முந்தைய பகுதிகள் – பகுதி 1
சென்ற பகுதியில் எடுக்கப்பட்ட நற்றிணைக் கடவுள் வாழ்த்துப் பாடலில்,
"வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே"
என்பன கடைசி இரண்டு வரிகள். இவை முகில்வண்ணனை வேத முதற் பொருளாக அறிவித்து, அவனைச் சக்கரப்படை ஏந்தியவனாக அடையாளம் காட்டும் வரிகளாம். "வேத முதல்வன்" என்று திருமாலைக் கூறியதற்குப் மறைவழியும், தத்துவார்த்தமாகவும், புராணச் செய்தி வழியும், உலகவழக்குப்படியும் பல விதமாக விளக்கம் காண இயலும். இத்தொடரில் வந்துள்ள முதற்பகுதியைப் போலவே, வரப்போகும் மற்ற பகுதிகளைப் போலவே, இவ்வனுபவங்களுக்கான அடிப்படை மரபினைச் சங்கநூலிலும் இடைக்காலக் காப்பியங்களிலும் கண்டுவிட்டு தகுந்த இடத்தில் சமஸ்கிருத நூல்களிலும் மூலத்தைக் காணலாம்.
(1) “வேதம் கூறும் முழுமுதற்பொருள்”:
பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் நற்றிணை உரைநூலில் "வேத முதல்வன்" என்ற இடத்திற்கு, "வேதத்தாற் கூறப்படும் முதற்கடவுள் குற்றந்தீர விளங்கிய திகிரியையுடைய மாயோனே யென்று ஆன்றோர் கூறாநிற்பர்; ஆதலின் யாமும் அவனையே கடவுளாகக் கொண்டு வணங்குவோ மென்றவாறு" என்னும் விளக்கம் காணப்படுகிறது.
இக் கடவுள் வாழ்த்துப் பாடலில் முதலில் திருமால் பிரபஞ்சத்தின் காரணப் பொருளாக அறிவிக்கப்பட்டார். பின்பு வேதத்தில் கூறப்பட்ட பரப்பிரம்மம் என்று அறிவிக்கப்பட்டார். பிரம்ம சூத்திரமும் இங்ஙனமே பரம்பொருளை அறிவிக்கின்றது. முதல் சூத்திரத்தில், "இனி பரம்பொருளை அறிவோம்" ("அதா2தோ ப்3ரஹ்ம ஜிஜ்ஞாஸ:") என்று அறிவித்து இரண்டாம் சூத்திரத்தில், "எதனிடமிருந்து பிரபஞ்சத்தின் தோற்றம் முதலானவை ஏற்படுகின்றனவோ" ("ஜன்மாதி3 அஸ்ய யத:") என்றும், மூன்றாவது சூத்திரத்தில், "மறை மூலம் அறியப்படுகிறது" ("சா'ஸ்த்ர யோனித்வாத்") என்றும் இலக்கணம் கூறிற்று.
நான்மறைகளின் முடிவாகத் திருமால் அறியப்படுவதால் "வேதாந்த வேத்யன்" என்று அவனை அழைப்பதுண்டு (வேத்3ய: = அறியப்படுபவன்). இப்படி அவனை "மறைவழியாக அறியப்படுபவன்" என்று அறிவிக்கக் காரணமென்? "இதிகாச-புராணங்களிலும், ஸ்மிருதிகளிலும் அறியப்படுபவன்" என்று கூறலாமெனின், அந்நூற்கள் பொய்யா மறையாகிய வேதத்தை, அதாவது "சுருதிகளைச்" சார்ந்தே நிற்பவையேயன்றி, தனித்து நிற்பவையாகா. சுருதியாகிய வேதம் ஒன்றே எதையும் சாராமல் தனித்து நிற்கும் பிரமாணமாகும்.
அத்துடன், வேதமென்பது பரமனுடைய வாய்மொழியே என்று வேதமே அறைகிறது. அயல் நாட்டவர் ஒருவர் நம் தாய்மொழியிலேயே நமக்கு வணக்கம் கூறினால் மகிழ்கின்றோமே, அது போல வேதத்தின் வழி அவனை அறிவதால் பரமனுக்கு உகப்பு ஏற்படுகிறது. மேலும், ஒரு தாய் தன்னுடைய குழந்தை "அம்மா”" என்று தான் பேசும் மொழியிலேயே என்று அழைப்பதைக் கேட்பதால் எவ்வளவு ஆனந்தப்படுகிறாள்? அதுபோலவே,
“புரி மலர்த் துழாஅய் மேவல் மார்பினோய்!
அன்னை என நினைஇ, நின் அடி தொழுதனெம்;”
[– பரிபாடல், 13]
“‘அன்னை நீ; அத்தன் நீயே;
அல்லவை எல்லாம் நீயே;”
[– கம்பராமாயணம், IV, வருணனை வழிவேண்டு படலம், 72]
“தாய் தன்னை அறியாத
கன்று இல்லை; தன் கன்றை
ஆயும் அறியும்; உலகின்
தாயாகின், ஐய!”
[—- கம்பராமாயணம், III, விராதன் வதைப் படலம், 54]
என்று அனைவரும் இசைந்தபடி, பிரபஞ்சம் அனைத்துக்கும் தாயாகக் கூறப்படும் பரமனுடைய குழந்தைகள் அவன் சொந்த மொழியாகிய வேதத்தின் வழியிலேயே அறிந்து வணங்குவதில் அவனுக்குப் பேரானந்தம். ஆகையால், "வேத முதல்வன்" என்று கூறுதலின் சிறப்பு விளங்கிற்று. இதைச் சங்ககாலத் தமிழ்ச் சான்றோரும் நன்கறிந்தனர் என்பதை,
"மூ ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்
மாயா வாய்மொழி உரைதர வலந்து"
"பதினாயிரம் கை முதுமொழி முதல்வ"
"முன்னை மரபின் முதுமொழி முதல்வ"
[– பரிபாடல், 3]
என்று பாடியதிலிருந்து காணலாம். இதிலிருந்து, நற்றிணைப் பாயிரப்பாடலானது சங்க காலத்திற்குச் சற்று பின்பே எட்டுத்தொகை நூற்கள் தொகுக்கப்பட்ட காலத்தில் தான் சேர்க்கப்பட்டது எனினும், பழந்தமிழர் மரபைக் காட்டும் சங்கநூல் கூறும் செய்தியையே எதிரொலிக்கின்றது என்னும் கருத்துடன் இசைவதற்கு இடமுள்ளது. கீதாச்சாரியனாகிய கண்ணனும், "வேதைச்' ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்3ய:" [அனைத்து வேதங்களாலும் அறிவிக்கப்படுபவன் யானே — பகவத் கீதை 15.15] என்று கூறுகிறான். “அனைத்து வேதங்களும் இவனையே கூறுகின்றன என்று எப்படி சொல்ல முடியும்? இந்திரனும், அக்னியும், வருணனும், வாயுவும் கூட தான் வேதத்தில் படிக்கப்படுகின்றனரே?” என்ற கேள்வியை எழுப்ப, வங்கதேசத்து அத்வைத தத்துவ ஞானியும், பரம பக்தருமாகிய மதுசூதன சரஸ்வதியின் உரையில் பதில் கிடைக்கிறது:
"(கண்ணன் கூறுகிறான்) வேதத்தில் இந்திரன் முதலிய தேவர்கள் படிக்கப்படுகின்றனராயினும், உண்மையில் மறையானது அவர்களுக்கு உள்ளுறையும் ஆத்மாவாக இருக்கும் என்னையே கூறுகின்றது. ஏனெனில், ‘இந்த்3ரம் மித்ரம் வருணம் அக்3நிம் ஆஹுரதோ2 தி3வ்ய: ஸ ஸுபர்ணோ க3ருத்மாந். ஏகம் ஸத் விப்ரா ப3ஹுதா4 வத3ந்தி அக்3நிம் யமம் மாதரிச்’வாநமாஹு:’ என்று மந்திரமும், ’ஏஷ உஹ்யேவ ஸர்வே தே3வா:’ என்று உபநிடதமும் கூறுகிறது" [– கூடார்த்த தீபிகை, கீதை 15.15-க்கு உரை].
திருமாலின் ஆயிரம் பெயர்களுக்குச் சங்கரர் உரையில், "ச'ப்3தச':" (#912), "கதி2த:" (#848), "மந்த்ர:" (#280) என்ற நாமங்களுக்கான விளக்கங்களும் இக்கருத்தையே கூறுகின்றன. இவையனைத்தும் பரம்பொருளுக்கு மறை கூறும் இலக்கணமாகும். சங்கரருடைய கீதையுரைக்கு ‘டீகை’ இட்ட ஆனந்தகிரியும் மேலெடுக்கப்பட்ட 15.15-ஆம் சுலோகத்தின்கீழ் "வேதத்தால் அறியப்படும் பரம்பொருள் பகவான் அன்றி வேறா என்ற சந்தேகம் தீரும்படி கண்ணன் உரைக்கின்றான்" என்று விளக்கியுள்ளார். மறைமுடிவாகிய உபநிடதம் பரமனையே சொல்ல வருகின்றது என்ற செய்தியைக் கம்பரும்,
"சொன்ன நான்மறைத் துணிவினில் துணிந்த மெய்த்துணிவு நின் அலாது இல்லை;" [– கம்ப ராமாயணம், VI, மீட்சிப் படலம், 98]
"‘முன்பு பின்பு இருபுடை எனும் குணிப்பு அரு முறைமைத் தன்பெருந் தன்மை தான் தெரி மறைகளின் தலைகள், "மன்பெரும் பரமார்த்தம்" என்று உரைக்கின்ற மாற்றம், அன்ப! நின்னை அல்லால் மற்று இங்கு யாரையும் அறையா. " [– கம்ப ராமாயணம், VI, மீட்சிப் படலம், 100] |
என்று பல இடங்களில் பாடியுள்ளார். இவ்விளக்கம் தொடர்பாகவே, பரமனுடைய "கோவிந்தன்" (#539) என்ற நாமத்திற்குச் சங்கரர் சஹஸ்ரநாம உரையில் “‘கோ3’ என்பதை ‘மொழி/பதம்’ என்ற பொருளுடையதாய் எடுக்கலாம். ஆகையால, ‘கோவிந்தன்’ என்பதற்கு ‘பதங்களால் அறியப்படுபவன்’, அதாவது வேதாந்த வார்த்தைகளால் அறியப்படுபவன் என்று பொருள் கொள்ளலாம்.” என்று விளக்கம் கூறியுள்ளார். இக்கருத்தையே "அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரம்" என்று திருநெடுந்தாண்டகத்தில் திருமங்கையாழ்வாரும், அதைப் பின்பற்றி வருவதைப் போல,
"அன்னவூர்தியை முதலாம்
அந்தணர்மாட்டு அருந்தெய்வம்
நின் அலால் இல்லாமை
நெறி நின்றார் நினையாரோ."
[– கம்பராமாயணம், III, விராதன் வதைப் படலம், 55]
என்று கம்பரும் பாடியுள்ளதைக் காண்க (அந்தணர் மாடு = அந்தணர்களுடைய ஒரே செல்வமாகிய வேதம், அந்தணர் மாட்டு அந்தி = வேதாந்தம்).
(2) “வேதத்தின் முதலில் ஓதப்படும் ஓங்காரத்தின் உட்பொருள்”:
வேதத்திற்கும் மூலமாய் அமைந்துள்ள ஓங்கார அட்சரமே திருமாலின் வடிவம் என்று மறைகள் அறிவிக்கின்றன. அத்துடன், வேதம் ஓதும்போது முதலிலும் முடிவிலும், "அரி ஓம்" என்று பரமனின் பெயரை ஓம்காரத்தோடு ஒரே வேற்றுமையில் படிப்பது உலகவழக்கு. ஆகையால், வேதத்திற்கு முதலில் ஓதப்படுவதால் ‘வேத முதல்வன்’ என்று முகில்வண்ணனைப் பாடுவதாகவும் கொள்ளலாம். இச்செய்தியைக் கம்பரும்,
‘ஓங்காரப் பொருள் தேருவோர்தாம் உன்னை உணர்வோர்; ஓங்காரப் பொருள் என்று உணர்ந்து இருவினை உகுப்போர்; “ஓங்காரப் பொருள் ஆம்”, “அன்று” என்று, ஊழி கண்டாலும் ஓங்காரப் பொருளே பொருள் என்கிலா உரவோர்.’ [– கம்ப ராமாயணம், VI, மீட்சிப் படலம், 110] |
என்று பாடியுள்ளார். ஆதியிலும் அந்தத்திலும் ஓதப்படும் ஓங்காரத்திற்கு உயிராய் நிற்பவன் பரமனே என்று நாராயணீய உபநிஷதத்தில்,
"யோ வேதா3தௌ3 ஸ்வர: ப்ரோக்தோ வேதா3ந்தே ச ப்ரதிஷ்டி2த: |
தஸ்ய ப்ரக்ருதி லீனஸ்ய ய: பர: ஸ மஹேச்'வர: ||"
[– தைத்திரீய ஆரண்யகம், 10.10.6]
எனும் மந்திரம் செப்புகிறது. இம்மந்திரத்தை ‘ஸ்ரீதரர்’ என்பவர் தாம் எழுதிய பிராசீனமான பாகவத வியாக்கியானத்தில் பின்வரும் சுலோகத்திற்கு மூல வேதப் பிரமாணமாகவும் எடுத்துள்ளார். இச்சுலோகமும் நாம் கூறும் கருத்தைக் கூறுகின்றது:
“பிண்டே3 வாயு-அக்3னி-ஸம்சு'த்தே
ஹ்ருத்-பத்3ம-ஸ்த2ம் பராம் மம |
அண்வீம் ஜீவ-கலாம் த்4யாயேன்
நாதா3ந்தே ஸித்3த4 பா4விதாம் ||”
[என்னுடைய சூட்சும ரூபத்தை பக்தன் தன்னுடைய சுத்தீகரிக்கப்பட்ட உடலின் நடுவில், இதயத்தில், உயிர்களின் தோற்றத்திற்குக் காரணமாகத் தியானிக்க வேண்டும். பரமனது இந்த வடிவத்தை ஆன்ம ஞானம் பெற்ற முனிவர்கள் ஓங்காரத்தின் அசைவின் இறுதியில் தியானிப்பர் — ஸ்ரீமத் பாகவதம், 11.27.23]
கீதையிலும் கண்ணன் இவ்வர்த்தத்தை எட்டாவது அத்தியாயத்தில் (8.13) உரைத்தான். மேலெடுக்கப்பட்ட நாராயணீய மந்திரம் கூறும் பொருளையே கம்பர் பிரகல்லாதன் வாய்மொழியாகக் கூறியுள்ளார்:
“‘சுருதி ஆதியில் தொடங்கு உறும்
எல்லையில் சொன்ன
ஒருவன், யாவர்க்கும் நாயகன்,
திருப்பெயர், உணரக்
கருதக் கேட்டிடக் கட்டுரைத்து
இடர்க் கடல் கடக்க
உரிய மற்று இதின் நல்லது ஒன்று
இல்' என உரைத்தான்."
[– கம்ப ராமாயணம், VI, இரணியன் வதைப் படலம், 40]
“ஓம் எனும் ஓர் எழுத்து
அதனின் உள் உயிர்
ஆம் அவன், அறிவினுக்கு
அறிவும் ஆயினான்
தாம மூவுலகமும்
தழுவிச் சார்தலால்,
தூமமும் கனலும்போல்
தொடர்ந்த தோற்றத்தான்.”
[– கம்ப ராமாயணம், யுத்த காண்டம், இரணியன் வதைப் படலம், 76]
திவ்யகவி பிள்ளை பெருமாள் ஐயங்காரும்,
“பூங்கா விரிப்புனற் கோவில் உள்ளே மிக்க போகமெலாம்
யாங்காண யோகத்துயில் கொள்வார் மெல்லெயும் போய்
நீங்காதுலகத் துயிர்க் குயிராகி நீயாமகனாய்
ஓங்கார மாயமாய் நின்ற ஒண் சுடரே.”
[– திருவரங்க மாலை]
என்று அஷ்டபிரபந்த நூலொன்றில் பாடியுள்ளார்.
(3) “வேதத்தை அருளிய முதல்வன்”:
இது புராணக்கதை கூறும் செய்தியின் அடிப்படையில் எழுந்த விளக்கம். கல்பத்தின் தொடக்கத்தில் ‘மது’ ‘கைடபன்’ என்று இரு அரக்கர்கள் வேதத்தைப் பிரமனிடமிருந்து அபகரித்து மறைத்தனர் என்பதும், பெருமாள் பரிமுகனாக (ஹயக்ரீவ) அவதாரம் எடுத்து வேதத்தை மீட்டு வந்தார் என்பதும், அன்னமாக உருவெடுத்து (ஹம்ஸாவதாரம்) சிறகடித்து பிரளய நீர் வரண்டு போக, நான்முகனாருக்கு அதை ஓதுவித்தார் என்பதும் புராணங்கள் கூறுபவை. ஆக, வேதத்தை அருளிச்செய்த முதல்வன் என்பதாலும், "வேத முதல்வன்" என்னும் அடைமொழி பொருந்தும். இதனாலேயே மணிவண்ணனை "வாய்மொழிப் புலவ" என்றும் "தொல் இயல் புலவ" என்றும் பரிபாடலில் (முதல், மூன்றாம் பாடல்களில்) பழந்தமிழர் பாடினர். இவைகளில் வரும் "புலவ" என்ற பதத்தை இரண்டு விதமாகப் பொருள் கொண்டு "வேதத்தைப் புலப்படுத்துகிறவன்" என்றும் "வேதத்தாற் புலப்படுபவன்" என்றும் விளக்கம் கூற இடமிருக்கிறது. அன்னமாய் அவதரித்து உயிர்கள் உய்யும்பொருட்டு மறைகளை வெளிப்படுத்திய இப் புராணக்கதையை ஒட்டி,
"'மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச்
சேவலாய் சிறகர்ப் புலர்த்தியோய்' எனவும்,"
[– பரிபாடல், 2]
என்று சங்ககாலத்தவரும்,
''அன்னமாய் நூல் பயந்தாற் காங்கிதனைச் செப்புமினே",
"அன்னமதாய் இருந்து அங்கு அறநூல் உரைத்த" [– பெரிய திருமொழி, 9.4.2, 11.4.8]
"புள்ளதாகி வேதநான்கு மோதினாய தன்றியும்" [– திருச்சந்த விருத்தம், 19]
|
என்று ஆழ்வார்களும்,
"அன்னம் ஆய் அருமறைகள்
அறைந்தாய் நீ, அவை உன்னை
முன்னம் ஆர் ஓதுவித்தார்?
எல்லாரும் முடிந்தாரோ?
பின்னம் ஆய் ஒன்றாதல்,
பிரிந்தேயோ? பிரியாதோ?
என்ன மா மாயம் இவை
ஏனமாய் மண் இடந்தாய்! "
[– கம்ப ராமாயணம், ஆரணிய காண்டம், விராதன் வதைப் படலம், 59]
என்று கம்பரும் பாடியுள்ளனர். இச்செய்தி வேதத்தின் ஞான காண்டமாகிய உபநிடதத்திலும்–
“யோ ப்3ரஹ்மாணம் வித3தா4தி பூர்வம் யோ வை வேதா3ம்ச்’ச ப்ரஹிணோதி தஸ்மை |
தம் ஹ தே3வம்-ஆத்மபு3த்3தி4-ப்ரகாச’ம் முமுக்ஷுர்வை ச’ரணமஹம் ப்ரபத்3யே ||”
[எவன் ஆதியில் பிரமனைப் படைத்து அவனுக்கு வேதத்தை ஓதுவித்தானோ, அந்தத் தேவனை, ஆன்மாவிற்கும் அறிவிற்கும் ஒளிதருபவனாய்த் திகழும் அவனை வீடுபேற்றினை விரும்பும் நான் சரணடைகிறேன் — சுவேதாச்வதார உபநிடதம், 6.18.]
என்னும் இடத்தில் விளக்கப்பட்டுள்ளதாக விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கான சாங்கர பாடியத்தில், "கு3ருதம:" (#210) மற்றும் "ஸுமுக2" (#456) என்ற இடங்களில் வருகிறது.
இக்கட்டுரையில் இதுவரை கண்ட சான்றுகளிலிருந்து இன்னொரு செய்தியும் புலப்படுகிறது. "வாய்மொழிப் புலவ", "தொல் இயல் புலவ", "முதுமொழி முதல்வ", "மாயா வாய்மொழி" என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதிலிருந்து, அக்காலத் தமிழ் மக்கள் "வேதமானது காலத்தால் வரையறுக்கப்படாதது" என்றும், "ஒருவராலும் புதிதாகப் படைக்கப்படாதது" என்றும் அதனுடைய "அபௌருஷேய" நிலையின் மீது அசையாத நம்பிக்கை வைத்திருந்த ஆத்திகர்களே என்று தெரிகிறது. இன்றுவரை தொடர்ச்சியாகப் பேணப்பட்டு வரும் இந்துப் பண்பாட்டின் தத்துவவியலைச் சேர்ந்த துல்லியமான விவரங்களிலும் ஊறியிருந்த விப்ரர்களாக அக்காலத்துத் தமிழ்ச் சான்றோர்கள் விளங்கியிருந்தனர் என்றால் மிகையாகாது.
(4) “உற்சவத்தில் வேத முழக்கத்திற்கு முன்னே செல்பவன்”:
இது அனுபவபூர்வமான, லௌகீகமான, உலக வழக்கு விஷயமான விளக்கமாகும். திவ்ய தேசமாகட்டும், வேறெந்த பெருமாள் கோயிலாகட்டும், கருவறைமுன் சென்று அருள்பெற சக்தி இல்லாத மக்களுக்கும் அவனருள் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக அவ்வப்போது நடக்கும் திருவிழாக்களில் உற்சவர் ரூபமாக எழுந்தருளச் செய்து பெருமாளை ஊர்வலமாகக் கொண்டு வருவது அனைவருமறிந்த வழக்காகும். அப்போது உற்சவருக்குப் பின் வேத முழக்கம் செய்யும் அந்தணர்கள் அவரைத் தொடர்ந்து வருவதுண்டு. இவ்வழக்கை வைத்தும் "வேத முதல்வன்" என்று திருமாலைக் கூறலாம்.
இதற்கும் சங்ககாலத்திற்கும் என்ன தொடர்பு எனில், இத்தகைய உற்சவங்கள் மிகப் பழமையான காலத்திலிருந்து நடந்து வந்திருக்கிறது என்று எண்ணுமளவிற்கு இலக்கியச் சான்றுகள் உண்டு என்பதே. அகநானூற்றில் (137-ஆம் பாடல்) "பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்…தீயில் அடுப்பின் அரங்கம் போல" என்று அரங்கத்திற்கு அருகே உள்ள உறையூரைச் சேர்ந்த புலவரும், "விழவுடை விழுச்சீர் வேங்கடம்" (61-ஆம் பாடல்) என்று வேறொரு புலவர் கூறுவதிலிருந்தும், திருவரங்கத்தில் பங்குனி உத்திரம் மற்றும் திருமலையில் பெரிய விழாக்களும் அந்நாளில் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வந்ததைக் காட்டுகின்றன. திருவரங்கத்தில் பங்குனி உத்திர விழா பற்றிய மிகத்தெளிவான குறிப்பும் 'இறையனார்' என்னும் சங்கம் மறுவிய காலப் புலவருடைய ‘அகப்பொருளில்’ காணலாம்:
"ஊர் துஞ்சாமை என்பது — ஊர்கொண்ட பெருவிழா நாளாய்க் கண்பாடில்லையாமாகவும் இடையீடாம் என்பது; அவை மதுரை ஆவணி யவிட்டமே, உறையூர்ப் பங்குனி யுத்தரமே, கருவூர் உள்ளி விழாவே என இவையும், இவைபோல்வனபிறவும் எல்லாம் அப் பெற்றியான பொழுது இடையீடாம் என்பது"
[– களவியல், 16-ஆம் சூத்திரம்].
இப்படிப்பட்ட திருவிழாக்களில் வேத முழக்கத்திற்கு முன்னே செல்பவனாகப் பல தமிழ்ப்புலவர்கள் தொன்றுதொட்டு மாயவனை வாழ்த்தியுள்ளனர். அவை அனைத்தும் கற்பனைவளம் மிக்கதாயும் காணப்படுகின்றன. இவர்கள் வரிசையில் முதலில் வருபவர் புகழேந்திப் புலவர்:
"மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம்
காலிக்குப் பின்னேயும் காணலாம் – மால்யானை
முந்தருளும் வேத முதலே எனஅழைப்ப
வந்தருளும் செந்தா மரை."
[– நளவெண்பா, 334 (கலிநீங்கு காண்டம்)]
என்ற பாடலில், "கண்ணனை வேத முழக்கத்திற்கு முன் செல்பவனாயும், ஆநிறைகளைப் பின்தொடர்பவனாயும் காணலாம்" என்று அழகு கொஞ்சும் வரிகளில் பாடியுள்ளார். (காலி = ஆநிறை). அடுத்ததாக வில்லிப்புத்தூராழ்வார்,
"உரலும் வேதமும் தொடர, நந்தகோனுடன் அசோதை
கண்டு உருக, வாழ்வு கூர்
தரணிமீது செங் கையும் மா முழந் தாளும் வைத்து
வைத்து, ஆடும் மாயனார்,
விரவி நின்ற மா மருதினூடு தாம் மெத்தெனத்
தவழ்ந்தருளி, மீளவும்
புரியும் நீள் கடைக்கண்ணும் வண்ணமும் போற்றுவார்கள்
மெய் புளகம் ஏறுமே. "
[– வில்லிபாரதம், ஏழாம் போர்ச் சருக்கம், கடவுள் வாழ்த்து]
எனும் கற்பனை வளம் மிக்க வரிகளில், "யசோதை கட்டிய உரலை இழுத்துக்கொண்டு கண்ணன் செல்ல அவ்வுரலும் வேதமும் அவனைப் பின்தொடர்ந்து சென்றன" என்று பாடியுள்ளார். மேலும்,
"படர்ந்து கானகம் திரிந்து, மீண்டு, அன்புடன்
பணிந்த பஞ்சவர்க்காக,
கடந்த ஞானியர், கடவுளர், காண்கலாக் கழல்
இணை சிவப்பு ஏற,
தொடர்ந்து நான்மறை பின் செல, பன்னக
துவசன் மா நகர்த் தூது
நடந்த நாயகன் கரு முகில்வண்ணம் என்
நயனம் விட்டு அகலாதே."
[– வில்லிபாரதம் : படை எழுச்சிச் சருக்கம் : கடவுள் வாழ்த்து]
என்னும் வரிகளில், "கண்ணன் பாண்டவர்களுக்குத் தூது நடந்தபொழுது வேதமுழக்கம் அவனைப் பின்தொடர்ந்து வந்தது" என்று பாடுவது இளங்கோவடிகளுடைய ஆய்ச்சியர்கள் பாடிய முறையைப் பின்பற்றி வருகிறது:
"தொடர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்கு தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே!
நாராய ணாவென்னா நாவென்ன நாவே!!"
[– சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை]
இறுதியாக, இதில் மற்றொரு வியக்கவைக்கும் தகவல் உண்டு. இப்படி உற்சவராக எழுந்தருளி வீதி உலா வரும்பொழுது வடமொழி வேதம் அவன் பின்னே செல்ல, தமிழ்மறையாகிய ஆழ்வார் பாசுரங்கள் அவனுக்கு முன்னே ஒலிக்கும்! நமது பாரம்பரிய வைணவ ஆசிரியர்களே சமஸ்கிருத வேதத்திற்கும் பெருமாளுக்கும் முன்பு தமிழ்ப் பிரபந்தங்களுக்கு முதலிடம் கொடுக்கும் மரபை உருவாக்கியவர்கள்! அவ்வாசாரியார்கள், "பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணியாதலால் உபாசனையில் தமிழர் மரபுக்கு முதன்மை தருவதே கண்ணனை உகப்பிக்கும் வழி" என்பதை நன்கு அறிந்தவர்களாவர்.
(தொடரும்)
//இப்படி உற்சவராக எழுந்தருளி வீதி உலா வரும்பொழுது வடமொழி வேதம் அவன் பின்னே செல்ல, தமிழ்மறையாகிய ஆழ்வார் பாசுரங்கள் அவனுக்கு முன்னே ஒலிக்கும்! நமது பாரம்பரிய வைணவ ஆசிரியர்களே சமஸ்கிருத வேதத்திற்கும் பெருமாளுக்கும் முன்பு தமிழ்ப் பிரபந்தங்களுக்கு முதலிடம் கொடுக்கும் மரபை உருவாக்கியவர்கள்! அவ்வாசாரியார்கள், “பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணியாதலால் உபாசனையில் தமிழர் மரபுக்கு முதன்மை தருவதே கண்ணனை உகப்பிக்கும் வழி” என்பதை நன்கு அறிந்தவர்களாவர்.//
இந்த உன்னதமான மரபைச் சைவர்களும் போற்றுகின்றனர். திருமழிசையாழ்வார் “பைந்நாகப் பாய்சுருட்டிக்கொள்” என்று கூற சொன்னவண்ணம் கேட்ட பெருமாளின் செயலை விரித்துரைத்த குமரகுருபரசுவாமிகள் ” பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டலே” என்று திருமாலைப் போற்றுகின்றார். மதுரைச் சொக்கநாதருக்கு விட்ட தமிழ் விடு தூதில்
“ஆடரவத் தாழ்பாய லாளரைநீ தானே தொடர்ந்தாயோ, சூழ்பாயோ டுன்னைத் தொடர்ந்தாரோ” என்று இம்மரபு போற்றப்படுகின்றது.
அருணகிரிப் பெருமான், தாம் முருகன் அருளிய அருளைக் கொண்டு, கொடிய மறலியுடன் செய்யும் வெல்போரைக் காண முருகப் பெருமானை , அவனுடைய மனைவியருடனும் பரிவர்ரங்களுடனும் வரவேணும் என அழைக்கின்றார். அப்பொழுது , ‘பழய அடியவ ருடன் இமை யவர்கணம் இருபுடையுமிகு தமிழ்கொடு மறைகொடு பரவ வருமதில் அருணையில் ஒருவிசை வரவேணூம் ” என வேண்டுகின்றார். (கொடிய மறலியும் – திருச்செங்கோட்டுத் திருப்புகழ்)
இவ்வேண்டுகோளில் தமிழ்கொடு பரவும் அடியவருக்கு முத்லிடமும் மறைகொடு பரவும் இமையவருக்கு அடுத்த இடமும் அளிப்பது அறியத் தக்கது. இதுவே மரபு. இதுவே தமிழகத்தில் சைவ வைணவநெறியினர் கைக்கொள்ளும்,கைக்கொள்ள வேண்டிய மரபு.
//
இந்த உன்னதமான மரபைச் சைவர்களும் போற்றுகின்றனர். திருமழிசையாழ்வார் “பைந்நாகப் பாய்சுருட்டிக்கொள்” என்று கூற சொன்னவண்ணம் கேட்ட பெருமாளின் செயலை விரித்துரைத்த குமரகுருபரசுவாமிகள் ” பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டலே” என்று திருமாலைப் போற்றுகின்றார். மதுரைச் சொக்கநாதருக்கு விட்ட தமிழ் விடு தூதில்
“ஆடரவத் தாழ்பாய லாளரைநீ தானே தொடர்ந்தாயோ, சூழ்பாயோ டுன்னைத் தொடர்ந்தாரோ” என்று இம்மரபு போற்றப்படுகின்றது.
//
இம்மரபில் குமரகுருபரர் முதலானோர் ஈடுபாடு கொண்டு போற்றியிருப்பது பற்றிய செய்தி படித்து மகிழத்தக்கது. சுட்டிக் காட்டிய முனைவர் அவர்களுக்கு நன்றி.
‘பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டலே’
சமஸ்கிருத மறை முறையிட்டதா என்று பார்த்தால், “இல்லை. தோல்வியை ஒத்துக் கொண்டு பின்தொடர்ந்து வந்தது” என்று தான் கூற இடமிருக்கிறது.
“…. ஆர் அறிவார் – ஞாலத்
தொருபொருளை வானவர் தம் மெய்ப்பொருளை
அப்பில் அருபொருளை யான் அறிந்த வாறே!” [நான்முகன் திருவந்தாதி, 3]
என்று தமிழ்மறை கூற, சமஸ்கிருத வேதம், “அவனைப் பற்றிக் கூற வந்த வாக்கு அது இயலாமல் போய் திரும்பிச் சென்றது” (“யதோ வாசோ நிவர்த்தந்தே”) என்று கூறிற்று!
அனுபவம் ஒரு பக்கம் இருக்க, தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் நடுவே போட்டி என்பதே இல்லை. இவ்விரு மொழிகளும் நம் தமிழ் இந்து கலாச்சாரத்திற்குத் தாய் தந்தையரைப் போலவே. இதனை வலியுறுத்தவே ஔவையார் “அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வம்” என்று தமிழ் வார்த்தைகளை மட்டும் உபயோகிக்காமல் “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று தமிழும் சமஸ்கிருதமும் கொண்ட சொற்களை உபயோகித்தார் என்று கூறுவார்.