ரமணரின் கீதாசாரம் – 5

ரமண மகரிஷி ஸ்ரீ ரமண மகரிஷியிடம் குர்ரம் சுப்பராமய்யா என்ற அடியார் ஸ்ரீமத் பகவத் கீதையைத் தினப் பாராயணத்திற்கு ஏற்றவாறு சுருக்கித் தருமாறு கேட்டதன் பலனாக மூலத்தில் உள்ள எழுநூறு சுலோகங்களிலிருந்து ரமணர் நாற்பத்திரண்டை தேர்ந்து எடுத்து அன்பரது நித்ய பாராயணத்திற்கு எனத் தொகுத்துக் கொடுத்தார். கீதை சொல்லும் கருத்துக்களை, சுருக்கமாக அந்த கீதையின் சுலோகங்கள் மூலமாகவே ரமணர் நமக்கு தந்த “பகவத்கீதாசாரம்” பற்றிய தொடர்…
முந்தைய பகுதிகள் பகுதி 1 | பகுதி 2| பகுதி 3| பகுதி 4

வளையல், சங்கிலி, மோதிரம் என்று விதவிதமாய் இருந்தாலும், அந்த ஆபரணங்கள் எதிலும் தங்கம்   மூலப் பொருளாக இருக்கிறது என்று நாம் பார்த்தோம். இதற்கும் நமது தேக-ஆன்மாவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருக்கிறது. ஆபரணங்கள் எதனிலும் தங்கத்தைத் தவிர முக்கியமான பொருள் சொல்லக் கூடிய அளவில் எதுவுமில்லை. அவைகளின் உருவுக்குத் தகுந்தாற்போல் வேறு சில பொருட்கள் குறைந்த அளவில் சேர்க்கப்பட்டிருக்கும். தங்கமே ஆபரணமாக இருக்கிறதே தவிர, அந்த ஆபரணத்தை விட்டால் அதற்கு வெளியில் தங்கம் என்பது இல்லை. ஆனால் ஆன்மாவானது தேகத்தின் உள்ளே இருப்பதுபோலத் தோன்றினாலும் அது எங்கும், என்றும் இருப்பது ஆகும்.

13-32

यथा सर्वगतं सौक्ष्म्यादाकाशं नोपलिप्यते |
सर्वत्रावस्थितो देहे तथात्मा नोपलिप्यते ||

எங்கும் எவற்றும் விண்ணிருந்தாலும் நுண்மையினால்
தங்கும் அவற்றின் பற்றாத் தன்மைபோல – எங்குமே
தேகத்திருந்தாலும் தேகியாம் ஆன்மாவும்
தேகத்தில் ஒட்டான் தெளி

பொருள்: எல்லாவிடத்திலும் எல்லாவற்றிலும் ஆகாயமானது நிறைந்து இருந்தாலும் நுட்பமான தன்மையினால், தான் தங்கியுள்ள அந்தந்தப் பொருட்களின் குணங்களைப் பற்றாத தன்மையைப் போல, தேகியாகிய ஆத்மாவும் தேகம் முழுவதும் வியாபித்து இருந்தாலும் அத்தேகத்தின் குணங்களில் சம்பந்தப்படாது தனித்தே இருப்பான் என்று தெளிவாயாக.

க்ஷேத்ரஞனாகிய ஆன்மாவே எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் என்று சொல்லப்படுகிறது. எப்படி ஆகாயமானது எங்கும் உள்ளது என்று சொல்லும்போது அது இருக்கும் பொருளின் தன்மையினால் எப்படி மாறுபடுவதில்லையோ, அதுபோல ஆன்மா உடலில் தங்கியுள்ளது என்னும்போது அந்த உடலின் குணத்தினால் ஆன்மா மாறாது அப்படியே இருக்கிறது. ஒரு குடத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் வெளியேயும் ஆகாயம், அதன் உள்ளும் ஆகாயம் தான். அக்குடத்தை உடைத்து விட்டால் அந்தக் குடம் இருந்த இடமும் ஆகாயமாகிறது அல்லவா? உடைவதற்கு முன்னால் இருந்த – இப்போது குடத்திற்குப் பதிலாகக் காணப்படும் – ஆகாயம் ஏதும் மாறவில்லை அல்லவா? அதுபோலவே இறைவன் அனைத்து சீவராசியின் உள்ளும் இருந்தாலும் அந்தந்த சீவராசிகளின் பாவ-புண்ணியத்தால் பாதிப்பு அடைவதில்லை. அது மட்டுமல்ல, சீவராசிகள் தனித்தனியாகத் தோன்றினாலும், ஆகாயம் போல் ஆன்மா பிளவுபடாத ஒன்றாகவே இருக்கிறது.

அப்படி என்றால் ஒன்றாகத் தெரியாமல் பலப்பலவாகத் தெரிவதன் காரணம் என்ன? பலப்பலவாகத் தெரியும் தேகங்களில் ஒன்றான ஆன்மாவைப் பார்க்காது, ஒன்றான ஆன்மாவில் பலப்பல தேகங்களைப் பார்ப்பதன் காரணம் என்ன? அது பார்ப்பவனின் அறியாமையால் விளைகிறது என்று சொல்வார்கள். அதை விளக்குவதற்கே, இருக்கும் கயிற்றில் இல்லாத பாம்பின் உதாரணத்தை எடுத்துக்கொண்டு சொல்வார்கள். இல்லாத ஒன்று இருப்பது போல் தெரிவதன் காரணம் அறியாமையே அல்லவா? தேவைக்கேற்ற வெளிச்சம் இல்லாததால் அந்த அறியாமை வந்திருக்கலாம். அங்கு தேவைக்கு ஏற்ப ஒளி வேண்டியது போல, இங்கு ஞானமாகிய அறிவு கிடைக்கும் போது நமக்கும் ஒன்றான ஆன்மாவே தெரியும்; பலப்பலவான தேகங்களோ, அவைகளுக்குக் காரணமான பாவ-புண்ணியாதிகளோ தெரியாது.

கயிறு-பாம்பு என்பது நமது புத்திக்கு எட்டும் உதாரணம் போல, நமது அனுபவத்திலிருந்து ஒன்று சொல்லமுடியுமா என்று கேட்டால் இப்படிச் சொல்லலாம். நாம் கனவு காணும் போது, அப்போது நடப்பது எல்லாம் உண்மை அனுபவம் போலவே தோன்றும். ஆனால் கனவு முடிந்ததும், அவை எதுவும் உண்மை அல்ல என்று தெரிகிறது அல்லவா? அது போல இப்போது பலப்பலவாக தோன்றும் எல்லாவற்றின் உண்மையும் நமக்கு ஞானமாகிய அறிவு கிடைக்கப் பெறும்போது எல்லாம் ஒன்றேயான ஆன்மா மட்டுமே தெரியும். அதைத் தெளிவாகப் புரிந்து கொள் என்று பரமாத்மா அருச்சுனனுக்குச் சொல்கிறார்.

15-6

न तद्भासयते सूर्यो न शशाङ्को न पावक: |
यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम ||

கதிரோன் மதியும் கனலும் எக்காலும்
அதனை ஒளிர்வித்தல் ஆகாது – எதனை
அடைந்தே மடங்காரோ அஹ்து பரமாம் என்
உடைய வீடாம் எனவே ஓர்

பொருள்: அந்த ஆத்மாவை சூரியன், சந்திரன், அக்னி முதலான எவையும் எக்காலத்திலும் பிரகாசிக்கச் செய்ய இயலாது. எந்த ஸ்தானத்தை அடைந்தவன் மீண்டும் சம்சாரத்திற்குத் திரும்பி வருவது இல்லையோ, அந்த இடம்தான் பரமமான என்னுடைய மேலான வீடாகிய இருப்பிடம்.

எங்கும் உள்ளது, என்றும் உள்ளது என்று சொல்லி விட்டால் அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லைதான். இருந்தும் நம்மவர்க்கு மேலும் மேலும் ஏதாவது சந்தேகம் வந்து கொண்டிருக்கிறதல்லவா? அதைப் போக்கவே விவரங்களும் வந்து கொண்டே இருக்கின்றன. ஒளி இருந்தால் நமது பார்வை சரியாக இருக்க முடியும் என்று சொன்னோம் அல்லவா? அதையே எடுத்துக் கொள்ளுங்களேன். பிரபஞ்சத்தில் இயற்கையின் நியதிப்படி ஒளி மூன்று இடங்களிலிருந்து நமக்கு வருகின்றன. அதன்படி ஒளி சூரியனிடமிருந்தும், சந்திரனிடமிருந்தும், அக்னியிலிருந்தும் வருகின்றன. இவை எல்லாம் உலகில் உள்ள ஏனைய பொருட்களை பிரகாசிக்கச் செய்தாலும், இவை எதுவும் ஆத்மாவை ஒளிர்விக்க முடியாது. ஏனென்றால் அந்த ஒளிகள் இருப்பதை உணர்வதற்கு ஆத்மாவே காரணமாக இருக்கின்றது. அது எப்படி என்றால், ஒளி இருப்பதை அறிபவன் யார்? நானே. அந்த “நான்” எனும் உணர்வுக்கே மூலம் எது? அந்த ஆத்மாதானே? ஆக ஒளிக்கே ஒளி தரும் ஆன்மாவை அவைகள் எப்படி ஒளிர்விக்க முடியும்?

“இப்படி விசாரம் செய்து எவன் ஆன்மாவாகிய என்னை அடைந்து விட்டானோ அவனுக்கு மறுபடியும் உலக விவகாரங்களில் புகுந்து எழும் மனம் இல்லாது போய்விடும். ஏனென்றால் அதுவே எனது பரம பதம், அதுவே எனது இருப்பிடமும் ஆகும்” என்று கிருஷ்ண பரமாத்மா அருச்சுனனுக்குச் சொல்கிறார். முடிவான பரம பதம் என்பது சரி; எதற்காக எனது இருப்பிடம் என்று சொல்கிறார்? இதைப் புரிந்து கொள்ள நாம் சற்று பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

gita-krishna1

தொடக்கத்தில் அருச்சுனன் பகவான் கிருஷ்ணனை தனது நண்பனாய்த்தான் பார்த்திருந்தான். அதனால் அவனது மனம் தளர்ந்து, செய்வது அறியாது கலங்கிய போது  போது கண்ணனிடம் தஞ்சம் புகுந்து மேற்கொண்டு என்ன செய்வது என்று அறிவுறுத்தும்படியும் கேட்டான். ஆனால் சற்று நேரம் முன்பு, கண்ணன் தன் விஸ்வ சொரூபத்தைக் காட்டும் போது பல கடவுளர்கள் மட்டும் அல்லாது, தன்னையும் மற்றோரையும் அந்த சொரூபத்திலேயே காட்டினான். அதிலிருந்து அவைகள் எல்லாம் இருக்கும் இடம் பரந்தாமனிடம்தான் என்று அருச்சுனன் புரிந்து கொண்டான். அப்படியென்றால் ஆன்மா என்பது ஏதோ எல்லாவற்றையும் உள்ளடக்கும் ஒரு பெரிய பொருள் என்றுதான் தோன்றியிருக்கும். அந்தப் பொருளுக்கும் வெளியே ஏதாவது இருக்கலாம் என்றும் தோன்ற வாய்ப்பு உள்ளது. அவைகள் அந்த இடத்தில் குடி கொண்டுள்ளது என்பது தவிர, உள்ளிருப்பது போலத் தோன்றும் அவைகளோ ஆன்மாவின் வெவ்வேறு தோற்றங்களே; அவைகளுக்கு ஆன்மாவை விட்டால் வேறு ஆதாரம் ஏதும் கிடையாது என்பதையும் அருச்சுனனுக்குத் தெரியப்படுத்த வேண்டும் அல்லவா?

ஆக அருச்சுனன் பார்த்த எதுவும் நிரந்தரமில்லை; எல்லாம் தோற்றங்களே. தோன்றுவது எதற்கும் ஓர் ஆரம்பம் இருப்பது போல ஒரு முடிவும் உண்டு. அது எந்த கடவுளர்களாக இருக்கட்டும், அல்லது எந்த உலகங்களாகவும் இருக்கட்டும். “அதற்கெல்லாம்   ஆதாரமான ஆன்மாவாக நான் எப்போதும் உள்ளேன் என்பதை நான் அறிவேன். நீயும் அதே ஆன்ம சொரூபம்தான், ஆனால் அதை நீ உணரவில்லை. அனைத்துள்ளும் உறையும் ஆன்மாவே உண்மை” என்றும் பகவான் இங்கு உணர்த்துகிறார். எல்லாம் அதுவே என்ற அந்த உணர்வு ஒருவனுக்கு வரும்வரை, மறுபிறவிகள் அவனுக்கு உண்டு என்பதுதான் நமது பண்பாட்டில் வேரூன்றிய தத்துவம்.

8-21

अव्यक्तोsक्षर इत्युक्तस्तमाहु:परमां गतिम् |
यं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम ||

உதியாது ஒழியாது என்று ஒதிடப்பட்ட
அது மேல்நிலை என்று அறைவர் – எதனை
மருவித் திரும்பாரோ மற்று அஹ்தென் மேலாம்
அறிய வீடாகும் அறி

பொருள்: நமது இந்திரியங்களால் உணரப்படக் கூடிய தோற்றம் என்பதும் இல்லாது, அழிவும் என்றுமில்லாது வேத ஸ்ருதிகளினால் ஒதப்படுகிற அந்த மெய்நிலையானது உயர்ந்த மேலான அக்ஷரநிலை என்று சொல்லப்படுகிறது. மேலும் அப்படிப்பட்ட எந்த நிலையை அடைந்து அதனிலேயே நிலைத்து நிற்பவர் பின்பு சம்சார சாகரத்திற்குத் திரும்ப வருவதில்லையோ, அந்த நிலையே என்னுடையதும், அடைவதற்கு அரிதுமான மோக்ஷ வீடு ஆகும் என்பதை அறிவாயாக.

தொடக்கம் என்று ஒன்று இருந்தால் அதற்கு முடிவு என்று இருப்பதுபோல், தோற்றம் என்று இருந்தால் மறைவு என்றும் இருக்கும். இதுதான் இயற்கை நியதி. அதேபோல் ஒன்று புதிதாய்த் தோன்றி இருக்கிறது என்றால், அதற்கு முன் அது இருந்ததில்லை என்றும் ஆகிறது. இல்லாத இடத்தில் ஒன்று தோன்றும்போது அதை நாம் நமது புலன்களால் அதன் இருப்பை உணர்கிறோம். அதன் தன்மைக்கு ஏற்ப அது ஒரு வடிவம் கொண்டோ, மற்றும் வெவ்வேறு குணங்களுடனோ உள்ள அந்தப் பொருளின் இருப்பை உணர்கிறோம். அதேபோல அந்தப் பொருள் மறைந்து விட்டால் அதன் இல்லாமையையும் உணர்வோம்.

ஒரு பொருளின் இருப்பையும், இல்லாமையையும் உணர்கிறோமே, அந்த உணர்வு என்பதற்கு ஒரு வடிவமும் இல்லை, அதை நாம் நம் புலன்களாலும் அறிவதில்லை. ஆக புலன்களால் அறியப்படுவது என்பது நம்மைச் சுற்றி பிரபஞ்சத்தில் உள்ள மற்ற பொருட்களுக்கே அன்றி நமக்கோ நமது உணர்வுக்கோ இல்லை என்றே ஆகிறது. அதனாலேயே நாம் நம்மை என்றும் நாமாகவே உணர்கிறோம். நமது உடல் வளர்ந்தாலும், தளர்ந்தாலும் நமது உணர்வு என்றும் மாறாது இருக்கிறது என்பதும் நமது அனுபவமே. மற்ற எந்தப் பொருளும் இப்போது இருக்கிறதா, அல்லது முன்பு இருந்ததா என்பதற்கு நாம் ஒரு அத்தாட்சியைத் தேடினாலும், நான் இருக்கிறேனா என்பதற்கு எனக்கு ஒரு சாட்சியும் தேவை இல்லை அல்லவா? “நான் இருக்கிறேனா?” என்று தன் இருப்பைப் பற்றி ஒருவன் கேட்டால் அவனைப் பற்றி என்ன சொல்வார்கள்? உலகில் இந்த “தான்” என்ற உணர்வு ஒன்றுக்குத்தான் அத்தகைய தன்மை உண்டு. மற்ற எதனுடைய இருப்பிற்கும், இல்லாமைக்கும் ஒரு சாட்சி அவசியம் தேவை ஆகிறது.

அப்படி உள்ள நமது உணர்வு எப்போதும் மாறாது என்றும் அப்படியே உள்ளது என்பதை நாம் அறிந்துகொண்டிருந்தாலும், நமது தேகத்தைப் பற்றியே நமது மற்றைய அனுபவங்கள் உள்ளதால் அந்த உணர்வு எனும் நமது “என்றும் உள்ள நிலையை” உணராது நமது இருப்பை உடலுடன் சம்பந்தப்படுத்தி, அந்த உடல் இருக்கும் வரைதான் அந்த உணர்வும் இருக்கும் என்று நாம் நினைக்கிறோம். உண்மை அதுவல்ல, அது என்றும் உள்ளதே என்ற அந்த பரமபதமாகிய முடிவான நிலையைப் பற்றி ஆன்றோர்கள் கூறுவார். அதை உணர்வதற்கே நாம் எண்ணிலாப் பிறவிகள் எடுக்கிறோம். அந்த நிலையை அடைந்தவர்கள் மறுபடியும் இந்த சம்சார சாகரத்திற்குத் திரும்பி வர மாட்டார்கள். ஏனென்றால் அதுவே எனது மோக்ஷ வீடு என்பதை கண்ணன் அருச்சுனனுக்குச் சொல்கிறார்.

அந்த நிலையை அடையும் வரை ஒவ்வொருவரும் அவரவர்களது பாவ-புண்ணிய செயல்களுக்கேற்ப வெவ்வேறு உலகங்களை அடைந்து, அனுபவங்களும் பெற்று, மீண்டும் உடலெடுத்து அந்த “உள்ள உணர்வே நான்” எனும் அனுபவம் பெறும்வரை பிறப்பு-இறப்பு சுழற்சியில் உழன்று கொண்டிருப்போம் என்பதை நாம் இங்கு மனத்தில் கொள்ளவேண்டும் .
music-iconரமண மகரிஷியின் பகவத்கீதாசாரம் இங்கே தரவிறக்கம் செய்து கேட்கலாம்.

(தொடரும் …)

2 Replies to “ரமணரின் கீதாசாரம் – 5”

  1. அன்புள்ள ஐயா

    நல்ல ஒரு பத்திரிகையாக இந்த காலத்தில் உங்கள் பத்திரிகை உள்ளது பெருமையாக உள்ளது. நமது கலாச்சாரத்தை விட்டு பிற பத்திரிகைகள் பணத்துக்காக மட்டுமே நடத்தபடுகின்ற இந்த 21-ஆம் நூற்றாண்டில் உங்கள் பத்திரிகையை படிக்கும் போது நம் கலாச்சாரத்தை போற்றுபவர்கள், பேணுபவர்கள் இன்னும் பாரதத்தில் இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகளுக்கும் ஏற்ற ஒரு பத்திரிகை. வளரட்டும் உங்கள் சேவை. மிளிரட்டும் நம் கலாச்சாரம்!!

    உதய்
    Muscat , Oman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *