நான் முதலில் படித்த படக்கதை இந்திரஜால் காமிக்ஸின் வேதாள மாயாத்மா வரும் கதை. டெங்காலி காடுகளின் பழங்குடிகளிடம் அங்குள்ள குறுநில மன்னர்கள் சிங்கங்களை கொண்டு விடுவார்கள். அவற்றிலிருந்து பழங்குடிகளை காப்பாற்றுவார் வேதாள மாயாத்மா. பிறகு முத்து காமிக்ஸ். பிறகு இரும்புக்கை மாயாவியின் ’கொள்ளைக்கார பிசாசு’. பிறகுதான் தெரிய வந்தது – டெங்காலி என்றால் பெங்காலி என்று, வேதாள மாயாத்மாவில் இருந்தது நீதி உணர்ச்சி அல்ல அப்பட்டமான இனவாதம் என்று.
ஆனால் முதன்முதலாக நான் ஒரு இந்திய படக்கதையை பார்த்தது ஆறுவயதில். தமிழில் ஒரு வித பழுப்பேறிய பல வர்ணக்கதையாக ‘சாவித்திரி’. பிறகு சகுந்தலை. பிறகு கண்ணன்.
அமர் சித்திர கதை அப்படித்தான் அறிமுகமானது. இந்திரஜால் காமிக்ஸிலும் முத்து காமிக்ஸிலும் இருக்கும் சித்திரங்களுடன் அமர் சித்திரக்கதையை ஒப்பிட்டால் சித்திரத்தரம் குறைவானதாக அப்போது தோன்றியது. ஆனால் அதையும் மீறி அமர்சித்திரக்கதையில் ஒரு அழகு இருந்தது. ’சகுந்தலை’ சித்திரக்கதையின் பெண்களின் கண்களின் அழகு எத்தனை முயன்றாலும் மேற்கத்திய காமிக்ஸ்களில் வரவே முடியாது. அது குழந்தைகளுக்கு மரபிலக்கியங்களை கொண்டு வருவதில் ஒரு பொற்காலம். நேரு புத்தகாலயாவிலிருந்தும் மனோஜ் தாஸ் என்கிற தேர்ந்த எழுத்தாளர் பல இந்திய காவியங்களையும் இதிகாச புராண பாத்திரங்களையும் அருமையான உரைநடை கதை நூல்களாக வெளியிட்டிருந்தார். ஆனால் அமர்சித்திரகதை அவை அனைத்துக்கும் மணிமகுடம். காமிக்ஸ் என்கிற சித்திரகதை வடிவத்தையும் இந்திய பண்பாட்டின் சிறந்த பொக்கிஷங்களையும் இணைத்துக் கொடுத்த ஒரு புத்துயிர்ச்சி அற்புதம்.
இதன் பின்னணியில் இருந்த மனிதர் அனந்த் பை. அல்லது ’பை மாமா’ (Uncle Pai) என அழைக்கப்பட்டவர். முதலில் இந்திரஜால் காமிக்ஸ் குழுமத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். பட்டப் படிப்பால் அவர் வேதிப் பொறியியலாளர். ஆனால் அவர் செய்த வேதிப்பொறியியல் என்றென்றைக்கும் குழந்தைகள் மனதில் பாரதப்பண்பாட்டின் பெரும் விழுமியங்களை குடியேற்றியது.
எங்கெங்கிருந்து எல்லாம் கதைகளை எடுக்கிறார்! எங்கெங்கிருந்து சரித்திர சம்பவங்களைச் சேர்க்கிறார்! அது குறித்து எப்படி அந்த இடத்துக் காரர்களே வியக்கும்படி துல்லியமான தரவுகளை சுவாரசியமாக கோர்த்து சிறுவர்களுக்கு அளிக்கிறார்! ஒரு காமிக்ஸ் இப்படி தொடர்ந்து பல்வேறுபட்ட ஆராய்ச்சிகளுடன் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது இதுவே முதல்தடவையாக இருக்கும்.
காயங்குளம் கொச்சுண்ணி கதையை அமர்சித்திரகதையில் படிக்கும் கேரளாக்காரருக்கு பெருமிதம் வரும். அமர்சித்திரகதை படித்த வேறுமாநில மாணவனுக்கும் புகைவண்டி காயங்குளத்தை கடக்கும் போது ஒரு உறவுணர்வு ஏற்படும். ஸ்ரீ நாராயணகுருவின் வாழ்க்கை அமர்சித்திர கதையாக எத்தனை மாணவர்களின் வாழ்க்கையில் ஞானச்சுடரேற்றியிருக்கும் என்பதை யார் அறிவார்!
மனோன்மணியமும் அமர்சித்திரக்கதையாக வந்திருக்கிறது. அது ஆன்மாவுக்கும் இறைவனுக்குமான உறவையும் சொல்லும் ஒரு உருவக நாடகம் என்கிற குறிப்பை அமர்சித்திர கதை தருகிறது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கே தெரியாத விஷயம் அது! மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை கோடகநல்லூர் சித்தர் ஒருவரிடம் தீட்சை பெற்று அந்த தாக்கமும் மனோன்மணியத்தில் இருந்தது என்பது வரலாறு. ஔவைக் கிழவியையும், சுப்பிரமணிய பாரதியையும், கண்ணகியையும், ஏன் பிரதாபமுதலியார் சரித்திரத்தையும் கூட, இந்தியா முழுக்க இளம் உள்ளங்களில் சேர்த்த பெருமை அமர்சித்திரக்கதைக்கு உண்டு.
ஞானேஸ்வர், பசவண்ணா என ஆன்மிக-சமூக சீர்திருத்தவாதிகளின் வரலாற்றை அமர் சித்திரக்கதை சொல்லும் அழகே தனி. அம்பேத்கர் ஒரு விடுதியில் தன்னை ஹிந்து என சொல்லுகிறார். ஆனால் அவரை தீண்டத்தகாதவர் என வெளியே தள்ளுகிறார்கள். அமர சித்திரங்களின் மூலமாக மனதில் ஆழமாக பதிந்த வடு அது. தலித்தின் முகத்தில் சாதித்திமிர் அறைந்த அறையை தன் முகத்தில் ஏற்றுக்கொள்ளும் பாண்டுரங்கன்! அந்தக் கதையில், என்றென்றைக்கும் சாதியம் எனும் நஞ்சு நம் குழந்தைகளை அண்டவிடாமல் செய்யும் அருமருந்தும் கிடைக்கிறது.
ஜகதீஷ் சந்திர போஸ் காலனிய அரசில் போராடிய கதையை படிக்கும் போது அறிவியலாளரின் கதையுடன் ஒரு போராளியின் கதையும் கிடைக்கும். எல்லப்ரகாத சுப்பாராவ் என்கிற ஆந்திர வேதி-உயிரியலாளர் குறித்த அமர் சித்திர கதை ஒரு கிளாஸிக். காலனியத்தால் அவதிப்பட்ட நாடுகளின் அறிவியலாளர்கள் போராடிய விதத்தை சித்திரக்கதையாக அளித்த ஒரே பதிவாக அமர் சித்திரக் கதையை மட்டுமே காணமுடியும்.
சீக்கிய குருக்களின் ஞானமும் தியாகமும் காவிரிக்கரை கடந்து நம்மை அடைந்தது அமர் சித்திரக் கதையால். குருகோவிந்த சிங்கின் இரு இளஞ்சிறுவர்களும் ‘எங்களை உயிருடன் புதைத்தாலும் தர்மத்தை விட மாட்டோம்’ என்று சொன்ன தருணங்களைப் படித்து வளர்ந்தவர்களுக்கு, ஆயிரமாயிரம் ஊழல்களால் அதிகார வர்க்கம் மாசு படிந்தாலும், இந்தியாவின் உண்மையான அகநீரோட்டம் எது என்று எப்போதும் புரியும். இன்றைக்கும் மனத்தளர்ச்சி வரும் போது அமர் சித்திரக் கதையின் சீக்கிய குருக்களின் கதைகள் உத்வேகம் தருபவை. “நீங்கள் குருகோவிந்த சிம்மரை போல வாழ்ந்தாலே ஹிந்து என்கிற பெயருக்கு அருகதை ஆவீர்கள்” என்ற சுவாமி விவேகானந்தரின் உபதேசத்தை இதனுடன் இணைத்துப் படிக்கும் போது அது அளிக்கும் மன உற்சாகமே தனி!
வீர சாவர்க்கர் பட்ட கஷ்டங்களை நாம் சிறுவர்களாக அந்த படக்கதைகளின் பக்கங்களில் உணர்ந்தோம். எந்த மக்களுக்காக போராடினாரோ, அதே மக்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு அன்னியரால் கொல்லப் பட்டு, மரணிக்கும் தருவாயிலும் அம்மக்களிடம் கசப்பின்றி அன்பு காட்டி உயிர் தியாகம் செய்த பாகா ஜதீனும், கீதை கையில் ஏந்தி தூக்கு மேடை ஏறிய குடிராம் போஸும் நம் சிறுவயது ஆதர்சங்களாகியது இந்த படக்கதைகளில்தான். பொதுவாக நன்றி மறக்கும் நம் சூழலில், சந்திரசேகர ஆசாதும், பகத்சிங்கும், ஜாலியன்வாலாபாக்கும் நம் மனங்களில் பசுமரத்தாணியாக பதிந்தது அமர் சித்திரக் கதையால்தான்.
ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் கதையும் அவர் சொன்ன கதைகளும் சிறுவயது முதலே என்றைக்கும் நமக்கு இனிய நினைவுகளாக வாழும் சாத்தியத்தை அங்கிள் பை நமக்கு அளித்தார். அதனை நாம் எந்த அளவு பயன்படுத்தினோம் என்பது வேறுவிஷயம். அமர்சித்திர கதைகளில் அதியற்புத ஓவிய உச்சமாக நான் சிறுவயதில் உணர்ந்தது மீரா. அத்தனை உணர்ந்து உணர்ச்சிபூர்வமாக கவிதையாக அந்த சித்திரங்களை வடித்திருந்தவர் ஒரு இஸ்லாமிய ஓவியர். யூசுப் லெயின் (இப்போது யூசுப் பெங்களூரிவாலா) என்பவர். மீரா சித்திரங்களுக்கான நாட்கள் தள்ளித் தள்ளி போகவே ஒருநாள் இந்த ஓவியரை அவர் வீட்டிலேயே சென்று சந்திக்கிறார் ஆனந்த் பை. யூசுப் மீரா ஓவியங்களை கண்களில் கண்ணீர் வழிய தீட்டிக்கொண்டிருப்பதை காண்கிறார். இந்த ஓவியங்களை அவர் தீட்டிய போது யூசுப் அரேபிய மரபில் வந்த பெண் ஆன்ம ஞானியான ரபியாவால் தான் நிறைந்திருந்ததாக உணர்ந்தாராம். அமர் சித்திரக்கதையின் மீராவால் தங்கள் இளம்வயதில் தெய்வீக அன்பை உணர்ந்த குழந்தைகள் twice blessed என்றுதான் சொல்லவேண்டும். மீரா கதை சரித்திர சான்றாதாரம் கொண்டதல்ல என்பதையும், அது மீரா குறித்த நாட்டார் கதைகள் வழக்குகளிலிருந்து உருவாக்கப்பட்டது என்பதையும் அமர் சித்திர கதை குறிப்பிடுகிறது. எத்தனை கவனம்! எவ்வளவுக்கு துல்லியம் குறித்த நுண்ணுணர்வு! குழந்தைகளின் அறிவின் மீது மதிப்பு!
அனந்த் பை அமர்சித்திர கதை புத்தகங்களை கொண்டு வருவதுடன் நின்றுவிடவில்லை. அவற்றை கல்விக் கருவிகளாக செயல்படுத்துவதை அறிவியல் கண்ணோட்டத்துடன் பரீட்சை செய்தும் பார்த்தார்.
அமித் தாஸ்குப்தா என்கிற கல்வியாளர் இத்தகைய ஒரு பரிசோதனை டெல்லியில் 1978 இல் நடத்தப்பட்டதை நினைவு கூர்கிறார். டெல்லியின் 30 பள்ளிகளிலிருந்து 961 மாணவர்களுக்கு அமர்சித்திரகதைகளை பயன்படுத்தி வரலாற்றுக்கல்வி அளிக்கப்பட்ட போது, வழக்கமான முறையில் சொல்லிக் கொடுக்கப்படுவதைக் காட்டிலும் நன்றாக மாணவர்கள் அதை உள்வாங்கிக் கொண்டார்கள். அன்று கேந்திரிய வித்யாலயா அமைப்புகளின் கமிஷனராக இருந்த பல்தேவ் மகாஜன், அமர் சித்திர கதைகள் அற்புதமான கல்வி சாத்தியங்களைக் கொண்டிருப்பதாக கூறினார்.
இக்கதைகளின் துல்லியத்தன்மைக்காக அனந்த் பை எடுத்துக் கொண்ட சிரமங்களும் வீண்போகவில்லை. ஒரு முக்கியமான தர்மாச்சாரிய சபையில் கிருஷ்ணனின் வாழ்க்கை சம்பவம் குறித்த சிறு விவாதம். ஒரு தர்மாச்சாரியார் தனது கையில் அமர் சித்திரக்கதையை எடுத்து அதிலிருந்து தமது நிலைபாட்டுக்கு ஆதாரம் காட்டுகிறார்! அமர் சித்திரக்கதையின் நம்பகத்தன்மை எந்த அளவு எல்லா தளங்களிலும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதற்கான ஒரு சம்பவம் இது.
முக்கியமான சூஃபி ஞானிகள், ஷெர்ஷா சூர் போன்ற இஸ்லாமிய ஆட்சியாளர்கள், அஷ்பகுல்லாகான் போன்ற தியாகிகள் ஆகியோரை அமர்சித்திரகதைகளில் நீங்கள் சந்திக்கலாம்.
அங்கிள் பை என அன்பாக அழைக்கப்பட்ட அனந்த் பைக்கு எந்த சித்தாந்த சார்பும் கிடையாது. அவரது ஒரு பெரும் சித்தாந்தம் பாரதப் பண்பாடு. பாரதத்தின் வரலாறு என்பதே அவரது ஒரே பெரும் நோக்கு. அந்த நோக்கில் அவர் உருவாக்கிய பெரிய ஸ்தாபனமே அமர் சித்திரக் கதை. பின்னர் அவர் நடத்திய பார்த்தா என்கிற பதின்ம வயதினருக்கான இதழும் பல அரிய செய்திகளை கொண்டு வந்தது. குறிப்பாக எனக்கு நினைவிருப்பது இந்து கோவில்களுக்கும் இந்திய மசூதிகளுக்கும் அடிப்படையான சில ஒற்றுமை வேற்றுமைகளை எம்.வி.காமத் எழுதியிருந்ததும், பிரபஞ்ச விநோதங்கள் குறித்து வேங்கட ரமணன் என்கிற அறிவியலாளர் எழுதிய தொடரும்.
அமர் சித்திர கதை வெறும் பண்டைய வரலாற்றுடன் நின்றிடவில்லை. சுவாமி சின்மயானந்தர் முதல் கல்பனா சாவ்லா வரை இன்றைய இந்தியாவின் சிற்பிகளையும் அது இளைய தலைமுறையினருக்கு கொண்டுவருகிறது.
பொதுவாக டிவி கார்ட்டூன்களில் மூழ்கி கிடக்கும் இந்த சிறுவர்கள் தலைமுறைக்கு ஒரு வாசிக்கும் பழக்கமாக பாரத பண்பாட்டை கொண்டு சேர்க்கும் கருவியாக அமர்சித்திர கதை போய்ச் சேருமா என சில நேரங்களில் தோன்றுவதுண்டு. ஒரு வாரத்துக்கு முன்னர் என் ஒன்பது வயது மகன், ”பாஹுபலி ”அமர் சித்திரகதாவை எனது கலெக்ஷனிலிருந்து அவனே எடுத்து இரவு பத்துமணிக்கு மேல் கொட்ட கொட்ட படித்துவிட்டு, உண்மையான பலம் என்றால் என்ன என்று கேட்கிறான்!
அங்கிள் பை, இந்த நாட்டில் தலைமுறை தலைமுறையாக எங்கள் சந்ததிகள் உங்களுக்கு கடன் பட்டிருக்கின்றோம். மனமகிழ்ச்சியுடன் எங்களை ஆசிர்வதியுங்கள்.
இந்திய காமிக்ஸ் உலகின் பிதாமகரும், அமர் சித்திரக் கதையை உருவாக்கியவரும் ஆன அனந்த் பை தனது 81-வது வயதில் 25-பிப்ரவரி-2011 அன்று மும்பையில் காலமானார்.
துரதிஷ்டவசமாக, அனந்த் பை போன்றவர்கள் அச்சு ஊடகத்துடன் நின்று விட்டது வருத்தமாக இருக்கிறது. தொலைக்காட்சி என்னும் ஊடகத்திலும் இறங்கியிருந்தால் எவ்வளவோ நன்மை ஏற்பட்டிருக்கும்.
கருணாநிதி குடும்பத்தினர் நடத்தும் சிறுவர்களுக்கான அனிமேஷன் சானல் மூலம் மேலைக் கிறிஸ்தவ விழுமியங்கள், அவற்றிற்கே உரிய வன்மத்துடன் தமிழக இந்துக் குழந்தைகளின் மூளைகளில் திணிக்கப்படுகின்றன. மெக்காலே கல்வித் திட்டம் ஏற்படுத்தும் பாதிப்புகளைவிட இதன் பாதிப்பு அதிகமாக இருக்கப் போகிறது.
கிழக்கு போன்ற பதிப்பகங்கள் இதே போன்ற பதிப்பு முயற்சியில் ஈடுபட்டாலும், இந்து நாயகர்களையும், தர்மத்தையும் எதிர்மறையாகச் சித்திரிக்கும் படக் கதைகளையே பெரும்பாலும் வெளியிடுவர் என்பதில் ஐயமில்லை.
இந்த அமர் சித்ரா கதைகள் என்னும் படைப்புகளை புத்தகங்களாக வாங்கி நான் படித்ததில்லை, ஆனால் தொலைகாட்சியில் கார்டூன் நெட்வர்க்- இல் அனிமேஷனாக பார்த்து ரசித்துள்ளேன். குறிப்பாக இராமாயணம், மகாபாரதத்தில் காட்டப்பட்ட சம்பவங்களை. உண்மையில் சொல்லவேண்டுமானால் திரு.இராமானாந்து சாகர் இயக்கிய ‘இராமாயணம்’, ‘ஸ்ரீ கிருஷ்ணா’, திரு.பீ.ஆர்.சோப்ரா இயக்கிய ‘மகாபாரத்’ ஆகியவற்றை விட இலக்கியங்களை சற்றும் மாற்றாது உள்ளதை உள்ளபடி காட்டிய பெருமை இந்த அமர் சித்ரா கதைகளுக்கே சேரும். “இதெல்லாம் வெறும் குழந்தைகள் பார்த்து ரசிக்கும் படைப்புகள், நாம் பெரியவர்கள்” என்ற அகங்காரம் இல்லாமல் சிறந்த சிந்தனையாளரான திரு.அரவிந்தன் நீலகண்டன் அவர்களே இதைப்பற்றி எழுதியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
உங்கள் சீரிய பனி தொடர வாழ்த்துக்கள் அய்யா!
அமர் சித்திரக் கதைகள் காலத்தால் அழியாத பண்பாட்டுப் பெட்டகங்கள் என்பேன். நானும் அ.சி.க படித்து வளர்ந்தவன் தான்!
குழந்தைகள் மனதில் தேசபக்தி, கலாசார பெருமிதம், வரலாற்று உணர்வு, கலையுணர்வு ஆகியவற்றை உருவாக்குவதில் அவற்றின் பங்கு மகத்தானது. என் 8 வயது மகளும் எனது கலெக்ஷனில் இருக்கும் அ.சி.கதைகளை ஆர்வத்துடன் எடுத்துப் படிக்கிறாள். கேள்விகள் கேட்கிறாள்! சங்கரரையும், அம்பேத்கரையும், சிலப்பதிகாரத்தையும், மகாபாரதத்தையும் பற்றி குழந்தைகளிடம் உரையாட ஒரு நல்ல channel ஐ இந்தப் புத்தகங்கள் உருவாக்கும்.. (குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் படிக்கும் அளவு தரம் வாய்ந்தவை அமர் சித்திரக் கதைகள்).
திரைப்படங்களிலும், டிவி சீரியல்களிலும் இதிகாச, புராணங்களை சித்தரிக்கும் போது அவற்றில் இல்லாதவற்றையும், பல மசாலா அம்சங்களையும் கலந்தடிப்பது சகஜம். ஏன், நமது “ஆன்மிக” பத்திரிகைகள் கூட இந்த விஷயத்தில் படு மோசம், அதில் எழுதுபவர்களின் கற்பனைக் குதிரைகளின் கனைப்புகளையும் சேர்த்து விடுவார்கள்.
ஆனால் அ.சி.கவின் சித்தரிப்புகள் துல்லியமானவை, முற்றிலும் ஆதாரபூர்வமானவை. ஒரு சிறிய காமிக்ஸ் புத்தகத்திற்குக் கூட அனந்த் பை குழுவினர் செய்யும் ஆய்வுகளும், தரும் உழைப்பும் போற்றுதலுக்குரியவை. இதற்கு ஈடாக உலக காமிக்ஸ் இலக்கியத்தில் வேறு புத்தகங்கள் இல்லை என்றே நினைக்கிறேன்.
மேலும் குழந்தைகளின் உளவியலையும் கணக்கில் கொண்டு, அவர்கள் சிந்தனையின் கூர்மையும் மழுங்காதபடி சித்தரிப்பார்கள் – சாலிவாகனன் கதையில், விக்ரமாதித்யன் அவனது படைகளின் பெரும்பகுதியை அழித்துவிடுவான்.. எல்லா ஊர்களிலும் பொதுஜனங்களே திரண்டு படையாகப் புறப்பட்டு போர்க்களத்திற்கு வருவதாக படங்கள் சொல்லும்.. ”ஆ! எவ்வளவு படைகள்! சாலிவாகனன் சிறுவயதில் செய்த மண்குதிரைகளும், மண்யானைகளும், மண்வீரர்களும் உயிர்பெற்று வந்து விட்டார்களோ?” என்று இரண்டு பேர் பேசிக் கொள்வதாகக் காண்பிப்பார்கள். புராணங்களையும், மீள்-யதார்த்தத்தையும் ,வரலாற்றையும் ஒருங்கே சித்தரிப்பதற்கான ஒரு நல்ல உதாரணமாக இதைச் சொல்லலாம்.. பல அ.சி.கதைகளில் இப்படி பல இடங்கள் சொல்லலாம்.
ஒவ்வொரு இந்தியக் குடும்பத்துக்கும் அங்கிள் பை அளித்த கொடை அமர் சித்திரக் கதைகள். இத்தருணத்தில் அவரை நெஞ்சம் பணிகிறது. அனந்த் பை அவர்களுக்கு என் இதயபூர்வமான அஞ்சலி.
பட்டப் படிப்பிற்கு வந்த பின்னரே இப்புத்தகங்களை வாங்கிப் படிக்கும் வாய்ப்பு பெற்றேன். இந்த புத்தகங்களில் உள்ள துல்லியமும் பின்னே உள்ள ஆய்வும் ஒரு பெரு வியப்பு. சிறந்தாழ்த்திய அஞ்சலி!
நன்றி அரவிந்தன் நீலகண்டன்!!
எங்கள் தலைமுறைக்குப் பெரியவர்களும் தமிழ்க் காவியங்களும் ஆதாரமாக இருந்தார்கள். அடுத்த தலைமுறைக்கு வந்தது அமர் சித்திர கதா.
குழந்தைகளூக்கு ஏற்ற முறையில் எளிய மொழியில் வந்த கதைகள் அருமை. அனந்த கோடி நமஸ்காரங்கள் அன்கிள் பை. எங்கள் பேரன்கள் பேத்திகளும் உங்களைப் படிக்கிறார்கள்.
……..திரு. பாலாஜி அவர்களின் வரிகளைத் தவிர
வேறு எதனையும் பதிவு செய்ய இயலாது.
கட்டுரைக்கு நன்றியும் அநீ-க்குப் பாராட்டுதல்களும்.
திரு.அரவிந்தன் நீலகண்டன்,
நான் தமிழ் கல்வி முறையில் படித்தவன். 16 அல்லது 17 வயதில்தான்
ஆங்கிலத்தில் படிக்க முயற்சி செய்தவன். ஆகவே இது போன்ற
புத்தகங்களை வாசித்ததில்லை. மேலும் இந்திய பண்பாட்டைப் பற்றின
அக்கறை பெரிய அளவில் இல்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்.
ஆகவே அம்புலிமாமா போன்ற புத்தகங்களை கூட நான் வாசித்ததில்லை.
இப்பொழுது நினைத்தாலும் எனக்கே ஆச்சரியமாக இருக்கும். இடதுசாரி
புத்தகங்களை வாசித்து பல குப்பை சிந்தனைகளுடன் என் நினைவு
தெரிந்த வாழ்க்கை ஆரம்பித்தது.
வாசிப்பு அனுபவமோ, இந்திய பண்பாட்டை மதிக்கும் சூழலோ இல்லாத
இடங்களில் வாழ்ந்தாலும் என் மரபணு என்னை காப்பாற்றியது என்றே
நம்புகிறேன்.
இதை எதற்காக எழுதினேன் என்றால், நம் அடுத்த தலைமுறைகளை
எவ்வளவுதான் ஊடகங்கள் நாரடித்தாலும் சிந்திக்க முயற்சிப்பவர்கள்,
சிந்திக்க தெரிந்தவர்கள் சுதாரித்து கொள்வார்கள் என்றே நம்புகிறேன்.
மற்றவர்களுக்கான எதிர்காலம் கவலைக்குரியதாகவே இருக்கும் என்பது
சரிதான்.
நல்ல பல விஷயங்களை நல்லபடியாகச் சிறு உள்ளங்களுக்குச் சென்று சேர்க்கும் நற்பணியை ஆற்றிய மனிதர் ஆனந்த் பை இயற்கை எய்தியது வருத்தமளிக்கிறது. அவர் ஆற்றிய அரும்பணி தொய்வின்றித் தொடர வேண்டும்.
அமர் சித்ர கதாவின் பின்னுள்ள அனந்த பை அவர்களின் ஆத்மாவுக்கு என்றும் அழிவில்லை.அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அமர் சித்ர கதா என்றும் ஒரு ஒளி விளக்காக திகழும்.
பிரதாப்
அருமையான கட்டுரை,
அரவிந்தனுக்கு நன்றி.
இன்றைய குழந்தைகளுக்கான இதழ்களில் நமது பாரம்பரியம் குறித்த பெருமிதப்படவைக்கும் பதிவுகளே இல்லாத நிலையும் நினைவில் வந்து வருத்தம் தருகிறது.
அமர் சித்திரக்கதை அமர இலக்கியமே. அமரர் ஆனந்த் பைக்கு நன்றி.
-சேக்கிழான்
அன்பு நண்பர்களுக்கு
திரு. ஆனந்த் பை குறித்த கட்டுரையைக் காண்க:
மழலை இலக்கியம் படைத்த மாமா/ தேசமே தெய்வம் பிளாக்
https://desamaedeivam.blogspot.com/2011/02/blog-post_27.html
-குழலேந்தி
அமர் சித்திரக்கதைகள் சிலவற்றைப் படித்துள்ளேன். ஆனால் அதன் பின் இருப்பவர் அனந்த் பை என்பது தெரியாது. இளம் தலைமுறையினருக்கு நல்லதொரு வழிகாட்டியை இழந்திருக்கிறோம். அவர் குறித்த செய்திகளை அறியச் செய்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள்
சித்திரக்கதைகளைப் படித்தும் பார்த்தும் மனம் மகிழும் நாம் அச் சித்திரக்கதையின் பின்னே தன் உழைப்பை தீட்டியிருக்கும் உன்னதக் கலைஞர்களைப் பற்றி அதிகம் பேசிக் கொள்வது குறைவு.
ஆக, அனந்த்பை பற்றி உரிய வேளையில் உடனுக்குடன் உரிய கட்டுரையை அளிப்புச் செய்துள்ள அரவிந்தன் அவர்களின் என்றும் விரைவுத்தன்மை கொண்ட எழுத்தைக் கண்டு நன்றி கூறுகிறோம்.
அனந்த்பை அவர்களின் ஆன்மா அதிசித்திர சுவர்ணமய பரமபத லோகத்தில் இன்பமுறப் ப்ரார்த்திக்கிறோம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களில் ஒருவர், அனந்த் பாய்.
கருடன் கதையை, ஒன்பது வயதில் படித்தேன். அப்பொழுது, Phantom, Mandrake Archie, Richie Rich, Tintin, Asterix, Superman, Batman அகிய கதாபாத்திரங்கள் பிரபலாமாக இருந்தன. அன்று அந்த தரத்தில் சில அசிக கதைகள் மட்டுமே இருந்தன என்று வருந்தியுள்ளேன்; இன்று இவையாவது இருந்தனவே என்று மனதில் ஆறுதல்.
இன்று மேல்சொன்ன மேற்கத்திய சித்திரகதைகள் டிவியின் தாக்காத்தில் தலைமறைவான பொழுதும், இந்திய பாரம்பரியத்தின் தனித்தளமாக ஓவிய கதை இலக்கியத்தில் அனந்த் பாயின் அமர் சித்திர கதைகள் விளங்குவதில் சந்தோஷம்.
Mouse Merchant, Akbar-Birbal, The Giant and the Dwarf, Panchantra stories, Buddhist stories, Tales of Pandavas, Ratnavali, Udayanan Vasavadatta, Tales from Upanishads, JC Bose, Shalivahana : இந்த சித்திரங்கள் மனப்பழக்கம்; பெண்களின் அழகு மதி மயக்கம்; வல்லவர் செயல்கள் சிந்தனை தொடக்கம், எம் தந்தையர் சொல்லோ ஆர்வத்தின் பெருக்கம்.
அனந்த் பாயின் சீடர்களின் பேனா மைக்குளங்களில், வரப்புயர.
-ர கோபு.
எனக்குப் புராணங்களைச் சொல்லிக்கொடுத்தது தினமலரின் சிறுவர் மலர்தான். அப்புறம் அம்புலிமாமாவும்!
என்னை சிறு வயதில் அதிகம் கவர்ந்தது கபீஷ் கார்டூன்
முதன் முதலில் சிறு வயதில் இதை மலையாள பூம்பாற்றாவில் பார்த்து இதை சுயமாக வாசித்து விட வேண்டும் என்று நாலு நாட்களுக்குள் மலையாளம் வாசிக்கக் கற்று எழுத்துக் கூட்டி அதை வாசித்த அனுபவத்தை மறக்கவே முடியாது. ஒரு மொழியையே என்னைக் கற்றுக் கொள்ள வைத்த கார்டூன் கபீஷ்.
இது ஆனந்த் பையின் சித்திரம் என்பதை இப்போது தான் அறிந்தேன்
ஆனந்து பையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்
During my college days, I had an opportunity to attend to 2 weeks spiritual education course at Mysore conducted by Ramakrishna Mission. In their Library only, I could first had the chance to read Amar Chitra Katha. All these helped me to understand the history, puranas, in a very easy way. I started buying the books for my children and it had kindled the interest in reading books in them.
It is indeed a great loss to us. Pai mom I pray for your soul to rest in peace
sridharan
@அரவிந்தன் நீலகண்டன்
பதிவுக்கு சம்பந்தமில்லாத விஷயம்
பா. ராகவனின் ஆர் எஸ் எஸ் புத்தகம் பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்.
I have been brought up on amar chitra katha. I still remember the first AMC book I bought – Hanuman.
Anant Pai’s contribution is praiseworthy.
May his soul rest in peace.
நமது சரித்திர பாட புத்தகங்களிலேயே மறந்து போன (அல்லது மறைக்கப்பட்ட) பல உன்னதமான மனிதர்களை, அரசியல், சமூக, கலாசார துறைகளில் அவர்களது பங்களிப்பை பற்றி சிறுவர்கள் மட்டும் இல்லாமல் பெரியவர்களும் அறிந்து கொள்ளும்படி செய்தது அமர் சித்ரா கதாவின் மிகப்பெரிய சாதனை. சாவர்க்கர், ராணா சங்கா, ராணி பத்மினி, குடி ராம் போஸ், மதன்லால் திங்கரா, சந்திரசேகர் ஆசாத், குரு கோபிந்த் சிங், கித்தூர் ராணி சின்னம்மா, ராணி லக்ஷ்மி பாய், மங்கள் பாண்டே, மதன் மோகன் மாளவியா, – இப்படி எத்தனையோ பேர்கள்! ஒற்றை வரியில் சொல்லவேண்டுமானால் எகாத்மாதா ஸ்துதியில் பட்டியல் இடப்பட்டிருக்கும் அத்தனை தவப்புதல்வர்கள் பற்றியும் அமர் சித்ரா கதா பதிவு செய்திருக்கிறது. இன்று முன்னணி பள்ளிகளாக கருதப்பட்டு ஹிந்துக்களால் நடத்தப்படும் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் கூட அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட அடி-தடி-ஆபாச கம்ப்யூட்டர் கேம்களில் மூழ்கி இருக்கிறார்கள். இவைகளுக்கு நமது சரித்திரத்தையும், சாதனைகளையும் எப்படி கொண்டு சேர்க்கப்போகிறோம்?
Dear sir. I recently visited this web site and if you have any knowledge can you comment on the claims made on this web site. Thank you.
https://www.iranian.com/History/2003/May/Pallava/index.html
பூந்தளிரும், அம்புலி மாமாவும், பாலமித்ராவும், கோகுலமும் அழகு தமிழில் படித்து, பின் அமர் சித்ரா கதா வின் அற்புத சித்திரங்களும் மிக எளிமையான, அனல் செறிவூட்டும் ஆங்கிலமும் தான் ஆங்கில நூல்களை வாசிக்க வைத்தன. மகாபாரதம் முழுதையும் இதில் தான் படித்தேன்!!
அமர் சித்திரக்கதை தமிழிலும் வந்தது என்பதுகளில் அடியேனும் ஒன்றிரண்டு வாசித்திருக்கிறேன். அன்றைக்கு வசதியில்லை அதனால் அதிகம் அவற்றை ப்படிக்கவில்லை. இந்தக்கட்டுரையை ஒராண்டுக்கு முன்னர் வாசித்தேன். உடனே எனது குழந்தைகளுக்கு பஞ்சதந்திரக்கதைகளையும் புத்த ஜாதகக்கதைகளையும் இணையத்தில் வாங்கிக்கொடுத்துவிட்டேன். அவர்கள் இனிமேல் தான் படிக்கப்பழகவேண்டும் முதலில் படம் பார்கட்டுமே. ஒரே மூச்சில் நானும் படித்துவிட்டேன். நம் நெடியபாரம்பரியத்தினை நமது குழந்தைகளும் அறிந்துகொள்ள ஸ்ரீ ஆனந்த் பை செய்தது மகத்தான தொண்டு.
அங்கிள் பை, இந்த நாட்டில் தலைமுறை தலைமுறையாக எங்கள் சந்ததிகள் உங்களுக்கு கடன் பட்டிருக்கின்றோம். மனமகிழ்ச்சியுடன் எங்களை ஆசிர்வதியுங்கள்.
அங்கிள் பை, இந்த நாட்டில் தலைமுறை தலைமுறையாக எங்கள் சந்ததிகள் உங்களுக்கு கடன் பட்டிருக்கின்றோம்.நன்றி