இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 8 [நிறைவுப் பகுதி]

வருடம் 2007-இல் நான் பெற்ற அந்த அனுபவத்தை நினைத்துப் பார்த்தால், இன்றும் எனக்கு முதுகெலும்பில் ஒரு சிலிர்ப்பு வரும். அந்த வருடம் நானும் எனது மனைவியும் அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் உள்ள எங்கள் மகன் வீட்டிற்குச் சென்றிருந்தோம். விடுமுறையில் பக்கத்து மாநிலத்துக்கு எல்லோரும் போய், அங்கு அருகில் உள்ள சில தீவுகளுக்கும் போய் வரலாம் என்று எனது மகன், மருமகள் எல்லோரும் திட்டமிட்டனர். அங்கு போய் எந்த விடுதியில் தங்குவது என்பதிலிருந்து, என்று எந்தத் தீவுக்குப் போவது என்று எல்லா முன்னேற்பாடுகளும் நடந்து முடிந்து விட்டன. நாங்களும் போய் விடுதியில் இறங்கிவிட்டோம்.

ஒவ்வொருவரும் விடுதி அறையின் ஒவ்வொரு அமைப்புகளையும் பார்த்துக்கொண்டே வந்தோம். பார்த்து விட்டு எல்லோரும் அமைதியாக உட்கார்ந்துகொண்டு பேச ஆரம்பிக்கும்வேளை, நான் விடுதியில் உள்ள நீச்சல் குளத்தை ஒரு ஜன்னல் வழியாகப் பார்க்க நேர்ந்தது. எனது பதினேழு மாதமே வயதான பேரனுக்கு தண்ணீர் இருக்கும் இடம் நிறைய பிடிக்கும் என்பதால், அவனுக்கு அதைக் காட்ட எண்ணி அவனை ஜன்னல் அருகே தூக்கிப் பிடித்துக் காண்பித்துக் கொண்டு நின்றிருந்தேன். அந்த ஜன்னலில் பக்கவாட்டில் நகரும் இரண்டு கண்ணாடி மூடிகளும், அதே போன்ற ஒரு வலைப்பின்னல் மூடியும் இருந்தன. சிறிது நேரம் அவனைப் பிடித்துக் கொண்டிருந்த நான், ஜன்னலின் விளிம்பு வாட்டமாக இருக்கவே அவனை அப்படியே நிறுத்தி விட்டு அவனுக்குப் பக்கத்திலேயே உட்காரலாம் என்று நினைத்து ஒரு நாற்காலியையும் இழுத்துப் போட்டுக் கொள்ள முயற்சித்தேன்.

fallen-toddlerஎங்களது துரதிருஷ்டம் ஜன்னலின் இரண்டு கண்ணாடி மூடிகளும் வெவ்வேறு புறத்தில் இல்லாது ஒரே புறத்தில் இருந்து, மீதிப் பாதியில் வலைப்பின்னல் மூடி மட்டும் இருந்தது. அதை நாங்கள் கவனித்திருக்கவில்லை. கண்ணாடிப் பக்கம் நின்று கொண்டிருந்த எங்கள் பேரன், மெதுவாக நகர்ந்து வலைப்பின்னல் அருகே வந்து விட, அவனது பாரத்தைத் தாங்காத வலைப்பின்னல் மூடி கழன்றுகொள்ள, அந்த மூடியுடன் குழந்தை பதினைந்து அடி கீழே சிமெண்ட் தரையில் விழுந்துவிட்டான். எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது. நான் பேரன் எங்கே என்று தேடுகிறேன்; ஆனால் அவன் விழுவதைப் பார்த்துவிட்ட எனது மருமகளின் கூக்குரலால்தான் எனக்கு என்ன நடந்தது என்று கொஞ்சம் தெரியவந்தது. நானும் எனது மகனும் கீழே ஓடினோம். குழந்தை அழுதுகொண்டே முகத்தில் ரத்தக் காயங்களுடன் எழுந்து வந்தான்.

அங்கிருந்தவர்களின் உதவியால், எண்ணி நான்கே நிமிடங்களில் அவசர சிகிச்சை வண்டி வந்து, குழந்தையையும் அவன் தாயாரையும் அழைத்துக்கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு விரைந்தது. அவர்கள் பின்னாலேயே என் மனைவியும், மகனும் கார் ஒன்றில் மருத்துவமனைக்கு விரைந்தார்கள். நான் அவர்களிடம், “பயப்படும்படியாக ஒன்றும் நடக்காது…” என்று சமாதானம் சொல்லிக்கொண்டே, என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தவர்களிடம், அவர்கள் எடுத்துச் செல்லவேண்டிய போன், செருப்பு முதலியவைகளை எடுத்துக் கொடுத்து அவர்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். 

ஒன்று நன்றாக ஞாபகம் இருக்கிறது; இதோ இந்தக் கட்டுரையை தட்டச்சில் தட்டி கொண்டிருக்கிறதே, இதே கைகள்தான் அந்தக் குழந்தையை ஜன்னலில் தூக்கி வைத்தது என்ற குற்ற உணர்வு எனக்கு அப்போது இருந்தாலும் ‘எல்லாம் நல்லபடியே முடியும்’ என்ற நம்பிக்கை வலுவாக இருந்ததால் எந்த விதமான தடுமாற்றமும் எனக்கு அந்த நேரத்தில் இல்லை. என்னையும் மருத்துவமனைக்குக் கூப்பிட்டார்கள்; நானோ, “வேண்டாம், கூட்டம் போட்டு என்ன பயன், நான் இங்கேயே இருக்கிறேன், எனக்குத் தகவல் மட்டும் சொல்லுங்கள்” என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டேன்.

விடுதியில் தனியாக உட்கார்ந்திருந்த நான் பகவான் ரமணர் படத்தைத் தேடினேன். எப்போதும் எங்காவது ஒரு படம் வைத்திருக்கும் எனக்கு அன்று பார்த்து ஒன்றும் கிடைக்கவில்லை. ஏதோ ரமணர் DVD ஒன்றை வீட்டை விட்டுப் புறப்படும் முன் பை ஒன்றில் எடுத்து வைத்தது அப்போதுதான் ஞாபகம் வந்தது. உடனே அதைத் தேடி அதில் இருக்கும் ரமணர் படத்தை எனக்கு முன் வைத்துக் கொண்டு, எனக்கு ஞாபகம் இருந்தவரை அருணாசல நாமாவளியைச் சொல்ல ஆரம்பித்தேன். சிறிது நேரம் கழித்து அந்த விடுதி அலுவலர்கள் வந்து என்ன நடந்தது, எப்படி நடந்தது என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டு, அந்த இடங்களை எல்லாம் ஆராய்ந்துவிட்டுப் போனார்கள். நான் மருத்துவமனைக்குப் போக ஏற்பாடு செய்யவா என்றும் கேட்டார்கள். நான் அங்கேயே தங்கி பிரார்த்தனை செய்வது நல்லது என்று எனக்குத் தோன்றுவதைச் சொன்னதும், காபியாவது சாப்பிடுங்கள் என்று சொல்லி, கொடுத்து அனுப்பினார்கள்.

baby-falling-downஅவர்கள் அங்கு இருக்கும்போதே ஆஸ்பத்திரியில் இருந்து என் மகனிடமிருந்து முதல் போன் வந்தது. காயங்கள் தவிர, குழந்தை உடல் நிலை சீராக இருப்பதாகவும், உதட்டில் நான்கு தையல் போட்டுக் கொண்டிருப்பதாகவும் என் மகன் சொன்னபோது நாங்கள் சற்று நிம்மதி அடைந்தோம்..இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, எனது பாராயணத்தையும் தொடர்ந்தேன். மேலும் சில தகவல்கள் வந்து நல்ல நிலை தொடர்வதை உறுதிப்படுத்தியது. ஆனாலும் குழந்தையை இன்னும் சில மணி நேரங்கள் சோதனையில் வைத்துப் பார்த்துவிட்டு, ஐந்து மணி நேரம் கழிந்தபின் அனுப்பி வைத்தார்கள். அதுவரை நான் அமைதியாய் இருந்தவன், அப்போதுதான் நிலைமை எவ்வளவு விபரீதமாக ஆகியிருக்கலாம் என்பதை உணர்ந்து, ஆண்டவனிடம் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டேயிருந்தேன். அன்று தூக்கம் ஏதும் கிடையாது. கண்ணை மூடினால் ஒருவித பயம்தான் மனதைக் கவ்வும்.

குழந்தையோ தனது காயங்களுடன் மறுநாளே இங்கும் அங்குமாக அலைந்துகொண்டு எங்களைத் துயரத்திலிருந்து மீட்டுக் கொண்டிருந்தான். அங்கேயே மூன்று நாள்கள் இருந்துவிட்டு, நாலாம் நாள் பிரயாணம் செய்யலாம் என்ற நிலை வந்ததும், எங்கள் ஊர் பக்கம் திரும்பி வந்தோம். ஊர் வந்த உடனே அவனது வழக்கமான மருத்துவரிடம் அவனை அழைத்துச் சென்றார்கள். அவரும் நன்கு சோதித்துவிட்டு, “எல்லாம் சரியாக இருக்கிறது. ஒரு miracle தான் நடந்திருக்கிறது!” என்றார். இப்படியாக எங்கள் அருகாமையிலேயே நடந்த ஒன்றுக்கு நாங்கள் சாட்சியாக நின்றோம். இறைவனும் தனது இருப்பைக் காட்டி அருளினார்.

சென்ற வருடம் 2009-ல் எங்களது தூரத்து உறவினர் ஒருவருக்குப் புற்றுநோய் கண்டது. சுமார் ஒரு வருட காலமாக அவர் நோயால் அவதிப்பட்டார். அவருக்கு வேண்டிய சிகிச்சைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. ஆனாலும் அவரது நெருங்கிய உறவினர்களுக்கு அவரை யாரும் சந்தித்துத் தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்று தோன்றியது போல் இருக்கிறது. அவரது பிரச்சினையைப் பற்றிப் பேசுவதை மிகவும் தவிர்ப்பார்கள். பார்க்கப் போவதையும் அவ்வளவாக விரும்பவில்லை. நானே அவரை எப்போதாவது தான் சந்திப்பது வழக்கம். அவர் நோயுற்றபோது, நான் அவரைப் பார்க்கவே இல்லை.

prarthanaaஅவர் நன்றாக இருந்தபோது, நான் ஒருநாள் அவரைக் கடைத்தெருப் பக்கம் சந்தித்தது ஞாபகம் இருந்தது. ஒரு நாள் இரவு சுமார் பதினோரு மணி இருக்கும்; நான் ஏதோ படித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அவருடன் நடந்த அந்தச் சந்திப்பு என் நினைவிற்கு வந்தது. அவர் இவ்வளவு அவதிப்படுகிறாரே, நாமும் பார்க்க இயலாது இருக்கிறதே என்று தோன்றிற்று. அதற்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை. படுக்கை அறைக்கு வந்து, அவருக்கு எல்லாம் நல்லபடி நடக்க வேண்டும் என்று மனதில் தோன்றவே, அவர் உருவை மனத்தில் இருத்தி அவர் நலனுக்காக படுத்துக் கொண்டே இருட்டில் மனதுக்குள் நாமாவளியைப் பாராயணம் செய்தேன். சாதாரணமாக அப்படிச் செய்யும்போது முன்பெல்லாம் நான் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறேன், அல்லது மனம் சிதறி பாதியில் நிறுத்தி இருக்கிறேன். அன்று முழுதும் அவர் நினைவாக இருந்தேன்; பாராயணமும் முழுமையாக நிறைவேறியது. இனி ஆண்டவன் சித்தம் என்று தூங்கிவிட்டேன். மறுநாள் மதியம் அவர் காலமாகி விட்டதாக எங்களுக்குச் செய்தி வந்த போதுதான், முன்னிரவு நடந்ததை என் மனைவியிடம் சொன்னேன். 

ஆக, பிரார்த்தனை அல்லது வேண்டுதல் என்பது இதுதான் நடக்கும் என்றோ, அல்லது நடக்க வேண்டும் என்றோ நினைப்பது அல்ல. நல்லது நடக்க அவன் அருளை வேண்டி, அவன் துணையை நாடி, அவன் அளிப்பதை ஏற்றுக் கொள்ளும் மனதை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதுதான் நான் இதுவரை கற்ற பாடம். அவன் அருள் என்றும் உள்ளதே. அதைப் பெறும் தகுதியை நமக்கு அருளுவதும் அவன் அன்றி வேறு யார்?

ஏன் எனது சொந்த அனுபவங்களைப் பற்றிப் பிரலாபிக்கிறேன் என்று சிலர் கேட்கிறார்கள். மேலே சொல்லப்பட்டதில் எதை நான் சொந்தம் என்று கொண்டாடுவது? சாட்சியாகப் பார்த்தேன் என்பதைத் தவிர அதில் சொந்தம் கொண்டாட என்ன  இருக்கிறது? ஏன் அனுபவங்களை எழுதினேன் என்று கேட்டால் பதில் சொல்ல முடியும். ஒரு கட்டுரை எழுதும்போது பல சமயம் நம் கண்ணுக்குப் புலப்படாத, அறிவுக்கு எட்டாத விஷயங்களை ‘இங்கு சொல்லப்பட்டிருக்கிறது, அங்கு சொல்லப்பட்டிருக்கிறது; இது அனுமானம், இதை ஏற்றுக்கொண்டால் அது புரியும்’ என்றெல்லாம் சொல்கிறோம். அந்த வகையில் இல்லாது, இது நடந்தது என்று உள்ளதை உள்ளவாறு கூறும்போது வரும் படிப்பினையே ஒரு சிறப்பு அனுபவம்தான் என்று நினைத்தே, இது நாள் வரை சிறிய வட்டத்தில் வைத்திருந்த நினைவுகளை பெரிய வட்டத்திற்குக் கொண்டு வந்தேன்.

vanakkamஎந்த அனுபவங்கள் முக்கியமானது அல்லது ஏதேனும் ஒருவகையில் பயனளிக்கும் என நினைத்தேனோ, அந்த நினைவுகளை உங்களிடம் பகிர்ந்துகொண்டேன். இதுவரை என் நினைவலைகளில் என்னுடன் பயணித்த வாசகப் பெருமக்களுக்கு மிக்க நன்றி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள் வரும். அவை ஒவ்வொன்றிலும் ஏதாவது நாம் கற்றுக் கொள்ளும்படியாகவும் இருக்கலாம். நிகழ்வுகள் நடக்கும்போது நடத்துபவனை நினைத்துக் கொண்டிருந்தால் போதும் என்பதுதான் என் தாழ்மையான எண்ணம்.

வணக்கம்.

=========

குறிப்பு: …. காலை சுமார் ஏழு மணி அளவில் ஆரம்பித்து மாலை நான்கு மணிக்குள் 108 வரிகளைக் கொண்ட தொகுப்பாக அமைந்தது. மௌலியின் யோசனைப்படியே அதற்கு “அருணாசல அக்ஷர நாமாவளி” என்று பெயரிடப்பட்டது. இதற்குமுன் நான் ஒரே நாளில் இவ்வளவு எழுதியதில்லை. திருவண்ணாமலைச் சாரலிலே உருவாகி, ஆஸ்ரம நிழலிலேயே இது வளர்ந்ததால் ரமணரின் அருள் இல்லாது இது நடந்திருக்கும் என்று நினைக்க இடமே இல்லை. ஆதலால், இது ‘ரமணா’ என்ற புனைப் பெயரில்தான் அளிக்கப்படுகிறது…. [வாசிக்க, பகுதி 5]
 

அருணாசல அக்ஷர நாமாவளி

— “ரமணா” —

 ஓம்  ஸ்ரீ  குருப்யோ நமஹ

“அருணாசலமே சிவனின் நாமம்,
  அருணகிரியே சிவனின் ரூபம்”
அண்ணாமலையே அருணாசலனாம்
                                      (அருணாசலமே சிவனின் நாமம்)

ஆனந்த வெள்ளத்தை யார்க்கும் அளிக்கும் (அ)
இன்ப துன்பங்களில் என்றுமே நிற்கும் (அ)
ஈகையறியா உள்ளத்தைத் திருத்தும் (அ)
உள்ள பொருளாய் என்றும் விளங்கும் (அ)
ஊமையாக என்னை மௌனத்தில் சேர்க்கும் (அ)
எப்பக்கம் நோக்கினும் அப்பக்கம் உள்ள (அ)
ஏது யாது என கேட்போர்க்கு விளங்கா (அ)
ஐம்புலன் அளிப்போன் ஐம்புலன் அழிப்போன் (அ)
ஒருவனானாலும் உலகாய் நிறைவோன் (அ)
ஓங்காரம் தெரிய ஆங்காரம் அழிப்போன் (அ)
ஔடதம் என்றே மலையாய் நிற்போன் (அ)

கண்ணுக்குக் கண்ணாய் காண்போர்க்குத் தெரிவோன் (அ)
காம மோக மத மாச்சர்யம் ஒழிபபோன் (அ)
கிரியென இங்கு காண்போர்க்கு ரூபம் (அ)
கீழோ மேலோ எங்குமே உள்ளோன் (அ)
குற்றம் ஏதும் இங்கு காண்போர்க்கும் உள்ளோன் (அ)
கூற்றுவனுக் கிங்கு காரியமில்லை  (அ)
கெட்டாலும் உய்விக்க எங்களுக் கருள்வோய் (அ)
கேடும் உந்தனின் வீடு காட்டவே (அ)
கைகாட்டியே எங்கள் கரை காட்டும் அருளே (அ)
கொடுப்பதும் எடுப்பதும் உந்தன் செயலே (அ)
கோளாறு வந்திடின் கோள்களை மாற்றும் (அ)
கௌபீனம் தரித்த யோகியாய் உள்ளோன் (அ)

சராசரங்கள் அனைத்திலும் உள்ளோன் (அ)
சாகாமல் சாவதை நொடியினில் உணர்த்தும் (அ)
சித்தர் என்றாலும் முக்தி அளிக்கும் (அ)
சீரும் சிறப்பும் உன்னருள் அன்றோ (அ)
சுற்றும் எந்தனின் சுற்றம் அறுக்கும் (அ)
சூடும் உந்தனின் சுபாவம் அன்றோ (அ)
செய்யும் செயலில் செய்கையும் நீயே (அ)
சேவடி உந்தன் நிழல் படச் செய்வாய் (அ)
சைகை காட்டியே என்னை அழைப்பாய் (அ)
சொல்லின் உயிராய் பொருளாய் விளங்கும் (அ)
சோராது மாறாது உன்னை நினைக்க (அ)
சௌந்தர்யம் மூப்பும் என்றும் அணுகா (அ)

ஞமலியும் நீயும் ஒன்றாய் உதிக்கும் (அ)
ஞாயிறு என்னும் மங்கா ஒளியே (அ)
ஞிமிறால் அன்று நீ குடையப்பட்டாயே (அ)

தனது எனது என்போர்க்குக் கனவாம் (அ)
தானே தான் என்னும் தனதியல் காட்டும் (அ)
திமிரும் உந்தன் அறிவின் குறையால் (அ)
தீயென நின்று எம் தீமை அழிக்கும் (அ)
துயரையும் தந்து துடைத்திடும் அருளே (அ)
தூணோ துரும்போ எங்கும் உள்ளோனே (அ)
தெரியவும் தெளியவும் அறிவைக் கொடுப்பாய் (அ)
தேடியும் கிடைக்காது ஓடோடி வருவோன் (அ)
தையலைத் தன்னிட பாகத்தில் கொண்டோன் (அ)
தொலையா நிற்கு மகந்தையின் மூலம் (அ)
தோஷத்தை நீக்கிச் சந்தோஷத்தை நல்கும் (அ)

நன்னெறி உன்நெறி என்று உணர்த்தும் (அ)
நாடுங்கால் நானுண்டு நாடியபின் நீ (அ)
நிறை என என்னை நீக்கிடுவாயோ (அ)
நீள் நெடுச் சுடராம் உன்னை உணர்வோம் (அ)
நுதல் கண்ணால் எந்தன் நினைவை எரிப்பாய் (அ)
நூல் வழியே காண நூதனப் பொருளோ (அ)
நெருங்க நெருங்க நீ நானானாய் (அ)
நேர் வழியே சென்று நானார் காட்ட (அ)
நைந்த உளத்திற்கு உரனிடுவாயோ (அ)
நொடிக்கு நொடி உன் நாமத்தை எண்ண (அ)
நோக்குவாருக்குன் நோக்கத்தைக் காட்டு (அ)

பற்றற்று இருப்போரும் பற்றுவார் உன்னை (அ)
பாவங்கள் பாசங்கள் யாவையும் அறுப்போய் (அ)
பித்தன் சித்தன் என்று பந்நூலும் கூறும் (அ)
பீலியும் நீலியும் சூலியும் கொண்டோய் (அ)
புத்தம் புதியதாய் காண ஒன்றுண்டோ (அ)
பூபாரம் தாங்க என் பாரத்தைக் கொண்டோய் (அ)
பெயரிட என்ன உருவம்தான் உண்டோ (அ)
பேச்சிலும் மூச்சிலும் உன்னைக் காணவோ (அ)
பைந்தளிர் மேனியும் நீயின்றி என்னாம் (அ)
பொன்னார் மேனியனோ கன்னங் கருப்பனோ (அ)
போரிட்டு வெல்வாயோ மௌனமாய்க் கொள்வாயோ (அ)
பௌதிகமாம் உடல் பற்றறச் செய்வாயோ (அ)

மலையாய் மருந்தாம் நிலையாய் இருந்தாய் (அ)
மாலையும் காலையும் நின்னை நினைப்போர்க் (அ)
மின்னலாம் எண்ணங்கள் மின்னாது மறைய (அ)
மீளாது என்னை நீ மீட்டுச் செல்வாயோ (அ)
முன்வினை என்வினை என்று பாராதே (அ)
மூச்சற நிற்கும் முன் வினையெல்லாம் அறுப்பாய் (அ)
மெய்யிது மெய்யன்று மெய்யாலும் காட்டுவாய் (அ)
மேலென்றும் கீழென்றும் காண முடியா (அ)
மையத்தில் நீ உள்ள உண்மையைக் காட்டு (அ)
மொட்டாக நான் உள்ளேன் மலராகத்தான் செய்வாய் (அ)
மோதாமல் தள்ளாமல் மலரச் செய்வாயோ (அ)
மௌனத்தில் நீ என்னை மறவாதிருப்பாய் (அ)

யமனின் கயிறும் விழுமுன்னே வாராய் (அ)
யாரென்று காட்டவே நீ என்னைக் கொள்வாய் (அ)
யோகமும் உன்னாக ஆகும் வழிதான் (அ)
யௌவன குருவாய் சனகாதி சீடர்க்கு (அ)

ரமணன் என்று நீ இறங்கி வந்தாயோ (அ)
ராட்டினமாம் வாழ்க்கை சுற்றத்தை நிறுத்தாய் (அ)

லட்சியமே என்று என்னை ஆட்கொள்வாய் (அ)
லாபம் பாராது நீ என்னைக் கொள்வாயோ (அ)
லீலா வினோதங்கள் புரிவாயோ என்னிலும் (அ)

வந்தாலும் சென்றாலும் இருந்தாலும் ஒன்றோ (அ)
வாடிய பூவாய் நான் வாடாதிருக்க (அ)
வினையும் அறுக உன் விழியால் உறுக (அ)
வீடுண்டு நின்னருள் விழிநோக்கால் என்றும் (அ)
வெளியென்று சொன்னாலும் உள்ளத்தில் உறைவாய் (அ)
வேறேதும் வேண்டாமே வேறொன்றறியோனே (அ)
வைதேனும் கொள்வாயே வையாமல் தள்ளாதே (அ)

அகத்துறும் ஆனந்த வெள்ளத்தில் போவாயோ (அ)
கண்டத்திலே வைத்தென் விஷத்தை எடுப்பாயோ (அ)
சந்தத்திலே உந்தன் சப்தத்தைக் கேட்பேனோ (அ)
தண்டமிழ்ப் பாவில் உன் தளிர் நடை காண்பேனோ (அ)
நடப்பதெல்லாம் உன் நடையன்றி வேறேது (அ)
பவ நோயை தீர்க்கும் மருத்துவரன்றோ (அ)
மருத்துவர் மற்றும் மருந்தாய் இருப்பாய் (அ)

 ஸ்ரீமுக மார்கழி ஆதிரை நாள் [29 – 12- 1993]

5 Replies to “இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 8 [நிறைவுப் பகுதி]”

 1. மதிப்பிற்குரிய ராமன் அவர்களே

  சிறப்பான முறையில் ஒரு தொடர்க் கட்டுரை தந்தீர்கள்.

  “நான்” என்ற எண்ணம் அழிவதும், இவ்வுயிர் இறைவனடி சேர்வதும் இன்னபிற வழிகளுமாய் ஆன்மீகத்தை அவரவரும் நாட, தங்கள் அக்ஷர மண மாலையில் உள்ள இந்த வரி என்னை ஈர்த்தது.

  “நெருங்க நெருங்க நீ நானானாய்”

  இறைவனை பக்தன் நெருங்கி, இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும்போது, இந்தக் கனவு வித்தியாசமானதாக இருக்கிறது. இங்கே இறைவனை நெருங்கும்போது “நான்” என்ற அகந்தை முற்றிலும் அழிவதை அழகாக, எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். அதே நேரம் நோக்குமிடமெங்கும் நீக்கமற நிரந்த எம்பெருமான் மாத்திரமே சாஸ்வதம், “நான்” எனப்படும் இந்த சீவன் இல்லாதிருக்க எம்பெருமானின் அருகாமை அருள் தரும் என்ற தத்துவத்தையும் இது எளிதாக விளக்குகிறது.

  நீயையும் நானையும் வெகு அழகாகக் கையாண்டிருக்கிறீர்கள்.

 2. திரு. உமாசங்கர் அவர்களுக்கு,

  மிக்க நன்றி. பதிப்பில் ஒரு சிறு தவறு நேர்ந்து விட்டது. “அருணாசல அக்ஷர மணமாலை” பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியால் அருளப்பட்டது.

  இப்பதிகத்தின் மேலே குறிப்பிட்டுள்ளபடி “….அதற்கு “அருணாசல அக்ஷர நாமாவளி” என்று பெயரிடப்பட்டது” என்பதே சரி. இதைப் பதிப்போர்க்குத் தெரிவித்துள்ளேன்.
  விரைவில் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கிறேன். வணக்கம் பல.

  ராமன்

 3. திரு. உமாசங்கர்:

  தாங்கள் ஒரு வரியைக் குறிபிட்டுள்ளீர்கள். அதுபோல் எனக்கு சில காலம் முன்பு வேறு ஒரு எண்ணம் வந்தது. அதை ஒரு சிறு கட்டுரையாக பல மாதங்கள் முன்பு எழுதியிருந்தேன். அதை வலைத் தளத்திற்கு அனுப்புகிறேன். பதிப்பதற்கு உரியதாக இருந்தால் அது வெளி வரலாம்.

  raaman

 4. Pingback: Indli.com
 5. அன்புள்ள ஐயா,

  திரு ராமன் அவரகளின் கட்டுரை மிகவும் அற்புதம். பகவன் ரமணரை
  வாழும் குரு என்று ஒருவர் எழுதியுள்ளார். ஆம். அவர் இன்றும் இருக்கும்
  வாழும் குரு. திருவண்ணமலையில் அவர் சமாதி சந்நிதி மற்றும் பழைய ஹால் இரண்டும் மிகவும் சக்தி உள்ள இடங்கள். அங்கே முனைப்பாக
  ஒருவர் ரமணரை வேண்டி பக்தி செய்தால் எந்த அதிசயமும் நடக்கும்.
  இது சத்தியம். என் வாழ்வில் இது நடந்துள்ளது. நான் அவரை தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை. ஆனால் மற்ற குருக்களை நான்
  நிந்திப்பதும் இல்லை. இதுவும் அவர் கூறிய உபதேசமே. எல்லா குருக்களும் அவரே, அவர் ச்வருபமே. ஆத்மா ஒன்றே தான் உள்ளது.

  மிகவும் நன்றி அற்புதமான கட்டுரைக்காக.

  அன்புடன்,

  சுப்ரமணியன். இரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *