சைக்கிள் முதல் சம்ஸ்கிருதம் வரை: தலித் உரிமைக்கான இந்துத்துவ வெளி

madurai-villur-1மதுரை திருமங்கலம் அருகே உள்ள வில்லூர் கிராமத்தில் ஜாதிக் கலவரம் காரணமாக இரு பிரிவினரிடையே பலத்த மோதல் ஏற்பட்டு காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது பற்றி நேற்று முன்தினம் காலை எல்லா செய்தித் தாள்களிலும் செய்திகள் வந்திருந்தன. பார்வையிட வந்த எஸ்.பி. மீதே தாக்குதல் நடத்த முற்பட்டதால் கிராமம் முழுவதும் பலத்த காவல்துறை கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. கடைகள் மூடப்பட்டுள்ளன. ஊர்க்காரர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது என்றும் செய்திகள் (1, 2, 3) தெரிவித்தன.

காரணம்?

சில நாட்கள் முன்பு அங்குள்ள காளியம்மன் கோயில் தெருவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்ற இளைஞர் தனது மோட்டர் சைக்கிளில் சென்றுள்ளார். இதைக் கண்டு வெகுண்ட அங்கு வாழும் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியினர் அவரைத் தடுத்து நிறுத்தி மிரட்டியுள்ளனர். கைகலப்பு வலுத்து கலவரத்தில் முடிந்துள்ளது.

இந்த சம்பவம் மூலம் தலித்கள் இரு சக்கர வாகனங்களில் செல்லக் கூடாது என்றும், செருப்பணிந்து நடந்து செல்லக்கூடாது என்றும் எழுதப் படாத சட்டம் அங்கு நெடுங்காலமாக உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இரட்டை டம்ளர் முறை கடைப்பிடிக்கப் படுவதாகவும் சில செய்திக் குறிப்புகள் சொல்கின்றன. இதெல்லாம் நடப்பது 2011ம் ஆண்டில்! மூன்று தலைமுறைகள் முன்பு, கேரள மாநிலம் வைக்கத்தில் தாழ்த்தப் பட்ட சமூகத்தினர் தெருவில் நடந்து செல்லும் உரிமை கேட்டுப் போராட வேண்டிய நிலை இருந்தது. இன்று சைக்கிளில் செல்வதற்கு உரிமை வேண்டி தமிழக கிராமம் ஒன்றில் ஒடுக்கப் பட்ட மக்கள் மறுபடியும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்ரீநாராயணகுருவின் தலைமையில் கேரள சமூக உரிமைப் போராளிகளும், காங்கிரசின் காந்திய செயல்வீரர்களும் வைக்கத்தில் சத்தியாகிரகம் நடத்தி 85 ஆண்டுகளாகி விட்ட பிறகும் இத்தகையதொரு நிலை பல தமிழகக் கிராமங்களில் நீடிக்கிறது என்பது வெட்கமும், வேதனையும் தரும் விஷயம். வில்லூரில் இது வெடித்து விட்டது. இன்னும் பல கிராமங்களில் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது.

வகுப்பறைகளிலும் சாதியக் கொடுமை தொடர்கிறது. சமீபத்தில் படித்த இதே போன்ற மற்றொரு சம்பவம் கடுங்கோபத்தையும் கசப்பையும் ஏற்படுத்தியது.

madurai-photoமதுரை வைத்தியநாதபுரம் கங்காணி லைனைச் சேர்ந்தவர் தனபால் (40). இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு பிரியங்கா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.அவரது மகள் பிரியங்கா மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார்.அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து அவர் கூறியவை யாருக்கும் நிகழக்கூடாதவை.

”.. நீங்கள் அனைவரும் வகுப்பறையை சுத்தம் செய்யாத காரணத்தால் நீங்கள் இப்போ வகுப்பறையை கூட்டி என் கண்முன்னால் அள்ளிச் சாப்பிட வேண்டும்” என்று எங்கள் பக்கத்து வகுப்பு ஆசிரியை உத்தரவிட்டார். நாங்கள் எல்லோரும் எப்படி மிஸ் சாப்பிட முடியும் என்றும் வகுப்பறையை சுத்தம் செய்யாதது தப்புதான் என்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்டோம். அப்படி இருந்தும் மிஸ், கொஞ்சம் கூட இரக்கப்படவில்லை. நீங்க இந்த வகுப்பறையை சுத்தம் செய்து அதை தின்ன வேண்டும் என்றும் மீண்டும் கூறினார்.

அதன் பிறகு வேறு வழியில்லாமல் சுத்தம் செய்து ஆசிரியர் சொன்னபடி, லீடர் எங்கள் மூவருக்கும் ஆளுக்கொரு கை அளவு குப்பையை அள்ளிக் கொடுத்தார். அப்போது நாங்கள் அந்த குப்பையைப் பார்த்த போது அதில் பழைய வெள்ளச்சோறு, அழுக்குப் பேப்பர், மண் எல்லாம் இருந்தது.மிஸ் அதட்டியவுடன் வேறு வழியின்றி இந்த குப்பையைச் சாப்பிட்டோம்”

என பிரியங்கா கூறினார். குப்பையைச் சாப்பிட்ட குழந்தைகள் மூவரும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று குழந்தைகளும் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

– நன்றி: ”மாற்று”. முழு செய்தி இங்கே.

நவீனகாலத்திற்கு முந்தைய சாதிய அடுக்கதிகாரம் பற்றிய எண்ணங்களிலிருந்து இன்னும் வெளிவராமல் இருண்டு கிடக்கும் கிராம மக்களிடையில் இருக்கும் சாதிய மனநிலையாவது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியையின் இத்தகைய மனநிலை அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் நெல்லை, மதுரை, திண்டுக்கல், தஞ்சை என்று பல மாவட்டங்களிலும் கிராமக் கோயில்களில் சாதிய அடக்குமுறை நிலவுவதையும், தலித்களுக்கு உரிமைகள் மறுக்கப் படுவதையும் பற்றி விரிவாகப் பட்டியலிடுகிறது இந்தக் கட்டுரை. ஆனால் இதற்கான பழியை முழுவதுமாக எந்த ஆதாரமுமின்றி “இந்துயிசத்தின்” மீது போடுகிறது. திருப்பதி முதல் திருவனந்தபுரம் வரை இதே”இந்துயிசத்தின்” ஏராளமான பெருங்கோயில்களில் தலித்கள் தங்குதடையின்றி சென்றுவர முடிகிறது என்ற எளிய உண்மை கூட இந்தக் கட்டுரையாசிரியருக்கு உறைக்கவில்லை போலும்! இந்துமதம் என்று கூட எழுத மனம் வராத இதுபோன்ற கடும் இந்து வெறுப்பாளர்களே இன்றைக்கு தலித் உரிமைகள் பற்றி அதிக அளவில் பேசவும், எழுதவும் செய்கிறார்கள் என்பது வருத்தம் தரும் விஷயம்.

*********

அதே நாள் மாலை கண்ணில் பட்ட மற்றொரு செய்தி மனதைக் குளிர்வித்தது.

கோயில்களின் நகரம் கும்பகோணம்.. பெரிய கடைத்தெருவில் கர்ணகொல்லை அக்ரஹாரத்தில் உள்ளடங்கி இருக்கிறது ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி. இங்கு 23 தலித் மாணவர்கள் உள்ளிட்ட 195 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சமஸ்கிருதம் படிக்கிறார்கள். தமிழ், ஆங்கிலம்போல அதையும் ஒரு மொழியாக அம்மாணவர்கள் கற்கிறார்கள்.. இங்கு பழம் பூ விற்பவர்கள், தட்டுவண்டி வியாபாரிகள், சுமை தூக்குவோர், கொத்தனார், தச்சுவேலை செய்வோர் என சாதாரண பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளே படிக்கிறார்கள்.ஆசிரியர்களின் ஊதியத்தை மாநில அரசு கவனித்துக்கொள்கிறது. மற்றச் செலவுகளை காஞ்சிமடம் பராமரிக்கிறது.

“எங்கள் பள்ளி ரொம்பவும் நொடிந்துபோய் இருந்த நேரத்தில்தான் பெரியவர் ஜெயேந்திர சுவாமிகள் வந்தார்.. உங்களுக்கு என்ன தேவை என பள்ளிச் செயலரிடம் கேட்டுள்ளார். அதன்பயனாகவே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளிக் கட்டடங்கள் எழுந்துள்ளன. நாங்கள் அதிக பணம் வசூலிக்கக்கூடாது என்று பெரியவர் கட்டளையிட்டுள்ளார்.. ஏழை எளிய மாணவர்கள்தான் ஆர்வத்துடன் அதிகம் படிக்கின்றனர். எந்தப் பள்ளியிலும் இடம்கிடைக்காமல் யார் இங்கு வந்தாலும் எல்லோரையும் சேர்த்துக்கொள்கிறோம்” என்கிறார் தலைமை ஆசிரியர் ஜெ.பாஸ்கரன்.

kumbakonam-dalit-sanskrit-student.. ஏழாம் வகுப்பில் சமஸ்கிருத ஆசிரியர் இல்லாத குறையை தீர்த்துக் கொண்டிருந்தாள் மாணவி வைஷ்ணவி. தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்த மாணவி ரகுவம்சத்திலிருந்து ஒரு சில வரிகளை எடுத்துக்காட்டி, ரகுவம்சத்து மன்னர்கள் கொடுப்பதற்காகவே சம்பாதித்தார்கள் என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தாள். இச்சிறுமியின் அப்பா பழக்கடை வைத்திருக்கிறார். சமஸ்கிருத ஆசிரியை எஸ். பத்மாவதி சொல்லித்தந்த பாடங்களை பயிற்சி செய்ய மாணவர்களுக்கு எழுதிக் காட்டுகிறாள். சமச்சீர் கல்விக்காக சமஸ்கிருத பாடத்தைத் தயார் செய்யும் பணிக்காக சென்னை சென்றுள்ளார் ஆசிரியை.

ஆறாம் வகுப்புப் படிக்கும் பிரவின்குமாரின் அப்பா தச்சுவேலை செய்கிறார். சமீபத்தில் நடந்த அரையாண்டுத் தேர்வில் சமஸ்கிருதத்தில் 72 மதிப்பெண் பெற்றிருக்கிறார் பிரவீன். தலித் மாணவியான வளர்மதியின் தந்தை மூட்டைதூக்குகிறார். பத்தாம் வகுப்புப் படிக்கும் சந்தியா, கட்டட வேலை செய்பவரின் மகள். kumbakonam-sanskrit-schoolஇம்மாணவி கடந்த தேர்வில் சமஸ்கிருதத்தில் பெற்ற மதிப்பெண் 82. இப்பள்ளியின் செயலர் ஆடிட்டர் என். ராமகிருஷ்ணன் தசஇயிடம், “பொதுவாக சொல்லப் போனால் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் சமஸ் கிருதம் படிக்க முன்வருவதில்லை. வேலை கிடைக்காது என்று ஒதுங்கி விட்டார்கள். ஏழை, எளிய மற்றும் தலித் மாணவர்கள் தான் ஆர்வத்துடன் வருகிறார்கள். இங்கு சாதி, மத வித்தியாசம் கிடையாது. சென்ற ஆண்டு ஒரு முஸ்லிம் மாணவன் சமஸ்கிருதத்தில் முதலிடம் பெற்றான். கடந்த மூன்றாண்டுகளாக எங்கள் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுவருகிறார்கள்” என்கிறார்.

– நன்றி: தி சண்டே இந்தியன். முழுச் செய்தி இங்கே.

இன்றைக்கும் ’மேல்சாதி’ தெருக்களில் இரு சக்கர வாகனங்களில் சக ஹிந்து தலித் சகோதரர்கள் செல்வதைத் தடுக்கும் சாதீய வெறி மிருகங்கள் இருக்கும் அதே தமிழ்நாட்டில் தான், வேறொரு நகரத்தில் எந்த ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும் இல்லாமல் சமுதாய சமத்துவத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது இப்படி ஒரு பள்ளி. இணையற்ற காவியங்களான சாகுந்தலத்தையும், ரகுவம்சத்தையும் இயற்றிய மாகவிஞனான நர்மதை நதிக்கரை இடையனின் கல்விப் பாரம்பரியம் நூற்றாண்டுகள் கழித்து இங்கே காவிரிக் கரையில் பிரவகித்துக் கொண்டிருக்கிறது.

சாதீய வெறி என்னும் கொடு விஷத்தை உண்டு செரித்து சமத்துவமெனும் அருளமுதைப் பொழியும் திருநீலகண்டம் இந்துத்துவம். சாதீயக் காளியனின் தலைகளை மிதித்து நசுக்கி சமுதாயப் பொய்கையின் நஞ்சறுத்து நன்னீராக்கும் கிருஷ்ணபாதம் இந்துத்துவம். சக மனிதர்களின் உரிமைகளை மறுக்கும் எருமைத் தலையர்க்கு பாடம் புகட்டி நல்வழிப் படுத்தும் தேவியின் திரிசூலம் இந்துத்துவம்.

ஒவ்வொரு இந்துவும் தன்னில் தலித் சகோதரர்களின் வலியை உணரும் நாளே உண்மையான இந்து ஒற்றுமை உருவாகும்.

சைக்கிள் முதல் சம்ஸ்கிருதம் வரை தமிழகத்தில் தலித் உரிமைகளுக்கான இந்துத்துவ வெளி உள்ளது. கும்பகோணத்தின் பள்ளியில் அந்தப் பிஞ்சுகள் கற்றுத் தரும் பாடங்களின் ஓசைகள் காலமாற்றத்தின் சாட்சிகள் மட்டுமல்ல, இந்த வெளியில் சிதறும் அதிர்வலைகள். அந்த அதிர்வலைகளை மேன்மேலும் பரப்பிட வேண்டும். அதுவே தமிழக இந்து இயக்கங்களின், அமைப்புகளின் தலையாய கடமை.

31 Replies to “சைக்கிள் முதல் சம்ஸ்கிருதம் வரை: தலித் உரிமைக்கான இந்துத்துவ வெளி”

 1. ராமகோபாலன் மீது என்ன விமர்சனம் இருந்தாலும் – எங்கள் கிராமத்தில் நுழைந்தவுடன் அவர் போய் பூசை செய்தது மதுரை வீரன் , கோவிலில் , கூடவே நாங்களும் போனோம் வேறுவழியின்றி ”முதல்முறையாக” .

  ஜாதி ஏற்றத்தாழ்வுகள் குறித்த எதிர்குரல் வலுவாக எழவேண்டியது இந்துத்துவாதிகளிடமிருந்துதான் , வெறுப்பில்லாமல் சமூகங்களை இணைக்க மதத்தால் மட்டுமே முடியும் – யார் மறுத்தாலும் ,

  கோவில் நுழைவு வைத்தியநாதய்யர் காலத்தில் -மட்டுமே- நடந்தது , (மதத்தின் பற்றை வைத்து அவரை குறிப்பிடுகிறேன்) , அவர்களால் மட்டுமே செய்ய முடிகிற செயலும் கூட .

  இந்துத்துவ தரப்பு இதை செய்யவேண்டியது வரலாற்று கடமை .

  இந்த கட்டுரைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

 2. ஹிந்துகளின் எல்லா ஜாதியினரும் பூணல் அணிய ஊக்குவிக்கவேண்டும்.

  முற்காலங்களில் மூன்று வர்ணங்களுக்கும் பூணூல் உண்டு. நான்காவது வர்ணம் அணிய தேவையில்லை. இதற்கு காரணம் அவர்கள் தொழில் சார்ந்ததே என்று நினைக்கிறன். வேலை செய்யும் போது பூணல் குறுக்கே விழும். இதனால் நிறைய இடைஞ்சல்கள் ஏற்பட்டிருக்க கூடும் எனவே நான்காவது வர்ணத்தினர் அணிய தேவையில்லை என்று வழக்கம் வந்திருக்கும்.

  வேலை இடைச்சல் காரணமாக இப்பொது மற்ற இரண்டு வர்ணங்களும் (ஏன் சில பார்பனர்களும்) அணிவதில்லை.

  நாளாவட்டத்தில் இது ஒரு status symbal ஆக மாறிவிட்டது.

  எனவே இப்போது எல்லோரும் பூணல் அணிந்தால் எல்லோரும் ஒன்று என கருத படலாம். பாரதியார் கூட இதைதான் செய்திருப்பார் என நினைக்கிறன்.

  பூணலை ஏன் இந்துக்கள் அனைவரும் அணிய கூடாது. காயத்ரி ஏன் எல்லோரும் சொல்லகூடாது.

  இந்த மாற்றம் கட்டாயம் தேவை.

 3. மிக அருமையான தகவல் தொகுப்புகளுடன் உணர்ச்சி பூர்வமாக சமூக நீதிக்கான குரலை பதிவு செய்துள்ளீர்கள் ஜடாயு. உங்கள் கட்டுரை ஹிந்து சமுதாயத்துக்கே ஆதர்சமான வழிகாட்டுதலை அளிக்கிறது. எல்லோரும் ஒஸாமா பின் லேடன் குறித்து கட்டுரைகளும் விவாதங்களும் சர்ச்சைகளும் செய்து கொண்டிருக்க தமிழ்நாட்டில் தமிழ் ஹிந்து சமுதாயத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்ஹிந்து இணைய தளம் ஹிந்து சமுதாயத்துக்கு வாராமல் வந்த மாமணி என்பதை நிரூபித்துள்ளீர்கள். வாழ்க உங்கள் தொண்டு. மேலும் ஓங்கட்டும் உங்கள் அறச்சீற்றமும் அற ஒழுக்கமும் கொண்ட பார்வை.

 4. திருமங்கலத்தை அடுத்த வில்லூரில் தலித் இளைஞரை ஆதிக்கச் சாதியார் தாக்கியதாக எழுதியிருக்கிறீர்கள். திராவிட இயக்கத்தாரும் சரி, தாழ்த்தப்பட்ட சமூகத்துக்காகப் பாடுபடுவதாக சொல்லிக்கொள்ளும் அமைப்பினரும் சரி இந்த “ஆதிக்க சக்தி அல்லது சாதியார்” என்ற சொல்லால் அர்ச்சிப்பது மேல்தட்டு பிராமண சாதியாரை மட்டும்தான். இப்போது நீங்கள் சொல்லும் ஆதிக்க சாதி வேறு. இல்லையா? இதை ஒரு அரசியல் லாபத்துக்காக மட்டும் சொல்லி பிராமணர் அல்லாதார் ஆதரவை இன்று வரை பெற்று வந்தார்கள். ஆனால் இன்று கல்வி அறிவு அதிகரித்து விட்ட நிலையில் இதுநாள் வரை பாதிக்கப்பட்டிருந்த மக்கள் உண்மை நிலைமையை உணர்ந்திருக்கிறார்கள். மதத்தைச் சொல்லியும், ஒரு குறிப்பிட்ட சாதியாரைச் சொல்லியும், இவர்கள்தான் தீண்டாமையைக் கடைபிடிப்பதாகவும் சிலர் பறை சாற்றி வருகிறார்கள். மதுரை வைத்தியநாத ஐயர் தலைமையில் நடந்த ஆலய பிரவேசம் பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆம்! உயிருக்கு ஆபத்து இருந்த நிலையில் அவர் அந்த இயக்கத்தை நடத்தினார். திருச்சியில் தியாகி டி.எஸ்.சுவாமிநாத சாஸ்திரி ஒரு டாக்டர். தனது பங்களாவைத் துறந்து, நிறைந்த வருமானத்தைத் துறந்து, தென்னூர் குடிசைப் பகுதியில் ஒரு குடிசை போட்டுக்கொண்டு அங்கு வாழ்ந்தவர்களுக்கு இலவச மருத்துவம் செய்தது யாருக்காவது தெரியுமா? இந்து மதத்தை உண்மையாகப் பின்பற்றுபவர்கள் இதுபோன்ற பேதங்களைப் பார்க்க மாட்டார்கள். பிழைப்புக்காக அரசியல் நடத்துபவர்கள்தான் இந்த பேதங்களைக் காட்டி பிழைப்பு நடத்துகிறார்கள்.

 5. மிக்க நல்ல தகவல்கள். சைக்கிளில் செல்வதைத் தடுக்கவும் இரட்டை டம்ளர் வைக்கவும் சொல்லி வன்முறையில் ஈடுபடுபவர்கள் நீதிக்குக் கொண்டுவரப்படவேண்டும். குப்பையை சாப்பிடச் சொன்ன மிருகத்திற்கு ஷரியா சட்டம் வழி தண்டித்தாலும் போதாது.

  // சாதீய வெறி என்னும் கொடு விஷத்தை உண்டு செரித்து சமத்துவமெனும் அருளமுதைப் பொழியும் திருநீலகண்டம் இந்துத்துவம். சாதீயக் காளியனின் தலைகளை மிதித்து நசுக்கி சமுதாயப் பொய்கையின் நஞ்சறுத்து நன்னீராக்கும் கிருஷ்ணபாதம் இந்துத்துவம். சக மனிதர்களின் உரிமைகளை மறுக்கும் எருமைத் தலையர்க்கு பாடம் புகட்டி நல்வழிப் படுத்தும் தேவியின் திரிசூலம் இந்துத்துவம். //

  பாராட்டத்தக்க வரிகள்.

 6. // குப்பையை சாப்பிடச் சொன்ன மிருகத்திற்கு //

  I say the above with my sincerest apologies to animals. They do have much better sense of morality than the average human.

 7. Pingback: Indli.com
 8. Jatayu,

  Completely new style of you in presenting the information. This style is akin to reporting style, but yet has a human touch. Fantastic !

  The modern caste system in India is the natural result of the hundreds of years of abrahamic rule.

  Hindutva civilization is the only solution to the abrahamic syphilization.

 9. ஆதங்கத்தையும் ஆதர்சத்தையும் ஒருங்கே சொல்லும் உன்னதமான கட்டுரை. ஆக்கப்பூர்வம்மன இந்தக் கட்டுரை அளித்ததற்கு மனப்பூர்வமான நன்றி.

 10. சமற்கிருதத்திற்கும் சமத்துவத்துக்கும் என்ன தொடர்பு? அவர்கள் எப்படி சமநிலையை அடைவார்கள்? ஒரு மொழியைப் படித்தால் சம உரிமை கிடைக்குமா இதை விட மோசடி இருக்குமா?

 11. \\\\\\\\\\\\\தமிழகத்தில் நெல்லை, மதுரை, திண்டுக்கல், தஞ்சை என்று பல மாவட்டங்களிலும் கிராமக் கோயில்களில் சாதிய அடக்குமுறை நிலவுவதையும், தலித்களுக்கு உரிமைகள் மறுக்கப் படுவதையும் பற்றி விரிவாகப் பட்டியலிடுகிறது இந்தக் கட்டுரை. ஆனால் இதற்கான பழியை முழுவதுமாக எந்த ஆதாரமுமின்றி “இந்துயிசத்தின்” மீது போடுகிறது.\\\\\\\\\\

  சட்டத்தை அமல் படுத்தும் ராஜ்ய ஸர்கார் மீளா நித்ரையில் உள்ளது என்பதை இந்த சம்பவங்கள் தெரிவிக்கின்றன. முட்டும் காளையை அடக்க அதன் மூக்கணாங்கயிறைப் பிடிக்க வேண்டும். குற்றமிழைத்தவரை அடக்காது ஹிந்துயிஸத்தின் மீது குற்றம் சார்த்துவது இயலாமையையே வெளிப்படுத்துகிறது.

  மேலும் கும்பகோணம் சம்பந்தமாக தாங்கள் பதிவு செய்த விஷயம் இந்த ஆதாரமில்லாக்குற்றச்சாட்டை பிளந்து தள்ளுகிறது. முந்தைய செய்தியில் உள்ள பிளவு பட்ட ஸமூஹமும் பிந்தையதில் உள்ள ஒருங்கிணைந்த ஸமூஹமும் ஆங்காங்கே உள்ள ஸமூஹத்தின் ஹீனமான மற்றும் உன்னதமான நிலையையே படம் பிடித்துக்காட்டுகிறது.

  எய்தவனை விட்டு அம்பை நொந்தால் எய்தவனின் இருமாப்பும் வளரும். இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் சைக்கிளில் செல்லாதே இந்த சந்தில் என்று கூறும் ம்ருகங்களை அடக்க துப்பில்லாத ஸர்க்காரே ராமன் எந்த காலேஜில் படித்து டிகிரி வாங்கினானென கேட்கவியலும்.

  ம்ருகதுல்யமாய் ஸஹ மனுஷ்யனை சித்ரவதை செய்து வில்லூரில் வாழ்பவர்கள் கும்பகோணம் சென்று ஆங்கே அந்த குழந்தைகளின் ரகுவம்சத்தையும் சாகுந்தலத்தையும் கேழ்க்கட்டும். பித்தம் தெளியும். வாஸ்தவத்தில் சாகுந்தலம் கேட்டால் பித்தம் தெளியும் என்பது ஐதிஹ்யம்.

  ஸப்கோ ஸன்மதி தே பகவன்.

 12. சுயமரியாதை கூச்சலிடும் கழகம் தனதுபடையைத் திரட்டிக்கொண்டு வில்லூர் சென்று போராடலாமே ! கடந்த பல ஆண்டுகளாக பார்ப்பன ஆதிக்கம் என ஊளையிடும் இந்த போலிக் கும்பல் இதுபோன்ற கொடுமைகளுக்கு எதிராக போராடியதாக பதிவுகள் ஏதுமில்லை. அக்ரஹாரம் வழியாக எல்லோரும் எல்லா வாகனத்திலும் ஏறித்தான் செல்லுகின்றனர். பிராமணர் வாழும் தெரு எனவே இறங்கி செல்லுங்கள் என்று எந்தப் பார்ப்பன இளைஞனும் வம்பு வளர்த்ததாகத் தகவல் இல்லை. (அவர்களுக்கு தைரியமும் கிடையாது) ஆனால் நாயை எங்கு அடித்தாலும் காலை நொண்டும் என்பது போல் இவர்கள் தூஷிப்பது பார்ப்பனர்களைத்தான். ஒழுக்கம் கேட்ட தலைவரின் கீழ் உள்ள அரசின் ஆட்சியின் அவலட்சணங்கள் பற்றி ஈனமிகு வீரமணி எடுத்துச் சொல்வாரா? சொல்ல மாட்டார். பார்ப்பனரின் ப்ருஷ்டங்களைத் தேடுவதுதான் திராவிடக் கழகத்தின் வேலை.

 13. வணக்கத்திற்குரிய ஜடாயு அவர்களுக்கு,

  தங்களின் இக்கட்டுரைக்கு நன்றிகள் எவ்வளவ சொல்லினும் தகும்.
  இது என்ன கொடுமை? இன்னும் இப்படியான நிலை தமிழகத்தில் இருக்கிறதா? குப்பையைச் சாப்பிடச் சொன்னவர் ஆசிரியை கிடையாது. அவர் தான் ஆசு(குற்றம்) … முதலில் இப்படிப்பட்ட ஆசுக்களுக்கு கடுமையான.. மிகக் கடுமையான ஈவிரக்கமற்ற தண்டனை வழங்க வேண்டும். இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற விலங்குகளுக்கு இந்து என்று சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை..

  இப்படிப்பட்ட விலங்குகளுக்கு நந்தனாருக்காக நந்தியையே விலகியிருக்கச் சொன்ன நாயகரின் திருவடையாளமான விபூதியையோ.. அல்லது பாணரை அர்ச்சகர் தோளில் ஏறி வரச் செய்து தன்னோடே இணைத்த பரந்தாமன் திருமண்ணோ தரிக்க எந்த உரிமையும் கிடையாது.

  ஆனால் கட்டுரையின் நிறைவுப் பகுதி மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது. ஜகத்குரு ஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகளின் திருவாணையின் வண்ணமாய் செம்மையான பணி நடப்பதை அறிகிற போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.

  இந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாய் … விரைவில் சமத்துவ சன்மார்க்க இந்து நெறி உருவாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்த்ர ஸ்வாமிகள் போன்ற மகா பெரியவர்கள் அனுக்கிரஹிக்க வேண்டும் என்று ப்ரார்த்தித்து அடியேன் அவர் பேரில் பாடி சென்ற மாசியில் ஸ்வாமிகளிடம் ஸமர்ப்பித்த பஞ்சரத்னத்தை இங்கு இடுகை செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

  ஆனந்தரூபம் அமரப் ப்ரதாபம் ஆச்சார்ய நாமம் ஸ்ரீ ஜெயேந்த்ரம்
  ஞானஸ்வரூபம் மந்த்ரோபதேசம் யதிராஜமூர்த்திம் ஸ்ரீ ஜெயேந்த்ரம்

  பூஜானுசித்தம் காமகோடிப் பிரசித்தம் சாமான்ய ஜனப்ரிய ரூபம் மங்களம்
  தேஜோன்மயத்வம் ஸ்ரீ வித்யாபிமானம் காமாஷிமாதாஸ்வரூபம் ஸ்ரீஜெயேந்த்ரம்

  பாரததேச நகரேஷ_ காஞ்சி ஸர்வக்ஞ பீட சந்த்ரசேகராபிமானம்
  ஞானாமுத சாஸ்த்ராலங்காரம் சங்கர பீடாதிபதிம் ஸ்ரீ ஜெயேந்த்ரம்

  சாந்தம் வேதஉபநிஷத போதம் சாமகானாமிருதம் ஆதிசங்கரரூபம்
  சௌந்தர்ய காமாஷி மாதா கடாஷம் சங்கராச்சார்யம் ஸ்ரீ ஜெயேந்த்ரம்

  ராஜராஜசேவிதம் தர்மரஷகம் ச்ரேஷ்டாச்சார்ய சநாதனதர்மம்
  அஜாநுபாஹ_ம் ஸ்ரீ ஜெயேந்த்ரம் அநந்த கோடி கோடி நமஸ்காரம்

 14. //ம்ருகதுல்யமாய் ஸஹ மனுஷ்யனை சித்ரவதை செய்து வில்லூரில் வாழ்பவர்கள் கும்பகோணம் சென்று ஆங்கே அந்த குழந்தைகளின் ரகுவம்சத்தையும் சாகுந்தலத்தையும் கேழ்க்கட்டும். பித்தம் தெளியும். வாஸ்தவத்தில் சாகுந்தலம் கேட்டால் பித்தம் தெளியும் என்பது ஐதிஹ்யம்.

  ஸப்கோ ஸன்மதி தே பகவன்.//

  எனக்கு இதை படிச்சதிலேயே பித்தம் வந்திருச்சே…ஆராவது தமிழ்ல எழுத சொல்றீங்களா சாமி…ஏதோ கால இயந்திரத்துல பயணம் செஞ்ச ஒரு ஃபீல்…ஒரு இருநூறு வருசம் பின்னால போயிட்ட மாதிரி

 15. அன்புள்ள தமிழ் மல்லன்,

  தங்கள் கேள்வியில் பொருள் இருக்கிறது. இதே கேள்விக்கு சுவாமி விவேகானந்தர் மிகவும் அற்புதமாக விடை அளித்துள்ளார். அனைவரும் சமஸ்கிருதம் படித்தால் பல பிரச்சினைகள் தீரும் என்று அவர் தெளிவாக காரணங்களை பட்டியலிட்டுள்ளார்.

  யாரும் தங்கள் தாய் மொழியைவிட அதற்கு கூடுதல் முக்கியத்துவம் தரவேண்டும் என்று அவர் சொல்லவில்லை. ஆனால் அனைத்து இந்துக்களும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். அவர் அளித்துள்ள பதில் முழுவதும் இங்கு எழுதினால் மிக நீண்டுவிடும்.

  சமஸ்கிருதம் படித்தவர்கள் நமது மத கருத்துக்களை நன்கு உள்வாங்கி , சிறப்பாக செயல் பட முடியும். மேலும் ஒரு அழகு என்னவெனில், பகுத்தறிவு என்ற பெயரில் சிலர் செய்துவரும் குழப்பங்களுக்கு முடிவு கட்ட, சமஸ்கிருத நூல்களை படிக்கும் போது, எவ்வளவோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர் agnostic விவாதங்களை மிக தெளிவாக ஆராய்ந்துள்ளனர் என்பதும், இன்றைய நாத்திகம் ஒரு புதிய கருத்து அல்ல. அன்றைய சார்வாகமே இன்று புதிய பெயரில் பொய் வியாபாரம் செய்கிறது என்பதும் தெரிகிறது.

  எனக்கு ஐம்பது வயது வரை சமஸ்கிருதம் சுத்தமாக தெரியாது. பிறகு சிறிது பயின்றேன். சிறு வயதில் சமஸ்கிருதம் பயிலாதது ஒரு வாய்ப்பை இழந்ததாக எண்ணுகிறேன்.

  சார்வாகர்கள் பொய் வியாபாரிகள் அல்ல. ஆனால் இன்றைய நாத்திக லேபில் கொண்டவர்கள் மோசடி வியாபாரிகளாக உள்ளனர். ஏனெனில் சார்வாகம் இந்துமதத்தின் ஒரு பகுதியே ஆகும். ஆனால் இன்றைய நாத்திகர் குழப்பவாதிகளாகவும், சுவிசேஷ பிரச்சாரகர்களிடம் கையூட்டு பெற்று, தங்கள் உண்மையான கொள்கையை விற்று விட்டு, மானத்தை விற்று வாழ்கிறார்கள்.

 16. அன்புள்ள திரு கிருஷ்ணகுமார்,

  தங்கள் கருத்துக்கள் மிக உயர்வாகவும், சிந்தனையை தூண்டுவதாகவும் உள்ளன. தங்கள் மொழிநடை சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள மணிப்ரவாளம் போல உள்ளது. தாங்கள் வெளி மாநிலத்தில் மிக நீண்ட காலம் வாழும் சூழ்நிலை ஏற்பட்டதாலும், தமிழ் பேசும் மக்களிடையே வசிக்க மற்றும் பழக வாய்ப்பு இல்லாததாலும் தங்கள் மொழிநடை மிக பழையதாக உள்ளது. எனவே, சிறிது சிறிதாக தற்கால தமிழ் நடைக்கு மாற்றி எழுதினால் பலரும் படித்து புரிந்துகொண்டு மகிழ எதுவாக இருக்கும்.

  அரவிந்தன் நீலகண்டனின் கடிதத்தை படித்தவுடன் இக்கடிதத்தை நானும் எழுதுகிறேன். தங்களுக்கு எல்லாம் வல்ல வள்ளி தேவசேனா சமேத முருக பெருமானின் அருள் என்றும் கை kodukkum.

 17. மதுரை வைத்யநாத ஐயர், டாக்டர் சாஸ்த்திரி போல பல பிராமணர்கள்
  காந்தியுகத்தில் தலித் சீவி செய்துள்ளனர்.. ராஜாஜிக்கு சமஸ்கிருதம் போதித்த சுப்பாராவ் அப்படி ஒருவர். அவர் தலித் களுடன் நட்புடன் இருக்கிறார் என்பதற்காக அவருக்குக்கிடைத்த பட்டப்பெயர் பெயர் ‘பற சுப்பாராவ் ‘! இப்படி எத்தனையோ தியாகிகள் பிராமணர்களில் இருந்து தோன்றி சேவை செய்துள்ளனர்

 18. ‘சி வி ‘ என்பதை ‘சேவை ‘ என்று வாசிக்கவும்

 19. கருப்புசாமி மற்றும் அம்மன் கோவில்களில் உயிர்பலியும் கொடுக்கப்படுவதால், பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். சமஸ்க்ருதம் உருது மற்றும் அராபிய மொழிக் கலப்புதான், ஹிந்தி யாக மாறியது. அராபிய, உருதுக்கலப்பினால்தான், ஹிந்தி தேச மொழியாகத் திணிக்கப்பட்டது. ஹிந்தியில் சமஸ்க்ருதம் மூலமாக உள்ளதால், சம்ஸ்க்ருதமும் ஹிந்தி, அராபிய,உருது திணிப்பாகவே கருதப்படும். அராபிய,உருது மொழியாகவே, ஹிந்தியுடன், பெரும்பாலவர்களால் வெறுக்கப்படும். இதை மூடி மறைத்து, கோவில்களில் உயிர்பலியையும்,இந்திய நாட்டிலே இஸ்லாமிய அராபிய,உருது மொழியையும் ஊக்குவிக்க முடியாது.

 20. \\\\\\\\\\ஆராவது தமிழ்ல எழுத சொல்றீங்களா சாமி…\\\\\\\ஏதோ கால இயந்திரத்துல பயணம் செஞ்ச ஒரு ஃபீல்\\\\\\\

  க்ஷமிக்கவும். மேலே ரெண்டாவது வாசகம் தீந்தமிழா??????????

  விவாதப்பொருள் பற்றி கருத்துப் பரிவர்த்தனம் செய்வது உசிதம்.

 21. வடமொழி பயிற்ருவிக்கும் பள்ளிகளில் தமிழ் பயில வகை செய்யப்பட்டுள்ளதா? அல்ல வறுமையைக் கொண்டு வடமொழி தள்ளிவிடப்படுகிறதா?

 22. //மோட்டர் சைக்கிளில் சென்றுள்ளார். இதைக் கண்டு வெகுண்ட அங்கு வாழும் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியினர் அவரைத் தடுத்து நிறுத்தி // அந்த ஆதிக்க ஜாதியினர் யார் என்று வெளிப்படையாக எழுதலாமே! பூனூல் போட்ட பிராமணன் தான் ஜாதிக்கொடுமை செய்கிறான் என்று கூறி அதை வைத்தே இந்துத்துவ எதிர்ப்பை கக்கும் அயோக்கியர்களுக்கும் கொஞ்சம் தெரியட்டும். கிராமங்களில் அடாத அக்கிரமங்களைச் செய்து கொண்டு வெளியே பார்ப்பன எதிர்ப்பு பேசும் ஜாதிக்காரர்கள் பலர் இருக்கிறார்கள். இது போன்ற கொடுமையைச் செய்தது பிராமணரா அல்லது பார்ப்பன எதிர்ப்பு பேசும் பதர்களா என்பதை வெளிப்படையாகச் சுல்லுங்கள். குப்பை எங்கே இருக்கிறது என்று தெளிவாகத் தெரிந்தால் தான் கூட்டி அள்ளி வெளியே கொட்ட வசதியாக இருக்கும்!

 23. ஐயா வில்லூரில் நடப்பதற்கும் சமசுக்ரிதம் படிப்பதற்கும் என்ன சம்பந்தம்.காஞ்சி கோவிலில் ,திருப்பதியில் எல்லா ஜாதியும் அர்ச்சகர் ஆகலாம்,சங்கர மடத்தின் அடுத்த வாரிசு எந்த ஜாதியில் இருந்து வேண்டுமானாலும் வரலாம் என்று மாற்றம் வந்து விட்டது போல் கூவுகிரீரே
  வில்லூரில் தேவர் சாதியினர் அட்டூழியம் என்று எழுதுவதில் தவறு ஏதேனும் உள்ளதா .
  http://www.vinavu.com/2011/05/05/villur/ வினவில் வந்திருக்கும் கட்டுரை
  அழகிரியின் மனைவி ஒரு ஆதிட்ராவிட பெண்மணி.அண்ணி வருகிறார் என்று தேவர் மக்களை கூச்சல் போட வைத்தது திராவிட இயக்கம் தான்.அவர் மகனுக்கு தெருவெங்கும் தேவர் மக்கள் cutout வைப்பது யார் ஆட்சியில்.
  சாதி ஒழிய வேண்டும் என்று சொல்வது யார்.சாதி இருக்கும் வரை ஒருவன் மேல் ஒருவன் கீழ் என்று தான் இருக்கும்.
  கலப்பு திருமணம் செய்து கொண்டால் சலுகைகள் /தங்க காசு வந்தது யார் ஆட்சியில்.
  தேவர் சாதி வெறிக்கு முக்கிய காரணம் அவர்கள் தலைவராக விளங்கிய ஆன்மிக/ஹிந்து மகாசபைக்கு பணம் தந்த முத்து ராமலிங்க தேவர்.
  இடஒதுக்கீட்டால் கலெக்டர் முதல் ஆசிரியர் வரை எல்லா ஊர்களிலும் ,மாவட்டங்களிலும் ஆதி திராவிட மக்கள் வருகின்றனரே.அவர் பைக்/கார் ஒட்டி வந்தால் வில்லூர் தேவர்கள் மறிப்பாரா
  தங்கள் ஊர் கோவிலில் அனுமதி மறுக்க படுகின்றவன் திருப்தி கோவில் அர்ச்சகரின் தம்பி என்றால் ஊர் அனுமதி மறுக்கிரவனை பார்த்து சிரிக்காதா.சங்கராச்சாரியாரின் உறவினர் நம் சேரியில் வசிக்கிறவர் என்றால் தீண்டாமை எங்கே வரும்.புகை வண்டி,பேருந்து,கல்லூரி ,வேலை பார்க்கும் இடம் என்று எல்லா இடத்திலும் ஜாதி வேற்றுமை குறைந்துள்ளதற்கு காரணம் அணைத்து வேலைகளிலும் எல்லா சாதியினரும் உள்ளது தான்.ஒரே சாதி வசிக்கும் இடங்களை அரசாங்கம் பல சாதிகள் வசிக்கும் இடமாக,ஒரே சாதியிநெர் செய்யும் தொழிலில் அணைத்து சாதியினர்ற்கும் இட ஒதுக்கீடு கொடுத்தால் இது போன்ற நிகழ்வுகள் குறையும்.
  திராவிட இயக்கிதினால் எதனை கலப்பு மனங்கள் நடக்கின்றன தெரியுமா .kumbakonam பள்ளி நடத்துபவர்கள் அதை ஆதரிக்கிறார்களா
  ஊர்களில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான இடங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கி அணைத்து ஊர்களையும் சமத்துவபுரம் ஆக்க வேண்டும்.அதை விட்டு விட்டு கும்பகோணத்தை /சமசுக்ரித்த பள்ளிகளை பார்த்தல் சாதி வெறி தான் வளரும்.முத்துராமலிங்க தேவர் ஹிந்து மகா சபை பிடியில் இல்லாமல் கம்முனிச பிடியில் இருந்திருந்தால் இந்த நிகழ்சிகள் நடந்திருக்காது.இது தான் உண்மை.

 24. கருத்து தெரிவிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் நன்றி.

  இக்கட்டுரையில் குறிப்பிட்ட கும்பகோணம் பள்ளி சம்ஸ்கிருதம் *மட்டுமே* கற்றுக் கொடுக்கும் பள்ளி அல்ல, வேத/ஆகம/திருமுறை/பிரபந்த பாடசாலை போன்று மதக்கல்வி அளிக்கும் பள்ளியும் அல்ல. இந்த விஷயம பலருக்கு புரியவில்லை என்று தோன்றுகிறது. அது மற்ற எல்லா உயர்நிலைப் பள்ளிகளையும் போன்ற ஒரு ரெகுலர் பள்ளி தான். ஓரியண்டல் பள்ளி என்பதால் சரித்திர/பூகோள பாடங்களுக்குப் பதிலாக சம்ஸ்கிருதம் பாடமாக உள்ளது. அவ்வளவே. இப்பள்ளியில் படிக்கும் மாணவ/மாணவியருக்கு மற்ற எல்லா பள்ளிகளையும் போலவே உயர்கல்வி வாய்ப்புகள் உண்டு.

  குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அங்கு அடித்தட்டு சமூக மக்களுக்கு மிக்க அன்போடு தரமான கல்வி வழங்குகிறார்கள். அரசுப் பள்ளிகளில் கூட தலைவிரித்தாடும் சாதிய உணர்வு அங்கு இல்லை.

  இத்னால் தமிழகத்தில் மொத்தமாக சாதியம் ஒழிந்து விட்டது என்றோ, சமத்துவம் மலர்ந்து விட்டது என்றோவெல்லாம் சொல்லவரவில்லை. இது நம்பிக்கை தரும் ஒரு ஒளிக்கீற்று. மேன்மேலும் இத்தகைய நோக்கையும், சேவையையும் இந்து அமைப்புகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கு இத்தகைய செய்திகள் ஒரு உத்வேகம் அளிக்கின்றன. அந்த அளவிலேயே அப்பள்ளி பற்றிய செய்தி சுட்டிக் காட்டப் பட்டது.

 25. அன்புள்ள கணபதி அவர்களே,

  ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் மிக தூய்மையானவர். அவரைப்பற்றி தாங்கள் கொண்டுள்ள கருத்துக்கள் தவறுதலான புரிந்துகொள்ளல் காரணமாக ஏற்பட்டவை.

  அந்த நாட்களில் 50 மற்றும் 60 களில் காங்கிரசு காரர்கள் அவரை ஒழித்துக்கட்ட பல முயற்சிகள் எடுத்து தோல்வி அடைந்தனர். தெய்வீகம், தேசீயம் இரண்டும் ஒன்று சேர்ந்த பெருமகனார். அவரை விட கூடுதலாக சீர்திருத்த மனப்பான்மை கொண்ட ஒரு தலைவர் இந்த உலகில் இன்று வரை பிறக்கவில்லை.

  அவருடைய பொருளாதார கொள்கைகளும் மிக தெளிவானவை. அவர் மன்மோஹனை விட பெரிய பொருளாதார மேதை. அவரை பற்றி ஏராளம் நூல்கள் கொட்டி கிடக்கின்றன . இந்த தேசத்தை நேசித்த அற்புதமான உயிரோட்டமுள்ள தலைவர். அவர் கம்யூனிசத்தின் பிடியில் இருந்திருந்தால் , நம் நாடு இன்னமும் பாழாய் போயிருக்கும். மேற்கு வங்காளம், கேரளம் ஆகிய மாநிலங்களை கம்யூனிஸ்டுகள் அழித்து விட்டனர்.

  மேலும் தேவர் அவர்கள் சுய சிந்தனை உடையவர். எனவே எந்த இசத்தின் பிடியிலும் அவர் போன்ற தலைவர்கள் இருக்க முடியாது. கம்யூனிசம் மனித இனத்தை சீரழித்த மற்றும் இயற்கைக்கு முரணான ஒரு குழப்பங்களின் தொகுப்பு.

  மனநிலை பாதிக்கப்பட்டவர்களே அதனை ஒரு கொள்கை என்று உளறுவார்.

 26. Pratap,

  Have you forgotten thevar’s role in the keezvenmeni incident?

  For all you may say, he was a caste leader. To say that many people from other castes visit his memorial on his birthday is a myth. He was a leader of & for the thevars.

 27. இரு வேறு நிலையை பற்றி இரு வேறு எடுத்துக்காட்டுகள். குப்பையை தின்னச் சொன்னதை சாதி வெறி என்று என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. இந்த மனோ வக்கிரத்தை என்னவென்று சொல்வது? இதை விட கேவலமான முறையிலெல்லாம் கூட அவர்கள் நடதப்படுகிறார்கள் என்று நான் படித்துள்ளேன். இதை சாதி வெறி என்று சொல்லாமல் ஒரு வகை மன விகாரம் – perversion என்றே சொல்ல வேண்டும். cannibals என்று சொல்லப்படுபவர்கள் எப்படி மனித சமுதாயத்திற்கு சிறிதும் ஒவ்வாதவர்கள் என்று சொல்கிறோமோ, அந்த வகையில் தான் இவர்களையும் சேர்க்க வேண்டும்.

  காஞ்சி சுவாமிகளின் சேவையை பற்றி கட்டுரை ஆசிரியர் எழுதியிருப்பதை மனமார வாழ்த்துகிறேன். ரகு வம்சம், குமார சம்பவம், மகாபாரதம், மற்றும் எண்ணற்ற சமய நூல்களையும், தேவாரம், திருவாசகம், ப்ரபந்தம் போன்ற தமிழ் நூல்களையும் அனைத்து சமுதாய மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். மற்ற சமயத்தவர்களுக்கும் கற்பிக்கலாம். ஒன்றுமற்ற வன்முறையை மதரசாக்கள் மூலமாக பரப்பும் பொழுது, சமுதாயத்திற்கு பயன் படக்கூடிய நம்முடைய எண்ணற்ற கல்வி பொக்கிஷங்களை மக்கள் அறியும் படி செய்ய வேண்டிய பெரிய பணி நமக்கு இருக்கிறது. வேத தத்வங்களையும், உபநிஷத சாரங்களையும் அனைவரும் அறிந்து கொள்வதற்கு ஒரு தடையும் இல்லை. இந்த அரிய பணியை செய்து வரும் காஞ்சி ஸ்ரீ மடத்திற்கு கோடி வணக்கங்கள்.
  பனாரஸ் ஹிந்து பல்கலைகழகம் போல ஒன்றை நம் தமிழ் நாட்டில் நிறுவி, ஹிந்து சமயம் சார்ந்த பல அரிய கல்விகளை போதிக்கலாம். தலித்துகளை வரவேற்று கற்பிக்கலாம். இது சமுதாய மேம்பாட்டிற்கு உதவும்.

  நல்ல கட்டுரையை சமூக அக்கறையோடு எழுதியுள்ள ஜடாயுவிற்கு அன்பும், வாழ்த்தும்.

 28. எல்லாரும் தமிழில் மறுமொழி எழுதும் போது இந்த களிமிகு கணபதி மட்டும் இங்கிலீசில் எழுதியிருக்கிறாரே? இவர் என்ன மெக்காலே வாரிசா?

  கோமுட்டி செட்டி

 29. ஆனந்தரூபம் அமரப் ப்ரதாபம் ஆச்சார்ய நாமம் ஸ்ரீ ஜெயேந்த்ரம்
  ஞானஸ்வரூபம் மந்த்ரோபதேசம் யதிராஜமூர்த்திம் ஸ்ரீ ஜெயேந்த்ரம்

  Brahmins alone -those who are wearing ” Poonul” are eligible for chanting Kayathiri Mantram said Sri Jeyendrar of Kanchi Mutt.

  But Swami Chidbhavananda says ” Kayatri Manthiram belongs to all Hindus.All HINDUS shall chant Kayathri mantram regularly.

  Jeyendrar must reform himself.

 30. ஈவேரா மற்றும் அண்ணாத்துரை மற்றும் அவர் தடம் வந்தவா்கள் அனைவரும் சாதிக்கொடுமைஎன்றால் ஏதோ பாா்ப்பனா்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விசயம் என்றுதான் அனைவரும் எழுதுகின்றாா்கள்.பேசுகின்றாா்கள்.

  சாதிக் கொடுமை பஞசாயத்து அளவில் நடைபெறுகின்றது. பிறாமணா்கள் அல்லாதவா்கள் நடத்தும் தீண்டாமை கொடுமைகள் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது என்பது பாிதாபமான உண்மை.இராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லீம்களும் தேவா் மக்களும்தான் தீண்டாமை கொடுமைக்கு காரணமாக உள்ளாா்கள். இவர்கள் மற்றவா்களை சாதி அடிப்படையில் அவமானப்படுத்தவது அநீதி செய்வது தாராளமாக உள்ளது.மதுரையிலும் தேவா் சாதியினா் கொடுமை நிறைய உள்ளது. கோவில்பட்டி பகுதியில் சில கிராமங்களில் பள்ளா்கள் வைத்ததுதான் சட்டம். சில கிராமங்களில் நாடா்கள் . மற்றும் நாயக்கா்கள் வைத்ததுதான் சட்டம். கோவை பகுதியில் ஆதிக்க உணா்வுடன் நடப்பாக்ள் கவுண்டா்கள் பின் நாயுடுகள். சாதிகளுக்குள் ஒருகிணைப்பு தேவை.அதை அளிக்க தகுதியான தலைவா்கள் கருத்துக்கள் இல்லை.
  சாதி மாறி திருணம் செய்வதை ஆதாித்து எந்த இநது சமய பொியாராவது அறிக்கை வெளியிட்டுள்ளாரா ?
  திருமணமத்திற்கு சாதி கிடையாது.
  ஆ்ண்மகன் சாதிதான் பெண்ணின்சாதி என்பது மநுதா்மம். இந்துக்கள் அனைவரும் இதை ஏற்க வைக்க வேண்டும். ஒரு நாடாா் பிறாமணப் பெண்ணை நாயுடு பெண்ணை கவுண்டா் பெண்ணை … திருமணம் செய்தால் ஏற்றுக் கொள்கிறது.அனால் தேவா்சாதி பெண்ணை திருணம் செய்தால் முறைக்கின்றது. பள்ளா் மற்றும் அருந்ததியா் பெண்ணை திருணம் செய்தால் வெறுகின்றது. நாடாா் சாதியில் அவன் வாழ முடியாது.ஒரு விதமான புறக்கணிப்பை அவன் அனுபவிக்க வேண்டும். நிலைமையின் கடுமை மிகவம் குறைந்துள்ளது. தக்க பயிற்சி அளித்தால் கடுமையை இன்னும் குறைக்கலாம்.
  சாதி மாறி திருமணம் என்பதை அனைத்து மடாதிபதிகளும் ஆதாிக்க வேண்டும்.அறிக்கை விட வேண்டும்இ

 31. சாதி மாறி திருமணம் என்பதை அனைத்து மடாதிபதிகளும் ஆதாிக்க வேண்டும்.அறிக்கை விட வேண்டும்.

  நமது மடாபதிகள் செய்ய மாட்டாா்கள்.காரணம் ஒவ்வொரு மடமும் ஒவ்வொரு சாதி சாா்பானதுதான்.ஸ்ரீராமகிருஷ்ண மடம் ,தபோவனம் தவிர. எனவே இந்த மடாதிபதிகள்தான் மேற்படி சாதி சங்கத்தின் முதல் தலைவா். எங்கே நியாயம் பிறக்கும். விசுவாமித்திரன் என்ற சத்திாியன் பெற்றளித்த காயத்திாி மந்திரத்தை கூட புணுால் போட்டவன் மட்டும்தான் ஜெபிக்க வேண்டும் என்று கூறுகின்றாா் காஞ்சி மடாதிபதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *