ஆரிய சமாஜம் நூல் விமர்சனத்தை முன்வைத்து..

ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும் என்ற தலைப்பில் ஸ்ரீ வெங்கட் சாமிநாதன் எழுதியுள்ள கட்டுரையை, ஆரிய சமாஜம் என்கிற எனது சிறுநூலுக்கான விமர்சனம் என்று கருதுவதைவிட, அந்த நூலையொட்டி ஆரிய சமாஜம் பற்றியும் அதனைத் தோற்றுவித்த சுவாமி தயானந்த சரஸ்வதி குறித்துமான அவரது பார்வை எனக் கொள்வது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் சுவாமி தயானந்தரை ஒரு நாஸ்திகராகவோ, அவரது கொள்கையை நாஸ்திக வாதமாகவோ எனது நூலில் நான் பதிவு செய்ய வில்லை.


dayanandajiபாமர மக்களின் பரிசுத்தமான பக்தியையும், அசைக்க முடியாத இறை நம்பிக்கையையும் மூலதனமாகக் கொண்டு, தவிர்க்க முடியாத சடங்காசாரங்கள், பரிகார பூஜைகள் என எத்தனை விதமான நிர்பந்தங்கள் சமூகத்தில் தொடர்ந்து வருகின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சுவாமி தரிசனத்திற்காக மிகுந்த ஆர்வத்துடனும் பக்திப் பெருக்குடனும் வரும் மக்களிடம் புண்ணியத் தலங்களில் தட்சிணை என்ற பெயரில் நடைபெறும் வலுக்கட்டாய வஸூல்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும். கடந்த நூற்றாண்டுகளில் இவை மிகவும் கூடுதலாகவே இருந்து வந்துள்ளன.


சுவாமி தயானந்தர் சடங்காசாரங்களை முற்றிலுமாகப் புறக் கணிக்க வேண்டும் எனக் கூறவில்லை. கருவுறுதலில் தொடங்கி, பிறப்பு, நாமகரணம், திருமணம், மரணம் என வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய சடங்குகளை அவர் நமது வேத நெறிகளின் பிரகாரம் வகுத்துள்ளார். அவை எளிமையானவை, மேலும் அனாவசிய, ஆடம்பரச் செலவுகளுக்கு இடமளிக்காதவை. ஆரிய சமாஜிகள் இச்சடங்குகளைக் கடைப்பிடிக்கின்றனர். மேலும், இச்ச்சடங்குகளை உரிய சமஸ்க்ருத மந்திரங்களைச் சொல்லி நடத்தும்போது உடனுக்குடன் அம்மந்திரங்களின் பொருளைத் தெரிவிப்பதோடு அவற்றின் அவசியம், பயன் ஆகியனவும் விவரிக்கப்பட வேண்டும் எனவும் தயானந்தர் விதித்துள்ளார். அவ்வாறே இச்சடங்குகள நடத்தி வைக்கப் படுகின்றன.


ritualவலுக்கட்டாயமாக வலியுறுத்தப்படும் சடங்காசாரங்கள் மக்களுக்குப் பெரும் சுமையாகவே உள்ளன. சுய கெளரவத்திற் காகவும் சமூகக் கட்டுப்பாட்டின் காரணமாகவும் இவற்றைக் கடைப்பிடித்தேயாக வேண்டும் எனக் கருதுபவர்கள் பல்லைக் கடித்துக் கொண்டு அவற்றை அனுசரித்துவிட்டுப் பின்னர் கடனில் மூழ்கித் தத்தளிக்கும் நிலைமை உள்ளது. அதிலும், கலியாணச் சடங்குகளைவிடவும் கருமாதிச் சடங்குகளுக்கான செலவுகள் அச்சுறுத்தும் அளவுக்குக் கூடுதலாக உள்ளன. மக்கள் தமது மன உளைச்சல்கள், உறுத்தல்கள் காரணமாக கருமாதிச் செலவு களைத் தமது பொருளாதாரச் சக்தியையும் மீறியே மேற்கொள் கிறார்கள். துயரம் நிகழ்ந்துள்ள குடும்பத்தில், அந்தச் சோகச் சூழலையும் குடும்பத்தாரின் திக்பிரமித்த நிலையையும் சாதகமாகக் கொண்டு பெரும் செலவு வைக்கிற சடங்குகள் திணிக்கப் படுகின்றன.


மரணத்தையொட்டிய எளிய சடங்கினை வேத நெறிப்படி விதிக்கும் சுவாமி தயானந்தர், வருடந்தோறும் மேற்கொள்ள வலியுறுத்தப்படும் சிராத்தச் சடங்கைத்தான் தேவையில்லை எனக் கூறுகிறார். உற்றார் உறவினர் உயிரோடு இருக்கையில் அவர்களை நன்கு பராமரியுங்கள், அவர்கள் இறந்தபின் அவர்களை முன்னிட்டுச் சடங்குகளின் பெயரால் வீண்செலவு செய்வதால் என்ன பயன் என்றுதான் அவர் கேட்கிறார்.ஹிந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாடக் கடன்கள், வாழ்நாள் கடன்கள், அனுசரிக்கத் தக்க திருவிழாக்கள் ஆகிய எல்லாவற்றையும் தயானந்தர் வலியுறுத்தத் தவறவில்லை.


temple3இன்றளவும் நமது கோயில்களில் தூய்மைப் பராமரிப்பு மிகவும் கவனக் குறைவான அளவிலேயே இருந்து வருகிறது. குறிப்பாக, விக்கிரக வடிவில் இறைச் சக்தி உறையும் கருவறைகளின் பராமரிப்பு சொல்லும் தரமாக இருப்பதில்லை. தல வரலாற்றில் மிகவும் சிறப்பித்துப் பேசப்படும் திருக் குளங்களின் நிலைமை யினைப் பார்த்தால் நமக்கு மெய் சிலிர்ப்பூட்டும் புனித உணர்வு களைக் காட்டிலும் அருவருப்பும் ஆற்றாமையும்தாம் ஏற்படு கின்றன. நம்து புண்ணிய நதிகளின் நிலைமையும் இதுதான். வழிபடுவதற்கென வரும் நாமே அவற்றின் புனிதத்துவத்திற்கு ஊறும் விளைவித்துவிடுகிறோம்.

இளம் பிராய தயானந்தர் மஹாசிவராத்திரி நடுநிசியில் மற்றவர்கள் தூக்கக் கலக்கத்தில் சாய்ந்திருக்க, தாம் மட்டும் விசுவாசத்துடன் விழித்திருக்கையில் தாம் மனப் பூர்வமாக வழிபட்ட மஹாலிங்கத் திருமேனியில் எலிகள் அலைந்து தம் சுபாவப்படி உணவு கொள்ளும்போதே தமது உடற் கழிவுகளையும் சிவ லிங்கத் திருமேனியின் மீதே வெளியேற்றியது கண்டு அருவருப்பும் திகைப்பும் அடைந்த அனுபவத்தைச் சரியான கோணத்தில் புரிந்துகொள்வதே பொருத்தமாக இருக்கும். இதனையொட்டி, தெயவத் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள கருவறைகளின் தூய்மை நன்கு பராமரிக்கப்பட வேண்டும் என்கிற பிரக்ஞை நமக்கு வருமானால் ஆக்க பூர்வமாக இருக்கும்.


வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் இறைச் சக்தியின் பேராற்றலும் குணச் சிறப்புகளும் பெரிதும் சிலாகித்து வர்ணிக்கப் படுகின்றன. இவ்வாறு வர்ணிக்கப் படுகையில் அவை யாவும் கலைகளாக, வடிவ அமைப்புகளாக மன வெளியில் உருக் கொள்கின்றன. ஆனால் அவ்வாறான வர்ணனைப் பரவசங்கள் விக்கிரகங்களாக வார்க்கப்பட்டு அவையே வழிபாட்டுக்கு உரியன என்று விதிக்கப்படவில்லை.


விஷ்ணு ஸஹஸ்ர நாமம், புருஷ ஸூக்தம், ஆதித்ய ஹ்ருதயம் முதலானவற்றை இறைச் சக்தியின் பல்வேறு குணாம்சச் சிறப்புகளையும் கலைகளையும் உருவகித்துப் போற்றும் துதிகளாகக் கொள்ள வேண்டுமேயல்லாது, அவை ஒவ்வொன்றுக்கும் படிமம் சமைத்து, அவற்றைப் பிரதிஷ்டை செய்து அவற்றுக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்யத் தேவையில்லை என்றுதான் தயானந்தர் வலியுறுத்துகிறார்.

yagna_at_homeதயானந்தர் காலத்தில் சிவன் பெரிதா, சக்தி பெரிதா, திருமால் பெரிதா என்கிற அர்த்தமற்ற வாதப் பிரதிவாதங்கள் மிகவும் கூடுதலாகவே நிகழ்ந்து வந்தன. இவ்வாறான வாதங்கள் முற்றி, மாற்றுச் சமயத்தினர் எள்ளி நகையாடும் அளவுக்கு ஹிந்துக்களிடையே சச்சரவுகள் மிகுந்தன. ஒரு குறிப்பிட்ட தெயவ வடிவத்தை வணங்குபவகளிடையேகூடப் பிரிவுகள் தோன்றித் தங்களுடைய வழிபாட்டுமுறைதான் சிறந்தது என்கிற அகந்தை ஒவ்வொரு பிரிவினரிடையேயும் வலுத்து அதுவே மனமாச்சரியங்களுக்கும் இடமளித்துவிட்டது. இதனால்தான் ஹிந்துக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்த வேண்டி, பல தெய்வ உருவ வழிபாட்டை விடுத்து வேத நெறிப்படி வீடு தோறும் வேள்வித் தீ வளர்த்து அன்றாட இறை வழிபாடு செய்யுமாறு அவர் ஹிந்துக்களுக்கு அறிவுறுத்ததலானார்.


புராண இதிகாசங்களில் காவியச் சுவையையும் அபாரமான கற்பனை வளத்தையும் அனுபவிக்கச் சொல்லும் தயானந்தர், வழிபாட்டுக்கு வேத நெறியைக் கைக் கொள்ள வேண்டுமென் கிறார். மற்றபடி பக்தி மார்க்கத்தை அவர் புறந் தள்ளவில்லை. பக்தி வெள்ளத்தின் பேராற்றலை அவர் உணராதவரல்ல. அதனை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவதிலேயே அவர் கருத்தாகவும் இருந்திருக்கிறார். அனைவரும் ஞான மார்க்கத்தைக் கைக்கொள்வது எளிதல்ல எனபதை அவர் உணர்ந்தே இருந்தார்.


shyamji_krishna_varma_bhansaliஹிந்துஸ்தானத்தின் விடுதலைப் போராட்டத்தில் தீவிரப் பங்கெடுத்து உயிரைப் பலிகொடுத்த பலர் ஆரிய சமாஜத்தினர் ஆவார்கள். அவ்வளவு ஏன், லண்டனில் இந்தியா ஹவுஸை நிறுவி, பாரத இளைஞர்கள் விடுதலை வீரர்களாக உருவெடுக்கச் செய்த கிருஷ்ண வர்மாவே தயானந்தரின் நேரடிச் சீடர்தாம்.

ஹிந்துக்கள் மத மாற்றம் செய்யப்படுவதைத் தடுப்பதிலும் மதம் மாறிய ஹிந்துக்களைத் தாய் மதம் திரும்பச் செய்வதிலும் பெரும் பணியாற்றி அதற்கு விலையாகத் தமது உயிரையே கொடுத்து ஹிந்து சமூக நலன் என்கிற பயிர் வளரத் தமது ரத்தத்தை வார்த்த ஆரிய சமாஜிகள் பலர்.


இதனைக் குறிப்பிடு கையில் உடனே நமக்கு நினைவு வருபவர்கள் சுவாமி சிரத்தானந்தர், பாய் பரமானந்தர். மட்டுமல்ல, லாலா லஜபத் ராய் தொடங்கி இன்னும் பல தூய அரசியல்வாதிகளும் சமூக நலப் பணியாளர்களும் ஆரிய சமாஜிகளாகவே இருந்து, நாட்டுப் பணியில் உயிரை பலிதானம் செய்தனர்.

தமிழ் நாட்டிலும் கூட, கடந்த நூற்றாண்டின் முப்பதுகளிலும், நாற்பதுகளிலும் ஆரிய சமாஜம் பிரபலமாகவே இருந்தது. குறிப்பாகத் தாழ்த்தப்பட்டோரிடையே அதற்கு செல்வாக்கு அதிகமிருந்தது. சென்னையில் பெரம்பூர், வியாசர்பாடி பகுதிகளில் ஆரிய சமாஜம் ஹிந்து சமூகத்திற்கு அரணாக விளங்கி, திராவிட இயக்கம் உள்ளே நுழையாதவாறு காத்து நின்றது. முனுசாமி என்ற ஆரிய சமாஜி அங்கு ஒரு மிகப் பெரும் சக்தியாக இயங்கி, திராவிட இயக்கத்தைத் திணறடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அப்படியொருவரின் இருப்பே நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. 2005-ல் கூட, எண்பத்தைந்து வயது கடந்த முதியவராக, வறிய நிலையில் அவர் என் வீட்டிற்கு வந்திருந்து பழங் கதைகள் பல பேசிச் சென்றதுண்டு.


சரியான தலைமை, வழிகாட்டுதல், தொடர் நடவடிக்கை முதலியன இல்லாமற் போனதால் தமிழ் நாட்டில் ஆரிய சமாஜம் சரியாக வளராமல் ஒரு சிறந்த கல்வி ஸ்தாபனத்தை நடத்தும் அமைப்பு என்கிற அளவிலேயே நிற்கிறது. தமிழ் நாட்டில் ஆரிய சமாஜம் பற்றிச் சரியான புரிதலை ஓரளவு ஏற்படுத்த வேண்டும் என்கிற ஆர்வம் காரணமாகவே ஆரிய சமாஜம் என்ற சிறு நூலை எழுதினேன். மற்றபடி ஹிந்துஸ்தானம் முழுவதும் ஆரிய சமாஜம் குறிப்பிடத் தக்க அளவு செல்வாக்குடனேயே இருந்து வருகிறது.


தமிழ் நாட்டிலுங்கூட, ஆரிய சமாஜ முறைப்படிப் பலர் திருமணம் உள்ளிட்ட சடங்குகளைச் செய்து கொள்கின்றனர். ஆரிய சமாஜத்தின் மூலம் அதிகாரப் பூர்வமாகப் பலர் தாய் மதம் திரும்புவதும் வழக்கத்தில் உள்ளது. நானே கூடப் பல கிறிஸ்துவக் குடும்பங்களை ஆரிய சமாஜத்தின் மூலம் தாய் மதம் திரும்பச் செய்துள்ளேன். என் மூலம் இவ்வாறு நிகழ்ந்தது என்பதைப் பிரபலப்படுத்தினால் பிறகு இப்பணியைத் தொடர்ந்து செய்வதில் இடர்ப்பாடுகள் ஏற்படும் என்பதாலேயே இவ்வாறான தாய் மதம் திரும்பும் நிகழ்வுகளை அவரவர் குடும்ப நிகழ்வாக மட்டுமே அனுசரிக்க வேண்டியுள்ளது.


ஆரிய சமாஜம் இன்றளவும் உயிர்த் துடிப்புடன் இயங்கி வரும் அமைப்புதான். அது ஹிந்து சமூகத்திற்கு மிகப் பெரும் பணி யாற்றி வருவதும் அங்கீகரிக்கப்பட வேண்டிய, ஆதரிக்கப்பட வேண்டிய ஒரு சமூகக் கடமைதான்.

இறுதியாக, சுவாமி தயானந்தரே சொன்ன ஒரு விஷயத்தையும் இங்கு பதிவு செய்துவிடுகிறேன்:

பஞ்சாபில் உள்ள அமிர்தசரசின் கமிஷனராக இருந்த பெர்கின்ஸ் என்கிற ஆங்கிலேயர், சுவாமி தயானந்தருடன் உரையாடுகையில், ஹிந்து மதம் மிகவும் நலிந்து விட்டதாகவும், மாறுபட்ட கோட் பாடுகளால் உட்பூசல்கள் மலிந்து அது தள்ளாடுவதாகவும் விமர்சித்தார்.


valiant_hinduismஅதற்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்தார், சுவாமி தயானந்தர்:ஹிந்து தர்மத்திற்கு நலிவா? சாத்தியமே இல்லை. எஃகைப் போல அதன் கட்டமைப்பு உறுதியாக உள்ளது. பல்வேறு கோட்பாடுகளைச் சார்ந்த நம்பிக்கையாளர்களால் அது போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.சிலர் தியானத்தால் கடவுளை வணங்கினால், சிலர் கடவுளைப் பல வடிவங்களில் பாவித்து பக்தி செலுத்துகின்றனர். நான் விக்கிரகம் வைத்து உருவ வழிபாடு செய்யும் வழக்கம் இல்லாத தொன்மையான வேத நெறி வழிபாட்டுக்குத் திரும்புமாறு மக்களை அழைத்து வருகிறேன். மற்றபடி ஹிந்துக்கள் தம்து சமய நம்பிக்கையில் உறுதியாகத் தான் உள்ளனர். ஆகவே ஹிந்து சமயத்திற்கு அழிவில்லை.


பெர்கின்ஸுக்கு தயானந்தர் அளித்த இந்த பதிலடியை அவரது கோட்பாட்டின் விளக்கமாகவும் வாக்கு மூலமாகவுங்கூடக் கொண்டால் பிரச்சினை இல்லை. 

23 Replies to “ஆரிய சமாஜம் நூல் விமர்சனத்தை முன்வைத்து..”

 1. கட்டுரை அருமை. தமிழகத்திலும் ஆரிய சமாஜம் இயங்கி வருகிறது என்பது எனக்கு செய்தி. இந்து மதம் மறுமலர்ச்சி காண ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் அவசியம்.

 2. ஹிந்து சமயத்திலேயே ஞான மார்க்கம்,பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம் என்று பல வழிகள் உள்ளன.
  அதில் மகரிஷி தயானந்தர் பக்தி மர்கத்தைக் குறைத்து ஞான மார்க்கத்தை அதிகரித்த ஒரு முறையைப் பின் பற்றினர் என்று கொள்ளலாம்
  அளவுக்கு அதிகமான சடங்குகள்,பணச் செலவு, அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் சுமை இவையெல்லாம் நீக்கப் பட வேண்டியவையே.
  மிக உயர்ந்த வேத நெறியை, அதைப் புரிந்து கொண்டு பின் பற்றும்போது நமக்கு உள்ளத் தூய்மையும்,மேன்மையும், அமைதியும், பெருமிதமும் ஏற்படும்.

  தயானந்தர் அன்றாட வாழ்வுக்காக ஹிந்து சமயத்தை சிறிது மாற்றிக் கொடுத்தார்.
  ஹிந்து தர்மம் என்ற ஆல மரத்தின் முக்கிய விழுது அவர்.
  ஹிந்து சமயத்திலிருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் தாய் மடிக்கு கொண்டு வருவதில் தயானந்தருக்கும் , ஆரிய சமாஜத்துக்கும் பெரும் பங்கு உண்டு.

 3. நான் நாஸ்திகர் என்று குறிப்பிடும் இடங்களில் எல்லாம் ‘நாஸ்திகர்” என்று குறியிட்டு எழுதியிருக்கவேண்டும். என் நினைப்பில் விக்கிரஹ ஆராதனை செய்யாதவர்கள் நாஸ்திகர்கள் இல்லை. சொல்லப்போனால் ஒரு விடம்பனம், பகுத்தறிவு பேசுபவர்கள், நாஸ்திகர்கள் எனத் தம்மைப் பறைசாற்றிக்கொள்பவர்கள், வெகு ஆக்கிரோஷமான விக்கிரஹ ஆராதனை செய்பவர்களாக இருக்கிறார்கள். பட்டி தொட்டியெல்லாம், சந்து பொந்துகளில் எல்லாம் விக்கிரஹங்களாகவே தமிழ் நாடு நிறைந்துள்ளது. யார் யாருக்கு விக்கரஹம் என்ற விவஸ்தையே இல்லாது. நாளை அன்பில் தர்மலிங்கத்துக்கு திருச்சியில் விக்கிரஹ திறப்பு விழா நடைபெற இருக்கிறது.

 4. ஆர்ய சமாஜத்தினர் நடத்தும் Agniveer தளத்தில் இருந்து நான் வேதங்களை பற்றி நிறைய அறிந்து கொண்டேன். தயானந்தரின் வேத நெறியிலான வழிபாடு, உருவமற்ற பரம் பொருள் தத்துவத்தை, ஹிந்து மத எதிர்ப்பாளர்கள் விமர்சிக்க வாய்ப்பு எதுவும் கிடையாது.

 5. Great prespective. Malarmanan, not only put his signautre the way of writing tamil, but also enormosu amount of depth, like his reference to “Dhayanadha Saraswathi”. Today, vedic rituals/veda Sanskrit have lot values because of Dhyaanandha Saraswathi.

  Another important, step every Hindu especially Hindu Samacham/Ariya Samacham should come forward explain the vedic ways doing rituals, there are people making, large amout of money. False, business oriented rituals, without any benefit to the individuals or the community. Everybody making new temples just for their own sake, withour worrying about he existing temples and its maintainance. Govt. does not do any maintanice of the great temples, but as community, instead of buidling new one we should take care of the existing ones. Making big statues, collecting money, getting fames, these were never been Hindu values. But…

 6. Pingback: Indli.com
 7. Thiru Malarmannan proves with his humble response to the review article on his book as well as comments from others to that review that he is the real “AANRAVINDU ADANGIYA ARIGNAR!” Each and every piece of his writings is of great value to be preserved by us all.
  Senthilkumar

 8. //சிலர் தியானத்தால் கடவுளை வணங்கினால், சிலர் கடவுளைப் பல வடிவங்களில் பாவித்து பக்தி செலுத்துகின்றனர். நான் விக்கிரகம் வைத்து உருவ வழிபாடு செய்யும் வழக்கம் இல்லாத தொன்மையான வேத நெறி வழிபாட்டுக்குத் திரும்புமாறு மக்களை அழைத்து வருகிறேன்.//

  மலர்மன்னன் அவர்களே,

  தயானந்தரின் “சத்திய அர்த்த பிரகாஷ் ‘ புத்தகத்தைப் படிப்பவருக்கு அவருடைய வழி என்ன என்பது தெள்ளத் தெளிவாகிவிடும். அவர் விக்கிரக ஆராதனையை வெறுப்பவர். காசி மண்ணில் பௌராணிக பிராம்மணர்கள் மத்தியில் ஒரு பெரும் வாதமே செய்தவர். புராணம் பேசுபவர்களை போலிகள் என்றும் தூற்றியவர்.

  புரி ஜகன்னாதப் பெருமாள் கோவிலில் நிகழும் ‘அதிசயங்களை’ செயற்கை எனக் கூறியவர். தந்திர முறை மற்றும் ஆகமங்களை அறவே ஏற்க மறுத்து ஒதுக்கியவர். என் குறை என்னவென்றால், தந்திரங்களை சரியாகப் புரிந்து கொள்ளாமல், அவற்றை ‘வாம மார்க்க’ (அப்பட்டமான காம மற்றும் போதை வழி) பாதைகள் என்று சாடியவர். அப்படிப் பார்த்தால், இன்றைய சைவ மற்றும் வைணவ முறைகள் அப்படித் தான் அவரிடம் பெயர் வாங்கியிருக்கும்.

  இன்னொரு குறை, அவர் புராணங்களைச் சாடியது. அவற்றின் குறிக்கோள் என்ன என்று ஆராயாமல் அவற்றை இழிவு படுத்தியது ஏற்க முடியாததாகி விடுகிறது. ஒரு புறம் பார்த்தால், விஷ்ணு புராணத்தில் இருந்து யுகக் கணக்கு முறையை எடுத்தாள்கிறார். இன்னொரு புறம் அவற்றைக் கடுமையாகச் சாடுகிறார்.

  அவரை பொறுத்த வரை ஆறு தரிசனங்கள் மட்டுமே சரி. மற்றவை தவறு.

  இன்றைய ஆரிய சமாஜிகளும் இதே போக்கில் தான் பேசுகின்றனர். காசியில் வசிக்கும் சமயப் போலிகளைக் களையெடுக்கும் வேலை ஒன்றுதான் அவர்களின் தலையாய பணி என்று இணைய தளங்களில் வெகுவாக எழுதி வரும் திரு அக்னி வீர் வெளிப்படையாகவே கூறுகிறார் . ஆரிய சமாஜத்தின் மின் மடல் குழுமங்களிலும் இந்த பாணியை பார்த்தே வருகிறேன்.

  ///இச்ச்சடங்குகளை உரிய சமஸ்க்ருத மந்திரங்களைச் சொல்லி நடத்தும்போது உடனுக்குடன் அம்மந்திரங்களின் பொருளைத் தெரிவிப்பதோடு அவற்றின் அவசியம், பயன் ஆகியனவும் விவரிக்கப்பட வேண்டும் எனவும் தயானந்தர் விதித்துள்ளார். ///

  தயானந்தரின் சம்ஸ்கிருத உரையை (இருக்கு வேதம்- ஐந்து மண்டலங்கள் ) நான் வாங்கிப் படித்தேன். அரவிந்தரின் பாணியையும் ஒப்பிட்டேன்.தயானந்தர் வேத சமஸ்கிருதத்தை தனக்கு ஏற்றாற்போல் இழுத்து சமயத்திற் கேற்ற வாறு பொருள் உரைக்கிறார். இந்நிலையில், உண்மைப் பொருள் என்பது என்ன ? மேலும், பரம்பரை ஆரிய சமாஜிகள் கூட இதுவரை என்னுடைய , வேதச் சொற்களின் தாது மற்றும் அர்த்தம் பற்றிய சாமானிய சந்தேகங்களைக் கூட தீர்த்து வைக்கவில்லை என்பது தான் உண்மை.

  ஆனால் ஒன்று. வேதம் என்பதை சாதாரண மனிதனுக்கும் எடுத்துச் சென்றவர் அவர். அந்த விஷயத்தில் எனக்கு அவர் மீது பெரும் மரியாதை உள்ளது.
  ////மற்றபடி பக்தி மார்க்கத்தை அவர் புறந் தள்ளவில்லை. பக்தி வெள்ளத்தின் பேராற்றலை அவர் உணராதவரல்ல. அதனை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவதிலேயே அவர் கருத்தாகவும் இருந்திருக்கிறார்.////

  இதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் உள்ளதா ? இருப்பின் கூறவும். என்னைப் பொறுத்த வரை அவர் கீதையை ஏற்றாலும், பக்தியைப் பற்றி ஒரு சொல் கூட பாராட்டியதில்லை. புராணமும் ஆகமும் தான் அவரின் எதிரி ஆயிற்றே ? கடவுளுக்கு பெயர் சூட்டுவதையே எதிர்த்தவர், உருவத்தை நிந்தித்தவர், பக்தியை எவ்வாறு ஏற்பார் ?

 9. ஆரிய சமாஜம் நூல் விமர்சனம் தொடர்பாக எழுதப்பட்ட எனது கட்டுரைக்கு வந்த மறுமொழிகளை நண்பர்கள் கவனப்படுத்தினார்கள். இடைவிடாமல் இணைய தளங்களைப் பார்க்கவும் முழுமையாகப் படிக்கவும் அவகாசம் இருப்பதில்லை. யாராவது அதைப் படித்தீர்களா இதைப் படித்தீர்களா என்று விசாரிக்கும் பொழுதுதான் தேடிப்பார்த்துப் படிக்க முற்படுகிறேன்.

  முதலில் பாராட்டுத் தெரிவித்தவர்களுக்கு நன்றி.

  ஸ்ரீ வெங்கட் சாமிநாதன் அளித்த விளக்கம் படித்தேன். அவர் தமக்கே உரித்தான மிக உயர்ந்த தளத்தில் இருந்துகொண்டு தமது வாசகர்களுக்காய் எழுதியே பழக்கப்பட்டவர். பொதுவான தளங்களில் அவர் எழுதுகிறபோது சில வாசகர்களிடம் அவரது கருத்து தெளிவாக உள்வாங்கிக் கொள்ளப்படாமல் போய்விடுவது இயற்கையே. அதனால்தான் அவரது விமர்சனத்தைப் படித்த ஒரு வாசகர் நல்ல வேளை, தயானந்தருக்கு நிறைய சீடர்கள் அமையவில்ல போலிருக்கிறது என்கிற கருத்துப்பட மறுமொழி எழுதியிருந்தார்! மேலும் இன்றைய அவசர யுகத்தில் விடம்பனங்களை அடையாளம் கண்டு ரசிக்க அனைவருக்கும் அவகாசம் இருப்பதில்லை! ஆகவேதான் நான் விளக்கம் தரவேண்டியதாயிற்று!

  ஸ்ரீ நெடியோன் குமரன் அவர்களுக்கு:

  1. பக்தியுணர்வை ஒரு யோகமாகவே கீதாசாரியன் பெரிதும் சிலாகித்துப் பேசுகிறான். தயானந்தர் ஸ்ரீமத் பகவத் கீதையை ஏற்றுக்கொண்டவர்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். பக்தியின் பெயரால் நமது புண்ணியத் தலங்களில் தொடரும் வலுக்கட்டாய வசூல்களும், புரி போன்ற தலங்களில் தீட்டு என்ற பெயரால் அன்னத்தையும் பதார்த்தங்களையும் சாக்கடையில் கொட்டி வீணடிக்கிற அளவுக்குத் தீண்டாமை உணர்வு காணப்படுவதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வளவுக்கும் அங்கு கொலுவிருக்கும் என் ஆசான் ஸ்ரீ க்ருஷ்ணன் தன் சகோதர சகோதரிகளுடன் ஒரு வனவாசி யாகவே தரிசனம் தருகிறான்! பொதுவாக தெய்வ நம்பிக்கையைத் தோற்றுவிக்கவோ பக்தியுணர்வை ஊட்டவோ அதிசயங்களைத் துணைகழைத்தல் சரியா என யோசிக்க வேண்டும்.

  அடுத்து,, கடந்த கால காசிப் பண்டிதர்களின் பாண்டித்திய அகங்காரம் அனைவரும் அறிந்த விஷயந்தான். விக்கிரகங்களை வைத்துச் செய்யப்படும் பூஜைகள் எல்லை மீறிய ஆடம்பர அனாவசிய நிர்பந்தச் செலவுகளுக்கு இடமளித்ததால் எல்லா விக்கிரகங்களையும் தூக்கி எறியுமாறு தயானந்தர் ஆவேசப்பட்டதும் உண்மைதான். மேலும், தந்திரீகம் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படுகிற விதம் பற்றி நான் விவரிக்க விரும்பவில்லை. துஷ்பிரயோகம்தான் இதில் கூடுதல். ( நான் ஒரு ஸ்ரீ சக்ர உபாசகன் என்பதை இங்கு சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்).
  2. பாஷ்யக்காரர்கள் அனைவருமே வேதங்களுக்கு அவரவர் நோக்கில்தான் உரை கண்டுள்ளனர். எனவே தயானந்தரை இந்த விஷயத்தில் தனிமைப் படுத்தத் தேவையில்லை.

  3. ////”மற்றபடி பக்தி மார்க்கத்தை அவர் புறந் தள்ளவில்லை…..” இதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் உள்ளதா ? இருப்பின் கூறவும். என்னைப் பொறுத்த வரை அவர் கீதையை ஏற்றாலும், பக்தியைப் பற்றி ஒரு சொல் கூட பாராட்டியதில்லை.////
  பிரம்ம ஞான சபையின் சார்பில் வெளிவந்த தியாசபிஸ்ட் என்ற இதழில் தயானந்தர் தொடர்பான குறிப்புகள் பல உள்ளன. பக்தி சமபந்தமான அவரது கோட்பாட்டை அவற்றில் அடையாளங் காணலாம். அமிர்தசரஸ் கமிஷனரிடம் நமது பக்தி நெறிக்கு தயானந்தர் அளித்த அங்கீகாரம் பற்றிய குறிப்பு யோகி சுத்தானந்த பாரதி எழுதிய தயானந்த ஜோதி என்ற நூலிலும் காணப்படுகிறது.

  வாதப் பிரதி வாதங்களில் இறங்குவதில் எனக்கு விருப்பமில்லை. அப்படி இறங்கும்போது அது முடிவில்லாமல் நீண்டுகொண்டே போய் சலிப்பையும் சோர்வையும் அளிக்கிறது. தேவையின்றி மன்ஸ்தாபங்களையும் தோற்றுவித்துவிடுகிறது. ஆரவாரங்களிலிருந்து விலகியிருக்கவும்
  ஒசைப்படாமல் செயலாற்றிக்கொண்டிருப்பதிலுமே நாட்டம் கொண்டுள்ளேன்.

  எனக்குத் தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதே எனது எழுத்தின் நோக்கமாகும். சரியான ஆதாரங்கள் இல்லாமல் நான் எந்தவொரு விஷயத்தையும் பதிவு செய்வதில்லை.

  நன்றி.
  மலர்மன்னன்
  .

 10. அண்மையில் திருநள்ளாறு சென்றிருந்தேன். பக்தா்கள் கூட்டமோ கூட்டம். நளன் குளத்தில் குளிக்க தலையில் எள் எண்ணெய் தேய்த்து விட்டேன். குளத்திற்கு சென்று பாா்த்தபின் எனக்கு அருவருப்பு தாங்க முடியவில்லை. குளத்திற்குள்ளும் கரையிலும் பக்கதா்களின் உடைகள் குவிந்து கிடக்கின்றன. குளத்திற்குள் கால்வைத்ததும் காலில் படுவவது துணிதான். விதியே இப்படி மாட்டிக் கொண்டேனே என்று மனம் நொந்து குளத்தில் சில விநாடிகள் குளித்து விட்டு வெளியேறிவிட்டேன். வேறு நல்ல தண்ணீாில் குளிக்க வசதியும் இல்லை. ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கில் பக்தா்கள் நல லெண்ணெய் தலை நிறை அ்ப்பி பின் குளித்தால் எந்த அளவிலும் குளத்தின் தூய்மையைப் பராமாிக்க இயலாது. பக்தா்கள் அனைவரும் குளத்திற்கு வெளியே நின்று தண்ணீா் சேந்தி குளிக்க மட்டும் அனுமதிக்க வேண்டும். இத்தகைய சீா்திருத்தம் கூட நாம் செய்யவில்லையெனில் இந்துக்களை முட்டாள்கள் என்று பிறா் திட்டுவதை நாம் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.

 11. அமாந்து வழிபாடு செய்யும் பிாிவுகள் வலிமை பெற்றவைகளாக உள்ளன என்பதை மறுக்க முடியாது. பிறாமணா்கள் , பௌத்தா்கள் சீக்கியா்கள் ராமகிருஷண மடத்து அந்தா் யோகம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் இந்துக்கள் கிறிஸ்தவா்கள் முஸலீம்கள் ஆகியோா் உதாரணம்.முறையான சமயக் கல்வி இல்லாததால்தால் இந்தியா வீழ்ச்சியுள்ளது. இன்றுவரை அதற்கு பாிகாரம் காணும் வேகம் இல்லை.சமயசாா்பற்ற பண்புதான் முன்னிலைப்படுத்தப்படுகின்றது.பாவம் பாமர இந்துக்கள். அன்று இசுலாமிய கிறிஸ்தவ ஆட்சயாளா்களும் சாதி அமைப்ப்பும் அவர்களுக்கு முறையான சமய கல்வி அளிக்கவில்லை. 1947 க்கு பிறகு சமயசாா்பற்றத்தன்மை தடைக்கல்லாக வளா்ந்துள்ளதுகூடி பிராா்த்தனை செய்பவா்கள் ஒற்றுமையாக வாழ்வாா்கள். those who pray together stay together.
  சாம்பிராணி புகைப்பதும் தீப ஆராதனை காட்டுவதும் சுடகம் கொளுத்தி கோவிலை காியாக்குவதும் கடுமையான அளவை எட்டியுள்ளது. பழையகால பைத்தியக்காரத்தனங்கள் எல்லாம் அபபடியே தொடா்கின்றது. பழையது கழியவில்லை. புதியது சேரவில்லை.10 பத்மாவனத்தில் அமைதியாக இருக்கத் தொிந்த இந்துக்குழந்தைகள் பிற்பட்ட அட்டவணை வகுப்பில் மிகக்குறைவு.ஆனால் மசுதியில் தேவாலயத்தில் 2 மணி நேரம் குழந்தைகள் அதைியாக இருக்கும். குமாி மாவட்டத்தில்பல இடங்களில் காணப்படும் நிழல்தாங்கள் -ஐயா வைகுண்டா் ஆலயங்களில் சில ஒழுங்கு முறைகளைக் கூடுதலாகக் காணலாம். இங்கு குழந்தைகள் அமைதியாக இருப்பாா்கள். பொங்கல்தான் வழிபாடு என்பது கலாச்சார ஆன்மீக சீரழிவின்ன உச்சக்கட்டம். 4 வாி கொண்ட ஒரு தேவாரப்பாடல் பாடத்தொியாத இந்துக்கள் தமிழநாட்டில் கோடி கோடி. என்ன தீா்வு ???????

 12. அருள்மிகு வள்ளலாா் அவர்களும் புராண சுது ஒழிந்து அருட்பெரும் ஜோதி வழிபாடு என்ற ஒன்றை ஏற்படுத்தினாா்.யாராவது அந்த கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததுண்டா ? என்றால் கிடையாது.சோறு போட்டாா்.வாடிய பயிரைக் கண்டதும் வாடினாா் என்ற கருத்துதான் முன்னிலையாகின்றது. கேரளத்தில் ஸ்ரீநாராணயகுரு கலந்து கொண்ட ஒரு ஈழவா்களின் கோவிலில் மொத்தம் 59 சிறு பீடங்கள் ஆலயங்கள் இருந்தன. அருள்மிகு விநாயகா் கோவிலை மட்டும் வழிபாட்டுக்கு வைத்துவிட்டு மிதி உள்ள 58 சிறு கோவில்களை உடைக்கச் சொன்னாா். மக்கள் அவர் கருத்தைக் கேட்டு உடைத்து விட்டனா். நாகா் கோவிலில் உள்ள இல்லத்து பிள்ளைமாா் கோவிலுக்கு வந்தவா் அங்கேயும் 22 சிறு கோவில்களில் ஒன்றை மட்டும் விட்டு விட்டு மற்றதை உடைத்தெறிய உத்தரவிட்டாா்.

  ஒரு கோவில் ஒரு சிலை ஒரு விளக்கு என்பதே குருவின் திட்டம். இத்திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும்.இந்துக்கள் உருப்பட இதைவிட்டால் வேறு வழியில்லை

  .இந்து கோவில்கள் கத்தோலிக்க ஆலயங்களின் சாயலில் கலையரங்கு அமைப்போடு மாற்றி அமைக்க வேண்டும். இந்து கோவில்கள் அனைத்தும் அந்தா் யோகம் நிகழும் இடங்களாக மாற்ற வேண்டும்.

 13. Dr அன்புராஜ் அவர்களே! வணக்கம். இந்து மதத்தின் மீதான உங்களின் அக்கறை எனக்கு மிக நன்றாக விளங்குகிறது. நான் கூட பல முறை இந்து மதத்தில் ஒரு புரட்சி ஏற்படவேண்டும் என்று எழுதி இருக்கிறேன். ஆனால் அதை மறுத்து பேசுவதற்கு என்றே உயர்திரு கிருஷ்ணகுமார் போன்ற அன்பர்கள் படையெடுத்து வந்துவிடுகிறார் கள். என்ன செய்ய? கற்பூரத்தை எரிப்பதால் carbon mono oxide வெளியாகிறது. அது மிகவும் சுற்றுபுரத்திற்கு கெடுதி விளைவிக்க கூடியது

  //////.those who pray together stay together.//// அது இந்து மதத்தில் நடக்கவில்லையே! ஒரு சாராரை கோவில் உள்ளே விட மறுக்கிறார்கள். அவர்களையும் இவர்களை படித்த ஆண்டவந்தானே படைத்தான். ஆண்டவன் படைத்த குரங்கை, பசுவை நாம் மதிக்கிறோம். ஆனால் அவன் படைத்த 6 அறிவு உள்ள மனிதனை மிதிக்கிறோம். இங்குள்ள மொத்த தலித்துக்களும் ஒரு தீர்க்கமான முடிவெடுத்து அனைவரும் முஸ்லிம்களாக மாறினால் அவனை நாம் என்ன செய்யமுடியும்? அப்போது முஸ்லிம்களின் ஜனத்தொகை அதிகரித்தால் இந்துக்கள் நிலை என்னாகும்? நம்முடைய வீர சூரமெல்லாம் ஒரு ஹரிஜனிடம்தான். ஆனால் ஒரு துலுக்கனிடம் நம் ஜம்பம் ஓங்காது. துலுக்கன் ஆதிக்கம் அதிகரித்து நாம் மைனாரிட்டி ஆகும் பட்சத்தில் நம் நிலை என்னாகும் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

  நம் மதத்தில் உள்ள சில மூடநம்பிக்கைகளை (குரங்கு பிடியாக ) பிடித்து கொண்டிராமல் அவற்றை விட்டொழித்து மதத்தை தூஇமைபடுத்தினால் நாத்திக பசங்க நம்மை விமர்சனம் செய்வது குறையும்.

 14. Dr.A.Anburaj
  “இந்து கோவில்கள் கத்தோலிக்க ஆலயங்களின் சாயலில் கலையரங்கு அமைப்போடு மாற்றி அமைக்க வேண்டும். இந்து கோவில்கள் அனைத்தும் அந்தா் யோகம் நிகழும் இடங்களாக மாற்ற வேண்டும்”. தெளிவாகவே இது ஐரோப்பியமயமாக்குதல் கிறிஸ்தவமயமாக்குதல் போக்காகும். இந்தஅணுகுமுறை சமூக சீர்திருத்தவாதிகளில் சாதனைபடைத்த ஸ்ரீலஸ்ரீ நாராயண குரு சுவாமிகள் பின்பற்றி இருந்தாலும் கூட ஏற்றுக்கொள்ளத்தக்கது அன்று. ஹிந்து பண்பாடு சமயம் ஆகியவற்றின் பலமே அதன் பன்முகத்தன்மை.எல்லா மனிதருக்கும் ஒரே கடவுள், ஒரே புனித நூல், ஒரே வழி என்ற அபிராஹாமிய தியாலஜி அபத்தமானது மட்டுமல்ல ஆபத்தானதும் ஆகும். மனிதர்கள் பலவகைப்பட்டவர்கள். அவர்களுக்கு பலவகை வழிபாட்டு நெறிகள் முறைகள் அவசியம் என்பதை நம் முன்னோர்கள் தெளிவாக உணர்ந்திருக்கின்றனர். எனவே தான் ஒற்றையாக்கும் பன்முகத்தன்மையை அழித்தொழிக்கும் வழிகளை மேற்கொள்ளவில்லை. அப்படியானால் ஹிந்து எழுச்சிக்கு வழி என்ன என்று டாக்டர் அன்புராஜ் கேட்கக்கூடும். ஹிந்து எழுச்சி ஆரம்பமாகிவிட்டது நண்பர்களே. பாரத நாடு முழுக்க நம்முடையப் பாரம்பரிய ஞானம் தொழில் நுட்பத்தை மீட்டெடுத்துப் பயன்படுத்தும் ஆர்வம் விழிப்புணர்ச்சி ஈடுபாடு அதிகரித்துவருகிறது. அதிலே அனைவரும் இணைந்து செயலாற்றுவதே நமது தேசம் பண்பாடு தெய்வீகம் அனைத்தின் உயர்வுக்கு வழி. ஆகவே
  1. நமது பாரம்பரிய விதைகளை நாட்டுப்பசுவை மையமாக்கொண்ட இயற்கைவேளாண்மையை ஆதரிக்கவேண்டும். விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்குத்திரும்பவேண்டும். நுகர்வோர் அவர்களது உற்பத்திப்பொருள்களை வாங்கவேண்டும்.
  2. பாரம்பரிய உணவு சமைக்கும் முறைப் பதப்படுத்தும் முறைகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும். மண்பானை சமையல், செக்கு எண்ணெய், கல்லில் அரைத்த மாவு எண்ணெய் என்று அனைத்தும் மாறட்டும்.
  3. நமது பாரம்பரிய யோகம், சூரிய நமஸ்காரம் தியானம் ஆகிய பயிற்சிகளைக்கற்றுக்கொண்டு அவற்றை எல்லா இடங்களிலும் பரப்பவேண்டும்.
  4.சைவம், வைணவம், சாக்தம், ஸ்மார்த்தம் போன்ற அவரவர் பாரம்பரிய ஒழுக்கங்களை ஆச்சாரங்களை கைக்கொள்ளவேண்டும்.
  5. சித்தா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், யுனானி, யோகம், ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளை பெரும்பாலும் பயன்படுத்தவேண்டும். விபத்து போன்றவற்றிற்கு மட்டுமே ஆங்கில மருத்துவத்தினை நாடவேண்டும்.
  6. நம்முடைய தாய் மொழியைப்பேணவேண்டும். வீட்டிலே தாய்மொழியை மட்டுமே பேசவேண்டும். மம்மி டேடி வேண்டவே வேண்டாம்.
  7. பாரத நாட்டின் பாரம்பரியத்தின் இணைப்பு மொழியான சமஸ்கிருதத்தினையும் பேணுதல்வேண்டும்.
  8. சாதி அடிப்படையில் ஹிந்துக்களிடையே இருக்கும் பேதங்கள் ஒழியவேண்டும்.சாதிகடந்த மனித நேயம் ஹிந்துக்களிடையே மலரவேண்டும்.
  இவையெல்லாம் நிகழ்ந்தால் நம் பாரத நாடு சமூக, அரசியல், பண்பாட்டுத்தளங்களில் மேன்மையடையும்.

 15. Unani is a Muslim invented medicine. If you don’t want to do anything with Muslims and Christians, why do you accept Unani and Anglo system of medicines ?

  In a globalised world, it is impossible to draw an iron curtain and live inside cut off from the outside world. The influence of outside world, that means Christianised and Islamized civilsations, will come in and impact Indian culture.

  About making Sanskrit, it is not possible even in Northern States. All that they are doing is make it as one of the compulsory languages for school children. Children study up to X and then forgot it for ever. Only a few continue to study in higher classes to become Sanskrit teachers. The reason for this is their love and attachment of Hindi. Hindi is link language across many Northern States: Himachal Pradesh, Uttarakhand, Rajasthan, MP, Bihar, Chattisgarh, Jharkhand and Haryana. In the West, i.e. Maharashtra, the Shiv Sena attack Hindi speakers. For Sanskrit to become link language between these States, it has to wage a relentless war over Hindi and succeed. Only way is to force it. Will Hindi zealots accept the coercion? Never. In the Jadayu’s article quoting Rajnath speaking in favour of Sanskrit, I have pointed out that Rajnath could have forced it by executive order when he was UP CM. He couldn’t. But remember Urdu is an official language in UP even when he was BJP CM there. In Delhi, Punjabi English and Urdu are official languages even when BJP was in power there. Where is Sanskrit ? Yes it is there in one state as an official language: Uttarakhand. But there is Cong CM Harish Rawat. Sanskrit was made an official lanuage when the State was born and the first CM was Cong N D Tiwari. The reason is the locations of Haridwar, Krishikesh and other ancient Hindu centric places and it was a sentimental decision to make Sanskrit as an official language. But I couldn’t see Sanskrit even in road signs in the capital and other cities there when I was there recently. Sanskrit get confined only within the said holy places. The government made the language as an official one – in excutive order and didn’t propagate it, it seems 🙂

  The place of Sanskrit even in States where BJP ruled and is ruling is such that how can you talk of making it a link language across all States? Impossible even by coercion. Each State people boast of their proud mother tongue. If you want Sanskrit to be studied, they have no objection. They allow it as long as it is for children as a subject to study. No farther.

  Ancient style of living is good. No one quarrels with that. At the same time, all that is modern is not villain without any iota of goodness or worthiness in it. To summarily dismiss modernity in everything is to dismiss life itself. Take some, leave some – should be the ideal for good living. Even so, you cannot succeed in shutting them out because the West enters each and every household in India, including rural. We must go back to live in huts on floor made cool by cowdung. I am ready. Will people in general be ready to go back to bullock cart age and living in huts without electricity and TV and grinders and mixies ? A few years back I read an interview given by the head of Chinmaya Mission centre New Delhi to IE reporter. It was a good interview on many aspects of spirituality. Finally, the reporter saw it was an AC room with more than one AC and asked about it. Swamiji said in this scorching heat of Delhi, AC is unavoidable.

  But we know in the same Delhi, which was called Indraprastha in ancient times, Swamjis lived with ACs? No. What does it mean? When it is possible to overcome the difficulties in living, it is wise to use the possibilities and people need not be told to do so. On their own, they will go to that. Your efforts to stop them will fail.

  On the one hand, you are saying abrahmic religions are barbaric as they believe in fundamentalism, not liberal values as Hindus, on the other hand, you behave like them: rejecting everything useless and only yours valid and good. If it is not fanaticism, what else?

  However, I can help you achieve your goals. Take the following steps.

  Stop issuing licences to foreign visual media – TV channels. Stop all foreign programmes and movies even if dubbed in Indian languages.

  Stop trade and commerce with Muslim and Christian countries which mean, in plain words, Gulf, Europe and US etc.

  Ban English language in every respect: no English visual and print media, no English teaching in schools. Only mother tongue or Sanskrit or Hindi allowed.

  Stop all printing presses i.e. revoke their licenses for printing in English.

  In short, English lanuage should not be seen, spoken or heard – in print and speech.

  Court language remains English. Stop it. Force lower courts to use only local tongues, S.C only Hindi.

  Higher professional education should be in local or Hindi only. Medicines and engineering no English at all.

  Bollywood, Kollywood, Mollywood and all kinds of Woods in India should have characters to speak only in local or Hindi.

  All interviews in Hindi or local language only.

  You can see your goals becoming realities.

  The side effect is only one: that is indeed happening in Bihar and UP. There successive governments ensured the eclispse of English in schools. The result is production of work force knowing only Hindi. It handicapped them from entering many industry. No one can go abroad. Even if they go, only as coolies. They migrate within India to work as coolies again. People now ask for English education there. The rich Biharis and UPits send their children to Delhi to study in public schools.

  This side effect may not be big in the larger interests of India. Nothing wrong if Indians live within India.

 16. //5. சித்தா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், யுனானி, யோகம், ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளை பெரும்பாலும் பயன்படுத்தவேண்டும். விபத்து போன்றவற்றிற்கு மட்டுமே ஆங்கில மருத்துவத்தினை நாடவேண்டும்.//

  இதோடு அக்கு பஞ்சர் மருத்துவத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் மிக சிறந்த மருத்துவம்.

 17. //ஒரு கோவில் ஒரு சிலை ஒரு விளக்கு என்பதே குருவின் திட்டம். இத்திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும்.இந்துக்கள் உருப்பட இதைவிட்டால் வேறு வழியில்லை//

  நமக்கு நாமே திட்டம்(ஸ்டாலினிடம் இருந்து காப்பியடித்தது அல்ல!) மிக சிறந்தது. அதாவது நமக்கு நாமே கடவுள் என்பதுதான் இந்த திட்டம்.

 18. //சாதி அடிப்படையில் ஹிந்துக்களிடையே இருக்கும் பேதங்கள் ஒழியவேண்டும்.சாதிகடந்த மனித நேயம் ஹிந்துக்களிடையே மலரவேண்டும்.//

  இதை சாதிக்க வேண்டுமென்றால் மதத்தை விட்டுவிட்டு முழுக்க முழுக்க ஆன்மீகத்திற்கு திரும்ப வேண்டும்.

 19. பேரன்பிற்குரிய ஸ்ரீ ஹானஸ்ட்மேன்

  \\ நான் கூட பல முறை இந்து மதத்தில் ஒரு புரட்சி ஏற்படவேண்டும் என்று எழுதி இருக்கிறேன். ஆனால் அதை மறுத்து பேசுவதற்கு என்றே உயர்திரு கிருஷ்ணகுமார் போன்ற அன்பர்கள் படையெடுத்து வந்துவிடுகிறார் கள். என்ன செய்ய? \\

  காலம் தனக்குத்தானாக மாற்றங்களை நிகழ்த்துகிறது ஹிந்து மதத்தில். நம் மதம் என்ன ஒரு புத்தகத்தில் ஆரம்பித்து அந்தப் புத்தகத்திலேயே முடிந்து விடுகிறதா என்ன சொல்லுங்கள்.

  எந்தெந்தக்காலத்திலும் ஹிந்து மதம் பயங்கரவாத ஆப்ரஹாமியம் போல ஒருமையை நோக்கிச் செல்லவே செல்லாது. அதன் பெருமையே பன்மை போற்றுதல். வழிபாட்டுமுறை என்பது என்றும் ஹிந்து மதத்தில் ஆஸேது ஹிமாசலம் ஒரே முறைப்படி இருந்ததும் இல்லை. தற்போது இருக்கவும் இல்லை. எதிர்காலத்தில் இருக்கவும் இருக்காது.

  சுற்றுச்சூழலுக்கு பெருமளவில் தீங்கு விளைவிக்கத் தக்க எந்த ஒரு முறைப்பாடையும் நாம் மாற்றிக்கொள்வதில் என்ன தவறு. இந்தக் கோணத்தில் நீங்கள் பகிரும் விஷயங்கள் பலவற்றில் எனக்கு உடன்பாடு தான்.

  தீபாவளி பட்டாசுக் கொண்டாட்டங்கள் விடுத்து 🙂

  உங்கள் கருத்துக்களை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதாக ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள். நீங்கள் எழுதும் எவ்வளவோ விஷயங்களில் உடன்பாடும் கூட இருக்கின்றது அல்லவா? என்னுடைய சிந்தனை தவறானது என்பதற்கு முழுமையான தர்க்கங்களும் தரவுகளும் பகிரப்பட்டால் என்னுடைய புரிதலை மாற்றிக்கொள்வதில் எனக்கு எந்தப் பிடிவாதமும் கிடையாது.

  தொடர்ந்து தயக்கமில்லாமல் உங்களது கருத்துக்களைப் பகிருங்கள்.

 20. அன்பர் பி எசு

  \\ For Sanskrit to become link language between these States, it has to wage a relentless war over Hindi and succeed. Only way is to force it. Will Hindi zealots accept the coercion? Never. In the Jadayu’s article quoting Rajnath speaking in favour of Sanskrit, I have pointed out that Rajnath could have forced it by executive order when he was UP CM. He couldn’t. But remember Urdu is an official language in UP even when he was BJP CM there. In Delhi, Punjabi English and Urdu are official languages even when BJP was in power there. Where is Sanskrit ? \\

  அப்பா ராசப்பா…………. கத கதயாம் காரணமாம் என்று கதையெழுத ஆரம்பிச்சாச்சா.

  சம்ஸ்க்ருதம் என்பது ஒரு பாடமாக ஹிந்துஸ்தானத்தில் பற்பல மாகாணங்களில் ஏற்கனவே பள்ளி போதனா முறைமைகளில் இருக்கிறது. முப்பது வருஷமாக ஹிந்தியில் உத்யோகம் செய்து வருகிறேன். நீங்க வழக்கம்போல இஷ்டத்துக்கு அட்ச்சுவுடும் கதைகள் தப்புன்னு சொல்ல வேண்டியிருக்கே என்ன செய்யறது.

  ஹிந்தி என்ற பாஷைக்கு மூன்று ஸ்வரூபங்கள் இருக்கிறது.

  ஒன்று ஹிந்துஸ்தானத்தின் அரசியல் சாஸனத்தின் ஷரத்து 351 விதித்திருக்கும்படிக்கான மானக் ஹிந்தி எனப்படும் STANDARD HINDI. இந்த ஷரத்து சொல்வது என்ன?

  It shall be the duty of the Union to promote the spread of the Hindi language, to develop it so that it may serve as a medium of expression for all the elements of the composite culture of India and to secure its enrichment by assimilating without interfering with its genius, the forms, style and expressions used in Hindustani and in the other languages of India specified in the Eighth Schedule, and by drawing, wherever necessary or desirable, for its vocabulary, primarily on Sanskrit and secondarily on other languages

  மானக் ஹிந்தி என்று சொல்லப்படும் தெளிவான அலகீடுடைய ஹிந்தி பாஷை ஹிந்துஸ்தானத்தில் புழங்கும் அனைத்து மொழிகளிலிருந்தும் மேலும் விதேச மொழிகளிலிருந்தும் சொற்களை உள்வாங்கலாம் என்பது vidhi. ஆயினும் ப்ரதானமாக ஹிந்தி பாஷையின் சொற்கள் சம்ஸ்க்ருதத்திலிருந்து கரந்துறையப்பட வேண்டும் என்பது அரசியல் சாஸனம் வகுத்திருக்கும் விதி. கரந்துறையப்படும் சொற்கள் தத்சம், அர்த்ததத்சம், தத்பவ், தேஷஜ், விதேசி என்ற படிக்கு பகுக்கப்பட்டுள்ளன. சம்ஸ்க்ருதம், கடிபோலி எனப்படும் ப்ராந்திய பாஷைகள், ப்ராந்திய பாஷைகளும் உர்தூவும் கலந்த ஹிந்துஸ்தானி, உர்தூ,ஹிந்துஸ்தானத்தின் மற்றைய ப்ராந்தியங்களில் உள்ள மற்ற பாஷைகள் மற்றும் ஆங்க்லத்திலிருந்து ஹிந்திச் சொற்கள் கரந்துறையப்படுகின்றன. ஸ்ரீ ஹரிவன்ஷ்ராய் பச்சன், ஸ்ரீ மைதிலி சரண் குப்த் மற்றும் முன்னாள் பாரத ப்ரதமர் ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களது ஹிந்தி சாஹித்யங்களில் மானக் ஹிந்தி மிளிருவதைக் காணலாம்.

  இரண்டாவது ஹிந்தி ராஜ்பாஷா எனப்படும் அலுவலகப் புழக்கத்தில் உள்ள ஹிந்தி. இது அரசியல் சாஸனம் விதித்துள்ள படிக்கு தேவநாகரி லிபியில் எழுதப்படும் ஹிந்தி. சட்டம் வகுத்திருக்கும் ராஜ்பாஷா நீதிப்படி இறுக்கமான மானக் ஹிந்தி ராஜ்பாஷா என்ற ஸ்வரூபத்தில் தளர்த்தப்பட்டுள்ளது. இங்கு லுகுவாக அலுவலகக் கோப்புகள் பைசல் செய்வதற்கு ஹேதுவாக தேவையான அளவு ஆங்க்லமும் உர்தூவும் புழக்கத்தில் கையாளப்படுகிறது. எழுதப்படும் லிபி தேவ நாகரி. ஊடே சில சொற்றொடர்கள் அல்லது சொற்கள் ஆங்க்லத்தில் எழுதப்படுவதையும் ராஜ்பாஷா நீதி அனுமதிக்கிறது.

  மூன்றாவது ஸ்வரூபம் போல்சால் கீ ஹிந்தி. இதில் பொதுப்புழக்கத்தில் இருக்கும் எல்லா பாஷைகளும் ஏற்கப்படுகின்றன. உதாஹரணமாக சாம்பார் வடை என்ற தமிழ்ச்சொல் ஹிந்தியில் சாம்பர் வடா என்று திரிந்து தமிழ் கூட உண்டு இதில். ஃபார்ஸி, ஆங்க்லம், உர்தூ, பாங்க்ளா (வங்காள மொழி), பஞ்சாபி என்று பற்பல மொழிகளை தன்னுள் ஏற்றுக்கொண்டு ……………….. ஆங்க்லோ சேக்ஸன் ஆங்க்லமாக மாறியபடிக்கு ஹிந்தியும் பற்பல மொழிகளைத் தன்னுள் ஏற்று பரந்து விரிகிறது.

  இது அறிவுபூர்வமான யதார்த்தம். மற்றபடி தாங்கள் எத்தையும் எப்படி வேண்டுமானாலும் அட்ச்சுவுடலாம். காசா பணமா சொல்லுங்கள்.

  அவரவர் மொழியை வளர்ப்பதற்கான வழி அதனை நேசிப்பது. போஷிப்பது.

  ஒருபுறம் தமிழகத்தில் தமிழை வளர்ப்பதற்கு சான்றோர்கள் அல்லும் பகலும் நேர்மையுடன் பாடுபட்டுக்கொண்டிருக்கையில் ஒரு புல்லையும் புடுங்காது தமிழை வளர்ப்பது என்பதாகப்பட்டது மாற்று மொழிகளை வசவிடுதல் என்று கும்பல் ஆகாத்யம் செய்து வருவது போல உத்தரபாரதத்திலும் இப்படி இரண்டு கும்பல்கள் உண்டு. ஒரு கும்பல் ஹிந்தி மொழியை வளர்ப்பதற்காக மொழிவளர்ச்சியில் ஆழ்ந்து ஈடுபடுதலைத் தங்கள் செயல்பாடாகக் கொண்டிருக்கையிலேயே வசவிடுதலிலேயே தங்கள் வாழ்நாளைக் கழிக்கும் ஒரு அரசியல் கும்பலும் உண்டு. இந்த கும்பல் பொதுக்கூட்டங்களில் விசிலடிச்சு ஆங்க்லத்தை தூஷிப்பதை ஒரு செயற்பாடாகக் கொண்டு அந்தப்பக்கத்து விசிலடிசான் குஞ்சப்பனார்களை போஷிக்கிறார்கள். அம்மட்டே.

  அந்தந்த மொழி வளர்ச்சிக்குப் பாடுபடும் சான்றோர்கள் பரந்து விரிந்த ஹிந்துஸ்தானம் முழுதும் உண்டு என்பது போலவே மாற்று மொழிகளை வசவிடும் கும்பலுக்கும் குறைச்சலே கிடையாது. விஷயம் என்னவென்றால் வசவாளர்களின் சொந்த மொழி எதுவும் கிடையாது………… வசவு என்பது மட்டிலும் தான் இவர்களது மொழி என்பது யதார்த்தம்.

  தேவரீர் எப்போதும் தங்க்ளீஷிலேயே அட்ச்சுவுடுவது வழக்கம். அதை விடுத்து ஒரேடிக்க ஆங்க்ல ஜோதியில் இப்படி ஐக்யமாகி விட்டால் எப்படி. கொஞ்சம் தயவு பண்ணக்கூடாதோ 🙂

 21. வர்ணசிரம்மம் என்றால் என்ன? எனக்கு ஆர்யா சமாஜம் தெளிவாக விளக்கியது!

 22. //வர்ணசிரம்மம் என்றால் என்ன? எனக்கு ஆர்யா சமாஜம் தெளிவாக விளக்கியது!//

  என்னவென்று விளக்கியது என்று சொல்ல முடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *