அறியும் அறிவே அறிவு – 4

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3

பாகம் 4

சீடனுக்கு ஞானம் பற்றிய அறிவு தீர்க்கமாக இருந்தாலும், அவனது வாசனைகளால் உலகை இன்னமும் பார்க்கிறான். அதனுடன் சம்பந்தப்பட்ட நான்-நீ பேதங்களோடு, காலம், தேசம் முதலான மற்ற விருத்திகளையும் பார்க்கிறான். அவனுடைய இந்தப் பார்வைகளுக்கு ரமணர் சொல்வதென்ன?

தன்மை உண்டேல் முன்னிலை படர்க்கைகள் தாம் உளவாம்
தன்மையின் உண்மையைத் தான் ஆய்ந்து – தன்மை அறின்
முன்னிலை படர்க்கை முடிவுற்று ஒன்றாய் ஒளிருந்
தன்மையே தன் நிலைமை தான்

பொருள்: தன்மையாகிய ‘நான்’ என்னும் தேக-ஆத்ம பாவம் இருக்குமானால், ‘நீ’ என்று காட்டும் எதிரில் உள்ளவனும், ‘அவன்’, ‘அவள்’, ‘அது’ என்ற மற்றவைகளும் உள்ளனவாம். நான் என்னும் ஜீவபோத உண்மையை தனக்குள்ளே தான் ஆராய்ந்து, தன்மைக்கு இடம் கொடுக்கும் ‘நான்’ என்னும் ஜீவபாவம் அழிந்து போனால் முன்னிலையாகிய ‘நீ’, படர்க்கையாகிய ‘அவன்’, ‘அவள்’, ‘அது’ என்ற பேத பாவமும் நாசமுற்று எங்கும் ஏக சொரூபமாய் விளங்கும் தன்மை இயல்பே தனது உண்மையான நிலைமை என்று விளங்கும்.

ramana-maharshi-09இந்த இடத்தில், நமது தலைமுறையில் சிறந்து விளங்கிய நோபல் பரிசு பெற்ற பௌதிக விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு முறை கூறியதை நினைவு கொள்ளல் நல்லது. அவர் தனது Relativity Theory (சார்பியல் தத்துவம்) பற்றி முதன்முறையாக விஞ்ஞானிகளுக்கு விளக்கிவிட்டு, பொது மக்களுக்கு விளக்குவதற்காக பத்திரிகை நிருபர்கள் கூட்டத்தில் இப்படிச் சொன்னதாகப் படித்தேன்.

“சார்பியல் தத்துவத்தை சுலபமாப் புரிந்து கொள்ள உங்களுக்கு நான் ஒரு உதாரணத்துடன் சொல்கிறேன். அணுகுண்டு யுகத்தில் மனிதர்கள் எல்லோருமே அழிந்து போய்விட்டால், உலகம் என்று ஒன்றாவது மிஞ்சுமா என்று சிலர் கேட்பார்கள். இல்லை என்றுதான் சார்பியல் தத்துவப்படிச் சொல்வேன். பார்ப்பதற்கு ஒருவரும் இல்லை என்றால், உலகமும் இருக்காது, ஒன்றைச் சார்ந்ததுதான் மற்றொன்றும்” என்றாராம்.

அதாவது ‘நான்’ என்று சொல்வதற்கோ நினைப்பதற்கோ ஒருவர் இல்லையென்றால் மற்றெதுவும் இல்லை என்பதே சான்றோர்கள் அன்றும் இன்றும் அறிந்து சொன்னது.

அது மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவரும் இந்த நிலையை நன்கே உணர்ந்துள்ளோம். ஆனாலும் அதை நாம் ஒரு பொருட்டாக மதித்துப் பார்ப்பதில்லை. அந்த அனுபவத்தை வேறு எவருடையதோ போல ஒதுக்கி விடுவோம். என்ன, சந்தேகமாக இருக்கிறதா?

நாம் தினம் தினம் அனுபவிக்கும் அந்தத் தூக்க நிலையை எண்ணிப் பாருங்கள். கனவு என்று ஏதும் வராத ஆழ் நிலை தூக்கத்தில் ஒருவனுக்கு “நான்” என்ற உணர்வு கிடையாது. அவனுக்கு உலகம் என்பதும் கிடையாது. அதற்காக அவன் இல்லாது போய்விட்டானா? தூக்கத்திலிருந்து விழித்ததும் அவனுக்கு “நான்” என்ற உணர்வே முதலில் வருகிறது, அதன் பின்னரே உலகத்தைப் பற்றிய மற்ற உணர்வுகளும் வருகின்றன. இதை நம்மில் எத்தனை பேர் அலசிப் பார்த்திருக்கிறோம்?

தூக்கத்தை நாம் தினம் தினம் பௌதிக அளவில் நம்மைப் புத்துணர்ச்சி கொள்ள வைக்கும் “re-charge” நிலையாகத்தான நினைத்துக் கொண்டிருக்கிறோமே தவிர, அதை ஆன்மீக அளவில் ஒரு விழிப்பு உணர்ச்சி ஏற்படுத்தும் நிலையாக நாம் கருதவேயில்லை. எப்போது “நான்” என்ற உணர்வு போய் விட்டதோ அப்போதே “மற்றவர்கள்” என்றும் “உலகம்” என்றும் உணர்வு வர முடியாது. இந்த “நான்” என்ற உணர்வு விழிப்பு நிலையில் வந்துகொண்டும், உறக்க நிலையில் போய்க்கொண்டும் இருப்பதால் இதை ஒரு “என்றும் உள்ள” நிலையாகக் கொள்ளமுடியாது. இந்த “நான்” எங்கு எழுந்தது என்று சீடன் மேலும் ஆராய்ந்து தனது உண்மைச் சொரூப நிலையை உணரும்போது, அதே நிலையிலேயே மற்றவர்களும் இருப்பதைக் கண்டு, அந்த நிலையிலேயே நிலைத்திருப்பான். அப்போது பேதங்கள் எப்படி எழும்? இது பேதங்கள் பற்றிய செய்யுள். அடுத்ததாக, காலம் பற்றிய செய்திக்கு வருவோம்.

நிகழ்வினைப் பற்றி இறப்பு எதிர்வு நிற்ப
நிகழ்கால் அவையும் நிகழ்வே – நிகழ்வொன்றே
இன்று உண்மை தேறாது இறப்பு எதிர்வு தேற உனல்
ஒன்றின்றி எண்ண உனல்

பொருள்: இப்போது உள்ள நிகழ்காலத்தைப் பற்றிக் கொண்டுதான் இறந்த காலமும் எதிர்காலமும் நிற்கின்றன. இறந்த காலத்தில் நிகழ்ந்த போதும், எதிர் காலத்தில் நிகழப் போகும் சமயமும் நடப்பவைகள் அந்தந்த நிகழ்காலத்திலேயே நடக்கின்றன. ஆகையால் நிகழ்காலம் என்ற ஒன்றே மூன்று காலங்கள் ஆகின்றன. எனவே இன்றே, இப்போதே என்ற நிகழ்காலத்தின் உண்மையைத் தெரிந்து கொள்ளாமல், இறந்த காலத்தைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் ஆராய்ந்து அறிவது எப்படி இருக்கிறது என்றால் ஒன்று என்ற எண்ணின் மதிப்பை விட்டுவிட்டு மற்ற எண்களை எண்ண முயல்வது போல ஆகும்.

ஒன்று என்ற எண்ணை வைத்துகொண்டு, அதை எவ்வளவு முறை திரும்பவும் உபயோகிக்கிறோமோ அவ்வளவுக்கு ஒரு பெரிய எண்ணை உருவாக்கலாம். அந்த ஒன்று வேண்டாம் என்று ஒதுக்கப்பட்டால் மற்ற எண்களை எப்படி உருவாக்க முடியாதோ, அது போல இன்றைய நடப்பை விட்டுவிட்டு, நேற்றையதும், நாளையதுமான நிகழ்வுகளை எப்படி விவரிக்க முடியும்? ஏனென்றால், இன்று, இப்போது என்பதே நாம் எப்போதும் காணும் உண்மை. நேற்று நடந்தது என்பது நடக்கும் போது நேற்றைய தினத்தின் “இன்றைய” நிகழ்ச்சி. அதுபோல நாளை நடக்கப் போவது என்பது நாளைய தினத்தின் “இன்றைய” நிகழ்ச்சி.

ஆங்கிலத்தில் நிகழ்காலத்திற்கு “present” என்று சொல்லி, அதற்கு விளக்கமும் சொல்வார்கள். ஏனென்றால் நாம் அங்கு present (உள்ளோம் ஐயா) ஆக இருக்கிறோம். அது மட்டுமல்ல; அந்த நிகழ்காலத்தைவிட வேறு ஒரு present-ஐ (பரிசை) நாம் தேடினாலும் வாழ்வில் பார்க்க முடியாது. அது நமக்குக் கொடுக்கும் போதனையே அலாதி. இதில் நாம் காண வேண்டிய அதி உன்னதமான பாடம் என்னவென்றால் எப்போது ஒன்று நடக்கிறதோ, அப்போது நாம் அங்கு இருக்கிறோம் என்ற ஒரேவொரு உண்மையே. ஆனால் நாம் அதை சிறிதும் நினைத்துப் பார்ப்பது கூட இல்லை.

ரமணரின் “நான் ஆன்மாதான்” என்று மதுரையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், பிற்காலத்தில் அதைப்பற்றி “அருணாச்சல அஷ்டக”த்தில் அவரே எழுதியுள்ளதையும் பாருங்கள். முதல் செய்யுளில், “அருணாச்சலம் எனக் கேட்டதும், அதுதான் திருவண்ணாமலை என ஒருவர் சொல்லியும், அது ஏதோ எல்லாவற்றையும் விட மிகப் பெரியது என்று என் புத்தியில் தோன்றிக்கொண்டு இருந்தது. அதன் உண்மைப் பொருளை நான் அறியவில்லை. என் அறிவை அது மயக்கி, என்னை அதன் அருகினில் ஈர்க்க நானும் வந்த போது அது அசலமாய் இருக்கக் கண்டேன்” என்கிறார்.

இரண்டாம் செய்யுள் ஆரம்பத்திலேயே அவர் சொல்வது :

“கண்டவன் எவன் எனக் கருத்தினுள் நாட
கண்டவன் நின்றிட நின்ற அது கண்டேன்”

அந்தச் சமயத்தில் அவர் “காண்பவன் யார்?” எனத் தன்னுள்ளே தேடியதால், “மலையை ‘நான் கண்டேன்’ என்ற கருத்து எழாது, எஞ்சி நின்ற ஆன்மா விளங்கக் கண்டேன்” என்கிறார். அந்த ஒரு நொடியை அவர் விவரிப்பதுபோல் நாமும் ஒரு கோவிலில் தெய்வத்தின் முன் நிற்கும்போது ஒரு வினாடி அப்படிக் கேட்டால், அவன் அருளால் அந்த ஒரு நொடியில் நமக்கும் எல்லாம் விளங்கலாம். ஆக நீங்களும் ரமணர் ஆகலாம்.

ஆகையினால், காலம் என்ற ஒன்றை நாம் சமச் சீராகச் செல்லும் ஒரு பரிமாணம் என்று கொள்ளலாம். அதில் நேற்று என்பது முந்தைய புள்ளி என்றும், இன்று என்பது இப்போதைய புள்ளி என்றும், நாளை என்பது பிந்தைய புள்ளி என்றும் வருகிறது. இந்த கால இடைவெளியை வெகுவாகக் குறைத்தால், முந்தைய-இப்போதைய-பிந்தைய நொடிகள் என்று வரும். இது அனைத்திலும் “இப்போதைய” என்பதே நாம் காணும் உண்மையென்றால், “இந்த நொடி” என்ற ஒன்று மட்டுமே உண்மையாகும். மற்ற நொடிகள், நாட்கள் எல்லாம் வந்து போய்க்கொண்டு இருந்தாலும், எப்போதும் அவைகளை உணரும்வரை சாசுவதமாய் இருப்பது நாம் ஒன்றே என்பதே சீடன் கற்கும் முக்கிய பாடம். “God is Now” என்று போதிக்கும் இந்தச் செய்யுள் காலத்தைப் பற்றியது. காலம் என்றாலே தேசம், இடம் என்ற பரிமாணங்கள்தான் அடுத்ததாக வரும். அதையும் பார்ப்போமா?

நாமன்றி நாள் ஏது? நாடு ஏது? நாடுங்கால்
நாம் உடம்பேல் நாள் நாட்டுள் நாம் படுவம் – நாம் உடம்போ?
நாம் இன்று அன்று என்றும் ஒன்று, நாடு இங்கு அங்கு எங்கும் ஒன்றால்
நாம் உண்டு, நாள் நாடு இல் நாம்

பொருள்: நம்மை நாடித் தீர விசாரிக்கும்போது நம்மைத் தவிர காலமென்பதும், தேசமென்பதும் ஏது? எங்கிருக்கிறது? நாம் என்பது இந்த உடலானால், காலத்தாலும், தேசத்தாலும் உடம்பாகிய நாம் கட்டுப்படுவோம். ஆனால், நாம் இந்த உடம்புதானா? வெறும் உடலாக இல்லாத நாம் எல்லாக் காலங்களிலும் ஏக சொரூபமாக, மாறாமல் இருக்கிறோம். நாட்டில் இங்கேயும், அங்கேயும், எங்கேயும் ஒரே சொரூபமாக நாமாகிய ஞான சொரூபமே இருக்கிறது. காலமோ, தேசமோ இல்லாது நாமே இருக்கிறோம்.

பௌதிக ரீதியாக உடல் என்று ஒன்று வந்துவிட்டால், அந்த உடலைச் சுற்றியுள்ள நாடு, தேசம் உள்பட அனைத்தும் இருக்கும். அவை தவிர உடலுக்கும் உபாதைகள் வந்து, பௌதிக ரீதியாக வளர்ப்பு, மூப்பு என்றெல்லாம் வரும். ரமணரின் இறுதி நாட்களில் அவருக்கு வைத்தியம் செய்ய வேண்டும் என்று அனைவரும் ஆதங்கப்பட்டு ஏற்பாடுகள் செய்ய, அவரோ உடலே ஒரு வியாதி, எதற்காக வியாதிக்கு வந்துள்ள வியாதியைப் பற்றிக் கவலைப் படுகிறீர்கள் என்று கேட்டாராம். ஒரு கட்டத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் வற்புறுத்திய போது, முதலில் எதுவும் வேண்டாம் என்று மறுப்பு சொல்லியவர், மேலும் வந்த வற்புறுத்தலுக்கு இணங்கி “ஆனால் எனக்கு மயக்க மருந்து கொடுக்கக் கூடாது” என்றும் கேட்டுக் கொண்டார். அதற்கேற்ப, மயக்க மருந்து கொடுக்கப்படாமலேயே அவருக்கு அறுவை சிகிச்சை நடந்ததை மருத்துவர்களே மிகுந்த வியப்புடன் பார்த்தார்கள். அந்த அளவுக்கு “தான் உடல் இல்லை, ஆன்மாவே” என்றிருந்த ஜீவன் முக்தர் அவர்.

உடலோ “நான் உடம்பு” என்று சொல்லிக் கொள்வதில்லை. அப்படியென்றால் “நான் உடம்பு” என்று நினைப்பவனோ, சொல்பவனோ யார் என்று பார்க்க வேண்டும். நல்ல தூக்கத்தில் நாம் நாமாக இருந்தும், இந்த உடலின் நினைப்பு இல்லாமல்தானே இருக்கிறோம். அப்பொழுது இந்த உடலும் இல்லை, அதைச் சுற்றியுள்ள உலகமும் இல்லை அல்லவா? ஆக உடலின் நினைவு வரும்போதுதான், ஒவ்வொருவருக்கும் இடம், தேசம், உலகம், பிரபஞ்சம் என்ற எல்லா நினைவுகளும் வருகின்றன. இறுதியில் பார்த்தால், அவைகள் எல்லாம் நமக்கு வரும் நினைவுகளே, நாம் அல்ல. அதேபோல்தான் காலம் என்ற ஒரு பரிமாணமும் நமது உடல் நினைவுகள் வரும் போதுதான் வருகிறது. ஆழ்நிலை உறக்கத்தில், உடல் நினைவு இல்லாதபோது, எங்கே காலம் பற்றிய அறிவு நமக்கு இருக்கிறது? நன்கு தூங்கினோம் என்ற அனுபவம் மட்டும் இருக்கிறது; அதையும் அப்போதைக்கு நம்மால் சொல்ல இயலவில்லை. அனுபவம் இருப்பதால்தான் நாம் இருக்கிறோம் என்று நமக்குத் தெரிகிறது, ஆனாலும் நமக்கு உடல், காலம், இடம் என்ற எந்த நினைவுகளும் அப்போது கிடையாது. நாம் நாமாக மட்டும் இருக்கிறோம், ஆனாலும் அந்த அறிவு அப்போது கிடையாது. நாம் எப்போதும் உள்ளோம் என்பதால் உடல், நாடு, காலம் எதுவும் நாம் இல்லை.

தான் உடல் என்று தன்னைக் குறுக்கிக் கொள்ளாது, தான் எங்கும், என்றும் உள்ள ஆன்மா என்ற நிலையில் ரமணர் இருந்ததால் அவரால் செய்ய முடிந்ததை, உடலளவே உள்ள நாம் புரிந்து கொள்வது முடியாதுதான். நம்மைக் காலத்தாலோ, தேசத்தாலோ குறுக்கிக் கொள்ளாது இருக்கும் மனோபாவம் வளர, வளர அதுவும் புரியும், அப்படியும் ஆகலாம் என்றும் தெரியவரும். ஆனாலும் விதி என்று ஒன்று இருக்கிறது அல்லவா, அதன்படி எப்போதுதான் அந்த நிலையை நாம் அடைய முடியுமோ என்று ஏங்குவோருக்கு அவர் என்ன சொல்வார்?

(தொடரும்)

4 Replies to “அறியும் அறிவே அறிவு – 4”

  1. Pingback: Indli.com
  2. கனவுகள் அற்ற தூக்க நிலை என்பது கிடையாது என்பது தற்கால விஞ்ஞானிகளின் கருத்து. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், நாம் தூங்கும் போதும் நமது மூளை வேலை செய்துகொண்டேதான் உள்ளது எனவே, அது ‘கனவும்’ (ஆழமான வெளிப்பாடுகள்) கண்டு கொண்டேதான் உள்ளது. நமது தூக்கத்திலும் நமது கண் விழிகள் ஒரு நிலை வரை இயங்கியவாறே (Rapid eye movement அல்லது ‘REM ‘) உள்ளதாக அறிஞர் கருத்து. விழிகளின் இந்நிலைகளை 4 பகுதிகளாக இவர்கள் பிரிக்கிறார்கள். REM 4 என்னும் உறக்கத்தின் நான்காம் நிலையில் விழி இயக்கம் நின்றுவிடுவதால் ‘நாம்’ (நமது மூளை!) காணும் கனவுகள் நம் நினைவுக்கு வருவதில்லை. அவ்வளவுதான்! எனினும் நான் ‘காணாத’ கனவு ‘என்னை’ பொறுத்த வரை இல்லாதது தான்!!

    உண்மை என்ன என்றால் இருக்கும் ஒரே பேராற்றல் தானே விரும்பி, தன்னால், தன்னைக்கொண்டே உருவாக்கப்பட்ட வெவ்வேறு ‘சிறைகளுக்குள்’ (காணப்படும் உடல்கள்) தன்னை தானே அடைத்துக்கொண்டு உலகை உருவாக்கி செயலாற்றுகிறது. இதை அறிந்து விட்டால் நான், நீ அவன் அது என்ற பேதங்கள் ‘நமக்கு’ விலகும். ஆனால், அதுவரை (தன்னை அறியாத வரையில்) பேதம் யாருக்கு என்ற வினா எழுந்தவாறே இருக்கும் தான். அந்த வினாவிற்கு விடை, பேதங்கள் உணர்வு பூர்வமாக விலகும் போது தானே கிடைத்துவிடும். எனவே சிறையில் உள்ள தற்போதைய நிலையை எண்ணி மயங்காமல் நாம் உணர்ந்துவிடுவோம் என்னும் நம்பிக்கையுடன் செயலாற்றினால் வெற்றி நிச்சயம்.

  3. எனது மறுமொழியில் நான்காம் வரியில் (ஆழ்மன வெளிப்பாடுகள்) என்பதற்கு பதிலாக (ஆழமான வெளிப்பாடுகள்) என்று பதிவாகிவிட்டது. தவற்றுக்கு மன்னிக்கவும். தமிழ் ஹிந்து இணைய தளத்தில் மறுமொழி அளிப்போர் தமது தவறான பதிவுகளைத் திருத்தும் வாய்ப்பு இருந்தால் நலம் எனக் கருதுகிறேன்.

  4. தூக்கம் குறித்து எனக்கு தோன்றியதை இங்கு எழுதியுள்ளேன். தூக்கம் குறித்தும் அதன் அண்டை கொண்டைகள் குறித்தும் நான் படித்ததை வைத்து இப்படித்தான் இருக்கும் என கருதி எழுதியுள்ளேன்.

    கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *