அம்பேத்கர் இயோலாவில் மதமாற்றம் பற்றிய அறிவிப்பு செய்தவுடன் இந்தியா முழுவதுமே ஒரு அதிர்வலை ஏற்பட்டது. முக்கியமாக சில தீண்டப்படாத தலைவர்களிடையே அந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பம்பாய் தீண்டப்படாத வகுப்புத் தலைவரான தியோக்கர்,
“வேறு ஒரு மதத்தைத் தழுவுவது பயன்தராது. ஏனெனில் இந்து மதத்தில் தீண்டப்படாதவர்கள் இழிந்த நிலையினராக இருக்கின்ற நிலைமாறி, அவர்கள் மற்றோர் மதத்தில் தீண்டப்படாதவர்களாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும் எல்லா மதங்களிலும் சமத்துவமின்மை ஏதோ ஒரு வடிவில் இருந்துகொண்டிருக்கிறது.”
என்று கூறினார்.
பம்பாயின் தீண்டப்படாதவர்களின் மற்றொரு தலைவரான கஜ்ரோல்கர் மதமாற்றத் தீர்மானத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
“தீண்டப்படாதவர்கள் நம்பிக்கையற்றுக் கிடந்த காலத்தில் அவர்களை வழிநடத்திய அம்பேத்கர் ‘மதம் மாறுங்கள்’ என்று கூறியிருப்பதைவிட அவர்களைத் தற்கொலை செய்துகொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கலாம்; இச்செய்தி என் போன்றோரின் உள்ளத்தைப் பிளப்பதாகும்.”
என்று கூறினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ரெட்டைமலை சீனிவாசன் தன் சுயசரிதையில்,
‘‘இந்துக்கள் அடக்கத்தினின்று தாழ்த்தப்பட்டார் மதமாற வேண்டுமென்று டாக்டர் அம்பேத்கர் பகிரங்கமாய்ப் பிரஸ்தாபித்தபோது தாழ்த்தப்பட்டார் இந்துக்கள் அடக்கத்திலில்லை, தாங்களிருக்கும் மதத்திலிருந்துகொண்டே ஆண்மையான வீரத்துடன் முன்னேற வேண்டுமென்று உடனே தந்தி மூலமாக பிரஸ்தாபித்தேன். இந்துக்கள் அனுசரிக்கும் நாலு வர்ணங்களிலொன்றிலும் சேர்ந்திராததால் தாழ்த்தப்பட்டார் இந்துக்கள் அடக்கத்திலில்லை என்பது வெளிப்படை.
….. இந்து சமயவாதிகளென்னும் ஜாதி இந்துக்களும் தமிழ் சமயிகளான தாழ்த்தப்பட்டாரும் ஒரே மதச்சார்பினராவர். ஜாதி இந்துக்கள் செய்யும் கொடுமையைத் தாளமுடியாமல் தாழ்த்தப்பட்டோர் மதம் மாறிப்போகிறார்கள். தௌர்பாக்கிய நிலையினின்று சீர்தூக்க வேணுமெனத் தாழ்த்தப்பட்டார் பல நூற்றாண்டுகளாக முறையிட்டதற்கிணங்கி கல்வியிலும் செல்வத்திலும் விருத்தி பெற கவர்ண்மென்டார் பல வருடங்களாக உதவி புரிந்து வருகிறார்கள்.
தாழ்த்தப்பட்டார் சமூகத்தினின்று மதம் மாறி வேறு சமூகத்தில் சேர்ந்து கொண்டவர்கள் தங்களைத் தாழ்த்தப்பட்டாரோடு சேர்த்து உதவ வேண்டுமென விதண்டவாதம் கவர்ண்மென்டாரிடம் தொடுத்திருக்கிறார்கள். கவர்ண்மென்டார் சட்டப்படி சமூகங்களின் வரையறையேற்பட்டிருக்கிறது.
ஒரு சமூகத்தவருக்கு கவர்ண்மெட்டார் கொடுத்த உதவியை மற்றொரு சமயத்தார் பெறக்கூடாது. ஒரு மதத்தினின்று வேறொரு மதத்திற்கு மாறினால் ஒரு சமூகத்தினின்று வேறொரு சமூகத்திற்கு மாறினவர்களாவார்கள். அவர்கள் முன்னிருந்த சமூகத்திற்குக் கிடைத்த உதவியை மாறியிருக்கும் சமூகத்தினின்று பெறக்கூடாது. அப்படிப் பெறச்செய்தால் மதம் மாறியவர்களே முழு உதவியையும் ஏற்றுக் கொள்வார்கள். அன்றியும் தங்கள் மதம் மாற்றும் சூட்சியுமுண்டாகுமென தாழ்த்தப்பட்ட சமூகத்தார் பீதி கொள்ளுகிறார்கள்.
மதம் மாறி வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தனிப்பட தங்களுக்கு வேண்டிய உதவியை சர்க்காரிடமிருந்து பெற்றுக் கொள்ளுவது உத்தமம். இந்தக் கருத்தைக் கொண்டு சட்டசபையில் பலதரம் பேசியும் பத்திரிகைகளுக்கெழுதியும் வருகிறேன்.’’
என்று எழுதுகிறார்.
மற்றுமொரு தாழ்த்தப்பட்ட அமைப்பான அனைத்திந்திய ஆதிதிராவிட மகாஜன சபாவின் சார்பில் நுங்கம்பாக்கத்திலுள்ள திராவிடப்பாடசாலை வளாகத்தில் ஒரு பொதுக்கூட்டம் 1935, டிசம்பர் மாதம் நடைபெற்றது. பண்டிதர் நி.எம்.பழனிச்சாமி பிள்ளை தலைமை தாங்கினார்.
சமயம் சார்ந்த காரியங்களையும் சமூகக் காரியங்களையும் அரசியல் காரியங்களையும் குழப்பிக்கொள்ளலாகாதென்று திரு.வி.ஐ.முனுசாமிப்பிள்ளை குறிப்பிட்டார். டாக்டர் அம்பேத்கர் எழுப்பியுள்ள பிரச்சினையைக் குறித்து சிந்திப்பதற்காகவே கூடியிருப்பதாகக் குறிப்பிட்ட முனுசாமிப் பிள்ளையவர்கள் இந்துசமயத்தைப் பற்றி எதையுமே அறியாதவர்களாலும் இந்துசமயத்தின்பால் பற்றில்லாதவர்களாலும் இப்பிரச்சினை பூதாகரமாக்கப்பட்டுள்ளது என்பதுவே தமது தனிப்பட்ட கருத்து என்று குறிப்பிட்டார்.
….தங்களது சமயத்தை மாற்றுவது குறித்து சிந்திப்பதற்கு இக்காலம் பொருத்தமானதன்று என கூறினார். அரசியல் துறையில் தாங்கள் எவ்வாறு முன்னேறி வருகிறார்களென்பதை அவர்கள் கவனித்திருக்கக்கூடும். சீர்திருத்தக் கேள்விக்கு முடிவு காணப்படுவதற்கு முன்னரே இப்பிரச்சினை எழுப்பப் பட்டிருந்தால் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் சமயஞ் சார்ந்த வாக்குவாதம் தங்களுடைய நிலையைப் பலவீனப்படுத்துவதோடு தங்களது முன்னேற்றத்தையும் பாதிக்கும்’ என்று முனுசாமிப்பிள்ளை கூறினார்.
பலர் பேசியபின் எம்.சி.ராஜா பேசினார்:
3. தன்னைப் பொறுத்துவரையிலும் இந்து சமயத்தின்பால் முழுநம்பிக்கை தமக்கிருப்பதாகவும் இந்துவாகவே உயிர்விடத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தாழ்த்தப்பட்ட சமுதாயம் இந்துக்களுடன்தான் சேர்ந்திருக்க வேண்டுமென்றும் மக்கள் தங்களுடைய உரிமைகளை மீண்டும் பெற்றிடப் போராட வேண்டுமென்றும் கூறினார்.
மேலும் டாக்டர் அம்பேத்கரால் எழுப்பப்பட்ட தர்க்கத்திற்குரிய பிரச்சினை குறித்துத் தாம் விரைவில் ஒரு அறிக்கையை வெளியிட இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
எம்.சி.ராஜா சொன்னதுபோல் 1935, நவம்பர் 12ம்தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் பின்வருமாறு கூறினார் –
எம். சி. ராஜா
‘‘…கிறித்துவக் கொள்கைகளுள் பலவற்றை நான் மனதில் பதித்துக் கொண்டிருப்பினும் நான் ஒருபோதும் எனது மதத்தை மாற்றிக்கொள்ளவில்லை. தங்களது ஆன்ம நலனுக்கு உகந்த வகையில் தாங்கள் விரும்பும் எந்த மதத்தையும் நாடவும் தழுவவும் மக்களுக்கு உரிமையுண்டு.
… பம்பாய் மாநிலத்திலுள்ள ஒடுக்கப்பட்ட இனத்தவரின் பெரும்பகுதியினரின் தலைவராய் விளங்கும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான திரு.பாலு தமது கவனமானதும் வலிமை யானதுமான அறிக்கையைக் கொண்டு மாநாட்டுத் தலைவரை வீழ்த்தியுள்ளார்.
நாடெங்கிலுமுள்ள நம்மினம் சார்ந்த முன்னணித் தலைவர்களாகிய இராவ் பகதூர் ஆர்.சீனிவாசன் எம்.எல்.சி, இராவ் சாகிப் வி.ஐ.முனுசாமிப் பிள்ளை எம்.எல்.சி, இராவ் சாகிப் எல்.சி.குருசாமி, முன்னாள் எம்.எல்.சி.டாக்டர் இராம்பிரசாத், டாக்டர் சோலோன்கி எம்.எல்.சி, திருவாளர்கள் ஆர்.வி.நிஸ்வாஸ், நி.கே.இராஜ்யோக், என்.எஸ். கஜ்ரோல்கர், சுவாமி ஏ.எஸ்.சகஜானந்தம் எம்.எல்.சி போன்றோரும் ஏனையோரும் இத்தீர்மானத்தை ஏற்க இயலாதென்பதைத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்கள்.
மேல்சாதியினர் என்று அழைக்கப்படும் சாதி இந்துக்களால் நம்முடைய மக்கள், நாட்டின் பலபகுதிகளில் நடத்தப்படும் விதம் குறித்து நம்மவரில் பலர் கொண்டுள்ள வெறுப்புணர்ச்சியை நானும் பகிர்ந்து கொள்கின்ற போதிலும் அவ்வாறு வெறுப்புணர்வு கொள்வோர் இன்றுள்ள நிலைமையை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்த்திட வேண்டுகிறேன்.
இன்று நிலைமைகள் பேரளவிற்கு முன்னேறி உள்ளன. இந்து இந்தியாவிலுள்ள கல்வியறிவு பெற்ற பெரும் பகுதியினர் தீண்டாமையெனும் வழக்கத்தைக் கண்டித்து சீர்திருத்தம் செய்வோரது அணியில் சேரத்துவங்கியுள்ளனர். நமது நிலை மற்றும் சமூக அந்தஸ்து பற்றிய உணர்வில் ஏற்பட்டுள்ள எழுச்சியை நோக்குங்கால் தீண்டாமை வழக்கம் ஒழிந்துபோகும் காலம் வெகுஅருகாமையிலேயே உள்ளது என்று நான் துணிந்து சொல்வேன்.
பத்தாண்டு காலத்தில் ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு ஆதரவாக நிலைமைகள் மாறியிருப்பதையும் ஒடுக்கப்பட்ட இனத்தவரிடையேயும் பேரெழுச்சி ஏற்பட்டுள்ளதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
…. உடனடிப் பரிகாரமாக எனக்குத் தோன்றுவது யாதெனில் தீண்டு பற்றி மக்கள் மனதில் உள்ள மூடநம்பிக்கையைச் சட்டபூர்வமாகவும் ந்ர்வாக ரீதியிலும் முழுமையாக ஒழிப்பதுவேயாகும்.
… இந்து சமயம் நமது சமயம்; அது நமக்குப் புனிதமானது. அதைப் பாதுகாத்து தூய்மைப்படுத்துவது நமது கடமையாகும். இந்து ஐக்கியத்திலிருந்து பிரிந்து செல்ல நாம் விரும்பவில்லை. நாம் விரும்பவதெல்லாம் மேலானதொரு அங்கீகாரமே. சாதிய இந்துக்களுடன் சமஅந்தஸ்து பெற்றவர்கள் நாம் என்ற அங்கீகாரமே. தீண்டாமை ஒழிப்பே நமது இலட்சியம். நமது நோக்கம் யாதெனில் நாமும் இந்து சமூகத்தின் பிரிக்கப்படாததும், ஒதுக்கப்படாததுமான அங்கமாக மாறுவதேயாம்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் எம்.சி.ராஜா தமது நிலையைத் தெளிவுபடுத்தினார்.
இவ்வாறு எதிர்ப்புகள், ஆதரவுகள் என்று அம்பேத்கருக்கு பலதரப்பட்ட தந்திகள், அறிக்கைகள், வாழ்த்துக்கள் என வந்தன.
அதனால் தமது மதமாற்ற இயக்கத்துக்குத் தம்முடைய மக்கள் எந்த அளவு ஆதரவு தருகிறார்கள் என்பதை அறியும் ஒரே நோக்கத்தோடு பம்பாய் தாதரில் 1936 மே 30- 31 தேதிகளில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். இதில் 35,000 தீண்டத்தகாத மகர்கள் கலந்துகொண்டார்கள்.
இம்மாநாட்டில் அம்பேத்கர் வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவை ஆற்றினார். பலரது உள்ளங்களில் எழுந்த கேள்விகளுக்கு – பல தலைவர்களிடம் இருந்து வந்த விமர்சனங்களுக்கு – அவர் தன்னுடைய பேச்சில் அன்று பதிலளித்தார்.
“நான் அண்மையில் பிரகடனம் செய்த மதமாற்றத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமென்றுதான் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது என்பது இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த மாநாட்டின் பொருள் எனக்கு மிகவும் நெருக்கமானது. அதுமட்டுமல்ல, உங்கள் எதிர்காலம் முழுக்க முழுக்க இந்தப் பொருளையே சார்ந்திருக்கிறது. இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள் என்று சொல்வதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை. இல்லாவிட்டால் இப்படிப் பெருந்திரளாக நீங்கள் இங்கே கூடி இருக்க மாட்டீர்கள். எனக்கு முன் ஒரு மக்கள் வெள்ளத்தை பார்ப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்”.
என்று ஆரம்பித்தார்.
பின்னர் மதமாற்றம் ஏன் தேவை என்பதை விளக்கிப் பின்வருமாறு பேசினார் –
‘‘மதமாற்றப் பிரகடனம் செய்ததிலிருந்து நமது ஆட்கள் பல்வேறு இடங்களில் பல பொதுக்கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். பார்வைகளையும், எண்ணங்களையும் உங்களிடம் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்; எல்லாவற்றையும் நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் இன்று வரை மதமாற்றப் பிரச்சனை பற்றி விவரிக்கவும் தீர்மானம் செய்யவும் நமக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அத்தகைய வாய்ப்புக்காக நான் ஏங்கிக் கொண்டிருந்தேன். இந்த மதமாற்ற இயக்கம் வெற்றியடைய வேண்டுமானால் இதற்காக முன்கூட்டியே திட்டமிடுதல் மிகமிக அவசியமாகிறது. மதமாற்றம் என்பது சிறுபிள்ளை விளையாட்டல்ல. இது ஒரு பொழுதுபோக்கும் அல்ல. இதன் நோக்கம் மனித வாழ்வை வெற்றிகரமாக்குவதே.
ஒரு படகுக்காரன் பயணம் தொடங்கு முன்னால் எல்லா முன்னோற்பாடுகளையும் எப்படிச் செய்து கொள்கிறானோ, அவ்வாறே நாமும் நமக்குரிய முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் மறு கரையை அடைய நம்மால் முடியவே முடியாது. படகில் சரக்குகளை ஏற்றுவதற்கு முன்னால் அந்தப் படகுக்காரன் எத்தனை பயணிகள் படகில் ஏறப்போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்கிறான். நானும் அதே நிலையில் தான் இருக்கிறேன். உறுதியான உண்மைகளைத் தெரிந்து கொள்ளாமல் நான் முன் அடி எடுத்துவைக்க முடியாது. எத்தனை பேர் இந்துமதத்தை விட்டு நீங்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது தெரியாமல் மதமாற்ற ஏற்பாடுகளை நான ஆரம்பிக்க முடியாது.
பம்பாயில் சில தொழிலாளர்கள் முன்பு நான் பேசினேன். ஒரு மாநாட்டில் சந்திக்காவிட்டால் பொதுமக்கள் கருத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வர என்னால் முடியாது. இப்படிச் சொன்னதும் அவர்கள் மாநாடு கூட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். அதற்கான செலவுகள், உழைப்பு பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. அவர்கள் பட்ட இன்னல்களைப் பற்றி நமது மதிப்பிற்குரிய தலைவரும், இந்த மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவருமான திரு. ரேவ்ஜி டாக்டுஜி டோவாஸ் தம்முடைய சொற்பொழிவில் விவரித்து விட்டார். வரவேற்புக் குழுவிற்கு நான் மிகமிகக் கடமைபட்டிருக்கிறேன். கடினமான முயற்சிகளுக்குப் பிறகுதான் இந்த மாநாடு கூட்டப்பட்டிருக்கிறது.’’
மகர்களுக்காக ஒரு தனி மாநாடு ஏன் என்ற கேள்விக்கு அப்போது பதிலளித்தார் அம்பேத்கர் :
‘‘மகர்களுக்காக மட்டுமே ஏன் இப்படி ஒரு மாநாட்டைக் கூட்ட வேண்டுமென்று சிலர் கேள்வி எழுப்பலாம். மதமாற்றப் பிரகடனம் எல்லாவிதமான தீண்டத்தகாதவர்களையும் பாதிக்கும். அப்படி இருக்கும் போது தீண்டத்தகாத எல்லா வகுப்பினர்களுக்குமான ஒரு பொது மாநாட்டை ஏன் கூட்டியிருக்கக் கூடாது? பிரச்சனைகள் மீது விவாதத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லுவது என் கடமையென்று கருதுகிறேன்.
ஒன்று, இந்த மாநாட்டின் மூலம் அரசிடம் இருந்து எந்தப் பாதுகாப்பையும் நாம் கோரவில்லை. அதே போல் இந்துக் களிடருந்து எந்தச் சமூக உரிமைகளையும் நாம் கோரவில்லை. நம் வாழ்வின் உயர்வுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்? நம் எதிர்கால வாழ்வுக்கான பாதையை நாம எப்படி வடிவமைத்து கொள்ளப்போகிறோம் என்பதே இந்த மாநாட்டின் முன் உள்ள கேள்வி. இதற்கான தீர்வுகளை அந்தந்த வகுப்புகள் தனித்தனியாகத்தான் கண்டாக வேண்டும். ஏன் தீண்டாத் தகாதவர்களுக்கான ஒரு பொது மாநாட்டைக் கூட்டவில்லை என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
இன்னொரு காரணமும் உண்டு. மதமாற்றப் பிரகடனம் நடந்து 10 மாதங்கள் ஆயிற்று. இந்தக் கால இடைவெளியில் போது மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த போதுமான முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் எண்ணத்தை அறியும் தருணம் வந்துவிட்டதாகவே நான் உணர்கிறேன்.
என் கருத்துப்படி இப்படி ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனியான கூட்டங்கள் கூட்டுவது தான் பொதுமக்கள் கருத்தை அறியும் எளிமையான வழி. மத மாற்றத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டுமென்றால் பொதுமக்கள் கருத்தை அறிய வேண்டியது மிக அவசியம்.
இப்படி தனித்தனியே வகுப்பு வாரியாக மாநாடு நடத்திப் பொதுமக்கள் கருத்தை அறிவது ஒரு பொது மாநாட்டின் மூலம் அறிவதை விட லகுவாக இருக்கும். அப்படி அறியப்படும் கருத்தும் பிரதிநிதித்துவம் வாய்ந்ததாக இருக்கும்; நம்பிக்கைக் குரியதாகவும் இருக்குமம். மாறாகப் பொது மாநாடு அப்படிப்பட்டத் தெளிவான கருத்துகளைப் பெறவழிவகுக்கும் என்று சொல்ல முடியாது. இதுவே மகர்களுக்கான தனி மாநாடு கூட்டக் காரணம்.
பிற வகுப்புகளை இதில் சேர்க்காததால் அவர்களுக்கு எதுவும் இழப்பில்லை. அவர்களுக்கு மதம் மாறவிருப்பம் இல்லையே; எனவே இந்த மாநாட்டில் தங்களையும் சேர்க்கவில்லை என்று அவர்கள் வருந்த நியாயமில்லை. அவர்கள் மதத்தை விட்டு நீங்க முடிவு செய்திருந்தால், இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாமல் போன காரணத்தால் அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள போவதில்லை.
மகர்கள் தங்கள் மாநாடுகளைக் கூட்டவும், எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளவும் எந்தக் தடையும் இல்லை. அப்படி கூட்டுங்கள் என்றுதான் நான் சொல்லுவேன். என் திறமைக்கேற்ற அளவில் என்னாலான உதவிகளும் செய்வேன். இந்த அளவு அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன். இனி மையப் பொருள் பற்றி விவாதிக்கலாம்.
ஒரு சாதாரண மனிதனுக்கு இந்த மதமாற்றம் என்னும் விஷயம் மிகமிக முக்கியமானது. ஆனால் அவர்களைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம். இந்த விஷயத்தில் அவர்களைத் திருப்தி செய்வது அத்தனை எளிதல்ல; ஆகவே, உங்கள் எல்லோருக்கும் திருப்தி ஏற்படாவிட்டால் மதமாற்றம் என்பது நடைமுறைக்குக் கொண்டு வருவது மிகமிகக் கடினமானது. எனவே, என்னால் இயன்றவரை எளிமையாக இந்தப் பொருள் பற்றி உங்களுக்கு விளக்குகிறேன்.”
5 Replies to “புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 04”
தாழ்த்தப்பட்டோர் மற்றும் தீண்டத்தகாதோர் எனப்பட்டவர்கள், வாழ்க்கை வளத்தில் உயர்ந்திருந்து, சமயப் பின்பற்றுதலில் குறைபாடுடன் இருந்ததனால், அவ்வாறழைக்கப்பட்டார்களா அல்லது சமயப் பின்பற்றுதலில் உயர்ந்திருந்து வாழ்க்கைவளத்தில் குறைபாடுடன் இருந்ததனால் அவ்வாறழைக்கப்பட்டார்களா?
பிற மதத்திற்கு மாறி, ஆன்மீகத்தில் உன்னத நிலை அடைபதற்காக மத மாற்றமா அல்லது வாழ்க்கை வளப்பெருக்கிற்கா? ஆன்மீக வளப்பெருக்கிற்கு என்றால், இந்து மதத்திலேயும், வாழ்க்கை வளப்பெருக்கிற்கு என்றால், பிற மத்தத்திற்க்கு
என்பதும் சரியானதாகும். ஏனெனில் வாழ்க்கை வளம் என்பது அனைவருக்கும் பொருந்துவதோன்றும் ஆன்மிக உன்னதநிலை மற்ற மதங்களில் இல்லாத ஒன்றும் ஆகும். ஏனைய மதங்கள் இயேசு, முகம்மது, புத்தர், மகாவீரர் போன்ற தனி மனிதர்களை சார்ந்ததொன்றாகும். இம்மனிதர்கள் இல்லாத நிலையில், அவர்களின் கோட்பாடுகளும் போதனைகளும் இல்லாத ஒன்றாகவோ, திரிந்த ஒன்றாகவோ இருக்கின்றது.
அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரரான ம. வெங்கடேசன் அவர்களிடம் ஒரு கேள்வி.
மதிப்பிற்குரிய எம். ஸி. ராஜா அவர்கள் இந்து மதத்துக்கு உள்ளே இருந்துகொண்டுதான் தலித்துகள் தங்கள் உரிமைக்காகப் போராட வேண்டும் என்கிறார்.
மனுவாதிகளின் கையில் இருக்கும் இந்து மதத்தில் இருந்து விலகி, மற்றொரு தர்ம மதமான பௌத்தத்திற்கு மாறிப் போராடுவோம் என்று அம்பேத்கர் சொல்கிறார்.
இருவரும் சொல்லி ஏறத்தாழ 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 70 ஆண்டுகளின் முடிவில் யார் சொன்னது சரியாகிப் போனது என்பதை அறிய ஆவல்.
இந்து மதத்தில் இருக்கும் தலித்துகளின் நிலை, அம்பேத்கரோடு பௌத்தத்திற்கு மாறிய தலித்துகளின் நிலை – இவ்விருவரில் யார் அதிக உரிமை பெற்று பொருளாதார வளம் பெற்று இருக்கிறார்கள் ?
.
“The outcaste (untouchable) is a by-product of the caste system”
“There will be outcastes, as long as there are caste”
“Nothing can emancipate the outcastes, except the destruction of the cast system”
மேலே சொன்னவை அம்பேத்கர் அவர்களின் கூற்று. ஆனால் இன்று நமது அரசியல் தலைவர்கள் ஜாதி ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பு செய்வதாக மேடை தோறும் சொல்லிக்கொண்டு கிழ்தரமாக ஜாதி கணக்கெடுப்பு கட்டாயம் சென்சசில் வேண்டும் என்று போராடி வெற்றியும் கண்டிருக்கிறார்கள். இது மிகவும் முட்டாள்தனமான முன்உதாரணம். அதனால் ஜாதிபிளவுகள் அதிகரிக்குமே யன்றி மறையாது. எனவே அம்பேத்கரின் கூற்றை இனி இப்படி மாற்றி கூறவேண்டியதுதான். ”அரசியல்வியாதிகள் இருக்கும் வரை ஜாதியும் இருக்கும் தீண்டாமையும் இருக்கும்”
இதற்கு மாறாக ஏற்கனவே அமூலில் இருக்கும் இடஒதுக்கீடு அடிபடையிலான பிரிவின்படி ஜாதி என்னவென்று கேட்டு ஊர்ஜிதபடுத்தி அவர்கள் ஜாதியை கணக்கில் எழுதாமல் அவர் எந்தபிரிவில் உள்ளார் என்று கணக்கெடுக்கலாம். ( Like FC, OBC, MBC, SC, ST & others)
சாதிகள் அற்ற இந்து மதம் என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது, தலித்துகள் (தாழ்த்தப்பட்டவர்கள் என்பது தவறான பதம்) பூர்விக பவுத்தர்கள் என்பதுமே அம்பேத்கார் புத்த மதத்தை தேர்ந்தெடுத்தது, மேலும் அவர் எடுத்த எடுப்பிலேயே புத்தத்தை தேர்ந்தேடுத்துவிடவில்லை. இந்து மதத்தின் சமநிலையற்ற கொள்கைகளை முடிந்தவரை எதிர்த்தும் அது தன்னை மாற்றிக்கொள்ள போவதில்லை என்று முடிவு செய்தபிரகேதான், புத்த மதத்தை தேர்ந்தெடுத்தார், ஹிந்துக்களின் மதவெறியால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பார்த்தால் மத்த எந்த மதத்தினரையும் விட பவுத்தர்களே ஆவர். மேலும் தலித்துகளின் ஒட்டுமொத்த இழிநிலைக்கும் காரணம் இந்து மதமே எனவே அண்ணலின் புத்தமத தேர்வு மிகசரியான ஒன்றே.
//ஹிந்துக்களின் மதவெறியால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பார்த்தால் மத்த எந்த மதத்தினரையும் விட பவுத்தர்களே ஆவர்//
கம்போடியா, வியாட்நாம், பர்மா, ஸ்ரீலங்கா, போன்ற நாடுகளிலெல்லாம் புத்த மதம் என்று நினைக்கிறேன். இரத்த ஆறு ஓடியது இந்த நாடுகளில். ஹிந்து மதம்தான் அதற்கும் காரணம் என்று சொல்லிவிடுங்களேன். யார் என்ன செய்துவிடப்போகிறோம்.

ரங்கன்