புதிய பறவை இனம் – பரிணாமவியலின் இன்னொரு வெற்றி!

பரிணாமவியலை எதிர்ப்பவர்கள் பொதுவாக தங்களது மத புத்தகத்தில் எழுதியுள்ள வரிகளை அப்படியே உண்மை என்று நம்பிக்கொண்டு, அதன் அடிப்படையிலேயே உலகம் தோன்றியது, உயிர்கள் தோன்றின என்று வாதிடுவார்கள். பல கோடி ஆண்டுகள் பழைய இந்த பிரபஞ்சம் வெறும் ஐந்தாயிரம் வருடங்களே பழையது என்றும் கூறுவார்கள்.

ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்னால் பெருவெடிப்பை அவர்களது மதப்புத்தகத்தில் உள்ள கடவுள் தோற்றுவித்தார் என்று நம்புகிறார்கள். ஆகையால், பல மில்லியன் வருடங்களுக்கு முந்தையதாக கணக்கிடப்படும் டைனசோர்கள் ஆகியவற்றை நம்மை ஏமாற்ற சாத்தான் என்ற அவர்களது கடவுளின் எதிரி போட்டு வைத்திருப்பதாகவும் நம்புகிறார்கள்.

ஆனால், பரிணாமவியல் என்ற அறிவியல் தொடர்ந்து வளர்ந்து மேன் மேலும் அதிக ஆதாரங்களை கொண்டுவந்து குவித்துக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறு ஆதாரத்தை பார்ப்போம்.

பொதுவாக பரிணாமவியலை எதிர்ப்பவர்கள் ஒரு சில வாதங்களை முன் வைப்பார்கள். சமீபத்தில் எந்த குரங்கு மனிதனாக ஆனது என்று காட்டுங்கள் என்று சொல்வார்கள்.

இங்கிலாந்தில் பலர் தங்களது வீடுகளுக்கு வெளியே பறவைகள் உண்ண தான்யங்களை கொடுக்கும் பறவை உணவுக் கூடுகளை (bird-feeders) வைத்திருக்கிறார்கள். இது அவர்களது தோட்டத்துக்கு அழகு சேர்க்கும் என்று கருதித்தான் வைத்திருக்கிறார்கள். ஆனால், இந்த வழக்கம் புதிய பறவை இனங்களை தோற்றுவித்திருக்கிறது என்று அறியலாய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

blackcap-birdஐரோப்பிய பிளாக் கேப் (European blackcaps) என்னும் பறவை வரலாற்று ரீதியாக இங்கிலாந்தில் பனிக்காலம் இருக்கும்போது ஸ்பெயினுக்கு சென்று தமது குளிர்காலத்தை கழிக்கும். அங்கு பழங்களையும் சிறு செடிகளின் பெர்ரி பழங்களையும் உண்டு வாழும். ஆனால், தற்போது இப்படிப்பட்ட பறவைகளுக்கு தானியம் அளிக்கும்  பறவை உணவுக் கூடுகள்  (bird-feeders)  வந்துள்ளதால், இந்த பறவைகளின் பழக்க வழக்கங்கள் மாறிவிட்டன.

தற்போது இந்த ஈரோப்பியன் பிளாக்கேப்  பறவைகளில் ஒரு பகுதி எப்போதும்  இத்தகைய பறவை உணவுக் கூடுகளில் கிடைக்கும் தானியங்களை மட்டுமே உண்டு வாழக்கூடியதான பறவையினமாக மாறி வருகிறது என்று கண்டறிந்துள்ளார்கள்.

இங்கிலாந்தில் வசிப்பவர்கள் குளிர்காலத்திலும் இந்த பிளாக்கேப் பறவைகளுக்கு தானியம் கொடுக்க ஆரம்பித்ததால், பிளாக் கேப் பறவைகளில் ஒரு பகுதி குளிர்காலத்திலும் இங்கேயே இருக்க ஆரம்பித்தது. அது மட்டுமல்ல. குளிர் காலத்தில் இங்கே தங்கிவிட்ட மற்ற பிளாக் கேப் பறவைகளுடன் மட்டுமே பாலுறவு வைத்துகொண்டது. இது தனியே ஒரு பறவை இனமாக மாற முதல் படி. இதுதான் நடக்கிறது என்று ஆய்வாளர்கள் கருதினாலும், அவர்களுக்கு ஆதாரம் வேண்டுமே! ஆகவே பரிசோதனைசாலையில் புகுந்து பரிசோதிக்க ஆரம்பித்தனர்.

bird-feeder-evolutionஇந்த பறவைகளின் கால்களில் இருக்கும் ஒரு வேதிப்பொருளை அடையாளம் கண்டு குளிர்காலத்திற்கு ஸ்பெயினுக்கு போகும் கூட்டத்துக்கும், குளிர்காலத்தில் இங்கேயே இங்கிலாந்து மக்கள் கொடுக்கும் பறவை தானியத்தை உண்ணும் கூட்டத்துக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்று ஆராய்ந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போலவே அவர்கள் என்ன உணவு சாப்பிடுகிறார்கள், குளிர்காலத்தில் எங்கே இருக்கிறார்கள் என்பதை வைத்து வேதி வித்தியாசம் இருந்தது. அதன் பின்னர் அந்த பறவைகளின் இரத்தத்தை எடுத்து வித்தியாசம் இருக்கிறதா என்று ஆராய்ந்தார்கள். அதுவும் வேறு வேறு ஆகிவிட்டிருந்தன.

குளிர்காலத்தில் இங்கே இருக்கும் பிளாக் கேப் பறவைகள் வேறு விதமான இறக்கைகளை அடைந்துவிட்டன. அவற்றின் சிறகுகள், அவற்றின் மூக்கு ஆகியவையும் மாறுதல் அடைந்துவிட்டன. அவைகளது இறக்கைகள் வட்டவடிவமாக ஆகி சிறிய தூரம் பறப்பதற்கு ஏற்றவையாக ஆகிவிட்டன. அவற்றின் அலகுகள் நீளமானதாகவும் அகலத்தில் சிறியதாகவும் ஆகியிருந்தன. இப்படிப்ப்பட்ட அலகுகள்  மூலம் எளியதாக bird-feedersகளிலிருந்து எளிதில் தானியத்தை எடுத்து சாப்பிட வசதியாக ஆகியிருக்கின்றன. இத்தனை பரிணாமவியல் மாற்றங்களும் கடந்த 50 வருடங்களில் நடந்து விட்டன.

birdfeeder-new-bird-speciesஇப்போது பரிணாமவியலை எதிர்ப்பவர்களின் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. ஒரு பறவையினத்திலிருந்து ஒரு சூழ்நிலை மாற்றத்தின் காரணமாக புதிய பறவையினம் தோன்றியிருக்கிறது.

பரிணாமவியல் போன்ற அறிவியல்களை எதிர்ப்பவர்கள் என்ன ஆதாரம் காட்டப்பட்டாலும் அதனை ஒப்புக் கொள்ளப் போவதில்லை. ஆகவே இந்த ஆதாரங்கள் அவர்களுக்கல்ல. இந்துக்களாகிய நமக்குத்தான். நம்மில பலர் கிறிஸ்துவ பள்ளிகளில் படித்து வந்தவர்கள். அங்கு மென்மையாக ஏற்றப்படும் கருத்தியல்கள் காரணமாக, ஆதாம் ஏவாள், கடவுள் ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் பூமியை படைத்தார் போன்ற கதைகளை உண்மை என்று நம்புபவர்களும் உள்ளனர்.

இந்து மதத்தின் ஆன்மீகம் அறிவியலுக்கு எதிரானதல்ல. இயற்பியல், வேதியியல் போன்றே உயிரியலும், உயிரியலின் அடிப்படையாக இருக்கும் பரிணாமவியலும் அறிவியல்களே.

இந்து மதத்தின் ஆன்மீகம் உயிர் என்பதை வெறுமே மனிதர்களுக்கு மட்டுமே கொடுப்பதல்ல. உதாரணமாக மற்ற மதப்புத்தகங்களில் மனிதனை படைத்துவிட்டு பிறகு உயிரை கொடுக்க ஒரு நாள் முழுவதும் செலவழிக்கும் அந்த மதப்புத்தகங்களில் கடவுள் பாக்டீரியா, செடிகொடிகள் தாவரங்கள்
ஆகியவற்றுக்கு இப்படி உயிர் கொடுப்பதில்லை.

ஆனால், தாவரங்கள், விலங்குகள், புழு பூச்சிகள் ஆகியவற்றுக்கும் பொதுவாக நமது ஆன்மீகம் இருக்கிறது. நாம் வந்த பாதை நீண்ட நெடியது. உயிரற்ற பொருள்களிலிருந்து ஆரம்பித்து கிளைத்துள்ள உயிரென்னும் மாபெரும் மரத்தின் ஒவ்வொரு இலைகளிலும் தழைத்திருக்கும் இந்த மாபெரும் கூட்டமைப்பு நம்மை உலகத்திலும் இன்னும் இந்த உலகுக்கு வெளியே இன்னோர் சூரியர்களின் கிரகத்தில் வாழும் உயிர்களுக்கும் சகோதரர்களாக ஆக்குகிறது. இந்த பேருண்மையே பெரும் ஆன்மீக உணர்வாக நமக்கு நம் பார்வையை விரிக்க வேண்டும்.

இதுபற்றிய மேலும் விவரங்களுக்கு இங்கே மற்றும் இங்கே பார்க்கலாம்.

27 Replies to “புதிய பறவை இனம் – பரிணாமவியலின் இன்னொரு வெற்றி!”

 1. எளிய உதாரணம் மூலமாக புரியாதவர்களுக்குக் கூட எளிமையாக பரிணாமவியலையே புரிய வைத்திருக்கிறார் ஆர். கோபால் அவர்கள். மிகுந்த நன்றிகள் உரித்தாகுக. இனியும் பரிணாமவியலை பொய் என்று சொல்பவர்களை நடிப்பவர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். தன்னெஞ்சறிவது பொய்யற்க என்று வள்ளுவர் கூறுகிறார்.

  இந்த பிரபஞ்சம் பல கோடி கோடி வருடங்கள் பழையது என்று இந்து புத்தகங்கள் கூறியதை இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் எள்ளி நகையாடினார்கள். ஆனால், இந்து புத்தகங்களே சரியான குறிப்பை கொண்டிருக்கின்றன என்று அறிவியல் நிரூபித்திருக்கிறது. அறிவியலே கூறிவிட்ட பின்னரும் தங்களது புத்தகங்களில் இல்லையே என்று அவற்றை பொய்யென நிரூபிக்க ஆசைப்படுகிறார்கள் இந்த இஸ்லாமியரும் கிறிஸ்துவர்களும். உண்மையே வெல்லும்.

  கார்ல் சாகன் இந்து பிரபஞ்சவியலை மெய்மறந்து பாராட்டுகிறார்.

  இதில் வீடியோவையும் காணலாம்.

  https://souljerky.com/articles/carl_sagan_on_hindu_cosmology.html

  Hindu religion is the only one of the world’s great faiths dedicated to the idea that the cosmos itself undergoes an immense, indeed an infinite number of deaths and rebirths.

  It is the only religion in which the time scales correspond, no doubt, by accident, to those of modern scientific cosmology. Its cycles run from our ordinary day and night to a day and night of Brahma 8.64 billion years long. Longer than the age of the earth or the sun and about half of the time since the big bang. And there are much longer time scales still.

  There is the deep and the appealing notion that the universe is but the dream of the god who after a 100 Brahma years… dissolves himself into a dreamless sleep… and the universe dissolves with him… until after another Brahma century… he starts… recomposes himself and begins again the dream… the great cosmic lotus dream.

  Meanwhile… elsewhere… there are an infinite number of other universes… each with its own god… dreaming the cosmic dream…

  These great ideas are tempered by another perhaps still greater it is said that men may not be the dreams of the gods but rather that the gods are the dreams of men.

  In India, there are many gods and each god has many manifestations. These Chola (Wikipedia – Chola Dynasty | Chola Art) bronzes cast in the eleventh century include several different incarnations of the god Shiva. Seen here at his wedding.

  The most elegant and sublime of these bronzes is a representation of the creation of the Universe at the beginning of each cosmic cycle – a motif known as the cosmic dance of Shiva. The god has four hands. In the upper right hand is the drum whose sound is the sound of creation. And in the upper left hand is a tongue of flame… a reminder that the universe now newly created… will billion of years from now will be utterly destroyed. Creation. Destruction.

  These profound and lovely ideas are central to ancient Hindu beliefs as exemplified in this Chola temple at …. They are kind of reminiscent of modern astronomical ideas. Without doubt the universe has been expanding since the big bang but it is by no means clear that it will continue to expand for ever. If there is less than a certain amount of matter in the universe, then the mutual gravitation of the receiving galaxies will be insufficient to stop the expansion and the Universe will run away forever. But if there is more matter than we can see…hidden away in black holes… say or in hot but invisible gas between galaxies, then the universe holds together, and partakes in every Indian succession of cycles… expansion followed by contraction… cosmos upon cosmos…Universes without end. If we live in such an oscillating universe, then the Big Bang is not the creation of the cosmos but merely the end of the previous cycle the destruction of the last incarnation of the cosmos.

  Neither of these modern cosmologies may be altogether to our liking. In one cosmology, the universe is created somehow from nothing 15 to 20 billion years ago and expands forever. The galaxy is mutually receding until the last one disappears over our cosmic horizon. Then the galactic astronomers are out of business… the stars cool and die…matter itself decays…and the Universe becomes a thin cold haze of elementary particles.

  In the other, the oscillating universe, the cosmos has no beginning and no end… and we are in the midst of an infinite cycle of cosmic deaths and rebirths. With no information trickling through the cusps of the oscillation…nothing of the galaxies, stars, planets, life forms, civilizations evolved in the previous incarnation of the universe trickles through the cusp filters past the Big Bang to be known in our universe.

  The death of the universe in either cosmology may seem little depressing. But we may take some solace in the time scales involved. These events will take tens of billions of years or more. Human beings or our descendants whoever they might be can do a great deal of good in the tens of billions of years before the cosmos dies.

 2. திரு.ஆர்.கோபால் அவர்களே!
  பரிணாமவியல் ஏதோ கிறிஸ்தவ மதத்திற்கு மட்டுமே எதிரானது போல
  ஒரு தோற்றத்தை உங்கள் கட்டுரை ஏற்படுத்துகிறது.

  ஈஸ்வரன் என்னும் தத்துவமே தேவையில்லை. இயற்கையே தர்மத்தின்
  அடிப்படையில் உலகை இயக்குகிறது என்பதாக கூறும் புத்த மதம் போன்ற
  மதங்களுக்கு வேண்டுமானால் இந்த பரிணாமவியல் சாதாரணமாக
  இருக்கலாம். அங்கேயும் கர்மா கொள்கை எப்படி புரிந்து கொள்ள படுவது
  என்பதை யோசித்தால் சில குழப்பங்கள் ஏற்படும்.

  கி.மு 4000த்தில்தான் உலகம் தோன்றியது போன்ற வாதங்கள் கிறிஸ்தவத்தில் மார்டின் லூதர் கிங்க் என்பவரின் மூலமாக Protestantism
  என்ற பிரிவில்தான் 1500களில் உருவாக்க பட்டதாக தெரிகிறது. பிறகு
  இதுவே ஒரு முடிவான முடிவு என்னும் நிலையை அனைத்து பிரிவுகளும்
  ஏற்று கொண்டு விட்டன. இந்த முடிவுகளுக்கு முற்றிலும் விரோதமாக
  உலகத்தின் வயது பல பில்லியன் வருடங்கள் என்ற 20ம் நூற்றாண்டின்
  வாதம் அறிவியல் ஆதாரங்களுடன் வைக்க பட்டு விட்டதால்
  பெரும்பான்மை கிறிஸ்தவர்களால் ஏற்றுக்கொள்ள பட்டுவிட்டது.

  என்றுமே சில பிரிவுகள் பழமைவாதிகளாகத்தான் இருக்கும். அவை
  வேண்டுமானால் இன்றும் இந்த அறிவியல் ஆதாரங்களை “சாத்தானின்”
  வேலை என்று கூறிக்கொண்டிருக்கும்.

  பரிணாமவியலிற்கான எதிர்ப்பு மேற்கத்திய நாடுகளில்தான் ஆரம்பித்தது.
  ஏனென்றால் அங்குதான் சார்ல்ஸ் டார்வின் தன் புத்தகத்தை
  வெளியிட்டார். காலம் செல்ல செல்ல இஸ்லாம் போன்ற ஆப்பிரகாமிய
  மதங்களும் பரிணாமவியலை எதிர்க்க ஆரம்பித்தன.

  பரிணாமவியலின் ஒரு கூறான பிரபஞ்சத்தின் வயது என்பதில் இந்து மதம்
  வெற்றி பெற்றிருப்பது என்பது உண்மைதான். ஆனால் “குரங்கிலிருந்து
  மனிதன் உருவானான்” என்பதை ஏற்று கொண்டால் நம் மதமும் ஜகா
  வாங்க வேண்டிவரும்.
  எப்படி?
  மனிதன் எவ்வாறு உருவானான்? என்னும் கேள்விக்கு விடைகளை
  நம் மத புத்தகங்களும் கூறுகின்றன. வேதங்கள், புராணங்கள்
  போன்றவற்றில் கடவுளே மனிதனை படைத்தான் என்னும் வாதமே
  மேலோங்கி இருக்கிறது. பரிணாமவியலை இந்துக்கள் ஏற்றுக்கொண்டால்
  நாமும் சில கேள்விகளுக்கு திகைக்க வேண்டி வரும்.

  தசாவதாரங்களின் அடிப்படையில்தான் உலகம் உருவாகியிருக்கிறது
  என்றேல்லாம் சிலர் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். மீனிலிருந்து ஆரம்பித்து
  மனிதன் வரை தோன்றும் இந்த அவதாரங்கள் பரிணாமவியலையே
  சுட்டுகின்றன என்னும் வாதம் சிலரால் காட்டப்படுகிறது. கிறிஸ்தவத்தை
  எதிர்ப்பதற்கும், இந்து மதம் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையை
  ஏற்கிறது என்பதை கூறவும் சிலர் இவ்வாறு முயல்கிறார்கள். ஆனால்
  நம் மத புத்தகங்களின் வாசகங்கள் “விலங்கிலிருந்து மனிதன் தோன்றினான்”
  என்பதை ஏற்று கொள்வது போல் தெரியவில்லை.

  என்னுடைய தனிப்பட்ட கருத்து இதுதான். பரிணாமவியலை ஏற்று
  கொண்டுவிட்டால் என் மதமும் சில கேள்விகளுக்கு பதில் கூற திகைக்கும்.
  ஆப்பிரகாமிய மதங்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காக இந்த
  வாதங்களை ஏற்றால் நாத்திகர்களின் கொட்டம்தான் அதிகரிக்கும்.

  “கடவுளே தேவையில்லை. கடவுள் மனிதனை படைத்தான் என்னும்
  கொள்கை நிராகரிக்க பட்டு விட்டது. ஆகவே, மதங்களே தேவையில்லை.
  மதங்களை அனுசரிப்பவர்கள் முட்டாள்களே” இப்படிப்பட்ட நிலைக்குத்
  தான் நம் சமூகம் செல்லும்.

  யதார்த்தத்தில் அறிவியலின் படி பரிணாமவியலே வென்றிருக்கிறது
  என்றாலும் கிறிஸ்துவ எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பாகவே உலகை இட்டு
  செல்லும் என்பதால் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

  Aldous Huxley எழுதிய Brave New World படித்து பாருங்கள். கடவுள்
  நம் சமூகத்திற்கு தேவையில்லை என்ற நிலை வந்தவுடன் மனிதர்கள்
  ஏதோ மிஷின்களை போல் ஆய்வு சாலைகளில் உருவாவார்கள்.
  குடும்ப அமைப்பு, அன்பு, பாசம், காதல், இரக்கம் போன்ற பண்புகள்
  அற்ற ஒரு சமுதாயம் உலகில் உருவாகும்.

  பரிணாமவியல் நம்மை அந்த நிலைக்குத்தான் எடுத்து செல்கிறது என்றே
  நான் அஞ்சுகிறேன்.

 3. அருமையான கட்டுரை ஆர்.கோபால் அவர்களே. இது போன்று எளிய தமிழில் மேலும் அறிவியல் கட்டுரைகளை நீங்கள் எழுத வேண்டும்.

  பாலாஜி,

  // ஆனால் “குரங்கிலிருந்து மனிதன் உருவானான்” என்பதை ஏற்று கொண்டால் நம் மதமும் ஜகா வாங்க வேண்டிவரும்.
  எப்படி?
  மனிதன் எவ்வாறு உருவானான்? என்னும் கேள்விக்கு விடைகளை
  நம் மத புத்தகங்களும் கூறுகின்றன. வேதங்கள், புராணங்கள்
  போன்றவற்றில் கடவுளே மனிதனை படைத்தான் என்னும் வாதமே
  மேலோங்கி இருக்கிறது. பரிணாமவியலை இந்துக்கள் ஏற்றுக்கொண்டால்
  நாமும் சில கேள்விகளுக்கு திகைக்க வேண்டி வரும். //

  நீங்கள் சொல்வது இரண்டு விதத்தில் தவறானது.

  ஒன்று, இந்து தர்மம் சிருஷ்டி கூறும் கருத்து நீங்கள் சொல்வது போன்று தட்டையான, எளிமைப் பட்ட (simplistic) கருத்து அல்ல,.. (இது பற்றி மேலும் கீழே).

  இரண்டு, சத்திய தரிசனமும், ஞான விழைவும் தான் உயரிய லட்சியங்கள் என்று இந்து மதம் கூறுகிறது.. “சில கேள்விகளுக்கு திகைக்க வேண்டி வரும்” என்பதால் ஒரு அறிவுபூர்வமான நிலைப்பாட்டை நிராகரிப்பது இந்துப் பார்வை அல்ல, அது ஆபிரகாமிய பார்வை.

  இந்த விஷயத்தில் உங்களது கண்ணோட்டமும் ஊடகங்களாலும், வெகுஜன கருத்தாக்கத்தாலும் தாக்கப் பட்டுள்ளது என்று தோன்றுகிறது.

  இனி, சிருஷ்டி பற்றி இந்து மத தத்துவங்களில் மிக ஆழமான கருத்தாக்கம் உள்ளது.. ரிக்வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் உள்ள நாஸதீய சூக்தம் தான் சிருஷ்டி பற்றிய இந்து தத்துவத்தின் ஆரம்பப் புள்ளி (https://en.wikipedia.org/wiki/Nasadiya_Sukta)

  இதன் ஆங்கில மொழியாக்கத்தை இங்கு படிக்கலாம் – https://www.kondor.de/shaman/sanskrt_e.html

  இதில் கடைசி இரு பாடல்கள் –

  But, after all, who knows, and who can say
  Whence it all came, and how creation happened?
  The gods themselves are later than creation,
  so who knows truly whence it has arisen?

  Whence all creation had its origin,
  he, whether he fashioned it or whether he did not,
  he, who surveys it all from highest heaven,
  he knows – or maybe even he does not know.

  இந்த சூக்தத்தின் உன்னதம் என்னவென்றால், கடைசியில் இது ஒரு பெருவியப்பாகவும், கேள்வியாகவுமே முடிகிறது. உபநிஷத விவாதங்கள், வேதாந்த தத்துவம் அனைத்தும் இந்த சூக்தத்திலேயே தொடங்குகின்றன.. இது பற்றி ஜெயமோகனின் ஒரு கட்டுரை – http://www.jeyamohan.in/?p=1333
  பின்னால் வந்த புராணக் கதைகள் அனைத்தும் இந்த தத்துவத்தை கற்பனைகள் மூலம் விரிப்பவையே.. அவைகள் எவையும் விவிலியம் கூறும் creation theory போன்றவை அல்ல.

  மேலும், இந்து மதம் கூறும் கடவுள் பிரபஞ்சத்திலிருந்து “வேறான” கடவுள் அல்ல – ie. the Hindu God is not extra-cosmic. அவர் பிரபஞ்சமாகவே உள்ள கடவுள் (cosmic god). அதனால் தான் விஷ்ணு சகஸ்ரநாமத்தின் முதல் பெயர் “விஷ்வம்” என்று தொடங்குகிறது.. பிரகாலதன் கதை அதைத் தான் சொல்கிறது. இங்கு ஏதோ பரமண்டலத்தில் உள்ள கடவுள் பிரபஞ்சத்தைப் படைப்பதில்லை – அவர் பிரபஞ்சமாகவே இருக்கிறார் (தம் ஸ்ருஷ்ட்வா ததேவ அனுப்ராவிஷத் – ஐதரேய உபநிஷத்).

  பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருளும் பரிணாமம் அடைந்து கொண்டே இருக்கிறது.. எனவே குரங்கிலிருந்து மனிதன் தோன்றும் கருத்து இந்துமதத்திற்கு எதிரானதே அல்ல. இது ப்ற்றி மேலும் விரிவாக நிறைய எழுதலாம்….

  In Hindu thought, there is no creator and creation, only the Dancer and his dance – as signified by the Nataraja icon.

  மொத்தத்தில், இந்து மதம் பரிணாம அறிவியலைக் கண்டு *அஞ்ச*த் தேவையில்லை. சொல்லப் போனால் பரிணாம அறிவியல் இந்து தத்துவத்தை இன்னும் செழுமைப் படுத்துகிறது ..and vice versa..

  மேலே, தொடர்புடைய பதிவுகள் என்பதில் உள்ள “டார்வின் – முருகன் வைத்த குட்டு” என்ற கட்டுரையையும் படியுங்கள்.

 4. அன்புள்ள பாலாஜி,

  //Aldous Huxley எழுதிய Brave New World படித்து பாருங்கள். கடவுள்
  நம் சமூகத்திற்கு தேவையில்லை என்ற நிலை வந்தவுடன் மனிதர்கள்
  ஏதோ மிஷின்களை போல் ஆய்வு சாலைகளில் உருவாவார்கள்.
  குடும்ப அமைப்பு, அன்பு, பாசம், காதல், இரக்கம் போன்ற பண்புகள்
  அற்ற ஒரு சமுதாயம் உலகில் உருவாகும். பரிணாமவியல் நம்மை அந்த நிலைக்குத்தான் எடுத்து செல்கிறது என்றே நான் அஞ்சுகிறேன்.//

  அல்டாஸ் ஹக்ஸ்லி மட்டுமல்ல, அந்த காலத்தின் அறிஞர்கள் அனைவருமே விவிலியத்தில் மட்டுமே கடவுள் சொல்லப்படுகிறார் என்றும் இந்து மதம் மற்றும் பாகன் தத்துவங்களில் கடவுள் பற்றிய அரைகுறை அறிவே இருக்கிறது என்று கருதினார்கள். இன்னும் பலர் அப்படியே கருதுகிறார்கள். ஏன் இந்தியாவிலும் பலர் அப்படித்தான் கருதுகிறார்கள். ஆகையால் விவிலியத்தில் உள்ள கடவுளைப்பற்றிய வரிகளில் ஏதேனும் தவறு என்று அறிவியல் நிரூபித்துவிட்டால் கடவுள் நம்பிக்கையே அற்றுபோய்விடும் என்ற் தேவையின்றி பயப்பட்டார்கள்.

  அறிவியல் ஆபிர்காமிய கருத்தியல், கடவுள் கொள்கைகளைத்தான் மறுக்கிறது.

  மேலே கார்ல் சாகன் இந்து தத்துவியலை பற்றி கூறியுள்ளதை படியுங்கள். எடுத்துக்கொடுத்த ரங்கசாமிக்கு நன்றி.

  இந்து மதம் திகைக்காது. இந்துமதத்தைபற்றி சரியாக அறியாதவர்களே திகைப்பார்கள்.
  நன்றி

 5. அருமையான கட்டுரை ஐயா. அறிவியல் பூர்வமாக இறைவனை இயற்கையில் காணும் நிலையை நாம் உறுதி படுத்த பரிணாம வளர்ச்சி தத்துவம் நிச்சியமாக பயன்படும்.

  காளி மிகவும் சக்தி வாய்ந்தவள்,அவள் நடுவில் சக்கரமாக சுழல்கிறாள். அவள் ஒன்றும் இல்லாமல் அனைத்துமாக இருக்கிறாள். அவள் கறுப்பி.

  Black Hole ஒன்றும் அதனுள் இல்லை, அது நடுவில் இருக்கிறது. வட்டமாக சுற்றுகிறது. அனைத்தையும் உள்ளிழுத்து எங்கே விடுகிறது தெரிய வில்லை. கருப்பாக இருக்கிறது.

  இது பத்தி யாராவது எழுதுங்கப்பா!

 6. பாலாஜி அவர்களே

  கீதசாரியனின் வார்த்தைகளில் –

  எல்லாமே முன்பே இருந்தது …. எப்பொழுதும் இருக்கும்
  மாறுபாடுகளை ஏற்றுக்கொள்வது உடல் தான்
  (இந்த கட்டுரையின் மைய்ய கருத்தும் எனக்கு இதுவே என்று தோன்றுகிறது)

  “உபநிஷத் – நித்யோ நித்யஹா”

  பிறப்பு இறப்பு என்பது என்பது ஒரு உடலில் ஆன்மா சேரும் போதும், உடலில் இருந்து ஆன்மா பிரிவதையுமே குறிக்கும்

  ஆத்மா புராணன் – அதாவது பழசு ஆனாலும் புதுசு (புரா நவ)

  instanta உயிரை உருவாக்கினார் (two minutes noodles அல்லது இது ப்ரு மா) என்றில்லாமல் மேலும் டெஸ்ட் மேட்ச் ஆடி ஒரே tired அப்பா one day rest வேணும் என்றெல்லாம் சொல்லவில்லை [ஒரு நாள் வேலை பாக்க சோம்பேறி தனம் என்றால் அதை ஏன் கடவுள் rest எடுத்தார் அதனால் நானும் சும்மா இருப்பேன் என்று சொல்வதேன்?]

  ஸ்ருஷ்டி என்பது தோற்றமில்லா நிலையிலிருந்து தோற்றமுள்ள நிலையை அடைவது தான் – ஸ்ரிஷ்டித்தது மாயையை தான்

  இது மாதிரி ஏக்க சக்க தரவை சொல்லப்படுகிறது –

  evolution – என்பதும் காலவதி ஆகிவிட்ட ஒரு கருத்தே – நமது ஹிந்து மதம் கூறும் பிரபஞ்சவியல் evolution அல்ல, creation அல்ல – சாஸ்வதம் (stable state)

 7. ஒரு மதத்திற்கு மத நம்பிக்கைக்கு அறிவியலின் உண்மையின் முன் நிற்கும் சக்தி இல்லையென்றால் அது அழிந்து போவதே நல்லது. எவ்வளவு வேகமாக அது அழிந்து போகிறதோ அவ்வளவுக்கு மானுடத்துக்கு நல்லது. ஏனென்றால் அத்தகைய மதநம்பிக்கை எப்போதுமே அறிவற்ற மூடநம்பிக்கையாகவே இருந்திருக்கிறது. – சுவாமி விவேகானந்தர்

 8. //evolution – என்பதும் காலவதி ஆகிவிட்ட ஒரு கருத்தே//
  இல்லை. அதுவே மிக அழகானதும் மிக உண்மையானதுமான அறிவியல்.
  சிவனின் நடனத்தின் ஒரு அசைவு அது.

 9. evolution காலாவதியானது என்று சொன்னது குரங்கில் இருந்து (மட்டும்) தான் மனிதன் என்பது போன்ற எண்ணங்களை – இதை ஒத்துக்கொண்டுவிட்டால் வேத வாக்கியங்கள் நேராக அடிபடும் – குரங்கு மனிதானாக மாறி இருந்தால் அது இன்றைக்கும் நடந்து கொண்டே இருக்க வேண்டும் – adaptation என்பது சாத்தியம் ஆனால் ஒன்றி இருந்து தான் மற்றொன்று வந்தது என்றவை நிருபிக்கப்படாதவை – வெறும் theory ஆகவே இருந்து அடிபட்டவை என்பது என் எண்ணம்

 10. சரங் அவர்களே
  எந்த வேத வாக்கியம் நேராக அடிபடும்?

 11. ரங்கசாமி அவர்களே

  தோயென ஜீவான் வ்யசசர்ஜ பூம்யாம் – இங்கு ஜீவன் எனது மனிதரை குறிப்பதே

 12. ஜீவன் என்றால் உயிர் என்றுதானே பொருள்? பூம்யாம் என்றால் பூமி தானே? என்ன பிரச்னை?

 13. திரு.ஆர்.கோபால் அவர்களே!
  நான் எழுதிய முதல் மறுமொழியில் 2 விஷயங்களை பற்றி கூறியிருந்தேன்.
  (1)இந்து மத புத்தகங்களில் சிருஷ்டி (2) அறிவியல் செல்லும் நிலை

  எனக்கு மறுமொழி கூறிய நீங்களும் மற்றவர்களும் 2வது விஷயத்தை பற்றி
  எதுவும் கூறவில்லை.

  இந்த என் மறுமொழி உங்கள் கட்டுரையின் கருவிலிருந்து வெளியே
  இருந்தாலும் இது முக்கிய விஷயம் என்று நான் கருதுவதால் இதை
  எழுதுகிறேன்.

  சிருஷ்டி விவகாரத்தை விட்டு விடுவோம். அறிவியல் செல்லும் திசையை
  பற்றி நான் கூறியதற்கு ஒரு ஆதாரமாக நேற்று ஒரு கண்டுபிடிப்பை
  அமேரிக்க விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள். Synthetic life (Bacteria)
  செயற்கை உயிர் ஒன்றை உருவாக்கியிருப்பதாக “Science” இதழில் செய்தி
  வந்துள்ளது. இதன்படி ஒரு பாக்டிரியாவின் DNAவை எடுத்து விட்டு,
  4 ரஸாயன பொருட்கள் மற்றும் கனினியின் உதவியை கொண்டு செயற்கை
  DNAவை உருவாக்கி அதை பாக்டீரியாவில் செலுத்தியுள்ளார்கள். பிறகு
  அந்த பாக்டீரியா புதியதாக செலுத்தப்பட்ட DNAவின்படி வாழ
  ஆரம்பித்திருக்கிறது.

  சரி, இப்பொழுது 2 விதமான விமர்சனங்கள். ஒன்று அப்பட்டமான
  பழமை வாதிகளினால் கூறப்படுவது. உயிரை உருவாக்குவது கடவுளை
  போன்றது. இது மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடும்.

  2வது வகை விமர்சனம்-மிதவாதி விஞ்ஞானிகளால் கூறப்பட்டுள்ளது.
  பாதுகாப்பு மற்றும் மனிதகுலத்திற்கு ஆபத்து ஏற்படாவண்ணம் இந்த
  ஆராய்ச்சியும் உயிர் உருவாக்குதலும் நடத்தப்பட வேண்டும். மேலும்
  இந்த அறிவியல் தீவிரவாதிகளுக்கு கிடைத்தால் நோய் உருவாக்கும்
  பாக்டீரியாக்களை வேண்டுமென்றே உருவாக்கி சில நாடுகளை அழிக்க
  முனைவார்கள்.

  இதற்கு பதில் கூறும் இந்த விஞ்ஞானகூடத்தின் தலைவர், எப்பொழுதெல்லாம் உயிரியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள்
  ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் இது போன்ற விமர்சனங்கள்
  வைக்கப்படுகின்றன.
  அவரின் முதல் விமர்சனத்திற்கு பதில்:
  மனிதன் விவசாயத்திற்காக செடி, கொடிகளின் வளர்ச்சியை கட்டுபடுத்த
  ஆரம்பித்ததும் கடவுளை போன்றதுதான். விலங்குகளை Domesticate
  செய்ததும் கடவுளை போன்றதுதான். (கட்டுப்படுத்துவதும், உருவாக்குவதும்
  ஒன்று என்று இவர் கூறுகிறார்).

  அவர் இந்த விஞ்ஞானத்தின் சாதகங்களை பட்டியலிடுகிறார்.
  (1)மருந்து தயாரிப்பில் இந்த பாக்டீரியா பெரிய அளவில் உதவும்.
  (நோய் இல்லாத மனிதனே இந்த காலத்தில் இல்லாததால் இந்த
  ஆராய்ச்சிக்கு பெரிய அளவில் ஆதரவு பெருகும்.)
  (2)எரிபொருட்கள் தயாரிப்பில் இந்த செயற்கை பாக்டீரியா உதவும்.
  (இதற்கும் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகும்)
  (3)அடுத்து MasterStroke. நேற்று பிறந்த குழந்தைகள் வரை Global
  Warmingஐ பற்றி பேசாதவர்களே இல்லை. இந்த பாக்டீரியாவை Carbonனின் அளவை குறைக்க பயன்படுத்த முடியும்.

  சரி. இதில் என்னை போன்றவர்களின் பயம் என்ன?
  கொஞ்சம் பின்னோக்கி செல்லலாம்.
  விஞ்ஞானிகள் செயற்கை முறையில் கருத்தரிப்பை (IVF) உருவாக்கியவுடன்
  குழந்தை இல்லாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இந்த கண்டுபிடிப்பு
  முன்னிலை படுத்தப்பட்டது.
  1ம் நிலை-இயற்கை முறையில் கருத்தரிக்க முடியாதவர்களில் கணவன் மற்றும் மனைவியின் உயிரணுக்களை செயற்கையாக கருத்தரித்து பின் மனைவியின் கர்ப்பப்பைக்குள் செலுத்தி குழந்தையை பிறக்க வைத்தார்கள்
  2ம் நிலை-இன்று பல ஆண்களுக்கு விந்துவின் அளவு குறைந்திருக்கும்
  குறை உள்ளதால் வேறு ஒரு ஆணின் விந்துவையும் (Sperm Bank)
  மனைவியின் உயிரணுவையும் செயற்கையாக கருத்தரித்து மனைவியின்
  கர்ப்பப்பைக்குள் செலுத்தி குழந்தை பிறந்தது. மனைவியின் உயிரணு
  இருப்பதாலும் மனைவியின் கர்ப்பப்பையின் மூலமே குழந்தை பிறப்பதாலும்
  இதில் தவறில்லை என்று கூறப்பட்டது.
  3ம் நிலை-மனைவியால் கருத்தரிக்க இயலவில்லையானால் கணவனின்
  விந்துவையும் வேறு ஒரு பெண்ணின் கருமுட்டையையும் செயற்கையாக
  கருத்தரித்து வாடகைத்தாயின் கர்ப்பப்பைக்குள் செலுத்தி குழந்தை பிறந்தது.
  கணவனின் விந்து காரணமாக உள்ளதால் இதில் தவறில்லை என்று காரணம் கூறப்பட்டது.

  IVFலிருந்து அனுபவங்கள்.
  (1)அமேரிக்காவில் ஒரு விஞ்ஞான கூடத்தில் கணவனின் விந்துவை
  உபயோக படுத்தாமல் வேறு ஒரு ஆணின் விந்துவை உபயோகித்து கருவை
  உருவாக்கி மனைவியின் கர்ப்பப்பைக்குள் செலுத்தி குழந்தை
  பிறந்துள்ளது.
  (2)அமேரிக்காவில் ஒரு விஞ்ஞான கூடத்தில் விந்து பாட்டில்களில்
  பெயர் எழுதுவதில் Labels குளருபடி ஏற்பட்டு ஒருவரின் பெயர் வேறு
  ஒருவரின் விந்து பாட்டிலில் எழுதப்பட்டுள்ளது. அந்த கூடத்தின் அனைத்து
  விந்து பாட்டில்களும் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.
  (3)சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்மணி வேண்டுமென்றே IVF மூலமாக
  8 கருக்களை செயற்கையாக உருவாக்கி தன் கர்ப்பப்பைக்குள் செலுத்தி
  8 குழந்தைகளை பெற்றார் (Octoplets). அந்த பெண்மணிக்கு பெரிய
  அளவில் தொலைக்காட்சிகளில் புகழ் கிடைக்கிறது.
  (4)ஒரு வாடகைத்தாய் குழந்தை பிறந்தவுடன் தன்னால் குழந்தையை விட்டு
  பிரிய முடியாது என்றும் பிறந்த குழந்தை தன்னுடையதே என்றும்
  சொந்தம் கொண்டாடுகிறார்.

  அறிவியலை உபயோகப்படுத்துவதில்தான் பிரச்சினை என்று நீங்கள்
  முடிவெடுத்தால் இன்றுள்ள அறிவியலாளர்களின் தரத்தை கவனியுங்கள்.

  (1)பாகிஸ்தானின் A.Q.Khanஐ பற்றி நான் கூற வேண்டியதில்லை.
  ஒரு மோசமான அணு விஞ்ஞானி மோசமான நாட்டில் இருந்தால் என்ன
  நடக்கும் என்பதை உலகம் கவனித்தது.
  (2)இமயமலையின் பனிமுகடுகளை (Himalayan Glaciers) ஆராய்ந்த
  ஐக்கிய நாடுகளின் IPCC குழுவின் அறிக்கையை பற்றி நமக்கு தெரியும்.
  2350ம் வருடம் இமயத்தின் பனிமுகடுகள் அழியும் என்பதற்கு பதிலாக
  2035 என்று தவறுதலாக அச்சடிக்க பட்டு விட்டதாம். இந்த முடிவை
  இந்திய அரசு ஏற்று கொண்டு விட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்.
  இமயத்திலிருந்து உருவாகும் ஆறுகளின் கதி என்ன? எந்த விதமான
  பொறுப்புணர்வும் இல்லாமல் ஒரு குழு அறிக்கை வெளியிடுகிறது.
  இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது-இந்த IPCC குழுவில் இருந்த Professor.Murari Lal BBCக்கு கொடுத்த பேட்டியில் தாங்கள் வேண்டுமென்றே தவறான தகவலை தெரிந்தே வெளியிட்டோம் என்று
  கூறியுள்ளார். அரசியல் காரணங்களுக்காகவே இந்த தவறான தகவலை
  தந்தோம் என்று வெளிப்படையாக கூறினார். ஐக்கிய நாடுகளின்
  அதிகாரபூர்வ குழுவுக்கே இந்த நிலையென்றால் தனியார்களின்
  ஆராய்ச்சி கூடத்தை பற்றி நான் கூற வேண்டியதில்லை.

  சரி. என் மறுமொழியில் Aldous Huxleyன் Brave New Worldஐ பற்றி
  கூறியிருந்தேன். Aldous Huxleyன் தனிப்பட்ட கொள்கைகளை பற்றி
  நான் கூறவில்லை. Brave New World புத்தகத்தில் மெஷின்களைப்
  போன்று மனித சிசுக்கள் உருவாகும். மனித குலத்தின் ஆதாரங்களான
  அன்பு, காதல், சோகம் போன்றவைகள் இல்லாத வெறுமையான மனித
  குலம் உருவாகும். அதை பெரும்பான்மையானவர்கள் சரி என்றுதான்
  கூறுவார்கள்.

  இதை போன்றே Embryonic Stem Cells Researchம் இந்த பாதைக்கு
  நம்மை இட்டு செல்கிறது என்றே நான் எண்ணுகிறேன். இன்றைய
  நிலையில் உலகில் கிட்டத்தட்ட 40 நாடுகள் (அமேரிக்காவையும் சேர்த்து)
  மனித Cloningஐ தடை செய்துள்ளன.ஆனால் காலம் செல்ல செல்ல
  இந்நிலை என்னவாகும் என்பது தெரியவில்லை.

  அறிவியலை தடுப்பது தவறுதான் என்பது கலிலியோவின் வரலாறிலிருந்து
  நமக்கு தெரிகிறது.

  ஆனால், இன்றுள்ள விஞ்ஞானிகளை எவ்விதமான Regulationம்
  இல்லாமல் தறிகெட்டு அலைய விட்டால் நம் மனித குலத்தை இன்னும்
  சில சகாப்தங்களில் முடிவுக்கு கொண்டு வந்து விடுவார்கள்.

  இன்றுள்ள அறிவியலாளர்கள் இன்னும் இரண்டு விஷயங்களில்
  முன்னேற்றம் காணவில்லை.

  ஒன்று-செயற்கையான கர்ப்பப்பையை உருவாக்க வில்லை. இது
  கண்டுபிடிக்க பட்டுவிட்டால் பெண்ணின் தேவை இல்லாமல் போகும்.
  ஆண், பெண் உயிரணுக்களை செயற்கை முறையில் உருவாக்கி செயற்கை
  கர்ப்பப்பையில் செலுத்தி குழந்தை உருவாக்கி விட்டால்-
  நோய் இல்லாத சமுதாயம் இதனால் உருவாகும் என்பதால் பெரும்பான்மை
  ஆட்டு மந்தை மக்கள் அதை ஆதரிப்பார்கள்.

  இரண்டு-மூளை மாற்று அறுவை சிகிச்சை-ஒரு உடலிலிருந்து இன்னொரு
  உடலுக்கு மூளையை மாற்றுவதில் வெற்றி கண்டுவிட்டால் புத்திசாலி
  மக்கள் உருவாவார்கள் என்பதால் இதையும் ஆட்டு மந்தை மக்கள்
  ஆதரிப்பார்கள்.

  உடனடியாக இது நடக்க போவதில்லை என்றாலும்- நம் பயணம் அதை
  நோக்கியே இருக்கிறது என்பதுதான் என் கருத்து.

  அதனால்தான் எப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் அமேரிக்க குடியரசு கட்சியின்
  மீது இருந்தாலும் அது ஆட்சியில் இருக்க வேண்டும் என்றே நான்
  கருதுகிறேன். “பைபிலின் படி” இருந்தால் என்ன? எப்படி இருந்தால் என்ன?
  அறிவியலை தடுக்காமல் “கட்டுபடுத்துவது” மிக மிக முக்கிய விஷயம்
  என்றே நான் நம்புகிறேன்.

  வியாதிகள் குணமாகும்;சுற்றுச்சூழல் சீரடையும்;புத்திசாலிகளை
  உருவாக்கலாம்;உணவு பஞ்சம் தீரும் என்றெல்லாம் வாக்குறுதிகள்
  வரும்போது ஆட்டு மந்தைகளை போன்ற பெரும்பான்மை மக்கள் தங்கள்
  சந்ததிகளை பற்றி கவலையே இல்லாமல் இவற்றை ஆதரிக்கத்தான்
  செய்வார்கள்.

 14. அன்புள்ள ஆர். பாலாஜி

  பரிணாமவியலின் மூலம் கண்டறிந்துள்ள உண்மைகளால்தான் நம்மால் தற்போது ஏராளமான நோய்களுக்கு மருந்து காணமுடிகிறது. பலவகைப்பட்ட கான்சருக்கும், இன்னும் மரபணு ரீதியாகவே பெறும் பல நோய்களுக்கும் இந்த மரபணு முறையில் அமைந்த பரிணாமவியல் மருந்துக்கான சாத்தியங்களை அளித்துள்ளது.

  மரபணுவை ஒத்துக்கொள்வேன், ஆனால், பரிணாமவியலை ஒத்துக்கொள்ளமாட்டேன் என்று ஆபிரஹாமிய மத அடிப்படைவாதிகள் உளறுகிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால், வெளி மூலம், காந்த அலைவரிசைகளை அனுப்பி இன்னொரு இடத்தில் படம் காட்டுவது சாத்தியமே அல்ல என்று சொல்லிக்கொண்டே, டெலிவிஷன் மூலம் பிரச்சாரம் செய்வதைப்போன்றது அது.


  உங்களது இரண்டாவது கேள்விக்கு வருகிறேன். டெலிவிஷனுக்கான சாத்தியம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதும் டெலிவிஷனை எப்படி உபயோகப்ப்டுத்துகிறோம் என்பதும் இரண்டு வேறான விஷயங்கள்.

  டெலிவிஷனே கூடாது என்று மத அடிப்படைவாதிகள் கூறலாம். நாமோ டெலிவிஷனை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்தலாம் என்று அதனை கட்டுப்படுத்தலாம். இதுதான் நாம் செய்யக்கூடியது.

  டெலிவிஷனை இப்படி மோசமாக உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். ஆகவே டெலிவிஷனே கூடாது என்று சொல்வதும் தவறுதானே? அதனைத்தான் மத அடிப்படை வாதிகள் கூறுகிறார்கள்.

  டெலிவிஷன் மோசமாக உபயோகப்படுத்தப்பட்டிருந்தால், அதிலிருந்து பாடங்களை கற்றுகொண்டு அதனை செம்மை படுத்துவது போல மரபணு சோதனைகளில் நடக்கும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுகொண்டு அத்னை குறைக்கவும், செம்மைப்படுத்தவும் முயல்வோம்.

  அமெரிக்க குடியரசு கட்சியினரது மோசமான திட்டங்களால், Stem cell ஆராய்ச்சி சுமார் 14 வருடம் பின் தங்கியது என்று சொல்கிறார்கள். அது போனற அறிவியல் பின்னடைவை நாம் ஆதரிக்க வேண்டாம்.

 15. திரு.ஆர்.கோபால் அவர்களே!

  என் பதில்கள் கொஞ்சம் பெரியதாக மாறி விடுகிறது. பொறுத்து கொள்ளவும்.
  “அமெரிக்க குடியரசு கட்சியினரது மோசமான திட்டங்களால், Stem cell ஆராய்ச்சி சுமார் 14 வருடம் பின் தங்கியது என்று சொல்கிறார்கள். அது போனற அறிவியல் பின்னடைவை நாம் ஆதரிக்க வேண்டாம்.”
  என்று கூறியுள்ளீர்கள்.
  இது பாதி சரி, பாதி தவறு.
  அமேரிக்க குடியரசு கட்சி Embryonic Stem Cell ஆராய்ச்சியை எதிர்க்கிறது.
  ஆனால் Adult Stem Cell ஆராய்ச்சி மற்றும் மருத்துவ உபயோகத்தை
  முழுவதுமாக ஆதரிக்கிறது.

  இன்றுவரை Adult Stem Cell மூலமாகவே மருத்துவ துறையில் நோய்கள்
  தீர்க்க படுகின்றன. இதை எதிர்ப்பவர் யாருமே கிடையாது.
  ஆனால் Embryonic Stem Cell ஆராய்ச்சி அளவில்தான் உள்ளது.

  நீங்கள் இதைப்பற்றி அறிந்தவரா என்று தெரியவில்லை. முன்னரே
  தெரிந்தால் Repetitionஆக இருக்கும். பொறுத்து கொள்ளவும்.

  நம் உடலில் Adult Stem Cell மற்றும் Embryonic Stem Cell என்று இரு
  விதமான செல்கள் உற்பத்தியாகின்றன. சுருக்கமாக சொன்னால்
  வளர்ந்தவுடன் நம் உடலில் Adult Stem Cell மட்டும்தான் இருக்கும். நம்
  உடலில் காயங்கள் ஏற்படும்போது அது ஆறுவதெல்லாம் இதன் வேலைதான். ஆனால் ஒருவரின் கையோ, காலோ வெட்டுப்பட்டு விட்டால்
  அது மீண்டும் வளர்வதில்லை. இதற்கு காரணம் ஒரு கை வளர்ந்து
  நுனியில் 5 விரல்களாக மாறவேண்டும் என்பதெல்லாம் Adult Stem Cellக்கு
  தெரியாது. ஆனால் குழந்தை வளரும்போது Embryonic Stem Cell
  இருப்பதால் இது நடக்கிறது. Embryonic Stem Cellலிருந்துதான் Adult
  Stem Cell உருவாகிறது.

  சரி, Embryonic Stem Cellஐ உருவாக்க Embryo அல்லது சிசுவை
  உருவாக்க வேண்டும். மருத்துவத்தின்படி, ஆண் மற்றும் பெண் அணுக்களை
  சேர்த்து சிசு உருவாகி ஐந்தாம் நாள் (Blastocyst) இந்த செல்கள்
  உருவாகின்றன. ஆராய்ச்சியாளர்கள் Embryonic Stem Cell களை பிரித்து
  எடுத்தவுடன் அந்த சிசுவை குப்பையில் போட்டு விடுவார்கள். அதனால்
  வளர முடியாது.

  சரி, என்னை போன்றவர்களுக்கு என்ன பிரச்சினை. ஆப்பிரகாமிய
  சிந்தனைகளை விட்டு விடுவோம். பைபிலை விட்டு விடுவோம். இந்து
  மதத்தையும் விட்டு விடுவோம். ஏன் எல்லா மதங்களையும் விட்டு
  விடுவோம். Moral or Ethics என்ற வட்டத்துக்குள் மட்டும் இதை
  அலசலாம்.

  முதலில் நாம் சிசு என்றால் எது என்பதை முடிவு செய்ய வேண்டும்.
  விந்துவும், பெண்ணின் கரு முட்டையும் பெண்ணுடலில் சேர்ந்தவுடனேயே
  அது சிசு என்பது என்னை போன்ற பழமை வாதிகளின் கருத்து. அந்த
  சிசுவை வளர விட்டால், அது குழந்தையாக இந்த பூமிக்கு வரும்.

  ஆனால் Liberals அந்த செல் கட்டமைப்புக்கு வலி தெரியாது. ஆகவே
  அதை அழிப்பதில் தவறில்லை. அது சிசுவே கிடையாது என்பது அவர்கள்
  கருத்து.

  இங்கு இதை விட்டு Abortionக்கு செல்வோம். அமேரிக்காவில் 1973ம்
  ஆண்டு கருக்கலைப்பை பற்றின ஒரு வழக்கில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம்
  ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. கர்ப்பத்தை 3 பகுதிகளாக பிரித்தது-

  கரு உருவாகி முதல் 3 மாதங்கள் வரை ஒவ்வொரு பெண்ணுக்கும்
  கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி வழங்கியது.

  3 முதல் 6 மாதங்கள் வரை, கர்ப்பவதியும் அரசாங்கமும் சேர்ந்து
  முடிவெடுத்து கருக்கலைப்பு செய்யலாம். நடைமுறையில் ஒரு மருத்துவமனை அந்த கர்ப்பவதிக்கு 3 முதல் 6 மாதங்கள் வரை இருக்கும்
  ஒரு சிசுவுக்கு கை கால்கள் மற்றும் அங்கங்கள் வளர ஆரம்பித்து விட்டதை
  கூறும். அதை புரிந்து கொண்டு பரவாயில்லை என்று ஏற்று கொண்டால்
  கருக்கலைப்பு செய்கிறார்கள்.

  6 முதல் 9 மாதங்கள் வரை, முடிவு அரசாங்கத்தினுடையது மட்டுமே.
  பெண்ணின் உயிருக்கு ஆபத்தாக இருக்கும் பட்சத்தில் கருக்கலைப்பு
  செய்யப்படுகிறது.

  1973க்கு பிறகு இலட்சக்கணக்கில் கருக்கலைப்புகள் அமேரிக்காவில்
  நடக்கின்றன. “Teenage Pregnancy” என்பதை பற்றி தனியாக கட்டுரையே
  எழுதலாம்.

  சரி, இந்த கருக்கலைப்புகளை ஆதரிக்கும் Liberals 6 மாதங்கள்
  வரை உள்ள சிசுவை கலைத்தால் அதற்கு உண்டாகும் வலியை பற்றி
  கூறுவதில்லை. ஆனால் Embryonic Stem Cellஐ பிரித்து எடுத்தவுடன்
  அந்த சிசுவுக்கு வலி இருக்காது என்பதை மட்டும் கூறுவார்கள்.

  இவ்வளவையும் நான் ஏன் எழுதினேன்? Communist or Liberal mediaஆக
  இருந்தால் என்ன எழுதியும் பிரயோஜனம் இருக்காது. உங்களை
  போன்றவர்கள் விவரம் அறிந்த வட்டாரத்தில் உள்ளதால் தயவு செய்து
  நாம் நம் சந்ததியினருக்கு எவ்வகையான “Values”ஐ விட்டு செல்ல போகிறோம் என்பதை முடிவு செய்து பின் ஆதரியுங்கள் என்பதுதான் என்
  வேண்டுகோள்.

  Adult Stem Cellஐ கொண்டே மருத்துவ உபயோகங்களை பூர்த்தி செய்து
  கொள்ள முடியும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் முயற்சிக்கிறார்கள்.இதை
  அமேரிக்க குடியரசு கட்சி, ஏன் Vaticanம் முழுமையாக ஆதரிக்கிறது.

  கருக்கலைப்பை நீங்கள் ஆதரிப்பவரா என்பது தெரியவில்லை. அப்படி
  ஆதரிப்பவராக இருந்தால் Embryonic Stem Cell Researchஐ நீங்கள்
  முழு மூச்சுடன் ஆதரிப்பீர்கள்.

  ஐந்து அறிவுள்ள ஒரு பசுவையே கொல்லக்கூடாது என்பது நம்
  கலாச்சாரத்தில் வந்துள்ளது. ஒரு மனித சிசுவை கொல்லுவது அதுவும்
  என் வசதிக்காக, குழந்தை பிறந்தால் தொந்தரவு என்பதற்காக, கருத்தடை
  முறைகள் இருந்தும் பயன்படுத்தாமல் கருக்கலைப்பு செய்வது
  போன்றவைகளை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.

  “மனித உயிர் விலை மதிப்பில்லாதது” என்பது என்னை போன்றவர்களின்
  கருத்து. நாங்கள் வாழும் வரை எங்களால் முடிந்த வரை எதிர்த்து
  கொண்டிருப்போம். ஆனால் நாங்கள் தோற்று போக வாய்ப்பு மிகவும்
  பிரகாசமாக இருக்கிறது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரிகிறது.

 16. நன்றி பாலாஜி

  கன்சர்வேடிவ் கட்சியின் நிலைப்பாடு மோசமானது. ஏனெனில் கருக்கலைப்புகள் நடக்கின்றன. கருக்கலைப்பு நடக்கவில்லை என்றால், embryonic stem cell ஆராய்ச்சி தடை செய்யப்படுவதில் அர்த்தமுண்டு. கருக்கலைப்பை தடை செய்யாமல், கருக்கலைப்புகள் மூலம் கிடைக்கக்கூடிய stem cellகளை ஆராய்ச்சிக்கு பயன்படுத்தக்கூடாது என்று சொல்வது சரியானதல்ல.
  கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக தடை செய்திருந்தால் நீங்கள் சொல்வது சரியானது.
  embronic stem cell lines என்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ளவற்றை அனுமதித்தார்கள். அதனை வைத்தே பல ஆராய்ச்சிகள் நடந்தன.

  கருக்கலைப்பை ஒட்டுமொத்தமாக தடை செய்யவேண்டும் என்று கூறுவது சரியல்ல. பல சிசுக்கள் பல மரபணு கோளாறுகளுடன் பிறந்து கஷ்டப்படுவதை விட கருகலைப்பே சரியானது என்று மருத்துவர்களே கூறுகிறார்கள்.

 17. // மரபணு கோளாறுகளுடன் பிறந்து கஷ்டப்படுவதை விட //

  மரபணு கோளாறுக்கு யார் காரணம் என்பதிலேயே இறைவனின் மகத்துவம் இருக்கிறது; மனிதனின் அறிவை அவர் பைத்தியமாக்குவார்;

  பறவையிலிருந்து பறவை வந்தால் அது எப்படி பரிணாமமாக இருக்கும்; அடிப்படையில்லாத ஒரு வெற்று கட்டுரைக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா?

  பரிணாமம் என்பது ஒரு இனம் வேறொரு மேம்பட்ட இனமாக வெளிப்படுவதுதானே..?

 18. சில்சாம்,

  // பறவையிலிருந்து பறவை வந்தால் அது எப்படி பரிணாமமாக இருக்கும்; அடிப்படையில்லாத ஒரு வெற்று கட்டுரைக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா?

  பரிணாமம் என்பது ஒரு இனம் வேறொரு மேம்பட்ட இனமாக வெளிப்படுவதுதானே..? //

  இத்தளத்தில் எம்மாதிரியான கட்டுரைகளைப் பதிப்பிக்க வேண்டும், எம்மாதிரி கட்டுரைகளைப் பதிப்பிக்கக் கூடாது என்னும் விஷயத்தில் சனாதன தருமத்தைக் குலைக்கவந்த மதத்தைச் சார்ந்த நீங்கள் தலையிடத் தேவையில்லை.

  ஹிந்துக்களாகிய நாங்கள் விஷயங்களைத் தர்க்கரீதியில் விவாதிப்போம், ஒரு சிலர் மாறுபடுவோம், ஒருசிலர் முன்வைப்பதற்குத் தகுந்த முறையில் கண்டனம் தெரிவிப்போம். இருப்பினும் கைகுலுக்கி நண்பர்களாகவே இருப்போம். இதில் நீங்கள் தலையிடுவது, “ஆடு நனைகிறதே” என்று ஓநாய் கண்ணீர்விட்ட கதைக்கு சமமாகும்.

  சமயநூல் கூறுவதற்கு உடன்படாத அல்லது உடன்படாததுபோல் தோன்றும் ஒரு ஆராய்ச்சி முடிவை ஒருவர் முன்வைத்தால், அவரை “heretic”, “heathen”, “pagan”, “animist”, “atheist” என்று தூஷித்து அவரை சாம்பலாக சுட்டுத் திருப்தியடைந்த காட்டுமிராண்டி மதத்தில் இருப்போருக்கு இம்மனப்பான்மையும், unity in diversity-யும் புரியவே புரியாது.

  இந்த மறுமொழியைப் படித்து, இதில் நான் கூறியவை அனைத்தும் உண்மையே என்ற வயத்தெரிச்சலால், அந்த எரிச்சல் தணிய உங்கள் திருப்திக்கு ஹிந்து கலாச்சாரத்தையும், ஹிந்து தெய்வங்களையும், இந்திய நாட்டின் வரலாற்றையும் வாய்க்கு வந்தபடி த்வேஷித்து தூஷித்து எழுதுவீர்கள் என்று நினைக்கிறேன். தாராளமாகச் செய்யுங்கள். உங்கள் எரிச்சலைக் கண்டு இங்கு அனைவரும் ஆனந்தமடைவர்.

  டாடா பைபை

 19. சில்லிசாம்

  பரிணாமம் என்பது மாறுதல் அடைவதை குறிப்பது – கொஞ்சம் மாறுதல் அடைவது ரெம்ப மாறுதல் அடைவதும் மாறுதல்களே – சிறு மாறுதல்களே பெரிய மாறுதல்களாக ஆக முடியும்

  ஒரு லிட்டர் வென்னீர தண்ணீர்ல வெச்சா அது டபக்குன்னு சூடு குறையாது – heat exchange process முடிஞ்சு room temperature வந்தாதான் சூடு குறையும் – நீங்க கடைசியா தொட்டு பார்த்துட்டு வெந்நீர் தண்ணீர மாறினாதான் அது பரிணாமம் – நடுவுல இருக்கறது வேற எதோ நாமம் எல்லாமே நடக்கறது ஒரே தேவனின் நாமத்தால் என்றால் நீங்கள் கட்டாயமாக மறுபடியும் சில புஸ்தகங்களை வாசிக்க வேண்டும்

  மனிதன் மன்னாகிறான் – இதொண்ணும் டபக்குன்னு நடப்பதில்லை, மனிதனும் மண்ணும் வேறு (உங்களை பொருத்தமட்டில்) – மனிதன் பிறந்து ஒரு என்பது நூறு பர்யந்தம் வாழ்ந்து இறந்து மன்னாகிறான் – இந்த மாறுதல் மெல்ல நடப்பதே

  குரங்கு மனிதனாக ஆகி இருந்தால் அது திடுதுப்புன்னு ஆகி இருக்காது – அப்படி ஆக தான் கடவுள் அருள் வேண்டும் – மாறாக கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பத்து இருவதாயிரம் வருஷம் எடுத்துக் கொண்டு குரங்கின் சந்ததிகள் மனிதனாக மாறி இருக்கலாம் (நான் டார்வினை முழுவது ஒத்துக் கொள்வதில்லை என்பது வேறு ஒரு புறம் )

  ஒரு முழு குரங்கு முழு மனிதானாக மாறுவதற்கு இடைப்பட்ட காலத்தில் அது என்னவாக இருந்திருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக குரங்கு தன்மையை இழந்திருக்கும் அப்புறம் மனிதான்யிருக்கும்

  நிற்க, இது ஒரு சுழர்ச்சியே. அப்போ மனிதன் எப்போ குரங்கா மாற தொடங்கினான் என்கிறீர்களா சுமார் ஒரு ஆயிரத்து முன்னூறு – இரண்டாயிரம் வருடங்கள் முன்பாக – ஆரம்பிச்சாச்சு இன்னும் முழு குரங்கா மாறல அதனால தான் சிலருக்கு விஷயம் புரிய மாட்டேன்னுது – தமிழ் ஹிண்டு படிச்சு கிட்டே ஒரு வேலை இருந்தா புரியலாம் – புரிஞ்சா இந்த மாறுதலா தடுக்க முடியலாம்

 20. நான் நாத்திகன், on April25, 2011 at 12:02 மாலை said:
  “ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக”
  ————————————————————————————————————————-

  09:39. He will replace you with another people/species* ,
  21:11. We established after them a different people/species*,
  23:31.Then We raised after them a different genera** / tion.
  23:42.Then We raised after them different genera** / tions.
  Species*
  In biology, a species is one of the basic units of biological classification and a taxonomic rank. A species is often defined as a group of organisms capable of interbreeding and producing fertile offspring. While in many cases this definition is adequate, more precise or differing measures are often used, such as similarity of DNA, morphology or ecological niche. Presence of specific locally adapted traits may further subdivide species into subspecies.
  Genera**
  In biology, a genus (plural: genera) is a low-level taxonomic rank used in the classification of living and fossil organisms, which is an example of definition by genus and differentia. The term comes from Latin genus “descent, family, type, gender”,[1] cognate with Greek: γένος – genos, “race, stock, kin”.[2]

  quranist@aol.com

 21. //குரங்கு மனிதனாக ஆகி இருந்தால் அது திடுதுப்புன்னு ஆகி இருக்காது – அப்படி ஆக தான் கடவுள் அருள் வேண்டும் – மாறாக கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பத்து இருவதாயிரம் வருஷம் எடுத்துக் கொண்டு குரங்கின் சந்ததிகள் மனிதனாக மாறி இருக்கலாம் (நான் டார்வினை முழுவது ஒத்துக் கொள்வதில்லை என்பது வேறு ஒரு புறம் )//

  பரிணாமவியலை தூக்கிப் பிடிப்பதற்காக அதன் ஆராய்ச்சியாளர்கள் எத்தகைய மோசடிகளிலும் ஈடுபடுவர் என்பதற்கு இந்த பதிவு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. ஒரு இனம் மற்றொரு இனமாக பரிணமித்ததற்கு இது வரை எந்த இடைப்பட்ட இனத்தையும் இதனை ஆதரிக்கும் அறிவியலார் சமர்ப்பிக்கவில்லை. அப்படி சமர்ப்பித்த ஒரு படிமம் எந்த அளவு இட்டுக்ட்டப்பட்டது என்பதை இங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

  https://suvanappiriyan.blogspot.com/2012/10/blog-post_18.html

 22. சூவனப்ரியன்

  களிமன்னிளிறேது மனிதன் பிறந்தான் என்பதற்கு எந்த ஆதாரம் நீங்கள் சமர்பிக்கிரர்கள் ?

  பரிணாமவியல் தப்பு என்று இன்றைக்கு முட்டாள் மட்டும் தான் சொல்லுவான். டார்வின் சொன்ன பரிணாமவியல் சரியா தவறா என்பது தான் படிமங்கள் இல்லாமல் போனதால் சிரமம் உண்டானது, அவர் சொன்னது ஒவ்வொரு ஜன்டுவும் ரொம்ப மெல்ல, ரொம்ப ரொம்ப மெல்ல மற்றொரு ஜந்துவானது என்று. இன்று அப்படி இல்லை இரண்டு விதமான பரிணாமங்கள் நடக்கின்றன ஒன்று டார்வின் சொன்னபடி இன்னொன்று conciousness based – இரண்டாம் வகை திடு திடுப்புன்னு நடக்கிறது என்று micro bioologist குழுக்கள் ஒத்துக் கொண்டுள்ளன.

  பரிணாமவியல் சரி என்பதற்கு படிமங்கள் தவிர நேரடி ஆதாரங்கள், சோதனை ஆய்வு முடிவுகள் ஆயிரக் கனனக்காக உள்ளன.

  குன் என்றால் எல்லா உருவாகும். நாமெல்லாம் களிமண்ணால் பிடித்து செய்யப்பட்டவர்கள் என்பதற்கு சோதனை மூலம் முடிவுகள் தாருமே?

  பல பல பில்லியன் ஜீவராசிகள் ஒரு க்ஷணத்தில் பிறந்து இறக்கின்றன. இதை அனைத்தையும் அல்லா தான் குர்ஆனில் சொன்னபடி குன் குன் என்று சொல்லிக்கொண்டே செய்கிறாரா. எவ்வளவு தான் சக்தி இருந்தால் இப்படி குன் குன் என்று சொல்லிக்கிட்டு இருக்கறது வெட்டி வேலையாதானே இருக்கும்.

  ஒரு புத்திசாலி கடவுள் ஏன்னா செய்வார், தான் முதலில் ஒரு templat டை செய்து விட்டு, அதன் படி ஜீவராசிகள் தோன்றட்டும் என்று சங்கல்பம் மட்டுமே செய்வார். அதற்க்கு மேல் உயிர் தோன்றலும் மதித்தாலும் தானாகத்தான் நடக்கும்.

  ஒரு சாதாரண மானேஜர் கூட எல்லா வேலையையும் தானே செய்யமாட்டார், சில வற்றை automate செய்வார். சிலதுக்கு ஆள் வைப்பார், சிலதுக்கு யந்திரத்தை பயன்செய்வார்.

  ஓகே !!!

 23. திரு சாரங்க்!

  //களிமன்னிளிறேது மனிதன் பிறந்தான் என்பதற்கு எந்த ஆதாரம் நீங்கள் சமர்பிக்கிரர்கள் ?//

  மனிதன் மண்ணும் தண்ணீரும் கலந்த களிமண்ணால் படைக்கப் பட்டான் என்று குர்ஆன் கூறுகிறது. தண்ணீரோடு மற்ற தனிமங்களை சேர்த்து விஞ்ஞானம் சொன்னாலும் அந்த தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்தே உண்டாகின்றன. மனிதன் உடம்பு மண்ணும் தண்ணீரும் கலந்து உண்டாக்கப் பட்டவை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க கீழ்க் கண்ட விபரங்களை பார்த்து தெளிவு பெறுங்கள்.

  ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தில் கிளாரெண்டன் பதிப்பகத்தால் ஜான் நம்ஸ்லே வெளியிட்ட ‘தி எமெண்ட்ஸ்’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரை 1998 ல் மூன்றாம் பதிப்பாக வெளியிடப் பட்டது.

  எழுபது கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள மூலக் கூறுகளை கீழே காணலாம்:

  1. ஆக்சிஜன் – 43 கிலோ கிராம்
  2. கார்பன் – 16 கிலோ கிராம்
  3. ஹைட்ரஜன்- 7 கிலோ கிராம்
  4. நைட்ரஜன் – 1.8 கிலோ கிராம்
  5. கால்சியம் – 1 கிலோ கிராம்
  6. பாஸ்பரஸ் – 780 கிராம்
  7. பொட்டாஷியம் – 140 கிராம்
  8. சோடியம் – 100 கிராம்
  9. குளோர்ன் – 95 கிராம்
  10. மக்னீசியம் – 19 கிராம்
  11. இரும்பு – 4.2 கிராம்
  12. ஃப்ளூரின் – 2.6 கிராம்
  13. துத்தநாகம் – 2.3 கிராம்
  14. சிலிக்கன் – 1 கிராம்
  15. ருபீடியம் -0.68 கிராம்
  16. ஸ்ட்ரோன்ட்டியம் – 0.32 கிராம்
  17. ப்ரோமின் – 0.26 கிராம்
  18. ஈயம் – 0.12 கிராம்
  19. தாமிரம் – 72 மில்லி கிராம்
  20. அலுமினியம் – 60 மில்லி கிராம்
  21. காட்மியம் – 50 மில்லி கிராம்
  22. செரியம் – 40 மில்லி கிராம்
  23. பேரியம் – 22 மில்லி கிராம்
  24. அயோடின் -20 மில்லி கிராம்
  25. தகரம் – 20 மில்லி கிராம்
  26. டைட்டானியம் -20 மில்லி கிராம்
  27. போரான் – 18 மில்லி கிராம்
  28. நிக்கல் – 15 மில்லி கிராம்
  29. செனியம் – 15 மில்லி கிராம்
  30. குரோமியம் – 14 மில்லி கிராம்
  31. மக்னீஷியம் – 12 மில்லி கிராம்
  32. ஆர்சனிக் – 7 மில்லி கிராம்
  33. லித்தியம் – 7 மில்லி கிராம்
  34. செஸியம் – 6 மில்லி கிராம்
  35. பாதரசம் – 6 மில்லி கிராம்
  36. ஜெர்மானியம் – 5 மில்லி கிராம்
  37. மாலிப்டினம் – 5 மில்லி கிராம்
  38. கோபால்ட் – 3 மில்லி கிராம்
  39. ஆண்டிமணி – 2 மில்லி கிராம்
  40. வெள்ளி – 2 மில்லி கிராம்
  41. நியோபியம் – 1.5 மில்லி கிராம்
  42. ஸிர்க்கோனியம் – 1 மில்லி கிராம்
  43. லத்தானியம் – 0.8 மில்லி கிராம்
  44. கால்ஷியம் – 0.7 மில்லி கிராம்
  45. டெல்லூரியம் – 0.7 மில்லி கிராம்
  46. இட்ரீயம் – 0.6 மில்லி கிராம்
  47. பிஸ்மத் – 0.5 மில்லி கிராம்
  48. தால்வியம் – 0.5 மில்லி கிராம்
  49. இண்டியம் – 0.4 மில்லி கிராம்
  50. தங்கம் – 0.4 மில்லி கிராம்
  51. ஸ்காண்டியம் – 0.2 மில்லி கிராம்
  52. தண் தாளம் -0.2 மில்லி கிராம்
  53. வாளடியம் – 0.11 மில்லி கிராம்
  54. தோரியம் – 0.1 மில்லி கிராம்
  55. யுரேனியம் – 0.1 மில்லி கிராம்
  56. சமாரியம் – 50 மில்லி கிராம்
  57. பெல்யம் – 36 மில்லி கிராம்
  58. டங்ஸ்டன் – 20 மில்லி கிராம்

  மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற் கண்ட 58 தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத் தக்கது.

 24. //ஒரு புத்திசாலி கடவுள் ஏன்னா செய்வார், தான் முதலில் ஒரு templat டை செய்து விட்டு, அதன் படி ஜீவராசிகள் தோன்றட்டும் என்று சங்கல்பம் மட்டுமே செய்வார். அதற்க்கு மேல் உயிர் தோன்றலும் மதித்தாலும் தானாகத்தான் நடக்கும்.

  ஒரு சாதாரண மானேஜர் கூட எல்லா வேலையையும் தானே செய்யமாட்டார், சில வற்றை automate செய்வார். சிலதுக்கு ஆள் வைப்பார், சிலதுக்கு யந்திரத்தை பயன்செய்வார்.//

  விநோதமான எண்ணம்.

  கடவுள் இப்படித்தான் செய்வார் என மனிதன் சொல்கிறான். அதிலும் கடவுள் புத்திசாலி கடவுளா முட்டாள் கடவுளா எனத்தரம் பிரிக்கிறான் மனிதன்.

  நல்ல நகைச்சுவை. இப்படிப்பட்ட மனிதர்களைப்பற்றி உபநிஷத்தில் சொல்லியிருக்கும் எவராவது போட்டால் தேவலை. நன்றி.

 25. மாற்றம் மட்டுமே மாற்றம் இல்லாதது. அப்படி என்றால் மாற்றம் என்பது தான் என்ன? ஆன்மா என்பது உயிர் தானே ? உயிர் என்பது உருவாவதா ? உருவாக்கப்படுவதா?பரிணாம வளர்ச்சி உருவாக்கப்படுவதா? அது எவ்வாறு வினைப்பயன் தொடர்பு உடையதாகும்?

 26. திரு.அன்பு தனசேகரன்,

  //மாற்றம் மட்டுமே மாற்றம் இல்லாதது. அப்படி என்றால் மாற்றம் என்பது தான் என்ன?//

  பிரபஞ்ச விழிப்புணர்வில்(Universal Consciousness) சர்வகாலமும் தொடர்ந்து ஏற்பட்டுகொண்டிருக்கும் மாறுதல்களினால் பௌதீக யதார்த்தத்தில்(Physical Reality) ஏற்படும் மாறுதல்களையே மாற்றம் என்கிறோம்.

  //ஆன்மா என்பது உயிர் தானே ? உயிர் என்பது உருவாவதா ? உருவாக்கப்படுவதா?பரிணாம வளர்ச்சி உருவாக்கப்படுவதா? அது எவ்வாறு வினைப்பயன் தொடர்பு உடையதாகும்?//

  இருப்பது ஒரே ஒரு ஆன்மா தான். அதை பிரபஞ்ச ஆன்மா(Universal Soul), மூலாதாரம்(Source), பிரபஞ்ச சக்தி(Universal Energy), உயிர் சக்தி(Life Force), கடவுள் (God) என்று எந்த பெயரை கொண்டும் அழைக்கலாம். இந்த ஆன்மாவுக்கு தோற்றமோ முடிவோ இல்லை. இந்த ஆன்மாவுக்கு விழிப்புணர்வு(Consciousness) உண்டு. அதை பிரபஞ்ச விழிப்புணர்வு(Universal Consciousness) என்கிறோம்.

  இந்த பிரபஞ்ச ஆன்மா இல்லாத வெளியோ(Space) பொருளோ (Matter) எங்கும், எல்லாவற்றிலும் இந்த ஆன்மா இருக்கிறது. இந்த ஒரே பிரபஞ்ச ஆன்மாதான் கோடிக்கணக்கான வெவ்வேறு உயிரினங்களாக தோற்றம் அளிக்கிறது.

  பின்னூட்டத்தின் சுருக்கம் கருதி, பரிணாம வளர்ச்சி, வினைப்பயன் பற்றி பிறகு சொல்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *