அறியும் அறிவே அறிவு – பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5
(தொடர்ச்சி…)
அகந்தை உண்டாயின் அனைத்தும் உண்டாகும்
அகந்தை இன்றேல் இன்று அனைத்தும் – அகந்தையே
யாவும் ஆதலால் யாது இது என்று நாடலே
ஓவுதல் யாவும் என ஓர்
பொருள்: அனைத்திற்கும் காரணமான “நான்” என்னும் அகங்காரம் தோன்றுமானால் சகல விதமான உலகத் தோற்றங்களும் காணப்படும். அகந்தையின் எழுச்சி இல்லையென்றால் காணும் அனைத்தும் மறைந்து போகும். இந்த அகந்தை ஒன்றே எல்லாமாகும். ஆகையினால் “இந்த அகந்தையின் உண்மை எப்படிப்பட்டது? இது என்ன?” என்று அதன் தன்மையை நாடி விசாரித்து அறிவதே எல்லாவற்றையும் துறப்பதாகும் என்று அறிவாயாக.
இவையெல்லாம் ஏற்கனவே சொல்லப்பட்ட கருத்துக்கள்தான். சீடனுக்கு எந்த வித சந்தேகமும் இருக்கலாகாது என்பதால், இது போன்ற மிக முக்கியமானவைகளை மறுபடியும் சொல்லி பொருளை விளங்க வைத்தல் அவசியமாகிறது.
உடல் பற்றிய உணர்வு தோன்றும்போதே, “நான்” என்ற எண்ணமும், அதன் கூடவே நம்மைச் சுற்றியுள்ள உலகமும் எல்லாம் தோன்றும். ஆனாலும் அந்த “நான்” மற்றும் அதனுடன் தோன்றிய மற்ற எல்லாமும் தினம் தினம் மறைந்து, மறுபடியும் கிளைத்து எழுவதன் மர்மத்தை எவருமே தீர விசாரிக்காது, “நான்” என்ற எண்ண நிலையிலே நடந்து கொண்டிருப்பவைகளைத்தானே பெரிதாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். அவைகள் தானே நம்மை தினமும் விதவிதமான அல்லல்களுக்கு உட்படுத்துகிறது?
“நான்” என்ற எண்ணம் மறைந்து மிக சுகமான ஆனந்தத்தை தூக்கத்தில் தினம் தினம் அனுபவிக்கும் நாம் அதைப் பற்றி சிறிது கூட சிந்திப்பதில்லையே. அந்த ஆனந்த நிலையை விழிப்பு நிலையிலும் நம்மால் கொண்டு வர முடிந்தால்…? ஆகா, எவ்வளவு அற்புதமாக இருக்கும்? ஆக, அந்த அகந்தை இல்லா நிலையைக் கொண்டு வர, நாம் முதலில் அகந்தை எழும் இடத்தைக் கண்டு, அதன் தன்மையையும் அறிய வேண்டும் அல்லவா? அப்படி விசாரித்து அறிவதே எல்லாவற்றையும் துறப்பது என்கிறார் ரமணர்.
மற்றபடி “நான்” தோன்றும்போது நாம் காணும் பொருட்களையும், நமது எண்ணங்களையும் மட்டும் துறப்பது துறவறம் அல்ல என்றும் சொல்கிறாரோ? எண்ணங்களும், பொருட்களும் நம்மைப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை; நாம் தான் அவைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறோம். ஆகையால், மற்றவைகளை விடுவதைவிட எல்லாவற்றுக்கும் காரணமான “நான்” என்ற எண்ணத்தை விட்டால் அதுவே துறப்பதுதான் என்றே சொல்கிறார்.
இனி வரும் மூன்று செய்யுட்களும் அகந்தை எழும் இடத்தைக் கண்டு பிடிக்கும் ஆன்ம விசாரத்தைத் தெளிவான முறையில் விளக்குகிறதாக அமைந்து, “உள்ளது நாற்பது” நூலின் இதயமாக விளங்குகின்றன.
நான் உதியாது உள்ள நிலை நாம் அதுவாய் உள்ள நிலை
நான் உதிக்கும் தானம் அதை நாடாமல் – நான் உதியாத்
தன் இழப்பைச் சார்வது எவன்? சாராமல் தான் அதுவாம்
தன் நிலையில் நிற்பது எவன்? சாற்று
பொருள்: “நான்” என்ற தேக-ஆன்ம புத்தி எழாமல் இருக்கும் நிலையே நாம் அந்த ஆத்ம சொரூபமாக இருக்கும் நிலையாகும். இந்த நானென்ற அகந்தை எழும்பும் அந்த இடத்தை விசாரித்துத் தேடாமல், அகந்தை எழாமலிருக்கக் கூடிய ஜீவபோத நாசத்தை அடைவது எப்படி? எவ்வண்ணம் அடைவது? அகந்தையின் நாசத்தை அடையாமல் தான் அந்த ஆத்மா சொரூபமாய் உள்ள தனது யதார்த்த நிலையில் ஸ்திரமாக நிலைபெற்று நிற்பது எப்படி? சொல்வாய்.
“நான்” என்னும் எண்ணத்தை விடுவதே துறவறம் என்று முன்னே சொன்னார். அங்கும் துறப்பது, அதாவது எண்ணத்தை விடுவது, என்ற ஒரு செயல் வருகிறதல்லவா? அப்படித் துறப்பவன் அல்லது விடுபவன் யார் என்ற கேள்வியும் வரும். இந்தச் செய்யுளில் இன்னும் ஒரு படி மேலே போய், “நான் என்பது எழாத நிலை” பற்றிக் கூறுகிறார்.
சீடனுக்கு இது ஒரு முக்கிய பாடம். விடுவது என்றால் நாம் முன்பு கொண்ட ஒன்று தற்போது நம் வசம் இல்லை என்பது தெளிவு. முதலில் அப்படிப்பட்ட “நான்” எண்ணம் இருந்ததுதான். சீடன் தனது தீவிர முயற்சியால், அந்த எண்ணத்தைக் கழற்றி விட்டான் என்று சொல்லலாம். அப்படி அவனது சாதகத்தால் விளைந்த “நான் எழாத நிலையே”, அவனுக்கு “தான் அதுவாய் உள்ள நிலை”யாக அனுபவத்தில் வரும் என்று சொல்கிறார். முன்னது சாதகத்தின் விளைவு என்றும், பின்னது அதன் தொடர்ச்சியானஅனுபவமாக வந்து நிலைத்து இருப்பது என்றும் கொள்ளலாம். “அது நீ” என்று மறைகள் சொல்வதை நமது அனுபவத்தில் உணர ஒரு எளிதான வழியைக் காட்டியிருக்கிறார். அது “நான்” என்பது உதிக்காத வண்ணம் நாம் செயலாற்றும் வழி.
சரி, “நான்” என்பதை விடுவதற்கு அது எங்கிருந்து உதிக்கிறது என்று அதன் மூலத்தானத்தைத் தேட வேண்டும் அல்லவா? அதைத் தேடி அறியாமல், நான் எனும் அகந்தையை எப்படி விடுவது? அப்படி விட்டால்தானே “நான் உதியாதுள்ள நிலை”யை அடைய முடியும். அந்த நிலை சாத்தியமானால்தானே “நாம் அதுவாய் உள்ள நிலை”யில் நிலைத்து நிற்க முடியும். அதுதானே நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டிய இலக்கு என்று இங்கு சொல்கிறார். அந்த “நான்” உற்பத்தியாகும் இடத்தைக் கண்டுபிடிக்க சீடனுக்கு என்ன உபாயம் சொல்கிறார் என்று இப்போது பார்ப்போம்.
எழும்பும் அகந்தை எழுமிடத்தை நீரில்
விழுந்த பொருள் காண வேண்டி – முழுகுதல் போல்
கூர்ந்த மதியால் பேச்சு மூச்சு அடக்கிக்கொண்டு உள்ளே
ஆழ்ந்து அறிய வேண்டும் அறி
பொருள்: தண்ணீரில் விழுந்த ஒரு பொருளைக் கண்டெடுக்கும் பொருட்டு, அந்த நீரில் மூழ்கும் ஒருவன் பேச்சையும், மூச்சையும் அடக்கிக் கொண்டு முழுகுவது போல, அனைத்திற்கும் முதல் காரணமான “நான்” எனும் அகந்தை கிளம்பும் இடத்தைக் காண தனது எண்ணங்களாகிய பேச்சையும், மூச்சையும் அடக்கிக் கொண்டு, தன் உணர்வாகிய இதயத்தில் ஆழ்ந்து, கூர்மையான ஒருமுனை நினைவின் உதவியால் அதி நுட்பமான அதை அறிய வேண்டும் என்பதை அறி.
நமது எந்த நிலையிலும், உயிர் இருக்கிறது என்பதற்கு அடையாளமாக மூச்சு இருக்கிறது. ஆக மூச்சு என்பது பிராணனின் இயக்கம். நாம் பேசுவதற்கும் மூச்சு தேவை ஆகிறது. நாம் எதைப் பேசுகிறோம்? நமது எண்ணங்களை வெளிப்படுத்தவே நாம் பேசுகிறோம். அவைகளை வெளிப்படுத்த வேண்டாம் என்ற எண்ணம் இருந்தாலோ, அல்லது எண்ணங்களே இல்லாது போனாலோ பேச்சு என்ற சாதனமே வேண்டாம். ஆக பேச்சு என்பது எண்ணத்தின் வேறோர் உரு என்று கொள்ளலாம். எண்ணம் என்பது சூக்ஷுமமாகிய மனதின் சலனத்திற்கும், பிராணன் என்பது தூலமாகிய நமது ஐம்புலக் கருவிகளின் சலனத்திற்கும் காரணமாவதினால், அவை இரண்டும் அடங்கிவிட்ட உள்ளமானது அலைகளற்ற ஆழ்கடல் போல் அமைதியாகிறது.
நீரில் உள்ள பொருளை எடுக்க முனைபவன் பேச்சையும், மூச்சையும் அடக்கிக் கொண்டு நீரில் மூழ்குகிறான். அதே போல, “நான்” எனும் அகந்தை கிளம்பும் இடத்தை நாடுபவன், அது தனக்குள் இருந்து கிளம்புகிறது என்பதை முதலில் உணர்வதால், தனது எண்ணங்களையும், மற்ற கருவிகளின் இயக்கத்தையும் கட்டுப்படுத்தி தன்னுள் ஆழ்கிறான். அப்படி மூழ்கும்போது, தனது அதி நுட்பமான புத்தியை உபயோகப்படுத்தி, வேறு எதிலும் மனதைச் செலுத்தாத வைராக்கியத்துடன் தன்னுள் நோக்குகிறான். இங்கு வைராக்கியத்துடன் தன்னுள் ஆழ்வது என்பது நீரில் மூழ்குபவன் ஒரு கல்லைக் கட்டிக்கொண்டு நீரில் இறங்குவது போல ஆகும். இவை தவிர, தன்னிழப்பைச் சார்பவனுக்கு ஏதோ ஒரு வடிவில் குருவருளும் கிடைக்கும். அதுவன்றி அவனால் மேலே செல்ல இயலாது என்பது ஆன்றோர்களின் வாக்கு.
மூச்சை அடக்க வேண்டும் என்பதற்காக ஒருவன் பிராணாயாமப் பயிற்சிகள் செய்யவேண்டும் என்பது கிடையாது. தனது ஆன்ம சொரூபத்தை உணர வேண்டும் என ஒருவன் தீவிரமாக முனையும் போது, பிராணன் உட்பட அவனது மற்றைய இயக்கங்களும் தானாகவே அடங்கிவிடும். ஆனாலும் முதல் முயற்சி நமதாக இருத்தல் அவசியம். இல்லையென்றால் இதைப் பற்றிய அறிவு, தெளிவு அனைத்துமே புத்தி பூர்வமாக நின்று விடுமே அல்லாது அனுபவத்திற்கு வராது.
நானென்று வாயால் நவிலாது உள் ஆழ் மனத்தால்
நான் என்று எங்கு உந்தும் என நாடுதலே – ஞான நெறி
யாம் அன்றி அன்று இது நான் ஆம் அது என்று உன்னல் துணை
யாம் அது விசாரம் ஆமா?
பொருள்: நான் என்று வாயால் சொல்லிக்கொண்டிருக்காமல் தனக்குள் ஆழ்ந்த மனத்தினால், இந்த அகந்தையாகிய “நான்” எங்கிருந்து எழுகிறது என்று அதை நாடி விசாரித்தலே ஞான வழியாகும். அப்படிச் செய்யாது “நான்” இந்த சரீரமல்ல, பிரம்மம் என்ற பாவனையுடன் தியானம் செய்வது சாதகனுக்கு ஒரு துணையாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அந்த தியானமே ஆன்ம விசாரத்திற்கு நேரான சாதனையாக ஆகுமா?
வழக்கமான குரு-சீடன் உபதேச முறைப்படி கற்றுக் கொள்வது என்பது ச்ரவணம், மனனம், நிதித்தியாசனம் என்ற மூன்று நிலைகளைக் கொண்டது. குருவானவர் தான் சொல்லிக் கொடுப்பதை வாயால் சொல்ல, சீடன் அதைக் காது கொடுத்துக் கேட்பது ச்ரவணம். சீடன் குரு சொன்னதை மனதில் அசை போட்டு அதன் அர்த்தங்களைக் கிரகிப்பது, மற்றும் அதைப் பற்றி மேலும் ஆராய்ந்து தீர்க்கமாக அறிவது என்பதெல்லாம் மனனம் என்ற நிலையில் வரும். சீடன் தான் மேற்படி அறிவு பூர்வமாய் நிச்சயமாய்த் தெரிந்து கொண்டதை பிரயோகம், தியானம் முதலிய வழிகளால் தனது அனுபவத்திற்குக் கொண்டு வர முயற்சி செய்வது நிதித்தியாசனம் எனப்படும். இந்த மூன்று நிலைகளிலும் சீடன் தனது மனதை ஒரு கருவியாக உபயோகிக்கிறான். மேலும் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமான தொழில்கள் நடக்கின்றன.
இந்தச் செய்யுள் மூலம் ரமணர் சொல்வது ஞான வழியாகும். இது “நான் உடல் அல்ல, நான் எங்கும் வியாபித்துள்ள பிரம்மம்” என்றெல்லாம் வாயாலும் சொல்லாது, மனதளவிலும் நினையாது தன்னைத் தானே விசாரம் செய்யும் ஒரு நேரான மார்க்கம். இங்கு சீடன் தனது மனத்தின் மூலத்தை நாடித் தேடுகிறான். முன்பு சொல்லப்பட்ட தியானம் என்பது மனத்தின் தொழிலாகுமே தவிர மௌனம் ஆகாது. ஆனால் ஞான மார்கத்திலோ தொழிலற்ற மனமே இதயத்தில் ஆழ்ந்து தன்னை அறியும் திறன் அடைகிறது.
ஆக அகந்தையின் மூலத்தை அறிய வேண்டுமென்ற உறுதிதான் ஞான விசாரத்தின் உயிர் நாடி. அந்த உறுதி தளராமல் இருக்குமானால், சீடன் வேறு எந்த சாதனையும் செய்யத் தேவை இல்லை. ஆதலால் ஆன்மாவாகிய பிரம்மத்தை மனத்தில் இருத்தி செய்யப்படும் தியானம் துணையாகுமே அன்றி எப்படி மனத்தையே அழிக்கும் சாதனமாகும் என்று கேட்கிறார் ரமணர்.
ஏனென்றால், மனது அழியவில்லை என்றால் அகந்தையும் அழியவில்லை என்றே பொருள். மனமானது எண்ணங்களின் தொகுப்பு என்றால், அகந்தை உணர்ச்சிகளின் தொகுப்பாய் இருக்கிறது என்று கொள்ளலாம். அகந்தை அழிந்தால் அங்கு என்னதான் மிஞ்சும் என்ற சந்தேகம் சீடனுக்கு வரலாம் அல்லவா? அதற்கு ரமணர் என்ன சொல்வார் என்று மேலும் பார்ப்போம்.
(தொடரும்…)
சு பாலச்சந்திரன்
மனமற்ற நிலையில் நான் என்ற உணர்வு அரும். ஆனால் மனமற்ற நிலை பெறுவதற்கு எல்லாம் ஒன்றே என்ற அத்வைத நிலை எப்போதும் உள்மனத்தில் ஆழப்பதிந்தால் தான் இயலும். படிக்க தெளிவாக உள்ளது. இடை விடாத பயிற்சி இருந்தால் இந்நிலை அனைவரும் எய்தலாம்.
திரு ராமன் அவர்களின் இந்தத் தொடர் மிக அருமை.
அகந்தை குறித்து நான் சென்ற கட்டுரையில் எழுப்பிய வினாக்களுக்கு விடை தரும் வண்ணம் இக்கட்டுரை அமைந்துள்ளது.
///ஆக அகந்தையின் மூலத்தை அறிய வேண்டுமென்ற உறுதிதான் ஞான விசாரத்தின் உயிர் நாடி. அந்த உறுதி தளராமல் இருக்குமானால், சீடன் வேறு எந்த சாதனையும் செய்யத் தேவை இல்லை. ஆதலால் ஆன்மாவாகிய பிரம்மத்தை மனத்தில் இருத்தி செய்யப்படும் தியானம் துணையாகுமே அன்றி எப்படி மனத்தையே அழிக்கும் சாதனமாகும் என்று கேட்கிறார் ரமணர். ஏனென்றால், மனது அழியவில்லை என்றால் அகந்தையும் அழியவில்லை என்றே பொருள். ///
எத்தனை ஆழமான கருத்துக்கள், எத்தனை எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளன!
அகந்தையின் மூலம் என்ன?
நான் என்ற தான் பெற்ற கல்வி, அறிவு, மொழித்தேர்ச்சி, பதவி, பணம், வெற்றிகள், சாதனைகள்,சொத்து, குடும்பம், நற்குணங்கள் பற்றிய இறுமாப்பு என நீண்ட வரிசையில் வரும் இத்தனைக் காரணங்களையும் எப்படி வெல்வது. இவற்றை எல்லாம் விட்டால் தன்னிடம் விஞ்சுவது என்ன என்ற வினாவில் அடியவன் தத்தளிக்கும்போது இந்தக் கட்டுரை வந்தது.
உண்மைதான், அகந்தை உணர்ச்சிகளின் தொகுப்பாகவே இருக்கிறது.
எண்ணங்கள் ஓயவில்லை.
அகந்தையின் மூல விசாரணைதான் ஞான விசாரத்தின் உயிர்நாடி என்பது சத்தியமான உண்மை. இதை உணராதவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.