கிழத்தி உயர்வும் கிழவோன் பணிவும்

சிரவணபுரம் கெளமாரமடத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, திருமடத்தின் இரண்டாம் சந்நிதானம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்கள் அருளிய ‘பக்தமான்மியம்’ எனும் நூல் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்று வருகின்றது. ‘பக்தமான்மியம்’ என்பது, வடமொழியில் சந்திரதத்தர் என்பவர் அருளிய ‘பக்தமாலா’ என்னும் நூலைத் தழுவிச் செய்யப்பட்ட காவியம்.

பக்தர் என்பது பக்தியுடையோர் அனைவரையும் குறிக்கும் என்றாலும் இந்நூலில் அரிநாராயணன் மீது மெய்யன்புடைய அரிபத்தர்களையே குறிக்கும். 7,367 விருத்தப்பாக்களால் ஆன இந்த நூலில் 98 திருமால் அடியவர்கள் வரலாறு கூறப்படுகின்றது. இந்த நூல் பெரும்பாலும் வடநாட்டில் பிறந்து திருமாலிடத்தில் பத்தி செலுத்தி சமஸ்கிருதம், இந்தி, மகாராட்டிரம் ஆகிய மொழிகளில் நூல்கள் செய்த வைணவ அடியவர்களின் சரிதத்தையே 98 கதிகளாகக் கொண்டுள்ளது.

அக்கினி எந்தமரத்தில் பற்றி விளங்கினாலும், அந்த அக்கினியை மக்கள் கைக்கொண்டு பயன்பெறுவர்; மரத்தின் பேதமல்லாமல் நெருப்பில் பேதம் இல்லாதொழிதல் போல பக்தியுடையவர் எந்தத் தேசத்தில் எந்தக்குலத்தில் எந்தமொழி பேசுபவராகப் பிறந்திருப்பினும், எந்த மூர்த்தியை உபாசிப்பவராக இருப்பினும், அந்தப் பேதங்களைப் பொருட்படுத்தாமல், பக்தர் என்ற சிறந்த பண்பு ஒன்றனையே கொண்டு அவரை வழிபட்டு உய்ய வேண்டும் என்பது இந்நூலாசிரியரின் கருத்து என்பது தெளிவாகின்றது.

சென்ற மாதம் நடைபெற்ற கருத்தரங்கில், இருமொழிப் புலவர் ஒருவர் ‘செயதேவர் கதி’ பற்றி அரிய உரை ஆற்றினார். ஜெயதேவர் வடமொழியில், ‘கீதகோவிந்தம்’ என்ற சிறந்த காவியத்தைப் படைத்தவர் என இந்திய இலக்கிய ஆர்வலர்கள் அறிவர். கீதகோவிந்தத்தில், ஜெயதேவர் எழுதத் தயங்கிய பகுதியை, அவருடைய வடிவிலே வந்த கிருஷ்ணரே எழுதினார் என்பது வரலாறு.

radhakrishna

இராசகிரீடை செய்து விளையாடும்போது, காதல் நினைவு என்னும் வெப்பம் நீங்கத் தளிர் போன்ற மென்மையான பாதங்களைத் தன்னுடைய சிரசின் மீது பலமுறை வைக்கும்படியாக இராதையிடம் கண்ணன் வேண்டினான் என்று பாடுவதற்கு ஜெயதேவரின் கவியுள்ளம் முற்பட்டது. ஆனால் அவருடைய கிருஷ்ணபக்தி அதனை அபசாரம் என்று கருதியது. மேற்கொண்டு பாட மனவூக்கம் செல்லாமையால் ஜெயதேவர் ஆற்றில் நீராடச் சென்றுவிட்டார். ஜெயதேவர் அபசாரம் என்று கருதி எழுதாமல் விட்ட வரிகளை அவர் வடிவில் வந்த கண்ணனே எழுதி, இராதையின் பாதம் தன் சிரசின் மேற்படுவதாகப் பாடி, அது அபசாரமன்று, அதுவே தனக்கு உவப்பானது எனக் குறிப்பால் உணர்த்தினான் என்பது வரலாறு.

இச்செய்தியை இந்த நூல்,

“— — இராசகீடையைக் குறித்து வன்னிக்கும் போதினிற் கிட்டிணன்

சீரியற்கொள் இராதை நின்தாளைஎன் சென்னிமீது அணியாப் புணையென்பதா

வேரியற் கவியொன்று உதிப்பச் சகதீசனைக் குறித்து அங்ஙனம் பாடவே

துணிவுறாது, மற்றோர் பதம் ஒத்திடச் சூழ்ந்து ஒன்றுமுட் தோன்றுத லின்மையின்”

ஏட்டினைப் புத்தகசாலையில் வைத்து விட்டு நீராடச் சென்றதாகக் கூறுகின்றது.

இலக்கியத்துக்கு ஒப்பாய்வுத் தளம்

வடமொழி இலக்கியப் பரப்பில் கீதகோவிந்தம் பெறும் சிறப்பினை விரிவாக எடுத்துரைத்த பேச்சாளர், கீதகோவிந்தத்துக்கு முன் எந்த வைணவக் கவிஞரும் திருமாலின் பரத்துவத்துக்குக் குறை உண்டாகும் வகையில் ,நாராயணன் ஊடல் கொண்டதாகவோ, ஊடல் உணர்த்துவதற்காக எந்தப் பெண்பாலையும் அவர் வணங்கியதாகவோ, பெண்பால் ஊடலின்போது காலால் மோதியதாகவோ பாடவில்லை என்றும், ஜெயதேவரே அந்த மரபை மாற்றிய முதற்கவிஞர் என்றும் தம் கருத்தைக் கூறினார்.

இந்தக் கண்ணோட்டத்தில் ஆழ்வார்களின் அருளிச்செயல்களை நான் வாசித்திருக்கவில்லை. இந்தக் கருத்து சைவ வைணவ தமிழ் பத்தி இலக்கிய ஒப்பாய்வுக்குச் சுவையானதொரு தளமாக அமையும் எனக் கருதுகின்றேன்.

இறையின்பம் உடம்புகொண்டே நுகரப்படுவது எனவும், இறைவன் ஒருவனே புருடோத்தமன், ஆதலால் அவனது இன்பத்தை நுகரும் அடியார்களில் ஆடவரினும் மடவாரே பெரிதும் தகுதியுடையவர் எனத் திருமால் நெறியினர் கொள்வர். ஆழ்வார்களின் அருளிச்செயல்களைப் பராங்குசநாயகி, திருமங்கை நாயகி என நாயகியர் வாக்காகவே கொள்வர். நாயகநாயகி பாவத்தைப் பெரிதும் போற்றும் திருமால் நெறியில் , காதலின்பத்தை விரிவுபடுத்தும் ஊடலும் ஊடல் தணித்தலும் , ஊடல் தணிக்க நாயகன், நாயகியை வணங்குவதாகக் கூறலும் இல்லை என்பது வியத்தற்குரிய செய்தி.

தொல்காப்பிய நூற்பா

“மனைவி யுயர்வுங் கிழவோன் பணிவும்
நினையுங் காலைப் புலவியுள் உரிய”
என்பது தொல்காப்பிய நூற்பா.(பொருளியல்33)

இல்லறம் நிகழும்போது, மனைவி தலைவனிடத்தில் காரணம் பற்றியோ அல்லது காரணத்தைக் கற்பித்துக் கொண்டோ ஊடுதலும், ஊடலைத் தணிக்க நாயகன், தன்னுடைய தலைமைப் பண்புக்கு மாறாக, அவளடியில் பணிதலும், அவன் அவ்வாறு பணிந்தபோது, நாயகி அச்சமும் நாணமுமின்றி நாயகனின் பணிதலை ஏற்றுக் கொள்வதும் தலைவன் தலைவி இருவர்க்கும் உரிய என்பது இந்நூற்பாவின் கருத்து. இந்த ஊடலும் ஊடல் உணர்த்துதலும் காம இன்பத்தை மிகுவிக்கும் என்பர்.

சங்க இலக்கியங்கள் இந்தக் கருத்தைக் கவிதை ஆக்குகின்றன.ஊடல் கொண்ட தலைவி தான் கண்ட கனவு ஒன்றினைத் தோழிக்குக் கூறுகின்றாள்.

“வலையுறு மயிலின் வருந்தினை பெரிதென
தலையுற முன்னடிப் பணிவான் போலவும்
கோதை கோலால் இறைஞ்சி நின்ற
ஊதையஞ் சேர்ப்பனை அலைப்பேன் போலவும்” (கலித்தொகை 123)

(வலையில் அகப்பட்ட மயிலைப் போல நீ பெரிதும் வருந்தினாய் என்று என்னுடைய காலில் வீழ்ந்து தலைவன் வணங்கினதைப் போலவும் அவ்வாறு வணங்கிய அவனை என்னுடைய மாலையாகிய கோலால் நான் அடிப்பது போலவும் கனாக் கண்டேன்)

“தப்பினேன்,என்றடி சேர்தலும் உண்டு” (கலித்தொகை 89)

(நான் உன்னை அகன்று உனக்குத் தவறிழைத்துவிட்டேன் என்று தலைவன் கூறி என்காலடி வீழ்வதும் உண்டு- இவை இரண்டும் தலைவி கூற்று)

நாயக நாயகி பாவம்

சிவநெறியில் நாயகநாயகி பாவம் கொள்ளுதல் இல்லை. சைவத்தில் கூறப்படும் சரியையை தாசமார்க்கம் என்றும் கிரியையைச் சற்புத்திரமார்க்கம் என்றும் யோகத்தைச் சகமார்க்கம் என்றும் கூறியவாறு ஞானத்தை ‘நாயகி மார்க்கம்’ என்று கூறாது ‘சன்மார்க்கம்’ எனக் கூறுவது அறியத்தக்கது.

திருமுறைகளில் அமைந்துள்ள அகப்பொருட்பாடல்கள் பாடாண்கைக்கிளை என்னும் அகப்பொருள் இலக்கணம் வாய்ந்த அகப்பொருள்துறைப் பாடல்களாகவே கொள்ளப்படும்.

ஆயினும் சிவநெறிச் சான்றோர்கள் பத்தியுடன் அருளிய நூல்களில் உமையின் ஊடலைத் தணிக்க சிவபிரான் அவள் அடியை வணங்கியதாகக் கூறப்படும் கவிச்சுவை கனிந்த கற்பனை மிகுந்த பல பாடல்கள் உள்ளன. அவை சிவத்தின் பரத்துவத்திற்குக் குறையாகச் சைவசித்தாந்திகள் கருதுவதில்லை.

சிவபரத்துவம்

சிவஞானசித்தியார் சிவத்தின் உண்மைநிலையினைச் (சொரூபநிலை)

“சிவன்அரு உருவும் அல்லன்; சித்தினொடு அசித்தும் அல்லன்;
பவமுதல் தொழில்கள் ஒன்றும் பண்ணிடுவானும் அல்லன்;
தவம்முதல் யோகபோகம் ஒன்றும் பண்ணிடுவானும் அல்லன்; தானே
இவைபெற இயைந்தும் ஒன்றும் இயைந்திடா இயல்பினானே “(90)

என்று கூறுகின்றது.

ardhanarisvara இத்தகைய சொரூபமுடைய முதல்வன், உயிர்களின் உலகவாழ்க்கை நிகழும்பொருட்டுச், சத்தியும் சிவமுமெனத் தன்னுளே இருவேறு வகைப்பட்ட தன்மைகள் வைக்கின்றான். சிவன் தன்னுடைய சத்தியினால் உலகு உயிர்களில் அத்துவிதமாகக் கலந்து அவற்றை இயங்கச் செய்கின்றான். தனு கரண புவன போகங்கள் அனைத்தும் சத்தியினால் வந்த ஆக்கம். சிவசத்தியின் சொரூபம் யாதனின் உயிர்களுக்கு அருள்வது குறித்த ஞானமே ஆகும். இதுவே பராசத்தி எனப்படும் ( பரன் ஆண்பால், பரை-பெண்பால் )

“பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று, அவ்வுருத் தன்னுள் கரக்கினும் கரக்கும்” எனச் சங்கப் புலவன் சிவத்தினின்றும் சத்தி பிரிந்து உடன்நிற்கும் (மாதொரு பாகனாக) நிலையையும் சர்வசங்கார காலத்தில் சத்தியும் சிவத்திலொடுங்கிச் சிவம் மட்டுமே தனித்து நிற்கும் நிலையையும் உணர்த்தினான்.

தாயின் ஒப்பற்ற அன்பைப் பெற்ற அனுபவம் சிவசத்தியைப் பெண்பாலாகக் காண்கின்றது. உண்மையில் சிவம் ஆணும் அல்ல ;பெண்ணும் அல்ல

“பெண்ணுரு ஆணுரு வல்லாப் பிரமநகர் மேய” (2:65:10)
“ஆணலார் பெண்ணு மலார் அதிகை வீரட்ட னாரே” (4:27-8)
“பெண் அல்லை ஆண் அல்லை பேடும் அல்லை” (6:45-9)

சிவமும் சத்தியும் வெளிப்பட்டு ‘அர்த்தநாரி’ யாக இருக்கும் கோலத்தை மணிவாசகர் ‘தொன்மைக் கோலம்’ என்கின்றார்.

ஒருமையில் இருமை

சிவத்தை ஆணாகவும் சிவசத்தியைப் பெண்ணாகவும் கற்பித்துக் கொண்ட கவியுள்ளம் கற்பனையில் திளைக்கின்றது.

மாதொருபாகர் வடிவில் ஐயன் பாகம் வேதம் ஓத அம்மை பாகம் அதனைச் செவிமடுத்து மகிழ்ந்து புன்முறுவல் பூக்கின்றதாம்

“புதுவிரிபொன் செயோலை யொருகா தொர்காது
சுரிசங்கம்நின்று புரள
விதிவிதி வேதகீதமொருபாடுமோத
ஒருபாடு மெல்ல நகுமால்”
(அப்பர் தேவாரம் 4;79)

எல்லையற்ற அன்பு பரம்பொருளிடத்து நெருக்கத்தைத் தோற்றுவிக்கின்றது. அந்த நெருக்கம் பரம்பொருளினது பரத்துவத்தையும் நோக்காது வேடிக்கையாகப் பேசி மகிழும் உரிமையையும் அடியவனுக்கு அளிக்கின்றது,

‘அரைக்கண் உடையாரை யாரேனும் பார்த்திருக்கின்றீர்களோ’ எனக் கேட்ட அப்பர் பெருமான் தாம் கண்டுள்ளதாகக் கூறுகின்றார்.

’ஒற்றியூர் உத்தமன் தன் உடலைச் செம்பாகமாகக் கூறிட்டு மேன்மையுடைய உமாதேவியாருக்கு வழங்கி விட்ட அந்நாளில், இடதுபாகம் அம்மைக்கும் வலது பாகம் அவனுக்கும் உரியவாயின. ஆதலால் வலக்கண் அவனுடையதும் இடக்கண் அவளுடையதும் ஆயின. ஒற்றை நெற்றிக் கண்ணிலும் அரைப்பாகம் அளித்து அவ்வுமையாளையும் செம்பாகத்தில் வைத்துக் கொண்டு இன்று ஒன்றரைக்கண்ணன் ஆனான் ஒற்றியூர் உத்தமன்”’ என்று ஒற்றியூரான் உத்தமனானதற்கு தாசமார்க்கத்தில் நின்ற அப்பர் வேடிக்கையான காரணத்தைக் கூறுகின்றார்.

“இன்றரைக் கண்ணுடை யாரெங்கு மில்லை யிமய மென்னும்
குன்றரைக் கண்ணன் குலமகட் பாவைக்குக் கூறிட்டநாள்
அன்றரை கண்ணுங்கொடுத்துமை யாலையும் பாகம் வைத்த
ஒன்றரைக் கண்ணன் கண்டீர் ஒற்றி யூருறை உத்தமனே”
(4:828)

சிவபெருமான் திரிபுரத்தை எரித்ததாக எல்லாரும் சொல்லுகின்றார்கள். அந்தப் பெருமைக்கு உண்மையாக உரியவள் அம்மையே. என்று அப்பர் கூறுகின்றார்.

‘மலையாகிய வில்லை வளைத்துப் பிடித்தது அம்மையின் பாகத்ததாகிய இடக்கரமே. நாண் ஏற்றுவதற்கு வாய்ப்பாக வில்லின் அடியைத் தாங்கியதும் அம்மையின் பாகமாகிய இடது தாளேயாகும். வெறுமனே நாணை வலித்த திருக்கை நின் செங்கையாயாகும். அப்படியிருக்கச் செற்றார் புரம் செற்ற உன்னுடைய சேவகம்(வீரம்)தான் என்ன?’ என்று அப்பர் நாகைக்காரோணத்துக் கண்ணுதலிடமே கேட்கின்றார்.

“கற்றார் பயில்கடல் நாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலே
விற்றாங் கியகரம் வேனெடுங் கண்ணி வியன்கரமே
நற்றாள் நெடுஞ்சிலை நாண்வலித் தகரம் நின்கரமே
செற்றார் புரஞ்செற்ற சேவக மென்னைகொல் செப்புமினே”
(4:994)

சத்தியும் சிவமும் பிரிக்கமுடியாத , குணகுணியான தாதான்மிய சம்பந்தம் உடையவர்கள். எனவே, தனியாகச் சத்தியை வழிபடுதலும் சிவவழிபாடே. தனியாக அன்னையை வழிபடும்போது அவளுள் ஐயன் ஒடுங்கியிருப்பான்.

சங்கரர் செளந்தரிய லகரியில், அம்மையிடம்,

“ஆதிசங்கரர் பாதியு டம்பினி தாளுமம்பிகை பாதியும் விஞ்சுமோ
நீதியன்றென நாயகர் பங்கையும் நீகவர்ந்தனை யாலவர் எங்குளார்” (23)

என வினவதில் கவிச்சுவை மிளிர்கின்றது.

குணமே பயன் அளிப்பதென்றாலும் குணத்துக்கு இருப்பிடமான குணிக்கும் உரிய சிறப்பினைத் தாய்த்தெய்வ வழிபாடு தருகின்றது. சவுந்தரிய லகரியில் இத்தகைய காட்சியைச் சங்கராச்சாரியசுவாமிகள் தீட்டிக் காட்டுகின்றார்.

அம்மை தன்பரிவாரங்கள் சூழ கொலுவில் வீற்றிருக்கின்றாள். அப்பொழுது ஐயன் அங்கு எழுந்தருளுகின்றார். அவரைப் பணிந்து எதிர்கொண்டு வரவேற்க அன்னை விருட்டென்று எழுந்து ஐயனை நோக்கிச் செல்லுகின்றாள். அவள் எழவே, முன்னே அவளை வணங்கிக் கொண்டிருந்த தேவர்களும் விரைவாக எழுந்தனர். அவர்களுடைய மணிமகுடங்கள் குப்பைகளெனச் சிதறுகின்றன. இலக்குமி முதலிய சேடியர்கள் அவைகளை அடையாளங் காட்டிக் கூறி அன்னையை வழிவிலகி வர வேண்டுகின்றனர்.

“முதுமறைசொ லிளவனிதை யயனொடரி குலிசனுனை முறைபணியு நெறியி னிடையே
பதறியுன தருகுவரும் அரனையெதிர் கொளவுனது பரிசனமு னடிவ ளமையால்
இதுபதுமன் மகுடமரி மகுடமிது குலுசன்முடி யிதுகடினம் இடறும் இருதாள்
சதியமர வமரவழி விலகிவர வரவெமது கடவுளெனு மொழித ழைகவே”
(செளந்தரிய லகரி 29)

புலனெறிவழக்கு

shiva_paarvathiமுன்னே எடுத்துக் காட்டிய தொல்காப்பியம் கற்பியல் நூற்பாவுக்கு ஏற்ப உலகியலில் தலைவன் தலைவி இருவரிடையே நிகழும் அகவொழுக்கத்தைச் சிவம் சத்திமேல் ஏற்றி பத்தி இலக்கியம் மதுர பத்திச் சுவை காண்கிறது.

கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள், பிரபுலிங்கலீலையில், சிவபெருமான் ஊடலுணர்த்தத் வணங்கியபொழுது, அம்மை , இறைவன் தன்னை வணங்கியதற்கு மகிழாமல், தன் சககளத்தியாகிய கங்கை தன் காலில் தோய்ந்ததற்கு மகிழ்ந்தாள் எனச் சாதாரணப் பெண்மத்தை இறைவிமேல் ஏற்றிப் பாடினார்.

அருணகிரிநாதப் பெருமான் காஞ்சிபுரத் திருப்புகழ் ஒன்றில்(457),நிலவு கரந்தை, பாம்பு ஊமத்தம் கபாலம் எலும்பு அப்பு(கங்கை நீர்) கொக்கின் இறகு உருத்திராக்கமாலை பிரமன் எட்டுதற்கு அரிதாக இருந்த கொன்றை இவையெல்லாம் அணிந்த சடை, இன்னும் இவைபோலச் சிவன் சிரத்திலே இருந்தனவெல்லாம் ஒன்று கூடி மணம் வீசும் திருவடியை உடையவள் அம்பிகை எனப் பாடுகின்றார்.

அம்மையின் திருவடியில் ஐயன் விழுந்து வணங்கினான் என்று வெளிப்படையாகக் கூறாமல், அவன் சென்னியிலே இருந்தனவெல்லாம் அவள் திருவடியிலே மணந்தன என்று கூறுயது ஒரு நயம்.

சங்கரரும் செளந்தரியலகரிப் பாடல் ஒன்றில் தேவர்கள் அம்மையை வணங்கித் திருவடியில் இட்டமலர்கள் ஐயனின் சென்னி மன்னித் திகழுமே எனப் பாடுகின்றார்.

இந்த நயத்தை ஒட்டியே, குமரகுருபர சுவாமிகள், மீனாட்சியம்மை குறத்தில், ”(45)

“கடிக்கொன்றைத் தேன்மணக்கும் பிறைநாறும் சீறடியைப் பாடுவனே” என்றும்,

அபிராமிபட்டர் ,
“திங்கட் பகவின் மணம்நாறும் சீறடி” என்றும் .

“தைவந்து நின்னடித் தாமரை சூடிய சங்கரர்க்குக்
கைவந்த தீயும் தலைவந்த ஆறும் கரந்த தெங்கே”
என்றும் பாடினர்.

துணைமாலை அம்மை பிள்ளைத்தமிழ் ஆசிரியர், ஒருபடி மேலே சென்று, ஜெயதேவர் பாடியதை விடக் கடுமையாக, துணைமாலை அம்மை இறைவன் திருமுடிமேல், அங்குள்ள பிறையும் நதியும் செஞ்சடைவழியே செம்புண்ணும் குருதியும் போலத் தோன்றுமாறு தன் சிற்றடியால் தாக்கினாள் என்று கற்பனை செய்கின்றார்.

“மழுக்கொண்டு தற்கொண்ட தன்மகிணனோடு ஊடி முடிமேல் மதியும் விண்ணதியும் ஓர்பருதியும் குருதியும் மானக் குமைந்த பஞ்சிச் சீறடித் தளிர்” (துணைமாலையம்மை பிள்ளைத்தமிழ், வருகை, 5) என அம்மையின் திருவடி போற்றப்படுகின்றது.

முடிவுரை

இவ்வாறு பாடுவது, தொல்காப்பியம் கூறுகின்றபடி, நாடகவழக்கத்தாலும் உலகியல் வழக்கத்தாலும் புலவர்கள் அமைத்துக் கொண்ட புலநெறி வழக்கத்தை ஒட்டியே என அறிதல் வேண்டும். தமிழர்கள் வாழ்ந்த வாழ்வை இத்தொல்காப்பியக் கவிமரபு காட்டுகின்றது எனநினைத்தால் அது பிழை.

சிவபரம்பொருளின் சொரூபநிலையினையும் (உண்மைநிலை) தொல்காப்பியம் காட்டிய இப்புலனெறி வழக்கினையும் நன்குணர்ந்த தமிழ்ச்சைவப் புலவர்கள் இத்தகைய அகப்பொருள் பாடல்கள் சிவபரத்துவத்தை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை என்றறிந்து கவியின்பத்தில் திளைக்கின்றனர்.

18 Replies to “கிழத்தி உயர்வும் கிழவோன் பணிவும்”

 1. கவியழகும், பொருட்சுவையும், சிவசக்தி ஐக்கிய தத்துவச் செழுமையும் மிளிரும் கட்டுரை முனைவர் ஐயா. அருமை!

  அருணகிரியார் முருகப்பெருமான் விஷயமாகவும் இது போன்று பாடியுள்ளார்.

  பணியா என வள்ளி பதம் பணியும்
  தணியா அதிமோக தயாபரனே.

  வானோர் முருகன் அடியை முடிசூடுகின்றனர். அவனோ குறமகள் பதத்தைத் தன் முடிமேல் அணிகிறானாம்!

  வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்
  பாதா குறமின் பத சேகரனே.

 2. Pingback: Indli.com
 3. முனைவர் அவர்களுக்கு,

  தங்களுடைய இக்கட்டுரையும் வழமை போலச் சிறப்பாக அமைந்துள்ளது. இறைவன் இறைவியுடன் இணைந்த நிலையில் காட்சி தரும் சீர்மையைப் பாடாத புலவர் இல்லை. அதிலும் இறைவனுக்கும் இறைவிக்கும் இடையில் உண்டாகிடும் ஊடலையும் பல்வேறு பலுவர்களும் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார்கள்.

  குமரகுருபரர் ஸ்வாமிகள் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அம்புலிப்பருவத்தில் அம்ணுபுலியை நோக்க நீ சிவபெருமானின் திருமுடி மேல் இருப்பினும் இறைவியின் பாதங்கள் அங்கும் நின் மேல் பட்டு உன்னை உதைக்கும். என்று பாடியிருக்கிறார். ஆக, விரைந்து இப்பொழுதே இவளுடன் விளையாட வருக என்கிறார்.

  ‘வளர்சடைக் காட்டெந்தை வைத்திடப் பெறுதியேல்
  மாசுணம் சுற்ற அச்சம்
  கொண்டு கண்டுங்சாதிருப்பதும மருப்பொங்கு
  கோதையிவள் சீறடிகணின்
  குடர் குழம்பிடவே குமைப்பதும் பெறுதி….’ (அம்புலிப்பருவம்-4)

  இது போலவே கிழவனைக் காட்டிலும் கிழத்திக்கு சீர்மை காட்டும் பாடல்களும் நிறைய உள்ளன. அபிராமி அம்மை பதிகத்தில் பட்டர் பெருமான்

  ‘நீடுலகங்களுக்கு ஆதாரமாய் நின்று
  நித்தமும் முத்தி வடிவாய்
  நியமமுடன் முப்பத்திரண்டறம் வளர்க்கின்ற
  நீ மனைவியாய் இருந்தும்
  வீடு வீடுகடோறும் ஓடிப்புகுந்துகால்
  வே சற்று இலச்சையும் போய்
  வேண்டுகில் அரைக்கணிய விதியற்று நிர்வாண
  வேடமும் கொண்டு கைக்கோர்
  ஓடேந்தி நாடெங்கும் உள்ளம் தளர்ந்து நின்று
  உன்மத்தனாகி அம்மா!
  உன் கணவன் எங்கெங்கும் ஐயம் புகுந்தேங்கி
  உழல்கின்றதேது சொல்வாய்:
  ஆடு கொடி மாடமிசை மாதர் விளையாடி வரும்
  ஆதிகடவூரில் வாழ்வே!
  அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
  அருள்வாமி! அபிராமியே! (பதிகம்-11, 7)

  என்று அம்பிகையை நோக்கி வினாக் குறியுடன் உயர்ச்சி காட்டிப் பேசுகிறதனையும் காண்கிறோம்.

  தாங்கள் குறிப்பிடுவது போல அபிராமியந்தாதியின் 98ம் பாடலில்

  //“தைவந்து நின்னடித் தாமரை சூடிய சங்கரர்க்குக்
  கைவந்த தீயும் தலைவந்த ஆறும் கரந்த தெங்கே”//

  என்று பாடிய பட்டர் முன்னரே 44ம் பாடலில்

  ‘தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
  அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
  இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
  துவளேன், இனி ஒரு தெய்வமுண்டாகத் தொண்டு செய்தே’

  என்று தேவி பரத்துவத்தை உறுதிபடத் தெரிவிப்பதுடன் …சிவசக்தி ஐக்கியத்தையும் காட்டுவதும் சிந்திக்கத்தக்கது.

  //வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்
  பாதா குறமின் பத சேகரனே.//

  என்ற அடிகளை ஜடாயு அவர்கள் காட்டியிருக்கிறார்கள். அப்பாடல் முழுமையாகக் கவனிப்பது இன்னும் சிறப்பு.

  ‘நாதா குமரா நமவென்று அரனார்
  ஓதாவென ஓதியதெப் பொருள்தான்
  வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்
  பாதா குறமின் பத சேகரனே’

  சிவபெருமானே முருகனைப் போற்றுகிறாராம். இவனோ வள்ளியையே போற்றுகிறானாம். (வள்ளிநாயகி என்பவள் ஆன்மாக்களின் பிரதிநிதி. முருகன் பரமாத்மா. என்ற நோக்கில் இதற்கு விளக்கவுரை வழங்குவர்)

  முனைவர் தம் பணி மேன்மேலும் சிறக்கட்டும்.

 4. முனைவர் திரு.முத்துகுமாரசுவாமி அவர்களுக்கு,
  சில தினங்களுக்கு முன்தான் காஞ்சி பெரியவரின் தெய்வத்தின் குரலை
  படித்து கொண்டிருந்தேன். “சௌந்தர்ய லஹரி” யை பற்றின அவரின்
  விளக்கங்கள் இந்த கட்டுரைக்கு தொடர்பு உடையது.

  (1)நீங்கள் எடுத்தாண்ட கீத கோவிந்த நிகழ்வைப் போன்றே, ஆதி
  சங்கரரின் “சௌந்தர்ய லஹரி”யில் உமையின் கால், சிவனின் நெற்றியில்
  படும் செய்தி வருகிறது. ஊடலை தணிக்க சிவன் உமைக்கு நமஸ்காரம்
  செய்கிறார் என்னும் அளவுக்கு ஆதிசங்கரரின் கற்பனை விரிகிறது. இந்த
  குறிப்பிட்ட ஸ்லோகத்தின் விளக்கவுரையை பெரியவர் அளிக்க வில்லை. ஆகவே இணையத்தில் இருந்து தருகிறேன். (ஸ்லோகம் எண்:86)

  Mrisha krithva gothra skhalana matha vailakshya namitham
  Lalate bhartharam charana kamala thadayathi thee
  Chiradantha salyam dhahanakritha -munmilee thavatha
  Thula koti kkana kilikilith -meesana ripuna

  In a playful mood, after teasing you,
  About you and your family,
  And at a loss to control your love tiff,
  When your consort does prostrations,
  Your lotus like feet touches his forehead,
  And the God of love, the enemy of your Lord, who was burnt,
  By the fire from his third eye,
  And was keeping the enmity with your lord,
  Like the ever hurting arrow,
  Makes sounds like Kili Kili*,
  From your belled anklets on the legs.

  (2)
  சௌந்தர்ய லஹரியின் முதல் ஸ்லோகத்திலேயே பகவத்பாதர் சக்தியின்
  மேன்மையை கீழ்வருமாறு பிரஸ்தாபிக்கிறார்.

  “இறைவனான சிவபெருமான் சக்தியுடன் சேர்ந்திருப்பவராக இருந்தாலே
  உலகை ஆக்குவதற்கு ஆற்றல் படைத்தவராவர். இவ்வாறு சேர்ந்திராவிடில்
  அசைவதற்குங்கூட சாமர்த்தியமுள்ளவராக இல்லையல்லவா? ஆகையால்
  திருமால், ருத்திரன், பிரம்மா முதலானோராலுங்கூட ஆராதனை செய்யப்
  படுபவளான உன்னை புண்ணியம் பண்ணாதவன் நமஸ்கரிக்கவோ
  ஸ்தோத்திரிக்கவோ எங்ஙனம் முடியும்?”

 5. Siva Chidambaram ! A very informative article. I appreciate particularly the observations regarding Gnana Maarga. My humble request is to do away with pictures that depict
  “Semmeni Emman” Siva in dark colors.

 6. திரு ரமேஷ் அவர்கள் கூறியுள்ளபடி, சிவனைக் கரியமேனியனாக், நீலவண்ணனாகக் காட்டுவது பிழை. எரிபுரை மேனியன், செந்தழல் புரைதிருமேனி, ஆரழல்போல் செய்யன் என்றும் திருமுறைகள் கூறுவதால் அவனைச் செந்நிறத்தனாக வரைதலே முறை. அம்மையை கெளரி, சிந்துரமேனியள், சாமளை, மரகதவருணி, எனும் ப்ல பெயர்களுக்கு ஏற்பச்செந்நிறத்தவளாகவும் கரியளாகவும் பச்சைநிறத்தவளாகவும் காட்டல் முறை.

 7. நன்றி திரு பாலாஜி. நீங்கள் எடுத்துக் காட்டிய அந்த அழகிய பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு:

  “சிவமெ னும்பொருளும் ஆதிசத்தியொடுசேரின்
  எத்தொழிலும் வல்லதாம்
  இவள்பி ரிந்திடின் இயங்கு தற்குமரி தரிதெ
  னாமறையி சைக்குமால்
  நவபெ ரும்புவனம் எவ்வ கைத்தொழில் நடத்தி
  யாவரும் வழுத்துதாள்
  அவனி யின்கணொரு தவமி லார்பணிய லாவ
  தோபரவ லாவதோ’

 8. பொதுவாக வட இந்தியப் படங்களில் சிவபிரானை சாம்பல் நிறத்தில் வரைகிறார்கள்.

  சு’த்த ஸ்படிக சங்காச’ம் த்ரிநேத்ரம் பஞ்சவக்த்ரகம்..
  கர்பூரகௌரம் கருணாவதாரம்..
  கோக்ஷீர தவலாகாரம்..

  சம்ஸ்கிருத துதிப்பாடல்களில் சிவபிரான் படிகம் போன்றும் பால் போன்றும் கர்பூரம் போன்றும் தூய வெண்ணிறத்தில் விளங்குவதாகக் கூறப் பட்டுள்ளது.. செய்யாய் வெளியாய் இயமானனாம் விமலா – என்று திருவாசகமும் வெண்ணிறத்தைக் கூறும். அத்தகைய வெண்மையை சித்திரத்தில் கொண்டுவருவது காட்சி அழகியலுக்கு சரியாக இருக்காது என்பதால் ஒருவித சாம்பல் நிறத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று தோன்றுகிறது.

  ஆனால் பொன்னார் மேனியனாக வரையப் பட்டுள்ள படங்கள் தான் நமக்கு, தென்னிந்தியர்களுக்கு அழகாகத் தோன்றுகின்றன என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

 9. திரு ஜடாயு அவ்ர்களுக்கு, “வெய்யாய்! தணியாய்! இயமானனாம் விமலா” என்ற சிவபுராண அடிதான் என் நினைவுக்கு வருகின்றது. நீங்கள் எடுத்துக் காட்டியவாறு ஏதேனும் பாடபேதம் உள்ளதா என்று சரி பார்த்துத் தெரிவிக்க வேண்டுகின்றேன்
  “செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி” எனும் வரி திருக்கயிலாயத் திருத்தாண்டகத்தில் வருகின்றது. இதற்கு, ‘செம்மை,கருமை, வெண்மை’என்னும் மூன்றுமே முதல் நிறங்கள் ஆதல் பற்றியும் அவை முறையே இராசத தாமத சாத்துவித குணங்களைக் குறிக்கும் குறிப்புக்களாதல் பற்றியும், இந்த நிறங்கள் ‘எல்லாப் பொருளும் ஆயினவன்’ என்னும் பொருள் இந்த அடிக்கு மரபாகக் கூறப்பட்டு வருகின்றது. மேலும் ஒவ்வாப் பொருள்கள் பலவும் தான் ஒருவனே ஆன அதிசய நிலையை இத்தொடர் குறிக்கும் என்பதும் ஒருகருத்து.

 10. முனைவர் ஐயா, பாடபேதம் ஒன்றும் இல்லை.. ”செய்யாய் கரியாய் வெளியாய்” வரியை சிவபுராண வரிகளுடன் போட்டுக் குழப்பிக் கொண்டு விட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.

  ’நிறங்கள் ஓர் ஐந்துடையாய்’ என்றும் வருகிறது. இதுவும் பரம்பொருளின் எல்லாமாகி நிற்கும் தன்மையைச் சுட்டும் வரி என்றே புரிந்து கொள்கிறேன்.

 11. “நிறங்களோ ரைந்துடையாய்” சிவபெருமானின் சதாசிவ மூர்த்தத்துக்கான ஐந்து திருமுகங்களின் ஐந்து நிறங்களையும் குறித்தது
  ஈசான முகம் – பளிங்கு நிறமுள்ள பாலர் முகம் (உச்சி நோக்கியது)
  தத்புருஷம் – பொன்னிறமான அரசர் முகம் (கிழக்கு)
  அகோரம் – கரிய நிறமும் தாடியும் கொண்ட முதியவர் முகம்.(தெற்கு)
  வாமதேவம்- குங்குமம் போன்று சிவந்த மாதர்முகம் (வடக்கு)
  சத்யோஜாதம் -வெள்ளை நிறமுள்ள இளைஞர் முகம் (மேற்கு)

  இவ்வாறு சிவதருமோத்திரம், திருதணிகைப்புராணம்(அகத்தியன் அருள்பெறுபடலம்) திருமந்திரம் (1712) முதலியவற்றுள் கூறப்பட்டுள்ளது

  இதனை ஆகம ம் கற்றோர் விளக்கினால் அனைவரும் பயன்பெறுவோம்

 12. ஜெயதேவர் கீதா கோவிந்தத்தைப் பற்றிய செய்தியை நினைவூட்டியதற்குக் கட்டுரையாசிரியருக்கு நன்றி.

  கண்ணனே ஜெயதேவர் கோலத்தில் வந்து அவர் ஏட்டில் எழுதியதை பிரபல கதா-காலட்சேப கர்த்தா ஒருவர் நிகழ்த்திய “ராதா கல்யாண” உத்சவத்தில் கூறியிருந்ததை நினைவூட்டியது. ஜெயதேவர் வாழ்க்கையில் நடந்த இந்த அற்புதம் “ப்ரியே சாரு சீலே” என்ற அஷ்டபதியை ஒட்டி அதை எழுதும் முன் நடந்ததாக அதில் கூறப்பட்டது. இது தென்னிந்திய பஜனை சம்பிரதாயத்தில் முகாரி ராகத்தில் பாடப்படுகிறது.

  // நாயகநாயகி பாவத்தைப் பெரிதும் போற்றும் திருமால் நெறியில் , காதலின்பத்தை விரிவுபடுத்தும் ஊடலும் ஊடல் தணித்தலும் , ஊடல் தணிக்க நாயகன், நாயகியை வணங்குவதாகக் கூறலும் இல்லை என்பது வியத்தற்குரிய செய்தி. //

  இதைப் பற்றிய ஆழ்ந்த அறிவோ ஆராய்ச்சியோ என்னிடம் இல்லை. எனினும், ராதையின் பாதத்தைக் கண்ணன் தன் தலையில் வாங்கிக் கொண்டான் என்பது சம்பிரதாய ரீதியிலும் முரண்படாது என்பதற்கு எனக்குத் தெரிந்த திருஷ்டாந்தங்கள்:

  (1) உடையவரின் சீடராகிய வடுக நம்பி வேடத்தில் திருக்குறுங்குடிப் பெருமாளே வந்து உடையவர் சாத்திய திருமண்ணில் இருந்த மீதியை உடையவர் கையாலேயே தன் மீது சாத்திக் கொண்டான். அதனாலேயே “வைஷ்ணவ நம்பி” என்று அந்த திவ்விய தேசத்துப் பெருமாளுக்குப் பெயருண்டு.

  (2) கீதையில் கண்ணன் “என் பக்தனாகிய ஞானி எனக்கே அந்தராத்மாவாகிறான்” என்று தன் பக்தர்களின் புகழைப் பாடுகிறான். இவ்விடத்தில் சுவாமி தேசிகர் “சகல ஜகத்துக்கும், எல்லா சேதனருக்கும் இவனே அந்தராத்மாவாக இருக்கையில், இவன் எப்படி ஞானியைத் தனக்கு அந்தராத்மாவகச் சொல்ல முடியும்?” என்ற சந்தேகத்தை எழுப்பி, அதற்குத் தானே சமாதானமும் கூறுகிறார்… “அதெல்லாம் நம்மைக் குறித்து வேதம் கூறும் சித்தாந்தம். இங்கு கூறப்படுவதோ கண்ணனுடைய சித்தாந்தம்” என்று விளக்குகிறார்!

  மேற்கண்ட திருஷ்டாந்தங்களில் திருமால் பரத்துவத்துக்குக் களங்கம் உள்ளதாக எந்த வைஷ்ணவரும் கருதுவதில்லை. ஆகையால், ராதை கண்ணன் தலையில் கால் வைத்ததாகக் கருதப்படுவதில் தவறொன்றுமில்லை என்றே ஏற்படுகிறது, அதாவது ராதையை ஒரு உயர்ந்த பக்தையாக, எல்லையில்லா பக்தியின் வடிவம் (epitome of unlimited devotion) என்று கொண்டால்.

  இந்த கெளரவம் நித்ய முக்தர்களுக்கும் கிட்டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அங்கோ, எப்பொழுதுமே உடையான்-உடைமை பாவம் (bhaavam) தான். பெரிய பிராட்டியாகிய திருமகள் என்றுமே அவனுக்கு சேஷபூதை, திருமால் என்றுமே அவளுக்கு ஸ்வாமி; இதில் வைஷ்ணவர்கள் பெரும்பாலும் மாறுபடுவதில்லை என்றே நினைக்கிறேன் – மத்வர்களும் சரி, ராமானுஜ தர்சிகளும் சரி.

  நம் சனாதன தர்மத்தில் இருபெரும் தெய்வங்களில் மங்கையொரு பாகனாய் ஒருவரும் திருவமர் மார்பனாக ஒருவரும் ஓதப்பட்டு வருதலின் நம் முன்னோர்கள் பெண்மைக்குக் காட்டிய மரியாதையை உணர்த்துமென்பது என் கருத்து.

 13. முனைவர் அய்யா விற்கு மிக மிக நன்றி.
  அருமையான கட்டுரை.வாசித்தது மிக இனிமையான அனுபவம்.
  இறைவன் தொண்டர் உள்ளது ஒடுக்கம் என்றால் அது உயர்ந்த அன்பினால் தானே? அந்த அன்பு என்ன தான் செய்யாது?
  சிவபெருமான் நிறத்தை பற்றி ,
  வட மற்றும் தென் இந்திய காலேண்டர் ஓவியங்களில் மட்டுமே சிவபெருமான் நீலமாக காட்டப்படுகிறார்.
  இது சமீபத்திய ஒரு தவறுதலான விஷயம் மட்டுமே என்பது எனது தாழ்மையான எண்ணம்.
  தெய்வத்தின் குரல் புத்தகத்திலும் சிவன் நிறம் சரஸ்வதியைப்போன்று வெண்மை என்றே சுவாமிகள் குறிப்பிடுகிறார்.
  ஒருவேளை பொன்னிறமான ராஜ ராஜேஸ்வரி அன்னை அருகில் இருப்பதால் பொன்னார் மேனியனாகவும் இருக்கிறாரோ என்னவோ?
  நீலம் அவர் கண்டத்தில் மட்டும் தான்.
  அவரே எல்லா நிறங்களையும் கடந்தவர் என்றாலும் பக்தன் விரும்பும் வடிவத்தில் அவர் வெள்ளை அல்லது பொன்னிறம். அவர் பிரிய மைத்துனர் இனிய நீல நிறம்.
  அன்புடன்
  சரவணன்

 14. திரு கந்தர்வன் அவர்களுக்கு, நன்றி. ஸ்வம் என்றால் உடைமை.; ஸ்வாமி என்றால் உடையான் என அறிகின்றேன். சேஷபூதை என்ற சொல்லின் பொருளையும் ஸ்வாமி சேஷபூதை குறித்த வைணவதத்துவத்தையும் குறித்து எழுத வேண்டுகின்றேன்

 15. // திரு கந்தர்வன் அவர்களுக்கு, நன்றி. ஸ்வம் என்றால் உடைமை.; ஸ்வாமி என்றால் உடையான் என அறிகின்றேன். சேஷபூதை என்ற சொல்லின் பொருளையும் ஸ்வாமி சேஷபூதை குறித்த வைணவதத்துவத்தையும் குறித்து எழுத வேண்டுகின்றேன்//

  இதைப் பற்றி தத்துவத் த்ரயம் முதலிய நூல்கள் விளக்குகின்றன என்று நினைக்கிறேன்.

  எனக்குத் தெரிந்தவை…

  வைஷ்ணவத்தில் ஆன்மாக்கள் “சேஷர்கள்” அல்லது “சேஷபூதன்” (ஆண்பால்) அல்லது “சேஷபூதை” (பெண்பால்) என்று கூறுவது வழக்கம். பரமாத்மாவை “சர்வசேஷி” என்றும் “சேஷி” என்றும் சொல்வது வழக்கு.

  “சேஷர்கள்”, “சேஷபூதன்”, “சேஷபூதை” = அடியவர்கள்.

  “சேஷி” = “அடியவர்களை உடையவன்” என்று பொருள்.

  “ஏகமேவ அத்விதீயம்”, “ஏகம் சத்” என்பதற்கு இத்தகைய one-way relationship தான் தர்க்க ரீதியாக ஏற்கத்தக்கது என்பதாலேயே, “ஒன்றையொன்று சார்ந்து இரண்டு வஸ்துக்கள், வேறு ஒன்றைச் சார்ந்து அவ்விரண்டும்” என்றெல்லாம் உலக விஷயத்தில் இருப்பதைப் போலல்லாமல், ஜடமாகிய அசித்து, ஞான மயமாகிய சித்துக்கள் அனைத்தும் ஒன்றையே சார்ந்திருக்கும் விதமாக இந்த சேஷ-சேஷி பாவம் (bhaavam) விளக்கப்படுகிறது.

  “பகவத் சேஷபூதனாக” இருப்பது ஆன்மாவுடைய இயல்பான நிலை என்றும், சம்சார பந்தத்தில் உள்ள நம்மை மாயையாகிய அஞானம் மூடியிருப்பதால் உண்மையான ஆன்ம ஸ்வரூபமாகிய சேஷத்வத்தை விட்டு வேறு ஒன்றைச் செய்து மேன்மேலும் கர்மவினைகளைச் சேர்த்துக்கொள்கிறோம் என்றும் வைஷ்ணவ சித்தாந்தம் கூறுகிறது.

 16. //ஒருவேளை பொன்னிறமான ராஜ ராஜேஸ்வரி அன்னை அருகில் இருப்பதால் பொன்னார் மேனியனாகவும் இருக்கிறாரோ என்னவோ?

  Tvaya hruthva vamam vapur aparitripthena manasa
  Sarir’ardham sambhor aparam api sankhe hritham abhut;
  Yad ethat tvadrupam sakalam arunabham trinayanam
  Kuchabhyam anamram kutila-sadi-chuudala-makutam. (SL, sloka #23)

 17. இன்று பிருந்தாவன த்வாதசி. “கர சரள கண்டனம் மம சிரசி மண்டனம் தேஹி பத பல்லவம்” என்று பிரியையின் (வ்ரஜத்தில் ராதையை செல்லமாக ப்ரியாஜூ என்று அழைக்கிறார்கள்) சரணத்தை தன் தலையில் தாங்கும் போக்கு என்றும் கோலாஹலமாக இருக்கும் கண்ணனிடமே எதிர் பார்க்க முடியும். மற்றும் கந்தனிடம். எனவே தான் வள்ளல் அருணகிரி பாட்டுக்கு பாட்டு மால் மருகா மால் மருகா என்று போற்றுகிறார். மாமனின் கோலாஹலத்திற்கு சற்றும் குறைவில்லாதது அல்லவா மருமகனுடயது. வள்ளிக் குறத்திக்கு கந்தனின் பால் காதலும் கந்தன் வள்ளிக்கு மயங்குவதும் விடாது அவன் மாமனை நினைவூட்டுகிறது.

  வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்
  பாதா குறமின் பத சேகரனே

  வள்ளிக் குலாத்தி கிரிவாழும்
  வள்ளிக்கு வாய்த்த பெருமாளே

  என்று வள்ளிமலை திருப்புகழில் கந்தன் வள்ளிக்கு வாய்த்ததை கொண்டாடுகிறார். (ககனமும் அனிலமும்)

  இன்று வ்ரஜத்தில் துளசி கல்யாணம் பார்க்க முடியாது போனாலும் திருமால் மருகனுக்கு வள்ளியுடன் நடந்த மணத்தை நினைவுகூரும்

  அக்குறமகளுடன் அச்சிறு முருகனை
  அக்கண மணமருள் பெருமாளே

  என்று எண்ணி மனம் நிறைவு பெறுகிறேன்.

  பெருமாளையும் பெருமாளின் மருகனையும் இன்று நினைவிருத்திய ஸ்ரீ கோ.ந.மு விற்கு சிரம் தாழ்ந்த நமஸ்காரம்.

  அடியவர் இச்சையில் எவை எவை உற்றன
  அவை தருவித்தரும் பெருமாளுக்கு ஹரஹரோஹரா.

 18. கிழத்தி உயர்வும் கிழவோன் பணிவும் என்று தலைப்பைப் பார்த்தவுடனே ஏதோ ஜெயலலிதா தமிழகத்தில் ஏற்றம் பெறுகிறார், கருணாநிதியோ மத்தியில் பணிகிறார் என்ற ரீதியில் அரசியல் கட்டுரையாயிருக்குமோ என்று பார்த்தேன். பக்திக்கட்டுரை. நிற்க.

  இந்த அர்த்தநாரி தத்துவத்தை கிருபானந்த வாரியார் சுவாமிகள் மீனாட்சி கல்யாண விரிவுரையில் அவருக்கான எளிமையான பாணியில் விளக்கினார். மீனாட்சியம்மை திக்விஜயம் செய்தபோது பூலோகத்தை வென்று வானுலகத்தையும் வென்று பின் எமலோகம் சென்றாராம். எமன் வரவேற்றானாம். யுத்தம் செய்கிறாயா பணிகிறாயா என்று வினவ, எமன் சற்றே யோசித்தானாம். “திருக்கடையூரில் உதைத்தது நினைவிருக்கிறதா?” என்று கேட்டாராம் மீனாட்சியம்மை. உடனே எமன் இன்னும் காயம் இருக்கிறதே (பிளாஸ்திரி போட்டிருக்கேனே தாயே) என்று சொல்லிப் பணிந்தானாம்.

  திருக்கடையூரில் உதைத்தது இறையனாராயிற்றே என்று கேட்பது நியாயமான ஐயம் தான். ஆனால் அங்கே எமன் இடது காலால் உதைபட்டான். ஆகவே கொள்ள வேண்டிய கருத்து “ஊன்றிய திருவடி ஈசன் திருவடி, உதைத்த திருவடி உமையவள் திருவடி”. ஏனென்றால், மழபாடி மாணிக்கன் மாதிடப் பாகன்.

  திருச்சிற்றம்பலம். திருச்சிற்றம்பலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *