் கூறியுள்ளார்கள். ஒரு பழைய நூல் உண்மையில் சொல்லவருவது என்ன என்பதை ஆராயமல், அதில் தங்கள் சொந்தச் சரக்கைப் புகுத்துவது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

நவீன சிந்தனையில், பல்லக்கு என்பது பழமையின் சின்னமாகவும், அதை பாரமாக சுமக்க வேண்டியதன் சமூக அழுத்தத்தின் ஒரு குறியீடாகவும் தான் பார்க்கப் பட்டுள்ளது. “பல்லக்கு தூக்கிகள்” என்ற சுந்தர ராமசாமியின் ஒரு பிரபலமான சிறுகதை நினைவு வருகிறது. இதில் விட முடியாத பழக்கம் என்பதற்கு பல்லக்கு குறியீடாகிறது. ”நல்லது நடக்குதோ இல்லையோ செய்துதான் வைப்போமே” என்பது போன்ற ஒரு மனநிலையை அந்தக் கதை சித்தரிக்கிறது என்பதாக நினைவு.

சட்டபூர்வமாக வழங்கப்பட்டுள்ள தனிமனித உரிமைகளையும், மத உரிமைகளையும் துச்சமாக மதித்து, தடாலடி தடையுத்தரவுகள் போடுவது திமுக போன்ற அராஜக கட்சிகளின் ஆட்சியில் சகஜமாகவே நடந்து வந்திருக்கிறது. ஆனால் இந்த முறை இது இவ்வளவு பெரிய தீவிரமான பிரசினையாகும் என்று அரசுத் தரப்பே நினைத்திருக்கவில்லை என்று தோன்றுகிறது.

இந்த பிரசினை அரங்கேறும் களத்திற்கு “தருமபுரம்” என்று பெயர் இருப்பது மிகவும் சுவாரஸ்யமானது.

ஆதீனத்தின் பல்லக்கு பவனி சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

தொடர்புடைய செய்தி: ‘தருமபுரம் ஆதீன பல்லக்கை நானே தூக்குவேன்’ – அண்ணாமலை பேட்டி

4 Replies to “பல்லக்கு, சிவிகை, பாரம்பரியம், அறம்”

 1. “இது என்னா சார் கொடுமையா இருக்கு…. மனுசனை மனுசன் தூக்கறதா?” என்று அசாத்தியமாகப் புரட்சி பேசும் நண்பர் ஒருவர், கை கால்கள் இரத்தக் கொதிப்பில் வெலவெலக்க, மொத்த சமூகத்தையும் காரசாரமாகச் சாடினார். இதைப் பற்றிப் பேசினால் அரசியல் ஆகிவிடுமே என்று [வடிவேலு காமெடியில் கிட்னி திருட அழைக்கும் சிறுவனுக்குப் பதில் சொல்லாதது போல] அஞ்சி அடக்கமாக இருந்தேன்.

  “சொல்லுங்க சார்… சகி சுவம் கூட எப்படி சிந்தனையைத் தூண்டும் விதமா நெத்தியடியாப் பேசியிருக்காரு பாருங்க… உம்… காணொளி பார்த்தீங்களா? உம்.. ”

  ஏன் வீணா வாயைத் திறக்கணும்னு பல் வலி வந்தது போல அமைதியாகவே இருந்தேன். போவட்டும். வாழ்க்கையில எல்லோரையும் திருத்த முடியுமா? இல்ல நாம ஜன்மம் எடுத்தது அதுக்காகவா? கருத்து சுதந்திரம். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு எண்ணம். அதற்கேற்ற வாழ்வு. ஆர்.வி.எஸ். வாயை இன்னும் இருக்கமா மூடிக்கோடா என்று அகத்தினுள் உறையும் இன்னொரு ஆர்.வி.எஸ். காட்டுக் கத்தலாகக் கத்தினான். வாய் பொத்தி பகவான் ஸ்ரீரமணர் வாக்குப்படி ”சொல்லற சும்மா” இருந்தேன்.

  “ம்… சொல்லுங்க ஆர்.வி. எஸ்… சார்.. உங்க கருத்து என்ன? சொல்லுங்க ஆர்.வி.எஸ்… ஆர்.வி.எஸ்.. சொல்லுங்க..” என்று மணிரத்னம் பட அஞ்சலி பாப்பாவை எழுப்புகிற மாதிரிக் கேட்டார்.

  இன்னும் சட்டையைப் பிடித்து உலுக்காத குறைதான். சார் என்று ஆரம்பித்து ஆர்.வி.எஸ்ஸுக்கு வந்துவிட்டார். பதில் சொல்லவில்லை என்றால் அடுத்தது “சொல்லுடா” என்று கேட்டு… அப்பவும் மௌனமாக இருந்தால் ”பளார்” என்று கன்னத்தில் அறைந்துவிடும் அபாயம் தலைத்தூக்கியதால் வேறு வழியின்று பேசினேன்.

  “குழந்தையை அம்மா சுமக்கறாங்க… அதுவும் மனுசனை மனுசன் தூக்கறதுதானே?”

  “என்னா சார்.. பைத்தியக்காரத்தனமா பேசுறீங்க? அவங்க குழந்தை… அதோட அம்மா.. சுமக்கறாங்க.. தாய்ப்பாசம்… இதைப் போயி….”

  “கரெக்ட். குழந்தையோட அம்மாவுக்கு அதன் பேர்ல அன்பு… பெத்து அஞ்சு வயசு ஆனாலும்… அதான் சுமக்கறாங்க.. யாரும் கேட்கறதில்லை.. ஏன்னா கேட்கலாம்னு நினைக்கிற எல்லோரையும் அவங்க அம்மா சுமந்திருப்பாங்க.. தாயன்பு… விட்ருவோம்…”

  அமைதியாகப் பார்த்தார். இன்னொரு கேள்வி கேட்டேன்.

  “சிரவணகுமாரன் கண் தெரியாத அம்மா அப்பாவை காவடி கட்டி தூக்கிண்டு ஊரெல்லாம் சுத்தினான்.. அதுவும் மனுசனை மனுசன் தூக்கிறதுதானே… அது…”

  “சார்.. இராமாயண கதையெல்லாம் சொல்றீங்க… அதுலயும் அவங்க அவனைப் பெத்தவங்க.. தூக்கறதுல என்ன தப்பு இருக்கு? அவனோட அம்மா… அவனோட அப்பா… இதைப் போயி ஒரு காரணமா தூக்கிட்டு வர்றீங்க…“

  ”கரெக்ட்… அப்பா அம்மா பேர்ல இருக்கிற பாசம்.. அன்பு.. மரியாதை.. இப்படி என்ன வேணுமின்னாலும் சொல்லலாமில்லையா? அதுக்கு யாரும் பொங்கறதில்லை… சரியா? அவன் பிரியத்தோட அதைச் செய்தான்… ”

  என்னை ஊடுருவிப் பார்த்தார். எதையோ சொல்லப்போகிறேன் என்று தாக்குதலுக்கு தயாராக இருந்தார்.

  “இன்னொன்னு கேட்கறேன்…2011 கிரிக்கெட் வேர்ல்ட் கப் ஜெயிச்சோம்.. அப்போ கேப்டன் தோணி.. அவரும் விராட் கோலியும் சேர்ந்து சச்சின் டெண்டுல்கரை தோள்மேலே தூக்கி வச்சுண்டு க்ரௌண்டடை சுத்தி சுத்தி வந்தாங்க.. எவ்ளோ பெரிய அசிங்கம்.. மனுசனை மனுசன் தூக்கலாமா? ச்சே…”

  “சார்.. நீங்க இப்படியெல்லாம் பேசலாமா? சச்சின் ஒரு மாபெரும் ப்ளேயர். அவர் வழிநடத்தி பல மேட்சுகளை ஜெயிக்க வெச்சுருக்காரு.. அவர் மேல ஒரு மரியாதை.. மகிழ்ச்சியில அவங்களா சேர்ந்து தூக்கறாங்க.. இது எப்படி தப்புன்னு சொல்லலாம்?”

  “கரெக்ட்… சச்சின் மேலே ஒரு மரியாதை.. அவர் தான் டீமை பல முறை ஜெயிக்க வச்சார்னு ஒரு recognition. டீம் மெம்பர்ஸா மனமுவந்து அவரைத் தோள்ல தூக்கி வெச்சுக் கொண்டாடினாங்க… ஒத்துக்கிட்டோமா?”

  “ஒத்துக்கிட்டோம்.. அதனால?”

  “இன்னொன்னு கேட்கறேன்.. எங்க கல்யாணத்துல பொண்ணையும் மாப்பிள்ளையையும் அவங்களோட மாமா தோள் தூக்கணும்…. மாலை மாத்திப்பாங்க.. ஒரே ஜாலியா இருக்கும்… அப்ப உள்ள பூந்து மனுசனை மனுசன் தூக்கலாமான்னு தடுத்து நிறுத்திடுவீங்களா?”

  “ச்சே.. ச்சே.. எப்படி சார்? உங்க வீட்டுக் கல்யாணம்.. நீங்க என்னமோ பண்றீங்க? இதை எப்படி தப்புன்னு சொல்வோம்?”

  “கரெக்ட்டுதானே.. ஏன்னா அது அவங்களோட வழிமுறை.. புரட்சி பேசற உங்களை வந்து தோள்ல தூக்க சொல்லலை.. பிரியமானவங்க.. அவங்களுக்குப் பிடிச்சவங்க தோள்ல தூக்கிக்கிறாங்க.. மனமுவந்து செய்யற காரியம்.. சரிதானே?”

  நண்பர் சுதாரித்தார். என்னச் சொல்லப்போகிறேன் என்பதை ஊகித்துக்கொண்டார்.

  “சரி.. இப்படியெல்லாம் சொல்றீங்களே.. மஹா பெரியவான்னு நீங்க சொல்ற மகான்.. .யாரோ பல்லக்குல ஏன் போறேன்னு கேட்ட உடனேயே இனிமே வேண்டாம்னு சொல்லிட்டாராமே… அது சரிதானே” என்று ஒரு கேள்விக் கணையை என் மேல் தொடுத்தார். கூக்ளி போடுகிறோம் என்று நினைத்துக்கொண்டார்.

  “ஆமாம். சொல்லியிருக்கலாம். அது மஹா பெரியவரோட முடிவு. அதுலயும் குருவை சுமந்து செல்வதில் அந்தப் பக்தர்களுக்கு பிரச்சனையில்லை. ஊர் கண்ணிற்கு தப்பாகத் தெரிகிறது என்று அவரது விஜய யாத்திரைகளுக்கு வேண்டாம் என்று அவரே சொன்னார். போகக்கூடாது என்று யாரும் கட்டளை இடவில்லை. அனுமதி மறுக்கவில்லை.”

  இப்போது அவரது கட்சி வலுப்பெற்றுவிட்டது என்று நிமிர்ந்து உட்கார்ந்தார்.

  “சரி.. இப்ப சொல்லுங்க.. இவரை மட்டும் இப்ப ஏன் பல்லக்குல தூக்கணும்?”

  ”ஏன் தூக்கணும்னு நீங்க கேட்கறீங்க… ஆனா குருவை பக்தியோட பல்லக்கில் தூக்கிச் செல்வதற்கு பக்தர்கள் தயாரா இருக்காங்கன்னு அவங்க சொல்றாங்க… தூக்கற பார்ட்டி உட்கார்ந்து போற பார்ட்டி ரெண்டு பேருக்குமே இஷ்டம்… இதுல உங்களுக்கு என்ன கஷ்டம்?”

  “என்ன சார்.. மனுசனை மனுசன் தூக்கலாமா?”

  “அப்படி வாங்க.. இப்ப நான் முதல்ல சொன்ன ரெண்டு மூனு எக்ஸாம்பிள்ஸைப் பாருங்க… அம்மா குழந்தையைத் தூக்கறது.. சிரவணகுமாரன் அம்மா அப்பாவைக் காவடி போல சுமந்துண்டு போனது… சச்சினை தோனியும் விராட் கோலியும் தோள்ள தூக்கி வச்சி ஆடினது… இதெல்லாம் தப்பா தெரியலை இல்லை உங்களுக்கு… ஏன்னா ஒண்ணு அம்மா… இன்னொன்னு பெற்றோர்… இன்னொன்னு உங்களுக்குத் தெரிஞ்ச தோணி.. சச்சின்.. கோலி…. அதனால…

  இப்ப இந்த சுமந்து கொண்டு போற பக்தர்களுக்கு இந்தப் பெரியவர்தான்.. இந்த மகான்தான்.. வழிகாட்டி… குரு.. அவங்க பின்பற்றுகிற நம்பிக்கையில மாதா.. பிதா.. குரு.. தெய்வம்னு மரியாதையும் பக்தியும் செலுத்தறத்துக்கு ஒரு வரிசை சொல்லியிருக்காங்க.. அதுக்காக அவரை மரியாதை பண்றத்துக்காகவும் தங்களோட பக்தியை காணிக்கை ஆக்கறத்துக்கும் மனமுவந்து நாங்க சுமந்துகொண்டு போறோம்ங்கிறாங்க.. யாரும் பலவந்தமா அவங்களைப் பிடிச்சு தூக்கச் சொல்லலை…. நீங்க ஏன் நடுவுல புகுந்து கூடாதுன்னு சொல்லணும்?”

  ”ஹி..ஹி.. நல்லா சப்பைக்கட்டு கட்றீங்க.. பழங்கால சம்பிரதாயம்னு பல்லக்குல தூக்கிக்கிட்டுப் போறாங்க.. அது அவங்க மத சம்பந்தப்பட்ட விஷயம்ங்கிறீங்க.. ஆனா இந்த மாதிரி குருமார்கள் எல்லாம் அந்தக் காலத்துல பவதி பிக்ஷாம் தேகின்னு பிட்சை எடுத்துதான் சாப்பிடணும்… குடிசையிலதான் வசிக்கணும்னு இருக்கு.. அதெல்லாம்….”

  “திரும்பவும் சொல்றேன்… தங்களோட குருமாரை பக்தியின் காரணமாக அவங்க தோள்ள சுமக்கறாங்க… வேடிக்கைப் பார்க்கிற உங்களுக்கு எங்க வலிக்குது.. ரெண்டாவது குரு பிக்ஷை எடுக்க வீதிக்கு வரவேண்டாம்னு அவங்களே அந்தந்த குருபீடத்திற்குச் சென்று காணிக்கையாகக் கொடுக்கிறாங்க.. இதுவும் அவங்க விருப்பம்.. மூனாவதா… நிறைய பக்தர்கள் வந்துப் பார்க்கணும்.. அறிவுரைகள் போதனைகள் கேட்டுக்கணும்.. அவங்களோட துக்கங்களைப் போக்கிறத்துக்கு கொஞ்ச நேரம் தங்கிச் செல்லணுங்கிறத்துக்காக.. குடிசை இல்லாம பெரிய கட்டிடங்கள்ல இந்த குருமார்கள் இயங்கறாங்க.. இது எல்லாமே அந்தக் குழு சம்பந்தப்பட்ட மத சம்பந்தப்பட்ட விவகாரம்.. உங்களுக்கு என்ன சார் பிராப்ளம்?”

  “இதைப் பார்த்தா சமுதாயம் சீரழஞ்சி போயிடாதா?”

  “அடப்பாவமே! குருவைப் பல்லாக்குல தூக்கி வர்றதைப் பார்த்தா சமுதாயம் சீரழிஞ்சி போயிடும்னா… முக்குக்கு முக்கு டாஸ்மாக் இருக்குது… பிஞ்சிலேயே பழுக்கறா மாதிரி அடுத்தவன் பொண்டாட்டி மேலே ஆசைப்படற சினிமா எடுக்கறாங்க… ஆ ஊன்னு புரட்சி பேசற தலைவர்கள் கூட தங்கள் சுய வாழ்வில் ஒழுக்கமா தொண்டர்களுக்கு முன்மாதிரியா இருக்கமாட்டேங்கறாங்களேப்பா… அதையெல்லாம் பார்த்து கெட்டுக் குட்டிச்சுவரா ஆயிட மாட்டங்களா? இதுல என்ன வந்தது?”

  “குருமார்கள்னு நீங்க சொல்ற சிலபேர் கழிசடை காரியங்கள் செய்யறதில்லையா? நித்யமும் ஆனந்தமா இல்லையா?”

  “இதுக்கு சோ சார் சொன்ன ஒரு பதில் கரெக்ட்டா இருக்கும். இந்து மதம்ங்கிறது பெரிய சமுத்திரம்.. கரை ஓரத்துல நின்னா குப்பைகள்தான் ஒதுங்கும்.. சமுத்திரத்துக்கு உள்ளே இறங்கிப் பார்த்தா நிறைய முத்துக்கள் தென்படும்.. அதுதான் பதில்… இந்துமதம்னு இல்லை.. எல்லா மதத்திலும் அற்பர்கள் உண்டு.. அதைப் பற்றியெல்லாம் எல்லோரும் மேடைப் போட்டு பேசறோமா?”

  ”உங்களைத் திருத்தவே முடியாது..”

  “உங்களையும்தான் தோழர்… யார் யாரைத் திருத்தணும்.. உங்க வழி சரியா இருக்கான்னு அதுல நடந்து போற உங்களுக்கே கொஞ்ச நாள்ல தெரியும்.. மனசுக்கு சரின்னு பட்டுச்சுன்னா அதுலேயே பயணிங்க… இல்லையா நீங்களே உங்க ரூட்டை மாத்திக்கோங்க.. யாரை யார் திருத்தணும்ங்கிறது நம்மளோட அஜெண்டா இல்லை. தனிப்பட்ட விருப்பங்களை.. அது இன்னொரு மனிதனையும் சமூகத்தையும் பாதிக்காத வரையில்… அவங்க நம்பிக்கையிலையோ அந்த தெய்வங்கள் மேலயோ பக்தியோ பற்றோ இல்லாத நீங்க அவங்க செய்யறதை ஏன் தடுக்கணும்?”

  சிரித்தேன். அவரும் சிரித்தார்!

  பின் குறிப்பு: வழக்கம் போல ஒத்த கருத்துடையவர்கள் நாகரீகமான கருத்துகளை வழங்கலாம். இதற்கு எதிர் கருத்துடைய நண்பர்கள் நம்முடைய நட்பைப் பேணிக்காக்க வேண்டும் என்ற விருப்பமிருந்தால் அப்படியே கடந்து செல்லலாம். I value my friendship with everyone. ஒரு சிலர் கமெண்ட் போடாமல் சிரிப்பான்கள் மட்டும் போட்டுச் செல்கிறார்கள். அதாவது எள்ளி நகையாடுகிறார்களாம். அவர்களுக்கெல்லாம் நானும் மீண்டும் சிரித்துவைக்கிறேன். அது தோழமையுடன் சிரிப்பென்றால் என்னுடையதும் அதே. நக்கலான சிரிப்பென்றால் என்னுடையதும் அதே! உங்கள் முகத்துக்கான கண்ணாடியே எனது எதிர்வினையும்! நன்றி!

  #பட்டினப்பிரவேசம்
  #சமூகம்

 2. ஆதீனங்களின் தலமை பீடத்து சிவனடியார்களை விமர்சிக்கும் தகுதியோ அருகதையோ நமக்கு இல்லை, அவர்களை ஏதும் சொல்லவும் கூடாது, துறவிகளாகிய அந்த சிவனடியார்களின் மனதை சிவனே அறிவார்

  ஆனாலும் “துறவிக்கு வேந்தன் துரும்பு” என்பதும் “நாம்யாருக்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்பதும் சிவனடியார்களின் தாரக கோஷம்

  அந்த தனிதன்மை வாய்ந்த சிவனடியார்கள் தமிழக முதல்வர் அதுவும் இந்து தெய்வங்களை நம்பாத நாத்திக வேந்தரை வலிய சென்று சந்தித்ததெல்லாம் அவ்வளவு நல்ல விஷயம் அல்ல‌

  மன்னனும் ஆள்வோரும் மடாதிபதிகளை தேடி செல்ல வேண்டும் என்பதுதான் மரபு, தமிழக ஆளுநர் அவ்வகையில் சரியாக இருந்தார் நேரடியாக சென்று உரிய மரியாதையுடன் மடத்தில் ஆதீனத்தை சந்தித்தார்

  இப்பொழுது சர்ச்சை பெரிதாகும் பொழுது தமிழக அரச பிரதிந்திகள்தான் ஆதீனத்தை தேடி சென்றிருக்க வேண்டுமே தவிர ஆதீனம் அரச பிரதிநிதிகளை தேடி வந்தது சரியான சம்பிரதாயமாகாது

  அதுவும் அறநிலையதுறை அமைச்சரின் வார்த்தைகளை ஆதீனம் அப்படியே கிளிபிள்ளையாய் சொல்லியதும், தனக்கு ஆதரவு தெரிவித்த ஜீயரை மென்மையாக கண்டித்ததும் இது அரசியல் ஆக கூடாது என்றதும் சரியான விஷயங்களாக இருக்கமுடியாது

  ஜீயர் இந்த ஆதீனத்த்துக்கு ஆதரவு தெரிவித்ததை இப்படி கொச்சைபடுத்துவதும் சரியல்ல‌

  நிச்சயம் தமிழக பாஜகவோ இந்து அமைப்புக்களோ வரிந்துகட்டவில்லை என்றால் பட்டன பிரவேசம் நடக்க அனுமதி வழங்கபட்டிருக்குமா என்பது கேள்விகுறி, அண்ணாமலையின் சீற்றத்துக்கு பின்பே அரசு நிலமையின் வீரியத்தை புரிந்து கொண்டது, ஆனாலும் இது அரசியலாக கூடாது என ஆதீனம் சொல்வது குழப்பமானது

  தமிழக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான ஒரு மோதலின் தொடர்ச்சி இது என்பது யாருக்கும் தெரியாதது அல்ல‌

  ஆளுநரை அழைத்ததால் ஏற்பட்ட சலசலப்பில் தமிழக அரசு ஆதீனத்தை நேரில் அழைத்து எதையோ சொல்லவருகின்றது, ஆதீனமும் தலையாட்டுகின்றது

  அந்த இடத்திலும் சிதம்பரம் நடராஜபெருமானை கொச்சைபடுத்திய வீடியோ பற்றியோ, பட்டன பிரவேசத்தை தடுக்க வேண்டும் என போராடும் திக கோஷ்டிகளை பற்றியோ ஆதீனம் ஒன்றும் சொல்லவுமில்லை

  சிவனடியார்களின் தனிபெரும் வலிமை அவர்களின் தைரியம் “நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே” என சீறும் தைரியம்

  நக்கீரரும், பட்டினத்தாரும், அப்பர் சாமிகளும் இன்னும் பல அடியார்களும் வேந்தன் எமக்கு துரும்பு என சீறி நின்ற தைரியம், அந்த நெருப்பான சீற்றம்

  அது இந்த ஆதீனத்துக்கு இல்லை, அது ஏன் என்பது தெரியவில்லை

  ஒரு பெரும் சிக்கல் அமைதியாக தீர்ந்திருப்பது நல்ல விஷயம், ஆதீனத்தை அழைக்காமலே தமிழக அரசு இந்த முடிவினை எடுத்திருக்குமானால் நல்ல விஷயம் ஆனால் செய்யவில்லை

  ஆதீனம் எப்படியும் இருக்கட்டும் அவரை கண்காணிப்பது சிவன் வேலை, ஆனால் இந்து எழுச்சி ஒன்றாலே தமிழக அரசு இறங்கி வந்திருப்பது நிஜம், அந்த எழுச்சி வாழ்த்துகுரியது, இது தொடர்ந்து நிலைக்கும் பட்சத்தில் மாற்றங்கள் வெகு எளிதாக நடக்கும், ஆன்மீக ஞானதாமரை மக்கள் மனதில் மலரும்

 3. திராவிடர் குள்ளநரித்தனமும் ஜெயித்து விட்டது என்றுதான் சொல்வேன்!. தன் உயிரை நேரடியாக பணயமாக வைத்து துணைக்கு வந்த ஜீயரை விட்டுக்கொடுத்தது, தேவையற்ற, மாபெரும், மன்னிக்க முடியாத குற்றம். அதே ஆதீனத்தின் சார்பில் ஒரு தாடிக்காரர் சொன்ன விதமும் அசிங்கம். இதைத்தான் திராவிஷங்கள் எதிர்பார்த்தன. இனி இந்து மதத்தை கூறாக பிளப்பது மிகச் சுலபம். சைவத்துக்கு எது நடந்தாலும் வைணவம் துணைக்கு வராது. மாத்வர்கள் மைனாரிட்டியை விட மிகக் குறைந்தவர்கள் என்பதால், சத்தம் போடாமல் ஒதுங்கி விடுவார்கள். ஆதீனம்களுக்கு என்ன நடந்தாலும் எந்த மடங்களும் துணைக்கு வராது. ஆதீனங்களின் நிலங்கள் சுவாகா செய்யப்பட்டு, மசூதிகளும் சர்ச்சுகளும் அந்த இடத்தில் வரும். இனி ஆதீனங்கள், “அவர்கள்” விரும்பியபடி ஆண்டிமடமாக மாறிவிடும். இந்து மதத்தில் புதுப் பிரிவு, சைவம், சாக்தம், சௌர்யம் போன்றவற்றை எல்லாம் விட பிரபலமாக, முத்தஞ்சுகம் வரும். கையில் வேலுடன் தர்மபுரம் ஆதீனம் சார்பில் கோவில் ஒன்று, அஞ்சுகாம்பாள் சமேத முத்துவேலர் சன்னதியுடன் திறக்கப்படும்!!. வீரமணி தலைமை குருக்கள் ! பலருக்கு இது நகைச்சுவையாக தோன்றலாம்! ஒருவர் நெஞ்சுவலியால் துடிக்கும்போது, அதை வீடியோவாக எடுத்து யூடியூபில் போடுவது தானே நமக்கு முக்கியம். !!. நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி என்று அன்றே என் பாரதி சொல்லிவிட்டு போய்விட்டார். இனி எழுவாய்!! பயனிலை . சங்கு ஊதி ஆகிவிட்டது!. . இனி “சுடலைப்” பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன் என்று பாடுவதற்கு, பொது மியூசிக் டைரக்டர் துபாயிலிருந்து வரலாம் . அதற்கு அபிநயம் பிடிக்க ந்ருத்ய சூடாமணி அலியார் துலுக்க நாச்சியாருடன் ரெடியாக இருக்கிறார் ! நம்மைப் பார்த்து, மக்கழே!! த்தூ என்று ஒருவர் துப்பியது ஞாபகத்தில்… ?!!!

 4. அந்தா் யோகம் மக்களுக்கு தெவை என்று நடத்தும் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்திலும் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலும் பட்டன பிரவேசம் கிடையாது. துளசிமாலைக்கு தஙககவசம் கிடையாது. துறவியர்களுக்கும் மக்களுக்கும் அதிக தொடா்பு. சமயகல்வியை அதிக மக்கள் பெற வாய்ப்பை ஸ்ரீராமகிருஷ்ண மடங்கள் அதிகப்படுத்தி வருகின்றார்கள். குமரி மாவட்டம் வெள்ளிலை சுவாமி மதுரானந்தாின் தொண்டால் இன்று குமரி மாவட்டம் இந்து மண்ணாக வாழ்ந்து வருகிறது. தங்க பல்லக்கு தங்க ரூத்திராட்சம் துறவிகளுக்கு எதற்கு? துறவிகள். .மடாதிபதிகளுக்கு சக்கரவர்த்திகள் போல் அதிக ஆடம்பரம் உள்ளது.பொதுவான இவற்றை குறைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *