பகுதி-III ஆப்பிரிக்கா-21ம் நூற்றாண்டின் சுரண்டப்படும் முகம்:-
21ம் நூற்றாண்டிற்கு முன் ஆப்பிரிக்கா சுரண்டப்பட வில்லையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதற்கு முன் சுரண்டியவர்கள் ஐரோப்பியர்கள். சுரண்டியது பெரும்பாலும் மனித வளங்களை. ஆனால் இப்பொழுது ஆரம்பித்திருக்கும் சுரண்டல் மனித வளம் மட்டுமல்ல. கனிம வளம், எண்ணெய் வளம் போன்றவற்றுடன் கூடிய சுரண்டல். மேலும் ஒரு அதிசயம். சுரண்டலை ஆரம்பித்திருப்பவர்கள் ஐரோப்பியர்கள் அல்ல. இந்தியாவும், சீனாவும்தான். நம்ப முடியவில்லையா! மேலும் படிக்கவும்.
சுரண்டலுக்கான தேவை:-
இந்தியாவும் சீனாவும் பொருளாதார நிலையில் அடைய விரும்புவது வளர்ச்சியை அல்ல, மாபெரும் வளர்ச்சியையும் அல்ல. அசுர வளர்ச்சியை. ஆப்பிரிக்காவில் அசுர வேள்வி ஆரம்பித்திருக்கிறது. ஆப்பிரிக்காவின் இயற்கை வளம் இந்திய, சீன வளர்ச்சிக்கு ஆஹுதியாக அளிக்கப்படுகிறது.
தங்களின் பெரும்பாலான மக்களின் ஏழ்மையை போக்கவும், மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் வரும் காலங்களில் மிகப்பெரிய முன்னெடுப்புகளை இந்தியாவும் சீனாவும் செய்தாக வேண்டும்.
2050ல் இந்தியா தன் உணவு தானிய உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும். நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் தேவைகளும் மிகவும் அதிகமாகும். (வெளி உலகுக்கு அவ்வப்பொழுது சுற்றுச்சூழல் பிரசங்கங்களை நம்மால் செய்ய முடியுமே தவிர, தற்பொழுதைய மற்றும் குறுகிய வருங்கால முன்னெடுப்புகளுக்கு எரிசக்தியையே சார்ந்து இருந்தாக வேண்டும்). இவற்றை பூர்த்தி செய்து கொள்ள தன் நாட்டு நிலப்பரப்பை மட்டுமே பயன்படுத்தினால் போதாது. ஐரோப்பா, அமேரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் போட்டி போடும் நிலையில் இல்லாததால் இந்தியாவும் சீனாவும் இருப்பதிலேயே இளிச்சவாயன்களான ஆப்பிரிக்க கருப்பர்களின் மடியில் கை வைக்க ஆரம்பித்திருக்கின்றன.
ஆப்பிரிக்க எண்ணெய் கிணறுகளின் பங்குகளை வாங்க இந்திய, சீன கம்பெனிகள் போட்டி போடுகின்றன. தற்பொழுதைய நிலவரப்படி சீன அரசே தேவையான பணத்தை புரட்டி தருவதால் சீன கம்பெனிகளே போட்டியில் முதலிடம் வகிக்கின்றன. நம் நாட்டின் எண்ணெய் தேவைகள் வரும் 20 வருடங்களில் இரண்டு மடங்காக உயரும் என்பதால் இந்திய அரசும் ONGC போன்ற அரசு கம்பெனிகளுக்கு பண உதவி செய்யும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.
லஞ்ச லாவண்யமும், ஆயுத கலாச்சாரமும் இன்றைய ஆப்பிரிக்கர்களின் வாழ்வில் ஒன்றாகி இருப்பதால், இந்தியா மற்றும் சீனாவால் தங்கள் முன்னெடுப்புகளை எளிதாக செய்ய முடிகிறது.
இங்கே ஒரு விஷயத்தை கூறியாக வேண்டும். சீனா தன் முன்னெடுப்புகளை தன் அரசு வங்கிகளின் மூலமே செய்கிறது. ஆனால் இந்தியா தன் முன்னெடுப்புகளை நேரடியாக செய்ய வில்லை. நம் கம்பெனிகள்தான் அங்கு முதலீடு செய்கிறார்கள். ஆகவே, சீன அரசு சாலைகள், விமான நிலையங்கள் போன்றவற்றையும் சில ஆப்பிரிக்க நாடுகளில் இலவசமாக செய்து தருகிறது. ஆனால் இதற்கு பதிலாக அந்நாட்டின் இயற்கை வளங்களை பல சகாப்தங்களுக்கு குத்தகைக்கு எடுத்து கொள்கிறது.
இக்கட்டுரைக்கு விஷயம் வர்த்தகம் அல்ல. மாறிவரும் உலக பொருளாதார முன்னெடுப்புகளில் மற்ற நாடுகளுடன் வர்த்தகம் என்பது இன்றியமையாத ஒன்றுதான். “Devil is in the details” என்று கூறுவார்களே! அதைப்போல் ஆப்பிரிக்க அரசாங்கங்களுக்கும், இந்திய கம்பெனிகளுக்கும் ஏற்படும் உடன்பாடுகள் மறைமுகமாக இல்லாமல் வெளிப்படை தன்மையுடன் அமைய வேண்டும் என்பதைத்தான் இக்கட்டுரை சுட்டி காட்ட விரும்புகிறது.
சீனாவின் சுரண்டல் ஆரம்பித்தாகி விட்டது:-
ஸூடான் போன்ற நாடுகளில் நிலவி வரும் உள்நாட்டு பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல், அங்கு நிலவும் மனித உரிமை மீறல்களைப்பற்றி லவநேசமும் கவலைப்படாமல் தன் நாட்டு கம்பெனிகளின் மூலம் ஸூடானின் பல இடங்களில் எண்ணெய் மற்றும் எரிசக்தியை சீனா தோண்டி எடுத்து இறக்குமதி செய்து கொள்கிறது.
மேலும் பல ஆப்பிரிக்க நாடுகளில் விவசாயம், துறைமுக கட்டமைப்பு போன்றவற்றில் சீனா பெரிதான ஆர்வம் காட்டுகிறது. தன் நாட்டு கம்பெனிகளால் உருவாக்கப்படும் எந்த கட்டமைப்பிலும் சீனர்கள் மட்டுமே வேலை செய்வதை உறுதிப்படுத்துகிறது.
2006 நிலவரப்படி 49 ஆப்பிரிக்க நாடுகளில் 900 சீன கம்பெனிகள் செயல் பட்டு கொண்டிருக்கின்றன. பெரும்பாலானவை எண்ணெய், கனிமவளம் சார்ந்தவையே!. ஆனாலும் மக்களின் நலனையும் கருத்தில் கொள்கிறோம் என்பதை வெளிப்படுத்த மற்ற துறைகளிலும் சீன அரசு முதலீடு செய்கிறது. அவர்களின் நோக்கம் இயற்கை வளம் என்பது வெளிப்படையான இரகசியம்.
இன்னொரு பரிமாணத்தையும் இங்கு கவனிக்க வேண்டும். முற்காலத்தில் ஏழை நாடுகள் கடன் வாங்க IMF, World Bank போன்ற நிறுவனங்களை நாடின. கடன் கொடுப்பதற்கு முன் அந்நாடுகளின் மனித உரிமை நிலவரங்களும் கணக்கில் கொள்ளப்பட்டன. என்னதான் அமேரிக்கா ஒழிக என்றாலும், சட்டதிட்டங்களாவது இருந்தன. ஆனால் தற்பொழுது சில ஆப்பிரிக்க நாடுகள் சீனாவிடமிருந்து நேரடியாக கடன் பெறுகின்றன. மேலும் மனித உரிமை போன்றவற்றை சீனா கண்டு கொள்ளாது. ஆகவே சர்வாதிகாரிகளை கொண்ட சூடான், ஜிம்பாப்வே போன்ற நாடுகள் கூட சீனாவிடமிருந்து கடன் பெறுகின்றன.
இந்தியாவின் சுரண்டல் இப்பொழுதுதான் ஆரம்பமாகியுள்ளது:- எத்தியோப்பியாவில் இந்திய விவசாய கம்பெனிகள் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை 40 அல்லது 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளன. நம் கம்பெனிகளுக்கும் எத்தியோப்பிய அரசாங்கத்திற்கும் ஏற்பட்டுள்ள உடன்படிக்கைகள் நம்மை திகைப்புக்கு உள்ளாக்கும்.
- 40 சதவிகித தொழிலாளர்களை நம் கம்பெனிகள் இந்தியாவிலிருந்து தருவித்து கொள்ளும்.
- அந்த நிலங்களிலிந்து கிடைக்கும் விளை பொருட்கள், தானியங்களோ அல்லது வேறு விவசாய பொருட்களோ ஏற்றுமதி (இந்தியாவிற்கு) செய்யப்படலாம்.
ஆனால் நடைமுறையில் இந்த கட்டுபாடுகளை நம் கம்பெனிகள் அனுசரிப்பதில்லை. நம் நாட்டை விட பெரிய அளவில் ஊழல் மலிந்து உள்ளதால், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு, இந்தியாவிலிந்து 60 முதல் 70 சதவிகிதம் வரை தொழிலாளர்கள் தருவிக்கப்படுகிறார்கள். தொழிலாளர்களை வேலை வாங்கும் அதிகாரிகள் எத்தியோப்பியாவில் கிடைப்பதில்லை என்பது உண்மை என்றாலும், கீழ்மட்ட வேலைகளுக்கு கூட இந்தியர்களை தருவித்து விட்டால் எத்தியோப்பிய கருப்பர்களுக்கென்று இந்த உடன்பாட்டால் ஒரு பயனும் இல்லை.
அதிகாரிகளும், தொழிலாளர்களும் இந்தியர்கள். பெரிய அளவில் வேலை வாய்ப்பு எத்தியோப்பியர்களுக்கு கிடைக்க போவதில்லை. அந்த நிலங்களின் உரிமையும் எதார்த்தத்தில் கருப்பர்களின் கைகளிடமிருந்து இந்திய கம்பெனிகளுக்கு கிடைத்து விடுகிறது. மேலும் முத்தாய்ப்பாக உற்பத்தி பொருட்கள் எத்தியோப்பியர்களுக்கு உபயோகப்படாமல் ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகின்றன.
ஒரு இந்திய கம்பெனியின் முதலாளி இதை நியாயப்படுத்தி ஒரு கருத்தை கூறுகிறார். அவரின் கம்பெனி ரோஜா பூக்களை பயிரிட்டு ஏற்றுமதி செய்வதாகவும், பல வகையான வரிகளை எத்தியோப்பிய அரசாங்கத்திற்கு கட்டுவதாகவும் தெரிவித்தார். இந்த வரிவருமானம் அந்நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்கிறார். ஆனால் ஆப்பிரிக்க அரசாங்கங்களின் இலட்சணம் நமக்கு தெரியும். வரி வசூல், கருப்பு தலைவர்களின் ஸ்விஸ் வங்கி கணக்கிற்கு செல்லுமே தவிர மக்களுக்கா செலவாகப் போகிறது?
இந்திய-அமேரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை தொடர்ந்து, அணு உலை விபத்து இழப்பீடு மசோதா நிறைவேறும்போது வாய் கிழிய கத்திய இந்திய கம்யூனிஸ்டுகள், இந்திய கம்பெனிகள் ஆப்பிரிக்காவில் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை விமர்சிக்க முன்வருவதில்லை.2010லும் அதே புளித்துப்போன “அமேரிக்கா இந்தியாவை அடிமைபடுத்தி விடும்” என்ற வெற்று கோஷங்கள்.
சில மாதங்களாக எத்தியோப்பிய உள்ளூர்வாசிகள் இந்திய கம்பெனிகளை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்கள். இந்திய அரசு விழித்து கொள்ள வேண்டிய தருணம் இது. இந்த எதிர்ப்பை முன் நின்று நடத்தி வரும் தலைவர் இந்திய கம்பெனிகளின் செயல்களை பற்றி விமர்சிக்கும் போது “It is Ethiopia’s biggest land grab” என்றார்.
ஒரு பத்திரிகையில் வந்த இரு வாக்கியங்களை நான் கீழே தருகிறேன்.
“New Delhi, troubled by lack of farmland at home (India), is encouraging Indians to buy mega farms across Africa”.
ஐக்கிய நாடுகள் சபையின் கருத்து- “Unsurprisingly, locals aren’t too happy about this.In fact, even the United Nations (UN) agrees, deals are being signed with little public input, and local ministers promising just about anything”.
சில எலும்புத்துண்டுகளை கருப்பு தலைவர்களுக்கு போட்டு விட்டு பெரும்பான்மையான ஆப்பிரிக்க கருப்பர்களின் சாரத்தை உறிஞ்சுவதை காலனித்துவ மனநிலையாக ஏன் பார்க்க கூடாது? கிழக்கிந்திய கம்பெனியை இன்று வரை விமர்சனம் செய்து வரும் நாம் அந்த சுரண்டலை நாமே வேறு வழியில் புதுமையாக செய்வதை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? 200 வருடங்களுக்கு முன் குறுநில மன்னர்கள் பலருக்கு எலும்பு துண்டுகளை போட்டு விட்டு, நம் நாட்டின் மொத்த வளத்தையும் சுருட்டிய பிரிட்டிஷாரின் யுக்திதான் எனக்கு ஞாபகம் வருகிறது. மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டியா?
நம் வளர்ச்சிக்கு முதிர்ச்சி அவசியம்:
1990களின் ஆரம்பத்தில் இந்தியா சந்தை பொருளாதார முறைகளை அனுசரிக்க ஆரம்பித்தது. அதன் ஒரு பகுதியாக நாடெங்கிலும் தொலைத்தொடர்பு சேவைகளை அளிக்க தனியாருக்கும், வெளிநாட்டவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்டுகள் அப்பொழுது அளித்த விளக்கங்களை நினைத்தால் இப்பொழுதும் சிரிப்பும் கோபமும் வரும். “இந்திய இரகசியங்களை வெள்ளைக்காரர்கள் ஒட்டு கேட்டு இந்தியாவை அழித்து விடுவார்கள்” என்றெல்லாம் கூறியதை நாம் நினைவு படுத்தி கொள்ளலாம்.
இந்தியாவின் ஒரு தனியார் தொலைதொடர்பு கம்பெனி தற்பொழுது ஆப்பிரிக்க கென்யாவில் தடம் பதிக்க முயல்கிறது. டாடா கம்பெனி, பிரிட்டனில் ஜேகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) கம்பெனியை வாங்கியுள்ளது. வங்கிகள், காப்பீடு, தொலைத்தொடர்பு, கணிணி என்று அனைத்து துறைகளிலும் இன்று இந்திய கம்பெனிகள் உலகம் முழுவதும் பல கம்பெனிகளை வாங்கி உள்ளன. (அமேரிக்காவிலும்தான்).
இப்படிப்பட்ட இரட்டை நிலைகளை கம்யூனிஸ்டுகள் மட்டுமல்லாது சாதாரண இந்தியர்களும் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இக்கட்டுரைக்கு விஷயம்.
உலக சந்தை பொருளாதார முறையில் இனி நாம் தனியாக வாழ்வது சாத்தியமே இல்லை. இனிவரும் காலங்களில் நம் சமூகம் முதிர்ச்சியை அடைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தார்மீக நெறிமுறைகள்:-
இந்தியர்கள் தங்களை தார்மீக நெறிமுறைகளில் (Moral High Ground) மற்றவர்களை விட பல மடங்கு உயர்ந்தவர்கள் என்று வரலாற்று ரீதியாகவும், தற்காலத்திலும் கூட கூறி வருகிறார்கள். இதற்கு வலு சேர்க்க பல ஆதாரங்களை முன்வைக்கிறார்கள். முக்கியமான சிலவற்றை பார்க்கலாம்.
- இந்தியர்கள் எந்த நாட்டுடனும் போரிட்டதில்லை. இன ஒழிப்புகளில் பங்கு வகித்ததில்லை.
- அகிம்சையை உலகிற்கு சொல்லிக்கொடுத்த, செய்தும் காண்பித்த நாடு இந்தியா
- ஒடுக்கப்பட்ட இனங்கள் இந்தியாவில் அடைக்கலம் பெற்று அவர்கள் தனித்தன்மையுடன் வாழ அனுமதிக்க பட்டனர். உதாரணமாக ரோமானியர்களால் துரத்தப்பட்ட யூதர்கள். ஈரானிலிருந்து துரத்தப்பட்ட பார்ஸிகள் இந்தியாவில் அடைக்கலம் பெற்று இன்று வரை தங்கள் மதநம்பிக்கை மற்றும் கலாச்சாரத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.
- மனிதர்களே மனிதர்களை அடிமைப்படுத்தும் முறையை இந்தியர்கள் ஆதரித்ததில்லை.
இக்கட்டுரையை படிக்கும் பெரும்பாலானோர்க்கு, என்னையும் சேர்த்து, மேற்கூறியவற்றில் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால் இந்த கட்டுரையில் இது வரை முன்வைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த தார்மீக உயர் நிலை சுதந்திர இந்தியாவில் நம்மால் முழுமையாகக் கடைபிடிக்கப் படவில்லை என்பதே என் அபிப்பிராயம்.
முடிவுரை:
போக்குவரத்து சந்திப்புகளில் மூன்று நிற விளக்குகளும் அவற்றுக்குறிய விளக்கங்களும் இருக்கும். “நில்,கவனி,செல்”. ஆப்பிரிக்காவில் இந்தியா தன் முன்னெடுப்புகளை அவதானித்து தவறுகளை சரி செய்து கொண்டு பின் பயணத்தை தொடர வேண்டும் என்பதே சரியான வழிமுறையாக இருக்க முடியும்.
- மேற்கத்திய நாடுகள் செய்தவை பெரும்பாலும் தவறுகள்தான். ஆனால் கம்யூனிஸ்டு நாடுகள் செய்தவை பெரும்பாலும் அட்டூழியங்களே!
- ராஜ தந்திரங்களும், தார்மீக நெறிமுறைகளும் ஒருசேர பின்பற்றப் படுவது சாத்தியமல்ல. இது யதார்த்தம். ஆனால், இந்தியாவும் அமேரிக்காவை போன்றே பல தவறுகளை செய்துள்ள நிலையில் எதற்கெடுத்தாலும் “அமேரிக்காதான் காரணம்” என்று கூறும் மனநிலையிலிருந்து நாம் மாற வேண்டும்.
- நம் வருங்கால சந்ததியினர் “சீனா அட்டூழிங்களை செய்தது, அதை தொடர்ந்து எங்கள் முன்னோர்களும் செய்தார்கள்” என்ற நொண்டி சாக்கை கூற வேண்டிய நிலையில் இருக்க கூடாது.
- கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் வரலாற்று ரீதியாக கீழ்தட்டு மக்களை அடிமைபடுத்தியது பற்றி இன்றும் பதில் கூறி கொண்டிருக்கிறார்கள். குறுகிய கால இலாபங்களுக்காக, நம் சந்ததிகளுக்கு அது போன்ற சங்கடமான நிலையை நாம் ஏற்படுத்துவது நம் கலாச்சாரத்திற்கே கருப்பு புள்ளியாக உருவெடுத்து விடும்.
- இந்தியா மியன்மாரில் செய்ய ஆரம்பித்திருப்பது வரலாற்று தவறே!. அமேரிக்கா வெனிசுவேலாவுடன் கொண்டுள்ள உறவை கவனித்து நாம் கற்று கொள்ளலாம். வெனிசுவேலா தன் எண்ணெய் வளத்தில் 30% மேல் அமேரிக்காவிற்குதான் ஏற்றுமதி செய்கிறது. ஆனால் அமேரிக்காவிற்கும் வெனிசுவேலாவிற்கும் நல்ல ராஜ்ஜீய உறவுகள் கிடையாது. ஹ்யூகோ சாவேஸ் நாள்தோறும் அமேரிக்காவை விமர்சித்து அறிக்கை அளிப்பார். வர்த்தகத்தை செய்து கொண்டே தார்மீக நெறிகளையும் அனுசரிக்க முடியும் என்பதற்கு அமேரிக்க-வெனிசுவேலாவின் உறவே சான்று.
- ஆப்பிரிக்காவில் இந்தியா கனிம வளங்களையும், எண்ணெய் வளங்களையும் தனதாக்கிக் கொள்ளட்டும். அது தவறல்ல. ஆனால் அந்த வர்த்தக இலாபத்தின் கணிசமான பகுதி ஆப்பிரிக்க கருப்பர்களுக்கும் செல்ல வேண்டும் என்பதை இந்தியா உறுதி படுத்த வேண்டும். தவறுகளை திருத்திக்கொள்வது நம் எதிர்காலத்தில் நம் சந்ததிகள் நிம்மதி பெருமூச்சு விட உதவியாக இருக்கும். நம் கலாச்சாரத்தின் பழம்பெருமைகளுக்கு முட்டு கொடுப்பதற்கும் தோதாக இருக்கும்.
- எதிர்காலத்தில் தார்மீக உயர்நிலை என்னும் வரலாற்று பெருமை இந்தியாவுக்கு கிடைக்காது. ராஜ தந்திரம் என்ற ரீதியில் இன்றும் நாளையும் ஒரு சில விதிமீறல்களை செய்துதான் தீர வேண்டியிருக்கும். அவை கம்யூனிஸ்டுகளின் அட்டூழியங்களின் அளவுக்கு செல்லக்கூடாது என்பதே என் பிரார்த்தனை.
இக்கட்டுரை இந்தியா அண்டை நாடுகளில் செய்த செயல்களை கேள்விக்கு உட்படுத்த எழுதப்பட வில்லை. இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பை” கேள்விக்கு உட்படுத்துவதற்காக எழுதப்பட்டது. 20ம் நூற்றாண்டின் கடைசியில் பேசப்பட்ட வாக்கியம். “அடுத்த நூற்றாண்டு ஆசியாவிற்கு”. ஆனால் பேசப்படாதது அடுத்த நூற்றாண்டின் பலிகடா-ஆப்பிரிக்கா.
(முற்றும்)
well said mr Balaji
அமேரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை தடுக்க கம்யுனிஸ்ட்கள்வானளாவ எகிறி குதித்ததையும் ,ஆட்சிக்கவிப்பு முயற்சியில் ஈடு பட்டதையும் நாடு அறியும் .இதுவே அமேரிக்கா அல்லாமல் ரசியாவுடன் என்றால் சந்தோசத்துடன் ஆதரித்திருப்பார்கள் .தொட்டதற்கெல்லாம் ”அமெரிக்காவால் ஆபத்து ” என்று குதிப்பவர்கள் ,”என்ன ஆபத்து ”?என்று கேட்டால் மட்டும் சரியான விளக்கமளிக்க மாட்டார்கள் .இதை தான் ,திரு .பாலாஜி ,கம்யுனிஸ்ட் நாடுகள் உடைத்தால் மண் குடம் ,அமெரிக்கா உடைத்தால் பொன் குடமென்று குறிப்பிடுல்லாரோ?
Dear Sir,
//ஒடுக்கப்பட்ட இனங்கள் இந்தியாவில் அடைக்கலம் பெற்று அவர்கள் தனித்தன்மையுடன் வாழ அனுமதிக்க பட்டனர். உதாரணமாக ரோமானியர்களால் துரத்தப்பட்ட யூதர்கள். ஈரானிலிருந்து துரத்தப்பட்ட பார்ஸிகள் இந்தியாவில் அடைக்கலம் பெற்று இன்று வரை தங்கள் மதநம்பிக்கை மற்றும் கலாச்சாரத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.
//
To this you should also include the Tamil Nadu marikayars.
Tamil Nadu Marikayars were driven out of Arabia during the Caliph Abdel Malik bin Marwan’s tyrannical rule during 8th century.
Tamil Nadu Maraikayar muslims are also thus benefitted of the India’s magnanimity towards the people who come from different countries.
கட்டுரையாளர் இந்தியா என்று குறிப்பிடுவது சோனியா காந்தி போன்ற மேல்நாட்டவர்களையும் அப்படிப்பட்ட அந்நியர்களுக்கும் இத்தாலியர்களுக்கு மயங்கவைக்கும் மற்றும் மயங்கிக்கொண்டிருக்கும் மாக்களை என்றால், இந்தியா அதுவன்று. பிறந்துவிட்டோமே என்று வாழ்ந்துகொண்டிருக்கையில், மரியாதைக்காக வயிறு வளர்க்கும் மக்களைக்கொண்டதுதான் இந்தியா. மற்றவர் வயிற்றில் அடிக்கும் வேலையையோ வியாபாரத்தையோ செய்யும் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்தவுடன், ஐ நா
பாதுகாப்பு மன்றத்தில், வோட்டுரிமைபெற்று, ஆப்பிரிக்காவை அடிமைப்படுத்த நினைப்பது இத்தாலிய சோனியாவும் அவளின் கைகூலிகளும் தாம். இந்தியா ஒன்றும் சொநியாகந்திகளின் தாய்நாடோ, கைக்கூலி நாடோ அல்ல.
//ஆனால் ஆப்பிரிக்க அரசாங்கங்களின் இலட்சணம் நமக்கு தெரியும். வரி வசூல், கருப்பு தலைவர்களின் ஸ்விஸ் வங்கி கணக்கிற்கு செல்லுமே தவிர மக்களுக்கா செலவாகப் போகிறது?//
இது ஈத்தியோப்பியர்கள் படவேண்டிய கவலை. முதலீடு போட்டுத் தொழில் செய்பவன் அந்த நாட்டு நிர்வாகத்தையும் சேர்த்துக் கவனிக்க முடியாது. தொழில் செய்பவன் வேலை தரலாம், வரி கட்டலாம். அந்தப் பணம் அந்நாட்டு மக்களுக்குப் போகிறதா, தலைவனின் தனிக்கணக்குக்குப் போகிறதா என்பது தொழிலதிபர்களின் கவலை கிடையாது. சில வேலைகளுக்காவது அந்நாட்டு மக்களைப் பணியமர்த்துவதன் மூலம் சற்றே அந்நாட்டுப் பொருளாதாரத்தினை உண்மையான வளர்ச்சிக்கு உட்படுத்தலாம்.
பகுத்துண்டு ஆப்பிரிக்கவி லோம்புதல் தொழில்
நியதிகளி லெல்லாம் தலை.
அதற்காக ஆப்பிரிக்க அரசாங்கத்தின் செயல்பாடுகளில் தலையிட்டு மக்கள் நலம் பேண உழைத்தாலும் என்ன பெயர் மிஞ்சும்? இந்தியா ஆப்பிரிக்க நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுகிறது என்பதே! சில CSR initiatives எடுக்கலாம். ஆனால் ஒரு அரசியல் விளையாட்டு இதைத் தடுக்கிறது.
ஈத்தியோப்பியாவில் சீனா இந்திய எதிர்ப்பைக் கிளப்பிவிட்டுத் தன் முதலீட்டையும் வணிக நிலையையும் பலப்படுத்திக் கொள்ளப் பார்க்கலாம். பதிலுக்கு இந்தியா சீன எதிர்ப்பை ‘ரா’வாகக் கையிலெடுக்கலாம். அது மூலமாக ஆப்பிரிக்க அரசாங்க நடவடிக்கைகள் நமக்குச் சாதக பாதகங்களுடன் நெறிப்படுத்தப் படலாம். இரண்டாவது பனிப்போர் என்று அது வரலாற்றில் வர்ணிக்கப்படலாம்.
வெனிசூயலா-அமெரிக்கா ராஜ்ஜிய உறவு, வர்த்தக உறவு பற்றிய reference கவைக்குதவாதது. ஹூகோ சாவேஸ் அரேபிய அடிமைக்குதிரை என்பது தகவலறிந்த புத்திசாலிகளின் (intelligentsia) தெளிபு. அவர் வாய்ச்சொல் வீரரன்றி வேறில்லை என்பது வரலாறு.
சீனக்கம்யூனிஸ்டுகள் போல தொழிலாளர் நலம் ஓங்குக என்று கூவிவிட்டு, கூலிகூடக் கொடுக்காமல் கூத்தடிப்பதை நம் கம்பெனிகள் செய்யா. கொடுக்கிற கூலி கூரையைப் பிய்க்காதே தவிர பிய்ந்த கூரைக்கு ஒட்டுப் போடவாவது உதவும். நாம் ஒட்டச் சுரண்டி அடுத்தவனை ஓட்டாண்டியாக்க மாட்டோம். அமேரிக்க எதிர்ப்பை எதிர்ப்பதற்காக இந்தியாவும் சுரண்டல் குட்டையில் ஊறிய மட்டை என்பது போலப் பேசுவது நடைமுறைக்கொவ்வாத வாதம்.
பாலாஜி! தங்களின் கட்டுரையில் தன்னைத் தானே குற்றவாளியாக்கும் ஒரு காந்தியத் தன்மை தென்படுகிறதே! அமெரிக்க எதிர்ப்பு தவறு என்று சொல்லப் பல காரணங்கள், வாதங்கள் இருந்தும், ‘நீ குற்றவாளி! அமெரிக்கனை எப்படித் தப்புக்காரன் என்று சொல்வாய்’ என்று கேட்பது கட்டுரையின் நோக்கத்தைக் கேள்விக்குறியாக்குகிறது.
மணிசங்கரய்யர் கட்டுரை எழுதுவது போல நன்றாக ஆரம்பித்தும், சொல்ல வந்ததைச் சொல்லாமல் உலகையெல்லாம் சுற்றி வந்து, ஆதலால் அமெரிக்கவை எதிப்பது தவறு என்று முடித்துவிட்டீர்கள். இந்தியத் தொழில் விஸ்தரிப்பு முறையை எதிர்க்கிறீர்களா, அமெரிக்க எதிர்ப்பை எதிர்க்கிறீர்களா என்று பார்த்தால், பாதிக்கும் மேலே இந்தியா மட்டுமென்ன யோக்கியமா, அமெரிக்கா செய்தால் மட்டும் தப்பா என்கிறீர்காள்.
இந்தியர்களின் அமெரிக்க எதிர்ப்பு என்பது சோவியத் ஆதரவு என்ற தளத்தின் மீது கட்டப்பட்ட கலம். தளம் களங்கமானது என்பதைச் சொல்ல வந்த நீங்கள், விலகி வெகுதூரம் போய்க் கலத்தில் நிற்பவன் யோக்கியனில்லை என்று பேசியிருப்பது சரியான வாதமல்ல. Yours is an argument based on the right logic, but built up on shaky grounds.
Thanks Mr Arun Prabhu, you have put it very nicely. The author is not addressing the issues raised reg America’s atrocities of the past and present. He is magnifying India’s role in Africa. He fails to note that it is not the Government of India but private companies who are exploiting the Africans.It is not the job of India to oversee these corrupt practicies.
“மேற்கத்திய நாடுகள் செய்தவை பெரும்பாலும் தவறுகள்தான். ஆனால் கம்யூனிஸ்டு நாடுகள் செய்தவை பெரும்பாலும் அட்டூழியங்களே”
I am as much against Communisim as the author but I fail to see how Mr Balaji arrived at this conclusion.
Can the author enlighten us on any incidence of genocidal activities carried out by India ?Slavery?Nuking civilians? Using uranium depleted weapons? agent Orange?
“இந்தியாவும் சீனாவும் பொருளாதார நிலையில் அடைய விரும்புவது வளர்ச்சியை அல்ல, மாபெரும் வளர்ச்சியையும் அல்ல. அசுர வளர்ச்சியை. ஆப்பிரிக்காவில் அசுர வேள்வி ஆரம்பித்திருக்கிறது. ஆப்பிரிக்காவின் இயற்கை வளம் இந்திய, சீன வளர்ச்சிக்கு ஆஹுதியாக அளிக்கப்படுகிறது.”
இது சீனாவைப்போருத்தவரை உண்மைதான்.ஆனால் இந்தியாவைப்பற்றி எழுதியிருப்பதில் சிறிதும் நியாயம் இல்லை. இந்தியாவை இன்றைக்கு நடத்துபவர்கள் இந்தியா வளர வேண்டும் என்று நினைக்கவில்லை. தங்கள் நாட்டின் வளங்களை சுரண்டி காத்திருக்கும் வேற்று நாடுக்கழுகுகளுக்கு விற்று தங்கள் பரம்பரைக்கு மேலும் மேலும் பற்பல ஆயிரங்கோடிகள் சேர்க்கும் வெறி மட்டுமே – அவர்கள் எதை செய்தாலும் அதுவே அவர்கள் நோக்கம். இந்திய உயர வேண்டும் , உலக அரங்கில் பேர் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் காமன் வெல்த் விளையாட்டை விளையாட்டாக நடத்தி பணம் சுருட்டி இருப்பார்களா ?
சீன நடத்திய ஒலிம்பிக் போட்டிகள் தரம் எங்கே , இந்த வெட்கக்கேடு எங்கே?
தங்கள் பெருகும் மக்கட்தொகையை பற்றி யோசிப்பவர்கள் தங்கள் நாட்டின் பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் சதுர ப்பரப்பை அடுத்தவர்களுக்கு தாரை தான் வார்ப்பார்களா ?
இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிடுவதே அடிப்படை தவறு.
இந்தியாவின் பல உயிர்களைக்குடித்தும் இன்னும் கேட்கும் அண்டை நாட்டுக்கு மாத மாதம் பென்ஷன் கொடுப்பது யார்? அவர்கள் அப்படி செய்வது silent அட்டூழியம் இல்லையா?
அப்படிப்பட்ட காரியங்களை இந்திய அரசு செய்கிறதா?
கம்யூனிஸ்டுகள் மோசம்-அதற்கென மற்ற மோசங்களை கண்டு கொள்ளாமல் விட முடியுமா?
arun prabhu:
//இந்தியாவின் சுரண்டல் இப்பொழுதுதான் ஆரம்பமாகியுள்ளது//
பாலாஜி: அரசு இதை வலுக்கட்டாயமாக செய்யாத வரையில் இந்தியாவின் சுரண்டல் என்று கூறுவதை ஏற்கமுடியாது
இந்திய வணிக நிறுவனங்கள் செய்வதை இந்தியா செய்கிறது என்று கூறவேண்டாம் என நினைக்கிறேன். வணிக நிறுவனங்கள் உலக மயமாய்விட்டன அவர்களுக்கு ஒரு இந்திய முகம் என்று ஒன்று உண்டா என்பதே கேள்வி குறி !! (இந்தியா தேர்தல் பின்னணியில் அவர்கள் முதலீடு இருக்கிறது என்பது பரவலான கவனுத்துக்குரிய விஷயம் )
அமெரிக்கா ஈராக் விஷயம் அப்படி இல்லை
//பாலாஜி! தங்களின் கட்டுரையில் தன்னைத் தானே குற்றவாளியாக்கும் ஒரு காந்தியத் தன்மை தென்படுகிறதே! //
இதை ஏன் இப்படி பார்க்ககூடாது ?
நாம் ஒரு பக்கம் “உலகுக்கே வழிகாட்டி என்றும் குரு தேசம் ..” என்றும் சொல்கிறோம், அந்த பெயருக்கு வருங்காலத்திலும் தகுதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பார்ப்பதாக இருக்க கூடாதா?
நன்றி,
சஹ்ரிதயன்
ஆசிரியர் போபாலில் அமெரிக்கா பண்ண அட்டுளியத்தை மறந்து விட்டார் போலும். இல்லை இந்திய உயிர் முக்கியம் இல்லை என்று நினைத்து விட்டாரோ? இதே கட்டுரையi வேறு மதத்தை சேர்ந்தவர்கள் எழுதியிருந்தால் அவர்களை நாட்டை விட்டு வெளியேற சொல்லி ஒரு பெரிய கூட்டமே இங்கு மறுமொழி இட்டிருக்கும்.
Enna solla vareenkha… first let us discuss what Indian companies are destroying with in India itself… eg: Vedantha group thro sterlite destroyed Tuticorin area.. next today big fight with Adivasi and Vedantha group thro Govt in the name of naxal eradication for bauxite and iron ore.. first try to protect our own Agri land… innum British karan pottu vecha blue pirnt for various dams across cauvery river implement pannale pothum….
பாலாஜி
ஆப்பிரிக்க நாடுகளில் பாரதம் சுரண்டுகிறது என்று எழுதியுள்ளீர்கள். சீனாவும் தான். ஆனால் அங்கே சுரண்டிய தாதுக்களும் எந்த சந்தையை நோக்கி செல்கின்றன ?
பாரதமும், சீனாவும் தற்போது ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரங்கள் ஆகி விட்டன. நம் உற்பத்தி பெரும்பாலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கே ஏற்றுமதி ஆகின்றது. அதுவும் அமெரிக்காவின் விஷயம் தனி. டாலரின் இன்றைய உண்மை மதிப்பு அமர்த்தியா சென்னில் இருந்து பிரணாப் முகர்ஜி வரை யாருக்கும் தெரியாத சிதம்பர ரகசியம். எழுபதுகளில் நிக்சன் காலத்தில் தங்கள் தங்கம் கையிருப்பை வெளியிடுவதில்லை என்ற அமெரிக்க முடிவால் இந்த நிலைமை.
எந்த ஒரு நாடும் தன தங்கம் கையிருப்பை வைத்தே காகித நோட்டுகளை அச்சடிக்கிறது. ஏனென்றால் பணம் என்பது “an objective value for gold ” ஆகும். அமெரிக்காவின் இந்த இருட்டடிப்பு செயலால் அதன் நாணய மதிப்பு யாருக்கும் தெரியாது. வல்லான் வகுத்ததே வாய்க்கால் ஆதலால், அதை தட்டிக் கேட்ட அனைவரும் அதோகதியாகி விட வேண்டியது தான்.
தன நாணயத்தை எப்போதும் புழக்கத்திலும் , தேவையிலும் வைத்திருக்க அமேரிக்கா கையாண்ட இன்னொரு உத்தி எண்ணெய் விற்பனைக்கு டாலரைத் தவிர வேறு நாணயம் பயன் படுத்தக் கூடாது என்ற நிர்ப்பந்தம். அண்டை நாடுகள் எண்ணெய் விற்று வாங்கிக் கொண்டாலும் , ந்யூ யார்க்கிலோ அல்லது லண்டனிலோ உள்ள எண்ணெய் மாற்று சந்தையில் தான், அதுவும் டாலரில் தான் வியாபாரம் செய்ய வேண்டும்.
இதற்கெல்லாம் ஆமாம் போடும் ஊழல்வாதிகள் மற்றும் கொடுங்கோலர் களையே அராபிய மற்றும் ஆப்பிரிக்காவில் ஆட்சியில் அமர வைத்திருக்கிறது. ஐ நா வின் ‘உணவுக்கு எண்ணெய் ” திட்டத்தில் சதாம் ஹுசைன் எண்ணெய்யை வேற்று நாட்டவர்க்கு பண்ட மாற்று முறையில் விற்கத் தீர்மானித்தது தான் அவரது நீக்கம் மற்றும் கொலைக்குக் காரணம்.
பாரதம் என்றுமே தன் உண்மையான உன்னதமான வரலாற்றை அறிந்து விடக் கூடாது என்பதில் கவனமாக உள்ள அமேரிக்கா ரொமிலா தாபர் போன்ற புழுகு சாக்கடைகளை தன் பல்கலைக்கழகங்களில் ஒன்றில் உயர்ந்த நாற்காலியில் அமர வைத்திருக்கிறது. ரோமிலாவுக்கு சாதாரண இந்தியனின் ஆய்ந்தறியும் திறன் கூட கிடையாது என்பது பிரசித்தம். என்றும் இந்தியன் தன் பெருமையை மீண்டும் நிலை நாட்டி விடக்கூடாது என்பதில் அமெரிக்காவுக்கு அவ்வளவு குறி. அதையும் மீறி இந்தியாவும் சீனாவும் வளர்வதை அது கவலையோடே நோக்குகிறது.
இந்தியாவை மட்டம் தட்ட அது கண்டு வைத்துள்ள வழி, தோற்றுப் போன நாடான பாகிஸ்தானுடன் ஒப்பிடுவது. அறுபது வருடமாக அது செய்து வருவது இதைத்தான். பாக்குடன் போர் தொடுக்காமல் இந்தியாவை அடக்கி வைக்கச் செய்து நம்மை மழுங்கச் செய்து , அதே வேலையில் பாக் கை நம்பாமல் அதனை உள்ளடி வேலை செய்து கவிழ்ப்பதிலும் அமேரிக்கா முனைப்புடன் இயங்கி வருகின்றது.
இந்திய மற்றும் பாக் மக்கள் எல்லையை மட்டும் நீக்கி விட்டால் ஒரே இனம் , ஒரே ரத்தம். இவர்களுக்குள் நிரந்தர பகை ஏற்படவும், அதன் மூலம் தெற்கு ஆசியாவை பதட்டம் மிகுந்த பகுதியாக்கி, இரண்டு நாடுகளுக்கும் ஆயுதம் கொடுத்து தன் அஆத நிறுவனங்களுக்கு பெரும் லாபமும் ஈட்டித்தருகிறது.
அமேரிக்கா இப்போது நமக்குத் தேவை. அந்த மட்டில் அதனை பயன்படுத்திப் பின்பு அதனை எரிந்து விட்டுப் போக வேண்டியது தான்.
திரு.நெடியோன் குமரன் அவர்களுக்கு,
நன்றி.சில விஷயங்களை நான் கூற விரும்புகிறேன்.
(1)அமேரிக்காவின் உதவி இந்தியாவிற்கு கண்டிப்பாக தேவை. இது
எதார்த்தம். உலகின் கிறிஸ்தவ, யூத, ஹிந்து இனங்களை வேரறுக்க முயலும்
தாலிபான்களின் கொட்டத்தை அடக்க இந்தியாவால் (தனியாக) முடியாது.
அந்த இயக்கங்கள் நடக்க தேவைப்படும் பணம் அயல் நாடுகளிலிருந்து
வருகிறது. மேற்கத்திய நாடுகளின் தனியார் வங்கிகளின் உதவி இருந்தால்
மட்டுமே நம்மால் அதை ஒரு கட்டுக்குள் கொண்டு வர முடியும். உள்நாட்டில்
எடுக்கும் நடவடிக்கைகள் இரண்டாம் பட்சமே. வேர் வெளிநாட்டு பணம்தான். அடுத்து நம் மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட நமக்கு
மேற்கத்திய அறிவுசார் தொழில்நுட்பம் அவசியம் தேவை. இதற்கும் நாம்
அமேரிக்காவையும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளையும் நம்பி இருக்கிறோம். Jingoistஆக இந்தியாவால் தனியாக எதையும் செய்ய முடியும் என்று கூற நான் குழந்தை இல்லை.
(2)வரலாற்று ரீதியில் அமேரிக்கா புரிந்த இனப்படுகொலைகளை நான்
மறுக்க வில்லை. ஆனால் வரலாற்றை மட்டுமே கணக்கில் கொண்டு நாம்
வேறு ஒரு உலகத்தில் வாழ முயல்வது சிறுபிள்ளைத்தனமானது.
ஆப்கானிஸ்தானில் முதலில் சோவியத் யூனியனிற்கும் பிறகு தற்பொழுது
அமேரிக்காவிற்கு கிடைக்கும் அடிகள் வருங்காலத்தில் காலனீய
ஆதிக்கம் ஏற்படும் வாய்ப்பை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டு வந்து
விட்டன. காலனி ஆதிக்கம் ஏற்படாதே தவிர சுரண்டல் என்பது மனிதகுலம் உள்ளவரை இருந்து கொண்டுதான் இருக்கும். Whether we like it or not, Whether we accept it or not. அந்த பச்சையான சுரண்டலை கூட நாம்
ஆரம்பித்திருப்பதை நோக்கும் போதுதான் வருத்தம் ஏற்படுகிறது.
(3)அடுத்து இந்த எண்ணெய் விவகாரம். 1970களில் நடந்த “Oil Embargo”ஐ
நோக்குங்கள். அரேபிய நாடுகள் அனைத்தும் சேர்ந்து அமேரிக்காவிற்கும்
அதன் கூட்டாளிகளுக்கும் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தின. இந்த நிகழ்வு ஒன்றே போதும், அமேரிக்காவை எல்லா முஸ்லீம் நாடுகளும் சேர்ந்து
மிரட்டின என்று எடுத்து காட்ட. இஸ்ரேல் சில பகுதிகளிலிருந்து வெளியேறியவுடன் பிரச்சினை முடிவுற்றது. OPEC குழு எண்ணெய் உற்பத்தியை குறைவாகவே வைத்திருக்க முயன்றது. ஆனால் சில உறுப்பு நாடுகள் குறிப்பாக சவூதி அரேபியா அதை ஏற்க வில்லை. வெளிப்படையாக இங்கு ஒன்றை கூற வேண்டும். எண்ணெய் இறக்குமதியை செய்யாவிட்டால் மேற்கத்திய நாடுகள் கஷ்டப்படும். (இனி அந்த கஷ்டம் கூட குறைவுதான். அரேபியாவை தவிர உலகின் மற்ற பல பகுதிகளில் எண்ணெய் கிடைக்கிறது.) ஆனால் எண்ணெய் ஏற்றுமதியை அரபு நாடுகள் செய்யாவிட்டால் அம்மக்கள் பிச்சை எடுக்க வேண்டி வரும். ஆகவே எண்ணெய் அரசியல் கண்டிப்பாக முடிவுக்கு வந்து விட்டது. ஆப்பிரிக்கா, இந்தியா என பல நாடுகளில் எண்ணெய் கிடைக்கிறது. இதன் தொழில் நுட்பமும் வளர்ந்திருக்கிறது. முற்காலங்களில் அரபு நாடுகள் கொடுத்த தொந்தரவுகளை இனி அவற்றால் மேற்குலகத்திற்கு தர இயலாது. இது
அமேரிக்காவின் சதியல்ல. இயற்கையின் நிகழ்வு.
அருமை! மிக்க நன்றி! இந்தியர்கள் சிந்திக்க வேண்டும்! அடுத்த தலைமுறையினர் இந்த தலைமுறையினரின் செயல்களால் தலை குனிந்து நிற்கும்படி ச் செய்யக் கூடாது!
ஒபாமா பாரதத்தில் வந்து இறங்கியவுடன் ஆற்றிய முதல் உரையிலேயே மும்பையில் நடந்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை பற்றி சம்பிரதாயமாக ஒப்பாரி வைத்து விட்டு ஒரு வார்த்தை கூட பாகிஸ்தானைப் பற்றிக் கூறவில்லை.
பாரதத்துக்கு பாகிஸ்தானால் கொடுக்கப் படும் பயங்கரவாதத் தொல்லை அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு ஒரு பொருட்டல்ல.
ஆனால் அவர்களுக்கு நடந்தால் அதற்காக ‘ பயங்கரவாதத்தை எதிர்த்துப் போர்’ என்று பாகிஸ்தானுடன்கூட்டாம்!
அந்த நாட்டுக்கு ராணுவ உதவியாம்,பில்லியன் கணக்கில் டாலர்களைக் கொட்டுவார்களாம்.
நல்ல வேடிக்கை. திருடனைப் பிடிக்க திருடனுடன் கூட்டு.
மேலும் பாகிஸ்தானை திருப்திப் படுத்த காஷ்மீரை பிரச்னையாக சித்தரிப்பதும் ஒரு யுக்தி.
வெள்ளையர்களின் பாரம்பரியமான குள்ள நரித்தனம் இதுதானே.
அவர்களைச் சொல்லி என்ன பயன்.
நம்மை ஆள்பவர்கள் நாட்டுப் பற்று இல்லாமல் அவர்களுக்கு சலாம் போடுவதில்தானே குறியாக இருக்கிறார்கள்.
நம்மால் இது முடியாது, அது முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தால் எதுவுமே முடியாது.
போக்ரான் அணுகுண்டு சோதனையின் பொது அமெரிக்கா நம் மீது பொருளாதாரத் தடை விதித்தது. கிரயோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பம் தர தடை விதித்தது.
சிலர் வானமே இடிந்து பாரதத்தின் மீது விழுந்து விடும் என்று கூறினார்.
ஆனால் கடன் பத்திரங்கள் மூலமாக பெரும் தொகையை வாஜ்பாய் அரசு திரட்டியது.
நம் விஞ்ஞானிகள் வாஜ்பாயியிடம் அமெரிக்கா தொழில் நுட்ப உதவி அளிக்கா விட்டாலும் நாமே செய்து காட்டுவோம் என்று சொன்னதல்லாமல் செய்து காட்டினர்.
ஆகவே முதலில் நாம் நம்மால் எதுவும் முடியும் என்ற தன்னம்பிக்கை கொள்வோம்.
கைக்குட்டை அளவுள்ள இஸ்ரேல் இவ்வளவு எதிரிகளை சமாளிக்கும் பொது பாரதத்தால் முடியாது என்பது தவறாகும்.
அதற்கு முதலில் சுயநலமற்ற, தேசத்தின் மீது, மக்களின் மீது பேரன்பு கொண்ட ஆட்சியாளர்கள் வர வேண்டும்.
அறிவு மிக்க மும்பை இளைஞர்கள் கேட்ட கேள்விகளால் திக்கு முக்காடிப் போனார் ஒபாமா
பாகிஸ்தானை ஏன் பயங்கரவாத நாடாக அறிவிக்கவில்லை?
ஜிஹாத் பற்றி அவரது கருத்தென்ன?
( அவர் உயர்வாகப் பேசிய ) காந்தியின் கொள்கைகளை எப்படி அமெரிக்காவில் நடை முறைப் படுத்த முடியும்?
அளவுக்கு அதிகமான பொருளாசை உள்ள உலகத்தை மாற்றி அமைத்தால் என்ன ?
இதைப் பற்றியெல்லாம் கேட்டு அசத்தி விட்டனர்
எல்லாவற்றுக்கும் மழுப்பலான பதில்களே தந்தார்
அவரது பதில்களிலிருந்து அமெரிக்கக் கொள்கை பாகிஸ்தானை ‘ஆயக்கால் ‘ போட்டு தூக்கி விடுவதே என்று புரிந்தது
சீன சர்வாதிகாரிகள்,சவுதி அரேபிய முஸ்லீம் பரம்பரை ஷேக்குகள், பாகிஸ்தானின் ராணுவ சர்வாதிகாரிகள் இவர்களுக்கு ‘ஜனநாயக’அமேரிக்கா சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்குமாம்.அனால் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட குஜராத் முதலமைச்சர் மோடிக்கு விசா மறுப்பார்களாம்!
இக்கட்டுரையில் மியன்மாரின் இராணுவ சர்வாதிகாரிக்கு இந்திய அரசு
சிகப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது ஒரு வரலாற்று தவறே என்று எழுதி
இருந்தேன்.
அமேரிக்க அதிபர் ஒபாமா இன்று இந்திய நாடாளுமன்றத்தில் உரை
நிகழ்த்தும்போது இவ்விஷயத்தை சரியாகவே சுட்டி காட்டினார்.
That is why I can say today – in the years ahead, I look forward to a reformed UN Security Council that includes India as a permanent member.
Now, let me suggest that with increased power comes increased responsibility. The United Nations exists to fulfill its founding ideals of preserving peace and security, promoting global cooperation, and advancing human rights. These are the responsibilities of all nations, but especially those that seek to lead in the 21st century. And so we look forward to working with India – and other nations that aspire to Security Council membership – to ensure that the Security Council is effective; that resolutions are implemented and sanctions are enforced;
Every country will follow its own path. No one nation has a monopoly on wisdom, and no nation should ever try to impose its values on another. But when peaceful democratic movements are suppressed – as in Burma – then the democracies of the world cannot remain silent. For it is unacceptable to gun down peaceful protesters and incarcerate political prisoners decade after decade. It is unacceptable to hold the aspirations of an entire people hostage to the greed and paranoia of a bankrupt regime. It is unacceptable to steal an election, as the regime in Burma has done again for all the world to see.
Faced with such gross violations of human rights, it is the responsibility of the international community – especially leaders like the United States and India – to condemn it. If I can be frank, in international fora, India has often avoided these issues. But speaking up for those who cannot do so for themselves is not interfering in the affairs of other countries. It’s not violating the rights of sovereign nations. It’s staying true to our democratic principles. It’s giving meaning to the human rights that we say are universal. And it sustains the progress that in Asia and around the world has helped turn dictatorships into democracies and ultimately increased our security in the world.
மனித உரிமையை காலில் போட்டு மிதிக்கும் ஒரு இராணுவ சர்வாதிகாரிக்கு
இந்தியா சிகப்பு கம்பள வரவேற்பு அளிப்பது அவர்களுக்கு ஒரு
Legitimacyஐ கொடுக்கும். UNன் Sanctions அனுசரிக்க பட வேண்டும்
என்று கூறியது இந்தியாவிற்கும் சீனாவிற்கும்தான். அமேரிக்காவும் அதன்
கூட்டாளிகளும் பர்மாவின் மீது விதித்திருக்கும் பொருளாதார தடைகள்
இந்தியா மற்றும் சீனாவால் செல்லாததாக்கப்பட்டுள்ளன. இது பர்மிய
மக்களுக்கு நாம் செய்யும் துரோகம்தான்.
நாம் அமெரிக்க எதிர்ப்பு என்று சொல்லும் போது பெருவாரியான அமெரிக்க மக்களைக் குறிக்கவில்லை.
ஏனென்றால் அமெரிக்க மக்களிடையே பொதுவாக இந்தியர்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் உள்ளது.
குறிப்பாக அவர்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஹிந்துக்களை மற்றவர்களிடமிருந்து பிரித்துப் பார்க்கத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் .
ஆனால் அமெரிக்க ஆட்சியாளர்களின் நிலை வேறு. அவர்கள் தொடர்ந்து ( கென்னெடியின் ஆட்சி போன்ற சில சமயங்கள் தவிர) இந்தியாவுக்கு எதிரான நிலையையே எடுத்து வருகின்றனர்.
பிரிடிஷார் இங்கிருந்து செல்லும் போது இந்தியாவை உடைத்து விட்டுச் சென்றனர். ( வியட்நாம் , கொரியா)
காலம் காலத்துக்கும் இந்தியாவுக்கு ஒரு தலை வலி இருக்க வேண்டும் என்பதே அவர்களது எண்ணம்.
இன்று அந்தக் கொள்கையின் வெற்றியைக் கண் கூடாகப் பார்க்கிறோம்.
பாகிஸ்தானை எதிர் கொள்வதிலேயே நமது சக்தி விரயமாகிறது.
பாகிஸ்தானைக் காட்டி நம்மையும் நம்மைக் காட்டி பாகிஸ்தானியும் தன் கட்டுப்பாட்டில் அமெரிக்க வைத்துக் கொள்ளும். ராணுவ தளவாடங்களை விற்பனை செய்யும்.இரண்டு நாடுகளுமே பெரிதாக வளர முடியாமல் பார்த்துக் கொள்ளும்.
நாட்டின் மீது பற்று உள்ள ஆட்சியாளர்கள் இப்படித்தான் இருப்பார்கள். இருக்க வேண்டும்.
ஆனால் நம் நாட்டுத் தலைவர்கள் நாட்டைப் பற்றிச் சிறிதும் கவலைப் படாமல், தங்களது அதிகாரம், பணம்,குடும்பம் இவற்றைப் பற்றி மட்டுமே கவலைப் படுபவர்களாக உள்ளனர்.
இது பாரதம் போன்ற ஒரு நாட்டுக்கு பெரிய அவமானமாகும்.
ராஜபக்சே வெளி நாட்டிலிருந்து வந்தவுடன் விடுதலைப் புலிகள் அழிக்கப் பட்ட செய்தி கேட்டதும் தரையில் வீழ்ந்து தன் நாட்டின் மண்ணை முத்தமிடுகிறார்.
அனால் நம் தலைவர்கள் ? வெளிநாட்டுக் காரர்களின் காலை முத்தமிடுகிறார்கள்! வெட்கக்கேடு!
நம்மவர்கள் ஆப்பிரிக்க நாடுகளில் சுரண்டுவதாகச் சொல்வது தவறு .நம் நாட்டவர் யாரும் அந்த மக்களுக்கு நன்மை செய்ய முற்ப்பட்டால் நாம் கடையைக்கட்ட கட்ட வேண்டியதுதான்.ஏனென்றால் அந்த நாட்டு ஆட்சியாளர்கள் நமது அரசியல் வாதிகளையும் விட பல நூறு மடங்கு மோசமானவர்கள்.அந்த மக்களுக்கு நன்மை ஏதாவது செய்யப்போய் அந்நாட்டு ஆட்சியாளர்களால் விரட்டியடிக்கப்படுவோம்.அவர்களை சுரண்டவும் கூடாது அதே சமயம் அவர்களுக்கு உதவவும் கூடாது.அதுதான் அங்கு சென்று தொழில் நடத்துபவர்களுக்கு நல்லது.
ஈஸ்வரன்,பழனி.
சில வருடங்களுக்குப்பிறகு இந்த கட்டுரைக்கு ஒரு மறுமொழி எழுதுகிறேன்.
(1)மியன்மாரின் அரசியல் தலைவி ஆங்க்.சேன்.சூ.ச்சி அம்மையார் சமீபத்தில்
இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது டில்லியில் ஒரு சொற்பொழிவு நடத்தினார்.
பேச்சை முடிக்கையில், இந்தியா சில வருடங்களுக்கு மியன்மாரின் மக்களை
கைவிட்டு விட்டது என்றும் இராணுவ ஆட்சியை பிடித்துக்கொண்டது என்றும்
கூறினார். அந்த நடவடிக்கை தனக்கும், பல மியன்மார் குடிமக்களுக்கும்
அதிர்ச்சியாக இருந்தது என்றும் கூறினார்.
நடைமுறை சிக்கல்களுக்காக அனைத்து நாடுகளும் சில சமாதானங்களை செய்து
கொள்ளவே செய்யும். ஆனால் அதனால் விளையும் வரலாற்று தவறுக்கு
எதிர்காலத்தில் பதில் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடும்.
(2) சில மாதங்களுக்கு முன் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை எந்த
நாட்டின் நிறுவனத்துடன் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலையில், பிரிட்டனின்
நிறுவனத்தை ஒதுக்கிவிட்டு, இந்தியா ஃபிரான்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை
அளித்தது. அந்த வர்த்தகம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடையது. இந்த வர்த்தக
போட்டியில் தோற்ற பிரிட்டன், தன் அதிர்ப்தியை வெளிப்படையாக தெரிவித்தது.
மேலும் இந்தியாவிற்கு வழங்கும் வருடாந்திர கொடைகளை நிறுத்துவதாகவும்
அறிவித்துள்ளது. 2ற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் தோற்றம் இருக்கும்.
ஆனால் உண்மை அனைவர்க்கும் தெரியும்.
கடந்த வாரம் மாலத்தீவின் விமான நிலைய கட்டுமான பணி ஒப்பந்தத்திலிருந்து
இந்திய நிறுவனமான GMR அந்த அரசால் நீக்கப்பட்டது. உடனடியாக இந்தியா கடும்
கண்டனத்தை தெரிவித்தது. மேலும், வரும் ஆண்டுகளில் இந்தியா மாலத்தீவிற்கு
செய்து வரும் கொடைகள் நிறுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கிறது. இது
மிரட்டல்தான்.
இந்த செய்திகளை எழுதியதற்கு காரணம் இந்தியாவை விமர்சனம் செய்வதற்காக
அல்ல. இந்திய வெளியுறவுத்துறை பல கோணங்களில் அலசிவிட்டு எந்த முடிவு
இந்தியாவிற்கும், இந்தியர்களுக்கும் இலாபமாக இருக்குமோ அதையே செய்யும்.
இதையே அமேரிக்கா செய்தால், விமர்சனம் செய்பவர்கள் வானத்திற்கும்
பூமிக்குமாக குதிப்பார்கள். ராஜதர்மம் தன் சொந்த நாட்டின் நலத்தை ஒட்டியே
இருக்கும். மனிதகுலம் தழைத்தோங்க எந்த நாடும் ஒரு அளவிற்கு மேல் குரல்
கொடுக்காது.
ஒவ்வொரு நாடும் தன் நிலையைவிட கீழுள்ள நாட்டை மிரட்டி பணியவைக்கும்
வேலையை செய்யவே செய்யும். அமேரிக்கா பெரும்பாலான நாடுகளை விட
உயர்தரத்தில் உள்ளது. ஆகவே பல நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கும்.
இந்தியாவும் தன்னை விட கீழுள்ள நாடுகளை அதே பாணியில் மிரட்டவே
செய்யும். இதில் அமேரிக்காவை மட்டும் தனியாக குற்றம் சாட்டுவது சரியாகாது
என்பதை கூறவே இந்த மறுமொழி.
// இதில் அமேரிக்காவை மட்டும் தனியாக குற்றம் சாட்டுவது சரியாகாது
என்பதை கூறவே இந்த மறுமொழி.//
சபாஷ். இந்தியர்களின் இந்திய விசுவாசத்துக்கும், அமெரிக்க விசுவாசத்துக்கும் பாரபட்சம் இருக்கக் கூடாது.!