புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 08

இதுவரை: இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம். இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். தொடர்ந்தும் மதமாற்றத்தின் அவசியத்தையும், மதமாற்றம் குறித்த ஐயப்பாடுகளுக்கான விளக்கங்களையும் இனி பார்க்கலாம்…..

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7

(தொடர்ச்சி…)

“..எனக்குத் தெரிந்தவரை சமத்துவத்தை இரண்டு வழிகளில் அடையமுடியும்.

ஒரு வழி, இந்துவாக இருந்துகொண்டே அதை வென்றெடுப்பது. இரண்டு மதமாற்றம்.

இந்துவாக இருந்துகொண்டே சமத்துவம் பெற வேண்டுமானால், நாம் சுத்தமானவர்களாக ஆனால் மட்டும் போதாது. சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகியவையும் நடைபெற வேண்டும். இதன் பொருள், நால்வர்ணம் ஒழிக்கப்பட வேண்டும். பிராமண மதத்தை வேரோடு சாய்க்க வேண்டும். இது நடக்கக் கூடிய காரியமா? நடக்க முடியாது என்னும்போது இந்து மதத்தில் இருந்துக் கொண்டே சமத்துவத்தை எதிர்பார்க்க முடியுமா? உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெற முடியுமா?

இதைவிட, மதமாற்றப் பாதை சுலபமானது. இந்தச் சமூகம் முஸ்லீம்களைச் சமமாக நடத்துகிறது. கிறிஸ்தவர்களையும் அப்படியே நடத்துகிறது. சமூக சமத்துவம் மதமாற்றத்தின் மூலம் சுலபமாகப் பெறப்படும்.

இந்தச் சுலபமான வழியை ஏற்பதற்கு என்ன தயக்கம்? மதமாற்றத்தால் இருசாராருக்கும் மகிழ்ச்சியே ஏற்படும். நீங்கள் இந்துவாக இருக்கும்வரை, அசுத்தம் செய்கிறீர்கள் என்னும் குற்றச்சாட்டிலிருந்து மீள்வதற்காகப் போராட வேண்டியிருக்கும். குடிநீர், உணவு, கலப்பு மணம், ஆகியவற்றிற்காகவும் போராட வேண்டியிருக்கும். இந்த மோதல் நீடிக்கும்வரை நீங்களும் ஜாதிஇந்துக்களும் ஒருவருக்கொருவர் பரம்பரைப் பகைவர்களாகவே இருப்பீர்கள்.

drambedkar-addressing-a-conference

மதம் மாறினால் இந்த மோதல்களுக்கான அடிப்படை வேர்கள் அடியோடு மறைந்து போகும். அவர்கள் கோயில்களுக்குள் நீங்கள் நுழைய வேண்டிய தேவையும் இல்லை. அதற்காகப் போராட வேண்டிய அவசியமும் இல்லை. சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகிய சமூக உரிமைகளுக்காகப் போராட வேண்டிய கட்டாயமும் இல்லை. இந்த மோதல்கள் நின்றுவிடும்போது உங்களுக்கிடையில் அன்பும் நட்பும் உருவாகும். இந்துக்களுக்குள் இன்று நிலவும் உறவுகளையும் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் ஆகியவர்களோடு இந்துக்களின் உறவுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். உங்களைப் போலவே கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் ஆகியவர்களோடு இந்துக்களின் உறவுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

உங்களைப் போலவே கிறிஸ்தவர்களையும் முஸ்லீம்களையும் இந்துக்கள் தமது கோயில்களுக்குள் அனுமதிப்பதில்லை. அவர்களிடையே சேர்ந்துண்ணல், கலப்பு மணம், ஆகியவையும் இல்லை. இருந்தபோதும் அந்த இரு மதத்தாருக்கும் இந்துக்களுக்கும் இடையே நேசமும் அன்பும் இருக்கத்தான் செய்கின்றன. இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என்ன? நீங்கள் இந்து மதத்தில் இருக்கும்வரை உங்கள் சமூக, மத உரிமைகளுக்காக இந்து சமூகத்துடன் போராட வேண்டியிருக்கிறது. இந்து மதத்திலிருந்து வெளியேறிவிட்ட காரணத்தால் முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இந்தப் போராட்டத்தின் அவசியமும் போய்விட்டது. இந்துச் சமூகத்தில் எந்தச் சமூக உரிமையும் அவர்களுக்கும் இல்லைதான். அதாவது சேர்ந்துண்ணல், கலப்பு மணம் போன்றவை; அதற்காக இந்துக்கள் அவர்களைத் தாழ்வாகவும் நடத்துவதில்லை. எனவே மதமாற்றத்தின் மூலம் சமத்துவம் வென்றெடுக்கப்படும் எனலாம். இந்துக்களுக்கும், தீண்டத்தகாதோருக்கும் இடையிலான நட்பும் நேசமும் பாதுகாக்கப்படும். அப்படி இருக்கும்போது இந்த எளிய, மகிழ்ச்சிகரமான வழியின் மூலம் சமத்துவம் பெறுவதில் நீங்கள் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்? பிரச்சினையை இந்தக் கோணத்தில் அணுகுங்கள். மதமாற்றமே விடுதலைப் பாதைக்கான சரியான வழி. அதுவே இறுதியில் சமத்துவத்தை நமக்கு ஈட்டித் தருவது. சமத்துவம் என்பது தப்பி ஓடும் பாதை ஆகாது. கோழையின் பாதையும் ஆகாது. மாறாக அது அறிவாளிகளின் மார்க்கம்.

மதமாற்றத்திற்கெதிராக இன்னொரு வாதமும் வைக்கப்பட்டிருக்கிறது. ஜாதி அமைப்பில் விரக்தி அடைந்துபோய், மதமாற்றம் செய்து கொள்வது வீண் முயற்சி என்று சில இந்துக்கள் சொல்கிறார்கள். நீங்கள் எங்கே சென்றாலும் அங்கேயும் ஜாதி பயம் இருக்கிறது என்பது அவர்களுடைய வாதம். இஸ்லாமிலும், கிறிஸ்தவத்திலும் ஜாதியம் இருக்கிறது என்கிறார்கள்.

துர்பாக்கியவசமாக இந்நாட்டில் மற்ற மதங்களிலும் ஜாதி அமைப்பு ஊடுருவிவிட்டது உண்மைதான். இந்த மாபெரும் பாவத்தை அணு அணுவாக வளர்த்தவர்கள் இந்துக்களே. ஜாதியம் முதன்முதலில் இந்து மதத்தில்தான் தோன்றியது. பிறகு பிற மதங்களையும் தொற்றியது. இஸ்லாமிலும் கிறிஸ்தவத்திலும் ஜாதிகள் இருப்பது உண்மையானாலும் அவற்றை இந்து மத ஜாதியத்தோடு ஒப்பிடுவது சரியில்லை. இரண்டுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. கிறிஸ்தவத்திலோ, இஸ்லாமிலோ அவர்களது சமூக அமைப்பின் தலையான அம்சமாக ஜாதியம் இருக்கிறது என்று எவரும் வாதிட முடியாது.

நீங்கள் யார் என்று ஒரு முஸ்லீமை கேட்டால் நான் ஒரு முஸ்லீம் என்று பதில் வரும். அதே கேள்விக்கு நான் ஒரு கிறித்துவன் என்று கிறித்துவத்தில் பதில் வரும். அவர்களுக்கு அதுவே போதும். அதற்குள் எந்த ஜாதி என்று யாரும் கேட்பதில்லை. அதே கேள்வி இந்துவைக் கேட்டால் இந்து என்னும் பதிலுடன் எவரும் திருப்தி அடைந்து விடுவதில்லை. எந்த ஜாதியென்று அடுத்த கேள்வி கிளம்பும். இதற்குப் பதில் சொல்லாமல் ஒருவனுடைய சமூகத் தகுதியைத் தெரிந்து கொள்ளவோ தெரிவிக்கவோ முடியாது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் இந்து மதத்தில் ஜாதியத்திற்கு அதிகபட்ச முக்கியத்துவம் உண்டு. மற்ற இரு மதங்களிலும் அப்படியில்லை. இன்னொரு வேறுபாடும் உண்டு. இந்துக்கள் அனுசரிக்கும் ஜாதி அமைப்பு முறை இந்து மதத்தின் அடிப்படையாக உள்ளது. பிற மதங்களில் அப்படி இல்லை. ஜாதி அமைப்பை நான் கைவிடப் போகிறேன் என்று ஓர் இந்து அறிவிக்க முடியாது. அவனுடைய மதம் அதை ஏற்றுக் கொள்ளாது. ஆனால் இஸ்லாமிலும், கிறித்துவத்திலும் ஜாதி ஒழிப்பு இயக்கங்களை ஏற்படுத்தினால் மதம் அதற்குத் தடை சொல்லாது. இந்துக்கள் தமது மதத்தை ஒழித்தால் ஒழிய ஜாதியை ஒழிக்க முடியாது. ஜாதியை ஒழிக்க இஸ்லாமிலும், கிறித்துவத்திலும் மதஒழிப்பு தேவையில்லை. மாறாக அந்த மதங்கள் அத்தகைய இயக்கங்களைப் பெருமளவுக்கு ஆதரிக்கும். ஆகவே வாதத்திற்காகக் கூட இப்படியெல்லாம் ஜாதிகள் எல்லா இடத்திலும், எல்லா மதத்திலும் இருக்கின்றன என்றும் இந்துவாக இருப்பதே சிறந்தது என்றும் சொல்ல முடியாது. ஜாதி அமைப்பு முறை பயனற்றது என்று சொல்லும்போது அந்த அமைப்புக்குப் பலம் இல்லாத இன்னொரு சமூகத்தை ஏற்பதுதான் சரியான பாதை. அந்த இன்னொரு அமைப்பில் மிக எளிய முறையில் ஜாதிகளை ஒழித்துவிடலாம் என்னும்போது அதுவே சரியான பாதை.

மதமாற்றத்தால் என்ன நடந்துவிடப் போகிறது என்று சில இந்துக்கள் கேட்கிறார்கள். அதைவிட உங்கள் நிதிநிலையையும் கல்வி தகுதியையும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். இந்த அறிவுரையால் நம்மில் சிலர் குழப்பம் அடையலாம். திகைத்து நிற்கலாம்; ஆகவே அந்த வாதத்தை இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். ஒன்று உங்கள் நிதிநிலைமையையும் கல்விச் சூழலையும் யார் முன்னேற்றம் அடைய செய்யப் போகிறார்கள்? அவற்றை நீங்களே வளர்த்துக் கொள்ள வேண்டுமா? அல்லது இந்த வாதத்தை வைப்பவர்கள் உங்களிடம் அந்தத் தகுதிகளை வளர்க்கப் போகிறார்களா? உங்களுக்கு உபதேசிப்பவர்கள் உதட்டளவில் அல்லாமல் வேறு எந்த உருப்படியான காரியத்தையும் செய்யப் போவதில்லை. அவர்கள் பக்கம் இருந்து எந்த முயற்சியும் இந்தத் திசையை நோக்கி நடைபெறபோவதில்லை. மாறாக ஒவ்வொரு இந்துவும் தமது சொந்த ஜாதியின் பொருளாதார நிலைமையை வளர்த்துக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறான். அவனுடைய பார்வை, சொந்த ஜாதிப் பார்வையாகக் குறுகிப் போயிருக்கிறது. பிராமணப் பெண்களுக்கு மகப்பேறு விடுதிகள், பிராமண மாணவர்களுக்கு உபகாரச் சம்பளங்கள், பிராமண ஜாதியைச் சேர்ந்த வேலையில்லாதோருக்கு வேலைகள் இவற்றை நிறுவுவதிலேயே பிராமணர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். பிராமண ஜாதிகளில் ஒன்றான ‘சரஸ்வதத்’ பிராமணர்கள் இதையே செய்து கொண்டிருக்கிறார்கள். காயஸ்தர்களும், மராட்டியர்களும் இதே வேலையில் இருக்கிறார்கள். ஆக அவனவன் தன்னுடைய ஜாதிகளுக்காக இருக்கிறான். புரவலரே இல்லாத ஜாதிகள் கடவுளின் கருணைக்காகக் காத்திருக்கின்றன. நீங்கள் நீங்களாகத்தான் எழுந்திருக்க வேண்டும். உங்களுக்கு உதவ யாரும் முன்வரப்போவதில்லை. இன்றைய சமூகத்தின் நிலை இதுதான். இந்தச் சூழலில் அவர்களுடைய அறிவுரையைக் கேட்பதால் பயன் என்ன? உங்களைத் திசைதிருப்பி உங்களுடைய நேரத்தை வீணடிப்பதே அவர்களின் நோக்கம். உங்களை நீங்கள் முன்னேற்றிக் கொள்ள வேண்டுமானால் இத்தகைய வதந்திகளை நம்பாதீர்கள். இந்த வதந்திக்காரர்கள் உங்களுக்கு உபதேசம் செய்ய எந்த உரிமையும் இல்லை. இதுபோதும் என்றாலும் நான் இத்துடன் நிறுத்துவதாக இல்லை. மேலும் சில பதில்கள் சொல்லவே விரும்புகிறேன்.

மதமாற்றத்தால் மட்டுமே என்ன நேர்ந்துவிடப் போகிறது என்று அறிவில்லாமல் கேட்கும் கேள்வி எனக்கு வியப்பூட்டுகிறது. இந்தியாவில் இருந்து சீக்கியர்களாகவும் முஸ்லீம்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் உள்ளவர்களில் பெரும்பான்மையினர் முன்னாள் இந்துக்களே. அதிலும் பெரும்பான்மை சூத்திரர்களும் தீண்டத்தகாதவர்களும்தான்.

இந்து மதத்தை விட்டு நீங்கி சீக்கியத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் போனவர்கள் எந்த முன்னேற்றமும் அடையவில்லை என்றா இவர்கள் சொல்ல வருகிறார்கள். மதமாற்றம் அப்படி மாறியவர்களுடைய சூழலில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்திருக்கும்போது தீண்டத்தகாதோருக்கு மட்டும் அப்படிப்பட்ட முன்னேற்றம் ஏற்படப் போவதில்லை என்பதா இவர்களுடைய கருத்து? அவர்களே சிந்திக்கட்டும்.

மதமாற்றத்தால் ஒன்றுமே நேரப் போவதில்லை என்பதில் இன்னொரு பொருள், மதம் என்பதே அர்த்தமற்றது என்பதாகும். மதமே அர்த்தமற்றதாகப் போகும்போது இந்து மதத்தில் தீண்டத்தகாதவர் நீடிக்க வேண்டும் என்று ஏன் வாதிட வேண்டும். எனக்குப் புரியவில்லை. அவர்கள் கருத்துப்படி மதத்தில் எந்த உள்ளார்ந்த பொருளும் இல்லை என்றால், விலகப் போகிற மதம் குறித்தும் சேரப் போகிற மதம் குறித்தும் அவர்கள் ஏன் வீணாக வாதிட வேண்டும்? மதமாற்றத்தால் என்ன நேர்ந்துவிடப் போகிறது என்பவர்கள் இன்னொரு கேள்வியையும் சந்திக்க வேண்டும். சுய ஆட்சியால் என்ன நேர்ந்து விடப் போகிறது? சுய ஆட்சி கிடைத்தால் நிதி மற்றும் கல்வி முன்னேற்றம் கிட்டும் என்று தீண்டத்தகாதோரைப் போலவே இந்திய மக்கள் எல்லோருமே நினைக்கிறார்கள். ஆக, சுயாட்சியால் நாடு முழுமைக்கும் பலன் உண்டு என்னும்போது மதமாற்றத்தால் நிச்சயம் தீண்டத்தகாதோர்க்குப் பலன் உண்டு. இந்தப் பிரச்சினை பற்றி ஆழ்ந்து சிந்திப்போர் இந்தியாவுக்கு சுய ஆட்சி அவசியம் என்பது போல் தீண்டத்தகாதோருக்கு மதமாற்றமும் அவசியம் என்பதை ஏற்றுக் கொள்வார்கள். மதமாற்றம், சுயாட்சி இரண்டின் இறுதி நோக்கமும் ஒன்றுதான். அவற்றில் எள்ளளவும் வேறுபாடு இல்லை, விடுதலை என்பதே இரண்டுக்கும் இலக்கு. மனித குலத்தின் மறுவாழ்வுக்கு விடுதலை அவசியம் என்றால் முழுச் சுதந்திரத்தை பெற்றுத் தரவல்ல மதமாற்றம் தீண்டத்தகாதோருக்கு அவசியமற்றதாக இருக்க முடியாது” என்றார்.

 

முன்னேற்றமா? மதமாற்றமா? எது முதலில் என்பதை அம்பேத்கர் விளக்குகையில்–

“பொருளாதார முன்னேற்றமா? மதமாற்றமா? எதை முதலில் தொடங்குவது என்று ஆராய்வது அவசியமாகிறது. பொருளாதார முன்னேற்றம்தான் முதலில் என்பதை நான் ஏற்பதில்லை. இப்படிப்பட்ட கேள்வியே வறட்டுத்தனமானது. அரசின் முன்னேற்றமா சமூக முன்னேற்றமா என்று கேட்பதைப் போன்றதுதான் இது. ஒரு சமுதாயத்தின் முன்னேற்றம் அல்லது வளர்ச்சிக்கே பல வழிகள் கையாளப்படுகின்றன. இந்த வழிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. இவற்றின் முன்னுரிமை முக்கியத்துவத்தை கண்டுபிடிப்பதற்கான அளவுகோல் எதுவும் இல்லை. அப்படித்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவோருக்கு என் பதிலே, மதமாற்றமே பொருளாதார முன்னேற்றத்தை விட முதலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்பதுதான். தீண்டத்தகாதோர் என்னும் களங்கத்தை சுமந்து கொண்டு எப்படி நீங்கள் பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியும்? நீங்கள் ஒரு கடை வைக்கிறீர்கள். கடையின் சொந்தக்காரர் ஒரு தீண்டத்தகாதவர் என்பது பிறருக்குத் தெரிகிறது. அப்படியிருக்கும்போது ஒரு தீண்டத்தகாதவன் கடையின் பொருள் வாங்க யாராவது முன்வருவார்களா? ஒருவன் வேலைக்கு விண்ணப்பம் போடுகிறான். அந்த விண்ணப்பக்காரன் தீண்டத்தகாதவன் என்று தெரிகிறது. அந்த விண்ணப்பதாரனுக்கு வேலை கிடைக்காது. ஒரு நிலம் விற்பனைக்கு வருகிறது. உங்களில் ஒருவர் அதை வாங்க முன்வர வேண்டும். வாங்குபவர் தீண்டத்தகாதவர் என்று தெரிந்தால் விற்பவர் விற்க முன்வர மாட்டார். பொருளாதார முன்னேற்றத்திற்கு நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் சரி, தீண்டாமை காரணமாக அந்த முயற்சி தோல்வியைத்தான் சந்திக்கும். தீண்டாமை, முன்னேற்ற பாதைக்கு ஒரு நிரந்திரமான தடைக்கல். அதை அகற்றினால் ஒழிய உங்கள் பாதை எளிதாக இருக்காது. மதமாற்றமல்லாமல் வேறு வந்த வழியிலும் அந்தத் தடைக்கல்லை அகற்ற முடியாது.

உங்களில் சில இளைஞர்கள் கல்வி கற்க முயல்கிறார்கள்; எல்லா இடங்களிலும் அதற்காக நிதி கேட்க நிற்கிறார்கள். பணத்தேவை காரணமாக அவர்கள் தீண்டத்தகாதோராக நீடிக்கிறார்கள். அப்படி நீடிப்பதன் மூலம் சிறிது முன்னேற்றமும் காண்கிறார்கள். இந்த இளைஞர்களை நான் கேட்கிறேன், படிப்பு முடிந்து தகுதியான வேலை உங்களுக்கு கிடைக்காவிட்டால் அந்தக் கல்வியை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்? நம்மில் பெரும்பான்மை படித்த மக்கள் இன்று வேலை இல்லாமல் நிற்கிறார்கள்; என்னைப் பொருத்தவரை இந்த வேலையின்மைக்குத் தீண்டாமை மட்டுமே காரணமாகும்.

தீண்டாமை காரணமாக உங்கள் தகுதிகளை யாரும் மதிப்பதில்லை. உங்கள் திறமைகளுக்கு எந்த வாய்ப்பும் கிடைப்பதில்லை. தீண்டாமை காரணமாக ராணுவத்தில் இருந்து கூட நீங்கள் வேலைநீக்கம் செய்யப்படுகிறீர்கள். காவல் துறையிலும் உங்களுக்கு வேலை கிடைப்பதில்லை. ஏன்? ஒரு பியூன் வேலைகூட உங்களால் பெற முடியவில்லை. தீண்டத்தகாதவர் என்பதாலேயே உங்களுக்குப் பதவிஉயர்வும் கிடைப்பதில்லை. தீண்டாமை என்பது ஒரு சாபம். அதன் காரணமாக நீங்கள் பழிக்கப்படுகிறீர்கள். உங்கள் தகுதிகள் குப்பையில் வீசப்பட்டு விடுகின்றன. இந்தச் சூழலில் இதற்கு மேலும் எந்தத் தகுதிகளை நீங்கள் வளர்த்துக் கொள்ளப் போகிறீர்கள்? அப்படியே வளர்த்துக் கொண்டாலும் அதனால் என்ன பயன்? கல்வித் தகுதிகளால் உங்கள் தகுதிகள் மதிக்கப்பட வேண்டும் என்று உண்மையாகவே நீங்கள் விரும்பினால் உங்கள் கல்வி உங்களுக்குப் பயன்பட வேண்டும். செல்வாதார முன்னேற்றத்திற்கான உதவிகள் உங்களுக்காகத் திறக்கப்பட வேண்டும். தீண்டாமை விலங்குகளை நீங்கள் தகர்த்தெறிய வேண்டும்” என்றார்.

 

அம்பேத்கர் மதமாற்றம் குறித்த ஐயப்பாடுகளை விளக்கிப் பேசுகையில்,

“மதமாற்றத்தின் விமர்சகர்கள் முன்வைத்த வாதங்களை நாம் இதுவரை அலசிக் கொண்டிருந்தோம். மதமாற்றத்தின் அநுதாபிகளும் சில ஐயங்களைக் கிளப்புகிறார்கள். அவற்றுக்கு விளக்கம் சொல்வது முக்கியம். ஒன்று, கிராம ஊழியரின் பரம்பரை உரிமைகளின் கதி என்னவாகும் என்று சில மகர்கள் கவலைப்படுகிறார்கள். நீங்கள் மதம் மாறினால் கிராம ஊழியர் என்னும் தகுதியில் நீங்கள் செய்யும் ஊழியங்களை இழந்து விடுவீர்கள் என்று மகர்கள் ஜாதி இந்துக்களால் அச்சுறுத்தப்படுகிறார்கள். கிராம ஊழியர் முறை நீக்கப்படுவது பற்றி எனக்குக் கொஞ்சம்கூடக் கவலையில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். கடந்த 10 ஆண்டுகளாக, இந்தக் கிராம ஊழியத்தால் மகர்கள் எத்தனை சோகமான தலைவிதியைச் சுமக்க வேண்டியிருக்கிறது என்று நான் வாதாடியிருக்கிறேன். அந்த ஊழியம் ஒழிக்கப்பட்டால் விடுதலைப் பாதை உங்களுக்காகத் திறந்துவிடப்படுகிறது என்று பொருள். கிராம ஊழிய உரிமை தேவை என்று உங்களில் சிலர் நினைக்கலாம். மதமாற்றத்தால் அதற்கொன்றும் கேடு வந்துவிடாது என்று நான் உறுதி சொல்கிறேன்.

கிராம ஊழியம் பற்றிய 1850-ஆம் ஆண்டுச் சட்டத்தை எடுத்துக் கொள்வோம். அது என்ன சொல்கிறது? மதமாற்றத்தில் சொத்து வாரிசு உரிமை பாதிக்கப்படுவதில்லை என்றுதான் சட்டம் சொல்கிறது. இந்தச் சட்ட விளக்கம் போதாது என்று கருதுபவர்கள், நகர் மாவட்டத்தின் சூழல்களை அலசிப் பார்க்கலாம். அந்த மாவட்டத்தில் மகர் வகுப்பைச் சேர்ந்த பலர் கிறிஸ்தவர் மதத்தில் சேர்ந்துவிட்டார்கள். ஒரே குடும்பத்தில் சிலர் கிறிஸ்தவர்கள், சிலர் மகர்கள் என்னும் நிலையுண்டு. இப்படி கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கும் கிராம ஊழிய உரிமை மறுக்கப்படவில்லை. நகர் மாவட்ட மகர்கள் இந்த உண்மையை உறுதி செய்வார்கள். எனவே, மதமாற்றத்தால் ஊழிய உரிமை பறிபோகுமென்று எவரும் அஞ்சத் தேவையில்லை.

இரண்டாவது சந்தேகம் அரசியல் உரிமை பற்றி. நாம் மதம் மாறினால் நம்முடைய பாதுகாப்பு அரண்கள் என்னாகும் என்று சிலர் அஞ்சுகிறார்கள். தீண்டத்தகாதோருக்கு எத்தகைய அரசியல் அரண்கள் கிடைத்துள்ளன என்பது எனக்குத் தெரியாமல் இல்லை. இந்த உரிமைகளைப் பெறுவதற்காக என்னைப் போல் இன்னல் அனுபவித்தவரும் முயற்சி எடுத்தவரும் எவரும் இல்லை. இருப்பினும் வெறும் அரசியல் உரிமைகள் மீதே சார்ந்திருப்பது சரியில்லை; என்றும் நிரந்தரமானவை என்னும் முத்திரை குத்தப்பட்டும் இந்த அரசியல் அரண்கள் நம் கைக்கு வரவில்லை. அவை ஒரு காலத்தில் மறைந்துதான் போகும். பிரிட்டிஷ் அரசு அளித்த வகுப்புவாரி ஆணைப்படி நமக்கு வழங்கப்பட்ட அரசியல் அரண்களின் ஆயுள் 20 வருடம்தான். புனா ஒப்பந்தத்தில் அப்படி எந்தக் கால எல்லையும் வரையறுக்கப்படவில்லை. ஆனாலும் அவை நிரந்தரமானவை என்று எவரும் சொல்ல முடியாது. இந்த அரண்கள் நீக்கப்பட்டால் என்ன நேரும் என்பதை இவற்றையே சார்ந்திருப்போர் சிந்திக்க வேண்டும். நமது அரசியல் உரிமைகள் பறிபோகும் காலத்தில் நமது சமூக பலத்தையே நாம் சார்ந்திருக்க வேண்டும். முன்பே சொன்னது போல் இந்தச் சமூக பலம் நம்மிடம் மிகவும் குறைவு. மதமாற்றத்தின் மூலம் அல்லாமல் இந்த பலத்தை நாம் வென்றெடுக்க முடியாது. நிகழ்காலத்தைப் பற்றிக் கொண்டு, கால காலத்திற்கும் நமக்கு நன்மை விளைவிப்பவற்றைத் தற்காலிக நன்மைக்காக விட்டுக் கொடுக்கும் மார்க்கம் உங்களை இன்னல்களுக்கே இட்டுச் செல்லும். இந்தச் சூழலில் எது நிலையான நன்மை தரும் என்று சிந்திக்க வேண்டும். மதமாற்றம் நிலையான இன்பத்தைப் பெற்றுத்தரும்.

மதம் மாறினால் அரசியல் உரிமைகள் மாறிப்போகும் என்றாலும் நாம் தயங்கக் கூடாது. மதமாற்றத்தால் அரசியல் அரண்களுக்கு பெரிதாக தீமை ஒன்றும் நேர்ந்துவிடாது. மதமாற்றத்தால் அரசியல் அரண்கள் குலைந்துவிடும் என்னும் வாதத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் எங்கே சென்றாலும் உங்கள் அரசியல் உரிமைகளும் அரண்களும் உங்களைத் தொடரும் என்பதில் சந்தேகமேயில்லை. நீங்கள் முஸ்லீம்களாக மாறினால் முஸ்லீம்களுக்கு உள்ள அரசியல் உரிமைகள் உங்களுக்குக் கிடைக்கும். அப்படியே கிறிஸ்துவர்களாக மாறினால் கிறிஸ்தவர்களின் அரசியல் உரிமைகள் கிடைக்கும். சீக்கியர்களாக மாறினாலும் அப்படித்தான். அரசியல் உரிமைகள் மக்கள் தொகை அடிப்படையிலானது. எந்தச் சமுதாயத்தில் மக்கள் தொகை அதிகரிக்கிறதோ அதன் அரசியல் அரண்களும் அதற்கேற்ப அதிகரிக்கும். நாம் இந்துச் சமுதாயத்தை விட்டு நீங்கினால், நமக்கு ஒதுக்கப்பட்ட 15 இடங்கள் இந்துக்களுக்குத் திரும்பப் போய்விடும் என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.

நாம் முஸ்லீம்களாக மாறினால் முஸ்லீம்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் அளவு மேலும் 15 அதிகரிக்கும்; கிறிஸ்தவர்களாக மாறினாலும் அதே அளவு அதிகரிக்கும். சுருங்கச் சொன்னால் நாம் எங்கே சென்றாலும் நமது அரசியல் உரிமைகள் நம்மைத் தொடரும். எனவே யாரும் அஞ்சத் தேவையில்லை.

மாறாக, நாம் இந்துக்களாகவே இருக்கிறோம். மதம் மாறவில்லை என்றால் நமது உரிமைகள் பாதுகாப்பாகவா இருக்கப் போகின்றன? தீண்டாமைத் தடைச்சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து தீண்டாமையைக் கடைபிடிப்போரைத் தண்டிப்பதையும் நடைமுறையாக்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நாங்கள் அதைத் தடுத்துவிட்டோம். இந்தச் சட்டத்தின்முன் நீங்கள் எல்லாம் தீண்டத்தகாதோர் அல்லர் என்று உங்களிடம் சொல்வதாக வைத்துக் கொள்வோம். அதன் உள்ளர்த்தம் என்ன? மற்ற பின்தங்கிய ஜாதிகள் போலவே நீங்களும் ஏழைகள். நீங்களும் பின்தங்கியவர்கள். மற்ற பின்தங்கிய ஜாதிகளுக்கு எந்த அரசியல் அரசாணையும் நாங்கள் உருவாக்கித் தரவில்லை. உங்களுக்கு மட்டும் அவற்றின் தேவையென்ன என்று உங்களை இந்துக்கள் கேட்கக்கூடும். அதற்கு நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்? இந்தக் கேள்விகளுக்குக் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் எளிதாகப் பதில் சொல்லி விடுவார்கள். “எங்களுக்கு அரசாங்கம் அரசியல் அரண் தந்திருப்பதற்குக் காரணம் நாங்கள் ஏழைகள், கல்வியறிவு இல்லாதவர்கள், பின்தங்கியவர்கள்- என்பதால்; எங்கள் மதம் வேறு, எங்கள் சமுதாயம் வேறு,” என்று அவர்கள் பதில் சொல்வார்கள். அதன் உள்ளர்த்தம் என்ன? எங்கள் மதம் வேறாக இருக்கும்வரை எங்களுக்குரிய அரசியல் உரிமைகளை நீங்கள் தந்தாக வேண்டும் என்பதுதான் அதன் அர்த்தம்.

ஆகவே இந்து மதத்தில், குறைந்தபட்சம் இந்துச் சமூகத்தில் வாழ்பவர்கள் உங்கள் சமூகம் வேறு. அரசியல் அரண்களுக்கான உரிமைகளுக்கு நீங்கள் பாத்தியதை உள்ளவர்கள் என்னும் நிலைப்பாட்டை நீங்கள் எடுக்க முடியாது.

என்றைக்கு நீங்கள் விடுதலையாகிறீர்களோ, மதமாற்றத்தின் வாயிலாக இந்து சமுதாயத்தின் அடிமைகள் என்னும் நிலையிலிருந்து சுதந்திரம் அடைகிறீர்களோ, அந்த நாளில் மேலே சொன்ன நிலைப்பாட்டை நீங்கள் எடுக்க முடியும். அத்தகைய சுதந்திர நிலைப்பாட்டை எடுத்து அரசியல் அரண்களை, அரசியல் கோரிக்கைகளைக் கோராமல்போனால் உங்கள் அரசியல் உரிமைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. எனவே மதமாற்றம் என்பது அரசியல் அரண்களை பலப்படுத்திக் கொள்வதற்கான ஒரு பாதை;. ஒரு போதும் அது அரசியல் அரண் தடை ஆகாது என்று புரியும்.

இந்து மதத்தில் நீடித்தால் உங்கள் அரசியல் அரண்களை நீங்கள் இழந்து விடுகிறீர்கள். அந்த அரண்கள் தேவையென்றால் நீங்கள் மதம் மாறுங்கள். மதமாற்றத்தால் நிரந்தரமாக அரசியல் அரண்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

ambedkar10என்னைப் பொருத்தவரை, நான் முடிவெடுத்து விட்டேன். நான் மதம் மாறப்போவது நிச்சயம். அதன் நோக்கம், உலகாயத லாபங்கள் என்ன? தீண்டத்தகாதவராக இருந்து கொண்டே எல்லாவற்றையும் நான் அடைகிறேன். என் மதமாற்றத்திற்கான நோக்கம் முழுக்க முழுக்க ஆன்மிகமானது. இந்து மதம் என்னுடைய வர்க்கத்திற்கு ஒத்து வரவில்லை. என்னுடைய சுயமரியாதைக்கு ஏற்றதாக இல்லை. உங்களைப் பொருத்தவரை மதமாற்றத்தால் ஆன்மிகப் பயனும் உண்டு. லௌகிகக் பயனும் உண்டு. லௌகிகப் பயன்களுக்காக மதமாற்றம் என்றாலே சிலர் கேலி செய்யலாம். சிலர் சிரிக்கலாம். அப்படிக் கேலி செய்பவர்களும் சிரிப்பவரும் முட்டாள்கள். இறப்புக்குப் பிறகு என்ன நடக்கப் போகிறது, ஆன்மாவுக்கு என்ன விளையப் போகிறது, என்ன விளையாமலா போகும் என்பன போன்ற போதனைகள் பணக்காரர்களுக்கு வேண்டுமனால் பயன் அளிக்கலாம்; அத்தகைய மதத்தைப் பற்றி அவர்கள் ஓய்வாக உட்கார்ந்து சிந்திக்கலாம்; அல்லது களிப்பில் மூழ்கலாம். வாழ்நாளிலேயே எல்லா இன்பங்களும் நுகர்பவர்கள் அப்படிப்பட்ட மதம்தான் உண்மையான மதம் என்று நினைப்பது இயல்பானது. மரணத்திற்குப் பிறகும் மகிழ்ச்சிகள் உண்டு என்று போதிக்கும் மதம் அவர்களுக்கு உவப்பாகத்தான் இருககும். ஆனால் நீங்கள் அந்த மதத்தில் இருப்பதனால் மண்ணுக்கு கேடாய் மதிக்கப்படுகிறீர்கள். உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகள் கூட மறுக்கப்படுகிறீர்கள். மனிதர்களாகவே நீங்கள் நடத்தப்படுவதில்லை. இந்நிலையில் இருக்கும் நீங்கள் மதத்தை உலகியல் பார்வையோடு அணுகாமல் உங்கள் கண்களை மூடிக் கொண்டு வானத்தையா பார்த்துக் கொண்டு இருக்க முடியும்? பணக்காரர்களுக்கும் சோம்பேறிகளுக்கும் உரிய வேதாந்தத்தால் ஏழைகளாகிய உங்களுக்கு என்ன பயன்?

மதம் என்பது மனிதனுக்காகவே; மனிதன் மதத்திற்காக அல்ல.

மதம் மனிதனுக்காக மனிதனால் ஏற்கப்பட வேண்டுமானால் மதம் மாறுங்கள்.

அமைப்பு ரீதியாகத் திரள வேண்டுமானால் மதம் மாறுங்கள்,

வலிமை பெற வேண்டுமானால் மதம் மாறுங்கள்.

சமத்துவம் கிடைக்க வேண்டுமானால் மதம் மாறுங்கள்.

விடுதலையடைய வேண்டுமானால் மதம் மாறுங்கள்.

உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமான இருக்க வேண்டுமானால் மதம் மாறுங்கள்.

உங்களை மனிதர்களாகவே நடத்தாத அந்த மதத்தில் ஏன் இன்னும் இருக்க வேண்டும்?

உங்களைக் கல்வி கற்க அனுமதிக்காத மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்?

உங்களுக்குத் தண்ணீரை மறுக்கும் மதத்தில் ஏன் இருக்க வேண்டும்?

உங்களைக் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கும் மதத்தில் ஏன் இருக்க வேண்டும்?

உங்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க மறுக்கும் ஒவ்வொரு சட்டத்திலும் உங்களை அவமதிக்கும் மதத்தில் ஏன் இருக்க வேண்டும்?

மனிதனுக்கு மனிதன் நேர் வழியிலான தொடர்புகள் கொள்வதைத் தடுக்கும் மதம் மதமேயல்ல. அது அடக்குமுறையின் வடிவம். மனித உயிருக்குக் கூட கவுரவம் தராத மதம் மதமே அல்ல. அது ஒரு மனநோய்; விலங்குகள் தொடுவதை அனுமதிக்கும் மதம், மனிதன் தொடுவதை அனுமதிக்க மறுத்தால் அது மதம் அல்ல அது கேலிக் கூத்து. ஒரு வகுப்புக்குக் கல்வியுரிமை மறுத்து, அதற்குச் சொத்துரிமை மறுத்து, ஆயுதம் வைத்திருக்கும் உரிமை மறுத்து நிற்கும் ஒரு மதம் மதமே அல்ல. அது மனித உயிர்களின் வாழ்வை ஏளனத்திற்கு இடமாக்கும் ஒரு கொடுமை. கல்வியறிவு இல்லாதவர்கள், செல்வாதாரம் இல்லாதவர்கள் அப்படியே நீடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் மதம், மதமேயல்ல; அது ஒரு தண்டனை.

என் அறிவுக்கு எட்டியவரை மதமாற்றத்தால் நேரக்கூடிய எல்லாச் சிக்கல்களையும் அலசி விட்டேன். விளக்கி விட்டேன்; இந்த ஆராய்ச்சி மிகவும் நீண்டதாக இருக்கலாம். இத்தகைய விளக்கமான ஆராய்ச்சி தேவையென்று நான் முதலிலேயே முடிவு செய்து விட்டேன். மதமாற்றத்தின் எதிரிகள் என்னென்ன வாதங்கள் வைப்பார்களோ அவற்றிற்குப் பதில் அளிக்க வேண்டியது என் கடமை. என் கருத்துப்படி மதமாற்றப் பிரகடனத்தின் முக்கியத்துவத்தை உணராமல் யாரும் மதம் மாறக் கூடாது. அதனால்தான் எல்லாவித ஐயங்களுக்கும் தீர்வாக அமையும் இந்தப் பிரச்சினையை இத்தனை விரிவாக அலசினேன்.

என் கருத்துகளை நீங்கள் எவ்வளவு தூரம் ஏற்பீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவற்றை ஆழ்ந்து சிந்திப்பீர்கள் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு. பொது மக்களைத் திருப்தி செய்வதன் மூலம் அவர்களது செல்வாக்கைப் பெறுவது ஒரு சாதாரண மனிதனுக்கு நன்மை தரலாம். ஒரு தலைவன் அந்த வழியைப் பின்பற்ற முடியாது. மக்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை அறிந்து அச்சப்படாமல் ஆதரவைப் பற்றிக் கவலைப்படாமல் அதைச் சொல்பவனே தலைவன் என்பது என் கருத்து.. நீங்கள் விரும்பாவிட்டாலும் சரி. உங்களுக்கு நல்லது எதுவோ அதைச் சொல்வதே என் கடமை. நான் என் கடமையைச் செய்தாக வேண்டும். இதோ இப்போது அதைச் செய்துவிடுகிறேன். முடிவு உங்கள் கையில்! உங்கள் பொறுப்பை நீங்கள்தான் சுமக்க வேண்டும். இந்த மதமாற்றத்தை நான் இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டேன். இந்து மதத்தை விட்டு வெளியேறுவதா, இல்லை நீடிப்பதா என்பது அதன் முதல் பகுதி; இந்து மதத்தைக் கைவிட வேண்டுமானால் எந்த மதத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள் அல்லது ஒரு புதிய மதத்தை உருவாக்குவீர்களா என்பது இரண்டாம் பகுதி; இன்று முதல் பகுதி பற்றி முடிவு செய்தாக வேண்டும். அதை முடிவு செய்யாமல் இரண்டாம் பகுதிக்குப் போக முடியாது. அப்படிப் போவது வீண் முயற்சி. எனவே நீங்கள் முதல் பகுதியை முடிவு செய்ய வேண்டும். இன்னொரு வாய்ப்பை இந்த விஷயத்தில் என்னால் உங்களுக்கு வழங்க முடியாது. உங்கள் முடிவைப் பொருத்து எனது எதிர்காலத்திட்டத்தை நான் தீட்டுவதாக இருக்கிறேன். மதமாற்றத்திற்கு எதிராக நீங்கள் முடிவு செய்தால் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமாக விடை கொடுத்துவிடுவேன். அதற்குப் பிறகு நான் என்ன செய்ய வேண்டுமோ? அதை செய்து கொள்வேன். மதமாற்றத்திற்கு ஆதரவாக முடிவு செய்தால், அந்த மதமாற்றம் அமைப்பு ரீதியாக, பெருந்திரளாக இருக்கும் என்று நீங்கள் உறுதியளிக்க வேண்டும். மதமாற்றத்திற்கு ஆதரவாக முடிவு செய்திருந்தால் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி சேரப்போகிற மதத்தை நிர்ணயம் செய்து கொள்ளும் முயற்சிகளுக்கு குறுக்கீடு செய்ய மாட்டேன். இந்த விஷயத்தில் நீங்கள் எல்லோரும் என்னுடன் ஈடுபட வேண்டும்.

எந்த மதத்தை நான் ஏற்பதாக இருந்தாலும் அதற்கான முயற்சிகளில் விசுவாசமாக ஈடுபடுவேன். அந்த மதத்தில் மக்களின் நன்மைக்காக உழைக்கவும் நான் தயாராக இருக்கிறேன். நான் சொல்கிறேன் என்பதற்காக உணர்ச்சிவயப்பட்டு என்னை நீங்கள் பின்பற்றிவிடக் கூடாது. உங்கள் அறிவுக்கு அது ஏற்றது என்றால் மட்டுமே நீங்கள் சம்மதம் சொல்லலாம்; என்னோடு நீங்கள் ஒன்றுபடாவிட்டாலும் நான் அதற்காக வருந்தப் போவதில்லை. இத்துடன் பொறுப்பு தீர்ந்தது என்றுதான் நினைப்பேன்.

நீங்கள் இங்கு எடுக்கும் முடிவு உங்கள் எதிர்காலத் தலைமுறைக்கு நல்ல பாதையைத் திறந்துவிடும். விடுதலை பெறுவது என்று நீங்கள் முடிவு எடுத்தால் உங்கள் வருங்காலச் சந்ததிகளும் விடுதலை பெறும். அடிமையாக இருக்க முடிவு எடுத்தால், உங்கள் எதிர்காலப் பரம்பரையும் அடிமைதனத்திலேயே மூழ்கிக்கிடக்கும். எனவே உங்கள் பொறுப்புத்தான் மிக மிகச் சிக்கலானது. மிக மிக கடினமானது.”

கடைசியாக அம்பேத்கர் நிறைவுரையில், உங்களுக்கு நீங்களே விளக்காக இருங்கள் என்று பேசினார்.

(தொடரும்…)

4 Replies to “புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 08”

  1. இந்து மதத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டதால் ஜாதிக்கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. சமமாக நடத்தப்படவில்லை என்பதெல்லாம் சரிதான். ஆனால் எந்த ஜாதியையாவது மற்றொரு ஜாதி முழுமையாக அழித்து இல்லாமல் செய்து விட்டதா என்றால் இல்லை. ஆனால் கிறிஸ்தவமும் இஸ்லாமும் பல இனங்களே இல்லாமல் செய்து விட்டன. தமிழ்நாட்டிலும் முஸ்லீம்களில் லெப்பை, பட்டாணி, மரைக்காயர் என சொல்லிக்கொள்கிறார்கள். இவை அரபு நாட்டிலிருந்தா வந்தது. இதை உருவாக்கியவர்கள் யார்?
    இந்து மதத்தின் தீண்டாமைக்காக மதம் மாறுகிறார்கள் என்றால் கிறிஸ்தவத்திலோ இஸ்லாத்திலோ இருந்து கொண்டு ஏன் சலுகைகள் கேட்கவேண்டும். ஒன்றுமே புரியவில்லை.

  2. மதம் மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் . அது இந்து மதத்தில் உள்ள மிகப் பெரிய குறை. அதை நீக்க முயற்சிப்பது சாதி புரையோடிய இந்த நாட்டில் சாத்தியமில்லை. மதம் மாறுவது சரியே . உரிமை கேட்பது சலுகை கேட்பது என்பது தாங்கள் ஏழைகள் என்ற அடிப்படையில் மட்டுமே முடியும். சலுகை கொடுப்பதே ஏழை பணக்காரன் என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். ஆனால் இந்த நேர்மையை தொலைத்த நாட்டில் அதுவும் சிக்கலாகத்தான் இருக்கும்.

  3. அம்பேத்கரின் இந்த வாதங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தலித்துகள் படும் துயரங்களைப் பற்றிய அம்பேத்கரின் வாதங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கின்றன.

    ஆனால், தலித்துகளின் துயரத்திற்கு மாற்றாக அவர் வைக்கும் தீர்வு, மற்றும் அந்த தீர்வுக்கு ஆதாரமாக அவர் வைக்கும் கருத்துக்கள் அவர் மீது குறைகள் காணச் செய்கின்றன.

    அவர் சொல்லும் தீர்வு, எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது என்பது தெளிவாகத் தெரிந்தும் அவர் ஏன் இதை வலியுறுத்துகிறார் என்பது புரியவில்லை.

    அவர் ஆங்கிலேயர்களின் ஏஜண்டாகச் செயல்பட்டாரோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது. இது என் புரிதல் குறையாக இருக்கக் கூடும்.

    இந்தக் குறையை யாரேனும் நிவர்த்தி செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.

    .

  4. கட்டுரைத் தொடரில் அம்பேத்கர் கூறிய கருத்துக்களாக எழுதப்பட்டவைகளைப் பார்த்தால், கட்டுரைத் தொடரின் தலைப்பு “புரட்டாளர் அம்பேத்காரின் புத்தி பேதலித்தது ஏன்” என இருக்க வேண்டும். ‘ பிராமண மதத்தை வேரோடு சாய்க்க வேண்டும்’ என அவர் கூறும் காரணத்தைப் பார்த்தால், பின்னாளில் முத்துவேலர் கருணாநிதி என்ற ஆபத்து வருவதற்கு முன்னோடியாகவே அம்பேத்கார் என்பவற்றின் வாழ்க்கை சிந்தனையும் செயலும் இருந்திருக்கின்றன என்று தெரிகின்றது. 2011 தேர்தலில், தன ஊழல் சிந்தனைகளாலும், ஊழல் செயல்களாலும், அ-ராஜக போக்குகளாலும், குடும்ப வெறி துரியோதன எண்ணங்களாலும், தோல்வியைத்தழுவிய முத்துவேலர் கருணாநிதி, தன வீழ்ச்சிக்கு பிராமணர்கள்தான் காரணம் என்று கூறியதை, அம்பேத்கர் அந்நாளிலேயே கூறியது, அம்பேத்காரின் தீர்க்க தரிசனத்தைக் காண்பிக்கின்றது. இவ்வளவு கூறிய அம்பேத்கர், தன வாழ்நாளின் பிற்பகுதியில், முதல் மனைவி இறந்தவுடன், ப்ராமின குல பெண்மணியைத்தான் இரண்டாம் முறையாகத் திருமணம் செய்துகொண்டார் என்பதைப்பர்ர்த்தால், அம்பேத்காரின் புத்தி பேதலிப்பின் உண்மை புரியும். ஒழுக்க மில்லதவர்கள், அம்பேத்காரின் பாணியைப் பின்பற்றி, முதல் மனைவி இருக்கும் போதே, ஒரு பிராமின் பெண்மணியை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள்ள படாதபாடு படுவது, எல்லா அரசு அலுவலகங்களிலும் நிகழும் நிகழ்ச்சியாகும். அதற்க்கு சமுதாய அந்தஸ்து அப்போதுதான் உயரும் என்று அம்பேத்காரே அவர்களுக்கு அறிவூட்டியிருப்பதுதான் காரணமாகும். கேட்ட எண்ணங்கள் கொண்டவர்களே திருவள்ளுவரையும், அம்பேத்காரையும் முன்னோடிகளாகக் கொள்ளவதும், மேற்கோள் காட்ட அழைப்பதிலுமிருந்தே, அம்பேத்காரின் நிலைமை புரியும். ஒழுங்கான நிலையை அழிப்பது, ஒழுங்கீனத்தை வளர்ப்பது, ஒன்றே அம்பேத்கார் தன சீடர்களுக்கு காட்டிய பாதையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *