திருப்பூர்- திரும்ப முடியாத பாதையில்… [பகுதி – 1]
(தொடர்ச்சி…)
மன்னர் ஒருவர் தனது நாட்டு மக்களைச் சோதிக்க ஒரு பரீட்சை வைத்தாராம். ‘நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இன்று இரவு ஒரு படி பால் கொண்டுவந்து காய்ந்துபோயுள்ள கோயில் குளத்தில் ஊற்ற வேண்டும்’ என்பது மன்னர் உத்தரவு. அதன்படி ஒவ்வொருவரும் ஒருநாள் இரவு கோயில் குளத்தில் ஊற்றினார்களாம். மறுநாள் காலையில் கோயில் குளத்தில் பார்த்தபோது, கோயில் குளத்தில் பாலின் சுவடே தெரியவில்லை; தண்ணீரே நிறைந்திருந்ததாம்.
அதாவது, நாட்டு மக்கள் ஒவ்வொருவரும், நாம் மட்டும் தண்ணீர் ஊற்றினால் மன்னருக்குத் தெரியவா போகிறது என்ற எண்ணத்தில் தண்ணீரையே ஊற்றி இருக்கின்றனர். குளம் தண்ணீரால் நிறைந்துவிட்டது. இது நாட்டு மக்களைப் பற்றி அறிய மன்னருக்கு உதவியது- இது ஒரு கற்பனைக் கதை.
திருப்பூர் சாயஆலைகள் நிகழ்த்திய நதிநீர் மாசுபாட்டிற்கும் இக்கதைக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
திருப்பூர் வட்டாரத்தில் 1,500 சாய, சலவை ஆலைகள் உள்ளன. இவற்றிலிருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகே வெளியேற்றப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், பெரும்பாலான சாய, சலவை ஆலைகள், தங்கள் தொழிலகங்களிலிருந்து யாருக்கும் தெரியாமல் கழிவுநீரை இரவு வேளைகளில் திறந்துவிடுவது வழக்கமானது. ஒரு சாய ஆலை மட்டும் தவறு செய்வது யாருக்குத் தெரியப் போகிறது என்ற அலட்சிய மனப்பான்மை. இதேபோல பலரும் செய்யத் தலைப்பட்டபோது, நொய்யலில் சாயம் கலந்து பாய்ந்த கழிவுநீர் சாய ஆலைகளின் லட்சணத்தை அம்பலப்படுத்திவிட்டது.
உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மோகன் குழு நொய்யல் நதிப்படுகை முழுவதும் தீர ஆராய்ந்தது; பல சாய, சலவை ஆலைகளையும் அங்குள்ள சுத்திகரிப்பு வசதிகளையும் ஆராய்ந்தது. அதன் பிறகே, நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டபடி செயல்படாமல், சில ஆலைகள் ரகசியமாக சாயக் கழிவை ஆற்றில் கலப்பதைக் கண்டறிந்தது. இறுதியில் மோகன் குழு அளித்த அறிக்கை, சாய, சலவை ஆலைகளுக்கு இப்போது ஆப்பு வைத்துவிட்டது. உயர் நீதிமன்றம் கடும் நடவடிக்கையாக சாய ஆலைகளை மூட உத்தரவிட்ட பிறகு, என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறது தொழிற்துறை.
ஒருங்கிணைப்பின்மையே பெரும் குறைபாடு
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், சாய, சலவை ஆலைகளுக்குள் சரியான ஒருங்கிணைப்போ, கட்டுப்பாடோ இல்லாததுதான். பொதுவாக சாய ஆலைகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் வகையில் வருபவை, வசதியான தொழிலதிபர்களால் நடத்தப்படுபவை. இவர்களுக்கு ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ், கிறிஸ்டலைசேசன், எவாபரேசன் போன்ற தொழில்நுட்பங்களை நிறுவுவது பெரிய விஷயமல்ல. அதற்கான முதலீடு செய்யும் அளவுக்கு பண வசதி படைத்தவர்கள் 147 தனியார் சுத்திகரிப்பு நிலையங்களைத் துவங்கினர்.
குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் சாயக்கழிவை படிகமாக்கும் கிறிஸ்டலைசேசன் (சாயக் கழிவு வீழ்படிவிளிருந்து நீரை ஆவியாக்குவதன்மூலமாக ரசாயனங்களைப் பிரிப்பது) தொழில்நுட்பத்திற்கு பெருமளவில் கான்கிரீட் தளம் வேண்டும். இதில் கிடைக்கும் கழிவுப்பொடியையும் வீசி எறிய முடியாது. அவையும் பாதுகாப்பாக அகற்றப்பட வேண்டியவை. பெரும்பாலான சுத்திகரிப்பு நிலையங்களில் மூட்டை மூட்டையாக இந்தக் கழிவுப் பொடி குவிந்துள்ளது. இவற்றை மறுசுழற்சி செய்ய முடியுமா என்பது குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன.
அடுத்த பிரிவில் வருபவர்கள் நடுத்தரத் தொழிலதிபர்கள். இவர்கள் சாய ஆலைகள் நடத்துவதை மட்டுமே தங்கள் பணியாகக் கொண்டவர்கள். பல கோடி முதலிட்டு சுத்திகரிப்பு அமைப்புகளை நிறுவ வசதியற்ற இவர்கள் (460 சாய ஆலைகள்) ஒருங்கிணைந்து 20 பொது சுத்திகரிப்பு நிலையங்களை (சி.இ.பி) அமைத்துள்ளனர். இதற்கு அரசு மானியக் கடனுதவி வழங்கி இருக்கிறது. இவற்றிலும் சாயக் கழிவை முற்றிலும் நீக்குவதில் சிரமமே நிலவுகிறது.
கடைசிப் பிரிவில் வருபவர்கள், சாய ஆலை உரிமையாளர் சங்கத்தில் உறுப்பினராகவே ஆக இயலாத வலிமையற்ற சிறு ஆலைகள். குடிசைத் தொழில் போல, சிறு இடத்தில் அவர்களது சக்திக்கு உகந்த அளவில் தொழில் நடத்தி வரும் இவர்களால் எந்த சுத்திகரிப்பு அமைப்பும் நிறுவ முடியாது. ஆயினும், வாழ்க்கைப் போராட்டத்திற்காக ரகசியமாக நடத்தப்படுபவை இவை.
அண்மையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து சாய ஆலைகளும் மூடப்பட்ட நிலையில், ரகசியமாக இயங்கிய இத்தகைய ஆலைகள் தொழில் கூட்டுக் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்தது. பெரும்பாலும் இந்த ஆலைகளிலிருந்து எந்த கட்டுப்பாடும் இன்றி கழிவு வெளியேற்றப்படுகிறது. சட்ட விரோதமாக செயல்பட்ட இத்தகைய சாய ஆலைகளை சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்குவதென, சாய ஆலை உரிமையாளர் சங்க செயற்குழு (பிப். 15) முடிவு செய்தது. மாநகராட்சி எல்லைக்குள் சாம்பிள், பட்டன், ஜிப் டையிங் என்ற பெயரில் இயங்கும் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநகராட்சி நிர்வாகத்தையும், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தையும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத் தக்கது.
இவற்றில் முதல் பிரிவில் வரும் சாய ஆலைகள், திருப்பூரில் முன்னிலையில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களால் நடத்தப்படுபவை. அவர்களுடன் பிற இரு பிரிவினரும் இணைந்து செயல்படுவதில் பல்வேறு சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வு சிக்கல்கள் உள்ளன. உயர் நீதிமன்றத்தில் ‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ எனப்படும் நூறு சதவிகித சுத்திகரிப்புக்கு உத்தரவாதம் அளித்தவர்கள், இவர்களே. சாய ஆலை உரிமையாளர் சங்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் வசதியான ஆலைகள், பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துவிட்டதாக சிறு சாய ஆலைகள் குற்றம் சாட்டுகின்றன.
தவிர, வசதியான ஏற்றுமதியாளர்கள் சிலர், எதிர்காலத்தில் வரும் சிக்கல்களை உத்தேசித்து பெருந்துறை, பவானி போன்ற ஈரோடு மாவட்டப் பகுதிகளில் முன்கூட்டியே சுத்திகரிப்பு நிலையங்களுடன் கூடிய சாய ஆலைகளை அமைத்துவிட்டனர். அவர்கள் தற்போதைய நெருக்கடியிலிருந்து விலகி இருக்கிறார்கள். ஆக, சாய, சலவை ஆலைகளிடையே ஒருமித்த உணர்வோ, கட்டுப்பாடோ இல்லை என்பது தெளிவாகிறது.
”திருப்பூர் நகராட்சித் தலைவராக இருந்த சேர்மன் கந்தசாமி உயிருடன் இருந்த வரையில் சாய ஆலைகளை ஒருங்கிணைப்பதில் சிரமம் இல்லாது இருந்தது. அவரே சாய ஆலை உரிமையாளர் சங்கத் தலைவராக இருந்தார். அவரே கூட, வாழ்வின் இறுதிக்கட்டத்தில் சங்க நடவடிக்கைகளில் வெறுப்புற்று விலகி இருந்தார்,” என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத சாய ஆலை உரிமையாளர் ஒருவர்.
”நொய்யல் நதியைச் சீரழித்ததற்கு உயர் நீதிமன்றம் விதித்த அபராதமே சாய ஆலைகளிடையே ஒற்றுமை குலையக் காரணமானது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று சாய ஆலைகள் தங்கள் மீதான நிர்பந்தத்தை அதிகரித்துக் கொண்டுவிட்டன. இதில், பிரச்னையில் தலையிடாமல் வேடிக்கை பார்த்த அரசுக்கும் பொறுப்புண்டு” என்றும் அவர் சொன்னார்.
தொழிற்துறையினரின் எதிர்காலக் கவலை
இந்நிலையில், சாய ஆலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சாமியப்பன், ”சாய ஆலைகள் மூடப்படுவதால் அதில் பணிபுரியும் பல்லாயிரக் கணக்கான வெளிமாவட்டத் தொழிலாளர்கள் வேலை இழப்பர். அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டால், பிறகு நிலைமை சீரடைந்த பிறகும் தொழில் சீரடைவது சிரமமாகிவிடும்” என்று எச்சரிக்கிறார். இதனை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சாய ஆலைகள் மீதான தடையை உறுதிப்படுத்தி உத்தரவிட்டது (ஜன. 31 ) நிலைமையை மேலும் தீவிரமாக்கியது.
சாயஆலை உரிமையாளர் சங்கம் இப்போது நிதர்சன நிலையை உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. ”சாயக் கழிவு நீரை ஜீரோ டிஸ்சார்ஜ் செய்வதிலுள்ள தொழில்நுட்பப் பிரச்னைகளை சரிசெய்ய கூடுதலாக 9 மாத அவகாசம் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்கம் மனு தாக்கல் செய்துள்ளது. அதன் மீதான விசாரணை விரைவில் துவங்கும் என்றும், அதில், தங்கள் பிரச்னைக்கு தற்காலிகத் தீர்வு (சாய ஆலைகள் திறக்க உத்தரவு) கிடைக்கும் என்று நம்புவதாகவும் சாய ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இப்பிரச்சினை குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல் கவலை தெரிவித்திருக்கிறார். ”சாயத் தொழில் என்பது பின்னலாடைத் துறையின் முதுகெலும்பு போன்றது. திடீரென சாய ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், ஏற்றுமதி ஆடை உற்பத்தியும் முடங்கும். ஈரோடு, பவானி, பெருந்துறை பகுதிகளுக்கு கொண்டுசென்று சாயமிடுவது எளிதானதல்ல. தற்போதைய பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக திருப்பூர் தொழில் அமைப்புகளும் கூட்டுக் குழுவைக் கூட்டி ஆலோசிக்க உள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.
திருப்பூரில் செயல்படும் தென்னிந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சங்கத்தின் (சைமா) தலைவர் ‘வைகிங்’ ஈஸ்வரன் கூறுகையில், ”சாய, சலவை ஆலைகளின் மூடலால் உள்நாட்டுக்கான பின்னலாடைகளும் ஏற்றுமதிக்கான பின்னலாடைகளும் உற்பத்தியாவது பெருமளவில் குறையும். இந்த ஆண்டு வர்த்தகத்தில் சரிவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. தற்போதைய சிக்கல் தொடர்பாக சாய ஆலை சங்கத்துடன் ஆலோசனை நடத்தி கூட்டுக் குழு மூலமாக நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்திற்கு போட்டியாகக் கருத்தப்படும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்- உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் (டீமா) செல்வரத்தினம் கூறுகையில், ”சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு பிரச்னை தலையாய பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால், பல்லாயிரக் கணக்கான உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி, ஜவுளித்தொழிலை நம்பியே வாழ்க்கை நடத்தும் லட்சக் கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு காண்பதில் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும், இத்தனை நாள் கட்டிக் காத்து வந்த ஜவுளித்தொழில் பின்னடைவை சந்திக்கும். ஆகவே, பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து சாய ஆலை சங்கங்கள் உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். சாய ஆலைகள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த பனியன் தொழில் துறையே பாதிக்கும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாள் பொது வேலைநிறுத்தம்
சாய ஆலைகள் மூடலால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு உடனடி தீர்வு காணுமாறு அரசை வலியுறுத்தி இதுவரை இரண்டு நாட்கள் திருப்பூரில் பொதுவேலைநிறுத்தம் நடத்தப்பட்டுள்ளது. இப்பிரச்னை துவங்கியவுடனேயே, இதன் அபாயத்தை உணர்ந்த இந்து முன்னணி அமைப்பு உடனடியாக பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. அதனை ஏற்று திருப்பூர் நகரம் முழுவதும் பிப். 4 ம தேதி முழு கடையடைப்பு, வேலைநிறுத்தம் நடந்தது. திரையரங்குகள் கூட செயல்படவில்லை. இந்து முன்னணியின் ‘பந்த்’ அழைப்புக்கு அனைத்துத் தொழிலகங்களும் செவிசாய்த்தன.
தங்கள் வேலை நிறுத்தம் வெற்றி அடைந்திருப்பது பிரச்னையின் அதிதீவிரத்தை அரசுக்கு உணர்த்தி உள்ளது என்கிறார், இந்து முன்னணியின் மாநில பொது செயலாளர் ‘காடேஸ்வரா’ சுப்பிரமணியம். அவர் மேலும் கூறியது:
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சாய, சலவை ஆலைகள் மூடப்படுவதால் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பனியன் தொழில் சார்ந்த அனைத்து தொழில்களும் முடங்குவதால், திருப்பூரிலுள்ள 4 லட்சம் வெளிமாவட்ட மக்களின் நிலை கேள்விக்குறி ஆகும். சாய ஆலைகளை மூடிவிட்டால் திருப்பூரில் எதுவும் மிஞ்சாது. கடந்த 65 ஆண்டுகளில் சொந்த முயற்சிகளில் பலரும் போராடி திருப்பூரை பனியன் தொழில் நகரமாக ஆக்கியுள்ளனர். இத்தொழிலைக் காக்கும் கடமை அரசுக்கு உண்டு.
நீதிமன்றத்தில் அரசு உத்தரவாதம் அளித்து திருப்பூர் தொழில் துறையினருக்கு கூடுதல் அவகாசம் பெற்றுத் தர வேண்டும். சாயக் கழிவுநீரை குழாய் மூலமாக கடலில் சேர்க்கும் திட்டத்தை ஆய்வு செய்து விரைவில் நிறைவேற்ற வேண்டும். இப்பிரச்னையில் அரசு ஓடி ஒளியக் கூடாது என்றார். இதனை வலியுறுத்தி கடந்த பிப்.15-இல் திருப்பூர் மாநகராட்சி முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தையும் இந்து முன்னணி நடத்தி இருக்கிறது.
இதேபோல, திருப்பூர் அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பிலும் பொது வேலைநிறுத்தம் பிப்.22-ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ, எம்.எல்.எப், ஏ.டி.பி, ஐ.என்.டி.யூ.சி, தொழிற்சங்கங்கள் இதற்கான அழைப்பை விடுத்தன. பாரதீய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்), தேசிய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன.
இந்த இரண்டாவது வேலைநிறுத்தமும் முழுமையாக நடந்தது. ‘மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மெத்தனப் போக்கைக் கண்டிப்பதாகவும், அரசு இதில் தலையிட்டு விரைவான தீர்வு காண வலியுறுத்துவதாகவும்’ தொழிற்சங்கக் கூட்டமைப்பு கூறியது. இதில் தி.மு.க. சார்புள்ள தொழிற்சங்கம் மட்டுமே பங்கேற்கவில்லை.
அரசியலாகும் தொழில் விவகாரம்
“இப்பிரச்சினைக்கு தற்போதைய தி.மு.க. அரசின் தொலைநோக்கற்ற தன்மையே காரணம்,” என்கிறார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருப்பூர் மக்களவை உறுப்பினர் சிவசாமி. ஜெயலலிதா அறிவித்த- “கடலுக்கு சாயக் கழிவுநீரைக் கொண்டுசெல்லும் திட்டத்தை அமலாக்காததே தற்போதைய பிரச்சினைக்குக் காரணம்” என்பது இவரது குற்றச்சாட்டு.
திருப்பூர் மாநகர மேயரான செல்வராஜோ (தி.மு.க), ”உண்மையில் சாய ஆலைகள் சுத்திகரிப்பு நிலையங்கள் நடத்த பல கோடி நிதி உதவியையும் மானியத்தையும் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து பெற்றுத் தந்தவர்கள் நாங்கள். இப்போதுகூட, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதிமாறன் கடலுக்குச் சாயக் கழிவுநீர் கொண்டு செல்லும் திட்டம் குறித்து தீவிர முயற்சி எடுத்து வருகிறார்” என்கிறார்.
திருப்பூர் மாவட்ட அமைச்சரான வெள்ளகோவில் சாமிநாதன், ”உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அரசு கீழ்ப்படிந்தாக வேண்டியுள்ளது. எனினும் நீதி மன்றத்தில் சாய ஆலைகள் மனு செய்தால் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது” என்றார். அதன்படி சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி (இவர் அண்மையில் தி.மு.கவுக்குத் தாவிய மார்க்சிஸ்ட்) கூறுகையில், சாய ஆலைகளுக்கு மாநில அரசு அளித்த உதவிகளைப் பட்டியலிடுகிறார். “சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வாங்கிய கடனுக்கான ரூ. 100 கோடி வட்டியை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. மாநில அரசும் இதற்கென ரூ.120 கோடி நிதி உதவியுள்ளது..” என்று அவர் பட்டியலைத் தொடர்கிறார்.
கோவை தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினரான சுப்பராயனோ (இந்திய கம்யூனிஸ்ட்), ”அரசு அளித்த உதவிகள் போதுமானவை அல்ல. தற்போதைய தொழில்துறையின் தேவையை உணர்ந்து, கடலில் கழிவுநீரைக் கலக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதும், அதனை நீதிமன்றத்தில் கூறி தொழில் தொடர்ந்து நடக்க ஏற்பாடு செய்வதுமே உடனடியாக அவசியம்” என்கிறார்.
பாரதீய ஜனதா கட்சியின் திருப்பூர் மாவட்டத் தலைவர் ‘பாயின்ட்’ மணி, ”குஜராத்தில் பா.ஜ.க. அரசு செய்துள்ளது போல, சாயக் கழிவுநீரை கடலுக்குள் கொண்டு சேர்க்கும் திட்டமே தொழில்துறையைக் காக்கும்” என்று கூறி இருக்கிறார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூரில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி இருக்கிறது தே.மு.தி.க. அதில் பேசிய அதன் அவைத் தலைவர் பண்ருட்டி ராமசந்திரன், அரசின் செயலற்ற தன்மையைச் சாடினார். கொங்குநாடு முன்னேற்றக் கழகமும் சாயக் கழிவை கடலில் சேர்க்கும் திட்டத்தை நிறைவேற்றுவதே தீர்வு என்று கோரி வருகிறது.
அண்மையில் திருப்பூர் வந்த இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன், ”திருப்பூர் தொழில்துறை நலிவுக்கு மாநில அரசே பொறுப்பு. ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளாமல், பிரச்சினை முற்றி வெடிக்கும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு, இப்போது அரசு தனக்கு சம்பந்தம் இல்லாதது போல ஒதுங்கப் பார்க்கிறது. குஜராத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்போது தமிழகத்தில் ஏன் முடியாது? அரசு வேண்டுமென்றே பிரச்சினையைத் தட்டிக் கழிக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறாக, திருப்பூர் சாய ஆலைகள் மூடல் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதப் பொருளாகி இருக்கிறது. ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டு, பிரச்னையைத் தீர்க்காமல் நீடிக்கச் செய்வதில் ஒவ்வொருவரும் முனைந்திருக்கின்றனர். திருப்பூரின் வாழ்வாதாரம் இதில் பிணைந்திருப்பதால், ஒவ்வொரு கட்சியும் இதில் தலையிட்டு ஆதாயம் பெறவே முயற்சிக்கின்றன. இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன் கூறியது போல, அரசு தான் இதில் பொறுப்பேற்க வேண்டும். தற்போதைய நிலையில் இதைத் தவிர வேறு வழியில்லை.
எந்நேரமும் சிக்கல் முற்றலாம்…
தற்போது சாய ஆலைகள் மூடலுக்குப் பின் பல தரப்பிலும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. தொழில்துறையினர் விரக்தியில் ஆழ்ந்துள்ளது அவர்களது செயலற்ற தன்மையில் வெளிப்படுகிறது. இப்பிரச்சினை தொடர்வது கண்டிப்பாக திருப்பூருக்கு நல்லதல்ல. இப்பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?
- பலரும் கூறுவது போல, கடலுக்கு சாயக் கழிவுநீரை குழாய் மூலம் கொண்டு செல்வது முடிவான தீர்வாகத் தோன்றுகிறது. அதற்கு முன், சாயக் கழிவு நீரை முடிந்தவரை சுத்திகரித்து சாயமும் ரசாயனமும் நீக்கி அனுப்பலாம். இதில் வெளியாகும் வீழ்படிவை மறுசுழற்சிக்கு அனுப்பலாம். இது தொடர்பாக குஜராத் மாநில அனுபவத்தை நேரில் சென்று அறிந்து வரலாம்.
- அதுவரை, தற்காலிகமாக, 2,200 பிபிஎம் அளவுள்ள கழிவுநீரை வெளியேற்ற அனுமதி பெறலாம். குறிப்பிட்ட கால அவகாசத்தில் முழுமையான சுத்திகரிப்புக்கு அரசே உத்தரவாதம் அளித்து, தொழில்துறை இயங்கச் செய்யலாம். இனிமேலேனும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை கண்டிப்புடன் ஊழலின்றி செயல்பட வேண்டும்.
- ஆனால், சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பை சாய, சலவை ஆலைகளிடம் ஒப்படைக்கக் கூடாது. அதனை அரசே ஏற்க வேண்டும். அதற்கான செலவை சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளிடம் லிட்டருக்கு எத்தனை காசு என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கலாம்.
- பொது சுத்திகரிப்பு நிலையங்களை அதிகமாக நிறுவி நொய்யலில் பாயும் சாக்கடை கலந்த கழிவு நீரையும் சுத்திகரித்தால் விவசாயத்திற்கு தண்ணீரும் கிடைக்கும். கடல்நீரையே குடிநீராக்க முடியும்போது, நொய்யலை புனருத்தாரணம் செய்ய முடியாதா என்ன?
- சென்னையில் கூவம் நதியை தூய்மைப்படுத்த ஆயிரம் கோடியில் திட்டம் தீட்டிய அரசு நொய்யல் நதியிலும் இதே போன்ற திட்டத்தை நிறைவேற்றலாம். பிறகு படிப்படியாக, மாசடைந்துள்ள அனைத்து நதிகளுக்கும் இத்திட்டத்தை விரிவு படுத்தலாம்.
தொழில்துறை வளம், இயற்கை நலம் இரண்டுமே நமது இரு கண்கள். ஒரு கண் பாதிக்கப்பட்டாலும் சமுதாயம் நலியும். எனவே, நமக்கு கிடைத்துள்ள துயரமான அனுபவத்தைக் கொண்டு, பெற்றுள்ள படிப்பினைகளின் அடிப்படையில், அரசியல் கண்ணோட்டமில்லாமல், அனைவரும் செயல்பட வேண்டிய நேரம் இது. அரசும் அரசியல் கட்சிகளும் தொழில் துறையினரும், விவசாயப் பிரதிநிதிகளும், நீதி துறையும், இணைந்து நடைபோட வேண்டிய தருணம் இது.
நமது எதிர்காலம் மட்டும்மல்ல, நமது சந்ததியினரின் எதிர்காலமும் இதில் அடங்கியுள்ளது என்பதை மனசாட்சியுடன் எண்ணிப் பார்த்து செயல்பட்டால் கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும். ஆக்கப்பூர்வமாக நல்லதை சிந்திப்போம். நல்லது நடக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.
முற்றும்.
திரு.சேக்கிழான்,
இந்த கட்டுரை அதிக நேரம் செலவழித்து பல தகவல்களை திரட்டியபின்
எழுதப்பட்டது தெரிகிறது. வாழ்த்துக்கள்.
(1)சுற்றுச்சூழல் என்றவுடன் வெள்ளைக்காரன்தான் மாசுபடுத்தினான் /
மாசுபடுத்துகிறான் என்ற பொதுபுத்தி வளரும் நாடுகளில் உருவாக்கப்
பட்டிருக்கிறது. நமக்கு வாய்ப்பு கிடைத்தால் அவன் 1950 முதல் 1990 வரை
செய்ததையேதான் நாமும் செய்வோம் என்பது முக்கிய விஷயம்.
(2)உங்கள் கட்டுரையில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதது, நீங்கள்
இந்த பிரச்சினைக்கு தீர்வாக சாயக் கழிவுநீரை அரசே சுத்திகரிப்பு
செய்து அதன் செலவுக்கு ஆலைகளிடமிருந்து பணம் வாங்க வேண்டும்
என்று எழுதியுள்ளீர்கள்.
அரசு பாதுகாப்பு, கட்டமைப்பு தவிர மற்ற துறைகளில் நேரடியாக
ஈடுபடுவது உருப்படாத காரியம். உருப்படுவதற்கு வாய்ப்பே இல்லை.
எவ்வளவு பேரை இந்த வேலைகளுக்கு பணியிலமர்த்துவது, அவர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் என்று மக்களின் வரிப்பணம்தான்
எகிறும். வேலைத்தரத்தைப் பற்றி கூறத்தான் வேண்டுமா?
ஆலை உரிமையாளர்கள்தான் சுத்திகரிப்பை செய்ய வேண்டும்.
அரசாங்கம் அதை மேற்பார்வை மட்டுமே செய்ய வேண்டும்.
சுத்திகரிப்பை ஒழுங்காக செய்யாத ஒருவரை தண்டித்தால் மற்றவர்கள்
சுதாரித்து கொள்வார்கள். இது உலகளவில் ஒப்புக்கொள்ளப் பட்ட
வழிமுறை.
(3)அடுத்து சுத்திகரிக்கப் பட்ட கழிவுநீரை கடலுக்கு செலுத்துவது.
வெள்ளைக்காரன் “Clean Coal Technology” என்றொரு பிட்டை
போடுவான். நிலக்கரியை எரித்தால் புகை வரத்தான் செய்யும். குறைவாக
வருமாறு வேண்டுமானால் செய்யலாம்.
அதைப்போன்றே மாசுகளை முழுவதுமாக அகற்ற முடியாது. கடலில்
செலுத்தினாலும் மீன் போன்றவை பாதிக்கப் படத்தான் செய்யும். எந்த
முறையில் சிறிய பாதிப்பு இருக்கும் என்பதை ஆராய்ந்து (அதுவும் நம்
வசதிக்குள்) அதை செய்வது மட்டுமே நம்மால் முடிந்த வழி.
நீங்கள் இந்த உண்மையை பட்டவர்த்தனமாக எழுதி இருக்கலாம்.
பாலாஜி குறிப்பிடுவதைப் போல கடலில் கழிவுகளை கொண்டு விட்டால் பிரச்னை தீருவதற்கு மாறாக கடலில் மாசு ஏற்படும்!
ஆனால் அரசு இதில் ஈடு பட வேண்டும் என்று தான் நானும் நினைக்கிறேன்! பல விதமான சிறு தொழில் அதிபர்களும் சம்பந்தப் பட்டது ஆகையால்! எவ்வாறாகிலும் இயற்கையை சீரழித்து விட்டு தொழில் துறை வளர்ச்சி அடைய செய்யக் கூடாது!
நன்றி!
அன்புள்ள நண்பர்கள் திரு பாலாஜி, திரு. எஸ்.என்.கே.எம்,
தங்கள் கருத்துகளுக்கு நன்றி.
சாயக் கழிவு நீரை சுத்திகரிப்பது உண்மையில் அரசின் வேலையல்ல என்பதை நானும் ஏற்கிறேன். ஆனால், தற்போதைய சூழலில், கட்டுப்பாடற்ற சாயப் பட்டறைகளை கட்டுப்படுத்த இதைவிட நல்ல வேறுவழி இருப்பதாகத் தெரியவில்லை. தவிர, அரசே சாயக் கழிவு சுத்திகரிப்பை நிர்வகிக்கும்போது, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ள முயற்சிக்கும் வாய்ப்பு இருக்காது.
அடுத்ததாக, அரசு இதில் கவனம் கொள்ள வேண்டும் என்பதால் அரசே நேரடியாக இதில் இறங்க வேண்டும் என்று பொருள் கொள்ளத் தேவையில்லை. இதற்கென தனியார் நிறுவனங்களை ஒப்பந்தத்தில் பணியமர்த்தலாம். திருப்பூர் நகரின் குடிநீர்த் தேவைக்காக மூன்றாவது குடிநீர்த் திட்டம் கொண்டுவரத் திட்டமிடப்பட்டபோது அதற்கென புதிய திருப்பூர் அபிவிருத்தித் திட்டம் உருவாக்கப்பட்டது. இதனை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனமே முன்னின்று உருவாக்கியது. இன்றும் இத்திட்டம் தனியார் பங்களிப்பில் சிறப்பாக நடந்து வருகிறது. அத்தகைய நிறுவனங்களிடம் நிபந்தனைகளுடன் சாயக் கழிவு சுத்திகரிப்புப் பணிகளை ஒப்படைக்கலாம். அதனை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (ஊழலின்றி) குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்து நிர்வகிக்கலாம். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் இணைந்த குழு அவ்வப்போது, வெளியேறும் கழிவுநீரின் உப்படர்த்தியை சோதிக்கலாம்.
எனினும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய பிரச்னை இது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். குஜராத்தில் வல்சாத் மாவட்டத்தில், சரிகம் தொழிற்பேட்டையிலிருந்து 13 கிமீ. தூரத்திற்கு இரண்டு அடி விட்டமுள்ள குழாய் அமைத்து தொழிலகக் கழிவுகள் (சுத்திகரிக்கப்படாமல்) கடலில் சேர்க்கப்படுகின்றன. அதனால் கடல்நீர் மாசுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது (ஆதாரம்: பிரன்ட்லைன்-13.08.2010) link: (https://www.hinduonnet.com/fline/fl2716/stories/20100813271606200.htm) எனினும், அதே வழிமுறையை பயன்படுத்தி, சாயக் கழிவுநீரை 90 சதவிகிதம் சுத்திகரித்து குழாய் மூலமாக கடலுக்கு கொண்டுசென்று சேர்க்க முயற்சிக்கலாம்.
பொடியாக மிஞ்சும் கழிவை உரமாகப் பயன்படுத்த முடியும்; மறுசுழற்சி செய்ய முடியும் என்று தற்போது தகவல்கள் வரத் துவங்கி உள்ளன. தினமணி நாளிதழில் (25.02.2011) link: (https://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial Articles&artid=381846&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=திருப்பூரை திருப்பிடலாம்!) திரு குமாரவேலு கூறியுள்ள யோசனைகள் பரிசீலிக்கத் தக்கவையாக உள்ளன.
தொழில்துறையையும் சுற்றுச்சூழலையும் ஒருசேரக் காக்கும் பொறுப்பு அரசுக்கே உள்ளதால், இவை அனைத்தையும் பரிசீலிப்பது ஆட்சியாளர்களின் கடமை. இதற்குத் தேவை மாநில மக்கள் மீது அக்கறை கொண்ட நரேந்திர மோடி போன்ற ஒருவரது தலைமை மட்டுமே.
-சேக்கிழான்
///சாய ஆலைகள் மூடப்படுவதால் அதில் பணிபுரியும் பல்லாயிரக் கணக்கான வெளிமாவட்டத் தொழிலாளர்கள் வேலை இழப்பர்.///
now only you people worry about your workers..? Without the elibilble salary how many people died there? That time where did you go, now came and cry for them…
GOD watched and now acted on you people.. Only in India we public did not give response for these type of problems. I ask you people who ever travelled aboroad, one question, have you seen in any country spoiled river inside a town?
நம் அச்சுப் பத்திரிகைகளில் காண முடியாத ஆழமான தகவல்களுடன் முழுமையான கட்டுரையை மிகுந்த உழைப்பு எடுத்துக் கொண்டு அளித்திருக்கிறீர்கள். பிரச்சினையைப் பற்றிய 360 டிகிரி பார்வையை அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் சேக்கிழான் அவர்களே.
ச.திருமலை
I welcome this decision of supreme court for the following reasons..
1. The centers like tiruppur are attracting all labour force from south tamilnadu and also from hilly areas.. this creates a severe labour shortage in the rural areas..
2. The entire noyyal belt has been heavily polluted so far.. Noyyal was called as Kanchi madevi in our literature.. its more holier than cauvery itself.. Such river is spoiled by this industry.. The time required for revival of these noyyal delta would be very long, up to 50 years, provided no industries function there..
3. There is another thing i heard.. Dayanidhi maran is planning to start an integrated textile industry near kadalur, which comprises of everything.. so the govt is unlikely to take any proactive steps, as the beneficieries of this supreme court action would be MK family