மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி சாத்தியமா?: புதிய தகவல்கள்

கஸ்ட் 21 காலை 5 மணி. ஹைதராபாத்தின் புகழ்பெற்ற பஞ்சாரா ஹில்ஸ் பகுதியின் ஒரு அபார்மென்டில் திமுதிமுவென்று காவல் துறையினர் நுழைகிறார்கள். கணினி தொழில்நுட்ப வல்லுனர் ஹரி பிரசாத் கைது செய்யப் பட்டு ஒரு டயோடா காரில் மும்பைக்கு அழைத்துச் செல்லப் பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார். சில நாட்களில் இந்திய தேர்தல் ஆணையம் அவர்மீது வழக்குத் தொடுக்கிறது.

தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் ஹரி பிரசாத் அப்படி என்ன குற்றம் செய்தார்?

இந்த கைதுக்கு சற்று ஒரு வருடம் முன்பிருந்து ஒரு தீவிர ஆய்வில் ஈடுபட்டு வந்திருக்கிறார் ஹரி  பிரசாத். இந்தியாவில் தேர்தல்களில் பயன்படுத்தப் படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (EVM) பாதுகாப்பானவை அல்ல; அவற்றை எளிய தொழில்நுட்பம் மூலமே ஏமாற்றி மோசடி செய்துவிட முடியும் என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க அவர் முயன்று வந்தார். இந்த அறிவியல்பூர்வமான பரிசோதனைக்காக தனக்கு ஒரு EVM இயந்திரத்தை தந்து உதவ வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடமும்,இந்த இயந்திரங்களைத் தயாரிக்கும் BEL, ECIL நிறுவனங்களிடமும் அவர் கோரிக்கை வைத்து வந்தார். ஆனால் அக்கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் படவில்லை.

இந்நிலையில் அண்மையில் ஹரி பிரசாத் மற்றும் சில தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய குழு EVM இயந்திரத்தை எப்படி ஏமாற்ற முடியும் என்று ஒரு உண்மையான, தேர்தல்களில் பயன்படுத்தப் பட்ட EVM இயந்திரத்தை வைத்தே நிரூபித்துக் காட்டியது. இது ஊடகங்களிலும் அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த இயந்திரம் தன் கைக்கு எப்படிக் கிடைத்தது என்ற விவரத்தை வெளியிட ஹரி பிரசாத் மறுத்து விட்டார். ஒரு பெயரில்லா வட்டாரம் (anonymous source) இதனைத் தந்து உதவியதாகக் கூறினார்.

சட்டத்திற்குப் புறம்பான வகையில் EVM இயந்திரத்தைத் திருடியதற்காக அவர் கைது செய்யப் பட்டார்.

evm_authors

EVM report authors (left to right) J. Alex Halderman, Hari K. Prasad, and Rop Gonggrijp, holding the EVM they studied.

ஹரி பிரசாத் ஹைதராபாத் நகரில் NetIndia என்ற கணினி நிறுவனத்தைத் தானே தொழில்முனைவோராகத் தொடங்கி நடத்தி வருபவர். படிக்கும் காலத்திலிருந்தே ஏட்டுக் கல்வியை விட நடைமுறைத் தொழில்நுட்பத்தின் மீது காதல் கொண்டிருந்தார். தனது எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ படிப்பை தொடராமல் நிறுத்தி விட்டாலும், அதே மூச்சில் ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர் (தொலைபேசியைப் பயன்படுத்தி அதன் ஒலி அலைகள் மூலம்  தகவல்களை (data) அனுப்பும் ஒரு கையடக்க (handheld) கருவி. வர்த்தக ரீதியாக இந்தக் கண்டுபிடிப்பு வெற்றிபெறவில்லை).

இந்த ஆய்வுகளில் அவருடன் பங்கு கொண்டவர்களில் J. Alex Halderman என்பவர் அமெரிக்காவின் மிசிகன் பல்கலைக் கழகத்தின் கணினித் துறைப் பேராசிரியர், Rop Gonggrijp என்பவர் நெதர்லாந்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்.

EVM இயந்திரங்கள் எப்படி பாதுகாப்பற்றவை என்பதை விளக்க இவர்கள் உருவாக்கியிருக்கிருக்கும் 6-நிமிட வீடியோ இதோ –

இதோடு இவர்கள் நின்றுவிடவில்லை. இந்திய மின்னணு இயந்திரத்தின் வடிவமைப்பு, செயல்முறை ஆகியவற்றை முழுமையாக அலசி ஆராய்ந்து, Security Analysis of India’s Electronic Voting Machines என்ற விரிவான ஆய்வுக் கட்டுரையையும் (technical paper) எழுதியிருக்கிறார்கள். இந்த ஆய்வுக் கட்டுரை ACM (Association of Computing Machinery) என்ற மதிப்புக்குரிய, உலகளாவிய கணினித் தொழில்நுட்ப ஆய்வு அமைப்பால் ஏற்கப் பட்டிருக்கிறது. அக்டோபர் மாதம் நடைபெறப் போகும் தொழில்நுட்ப ஆய்வுக் கருத்தரங்கில் (Conference on Computer and Communication Security – CCS ’10) விவாதிக்கப் பட இருக்கிறது. இந்த முழு ஆய்வுக் கட்டுரையையும் இங்கே படிக்கலாம். சில தகவல்களை சுருக்கமாக விளக்குகிறேன்.

இந்த இயந்திரங்களில் இரு பெட்டிகள் உள்ளன. Ballot Unit என்ற பெட்டி மூலம் வாக்காளர்கள் வாக்கு அளிக்கிறார்கள். Control unit என்ற பெட்டி வாக்குச் சாவடி அதிகாரிகளின் கட்டுப் பாட்டில் இருக்கும். இந்த இரண்டு பெட்டிகளும் ஒரு நீண்ட கேபிள் மூலம் இணைக்கப் பட்டிருக்கும்.

evm

வாக்குப் பதிவு முடிந்தவுடன் Contol unit பெட்டியில் உள்ள சிவப்புத் திரை (display) ஒவ்வொரு வேட்பாளருக்கும் எத்தனை வாக்குகள் விழுந்துள்ளன என்று காண்பிக்கும்.

evm_control

இந்த இயந்திரத்திற்கு உட்புறம் ஒரு circuit board உள்ளது. அடிப்படையில், கணினிகளில் காணப்படும் motherboard போன்று ஆனால் அதைவிட மிக சிறிய அளவிலான, குறைந்த செயல்திறன் கொண்ட, சில குறிப்பிட்ட செயல்களுக்காக வடிவமைக்கப் பட்ட board இது. இதன் செயல்படு மூளையாக CPU unit, வாக்குகளை சேமிக்க memory unit மற்றும் வாக்குகளை திரைக்கு அனுப்ப display unit ஆகியவை உள்ளன.

evm_inside

மோசடி செய்ய விரும்புபவர்கள் மூன்று விதங்களில் தங்கள் இஷ்டப் படி வாக்குகளை மாற்ற முடியும் என்று ஆய்வுக் கட்டுரை நிரூபிக்கிறது. இந்த வழிமுறைகளில் சில வீடியோவில் செய்து காட்டப் பட்டும் உள்ளன.

வழிமுறை ஒன்று:

display unitக்கு செல்லும் மெல்லிய board ஐ எடுத்து விட்டு, கிரிமினல்கள் தங்களது boardஐ அதில் சொருகி விடலாம்.
இந்த செருகப்பட்ட போர்டில் மிகச் சிறிய வயர்லெஸ் ரிசீவரும் (உதாரணமாக, செல்போன்களில் உள்ள Bluetooth ரிசீவர்) இருக்கும்.   இப்படி சொருகுவதற்காக உருவாக்கப் பட்ட  board  ஒன்றைக் கீழே பார்க்கலாம் –

evm_display

வாக்குச் சாவடிக்குப் பக்கத்தில் ஒரு செல்போனை வைத்துக் கொண்டு, உண்மையில் போடப்பட்ட வாக்குகளுக்குப் பதிலாக, தங்கள் இஷ்டப்படி வாக்குகள் எண்ணிக்கை வருமாறு செல்போனில் உள்ள வயர்லெஸ் டிரான்ஸ்மிட்டர் மூலம் செய்ய முடியும்.

evm_fraudster2

வழிமுறை இரண்டு:

EVM இயந்திரத்திற்கு உட்புறம் உள்ள memory chipகளை இணைக்கும் இடத்தில் ஒரு சிறிய “தாக்குதல் கருவி”யை க்ளிப் போன்று பொருந்துமாறு உள்ளே வைத்து விடலாம்.

evm-clip-attached

மின்விசிறியில் உள்ள ரெகுலேட்டர் போன்று சுழல் பட்டன்கள் கொண்ட இந்த க்ளிப் கருவி மூலம் கிரிமினல்கள் தங்களுக்கு வேண்டிய வேட்பாளருக்கு வாக்குகள் திருடப் படும் வகையில் ‘செட்’ பண்ணி வைக்கலாம். இந்த க்ளிப் கருவியை குறைந்த செலவில் சட்டைப் பைக்குள் போட்டுக் கொள்ளும் அளவுக்கு மிகச் சிறிய அளவில் தயாரிக்க முடியும்!

evm_clip_sm

வழிமுறை மூன்று:

EVM இயந்திரத்திற்கு உள்ளே உள்ள cpu இயங்குவதற்கான மென்பொருள் (software) படிப்பதற்குக் கடினமான இயந்திர மொழியில் மாற்ற முடியாத படி பொதிந்து வைக்கப் பட்டுள்ளதாகவும், அதனால் இதைத் தயாரிக்கும் நிறுவனங்களே இதை மாற்ற முடியாது என்றும் தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் இது இருமுனைகள் கொண்ட கத்தி போன்ற வாதம். ஏனென்றால் இயந்திரங்கள் தயாரிக்கப் படும் இடத்தில் எந்த மென்பொருள் இந்த சிப்களுக்குள் வைத்து பொதியப் பட்டது என்பதை தேர்தல் ஆணையம் உட்பட யாருமே கண்டுபிடிக்க முடியாது. மேலும், இந்த மென்பொருள்  நேரிடையானது; சங்கேதக் குறியீடுகள் மூலம் பாதுகாக்கப் பட்டது அல்ல (not securely encrypted).  எனவே மாற்றப் பட்டிருப்பதற்கான தடயங்களைக் கண்டுபிடிக்கவும் இயலாது. அதோடு,  இந்த இயந்திரங்கள் வெளிநாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப் படுகின்றன என்னும் போது இதனால் உருவாகும் ரிஸ்க் இன்னும் அதிகமாகிறது.

வாக்குப் பதிவு இயந்திரங்களை மூடப் பயன்படுத்தப் படும் மெழுகு ’சீல்’ (seal) மிகச் சாதாரணமானது;   இதன் போலியை மிக எளிதாக உருவாக்கிவிட முடியும்.   இயந்திரத்தைத் திறந்து மோசடி உபகரணங்களைப் பொருத்தி  விட்டு போலி  சீலை வைத்து  கண்டுபிடிக்க முடியாதபடி மூடிவிடலாம்.  மேற்கண்டதில் முதல் இரண்டு மோசடி வழிமுறைகளை  சில நிமிடங்களுக்குள்  செய்துவிடலாம் என்றும் நிரூபித்திருக்கிறார்கள்.

evm_seals

இந்திய மின்னணு இயந்திரத்தின் வன்பொருள் (hardware) மற்றும் மென்பொருள் (software) மிக மிக எளிமையானது, நேரடியானது. மற்ற நாடுகளின் தேர்தல் இயந்திரங்கள் போல கடினமான தொழில்நுட்ப சிக்கல்கள் கொண்டதல்லை; அந்த எளிமை காரணமாகவே இவற்றில் மோசடி செய்வது கடினம் என்று தேர்தல் ஆணையம் சொல்லிவந்தது.

ஆனால் இந்த எளிய இயந்திரத்தில் ஓட்டைகள் உள்ளன என்பது இப்போது நிரூபிக்கப் பட்டு விட்டது.

1980களில் பரிசோதனை முயற்சியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சிற்சில இடங்களில் அறிமுகப் படுத்தப் பட்டன. பிறகு 2004 தேர்தல்கள் முதல் நாடு தழுவிய அளவில் எல்லா வாக்குச் சாவடிகளிலும் EVM இயந்திரங்கள் மூலமாகவே வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தற்போது சுமார் 14 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் புழக்கத்தில் உள்ளன. இந்த அத்தனை இயந்திரங்களையும் பாதுகாக்க அதிதீவிர கண்காணிப்பு தேவை. சாமானியர்களான தாங்களே முயற்சி எடுத்து ஒரு இயந்திரத்தை பரிசோதனைக்காகப் பெற முடிந்தது என்கையில், அதிகார பலமும், பணபலமும் கொண்ட அரசியல் கிரிமினல்களுக்கு இது இன்னும் எளிதான விஷயமாகவே இருக்கக் கூடும் என்ற தங்கள் கவலையையும் கட்டுரை ஆசிரியர்கள் எழுப்புகின்றனர்.

ஒருமுறை ஒரு இயந்திரத்தைக் கைப்பற்றினால் போதும். அதை வைத்து மோசடி உபகரணங்களை உருவாக்கி விடலாம். பிறகு வாக்குச் சாவடிகளுக்குள் சென்று சில நிமிட அவகாசத்தில் அவற்றை உள்ளே இடவேண்டும், அவ்வளவு தான்.

election-commission2009 பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்பு, தேசிய அளவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (EVM) பற்றிய சர்ச்சை தொடர்ந்து வருகிறது. பல தரப்புகளில் இருந்தும் கேள்விகளும், சந்தேகங்களும், புகார்களும் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் இவை எல்லாவற்றுக்கும் பதிலாக, இந்த இயந்திரங்கள் முற்றிலும் பாதுகாப்பானவை, இவற்றில் எந்த மோசடியும் செய்ய முடியாது என்ற ஒரே பதிலையே கிளிப்பிள்ளை போலச் சொல்லி வருகிறது. இந்த இயந்திரங்களின் வடிவமைப்பு, தொழில்நுட்பம் ஆகியவை பற்றிய பொது விவாதத்திற்கும், விசாரணைக்கும் தேர்தல் ஆணையம் தயாராக இல்லை. ” நாங்க சொல்லிட்டோம்ல, நம்புங்க” என்பதே அதன் நிலைப்பாடாக இருந்து வருகிறது. தற்போது ஓய்வு பெற்றுள்ள தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா இன்னும் ஒருபடி மேலே போய் ”இந்திய EVMகள் முற்றிலும் எந்தக் குறைகளும் இல்லாதவை (perfect). இவற்றை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

ஒருபுறம் EVM பற்றிய எந்தத் தகவல்களையும் வெளியிட மறுத்து, மறுபுறம் ‘புகார் சொல்பவர்கள் முடிந்தால் EVM பாதுகாப்பானதல்ல என்று நிரூபித்துக் காட்டுங்கள்’ என்று சவாலும் விட்டது தேர்தல் ஆணையம். இப்போது EVM இயந்திரம் பாதுகாப்பானதல்ல என்று அப்பட்டமாக, தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டு விட்டது. ஆயினும் தேர்தல் ஆணையத்தின் மனப்போக்கில் எந்த மாற்றமும் இல்லை. இயந்திரத்தின் வடிவமைப்பையும், செயல்முறைகளையும் மறுபரிசீலனை செய்வோம் என்ற அறிவிப்பு கூட வரவில்லை. (ஆனால் உள்ளுக்குள் பதற்றமடைந்து சில துரித நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதாகக் கேள்வி.  எல்லா EVM இயந்திரங்களும் பத்திரமாக உள்ளனவா என்று கறாரான கணக்கெடுப்பும் நடந்து கொண்டிருக்கிறதாம்).

மாறாக, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக பெரிய அளவில் ரிஸ்க் எடுத்து இதனை அம்பலப் படுத்திய ஹரி பிரசாத் மீது பழிவாங்கும் நடவடிக்கையைத் தான் அரசு செய்திருக்கிறது. எல்லா வாசல்களும் மூடப் பட்ட நிலையில், ஒரு ஜனநாயக அமைப்பில் உண்மையை உரக்க அறிவிப்போர்களுக்கு (whistle blowers) வேறு என்ன தான் வழிவகை உள்ளது?

அம்பு நேராகத் தோன்றினாலும் கொடுஞ்செயல் செய்கிறது. கோணலாக இருந்தாலும் வீணை இன்னிசை தருகிறது. மக்களின் பண்புகளை அவர்களது செயலாலும், அதன் ஒட்டுமொத்த விளைவாலும் தான் மதிப்பிட வேண்டும்.

கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கன்ன
வினைபடு பாலாற் கொளல்

என்பது வள்ளுவர் உரைத்த நீதி. எனவே, சட்டப்புத்தக ரீதியாகத் தவறு என்றாலும், ஜனநாயகத்தின் மீதும், தேர்தல் அமைப்பின் மீதும் உள்ள நம்பகத் தன்மையே கேள்விக்கு உள்ளாகும் போது, அதைப் பாதுகாப்பதற்காக இந்தத் தொழில்நுட்பக் குழுவினர் செய்திருக்கும் சிறு சட்டமீறல் பெரிய தவறல்ல என்றே நான் கருதுகிறேன்.

evm-setting-upEVM இயந்திரங்கள் அறிமுகப் படுத்தபோது, காங்கிரஸ் உட்பட எல்லாக் கட்சிகளும் இவை பற்றிய சந்தேகங்களைத் தெரிவித்த படியே வந்தன. 2009 தேர்தலில் எல்லா கருத்துக் கணிப்புக்களையும், ஆதாரபூர்வமான தேர்தல் அலசல் கருத்துக்களையும் பொய்யாக்கும் வண்ணம், அதிர்ச்சியடையத்தக்க வகையில் காங்கிரஸ் கூட்டணி எதிர்பார்ப்பை விட மிக அதிகமாக வெற்றி பெற்றது. சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி உட்பட வேறு பல தொகுதிகளில் சந்தேகப் படும் வகையில் கடைசி நேர தேர்தல் முடிவுகள் மாற்றமடைந்து வந்தன. அதன்பிறகும் பா.ஜ.க, அதிமுக போன்ற கட்சிகள் தேர்தல் முறைகேடுகள் பற்றியும், EVM பற்றியுமான கருத்துக்களைத் தொடர்ந்து கூறி வருகின்றன. ஆனால் இந்தத் தேர்தலுக்குப் பின் காங்கிரசும், திமுக போன்ற அதன் கூட்டணிக் கட்சிகளும் இது பற்றி ஒன்றும் கூறாமல் அமைதி காக்க ஆரம்பித்து விட்டன.

அரசியல் ஆய்வாளர்கள் இனிமேல் எழுந்துவர வாய்ப்பில்லை என்று ஒருமித்த குரலில் எழுதிவைத்து விட்ட காங்கிரஸ் வியக்கத் தக்க வகையில் தேர்தல் வெற்றிகள் பெற ஆரம்பித்தது  எப்போதிலிருந்து  என்று பார்த்தால், ஒட்டுமொத்தமாக EVM மூலம் வாக்குப் பதிவுகள் நிகழ ஆரம்பித்த பின்பு தான். இந்த விஷயங்களையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அரசியல் சார்புகளுக்கு அப்பால்,  ஒரு சக கணினி தொழில்நுட்ப வல்லுனனாக, ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்ட சக இந்தியக் குடிமகனாக ஹரி பிரசாத் மற்றும் அவரது குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொழில்முறை தேர்தல் கணிப்பு நிபுணர் & அரசியல் விமர்சகர் G.V.L நரசிம்ம ராவும் மின்னணு வாக்கு இயந்திரங்களை அம்பலப் படுத்தும் இந்த முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

EVM இயந்திரம் பாதுகாப்பானதல்ல என்பது தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டிருக்கும் நிலையில், இதே இயந்திரங்களை எந்த மாற்றமும் இல்லாமல் அடுத்தடுத்த தேர்தல்களில் பயன்படுத்துவது நியாயமல்ல; சரியானதல்ல. இந்திய ஜனநாயகத்தின் அச்சாணியான நமது தேர்தல் முறை முற்றிலும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகவும், நம்பகத் தன்மை உடையதாகவும் இருக்க வேண்டும். அமெரிக்கா, நெதர்லாந்து, அயர்லாந்து உட்பட பல நாடுகளில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பற்றவை என்று தொழில்நுட்ப ரீதியாக நிரூபிக்கப் பட்டவுடன், அந்த நாட்டு அரசுகள் இந்த இயந்திரங்களின் பயன்பாட்டை நிறுத்தி விட்டன;  பழைய வாக்குச் சீட்டு முறைக்கே திரும்பச் சென்று விட்டன.

எனவே அடுத்து வரும் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களுக்கு முன் இயந்திரங்களில் சுட்டிக் காட்டப் பட்ட குறைகள் களையப் படவேண்டும்; அல்லது மாற்று வழிகள் கொண்டுவரப் படவேண்டும். ஒவ்வொரு கட்சியும் அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வரவேண்டும்.

indiaevm.org, indianevm.com ஆகிய வலைத்தளங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பற்றி மேலும் தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.

ஹரி பிரசாத் மற்றும் குழுவினரின் ஜனநாயகப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோர் தங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்.

இது தொடர்பான Democracy at Risk! என்ற புத்தகம் பற்றிய விவரங்கள் இங்கே. இந்தப் புத்தகத்தை pdf வடிவில் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

29 Replies to “மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி சாத்தியமா?: புதிய தகவல்கள்”

 1. தேர்தல் ஆணையம் இதுபற்றி வாய்திறக்க மறுப்பது பெரும் சந்தேகத்தை தருகிறது. ஏற்கனவே சிபிஜ காங்கிரஸின் கைப்பாவை ஆகிவிட்டது. தேர்தல் ஆணையமும் ஆளும் வர்கத்திற்கு அடிமைசானம் எழுதி கொடுத்துவிட்டது.

  அட்வகேட் பார்த்திபன்
  திருப்பூர்

 2. திரு.ஜடாயு அவர்களே!
  பலர் கேள்விப்பட்ட விஷயங்களை எளிமையாக விளக்கி உள்ளீர்கள்.
  (1)ஹரி பிரசாத், இந்த இயந்திரங்களின் பிரச்சினைகளை வெளிக்
  கொணர்ந்த பின் முன் ஜாமீன் பெற முயற்சித்திருக்கலாம். ஏனெனில் அவர்
  செய்தது சட்டப்படி தவறு என்பதாலும், அவர் படித்தவர் என்பதாலும்
  முன் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாம்.
  (2)அவர் இந்தியாவில் இருக்கிறார் என்பதை அவர் மறந்து விட்டிருக்கலாம். மேற்கத்திய நாடுகளில் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு சால்ஜாப்பு
  செய்து தப்பிக்க முடியாது. உடனே சில பொது ஜனங்கள் சேர்ந்து ஒரு
  சங்கம் அமைத்து அரசையோ அதன் துறையையோ வெளுத்து வாங்கி
  விடுவார்கள். இந்தியா இன்னும் ஜனநாயக முதிர்ச்சி அடையவில்லை
  என்பதையே இவை காட்டுகின்றன.
  (3)இங்கு ஒரு விஷயத்தை நாம் மறக்க கூடாது. அதாவது பழைய வாக்கு
  சீட்டு முறைகளில் பெரிய அளவில் மோசடிகள் தமிழ்நாடு, பீகார் போன்ற
  மாநிலங்களில் நடந்தன. தற்போதைய நிலையில் எந்த முறையில் மிக
  குறைந்த அளவு மோசடிகள் நடக்கும் என்று பார்க்க முடியுமே தவிர,
  எந்த முறையினால் மோசடியே செய்ய முடியாது என்று பார்க்கும் நிலையில்
  இந்தியா இல்லை. ஆனால் தொலைநோக்கு பார்வையில்,25 அல்லது 50
  வருடங்களில் மோசடி இல்லா தேர்தலுக்கு வழி வகுக்கும் முறையை நாம்
  கைக்கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.

 3. மிகுந்த துணிச்சலுடன் எழுதப் பட்ட கட்டுரை. ஒருவர் உண்மையை வெளிகொணர்ந்ததர்காக அரசாங்கமே அவர் மீது மொத்தமாக பாய்கிறது.. பி.ஜே.பியின் எதிர் வினை என்ன இதற்கு? எதிர்கட்சியாக இருக்கும் பொது, ஹரி பிரசாத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்க வேண்டாமா.. தலைவர்கள் தெருவில் இறங்கி போராடி இருக்க வேண்டாமா ?

 4. https://www.indianexpress.com/news/advani-has-doubts-about-evm-wants-ballot-papers-back/485248/

  BJP leader L.K. Advani has demanded the reintroduction of ballot papers in elections, beginning with the Maharashtra Assembly elections in October, and three other states later this year.

  “We should revert to ballot papers unless the Election Commission is able to ensure that Electronic Voting Machines (EVMs) are foolproof and every possibility of their malfunctioning is taken care of,” Advani told The Sunday Express here on Saturday.

  While the Election Commission, during the recent general elections, once toyed with the idea of using ballot papers instead of EVMs (essentially due to large number of independent candidates in states like Tamil Nadu), this is the first time that a mainstream political party has raised questions over the reliability of EVMs.

  Citing the instances of Germany (which has banned electronic voting altogether) and the US (which has elaborate guidelines for voting through EVMs), Advani stressed that “no one was raising any questions like rigging or malpractices in the elections”, but larger questions about the “possibility of EVMs’ malfunctioning…must be addressed”.

 5. பாலாஜி,

  // இந்த இயந்திரங்களின் பிரச்சினைகளை வெளிக்
  கொணர்ந்த பின் முன் ஜாமீன் பெற முயற்சித்திருக்கலாம். //

  கைது தடாலடியாக நடந்தது.. தற்போது அவர் சிறையில் இல்லை, பெயிலில் இருக்கிறார் (ஆசிரியர் குழுவுக்கு: கட்டுரையில் இந்த வாசகத்த்தைத் திருத்தி விடுங்கள்). போலீஸ் அவரை மறுபடி உள்ளே வைக்கக் கோரியுள்ளது –

  https://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=4358141

  // அதாவது பழைய வாக்கு சீட்டு முறைகளில் பெரிய அளவில் மோசடிகள் தமிழ்நாடு, பீகார் போன்ற மாநிலங்களில் நடந்தன//

  உண்மை தான்.. வாக்குச்சாவடி கைப்பற்றல், கள்ள ஓட்டு, செல்லாத ஓட்டு எல்லாம் இருந்தது.. ஆனால் அப்போது மோசடி பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. பல இடங்களில் மோசடிகள் விசாரிக்கப் பட்டு மறுவாக்குப் பதிவுகள் உத்தரவிடப் பட்டன. ஆனால் இந்த இயந்திரத்தைப் பொறுத்தவரை எல்லாம் பூடகமாக இருக்கிறது.. மோசடி நடந்ததா இல்லையா என்பதே யாருக்கும் தெரிவதில்லையே.. அது தான் பிரசினை.

  தெரியாத பேயை விட தெரிந்த பிசாசே மேல் என்றே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் கருதுவதாக தெரிகிறது…

 6. Pingback: Indli.com
 7. சரியான தமிழ்ப் பதங்களுடன் நல்ல கட்டுரை . ஜடாயு அவர்கள் பிற சஞ்சிகைகளுக்கும் அனுப்பவும்.

 8. வெடிகுண்டு வீரர், கொலைஞர் மதானிக்கே கூட ஒரு வாரம் அவகாசம் கொடுத்து , ஜாமீன் பெற முடியாத போதுதான் கைது செய்யப்பட்டார். ஆனால் திடீர் என கைது செய்யும் அளவுக்கு ஹரி பிரசாத் என்ன தவறு செய்தார்?

  இதன் மூலம் கிடைத்த பெயரை ஹரி பிரசாத் பயன்படுத்தி, அரசியலில் இறங்கி வெற்றிபெறட்டும்.

 9. அருமையான விழிப்புனர்வூட்டும் கட்டுரை. அபாயச் சங்கு ஊதுவோர் இல்லையெனில் இந்தியா இன்னொரு பிலிப்பைன்ஸ் ஆகி ஆட்டுவிப்பவர் இன்னொரு இமெல்டா மார்க்கோஸ் ஆகலாம். பா.ஜ.க என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதே என் கேள்வி. ஒரு எதிர்க்கட்சியாக அது என்னதான் செய்கிறது? அதற்கான ஜனநாயகக் கடமையும், அந்தக் கட்சியின் வாழ்வும் அடங்கியிருக்கும் இந்த விஷயத்தை சர்வசாதாரனமாக எடுத்துக்கொண்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது.

 10. 1. ஹரி பிரசாத் அவர்களிடம் மின்னணு வாக்கு இயந்திரத்தைக் கொண்டு வந்து கொடுத்தவர் மும்பையைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சிப் பெண் பிரமுகர் ஒருவர். அவர் மஹாராஷ்டிர தேர்தலில் தோற்றவர். மின்னணு இயந்திரத்தின் மீது சந்தேகம் கொண்டு தன் கணவர் மூலமாக ஹரி பிரசாத்திடம் கொடுத்து அதில் தில்லு முல்லு செய்ய முடியும் என்பதைச் செய்து காட்டச் சொல்லியிருக்கிறார். வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஹரி பிரசாத் தெலுங்கு டி வி சானலில் செய்து காட்டியுள்ளார். அதன் பலன் தான் தெலுங்கானா தேர்தலில் சந்திர சேகர ராவ் ஒவ்வொரு தொகுதியிலும் 64 டம்மி வேட்பாளர்களை நிறுத்தி (63க்கு மேல் போனால் இயந்திரம் வேலைக்கு ஆகாது. வாக்குச் சீட்டு தான் முடியும்) பழைய முறைக்கு தேர்தல் ஆணையத்தை பணிய வைத்து வெற்றியும் பெற்றார். வெறுப்புற்ற தேர்தல் ஆணையம், காங்கிரஸ் கட்சியின் (சோனியாவின்) உத்தரவுக்கிணங்க ஹரி பிரசாத் மீது போலிஸ் புகார் கொடுத்து திடீரென்று கைது செய்தது. ஹரி பிரசாத் இரண்டே நாட்களில் இயந்திரத்தை கொண்டு வந்து கொடுத்தவர்களிடமே சேர்த்து விட்டார். ஆயினும் அவர் கைதுக்குப் பின்னர், எனக்கு எதுவும் தெரியாது; ஹரி பிரசாத் பொய் சொல்கிறார் என்று அந்தப் பெண்மணி சாதிக்கிறார். ஹரி பிரசாத்தைக் கைது செய்த போலிசார், மும்பை கிடங்கில் “பாதுகாப்பாக” வைக்கப்பட்ட இயந்திரம் எப்படி வெளியே வந்து ஹைதராபாத்தில் உள்ள ஹரி பிரசாத்திடம் சென்றடைந்த்து என்று விசாரிக்கவேயில்லை. இதிலிருந்தே தெரியவில்லை தேர்தல் ஆணையத்தின் அடிமைத்தனமும், காங்கிரஸ் அரசின் அடாவடித்தனமும்?

  2. ஓட்டுச் சீட்டு தேர்தலில் ரிக்கிங் (சாவடியைக் கைப்பற்றுதல்) என்பது சில்லரையாகத்தான் செய்ய முடியும் – Retail Rigging. ஆனால் இயந்திரத் தேர்தலில் ரிக்கிங் என்பது மொத்தமாகச் செய்யலாம் – Wholesale Rigging. ஒரு ஒயர்லெஸ் கருவியையோ, மொபைல் போனையோ வைத்துக்கொண்டு எளிதாகச் செய்ய முடியும். மொத்த தொகுதியையே புரட்டிப் போட்டு விடலாம்.

  3. 2009 தேர்தலில் கிட்டத்தட்ட 90 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி இயந்திரத்தின் தில்லு முல்லுகளால் வெற்றி பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. தில்லு முல்லு செய்தும் வெற்றி பெறாத ஒரே ஆள் காவி தீவிரவாத்த்தைக் கண்டு பிடித்த “பீ.சீ” தான். கடைசியில் எண்ணிக்கையில் கோல்மால் செய்து மூன்றாவது முறை “எண்ணிய” பிறகு ஜெயித்தார். அ.தி.மு.க வேட்பாளர் கண்ணப்பன் நீதிமன்றத்தை அணுகுவேன் என்று மிரட்டி அவரிடம் பணம் பெற்றுக்கொண்டு வாயை மூடிக் கொண்டது விசேஷம். சென்னைக்கு வரச்சொல்லி அந்தப் பணத்தை பிடுங்கிக்கொண்டு அவரை ஜெ விரட்டி விட்டது அதை விட விசேஷம்.

  4. சு.சுவாமி அவர்கள் கேட்பது ஒன்று தான். வாக்களர் ஓட்டு போட்டதும் இன்னாருக்கு ஓட்டு போட்டதற்கான ஒரு ரசீது. அவ்வளவு தான். அந்த ரசீதைப் பார்த்து, தன் வாக்கு தான் விரும்பிய வேட்பாளருக்குத்தான் சென்றுள்ளது என்று உறுதி செய்துகொண்டு, அந்த ரசீதை இயந்திரத்தின் அருகில் உள்ள டப்பாவில் போட்டு விட்டு வாக்காளர் வெளியேறலாம். வாக்குகள் எண்ணப் படும்போது, இயந்திரம் செயலிழந்தாலோ, அல்லது யாராவது ஒரு வேட்பாளர் புகார் கொடுத்தாலோ, அந்த ரசீதுகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம். ஒரு ரசீது வருமாறு இயந்திரத்தை அமைப்பதில் என்ன கஷ்டம்? அப்படி அமைக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறுமானால், அது அயோக்கியத்தனம் அன்றி வேறில்லை.

  5. “தகவல் தொழிநுட்பச் சட்டம் 2000த்தின் (Information Technology Act 2000) 12-ஆம் பிரிவின்படி, மின்னணு இயந்திரங்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட விவரத்திற்கு பதிலாக ரசீது தருமாறு இருக்கவேண்டும். உதாரணத்திற்கு எடை பார்க்கும் இயந்திரமோ அல்லது பணம் எடுக்கும் எ.டி.எம். இயந்திரமோ ரசீது தருவதைப் போல மின்னணு வாக்கு இயந்திரமும் வாக்களருக்கு அவருடைய வேட்பாளர் தேர்வை உறுதி செய்து ரசீது தரவேண்டும். தற்போது உபயோகத்திலுள்ள இயந்திரங்களில் அந்த வசதி செய்யப்படவில்லையாதலால், அவை தகவல் தொழில்நுட்பச் சட்ட்த்திற்கும், அரசியல் சாஸனத்திற்கும் புறம்பானவை” என்று சு.சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

  6. சு.சுவாமி தொடர்ந்துள்ள வழக்கில் நீதிமன்றத்திற்கு இரண்டே வழிகள் தான் உள்ளன. ஒன்று, ரசீது கொடுக்குமாறு இயந்திரங்களை மாற்றியமைக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இரண்டு, தேர்தல் ஆணையம் இயலாது என்று கூறும் பட்சத்தில் மின்னணு வாக்கு இயந்திரத்தை ரத்து செய்து விட்டு பழைய முறையான வாக்குச் சீட்டுத் தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும். தற்போது எதிர் கட்சிகள் கொண்டிருக்கும் நிலைப்பாடில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதும் காங்கிரஸ் கட்சிக்கு முடியாத காரியம். ஆகவே சு.சுவாமிக்கு வெற்றி மிகவும் சாத்தியம்.

  7. Democracy at Risk! என்ற புத்தகத்தை எழுதிய திரு நரசிம்ம ராவ் பா.ஜ.க உறுப்பினர். மத்தியப் பிரதேசத்தில் கட்சியின் மீடியா அட்வைசராக உள்ளார். இருந்தும் பா.ஜ.க இவ்விஷயத்தில் முழு வேகத்துடன் இறங்கவில்லை.

  (edited and published).

 11. நாளிதழ்கள் மூலம் தெரிந்த செய்திகள் அதிர்ச்சியைத் தரவில்லை. ஆனால் இந்த கட்டுரையைப் படித்த பிறகு வாக்குப் பதிவு ஒரு மோசடி வித்தை என்பது அப்பட்டமாக விளங்கி விட்டது. இதில் கொடுக்கப்பட்டு இருக்கும் வலைதளங்களுக்கும் சென்று மேலும் தகவல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. கத்தியைத் தூக்கியவன் கதியால் அழிவான் என்பது பழமொழி. வாக்குப் பதிவு முறையை மாற்றவில்லை என்றால் இது தான் நடக்கும்.

 12. ஜடாயுவின் கட்டுரை வழக்கம்போல மிகவும் டெக்னிக்கலான விஷயங்களை எளிமையாகப் புரிய வைத்துள்ளது. வாழ்க !

 13. @அஞ்சனாசுதன்

  அருமையான தகவல்கள் தந்துள்ளீர்கள் சார். நன்றி.

  சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் சொல்லும் முறை சரியானதாகத் தெரிகிறது. சிறப்பான தீர்வாகவும் இருக்கிறது.

  இந்த முறையினால் பழைய முறையில் உள்ள பிரச்சினைகளில் பல தீரும். புதிய முறையில் உள்ள பிரச்சினைகள் பலவும் தீரும்.

  ஆப்பிரிக்க நாடுகளில் பல ஜனநாயகத்தைத் தேடிச் செல்லுகின்றன. ஆனால், தேர்தலில் தில்லுமுல்லு செய்துவிட்டனர் என்றே எல்லாத் தேர்தல்களும் கலவரங்களில் முடிந்து, எந்த ஆட்சியும் இல்லாமல் இருக்கின்றன.

  ஆபிரகாமிய நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளைக் கண்ணாபின்னா என்று சுரண்ட இந்தக் குழப்பமான சூழல் வாய்ப்பு அளிக்கிறது. உலக அளவில் கனிம வளங்கள் ஏறத்தாழ 60% – 90 % ஆப்பிரிக்காவில் இருக்கின்றன. வேறு எந்தக் கண்டத்திலும் இந்த அளவு இல்லை. எனவே, இவற்றைக் கொள்ளையடிக்க ஆப்பிரிக்காவை இதைப் போன்ற குழப்பத்தில் ஆழ்த்தி வைத்துள்ளனர் யூரோப்பிய, அமெரிக்க, ருஷ்ய, சீன, அரேபிய நாடுகள்.

  சற்று யோசித்துப் பாருங்கள். இந்தியாவிலும் இத்தகைய குழப்பம் ஏற்பட்டால் உங்கள் வாழ்வும், என் வாழ்வும் என்ன ஆகும் என்று? நம் வீட்டுக் குழந்தைகளுக்கு 6 வயதானவுடன் துப்பாக்கி ஏந்தி சண்டை போடப் பயிற்சி தந்தாக வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் கொல்லப்படுவார்கள்.

  இந்தச் சூழலில் சுப்பிரமணியன் சுவாமி அவர்களின் முயற்சி எப்பேர்ப்பட்ட உன்னதமான விஷயம் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். நாம் எல்லாம் அவருக்குக் கடன்பட்டவர்கள். பாஜாக உட்பட எந்தக் கட்சியும் கண்டுகொள்ளாத பிரச்சினை இது.

  எலக்ட்ரானிக் ஓட்டிங் மிஷனோடு, ரசீது தரும் முறையையும் பயன்படுத்தலாமே என்ற யோசனையை சுப்பிரமணியன் சுவாமிக்குச் சொன்ன புண்ணியாத்மாவுக்கும் வந்தனம்.

 14. அலோ மாம்ஸ்!

  அல்லாருக்கும் வணக்கம்பா!

  சீட்டுல குத்த ஸொல்ல நம்ம ஆளுக்குத்தான் குத்தறோம்னு கன்ஃபர்மா தெர்யும் வாத்யாரே. ஆனா மெஸின்ல தட்ட ஸொல்ல நம்ம ஆளுக்குத்தான் நம்ம ஓட்டு வுயுதுன்னு இன்னா நிச்சியம், ஆ? எலீக்ஸன் கமிஸன் ஸோக்கா டபாய்க்குது மா.

  இன்னா ஸொல்லு… நம்ம சுபர்மனி சாமி ஸூப்பரா கேஸ் போட்டுகினாருப்பா. அட்த தபா அஸ்ஸெம்ப்லி எலீக்ஸன்ல அவுருக்குதான் நம்ம ஓட்டு, அ ஆங்!

  இன்னா வர்டா…

  மன்னாரு

 15. கணினி தொழிற்நுட்ப ரீதியில் எப்படி வேண்டுமானாலும் ப்ரோகிராம் எழுதமுடியும். சு.சுவாமி சொல்வது போல ரசீதும் வரவைத்து எண்ணிக்கையில் மாற்ற செய்ய தேர்ந்த programmerஆல் கட்டாயம் முடியும்.
  திரும்ப அந்த ரசீதுகள் எண்ணிப் பார்ப்பதற்குப்பதில் வாக்குச் சீட்டு முறைதான் சிறந்தது.

 16. excellent piece of article. now we know how narendra modi is continuously winning in gujarat.

  (lets see if you are being fair and post this comment in your website or not). i am sure that you will not post it.

 17. வணக்கம்,

  இவ்வளவு தூரம் எந்திரத்தில் தில்லா லங்கடி செய்ய முடியும் எனும்போது தராளமாக பட்டன் தட்டும்போது எந்த சின்னமோ அதற்க்கான ரசீதும், ஆனால் பதிவு தில்லா லங்கடிக்கு சாதகமாகவும் இயந்திரத்தை ஏன் இயங்க வைக்க முடியாது?

 18. குஜராத் மாநகராட்சித் தேர்தல்களில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாகக் காங்கிரசுக் கட்சி புகார் தெரிவித்துள்ளது. https://daily.bhaskar.com/article/congress-alleges-evm-tampering-by-the-bjp-in-polls-1452271.html
  இவர்கள் வென்றால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பக்கா பாதுகாப்பானது, இவர்கள் தோற்றால் அது மோசடியானது. என்னய்யா கூத்து இது!!!!!!!!!

 19. excellent piece of article. now we know how narendra modi is continuously winning in gujarat. – By Khaleel.
  கலீல் அவர்களே – நரேந்திர மோடி அவர்கள் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களில் ஊழல் செய்து தான் வெற்றி பெற்றார் என்று உறுதியாக சொல்கிறீர்கள். இப்படி சொல்வதால், நினைப்பதால் உங்களுக்கு ஆனந்தம் கிடைக்கிறது என்றால் அதில் எங்களுக்கும் ஆனந்தம் தான். இதே செய்தியை இன்னும் நூறு பேருக்கு சொல்லுங்கள். அவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். காங்கிரஸ் கட்சிக்கு உம்மை போன்ற ஞானிகள் தான் பக்க பலமாக இருந்து வருகின்றனர். உங்களை போன்ற ஒரு சிறந்த தொண்டரை தான் ராகுல் காந்தி வலை வீசி தேடி வருகிறார். உடனடியாக சென்று அந்த வலையில் அகப்படுங்கள். மைசூர் பாகு செய்த கரண்டியை காண்பித்தே, அதில் வடியும் நெய்யை காண்பித்தே காங்கிரஸ் உங்களை ஏமாற்றுகிறது. உங்களுக்கு என்றும் மைசூர் பாகு கிடைக்க போவது இல்லை. அந்த நெய் வடியும் கரண்டியை பார்த்தே ஆனந்த பட்டு கொள்ளுங்கள்.

 20. மின்னணு வாக்கு இயந்திரம் பற்றி டாக்டர் கல்யாணராமனும், சுப்பிரமணிய சுவாமியும் தொகுத்து அளித்திருக்கும் இன்னொரு புத்தகம் வெளிவந்திருக்கிறது –

  The book edited by Dr. Subramanian Swamy and Dr. S. Kalyanaraman titled:

  Electronic Voting Machines —Unconstitutional and Tamperable

  was released on Nov. 3, 2010 in Chennai. (300 pages. Price: Rs. 395.Vision Books Pvt. Ltd., 24 Feroze Gandhi Road, Lajpat Nagar 3, New Delhi 110024, India Phone: + 91 11 2983 6470 and 2983 6480 email: visionbk@vsnl.com )

  மேலும் விவரங்களுக்கு:

  https://sites.google.com/site/hindunew/_/rsrc/1288797487495/electronic-voting-machines/evmtitlepg.jpg?height=400&width=269

 21. அடியேனுக்கு தோன்றிய யோசனை …
  பஸ்ஸில் பயணச்சீட்டு கொடுக்கும் இயந்திரத்தை பார்த்திருப்போம். அது போல ஓட்டு போடும் இயந்திரத்திலும், ஒருவர் ஓட்டை பதிவு செய்தவுடன் ஒரு காகிதப் பதிவு (Printout ) வரவேண்டும். அதில் வாக்காளர் பதிவு செய்த வேட்பாளரின் சின்னம் வர வேண்டும். அதை வாக்காளர் சரி பார்த்து ஓட்டு பெட்டியில் போட வேண்டும். ஓட்டு எண்ணிக்கை நடத்தும் போது ஓட்டு இயந்திரத்தின் கணக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். ஓட்டு எண்ணிக்கையில் சந்தேகமிருப்பின் காகித ஓட்டுப் பதிவுகளை ( printout ) கணக்கிட வேண்டும். இவ்வாறு செய்தால் வேகமாக ஓட்டு எண்ணிக்கையை முடிக்கலாம் அதே சமயத்தில் சந்தேகத்தை நீதிமன்றம் மூலமாக இந்த காகிதப் பதிவுகளை எண்ணுவதன் மூலம் சரி பார்க்கலாம். பழைய ஓட்டு முறைப் போல இதற்கு காகிதமும் அதிகம் தேவைப்படாது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

 22. @ Khaleel,
  While we assume that it is how Mr. Modi won, just for the sake of it…
  a) While the people of Gujarat has unanimously worked together for the welfare of its growth, to reach it’s “only state to show double digit growth’, which EVM fraud has contributed to it?

  b) Have you been to Gujarat’s remote villages? Do you know that the kids in some of the villages speak convent English and get quality education?
  c) Have you got data to disprove the facts that the quality of their lives has indeed improved?
  d) In which other state in the country have you seen automatic system that controls the water supply to remote villages, and upon their count, an SMS is sent to the authority in the village and to the water-board?
  e) Above all, do you know that our Muslim brothers and sisters there in Gujarat wants to vote for Modi again because they felt that there is someone who shows them growth?

  Just because you have an internet connection and a brand new PC does not make your comment sensible. Think before you ink, especially with data.

 23. @ Amrutha Puthra
  Yes, excellent indeed. I think that is what Dr. Subramanya Swamy proposes. Alternatively, the entire counting process can be broadcasted to the public.

 24. திரு அம்ருத புத்திரன் அவர்களின் யோசனை மிகவும் சிறப்பானது . இவர் கூறுவது போல ஒட்டு இயந்திரத்தின் செயல்பாடு அது கொடுக்கும் கவுண்டர்பாயிலில் தெரிந்து விடும். சரியான வழிமுறைதான் இது .இதை செயல் படுத்த பி ஜே பி உட்பட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தை கட்டாயப் படுத்தவேண்டும்.குஜராத் பஞ்சாயத் தேர்தலும் மாநில சட்டமன்றத் தேர்தலும் காங்கிரசுக்கு ஒரு பொருட்டே அல்ல.மத்திய அரசைக் கைப்பற்றி ஆட்சியில் இருந்தாலே போதும் மாநிலங்களில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் கவலை இல்லை . அதன் செயல்பாடுகளை தன இஸ்டம்போலக் கட்டுப் படுத்திக் கொள்ளலாம்.
  சென்ற தேர்தலில் இதுபோல நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது .தாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்கிற தொகுதியில் எதுவும் செய்ய வேண்டியதில்லை.அதே போல கண்டிப்பாகத் தோற்று விடுவோம் என்று உறுதியான தொகுதியிலும் விட்டுவிடலாம்.ஊசலாடும் தொகுதிகளை மட்டுமே குறிவைத்தால் போதும் ஓரளவு தொகுதிகளைக் கைப்பற்றினாலே போதும் , கடைசியில் மதவாதத்தை எதிர்க்கிறேன் என்று கூறி முல்லாயம்,மாயா,காம்ரேட்டுகள், நித்தி, சரத் போன்றோர் வந்து ஒட்டிக் கொள்வார்கள்.அப்புறமென்ன அடுத்த ஐந்து ஆண்டுகள் கூட்டுக் கொள்ளைதான்.
  பா ஜ க . இதை தீவிரமாக கருத வேண்டும்.
  தாமரை.

 25. The present voting system through EVM has a lapse in eliminating the bogus votes. In this EVM system, a seperate counter is maintained for each contestant / symbol and accumulated as the votes are cast one by one. When a person manages to impersonate with fabricated IDs (its possible in india, very cheap too), then that bogus vote is added to that particular counter. There is no audit trail as to which party the vote was added. Later on if the legitimate voter comes with geniunie ID cards, he will again be allowed to vote. Now how to eliminate the vote of the bogus voter? Audit trial is not available. You cannot pick that particular vote to eliminate. However in the manual system or the proposed system, the particular paper could be traced and eliminated with the serial number written benind the sheet. So along with the printing, a running serial number should also be printed to trace back the vote, one to one with the voter.

 26. மிகவும் தவறான தகவல். மிகவும் தவறான தகவல். மிகவும் தவறான தகவல்.

  //வழிமுறை ஒன்று:

  display unitக்கு செல்லும் மெல்லிய board ஐ எடுத்து விட்டு, கிரிமினல்கள் தங்களது boardஐ அதில் சொருகி விடலாம்.
  இந்த செருகப்பட்ட போர்டில் மிகச் சிறிய வயர்லெஸ் ரிசீவரும் (உதாரணமாக, செல்போன்களில் உள்ள Bluetooth ரிசீவர்) இருக்கும். இப்படி சொருகுவதற்காக உருவாக்கப் பட்ட board ஒன்றைக் கீழே பார்க்கலாம் -//

  Control Unit – அதிகாரிகள் முன்னாள் பரிசோதிக்க பட்ட பின்னரே சீல் வைக்கப்படும். இது மாநில தேர்தல் அலுவலகத்தில் வைத்து நடைபெறும். எனவே எந்த பெட்டி எந்த தொகுதிக்கு செல்லும் என்று யாருக்கும் தெரியாது. கண்ட்ரோல் மற்றும் பெல்லோட் பேட்டியின் எண்கள் randomize செய்யப்பட்டு தொகுதிகளுக்கு அனுப்பப்படும்.

  candidate settings அந்தந்த தொகுதியில் வைத்து நடைபெறும் மேலும் அவை சீல் வைக்கப்படும் அந்த சீல் எண்கள் ஸ்கேன் செய்து மாநில தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்படும். candidate எண்ணிக்கை மற்றும் வரிசை தொகுதிக்கு தொகுதி மாறுபடும். மேலும் எந்த பெட்டி எந்த பூத்துக்கு செல்லும் என்பதை முந்திய நாள் முடிவு செய்யப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்

  பூத் அதிகாரிகள் குறைந்தது ஐந்து முறையாவது பரிசோதனை தேர்தல் நடத்தி தேர்தல் முடிவுகள் காண செய்ய நேரம் உண்டு. அதாவது Result, close, clear, போன்ற பட்டன்கள் கையாள வசதியாக அவை சீல் செய்யபடாமல் இருக்கும்.

  தேர்தல் நாள் அன்று ஒட்டு சாவடி முகவர்கள் (booth agent) முன்பு பரிசோதனை தேர்தல் நடத்தி முடிவுகள் சரிபார்க்கப்பட்டு, போட்ட ஓட்டுகள் அத்தனையும் அழிக்கப்பட்டு மீண்டும் முடிவுகள் மற்றும் மொத்த ஓட்டுகள் (அதாவது 0) சரிபார்க்கப்பட்டு. clear, Result பகுதிகள் சீல் வைக்கப்படும் இதில் முக்கியமானது என்னவெனில் முகவர்கள் அந்த paper seal மீது கையொப்பம் இட்டு அதன் எங்களை எழுதிவைத்துக் கொள்ளவார்கள். மேலும் அந்த எண்கள், மொத்தம் பதிவான ஓட்டுகள் எத்தனை என்று certificate வழங்கப்படும். certificate யை வாக்கு என்னும் மையத்திற்கு கொண்டு செல்வர்கள். அங்கு அதை அவர்கள் ஒப்பிட்டு பார்ப்பவர்கள். பின்னரே அந்த ஓட்டுகள் எண்ணிக்கை கருத்தில் எடுத்துகொள்ளபடும்.

  சரி இப்போது சொல்லுங்கள் இந்த முறையில் எந்த நேரத்தில் “வழி முறை ஓன்று” கையாளப்படும். அதாவது control unit ல் முதல் சீல் வைக்கும் போது என்றால் அது தேர்தல் ஆணையத்தால் மட்டுமே முடியும். அப்படியானால் வாழ்வா சாவா என்று போட்டியிடும் எதிர் எதிர் கட்சிகள் இரண்டு பேருக்கும் இது தெரிய வாய்ப்புள்ளது அப்படியானால் இதில் யார் செய்ய வாய்ப்பு உள்ளது. ஆளும் கட்சியே ஆனால் இப்போது தோற்று நிற்கிறது. எனவே தேர்தல் ஆணையம் செய்ய வாய்ப்பில்லை. செய்யவும் முடியாது. ஆணையத்தில் ஒருத்தர் கூட நல்லவர் கிடையாதா?

  மேலே கொடுக்கப்பட்ட video வில் அந்த display பற்றிய வார்தளைகளை நன்றாக கவனியுங்கள்
  “open the machine and replace the real display with dishonest display which lies about the election results. ”
  அப்படியானால் இது பரிசோதனை தேர்தலில் தெரிந்துவிடும். இதன் மூலம் தேர்தல் ஆணையம் தேர்தல் வாக்கு சாவடி அதிகரிகளுக்கு மிக பலமான உத்தரவாதம் அளிக்கிறது.

  வழிமுறை இரண்டு: சாத்தியமே இல்லை.

  எங்கள் பள்ளியில் நடை பெரும் பயிற்சியில் தேர்தல் ஆணையம் இந்த கருவிகளை தந்து இரண்டு நாள் வைத்து பயிற்சி செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள் நாங்கள் அதை நானும் எனது சக ஆசிரியரும் (both are software programmer) பல முறை சோதனை செய்தோம்.

  அது மட்டும் அல்ல நங்கள் இருவரும் இதுவரை நான்கு முறை வாக்கு சாவடி தலைமை (PRO) ஆக பணியற்றியுள்ளோம்.

 27. எல்லா EVMலும் கருவிகள் இணைப்பது நடைமுறை சாத்தியமில்லாதது.தவிர இக் கட்டுரையில் நிர்வாக பாதுகாப்பு பற்றி பேசவிடவில்லை… அதிகாரிகள் நிலை முதல் தேர்தல் முகவர்கள் வரை பல கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது… ஆணையத்தில் அனைத்துக் கட்சி ஆதரவாளரும் இருக்கலாம்….இவை அனைத்தையும் மீறி இவ்வளவு இரகசியமாக செய்ய வாய்ப்புள்ளாதா என்ன…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *