ஆண்டாள் என்னும் அற்புதம் – நல்லார் பொருட்டுப் பெய்யும் மழை!

andal-paintingஅண்மையில் தமிழ் வர்த்தக உலகின் பிரபல வணிக எழுத்தாளரான பா.இராகவன், தமது வலைப்பதிவில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்: “நல்ல porn எழுத்து தமிழில் அநேகமாகக் கிடையாது. சில சங்கப்பாடல்களிலும் ஆண்டாளின் சில வரிகளிலும் அழகான படுக்கையறைக் காட்சிகள் இருக்கின்றன. குத்துவிளக்கெரிய எனத் தொடங்கும் திருப்பாவையின் பத்தொன்பதாம் பாசுரத்தை சொல் சொல்லாக கவனித்து வாசித்துப்பாருங்கள். அது கொடுக்கும் அனுபவத்தை எந்தக் காமக் கதாசிரியரும் இதுகாறும் தந்ததில்லை என்று அடித்துச் சொல்வேன். ஆண்டாள் தரத்தில் எழுத எனக்கு எம்பெருமான் அருள் புரிந்தால் அவசியம் இந்தத் தளத்தில் சில நல்ல porn கதைகள் அல்லது கவிதைகள் எழுதிப் போடுகிறேன்.”

பா.இராகவன் தனது வாசகர்களை மிக மோசமாக ஏமாற்றுவதுடன், தமது வணிக எழுத்தில் அறிவுஜீவி புகழ்வட்டத்தை சேர்க்க, ஆபாச இலக்கியம் (Porn) குறித்து பேசும் போது, ஆண்டாளது பாசுரங்களை அனாவசியமாக இழுத்திருக்கிறார். இதன் மூலம் அவர் தன்னையும், தன்னை வளர்த்த சமயச் சூழ்நிலையையும், தன் வாசகர்களையும் கீழ்மைப்படுத்தியிருக்கிறார். அவருக்கு நம் அனுதாபங்கள் உரித்தாகுக. ஆபாச எழுத்து என்பது வேறு; காமத்தையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் கவித்துவ-ஆன்ம முயற்சி என்பது வேறு. முன்னது வாலிப வயதின் எழுச்சிக்கோ அல்லது வாலிப-வயோதிகத்தின் இயலாமைக்கோ ஒரு வடிகால். பின்னது அவ்வுணர்ச்சியின் வீச்சையும் ஆழத்தையும் ஆதாரத்தன்மையையும் அறிந்து கொண்டு, அதனை பிரபஞ்சமெங்கும் கவியும் ஓர் உணர்வாக உயர்த்துவது. நாயகி-நாயக பாவத்துடன் இறைமையை அணுகுவது இது. காம-வேட்கையும் புணர்தலும் அதன் மூலம் சிருஷ்டியும் – இவை அனைத்திலும் ஊடாடும் உணர்ச்சியும் ஆனந்தமும் தன்னிழத்தலும் சோகமும் என அனைத்துமே இருத்தலின் ஆதார இயக்கதில், அதன் தொடக்கத்தில், அதன் ஜீவத்துடிப்பில், அதன் இறுதிக்கரைதலில் இருப்பதை தம் அகவிரிதலில் கண்டுணர்ந்த வேத ரிஷிகள் வேத மந்திரங்களில் இதனைப் பாடுபொருளாகக் கண்டுணர்ந்தனர். இங்கு இருத்தல் என்பது வெறும் மானுட இருத்தல் அல்ல அதன், ஆக விரிவான, ஆக முழுமையான பொருளிலான இருத்தல்.

காதலிகளின் காதலனாக இறைவனை கூறும் முதல் உலக இலக்கியமாக ரிக் வேதத்தை சொல்ல முடியும். ஆதி பழங்குடிகளின் ஞான மரபுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் தேடல்களிலும் கண்டடைவுகளிலிருந்தும் எழுந்த ஞானக்கருவூலமே ரிக் வேதம். எனவே இந்த நாயகி-நாயக பாவத்துடன் இறைத்தன்மையை அணுகுவதென்பது எப்போது தோன்றியதென்பது ஊகங்களுக்கே உரியது. ஆனால் பின்னாட்களில் நாம் காணும் பல தீவிர காதல் உணர்ச்சிகளை நாம் வேத இலக்கியத்தில் காணமுடிகிறது:

love_games_of_radha_and_krishna_wp08“காதல் மிகுந்த மனைவி அவளது கணவனைத் தொடுவது போல இறைவனது இதயத்தை என் பாடல் தொடட்டும்” (ரிக்: 10.91.13) “மணமகன் மணமகளிடம் சுகம் பெறுவது போல எனது பாடலால் இறைவன் சுகம் அடையட்டும்.” (ரிக் 3.62.8) ரிக் வேத கவிதைகள் மனைவி கணவனது மேனியை தீண்டுவது போல (அங்கு பயன்படுத்தப்படும் பதத்துக்கு முத்தம் எனும் மற்றொரு பொருளும் உண்டு.) இறைவனை தீண்டுகின்றன, அவனது மேனியை சுகமாக அழுத்தி விடுகின்றன. (ரிக். 3.41.5) வேத மந்திர த்ருஷ்டாக்கள் மனதாலும் இதயத்தாலும் இறைவனுக்காக ஏங்குகின்றனர். வேத மந்திரங்களே இறைவனின் காதலிகளாக அவனைச் சேருகின்றன. வேத இலக்கியம் தரும் ஒரு முக்கியமான சித்திரம் இது: காதலிகளின் தீண்டுதலாக வேத கவிதைகள், பிரார்த்தனைகள் சித்தரிக்கப்படுகின்றன. (ரிக் 1.62.11;1.82.5-6; 1.186.7; 3.52.3; 4.32.16; 1.9.4; 3.39.1)

இந்த மரபுப்புலத்தின் பின்னணியிலேயே ஆண்டாளின் பாசுரங்களை பார்க்கவேண்டும். இருமை நிலையிலிருந்து இரண்டற்று இறையுடன் கலக்க இந்த நாயக-நாயகி பாவம் மிகவும் சிறப்பான பாதையாக உலகமெங்கிலும் மறைஞானிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

teresa_avila_bernini
Ecstacy of St. Teresa (Bernini)

யூதவிவிலியத்தில் சாலமோன் மன்னனால் பாடப்படும் உன்னதப்பாட்டுக்களை இதற்கான ஒரு எடுத்துக்காட்டாக கூறலாம். கிறிஸ்தவம் யூதத்தில் வெளிப்பட்ட இந்த நாயக-நாயகி பாவத்தை நிறுவனப்படுத்தி கிறிஸ்தவ சபையை ஏக இறைவனின் நாயகியாக்கியது. காம உணர்ச்சியிலிருந்து ஆன்மிக நிலைக்கு என்னும் நிலையிலிருந்து திருமண அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு கீழ்படிதல் என்பதாக அந்த உறவினை மாற்றி அமைத்தது. நவீன காலத்துக்கு முந்தைய திருமண அமைப்பில் பெண்ணின் கீழ்படிதல் நிலையே ஏசுவுக்கும்-சபைக்குமான உறவாகவும் அதன் அடுத்த கீழ்படிதலாக சபைத்தலைமைக்கும் அதன் உறுப்பினர்களுக்குமாக அது மாற்றப்பட்டது. இந்த மேற்கத்திய உருமாற்றம் பாரத பண்பாட்டில் ஏற்படவே இல்லை. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஞானியான பராசர பட்டர் தமது சீடர்களை ஆண்டாள் பாசுரங்களை தினமும் படிக்கவும் அதுவும் முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் அதில் ஒரு பாசுரத்தையாவது படிக்கவும் அதுவும் முடியவில்லை என்றால் பாசுரத்தில் உள்ள உணர்ச்சிகளை முழுமையாக தன்னில் கொள்ளவும் வலியுறுத்தினார். இதில் இருக்கும் மற்றொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும். ஆண்டாளின் பாசுரங்களில் தத்துவார்த்த குறியீடாக மாற்றுவதற்கு அப்பால், ஆண்டாள் கோபிகைகளின் உணர்ச்சிகளை தனதாக மாற்றினாள். அதன் மூலம் இறையுடன் கலந்தாள். பராசர பட்டரும் அதையே சொல்லுகிறார். ஆண்டாளின் உணர்ச்சிகளை தமதாக மாற்றுவதன் மூலம் விஷ்ணுவுடன் இரண்டற கலந்திட முடியும். இந்த உணர்ச்சிகள் ஆதாரமாக அனைத்து மானுடத்துக்கும் சொந்தமானவை அதிலிருந்து அகம் இழந்து அகம் விரிவதே சாதனையாகிறது.

பின்னர் சூஃபி இலக்கியத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் காம-உணர்ச்சி பெரும் இருத்தலை தொட்டுணர ஒரு கருவியாக மாற்றப்படுவதைக் காணலாம். (பா.இராகவன் போன்ற எழுத்தாளர்களின் அரைகுறை புரிதல்களில் எங்கும் எதிலும் தெரியும் ’சூஃபி பம்மாத்து’ குறித்து இங்கே பேசவில்லை. இங்கு பேசப்படுவது சூஃபி என வரலாற்று இலக்கிய அடிப்படையில் கருதப்பட முடிந்த சூஃபி) பின்னாட்களின் இந்திய சூஃபி இறைக்காதல் பாடல்களில் வேத இலக்கியத்தில் தீட்டப்பட்ட அக ஓவியங்கள் மீண்டும் எழுவதை காணலாம்:

வேத ரிஷி தனது இறைவனை தனது பாடலில், மனைவியிடம் கணவன் சுகம் அடைவது போல சுகத்தை அடைய வேண்டுகிறார். இத்தகைய [ஆடல்களில் தீட்டப்படும் வெகு அந்தரங்கமான காதல் உணர்வு பின்னாட்களின் சூஃபி கவிதைகளை நினைவுப்படுத்துவதாக உள்ளது. சில செய்யுட்கள் இறைவனை தீண்டுவதாகவும் முத்தமிடுவதாகவும் சொல்கின்றன. இது கபீரின் “என் காதலனின் தீராத தீண்டலில் நான் இன்பமுற்றேன்” என கூறுவதற்கு ஒப்பாக உள்ளது.

மேற்கத்திய மரபில் மறைவாகவும் ஒடுக்கப்பட்டது என சொன்னேன். மிகக் கொடுமையாகவே ஒடுக்கப்பட்டது. சில சமயங்களில் அவ்வாறு அடக்கப்பட்ட உணர்வுகள் அலைகளாக சமுதாயங்களில் பெருக்கெடுத்த தருணங்களில் நிறுவன சமயம் குறுக்கிட்டு கூட்டம் கூட்டமாக மக்களை கொன்று குவிக்கவும் செய்தது. என்ற போதிலும் மிக அரிதாக தப்பிப் பிழைத்த ஒரு தருணமாக பெண்-ஆன்மிக உணர்வு 16 ஆம் நூற்றாண்டின் ஸ்பானிய தேச பெண் துறவியான தெரசா என்பவரிடம் மட்டுமே வெளிப்படுகிறது. அப்பட்டமாக பாலியல் குறியீடுகள் மூலமாக ஆன்மிக உணர்வுகளையும் இறையுடன் இரண்டற கலந்த நிலையையும் காட்டும் இப்பெண் துறவியின் பாடல்கள் கத்தோலிக்க சபையின் புனித விசாரணைகளுக்கு தப்பித்தது அதிசயமென்றே சொல்ல வேண்டும். அராபிய இலக்கியத்திலும் இப்பெரும் மரபு உள்ளது. காவேரிக்கரையில் ஆண்டாளின் பாசுரங்களில் மட்டுமே தோய்ந்து அதன் இருதயகதியை உள்வாங்கிய ஒருவர் பாஸ்ரா பட்டணத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அடிமைப்பெண் மறைஞானியான ரபியாவின் வரிகளில் சூடிக்கொடுத்த கோதையை கட்டாயமாக தரிசிக்க முடியும். மதங்களை தாண்டி மானுட ஆன்மிகத்தை இவர்களின் கவிதைகளே உருவாக்குகின்றன.

ஆனால் வேத இலக்கியமும் ஆண்டாளும் அவ்லானின் தெரசாவும் அரேபியாவின் ரபியாவும் யூதத்தின் உன்னதபாடல்களும் வெறும் ஃபோர்னோகிராபி அல்லது திறமையான கவித்துவமான ஃபோர்னோகிராபி எனலாமா? பருவத்தின் காம எழுச்சிக்கும் வயோதிகத்தின் காம ஏக்கத்துக்குமான வடிகால் எனலாமா? பாஸ்ரா பட்டணத்து ரபியாவின் பாடல்களில் எழும் வேட்கையை அராபிய எழுத்தாளன் எவனாவது ஃபோர்னோகிராஃபி என சொல்வானா? அல்லது அந்த தரத்தில் நான் ஃபோர்ன் எழுத இறைவன் அருள் தர வேண்டும் என சொல்வானா? அப்படி ஒருவன் சொன்னால் அவனை இலக்கியவாதியாக பார்க்க வேண்டி இராது. ஆனால் பா.இராகவன் போன்ற வணிக எழுத்தாளர், பொதுவாக தமது எழுத்துக்கள் மூலம் அவர் திருப்திபடுத்த நினைக்கும் வகாபியவாதிகளுக்கு, ரபியாக்களும் ஆண்டாள்களும் மலின ஃபோர்னோகிராபியின் இலக்கிய முன்னோடிகள் என காட்டுவது அரசியல் உள்நோக்கமும் கொண்ட செயலாகும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை மேலதிகம் தெரிந்துகொள்ள:

* பிஸ்ரீ, மீராவும் ஆண்டாளும், Star publications, 1977
* வசுதா நாராயணன், Brimming with Bhakti, Embodiment of Shakto, Devotees, Deities, Reformers and other women of power in the Hindu tradition, (Feminism and world religions, McGill studies in the history of religions,Arvind Sharma, Katherine K. Young, SUNY Press, 1998)
* Widad El Sakkakini, First among Sufis: the life and thought of Rabia al-Adawiyya, the woman Saint of Basra, Octagon Press, 1982
* ரோவன் வில்லியம்ஸ், Teresa of Avila, Continuum International Publishing Group, 2004
* காரெல் வெர்னர், Love divine: studies in bhakti and devotional mysticism, Routledge, 1993

10 Replies to “ஆண்டாள் என்னும் அற்புதம் – நல்லார் பொருட்டுப் பெய்யும் மழை!”

 1. இப்போதுதான் அவரது பதிவில் உங்களைப்பார்த்து பரிதாபப்படுகிறேன் என எழுதிவிட்டு வந்தேன். தமிழ்ஹிந்து அவருக்கு சரியான பதிலடி குடுத்திருக்கிறது. இலக்கியவாதிகள் என நாம் கருதும் எழுத்தாளர்கள் அவ்வப்போது நமது நம்பிக்கையை குலைத்து விடுகிறார்கள். பா.ராகவன் அவர்களில் ஒருவர். சில மாதங்களுக்கு முன்புதான் கிருஷ்ணபரமாத்மாவைப் பற்றி ஏதோ எழுதினார்.. அவருக்கு கிருஷ்ணன் மாவா என்பதாக..

  தலைக்குமேலே ஒளிவட்டம் இருக்கிறது என நினைத்துக்கொண்டு எழுதுவது இது.. காலம்போன பிரகு சூரியநமஸ்காரம் உதவாது என்பதை அவருக்கு யாரேனும் புரியவைத்தால் நல்லது..

  ஜெயக்குமார்

 2. I want to love some one now ! 🙂

  I assume Sri. Raghavan is using his work as a method to expand his understanding, which will certainly happen if he is open to knowledge. In his article he has not feigned a great scholarship, but the article makes his readers assume a great understanding. So, this article in tamil hindu may bring a correct perspective to the readers.

  In addition, Sri. Raghavan may use this chance with a positive attitude and gain from this article by respected scholar Sri. Aravindan as well by other scholarly works.

  Hindu devotional literature has the inherent nature of expanding its readers’ understanding. So, I wish all the best to Sri. Raghavan in his enterprise to study Andal. I am confident that he will bring out a beautiful work from which ordinary readers like me will benefit more.

 3. சிலரைத் திருத்தவே முடியாது, திரு.அரவிந்தன்!

  இந்த மனிதர் ஜனவரி மத்தியிலும் இப்படித் தான் சுகம் பிரம்மாஸ்மி என்று ஆறு பகுதிகளாகத் தன்னுடைய கருத்தைக் கொட்டியதைப் படித்தபோது மனது மிகவும் கனத்தது. எனது வருத்தத்தை இப்படிச் சொன்னபோது.

  “அவர் ஒரு செயின் ஸ்மோக்கராக இருந்தபடியால்தான் வீரத் துறவி என்று அழைக்கப்படுகிறார் என்று நினைத்துக்கொண்டேன்”

  “இதெல்லாம் ஒழுக்கக்கேடு என்பதே ஒரு பெரிய புனைவு”

  “அவர் ஒரு செயின் ஸ்மோக்கராக இருந்தபடியால்தான் வீரத் துறவி என்று அழைக்கப்படுகிறார் என்று நினைத்துக்கொண்டேன்.”

  “சிகரெட் பிடித்துப் பார்க்கலாம், அதிலொன்றும் பிழையில்லை என்று அந்தராத்மாவுக்குள் ரகசியமாக போதித்தவர் அவர்தான்.”

  சபாஷ் பா.ரா! விவேகானந்தரையும் பாரதியாரையும் வேறு எவரும் இந்த அளவுக்குக் கொச்சைப் படுத்தியிருக்க முடியாது. இது தான் சுகமான பிரம்மமாய் நான் இருக்கிறேன் என்று பொருள் படும் தலைப்பிட்டு உங்களுடைய அளவுகோல்கள் என்ன என்பதைக் காட்டி இருக்கிறீர்கள் என்றே எனக்குப் படுகிறது.”

  அதற்கு,உமா என்ற பெயரில், பாராவைத் தாங்கி ஒரு பதில். ‘அவர் அவர் பள்ளி அனுபவங்களைச் சொல்லியிருக்கிறார், இதற்கு ஏன் கோபப்படுகிறீர்கள்?

  அதற்குபதில் எழுதினேன்:

  பொத்தாம் பொதுவாக அல்லது புரிந்து கொள்ள மாட்டேனென்று பிடிவாதத்துடன் எழுதினால், அதை விமரிசனம் செய்தால் உமா அவர்களே, உங்களுக்கேன் கோபம் வருகிறது என்று நான் கேட்கப்போவதில்லை.
  வால்மீகி ராமாயணத்தில் ராமன் மதுவும் மாமிசமும் ஏற்றுக்கொண்டதாக வருகிற பகுதி சரிதான், ராமன் க்ஷத்திரியன், அரசன் என்பதோடு சேர்த்துப் பார்க்கிற போது அங்கே குறை, விமரிசனம் செய்வதற்கு ஒன்றுமில்லை.
  வங்காளத்து அந்தணர்கள் மீன் சாப்பிடுவது, அந்தப் பகுதியின் பழக்கம், அதிலேயும் குறை காண்பதற்கு ஒன்றுமில்லை.
  வறுமையிலே உழன்று, தன்மானம் இழக்காமலும், அதே நேரம் தன் பெண்டு பிள்ளைகளைக் காக்க முடியவில்லையே என்று மறுகி, அபினை பாரதி உட்கொண்டது பெரிய ரகசியமொன்றுமில்லை, கிளுகிளுப்பூட்டக் கூடிய விஷயமுமில்லை.
  தன்னுடைய சபலத்திற்கு இத்தனை பெரியவர்களையும் அவர்களிடமிருந்த சில பழக்கங்களை ஒட்டி முகமூடியாகப் பயன்படுத்துவது சரியா?
  சார்மினார் சிகரெட்டைப் பெரும்பாலும் கஞ்சாக் குடிப்பதற்குத்தான் பயன்படுத்துவதை அறிந்திருக்கிறேன். சார்மினார் குடிப்பதற்கு ஆதர்சமாக விவேகானந்தர், அபின் பயன்படுத்த பாரதி, மரியுவானா பயன்படுத்த அரவிந்தர், இப்படி தன்னுடைய சபலங்களுக்கு நியாயம் கற்பிக்கிற மாதிரி தன்னுடைய விடலைத் தனத்தை இப்போது எழுதுவது எந்த வகையில் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

  இதற்கு ஒரு மகாவாக்கியத்தைக் கொச்சைப் படுத்தி சுகம் பிரம்மாஸ்மி என்று தலைப்பு வேறு!”

  https://www.writerpara.com/paper/?p=453

  இத்தனைக்கும் பாரா , அரசியல்வியாதியைப்போலத் தான் செய்யவிருக்கிற தப்புக்கெல்லாம் எதிர்க்கட்சி மீதே பழியைப் போடுவது போல,அடுத்து எவர்மீது பழிபோடலாம் என்று ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருந்தாரோ தெரியாது!

  (Edited and Published – Tamilhindu editorial.)

 4. எப்போதுமே அரவிந்தனின் கட்டுரைகளில் ஒரு ஆராய்ச்சி வெளிப்படும். நன்றி.

  உண்மையில் பா.ராகவன், தனக்கு பெரும் சக்தி , வசியம் கிடைக்கும் என்ற பேராசையுடன் இளமையில் குருட்டாம்பொக்கில் இறைவனை தேடி இருக்கிறார். உண்மையில் குருவின் தீட்சை இல்லாமல் அகங்காரத்துடன் செய்யும் ஆன்மீக முயற்சி மூர்க்க குணத்தையே கொடுக்கும். இப்பொது தோல்வியின் எரிச்சலில், அடி பட்ட மிருகத்தைப் போல இந்து மததின் மீது பாய்கிறார். தான் பல கோடியில் ஒரு துரும்பு, ஒரு புழு என்பதை உணர்ந்தால் இந்தப் பிரச்சினை அவருக்கு ஏற்படாது.

  தெரிந்ததும் புரிந்ததும் வெவ்வேறானவை. பா.ராகவன் தனக்கு ஆன்மீகம் புரிந்து விட்டதாக நினைக்கிறார். அவ்வளவே.

  (Edited and Published – Tamilhindu Editorial.)

 5. வேடன் மகரிஷி ஆகவில்லையா? கொள்ளைக்காரன் ஆழ்வாராகவில்லையா? காமாந்தகாரர்களாகவிருந்தவர்கள் பட்டினத்தாரும் அருணகிரிநாதரும் ஆகவில்லையா?
  நம்பிக்கை கொள்வோம்,.Every saint had a past. Every sinner has a future. கொஞ்ச நாள் முன்பு பா.ஜா.க தலைவி எந்த சங்கடமான கட்டத்திலோ, சமாதானமாகச் சொன்ன பொன்மொழி இது. நம்புவோம். நம்பிக்கையில் தான் உலகம் வாழ்கிறது. நக்கீரன் ஓம் சரவண பவ பத்திரிகை நடத்தும்போது, ராகவேந்திரர் மகிமைகளைப் பற்றிப் பேசும் போது, கறுப்புச் சட்டையும் கருப்புத் துண்டையும் உதறிவிட்டு, கலைஞர் மஞ்சள் துண்டை தன் அடையாளமாக்கிக் கொண்டுவிட்ட காலத்தில் வாழும் நாம் நம்பிக்கை இழக்கலாமா?

 6. Are NOT sex and nudity beautiful things? Is NOT sex an excellent form of worship/devotion with total dedication? Should NOT a sensible person learn to idnetify and differentiate pron from emotional outpourings with accent/focus on sex? Pornography is presenting sex as something vulgar, creating nusea and aversion for sex in a healthy mind. The land of Hindus knows the difference between healthy sexual expressions and ugly pornography. Is Khajuraho porn? Are not our forefathers adored sex and don’t we find expression to it in all our fine arts and literature? The mind influenced by Western way of seeing things will only suffer in differentiating healthy sexual expression and porn. Sex is not a taboo in Hindu culture and tradition. It is purely a Christian influence, branding sex a sin (everyone is born a sinner!)and that it gives room for pornography!
  MALARMANNAN

 7. அடடா… பா.ராவுக்கு சாருநிவேதிதாவே தேவலாம் போல இருக்கே…. ஆன்மீகத்தைப் பொறுத்தவரை ஒரு நல்ல தேடலாவது அவரிடம் இருக்கிறது. இவர் என்னவோ எல்லாம் அறிந்து கொண்டு விட்ட மனநிலையில் பேசுகிறார். எல்லாம் தெளிவதற்கு கொஞ்சநாளாகும்… அப்போது அவரே ’ஆண்டாளின் கவிதை நயமும் ஜயதேவரின் அஷ்டபதியும்’ என்ற நூலைக் கூட எழுதலாம்! வெ.சா. சார் சொல்வது போல அவசர புத்திக்கு மன்னித்து காத்திருப்போம்.

 8. ஆண்டாள் போல் அற்புத பிறவி இனி மண்ணில் பிறந்தால் தான் உண்டு. மிக அருமையான பகிர்வு தமிழ்ஹிந்து. வாழ்த்துகளும் நன்றியும். ஆண்டாள் அரங்கன் மேல் கொண்டது காதல் அல்ல. மானுட பிறப்பிலிருந்து முக்தி அடைய, நம் சமூக கட்டமைப்பிற்கேற்ற ஒரு தேர்வே அது. அதாவது இறையை மணந்து அவனை அடைதல். அதன் பின் மானுட பிறவியே கிட்டாது என்ற நம்பிக்கையை அது.

  வைவணர் வழக்கில் விஷ்ணு ஒருவனே ஆண்மகன் மற்றை அனைவரும் பெண்களே என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் தான் ஆழ்வார்கள் நாயகி பாவம் கொண்டு பாசுரங்கள் பாடியுள்ளனர். கடவுள் மேல் கொண்டதால் காதல் புனிதமாகி போகின்றது. இதை வேறு கண்ணோட்டம் கொண்டு பார்பவர்களை என்ன செய்வது. அது அவர்களின் மடைமையே.

 9. அருமையான பதிலடி அரவிந்தன்.

  நாயகி பாவம் என்பது ஒரு ஆழ்ந்த ஆன்மிக அனுபவம் – பல தளங்களில் இந்து மதம் அதனை அணுகியிருக்கிறது. தன் இஷ்ட தெய்வத்தின் மீது அன்பு செலுத்துவது என்பதில் தொடங்கி உலகளாவிய மானிட நேயம் வரை அது மனித மனத்தை இட்டுச் செல்கிறது. இதைத் தொட்டுக் காட்ட முயலும் எனது பழைய கட்டுரை ஒன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  அண்டம் அளாவிய காதல் – https://jataayu.blogspot.com/2006/11/blog-post_08.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *