யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 2

பதஞ்சலி யோக சூத்திரத்தில் முதல் படிநிலைகளான யம-நியமங்களில் கூறப்படும் “ஸ்வாத்யாயம்” என்ற அம்சம் பற்றிய விளக்கமே இந்தக் கட்டுரை.

ஜெயா டி.வி தொலைக்காட்சியில் யோக வகுப்புகள் நடத்தும் பிரபல யோகப் பயிற்சியாளர் யோகேஷ்வர் கார்த்திக் அவர்கள் எழுதிய “கிரியா யோகம்” என்ற நூலிலிருந்து (பக்கங்கள்: 31 – 44). அனுப்பியவர்: எஸ்.ராமன்

முந்தைய பகுதி

தொடர்ச்சி…

aumமந்திரங்களில் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதன் பயன் என்று ஒன்று உண்டு. நம்முடைய சூக்ஷ்ம உடலில் சில குறிப்பிட்ட அதிர்வுகளைத் தொடர்ந்து ஏற்படுத்துவதன் மூலம் மந்திரங்கள் வேலை செய்கின்றன. மந்திரங்களை சாத்விக, ராஜச, மற்றும் தாமச குணங்களின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கலாம். பிரயோக மந்திரங்கள், சரணாகதிக்கான மந்திரங்கள், தத்துவ ரீதியிலான விசாரத்தைத் தூண்டும் மந்திரங்கள், தெய்வ சக்திகளை நம் வசம் ஈர்க்கும் மந்திரங்கள் என்று மந்திரங்களின் செயல்பாட்டை வைத்தும் பாகுபடுத்தலாம்.
யோக சாத்திரம் பரிந்துரைக்கும் பிரணவம் மாதிரியான பவித்திரமான மந்திரங்கள் என்றால், சத்வ குண இயல்புடைய, மற்றும் சத்வ குணத்திற்கு துணை போகும் வகையிலான ரஜோ குணத்தை மட்டும் கொண்ட, தமோ குணத்தை முற்றிலும் தவிர்த்த மந்திரங்களை மட்டுமே குறிக்கும். சித்த சுத்தி, சரணாகதி, இறை பக்தி, அறிவுத் தெளிவு ஆகியவற்றை நோக்கியே ஒரு யோகியின் மந்திர ஜெபம் இருக்க வேண்டும். காம்யமான பிரயோகங்கள் எதுவும் ஸ்வாத்யாயத்திற்குள் சேராது.

குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களும், குழந்தை பெற வேண்டும் என்ற விருப்பமுள்ள மற்றும் குடும்பப் பொறுப்புகள் உள்ள பெண்களும் ஓம் என்னும் பிரணவத்தை மட்டும் தனியாக ஜெபம் செய்யக் கூடாது என்று மந்திர சாஸ்திரம் எச்சரிக்கிறது. வெறும் பிரணவ ஜெபம் சன்யாசிகளுக்கு உரியது. மற்றவர்கள் ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் நம குமாராய, ஓம் சரவண பவ, ஓம் ஸ்ரீமாத்ரே நம என்று ஏதாவது ஒரு தெய்வத்தின் நாமத்தைச் சேர்த்த, சாத்திரத்தில் கூறப்பட்டுள்ள மந்திரங்களில் ஒன்றை ஜெபம் செய்யலாம். ஒரு சரியான குருவின் மூலம் மந்திர உபதேசம் பெற்று ஜெபம் செய்வது விரைவில் பயன் தரும் என்றும் கூறப்படுகிறது.

காயத்ரீ மந்திரம் என்று அழைக்கப்படும் சாவித்ரீ மந்திரம் கூட ஸ்வாத்யாயத்திற்கு மிகவும் ஏற்ற மந்திரம். அம்மந்திரம் உபதேசிக்கப் பெற்றவர்கள் அதையே தொடர்ந்து, சரியான முறையில் ஜெபம் செய்யலாம்.

ஓம் என்னும் பிரணவம் பேரறிவான, பரம்பொருளை, இறைவனைக் குறிக்கும் மந்திரம். “தஸ்ய வாசக: பிரணவ:” என்பது யோக சூத்திரம். அது போன்ற, அந்த நிலையில் உள்ள, அதற்குச் சமமான மந்திரங்களை மட்டுமே ஸ்வாத்யாயம் செய்பவர் ஜெபிக்க வேண்டும். அப்படியென்றால் பரம்பொருளான இறைவனைக் குறித்தே அம்மந்திரம் அமைய வேண்டும். குட்டித் தெய்வங்களின் மந்திர ஜெபமும் உபாசனையும் சில அன்றாட வாழ்வின் சிக்கல்களை வேண்டுமானால் தீர்க்கலாமே ஒழிய, மனத் தூய்மையோ, இறை உணர்வோ தராது. வேண்டும் தருணங்களில் இம்மந்திரங்களை சில காலம் உபயோகித்துப் பயனடைந்ததும் விட்டுவிடலாம், தவறில்லை. இருப்பினும், ஸ்வாத்யாயத்திற்காகச் செய்யும் மந்திர ஜெபத்தை மட்டும் செய்து, மனதை சரணாகதியில் வைத்து, தன்முனைப்பில்லாத, நிஷ்காம்யமான வாழ்க்கையை வாழ்வது யோகத்திற்கு உத்தமம். முடிந்தவரை இவ்வாறு இருக்க முயற்சிக்க வேண்டும்.

முதல் விஷயமான மந்திர ஜெபத்தைப் பற்றி தெரிந்துகொண்டோம். இனி, ஸ்வாத்யாயத்தின் இரண்டாவது அங்கமான மோக்ஷ சாஸ்திரங்களைப் படித்தல் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

rishis-2மோக்ஷ சாஸ்திர அத்யயனம் என்று கூறப்பட்டிருக்கிறது. அத்யயனம் என்றால் தினமும் தவறாது செய்ய வேண்டிய ஒன்று. தினமும் ஏதாவது ஒரு ஆன்ம விடுதலை சம்பந்தப்பட்ட நூலைப் படிப்பதையோ அல்லது ஆன்மிக சொற்பொழிவு – வகுப்புக்குச் சென்று கேட்பதையோ, பழக்கமாகக் கொள்ளவேண்டும். மோக்ஷ சாஸ்திரம் என்னும்போது பிரதானமாகக் கூறப்படுவது பிரஸ்தானத்ரயம் என்றழைக்கப்படும் உபநிஷத்துக்கள், பிரம்ம சூத்ரம் மற்றும் பகவத்கீதை இம்மூன்றும்தான். இருப்பினும், இவற்றைத் தவிர கணக்கற்ற நூல்களும், உரைகளும் உள்ளன. நம் மனதை பந்தங்களாகிய கட்டுகளிலிருந்து விடுவித்து தூய்மைப்படுத்த உதவும் எந்த ஒரு நூலையும், சொற்பொழிவையும் மோக்ஷ சாஸ்திரம் என்னும் பெயரின் கீழ் எடுத்துக் கொள்ளலாம்.

சனாதன தர்மத்தில் பல பிரிவுகள் உள்ளன. தத்துவ ரீதியில் அவற்றிடையே பல வேறுபாடுகள் இருந்தாலும், மனத் தூய்மை என்று வரும்போது, அனைத்துப் பிரிவுகளிடையேயும் பெரும் ஒற்றுமை நிலவுகிறது. அவரவர்களுடைய மனோ நிலைக்கும், பக்குவத்திற்கும் ஏற்ப ஏதாவதொரு மார்கத்தில் ஈடுபாடு தோன்றும். அதற்கேற்றபடி அத்யயனத்தை அமைத்துக் கொள்ளலாம்.

ஆன்மிக நூல்களைப் படிக்கும் பொழுதோ, சொற்பொழிவுகளைக் கேட்கும் பொழுதோ, வகுப்புகளுக்குச் செல்லும்போதோ, இயந்திர கதியில் செய்யக் கூடாது. பலர், வேதாந்த ச்ரவணம் பண்ணுவது புண்ணியம் என்று வேதாந்த வகுப்புகளுக்குச் செல்வர். அது போதாது. என்ன படித்தோமோ, கேட்டோமோ அதைப் பற்றி நிறைய சிந்திக்க வேண்டும். அதன் கருத்தை மீண்டும் மீண்டும் மனக்கண்ணின் முன் கொண்டு வந்து உணர வேண்டும். அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க முயல வேண்டும். இவை அனைத்தையும் செய்வதுதான் அத்யயனம். வெறுமனே இரவில் தூக்கம் வருவதற்காகப் படிப்பதோ, புண்ணியம் கிடைக்க சொற்பொழிவு கேட்பதோ அத்யயனம் ஆகாது.
முன் காலங்களிலெல்லாம் குருமார்களையும், மகான்களையும் சந்திக்க வெகுதூரம் செல்ல வேண்டியிருந்தது. இன்றோ இணைய தளத்திற்குச் சென்றால் இலட்சக் கணக்கில் யோகம், வேதாந்தம் பற்றிய web sites உள்ளன. ஆயிரக்கணக்கான நூல்களும், ஒலி நாடாக்களும், CD -களும் உள்ளன. இவற்றில் பல தரமற்றதாக இருப்பினும், பல தரமான ஆழம் நிறைந்தவைகளும் நிச்சயம் இருக்கின்றன.

ஒவ்வொரு குருவினிடத்திலும் ஒரு அம்சம் மிகச்சிறந்ததாக இருக்கும். அதைச் சுற்றித்தான் அவர்களின் இயக்கம் பின்னப் பட்டிருக்கும்.

dayananda_swamijiஉதாரணத்திற்கு, அர்ஷ வித்யா குருகுலத்தின் ஆச்சார்யரான சுவாமி தயானந்த சரஸ்வதியின் புத்தகங்களிலும், சொற்பொழிவுகளிலும் அத்வைத வேதாந்த பாரம்பர்யத்தின் ஆழத்தையும், போதத்தையும் மிகத் துல்லியமாகப் புரிந்து கொள்ளலாம். பல காலங்களுக்குப் பின், வேதம் பிரமாணம் என்னும் கருத்தை போதத்தின் மையமாக வைத்து அத்வைத வேதாந்தத்தை அனைவருக்கும் உபதேசம் செய்பவர் சுவாமி தயானந்த சரஸ்வதி. இந்த உண்மைதான் இவருடைய உபதேசத்தின் மையம், தனித்தன்மை. இதனால்தான் இவரால் பல தரமான ஆச்சார்யர்களை உருவாக்க முடிந்தது. இவரிடம் படித்த ஒவ்வொருவரிடத்திலும் அதே அளவு தெளிவைக் காண முடியும். சாத்திரத்தை சரியாப் புரிந்து கொள்ள வேண்டும், பாரம்பர்யமான வேதாந்தைக் கற்க வேண்டும் என்றால், தயானந்தர் மற்றும் அவருடைய சீடர்களின் புத்தகங்களும், சொற்பொழிவுகளும் சிறந்தவை.

மனதையும், அதன் போக்கையும் அனுபவ ரீதியில் புரிந்து கொண்டு, முரண்பாடுகளும், முடிச்சுகளும் இல்லாத இலேசான மனதை அடைய வேண்டும், மனம் இயல்பான மலர்ச்சியை அடைய வேண்டும், பொய்மையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் கடந்த நூற்றாண்டின் தலை சிறந்த ஞானிகளுள் ஒருவரான ஜே. கிருஷ்ணமூர்த்தியின் நூல்களையும், சொற்பொழிவுப் பதிவுகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இராஜயோகத்தின் சாரத்தை அவருடைய போதனைகளில் காணலாம்.

சித்தர்களுடைய அருள்வழியின் சாரத்தையும், அணுகு முறையையும் புரிந்து கொள்ள வள்ளலார் மற்றும் ஸ்ரீஅரவிந்தரின் நூல்களைப் படிக்கலாம். இறை உணர்வுக்கும் சரணாகதிக்கும் இருக்கவே இருக்கிறது பன்னிரு திருமுறைகளும், திவ்யப் பிரபந்தமும். ஆன்மிகத்தின் கீழ் எதையுமே விட்டுவைக்காத ஒரு நூல் திருமந்திரம்; பல எளிய, தரமான உரைகளோடு கிடைக்கிறது. திருமந்திரம் மட்டும் படித்துப் பயனடைய ஒரு ஆயுட்காலம் போதாது.

ஆன்ம விடுதலைக்கான வேட்கையை நம்மில் கிளப்ப வேண்டும், முமுக்ஷுத்வம் பெற வேண்டும் எனில் இராமகிருஷ்ண பரமஹம்சரையும், விவேகானந்தரையும் படிப்பதை விடச் சிறந்த காரியம் இருக்க முடியாது. ஆரம்ப காலத்தில், அப்யாசத்திற்கான திடசித்தத்தைப் பெற இவை உதவும்.

ஆன்மிக நூலகளையும், சொற்பொழிவுகளையும் நாம் இரண்டு விதமாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒன்று, விஷயங்களையும் வழிமுறைகளையும் நாம் கற்றுக் கொள்ள துணை புரிபவை. இரண்டு, விடுதலை வேட்கையைத் தூண்டவும், அப்யாசம் செய்ய வேண்டும் என்ற உற்சாகத்தை நமக்குத் தரவும் உதவியாக இருக்கும் நூல்கள், சொற்பொழிவுகள். இந்த இரண்டாவது ரகத்தை inspiration -க்காகவும், motivation -க்காகவும் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றிலிருந்து கற்றுக் கொள்ளக் கூடாது. மீறினால் குழப்பம்தான் விளையும்.

ஆரம்ப நிலையில் இருக்கும் ஒரு அப்யாசியால் இவ்வாறு பிரித்துக் காண்பது என்பது இயலாத காரியம். எந்த ஒரு பிரிவையும் சாராத, ஆனால் அறிவுத் தெளிவும், அனுபவமும் மிக்க ஒரு ஆன்மிக வல்லுனரின் உதவியை நாடலாம்.

தினமும் இரவு தூங்கப் போகும் முன், ஒரு அரை மணி நேரம், அன்றைய மனோ நிலைக்கு உகந்த ஆன்மிக நூல் ஒன்றை படிப்பது அல்லது சொற்பொழிவு பதிவைக் கேட்பது என்னும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். சாத்விக எண்ணங்களுடன் உறங்கச் செல்வதும், விழிப்பதும் மிகவும் முக்கியம். என்ன படிப்பது, கேட்பது என்பதை அப்போதைய மனோநிலைக்கேற்பத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்நேரம், பாடநூல் மாதிரி நமக்குக் கற்றுக் கொடுக்கும் முதல் ரகத்தை விட, நம்மை inspire செய்யும் இரண்டாவது ரக நூலகள் உதவும். இரவில் தூங்கச் செல்லும் முன், நம் உள்மனம் உன்னத எண்ணங்களில் திளைத்தல் உன்னதம். நாம் உறங்கிக் கொண்டிருக்கும் போது, இவ்வெண்ணங்களால் தூண்டப்பட்ட உள்மனம் தன் சிந்தனைப் பழக்கங்களை சீர் செய்து கொள்ளும்.
உதாரணத்திற்கு, வாழ்க்கையைப் பற்றி பயம், கவலை, எதிர்காலத்தைப் பற்றிய குழப்பம், கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்கள் போன்றவை மனதில் அலைமோதும்போது, பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயத்தின் வரிகளைப் படித்து, அதன் பொருளை சிறிது நேரம் சிந்தித்து உணர்ந்தால் பெரும் மாற்றத்தை உணரலாம்.
ஆசாபாசங்கள் அதிகம் மனதில் மேலிட்டால் Gospel of Sri Ramakrishna என்னும் புத்தகத்தைப் புரட்டி ஏதேனும் நான்கு பக்கங்களைப் படித்துவிட்டு உறங்கச் செல்வது சிறந்த உபாயமாகும்.

ramakrishnaஇறை நம்பிக்கை குறையும் காலங்களில், மகான்களின் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் படிப்பது மிகவும் உதவியாக இருக்கும். இதுபோல் பலவகை உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
சிலருக்கு சில நூல்களின் மேல், அல்லது சில குருமார்களின் போதனைகளின் மேல் தீவிர ஈடுபாடு இருக்கும். அப்படிப்பட்டவர்கள், துன்ப-குழப்ப காலங்களில், அந்தப் புத்தகத்தை எடுத்து, சட்டென்று திறந்து ஏதாவது ஒரு பக்கத்தைப் படித்தால், அங்கே அவருடைய பிரச்சினைக்கு ஏற்ற தீர்வு கிடைக்கும். இது பல அப்யாசிகளின் வாழ்வில் அடிக்கடி நடக்கும் நிகழ்வு. இவர்களின் சிரத்தையினாலும், ஸ்வாத்யாயத்தின் பலனாலும், இவர்கள் இஷ்டப்படும் நூலின் மூலம் இறையருள் வழிகாட்டுகிறது.

“ஸ்வாத்யாயப் பிரதிஷ்டாயாம் இஷ்ட தேவதா சம்ப்ரயோக:” என்பது பதஞ்சலியின் யோக சூத்ரம்.
இதற்கு, ஸ்வாத்யாயத்தில் நிலைபெற்ற ஒருவருக்கு தன் இஷ்ட தெய்வத்துடன் தொடர்பு ஏற்படும் என்று பொருள். சித்தர்களும், மகான்களும், தெய்வங்களும் தரிசனம் தந்து வழிகாட்டுவர் என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர். இதை, சரியான நேரத்தில் நமக்கு ஈடுபாடுள்ள மார்க்கம், குரு, தெய்வம் அல்லது நூலின் மூலம் வழிகாட்டுதல் கிடைக்கும் என்றும் புரிந்து கொள்ளலாம்.

சரியான நேரத்தில், சரியான குருவிடம், சரியான உபதேசம் கிடைக்க வேண்டுமெனில் இறையருள் ஒன்றாலேயே சாத்தியமாகும். இதற்கு வழி வகுக்கும் யோக அங்கமே ஸ்வாத்யாயம். மேலும், யோக சித்திக்கு அவசியமான, இரு கண்களாகத் திகழும் அப்யாசம் மற்றும் வைராக்கியம் ஆகிய இவ்விரண்டையும் பெற மிகவும் துணை புரியும் சாதனம் ஸ்வாத்யாயம். மேலும் கிரியா யோகத்தின் அடுத்த அங்கமான ஈஸ்வர பிரணிதானத்திற்கு (இறைவனிடம் அர்ப்பணித்தல்) தேவையான மனப்பக்குவமும் நமக்கு ஸ்வாத்யாயத்தின் மூலம் கிடைக்கிறது. சரியான ஸ்வாத்யாயம் நம்மை ஈஸ்வர பிரணிதானத்திற்கு அழைத்துச் செல்கிறது.

(முற்றும்)

கிரியா யோகம்
ஆசிரியர்: யோகேஷ்வர் கார்த்திக்
ஸ்ரீ ஆரோமிரா பிரசுரம்
1 எர்ரப்ப கவுண்டர் சந்து, நடு வீதி
பம்மம்பட்டி, சேலம் ஜில்லா – 636113

விலை: ரூ.91/=

சென்னை மயிலாப்பூரில் ”கிரி டிரேடர்ஸ்” கடையில் இப்புத்தகம் கிடைக்கும்.

12 Replies to “யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 2”

 1. //
  குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களும், குழந்தை பெற வேண்டும் என்ற விருப்பமுள்ள மற்றும் குடும்பப் பொறுப்புகள் உள்ள பெண்களும் ஓம் என்னும் பிரணவத்தை மட்டும் தனியாக ஜெபம் செய்யக் கூடாது என்று மந்திர சாஸ்திரம் எச்சரிக்கிறது.
  //
  ஆமாம், ஜீயர் சுவாமிகள் ஒருவர் ஒரு உபன்யாசத்தில் பெண்கள் ஓம் என்ற பிரணவம் உச்சரித்தல் ஆகாது. அம் நமோ நாராயணாய நம: என்று சொன்னால் போதும் என்று சொல்லி இருக்கிறார்.

  மேலும் ஓம் என்ற ஒரேழுத்து மந்திரம் தொடர்ந்து உச்சரித்தால் ஆண் தன்மை அளிக்கும் என்றும் படித்திருக்கிறேன்.

 2. ஸ்வாத்யாயம் என்பது எவ்வாறு செய்யப்படவேண்டும் என்பதை தைத்ரீய உபநிஷத் நன்கு விளக்குகிறது. நேர்மையுடனும், உண்மையுடனும், மெய்வருத்தத்துடனும், புலனடக்கத்துடனும், தெளிவுடனும், விருந்தோம்பலுடனும், மக்கள் நன்மை பொருட்டும் எது கற்கப்படுமோ அதுவே ஸ்வாத்யாயம் என்பதாம்.

  ஆனால், ஸ்வாத்யாயம் தான் கற்பது எனப் பொருள்படினும், அது தானாகக் கற்பது மட்டுமே அன்று. குருவின் தொடக்க வழிகாட்டலின் பின்பு தான் கற்பது என்பதே இது என்பதை நாம் அறியவேண்டும்.

  இதை என் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றால், புத்தகத்தைப் படித்தே ஆன்மிக அறிவில் தெளிந்துவிடலாம் என்னும் தவறான கருத்து எக்காரணமும் விளையலாகாது என்பதாலேயே. “குரு, தெய்வம் அல்லது நூலின் மூலம் வழிகாட்டுதல் கிடைக்கும் என்றும் புரிந்து கொள்ளலாம்” எனக் கூறுவது ஒன்று மற்றொன்றிற்கு மாற்று எனக் கருதச்செய்துவிடல் ஆபத்தானது.

  “ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் நம குமாராய, ஓம் சரவண பவ, ஓம் ஸ்ரீமாத்ரே நம என்று ஏதாவது ஒரு தெய்வத்தின்” என்னும் சொற்றொடர்கள், தெய்வங்கள் பல என்னும் கருத்தை விதைக்கின்றன. இதுவும் ஆட்சேபத்திற்கு உரிய ஒன்று. தெய்வம் ஒன்றுதான், அதன் நாமங்கள் வேண்டுமானால் பலவாக இருக்கலாம் என்பது மிக முக்கியமாக கருத்தில் கொள்ளப்படவேண்டும். எனவே குட்டி தெய்வங்கள் என்னும் கருத்தும் எழ வாய்ப்பில்லை. .

 3. ///………….ஆனால், ஸ்வாத்யாயம் தான் கற்பது எனப் பொருள்படினும், அது தானாகக் கற்பது மட்டுமே அன்று. குருவின் தொடக்க வழிகாட்டலின் பின்பு தான் கற்பது என்பதே இது என்பதை நாம் அறியவேண்டும்.

  இதை என் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றால், புத்தகத்தைப் படித்தே ஆன்மிக அறிவில் தெளிந்துவிடலாம் என்னும் தவறான கருத்து எக்காரணமும் விளையலாகாது என்பதாலேயே. “குரு, தெய்வம் அல்லது நூலின் மூலம் வழிகாட்டுதல் கிடைக்கும் என்றும் புரிந்து கொள்ளலாம்” எனக் கூறுவது ஒன்று மற்றொன்றிற்கு மாற்று எனக் கருதச்செய்துவிடல் ஆபத்தானது.
  ………………..////

  குருமூலம் கற்றுக்கொண்டால் உபாத்யாயம். ஸ்வாத்யாயம் என்றால் தனக்குத்தானே கற்பித்துக் கொள்ளுவது என்றுதான் பொருள்.

  ஸ்வாத்யாயம் என்றால் எல்லாவற்றிடம் இருந்தும் அறிவைப் பெற்றுத் தனக்குத்தானே ஒருவன் போதித்துக் கொள்ளுவது. அந்த அறிவு மூலங்களில் குருவும், புத்தகங்களும்கூட இருக்கலாம். அவை இல்லாமலும் இருக்கலாம்.

  தான் கற்றது சரியா, அனுபவம் சரியா என்பதைத் தெரிந்துகொள்ள ஹிந்து தத்துவங்கள் சொல்லும் பிரமாணங்களே போதுமானது. அந்தப் பிரமாணங்களில் ஒன்று உபமானம். தனது அனுபவம் மற்றொருவருடைய அனுபவத்தோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளுவது. இங்கு குரு வருகிறார். குரு என்றால் ஒருவர்தான் என்றில்லை. பலர் இருக்கலாம்.

  ஸ்வாத்யாயம் அடிப்படை. நிரந்தரம். குரு எல்லாம் வழித்துணை மட்டுமே.

  குருவின் முக்கியத்துவம் அவசியம் குறைத்து மதிப்பிட முடியாதவை. ஆனால், ஸ்வாத்யாயம் இல்லாத குரு உபதேசம், குருமார்களின் உண்டியலைத்தான் நிரப்பி வருகிறது.

  ஒரு பெரிய இசைக் கலைஞர் ஒருவர் சொன்னார். குருகுலம் மூலம் இசை படித்தவர்கள் பிற்காலத்தில் நல்ல துணி துவைப்பவர்களாகவும், சிறந்த மசாஜ் செய்பவர்களாகவும் ஆகினர் என்று. கிண்டலுக்குத்தான். ஆனால், உண்மை உண்டு.

 4. முதல் பாகத்தில் வேதங்களில் இல்லாத கடவுள்களைக் கும்பிடுவதால் பலன் இல்லை என்று சொன்னார். ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர், மாதா அம்ருதானந்த மயி போன்றோரைத் தெய்வமாக ஆச்ரயிப்பது தப்பு தப்பு ரொம்பத் தப்பு என்று சொன்னார்.

  இந்தப் பாகத்தில் “ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் நம குமாராய, ஓம் சரவண பவ, ஓம் ஸ்ரீமாத்ரே நம” போன்றவற்றைச் சொல்ல வேண்டும் என்கிறார்.

  வாசுதேவன், குமரன், சரவணன், மாதா என்பவை வேதம் வெளிப்படையாகச் சொல்லும் தெய்வங்களா?

 5. //………என்னும் சொற்றொடர்கள், தெய்வங்கள் பல என்னும் கருத்தை விதைக்கின்றன. இதுவும் ஆட்சேபத்திற்கு உரிய ஒன்று. தெய்வம் ஒன்றுதான், அதன் நாமங்கள் வேண்டுமானால் பலவாக இருக்கலாம் என்பது மிக முக்கியமாக கருத்தில் கொள்ளப்படவேண்டும். எனவே குட்டி தெய்வங்கள் என்னும் கருத்தும் எழ வாய்ப்பில்லை. …..//

  இதில் என்ன ஆட்சேபம் இருக்கிறது? பிரம்மமானது பல ரூபங்களில் இருக்கிறது. பல ரூபங்களும் பிரம்மமே.

  அவரவர்க்குப் பிடித்ததை வழிபடுங்கள் என்பதுதானே புரிதல். அதைத்தானே கட்டுரை ஆசிரியர் சொல்லுகிறார்.

 6. Pingback: Indli.com
 7. “குருமூலம் கற்றுக்கொண்டால் ‘உபாத்யாயம்’. நல்ல வேடிக்கைதான். ‘உபாத்யாயம்’ என்றால் பிறருக்குக் கற்பிப்பது என்றுதான் பொருள். குருமூலம் கற்றுக்கொள்வதற்குப் பெயர் அத்யயனம், ‘உபாத்யாயம்’ அல்ல!

  தானே கற்றுக்கொள்ளல் என்பது நால்வகைகளில் நிகழ்வதாக வியாசர் கூறுகிறார். அவையாவன- 1. ஆசிரியரிடமிருந்து, 2. தனது முயற்சியால்,
  3. உடன் படிக்கும் மாணவர்களுடன் விவாதமூலம், 4. நாளடைவில் அனுபவம் என்பன. இந்த அனைத்துமே ஸ்வாத்யாயம்தான். அதாவது “இவ்வழிமுரைகளின் மூலம் தான் கற்பது”. எனவே “குருமூலம் கற்றுக்கொண்டால் ‘உபாத்யாயம்’ என்பது தமாஷாக சொல்வதற்கு வேண்டுமானால் பயன்படலாம்!!

  குருகுலம் மூலம் இசை படித்தவர்கள் பிற்காலத்தில் நல்ல துணி துவைப்பவர்களாகவும், சிறந்த மசாஜ் செய்பவர்களாகவும் ஆவது யார் விஷயத்தில் எனில் தன்முயற்சி சிறிதளவேனும் இல்லாதவர் விஷயத்தில் மட்டுமே. அத்தகையவர் எவரின் துணையின்றி தானே கற்கவும் இயலாதவராகவே இருப்பர்.

  “ஹிந்து தத்துவங்கள் சொல்லும் பிரமாணங்களில் ஒன்று உபமானம்” . அவை கூறுவது ‘உபமானம்’ அல்ல, ‘அனுமானம்’. உபமானம் என்றால் உவமை. உவமை பிரமானமாவதில்லை. ‘அனுமானம்’ அல்லது ‘ஊஹித்தறிதல்’ என்பதுதான் ஹிந்து தத்துவங்கள் சொல்லும் பிரமாணங்களில் ஒன்று.

  …..”என்று ஏதாவது ஒரு தெய்வத்தின் நாமத்தை” ….”குட்டி தெய்வங்கள்” எனவெல்லாம் கட்டுரையில் எடுத்தாள்வது, தெய்வம் பல என்னும் எண்ணத்தை விதைத்துவிடலாகாது என்பதை சுட்டிக்காட்டுவதே நோக்கமே தவிர, தெய்வத்திற்கு எண்ணிலடங்கா நாம ரூபங்கள் என்பதை யாரும் ஆட்சேபிக்கப் போவதே இல்லையே! ஒரே பிரம்மத்திற்கு (கடவுளுக்கு) நாமரூபங்கள் மட்டுமே பல, பிரமம் பல அல்ல என்பதுதானே சனாதன தர்மத்தின் அடிப்படை வாதமே. வேதங்கள் பிரமத்தின் பல நாமங்களை எடுத்தாள்வது மிகக்கண்கூடு. வேதமறிந்தவர்க்கு இது நன்கு தெரியுமே! ஆயினும் “அவரவர்க்குப் பிடித்தது” என்பது நாமத்தின் பல்சுவையில் மட்டும் இருக்கவேண்டுமே தவிர, தெய்வம் பல என்னும் எண்ணத்தை அது விதைத்துவிடலாகாது என்னும் anxiety இருப்பதில் என்ன தவறு?

 8. @ S.Srinivasaraghavan

  உங்களது பதிலை இப்போதுதான் பார்த்தேன். உடனடியாகப் பதிலளிக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

  ————————–
  அத்யயனம் என்பதை அதி+அயனம் என்று பிரிக்கலாம். அதி என்பது ‘அதன’ என்பதில் இருந்து வருகிறது. ‘அதன’ என்றால் சேகரித்தல். அயனம் என்றால் இயல்பாக நிகழ்வது.

  அதாவது, மானுட மனமானது தன் இயல்பால் தானாகச் சேகரிக்கும் அறிவு அத்யயனம். சுய முயற்சியோ அல்லது வெளியிலிருந்து வரும் ஒரு குருவின் உதவியோ இல்லாமல் தன்னியல்பால் தானாகவே மனமானது சேகரித்துக் கொள்ளும் கல்வி அத்யயனம். அதாவது, Subconciousஆகக் கற்றல் நிகழ்வது அத்யயனம் என்று நான் புரிந்துகொள்கிறேன்.

  உபாத்யாய என்பதை உப+அத்யாய என்று பிரிக்கலாம். உப என்றால் அருகில் இருந்து. அருகில் அமர்ந்து கற்றுக் கொடுப்பவர் ஒருவர் துணையுடன், வழிகாட்டுதலுடன், புத்தி தன் இயல்பில் கற்றுக் கொள்ளுதல்.

  ஸ்வாத்யாய என்பதை ஸ்வ+அத்யாய எனப் பிரிக்கலாம். ஸ்வ என்றால் சுயமாக; சுயமாகக் கற்றுக்கொள்ளுதல். சுயமுயற்சி மட்டும்தான் இங்கு சொல்லப்படுவது. குருவின் உதவி இதில் கிடையாது.

  சூத்திரமாகச் சொன்னால் இப்படிச் சொல்லலாம்:

  அத்யயன = குருவும் இல்லை. சுய முயற்சியும் இல்லை. இருப்பினும், அறிவு இயல்பாகச் சேகரமாகிறது. ரமணர் எந்த குருவிடம் வித்யாரம்பம் செய்து கொண்டார்? இருப்பினும், அவருக்கு அத்யயனம் நடந்தது.

  ஸ்வாத்யாய = சுய முயற்சி + இயல்பாகச் சேகரிக்கப்படும் அறிவு. ஏகலைவன் ஒரு உதாரணம். ஜெயமோகன், ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் நம் முன் வாழும் உதாரணங்கள்.

  உபாத்யாய = குருவினால் வழிகாட்டப்படுதல் + இயல்பாகச் சேகரிக்கப்படும் அறிவு. ராமகிருஷ்ணரிடம் கற்ற விவேகானந்தர். நாராயண குருவிடம் கற்றுக் கொண்ட நடராஜ குரு.

  ———————-

  வ்யாசர் சொன்னதாக நீங்கள் சொல்லும் ஸ்லோகம் இதுதானே?

  ஆச்சார்யாத் பாதபாதத்தம் பாதம் ஸிஷ்ய: ஸ்வபேத்யா |
  பாதம் ஸப்ரஹ்மசாரிப்ய: பாதம் காலகேமேன ச ||

  மாணாக்கன் ஆசிரியரிடமிருந்து கால் பங்கு படிப்பைப் பெறுகிறான். தன் அறிவினால் மற்றொரு கால்பங்கை சேர்த்துக் கொள்கிறான். தன்னுடன் படிக்கும் சக மாணவரிடம் இருந்து மற்றொரு கால்பங்கைக் கற்கிறான். எஞ்சியுள்ள கால்பாகத்தை அனுபவம் அறிவால் நிரப்புகிறது.

  மேலேயுள்ள ஸ்லோகம், ஸ்வாத்யாயம் என்பதற்கான விளக்கம் இல்லை. முழுமையான கல்வி எப்படி அடையப்பெறுகிறது என்பதற்கான அருமையான விளக்கம்.

  ஸ்வாத்யாயம் என்பது குரு இல்லாமல், சுயமுயற்சியால் நடப்பது.

  நான் இப்படிச் சொல்வதால், ஸ்வாத்யாயத்தில் குரு என்ற ஒன்று முற்றிலும் இல்லை என்று பொருள் இல்லை. சுயமாகக் கற்பவனுக்குப் பல குருக்கள். உதாரணமாக, பாகவதத்தில் ஒரு காட்சி. தத்தாத்ரேயர் தனது ஸ்வாத்யாயம் எப்படி நடந்தது என்பதை யது என்னும் அரசனுக்குச் சொல்லுகிறார்:

  பிங்களை என்னும் விபச்சாரியிடம் இருந்து நிராசையே (அதாவது, எதிர்பார்ப்பு இல்லாமல் இருத்தலே) சுகம் என்பதை கற்றுக் கொண்டேன். குர்ரப் எனும் பறவையிடம் இருந்து புலன்கள் நாடும் பொருட்களை எல்லாம் தேடித் தேடிச் சென்று சேகரித்து வைக்கக் கூடாது எனக் கற்றுக்கொண்டேன். குழந்தையிடம் இருந்து எப்போதும் மகிழ்ச்சியுடனும், கவலை இல்லாமலும் இருக்கக் கற்றுக் கொண்டேன். நெல் குத்திக் கொண்டிருந்தவளின் வளையல்களிடம் இருந்து, ஒற்றை வளையல் ஓசை எழுப்பாது, கூட்டத்தோடு சேர்ந்திருந்தால் சண்டையும் சத்தமும்தான் என்பதைத் தெரிந்து கொண்டேன். அம்பு தயாரிக்கும் தொழிலாளியிடம் இருந்து, செய்யும் கர்மாவில் (வேலையில்) மனம் முற்றிலும் மூழ்கிவிடவேண்டும் என்று தெரிந்துகொண்டேன்……..

  இப்படியே வரிசையாகச் சிலந்தி, நாகப்பாம்பு, புழு, வண்டு போன்றவற்றிடம் இருந்தும் அவர் கற்றுக் கொண்டார்.

  இவை ஒவ்வொன்றிடம் இருந்தும் அவர் கற்றுக் கொண்ட கதைகள், அவற்றின் விவரங்கள் தத்வார்த்தம் மிகுந்தவை. ஸென் கதைகள், ஸென் கதைகள் என்று தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் இல்லையா? அந்த ஸென் கதைகளைப் போன்றே ஞானஒளியை உடனடியாக அளிக்கும் சக்தி வாய்ந்தவை. ஸென் கதைகளை மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் செய்ய ஒரு டி.டி. ஸுஸுகி இருந்தார். ஆனால், நமது பாகவதக் கதைகளின் பெருமைகளை மக்களுக்குப் புரியும் மொழியில், தத்துவார்த்தமாகச் சொல்ல யாருமில்லை. பௌத்த மதங்களுக்குக் கிடைத்தது போன்ற ஒரு மிஷனரி லாபி நமக்கில்லை. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக நமது மக்காலே மனத்திற்கு நமது புராணங்கள் சிறந்தவை என்று சொல்லத் தேவையான வெள்ளைக்காரர்களின் எண்ணிக்கையும் குறைவு. 🙁

  அதை விடுங்கள். இந்தக் கதையில் தத்தாத்ரேயர் செய்தது ஸ்வாத்யாயம். ஆனால், அவருக்குப் பல அறிவு மூலங்கள். அவற்றை அவர் எனது குருமார்கள் என்கிறார்.

  ஆனால், நீங்கள் சொல்லுவது வைதீகர்கள் சொல்லும் சம்பிரதாய குரு. ஸ்வாத்யாயத்தில் இப்படி எல்லாம் குரு இல்லை.

  நீங்கள் சொல்லுகிற, குரு அவசியம் எனும் முறை உபாத்யாயம் மட்டுமே. ஸ்வாத்யாயம் இல்லை.

  மேலும், உபாத்யாயத்தின் மூலமாக ஒருவன் கல்வியைப் பெற்றாலும், அவனிடம் ஸ்வாத்யாயம் இல்லை என்றால் கல்வி சேகரமாகாது. அவனறியாமல், அத்யயனமாகியிருக்கக் கூடிய ஏதோ ஒன்று இரண்டு இருக்கலாம். ஆனால், அவை அடுத்தவரிடம் கொடுத்துவிட்ட நமது பணம் போல. தேவைப் படும்போது உபயோகிக்க முடியாது.

  எனவே, ஸ்வாத்யாயம் என்பது ப்ரதானமானது. உபயோகத்திற்கு அதிகம் அவசியமானது.

  ———————————-

  இப்போதுள்ள சம்பிரதாய குருமார்களைக் குறைத்து மதிப்பிட முடியாதுதான். அவர்கள்தான் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பயணிக்கும் மின்சக்தியைக் கடத்தும் கம்பிகளாக இருக்கிறார்கள். இருப்பினும், பொருளாதாரக் காரணங்களாலும், ஆபிரகாமிய வாழ்க்கை முறையாலும் சிரத்தை இல்லாத குருக்களும் மாணவர்களும் இப்போது தென்படுகின்றனர். வேதம் கற்பவர்கள் வெற்றுத் தவளைகளாக, வெறும் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், அவற்றை நம்பிக்கை இன்றியும் நடத்துகிறார்கள். இந்துத்துவ வாழ்விற்கும் அவர்களுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. அதைத்தான், குருகுலத்தில் இசை கற்றவர்கள் நல்ல துணி துவைப்பவர்களாகவும், சிறந்த மசாஜ் செய்பவர்களாகவும் ஆகிறார்கள் என்று கிண்டல் செய்த சங்கீத விமர்சகரும் குறிக்கிறார்.

  நான் குருகுலம் என்ற ஒன்றைக் குறை கூறவில்லை. குருகுல முறைதான் இந்தியாவிற்கு விடிவுதரும் முறை. அண்ணல் அம்பேத்கர் சிலாகித்து எழுதிய முறை.

  ——————————-

  ஹிந்துத் தத்துவங்கள் சொல்லும் பிரமாணங்கள் அத்வைத, சாங்கிய, வைஸேஷிக, நியாய சம்பிரதாயங்களுக்கு ஒப்ப எண்ணிக்கை வித்தியாசப்படும். Epistomology என்று சொல்லப்படுகிற இவற்றில், அத்வைத மற்றும் நியாய சம்பிரதாயங்களில் காணப்படும் பிரமாணங்களில் ஒன்று “உபமானம்”.

  ——————————

  சனாதன தர்மத்தில் கடவுள் என்பது ஒன்றே ஒன்றுதான் என்பது அத்வைத, த்வைத தத்துங்களின் உச்சிக் கொம்பில் நிகழும் அனுபவம். மற்றபடி, பல கடவுள்கள் இல்லை என்றோ தெய்வம் பலவாக இருக்கிறது என்று சொல்லுவது தப்பு என்றோ வேதங்கள் சொல்லவில்லை. புராணங்கள் சொல்லவில்லை. சடங்குகள் சொல்லவில்லை. ஸ்ம்ருதிகள் சொல்லவில்லை. குன்றாது தொடர்ந்து வரும் ஆன்மீக அவதாரங்கள் சொல்லவில்லை.

  நீங்கள்தான் அப்படிச் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுவது இந்து மதங்களில் இல்லை. ஆபிரகாமிய மதங்களில் மட்டும்தான் இருக்கிறது.

  ஒன்று பலவாக இருப்பதும், அந்தப் பலவும் தன்னளவில் முழுமையாக இருப்பதும் இந்து மதங்களில் காணப்படுகிறது. நமது புரிதலை ஒட்டி பிரம்மமானது ஒன்றாகவோ, பலவாகவோ, அல்லது அவ்விரண்டுமாகவோ இருக்கிறது.

  நான் சொன்னவற்றை விடுங்கள். இந்த விஷயங்களில் நான் மாக்ஸ்ம்யூலர் போல. சொந்தமாக ஒன்றும் தெரியாது. ஆனால், புத்தகங்களில் இருந்தும், விஷயம் தெரிந்தவர்களிடம் இருந்தும் தெரிந்து கொண்டதை வைத்து ஜல்லி அடித்திருக்கிறேன். ப்ராட்டஸ்டண்ட் சர்ச் காசு கொடுத்தால் ஆரியன் என்று ஒரு இனம் இருந்தது என்று கூடக் கூசாமல் புளுகுவேன். 🙂

  இந்தத் தளத்தில் தொடர்ந்து அருமையான ஞானப் பொக்கிஷத்தை வழங்கி வரும் முனைவர். முத்துக்குமாரசாமி அவர்களின் சைவ சித்தாந்த விளக்கங்கள் தெய்வம் பலவாகவும், ஒன்றாகவும், இவ்விரண்டாகவும் இருப்பதை உறுதிப் படுத்துகின்றன. அவை உங்களுக்கும் உதவலாம்.

  உங்களைப் போல ஆர்வமுள்ளவர்களுடன் உரையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றிகள்.

 9. தங்களது நீண்ட விளக்கத்திற்கு முதற்கண் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். அது குறித்து எனது மேல்விளக்கங்கள் கீழ் வருமாறு.

  உங்கள் கூற்று:
  “ஆனால், நீங்கள் சொல்லுவது வைதீகர்கள் சொல்லும் சம்பிரதாய குரு. ஸ்வாத்யாயத்தில் இப்படி எல்லாம் குரு இல்லை.”

  அடியேனின் மறுமொழி:
  நான் வைதிகர்கள் சொல்லும் சம்பிரதாய குரு என்னும் வாதத்தை முன்வைக்கவேயில்லை. நான் சொல்லாத ஒன்றை நீங்களாகவே பொருள்படுத்திக் கொண்டால் கூறினால் அது உங்கள் ஊஹமே தவிர எனது கொள்கையாகாது என்பதை நான் சுட்டிக் காட்டவிரும்புகிறேன். எனது வாதம், தக்க ஓர் ஆசானின்றி கல்வி கற்றல் முற்றுப்பெறாது என்பதை அடியிட்டுக் கட்டுவதே. இவாதத்திற்குத் துணையாகவே வியாசரின் செய்யுளை முன்வைத்தேன்.

  மேலும் ஸ்வாத்யாயம் என்பதன் விளக்கத்தை ” சத்யம் ச ஸ்வாத்யாய ப்ரவசனே ச” எனத்தொடங்கும் தைத்ரிய உபநிஷத் பகுதி மூலம் நாம் உணரலாம். நீங்கள் சொல்வது போல் ‘ஸ்வாத்யாயம்’ என்பது ‘தனக்குத்தானாகவே கற்பித்துக்கொள்ளல்’ என்றால் அவ்வாறு கற்காமல், வியாசர் கூறிய வழியில் கற்றவர்கள் குறித்து, உபநிஷத் கூறும் இத்தகைய பண்புகள் வேண்டும் எனச் சொல்லாததாக ஆகிவிடும். எனவே ஸ்வாத்யாயம் என்பது தன் முயற்சி மூலம் (அத்தகைய முயற்சியில் தக்க குருவிடமிருந்து தான் பெற்றுக்கொள்ளும் திறமையும் அடங்கும்தான்) குருவிடமிருந்தோ (அந்த குரு எவராகவும் இருக்கலாம், ‘வைதிகத் தகுதியை’ உடையவராக இருந்தாக வேண்டும் என்பதல்ல), ஏன், சஹமாணவரிடமிருந்தோ கூட இருக்கலாம். ‘தான்கற்றல்’ என்பது தான் இங்கு முக்யமேதவிர
  ‘தனக்குத்தானாகவே கர்பித்துக்கொள்ளல் மட்டும் தான்’ என்பது இங்கு திரண்ட கருத்தல்ல என்பதை நாம் உறுதியாக தயக்கமின்றி கூறலாம்.

  அடுத்து உப-அத்யயனம் என்னும் சொல்லாட்சியைக் குறித்து தங்களின் விளக்கம்.
  . ‘கற்றலில்’ (ஆத்மனே பதத்தில்) உப அத்யயனம் என்னும் ஒரு சொல்லாட்சியை அடியேன் கேள்விப் படவில்லை. கற்பித்தலில், கேள்விப்பட்டுள்ளேன்.
  இதற்கு தாங்கள் ஆதாரம் சுட்டிக் காட்டினால் நான் மிகவும் நன்றி உடையவனாவேன்.

  மூன்றாவதாக உபமானம் பிரமானன்களுள் ஒன்றே என்னும் தங்கள் கூற்று குறித்து:
  அடியேன் பிரமாணங்கள் மூன்று- ப்ரத்யக்ஷம் (கண்கூடாக அறிவது) , அனுமானம் (ஊஹித்து அறிவது) , சப்தம் (மறைகள் மூலம் தெளிவது) எனவே பெரியவர்கள் கூற அறிந்துள்ளேன். உபமானம் என்பது (உவமை, உருவகம், எடுத்துக்காட்டு, என்னும் உத்திகளால் ஒரு விஷயத்தை விளங்கவைப்பதாகுமே தவிர, அதுவே பிரமாணம் ஆகிவிடாது. ஆயினும் நீங்கள் கூறுவதுபோல் உபமானம் பிரமாணம் என நமது சனாதன தர்ம சாகைகளில் கூறப்பட்டிருந்தால் அதனை தயை கூர்ந்து சுட்டிக் காட்டக் கோருகிறேன். நான் அறிந்துள்ளது கைமண் அளவே என ஒப்புக்கொள்வதில் எனக்கு நிச்சயம் தயக்கமே இல்லை.

  உங்கள் நான்காவது வாதம் :
  “சனாதன தர்மத்தில் கடவுள் என்பது ஒன்றே ஒன்றுதான் என்பது அத்வைத, த்வைத தத்துங்களின் உச்சிக் கொம்பில் நிகழும் அனுபவம். மற்றபடி, பல கடவுள்கள் இல்லை என்றோ தெய்வம் பலவாக இருக்கிறது என்று சொல்லுவது தப்பு என்றோ வேதங்கள் சொல்லவில்லை. புராணங்கள் சொல்லவில்லை. சடங்குகள் சொல்லவில்லை. ஸ்ம்ருதிகள் சொல்லவில்லை. குன்றாது தொடர்ந்து வரும் ஆன்மீக அவதாரங்கள் சொல்லவில்லை”

  வேதங்கள் பல கடவுள் தத்வம் தப்பு என்றோ சரியென்றோ கூறாதது பற்றியல்ல நமது வாதம். அவை தமது உச்சகட்டமாக இறைவனைப் பற்றி என்ன சொல்கின்றன என்பதுதான் இங்கு முக்கியம். அந்த உச்ச கட்ட அனுபவத்தை நாம் அடையவேண்டும் என்பதுதான் அவற்றின் நோக்கமும் கூட. நமது வாதங்கள் அத்தகைய அனுபவத்தை ஒவ்வொருவனும் அடையத்துணை புரிவதாக இருக்கவேண்டுமே தவிர மீண்டும் மீண்டும் பல கடவுள்கள் இருப்பதாகத் தொடருவதை வேதங்கள் தவறு என்று இடித்துக்கட்டுவதில்லை என்று கூறிக்கொண்டே இருந்தோமானால் மனிதன் அடுத்த நிலைகளை அடைந்து உச்ச கட்ட அனுபவத்தை எப்போது பெறுவது? ஒரு வாதத்திற்காக அந்த உச்ச கட்டம் படிப்படியாக தானாகவே ஏற்பட்டுவிடும் என வாதிட்டால் அப்போதும், அந்த உச்ச கட்டம் தானே இறுதி உண்மை? அதனை ஒப்புக்கொள்ள என் தயக்கம்? “ப்ரஹ்மம்” என்னும் ஓர் பதத்தையே உச்ச கட்டமாக மறைகள் குறிப்பிடும் அல்லவா?

  புராணங்கள், sadangugal இவை அனைத்தும் ஆன்மீக நிலையில் மிக ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே. இவை கூறும் திரண்ட கருத்தை மட்டும் பயிற்சி செய்தோமானால் சித்த சுத்தி ஏற்பட்டு அதனால் ஆன்மிகத்தில் முன்னேற்றம் ஏற்பட அவை வழி செய்யும் என்னும் அளவில் தான் இவற்றின் பங்களிப்பு. அதை விடுத்து இன்ன இன்ன கடவுள் இன்ன கடவுளின் உறவு என்று பலகடவுள்களின் இருப்பைக் கற்பனை செய்துகொண்டிருந்தோமானால் நாம் ஆன்மிகத்தில் Munneruvathu எப்போது?

  தங்களது vilakkangalukku எனது Nandrigal.

 10. ஸ்வாத்யாயத்தைப் பற்றிய விளக்கத்திற்கு நான் இங்கு வரவில்லை. “கடவுள் ஒன்றே அல்லது பல” ஆகும் என்பது பற்றி ரமணர் மூலம் நான் அறிந்ததைச் சொல்கிறேன். அவர் “உள்ளது நாற்பது” முதல் செய்யுளில் கூறுவதை கவனிக்க வேண்டுகிறேன்:

  ” நாம் உலகம் காண்டலால் நானா ஆம் சக்தி உள
  ஓர் முதலை ஒப்பல் ஒரு தலையே – நாம உருச்
  சித்திரமும் பார்ப்பானும் சேர்படமும் ஆரொளியும்
  அத்தனையும் தானாம் அவன்”

  பொருள்: நாம் நம் கண்களுக்குப் புலப்படும் உலகத்தைப் பிரத்திட்சியமாகப் பார்ப்பதால், பற்பலவாகத் தோன்றும் சக்தியைத் தன்னிடம் உடையதான ஒரு முதற்பொருளை ஒப்புக் கொள்வது எல்லோருக்கும் உடன்பாடானதே. நாம ரூபத்துடன் கூடிய உலகச் சித்திரங்களும், அவற்றைக் காண்பவனாகிய ஜீவனும் , தோன்றக்கூடிய சித்திரங்களுக்கு ஆதாரமான திரையும், அவற்றைப் பிரகாசப் படுத்திக் காட்டும் சைதன்ய ஒளியும், இவை அத்தனையுமாக விளங்குபவன், தான் என்னும் ஆத்மாவாகிய அந்த முதற் பொருளே அன்றி வேறன்று.

  ஆக பல கடவுளர்கள் எனக் கொள்வது முடிவு நிலை அறிய முடியாத முதல் – இடை நிலைப் பயிற்ச்சியாளர்களுக்கே. இருந்தும் இதனையே நாம் இங்கு முதல் செய்யுளாகக் காண்கிறோம். இத் தொகுப்பின் அனுபந்தத்தில் கடைசியாக அவர் சொல்வது:

  “அகில வேதாந்த சித்தாந்த சாரத்தை
  அகம் உண்மையாக அறைவன் – அகம் செத்து
  அகம் அதுவாகில் அறிவுருவாம் அவ்
  வகமதே மிச்சம் அறி”

  பொருள்: அனைத்து வேதாந்த சித்தாந்தங்களின் முடிவான உபதேசத்தின் சாரத்தை நான் உண்மையாக உள்ளபடி சொல்வேன். நானென்னும் அகந்தை அழிந்து, பிரம்மமே நான் என்னும் அநுபூதி உண்டானால், அறிவே சொரூபமான அந்த ஆத்மாவே மிச்சமென்று அறிவாயாக.

  ஆக முதலிலும் அதே, முடிவிலும் அதே சொல்லப்பட்டுள்ளது. எதையும் நீங்கள்
  எவரும் மறுக்கவுமில்லை, மறக்கவுமில்லை. ஆகையால் இப்படியாக கண்டவர்கள் விண்ட சில மொழிகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து அதனையே பிடித்துக் கொண்டிருப்பது யாவர்க்கும் நலமாம்.

 11. இறை என்பது அனைத்திற்கும் மூலமாகிய ஒரே ஆற்றலாக மட்டுமே இருக்கவியலும் என்பது நம்மால் பகுத்தறிவு ரீதியாகத் திண்ணமாக உணரப்பட்டாலும், மறைகள் கூறுவதை படித்திருந்தாலும், பெரியோர்கள் கூறக் கேட்டிருந்தாலும், நம்மில் மிகப்பலர் ‘பல இறைவர்களை’ (!) என் கற்பனை செய்துகொள்கிறோம் என்பது புதிரே. இம்மாயக் கற்பனை நன்கு படித்துள்ள பேராசிரியர்களையும் விட்டுவைக்கமாட்டேன் என்பது என்பதுதான் விந்தையே! ‘இவர் பெரியவரா அவர் பெரியவரா’ என சண்டையிடும் மாயத்தில் வேறு இழுத்துவிடுகிறது!! வேதங்கள் தெய்வம் ஒன்றே என இறுதியில் தெளியவேண்டும் எனக் கூறினாலும் அவை பல-தெய்வ வாதத்தைத் தவறு எனக் குறிப்பிட்டுக் கூறவில்லையே என்னும் எதிர்வாதம் செய்ய வேறு தூண்டுகிறது இம்மாயம்!!! இவை அனைத்தும் பலவாகத் தன்னைக்காட்டிக்கொள்ளும் ஒரே இறைவனின் விந்தைச் செயல்கள் என்பதைத் தவிர கூற என்ன உள்ளது?

  இக்காரணமாகத்தான் புராணங்களுக்கும் ஸ்தலபுராணங்களுக்கும் தேவைக்கு அதிகமான முக்யத்வத்தை நாம் அளிக்கலாகாது என்பது. புராணங்கள் மக்களுக்கு இனியவகையில் நற்கருத்துக்களை எடுத்துச்செல்லவேண்டும் என்னும் நோக்கத்தில் மட்டும் ஆக்கப்பட்டவை என்பதை மட்டும் நாம் ஒருபோதும் மறக்கலாகாது. அவை கூறும் உட்கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கதைப் பகுதியை கதையாகவே எடுத்துக்கொண்டுவிடவேண்டும். இவ்வாறு செய்தால் நாம் பல தெய்வ மயக்கத்திற்கு ஆட்படமாட்டோம் என்பது திண்ணம்.

  அடுத்து, இறைவன் ஒருவன் என்பது திண்ணமானால் ஏன் கோயில்கள் பல தெய்வங்களின் பெயரில் உள்ளன என்னும் வினா எழும்தான். அதற்கு விடையும் எளிதே. கோயில்கள் என்பன மக்களின் வழிபாட்டு சௌகர்யம் குறித்தே எழுப்பட்டன. அவரவர்கள் எந்த பாவனையில் இறைவனைக் குறித்த சிந்தையில் ஈடுபடவேண்டும் என எண்ணினரோ அந்தந்த பாவனைக்கேர்ப்பவே இறைஉருவம் கற்பிக்கப்பட்டு கோவில்கள் எழுப்பப்பட்டன. இந்த வாதம் உண்மையே என்பதற்கு ஆதாரமே கோவில்கள் எல்லாம் பிற்காலத்தவையே என்னும் உண்மை. மிகப்பண்டைய நாட்களில் (உபன்யாசகர்களின் மொழியில் சொல்வதானால் கிருதயுகம் திரேதாயுகம்!) கோவில்கள் இருந்ததில்லை. அவரவர்கள் தனிவழிபாட்டு முறையாகவே இறைவழிபாட்டு முறை இருந்தது. பின்னாட்களில் கூட்டுவழிபாடு அல்லது பொதுவழிபாடு என்னும் வழக்கம் வந்தபோதுதான் கோவில்களின் தேவை ஏற்பட்டு அவை அவரவர் சமுதாயப்படி இறை உருவத்தை ஸ்தாபித்து கோவில்கள் எழும்பின. இவ்வுண்மையை நாம் நன்கு அறிந்தோமானால் தேவையற்ற உட்பூசல்கள் தவிர்கப்பட்டுவிட்டு, இறைவன் ஒருவனே என்னும் உண்மை பசுமரத்தாணிபோல் உள்ளத்தே பதிந்துவிடும். அத்தகைய நிலையில் சனாதன தர்மத்தின் (இந்துமதம் அல்ல- அது அந்நியன் நமது மதவெறியற்ற வாழ்க்கைமுறையைக் குலைக்கச் செய்யும் சதியில் சனாதனதர்மத்திற்கு இட்ட பெயர்) மேன்மை நமக்கு நன்கு விளங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *