தலபுராணம் என்னும் கருவூலம் – 7 [நிறைவுப் பகுதி]

முந்தைய பகுதிகள்:

தொடர்ச்சி…

நாட்டாரியல் பதிவுகள்

யாருக்கும், பிறந்த மண்ணின்மேல் காதல் உண்டாதல் இயல்பே. பிறந்த மண்ணின் மணத்தில் திளைத்து, அதன் பெருமையைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சியின் ஒருவகைப் பரிணாம வளர்ச்சிதான் தமிழ்த் தலபுராணங்கள்.

தலத்துக்குப் பெருமை திருக்கோயில்

திருக்கோயிலைச் சார்ந்தே பழங்காலத்தில் பெரிய நகரங்கள் வளர்ந்தன. ‘கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டா’, ‘ஆலயந் தொழுவது சால நன்று’, ‘திருக்கோவி லில்லா வூரும் — பாங்கினொடு பலதளிகள் இல்லா வூரும், அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே’ என்று திருக்கோயிலின் இன்றியமையாமையைப் போற்றினர் தமிழர். தங்கள் ஊரில் உள்ள கோயிலைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்ள எத்துணையோ காரணங்கள் ஊர்மக்களிடம் இருந்தன. கோயிலின் பழமை, அதைக் கட்டியவர்களின் பெருமை, கோயில் கட்டப்பட்ட வரலாறு, அந்தக் கோயிலில் வழிபட்டவர்கள் அடைந்த நன்மை, வழிபட்ட பெரியோர்கள், சிறப்பான வழிபாட்டு முறைகள், பெருங்கோயிலைச் சார்ந்த சிறுகோயில்கள், ஆறுகள், குளங்கள், திருவிழாக்கள் என இவைபோன்ற செய்திகள் காலங்காலமாக சொல்லிச்சொல்லி வாய்மொழிவழியே நிலைகொள்ளும்போது, அவை பழங்கதை அல்லது மரபுவழிச் செய்தி (Legends) வடிவம் பெற்றுவிடுகின்றன. அவற்றின் இலக்கியவடிவந்தான் தலபுராணங்கள். தங்கள் ஊர்ப்பெருமையை இலக்கிய வடிவில் காண விரும்பியவர்களின் வேண்டுகோளின்படியே பெரும்பாலான தலபுராணங்கள் பாடப்பெற்றன. தேவையும் பயனும் பாராட்டும் இல்லாமல் இத்தனைத் தலபுராணங்கள் தோன்ற வாய்ப்பே இல்லை.

தலபுராணக் கதைகளின் மூலங்கள்

தலபுராணக் கதைகளின் மூலங்கள் பெரும்பாலும் வடமொழியிலுள்ள பதினெண் புராணங்களில் கூறப்பட்டுள்ள கதைகளே. அக்கதைகளின் தொடர்ச்சியாகவோ அல்லது மறுவாசிப்புக்களாகவோ தலபுராணக் கதைகள் அமைந்துள்ளன.

goddess_meenakshi_wedding2

மதுரைத் தலபுராணமாகிய திருவிளையாடற் புராணம் போல ஒருசில புராணங்கள் இதற்கு விதிவிலக்கு. பெரும்பாலான தலபுராணங்களில் ஒருசில படலங்களாயினும் அத்தலத்தின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் நாட்டாரியலை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

சிலகதைகள் திருமுறை ஆசிரியர்கள் காலத்துக்கு முன்னமேயே மக்களிடை வழங்கப் பெற்று அவர்களால் திருமுறைகளில் பாடப் பெற்ற சிறப்பினைப் பெற்றன.

திருமுறைகளில் பழங்கதை

உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த சோழமன்னன் ஒருவன், தான் அணிந்திருந்த விலையுயர்ந்த முத்துமாலையுடன் காவிரியாற்றில் நீராடினான். அப்பொழுதுவந்த பெருவெள்ளத்தில் அவனுடைய முத்துமாலை நழுவி நீரில் விழுந்து வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. அது விலையுயர்ந்த மாலை; ஆதலால் அரசன் மிகவும் மனம் வருந்தினான். மாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை வெளியில் சொன்னால், அரசு அதிகாரிகளாலும் காவலர்களாலும் அங்கு நீராடும் பொது மக்களுக்குப் பெரும் தொல்லை விளையும் என அரசனின் அருளுள்ளம் அதனை வெளிப்படுத்த விரும்பவில்லை. (சில ஆண்டுகளுக்கு முன்னர் கும்பகோணத்தில் மகாமகக் குளத்தில் நீராட ஒரு முதலமைச்சர் சென்றபோது பொதுமக்கள் சந்திக்க நேரிட்ட தொல்லைகளை நினைவுகூர்க.) ஆதலால், அரசன், ஆரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை வெளியில் சொல்லாமல், மனத்தினுள், ‘இறைவனே! நீ இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என வேண்டினான்.

அப்பொழுது திருவானைக்காத் திருக்கோயில் அருச்சகர் இறைவனுக்குத் திருமஞ்சனம் ஆட்டுவதற்குத் தீர்த்தம் முகந்த குடத்தினுள் அந்த ஆரம் புகுந்தது. அர்ச்சகர் ஆனைக்கா இறைவனுக்குத் திருமஞ்சனம் ஆட்டும்பொழுது, அந்த ஆரம் இறைவன் திருமேனியின்மீது சேர்ந்தது. திருக்கோயிலுக்கு வழிபட வந்த மன்னன் இறைவன் திருமேனிமேல் முத்தாரம் ஒளிவிடுதலைக் கண்ணுற்று, தன் வேண்டுகோளுக்கு அருள்புரிந்த கருணையை எண்ணி வியந்தான்.

இந்தப் பழங்கதையை சுந்தரமூர்த்தி நாயனார், தம்முடைய திருவானைக்காத் திருப்பதிகத்தில்,

தார மாகிய பொன்னித் தண்டுறை ஆடி விழுத்து
நீரில் நின்றடி போற்றி நின்மலா கொள்ளென ஆங்கே
ஆரங் கொண்டஎம் ஆனைக் காவுடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடை யாரே

என்று பாடித் துதித்தார்.

பெரியபுராணத்தில் இந்த நிகழ்ச்சியை சேக்கிழார்,

வளவர் பெருமான் மணியாரம் சாத்திக் கொண்டு வரும்பொன்னிக்
கிளரும் திரைநீர் மூழ்குதலும் வழுவிப் போகக் கேதமுற
அளவில்திருமஞ் சனக்குடத்துள் அதுபுக் காட்ட அணிந்தருளித்
தளரும் அவனுக்கருள்புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார்

என இனிது விளங்க அருளிச் செய்தார்.

நம்பியாரூரரும் சேக்கிழார் பெருமானும் கூறிய இந்த நிகழ்ச்சியைச் சுவையான சில மாற்றங்களுடன் கச்சியப்ப முனிவர் திருவானைக்காப் புராணத்தில் ஆரஞ்சாத்து படலத்தில் கூறுகின்றார்.

இளவேனிற் பருவம் வருகின்றது. அரசன் வசந்தவிழா எடுக்கிறான். மகளிரும் மைந்தரும் காவிரி நீராடச் செல்லுகின்றனர். சோழமன்னனும் அரசியுடன் நீராடச் செல்லுகின்றான். நீராடப் போகும்முன் அரசியின் மார்பில் அரிய முத்துமாலையொன்று ஒளிவீசக் காண்கின்றான். அரிய ஒளிவீசும் இந்த முத்து மாலையை வாங்கி ஆனைக்கா அண்ணலுக்குச் சாற்றுவோம் என மனதில் உட்கொண்டான்.

இருவரும் புனலாடிக் கரையேறியபோது அரசியின் மார்பில் மாலை இல்லாததைக் கண்டான். “இறைவனே! உனக்குச் சாற்ற நினைத்த முத்துமாலையைக் காவிரிவெள்ளத்தில் இழக்கும் தீவினையை உடையவன் ஆயினேன். இந்த ஆரத்துக்கு நிகரான வேறு ஆரமெவ் வுலகினு மில்லையே!. என்னுடைய பிழையைத் தீர்த்தாண்டருள் புரிவையேல், அந்த ஆரத்தை நின் திருமேனியில் நீயே பெற்று அணிந்தருள வேண்டும்!” என்று இறைவனிடம் முறையிட்டான். முத்தாரம் முன்சொன்னவாறு இறைவன் திருமேனியை அடைந்தது.

இப்பழங்கதை சுந்தரமூர்த்தி நாயனார் காலத்துக்கு முன்பிருந்தே வழங்கப்பெற்று அவரால் பதிவு செய்யப்பட்டது.

திருமுறைப் பாடலால் பிறந்த கதை

சுந்தரமூர்த்தி நாயனார் தில்லையில் அருளிய திருக்கோயில் திருப்பதிகத்தின் வாயிலாக, கீழைச் சிதம்பரம் எனும் தில்லைக்கும் மேலைச் சிதம்பரம் எனப்படும் திருப்பேரூருக்கும் இடையே உள்ள தொடர்பு திருப்பேரூர்ப் புராணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

sundarar2தேவாரம் அருளிய மூவரில் நம்பியாரூரர் ஒருவரே மீகொங்கு எனப்படும் கொங்கு நாட்டின் மேற்குப் பகுதிக்கும் வருகை புரிந்தவர். (இராசகேசரிப் பெருவழி இது பேரூரை ஒட்டி கொங்கு நாட்டில் இருந்து சேரநாட்டுக்குச் செல்லும் பாலக்காட்டுக் கணவாயை ஒட்டியது. இப்பொழுது அமைந்துள்ள கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை திப்புசுல்தான் காலத்தில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது. காடும் மலையும் செறிந்த மேல்கொங்கு நாட்டில் சைவத்தை அறிமுகப்படுத்தியவர் சுந்தரமூர்த்தி நாயனாரே எனலாம். எனவே, அவரைப் பற்றிய பல செய்திகள் கொங்கு நாட்டுத் தலபுராணங்களில் கிடைக்கின்றன. அவற்றிற்குத் தேவார அகச்சான்றோ வேறு சான்றாதரங்களோ அகப்படாமையினால் சேக்கிழார் அவற்றைப் பெரியபுராணத்தில் பாடவில்லை.)

அப்பொழுது காஞ்சிமாநதிக் கரையில் அமைந்துள்ள திருப்பேரூரையும் தரிசித்துள்ளார். இங்கு அவர் அருளிச்செய்த பதிகம் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் சேக்கிழார் நம்பியாரூரர் பேரூரை வழிபட்டபோது பெற்ற அருளனுபவத்தை ஒரு பாடலில் எடுத்துக் கூறி, “சைவ ஆண்டகையாருக்கடுத்த அந்நிலைமை விளைவை யார் அளவறிந்து உரைப்பார்” என்றார். பேரூரில் தாம் பெற்ற இன்ப அனுபவத்தைச் சுந்தரர், தில்லையில் பாடிய திருப்பதிகத்தில் நினைவுகூர்ந்தார். சுந்தரர் தில்லையில் பாடியருளிய அந்தப் பாடல்:

பாரூரும் அரவல்குல் உமைநங்கை யவள்பங்கன் பைங்கண் ஏற்றன்
ஊரூரன் தருமனர் தமர்செக்கி லிடும்போது தடுத்தாட் கொள்வான்
ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீகொங்கில் அணிகாஞ் சிவாஅய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே பெற்றா மன்றே

(நம்பியாரூரனுக்குத் தலைவனும் திருவாரூரை உடையவனும் மேற்றிசையில் உள்ள கொங்குநாட்டில், அழகிய காஞ்சிநதியின் கரையில் விளங்கும் பேரூரில் உள்ளவரது கடவுளுமான இறைவனை, பெரும்பற்றப் புலியூரிலுள்ள திருச்சிற்றம்பலத்தில் அடைந்துவிட்டோம்; இனி நாம் பெறவேண்டுவது யாதுள்ளது?)

இந்தப் பாடலைக் கேட்ட தில்லைவாழந்தணர்கள், “இறைவர் அமர்ந்த திருத்தலங்களில், தில்லையைப் போல வேறொரு தலமில்லை. அவ்வாறு இருக்க இங்கு நீர் பேரூரைச் சிறப்பித்துப் போற்றியதேன்?” என வினவினர். அதற்கு நம்பியாரூரர், “இக்கனகசபையிலே இறைவர் தாண்டவம் செய்வது போல, திருப்பேரூரிலே வெள்ளிமன்றுள் திருநடனம் செய்கின்றார். அத்தலத்தில் முத்தி தருவதன்றிக் காமிக பலன்களைத் தருவதில்லை. அத்தலத்தின் பெருமை மாதொருபாலுடைய பிரானுக்கல்லது மதிப்பரிதாம்,” என்று உரைத்தார்.

இதனைக் கேட்ட தில்லைவாழந்தணர்கள், திருப்பேரூருக்கு வந்து பட்டிப்பெருமானையும் கூத்தப் பெருமானையும் வணங்கினர். தாம் திருப்பேருருக்கு வந்து வழிபட்டமைக்கு அடையாளமாக ஓர் ஆலயமும் அமைத்தனர். அதற்கு அழகிய திருச்சிற்றம்பலம் என்று பெயர். இச்செய்தியை பேரூர்ப்புராணம், அழகிய திருச்சிற்றம்பலப் படலம் தருகின்றது.

திருமுறையாசிரியரின் வருகையால் பெருமை

கூத்தப் பிரானால் அறிமுகம் செய்விக்கப் பெற்று நண்பரான சேரமான் பெருமாளைக் காண இருமுறை சேரநாட்டுக்குச் சுந்தரமூர்த்தி நாயனார் மீகொங்கு வழியாகப் பயணஞ் செய்தார்.

சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் மேல்கொங்குநாட்டுக்கும் உள்ள உறவு சிறப்பானது. புக்கொளியூர் அவிநாசியில் முதலையுண்ட அந்தணச் சிறுவனை உயிர்ப்பித்த அற்புத அருள்வெளிப்பாடும், சேரமான் சுந்தரருக்குக் கொடுத்தனுப்பிய செல்வங்களை, “நம்பிக்குத் தாமே பொன் கொடுப்பதலால், ஒருவர் கொடுப்பக் கொள்ள”ப் பொறுக்காமல், இறைவன் தன் பூதகணங்களை வேடர்வடிவாய்ச் சென்று திருமுருகன்பூண்டியில் கவர்ந்து வரச் செய்ததும், பின் திருப்பதிகம் பாடப்பெற்றபின் மீண்டும் அவற்றை கொடுத்தருளிய நட்பின் கேண்மையுமாகிய திருவருள் விளக்க நிகழ்ச்சிகளைக் கொங்குநாட்டுத் தலபுராணங்கள் பாடுகின்றன.

திருமுருகன்பூண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி “வேடுபறி” என்னும் பெயரில், கொங்கு நாட்டுக் கோயில்கள் அனைத்திலும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது.

சுந்தரர் பற்றிய செவிவழிச் செய்திகள்

அகச்சான்றுகள் உள்ள செய்திகளையே சேக்கிழார் பெரியபுராணத்தில் பாடியுள்ளார். பெரியபுராணத்தில் காணப்படாத நம்பியாரூரைப் பற்றிய பல செய்திகள் கொங்குமக்களிடையே வழங்கிவந்தன. திருப்பேரூரிலே வாழ்ந்த கச்சியப்பமுனிவர் அவற்றை அறிந்து, தாம் பாடிய திருப்பேரூர்ப் புராணத்தில் பதிவு செய்துள்ளார்.

tirupperurபேரூர் முத்தித்தலம். இத்தலத்தில் இறைவன் முத்தியொன்றையே அளிப்பன். (இக்காரணத்தினாலேயே சேரநாட்டு மக்கள் பித்ருகாரியம் செய்யப் பெருந்திரளாக ஆடிஅமாவாசை போன்ற நாள்களில் பெருந்திரளாகப் பேரூர் வருகின்றனர்.)

சுந்தரர் தன்னை தரிசிக்க வருகின்றார் என்று அறிந்த இறைவன், “முத்தித் தலமாகிய இங்கு வழக்கம்போல அவர் பொன் கேட்டால் மறுக்கவும் முடியாது, கொடுக்கவும் முடியாது ஆதலால் அவருடைய கண்ணுக்குப் புலப்படாது மறைந்து விடுவோம்” என்று கருதினாராம். அது நாற்று நடவுக்காலம். இறைவனும் இறைவியும் பள்ளனும் பள்ளியுமாக நாற்று நடும் வயலுக்குப் போய் உழவுப் பணியாளர்களோடு கலந்து கொண்டனராம். அன்று, அவர்களுடைய திருவடிகளாகிய தாமரைமலர்கள் உண்மையிலேயே வயற்சேற்றிலே மலர்ந்தனவாம்.

இதனையும் இதன் பின் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் கச்சியப்பமுனிவர் பேரூர்ப்புராணம், பள்ளுப்படலத்தில் சுவைமிக்க கற்பனையுடன் பாடியுள்ளார்.

கச்சியப்பமுனிவர் பள்ளுப்படலத்தில் பாடிய செய்திகள் இன்றும் ஆண்டுதோறும் ‘நாற்று நடவு உற்சவம்’ என்ற பெயரில் ஆடிமாதத்தில் உற்சவமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இறைவனும் இறைவியும் தேவேந்திரகுல வேளாளர் சமூக மடத்துக்கு எழுந்தருளுவர். பள்ளனும் பள்ளியுமாக நாற்று நடுவர். இதற்கு என அமைந்த வயலில் இவர்கள் நாற்று நட்டபின்தான் பிற வயல்களில் நாற்று நடவு தொடங்கும். இவ்விழாவின்போது தேவேந்திரகுல மகளிர் கூடிப்பாடும் மழைப்பாட்டில் கச்சியப்பமுனிவர், சுந்தரமூர்த்தி நாயனார் முதலியோர் தொடர்பான பல செய்திகள் வருகின்றன.

சட்டியில்லோ மாக்கரைச்சோம்
சாலையெல்லாம் கோலம்போட்டோம்
கோலம் கலையலையே
கொள்ளைமழை பெய்யலையே
நாஞ்சிலுக்கு நெல்லுவாங்கிக்
காஞ்சிடாமே வெதைச்சோமே
காஞ்சிமுனிவர்க்குப் பேஞ்சமழை
காஞ்ச எங்களுக்குப் பேயலையே

என்று பேரூர்ப் பகுதியில் வழங்கும் நாட்டுப்பாடல், கச்சியப்ப முனிவர் இப்பகுதியில் வறட்சிக் காலத்தில் தம் தவத்தால் மழை பெய்வித்த அரியசெயலுக்கும் அவருடைய பெருமைக்கும் சான்றாகும்.

பள்ளர் சமூகத்தினருக்குத் திருப்பேரூர் பட்டிப்பெருமான் திருக்கோயிலில் முதலில் தேர்வடம் பிடித்தல் முதலிய உரிமைகள் உண்டு. அம்பிகையாகிய பச்சைநாயகியைத் தங்களில் ஒருத்தியாகவே தேவேந்திரகுல மகளிர் கொண்டாடுவர்.

சுந்தரரைப் பற்றிய மற்றுமொரு பழங்கதை.

தலயாத்திரையின்போது நம்பியாரூரர் பசியால் வாடியபோதெல்லாம் இறைவன் சோறும் நீரும் கொண்டுவந்து அவருடைய களைப்பைப் போக்கிய செய்திகள் பெரியபுராணத்தில் பெறப்படுகின்றன. “பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்” என்று அவரே பாடுகின்றார். திருக்கச்சூரில் இறைவன், வறுமை என்பதை அறியாத பெரியசெல்வர்கள் மனைதோறும் இரந்து வந்து சுந்தரரை உண்பித்தானாம். அவன் ஆணையிட்டால் உடனே நிறைவேற்ற தேவர் முதலியோர் எண்ணற்றவர் காத்திருப்ப, தானே ஓர் அந்தணக் கோலத்தில், கண்டவர்கள் மனம் உருகக் கடும்பகற்போதில் மிடியிலா (வறுமை இல்லாத. ஏழைகள் வீட்டில் ஏதோ ஒருவகைக் கறிதானே கிடைக்கும்!) மனைகள்தோறும் இரந்து வந்து ஆருரை உண்பித்த இறைவனுடைய அருட்செயலும் ஆருரரின் அடிமைத் திறமும் அன்பர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. தங்களூரிலும் அத்தகைய அருள்வெளிப்பாடு நிகழ்ந்ததாகக் கூறி மகிழ்ந்தனர்.

பேரூருக்கு வடக்கே மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் துடியலூர் என்றோர் ஊர் உள்ளது. அதன் பழைய பெயர் ‘துடிசை’ என்பது. ‘துடியன்’ என்ற இருளர் தலைவனால் ஆளப்பட்ட அப்பகுதி துடிசை என வழங்கப் பெற்றுப் பின் துடியலூர் ஆயிற்று.

சுந்தரமூர்த்தி நாயனார் மலைநாட்டுக்குச் செல்லும்போது அடர்ந்த இக்காட்டுப் பகுதியில் வழிதவறி, பசியாலும் தாகத்தினாலும் வருந்தினாராம். அப்பொழுது அடியவர்க்கு இரங்கி, இறைவனும் இறைவியும் இருளவேட்டுவராக வந்து கீரைக்கறியுடன் உண்பித்தனராம். இவ்வாறு இக்கதையைக் கூறுகின்றது, பிற்காலத்தில் எழுந்த துடிசைப்புராணம். சுந்தரருக்கு இவ்வாறு விருந்தளித்தமையால், இங்குள்ள திருக்கோயிலில் இருக்கும் இறைவருக்குப் பெயர், ‘விருந்தீசர்’ என்பதாம்.

இன்னொரு வேடிக்கையான கதையும் வழங்குகின்றது. துடியலூருக்கு மேற்கே, ‘கக்குமலை’ என்றொரு குன்றுளது. சுவையாக இருந்த கீரைக்கறியை அதிகமாக உண்டுவிட்ட சுந்தரர், இம்மலைக்கு அருகில் வந்தபோது கக்கினாராம். அதனால் இந்தக் குன்றுக்குக் ‘கக்குமலை’ என்ற பெயர் வந்ததாம்.

இவையெல்லாம் பெரியார் ஒருவரைக் குறித்து எப்படிப் பாமரமக்களிடம் ‘பழஞ்செய்திகள்’ (legends) உருவாகின்றன, அவை எப்படித் தலபுராணங்களில் ஏற்றம் பெறுகின்றன என்பதற்குச் சான்றுகளாகும்.

அதிசயமான பொருளால் பிறந்த கதை

பேரூரிலும் சுற்றுப்புறங்களிலும் சாம்பல்மேடுகள் காணப்படுகின்றன. அவை சாம்பற்குளம் (சாமக்குளம்) என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றின் தோற்றத்துக்கு மானுடவியலார் ஒரு காரணம் கூறுவர். ஒருகாலத்தில் இப்பகுதி மேய்ச்சல் காடுகளாக இருந்தன. கால்நடைகளை மேய்ப்பவர்கள் இங்கு தங்கியிருந்தனர். கால்நடைகளின் சாணங்களை ஓரிடத்தில் குவித்து வைத்திருந்தனர். மேய்ச்சலுக்கு அந்த இடத்தைவிட்டு வேறிடம் செல்லும்போது சாணிமேட்டுக்கு நெருப்புவைத்துச் சாம்பலாகினர். இதுவே சாம்பல்மேடுகளுக்குக் காரணம் என்று அவர்கள் விளக்குவார்கள். திருப்பேரூர் இறைவனுக்குப் ‘பட்டியப்பன்’ என்று பெயர். பட்டி என்பது மாட்டுத் தொழுவத்தையும் மாட்டினையும் குறிக்கும். இப்பெயர் மானுடவியலார் கருத்துக்கு அரண் செய்கின்றது.

ஆனால் பாமர மக்களுக்குச் சாம்பல்மேடு ஓர் அதிசயம். ஓரிடத்தில் இத்தனை சாம்பல் இருக்கக் கூடுமா என அதிசயித்த உள்ளூர்மக்கள் இந்தச் சாம்பல் மேட்டினைத் திருநீற்றுமேடு என அழைத்தனர். இந்த மேட்டிலிருக்கும் திருநீறு பல நோய்களுக்கு மருந்து என நம்பினர். பண்டைக் காலத்தில் யாரோ பெரிய தவமுனிவர்கள் செய்த பெரிய யாகத்தில் விளைந்த சாம்பல் என அவர்கள் நம்பினர். பிரமதேவர் சிவபெருமானுக்கு உவகை தோன்றும் வகையில் வளர்த்த யாகக் குண்டத்தின் சாம்பலே இந்தத் திருநீற்றுமேடு என்று பேரூர்ப்புராணம், வடகயிலாயப் படலம் கூறுகின்றது.

மக்களின் இந்த நம்பிக்கையைக் கச்சியப்ப முனிவர், பேரூர்ப்புராணம், திருநீற்றுமேட்டுப் படலத்தில் கதை வடிவில் பதிவுசெய்து வைத்துள்ளார். பிரமகுண்டமாகிய திருநீற்றுமேட்டின் விபூதியைத் தரித்தவர்க்குப் பிரமராட்சசம் மட்டுமன்று, மலடு நோய் பாவம் முதலியனவும் நீங்கி, இம்மைப் பொருளும் சுவர்க்கமும் முத்தியும் கிடைக்கும் எனப் பேரூர்ப் புராணம் கூறுகின்றது.

இத்தொடரின் முடிவாகத் தெரியும் சில செய்திகள்

தலபுராணம் என்னும் இலக்கிய வகை தமிழில் 12-ஆம் நூற்றாண்டில் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பாரால் பாடப்பட்ட திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் என்னும் நூலிலிருந்து தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை தமிழ் இலக்கிய உலகில் செல்வாக்குடன் இருந்தது. சமுதாயமும் தமிழ் இலக்கியமும் பயனடைந்ததனால்தான் இந்த இலக்கிய வகை ஆறு நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில் பயிலப்பட்டு வந்தது.

இது சமயச் சார்புடையது என்ற காரணத்தால் பிற்காலத்தில் பயிற்சியில்லாது ஒழிந்தது.

“சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத சிரப்பொருளைமிகத் தெளிந்தும் சென்றால் சைவத் திறத்தடைவர்” என்று சைவ சாத்திரம் கூறுவதால், சிவநெறி நிற்போர், புராணங்களையும் படித்தனர்; படைத்தனர்.

தலபுராணங்கள் சைவசித்தாந்தக் கொள்கைகளைக் கதைகள் வாயிலாகவும் உபதேசமொழிகளாகவும் மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் கூறின.

16, 17 நூற்றாண்டுகளில் அந்நிய சமயத்தினராலும் அந்நிய மொழியினராலும் தமிழர் உரிமை இழந்து, செல்வமிழந்து, கல்வி கற்கும் வாய்ப்பிழந்து வாடிச் சோர்வுற்று இருந்தபோது, “நீங்கள் வாழ்வது வெறுந்தரையன்று; புண்ணியம் பூத்தது. உங்கள் குளம் புழுத்த வெற்றாந் தரையன்று; தேவர்கள் ஆடியது. முயன்றால் முழு இன்பம் விளையும்; ஆற்றல் சுரக்கும்; வழிபட்டால் ஆண்டவன் அருள் பொங்கும்…” என்று புராணங்கள் ஊக்கின.
— (தெ.பொ.மீ. திருவிளையாடற் புராணம், முன்னுரை, பக் 23-25)

தமிழ் இலக்கியத்தில் புராணம் என்பது மிகவும் சிறப்பான ஒரு பகுதி. வெறும் புனைந்துரை என்று அவை அத்தனையையும் தள்ளிவிடுதல் ஆகாது. திருக்குறள் போன்ற நூல்கள் மக்களை நல்வழிப் படுத்தியது போலவே, புராணங்களும் தெய்வபக்தியை ஊட்டி, தமிழ்ச்சுவை மூலமாகவும் தலக்கதைகள் மூலமாகவும் மக்களை நல்வழிப்படுத்தி வந்திருக்கின்றன; பெருமை கொளச் செய்திருக்கின்றன. இவற்றால் தமிழ்மக்கள் வாழ்க்கையும் பண்பாடும் வளம் பெற்றிருக்கின்றன.
— (மு.அருணாசலம், தமிழிலக்கிய வரலாறு, 16-ஆம் நூற்றாண்டு. பக் 260)

(நிறைவுற்றது)

6 Replies to “தலபுராணம் என்னும் கருவூலம் – 7 [நிறைவுப் பகுதி]”

 1. This is what KanchiMahaswamigal has to say about sthala puranas:

  “In teaching us lessons in dharma also the Sthala Puranas are in no way inferior to the major Puranas. It is in fact these local Puranas which are a few hundred in number that throw light on the finer points of dharma. Unfortunately, even the religious-minded among the educated class today think poorly of them. But, until recently, these Puranas were treated with respect by learned men in Tamil Nadu. Distinguished Tamil scholars have written Puranas after those existing in the name of great sages and also a number of Sthala Puranas. There are works in Tamil describing the importance and significance of places and temples – they are known variously as Sthala Puranas, manmiyam, kalambagam, ula, etc. (“Mahima” means greatness or glory; manmiyam is its Tamil form. )

  Tamil literature is divided into the Sangam, Tevaram-Divyaprabandham and Kambar-Ottakuttar periods. Scholars describe the 16th century as the period of the Sthala Puranas. The chief authors of such works are Kamalai Jnanaprakasar and Saiva Ellappa Navalar. We know the worthiness of Sthala Puranas from the fact that among their authors are Kacchiyappa Sivachariyar (he composed the Kanda Puranam), Paranjyoti Muni (he is the author of the Thiruvilayadal Puranam), Umapati Sivachariyar (a distinguished teacher of Saivism), Sivaprakasa Svami, the Irattai Pulavars, Antakkavi Viraraghava Mudaliar, Kottaiyur Sivakkozhundu Desigar, Trikuta Rasappakavirayar. In recent times there was Mahavidvan Minaksisundaram Pillai who was the guru of U. V. Svaminatha Ayyar. He has written a number of Sthala Puranas. We learn from this that Sthala Puranas have a place of honour in the Tamil religious tradition and literature.

  A distinguished Sanskrit scholar and authority on the sastras, Karungulam Krsna Sastri, has written a Tamil work called Vedaranya Mahatmyam.

  Tamil rulers gave their support to Sthala Puranas and their propagation. More than four and half centuries ago, the Puranas relating to Pancanadaksetra (Tiruvaiyaru, Tanjavur) was translated into Tamil. The translator mentions that he undertook the work as desired by Govinda Diksita who was responsible for the founding of the Nayaka kingdom of Tanjavur. “

 2. அருமை! நன்றி! தகவல்களை சுவையாகவும் தந்தமைக்கு பல வணக்கங்கள்! மக்களின் மனம் இறைவனை நோக்கிச் செல்லும்படியாக இந்தக் கட்டுரைகள் அமைந்துள்ளன! நன்றி!

 3. பள்ளர், பள்ளியர் வடிவர் சிவபெருமானும், தேவியும் வந்து நாற்று நட்ட கதையும், அதைக் கொண்டாடும் சமூக நடைமுறையும் படித்து மெய்சிலிர்க்கிறது. நம் மரபு பற்றிக் கொண்ட பெருமிதம் அதிகரிக்கிறது.

  முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
  மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
  பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
  பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே

  என்று மணிவாசகர் பாடியதன் பொருள் இது தான் போலும்!

  ஆரமாய மார்புடை ஆனைக்காவில் அண்ணலை
  வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே.

  அன்று சம்பந்தர் தேவாரத்திலும் வருகிறது. திருவானைக்கா இறைவன் ஆரம்சூடிய கதையும் மிக அருமை.

  தலபுராணங்கள் பற்றி விரிவாகப் பல அரிய செய்திகளைத் தந்த அருமையான தொடர். முனைவர் ஐயா அவர்கள் நாட்டார் மரபுச் செய்திகளையும் இணைத்து வழங்கியது மிகவும் சிறப்பாக இருந்தது.

 4. Pingback: Indli.com
 5. மிகசிறந்த கட்டுரை தொடர். பல அறிய செய்திகளை தந்தது. மேலும் பல பகுதிகள் வரும் என எதிர்பார்த்தோம். உங்களின் சைவ சமய தொண்டு சிறக்க, ‘அடல்வல்லனின் பொற்பாதங்களை’ வணக்குகின்றேன்.
  நன்றி.

 6. தாழ்த்தப்பட்ட வகுப்பு என்ற பேதமெல்லாம் இறைவனுக்குக் கிடையாது. இந்து தர்மத்திற்கும் கிடையாது என்ற விஷயத்தை அழகாகச் சொல்லுமு; கட்டுரை இது. இதை விட சுந்தமூர்த்தி ஸ்வாமிகள் பற்றிய பல சுவையான செய்திகளையும் இது சொல்கிறது. மிக்க நன்றிகள். நாட்டாhர் வழக்கியல் பற்றியும் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தமதம் பற்றிய அபூர்வத் தகவல்களையும் மிகவும் ஆழமாக எவரேனும் ஆராய்வது சிறப்பு.

  ஆரமாய மார்புடை ஆனைக்காவில் அண்ணல் அருளால் முனைவர் பெருமான் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *