காஞ்சிப் புராணம்
காஞ்சி மாநகர் இந்துக்களுக்குக் காசியைப் போன்றதொரு புண்ணியத்தலம். சங்ககாலம் தொட்டே இத்தலம் வரலாற்றுப் புகழ் பெற்று விளங்கியது. பல்லவர் ஆட்சியில் தலைநகராகவும் விளங்கியது. தேவாரம் அருளிய மூவராலும் பாடப் பெற்றது, இத்தலம். இத்தலத்திற்குத் தமிழில் இரண்டு தலபுராணங்கள் உள்ளன. ஒன்று, திருவாவவடுதுறை ஆதீனத்து மாதவச் சிவஞான யோகிகள் இயற்றியது. மற்றொன்று, அவருடைய மாணாக்கர், கவிராட்சச கச்சியப்ப முனிவர் அருளியது. சிவஞான சுவாமிகள் தமிழ்மொழிக்கும் சைவத்திற்கும் ஆற்றியுள்ள தொண்டு அளப்பரிது. சுவாமிகள் முறையாக வடமொழியையும் வேதாகமங்களையும் கற்றுத் தெளிந்தவர்.
பாரதத் திருநாட்டில் தோன்றிய தத்துவங்கள் அனைத்தும் பிரம்ம சூத்திரத்திற்கு ஞானியர் அருளிய பாடியங்களின் அடிப்படையில் எழுந்தனவே. சங்கரர் எழுதிய பாடியம் அத்துவித சித்தாந்தத்திற்கும் இராமாநுஜர் எழுதிய பாடியம் விசிஷ்டாத்துவித சித்தாந்தத்திற்கும் மாத்துவர் எழுதிய பாடியம் துவைத சித்தாந்தத்திற்கும் நீலகண்ட தீட்சிதர் அருளிய பாடியம் சிவாத்துவிதத்திற்கும் அடிப்படை என அனைவரும் அறிவர். அதேபோன்று தமிழ் இலக்கண இலக்கியங்களையும் பன்னிரு திருமுறைகளையும் ஆதாரமாகக் கொண்டு, அவற்றுக்கு முரண்படாவகையில் வேதாகமங்களையும் பிரமாணமாகக் கொண்டு மாதவச் சிவஞான முனிவர், மெய்கண்டாரின் சிவஞானபோதத்திற்குத் தமிழில் பாடியம் செய்தார். தமிழில் பாடியம் இல்லை என்ற குறையைத் தீர்த்து வைத்தார். இந்தப் பாடியம் திராவிட மாபாடியம் என்று சைவத் தமிழர்களால் கொண்டாடப்படுகின்றது. திராவிட மாபாடியம் சுத்தாத்துவித சைவசித்தாந்தத்தை நிறுவுகின்றது.
திராவிட மாபாடியம் தமிழில் இருந்தாலும் சுவாமிகளின் வடமொழி வியாகரணப் புலமை, வடமொழி இலக்கணத்தின் வழி ‘அத்துவிதம்’ என்ற சொல்லின் பொருளை விளக்கும் இடத்திலும், நாராயணன் முதலிய மாயோன் பெயர்களும் காரணக் குறியாய் சிவனையே உணர்த்தி நிற்கும் என நிறுவுகின்ற இடத்திலும் இன்னும் இவைபோல பிற கோட்பாடுகளைத் தருக்கரீதியில் மறுக்கும் இடங்களில் இவருடைய வடமொழி இலக்கணப் புலமை மிளிர்கின்றது.
சுவாமிகள் இயற்றிய காஞ்சிப் புராணம் குறித்து இருமொழியும் அறிந்த பேரறிஞர் ஒருவர் கூறும் கருத்து:
“ஆசிரியர் சிவஞான சுவாமிகள் தாம் வடமொழியில் உபநிடதங்களிலும் புராணங்களிலும் கண்ட அரிய கருத்துகளையும், சிவாகமப்பொருள்களையும் சைவமுறைகளையும் இப்புராணத்துள் நிறைத்து வைத்திருக்கின்றனர். பல உபநிடத வாக்கியங்களையும், புராண வசனங்களையும் உண்மைப்பொருள் விளங்க மொழிபெயர்த்தும், பலவடசொற்களுக்குச் சொல்மூலங்களும் அவற்றிற்குப் பொருள்களும் இதன்கண் கூறியுள்ளார்.. சில மந்திரங்களுக்கும் பொருள் உரைத்திருக்கின்றார். — — — — வடநூல் வழக்குப் பற்றிப் பல வடசொற்களுக்கு வியாகரணப்படி பலவகைப் பொருள் கூறுகின்றனர். பாஞ்சராத்திரிகள் முதலியோர் சிவபரத்துவத்தை மறைத்ததற்கு வடமொழி வாக்கியங்களுக்குக் கூறும் பொருள்களை மறுத்து உண்மைப் பொருள் கூறிச் சைவத்தை நிலைநாட்டுதல் வேண்டுமென்பது ஆசிரியர் இப்புராணத்தை இயற்றிய நோக்கங்களில் முக்கியமானதொன்றாகும் என்பது அதனைக் கற்பார்க்கு எளிதில் விளங்கும். சுருங்கச் சொல்லின், திருமுறைகளின் பொருளையறிதற்குப் பெரியபுராணம் இன்றியமையாதவாறு போல, மெய்கண்டநூல்களின் பொருளை யாவரும் எளிதில் விளங்க அறிதற்கும், உபநிடதம் முதலிய வடநூல்களுக்கு உண்மைப்பொருள் காண்டற்கும் இக்காஞ்சிப் புராணம் இன்றியமையாததாகும்”
மேற்கண்ட கருத்துக்களுக்குச் சான்றாக விளங்குவன சிலவற்றைக் காண்போம்.
புருஷ சூக்தம்: சிலர் சாதிப்பெருமை சொல்லி செருக்கு அடைவதற்கும், சாதிப்பிளவுகள் வேதத்தால் உருவாக்கப் பட்டவை என்று குற்றம்சாட்டி அதன் காரணமாக வேதத்தை இகழ்வதற்கும் ஏதுவாக இருப்பது புருஷ சூக்தத்தில் காணப்படும் கீழ்க்கண்ட வரியாகும்.
ப்³ராஹ்மணோ அஸ்ய முக²மாஸீத் பா³ஹூ ராஜன்ய க்ருத: |
ஊரு தத³ஸ்ய யத்³ வைஸ்²ய: பத்³ப்யாம்⁴ ஸூ²த்ரோ அஜாயத||
இந்த வரிகளுக்கு வைஷ்ணவ வலைதளம் கொடுத்துள்ள ஆங்கில விளக்கத்தை அப்படியே தந்துள்ளேன்.
Any commentary on this has, to say the least, significant possibilities of spinning out of control as a discussion on the role and system of the varNa-jAti system. I think it best to let the verse speak for itself, as a record of the world-view of its time, and let thinkers draw their own conclusions.
From his mouth came forth
The men of learning
And of his arms
Were warriors made
From his thighs came
The trading people
And his feet gave
Birth to servants..
திரு கந்தர்வன் அவர்கள் ‘இராகவேந்திரர் என்னும் சந்நியாசி’ எனும் கட்டுரையின் மறுமொழியில் காட்டிய சுவாமி இராகவேந்திரரின் புருஷ சூக்த வியாக்யானத்திலும் இந்த மந்திரத்திற்குத் தக்க விளக்கம் கிடைக்கவில்லை.
காஞ்சிப்புராணத்தில் வேளாளர் இருக்கை பற்றி வருணிக்கும் இடத்தில் சிவஞானசுவாமிகள் இந்த புருஷ சூக்த மந்திரத்தை அப்படியே மொழிபெயர்த்து இதனுக்கு எப்படிப் பொருள் கொள்ள வேண்டும் என்றும் விளக்குகின்றார்.
முருகுயிர்த் தலர்ந்த மலரவன் றனது முகமுதல் உறுப்பெலாந் தாங்கிச்
சரணமென் றுரைக்கும் உறுப்பினில் தோன்றிச் சாற்றுமம் முகமுதல் உறுப்பின்
வருமொரு மூவர் தங்களை உழவின் வண்மையான் நிலைபெறத் தாங்கும்
உரியவே ளாண்மை பூண்டபேர் தமக்கே உடையவர் இடம்பல அவண
இந்தப் பாடலில் ஏனையோர் கூறுமாறு பிராமணர் முதலியோர் முகம் முதலிய உறுப்புகளில் தோன்றியதாகக் கூறிய சுவாமிகள், நான்காம் வருணத்தவரை, “முகம், தோள், தொடை ஆகிய உறுப்புகளையெல்லாம் தாங்கி நிற்கும் சரணம் என்று உரைக்கும் உறுப்பினில்” தோன்றியவர்கள் எனக் கூறுகின்றார். சரணம் என்பதற்குக் கால் என்ற பொருளோடு, புகலிடம் என்பதும் பொருள். ஏனைய மூவருக்கும் புகலிடமாக இருப்பவர் நான்காமவர் என்றும், தம் உழவுத் தொழிலின் மேன்மையால் மூவரையும் நிலைபெறத் தாங்கும் வேளாளர் என்னும் பெயரைத் தமக்கே உரியவர்கள் என்றும் விளக்கினார். வேளாளர் என்பதற்கு பிறருக்கு உபகாரியாம் தன்மை உடையவர் என்று பரிமேலழகர் பொருள் உரைப்பார். சோறு என்பதற்கு வீடு பேறு என்பது பொருள். வீடுபேறாகிய சோறு பெற இறைவனே சரணம்; உணவாகிய சோறு பெற நாலாமவரே சரணம் என்ற விளக்கம் இப்பாடலில் கிடைக்கின்றது.
வேள் என்ற பகுதிக்கு விருப்பு என்பது பொருள். வேட்பு, வேட்கை எனும் சொற்கள் விருப்பு எனும் பொருளைத் தரும் வேல் என்ற இப்பகுதியினின்றும் உருவானவை. எனவே, வேளாளர் என்ற சொல் விருப்பத்தை அளிப்பவர் அல்லது விரும்பப்படுபவர் என்று பொருள்படும். ‘வேளாண்மை பூண்ட’ எனச் சுவாமிகள் இப்பாடலில் கூறுவதால், நான்காம் வருணத்தர் உபகாரியாம் தன்மை பெற்றவராக இருப்பதால் மேலே கூறப்பட்ட ஏனை மூவராலும் பெரிதும் விரும்பப்படுபவர் என்று பொருளாகின்றது.
இறைவனின் படைப்பில் எல்லாரும் சமம், பிறப்பால் சாதிப் பெருமை பேசுதல் ஆகாது என்பதே வேதக் கருத்து.
வஜ்ரஸூசிகோபநிஷதம்— பிராமணத் தன்மைக்கு உரியது சீவனன்று, உடம்பன்று, சாதியன்று, கல்வியன்று, கன்மமன்று, தன்மம் அன்று என எடுத்துக்காட்டுகளின் வாயிலாக விளக்கிச் சுவானுபவப் பிரம ஞானமுடையவனே பிராமணன் என்றோதி இதுவே வேதம் சுருதி புராண இதிகாசங்களின் அபிப்பிராயம் என்று முடிக்கின்றது. அதற்கு மாறாகப் புருஷசூக்த மந்திரத்தில் முதலாமவர்க்குப் பெருமை கூறிக்கொள்ளும் உரைகளைத் தள்ளிவிடுதலே நடுநிலையாளர்களுக்கு உரிய செய்கை. இது இறைவன் செய்த வேதத்தில் மனிதன் செய்த கிருத்திருமம்.
புருஷசூக்தத்தில் காணப்படும் ‘சூத்திரர்’ என்ற இச்சொல் முற்காலத்தில் ‘பிராமணன்’ என்ற சொல் எத்தகைய மரியாதையுடன் ஆளப்பட்டதோ அத்துணை மரியாதைக்கு உரிய சொல்லாக இருந்தது. அது இழி சொல்லன்று. இழிசொல்லாகச் சொல்லிச் சொல்லி இழிசொல்லாக இக்காலத்து மாறி விட்டது. ‘பார்ப்பான்’ என்பதை ஏசும் இழிசொல்லாகவும், ‘பிராமணன்’ (இக்காலத்துப் ‘பிராமின் (Brahmin) என்பதை மரியாதைக்குரிய சொல்லாகவும் ஆகிவிட்ட நிலைமையே ‘சூத்திரர்’ என்ற சொல்லுக்கும் ‘வேளாளர்’ என்ற சொல்லுக்கும் நேர்ந்துவிட்டது.
தெய்வச் சேக்கிழார் திருத்தொண்டர் புராணம்- இளையான்குடி மாறநாயனாரைக் கூறும்போது,
நம்பு வாய்மையின் நீடு சூத்திர நற்கு லஞ்செய் தவத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான் குடிப்பதி மாறனார்
என்று கூறினார். சேக்கிழார் வேளாளர். சூத்திரர் எனும் சொல் இழிந்த வசைச் சொல்லாயிருப்பின் தம் குலத்தையே இழிவுபடுத்தும் இந்தச் சொல்லை மாறநாயனாரின் குலத்தைக் கூறும்போது ஆண்டிருப்பாரோ?
‘சூத்திர நற்குலஞ்செய் தவத்தினால்’ என்ற தொடர், ‘நற்குலமாகிய சூத்திரர் செய்த தவத்தினால்’ என சொல் மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும்.
திருத்தொண்டர் புராணத்துக்குப் பேருரை வரைந்த சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார் அவர்கள், ‘சூத்திரர்’ எனும் இச்சொல் குறித்து எழுதியுள்ள விளக்கத்தைத் தமிழ் இந்துக்கள் அறிதல் வேண்டும்.
“வாய்மையின் நீடு சூத்திர நற்குலம்— வாய்மைத் தன்மையிலே நீடி வருகின்ற சூத்திரன் என்ற பெயரால் அறியப் பெறும் நல்ல குலம். நல்— நல்ல. நலம்— சுத்தம்.
ஸு²த்³ரோ ஸு²த்³த⁴ குலோத்³ப⁴வா: என்பது சிவாகமம். சூத்திரப்பெயர் இங்கு உழுதொழிலாளரைக் குறித்தது. இதற்குத் தசிமகன் என்பனவாதிப் பொருள் கொண்டு இஃதிங்கு இடைச்செருகலாய்ப் போந்ததென்றும் இங்கு மேழியர் என்ற சொல் இருக்க வேண்டும் என்றும் மற்றும் பலவாறு மலைவுறுவார் பலர். சூத்திரன் என்ற வருணப் பெயர் அவ்வாறு இழிபொருளில் வந்தமை பருவழக்கிற் காணலாகாது. “தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல நன்மை சான்ற நலம்” (வாயிலார் புராணம்–6) என்று ஆசிரியர் பின்னரும் இக்குலப் பெருமையைச் சிறப்பித்தமை காண்க.
உழுதொழிலாளர்களைச் சூத்திரர் எனவும் நான்காம் வருணத்தவர் எனவும் பேசுதல் ஆசிரியர் காலத்தில் வழக்காயிருந்தது. அப்பெயரால் ஏதும் இழிபு குறித்திருப்பின் ஆசிரியர் அதனை ஆண்டிரார். இங்குச் சற்சூத்திரர், அசற்சூத்திரர் என இருபிரிவுபடுத்திப் பேசுவாரும் உண்டு. எங்ஙனமாயினும் இங்கு ஏர்த்தொழில் புரியுங் குலமாகவே இப்பெயராற் போந்த குலம் சுட்டப் பெற்றது. “ஏரின் மல்கு வளத்தினால் வரும்” என்று அடுத்த பாட்டிலே தொடர்ந்து கூறுவது காண்க.
இப்புராணத்துள்ளே மற்றும் பல நாயன்மார்களை வேளாண் குலத்தவர் எனக் குறித்த ஆசிரியர் இங்கு ஏர்த்தொழிலே செய்யும் இந்நாயனார் சூத்திர நற்குலத்தவர் என்று குறித்தலின் வேற்றுமை ஒன்றும் காணப் பெறவில்லை. வேளாளரை வாய்மையின் மேன்மை பற்றி அறிவிப்பது ஆசிரியர் மரபு.
பின்னவர் சதுர்த்தர் பெருக்காளர் வன்மையர்
மன்னுமுத் தொழிலர் மண்மகள் புதல்வர்
உழவர் ஏரினர் வாணர் காராளர்
விளைஞர் மேழியர் வேளாளர் என்றிவை
தொகுபெய ரெல்லாஞ் சூத்திரர் பெயரே
(பிங்கலநிகண்டு- ஐந்தாவது ஆடவர் வகை- பெயர்ப்பிரிவு- 55)
இவ்வாறு சூத்திரர் எனும் சொல்லை விளக்கிய சிவக்கவிமணி அவர்கள், சைவத் தமிழ் இந்துக்களுக்கு, “இப்பெயர் பற்றி இந்நாளில் எழும் பல்வகைப் பூசல்களையும் இப்புராணத்தின் எல்லைக்குட் கொண்டு புகுத்தி இடர்ப்படுதற்கு யாதோரியைபும் இன்றென்க” என ஓர் அறிவுரையும் வழங்கினார்.
ஆண்டவனைச் சரண், அவனது திருவடியில் வீழ்ந்து வணங்குவோமே அன்றி தலையில் வீழ்ந்து வணங்குவோமா? தோளில் வீழ்ந்து வணங்குவோமா? தொடையில் வீழ்ந்து வணங்குவோமா? திருவடி என்ற உறுப்பின் சிறப்பினால் நான்காம் வருணத்துக்கு ஏற்றம் உரைத்த காஞ்சிப் புராணம் புருஷ சூக்தத்தில் உள்ள இந்த மந்திரத்துக்கு உண்மையான பொருளைத் தருகின்றது எனத் தமிழ் இந்து பெருமைப்படலாம்.
(தொடரும்…)
முனைவர் அவர்களுக்கு அன்புடன்,
வேத விளக்கங்கள் பண்ணியுள்ள எல்லா முக்கிய சம்பிரதாயங்களிலும் சாதி வெறியையும், உயர் குடிப் பிறப்பினால் ஏற்படும் செருக்கையும் நிராகரித்துத் தான் உள்ளனர்.
புருஷ சூக்தம் பெருமாள் கோயில்களில் அன்றாடம் ஓதப்படும் ஒன்றே. அந்த ஸ்ரீவைணவ சம்பிரதாயம் தான் நம்மாழ்வாரையும், பாணர் குலத்தவரான திருப்பாணாழ்வாரையும், கள்ளர் குலத்தவரான திருமங்கை ஆழ்வாரையும் கொண்டாடுகிறது. தொண்டரடிப் போடி ஆழ்வாரின் பாசுரமும், பிறப்பை பொருட்படுத்தாமல், பக்தி உள்ளவர்களை குல உயர்வு தாழ்வு பாராமல், “தொழுமினீர் கொடுமின் கொண்மின்” (அவர்களை வணங்குங்கள், அவர்களுக்குக் கல்வி ஞானம் தாருங்கள், அல்லது அவர்களிடமிருந்தும் கல்வி ஞானம் பெறுங்கள்) என்று கருட புராண சுலோகத்தை ஒட்டி பாடியுள்ளார்.
இப்படிப் பட்ட ஆழ்வார்களைத் தான் புருஷ சூக்தம் அன்றாடம் ஓதும் வைணவ பிராம்மணர்கள் கொண்டாடுகின்றனர்.
“அதரம் மதுரம் நயனம் மதுரம் ஹ்ருதயம் மதுரம்” என்று தொடங்கும் மதுராஷ்டக ஸ்தோத்திரத்தில் “இறைவனுடைய அங்கங்கள் அனைத்துமே இனிமையானவை” வட நாட்டு வைணவ சம்பிரதாய (புஷ்டி மார்க்க) ஸ்தாபகராகிய வல்லபாச்சாரியார் பாடியுள்ளார்.
சர்வேச்வரனின் அடிகளும், அவன் அடிப் பொடியும், அவனுடைய பாதத்தைக் கழுவிய ஸ்ரீபாத தீர்த்தமும் புனிதத்திலும் புனிதம் என்று அனைவரும் இசைந்திருக்க, ‘வேளாளர்கள் அவன் பாதத்திலிருந்து தோன்றியவர்கள்’ என்பதை வைத்து அவர்களுக்கு தாழ்வைக் கற்பிக்க இடமே இல்லை. இது பரம வைதீகம்.
வேதத்தைத் தொகுத்துத் தந்த வியாசரும், “நான்கு வர்ணங்களில் சூத்திரர்களே சிறந்தவர்கள், ஆண்-பெண்களில் பெண்ணே சிறந்தவள், நான்கு யுகங்களில் கலியுகம் தான் சிறந்தது” என்று அறுதியிடுகிறார்.
(edited and published)
… மேலும் சில கருத்துக்கள்:
//
ஏனைய மூவருக்கும் புகலிடமாக இருப்பவர் நான்காமவர் என்றும், தம் உழவுத் தொழிலின் மேன்மையால் மூவரையும் நிலைபெறத் தாங்கும் வேளாளர் என்னும் பெயரைத் தமக்கே உரியவர்கள் என்றும் விளக்கினார்.
//
வைதிக மரபில் உழவுத் தொழில் (இதைத் தவிர ஆநிரைகளை மேய்ப்பதும் காப்பதும், வணிகமும் ஆகிய மூன்றும்) வைஷ்யர்களின் (மூன்றாவது வரனத்தவர்களின்) தர்மமாகும். நான்காவது வரனத்தவர்களின் தருமம், முதல் மூன்று வர்ணத்தவர்களுக்குக் கைங்கர்யம் புரிவதே. இவற்றை கீதை (18.44-45), மனு முதலிய ஸ்மிருதிகள் கூறுகின்றன.
//வேளாளர் என்பதற்கு பிறருக்கு உபகாரியாம் தன்மை உடையவர்.//
இதுதான் நான் மேற்படி சுட்டியுள்ளவைக்கு உடன்பட்டது.
//சரணம் என்பதற்குக் கால் என்ற பொருளோடு, புகலிடம் என்பதும் பொருள்.//
ஒரு வித்தியாசம் உண்டு – சம்ச்கிருத்ததில் இவ்விரண்டு பதங்களுக்கு எழுத்தில் வேறுபாடு உண்டு. “சரணம்” என்று “ச”-காரத்துடன் (வல்லின ச, மெல்லின ஞ-வுக்கு அண்மையில் உள்ளது) எழுதினால், அது பாதத்தைக் குறிக்கும். “ஶரணம்” என்று “ஶிவ (சிவ)” என்னும் பதத்தில் இருப்பதைப் போல, “ஶ”-காரம் (சமஸ்கிருத எழுத்து வரிசையில், ஷ-காரத்திற்கு முந்தையது) வந்தால், “புகலிடம்” என்று அர்த்தம். ஆக, இது சமஸ்கிருதத்தில், “இரு பொருள் கொண்ட ஒரே பதம்” என்னும் குழுவில் சேராது.
//‘சூத்திரர்’ என்ற இச்சொல்… இழி சொல்லன்று. //
“சூத்திர” என்பதை இழிசொல்லாக நினைப்பதும் உபயோகிப்பதும், “க்ஷுத்ர” என்ற சமஸ்கிருத சொல்லிற்கும் இதற்கும் உள்ள குழப்பம் காரணமாக இருக்கலாம் என்பது என் கருத்து. “க்ஷுத்ர” என்றால் தாழ்ந்த என்று பொருள். நான் அறிந்த வரையில், இதற்கும் “சூத்திர” (ஶூத்ர) என்னும் வரனத்தைக் குறிக்கும் சொல்லுக்கும் சம்பந்தம் இல்லை.
I want to add the following to emphasize the interpretation pf Purusha suktam.A roman Catholic priest John of Salisbury (1114–1180) in his book Polycraticus states:”The commonwealth is a body endowed with life by the benefit of divine power.The Prince is the head,the priesthood is the soul,the senate is the heart judges and governors of the province is the eye and ears, officials and soldiers arethe hands.Financial officers are the stomach and intestines.—–the husbandmen correspond to the feet which always cleave to the soil.This organic analogy firmly grasped the conception of the interdedpendance ofindividuals in the society and all are members of another.Justice is pr4actised and it is to bring different duties and acts into harmony by allotting them to different individuals to whom they are appropriate ensuring a psychological unity and a bond of common social feeling” The efflux of time and frequent conquests by various groups by way internecine quarrels resulted in the distortion and denegration of individul groups.
Sri Muthukumaraswamy’s explanation/clarification/commentary is very illuminating, thought provoking and needs to be spread far and wide and also deep. A great service .
Pardon my response in English,
Thanks and regards.
S.R.KUPPUSWAMY
சிவஞான சுவாமிகள் பற்றியும் வருணம் பற்றியும் நீங்கள் கூறிய தகவல்கள் மிகச் சிறப்பானவை. பதியம் என்றால் இதுகாறும் என்ன என்றே எனக்கு தெரியாது. தங்கள் வழிகாட்டுதல்படி அதைப் படிக்க உறுதி கொண்டுள்ளேன். அறுபுதமான தங்கள் கட்டுரைக்காக மிக்க நன்றி. இப்பகுதியில் வரும் கட்டுரைகளும் விவாதங்களும் என் கல்லூரி வாழ்கையை நினைக்க வைக்கின்றது. வணக்கம்.
Good article….. thankyou
நல்ல ஒரு விஷயம் விவாதிகப்படுகையில் அனைவரும் அதில் பங்குகொள்ளவேண்டியது மிக அவசியம். ஒரு சிறு கருத்து உணரப்பட்டால் புருஷசூக்தத்தின் நோக்கம் மிகச்சரியாக விளங்கிவிடும் என்பது அடியேனின் எண்ணம்.
புருஷன் என்னும் சொல்லிற்கு ‘இடமுறைவோன்’ என்பது பொருள் (புரே சயதி). உலகம் அனைத்திலும் உறைபவன் என்பதால் புருஷன் என்பது எல்லாம் வல்ல இறைவனுக்கே உரித்தான காரணப்பெயரே.
அடுத்து, இப்புருஷன் எத்தகையவன்? பல்லாயிரக்கணக்கான தலைகளையும், கண்களையும், கால்களையும், அங்கங்களையும்) உடையவன். அதாவது மூலகாரண புருஷனுடைய அங்கங்களாவன, பல்வேறு உயிருள்ள உயிரற்ற பொருள்களே. இப்பொருட்களே உருவகமாக இப்புருஷனது அங்கங்களாக வர்ணிக்கப்படுகின்றன.
புருஷசூக்தம் முழுவதையும் உருவகஅணியை மனதில் இருத்தியவாறே ஓதவேண்டும். இவ்வாறுசெய்தால், பல ஐயங்கள் விலகும்.
எடுத்துக்கட்டாக, ” ஓதும் அந்தணர் இவன் வாயாகினர், பொருதும் மன்னர் இவன் தோளிற்தோன்றினர், தொழில்முனை இவன் வலியதொடைகளாவர், அனைத்தையும் தாங்கும் இவனது திருவடிகளில் அனைத்தோர்கும் இன்றியமையா உதவிபுரிவோர் தோன்றினர்”. அதாவது, பல்வேறுமக்கள் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்தும் இவனின் பெரும்செயலாம் உலகநடத்துகையின் அங்கங்களே.
இவ்வராகமட்டுமே புருஷசூக்தத்தின் பல்வேறு பகுதிகளும் அறியப்படவேண்டும். இவ்வறுசெய்தால் குழப்பத்திற்கு இடமேயில்லை.
இது உணர்த்தும் மற்றொன்று, எல்லாசெயல்களும் இன்றியமையாதவை என்பதும், இன்னார்தான் இன்ன செயலை புரியவேண்டும் என்பதில்லாமல், அதாவது ஒருவர் மேற்கொள்ளும் செயல்தான் செயல்புரிவோரை இன்னவகையினராக சுட்டிக்காட்டுமே தவிர, இன்னார் இன்னதொழில்தான் புரியவேண்டும் என்பது ஒருபோதும் சுட்டிக்காட்டப்படுவதில்லை.