மூவகை இந்துத்துவத்தின் முரணியக்கம்

”Hindutva is understood as a way of life or a state of mind and is not to be equated with or understood as religious Hindu fundamentalism”.- Supreme Court of India.

கலிஃபோர்னியா பாடத்திட்டத்தில் பழங்கால இந்து சமூகத்தை மட்டும் தனியாய்ப்பிரித்து இழிவாய்க்காட்டும் பகுதிகளை நீக்கக்கோரி இந்துப்பெற்றோர்கள் குரலெழுப்பிக்கொண்டிருந்த நேரம் அது. அப்போது தென்றல் இதழில் வந்த மடல் ஒன்று, அமெரிக்கப்பாடங்களில் இந்து சமூகத்தை செலக்டிவாக மட்டமாய் சித்தரிப்பதை ஆதரித்து “நான் தினமும் என் இந்துக்கடவுளைக் கும்பிட்டு விட்டே அலுவலகத்திற்குக் கிளம்புகிறேன்” என்று கூறி தனது மதப்பற்றை நிறுவி அதன்வழியாகத் தன் (இந்து எதிர்ப்பு) தரப்பிற்கு அங்கீகாரம் சேர்க்க முனைந்தது.

hindhu-1இது போன்ற குரல் வேறு இடங்களில் வேறு விதங்களில் வெளி வருவதையும் கண்டிருக்கிறேன். ”வாரம்தோறும் ஒருமுறை கூட கோவிலுக்கு செல்வதில்லை, தினமும் சாமி கும்பிடுவதில்லை, ஆனால் இந்து சமூகம் பற்றி மட்டும் பேச வந்து விடுகிறாயே” என்ற வகை விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறேன். இதுபோன்ற விமர்சனங்கள் வெளிவர முக்கியக்காரணம் இந்து சமூகத்தின் அரசியல் முகம் என்பது பலருக்கு 90-களில் வலுக்கொண்ட ஒரு புது விஷயம்; அதனாலேயே தற்கால அரசியல் காரணங்களை அதன்மேல் சுமத்தி அதனை எதிர்மறையாகக் காண சிலர் தலைப்படுகிறார்கள் என்பதே.. இந்தத்தரப்பு ஒரு நிலையில் அரசியல் இந்துத்துவம் என்பதனை ஆர்.எஸ்.எஸ், ஜனசங்கம், பாஜக ஆகியவற்றோடு நேர்கோட்டில் வைத்து வசதியாக முடிச்சுப்போட்டு விடுகிறது; அதன்மூலம் இந்த அமைப்புகளோடு தொடர்பற்றவை என்ற ஒரே எதிர்மறைப் பொதுமையின் கீழ் மக்களை அரசியல் ஆதாயங்களுக்காகத் திரட்ட முனைகிறது. எதிர்த்தரப்பின் உண்மைகளையும் ஆதார வாதங்களையும் அறிவின் தளத்தில் எதிர்கொள்ளாமல் தெருமுனை அரசியல் கோஷங்களின் சேறடிப்புகளின் வழியாகத் தாண்டிச்சென்று விட யத்தனிக்கிறது.

ஆனால் உண்மையில் இந்துத்துவம் என்பது ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்ற அரசியல் நிறுவனங்களை விட ஆழமும் அகலமும் கொண்டது. இந்துத்துவம் என்பது அரசியல் இந்துத்துவம் மட்டும் கிடையாது. அது நவீன சமூக, அரசியல் இயக்கங்களை விட காலத்தால் மிகவும் முற்பட்டது. இந்துத்துவம் என்பதை மூவகையாகக் காணலாம்.

– சடங்கு இந்துத்துவம்
– ஆன்மீக இந்துத்துவம்
– அரசியல் இந்துத்துவம்

இவ்வாறு மூன்றாகப்பகுப்பது இந்தக்கட்டுரையின் பேசு பொருளைக்கருதித்தானே தவிர, இப்படி வெளிப்படையான எந்தப்பகுப்பும் இந்து சமூகத்தில் கிடையாது. சடங்கு இந்துத்துவர்கள் அரசியல் இந்துத்துவர்களாகவும், ஆன்மீக இந்துத்துவர்கள் சடங்கு இந்துத்துவர்களாகவும், அரசியல் இந்துத்துவர்கள் ஆன்மீகவாதிகளாகவும் இருப்பதை எளிதாகவே காணலாம்.

ஆனால் ஒவ்வொரு வகை இந்துவிடத்தும் மேலே சொன்ன மூவகைகளில் ஏதோ ஒருவகை இந்துத்துவ குணாம்சம் வாழ்வின் வெவ்வேறு காலகட்டத்திலும் மேலோங்கியிருப்பதும் உண்மையே.

குறிப்பு: மூவகை இந்துத்துவர்களையும் இந்தக்கட்டுரையும் இந்துக்கள் என்றும் இந்துத்துவர்கள் என்றும் இரு பதங்களாலும் குறிப்பிடுகிறேன். அதற்குக்காரணம், இந்த மூவகை இந்துக்களையுமே இந்துத்துவத்தின் வாழும் கூறுகளாக நான் கருதுகிறேன் என்பதாலேயே. மட்டுமன்றி ஒவ்வொரு இந்துவும் தான் எந்த வகை இந்துத்துவர் என்று அடையாளம் காண்பது அவசியம் என்றும் கருகிறேன். இந்துத்துவம் என்பது அரசியல் தொடர்பான விஷயம் மட்டுமே என்று பிரசாரப்படுத்தப்படும் தன்மைக்கு மாற்றாகவும் இது அமையும்.

சடங்கு இந்துத்துவம்:

hindhu-2சடங்கு என்பது சில மேட்டிமை அறிவுத்தளங்களில் மட்டமாகப் பார்க்கப்படுகிறது. இங்கே சடங்கு இந்துத்துவர்கள் என்று சொன்னது சடங்கை இழிவாக்கி அல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்தி விடுகிறேன். சடங்கு இந்துத்துவர்கள்தான் இந்த மூன்று பிரிவில் பெரும்பங்கு வகிப்பவர். சடங்கு இந்துத்துவர்களே இந்து சமுதாயக் கட்டமைப்பைச் சாத்தியமாக்குகிறார்கள். சடங்குகள் என்ற உறையில் போடப்பட்டுதான் பண்பாடு என்பது பாதுகாப்பாக அடுத்த தலைமுறைக்குக் காலம் காலமாகக் கைமாற்றப்பட்டு வருகிறது. நடுகல் சடங்குகள் மதுரை வீரனாகவும் அய்யனாராகவும் சாஸ்வதமாகப்பட்டு பண்பாட்டின் அங்கமாகின்றன. ராமாயண காலங்களில் இருக்கும் கடலில் முன்னோர் திதி கழித்தல் சடங்காக்கப்பட்டு இன்றும் நம் பண்பாட்டின் ஓர் அங்கமாக- காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும் ஒரு பண்பாட்டு இணைப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. பண்டிகைகள் கொண்டாடுதல், வேண்டுதல்களை நிறைவேற்றுதல், முன்னோர்களுக்கான திதி, காது குத்துதல், குலதெய்வ கோவில்களுக்கு வருடா வருடம் குடும்பத்தோடு போய் வருதல், நேர்த்திக்கடன் கழித்தல், திருவிழாக்கள், சபரிமலை, திருப்பதி, பழனி, தலயாத்திரைகள் என்று பல வகையிலும் சடங்கு இந்துத்துவம் இந்து சமூகத்தின் அன்றாட செயல்பாட்டிலும், சமூக பொருளாதார இயக்கங்களிலும் பரவலாகி நிறைந்துள்ளது. குடும்ப பாரம்பரியங்களினாலும் குழுச்செயல்பாட்டாலும் சடங்கு இந்துத்துவர்கள்தான் உண்மையில் இந்துத்தன்மையின் கண்கூடான அடையாளமாகவும் திகழ்கின்றனர். இவர்கள் மரபின் பாதுகாவலர்கள். குழுச்செயல்பாட்டுக்கு ஏதுவாக இவர்கள் ஆதரிக்கும் ஆலயங்கள், மடங்கள் ஆகியவை நிறுவனங்களாகத் திரண்டு நெருக்கடியான பல நேரங்களில் இந்து சமூகத்தின் பாதுகாப்பு அரணாக செயல்பட்டிருக்கின்றன. கால மாற்றங்களின் ஊடாக பழமையின் கூறுகளைப் பல தியாகங்களுக்கிடையில் ஒரு தவம் போலப் பாதுகாத்து வருபவர்கள். மரபின் பாதுகாவலர்கள் என்பதாலேயே மரபென்று கருதும் விஷயங்களில் இறுக்கமும் இவர்களுக்கு இயல்பாகி விட்டிருப்பதைக் காணலாம்.

இவர்கள்தான் ஆகப்பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு இந்துத்தனம் என்பது குடும்பம், பண்டிகை, திருவிழா ஆகியவற்றில் அடங்கி விடும். இவற்றில் கைவைக்காதவரை இந்து சமூக நலனுக்கு பங்கம் வந்து விட்டதாக இவர்கள் உணர மாட்டார்கள். பங்கம் வரும் வேளையில் பல சமயம் காலம் கடந்து விட்டிருக்கும்.

ஆன்மீக இந்துத்துவம்:

sri_aurobindoஆன்மீக இந்துத்துவர்கள் என்றால் ஆதி சங்கரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் தொடங்கி ஸ்வாமி நாராயண், ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி, விவேகானந்தர், அரவிந்தர், ஓஷோ வழியாக இன்றைக்கு சத்ய சாயிபாபா, ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர், மாதா அமிர்தானந்த மாயி அவர்கள் வரை பட்டியலிடலாம். ஆன்மீக இந்துக்கள் குரு என்னும் ஸ்தானத்திற்கு உரியவர்கள். தனிமனித ஆன்மாவைத்தொட்டெழுப்புபவர்கள். சுடர்விட்டெரியும் தம் ஆன்ம பலத்தால் ஒட்டுமொத்த சமூக மறுமலர்ச்சிக்கும் மனவளர்ச்சிக்கும் வழிகோலுபவர்கள்.

ஆன்மீக இந்துத்துவர்களின் களம் அரசியல் சூழல்களால் பாதிக்கப்படலாம்; ஆனால், அவர்கள் பெரும்பாலும் அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூகத் தளங்களிலேயே பெரிதும் செயல்படுகிறார்கள். மக்கள் கூட்டங்களுடன் நேரடியாகப் பேசுகிறார்கள். இந்து தர்மத்தின் உன்னதங்களை எளிதாக அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்ற வகையில் சமூகத்திற்கு கவளமாக்கி ஊட்டுகிறார்கள். இந்து தர்மத்தின் உயிர்த்துடிப்பாகவும், உள்ளுறை ஆன்மாவாகவும் விளங்குகிறார்கள். தமது வாழ்வையே உதாரணமாக்கி ஒரு தார்மீக இயக்கத்தையே எழுப்பிச் செல்கிறார்கள். சடங்குகள் அவர்களுக்கு அவசியம் இல்லை என்றாலும், ஆன்மீக இந்துக்கள் சடங்குகளை நிராகரித்தவர்கள் அல்லர். இவர்களில் பலர் சடங்குகளின் வழியாகவே ஆன்ம விடுதலைக்கான பாதையை நமக்கு உருவாக்கித்தருவதில் வெற்றி கண்டவர்கள். ஒரு குழந்தைக்குப் பிடித்த விதத்தில் மருந்தை டானிக்காகவோ, தேனில் குழைத்தோ தருவது போல நம் நிலைக்குத் தகுந்தவாறு ஆன்மீக அனுபவத்தினை நாம் உணர வகை செய்கிறார்கள். ஆன்மீக இந்துத்துவர்களின் பாதை காலப்போக்கில் சடங்கு இந்துத்துவர்களால் ஸ்வீகரிக்கப்படுகிறது.

தொலைதூர விசாலங்களில் பார்வையைப் பதிப்பதனால் இந்து சமூகத்திற்கு வரும் உடனடி ஆபத்துகளுடன் போரிட்டு வெல்ல ஆன்மீக இந்துத்துவர்களை எதிர்நோக்க முடியாது. அது அவர்களது களமும் அல்ல.

அந்தக்களம் அரசியல் இந்துக்களுக்கு உரியது.

அரசியல் இந்துத்துவம்:

ஆபிரஹாமிய மதங்களின் இறையியல் அடிப்படை, மதமாற்றம் என்பதன் வழியாக “நாம் Vs பிறர்” என்ற பிளவை சமூகத்தில் உருவாக்கி, குழு அரசியலை கடவுளின் பெயரால் நிறுவுகிறது. இந்து மதத்தில் அரசியல் இந்துத்துவர்களின் எழுச்சி ஆபிரஹாமியம் இந்து சமூகத்தின் மீது ஆதிக்கப்படையெடுப்புகளை நிகழ்த்தத்தொடங்கிய காலகட்டத்தில் உருக்கொண்டது. அரசியல் அதிகாரத்தின் மூலமாகவும் வன்முறையின் மூலமாகவும் ஆபிரஹாமிய நிறுவனங்கள் அதிகாரத்தின் மூலம் இந்து சமூகம் மற்றும் பண்பாட்டு அழித்தொழிப்பை நிகழ்த்தத் தொடங்கிய காலத்தில் கடுமையாய் பாதிப்புக்குள்ளானவை சடங்கு இந்துத்துவமும் ஆன்மீக இந்துத்துவமும். இவற்றின் போர்முனை சமூக வெளிப்பாடாக உருவெடுத்தது அரசியல் இந்துத்துவம்.

shivaji-maharaj02அரசியல் இந்துத்துவர்கள் துடிப்பானவர்கள். சமூகம், அரசியல், பண்பாடு போன்ற பல தளங்களில் நிகழும் தொடர் மாற்றங்களை நுட்பமாய் அவதானிப்பவர்கள். சமூக அரசியல் அதிகாரம் பெறும் பொருட்டு ஆன்மீகம், சடங்கு என்ற மற்ற இரு பிரிவுகளின் மக்களை ஓரணியில் திரட்ட இவர்களால் மட்டுமே முடிகிறது. ஆனால் ஆன்மீகம் போன்று தனிமனித ஆன்ம விடுதலை மட்டுமே இவர்களது குறிக்கோள் அன்று. சடங்கு இந்துக்கள் போன்று மரபின் பாதுகாவலராக மட்டும் இவர்கள் செயல்படுவதில்லை. இவர்கள் மாற்றத்தை அஞ்சுவது கிடையாது. மாற்றங்களை இந்து சமூக வெற்றிக்கு சாதகமாக்க முயல்பவர்கள். நவீனங்களை உள்வாங்கத் தயங்காதவர்கள். அதனாலேயே சடங்கு இந்துக்களுக்கு ஒருவகையில் உள்ளுறை முரணாகுபவர்கள். சடங்கு இந்துக்களின் சமூக இறுக்கமோ அல்லது ஆன்மீக இந்துக்களின் சுய ஆன்ம விடுதலைக்கான தேடலோ தற்கால சமூக மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் உடனடியாக இந்து சமூகத்தைத் தயார் செய்வதில்லை. அதனை அரசியல் இந்துக்கள் மட்டுமே செய்ய முடிகிறது. சிவாஜி, குரு கோவிந்த சிங், பாரதி, திலகர், அம்பேத்கார், காந்தி ஆகிய அனைவருமே அடிப்படையில் அரசியல் இந்துக்கள்தாம். இவர்கள் கூர்மையான களப்போராளிகளாகவும், படிப்பும் தேடலும் நிறைந்த சிந்தனையாளர்களாகவும், மரபின் விளிம்பில் நின்று நவீன மாற்றங்களை உள்வாங்கி அம்மாற்றங்களின் வழியாகவே இந்து சமூகத்தை அடுத்த வளர் நிலைக்குக் கொண்டு செல்பவர்களாகவும் திகழ்கிறார்கள். அரசியல் இந்துக்களின் துடிப்பான செயல்பாடு சுருங்கிப்போகும் நிலையில் இந்து சமூகம் பழமையில் தேங்கிப்போகிறது.

இந்து ஞான மரபு தனிமனிதனின் ஆன்மாவுடன் பேசுவது. இந்து ஞானத்தின் பரவலும் விரிவாக்கமும் அரசியல் இந்துக்களின் கையில் இல்லை. அது ஆன்மீக இந்துக்களின் களம். சடங்கு இந்துக்கள் அந்தக் களத்தைப் பாதுகாக்கிறார்கள். ஆனால் அரசியல் இந்துக்கள்தான் அந்தக்களத்தை இன்றைய நிலையில் சாத்தியமாக்குகிறார்கள்.

மதமாற்ற மதங்களின் தொடர்ச்சியான பணபலமும், அதிகார பலமும் மிக்க தாக்குதலால் பாதிக்கப்படுபவர்கள் மூவகை இந்துத்துவர்களும்தான். ஆனால் இந்த சக்திகளை எதிர்கொள்ளும் நுட்பமான அறிவுத் தெளிவும், செயல் திட்பமும் அரசியல் இந்துத்துவத்தினாலேயே சாத்தியமாகிறது. அரசியல் இந்துத்துவம் என்பது கட்சி அல்ல; நிறுவனம் அல்ல; அவற்றைத்தாண்டிய ஒரு சமுதாய விழிப்புணர்வு. அந்த விழிப்புணர்வு அறிவுத்தேடலிலும் மாற்றத்தை எதிர்கொள்வதிலும் கூர்மையடைகிறது. அந்தக்கூர்மையின் மூலம்தான் எதிர்காலம் என்ற அடர்காட்டில் செம்மையான பாதையை அது செதுக்கித்தர முடிகிறது.

முரணியக்கம்:

உள்ளுறை முரணாக இருப்பதால் பல நேரங்களில் சடங்கு இந்துத்துவத்திற்கு எதிராக இருப்பதுபோல அரசியல் இந்துத்துவம் தோற்றமளித்தாலும், சடங்கு இந்துக்களை பழமையின் இறுக்கத்திலிருந்து மெல்லத் தளர்த்தி அறிவார்ந்த அரசியல் இந்துத்துவர்கள் என்ற நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசியல் இந்துக்களுக்கு உள்ளது.

இந்த மூவகை இந்துத்துவத்தில் ஒவ்வொன்றும் தவிர்க்க வேண்டிய புதைகுழி ஒன்று உள்ளது: அதுதான் பிற இரு வகைப்பட்ட இந்துத்துவர்களுக்கும் மேலாக தம்மை நிறுத்திக்கொள்ளும் மேட்டிமைத்தனம். சடங்கு இந்துக்களையும் ஆன்மீக இந்துக்களையும் விலக்கி அரசியல் இந்துத்துவம் காப்பாற்றப்போவது ஒன்றுமில்லை. அதே சமயம் அரசியல் இந்துக்களை சடங்கின் சட்டகங்களிலோ ஆன்மீக சுய தேடல்களிலோ பிணைத்து மட்டுமே பார்க்க முயல்வதிலும் அர்த்தமில்லை. சடங்குகளின் வழியாகவோ சுய ஆன்மீகத் தேடலின் மூலமோ அவர்கள் பிரதானப்படுவதில்லை. அவர்களது முக்கியத்துவம் இந்து சமூகத்தின் ஆரோக்கியமான பரிணாமத்தை நிகழ்த்த முயலும் ஆளுமைகள் என்னும் பரிமாணத்தில் பார்க்கப்பட வேண்டும்.

சடங்கு இந்துக்களின் அறிவுத்தளமும் விழிப்புணர்வும் அரசியல் இந்துக்களின் அறிவுத்தளத்திற்கும் விழிப்புணர்விற்கும் மிக அருகில் வருவது மட்டுமே இந்து சமூகத்தை எதிர்காலத்தில் ஆரோக்கியமாக்கிக் காக்கும் என்று நான் நம்புகிறேன். இதற்கு, களப்பணியோடு நின்று விடாமல் ஆய்வுத்தளங்களிலும் அறிவுக்களங்களிலும் தன் செயல்பாட்டை பல மடங்கு தீவிரமாக அதிகரிக்க வேண்டியது இந்துத்துவ இயக்கங்களின் இன்றைய உடனடி அவசியமாகும்.

மார்க்ஸீயர்கள் எத்தனை சமூக ஆய்வு நூல்களைக் கொண்டு வருகிறார்கள் என்பதையும் இந்துத்துவம் எத்தனை சமூக ஆய்வு நூல்களைக் கொண்டு வருகிறது என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். ஒருபுறம் சமூக மாற்றங்களை பொருளியல் ரீதியில் மட்டுமே ஆராயும் மார்க்ஸீயக் கண்ணோட்ட ஆய்வு நூல்கள்- மறுபுறம் நம் இந்து மரபை பழமைவாதத்தால் இறுகிய ஒற்றைப்பரிமாண சாதீய சமூகமாக மட்டுமே காட்ட முயலும் மேற்கத்திய ஆய்வு நூல்கள்- இவை மட்டுமே ஒரு மேற்படிப்பு மாணவனுக்குக் கிடைக்குமென்றால், இந்திய சமூகம் குறித்தும் இந்து மரபு குறித்தும் என்னவகை சித்திரம் அவனுக்கு உருவாகும்? மார்க்ஸீயம் போல பிரசாரத்திற்காகவோ மேற்கின் இந்தியவியல் ஆய்வாளர்களைப்போல இன மேட்டிமைவாதத்திற்காகவோ இல்லாமல், இந்துத்துவ இயக்கங்களின் அறிவுத்தள முதலீடு, இந்தியப் பண்பாட்டின் பல தரப்பையும் பரிமாணங்களையும் கணக்கில் கொண்டு அவற்றின் ஊடாக இந்திய சமூகங்கள் செய்து கொண்டிருக்கும் பயணத்தை வெளிக்கொணரும் வகையில் அமைய வேண்டும். இது மூவகை இந்துத்துவத்தின் முரணியக்கத்தையும் நுட்பமான அறிவுத் தளங்களில் குவித்து ஆரோக்கியமான சமூக முன் நகர்தலை நிகழ்த்தும். இது தொடர்ந்து செய்யப்பட வேண்டிய ஒரு பணியாகும்.

இந்தப்பணி ஒன்றுதான் தொலைநோக்கில் இந்துத்துவத்தை ஒட்டுமொத்தமாக வலுப்படுத்தும். சடங்கு இந்துக்களும் அரசியல் இந்துக்களும் அறிவின் தளங்களில் திரள்வதும், ஆன்மீக இந்துத்துவம் விரிந்து பரவி வலுவடைவதும் இதன் மூலமே சாத்தியமாகும். அவ்வாறு சாத்தியமாகும் நிலையில் இந்து சமூகத்திற்கு எதிரான அரசியல் கோஷங்கள் திடீரென மறைந்து விடும் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. ஆனால் தினமும் சாமி கும்பிடும் சடங்கு இந்துத்துவர் ஒருவர், அன்னிய மண்ணில் பாடநூல்களில் தம் சமூகம் இழிவுபடுத்தப்படுவதை ஆதரித்துப்பேசும் அபத்த முரண்நகை நிகழ்வுகளாவது கட்டாயம் குறையும்.

அதனை நோக்கியே அறிவார்ந்த இந்துத்துவ செயல்பாடுகள் அமைய வேண்டும்.

19 Replies to “மூவகை இந்துத்துவத்தின் முரணியக்கம்”

  1. மிக அருமையான கட்டுரை.எளிய சொற்களால் தெளிவாக விளக்கப்பட்ட விஷயங்கள். ஹிந்துக்கள் அனைவரும் படித்து சிந்தித்து செயல் படுத்த வேண்டிய விஷயங்கள். திரு. அருணகிரிக்கு நன்றி.

  2. மூன்று வகைகளையும் குறிப்பிட்டு:

    – சடங்கு இந்துத்துவம்
    – ஆன்மீக இந்துத்துவம்
    – அரசியல் இந்துத்துவம்

    மிக அழகாக எழுதியுள்ளீர்கள். நன்றி.

  3. மிக அழகாக பகுத்து ஆராய்ந்த கட்டுரை. இந்த மூன்று நிலைப்பாடுடைய இந்துக்களும் ஒன்று சேர்ந்து செயல்படவேண்டிய தருணமிது எனமுடித்திருப்பது அருமை.
    நன்றி
    ராஜகோபாலன்

  4. நீங்கள் பிரித்துகாட்டியுள்ள இந்துவத்துவம் பற்றிய விளக்கம் நன்று. இதுவெகு அருமையிலும் அருமை நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.

    என்னுடைய முதல் கேள்வி இந்துவத்துவம் இந்து என்ற எண்ணம் இன்று எத்தனை இந்துக்களிடம் உள்ளது. இது ஏதோ தீண்டதகாத சொல் என்ற மாயையே இன்று உருவாக்கியுள்ளார்கள். இதற்கு காரணம் திராவிட கட்சிகள், போலி ஸெக்யூலரிஸம் பேசுபவர்கள், கம்யூனிஸ்ட்கள், அதிகம் படித்த இந்துக்கள். இந்த ஒற்றுமையின்மையை மற்றவர்கள் ஏளனம் செய்கிறார்கள் இவர்கள் எல்லாம் பொது நலம் என்று கூறி சொத்து சேர்கும் சுயநல கும்பல். குடிகெடுக்கும் கூட்டம் ( parasite in society – selfish to the core)

    ஆண்மீகம் இல்லாத அரசியல் உயிர் இல்லா உடலுக்கு சமம். ஆம் அது ஓர் பிணம் ! இது அறிஞர்களின் கூற்று

    சடங்கு இந்துவத்துவம் – சடங்குகளின் மகத்துவம் குறைந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. அந்த நாட்களில் உற்றார் உறவினறுடன் கூடி மகிழ்வதும் மாறிவிட்டது. ஆறுதலாக ஒர் நாள் விடுமுறைகிடைக்கிறது சற்று ருசியாக உண்ணலாம். தொலைகாட்சிகளிலும், திரை அரங்கிலும் பாரிலும் பொழுதை கழிக்கலாம் என்ற ஒரு டைவர்ஷன்தான் மிஞ்சியுள்ளது.

    ஆண்மீக இந்துவத்துவம் – ஏதோ ஒரு சிலரை தவிற மற்றவர்கள் இதை வியாபார நோக்கோடு செய்கிறார்கள் இது பாமரமக்களிடமும் அரிஜனங்கனிடமும் போவாதில்லை

    அரசியல் இந்துவத்துவம் – சூ ! பேசக்கூடாது !! 144 சட்டம் ஆகிவிட்டது இன்று !!!

    ஐயா நீங்கள் சுட்டிகாட்டியுள்ள இந்துவத்துவத்தின் உண்மையான நிலை ஒன்று இன்டன்சிவ் வார்டிலும் ( IC ), ஒன்று கோமாவிலும், ஒன்று மார்சுவரியிலும் தான் உள்ளது.

    ஆண்டவன் நம்மை கைவிடமாட்டான் ஒருநாள் எழிச்சி பெரும் என்ற நம்பிக்கையை கைவிடவில்லை

    (edited and published)

  5. Dear Mr. Arunagiri,

    Well done, this article is a thought provoking. Yes it is necessary to think in this line and work towards it. The style and Tamil (yes only Tamil not Thanglish) also deserve for appreciation. Please continue your contributions continuously.

    Ravishankar
    Madurai

  6. Arunagiri,

    First thanks for a brilliant article. But when you look at your article it can give me only pessimism. I believe as you, that Tilak, Gandhi ( Mahatma, just to be sure ) and Ambedkar are formidable Political Hindus. Just compare what we have now in this sphere. Inspite of formidable Gandhi and Ambedkar more than 45% of our land and people ( including North East ) were weaned away.
    Inspite of all this only Philosophical or Siritual Hinduism is the only solace for an individual.

    Regards
    S Baskar

  7. //மூவகை இந்துத்துவர்களையும் இந்தக்கட்டுரையும் இந்துக்கள் என்றும் இந்துத்துவர்கள் என்றும் இரு பதங்களாலும் குறிப்பிடுகிறேன். அதற்குக்காரணம், இந்த மூவகை இந்துக்களையுமே இந்துத்துவத்தின் வாழும் கூறுகளாக நான் கருதுகிறேன் என்பதாலேயே. மட்டுமன்றி ஒவ்வொரு இந்துவும் தான் எந்த வகை இந்துத்துவர் என்று அடையாளம் காண்பது அவசியம் என்றும் கருகிறேன்.//

    Its correct that three type of Hinduism ritual, spiritula and political are there. But why a Hindu shold be branded as a paricluar typy? Ritualist… Spiritualist… Politicalist…?

    In my opinion if we take common Hindus- I mean not like Sivaakji, Tilak, Aravindhar…- A common man Hindu has all three forms within him. A person who is intersted in Hindu Philosophy also participates in the ritulaistic ceremonys conducted in their homes, he may also take participate in political front if required. So todays Hinduism is depending on the masses, the comon Hindu, hence acommon Hindu can sharpen his skills on all three fronts- its not a big task!!! By saying this I do not rule out the chances of producing another Vivekaanadha or Shivaji, but its clear that till some one comes like that, Common hindus can rise to the occassion.

    Even I would say that Shivaji had ritulaism , and philosophy content within his personality. Simailarly even we can say Swami vivekanada definitely had political skills as well.

  8. அருணகிரியின் ஆய்வு மிக அருமை. ஹிந்து சமுதாயத்தை பலவீனப்படுத்தும் ஆபிரகாமிய மதங்களின் ஆக்கிரமிப்பு திட்டங்கள் மற்றும் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட வேண்டுமானால் மிக அதிக அளவில் சுயநலமில்லாத சமுதாய ஆர்வலர்கள் மற்றும் செயல் வீரர்கள் உருவாக்கப்பட வேண்டும். இதற்க்கான பயிற்சிகள் கொடுப்பதற்கு எல்லா கிராமங்களிலும் பாசறைகள் அமைக்கப்பட வேண்டும்.

  9. மறுமொழி எழுதிய நண்பர்களுக்கு நன்றி. இரண்டு கருத்துகளுக்கு பதில் கூற விழைகிறேன்:

    முதலில் திருச்சிக்காரன் எழுதியது:

    ”But why a Hindu shold be branded as a paricluar typy? Ritualist… Spiritualist… Politicalist…?…In my opinion if we take common Hindus- I mean not like Sivaakji, Tilak, Aravindhar…- A common man Hindu has all three forms within him. A person who is intersted in Hindu Philosophy also participates in the ritulaistic ceremonys conducted in their homes, he may also take participate in political front if required”.

    இதனைக்குறித்து தெளிவாகவே முதலிலேயே விளக்கி விட்டுத்தான் கட்டுரைக்குள்ளேயே போயிருக்கிறேன்.

    ”இவ்வாறு மூன்றாகப்பகுப்பது இந்தக்கட்டுரையின் பேசு பொருளைக்கருதித்தானே தவிர,…” என்பதிலிருந்து ”…ஏதோ ஒருவகை இந்துத்துவ குணாம்சம் வாழ்வின் வெவ்வேறு காலகட்டத்திலும் மேலோங்கியிருப்பதும் உண்மையே” என்பது வரை மீண்டும் ஒருமுறை படித்து விடுங்கள்.

    தான் எப்படிப்பட்ட இந்துத்துவராக இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு இந்துவும் சுய அலசலின் வழியாகக் கண்டுணர்ந்து கொள்வது நல்லது. சடங்கு இந்துவாக தன்னை அடையாளம் காணும் ஒருவர் அரசியல் இந்துத்துவ தளங்களில் அதிகம் விழிப்புணர்வு பெறுவதை நோக்கி அவரை அது படிப்படியாக நகர்த்திச்செல்லும். அரசியல் இந்துத்துவராக இருக்கும் ஒருவர் சில சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் விரிவானதொரு தளத்தில் வைத்துப் புரிந்து கொள்ள உதவும்.

    அன்புடன்,

    அருணகிரி

  10. அடுத்ததாக, பாஸ்கர் மற்றும் வேதம்கோபால் ஆகியோரது எழுத்தில் தெரியும் விரக்தியும் நம்பிக்கையின்மையும் கூட புதிதில்லைதான். பலர் என்னிடம் இப்படி சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக ”Just compare what we have now in this sphere. Inspite of formidable Gandhi and Ambedkar more than 45% of our land and people ( including North East ) were weaned away” என்று சொல்வதை எடுத்துக்கொள்கிறேன்.

    இதனை அலசுவதில் நமக்கு ஒரு பரந்த perspective தேவை.

    45% என்பதை விட்டு விடுவோம். ஆனால் இந்துத்துவத்திற்கு நம் பாரத பூமியில் இழப்பு நேர்ந்திருப்பது உண்மைதான். அதனை ஆன்மீகத்தளத்தில் இழப்பு என்று நான் பார்க்கவில்லை, அரசியல் இழப்பு என்றுதான் பார்க்கிறேன். ஆனாலும் இழப்புதான். சில அடிப்படை நிலைகள் மாறுகையில் வடகிழக்கில் மீண்டும் இந்து தர்மம் வலுப்பெறும் எனவும் நம்புகிறேன். பலரது தியாக வாழ்வின் விளைவு- பழங்குடியினரிடையே மதமாற்றம் செய்வது இன்று கடினமாகி வருகிறது. பல இடங்களில் தாய்மதம் திரும்பும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. என்றாலும் ஆபிரஹாமிய மதமாற்றங்களும் இன்னொரு புறம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனை எதிர்த்து நாம் செய்யும் ஒவ்வொரு சிறு உதவியும்- இது தொடர்பான கட்டுரைகளைப்படிப்பது, பிறரிடம் பேசுவது என்ற நிலையில் மட்டுமே செய்யப்படும் செயல்கள் கூட – கால அளவில் பெரும் பலன்களைத் தர வல்லவை.

    இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம், திலகர், காந்தி காலத்தில் இருந்ததை விட இந்துமதம் உலகளாவிய அளவில் இன்று விரிந்து பரந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னாலும் முன்னாலும் ஒப்பிட்டால், ஆபிரஹாமிய கலாசாரங்களின் அடிப்படைவாதங்கள் பல விதத்திலும் அவற்றின் ஆதார நிலங்களிலேயே அடிவாங்கிக்கொண்டிருக்கின்றன என்பதையும் நினைவில் இருத்துங்கள். இந்து தர்மத்தின் பரந்த மனோபாவம், மந்தைத்தனமற்று தனிமனிதனை நோக்கிப் பேசும் விதம், ஒன்றுசேர்க்கும் கலாசாரம், உலகப்பொது நன்மை மற்றும் இயற்கையோடு இயைந்த தர்ம நோக்கு ஆகியவை உலகளாவிய ஜனநாயக, முற்போக்கு சமூகங்களின் பொதுநெறிகளுக்கு மிகவும் நெருக்கமானவை; அச்சமூகங்களின் புதிய ஆன்மீகத்தேடலுக்கு ஏற்புடையவை. இரண்டாம் உலகப்போருக்குப்பின் ஜனநாயக நெறிகள் பரவலான நிலையில் இந்து தர்மத்தின் மீதான ஈர்ப்பும் மேற்கில் அதிகமானது என்பதைக் கவனியுங்கள். பக்திமார்க்கத்திலும், ஞான மார்க்கத்திலும் ஓஷோ, ரமணர், ஸ்வாமி பக்திவேதாந்த பிரபுபாதர் என்று எத்தனை ஆன்மீகிகள் மேற்கின் தேடல் நிறைந்த மனங்களை இந்து ஞான மரபை நோக்கித்திருப்பியிருக்கிறார்கள் என்று யோசித்துப்பாருங்கள். உலகத்தையே சககுடும்பம் என பாவிக்கும் ஒவ்வொரு இந்துவுக்கும் இது நம்பிக்கையையே தரும்.

    சுதந்திரம் கிடைத்து ~60 ஆண்டுகளுக்குள்ளாகவே, ஒப்பீட்டளவில் மற்ற நாடுகள் சாதிக்க முடியாத பல வெற்றிகளை நாம் நம் நாட்டில் சாத்தியமாக்கி இருக்கிறோம். ஒரு பிரம்மாண்ட மக்கள் திரளை அமைதியான முறையில் ஜனநாயகத்தில் வழிநடத்தி பல சாதனைகளைச்செய்ய முடிந்திருக்கிறது நம்மால். அது தோற்கடிக்க இயலாத நம் மரபு, அமைதியாய்ச் சாதித்த வெற்றி. அம்மரபின் ஊடுபாவான இந்துத்துவத்தின் வெற்றி.

    ஓட்டினை உடைத்து வெளிவரும் வலிமிகுந்த போராட்டத்தில்தான் பறவைக்குஞ்சின் இறக்கை வலிமை அடைகிறது. அந்த வலிமையின் மூலமாகவே அது விடுதலையையும் புதிய உலகை எதிர்கொள்ளும் நம்பிக்கையையும் பெறுகிறது. இந்துத்துவத்தின் இன்றைய போராட்டங்களும் சவால்களும் அப்படிப்பட்டவைதான். இந்துத்துவம் முன்பிருந்ததை இன்று வலுப்பெற்று வருகிறது என்பதே உண்மை. இந்து தர்மத்தின் வலுவிழப்பு என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன் உள்ளிருந்து தொடங்கிய ஒன்று. வலுப்படுத்தலும் உள்ளிருந்துதான் தொடங்க வேண்டும்.

    தொடங்கியிருக்கிறது.

    அன்புடன்,

    அருணகிரி.

  11. Dear Mr. Arunagiri,

    I appreciate your writing. some of my thoughts

    I believe these three Ritual, Spiritual and Political are not 3 type, but are based on 2 gunas. All people have these three thoughts and interest, some have more interest in one and follow other. I suggest to classify as follows:

    Ritual – Nurturing Phase – everything should be nurtured at the beginning, Ritual is the learning practice of course advance also there, this is the thing one need to get connected always.
    Political – development/growth phase – those who has Rajo Guna will involve in this, leaders like Arabindo, V.O. Chidambaram, Subramaniya Siva can be listed in this line who contributed lot in their middle age and later part concentrated in Spiritual. work for the society.
    Spiritual – stabilization Phase
    realizing self is the third phase in one’s life that comes under this.

    so i believe every one has these thoughts, some time and some person have more likes with one according to it they perform.

    Another thing is Abraham religions are political motivated, so they are aggressive nature, because they do not have security for their basics.

    Their colour itself express this, green is their expectation because they are from desert and white is another’s colour as they are always among war/coral so they want peace. the climate also leads to it.

    INDIA a tropical country has everything, throughout the year it is possible to cultivate, secure because of 3 side surrounded by sea, so INDIAN’s had inward thought and take the colour of Saffron is the colour of flame from Yagagunda. So we are more material giving and not aggressive.

    .these are some thoughts, further this need to be explored

  12. Dear All,

    In continuation to my previous mail dated 5-3-10, I would like to add something more in this line.

    It is necessary to define and draft the ways of life. Yes already it is there mostly those who are very much interested in Ritual and Spiritual are following, it is necessary to groom the children to the right direction. Our next generation should success in materialistic benefits, also they follow our religion and spread it. To achieve this they need to face many opposition from neighbours, friends, particularly other religious children and their big brothers.

    Generally we do not have anybody to clear our doubts, hope you also come across such situation like me. Yes, a access point to clearing doubt is essential, a Guru for every street, atleast a religion person every ward or Panchayath.

    These Grus should be regularly oriented on religion and latest developments in many aspects. Thought Swami Lakshmanandha did many good for the Tribal and stop conversion, could we / our wards able to respond to other faith people’s questions? upto my knowledge it is “NO”. So a Point person for every one children, youth, middle aged, male female, all caste is must. We have to take the rights to the common masses, so far we have link with only who come forward on their own, we have to reach to each and every door as Swami Vivekanandha says.

    Let us explore further,

    Regards

    Murugan

  13. இந்துக்களின் கடவுளான கிருஷ்ணன் தனது கீதையில் தானே சதுர் வருண முறைய ஏற்படுதியதாகவும், மனிதருடைய குண வேறுபாடிற்கேற்ப வருண வேறுபாடு அமைவதாகவும் ஒரு கோட்பாட்டை விளக்கியுரைக்கின்றார். இந்தக் குண வேறுபாட்டுக் கோட்பாடு கபிலரின் சாங்கியத் தத்துவத்திலிருந்து பெறப்பட்டதாகும். ……………………………………………
    சாங்கிய தத்துதவம் ஒவ்வொரு சடப்பொருளும் தனக்கென உரிய வகையில் ராஜச, தாமச, சாத்வீகம் என்ற மூவகை குணங்களை பெற்றிருப்பதாக கூறுகிறது என்பதில் ஐயமில்லை. பொருள் எதுவும் சடமாக இருப்பதில்லை. மூன்று குணங்களும் ஒரே அளவான ஆற்றலோடு விளங்கும் போது நிலையற்ற சமநிலையில் இயங்குகிறது.

    ஒரு குணம் மேலோங்கி நிற்கும்போது சமநிலை பாதிக்கப்பட்டு சடப்பொருள் இயக்கம் பெறுகின்றது. குணதர்மம் பற்றிய சாங்கிய கோட்பாட்டைப் பொருத்திக் காட்டி வருண முறைக்கு அறிவியல் பூர்வமானதொரு விளக்கம் தருவதில் கிருஷ்ணன் மிகத் தேர்ந்தவராக தோன்றுகிறார்.

    ஆனால் அவ்வாறு கூறுவதில் அவர் தன்னையே முட்டாளாக்கிக் கொண்டுள்ளார். குணங்கள் மூன்றாகவும், வருணங்கள் நான்காகவும் இருப்பதை உணராதவராக உள்ள கிருஷணன், தான் என்னதான் சிறந்த கூர்ந்த மதியுடையவர் என்று கூறிக் கொண்ட போதிலும் மூன்று குணங்களை மட்டுமே வைத்துக் கொண்டு நான்கு வருணங்களுக்கான ஒரு கோட்பாட்டை நிறுவ முடியாது என்பதை உணராதவராகவே இருப்பதைக் காணலாம்.

    அறிவார்ந்த விளக்கம் போலத் தோன்றுவதான ஒரு விளக்கம் இங்கு அர்த்தமற்ற, நகைப்பிற்கிடமான விளக்கமாகி விடுவதைக் காணலாம். புதிதொரு புதிரையே உருவாக்கின்றது. சதுர்வருணக் கோட்பாட்டை நியாயப் படுத்துவதற்குப் பிராமணர்கள் இவ்வளவு கடுமையான போரிடுவதேன்?”

  14. மூவகை இந்துத்துவத்தின் முரணியக்கம் என்ற ஸ்ரீ அருணகிரி அவர்களின் கட்டுரை வாசித்தேன். நன்று. நடைமுறையில் இம்மூன்று வகை ஹிந்துத்துவங்களும்
    ஒன்றோடொன்று உடாடி இயங்கி வருவது கண்கூடு.
    அனால் ஸ்ரீ அருணகிரி அவர்களின்

    “அரசியல் இந்துத்துவம்:ஆபிரஹாமிய மதங்களின் இறையியல் அடிப்படை, மதமாற்றம் என்பதன் வழியாக “நாம் Vs பிறர்” என்ற பிளவை சமூகத்தில் உருவாக்கி, குழு அரசியலை கடவுளின் பெயரால் நிறுவுகிறது”.
    என்ர மார்க்சீய தாக்கமுடைய இலக்கணம் ஏற்புடையது அன்று.
    மாறாக அரசியல் ரீதியில் ஆபிரஹாமியர்கள் மனதளவில் கொண்டுள்ள பிழவு மனப்பான்மையை ஹிந்துக்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அரசியல் ரீதியாக ஒன்றுபடுத்தும் சித்தாந்தமே ஹிந்துத்துவம்(இந்த பிழவை உள்ளத்தே கருதியவர்கள் ஹிந்துக்கள் அல்லர். நாம் அவர்கள் என்ற பிரிவினை ஆபிரஹாமியத்தில் நெடுநாள்களாக irukkiradhu). ஹிந்துக்கள் மதம்(பிரிவு), மொழி, போன்றவற்றால் வேறுபாடுகளை கொண்டிருந்தாலும் அவர்களிடையே காணப்படும் பண்பாடு சார்ந்த ஒற்றுமை அடிப்படையில் அவர்கள் ஒரு ராஷ்ட்ரம், தேசம் என்பதே அரசியல் ஹிந்துத்துவம். ஹிந்து சமயம், பண்பாடு,மொழிகள் இவையெல்லாம் பாதுக்காக்கப்பட ஹிந்து ஒற்றுமை அவசியம் என்று அதற்காகப் போராடுவதே அரசியல் ஹிந்துத்துவம் என்பதே அடியேனின் புரிதல்.
    என்றாலும் கட்டுரையாளரின் “சடங்கு இந்துக்களின் அறிவுத்தளமும் விழிப்புணர்வும் அரசியல் இந்துக்களின் அறிவுத்தளத்திற்கும் விழிப்புணர்விற்கும் மிக அருகில் வருவது மட்டுமே இந்து சமூகத்தை எதிர்காலத்தில் ஆரோக்கியமாக்கிக் காக்கும் என்று நான் நம்புகிறேன். இதற்கு, களப்பணியோடு நின்று விடாமல் ஆய்வுத்தளங்களிலும் அறிவுக்களங்களிலும் தன் செயல்பாட்டை பல மடங்கு தீவிரமாக அதிகரிக்க வேண்டியது இந்துத்துவ இயக்கங்களின் இன்றைய உடனடி அவசியமாகும்”. என்ற கருத்து மிகவும் ஏற்புடையது.
    விபூதிபூஷன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *