இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 7

nome-at-arunachaleswara-temple-jan-2005-21997-ம் வருடம் கோடை காலத்தில் அமெரிக்காவில் வட கரோலினா மாநிலத்தில் உள்ள ஒரு ஆசிரமத்திற்குச் செல்ல நேர்ந்தது. அந்த சமயத்தில் எழுதப்பட்டதுதான் எனது “உள்ளத்தே உள்ளதே உண்மை”  எனும் கட்டுரையின் ஆங்கில மூலம். அங்குள்ள அனைவரும் அமெரிக்கர்கள்; ரமணரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். அவர் வழியிலேயே, அமெரிக்கர்களுக்கே உண்டான ஒரு முறையை வகுத்து அதன் வழி நிற்பவர்கள். அதன் தலைவருக்கோ ஞான வழி ஒன்றேதான் விருப்பம்; பக்தி வழியில் நாட்டம் கிடையாது. ஆனால் அதன் உப தலைவருக்கோ இரண்டிலும் நாட்டம் உண்டு.

அங்கு உள்ளோர் சிலரை நான் இந்தியாவில் சந்தித்திருக்கிறேன்; பலரைப் பார்த்தில்லை. அப்படிப் பார்க்காத ஒரு மாதுவை அங்கு சந்தித்தேன். அவர் எப்போதும் ஒரு இருக்கையிலேயே அமர்ந்திருப்பதைப் பார்த்து என்ன என்று கேட்கவே, அவர் ஒரு அறுவை சிகிச்சை முடிந்து இரு நாட்கள் முன்பு தான் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருப்பதாகவும், அச்சமயம் ஓய்வெடுத்துக் கொண்டு இருப்பதாகவும் சொன்னார்கள். 

ஓரிரு நாட்கள் கழிந்தபின் அந்த மாதுவை எங்கும் காணவில்லை. அவருக்கு அறுவை சிகிச்சையினால் சில குழப்பங்கள் தோன்றியிருப்பதாகவும், ஆதலால் அவர் மறுபடியும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் கூறினார்கள்.

எனக்கு நாமாவளி பாடி, திருவாரூர் பாட்டி அதிசயமாக ஊர் திரும்பிய ஞாபகம் வந்தது. அந்த உபதலைவரிடம் அதைச் சொல்லி, அந்த மாதுவின் உடல் நலனுக்காக நான் பாட, அவர்கள் அனைவரும் இரண்டாம் அடியை மட்டும் திருப்பிச் சொல்லலாமே என்று சொன்னதும் அவருக்குப் பிடித்திருந்தது. அன்று மதியமே அவர்களின் சத் சங்கம் இருப்பதாகவும், அதனால் அந்தத் தலைவரிடம் நான் சொன்னதைத் தெரிவிப்பதாகவும் சொன்னார்.

parayana-300x225அந்தத் தலைவரோ அதற்கு ஒப்பவில்லை; ஆனாலும் மற்றவர்கள் விரும்பினால் உபதலைவரின் தலைமையில் நாமாவளிப் பாராயணம் நடக்கலாம் என்றும் சொல்லிவிட்டார். அவர் சொன்னபடியே, அவர்களது கூட்டம் முடிந்ததும் அவர் தனது இருக்கையிலிருந்து எழுந்து போய்விட்டார். உபதலைவர் என்னைக் கூப்பிட்டு நடு இருக்கையில் அமரச் செய்து, நடந்தது என்ன என்று என்னை விவரிக்கச் சொல்லிவிட்டு பாட ஆரம்பிக்கச் சொன்னார்கள். நானும் நடந்த மற்ற சம்பவத்தை விவரித்து விட்டு, அவர்கள் “அருணாசலமே சிவனின் நாமம்” என்ற ஈற்றடியைச் சொன்னால் போதும் என்று நாமாவளிப் புத்தகத்தைப் பிரித்தேன். 

சரியாக அப்போது வாசலில் அழைப்பு மணி அடித்தது. அவர்களில் ஒருவர் எழுந்து கதவைத் திறக்கப் போனார். அவர் திரும்பி வந்து, “நாம் இன்னும் கேட்காமலேயே இறைவன் நமது கோரிக்கைக்குச் செவி சாய்த்துவிட்டார்” என்றார். என்ன சமாச்சாரம் என்று உபதலைவர் கேட்க, “ஆஸ்பத்திரிக்குச் சென்ற மாதுவை discharge செய்து அனுப்பிவிட்டார்கள். அவரே வந்துள்ளார்” என்று சொல்லி  அந்த மாதுவை முன்னே வரச் சொன்னார் அனைவரும் மகிழ்ந்து, அவரை நடு இருக்கையில் அமர்த்தி, அன்று அவர் பொருட்டு பாடவிருந்த நாமாவளியைப் பாடி முடித்தோம். அவரும் மற்றவர்களைப் போல ஈற்றடியைச் சொல்லிக் கொண்டே வந்தார். அங்கிருந்த பலரும் “Bhagavan has his own ways” என்று சொல்லி மகிழ்ந்தனர். தலைவருக்கு இந்த விஷயம் போய் சேர்ந்ததா இல்லையா என்பதை நான் கேட்டு அறியவில்லை. அந்தத் தலைவரது இறுதி நாட்களை (இந்த 2010-வருட  ஆரம்பத்தில்தான்) கிரி வலப் பாதையில் அவரே அமைத்த ஆச்ரமத்தில்தான் கழித்தார். அப்போது அவர் தனது முந்தைய கால நடத்தை பலவற்றுக்கும் ஒருவரிடம் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக அறிந்தேன்.

1997-98 வருடங்களில், அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில், ஒரு முனைவராக வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு வந்தது. அப்போது எங்களது வீட்டில் பிரச்சினைகள் பல இருந்ததால், எனது மனைவி 1998 -ல் தான் என்னுடன் சில மாதங்களே தங்கும்படி அமைந்தது. அந்த வருடம் ஜூலை மாதம் இருவருமே சேர்ந்து திரும்பி வருவதற்காக விமான டிக்கெட்டும் வாங்கி இருந்தோம். ஆனால் ஜூன் மாதம் என் மனைவியின் தாயார் உடல் நிலை மோசமாகி சென்னையில் ஆஸ்பத்திரியில் சேரும்படி ஆகிவிட்டது. அவருக்கு நினைவு போய்விட்டதாகவும், முடிந்தால் மனைவியாவது உடனே திரும்பி வந்தால் நல்லது என்றும் எங்களுக்கு தொலைபேசியில் சொன்னார்கள். இன்னும் இரு வாரம் கழித்துத்தான் என்னால் புறப்பட முடியும் என்ற நிலை. ஆதலால் பாஸ்டனில் அப்போது இருந்த உறவினர் ஒருவரின் அதீத முயற்சியால் பதினைந்து மணி அவகாசத்தில் மனைவி புறப்பட்டுச் செல்வதற்கு ஏற்பாடும் செய்தாயிற்று. ஆனால் அவரோ ஜெர்மனிக்குப்   போய், அங்கிருந்து பம்பாய் வந்து அங்கிருந்துதான் சென்னை வர முடியும் என்றபடி டிக்கெட் இருந்தது. எப்படியாவது போய்ச் சேர்ந்தால் சரி என்று முடிவெடுத்து, பம்பாய்-சென்னை விமான டிக்கெட்டுக்கும் இன்னொருவர் மூலம் தனியாக ஏற்பாடு செய்தோம். 

மனைவியை விமானத்தில் ஏற்றிவிட்டு, நான் அவள் சென்னை போய்ச் சேரும்வரை பாஸ்டனிலேயே தங்கலாம் என்று முடிவெடுத்தேன். அன்று வெள்ளிக்கிழமை. மாலை பாராயணம் செய்வேன் என்று என் உறவினர்களுக்கும் தெரியும். அப்போது நான் “அக்ஷர மண மாலை” பாடி முடித்ததும், என் மனைவி தன் தாயை நினைவோடு பார்க்க வேண்டிக்கொண்டு நாமாவளிப் பாராயணமும் செய்யலாம் என்று சொன்னேன். அது போலவே செய்து முடித்தோம். அன்று நடு இரவு சமயம் இருக்கும். ஜெர்மனி ப்ரான்க்பர்ட் விமான நிலையத்திலிருந்து என் மனைவி தொலை பேசியில் அங்கிருந்து சென்னைக்கு நேரே செல்லும் விமானத்திலேயே இடம் கிடைத்து விட்டதாகவும், முன்னை விட பத்து மணி நேரம் முன்னாலேயே சென்னை போய்விட முடியும் என்றும் சொன்னாள். இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு அப்புறம் நன்கு உறங்கினோம். சென்னை சென்ற என் மனைவி தன் தாயைப் பார்க்க முடிந்தது, அவரால் பேச முடியா விட்டாலும் அவருக்கு நினைவு இருந்தது. அது மட்டுமில்லை. இரண்டு வாரங்கள் கழிந்து நானும் சென்னை திரும்பியதும் என்னையும் அடையாளம் கண்டுகொண்டார். இன்னும் பத்து நாட்கள் கழித்தே அவரது காலம் முடிவுற்றது.

ms_subbulakshmiவருடம் 2000 என்று நினைக்கிறேன். ஒரு அலுவலக விஷயமாக ஹைதராபாத் நகரில் உள்ள ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் மூதறிஞர் ராஜாஜி அவர்களின் நண்பரின் பேத்தி. அவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் “ஸ்வதந்திரா பார்ட்டி” என்ற ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்தவர்கள்.  அந்த வட்டாரத்தில் இருந்ததால், நான் சந்தித்த நபருக்கு இசைமேதை இசைக்குயில் திருமதி. M.S. சுப்புலட்சுமி அவர்களிடம் நன்கு அறிமுகம் உண்டு. சென்னை வந்தால் அவர்களை சந்திக்காது போவதில்லை; அப்படியொரு நெருக்கம். 

நான் M.S. அவர்களின் வீட்டின் அருகில்தான் இருக்கிறேன் என்று தெரிந்ததும், அவர் என்னை  M.S. வீட்டிற்குப் போவதுண்டா என்று கேட்டார். நான் இல்லை என்று சொல்லி, அதுபோல் இருப்பவர்களை தொந்தரவு செய்வது கிடையாது என்று சொல்லியும், அவர் கேட்காது சென்னைக்கு தொலைபேசியில் என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். சென்னை வந்தபின் மேலும் எனக்கு phone செய்து அவரிடம் ஒரு appointment -ம் வாங்கித் தந்து விட்டார். M.S. அவர்களைப் பார்க்கும்போது கொடுப்பதற்கு இருக்கட்டும் என்று சில ரமணர் இயற்றிய, மற்றும் அவரைப் பற்றிய புத்தகங்களோடு நாமாவளிப் பிரதிகளையும் எடுத்துச் சென்றிருந்தேன். அன்று நான் சென்ற போது அங்கிருந்தவர் “முதல் நாள்தான் M.S. தனது மகள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது வழுக்கியதால் வந்த இடை பிசகால் படுத்துக்கொண்டு இருக்கிறார். ஆனாலும் தங்களைப் பார்க்க வரச் சொன்னார்” என்று சொல்லி அவரது படுக்கை அறைக்கே அழைத்துச் சென்றார்.

அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றறிந்ததும், அறிமுகம் முடிந்து, முகமன் வார்த்தைகளும் சொல்லி முடிந்ததும், நான் கொண்டுவந்திருந்த புத்தகங்களைக் கொடுத்தேன், அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு ரமணாஸ்ரமம் பற்றியும் விசாரித்ததும்,  நான் நாமாவளிப் பாராயணத்தினால் சில சமயம் உடல் நிலை தேறுகிறது என்று அனுபவங்கள் இருப்பதாலும், அவர் அப்போது இயலாது படுத்திருப்பதாலும், நான் சில அடிகளைப் பாட அனுமதி கேட்டேன். அவர் சம்மதித்ததும், “பலர் தங்கள் பாடலைக் கேட்பதற்குக் காத்திருப்பார்கள், நான் பாடி நீங்கள் கேட்க நான் கொடுத்து வைத்தவன் தான்” என்று சொல்லி, நன்றியும் தெரிவித்துவிட்டு, முதல் ஏழெட்டு அடிகளை அவரைப் பார்த்துக்கொண்டே பாடினேன். ஒவ்வொரு அடியையும் அவர் கண்ணை மூடிக்கொண்டே ரசித்துக் கேட்டாலும், நாமாவளியில் உள்ள,

“ஈகை அறியா உள்ளத்தைத் திருத்தும்,
அருணாசலமே சிவனின் நாமம்”
 
என்ற அடிகள் பாடப்படும்போது அவர் மூடிய கண்ணோடு தன் புருவங்கள் இரண்டையும் உயர்த்தி ரசித்ததை என் வாழ்வில் என்னால் என்றும் மறக்க முடியாது. அப்புறம்தான், அவர் தன் இசைப் பணியைத் தவிர எத்தனை பேருக்கு, எவ்வளவு கொடைகள் கொடுத்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறோம் என்பது என் ஞாபகத்துக்கு வந்தது. அன்றிலிருந்துதான் நாமாவளியில் உள்ள அந்த இரண்டு அடிகளின் விசேஷத்தையும் நான் முழுமையாக உணர்ந்தேன்.

மற்றோர்க்கு மட்டுமல்லாது எனக்கும் ஒரு நேரடி அனுபவம் வேண்டாமா? அதுவும் ஒரு நாள் வந்தது.

2 Replies to “இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 7”

  1. Raman Sir

    Was looking for episode-7 for a long time. Why the big gap after episode 6.

    Ramanujam

  2. Sri Ramanujam,

    I understand that there were many other articles awaiting publications, and so this and the next (the last in the series) took a little back seat. Otherwise, everything is fine. Thanks for the patient wait.

    Raman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *