முகம் சுளிக்க வைக்கும் தேர்தல் பிரச்சாரம்

தேர்தல் வருகிறது என்றால் பிரச்சாரம் என்பது அரசியல் கட்சிகளுக்கு மிக அவசியமானதொரு பணி. நான் 1952ஆம் வருட தேர்தல் முதல் இந்த தேர்தல் வரை பணிகளில் ஈடுபாடும், பங்கும் பெற்றிருக்கிறேன். 1952இல் நடந்த தேர்தல்தான் இந்தியா குடியரசாகப் பிரகடனப் படுத்திய பிறகு நடந்த முதல் தேர்தல். அதிலிருந்தே பல தவறுகள் நடக்கத் தொடங்கி விட்டன.

first-general-electionசுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்ற பல தியாகிகள் அந்தத் தேர்தலில் ஓரம் கட்டப் பட்டார்கள். காங்கிரஸ் இயக்கத்துக்கு முட்டுக் கட்டைகளாக இருந்த பல ஜஸ்டிஸ் கட்சிக் காரர்கள் காங்கிரசில் சேர்ந்து கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட முற்பட்டார்கள். பல தியாகிகளுக்கு போட்டியிட வாய்ப்புக்கூட கொடுக்கப்படவில்லை. அவர்கள் சுயேச்சைகளாக நின்று தோல்வி அடைந்தனர். பலரிடம் தேர்தலில் போட்டியிடப் பணம் இல்லை. உங்கள் நினைவிற்காக ஒரே ஒரு தியாகியின் பெயரை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

அவர் வட ஆற்காடு மாவட்டத்தில் தனி நபர் சத்தியாக்கிரகத்துக்காக மகாத்மா காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரில் ஒருவர். அவ்விருவர் முறையே அரக்கோணம் தேவராஜ ஐயங்கார், மற்றொருவர் ஜமதக்னி நாயக்கர். இவர்களில் தேவராஜ ஐயங்கார் ராஜாஜி பக்தர். அவரோடு சேர்ந்து இவர் சுதந்திரா கட்சியில் இருந்தார். பதவியோ, சுகமோ பெறாமல் மாண்டு போனார்.

 மற்றொருவர் ஜமதக்னி நாயக்கர். இந்த ஜமதக்கினி யாரென்று நீங்கள் தெரிந்து கொள்ளுதல் நலம். கடலூரில் அஞ்சலை அம்மாள் என்றொரு சுதந்திரப் போராட்டத் தியாகி. அவரது கணவரும் சுதந்திரப் போராட்ட வீரர்தான். இவர்கள் இருவரும் சிறையில் இருந்த போது, ஜமதக்னியும் அதே சிறையில் அடைபட்டிருந்தார். சிறையில் இவர் காரல் மார்க்சின் “தாஸ் கேபிடலை” தமிழில் மொழி பெயர்த்தார். இவர் இடதுசாரி சிந்தனையாளர். இவர்களில் ஜமதக்னி மட்டும் வயதில் குறைந்தவர். அப்போது அஞ்சலை அம்மாளின் மகள் தனது பெற்றோர்களைப் பார்க்க சிறைக்கு வருவது வழக்கம். அப்பொது சிறையில் இருந்த ஜமதக்னிக்கும் அந்தப் பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. ஆனாலும் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகுதான் திருமணம் என்று தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டார்கள். அது போலவே 1947இல் சுதந்திர தின விழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது இவர்களுடைய திருமணமும் பதிவுத் திருமணமாக மிக எளிமையாக நடந்து கொண்டிருந்தது.

 1947 ஆகஸ்ட் 15, இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதே நாளில் ஜமதக்னிக்கும் அஞ்சலை அம்மாளின் மகளுக்கும் திருமணம் நடந்தது. இந்த ஜமதக்னி 1952 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டபோது, காங்கிரஸ் கட்சி அவருக்கு சீட் தரவில்லை. ஆகையால் அவர் அரக்கோணம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். டெபாசிட் கூட போய்விட்டது என்று நினைவு. வேதாசல முதலியார் எனும் வக்கீலுக்கு காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. ஆனால் அங்கு மாணிக்கவேலு நாயக்கர் கட்சியின் ஆதரவோடு சுயேச்சையாக நின்று பின்னாளில் துணை சபாநாயகராக விளங்கிய பி.பக்தவத்சலு நாயுடு என்பவர்தான் வெற்றி பெற்றார். பிறகு அவரும் காங்கிரசில் சேர்ந்தார் என்பது தனிக்கதை.

kamban_adippodiகாரைக்குடியில் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் எனும் தியாகிக்கு வாய்ப்பு தரப்படவில்லை. செட்டி நாட்டு ராஜா குடும்பத்தினருக்கு அந்த வாய்ப்பு காங்கிரசில் கிடைத்தது. இருந்தாலும் அப்போதெல்லாம் தேர்தல் களத்தில் கெளரவமான, நியாயமான பிரச்சார யுக்திகள் கடைப் பிடிக்கப் பட்டன. அதன் பின்னர் நடந்த தேர்தல்களிலும்கூட வேட்பாளர் தேர்வு முதல், தேர்தல் பிரச்சாரம் வரை ஒழுங்காக நடந்தது. 

கார், வண்டிகள் மூலம் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கும் இடம் வரை கொண்டு விட அனுமதியும் இருந்தது. அப்பொதெல்லாம் சொல்லப்படும் ‘ஜோக்’ என்ன வென்றால், வாக்களிக்க காரில் அழைத்துச் செல்வார்களே தவிர, வீட்டுக்குத் திரும்பி வர நாம் நடந்தே வர வைத்துவிடுவார்கள் என்பதுதான்.

பணம் கொடுப்பது என்பது எங்கோ சில இடங்களில், மிக ஏழை மக்கள் வாழும் பகுதிகளில், அதிகம் போனால் ஐந்து ரூபாய் தருவார்கள். பெரும்பாலும் ஊழலற்ற, நேர்மையான தேர்தலே நடந்து வந்தது. 1957, 1962 இந்த காலகட்டங்களிலும் கூட மக்கள் தேர்தலைத் திருவிழா என்று அழைத்து மகிழும்படி போட்டிகளும், பிரச்சாரங்களும், பொதுக் கூட்டங்களும் இருக்கும். மக்கள் மத்தியில் சற்று பணப் புழக்கமும் இருக்கும்.

 பெரும் தலைவர்கள், குறிப்பாக காமராஜ், ராஜாஜி, ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, அண்ணாத்துரை,  இவர்கள் கூட்டமென்றால் மக்கள் வெள்ளம் போல வருவார்கள். அவர்களுடைய பேச்சும் மிக உயர்ந்த தரத்தோடு, நாட்டின் பொருளாதாரம், அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கைகள், நடைமுறை தவறுகள் இவற்றைப் பட்டியலிட்டுப் பேசுவார்கள். இவர்களில் சிலர் புள்ளி விவரங்களை (அது சரியோ தப்போ) அள்ளி வீசி மக்களைத் திகைக்க வைப்பார்கள். இந்த மாநிலத்தில் 9756 ஏரிகளும், 27653 குளங்களும் பயிர் பாசனத்துக்கு இருக்கின்றன என்பார் ஒருவர். இதனை எவரும் சரியா என்று பார்ப்பதில்லை. ஆகா! அப்படி புள்ளி விவரங்கள் தருகிறார் இவர் என்பர் மக்கள். பெரும்பாலும் இப்படிப் பேசுபவர்கள் அன்று வெகுவாக வளர்ந்து வந்த தி.மு.க.பேச்சாளர்களாகத்தான் இருப்பார்கள்.

f1967 தேர்தல் வந்தது. பிடித்தது தமிழ் நாட்டுக்குச் சனியன். இல்லாத பொய், பித்தலாட்டங்கள். நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகள். எதிரிகள் மீது வசைமாறி பொழிதல், எதிர்கட்சிக் கூட்டங்களில் வன்முறை, வெறியாட்டம்.

அன்று வரை ஏசிப் பேசியவர்களின் வீடுகளுக்குச் சென்று, நான் உங்கள் வீட்டுப் பிள்ளை என்று உறவாடுதல்,     (வேண்டவே வேண்டாம் நமக்கு இப்படிப்பட்ட பிள்ளை. இப்படியொரு பிள்ளை நமக்கு வாய்க்குமானால் நாம் சொல்லாமல் கொள்ளாமல் சந்நியாசம் வாங்கிக்கொண்டு ஓடிவிட வேண்டியதுதான்),  எதிரணித் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசுதல் போன்றவைகள் நடைமுறைக்கு வந்தன.

இதில் தி.மு.க.தலைவர் அண்ணாதுரை மிகவும் கண்ணியமாகவும், மக்களைக் கவரும் விதத்திலும் பேசுவார். நெடுஞ்செழியன், இரா.செழியன் போன்றவர்கள் மிக சரளமாக எளிமையாகப் பேசுவார்கள். பேச்சில் கண்ணியம் இருக்கும். வேறு சிலர் குறிப்பாக சினிமா துறையிலிருந்து வந்தவர்கள் கருணாநிதி உட்பட சிலர் அடுக்கு மொழியிலும், அலங்காரமாகவும் பேசினாலும், கண்ணியக் குறைவாகப் பேசத் தயங்க மாட்டார்கள்.

காங்கிரசில் பேச ஆள் இல்லை. பேசவும் தெரியாது. கம்யூனிஸ்ட்டுகள் பேச்சில் ஆவேசம் இருக்கும், நாட்டின் பொருளாதார விஷயங்கள் இருக்கும், தொழிலாளர் பிரச்சினைகள் இருக்கும் ஆனால் அலங்கார மொழி நடை இருக்காது. இவர்களுக்கென்று ஒரு வாக்கு வங்கி ஏழை, எளிய விவசாயிகள், தொழிலாளர் மத்தியில் இருந்தது.

காங்கிரசார் தாங்கள் செய்த சாதனைகளைக்கூட சொல்லத் தெரியாமல் பேசுவார்கள். தி.மு.க.வோ, அரசில் தினசரி செய்யவேண்டிய காரியங்களைக்கூட சாதனைகளாகப் பட்டியலிட்டுப் பேசுவார்கள். புதிய புதிய தத்துவங்களை எடுத்துப் பேசுவார்கள். ‘நெல்லுக்குள் அரிசி இருக்கிறது என்பதை அண்ணா கண்டுபிடித்துக் கூறி14யது போல” என்பார்கள். கேட்பவர்கள் வாய் திறந்து கேட்டிருப்பார்கள். “வானில் திரண்டு வரும் கருமேகம் மழை பொழியும்” என்பதை தி.மு.க.தான் கண்டுபிடித்து மக்களுக்கு முன்கூட்டியே தெரிவித்தது என்பார் ஒருவர்.

தமிழ் நாட்டு மக்களுக்கு அப்போது அறிமுகமே இல்லாத சாக்கரட்டீஸ், மாஜினி, இங்கர்சால், முஸ்தபா கமால் பாட்சா என்றெல்லாம் என்னென்னவோ பெயர்களைச் சொல்லுவார்கள். இளைஞர்களும் மாணவர்களும் வாய் திறந்தபடி அவற்றைக் கேட்டு மகிழ்ந்து போவார்கள். அவர்களைப் பற்றி யெல்லாம் கையடக்கத்தில் புத்தகங்களை வண்ண அட்டையோடு வெளியிடுவார்கள். அவற்றை வாங்கிப் படித்துவிட்டு உலக ஞானம் பெற்று விட்டதாக அன்றைய இளைஞர்கள் மகிழ்வார்கள்.

awards திராவிட இயக்கத்தில் பெயருக்கு முன்பு பட்டப்பெயர் இல்லாத தலைவர்களே இல்லை எனலாம். அண்ணாத்துரை என்று பெயர் “அ”வில் தொடங்க்கினால், அங்கு ‘அ’ வரும்படி “அறிஞர்” என்கிற பட்டம், கருணாநிதி என்றால் ‘க’ வரும்படி “கலைஞர்” என்ற பட்டம் இப்படி. ‘சிந்தனைச் சிற்பி’, ‘சொல்லின் செல்வர்’, ‘நாவலர்’, ‘கவிஞர்’, கல்லூரியில் பணியாற்றிவிட்டால் ‘பேராசிரியர்’ இப்படியெல்லாம் தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டு ஊர் ஊராகக் கூட்டம் கூட்டி, அந்தக் கூட்டங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூல் செய்து பணமும் சேர்ப்பார்கள். அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்தி அதற்கு டிக்கெட் போட்டு பணம் வசூலித்தவர்கள் உலகிலேயே திராவிடக் கட்சியார்களாகத்தான் இருக்க முடியும்.

பெரும்பாலும் திராவிட இயக்கத்தார் நாடகம், சினிமா சம்பந்தப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆகவே சினிமா நடிகர்களில் பலர் அந்தக் கட்சியில் சேர்ந்து கருப்பு சிவப்பு பார்டர் ஆடைகள் அணிவார்கள். திரைப்படங்களில் தாங்கள் வாயசைக்கும் பாடல் வரிகளில் கட்சி வாசம் அடிக்கும்படி சில பாடல்களை அமைத்துக் கொள்வார்கள். ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்’ என்பார் ஒருவர். அதற்கு வழிவகுத்தவர் கலைவாணர் எனும் பட்டம் பெற்ற என்.எஸ்.கிருஷ்ணன் எனும் நடிகர். அவர் தன் படத்தில் ‘தி.மு.க.’ என்றொரு பாட்டைப் பாடி, அதற்கு ‘திருக்குறள் முன்னணிக் கழகம்’ என்று விளக்கம் வேறு கொடுப்பார்.

 அண்ணாதுரை ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’ என்றெல்லாம் படங்களுக்குக் கதை வசனம் எழுதினார். கருணாநிதி ஏ.எஸ்.ஏ.சாமி எனும் இயக்குனரிடம் உதவியாளராகச் சேர்ந்து அவருக்கு உதவியாக வசனங்கள் எழுதி, சில சாமி பெயரிலேயே வந்தாலும், பின்னர் தனது தனித்தன்மை வாய்ந்த அந்த நாளில் கேட்டிருக்க முடியாத துள்ளல் மொழியில் வசனம் எழுதி இளைஞர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அவர் கதை வசனம் எழுதி வெளியான ‘பராசக்தி’, வசனம் எழுதிய ‘மனோகரா’, ‘திரும்பிப்பார்’ ஆகிய படங்கள் ஓகோ வென்று ஓட அவருக்கு மார்க்கெட் பிடித்துக் கொண்டது. ஐம்பதுகளில் எடுபட்ட அவரது வசனம் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் இப்போது எடுபடுமா? இப்போதெல்லாம் அவர் எழுதியது எதையும் மக்கள் ஏற்றுக் கொள்ளவும் இல்லை, ரசிக்கவும் இல்லை.

 இப்படி 1967இல் நாசமடையத் தொடங்கிய தேர்தல் பிரச்சாரம், பேச்சுக்கள், யுத்திகள் இவை யெல்லாம் ஆரோக்கியம் கெட்டு, மக்களைச் சீரழிக்கும் நிலைமைக்கு அழைத்துச் சென்றுவிட்டது என்பதை இப்போது நாம் கண்கூடாகக் காண்கிறோம். நடிக நடிகையர்  எல்லாம் பெரிய பேச்சாளர்கள். எங்கோ வட இந்தியாவிலிருந்து இறக்குமதியான ஒரு இந்திப் பெண் கொச்சை மொழியில், இங்கு வந்து தமிழ் நாட்டு அரசியலை கோமாளித்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் முடிந்த பிறகு இது போன்றவர்களுக்கு எப்படியெல்லாம் எதிர்ப்பும், நட்டமும் ஏற்படும் என்பதை இவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. முன்பெல்லாம் கூட இப்படி பலர் வந்தார்கள்; பேசினார்கள். எல்லாம் முடிந்த பிறகு நடந்ததற்கு மன்னிப்பும், கண்ணீரும் விட்டு அழுத நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறோம்.

gசினிமாவில் தமாஷ் பண்ணி சிரிக்க வைக்கும் ஒரு காமெடியன். அவருக்கும் மற்றொரு ஹீரோவுக்கும் சொந்த முறையில் தகறாறு. அந்த ஹீரோ இப்போது அரசியலில் ஒரு தலைவர். தேர்தலில் முக்கியமான புள்ளி. அவருக்கு எதிராக இதுதாண்டா சான்ஸ் என்று களமிறக்கி விடப்பட்டார் இந்த காமெடியன். கேட்க வேண்டுமா? முன்னே பின்னே நாக்ரிகமாகப் பேசிப் பழக்கமிருந்தால் சரி, இல்லையே. இவர் கூட்டங்களில் ‘குண்டக்க மண்டக்க’ ஏதாவது சினிமா வசனம் போல பேசி சிரிக்க வைத்தாலும், பின்னால் அவை எந்த அளவுக்கு இவரைப் பாதிக்கும் என்பது அறியாதவராக இருந்து வருகிறார். அரிக்கும் போது சொறிந்து கொண்டால் இதமாகத்தான் இருக்கும். பின்னர் எரிச்சல் எடுக்கும்போதுதான் தெரியும் கஷ்டமும் நஷ்டமும்.

செய்தித் தாளைப் பார்க்கவோ படிக்கவோ, சாதாரண மக்கள் தயங்கும் அளவுக்கு அசிங்கமான பேச்சுக்கள். பொய், பித்தலாட்டங்கள். கட்சியின் கொள்கைகள் பற்றியோ, மக்களிடம் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லி வாக்கு கேட்க வேண்டுமென்பதில்லை. குழாயடிச் சண்டைதான். எங்கு திரும்பினாலும் எப்போது பற்றிக் கொள்ளுமோ எனும் பயப்படும்படியான சூழல். இதற்கு நடுவில் மக்களுக்கு பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது அதிர்ஷ்ட்டம். பணம் கட்டு கட்டாக வருகிறது. நகைகள், பாத்திரங்கள், துணி மணிகள், தேர்தலுக்குப் பிறகு தருவதாகச் சொன்ன மிக்சி, கிரைண்டர் போன்றவை இப்போதே லாரிகளில் படையெடுக்கின்றன. இந்தச் சீரழிவு எதுவரை போய் நிற்கும், நமக்குத் தெரியவில்லை.

ஒரே ஒரு ஆறுதல். தேர்தல் கமிஷன், டி.என்.சேஷன் காலத்துக்குப் பிறகு தனது தனித்தன்மை வாய்ந்த அதிகாரத்தை அழுத்தம் திறுத்தமாக வலியுறுத்தி வருகிறது. ஆளுவோரின் அச்சுறுத்தலை அலட்சியம் செய்துவிட்டு அடக்குமுறைக்கு பயப்படாமல் நேர்மையாகக் காரியம் ஆற்றி வருகிறது. நேர்மையாக நடக்கும் அதிகாரிக்கு எதிராக வழக்கு, அச்சுறுத்தல், அவரை மாற்ற வேண்டுமென்கிற போர்க்கொடி. இப்படி எல்லா வகைகளிலும் நேர்மையைக் கொன்றே தீரவேண்டுமெங்கிற வெறியோடு காரியங்கள் நடக்கின்றன.

வானமும் பூமியும், எங்கும் இருண்டு கருத்து பூகம்பமோ, பிரளயமோ ஏற்படப் போகிறது, உலகம் அழியப் போகிறது என்கிற அச்சத்துக்கு மத்தியில் மெல்லிய ஒளிக் கீற்று போல, உச்ச நீதிமன்றம், தற்போதைய தேர்தல் கமிஷன் இவற்றின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. நமக்குச் சற்று ஆறுதலைத் தரக்கூடிய விஷயம்.

bjp_election_manifestoகாலம் மாற வேண்டும். உண்மையான ஜன நாயகம் இந்த மண்ணில் மலர வேண்டும். பொருளாதார அறிவும், மக்கள் நலனில் அக்கறையும் கொண்டவர்கள் ஆள வரவேண்டும்.

காந்திஜி சொன்ன தர்மகர்த்தா முறைப்படி ஆளவருவோர், தான் அணிந்திருக்கிற உடையைத் தவிர மற்ற அனைத்தையும் கழற்றி தூர வைத்துவிட்டு, ஆம்! உறவுகளையும், குடி, குடும்பம் அனைத்தையும் விட்டுவிட்டு ஒரு துறவி போல தாமரை இலைத் தண்ணீர் போல இந்த நாட்டை ஆளும் நாள் எதுவோ அதுவே இந்திய நாட்டின் ஜன நாயகத்துக்குப் பெருமை. வருமா அத்தகைய நாள்? பார்ப்போம்.

12 Replies to “முகம் சுளிக்க வைக்கும் தேர்தல் பிரச்சாரம்”

 1. திராவிட இயக்கத்தில் பெயருக்கு முன்பு பட்டப்பெயர் இல்லாத தலைவர்களே இல்லை எனலாம். அண்ணாத்துரை என்று பெயர் “அ”வில் தொடங்க்கினால், அங்கு ‘அ’ வரும்படி “அறிஞர்” என்கிற பட்டம், கருணாநிதி என்றால் ‘க’ வரும்படி “கலைஞர்” என்ற பட்டம் இப்படி. ‘சிந்தனைச் சிற்பி’, ‘சொல்லின் செல்வர்’, ‘நாவலர்’, ‘கவிஞர்’, கல்லூரியில் பணியாற்றிவிட்டால் ‘பேராசிரியர்’ இப்படியெல்லாம் தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டு ஊர் ஊராகக் கூட்டம் கூட்டி, அந்தக் கூட்டங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூல் செய்து பணமும் சேர்ப்பார்கள்.

  appo “KALAVAANI” Karunanidhi correcta erukku.

 2. பேச்சாளர்கள் இல்லாத கட்சி தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பது இப்போதும் எப்போதும் பார்த்து வருவது தான்.

 3. அன்புள்ள நீர்த்தூங்கி,

  தேர்தல்களில் வெற்றிபெற நல்ல பேச்சாளர்கள் தேவை என்பது ஒரு பகுதி உண்மையே. ஆனால் வெறும் பேச்சை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் வெற்றி பெறமுடியாது.

  தமிழ் நாட்டு அரசியலில் பெரிய வெற்றி பெற்ற தலைவர் எம்ஜி ஆர் மட்டுமே .அவர் ஒரு சிறந்த பேச்சாளர் அன்று. வெறும் கையை மட்டும் அசைத்து ஒட்டு வாங்கியவர். படுத்த படுக்கையாக உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் இருந்தபோது கூட பிரச்சாரம் எதுவும் செய்யாது வெற்றி பெற்றார்.

  அடுத்து வைகோ மிக சிறந்த பேச்சாளர். அவரின் கட்சியை கருணாநிதி தன்னுடைய பணபலம், மற்றும் அதிகார பலத்தால் கட்சியையே கரைத்துவிட்டார். பேச்சை மட்டும் வைத்து என்ன செய்வது?

  இப்போது திமுகவிலும் வெற்றிகொண்டான் போல சிறந்த பேச்சாளர்கள் இல்லை. அவர்களே தங்கள் மேடையில் குஷ்பு, வடிவேலு என்று சினிமா நடிகர்களை ஏற்றிவைத்து அழகு பார்க்கும் இழிநிலைக்கு ஆளாகி விட்டனர். இதில் பெரிய ஜோக்கு என்னவென்றால் ஒரு ஊரில் குஷ்பு அவர்கள் பேசும்போது “திமுகவுக்கு ஓட்டுபோட்டால் , உங்களுக்கு என்னைபோல குழந்தை பிறக்கும் ” என்று திருவாய் மலர்ந்து அருளி உள்ளார். கேட்டவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . எனவே பேச்சாளர்கள் ஒரு சிறு பகுதி தான். இப்போது நடப்பது பிரச்சாரம் அல்ல. சினிமா காட்சி போலவே உள்ளது. அரசியல் இல்லை.

 4. Aaaaha what an article? You biased people did’t mention about JJ’s speech?
  How openely she scolds Karunanidhi in all her meetings? If you are really worried about this speeches you must have mentioned about JJ and Vijaykanth also. Am I right?

  Have you never heared JJ and Vijay kanth speeches? Really shame to be a viewer of this biased website.

 5. ஜமதக்னி, அஞ்சலை அம்மாள் ஆகியோரைப் பற்றி குறிப்பிட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களைப் பற்றிய சில பதிவுகள் இங்கே.

  https://koottanchoru.wordpress.com/2009/05/27/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE/
  https://koottanchoru.wordpress.com/2010/08/27/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88/

 6. அன்புள்ள தஞ்சை கோபாலன் ஐயா,

  நினைவுகளின் ஆழத்திலிருந்து நல்ல அனுபவங்களை பதிவு செய்ததற்கு நன்றி.

  இப்போதும், கம்யூனிஸ்ட் தலைவர்கள் ராஜா, பாண்டியன், பாஜக தலைவர்கள் ராஜா, இல.கணேசன், மதிமுகவின் வைகோ போன்றோர் அரசியல் மேடையில் அற்புதமாகவும் நாகரிகமாகவும் பேசி வருகிறார்கள். ஆனால், நமது மக்களின் ரசனை கீழ்த்தரமாக மாறிவிட்டது. அதன் விளைவே வடிவேலுவும் குஷ்புவும் திமுகவின் பிரதான பேச்சாளர்களாகி இருப்பது. காலச் சக்கரம் சுழலும்; இதுவும் ஒருநாள் மாறும்.

  -சேக்கிழான்

 7. சார், அந்தக் கால அரசியல் பிரசாரங்கள் பற்றிய மலரும் நினைவுகளை அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

  கண்ணியம், கட்டுப்பாடு பற்றீ மேடைதோறும் முழங்குபவர்கள் தான் தமிழகத்தில் கண்ணியமற்ற மேடைப் பேச்சுகளையும் பிரசாரங்களையும் கட்டுப்பாடின்றிக் கட்டவிழ்த்து விட்டவர்கள் என்று இன்றைய தலைமுறையில் பலருக்குத் தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை. தங்களைப் போன்ற பெரியவர்கள் வந்து அதை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

  தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகள் மிகக் கறாராக இருப்பது போன்று ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. பொதுவாக இது மகிழ்ச்சியளிக்கும் விஷயம் தான். ஆனால் சோனியா காங்கிரஸ் என்ன செய்தாலும் அதில் ஒரு தீயநோக்கம் கட்டாயம் இருந்தே தீரும்

  Only the paranoid survive என்பது நவீன பொன்மொழி.

  இது பற்றி இந்த வலைப்பதிவர் வெளிப்படுத்தும் சந்தேகங்கள் எனக்கும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை –
  https://sagamanithan.blogspot.com/2011/03/election-commission-or-commissined.html

 8. appo “KALAVAANI” Karunanidhi correcta erukku.”

  Kannapiraan,

  The long essay of Thanjai V Gopalan is meant for people like you only.

  Gopalan is unhappy to see the deterioration in election speeches of politicians down the years.

  So, he must be unhappy to see u following the same track.

 9. ..Aaaaha what an article? You biased people did’t mention about JJ’s speech?
  How openely she scolds Karunanidhi in all her meetings? If you are really worried about this speeches you must have mentioned about JJ and Vijaykanth also. Am I right?

  Have you never heared JJ and Vijay kanth speeches? Really shame to be a viewer of this biased website”

  Sarava, you are absolutely correct.

  Thanjai V Gopalan has selective amnesia.

  Today DMK has filed a petition before Election Commission to take action against JJ and V Kant for obscene speeches against Karuninidhi and his family.

 10. சரித்திரத்தில் , கி.மு , கி.பி என்று ஆண்டுகளை குறிப்பிடுவார்கள். அதேபோல , அரசியலில் , 1967 க்கு முன், 1967 க்குப்பின் என்று குறிப்பிடவேண்டிய கட்டாயம் வந்து விட்டது. அந்த 1967 ம் வருடம் ,தான் எவ்வளவு பெரிய மாற்றத்தை தந்து விட்டது? தஞ்சை கோபாலன் கட்டுரை அருமையான ஒன்று.இவ்வளவு அழகாக நச்சென்று யாரும் எழுத முடியாது. அன்னாருக்கு பாராட்டுக்கள்!

 11. அன்புள்ள கரிய மாணிக்கம் ,

  தேவையற்ற வார்த்தைகளை யாரும் பயன் படுத்த கூடாது என்பதை சுட்டிக்காட்டியுள்ளீர்கள். இது பாராட்ட தக்கது. எந்த கருத்தாயினும் சொல்லும் விதம் நயத்தக்க நாகரீகம் உடையதாக இருக்க வேண்டும். அப்போது தான் நல்ல கருத்தாயினும் பிறருக்கு போய் சேரும்.

  மேடை பேச்சில் பொய் பித்தலாட்டம் அதிகரித்தது அறுபத்தேழுக்கு பிறகு தான். மூன்று படி அரிசி ஒரு ரூபாய்க்கு என்று பொய்களை ஆரம்பித்தனர்.

  பெருந்தலைவர் காமராஜர் மீதே பல பொய்யான அவதூறுகளை சுமத்தினர். அவர் ஹைதராபாத் பாங்கில் பல லட்சம் ரூபாய் பணம் வைத்திருந்ததாக பல மேடைகளில் முழங்கினர். அவரை ராஜாக்களின் கூஜா காம ராஜா என்று வர்ணித்தனர். பொதுவாகவே கழகங்கள் அசிங்கங்களின் அணிவகுப்பே ஆகும். இதில் விதி விளக்கு எம் ஜி ஆர் மட்டுமே.

  ஆனால் எல்லா அசிங்கமும் கலைஞர் ஆரம்பிப்பார் , மற்றவர்கள் தொடருவார். சட்டசபையில் அவர் பேசாத மட்டமான பேச்சுக்களா?

 12. கட்டுரை ஆசிரியர் ஈ.வெ.ராவை நினைவில் இருத்தாமல் தமிழக அரசியலையும், திராவிட இயக்கங்களையும், அவை சார்ந்த அரசியல்வாதிகளையும் பற்றி எழுதியிருக்கிறார். அண்ணா, கருணாநிதி, இன்னபிறர் தாங்களே கூறிக்கொள்வது போல அவர்கள் பயின்ற “பல்கலைக் கழகம்” ஈ.வெ.ரா அவர்கள்தான்.

  மேடை நாகரீகத்துக்குப் பாடை கட்டி, அவையடக்கத்தை அடக்கம் செய்தவர் ஈ.வெ.ரா அவர்கள்தான். வண்டி வண்டியாக வண்டைப் பேச்சை, கண்ணியமானவர்கள் அறைக்குள்ளும் சொல்லத் துணியாத சொற்களை ஆயிரமவர் சூழ்ந்த அரங்கில் ஏற்றியவர் அவரே. அவரது தம்பியர் அவர் வழியே தவறாது நடக்கின்றனர்.

  ///இப்போது திமுகவிலும் வெற்றிகொண்டான் போல சிறந்த பேச்சாளர்கள் இல்லை. ///

  வெற்றிகொண்டான் உயிருடன் இருந்திருந்தால் இது கண்டு அவரே சிரித்திருப்பார். குஷ்புவும், வடிவேலுவும் “வெற்றிகொண்டானைச் சிறந்த பேச்சாளர்” என்று சொல்லும் அளவுக்குப் பேசிவருவதற்கு அவர்களுக்கு வெற்றிகொண்டான் வாரிசுகள் விழாவே எடுக்கவேண்டும். வெற்றிகொண்டானைப் போலத் தரக்குறைவாகப் பேசுபவர் தற்போது இல்லை என்றவகையில் அற்ப திருப்தியே. தீப்பொறி ஆறுமுகமும் தற்போது இல்லை. ஆனால் வண்ணை(டை) தேவகி என்றொருவர் உண்டு. என்ன ஆனார் என்பதுதான் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *