இதுவரை: இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம். தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியம், மதமாற்றம் குறித்த ஐயப்பாடுகளுக்கான விளக்கங்களை பாகம் 7, 8-ல் பார்த்தோம். பிற தலைவர்களுக்கும் மக்களுக்கும் மதமாற்றம் குறித்து அளித்த விளக்கங்களைத் தொடர்ந்து பார்க்கலாம்…..
முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8
(தொடர்ச்சி…)
“இந்த மாநாட்டில் உங்களுக்கு என்ன செய்தி தருவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போது எனது மகா பரிநிர்வாணத்திற்கு முன்னதாக நமது பிக்குகள் சங்கத்தில் மகான் புத்தர் கொடுத்த செய்தி நினைவுக்கு வந்தது. மகா பரிநிர்வாண சுத்தத்தில், இந்தச் செய்தி மேற்கோள் காட்டப்படுகிறது–
அப்போதுதான் நோய்வாய்ப்பட்டு மீண்டிருந்த பகவான் புத்தர் மரத்தின் அடியிலுள்ள தமது இருக்கையில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். அவரது மதிப்பிற்குரிய சீடர் ஆனந்தர், புத்தரிடம் சென்றார். அவரை வணங்கிவிட்டு அவரிடம் சொன்னார், “பிரபுவே நோய்வாய்ப்பட்ட போதும் ஆரோக்கியமாக இருந்தபோதும் தங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது நீங்கள் அனுபவித்த நோய் என்னை மிகவும் பாதித்துவிட்டது. உலோகம் போல் என் உடல் கனக்கிறது. உள்ளத்தில் அமைதி இல்லை. தம்மத்தில் என் மனத்தை நிலைநிறுத்த முடியவில்லை. ஆனால் சங்கத்திற்கு சேதி சொல்லாமல் தாங்கள் பரிநிப்பனம் அடையமாட்டீர்கள் என்பதால் ஒருவித ஆறுதலோ மனநிறைவோ ஏற்படுகின்றது.”
அதற்குப் பகவான் இப்படிப் பதிலளித்தார்: “ஆனந்தா, சங்கம் என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது. ஒளிவு மறைவு இல்லாமல் திறந்த மனத்துடன் நான் தம்மத்தில் பிரசாரம் செய்துவிட்டேன்; சில ஆசிரியர்களைப் போல் தத்தகதர் எதையும் ஒளிக்கவில்லை; மறைக்கவில்லை. இனி பிக்கு சங்கத்திற்குச் சொல்வதற்கு தத்தகதரிடம் என்ன இருக்கிறது. எனவே சூரியன் தனக்குத்தானே ஒளி தந்து கொள்வது போல் நீ உனக்குள்ளே சுடர் விடுவாயாக! பூமியைப் போல் பிறரிடம் இருந்து வரும் ஒளியை நீ சார்ந்திருக்கக்கூடாது. உண்மையாக இரு. உண்மையில் மட்டுமே நீ புகலிடம் தேட வேண்டும். எவரிடமும் சரணாகதி அடையாதே.”
புத்தரின் சொற்களில்தான் நானும் அடைக்கலம் அடைகிறேன். உங்களுக்கு நீங்களே வழிகாட்டியாக இருங்கள். உங்களது தர்க்கத்தில்தான் நீங்கள் புகலிடம் தேட வேண்டும். பிறரது சொற்களுக்குச் செவிசாய்க்காதீர்கள். பிறருக்கு உடன்பட்டு விடாதீர்கள். உண்மையாய் இருங்கள். உண்மையில் மட்டுமே புகலிடம் தேடுங்கள். எதற்கும் அடிமைப்பட்டு விடாதீர்கள். பகவான் புத்தரின் இந்தச் செய்தியை நீங்கள் இந்தக் கணத்தில் நினைவில் நிறுத்தினால் போதும். உங்கள் முடிவு தவறாக இருக்காது என்பது நிச்சயம்” என்றார்.
இந்த நீண்ட சொற்பொழிவில் எல்லா விமர்சனங்களுக்கும் அம்பேத்கர் பதிலளித்துள்ளார் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். இந்த தொடர்கட்டுரைகளுக்கு வந்த மறுமொழிகள் எழுதியவர்களுக்கும் தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் இந்த சொற்பொழிவில் அமைந்துள்ளது என்பதையும் படிக்கும்போது தெரிந்துகொள்ளலாம்.
அம்பேத்கர் முதலில் இந்துமதத்தைச் சீர்திருத்திவிடலாம் என்றுதான் கருதினார். அது முடியாத காரியம் என்பதை உயர்சாதி இந்துக்கள் அவருக்குத் தெளிவுபடுத்தினார்கள். அதனால் அம்பேத்கர் இந்துமதச் சீர்திருத்தம் என்பதை விட்டுவிட்டு மதமாற்ற வேலையில் முழுமூச்சாக இறங்கினார்.
இதற்குப் பிறகு அம்பேத்கரின் மதமாற்றம் குறித்து எம்.சி.ராஜா, டாக்டர் மூஞ்சே ஆகியோருக்கிடையே நிகழ்ந்த கடிதப் போக்குவரத்து குறித்தும் எம்.சி.ராஜாவுக்கு பதிலளிக்கும் முகமாக அம்பேத்கர் ஓர் அறிக்கை வெளியிட்டார்.
1936, ஆகஸ்ட் 15ம் தேதி ‘ஜனதா’ எனும் மராத்தி இதழில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், “தீண்டப்படாத மக்கள் சீக்கிய சமயத்தைத் தழுவவிருப்பது தொடர்பாய் ராவ்பகதூர் எம்.சி.ராஜா, டாக்டர் மூஞ்சே ஆகியோருக்கிடையே நிகழ்ந்த கடிதப் போக்குவரத்து அண்மையில் செய்தித் தாள்களில் வெளியானது. அதை நான் படித்துப் பார்த்தேன்.
… திரு.ராஜா இந்து சமயத்தைத் துறக்கவில்லையென்றால், அவரை யாரும் வற்புறுத்தப் போவதில்லை. எனவே சமயமாற்றம் குறித்துக் குறைகூற அவருக்கு உரிமை ஏதுமில்லை. ‘நான் இந்துவாக வாழ்ந்து இந்துவாகவே சாவேன்’ என்று திரு.ராஜா கூறுகிறார். அதற்கு அவருக்கு முழு உரிமையுண்டு. ஆனால் அவருக்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவர் செய்திதாள்களில் அறிக்கை விடுவதில் தமது திறமையைப் புலப்படுத்தலாம். இந்து சமயத்தின்பால் அவருக்குள்ள ஆழ்ந்த பற்றையும் வெளிப்படுத்தலாம். ஆனால் அவராகப் பிறிதொரு சமயத்துக்கு மாறாத வரையில் அவர் தொடர்ந்து ‘பறையராக’ வாழ்ந்து ‘பறையராகவே’ சாவார் என்பதில் ஐயமில்லை.
அவர் இந்து சமயக் கட்டுக்குள் தொடர்ந்து இருக்கும்வரை, அவரது பிறந்த சாதி காரணமாக அவர்மீது சுமத்தப்பட்டுள்ள தீண்டாமை எனும் கறையில் ஒரு சிறு துளியும் அகற்றப்படமாட்டாது. ஆன்மிகக் காரணங்களுக்காகத்தான் சமயமாற்றம் நிகழ வேண்டுமென்று கூறுவது பொருள் அற்ற வெட்டிப் பேச்சாகும். ஆன்மிகக் காரணங்களுக்காகத்தான் அவர் இந்து சமயத்திலேயே தொடர்ந்து இருக்க விரும்புகிறாரா என்று திரு.ராஜாவைக் கேட்க விரும்புகிறேன்.
ஆன்மிக மனநிறைவு என்பது தவிர வேறு எதிலும் அவருக்கு நாட்டமில்லையென்றால், சட்டமன்றங்களில் இட ஒதுக்கீடு பெறுவதால் கிடைக்கும் பொருளியல், அரசியல் நலன்கள் குறித்து அவர் ஏன் அக்கறை காட்ட வேண்டும்? இந்துவாக வாழ்ந்து இந்துவாக இறப்பதில் அவர் அக்கறை கொண்டிருக்கிறார் எனில் ஒதுக்கீட்டு இடங்களில் ஏன் அவர் நாட்டம் செலுத்த வேண்டும்?…” — இவ்வாறு அம்பேத்கர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அதே அறிக்கையில் காந்திக்கும் பதில் சொல்லியிருந்தார்.
“எனது நிலைப்பாட்டைத் தம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று திரு.காந்தி கூறுகிறார். நானோ அவரது வாக்கையும் செயலையும் புரிந்துகொள்ளுதல் கடினமாயிருக்கக் காண்கிறேன். “தீண்டப்படாத மக்களின் மேம்பாடு என்பது தனித்ததொரு விவகாரம்” என்று அவர் கூறுகிறார். காந்தியடிகள் பயன்படுத்தும் இந்த மொழி, ஒரு துறவி மற்றொரு துறவியிடம் கூறப்படுவதாயிருந்தால் ஒருவேளை அவர்களால் இதனைப் புரிந்து கொண்டிருக்கக் கூடுமோ என்னவோ; ஆனால் அன்றாட நடைமுறைச் சமுதாயக் கோட்பாடுகளைப் பின்பற்றும் என்னைப் போன்ற எளிய மக்களுக்கு, இத்தகைய மகாத்மாத்தனமான மொழி பொருளற்றதாய்த் தோன்றுகிறது.
சமயம் என்பது பண்ட மாற்றத்திற்குரியதோர் பொருள் அல்ல என்று திரு.காந்தி கூறுகிறார். இத்துணைக் காலம்கடந்த கட்டத்தில் இத்தகையதொரு போக்கில் திரு.காந்தி பேசுதல், நாணயக் குறைவானதொரு செயலே என்று சுட்ட விரும்புகிறேன். புனா ஒப்பந்தத்தின்போது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல் என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவராகவே திரு.காந்தி பேசினார். தமது அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுகின்ற மக்கள், ஆன்மிக அமைதி பெறுதல் எனும் பசப்பு வார்த்தைகளில் ஏமாந்து, தமது அன்றாட அடிப்படைத் தேவைகளான உணவு, நீர் போன்றவற்றைப் பறிகொடுக்கும் காலம் மலையேறிவிட்டது.
தீண்டப்படாத மக்கள் தங்களது சமயத்தைப் பண்டமாற்று செய்வதாய்த் திரு.காந்தி கூறுகிறார். ஆனால் ‘சமயமாற்றம் இயக்கம்’ என்பது எத்தகைய தன்னல நோக்குடனோ, சில தனிப்பட்டோர் நலன்களுக்காகவோ தோற்றுவிக்கப்பட்டதன்று என்பதை அவர் தமது மனத்தில் கொள்ள வேண்டும்.
திரு.காந்தியின் கருத்துப்படி, இந்துக்கள்தான் பிராயச்சித்தம் செய்ய வேண்டுமாம். தீண்டாமையை ஒழிக்க இந்துக்கள் தாமாகவே முன்வந்து பாடுபட வேண்டுமாம். தீண்டாமையை அகற்றுவதற்காகவோ, தமது மேம்பாட்டுக்காகவோ தீண்டப்படாத மக்கள் எப்பணியையும் மேற்கொள்ளாமல் கையைக் கட்டிக்கொண்டு அமர்ந்து, இறைவா, இந்துக்களுக்கு அறிவையும் துணிவையும் ஒளியையும் தந்து அவர்களது பாவச்செயல்களை மன்னீப்பீராக. அவர்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பு வழங்கித் தமது சமுதாயத்தைச் சீர்திருத்தம் செய்வதற்கு வேண்டிய வலிமையையும் அறிவையையும் அவர்களுக்குக் கொடுப்பீராக என்று தொழுது கொண்டிருந்தால் போதும். தீண்டப்படாத மக்களுக்குக் காந்தியடிகளின் தூய அறிவுரை இதுதான்.
இத்தகைய பசப்பு உரைகளால் எவருக்கும் நன்மை விளைந்திடாது. எந்தவொரு சிக்கலுக்குமான தீர்வும் கிடைத்துவிடாது. அறிவுள்ள எவரும் இத்தகையதொரு ஆலோசனைக்குச் செவிசாய்க்க மாட்டார்கள்.
ஏதாவதொரு பகுதியில் பிளேக் போன்றதொரு கொள்ளைநோய் பரவிக் கொண்டிருப்பதாய்க் கொள்வோம். அவர்களிடையே சென்று, “அருமை உடன்பிறப்புகளே, அமைதியாய் நின்று எனது அறிவுரையைக் கேளுங்கள். இக்கொள்ளை நோய்க்கு நீங்கள் அஞ்ச வேண்டாம். ஒரு காலத்தில் நகராட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் தங்கள் கடமையைச் செய்யத் தவறியமைக்காக வருந்தி மன்னிப்புக் கோருகிறேன். பிளேக் நோயை ஒழிப்பதற்கென்றொரு திட்டத்தைத் தீட்டத்தான் போகிறார்கள். அதுவரையில் நீங்கள் பொறுமை காக்க வேண்டும். அவசரப்பட்டு உங்கள் வீட்டையும் அடுப்பங்கரையையும் துறந்து வெளியேறலாகாது” என்றொரு மூடன் அறிவுரை கூறுவானாகில் எப்படியிருக்கும்? இத்தகையதோர் ஆலோசனையில் எத்தகைய அறிவீனம் காணப்படுகிறதோ அத்தன்மையானதுதானே தீண்டப்படாத மக்களுக்கு காந்தியார் நல்கும் அறிவுரையும்?” என்று காட்டமாக பதில் அளித்தார்.
இவ்வாறு அம்பேத்கர் பலருக்கு பதிலளித்துக் கொண்டிருந்த வேளையில், இயோலா மதமாற்ற அறிவிப்புக்குப் பின்னர் அம்பேத்கருடன் சமரசம் செய்யும் முயற்சிகளும் நடந்தன.
அம்பேத்கரை மதம் மாறுவதிலிருந்து தடுக்க, பம்பாய் இந்துமகா சபாவின் செயற்குழுவின் அவசரக்கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் மதம் மாறவேண்டாம் என்று அவரைக் கேட்டுக் கொண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மோ.வா.கேல்கரின் தலைமையில் ஒரு தூதுக்குழு 24-10-1935 அன்று அம்பேத்கரைச் சந்தித்தது. அம்பேத்கர் தீண்டத்தகாதவர்களுக்கு மதம் மாறுதலைத் தவிர வேறு வழியில்லை. அவர்களை மதம் மாறும்படி நான் அறிவுறுத்தியது அவர்களது நன்மையைக் கருத்தில் கொண்டுதான் என்றும், மதம் மாறுவதால் நாட்டிற்கு எத்தகைய தீங்கும் ஏற்படாது என்று உறுதியளித்து அவர் கூறினார், “எனது கடமை மூன்று இலக்குகளைக் கொண்டுள்ளது. முதலாவது நாடு. இரண்டாவது தீண்டத்தகாதோர் சமூகம். அதற்குப் பிறகுதான் இந்து சமூகம்” என்றும் “மதம் மாறும் தருணம் வரும்போது இந்துமதத் தலைவர்கள் அனைவருடனும் விவாதிப்பேன். நாங்கள் எந்த முடிவெடுத்தாலும் வீரரைப்போல் கௌரவமான முறையில் வெளிப்படையாக நடந்துகொள்வோம்!” என்றும் உறுதியளித்தார்.
மகாராஷ்டிரத்தில் மத சுத்திகரிப்பு இயக்கத்தின் தலைவரான விநாயக் மஹாராஜ் மசூர்கா, மதம் மாறிய ஆயிரக்கணக்கான இந்துக்களை சுத்திகரித்து அவர்களுக்கு மீண்டும் இந்துமதத்தில் தீட்சையளித்து வந்தார். நவம்பர் முதல் வாரம் அவர் தாமாகவே சென்று அம்பேத்கரைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு மூன்றுமணிநேரம் நடைபெற்றது. மசூர்கா சொன்னார், “இந்தியாவில் இந்துவே இல்லாது போனால் பிறகு இந்த நாட்டின் பெயர் இந்துஸ்தான் என்று இருக்க முடியாது”.
அதற்கு அம்பேத்கர், “உங்களைப்போல் எனக்கும் வருத்தமுண்டு. ஆனால் இதற்கான காரணங்களை நீக்குவதோ உங்கள் கையில் உள்ளது. இதற்கென நீங்கள் ஓர் ஐந்தாண்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று பதிலளித்த அம்பேத்கர், திட்டத்திற்கான வழிமுறையையும் சொன்னார். “என் கருத்துப்படி, இந்து மதத்தில் தற்போதுள்ள நான்கு வருண அமைப்பை ஒழித்துவிட்டு ஒரே வருண அமைப்பை நிலைநாட்ட வேண்டும். பிறப்பைக் கொண்டு சாதியை நிச்சயிக்கக்கூடாது என்று அறிவித்து ஒரு தீர்மானம் புனேயில் நடைபெற உள்ள இந்து மகாசபை மகாநாட்டில் நிறைவேற்றுங்கள் பார்ப்போம்” என்றார்.
மசூர்கர் இந்து சமூகத்தின் வருண அமைப்பை ஒழிப்பதை ஆதரிக்கவில்லை. அப்போது அம்பேத்கர் வேறொரு ஆலோசனை சொன்னார். “அப்படியானால் நீங்கள் மிகவும் எளிதான, அருமையான காரியம் ஒன்று செய்யலாம். மிகச்சிறிய விஷயம்தான். செய்துகாட்டுங்கள் பார்க்கலாம். எங்களைச் சேர்ந்த கே.கே.ஸகட் என்பவரை ஓராண்டிற்கு சங்கராச்சாரியாரின் இருக்கையில் அமர்த்துங்கள். புனே நகரின் சித்பவான் என்ற தீவிரப் பிராமண வகுப்பினர் நூறுபேர் அவருக்கு பாதபூஜை செய்யட்டும். இவ்வளவு சிறிய விஷயத்தை உங்களால் செய்துகாட்ட முடியுமானால் சமத்துவத்தை நிலைநாட்ட முடியும் என்று உங்கள் உள்ளத்தில் நம்பிக்கை ஊற்றெடுப்பதன் அடையாளமென அச்செயலை நாங்கள் கருதுவோம். மேலும் மதம் மாறுதல் குறித்த எங்கள் முடிவை ஒத்திவைப்போம்.”
ஸகட் என்பவரின் பெயரை இவ்விஷயத்தில் குறிப்பிட்டது ஏன் என்று அம்பேத்கர் தெளிவுபடுத்துகையில், “அவர் மாட்டே குருஜியின் முதன்மையான சீடர். மேலும் கேசரி கட்சி அவரைத்தான் தீண்டத்தகாதவர்களின் ஒரே தலைவரென அறிவித்துள்ளது.” ஆகவே அம்பேத்கர் அவர் பெயரைக் குறிப்பிட்டார். மசூர்கர் விடைபெற்றுச் சென்றார். பிறகு அந்த விஷயம் என்ன ஆனது என்பது தெரியவில்லை.
1936 மே மாதம் வார்தா வந்திருந்தபோது, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் தலைவர்களான புருசோத்தம கார்படே, சங்கர் ராவ் சோனாவானே, கோமாஜி தெம்பாரே ஆகியோர் டாக்டர் அம்பேத்கரைச் சந்தித்துச் சமயமாற்றம் குறித்துக் கருத்துரையாடினர். அவர்களிடம் ஐயந்திரிபறத் தெளிவான பாங்கில் தெரிவித்த கருத்துக்கள் முக்கியமானவை.
அம்பேத்கர் கூறுகிறார், “நான் இதுவரை எவரிடமும் இஸ்லாத்திற்கோ, கிறித்துவத்திற்கோ ஆதரவு தேடவில்லை. வேறு எவரேனும் தனது சொந்தப் பொறுப்பில் இஸ்லாத்திற்கோ அன்றிப் பிற சமயமொன்றுக்கோ ஆதரவு தேடுவராயின் அவர் ஏமாற்றப்படுவது உறுதி என்பதையும் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். சமயமாற்றம் குறித்து நான் அறிக்கை விடுத்தது மெய்தான். ஆனால் இதுவரை குறிப்பிட்ட எந்தவொரு சமயத்திலும் சேருமாறு நான் எவருக்கும் கூறியதில்லை. அதுவரை நாமனைவரும் சமயமாற்றத்தின் தேவை குறித்துத் தொடர்ந்து பிரசாரம் செய்து வருதல் அவசியம். அதே சமயம் எந்தவொரு குறிப்பிட்ட சமயத்திற்காகவும் பிரசாரம் செய்தலாகாது. நான் எப்போது அறிவிக்கின்றேனோ அப்போதுதான் நாம் ஏழுகோடி மக்களும் ஒட்டுமொத்தமாக சமயமாற்றம் செய்துகொள்ளவேண்டும்.”
அம்பேத்கர் மதம் மாறுவது என்று முடிவெடுத்தாலும் எந்த மதத்தில் மாறுவது என்பதை உடனடியாக முடிவெடுத்து விடவில்லை. அவருடைய இயல்பே தீர ஆராய்வதுதான். எதையும் முழுவதுமாகத் தெரிந்துகொள்வதுதான். வேறுமதங்களுக்கு மாறினால் என்ன விளைவுகள் தீண்டப்படாதோருக்கு ஏற்படும் என்பதை நன்கு அறிந்தவர் அம்பேத்கர்.
1936, ஜனவரி 11,12 தேதிகளில் புனாவில், மராட்டிய மாநில தீண்டப்படாத சமுதாய இளைஞர்களின் மாநாடு நடைபெற்றது. அதில் சென்னை மாநிலத்தின் புகழ்பெற்ற தலைவர் பேரா.என்.சிவராஜ், மாநாட்டிற்குத் தலைமை வகித்தார்.
பேரா.சிவராஜ் தமது தலைமை உரையில், “ஒடுக்கப்பட்ட மக்கள் தீண்டாமையிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி இந்து சமயத்திலிருந்து விலகுதலே; இதற்காக நாம் ஏற்கெனவே நிலவிவரும் வேறு சமயங்கள் ஒன்றில் சேரவேண்டும் என்பதில்லை. புதிய சமயம் ஒன்றைத் தொடங்கலாம். அல்லது ஆரியர்கள் இந்நாட்டிற்கு வந்து சமயத்தையும் இழிவழக்குகள் பலவற்றையும் பரப்புவதற்குப் பன்னெடுங்காலத்திற்கு முன்பாகவே இங்கு திராவிடர்கள் பின்பற்றி வந்த சமயத்தைப் புதுப்பிக்கலாம்” என்று கூறினார்.
மாநாட்டில் அம்பேத்கர் உரையாற்றினார். டாக்டர் அம்பேத்கர் தமது உரையில், சமயமாற்றத்தின் மூலம் தற்போதைய நரகத்திலிருந்து சமத்துவம் என்னும் சொர்க்கத்தை அடைந்துவிட முடியும் என்று தவறான நம்பிக்கை கொள்ள வேண்டாமென்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
வேறு எந்தப் புதிய சமயத்திற்கு மாறினாலும், தமது விடுதலைக்காவும் சம உரிமைக்காகவும் அவர்கள் தொடர்ந்து போராட வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார். அவர் மேலும், “கிறித்தவமோ, இஸ்லாமோ, சீக்கியமோ அன்றிப் பிற எந்த மதத்திற்கோ நாம் மாறினாலும் நமது நலன்களைப் பெற நாம் தொடர்ந்து போராடியே தீரவேண்டும் எனும் உண்மையை நாமனைவரும் நன்கறிவோம். இஸ்லாத்தில் சேருவதன்மூலம் நாமனைவரும் நவாபுகள் ஆகிவிடுவோ மென்றோ கிருத்துவத்தில் சேருவதன் மூலம் நாமனைவரும் போப்பாண்டவராகி விட முடியுமென்றோ கனவு காண்பது அறிவீனம். எங்கு சென்றாலும் நம்மைப் போராட்டமே அங்கும் எதிர்நோக்கியுள்ளது” என்று கூறினார்.
மேலும் இது வெறும் உணவுப் பிரச்சினையன்று என்பதால் இந்து சமயத்திற்குள் இருந்துகொண்டே சமத்துவத்திற்கான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வெற்றி காண்பதற்கான சமரச வழி ஒருபோதும் நிறைவு பெறாது என்றும் கூறினார். நமது போராட்டத்தின் பின்னணியில் தெளிவான உயரிய இலக்கு உள்ளதென்பது இன்று ஐயத்திற்கிடமின்றித் தெளிவாகியுள்ளது. இல்லையெனில் பணம் கொடுத்து நம்மை மாற்றும் முயற்சிகள் தோன்றியிருக்கமாட்டாது. நிஜாம் அவர்கள் ஏழுகோடி ரூபாய் தர முன்வருவதாய் முரண்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இறைவன் செயலன்றி இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறா தென்றும் அவர் மேலும் கூறினார்.
1936 ஏப்ரலில் நடைபெற்ற சீக்கிய சமயத் தொண்டு மாநாட்டில் கூட அம்பேத்கர் பேசும்போது, “இந்து மதத்தைவிட்டு வெளியேறுவது என்று முடிவு செய்துவிட்டபோதிலும் வேறு எந்த மதத்தில் சேருவது என்பதைப் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை” என்று குறிப்பிட்டார்.
1937, ஜனவரி 14-இல் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் நிருபரிடம் அளித்த நேர்காணலில் இந்து சமயத்திலிருந்து விலகும் உத்தேசம் குறித்து ஏதேனும் முடிவெடுத்துள்ளாரா என்று கேட்கப்பட்ட போது, இந்துசமயத்திலிருந்து விலக வேண்டும் எனும் தமது முடிவில் எவ்வித மாற்றமும் இல்லையென்றும், ஆனால் எந்தப் புதிய சமயத்தைத் தழுவுவது என்பது குறித்து இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இவ்வாறு அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தாலும் இஸ்லாமியர்கள் வேண்டுமென்றே சில வதந்திகளைப் பரப்பி வந்தனர்.
இயோலா மாநாட்டிற்குப் பிறகு இலாகூரில் பஞ்சாபி மொழிப் பத்திரிகை ஒன்றில் ஒரு செய்தி வெளியாயிற்று. அம்பேத்கரும் அவருடைய தொண்டர்களும் விரைவில் முகம்மதியர்களாக மதம் மாறப்போகிறார்கள் என்று பீர் ஜமாத் அலி கூறியிருப்பதாக அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அம்பேத்கரிடம் அச்செய்தி பற்றிக்கேட்டபோது, பம்பாயில் பீர் ஜமாத் அலி அவரை வந்து பார்த்தார் என்றும், அச்சந்திப்பின்போது அவர் இஸ்லாம் மதத்தைத் தழுவுவதற்கான வாய்ப்புகள் பற்றிப் பேசியதாகவும், ஆனால் அதுபற்றி உறுதியான முடிவு எதுவும் அப்போது எடுக்கப்படவில்லை என்றும் பதில் சொன்னார்.
1937-இல் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், சிந்து மாகாணத்தில் தீண்டப்படாத இந்துவாயிருந்து இஸ்லாமியராக மாறிய ஷேக் மஸ்ஜித் சிந்தி என்பவரால் பரபரப்பூட்டும் ஒரு செய்தி பரப்பப்பட்டது.
“முஸ்லீமாக மாறிய எனக்கு முஸ்லீம்கள் வாக்களிக்கப் போகிறார்களா? இல்லையா? இஸ்லாமிய மதத்திற்கு மதம்மாறி வந்தவர்களை முஸ்லீம்கள் மதிக்கிறார்களா? இல்லையா? என்பதை அரிசனங்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். சிந்து தேர்தலுக்குப் பிறகுதான் அம்பேத்கர் இஸ்லாமிய மதத்தைத் தழுவுதல் பற்றிய தன்னுடைய முடிவினை அறிவிப்பார்” என்பதே ஷேக் மஸ்ஜித் சிந்தி பரப்பிய செய்தியாகும். தேர்தலில் ஷேக் மஸ்ஜித் சிந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட சர்.ஷா நவாஸ்கான் பூட்டோ என்பவர் ஷேக் மஸ்ஜித் கூறுவது உண்மையா என்பதைத் தெளிவுபடுத்துமாறு அம்பேத்கருக்குத் தந்தி கொடுத்தார். அம்பேத்கர் புட்டோவுக்கு அனுப்பிய பதில் தந்தியில், அத்தகையதொரு வாக்குறுதியை ஷேக் மஸ்ஜித்திற்கோ அல்லது வேறு ஒருவருக்கோ அளிக்கவில்லை என்றும், அக்கூற்று பொய்யானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
1946, நவம்பர் 2-இல் “புதிய இந்திய அரசாங்கத்தில், தாங்கள் தனிப் பிரதிநிதித்துவம் பெறவில்லையெனில், இந்தியாவிலுள்ள ஷெட்யூல்டு வகுப்பினர் தங்களை முஸ்லீம் சமூகத்தோடு இணைத்துக்கொள்ளும் சாத்தியப்பாடு உள்ளது. திருப்திபெற முடியவில்லையெனில், இஸ்லாம் மதத்தைத் தழுவும்படி தமது மக்களுக்கு டாக்டர் அம்பேத்கர் ஆலோசனை கூறியுள்ளார்” என்று டொரன்டோ பல்கலைக்கழக இந்திய மாணவரும் முன்னாள் லாகூர் பத்திரிகையாளருமான திரு. அமீன்டரீன் கூறியதாக டொரன்டோவிலிருந்து வந்த செய்தியைப் பற்றி அம்பேத்கரிடம் கேட்டபோது அவர் அதை மறுத்து, “அந்த மாதிரியான ஆலோசனையை நான் அளிக்கவிலலை, ஆனால் அத்தகைய நிலைமை எழலாம். எனது மக்களில் பலர் இந்த விஷயத்தை ஆழமாகப் பரிசீலித்துக் கொண்டிருக்கின்றனர். காங்கிரசும் காந்தியும் நிலைமையைப் புரிந்து கொண்டு தீண்டத்தகாதவர்களுக்கு இந்துக்களிடமிருந்து அரசியல் சுதந்திரம் அளிக்க ஒப்புக்கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
….. என் சொந்தக்கருத்துப்படி, திரு.காந்தியும் காங்கிரசும் அவர்களுக்கு அரசியல் சுதந்திரம் அளித்தால், மேலும் அதிகமான ஐக்கியம் இருக்கும் என நான் எண்ணுகிறேன். ஆனால், தீண்டத்தகாதவர்களை காங்கிரஸ் ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வரவும் அவர்களை இந்துக்களின் அரசியல் அடிமைகளாக ஆக்கவும் திரு.காந்தியும் காங்கிரசும் முயன்றால், தீண்டத்தகாதவர்கள் கிளர்ச்சி செய்து, வேறு ஒரு சமூகத்துடன் சேர்ந்து தங்களது விமோசனத்தைத் தேட முயல்வார்கள்” என்று கூறினார்.
மதமாற்றத்தின் நோக்கம் தீண்டப்படாதோரின் விடுதலை என்பதே அம்பேத்கரின் குறிக்கோளாய் இருந்தது. அதற்காக அவர் எந்த எல்லையையும் மீற இருந்தார். ஆம் பிரிட்டிஷ்காரர்களுக்கே எச்சரிக்கை விடுத்தார்.
(தொடரும்…)


