ஊட்டி இலக்கிய சந்திப்பில், 28-8-2010 அன்று ஆழ்வார் பாசுரங்களின் கவிதானுபவம் பற்றி ஆற்றிய உரை.
தொடர்ச்சி…
ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் இருந்து சில பாடல்கள்.
வெள்ளை விளிசங்கு இடங்கையிற் கொண்ட
விமலன் எனக்கு உருக்காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும்
உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக்
களித்திசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என்
வேங்கடவன் வரக் கூவாய்.
(விளிசங்கு – அழைக்கும் சங்கு; இடங்கை – இடக்கை; விமலன் – தூயவன்; உருக்காட்டான் – உருவத்தைக் காண்பிக்க மாட்டான்; நைவித்து – நோகச் செய்து; கூத்தாட்டுக் காணும் – வேடிக்கை பார்ப்பான்; கள்ளவிழ் – தேன் ததும்பும்; கோதி – வருடி; மிழற்றுதல் – குயிலின் கொஞ்சல் கலந்த கூவும் ஒலி).
தன் காதல் நோயைக் குயிலிடம் சொல்லிப் புலம்பி என் நாயகனை வரக்கூவாய் என்று கேட்கும் பாடல்.
வெள்ளைவிளிசங்கு என்பது நாச்சியார் திருமொழி முழுவதும் விரவிக் கிடக்கும் ஒரு அழகான அகப் படிமம். இனிய ஒலியெழுப்பும் கண்ணனின் குழலை விட, ஓங்கி ஒலிக்கும் சங்கைத் தான் ஆண்டாள் அதிகம் பாடியிருக்கிறாள். குழல் உதட்டில் பட்டும் படாமல் வைத்து, நளினமாக விரல்களால் மீட்டி இசைப்பது. அதன் இசை மென்மையானது, மயக்கும் தன்மை கொண்டது. ஆனால் சங்கை முழுவதும் வாய்க்குள் பொருந்தி மூச்சை இழுத்து ஊதவேண்டும். அது பேரொலியாக ஓங்கி ஒலிப்பது. கூவி அழைத்தலும், போருக்கான அறைகூவலும் அதன் தன்மைகள்.ஆண்டாள் கண்ணன் மீது கொண்டது கரைகடந்த உன்மத்தக் காதல். அது பொங்கி எழுந்து அவள் மனதைப் போர்க்களமாக்குகிறது. அதை அவள் வெளிப்படையாகவே உரத்துச் சொல்ல வருகிறாள் என்பதால் சங்கை அதிகம் பாடினாளோ?
மேலும் இந்தச் சங்கு கண்ணனின் வாய்ச்சுவையை குழலைவிட அதிகமாக அனுபவிப்பது. அதனாலும் அவளுக்கு சங்கு மீது ஒரு தனிப்பட்ட பொறாமை கலந்த பாசம் உண்டு.
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாயவன் தான் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கிறேன் சொல் ஆழி வெண்சங்கே
என்று கேட்டவளாயிற்றே!
அவன் உருக்காட்டா விட்டாலும் உள்ளத்திலேயே வெண்சங்கு ஏந்திய ரூபம் தெரிகிறது. அது அவளை நோகவைக்கிறது, “உயிர் பெய்து” வாழவைக்கவும் செய்கிறது. இப்படி அவளை அலைக்கழித்து வேடிக்கை பார்ப்பதே அவனது தொழில்.ஆனால் அதுவும் அவளுக்கு சுகமாகவே இருக்கிறது.
தேன் சொரியும் பூக்களைக் கோதி அந்த இன்பத்தில் களித்து இசைபாடும் குயிலே! உன்னுடைய இந்தக் காமகானத்தைக் கூவிப் பாடாமல், எனக்காக வேங்கடவன் வரக்கூவு என்கிறாள்.
ஆண்டாள் கண்ணனைக் காதலனாகப் பாடியது ஏன் என்று நவீன இலக்கியவாதிகள் ஒரு சிலர் வினோதமான விளக்கங்கள் அளித்து வருகிறார்கள். அடுத்தவீட்டுக் காரன் மீது காதல் கொண்டால் அதைப் பாட முடியாத சூழலாம்; அதனால் கடவுள் என்ற போர்வையில் உண்மையில் தனது காதலனைப் பற்றிப் பாடினாளாம்.
கவிதை என்றாலே என்னவென்று தெரியாமல் அதைப் பற்றிப் பேச முற்படும் விடலைகளிடம் தான் இதைப் போன்று ஒரு அபத்தமான, அர்த்தமற்ற வாதத்தைப் பார்க்க முடியும். அன்றும் சரி,இன்றும் சரி. காதல் கவிதையை, காவியத்தை யார் யாருக்கு எழுதினாலும் அது உண்மையில் எழுதப் படுவது காதலுக்காகத் தான்! பாரதியின் கண்ணம்மாவும், கும்பகோணம் துக்காம்பாளையத் தெரு யமுனாவும்,காட்டில் வாழும் மலையான் மகள் நீலியும் எல்லாம் அதன் புற அடையாளங்கள் மட்டுமே. இதை எத்தனை முறை தான் சொல்வது?
அதோடு, இந்துக் கடவுளர்கள் உணர்வு நிலையின்,ஆன்மிக பேரனுபவ நிலையின் குறியீடுகளும் கூட. கண்ணன் அளவிலா அழகின்,கரைகடந்த காதலின் மொத்த உருவம். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நமது இலக்கிய, கலாசார வெளியில் உயிர்த்துடிப்புடன் இருக்கும் உருவம். கருமேக நிறம், புல்லாங்குழல், வனமாலை, கம்பீரம் கலந்த ஆண்மை, அதோடு கொஞ்சம் பெண்மை கலந்த அழகு, அசுரர்களை அழித்து தன் அடியாரைக் காக்கும் பௌருஷம், அதோடு பெண்மைத் தனம் கொண்ட குறும்பு – இப்படி பெண் அணுக்கம் உள்ள அவ்வளவு எதிர்பார்ப்புகளின் லட்சியமாகவும் கண்ணன் இருக்கிறான்.
அவன் மீது கோபிகைகள் கொண்ட பேரன்பு உணர்வை ஆண்டாள் தனதாக்குகிறாள். ஆண்டாளின் பாசுரங்களில் தோய்பவர்களும் அதே உணர்வைத் தமதாக்க முயற்சிக்கிறார்கள். கவிதானுபவமும் ஆன்மிகமும் ஒன்றுகலக்கும் புள்ளி இது.
***********
உள்ளே உருகி நைவேனை
உளலோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்து என் அழலைத் தீர்வேனே.
(நைவேனை – நொந்து கொண்டிருப்பவளை; உளலோ இலளோ – இருக்கிறாளா இல்லையா; கண்டக் கால் – கண்டால்; அழலைத் தீர்வேனே – தீயை அணைத்துக் கொள்வேன்).
காதலின் உச்சநிலையில் உக்கிரமாக வெளிப்படும் ஒரு பாடல் இது. காதலின் மயக்க அனுபவங்கள்,புனைவுக் காட்சிகள்,விதவிதமான பெண் உளவியல் ரூபங்கள்,விகாரங்கள் எல்லாம் நிறைந்தவை கோதையின் பாடல்கள்.
இந்தப் பாடலிலும், நாச்சியார் திருமொழி முழுவதிலுமே வெளிப்படும் பெண்மொழியைப் புரிந்து கொள்வதற்கு அதற்குரிய மனநிலையும், நுண்ணுணர்வும் வேண்டும். ஆண்டாள் கவிக்கருத்து பற்றி ஸ்ரீராமானுஜரிடம் கேட்கப் பட்டபோது அவர் கூறினாராம் –
“மோவாய் எழுந்த முருடர் கேட்கைக்கு அதிகாரிகளல்லர். முலையெழுந்தார் கேட்க வேணும்”. மோவாயில் முடி வளர்ந்த, முரட்டாண்மை (machismo) கொண்டவர்கள் கேட்பதற்குத் தகுதியில்லாதர்கள். “முலை எழுந்தவர்களே” கேட்க வேண்டும்.
ஆண், பெண் என்று சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள்.வைஷ்ணவ மரபிற்குள்ளேயே எவ்வளவு அற்புதமாக ஆண்டாள் கவிதை பற்றிய இலக்கிய விமர்சனம் எழுந்திருக்கிறது என்று பாருங்கள். ”பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே” என்றவாறு, ஸ்ரீராமானுஜரை ஆண்டாளின் அண்ணர் என்றே குறிப்பிடுவார்கள். திருமாலிருஞ்சோலை நம்பிக்கு நூறு அண்டா அக்காரவடிசில் செய்ய வேண்டும் என்ற ஆண்டாளின் சின்ன ஆசையை நிறைவேற்றியது முதற்கொண்டு, அவள் திருவுள்ளத்தை முற்றாக அறிந்தவர் ஸ்ரீராமானுஜர்.
தன் உடலைத் தானே பாடிக் கொள்வது, உருவகம், பூடகம், பாலியல் நுண் நேரடி விரிவு, அவல விரிவு bla bla bla “பெண்ணிய” சித்தரிப்புக்கள் எல்லாம் ஏதோ மேற்கத்திய உலகிலிருந்து தான் இன்றைய நவீன பெண் கவிதைக்குள் இறங்கி விட்டது போன்று சில இலக்கிய மேதாவிகள் கருத்து சொல்கிறார்கள். ஆண்டாள் கவிதைகளில் இதெல்லாம் இருக்கிறது. இதற்கு மேலேயும் இருக்கிறது.
அந்தக் கள்வன் மட்டும் வரட்டும்; அவனைக் கண்டவுடன், கொள்ளும் பயன் இல்லாத இந்தக் கொங்கையைக் கிழங்கோடு பறித்து அவன் மார்பில் எறிந்து என் காதல் நெருப்பை அணைத்துக் கொள்கிறேன் என்று சூளுரைக்கும் இந்தப் பாடலில் கூட “கொள்ளை கொள்ளிக் குறும்பன்” (நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் குறும்பன்) என்ற கொஞ்சலான பதம் இருக்கிறது. அந்தக் கொஞ்சலுக்கு உள்ளும் ஒரு “கொள்ளி”!
இந்தப் பாடலில் “கொள்ளும் பயன்” என்று ஆண்டாள் குறிப்பிடுவது கிருஷ்ணானுபவமே என்பது நாச்சியார் திருமொழியின் மற்ற பாடல்களையும் படித்தால் புலப் படும். வேறு ஒரு பாடலில்,
”அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான்
அவன் முகத்தன்றி விழியேன்” என்று
செங்கச்சுக் கொண்டு, கண் ஆடையார்த்து,
சிறு மானிடவரைக் காணில் நாணும்
கொங்கைத் தலம் இவை நோக்கிக் காணீர்
கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா …
என்று உரைக்கிறாள். அவன் முகத்தன்றி *விழியேன்* என்று கச்சணிந்து, கண் ஆடையார்த்து உறங்குகிறதாம் கொங்கைத் தலம்.
இன்னும் சில நவீன வாசிப்பாளர்கள் மதிகெட்டு சொல்வது போன்று, இது கிளர்ச்சியூட்டும் கவிதையோ அல்லது பாலுணர்ச்சிக் கவிதையோ அல்ல;அத்தகையவற்றை உடனடியாகவே இனம் கண்டு கொள்ளலாம்.
காதலின் தவிப்பில், உக்கிரத்தில் நெருப்பாகச் சுடும் கவிதை இது. தன் இடமுலை திருகி வீசிய கண்ணகியின் கதை இங்கு தமிழ் மரபில் ஏற்கனவே பிரபலமாக இருந்தது. அதையும் இணைத்து இந்தக் கவிதையை வாசிக்க வேண்டும்.
***********
ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது
அம்மனையீர்! துழதிப் படாதே
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன்
கைகண்ட யோகம் தடவத் தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக்
காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்களமாக நிருத்தம் செய்த
பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமென்.
(ஆர்க்கும் – யாருக்கும்; துழதிப் படாதே – குழம்பாமல், வருந்தாமல்; கடம்பை – கடம்ப மரம்; நட்டம் – நடனம்; நிருத்தம் – ஒருவகை நடனம்; உய்த்திடுமென் – அழைத்துக் கொண்டு போங்கள்).
நாயகனுக்காகக் காத்திருந்து காத்திருந்து நலிந்த கோதை, இனி அவன் வருவதாகத் தெரியவில்லை; என்னை அவனிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று முறையிடுவதாக இந்தப் பாடல் இடம்பெறும் பத்து அமைந்துள்ளது. நாச்சியார் திருமொழியில் கடைசிப் பகுதியில் வருபவை இந்தப் பாசுரங்கள்.
.. இங்குத்தை வாழ்வை ஒழியவே போய்
யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்.
.. நந்தகோபாலன் கடைத்தலைக்கே
நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின்
என்ற வகையில் பத்து பாடல்களும் இருக்கின்றன.
தமிழ் மரபு சார்ந்த அகத்துறைப் பாடல்களில் நாயகியின் காதல் வெளிப்பாடுகள் பொதுவாக பெண்மைக்கு உரிய குணங்களாக அக்காலத்தில் எண்ணப் பட்ட அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவற்றுள் அடங்கியதாகவே இருந்தன. பிற்காலக் கவிதைகளில் சிற்சில மரபு மீறல்கள் நிகந்தன. காட்டாக, மடலூர்தல் என்ற பிரகடனச் செயல் தலைவன் மட்டுமே செய்தற்குரியதாக இருந்தது; தலைவி தானும் மடலூர்வேன் என்று சொல்வதாகப் பிற்காலத்திய அகப்பாடல்கள் அமைந்தன (திருமங்கையாழ்வார் பாடல்கள் இதற்கு உதாரணம்).
அப்போதும் கூட, நாயகி காத்துக் கொண்டு தான் இருந்தாள்; தானே நாயகனிடம் போவேன் என்று சொல்லவில்லை. நான் அறிந்த வரையில், தமிழ் அகப்பாடல்களில் இத்தகைய ஒரு புரட்சியை முதலில் செய்தவள் ஆண்டாள் தான். “நாணி இனி ஓர் கருமமில்லை” என்றே வேறு ஒரு பாடலில் சொல்வாள்.
தந்தையும் தாயரும் தானும் நிற்கத்
தனிவழி போயினள் என்னும் சொல்லு
வந்த பின்னைப் பழி காப்பரிது..
என்று எச்சரிக்கையும் இன்னொரு பாடலில் உண்டு!
அம்மா மார்களே, என் நோயை உங்களால் கண்டுபிடித்து குணப்படுத்த முடியாது.கண்ணன் கைபட்டு என்னைத் தடவிய மாத்திரத்தில் நோய் தீர்ந்து விடும், உடனடியாகக் காளிந்தி நதிக் கரைக்கு என்னைக் கூட்டிக் கொண்டு போங்கள்.
இந்தப் பாடலில் காளிங்க நர்த்தனம் வருவது தேர்ந்த அழகியல். இவள் மனதில் பொங்கி எழும் காதல் உணர்வுகளின் புறத்தோற்றமாக அந்தப் பொய்கையும், அங்கு படமெடுத்து ஆடும் பாம்பும் இருக்கின்றன. அந்த நச்சுப் பொய்கைக்குள் பாய்ந்து பாம்பின் உச்சியில் ஏறி நின்று நர்த்தனம் செய்தவனாயிற்றே அவன், எனது இந்த நோயையும் எளிதில் குணப்படுத்தி விடுவான் என்று சொல்வதாகவும் கொள்ளலாம்.
***********
எழிலுடைய அம்மனைமீர்! என் அரங்கத்து இன்னமுதர்
குழலழகர், வாயழகர், கண்ணழகர், கொப்பூழில்
எழு கமலப் பூவழகர், எம்மானார் என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே ஆக்கினரே.
(கொப்பூழ் – தொப்புள்; கழல்வளை – அழகிய வளை, கழன்று விழும் வளை என்று இரு பொருள்).
வயதானாலும் அதற்குரிய அழகோடு திகழ்பவர்கள் என்பதால் “எழிலுடைய அம்மனைமீர்!” என்று விளிக்கிறாள். அரங்கத்து அமுதரின் அழகே அழகு. அந்த அழகில் மயங்கி இளைத்து, என்னுடைய அழகான வளைகளும் கழன்று விழுந்து விட்டனவே என்று புலம்புகிறாள்.
“கொப்பூழில் எழு கமலப் பூவழகர்” என்ற வரி அற்புதமானது. அந்த ஒரு வரிக்காகவே இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
இந்து அழகியலில் நாபி எனப்படும் தொப்புள் உள்ளுக்குள் உள்ளாக முடிவற்று நுண்மையாக விரிந்து செல்வதைக் குறிக்கும் குறியீடாக உள்ளது.குரல் அல்லது நாதம் முடிவின்மையின் ஆழத்திலிருந்து, நாபிக் கமலத்தில் இருந்து எழுவதாகக் கூறப் படுகிறது.
விஷ்ணு நாபி என்பது அனந்தத்தின் அடையாளம். அதன் அக ஆழத்திலிருந்து தாமரை பூக்கிறது. அந்தத் தாமரையில் சிருஷ்டியின் தேவனாக பிரம்மன் அமர்ந்திருக்கிறான்.அவனிலிருந்து சிருஷ்டி விரிகிறது. எல்லையற்ற அழகுகள் கொண்ட உலகமான சிருஷ்டி!
உலகும் இயற்கையுமாய் அழகை விரிக்கும் படைப்பின் விதை அது என்பதால் “கொப்பூழில் எழு கமலப் பூவழகர்”என்றாள்.சிருஷ்டியின் அழகுகள் என்றோ முடிந்து விட்டவை அல்ல; ஒவ்வொரு கணமும் விகசிப்பவை, தொடர்பவை. அதனால் ”*எழு* கமலப் பூ” என்றாள்.
வைஷ்ணவத்தில் நாயகி பாவம் என்பது பக்தி மார்க்கத்தின் ஒரு வகை மட்டும் அல்ல. அதன் தத்துவ மையமாக,சாரமாக வியாபித்திருப்பது அது. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் செம்பாதிக்கும் மேலான பாடல்கள் நாயகி பாவத்தில் பாடப்பட்டவை என்பதே இதற்குச் சான்று. தொடக்கத்தில் அகப்பொருள் சார்ந்த காதல் பாட்டுகளாக மலர்ந்து, வாழ்க்கையைப் பற்றிய, பிரபஞ்சத்தைப் பற்றிய,பரிபூரணத்தைப் பற்றிய ஒரு தத்துவார்த்தமான பார்வையாக, ஒரு முழுமையான தரிசனமாகவே அது வளர்ந்திருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை.
(இந்த உரையின் போது ஆண்டாளின் பாடல்கள் பைபிளில் உள்ள சாலமோனின் உன்னதப் பாடல்கள் போன்று இருப்பதாக சிறில் அலெக்ஸ் சொன்னார். பதினைந்தாம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்த புனித ஜான் (St John of the Cross) பாடல்களின் உணர்வுகளை இதனோடு ஒப்பிடலாம் என்று ஜெயமோகன் சொன்னார். சில மேற்கோள்களையும் காட்டினார். மேலும் அது பற்றிப் பேசவில்லை.
நான் ஊருக்குத் திரும்பிவந்த பிறகு நானும் அரவிந்தன் நீலகண்டனும் இது பற்றிப் பேசினோம். அப்போது ஏற்பட்ட புரிதலை சுருக்கமாக இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
சாலமோனின் பாடல்களை கிறிஸ்தவத்தில் Bridal mysticism என்று அழைக்கிறார்கள்.நாயகி பாவத்தின் தீவிர ஆன்மிக உணர்வுகள் அதில் பெரிய அளவில் இல்லை. ஆன்மிக வேட்கை அல்ல, திருமணம் என்ற சமூக ஒப்பந்தமே அதற்கு இணையான குறியீடு. பிற்கால கிறிஸ்தவ இறையியலில் திருச்சபையே கிறிஸ்துவின் மணவாட்டி (bride) என்று இதற்கு விளக்கம் அளிக்கப் பட்டது நிறுனவ கிறிஸ்தவத்தின் ஒரு அங்கமாகவே அது ஆகிவிட்டது. இது பற்றி அரவிந்தன் ஏற்கனவே எழுதியிருக்கிறார்.
புனித ஜானின் பாடல்கள் வேண்டுமானால் ஒருவகையில் இந்து மரபின் நாயகி பாவத்திற்கு கொஞ்சம் அருகில் வருகின்றன என்று சொல்லலாம். நாயகனுக்காக ஏங்கும் புனித ஜான் பாடல்களில் ஆன்மிகத் தவிப்பின் கீற்றுகளைக் காணலாம்.அவர் mystic என்றும் counter-reformation (எதிர்-சீர்திருத்தம்) முகாமைச் சேர்ந்தவர் என்றுமே கிறிஸ்தவ வரலாற்றில் அறியப் படுகிறார். புனித ஜானை அப்போதைய கிறிஸ்தவம் எதிர்கொண்டது எப்படி என்றும் தெரிந்து கொள்வது முக்கியம். அவரது தியான நோக்கிலான அணுகுமுறையை சகித்துக் கொள்ள முடியாத சர்ச் அதிகார பீடம் பொது இடத்தில் அவருக்கு கசையடிகள் வழங்கித் துன்புறுத்தியது. சித்திரவதை செய்யப் பட்டு, அவரது உடல் மட்டுமே கொள்ளும் அளவுள்ள ஒரு தனிச் சிறையில் அடைத்து வைக்கப் பட்டார். சிறைக்காவலாளி மூலம் கிடைத்த காகிதங்களில் தனது கவிதைகளை எழுதினார். அங்கிருந்து வேறு இடத்திற்குத் தப்பித்து ஓடி கிறிஸ்தவ மடாலயங்களை நிறுவினார். அவர் இறந்து 150 வருடங்களுக்குப் பின் சர்ச் அதிகாரபூர்வமாக அவருக்குப் புனிதர் பட்டம் சூட்டியது. இது நடந்தது பதினைந்தாம் நூற்றாண்டில்.
அதே காலகட்டத்தில் வாழ்ந்த இன்னொரு கிறிஸ்துவ மறைஞானி அவிலாவின் புனித தெரசா (St. Teresa of Avila) என்ற பெண். இவரது பெயரை நான் சிறில் அலெக்சிடம் குறிப்பிட்டேன். அலெக்ஸ் இவரைப் பற்றி விரிவாக அறிந்திருக்கவில்லை. இவர் புனித ஜானின் சீடராக இருந்தவர். கிறிஸ்துவுக்காக ஏங்கும் இதயத்தின் ஏக்கத்தை நான்கு படிகளாக இவர் கண்டார் – மானசீக வழிபாடு (mental prayer), அமைதி வழிபாடு (prayer of quite), ஒன்றிணையும் பக்தி (devotion of union), பரவச பக்தி (devotion of ecstacy/rapture). இந்து பக்தி மரபில் விரிவாகப் பல்வேறு அடியார்களும் கடைப்பிடித்த பக்தி மார்க்கத்தின் தொடக்க நிலை அம்சங்கள் இவை. ஆனால் பதினைந்தாம் நூற்றாண்டு கிறிஸ்தவத்திற்கு இவை மிகவும் புதிய விஷயங்களாகத் தெரிந்தன என்பது ஆச்சரியத்திற்குரிய விஷயமல்ல. ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்னவென்றால் இவர் கொடுமைப் படுத்தப் படவில்லை, சித்திரவதைக்கு உள்ளாகவில்லை என்பது தான். சில அற்புதங்களையும் நிகழ்த்தியதாக நம்பப் படுகிறது. ரோமில் உள்ள ஒரு தேவாலயத்தில் இத்தாலிய சிற்பக் கலைஞர் Bernini உருவாக்கிய The Ecstacy of St. Teresa என்ற அற்புதமான சிற்பம் உள்ளது. நிறுவன கிறிஸ்தவத்திற்கு சிறிதும் ஒவ்வாத அழகியலில், புனித தெரசா காதல் பரவசத்தில் மூழ்கியிருப்பதாகக் காண்பிக்கும் சிற்பம். Dan Brown எழுதிய Angels and Demons நாவலில் இந்த தேவாலயம் மற்றும் இந்த சிற்பம் பற்றி வருகிறது.
ஸ்ரீராமகிருஷ்ண மடத்து துறவியர் இந்த கிறிஸ்தவ மறைஞானிகளைப் பற்றி உயர்வாகப் பேசியிருக்கிறார்கள். முற்றிலும் நிறுவனமயமாக்கப் பட்டு,ஆக்கிரமிப்பும் அதிகார வெறியுமே மையமாகி விட்ட கிறிஸ்தவ அமைப்பில், கிறிஸ்துவை ஆன்மிக ரீதியாக அணுக ஓரளவு முயற்சித்தவர்கள் இந்த உண்மையான பக்தர்கள். அந்த வகையில் புனித ஜான், புனித தெரசா ஆகியோரை ஒரு இந்துவின் இதயம் நெருக்கமாகவே உணர முடியும். இந்தப் பட்டியலில் வரும் இன்னொருவர் St Francis of Assisi.
ஆயினும், இந்த கிறிஸ்தவ மறைஞான மரபு ஒரு விதிவிலக்காக,ஒதுங்கியதாக, ஆரம்ப நிலையினதாகவே உள்ளது. முழுமையான தத்துவ, சமய, தரிசன மலர்ச்சி கொண்ட ஸ்ரீவைஷ்ணவத்தின் நாயகி பாவத்துடனோ, ஆண்டாளின் பாசுரங்களுடனோ இதனை ஒப்பிட முடியாது).
***********
அடுத்து பெரியாழ்வார் திருமொழியில் இருந்து இரு பாடல்கள்.
வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க –
மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தே போல்
சொட்டுச் சொட்டு என்னத் துளிக்கத் துளிக்க என்
குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான்
கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்.
(குட்டன் – குழந்தை; புறம்புல்குவான் – பின்னால் வந்து அணைப்பான்).
கண்ணனைக் குழந்தையாகக் கண்டு பெரியாழ்வார் பாடிய பாடல்கள் அற்புதமானவை. பிற்காலத்தில் தமிழில் பிள்ளைத் தமிழ் என்ற பிரபந்த இலக்கிய வடிவம் உருவாவதற்கு முன்னோடியாக இருந்தவை பெரியாழ்வாரின் பாடல்களே. குழந்தைக் கண்ணனைத் தொட்டிலில் இட்டு ஆட்டுதல், முலையுண்ண அழைத்தல், பூச்சூடுதல், அவன் சிறுகைகளால் சப்பாணி தட்டுவதை ரசித்தல் என்று பலவேறு வகையாக இப்பாடல்கள் இருக்கின்றன. இதில் ஒன்று புறம்புல்குதல், அதாவது பின்னால் வந்து அணைத்தல். குழந்தை சிறுநடை நடந்து வந்து நாம் அறியாமல் பின்னால் வந்து அணைத்துக் கொள்வது எப்பேர்ப்பட்ட பரவச அனுபவம்! அது குறித்த ஒரு பாடல் இது.
குழந்தைக் கண்ணன் பின்வந்து அணைக்கும் போது சொட்டுச் சொட்டாக சிறுநீர் துளிர்க்கிறது. அதை அப்படியே அகக் கண்ணில் கண்டு பாடுகிறார்! வட்டத்திற்கு நடுவே ஒரு மாணிக்க மொட்டு.அதன் நுனியில் முத்துக்கள் முளைப்பது போல இருக்கிறாம். என்ன ஒரு அழகிய சித்திரம் பாருங்கள். உலக இலக்கியத்தில் எங்காவது குழந்தை மூச்சா போவது பற்றி இவ்வளவு கவித்துவமாக எழுதியிருப்பதைக் காண முடியுமோ?
இங்கு குறிப்பிடப் படுவது சிறுநீர் அல்ல; எம்பெருமான் திருவாய் எச்சில் தான் என்று வைஷ்ணவ சொற்பொழிவாளர்கள் சிலர் விளக்கம் தருகிறார்கள்களாம். இந்தப் பாடல் நேரடியாக, அழகாக சொல்வதைக் கூட ஏன் இப்படித் திரிக்க வேண்டும் என்பது புரியவில்லை. அன்பில் பித்தாகிவிட்ட ஆழ்வாருக்குத் தோன்றாத ஆசார மனோபாவம், அவரது அடியார்களில் சிலருக்கு சில சமயம் தோன்றி விடுகிறது!
நெய்க்குடத்தைப் பற்றி ஏறும்
எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்!
காலம்பெற உய்யப் போமின்
மெய்க்கொண்டு வந்து புகுந்து
வேதப்பிரானார் கிடந்தார்
பைக்கொண்ட பாம்பணையோடும்
பண்டன்று பட்டினம் காப்பே.
(நிரந்து – பரவி; உய்யப் போமின் – பிழைத்துப் போங்கள்; மெய் – உடல்; பைக்கொண்ட – நச்சுப் பை கொண்ட; பண்டன்று – பழைய மாதிரி இல்லை).
பெரியாழ்வாரின் இன்னொரு சிறப்பு திட பக்தியை வெளிப்படுத்தும் அவரது பாடல்கள். நோய்களைக் கூப்பிட்டு எச்சரிக்கிறார் இந்தப் பாடலில்.
ஓ நோய்களே, உங்களுக்கும் காலம் இருக்கிறது, அதனால் பிழைத்துப் போய் விடுங்கள். நச்சுப் பாம்பையே படுக்கையாகக் கொண்ட வேதப்பிரான் இந்த உடம்பில் வந்து புகுந்து கிடக்கிறான். பழைய மாதிரி இல்லை, இந்த பட்டிணத்திற்கு இப்போது பலமாகக் காவல் இருக்கிறது.ஜாக்கிரதை!
”நெய்க் குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள்” என்ற உவமை அபாரமானது. நோய்வாய்ப் படும் உடலை அழுக்கானதாக, கீழானதாகவே பொதுவாக எண்ணுவார்கள். ஆனால் உயிரின் சக்தி துளிர்த்துக் கொண்டிருக்கும் உடலை இங்கே நெய்க்குடம் என்று உவமிக்கிறார். அதன் ஜீவசக்தியையே பற்றி ஏறி இந்த நோய்கள் பின்னர் அதையே உண்ணுகின்றன.
பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய “புலிநகக் கொன்றை” நாவலில் ஒரு இடத்தில் இந்தப் பாசுரத்தை ஒரு அகப்படிமமாக ஆக்கியிருக்கிறார். பின்னாப் பாட்டி தனது முதிய பிராயத்தில் நோய்வாய்ப் பட்டு படுக்கையில் விழுந்து கிடக்கிறாள். ஏதேதோ பழைய ஞாபகங்கள் அவளை அலைக்கழிக்கின்றன. நினைவு பிசகிப் பிசகிப் போகிறது. ஒவ்வொரு எறும்பாக நெய்க்குடத்தின் மேலே ஏறி ஏறி வருவது போல அவள் மனத்தில் தோன்றுகிறது. சில எறும்புகள் ஏற முடியாமல் கீழே விழுகின்றன. சில குடத்திற்கு உள்ளே போகின்றன.
அந்தப் பாட்டி சிறுவயதில் நிறைய பிரபந்தம் படித்தவள் என்பதும் கதையில் வரும் செய்தி.
நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்ற மாகடலில் இருந்து ஒரு சில துளிகளை இங்கு பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.
வைஷ்ணவ இலக்கியத்தில் எனக்கு அபிருசி ஏற்படுத்தி அதன் பல பரிமாணங்களையும் எடுத்துச் சொன்ன பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் சுவாமி , இந்திரா பார்த்தசாரதி, மறைந்த கவிஞர் சதாரா மாலதி (இவர் “உயர்பாவை” என்ற பெயரில் திருப்பாவைக்கு அற்புதமான உரை ஒன்று எழுதியிருக்கிறார்), திருவாய்மொழி ஈடு வியாக்கியானத்தை இணையத்தில் போட்டு வைத்த புண்யவான்கள், மின்தமிழ் கூகிள் குழுமம் ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(முற்றும்)
திரு ஜடாயு அவர்களே,
//இங்கு குறிப்பிடப் படுவது சிறுநீர் அல்ல; எம்பெருமான் திருவாய் எச்சில் தான் என்று வைஷ்ணவ சொற்பொழிவாளர்கள் சிலர் விளக்கம் தருகிறார்கள்களாம். இந்தப் பாடல் நேரடியாக, அழகாக சொல்வதைக் கூட ஏன் இப்படித் திரிக்க வேண்டும் என்பது புரியவில்லை. அன்பில் பித்தாகிவிட்ட ஆழ்வாருக்குத் தோன்றாத ஆசார மனோபாவம், அவரது அடியார்களில் சிலருக்கு சில சமயம் தோன்றி விடுகிறது!//
யாரையோ வாங்கு வாங்கு என்று வாங்குகிறீர்கள் :-). யாரை என்று குறிப்பிடவில்லை நீங்கள் :-).
“இப்பாடலில் ‘முத்து’ என்று கூறப்படுவது சின்னக் கண்ணனுடைய சிறுநீர்த் துளிகள்” என்று தான் பெரியவாச்சான்பிள்ளை விளக்கம் தந்துள்ளார். “முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து தாம் அதனைப் பேசாதே, தன் நெஞ்சில் தோற்றினதே சொல்லி ‘இது சுத்த உபதேசவர வாற்றது’ என்பார் மூர்க்கராவாரே” என்ற மாமுனிகளுடைய உபதேசத்தை நித்யானுசந்தானத்தில் ஓதுபவர் எவரும் அப்படி பெரியவாச்சான்பிள்ளையின் உரைக்கு முரணாகக் கூறியிருக்க வாய்ப்பில்லை என்பதே எனக்குத் தெரிந்தது.
ஒரு குழந்தையின் கொஞ்சல்களும் கெஞ்சல்களும் பார்க்க அழகாக இருக்கும். இந்த கட்டுரை அழகாக விவரிக்கிறது. அருமை.
sir please !!! please sir don’t add the majestic,highly honourable Scholar Sri PBA Swami with ordinary commercial authors/writers like Indra Parthasarathy / Sujatha. Personally i know these two and their mentality about their writings. Don’t compare or even add them with highly respectable people like Sri PBA Swami or Sri Puthur Vakkil Krishnaswamy like scholars.
Then regarding comparing or analysing the great,true and pure SriVaishnavite Gunaanubhavams with some alien useless the said godly figures is no way encourageable or worthful to the worth writers like you. sollavanthathai thelivaaga nam ilakkiya sinthanaiodu koorinaal nanraaga irukkum. But am not opposing or objecting your wide knowledge or analysis with other religious thinking and works. But here it could be avoided.
ஆயினும், இந்த கிறிஸ்தவ மறைஞான மரபு ஒரு விதிவிலக்காக,ஒதுங்கியதாக, ஆரம்ப நிலையினதாகவே உள்ளது. முழுமையான தத்துவ, சமய, தரிசன மலர்ச்சி கொண்ட ஸ்ரீவைஷ்ணவத்தின் நாயகி பாவத்துடனோ, ஆண்டாளின் பாசுரங்களுடனோ இதனை ஒப்பிட முடியாது).
எந்த விதத்திலும் எந்த வைணவ நூல்களையும் சிந்தனைகளையும் மேற்கத்திய விகாரமான மத கோட்பாடுகளுடன் ஒப்பிடவோ, நினைத்து பார்கவோ கூட வேண்டிய அவசியம் இல்லை அல்லது அந்த அளவுக்கு மேற்கத்திய ஜல்லிகள் உயர்ந்த கருத்துக்களை கொண்டவைகளும் அல்ல.
திரு ஜடாயு அவர்களே,
பல நல்ல விஹயங்களை அருமையாக விவரித்துள்ளீர்கள் – நன்றி
உங்களுடைய இந்த வரிகளை பற்றி என்னுடைய கருத்தை சொல்ல விரும்புகிறேன்
//இங்கு குறிப்பிடப் படுவது சிறுநீர் அல்ல; எம்பெருமான் திருவாய் எச்சில் தான் என்று வைஷ்ணவ சொற்பொழிவாளர்கள் சிலர் விளக்கம் தருகிறார்கள்களாம். இந்தப் பாடல் நேரடியாக, அழகாக சொல்வதைக் கூட ஏன் இப்படித் திரிக்க வேண்டும் என்பது புரியவில்லை. அன்பில் பித்தாகிவிட்ட ஆழ்வாருக்குத் தோன்றாத ஆசார மனோபாவம், அவரது அடியார்களில் சிலருக்கு சில சமயம் தோன்றி விடுகிறது!//
இப்படி சொற்பொழிவாளர் சொல்வதற்கு அச்சாரம் காரணம் இல்லை – சிறுநீர் அச்சாரம் இல்லை என்றால் எச்சிலும் தான் அச்சாரம் இல்லை
இதை வேறு கோணத்தில் பார்த்தல் அவர் ஏன் அப்படி சொல்ல கட்டாயம் நேர்கிறது என்று புரியும்
ஒரு முறை பராசர பட்டர் காலக்ஷேபத்தின் பொது ஒரு விஷிச்டாத்வைதி அல்லாத ஒருவர் சிஷ்யாரக சேர ஆசை பட்டு காலக்ஷேபத்தில் அமர்ந்தார் – போறதா வேலை அன்று பட்டர் நாச்சியார் திருமொழி பற்றி பேசிக் கொண்டிருந்தார் – இதை கேட்ட அந்த புதிய சிஷ்யார் ஐயோ ஒரே காமம் என்று சொல்லி எழுந்துவிட்டார். பட்டர் விஷயத்தை விளக்க முயல்வதற்குள் ஆள் ஓடியே பொய் விட்டார்.
வேதம் கற்ற ஒருவருக்கு அன்றைக்கே தெளிவு இல்லை. இன்றைய நிலை என்ன – கீதை ஒரு கொலை நூல், கிருஷ்ணன் ஞானியான அர்ஜுனனை வெறுமனே போர் செய்ய தூண்டி வேடிக்கை பாத்தான் என்றும், வைஷ்ணவர்கள் எல்லாம் காமுகர்கள் என்றும், (ஜாதியை எதிர்பதால்) அவர்கள் எல்லோரும் இழி ஜாதி என்றும் ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டு திரிகிறது – இன்னொரு கூட்டம் கன்னனுக்க் என் இவ்வளவு பொண்டாட்டி என்கிறது
இந்த நிலைமையில் தொலைகாட்சியில் இது கண்ணன் சிறுநீரு என்றால் பிரசங்கம் கேட்கும் கொஞ்ச நஞ்ச பெரும் நிறுத்தி விடுவார்கள்
கண்ணனை பாதம் முதல் உச்சி வரை பாடும் பெரியாழ்வார் ஒரு பாகத்தை கூட விட்டு வைக்கவில்லை – அதோடல்லாமல் எல்லோரையும் கூட்டி வந்து பாரீர் பாரீர் என்கிறார் – இதை அனுசந்தானம் செய்பவர்கள் சிறுநீர் என்று சொல்ல முகம் சுழிக்க மாட்டார்கள் – ஆசார மனோபாவம் அன்று அது – மற்றவர்கள் முகம் சுழிக்கக் கூடுமோ என்று பயம் தான்.
பெரியாவாசான் பிள்ளை சிறுநீர் என்பதோடு மட்டும் நிற்க வில்லை ஐந்து வயது கண்ணான் அடித்த உச்சகட்ட லூட்டியை அப்படியே படம் பிடித்து காட்டி உள்ளார் – இதெல்லாம் சொன்னால் மக்கள் எல்லோரும் ரசிக்க மாட்டார்கள் – அதற்க்கு தேக அபிமானம் இல்லாத ஒரு மனப் பாங்கு தேவை படுகிறது
இதில் உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் தெளிவு படுத்தவும்
// ss
sir please !!! please sir don’t add the majestic,highly honourable Scholar Sri PBA Swami with ordinary commercial authors/writers like Indra Parthasarathy / Sujatha //
நான் ஒப்பிடவில்லையே சுவாமி. பிரபந்தத்தில் அபிருசி ஏற்பட *எனக்கு* ஆர்வமூட்டியவர்கள் என்று ஒரு பட்டியல் தந்திருக்கிறேன், அவ்வளவு தான்.. இ.பா சிறந்த நவீன இலக்கிய எழுத்தாளர். திவ்யப் பிரபந்தம் பற்றி பல கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். சம்பிரதாயத்தில் ஆர்வமில்லாத நவீன வாசகர்களுக்கு திவ்யப் பிரபந்தம் பற்றி அது ஒரு திறப்பை அளிக்கக் கூடுமல்லவா? எனவே யாரையும் குறைத்து மதிப்பிடவேண்டாம்..
// Then regarding comparing or analysing the great,true and pure SriVaishnavite Gunaanubhavams with some alien useless the said godly figures is no way encourageable or worthful to the worth writers like you //
ஒப்பீட்டை நான் செய்யவில்லை. அது பற்றிய உரையாடலையும் நான் ஆரம்பிக்கவில்லை. சொல்லப் பட்ட கருத்துக்கு எதிர்வினை மட்டுமே செய்திருக்கிறேன்.
அன்புள்ள சாரங்க், நன்றி.
// இந்த நிலைமையில் தொலைகாட்சியில் இது கண்ணன் சிறுநீரு என்றால் பிரசங்கம் கேட்கும் கொஞ்ச நஞ்ச பெரும் நிறுத்தி விடுவார்கள் //
இல்லை என்று நினைக்கிறேன். சொல்லப் போனால் இன்னும் ரொம்பவே ஆழ்ந்து ரசிப்பார்கள் – அடடா, பெரியாழ்வார் taboo எதுவும் இல்லாமல் இவ்வளவு அழகாக தன் வாத்சல்ய அனுபவத்தை சொல்லியிருக்கிறாரே என்று!
நிறுத்தி விடுவார்கள் என்று நீங்கள் சொல்வது ஆசாரவாதிகளுக்கு வேண்டுமானால் பொருந்தும்.
// இதெல்லாம் சொன்னால் மக்கள் எல்லோரும் ரசிக்க மாட்டார்கள் – அதற்க்கு தேக அபிமானம் இல்லாத ஒரு மனப் பாங்கு தேவை படுகிறது //
அப்போ மக்கள் ரசிக்கும்படி *மட்டுமே* தான் ஒரு பௌராணிகர் பேச வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? அப்படியானால் பிரவசனம் என்பதும் ஒரு கேளிக்கை / பொழுதுபோக்கு கலை தான் என்று சொல்ல வருகிறீர்களா? அது சரியாகப் படவில்லை.
அத்தகைய மனப்பாங்கை பிரவசனம் உருவாக்க முயலவேண்டும் – அது தானே நோக்கம்? ஏற்கனவே அந்த மனப்பாங்கு உள்ளவர்களுக்கு பிரவசனத்தால் பெரிசாக என்ன பயன்?
சொல்லப் போனால் குழந்தை சிறுநீர் சாதாரண சமாசாரம்.. இதற்கே ஆசாரவாதப் பூட்டு போட்டால், ஆண்டாளை எல்லாம் எப்படிப் பேச முடியும்?
ஜடாயு அவர்களே
எல்லோரும் ரசிப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை கிடையாது – அதற்கு தான் பட்டர் உதாரணம் காட்டினேன் – எனுக்கு தெரிந்து ஆசார வாதிகள் பலரும் தான் இத்தை முகம் சுலிக்காமல் கேட்பார்கள் – மேலும் நீங்கள் ஆசார வாதிகள் என்று யாரை சொல்கிரீகள் என்று எனக்கு சரியாக புரியவில்லை – பெரியாழ்வார் ப்ரபந்தம் கற்ற எவரும் இப்படி செய்ய மாட்டார்கள்
வாத்சல்ய அனுபவம் என்று பாராமல் – என்ன ஒரு பெரிய மனுஷர் பகவானை போய் இப்படி சொல்கிறாரே என்று பலருக்கு தோன்ற வாய்ப்பு நிரயவே உள்ளது
ப்ரவசநத்தில் ருசி வேன்டி மற்றும் இடம் பொருள் பார்த்து சிலதை நாசூக்காக சொல்வது எல்லா ப்ரவசநர்களின் வழக்கமே – உதாரநத்திற்க்கு கூரத்தாழ்வானின் ஆத்ம குணஙகள் பற்றி பேசும்பொது – உனக்கு கெடுதல் செய்தவனிடமிருந்து தள்ளி இரு என்ரு ஒரு சொற்பொழிவாளர் சொல்கிரார் – இது நடைமுரைக்கு ஏர்ப்ப மாற்றப்பட்டுள்ளது – உண்மையில் ஆழ்வான் செய்தது கெடுதல் செய்தவனுக்கு மொக்ஷமே வாங்கித்தந்தது – ப்ரவசநம் விலையாட்டல்ல – கேட்கும் கொஞ்ச நஞச பேரும் எங்கே கெட்பதை விடுவார்களே என்ற கவலையாகதான் இருக்கும் – நீங்கள் சொல்லும் நபர் யார் எண்று என்று எனக்கு தெரியாது இருந்தாலும் ஒரு நம்பிக்கயில் சொல்கிறேன் அவ்வலவுதான்
ஆண்டாள் பாசுரங்கள் மிக மிக எளிமையானவை. எளிமையை அழகு சேர்த்துத் தந்திருப்பது நன்று.. இன்னும் நிறைய தொடருங்கள்..
ஆண்டாளின் தமிழின் மேன்மை ஆந்திரமெங்கும் பரப்பப்படுகின்றது. தமிழ்நாட்டில் திருப்பாவை மறுபடியும் வீடுதோறும் ஒலிக்கவேண்டுமென்பது என் தனிப்பட்ட ஆசை..
திவாகர்
ஆழ்வார்களின் பாடல்களை வைணவர்கள் வேதத்துக்கு இணையாக வைத்து போற்றுகின்றனர். தங்கள் அன்றாட வாழ்விலும், வீட்டு விசேஷங்கள்,ஆலயத்தில் நடக்கும் அத்துணை திருவிழாக்களிலும் அருளிச்செயல் என்று கூறப்படும் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களும், பின்னர் வந்த ஆச்சார்யர்களின் தமிழ் பாக்களையும் இயல் அல்லது இசை அல்லது நாடக வடிவில் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ PBA swami or Sri Puthur Vakkil Krishnaswamy ஆகிய வைணவ அறிஞர்களை விட இந்திரா பார்த்தசாரதியோ சுஜாதாவோ இந்த விஷயத்தில் எள்ளளவும் சரியான முறையில் அர்த்தங்களை பொருள் விளக்க உரைகளை கேட்டதும் இல்லை, தெளிவாக விளக்கவோ, எழுதவோ கூட கிடையாது. சம்பிரதாயத்தில் ஆர்வமில்லாத நவீனர்கள் ??? யாரை கூறுகிறீர்கள் ?? to be frank to 200 % இன்றைய பார்ப்பன வைணவ இளைஞ்ர்களை விடவும் சில பார்ப்பனர் அல்லாத வைணவ சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆழ்வார்கள் மற்றும் அவர்களை தொடர்ந்து வந்த வைணவ பேரறிங்கர்களின் நூல், விளக்க உரைகள், அவர்களால் இயற்றப்பட்ட சமஸ்க்ருத நூல்,ஸ்லோகங்கள் கூட நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறார்கள். ஆனால் இவை வெறும் புஸ்தக படிப்பு அல்ல. கற்றறிந்த அறிஞர்களிடம் கேட்டு முறையாக,தெளிவாக பயின்றவை. சும்மா நுனிப்புல் மேயறவங்கள ஏன் உங்க லிஸ்டுல இந்த கருத்தாய்வில் சேக்கறீங்க. மேல் எழுந்தவையாய் பார்த்தால் ஆழ்வார்கள் பாடிய பாக்களுக்கு உலக நடையில் பொருள் கொள்ளுமாறு இருக்கும். ஆழ்ந்த புரிதலும், கேட்டாலும் மிக அவசியம் அதில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை தெளிவு செய்துகொள்ள. வேதத்தின் (மறை) கருத்துக்களை தமிழில் கூறியிருக்கிறார்கள் என்றால் அதில் எவ்வளவு உள்ளார்ந்த அர்த்தம் பொதிந்து உள்ளன என்பதை சிந்திக்க வேண்டும். இதை வெறுமனே படிப்பதை காட்டிலும் அனுபவத்திலும் கேட்டலிலுமே நிறைய உணர முடியும். may be Indra parthasarathy and Sujatha like writers are great in some other field like science fiction or thrill novels and stories. அதே போல சக்ரவர்த்தி rajagopalachariaar சிறிது எதோ எழுதிகிறேன் என்று சிலவற்றை இந்த ஆழ்வார் துறையில் கெடுத்தார். am not blatantly or blindly blaming or finding fault on these writers but i read them in clear and i know their partial knowledge in this field even though they are from the same cult. Again I suggest you to choose worth and authentic works of good scholars in this field. DA Joseph is one such good scholar and excellent in elocution and his words are very simple by which people of any kind rich/poor in spiritual knowledge and modern/old. Hope u know that learned scholar.
//சொல்லப் போனால் குழந்தை சிறுநீர் சாதாரண சமாசாரம்.. இதற்கே ஆசாரவாதப் பூட்டு போட்டால், ஆண்டாளை எல்லாம் எப்படிப் பேச முடியும்?//
பெரியாழ்வாரின் காசும் கரையுடை கூரைக்கும் பதிகம் – இதில் மலமுடை ஊத்தையில் தோன்றிற்று … என்றும் .. மூத்திர பிள்ளையை என்றும் … வரும் . இவை என்ன தவறா,அசிங்கமா,கேட்ட வார்த்தைய. மூத்திரம், மலம், புணர்ச்சி போன்றவை உலக இயல்வே. இப்போழுதியா கால மாற்றம் இவை அசிங்கமான பேசகூடாத வார்த்தை போன்று ஆகிவிட்டது. உண்மையான தெய்வீக காதலின் பக்தியே ஆண்டாளின் பசுந்தமிழ் பாக்கள். DK பத்திரிக்கை அதிகம் படிபீங்களோ? அவனுங்க அசிங்க புத்தி,வக்கிர பார்வை இப்படி பேச வைக்கிறது. வள்ளுவரின் காமத்து பால் இல்லையா? தவறா அது ? புணர்ச்சி என்பது கூடா புணர்ச்சி,பிறன் மனை நோக்குதல், விலை மாதருடன் கூடல் போன்றவையே தவறு. ஊடல்,கூடல் போன்றவை கொச்சை சொற்கள் இல்லையே. மேலும் ஆண்டாளின் தமிழ் பாசுரங்களை உண்மையான அர்த்தத்துடன் வல்லார்கள் வாய் கேட்டு அறிய வேண்டும். சும்மா கதை புஸ்தகம் படிக்குராப்ல படிச்சா, பக்தி மன தூய்மை இல்லாத எண்ணத்துடன் படித்தால் இப்பொழுதைய காலத்திற்கேற்ப வேறு சிந்தனை தான் தோன்றும்.
ஆசாரவாத பூட்டு? ம்ம்ம் நன்றாக இருக்கிறது. இதை சற்றே ex : விளக்கினால் நன்றாக இருக்கும். what do you mean here for “ஆசாரவாத பூட்டு?”. ஜடாயு நிறைய கேள்வி கேக்குறேன்னு தப்ப நினைக்காதீங்க. எதோ இந்த சிறிய அறிவிணனின் சில ஐயங்கள்? suggestion or my views may be.
நாச்சியார் திருமொழி என்ற கோதை தமிழின் விளக்கம் / பொருளுரை கேட்பதற்கே மனப்பக்குவமும், சிறிது வயது முதிர்ச்சியும் தேவை. ஆனால் சடக்கென வேறு மாதிரி நினைக்க வேண்டா. Adults only மாதிரி இல்லை, கிழவர்களே மட்டும் கேட்க வேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் இல்லை. சிறிய வயது என்றாலும் மனப்பக்குவமும், தூய்மையான பக்தியும் இருந்தாலும் கேட்கலாம். ஆனால் ஏனோ வைணவ அறிஞர்கள் ஒரு சில பரிசோதனை அல்லது சிறிது காத்திருக்க வைத்தே இவற்றிற்கு அர்த்தம் கூறுவார்கள். மற்றபடி சிறுமை ஏதும் இந்த பொருளுரை கூறுவதில் இல்லை. இப்படி எல்லாம் இல்லன்னா பேருக்க்காகவாவது பகுத்தறிவு அப்படின்னா என்னனே தெரியாம உளறும் DK நாத்திகவாதியா தான்(போல) பேச முற்படுவார்களோ ???
//DK பத்திரிக்கை அதிகம் படிபீங்களோ? அவனுங்க அசிங்க புத்தி,வக்கிர பார்வை இப்படி பேச வைக்கிறது. (அவர்களை)// என்று சேர்த்து வாசிக்கவும்.
இந்த இடத்தில் உங்களை வசை பாடவில்லை. இப்படி ஒரு கருத்தாய்வு எழுதும் பொழுது அந்த மூளை கெட்டவர்களின் வாசனை கூட வேண்டாம்.
அன்புள்ள எஸ்.எஸ்,
இந்திரா பார்த்தசாரதி “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று ஒரு நல்ல நாவல் எழுதியிருக்கிறார். கிருஷ்ணை ஒரு யுகபுருஷனாக நவீன பார்வையில் சித்தரிக்கிறது அந்த நாவல். நாத்திகர்களும், பிற மதத்தவர்களும் கூட கிருஷ்ணனை சமூக, கலாசார நோக்கில் புரிந்து கொள்ள அது உதவும்.. எனவே யாரையும் உதாசீனப் படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.. இந்து எழுச்சி என்பது சம்பிரதாயங்களை மட்டும் உள்ளடக்கியது அல்ல, பல்வேறு திசைகளிலும் அது எழவேண்டும்..
// சம்பிரதாயத்தில் ஆர்வமில்லாத நவீனர்கள் ??? யாரை கூறுகிறீர்கள் ?? to be frank to 200 % இன்றைய பார்ப்பன வைணவ இளைஞ்ர்களை விடவும் சில பார்ப்பனர் அல்லாத வைணவ சிறுவர்கள் முதல் பெரியவர்கள் //
இங்கு நான் சாதியைக் குறிப்பிட்டு பேசவில்லை… சிந்தனைப் போக்கைக் குறித்து கூறினேன்.. சம்பிரதாய குடும்பங்களில் வளர்ந்தவர்கள் கூட கல்வி, சிந்தனைத் திறன் வளர்ந்தவுடன் குடும்பம்/சம்பிரதாயம் மூலம் தங்களுக்குக் கிடைத்த இந்து சமயத்தை புறக்கணிக்கிறார்கள்; இகழ்கிறார்கள், அல்லது இந்து விரோத கேம்பில் சேர்கிறார்கள். நிறைய உதாரணங்கள் காண்பிக்கலாம் (கமல்ஹாசன், என்.ராம்… ). எனவே, சம்பிரதாயத்தை மட்டுமே நம்புவது முழுமைப் பார்வை அல்ல; அறிவுபூர்வமாக, உணர்வுபூர்வமாக தங்கள் தர்மத்தைப் பற்றி சிந்தித்து தெளிவு பெற்ற நோக்கு கொண்டவர்களாகவும் இருப்பது மிக அவசியம்.
ஆசாரவாதப் பூட்டு என்று நான் குறிப்பிட்டது சில விஷயங்களை taboo என்று கருதுவது குறித்து..
அன்புள்ள ஜடாயு அவர்களே,
// எனவே, சம்பிரதாயத்தை மட்டுமே நம்புவது முழுமைப் பார்வை அல்ல; அறிவுபூர்வமாக, உணர்வுபூர்வமாக தங்கள் தர்மத்தைப் பற்றி சிந்தித்து தெளிவு பெற்ற நோக்கு கொண்டவர்களாகவும் இருப்பது மிக அவசியம். //
சம்பிரதாயத்தில் பலர் “அறிவுபூர்வமாக, உணர்வுபூர்வமாக தங்கள் தர்மத்தைப் பற்றி சிந்தித்துத் தெளிவு பெற்ற நோக்கு கொண்டவர்களாக” தான் இருக்கிறார்கள், ஏதோ மூட நம்பிக்கை கொண்டு நம்புவதில்லை (சம்பிரதாயத்தில் மூட நம்பிக்கை உள்ளவர்களே இல்லை என்று நான் கூற வரவில்லை). கமலஹாசனும், என்.ராம்-உம் சம்பிரதாயத்தை எதிர்ப்பதற்கு வேறு காரணம் இருக்கலாம்… அவர்கள் கியாதி-லாப-பூஜைகளுக்காக அப்படிச் செய்திருக்கலாம், அல்லது உண்மையிலேயே சரியாகப் புரிந்துக் கொள்வதற்குச் சோம்பேறிகளாக இருக்கலாம். பகவத் கீதையையும் உபநிஷத்தையும் தமிழ் மறையையும் கற்பதற்கு உழைப்பு தேவை; நாத்திகத்தையும் கம்யூனிசத்தையும் நம்புவதற்கு இதெல்லாம் தேவை இல்லை, சொல்லப்போனால் சோம்பேறிகளுக்கு அவை ரொம்ப அனுகூலமாக இருக்கும்.
// ஆசாரவாதப் பூட்டு என்று நான் குறிப்பிட்டது சில விஷயங்களை taboo என்று கருதுவது குறித்து.. //
சற்று உதாரணம் கூறித் தெளிவுபடுத்தவும். ஆழ்வார் பாசுரத்துக்கும் ஆசாரப் பூட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆழ்வார் பாசுரத்திற்கு வியாக்கியானம் இட்டு விரும்பிப் படித்து அதைப் பேணிப் பாதுகாத்தவர் எல்லாரும் ஆசார அனுஷ்டானங்களைத் தவறாமல் கடைப்பிடித்தவர்கள் தான். ஹிப்பிக்கள் அல்ல.
அன்புள்ள கந்தர்வன்,
// சம்பிரதாயத்தை மட்டுமே நம்புவது முழுமைப் பார்வை அல்ல //
என்று தான் நான் கூறினேன் என்பதைக் கவனியுங்கள். சம்பிரதாயத்திற்கு நான் எதிரியல்ல.
The orthodoxy has its esteemed place in any civilization. It is essentially a *conservative* force, ie. a force to conserve, to preserve.
But that alone is not enough in a dynamc, vibrant society. Religion, philosophy & literature has to be restated, rediscovered and reinterprated from time to time – that alone keeps it vibrant.
I will give you an example – They still discuss Artistotle, Plato, Zeno, Davinci, Decartes, Shakesphere etc. (and even that obsolete book Bible) in western intellectual / literary / scientific circles because there are people who continously keep restating these ancient thought-streams to the current times.. By contrast, in India Vyasa, Kautilya, Nagarjuana, Sankara & Ramanuja are thought of more as muesum personalities in social and thinking realms. Anti-Hindu groups have a vested interest in this.. But the Hindu orthodoxy also wants to keep these thought streams confined and closed.. (well, its natural.. thats what any *orthodoxy would do.. and you cant *change* orthodoxy).
it is NOT a precondition that one must be Orthodox to uphold Dharma. Veer Savarkar and Dr. Ambedkar were far from orthodox. DD Kosambi, the marxist historian developed indegenous framework to present Indian social history which is very valuable even to Hindutva-vadis . It is EMS Namboodiripad, the marxist CM of kerala who paved way for the Sri Sankara University in Kaladi and *defended* his action boldly. In the inagural speech, he said, “It is not that Sankara has become old, but we have become old and incapable to restate his thought for the modern age”!
A sampradaya pravachana kartha may be very good in taking the message of Bhakthi to masses. But his faculties will be limited and insufficient while defending/restating Hindu Dharma in social / intellectual / thinking circles…With globalization and many other factors, more and more people are becoming “thinking” lot rather than blind followers of a sampradaya. Remember that.
So both viewpoints have their place and value in a grand scheme of things. it is baffling to see agitating reactions even to a mildly unurothodox, but essetially a strong Hindu viewpoint!
நமக்குத் தேவை குருட்டுத் தனமான மரபு வழிபாடோ, அல்லது குருட்டுத் தனமான மரபு எதிர்ப்போ அல்ல. மரபின் உன்னதங்களையும், எல்லைகளையும் சாத்தியங்களையும் பற்றிய புரிதலுடன் முன் நகர்ந்து செல்வதே.
// பகவத் கீதையையும் உபநிஷத்தையும் தமிழ் மறையையும் கற்பதற்கு உழைப்பு தேவை; நாத்திகத்தையும் கம்யூனிசத்தையும் நம்புவதற்கு இதெல்லாம் தேவை இல்லை,//
I disagree with this. Proper study of communist ideology also demands devotion, commitment and hard work. Just that it is misguided and misplaced.
Never commit the mistake of undermining and underestimating your enemy, Gandharvan. That is a typical Hindu weakness.
Dear Jataayu,
// But the Hindu orthodoxy also wants to keep these thought streams confined and closed.. //
I strongly disagree with the statement that Vyasar or Ramanujar has been confined by the orthodoxy. To the best of my knowledge, the Vaishnava orthodox leadership (I cannot speak for every Hindu sect) has always been welcoming of people who want to understand Ramanujar and other Acharyas’ stance on social issues.
// A sampradaya pravachana kartha may be very good in taking the message of Bhakthi to masses. But his faculties will be limited and insufficient while defending/restating Hindu Dharma in social / intellectual / thinking circles //
Wrong. Let me state that those pravachanakarthas that I have listened to have a deep, intellectual, and thoughtful understanding of the society and its current problems. It is therefore wrong to state that pravachanakarthas have “insufficient faculties”. May be that the anti-Hindu establishment in TN and even some “intellectual/thinking circles” have unfairly stereotyped/labelled pravachanakarthas as “samayavAdhi, saadheeyavaadhi, paarppana adivarudi” etc. This is, in my opinion, the most important reason why most of the younger generation today find the idea of listening to a kudumi-sporting thiruman-wearing veshti-clad dude speak about contemporary challenges to Dharma quite disgusting. Breaking away from this sort of stereotypification requires more than a superficial understanding of/doing lip service to spiritualism, rather it requires the actual practice of it, which first involves placing Atma and Atma’s relationship with paramAtma strictly above politics, political correctness, and everything else.
I do not think carrying on this argument further is going to get either of us anywhere from what we already are. Just wanted to clarify the positions in a friendly manner.
Adiyen, Gandharvan
// So both viewpoints have their place and value in a grand scheme of things. it is baffling to see agitating reactions even to a mildly unurothodox, but essetially a strong Hindu viewpoint! //
Dear Jataayu,
I am not agitated the least bit. The queries that I pose are in my responses are aimed at razor-sharp clarity, not at actually chopping off any heads 🙂
// நமக்குத் தேவை குருட்டுத் தனமான மரபு வழிபாடோ, அல்லது குருட்டுத் தனமான மரபு எதிர்ப்போ அல்ல. //
கண்டிப்பாக.
// மரபின் உன்னதங்களையும், எல்லைகளையும் சாத்தியங்களையும் பற்றிய புரிதலுடன் முன் நகர்ந்து செல்வதே. //
இப்படிச் செய்வதற்கு, மரபைப் பற்றி சரியாக, நடுநிலை நோக்கத்துடன், ஆராய்ச்சி உணர்வுடன் நோக்க வேண்டும். ஆராயும்போதே அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்பட்டால், மரபில் இல்லாததையும் பொல்லாததையும் தவறான புரிதலையும் அதன் மேல் ஏற்றுமதி செய்து ஒரு strawman-ஐ உருவாக்கி விடுவோம். Strawman-ஐத் தாக்குதல் எந்த விதமான பயனையும் தராது. ஒரு உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் கூறும் “ஆசார வாதி” ஒரு strawman என்று தோன்றுகிறது. அதனாலேயே, தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டேன்:
//
// ஆசாரவாதப் பூட்டு என்று நான் குறிப்பிட்டது சில விஷயங்களை taboo என்று கருதுவது குறித்து.. //
சற்று உதாரணம் கூறித் தெளிவுபடுத்தவும். ஆழ்வார் பாசுரத்துக்கும் ஆசாரப் பூட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆழ்வார் பாசுரத்திற்கு வியாக்கியானம் இட்டு விரும்பிப் படித்து அதைப் பேணிப் பாதுகாத்தவர் எல்லாரும் ஆசார அனுஷ்டானங்களைத் தவறாமல் கடைப்பிடித்தவர்கள் தான். ஹிப்பிக்கள் அல்ல.
//