முன்னுரை:
நம் உள்ளம் கவர் திருவமர் மார்பனைத் தொன்றுதொட்டு தமிழர்கள் பாடி வணங்கி வரும் முறை பற்றியும் திருமால் சமய மரபின் தொன்மையைப் பற்றியும் விளக்க எழுந்த முயற்சி இது. சங்க கால இலக்கியம் தொட்டு, ஆழ்வார் பாசுரங்கள், இடைக்காலக் காப்பிய நூல்கள் ஆகியவற்றைத் துணைகொண்டு பல செய்திகளைக் காண்போம். இக்கட்டுரைத் தொடரில் வேதாந்த/பக்தி ரீதியிலான அனுபவ/அறிவு பூர்வமான விளக்கங்களுடன் பல அரிய செய்திகளை அலசுவதையும் ஒரு இலக்காகக் கொள்வோம். சில உதாரணங்கள்:
- உபநிடதங்களில் வரும் பல தத்துவங்களை விளக்கும் களஞ்சியமாக இப்பாடல்கள் அமைந்தமை.
- பழந்தமிழர் சமயம் வேத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவையே என்பது.
- வேதத்தின் கர்ம காண்டமாகிய பூர்வ பாகம், ஞான காண்டமாகிய உத்தர பாகம் (உபநிடதங்கள்), இதிகாசம், புராணம், கீதை ஆகியவற்றிலிருந்து பல செய்திகள் மாறாமல் சங்க இலக்கியங்களில் வருகின்றன. ஆகையால், இந்தியர்களுக்குப் பொதுவான இந்து மதநம்பிக்கைகளும் பழந்தமிழர் மரபுடன் சுருதி சேர்ந்து வேதாந்த-பக்தி மார்க்கம் எனும் இன்னிசைப் பிரவாகமாக வருவதையும் காணலாம்.
- ஆழ்வார்கள் செய்தருளிய பாசுரங்களுக்கும், பிறகு கம்பர், புகழேந்திப் புலவர், வில்லிப்புத்தூராழ்வார் முதலானோர் காவியங்களுக்கும் சங்கப் பாடல்களில் பல முன்னோடியாக இருந்தமையையும் காணலாம்.
- இவற்றிலிருந்து நம் பண்டைய தமிழர் பண்பாடு, நம்பிக்கை, வழிபாட்டு முறைகள் ஆகியவை தொடர்ச்சியாகப் பேணப்பட்டு வந்தமையும் தெளிவாகிறது.
- சமய நம்பிக்கைகள் குறித்த வரலாற்றாராய்ச்சிச் செய்திகள்.
இன்று வடமொழியிலுள்ள சாஸ்திர-பாஷ்ய நூல்களில் தேர்ச்சி பெற்று ஈடுபாடு உடையவர்கள் தமிழிலக்கியங்களைப் பற்றி ஆராய்வதில்லை. அதே போல், தமிழ்மொழியில் அமைந்த சங்க நூல்களிலும், காப்பியங்களிலும், சமயப் பாடல்களிலும் ஈடுபாடு கொண்ட தமிழறிஞர்களுக்குப் பொதுவாகப் பண்டைய சமஸ்கிருத நூல்களில் ஈடுபாடு காணப்படுவதில்லை. ஆங்காங்கு விதிவிலக்குகள் காணப்படினும், இன்று பொதுமேடைகளில் பரவலாக நாம் காணும் நிலை இது. பாண்டித்யத்தில் கதிரவனுக்கெதிர் மின்மினி போன்ற நிலையில் இருந்தாலும் எனக்குத் தமிழ், சமஸ்கிருத இலக்கியம் இரண்டிலும் அதிக ஈடுபாடும் ஆர்வமும் உண்டு. இத்தகு ஆர்வத்தின் வெளிப்பாடே இச் சிறு முயற்சி என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
இத்தொடரின் முதற்பகுதியாகிய இக்கட்டுரைக்கு நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பாடலானது, பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்ட பின்வரும் நற்றிணைக் கடவுள் வாழ்த்துப் பாடலாகும்:
“மாநிலஞ் சேவடி யாகத், தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக,
விசும்புமெய் யாகத் திசைகை யாகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற வெல்லாம் பயின்று, அகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப-
தீதற விளங்கிய திகிரி யோனே.”
(வளைநரல் = சங்கொலி, பௌவம் = கடல், உடுக்கை = ஆடை, திகிரி = சக்கரம்).
இப்பாடலில், உலகத்திற்குக் காரணப்பொருளாகிப் பிரபஞ்சமாய் நிற்கும் பரப்பிரம்மமாக, வேதமுதற் பொருளாக, சக்கரப் படையை ஏந்திய மாயோன் விளங்கி நிற்பதாக பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார். ஆகையால், பூமியை அவன் பாதமாகவும், சிறந்த நாதத்தை உடைய வெண்சங்குகளைக் கொண்ட கடலினை அவன் ஆடையாகவும், ஆகாயத்தை உடலாகவும், நான்கு திசைகளையும் நான்கு கரங்களாகவும், கதிரவனையும் திங்களையும் அவன் கண்களாகவும் உருவகப்படுத்துகிறார் பெருந்தேவனார்.
இவ்வுருவகமானது வேதப் பகுதியாகிய “முண்டக உபநிடதத்தில்” உள்ளதை அடியொற்றியே வருகிறது. அவ்வுபநிடதத்தின் இரண்டாம் அத்தியாயத்தின் முதல் பகுதியில், “அனைத்துக்கும் மேலான பரம புருஷனிடமிருந்தே நெருப்பிலிருந்து தீப்பொறிகள் கிளம்புவனபோல் எல்லாம் பிறந்து இறுதியில் அவனிடத்தேயே ஒடுங்குகின்றன” என்னும் செய்தி விளக்கப்படுகிறது. அவனே அனைத்துக்கும் உட்பொருளாக உள்ளுறைந்து ஆள்வதையும், அவன் பிரபஞ்சமனைத்தையும் சரீரமாகக் கொண்டமையையும் விளக்கும் வண்ணம் பின்வருமாறு வேதம் உரைக்கிறது:
“அக்3னிர் மூர்தா4 சக்ஷுஷீ சந்த்3ரஸூர்யௌ திச’: ச்’ரோத்ரே வாக்3விவ்ருதாச்’ச வேதா3: வாயு: ப்ராணோ ஹ்ருத3யம் விச்’வம் அஸ்ய பத்3ப்4யாம் ப்ருதி2வீ ஹி ஏஷ ஸர்வபூ4த-அந்தராத்மா”
[முண்டக உபநிடதம், 2.1.4]
இம்மந்திரத்தில் நெருப்பைப் பரமனது முகமாகவும், திங்களையும் சூரியனையும் கண்களாகவும், திசைகளைச் செவிகளாகவும், வேதத்தை அவன் வாய்மொழியாகவும், ஞாலத்தைச் சூழ்ந்து வீசும் வாயுவை அவன் மூச்சுக்காற்றாகவும், பிரபஞ்சத்தை அவன் இதயமாகவும் கூறி, அவன் பாதங்களிடத்தே பூமி பிறந்ததாகவும் உருவகப்படுத்தி இம்மந்திரம் கூறுகிறது. தொன்றுதொட்டு வடமொழியிலும் தமிழிலும் திருமாலைக் குறித்து வழங்கப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற உருவகம் இது. ஆதி சங்கரர் தம் உபநிடத உரையில் இவ்விடத்திற்கு, “இதில் சொல்லப்படுபவர் விஷ்ணுவாகிய அனந்தன். சரீரத்தை உடையவர்களில் முதன்மையானவர். மூவுலகையும் தம் உடலாகக் கொண்டிருப்பவர். அனைத்து உயிர்களுக்கும் உயிராக — அந்தராத்மாவாகத் திகழ்பவர்” [“ஏஷ தே3வோ விஷ்ணுர் அனந்த: ப்ரத2ம ச’ரீரீ த்ரைலோக்ய தே3ஹோபாதி4: ஸர்வேஷாம் பூ4தானாம் அந்தராத்மா”] என்று பாஷ்யமிட்டுள்ளார்.
பிரம்ம சூத்திர பாஷ்யத்திலும் ஸ்ரீ சங்கரர் இம்மந்திரம் குறித்த விசாரம் செய்துள்ளார் (சாரீரக மீமாம்ச பாஷ்யம், 1.2.25). “வேதத்தின் முடிவாக, உபநிடதங்களின் கருப்பொருளாக நிற்பது பிரபஞ்சம் அனைத்துக்கும் காரணமாகவும் கர்த்தாவாகவும் விளங்குவதாகிய, உண்மைப்பொருளாகிய, பரம்பொருளே” என்று சங்கரர் பாஷ்யத்தின் முதலத்தியாயத்தில் நிலைநாட்டியுள்ளார். “ஒன்றுக்கொன்று முரண்பட்டுப் பேசுவது போல் தோன்றும் சுருதி வாக்கியங்களைப் புஷ்பங்களென்று எடுத்துக் கொண்டால், பிரம்ம சூத்திர கர்த்தாவாகிய வியாசர் செய்திருப்பது அவற்றை நூலால் கோர்த்து சீர்ப்படுத்தி, முரண்பாடு சிறிதும் இல்லாத மாலையாகத் தொடுத்துத் தந்திருப்பது” என்பது சங்கரர் கூறும் விளக்கம் (‘சூத்திரம்’ என்ற வடமொழிச் சொல் ‘நாண்’ எனும் பொருளை உடையது). இப்படி பிரம்ம சூத்திரம் விசாரத்திற்குப் பல சுருதி வாக்கியங்களை எடுத்துக் கொண்டிருப்பதாகவும், ஆங்காங்கு ஸ்ம்ருதிகளாகிய இதிகாச-புராண-ரிஷி வாக்கியங்களிலிருந்தும் உதாகரித்துச் செல்வதாக பாஷ்யகாரர்கள் பலர் விளக்கி வந்துள்ளனர். அவற்றில் ஒன்று தான் மேலெடுக்கப்பட்ட முண்டகோபநிடத மந்திரம்.
பரம்பொருளே பிரபஞ்சம் அனைத்துக்கும் உபாதான-நிமித்த காரணங்களாகவும், சர்வ-அந்தர்யாமியாகவும் விளங்குவதையே இவ்வுபநிடத மந்திரம் உணர்த்துகிறது என்பது உரை எழுதிய சங்கரர், ராமானுஜர் முதலானோர் கொள்கை. “சர்வாந்தர்யாமி” என்பதற்கு “அனைத்தையும் உள்ளுறைந்து ஆள்பவன்” என்று பொருள். “உபாதான-நிமித்த காரணங்கள்” பற்றி எளிதில் விளக்க வேண்டும் என்றால், “பானைக்கு மண் உபாதான காரணம்; குயவன் நிமித்த காரணம்” என்ற உதாரணம் போதும்.
இவ்விடத்தில் இரண்டு சந்தேகங்கள் எழக்கூடும்:
(1) முதல் சந்தேகமானது — உபாதான-நிமித்த காரணங்கள் இரண்டும் ஒரே பொருளாக இருக்க முடியுமா? அப்படி இருப்பதைப் பார்ப்பதில்லையே? குயவன் பானை செய்வதைப் பார்க்கின்றோம். ஆனால், குயவனே பானை ஆவதில்லை; களிமண் குயவன் உதவி இல்லாமல் தானாகவே பானை ஆவதில்லை.
(2) இரண்டாவதாக — பரம்பொருள் பிரபஞ்சமாகவே பரிணமித்தது என்று கூறிவிட்டால், பரம்பொருளை மாறுதல் அடைந்து அழியும் தத்துவம் போலக் கூற வேண்டுமே? அப்படி இல்லாமல் அதை “என்றென்றும் இருப்பது”, “காலத்தால் மாறுபடாதது”, “காலத்திற்கு அப்பாற்பட்டது” என்று மறையாகிய வேதம் கூறுகிறதே?
இச் சந்தேகங்களுக்கான தீர்ப்பை எளிதில் புரிந்துகொள்ள வேண்டுமானால், மயிலை உதாரணமாகக் கொள்ளலாம். மயில் கார்மேகத்தைக் கண்டவுடன் தோகை விரித்தாடுகிறது. இந்தத் தோகை விரித்தாடும் நடனத்தையும் அதே மயில் தான் உருவாக்குகிறது. அக்காட்சியை உருவாக்க அம்மயிலானது, பானை செய்ய குயவன் உபயோகிக்கும் களிமண் போலவோ, நாற்காலி-மேசை செய்ய தச்சர் உபயோகிக்கும் மரம் போலவோ தனக்கு வெளியே கிடக்கும் எந்த ஒரு பொருளையும் உபயோகிப்பதில்லை; மயில் தன்னையே அந்நிலைக்கு மாற்றிக் கொள்ளுகிறது என்று கூறுகிறோம். இவ்வாறு, பரம்பொருளுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பை “மயிலுக்கும் தோகைக்கும் உள்ள தொடர்பு போல” என்று விளகினால், பரம்பொருளே பிரபஞ்சத்தின் உபாதான-நிமித்த காரணங்கள் இரண்டுமே என்று கூறுவதில் பிழை இல்லை.
மயிலின் தோகை விரிந்த நிலை போன்றதே இன்று காணும் பிரபஞ்சத்தின் தூல நிலை. நாட்டியம் முடிந்தபின் தோகையை உள்வாங்கிக் கொண்ட நிலையே பிரபஞ்சம் அழிந்து பிரளயத்தில் கிடக்கும் சூட்சும நிலை. தோகையை விரித்து ஆடுவதாலோ, தோகையை உள்வாங்கிக் கொள்வதனாலோ “மயில் மாறுதல் அடைந்துள்ளது” என்றோ, “மயில் அழிந்து விட்டது” என்றோ எவ்வாறு நாம் கூறுவதில்லையோ, அவ்வாறே பரம்பொருளின் அங்கமாக பிரபஞ்சம் நாம-ரூபங்களுடன் விரிந்து கிடக்கும் நிலையில் “பரம்பொருள் மாற்றம் அடைந்துவிட்டது” என்றோ, பிரளயத்தின்போது நாம-ரூபங்கள் அழிந்த நிலையில் “பரம்பொருள் அழிந்துவிட்டது” என்றோ கூறுவதில்லை.
இதைப்போன்றே திருச்சந்தவிருத்தத்தில் திருமழிசையாழ்வார் கடலுக்கும் அலைக்கும் உள்ள தொடர்பை வைத்து பிரம்மத்திற்கும் பிரபஞ்சத்தில் சராசரங்களுக்கும் உள்ள தொடர்பைப் பின்வரும் பாசுரத்தில் விளக்குகிறார்:
“தன்னுளே திரைத்தெழுந் தரங்கவெண் டடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந் தடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவுந் திரிபவும்
நின்னுளே யடங்குகின்ற நீர்மைநின்க ணின்றதே.”
[திருச்சந்த விருத்தம், 10]
இத்தகைய காரிய-காரண தொடர்ச்சியிலும் பரம்பொருள் விகாரமடையாமல் என்றென்றும் நிலைத்து நிற்கும் தத்துவமாக விளங்குவதற்கு எடுத்துக்காட்டாக பொன்னையும் ஆபரணத்தையும் கூறுவர். பொன் ஆபரணத்திற்குக் காரணப்பொருள். ஆபரணம் பொன்னைக் காரணப்பொருளாக உடையதால் அது ’காரியங்கள்’ எனும் குழுவில் அடங்கிவிடுகிறது. ஆபரணமான பிறகும் பொன் பொன்னாகவே இருக்கிறது, ஈயமாகவோ பித்தளையாகவோ மாற்றம் அடைவதில்லை. அவ்வாறே பிரபஞ்சமாக விரிந்து நின்றாலும், அதற்குக் காரணப்பொருளும் அந்தராத்மாவ்வுமாகிய பரம்பொருள் விகாரமடைவதில்லை. இத் தத்துவத்தைக் கம்பர் யுத்த காண்டத்தில் இரணியன் வதைப் படலத்தில் நமக்கு அறிவிக்கிறார். அவ்விடத்தில் நரசிங்கப்பிரானைக் குறித்து நான்முகனார் இவ்வண்ணம் கூறுகிறார்:
“நின்னுளே என்னை நிருமித்தாய்; நின் அருளால்,
என்னுளே, எப் பொருளும் யாவரையும் யான் ஈன்றேன்;
பின் இலேன்; முன் இலேன்; எந்தை பெருமானே !
பொன்னுளே தோன்றியது ஓர் பொற்கலனே போல்கின்றேன்.”
[கம்பராமாயணம்: இரணியன் வதைப்படலம், 160]
இது பின்வரும் திருமழிசை ஆழ்வார் பாசுரத்தை நினைவூட்டுகிறது. இதுவும் நரசிங்கப்பிரானைக் குறித்தே பாடியிருப்பது:
“தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர்த் தோள் மாலே — உகத்தில்
ஒரு நான்று நீயுயர்த்தி உள்வாங்கி நீயே
அருநான்கு மானா யறி”
[நான்முகன் திருவந்தாதி, 5]
இப்பாடலில் “அரு நான்கும் ஆனாய்” என்றவிடத்திற்கான ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளையின் மணிப்பிரவாள வியாக்கியானத்தில், “தேவ திர்யங் மனுஷ்ய ஸ்தாவராதிகளிலே அந்தராத்மதயா ப்ரகாசித்து நின்ற” (அதாவது, தேவர்களுக்கும், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும், தாவரங்களுக்கும் உள்ளுறையும் ஆன்மாவாக நின்ற) என்று காணப்படுகிறது.
முன்பே சங்கப்புலவர்களும் மாயோனை,
“அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ” [பரிபாடல், 3]
“ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே;
மூன்றின் உணரும் தீயும் நீயே;
நான்கின் உணரும் நீரும் நீயே;
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே:
அதனால், நின் மருங்கின்று மூ ஏழ் உலகமும்,”
[பரிபாடல், 13]
என்று ஜகத்காரணப் பொருளாகப் பாடியுள்ளனர்.
நிற்க. பிரபஞ்சத்துக்கு உயிராய் உள்ள இறைவனின் நிலையை “சரீர-சரீரி பாவம் (शरीर-शरीरि भावम्)” என்று மற்றொரு விதமாக வேதாந்திகள் கூறுவர். அதாவது, பிரபஞ்சத்தைச் சரீரமாக உடையவனாதலால் இறைவன் “சரீரி” ஆகிறான். நாம் மேற்கண்ட முண்டக உபநிடத பாஷ்யத்தில் சங்கரர் “சரீரத்தை உடையவர்களுள் முதன்மையானவர்” என்று விளக்குகிறார்.
ஆகையால் சூரியனையும் சந்திரனையும் பரம்பொருளுக்குக் கண்களாகவும், தரணியைப் பாதமாகவும், திக்குகளைச் செவியாகவும், அண்டவெளியை உடலாகவும் சுருதி வாக்கியம் உருவகப்படுத்துதுவதன் நோக்கம் “பரம்பொருள் உலகனைத்துக்கும் உட்பொருளாக, அந்தராத்மாவாக, உயிருக்கு உயிராக இருப்பதை உணர்த்தவேயன்றி, விகாரமடையும் குணத்தை உடையது என்பதைக் கற்பிப்பதற்கல்ல” என்று சங்கரர் பாஷ்யத்தில் விளக்கியுள்ளார். இதற்கு ஆதாரமாக அவர் பின்வரும் இதிகாச-புராண வாக்கியங்களை எடுத்துக்காட்டியுள்ளார். அவற்றில் நமக்குச் சில ஆர்வமூட்டும் செய்திகள் கிடைக்கின்றன:
“யஸ்ய-அக்3னிர்-ஆஸ்யம் த்3யௌர்-மூர்தா4 க2ம் நாபி4ச்’-சரணௌ க்ஷிதி: |
ஸூர்யச்’-சக்ஷு: தி3ச’: ச்’ரோத்ரம் தஸ்மை லோகாத்மனே நம: ||”
[“யாருக்குத் தீ முகமாகவும், சுவர்க்கம் தலையாகவும், ஆகாயம் வயிறாகவும், காலாக பூமியும், கதிரவன் கண்ணாகவும், திசை செவியாகவும் விளங்குமோ, உலகத்தைத் தாங்கும் உயிரான அவனுக்கு வணக்கங்கள்.” — மகாபாரதம், 12.47.44]
இது ஐந்தாம் வேதமாகிய மகாபாரதத்தின் பனிரண்டாம் பருவமான சாந்தி பருவத்தின் தொடக்கத்தில் வருகிறது. இவ்வத்தியாயத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடக்கையில் கண்ணனை நோக்கி நீண்ட துதி ஒன்று பாடுகிறார். பீஷ்மர் தன்னைக் கூவி அழைத்ததைத் தன் ஒப்பற்ற ஞானத்தின் மூலம் அறிந்த பகவானாகிய ஹரி, பாண்டவர்களை அழைத்துக்கொண்டு போர்க்களம் செல்கிறார். அதன் பிறகே பீஷ்மர் நாரணனுடைய அருளால் அம்புப்படுக்கையில் கிடந்த நிலையிலும் அயர்ச்சியடையாமல் தருமனுக்கும் மற்ற பாண்டவர்களுக்கும் ராஜ தர்மம் முதலியன பற்றிய பல அறிவுரைகளைச் செய்கிறார். இப்படிக் கண்ணன் பாண்டவர்களுடன் பீஷ்மரைக் காணச் செல்லக் காரணமாய் இருந்த பீஷ்மர் துதியிலிருந்து எடுக்கப்பட்ட இரண்டு வரிகளே மேற்கண்டவை. வெறும் மிகைப்படுத்தப்பட்ட வாழ்த்தாக அமையாமல், இதிகாச-புராணங்களில் வரும் மற்ற துதிகளைப் போலவே இப்பகுதி முழுதும் தத்துவ ஆழம் மிக்க வரிகளாக அமைந்துள்ளன.
இவ்வரிகள் இன்னொரு முக்கியமான செய்தியிக்கு எடுத்துக்காட்டாக சங்கரர் நமக்கு அறிவிக்கிறார் (பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் 1.2.25). அதாவது, “ஸ்ம்ருதிகளில் உள்ள வாக்கியங்கள் மூல சுருதிகளை ஆதாரமாகக் கொண்டவையாக இருந்தால், அவை அச் சுருதி வாக்கியங்களைத் தெளிய உரைப்பதாகக் கொள்ளலாம்” என்பது. இவ்வாறு அமைந்துள்ள ஸ்ம்ருதி வாக்கியங்களை “வேத உபப்பிரம்மணம்” என்று கூறுவர். ஆகையால், மேற்கண்ட மகாபாரதச் சுலோகம் முண்டகோபநிடத மந்திரத்தை விளக்குவதாகக் கொள்ள வேண்டும். இதனை அடிப்படையாக வைத்துத்தான் சங்கப் புலவரும் நற்றிணைக்குக் கடவுள் வாழ்த்து பாடியுள்ளார் என்பதும் தெரிகிறது.
சங்கரர் எடுக்கும் மற்றொரு மேற்கோள் இன்றைய பிரம்மாண்ட புராண அத்தியாயம் ஒன்றில் உள்ளது:
“த்3யாம் மூர்தா4னம் யஸ்ய விப்ரா வத3ந்தி க2ம் வை நாபி4ம் சந்த்3ர-ஸூர்யௌ ச நேத்ரே |
திச’: ச்’ரோத்ரே வித்3தி4 பாதௌ3 க்ஷிதிம் ச ஸோ(அ)சிந்த்யாத்மா ஸர்வபூ4தப்ரணேதா ||”
[வேதமறிந்த ஞானிகள் யாருடைய உச்சந்தலையை சுவர்க்கமாகவும், ஆகாயத்தை உதரமாகவும், சந்திரனையும் சூரியனையும் கண்களாகவும், திசைகளைச் செவிகளாகவும் பாதங்களை பூமியாகவும் அறிவரோ, அந்த அறிவுக்கெட்டாத பரமாத்மா அனைத்து உயிர்களுக்கும் தலைவன் ஆவான். — பிரம்மாண்ட புராணம், 1.5.107]
பிரம்மாண்ட புராணத்தில் இவ்வரிகளைக் கொண்ட பிரகரணமும் சிருஷ்டியை விளக்குவதாகும். சங்கரரால் கீதை விளக்கவுரையில் மங்கள சுலோகமாக எடுக்கப்பட்ட “நாராயண: பரோ அவ்யக்தாத்” எனத் தொடங்கும் வரிகளும் இதே அத்தியாயத்தில் மேலெடுக்கப்பட்ட வரிகளுக்கு மிக அண்மையில் காணப்படுகின்றன. இது தவிர, மற்றொரு இடத்திலும் (சூத்திர பாஷ்யம், 2.1.1) இப்புராணத்தில் காணப்படும் வேறொரு வரியைச் சங்கரர் மேற்கோள் காட்டியிருப்பதிலிருந்து இப்புராணத்தில் உள்ள பகுதிகள் பிரமாணமாகக் கையாளப்பட்டமை தெரிகிறது.
திருமாலை இப்படிப் பாடும் மரபு வேதாந்தத்தை ஒட்டி வருகின்றது என்பதற்கு சமஸ்கிருத நூல்களிலிருந்து மேலும் பல அரிய மேற்கோள்களையும் காணலாம். உதாரணமாக ஆதிகவி வால்மீகி முனிவரின் இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் சீதையை மீட்டு வரும் தருணத்தில் நான்முகக் கடவுள் முகமாக தேவர்கள் அனைவரும் இராமனை பக்தியுடன் பாடும் பகுதி வருகிறது. இப்பகுதியும் பரம்பொருளின் பரத்வ நிலையைப் பாடும் பல ஆழ்ந்த வேத வாக்கியங்களை அடியொற்றியவண்ணம் அமைந்துள்ளது. அதில் நான்முகனார்,
“அச்’விநௌ சாபி தே கரணௌ சந்த்3ர ஸூர்யௌ ச சக்ஷுஷீ”
“ஜக3த் ஸர்வம் ச’ரீரம் தே ஸ்தை2ர்யம் தே வஸுதா4 தலம்”
[— இராமாயணம், யுத்த காண்டம், 6.105.7, 6.105.23]
என்று பெருமாளின் கண்களைச் சூரிய-சந்திரர்களாகவும், திடமான நிலையை பூமியாகவும், அவன் செவிகளை அச்வினி தேவதைகளாகவும் பாடியபிறகு உலகனைத்தும் அவனுக்கு சரீரமாகவும் பாடியுள்ளார் பிரம்மா.
இம்மரபை ஒட்டியே அமரகோசத்திலும் விஷ்ணு பெயர்களில் ஒன்றாக “விச்’வம்பர” என்ற பதமும் படிக்கப்படுகிறது. இதற்கு “பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்பவன்” என்று பொருள்.
நாம் எடுத்துக்கொண்டிருக்கும் நற்றிணை கடவுள் வாழ்த்துப் பாடலின் கருத்தை முழுமையாகக் கொண்ட வடமொழிச் சுலோகம் ஒன்று இன்று அனைவராலும் ஓதப்படுகிறது. “தோடகாசாரியார்” என்ற ஆதி சங்கரர் வழி வந்த வேதாந்தியரின் “ச்’ருதி ஸார ஸமுத்3த4ரணம்” என்ற நூலில் மங்கள சுலோகமாக வருகிறது–
“பூ4: பாதௌ3 யஸ்ய க2ம் சோத3ரமஸுரநில: சந்த்3ர ஸூர்யௌ ச நேத்ரே
கர்ணாவாசா’: சி’ரோ த்3யௌர்முக2மபி த3ஹனோ யஸ்ய வாஸ்தவ்யமப்3தி4: |
அந்த:ஸ்த2ம் யஸ்ய விச்’வம் ஸுர-நர-க2க3-கோ3-போ4கி3-க3ந்த4ர்வ-தை3த்யை: சித்ரம்
ரம்ரம்யதே தம் த்ரிபு4வனவபுஷம் விஷ்ணுமீச’ம் நமாமி ||”
[“பூமியைப் பாதங்களாகவும், ஆகாயத்தை வயிறாகவும், வாயுமண்டலத்தை மூச்சாகவும், சந்திரனையும் சூரியனையும் கண்களாகவும், திக்குகளைச் செவிகளாகவும், வானுலகை உச்சந்தலையாகவும், அக்னியை வாயாகவும், ஆழ்கடலைக் குடலாகவும், எவன் கொண்டுள்ளானோ, எவனுள்ளே தேவரும், மானுடரும், புள்ளும், அரவும், கந்தருவரும், அசுரர்களும் இயங்கி விளையாடுகிறார்களோ, மூவுலகையும் தன் உடலாகக் கொண்ட விஷ்ணுவாகிய அந்த சர்வேஸ்வரனை வணங்குகிறேன்.” — ச்ருதிஸாரஸமுத்தரணம், 179]
இச் சுலோகம் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணத்தில் தியான சுலோகங்களில் ஒன்றாக இன்று வாசிக்கப்படுகிறது. நற்றிணையின் பாயிரத்தில் “மாநிலஞ் சேவடியாய்” என்பது மேற்கண்ட தியான சுலோகத்தில் “பூ4: பாதௌ3” என்றும், “விசும்பு மெய்யாக” என்பது “க2ம் சோத3ரம்” என்றும், “பசுங்கதிர் மதியொடு சுடர்க்கண் ணாக” என்றது “சந்த்3ர ஸூர்யௌ ச நேத்ர” என்றும் வருவதைக் காணலாம்.
“இயன்றவெல்லாம் பயின்று அகத்து அடக்கிய” என்ற சரீர-சரீரி அடிப்படையிலான தொடர்பும் விரிவாக “யஸ்ய விச்’வம் ஸுர-நர-க2க3-கோ3-போ4கி3-க3ந்த4ர்வ-தை3த்யை: சித்ரம் ரம்ரம்யதே” என்றும் வருவதைக் காணலாம்.
இது “ஸர்வம் க2லு இத3ம் ப்3ரஹ்மா” என்ற சாந்தோக்ய உபநிடதத்தில் (மூன்றாம் அத்தியாயம், பதிநான்காவது பகுதியில் உள்ள) “சாண்டில்ய விதயை” வாக்கியத்தையும் ஒட்டி வருகிறது. அதே அர்த்தத்தைப் புருஷ ஸூக்தமும் “புருஷ ஏவேத3ம் ஸர்வம்” என்ற மந்திரத்தில் உணர்த்துகிறது. தைத்திரீய நாராயணீய உபநிஷதும்,
“யச் ச கிஞ்சிஜ் ஜக3த் ஸர்வம் த்3ருச்’யதே ச்’ரூயதேபி வா
அந்தர் ப3ஹிச்’ ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தி2த:”
[பிரபஞ்சத்தில் காணப்படுவது கேட்கப்படுவது எல்லாவற்றையும் உள்ளிருந்தும் வெளியிலும் சூழ்ந்து நாராயணன் நிலைத்து நிற்கிறான்.]
என்று இயம்பிற்று.
இங்ஙனம் பிரபஞ்சம் அனைத்தையும் இறைவனுக்குச் சரீரமாகக் கூறுவதால் அனைத்துயிர்களும் அவனுக்கு உடைமையாகின்றன. இத்தகையதொரு சித்தாந்தத்தில் பரஸ்பர சகோதரத்துவக் கண்ணோட்டத்திற்கே இடமுண்டு. இவ்வர்த்தத்தை நாம் பகவத் கீதை மூலமாக அறியலாம்:
“மற்றோ ரிடத்து மறமற்று மித்திரனா
யுற்றான் கருணை யுறுமமதை — செற்றா
னகங்கார மற்றா னமர்பொறையன றுக்கஞ்
சுகங்காணி லொப்பான் றுணிந்து.”
[பகவத் கீதை வெண்பா, 12.13]
இப்படிக் கீதாச்சாரியனாகிய கண்ணன் சொல்லுமிடத்தே, “இவரை நினைவில் வைத்துக் கொண்டுத் தன் இச் சுலோகத்தைச் செய்துள்ளானோ” என்று வியக்கும் வண்ணம் வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ பிரகல்லாதாழ்வான். தன்னுடைய விஷ்ணுபக்தியைப் பொறாத தன் தன்தை பலவாறு துன்பப்படுத்தியும் பிரகல்லாதன் இத்தகைய துவேஷமற்ற தூய சிந்தையுடன் திடமாக இருந்தார். அனைத்து உயிர்களையும் தனக்குச் சினேகிதராக, மிக விரும்பத்தக்கவர்களாகவே பாவித்தார். “தூய விஷ்ணுபக்திக்கு இது இன்றியமையாத அங்கம்” என்ற கொள்கையை ஸ்திரமாகப் பற்றியிருந்தார்.
“
உலகனைத்தும் திருமாலுடைய தோற்றமன்றி வேறில்லை. அவனே அனைத்துடனும் ஒன்றி நிற்பவன். ஆகையால் ஞானிகள் உலகனைத்தையும் தம்மைக் காட்டிலும் வேறாக நினைக்காமல், அனைத்தையும் தாமாகப் பாவிப்பர். ஆகையால், நம்முடைய குலத்தில் வேரூன்றியிருக்கும் குரோத குணத்தை விலக்குவோம். இதன் மூலம் நாம் நித்தியமான, சுத்தமான, ஆனந்தமான ஆன்ம ஸித்தியை அடையலாம்.”
“அனைத்துயிர்களையும் சமமாக பாவிப்பீர்கள் அசுரர்களே! இத்தகைய சமத்துவ பாவமே அச்சுதனை ஆராதிக்கும் முறையாகும்”
[விஷ்ணு புராணம், 1.17.82-90]
என்னும் பிரகல்லாதன் கூற்றைக் காணலாம். இக்காரணத்தால் கம்பர்,
“தாயின் மன்னுயிர்க்கு அன்பினன்” [கம்பராமாயணம்: இரணியன் வதைப் படலம், 82]
என்று பிரகல்லாதனை அடைமொழியிட்டுப் பாடியுள்ளார். “வைஷ்ணவ ஜனதோ” எனத் தொடங்கும் குஜராத்தி மொழிப் பாடலின் கருத்தும் இத்துடன் உடன்படுவதை உணரலாம். “பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக்கும் அந்தராத்மா அச்சுதனே, அனைத்தும் அவன் சரீரமே” என்று பார்க்கையில், “ஒரு சிலர் மாத்திரம் வேண்டியவர்கள், ஏனையோர் வேண்டாதவர்கள்” என்றோ, “இவர்கள் எக்கேடு கெட்டால் என்ன? நமக்கு நம் ஜாதிக்காரன் ஒழுங்காக இருந்தால் போதும்” முதலான பாகுபாடுகளுக்கும் சுயநல புத்திக்கும் இடமில்லை.
அடுத்த பகுதியில் பாடலின் கடைசி இரண்டு வரிகளான
“வேத முதல்வன் என்ப-
தீதற விளங்கிய திகிரி யோனே.”
என்பதற்கான விளக்கத்தைக் கண்டுவிட்டு, இடமிருந்தால் வேறு சிலவற்றையும் பார்ப்போம்.
(தொடரும் …)
Good start Gandharvan sir…very good flow. Eagerly waiting for the next part..
//பரம்பொருளே பிரபஞ்சம் அனைத்துக்கும் உபாதான-நிமித்த காரணங்களாகவும், சர்வ-அந்தர்யாமியாகவும் விளங்குவதையே இவ்வுபநிடத மந்திரம் உணர்த்துகிறது //
இந்தக் கருத்தை விளக்கும்போது எழுந்த இரு சந்தேகங்களும் நியாயமானவை; ஐயங் களையப்பட வேண்டியவை.. முதல் சந்தேகத்தைக் களைய முற்பட்டுள்ளீர்கள். இரண்டாவது ஐயத்திற்கு இருசமயம் இனிவரும் தொடர்களில் விளக்கம்கிடைக்கலாம்.
உபாதான நிமித்த காரணங்களுக்கு மயில் தோகையை விரித்தாடுவது எடுத்துக்காடாக அமையுமா.? மயிலின் உறுப்பு பீலி, தோகை. அதை விரிப்பதும் ஆடுவதும் நாம் நம் கைகால்களை மடக்குவதும்விரிப்பதும் நடப்பதும் ஓடுவதும் போன்ற செயல்களே அன்றி உபாதான நிமித்த காரணங்களாகா
இதற்கு நீங்கள் மேற்கோளாகக் காட்டிய முண்டகோபநிஷத்தில் உள்ளதாகக் கூறப்படும் ‘ஊர்ணநாபி”யை எடுத்துக் காட்டி விளக்கியிருக்கலாமே.
சித்து நிமித்தமாக இருக்குமே யன்று உபாதானமாகுமா>? சித்து பரிணமியாது; விகாரப்படாது என்ற கருத்தும் உளதே. சடமான பிரபஞ்சத்திற்குச் சடம்தான் முதற்காரணமாகிய உபாதானமாக இருக்கக் கூடும். பொன் எப்பொழுதும் உபாதானகாரணம் ஆகுமேயன்றி தானே நிமித்த காரணமாகவும் ஆகாது.. அணியாக்க வேறு ஒரு நிமித்தகாரணம் வேண்டும்.. காரியம் நிமித்தத்துக்குப் புறம்பாகத்தான் இருக்கும். நிமித்தத்தோடு ஒட்டிக் கொண்டிராது.குயவன் வேறாகவும் அவன் செய்த பானை வேறாகவும் இருத்தலைப் போல.. ஆனால், முதற்காரணமாகிய உபாதானம் காரியமாகிய செயப்படுபொருளை விட்டு நீங்காது அதுவாகவே இருக்கும்..பொன், பொன்னணிபோல.
பிரமமே பிரபஞ்சமாகப் பரிணமித்ததெனில் காரியமாகிய பிரபன்சத்தில் உள்ள குற்றக் கேடுகள் பிரமத்திற்கும் உளதாகும்
காரியத்தின் இயல்பிலிருந்து காரணத்தின் இயல்பை அறியலாகும்.. பொன்னாலான நகையும் பொன்னே, செம்மண்ணாலான பானையும் செம்மண்ணே எனில், சித்தான பொருளினின் காரியமாகிய பிரபஞ்சம் அறிவற்ற அசத்தாக இருப்பதேன்?.
தத்துவ உலகில் சங்கராச்சாரிய சுவாமிகள் விவர்த்தோபாதான காரியத்தைத்தான் பேசினார் என்று கூறப்படுகின்றதே, இக்கட்டுரையில் நிமித்த் உபாதான காரணத்தைச் சங்கரர் போதித்தார் என்பதுபோல உளதே. நீலகண்டர்தாம் நிமித்தோபாதான காரியத்தைத் தம் பாடியத்தில் வலியுறுத்தினார் என்றும் கூறுவர்.
திருச்சந்த விருத்தத்தில் கூறப்படும் கருத்தைப் பேசும் திருமுறைத் திருப்பாடல்கள் பல உண்டு. அது சைவத்துக்கும் உடன்பாடே.
முனைவர் அவர்களுக்கு,
நான் கட்டுரையில் காட்டியிருப்பவை நான் கேள்விப்பட்டுப் புரிந்துக்கொண்டுள்ளதே. நான் வேதாந்தி அல்ல. உங்கள் சந்தேகத்திற்கு முடிந்த வரை சமாதானம் கூறுகிறேன்.
சான்றுகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். சிறிது மணி நேரங்கள் கழித்து மறுமொழி எதிர்பார்க்கவும்.
சங்கராச்சாரியார் உபாதான-நிமித்த காரணங்கள் இரண்டும் பிரம்மமே என்று கொண்டது அவர்தம் சூத்திர பாஷ்யத்தில் தெளிவாக உள்ளது. அச்சான்றை அடுத்த மறுமொழியில் காட்டுகிறேன்.
இவ் விவர்த்தொபாதான காரணம் பற்றிக் கேள்விப்பட்டதில்லை.
அருமையான மேற்கோள்கள், எடுத்துக்காட்டுகள், வாக்கிய நடை… பிரமாதம் கந்தர்வன். keep on going…….
பழந்தமிழர் சமயம் என்னவென கூற முற்படுகிறீர்கள், வரும் தொடர்களில் கவனிப்போம் எப்படி செல்கிறது என …. அறிவியல் மற்றும் இன்றைய திரித்து கூறப்படும் பிற மதத்தவர்களின் போலி தனத்தை அம்பலபடுத்துமா தொடர்கள்……???
மேலே இட்டதில், அறிவியல் ஆதாரங்களையும் சற்று எடுத்து காட்டலாம் என எழுத விட்டு விட்டது
முனைவர் அவர்களுடைய கேள்விகளுக்கு பதில்:
சங்கரரின் கொள்கைப்படி பிரபஞ்சத்தின் உபாதான நிமித்த காரணம் இரண்டும் பிரம்மமே. இதற்கான சான்றுகள்:
(1) பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் முதல் அத்தியாயம், நான்காவது பாதம், இருபத்தி மூன்றாவது சுலோகம்: (1.4.23) இங்கு “பிரமமே உபாதான நிமித்த காரணங்கள் இரண்டும்” என்று சூத்திரம் சொல்வதாக பாஷ்யம் இட்டுள்ளார். அச் சூத்திர பாஷ்யத்தில் முதலில் காணப்படும் வரிகள்:
“பிரமத்துக்கு ‘ஜன்மாத்யச்ய யத:’ என்றதால் லக்ஷணமும் கூறப்பட்டது. அந்த லக்ஷணமும் குடம் நகை இவற்றுக்கு மண் பொன்னாதியவை போன்று பிரகிருதியாகுதலிலும், குயவன் நகைசெய்வோன் ஆகியவர் போன்று நிமித்தமாவதிலும் ஒத்திருப்பதிலிருந்து இந்த விசாரம் ஏற்படுகிறது. பிராமத்தினது காரணத்தன்மையாவது எவ்வடிவமாயுள்ளது என்பதாம்.” என்று தொடங்கி, “நிமித்த காரணம் மட்டுமே” என்ற பூர்வபக்ஷத்தை விளக்குகிறார். பிறகு, சித்தாந்தம் இதுவென விளக்குகிறார்: “பிராமமாவது பிரக்ருதியாகவும், அதாவது உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் ஒப்பவேண்டுவதாக ஆகிறதே ஒழிய தனித்த நிமித்த காரணமாக மட்டும் கூறவியலாது” என்று கூறி, “ஆகவே வேறு அதிஷ்டா இல்லாததால் (பரம) ஆத்மாவுக்கு கர்த்திருத்துவமும் (நிமித்தத்துவமும்) வேறு உபாதானமில்லாததால் பிரக்ருதித்துவமும் (உபாதானத்துவமும்) ஏற்படுகிறது” என்று முடிக்கிறார்.
(2) இரண்டாம் அத்தியாயத்தின் தொடக்கத்தில் அவர் எழுதியுள்ள அவதாரிகை: “முதலாவது அத்தியாயத்தில் எல்லாமறிந்த சர்வேஸ்வரன் குடம், ருச்சகம் (ஓர்வித நகை) முதலியவற்றுக்கு மண், பொன் முதலியன போன்று ஜகத்துக்கு உத்பத்தி காரணம் என்றும்… என்றுமான இது வேதாந்த வாக்கியங்களுக்கு சமன்வயம் கூறும் வாயிலாக விளக்கப்பட்டது”.
(நன்றி: பிரம்மஸ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகள் “பிரம்ம சூத்திர சாங்கர பாஷ்யம்” தமிழ் மொழிபெயர்ப்பு)
//
உபாதான நிமித்த காரணங்களுக்கு மயில் தோகையை விரித்தாடுவது எடுத்துக்காடாக அமையுமா.? மயிலின் உறுப்பு பீலி, தோகை. அதை விரிப்பதும் ஆடுவதும் நாம் நம் கைகால்களை மடக்குவதும்விரிப்பதும் நடப்பதும் ஓடுவதும் போன்ற செயல்களே அன்றி உபாதான நிமித்த காரணங்களாகா
இதற்கு நீங்கள் மேற்கோளாகக் காட்டிய முண்டகோபநிஷத்தில் உள்ளதாகக் கூறப்படும் ‘ஊர்ணநாபி”யை எடுத்துக் காட்டி விளக்கியிருக்கலாமே.
//
முண்டக உபநிஷதத்தில் கூறியிருக்கும் “ஊர்ணநாபி” (சிலந்தி) உதாரணத்திற்கும் மயில் உதாரணத்திற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. வாசகர்களுக்கு எளிதில் புரியும்படி சொல்லவே மயிலை உதாகரித்தேன். மேற்கூறியதில் உள்ள மற்றொரு கேள்விக்கு, விசிஷ்டாத்வைதத்தின் படி எனக்குப் புரிந்த விளக்கம் — நாம-ரூபங்களைத் தான் பிரபஞ்சம் என்று சொல்கிறோம். அந்த நாம ரூபங்கள் சித்து, ஜீவர்களாகிய அச்சித்துக்கள் இரண்டையும் கொண்டவையே. மயில் தொகை நிலை போல, அசித்து பிரபஞ்சமாக விரிந்து ஆன்மாக்களுக்கு ஜடமாகிய உடல்கள் தரப்பட்டு பல ஜீவ ராசிகளாகப் பிறக்கின்றன.
பிரமத்தை வெறும் நிமித்த காரணமாக மாத்திரம் ஏற்றால் பல குற்றங்கள் வரும் என்று சங்கரரும் ராமானுஜரும் சூத்திர பாஷ்யங்களில் விளக்கியுள்ளனர். ஆனால், தவித்த மதத்தில் பிரம்மம் நிமித்த காரணம் மாத்திரம், பிரகிருதி தான் உபாதான காரணம் என்பர், அவர்கள் உபாதான-நிமித்த காரனத்துவ ஐக்கியத்திற்கு எதிராக சில வாதங்களை முன்வைப்பார். அதற்குப் பதிலாக உபாதான-நிமித்த காரண ஐக்கியவாதிகள் வேறு சில பிரதிவாதங்களை வைப்பார். இவற்றை முழு அளவில் புரிந்துக் கொண்டு விளக்க எனக்குச் சக்தியில்லை தான். ஆனால், சாஸ்திரத்திலேயே (அதாவது, வேதம், ஸ்மிருதிகள், புராணங்கள்) உபாதான-நிமித்த காரணம் இரண்டும் ஒன்றே என்று பல வாக்கியங்கள் உண்டு. உதாரணமாக விஷ்ணு புராணத்தில் காணப்படும் இச் சுலோகம் திருச்சந்த விருத்தத்தில் “தன்னுளே” எனத் தொடங்கும் பாசுரத்தின் வியாக்கியானத்தில் வருகிறது:
“கட மகுட கர்ணிகாதி பேதை:
கனகம் அபெதமபி இஷ்யதே யதைகம் |
சுர பசு மனுஜாதி கல்பனாபிர்
ஹரிரகிலாபீருதீர்யதே ததைக: ||” (விஷ்ணு புராணம், 3-7-16)
இதன் பொருள்: “(கார்யதசையில்) பானை, மகுடம், குண்டலம் என்னும் பேதங்களோடு கூடியதாக ஆனாலும் பொன்னானது எப்படி ஒன்றாகவே கருதப்படுகிறதோ, அப்படியே (கார்யநிலையில்) தேவர், மனுஷ்யர், விலங்கு-பறவைகள் முதலிய பேதங்கள் எல்லாவற்றையும் உடையவனானாலும் ஹரி ஒருவனாகவே சொல்லப்படுகிறான்” என்பது.
இதிலிருந்து “ஜகத்துக்கு உபாதான-நிமித்த காரணம் பிரம்மம் ஒன்றே” என்ற கருத்து சங்கரர் காலத்துக்கும் மிகப் பழமையானது என்று தெரிகிறது.
// ஆனால், தவித்த மதத்தில் //
த்வைத மதம் என்று திருத்திக் கொள்ளவும்.
அன்புள்ள ss,
உங்கள் பாராட்டுக்கும் ஊக்குவித்தலுக்கும் நன்றி.
// பழந்தமிழர் சமயம் என்னவென கூற முற்படுகிறீர்கள், வரும் தொடர்களில் கவனிப்போம் எப்படி செல்கிறது என …. அறிவியல் மற்றும் இன்றைய திரித்து கூறப்படும் பிற மதத்தவர்களின் போலி தனத்தை அம்பலபடுத்துமா தொடர்கள்……??? //
இத் தொடரின் focus இலக்கியம், வரலாறு, வேதாந்தம், மற்றும் பக்தி என்று வைத்துள்ளேன். அறிவியல் ரீதியிலான விளக்கங்களுக்கு என்னைவிட அதிகமாக அ நீ முதலானோர் தகுதி உள்ளவர் என்று நினைக்கிறேன். உயிரியல், வானியல், வேதியல், பௌதிகம் சார்ந்த முதுகலைத்தர அறிவு எனக்குக் கிடையாது.
பக்தி, வேதாந்தம், சுவையான விஷயங்கள் வருமிடத்தில் அரசியலும் பிறமத கண்டனமும் வருவதில் எனக்கு உடன்பாடில்லை. பிற மதத்தவரின் போலித்தனம் பற்றி விமர்சிக்க வேறு ஒரு கட்டுரை எழுதுவதே உசிதம் என்று நினைக்கிறேன். இன்றைய நிலையில் அத்தகைய கட்டுரையும் மிகவும் அவசியமானது என்பதில் ஐயமில்லை. அதற்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். எப்படிப் போகிறது என்று பார்ப்போம்.
முனைவர் அவர்களே
//
உபாதான நிமித்த காரணங்களுக்கு மயில் தோகையை விரித்தாடுவது எடுத்துக்காடாக அமையுமா.? மயிலின் உறுப்பு பீலி, தோகை. அதை விரிப்பதும் ஆடுவதும் நாம் நம் கைகால்களை மடக்குவதும்விரிப்பதும் நடப்பதும் ஓடுவதும் போன்ற செயல்களே அன்றி உபாதான நிமித்த காரணங்களாகா
//
இதை வேறு விதமாக பார்க்க வேண்டும் என்பது எனது அபிப்ராயம்.
மயில் தொகை விரித்தாடுவது மற்றும் மயில்
கடல் அலை மற்றும கடல்
தீபச்சுடர் மற்றும் தீபம்
இவை அனைத்தும் cause-effect என்ற இரண்டும் ஒன்றே என்பதை விளக்க வந்தவை.
கடல் ஆகிய காரணம் தான் அலைகளாகிய காரியமாக தோன்றுகிறது – (கடல் அலையை செய்கிறது) இது போல் மயில் தொகை விரியச்செய்கிறது, தீபம் தீபச்சுடரை செய்கிறது இதிலிருந்து நாம் அறிவது மூல காரணம் ஒன்றே என்பதே
இதை சற்றே விரிவு படுத்தி பார்த்தால் – குயவன் மற்றும் குடம் என்பதுவும் கூட இதற்குள்ளே அடங்கிவிடும்
அதாவது பஞ்ச பூதனான ஒரு குயவன் பஞ்ச பூதமாகிய ஒரு குடத்தை செய்கிறான் (பஞ்ச பூதம் பஞ்சபூதமாகிய குடத்தை தோன்றசெய்கிறது)
இதிலிருந்து effect = cause என்பது நிரூபணம். இந்தன்வழியாகவே உபாதான காரணமும் நிமித்த காரணமும் தோன்றுவது ஓர் இடத்திலிருந்துதான் என்பதும் முடிவாகிறது
I take excuses from all Tamil knowing persons, that I do not know Tamil typewriting to scribe my thoughts in Tamil and share with you all.
I am Serndanur Ramanathan Alagesan from Chennai. I have translated Kandhar Sashti Kavasam in English and it is considered to be one of the best translations and published by Srinivas Fine Arts P Ltd as Nightingale Edition. Similarly Shanmuga Kavasam is being introduced to English. My aim is to bring the Tamil wonders to the people of the world. In that process I came to understand that how the Hinduism became/becomes prey to other religiouns of the world. All the food eating Hindus should act against this terrorism and have the duty to save the religion for their generations.In that act, I find the “TAMIL HINDU” is contributing their best. I wish grand success and pray all Hindus to go through all contents released by “TAMIL HINDU”. My contributions will continue.
Thank you all