யார் இந்த நீரா ராடியா?

மூலம்(நன்றி): “அவுட்லுக்” சுனித் அரோரா

nira_radia2G அலைக்கற்றை ஊழல், ஊடகங்களில் வெளியான பிறகு ஆண்டிமுத்து ராசாவுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய அளவில் பேசப்படும் பெயர் நீரா ராடியா என்பதாகும். யார் இந்தப் பெண்மணி? மிகப்பெரிய தொழிலதிபர்களுக்கும், பெரிய அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்தில் பெரும் புள்ளிகளுக்கும், ஊடகங்களில் கொடிகட்டிப் பறக்கும் பல பிரபலங்களுக்கும் இவர் எப்படி இந்த அளவுக்கு நெருக்கமாக ஆனார்? நூறு கோடிக்கும் அதிகப்படியான மக்கட் தொகையுள்ள இந்திய அரசியலில் இந்த ஒரு பெண்மணி குறுக்குச்சால் ஓட்ட முடிந்தது எப்படி? இப்படி எதையெல்லாமோ நினைத்து மக்கள் பெருமூச்சு விடுவது தெரிகிறது. நம்மைப் போன்ற சாதாரண மக்கள் எல்லா மட்டங்களிலும் மேலோட்டமாகத் தெரியும் விஷயங்களை மட்டும் பார்த்தும், கேட்டும், புரிந்து கொள்கிறோம். அதற்குப் பின்னணியில் ஆழப் புதைந்து கிடக்கும் ரகசியங்கள் நமக்கு அத்தனைச் சுலபமாகக் கிடைத்துவிடுவதில்லை. அது போலத்தான் இந்த நீரா ராடியா எனும் பெண்ணின் வரலாறும்.

இந்த அம்மையாரின் தொலைபேசி உரையாடல்கள் பதிவுசெய்யப்பட்டு சில தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்ட போது மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியக் குடியரசில் பிரதம மந்திரிக்கு மட்டுமே உள்ள ஏகபோக உரிமையான மந்திரிசபை அமைப்பதில் பல வெளியுலக சக்திகள், பெருமுதலாளிகளின் சதுரங்க ஆட்டம், அரசியல்வாதிகளின் செல்வாக்கு இவையெல்லாம் தான் இந்திய மந்திரிசபை அமைப்பதில் முக்கியத்துவம் வகிக்கின்றன என்பது நமக்கெல்லாம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்திய அரசியல் சட்டம் எனும் ஆல விருட்சத்தின் ஆணி வேர் அறுக்கப்படுகிறதோ; மக்கள் ஜனநாயகம் சில முதலாளிகளின் சதுரங்கத்தில் பகடைக்காய்களாக ஆக்கப்படுகின்றனவோ என்றெல்லாம் அச்சம் தோன்றுகின்றது. பல கோடி ரூபாய் செலவில் தேர்தல்களை நடத்தி, மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் பிரதமராகப் பதவி ஏற்றுக் கொள்வதாகவும்; அதன்பின் அவர் தன்னுடன் பணியாற்ற ஓர் அமைச்சரவையை அமைக்கிறார் எனவும்தான் இதுநாள் வரை நம்பியிருந்தோம். ஆனால் இப்போது பெருமுதலாளிகள்தான் இந்த வேலைகளைச் செய்கிறார்களோ என்கிற அச்சம் ஏற்படுகிறது. அப்படியானால் அவர்கள் தங்களுக்கு ஆதாயம் இல்லாமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்களா என்கிற ஐயப்பாடும் நமக்குத் தோன்றுவது இயற்கையானது அல்லவா?

இதற்கெல்லாம் காரணமாக இருந்த பெயர் இந்த நீரா ராடியா. இவரைப் பற்றி எதுவும் தெரியாமலே இவரது குரலை பதிவு செய்த ஒலிநாடா மூலமாக பலருடன் பேசுவதைக் கேட்க முடிந்தது. இவரது புகைப்படம் பல பத்திரிகைகளில் வெளியானது. ஐம்பது வயதானவராகத் தோன்றும் இந்த அழகிய பெண்மணிக்கு புதுடில்லியில் இருக்கும் ஓர் ஆடம்பர தோட்ட பங்களா குறித்தும் அங்கு அடிக்கடி நடக்கும் பெரும் விருந்துகளும் பற்றியெல்லாம் இப்போது செய்திகள் வெளியாகின்றன. இவரது தொலைபேசி உரையாடல்கள் வெளியானவுடன் ஓர் இந்தியப் பெருமுதலாளி உச்ச நீதிமன்றத்தை அணுகுகிறார். தங்களது உரிமை பாதிக்கப்படுகிறது என்பது அவரது வாதம். அது நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியதாகையால் அதுபற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. ஆனால் இந்த ரகசியங்களையெல்லாம் வெளியிட்டு இந்த வழக்கில் பிரதிவாதியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் பத்திரிகை “அவுட்லுக்” எனும் ஆங்கிலப் பத்திரிகை. புது டில்லியிலிருந்து வெளியாகும் இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் வினோத் மேத்தா என்பவர். இந்தப் பத்திரிகையின் 6-12-2010 இதழில் இந்த நீரா ராடியா குறித்த ஒரு கட்டுரையை சுனித் அரோரா என்பவர் எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் அவர் இந்த நீரா ராடியாவின் பின்புலம் பற்றியும் அவரது கடந்த கால வரலாறு குறித்தும் சில தகவல்களைக் கொடுத்திருக்கிறார். அவற்றைப் படித்ததில் அந்த அம்மையாரைப் புரிந்து கொள்ளவும் இப்போது நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் பல நிகழ்வுகளில் இந்த அம்மையாரின் பங்கு பற்றியும் அறிந்து சிறிது தெளிவு பெற முடிகிறது. அதன் சுருக்கத்தை இப்போது பார்க்கலாம்.

முதலில் ஒரு சுருக்கமான முகவுரை

 • ஒரு காலத்தில் ‘நீரா ஷர்மா’ என அழைக்கப்பட்ட இந்த இந்திய வம்சாவளிப் பெண் 1970-இல் கென்யா நாட்டிலிருந்து லண்டனுக்குக் குடிபெயர்ந்து வடக்கு லண்டன் பள்ளியொன்றில் படித்துப் பின்னர் வார்விக் பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்.
 • இவருக்கு இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரர். தந்தை விமானப் போக்குவரத்துடன் சம்பந்தப்பட்டவர்.
 • நீரா ராடியாவுக்குத் திருமணமாகி மூன்று மகன்கள் உண்டு. திருமணம் முறிந்துவிட்டது. கணவர் இங்கிலாந்திலுள்ள தொழிலதிபர் ஜனக் ராடியா.
 • 1995-இல் இவர் சஹாரா விமானக் கம்பெனியின் பொதுஜனத் தொடர்பாளராக இந்தியாவுக்குள் நுழைந்தார்.
 • இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்சின் பிரதிநிதியாகவும், கே.எல்.எம்., யு.கே.ஏர் ஆகிய கம்பெனிகளிலும் சம்பந்தம் உண்டு.
 • 2000-த்தில் ‘கிரெளன் ஏர்’ எனும் கம்பெனியைத் தொடங்கினார். இவருடைய சகோதரிகளில் ஒருவரான கருணா மேனன் என்பவர் இதில் பங்குதாரர். ரூ.100 கோடி முதலீட்டில் தொடங்குவதாக ஆரம்பித்துத் தோல்வியில் முடிந்தது.
 • 2001-இல் புது டில்லியில் ‘வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ்’ தொடங்கப்பட்டது. தொடர்ந்து பல ஆலோசனை மையங்கள் தொடங்கப்பட்டன.
 • டாடா குழுமத்தின் 90 கம்பெனிகளின் கணக்கு வழக்குகளைக் கவனிக்கும் பொறுப்பு கிடைத்தது.
 • 2008-இல் அம்பானியின் ரிலையன்ஸ¤க்கும் இவருடன் தொடர்பு ஏற்பட்டது.
 • ‘மேஜிக் ஏர்’ எனும் கம்பெனி தொடங்கும் முயற்சியிலும் 2005-இல் தோல்வி.
 • இவரிடம் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் இருக்கிறது.
 • டாடாவின் “நானோ” மினி கார் உற்பத்திக்காக 2008-இல் சிங்கூரிலும், பின்னர் 2010-இல் 2G அலைக்கற்றை விவகாரங்களிலும் தலையிட்டுப் பெரும் பிரச்சினைக்குரியவராக மாறியிருக்கிறார்.

சரி! இனி, இவர் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தைத் தெரிந்து கொள்வோமா? “அவுட்லுக்” பத்திரிகையில் சுனித் அரோரா தருகின்ற தகவல்கள் இதோ!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் நீரா ஷர்மா. ஆகாய விமான உதிரிபாகங்களை விற்கும் முகவராக இருந்த ஷர்மாவின் குடும்பம் கென்யா நாட்டிலிருந்து 1970-இல் லண்டனுக்குச் சென்றது. ஷர்மா 2002-03இல் காலமாகிவிட்டார். லண்டனில் நீரா பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டும், பிறகு இந்திய வம்சாவளி என்கிற சான்றிதழும் பெற்றார். வடக்கு லண்டனில் உள்ள ஹேபர்டேஷர் அஸ்கே பெண்கள் பள்ளியிலும் வார்விக் பல்கலைக் கழகத்திலும் படித்துப் பட்டம் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து லண்டன் தொழிலதிபர் ஜனக் ராடியா எனும் குஜராத்திக்காரரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தன. பின்னர் திருமணம் தோல்வியில் முடிந்தது. அதனால் இவர் தன் குழந்தைகளுடன் இந்தியாவில் குடியேற விரும்பினார். இந்தியா வந்தபின் இவரது மூன்று பிள்ளைகளில் ஒருவரான 18 வயதான கரன் என்பவர் 2003-இல் நீராவின் தொழில் கூட்டாளியான தீரஜ் சிங் என்பவரால் கடத்தப்பட்ட செய்தி அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த தீரஜ் சிங் யார் தெரியுமா? காலம் சென்ற முன்னாள் ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சர் ராவ் பிரேந்திர சிங் என்பவரின் பேரன். நீராவின் மகன் கடத்தப்பட்ட வழக்கில் ஒரு முன்னாள் முதலமைச்சரின் பேரன் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்தார் என்றால் இந்தப் பெண்மணிக்கு இருந்த செல்வாக்கு பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

crown-air

நீராவின் மற்ற உடன்பிறந்தார் பற்றிய செய்திகள் எதுவும் தெரியவில்லை. ஆனால் ஒரு சகோதரி கருணா மேனன் மட்டும் 2001-இல் நீராவோடு ‘கிரெளன் எக்ஸ்பிரஸ்’ என்னும் விமானக் கம்பெனியின் பங்குதாரராக அறிவிக்கப்பட்டார். இந்தக் கம்பெனி தோல்வியடைந்தது. இங்கிலாந்தில் இந்த கம்பெனியின் பாகஸ்தர்களாக அறிவிக்கப்பட்ட மற்ற இருவர் இக்பால், சைரா மேனன் ஆகியோர்; இவர்கள் ஒரே விலாசத்தில் இருப்பதாக முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் ‘சுதேஷ் ஃபவுண்டேஷன்’ எனும் நிறுவனத்தின் தலைவராக கருணா மேனனின் பெயர் இருக்கிறது. இதன் அறங்காவலர் நீரா ராடியா.

vccpl_logoஇந்த சுதேஷ் ஃபவுண்டேஷனுக்கு நீரா ராடியாவின் வைஷ்ணவி கம்யூனிகேஷன் மூலதனம் அளித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் அலுவலகம் டாடா டெலி சர்வீசஸ் அலுவலகங்கள் இருக்கும் கோபால்தாஸ் டவர்ஸில் இருக்கிறது. இதே கட்டடத்தின் 5-ஆவது மாடியில் ரிலையன்சின் அலுவலகம் இருக்கிறது. இந்த சுதேஷ் ஃபவுண்டேஷன் அறப்பணிகளுக்காகத் தொடங்கப்பட்டது. ஸ்ரீ ராம விட்டல அறக்கட்டளையோடு சம்பந்தமுடையது. இது கர்நாடக மாநிலத்தில் ஓர் ஆயூர்வேதக் கல்லூரியைத் தொடங்குவதாக இருந்தது. இது நன்கொடைகளை பெற்று வந்தது. குழந்தைகள் பராமரிப்பு, மிருகங்கள் பாதுகாப்பு, இளைஞர்கள் முன்னேற்றம், பேரிடர் துயர் துடைப்பு போன்ற பணிகள் இவர்களது நோக்கம். இப்போதைய நிலவரப்படி இந்த கருணா மேனன் டில்லியில் தனது சகோதரி நீராவுக்கு உதவியாக இருந்து கொண்டிருக்கிறார்.

1990-களின் மத்தியில் நீராவுக்குச் சொந்தமான, டில்லியில் அமைந்துள்ள சத்தர்ப்பூர் தோட்டபங்களா பல பெரிய மனிதர்கள், விமானத் தொழிலதிபர்கள் பங்கேற்பால் பிரபலமடைந்து வந்தது. ஏற்கனவே விமான கம்பெனி தொடங்க வேண்டுமென்கிற நீராவின் ஆசை இங்கு மறுபடி துளிர்விடத் தொடங்கியது. அதன் பயனாக இவர் சஹாரா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய கம்பெனிகளின் ஆலோசகராக ஈர்க்கப்பட்டார். இந்திய வான்வெளி புதிய கொள்கையின் பயனாக ஏற்பட்ட தொழில் வளர்ச்சியிலும் பங்குபெற்றார். விமான கம்பெனி அதிபர்கள் மத்தியில் இவருக்கு பிரமாதமான பெயர் கிடைத்தது. இவரைச் சுற்றி பெரும் கூட்டம் கூடத்தொடங்கியது. இவரது ஆடை அலங்காரங்களும், தோட்ட விருந்துகளும், அங்கு நடைபெறும் பூஜைகளும் இவருக்குத் தன்னை உயர்த்திக்கொள்ள பல வாய்ப்புக்களைத் தந்தன.

இந்த காலகட்டத்தில்தான் நீரா ராடியாவுக்கு ஒரு முக்கியமான நண்பரும் அதே நேரம் பரம எதிரியும் கிடைத்தார். அவர்தான் பா.ஜ.க.வின் அனந்தகுமார். இவர் அப்போது 1998-99இல் தேசிய முற்போக்குக் கூட்டணியில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அமைச்சர் அனந்தகுமாரோடு இவருக்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டது அப்போது. அவர் மூலம் மற்ற கேபினட் அமைச்சர்களின் அறிமுகமும் கிடைத்தது. பெஜாவர் மடத்தின் அதிபர் சுவாமி விஸ்வேஷ் தீர்த்தருடன் அறிமுகம் செய்து வைத்ததும் அனந்தகுமார்தான். இந்த சுவாமிதான் உமா பாரதியின் குரு. பெங்களூரிலிருந்து வெளியான ‘லங்கேஷ் பத்திரிகா’ எனும் கன்னட பத்திரிகையில் பெஜாவர் மட சுவாமியுடன் வாஜ்பாய், நீரா ராடியா ஆகியோர் இருக்கும் புகைப்படமும் வெளியாகியிருக்கிறது. ஆனால் இதன் பிறகு பெஜாவர் மட சுவாமிகளுடனான உறவு நீராவுக்கு விட்டுப் போனாலும், இந்தத் தொடர்பு மூலம் வாஜ்பாய் அவர்களின் மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யாவின் நட்பு கிடைத்தது.

இதன் பிறகு NDA ஆட்சியில் அனந்தகுமார், நகர்ப்புற வளர்ச்சி, சுற்றுலாத்துறைக்கு மாற்றப்பட்ட போது, நீரா ராடியா தனது பண்ணை இல்லத்தில் நடத்திய விருந்துகளுக்கெல்லாம் அரசுடமையான அசோகா ஓட்டலிலிருந்துதான் இந்தியச் சுற்றுலாத் துறை மூலம் உணவுகள் கொண்டுவரப்பட்டன. அனந்தகுமாருடன் இவ்வளவு நெருக்கமாக இருந்த போதும், நீரா ராடியா தனது சொந்த விமான கம்பெனியைத் தொடங்கும் கனவு 2001-இல் நிறைவேறவில்லை. சிங்கப்பூர் ஏர்லைன்சை பின்புற வழியாக இந்தியாவுக்குள் கொண்டுவரும் முயற்சிதான் நீராவின் இந்த விமான கம்பெனி தொடங்கும் முயற்சி என்று சொல்லுகிறார்கள்.

2004-இல் அமைச்சர் பிரபுல் படேல் காலத்திலும் இவர் மேஜிக் ஏர் கம்பெனியைத் தொடங்க முயற்சிகள் மேற்கொண்டதும் நடக்கவில்லை. சமீபத்தில் ரத்தன் டாடா-தான் விமான கம்பெனி தொடங்க விரும்பியபோது யாரோ ஒருவர் ரூ.15 கோடி லஞ்சம் கேட்டதாக ஒரு புகாரைத் தெரிவித்திருந்தார் அல்லவா? மூன்று முறை சிங்கப்பூர் ஏர்லைன்சுடன் கூட்டுமுயற்சி செய்தும், அவரது முயற்சி தோல்வி அடைந்ததாக அவர் கூறியிருந்தார். ஒரு தனி நபர்தான் இதற்குக் காரணம் என்றும் அவர் சொன்னார். அது யார்? அது ஜெட் ஏர்வேஸ் கம்பெனி என்று கட்டுரை ஆசிரியர் தெரிவிக்கிறார். அவர்கள்தான் தலைகீழாக நின்று டாடாவின் முயற்சிகளை முறியடித்ததாகவும் கூறுகிறார். இந்த பலமான எதிர்ப்புக்களால்தான் நீரா ராடியாவின் சொந்தக் கம்பெனி கனவு தகர்ந்தது என்றும் அவர் கூறுகிறார்.

இவ்வளவுக்கும் பிறகும்- நீரா ராடியாவின் செயல்பாடுகள் தோல்விகண்டும், காரியங்களை முடித்துத் தருவதில் இவர் வல்லவர் எனும் பெயர் நிலைபெறலாயிற்று. டாடாவின் கவனத்தை இவர் கவர்ந்தார். டாடா குழுமத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து செயல்படும் விதமாக மாற்றி அமைத்தார். நீரா ராடியாவை டாடா குழுமத்தில் சேர்த்துவிட பாம்பே டையிங்கின் நுஸ்லி வாடியாவின் சிபாரிசும் இருந்ததாகத் தெரிகிறது. அது தவிர டாடா கம்பெனியின் ஆர்.கே.கிருஷ்ணகுமாரின் முயற்சியும் இருந்திருக்கிறது. 2001-இல் டாடா குழுமங்களின் 90-க்கும் மேற்பட்ட கம்பெனிகளின் விவகாரங்கள் நீரா ராடியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

2001-இல் டாடா ஃபைனான்சின் குளறுபடிகளை சீர்செய்து தனது திறமையை உறுதிசெய்து கொண்டார். பாஜக அரசின் உச்சகட்ட காலத்தில் இவர் அரசியல்வாதிகளுடனும் அரசு அதிகாரிகளுடனும் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகத்துறைப் பெருந்தலைகளுடனும் தொடர்பு கொண்டார். இந்த காலகட்டத்தில் டாடா குழுமம் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையுடன் உரசலைக் கடைப்பிடித்தது. அந்தப் பத்திரிகைக்கு டாடா குழுமம் விளம்பரங்களை நிறுத்திவிட்டது. அந்தப் பத்திரிகையும் தனது செய்திகளில் டாடா குழுமச் செய்திகளை உதாசீனம் செய்தது. இதன் மூலம் பத்திரிகை உலகத்துக்கு, நீரா ராடியா, ‘டாடா குழுமத்தை விரோதித்துக் கொண்டால் என்ன நடக்கும்’ என்பதைக் காண்பித்தார்.

2004-இல் பாஜக அரசு வீழ்ந்த பிறகு அரசியல் அரங்கில் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள நீரா ராடியா விரும்பினார். சமீபத்திய 2G அலைக்கற்றை ஊழல் மூலம் அவரது சாமர்த்தியங்கள் மறுபடியும் வெளிப்படத் தொடங்கிவிட்டன. 2006-இல் தி.மு.க.வின் ஆ.ராசாவுடனான உறவு தொடங்கியது. அப்போது அவர் சுற்றுச்சூழல் அமைச்சர். 2007-இல் அவர் தொலைத்தொடர்பு அமைச்சராக ஆனபிறகு, டாடா டெலி சர்வீசஸ் மூலம் நீராவுக்கு நல்ல பலன் கிடைக்கத்தொடங்கியது. இப்போது ஆ.ராசா ராஜிநாமா செய்துவிட்டதால் பல தகவல்கள் கசியத் தொடங்கிவிட்டன. ஆ.ராசா தொலைத்தொடர்புத் துறையில் பதவி ஏற்ற முதல்நாளே முதல்கட்டப் பலனை பெற்றார் என்று ஒரு உயர்மட்டத் தொலைத்தொடர்பு அதிகாரி தெரிவிக்கிறார். அதிசயித்துப் போன ராசா உடனடியாகச் சென்னைக்குப் பறந்து சென்று திமுக பெருந்தலைகளுக்கு அதனை அர்ப்பணம் செய்தார். அவர்களுக்கு, ‘இதற்கு முன்பிருந்த அமைச்சர் இதுபோல நடந்துகொள்ளவில்லையே, ஏன்?’ என்று சந்தேகத்தின் நிழல் படியத் தொடங்கிவிட்டது.

2007-இல் ரத்தன் டாடா தமிழ்நாடு முதல்வர் கருணாநிதிக்குக் கையால் எழுதிய ஒரு கடிதத்தில் அமைச்சர் ராசாவை ஓகோவென்று புகழ்ந்திருந்தார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பெருமுதலாளிகளுக்கிடையே நடக்கும் யுத்தம் துவங்கிவிட்டது. ஏர்டெல்லின் அதிபர் சுனில் மிட்டலுக்கு ராஜாவின் மீது அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. இந்த முதலாளிகள் போரில் முகேஷ் அம்பானி சிங்கூர் விவகாரத்தில் டாடாவை ஆதரித்ததால் பிரச்சினை மேலும் சிக்கலாகியது. 2008-இல் நீரா ராடியா முகேஷ் அம்பானியின் தொழில்துறை தொடர்பாளராக ஆனதால் அனில் அம்பானியின் விரோதத்தையும் சம்பாதித்துக் கொண்டார். தொலைத் தொடர்புத் துறையில் அண்ணன் தம்பிகளுக்குள் போட்டி இருக்கிறதல்லவா?

ராடியாவின் பொதுத் தொடர்பு சேவைகளுக்காக டாடாவிடமிருந்தும், முகேஷ் அம்பானியிடமிருந்தும் ஆண்டொன்றுக்கு ஒவ்வொருவரிடமிருந்தும் முப்பது கோடி ரூபாய் நீரா ஊதியமாகப் பெற்றதாகத் தெரிகிறது. இந்தத் தொழிற்போட்டி காரணமாக டாடா-முகேஷ் கூட்டணிக்கும் அனில் அம்பானி கோஷ்டிக்கும் பூசல் நிலவி வருகிறது.

சிங்கூரில் நானோ கார் உற்பத்தி தொடர்பாக நீரா ராடியா முயற்சி எடுத்த காலத்தில் இடதுசாரிகளுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. ஆனால் இவர் தொடர்பை உறுதி செய்து பயனடைவதற்குள் நானோ உற்பத்தி மே.வங்கத்திலிருந்து குஜராத்துக்குச் சென்றுவிட்டது. நீராவின் தொலைபேசி உரையாடல்களிலிருந்து இவருக்கு ஐக்கிய ஜனதா தள தலைவர் என்.கே.சிங், உத்தவ் தாக்கரே இவர்களுடன் இருந்த நட்பு தெரிகிறது. ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மது கோடாவுடனும் இவருக்கு தொழில் முறையில் நட்பு உண்டு. மது கோடாவின் எதிர்பார்ப்பு அதிகமென்பதால் டாடா கம்பெனிக்கு மதுகோடா சுரங்க உரிமைகளைக் கொடுக்கவில்லை.

nira_radia3நீரா ராடியாவுடனான தொடர்பு காரணமாக இப்போது ஓய்வுபெற்ற சில உயர்மட்ட அதிகாரிகளும் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள். நீரா ராடியா என்னதான் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தாலும் இவரது செல்வாக்கு பெரிதும் அடிபட்டுப் போய்க்கிடக்கிறது. இந்தத் தொலைபேசி உரையாடல் நாடாக்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தப்போவதில்லை என்கின்றனர் சிலர். இதில் பலம்பொருந்திய பலர் மாட்டியிருப்பதால் இவையெல்லாம் நீதிமன்றத்தில் அடிபட்டுப் போகும் என்பது இவர்களது கருத்து. ஆனால் இனி வரப்போகும் காலம் நீரா ராடியாவுக்கு பெரும் சவாலாக இருக்குமென்பதில் ஐயமில்லை. வெகு நீண்ட காலம் வரை அவர் இப்போது பட்ட அடியிலிருந்து மீண்டு வருவது சிரமமாக இருக்கும். அவரது சேவைகளைப் பெற்று வந்த பெரும் தொழில்துறை முதலாளிகளுக்கும் எதிர்காலம் பிரகாசமாக இருக்காது என்பது தெளிவாகிறது.

3 Replies to “யார் இந்த நீரா ராடியா?”

 1. ஆவதெல்லாம் அழிவது காங்கிர்சாலே. காரணம், இக்கட்டுரையைப் படிக்கும் போது, பல வல்லமைகள் பொருந்திய ஒரு பெண்மணி, சோனியா கண்டிக்கு மட்டும் தான் அடியாளாக இருக்க முடியும் என்று தெரிகின்றது. பிரஜேஷ் மிஸ்ரா, நிரா ராடியா, சோனியா காந்தி மூவரும் ஒருவருக்குள் மற்றொருவர் அடக்கம் என்று புலனாகின்றது. அப்பாவி மக்கள் தொகையையே அதிகமாகக்கொண்ட பாரதத்தில், அதே அப்பாவி மக்கள், பத்திரிக்கை,தொலைகாட்சி, சினிமா ஆகியவற்றால் பலியாவதுடன், பண முதலாளிகளின் தொழில் சண்டைகளிலும் பலியாகிறார்கள் என்பது, தீவிரவாதிகளைக் கூட காங்கிரசும் பணமுதலைகளும் சி ஐ எ போன்ற உருப்படாத வெள்ளையர்களின் அடிமைகளும் வாழ்வையும் நிம்மதியையும் izhanthu வருந்தும் நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். பாரதத் திருநாட்டில், இந்துக்கள் கேட்பது ‘வாழ விடு’ என்ற கோரிக்கை ஒன்றுதானே தவிர, மானத்தை விற்று பிழைத்து விடு என்பதல்ல. மானத்தை, bhaaratha மக்களின் மானத்தை, தன மானத்தை, தாரணி எங்கும் கூவி விற்கும் கேவலமான தொழிலில், காங்கிரஸ் ஈடுபட்டுலளது என்பதற்கு சோனியா காந்தியே சாட்சி. ,

 2. Dear Gopalan,

  A good article . HOWEVR WHY YOU HAVE NOT MENTIONED ANYTHING ABOUT THE UNHOLY NEXUS BETWEEN ; BARKHA DUTT of NDTV who is a pseudo secular ,NTI HINDU and now proven corrupt.

  ALSO VIR SANGHVI who sells his articles for money…

 3. நீரா ராடியா போன்ற காம்ப்ரதார் பூர்ஷ்வாக்கள் (தரகு முதலாளிகள்) இந்துக்களின் வரிப் பணத்தைச் சுரண்டிக் கொழுத்து அதிலேயே நீராடுவார்கள் போலிருக்கிறது. ஓட்டாண்டிகளாக்கப்படும் இந்துக்கள் தங்களுக்கு எதிரான கூட்டு சதியைப் புரிந்துகொள்ளாமல் நீராடல் காட்சிகளைக் கண்டு களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  இந்துக்களைப் போன்ற மூடர் கூட்டத்தை இவ்வுலகில் வேறு எங்கும் காண முடியாது என்று மகாகவி பாரதியார் மனம் நொந்து சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *