வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன் தொடரின் முந்தைய பகுதிகள்.
ஒரு சமயம் ஆஸ்திரேலியாவிலிருந்து ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி ஒன்றின் முதல்வர் தபோவனத்திற்கு வந்திருந்தார். வித்யாவனத்தைச் சுற்றிக் காண்பித்துப் பள்ளியின் நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகளை விளக்கிக் கூறும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
மோன நிலையில் அமர்ந்திருக்கும் சுவாமிஜி சிலையின் அழகையும், அல்லிகள் பூத்த தடாக அழகையும், வானுயர்ந்த மரங்களின் தோற்றத்தையும், பறவைகளின் இனிய இசையையும், மெல்லிய பூங்காற்றையும் கண்டும், கேட்டும், உணர்ந்தும் மெய்மறந்து சில நொடிகள் நின்ற ஆஸ்திரேலிய நாட்டு கல்லூரி முதல்வர், பள்ளிக்குச் செல்வோமா? என்று கேட்டார். நான் அமைதியாக இதுதான் பள்ளிக்கூடம் என்றேன். பிறகு பள்ளியைக் கூர்ந்து கவனித்தார்.
அற்புதம்! (Wonderful), ஆஹா! என்று சொன்னவர், சாந்தி நிகேதனைப் பார்த்து இத்திறந்த வெளியில் வகுப்புகள் நடைபெறுகின்றனவா? என வினவினார். கழிப்பறைகள் உள்ள இடத்துக்கு நான் அவரை அழைத்துச் சென்று காட்டினேன். பளிங்குக் கல் அறைகளில் வடிநீர்க்குழாய் வசதியுடன் உள்ள பளபளப்பான கழிவறைகளையே கண்ட அவருக்கு வெறும் சிமெண்ட்டினால் ஆன மிகத்துப்புரவான கழிப்பறைகள் வியப்பளித்தன. கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் பணி மாணவர்களுடையதே என்றும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
சிறிதுநேரம் பொறுத்த அவர் Have you borrowed this idea from Gandhi? என வினவினார். மற்றும் பள்ளியிலுள்ள எல்லாச் சிறப்பு அம்சங்களையும் பார்த்த பின் மதியப் பிரார்த்தனையில் கலந்து கொண்டார். மதிய உணவுக்குப் பின் விடை பெற்றுச் சென்றார்.
மதியம் 3 மணிக்குப்பின் நான் பரமபுருடர் அறைக்குச் சென்றேன். கல்லூரி முதல்வர் கேட்ட
வினாக்களைப் பரம புருடரிம் கூறினேன். குலபதியாம் தவக்கொழுந்து சிறிதுநேர அமைதிக்குப்
பின் கூறியதாவது :-
”இதனை நாம் எவரிடமிருந்தும் கடன் பெறவில்லை, பெறவேண்டிய அவசியமும்
இல்லை.இப்படித்தான் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்துக் கட்டப்பட்ட குருகுலம்
இது. தவிர உழைப்பின் மாண்பினை(Dignity of Labour) இந்திய மக்களுக்க உணர்த்திய
வகையில் இப்பெருமை காந்திடிகளுக்கு உண்டு. காந்தியடிகள் இதை
நடைமுறைப்படுத்துவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே பரமஹம்ஸர் இச்செயலைச்
செய்து காட்டியிருக்கிறார். குலத்தால் அந்தணராகிய ஸ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்ஸர்
உண்மையான தொண்டு என்ன என்பதைத் தம் வாழ்வின் மூலமாக உணர்த்தியருளினார்”.
என்று என்னிடம் கூறினார். குருகுல அமைப்பு, மற்றும் நடைமுறைகளின் ஆன்மீகப் பின்னணி
எவ்வளவு வலுவானது என்பதை என்னால் உணர முடிந்தது. கர்மத்தை வழிபாடாகச் செய்யும்
போது உயர்வு தாழ்வு இல்லை. சிறுமை மனத்தில் இருக்கிறதேயன்றிக் கர்மத்தில் இல்லை
எனத் தெரிந்து கொண்டேன்.
தேர்வு ஒன்றே நோக்கமல்ல!
சுவாமிகள் சித்தியடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஆசிரியர்கள், அன்பர்கள் இருந்த கூட்டத்திலே, ஆசிரியர்களைப் பார்த்து நீங்கள் தேர்வு ஒன்றை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு மாணவ மாணவியரைச் சிரமப்படுத்தக்கூடாது. அது மட்டும் நமது நோக்கமல்ல. அதை மற்ற பள்ளிகளும் செய்கின்றன. நமது தபோவனப் பள்ளிகளிலே மாணவ மாணவியர்கட்கு தெய்வபக்தி, தேச பக்தி, ஒழுக்கம், கட்டுப்பாடு, சிந்திக்கும் திறன் ஆகிய நற்பண்புகளைக் கொண்ட வாழ்க்கைப் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவர்கள் எளிமையாகவும், தூய்மையாகவும் இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆடம்பரமான ஆடை அணிதல், அளவுக்கு அதிகமான பொருட்களை வைத்திருத்தல், வாசனை திரவியங்களை உபயோகப்படுத்துதல், கெட்ட காட்சிகளை பார்த்தல், கெட்ட புத்தகங்களைப் படித்தல் ஆகியவைகளிலிருந்து நம்முடைய மாணவ மாணவியரை அறவே விலக்கி வைக்க வேண்டும். அவர்களுடைய எல்லாச் செயல்களையும் தாங்களே செய்யும்படி வளர்க்க வேண்டும். அவர்களுடைய ஒவ்வொரு செயலிலும் தெய்வ நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் வளரவேண்டும். அவர்கள் தங்கள் அன்பின் மூலம் சேவை மனப்பான்மை உடையவர்களாகவும், தங்களுடைய அறிவின் மூலம் கேட்டிலிருந்து விடுபட்டு நற்பண்பு உடையர்களாக இருக்கவும், தங்களுடைய ஆற்றல் மூலம் தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பதற்கும் அவர்களுக்குப் பயிற்சி தரப்படவேண்டும் என்றார்.
காலம் பொன் போன்றது
காரைக்குடிக் கம்பன் கழகத்தில் கம்பன் விழா தலைமையேற்க வந்தவர் நம்முடைய சுவாமி. துவக்கவுரை நிகழ்த்த வரவேண்டியவர் அன்றைய முதலமைச்சர் திரு. இராஜாஜி. விழாவை ஏற்பாடு செய்தவர் கம்பன் அடிப்பொடி திரு. சா. கணேசன். இவரும் சுவாமிஜியைப் போன்றே காலம் தவறாமையை கடைப்பிடிப்பவர் காலை 9.30 க்கு சுவாமிஜியின் தலைமை உரை. அதைத் தொடர்ந்து முதலமைச்சரின் துவக்கவுரை. முதலமைச்சர் வரவேண்டிய இரயில் 4 மணி நேரம் காலதாமதம். என்ன செய்வது? என சா.கணேசன் திகைத்துக்கொண்டிருந்த அந்த வேளையில் சரியாக 9.30க்கு சுவாமிஜி மைக்கைப் பிடித்தார். குறிப்பிட்ட படி விழா இப்போது தலைமையுரையுடன் துவங்குகிறது. தலைமையுரை முடிந்தவுடன் முதலமைச்சர் நிகழ்த்தும் துவக்க உரை இன்று மாலை நிகழும் என்று கூறி தமது தலைமையுரையை 10.00 மணிக்கு முடித்துவிட்டார். மாலையில் இரயில் வந்தவுடன் துவக்கவுரையும் இனிதே நிகழ்ந்தது. விழா வெற்றியுடன் நிறைவடைந்தற்கு சுவாமிஜிதான் காரணம்.திரு. சா. கணேசன் சுவாமிஜியின் பாதம் பற்றிப் பணிந்து நன்றி கூறினார். ஆகவே குறிப்பிட்ட நேரத்தில் காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற படிப்பினையை சிறுவயதிலேயே நான் கற்றுக்கொண்டேன்.
***
திருமுருக கிருபானந்தவாரியார் ஒரு சமயம் திருப்பராய்த்துறை பள்ளியில் மாணவர்களுக்கு உரையாற்றும்போது எல்லாம் வல்ல வயலூர் வள்ளல் பெருமான் அருளினாலே இன்று சுவாமிகளை தரிசிக்கும் பாக்கியமும், உங்களிடம் பேசும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. கயிலாயம் கண்ட திருவடிகள் சுவாமிகளின் திருவடிகள். அத்திருவடிகளுக்கு என் வணக்கங்களை செலுத்துகிறேன். சதா சுவாமிகளுடனே இருக்கும் பாக்கியம் பெற்ற குழந்தைகளே! எத்தனை பிறப்பில் நீங்களும் உங்கள் பெற்றோரும் செய்த நற்றவப்பயனே நீங்கள் இங்கு ஓர் ஆச்சார்ய புருடரிடம் வளர்கிறீர்கள் உங்கள் அடக்கமும் கடவுள் பக்தியும் குரு பக்தியும் உங்களை முன்னேற்றும். கற்பூரம் தீப்பட்டவுடனேயே பற்றிக்கொள்வது போல ஆசிரியர் சொன்னவுடனேயே உணர்ந்து கொள்ளும் கற்பூர புத்தி கொண்ட மாணவர்களாக சுவாமிகள் உங்களை தயார் செய்து உள்ளார்கள் என்று கூறியது நினைவுக்குவருகிறது.
***
முதலமைச்சர் இராஜாஜி பள்ளிக்கு வந்தபோது சுவாமிக்கு எல்லா வகையிலும் எல்லாருமே
பொருத்தமாக அமைந்து விடுகிறார்கள். ஒரு நல்ல சூழ்நிலையில் வளர உங்களை இங்கு அனுப்பி வைத்துள்ள உங்கள் மாதா, பிதா பாக்கியசாலிகள். வேதகாலத்தைப்பற்றியும் குருகுலக்கல்வி பற்றியும் படித்திருக்கிறேன், எழுதியிருக்கிறேன், பேசியிருக்கிறேன். ஆனால் பிரத்யட்ச தரிசனம் எனக்கு இங்குதான் கிட்டியது. உங்களை அணுஅணுவாகச் செதுக்கிச் சிறந்த உயிர்ச் சிற்பங்களாக உருவாக்கிக்கொண்டிருக்கும் சுவாமி சித்பவானந்தாவின் அறிவுரைப்படி நடந்து மேன்மை அடைவீர்களாக! ஆசீர்வாதம் ! என்று உரையாற்றினார்.
***
ஒருநாள் திருவேடகம் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவரை ஒரு விழாவுக்கு அழைத்திருந்தார். 2.30 மணிக்கு விழா ஆரம்பிக்க வேண்டும். அவர் வரவில்லை. ஆனால் நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. காரணம் மேடையில் சுவாமி அமர்ந்திருந்தார். ஒருமணிநேரம் கழித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தார். விழா முடிந்ததும் மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டார். சில ஆண்டுகள் கழித்து கல்லூரியில் ஒரு பிரச்சனைக்காக மாவட்ட ஆட்சியரை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்று அவர் வருவதற்குள் விழா துவங்கி விட்டோமே அதை மனதில் வைத்திருப்பாரே என்ற பயத்துடன் கல்லூரி முதல்வர் அவரை அணுகினார்.
மாவட்ட ஆட்சியர் அன்பாக வரவேற்றார். உங்களுடைய கல்லூரியையும், நேரம் தவறாத சுவாமிஜியையும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நேரம் தவறாமையை இன்னும் கடைப்பிடிக்கிறார்களா என்று கேட்டார். கல்லூரி முதல்வர் ஆம் என்றார். மாவட்ட ஆட்சியர் அவருக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்து அனுப்பினார். சுவாமிஜிக்கு 80 வயது இருக்கும்போது கல்லூரி பிரார்த்தனைக்குச் சென்றார். 3வது மாடியில் பிரார்த்தனை மண்டபம் இருந்தது. அவரால் நடக்க முடியவில்லை.கைப்பிடிச்சுவரையும் தொடமாட்டார். பிரார்த்தனை ஆரம்பிக்கும் நேரமானது. கல்லூரி முதல்வர் பிரார்த்தனையை 5 நிமிடம் கழித்து ஆரம்பிக்கச் சொன்னார். இது சுவாமிஜிக்குத் தெரிந்துவிட்டது. இதுதான் கல்லூரி நடத்தும் லட்சணமா? ஒரு தனி மனிதனுக்காகக் கட்டுப்பாடுகளையும், ஒழுங்குகளையும் மாற்றலாமா? என்று கடிந்து கொண்டார்.
***
ஒரு மாணவன் கல்லூரியில் சுவாமிஜியிடம் ஒரு கேள்வி கேட்டான். சுவாமி! காளியினுடைய படம் ஒன்று பார்த்தேன். கையில் இரத்தம் சொட்டும் கத்தி. நாக்கு தொங்கி கொண்டிருக்கிறது. இடுப்பிலே ஆடை இல்லை. மண்டை ஓட்டு மாலை. கைகளைக் கோர்த்து இடுப்பில் கட்டியிருக்கிறார். இது என்ன சாமி? அம்மணமாகக் காளியைக் காட்டுகிறார்களே? என்று கேட்டான். சுவாமிஜி உடனே ஒரு பெரிய யானை இருக்கிறது. அந்த யானைக்குக கெளபீனம் கட்ட முடியுமா? காளி விஸ்வமாதா, விஸ்வரூபி. அவளுக்கும் அப்படித்தான் என்று பதிலளித்தார்.
***
நான் திருச்சியில் படித்துக்கொண்டிருந்தபோது திருச்சி இரயில் நிலையிலிருந்து திருப்பராய்த்துறைக்கு அருகில் உள்ள எலமனூர் இரயில் நிலையம் வரை ஸ்பெஷல் ரயில் விடுவார்கள். ஸ்ரீராமகிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு நடக்கும் நாடகங்களைக் காண திருச்சி மக்கள் அங்கு செல்வார்கள். இந்திய வரலாற்றில் ஒரு சந்நியாசி எழுதிய நாடகம் நடிக்கப்படுவதை மக்கள் பார்ப்பதற்காக ஸ்பெஷல் இரயில் விட்டிருக்கிறார்கள் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். நாடகத்தை எடுத்துக்கொண்டால் சுவாமி நாடகம் எழுத என்றே பிறந்தவர்கள் போலத் தோன்றும்.கட்டடக்கலையை எடுத்துக் கொண்டால் தலைசிறந்த இஞ்சினியர் போன்று தோன்றுவார்.சமையல் செய்தால் அவ்வளவு சுவையாக இருக்கும். ஆத்மாவை அறிந்தவர்கள் எல்லாம் அறிந்தவர்கள். பாபநாசம் அகஸ்தியர் அருவிக்குச் செல்லும் வழியில் மரத்தடியில் பூஜையிலும், தியானத்திலும் ஈடுபட்டிருந்த பிரம்மச்சாரியிடம் ஒரு பெரியர் வந்து, அவருடைய கைப்பை, பூஜைப் பொருட்கள் ருத்ராட்சமாலை ஆகியவற்றைக் கொடுத்துவிட்டு அருவியில் ஸ்நானம் செய்யச் சென்றார். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். தெய்வாதீனமாக நடந்தது இந்த நிகழ்ச்சி; அந்தப் பிரம்மச்சாரிதான் சுவாமி. அந்தப் பெரியவர் வ.வே.சு ஐயர்.
பிற்காலத்தில் அவர் நடத்தி வந்த ஸ்ரீபாரத்வாஜ ஆசரமம் சுவாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஒரு சாதாரண ஆசிரியன் ஓர் அளவுக்கு விஷயங்ளைத் தெளிவுபடுத்துவான். அதைவிடச்சிறந்த ஆசிரியன் மாணவர்கள் உள்ளத்தில் தூண்டுகோலாக இருந்து செயலாற்றுவான். மிகச் சிறந்த ஆசிரியன் மனிதனையே மாற்றி அமைப்பான். யார் ஒருவனின் சிந்தனையை மாற்றி, அவைகளைத் தெளிவுபடுத்தி அவன் வாழ்க்கை முறைகளை மாற்றி அவனைப் புதிய மனிதாக மாற்றுகின்றானோ அவன் மிகப்பெரிய மகான். அவர்தான் நம் சுவாமி. இறைவனை அனுபவித்த பிரம்மானந்தர், சிவானந்தர் இவர்களது தொடரில் இருந்ததால் சுவாமியும் இறைவனை அனுபவித்தார் அவரிடம் இருந்ததால் நாமும் ஓரளவு மாறியுள்ளோம். தில்லைகோவிந்தன், இளங்கோவன் என்ற 2 ஆசிரியர்கள் திருச்சி புகைவண்டி சந்திப்பில் அமர்ந்திருந்த சுவாமியைச் சந்தித்தார்கள். சுவாமிக்கு முதல் வகுப்பு பயணச்சீட்டு வாங்கி வருவதாக இருவரும் கூறினர். உடனே சுவாமி ஏன் மூன்றாம் வகுப்பில் போனால் ஆகாதோ?
தபோவனத்து சொத்து என்னுடையதல்ல. அது பொதுச்சொத்து. அதிலிருந்து என் இஷ்டத்திற்கு எடுத்துச் செலவு செய்ய முடியாது என்று கூறி 3-ஆம் வகுப்புக்கானக் கட்டணத்தை அவர்கள் கையில் கொடுத்து பயணச்சீட்டு வாங்கி வரச்செய்தார். தம்முடைய சுமைகளை அவரே சுமந்து சென்றார். அதை ஆசிரியர்கள் தாங்கள் எடுத்துக்கொண்டு வருகிறோம் என்று சொன்னார்கள். அதற்கு அவர் நீங்கள் உங்கள் வேலைகளை பார்த்துக்கொண்டு போங்கள் என்று கூறி அவரே சுமந்து சென்றார். அவருடைய பெருமிதத்தை ஆசிரியர்கள் தெரிந்து கொண்டார்கள்.
***
ஒருமுறை விளையாட்டுப் போட்டிக்கு மாணவர்களை ராமச்சந்திரன் என்ற ஆசிரியர் அழைத்துச் சென்றிருந்தார். அன்று மழை பெய்ததால் போட்டி நடைபெறும் இடத்தைப் பெரியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி மைதானத்திற்கு மாற்றி விட்டார்கள். அங்கு தான் பெரியார் மாளிகை இருக்கிறது. பெரியார் அங்கு இருந்தார். மாணவர்கள் பெரியார் ஈ.வே.ராவிடம் பேச அடம் பிடித்தனர். ஆசிரியருக்கோ ஒரே பயம். சுவாமி என்ன சொல்லுவாரோ என்று பயந்தார். இருந்தாலும் மாணவர்கள் பெரியாரிடம் சென்று விட்டார்கள். தாங்கள் சுவாமி சித்பவானந்தர் நடத்தும் குருகுல பிள்ளைகள் என்று சொன்னார்கள். பெரியாருக்கு மிகவும் மகிழ்ச்சி.
மாணவர்களிடம் தம்பிகளா! மகா சன்னிதானம் நடத்தும் உங்கள் பள்ளி ஒரு தமிழன் நடத்துகின்ற பள்ளி அவர் சொல்கிறபடி நடக்கவேண்டும். சன்னிதானத்திற்கு என் வணக்கங்களை கூறுங்கள். ராமசாமி நலம் விசாரித்ததாக கூறுங்கள் என்று கூறி அனுப்பினார். அவர் பெரியார் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் ராமசாமி என்று தான் கூறினார். அந்த சமயத்தில் பிள்ளையார் சிலைகளை அவர் உடைத்துக் கொண்டிருந்த கலவரமான நேரம்.
அன்று இரவு சுவாமியிடம் பெரியாரை மாணவர்கள் சந்தித்த வியம் பற்றி ராமச்சந்திரன்
கூறினார். அதற்கு சுவாமி இவரை போன்ற ஆட்கள் சமுதாயத்தில் இருக்கவேண்டியதுதான்
தவறில்லை என்று பதிலளித்தார். அப்போதுதான் ஆசிரியர் நிம்மதி பெருமூச்சு விட்டார்
(தொடரும்)
இக்கட்டுரை ஆசிரியர் திரு.வ.சோமு அவர்கள் தனது பன்னிரெண்டாம் வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தரை அறிந்தவர். 1974 முதல் 1985 வரை உடனிருந்தவர். இன்றும் தபோவனத்துடன் தொடர்பில் இருந்து தொண்டுகள் புரிந்து வருகிறார்.
www.rktapovanam.org மற்றும் rkthapovanam.blogspot.com ஆகிய இணையதளங்களை நடத்தி வருகிறார். தர்ம சக்கரம், ஆன்மீக ஆலயம், ராமகிருஷ்ண விஜயம், வாராஹி விஜயம் ஆகிய பத்திரிகைகளில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார்.
மிகவும் நன்றி.
பொக்கிஷமானத் தகவல்கள்.
கருணையோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தவரின் இந்த வளமான வழிகாட்டுதல்கள், இன்று வாழ்பவர்களுக்கு வளமான வாழ்க்கைக்கு வேண்டிய சங்கதிகளை காட்டுகிறது.
இதையும் தொகுத்துப் புத்தகமாக்கி விநியோகிக்க வேண்டும்.
மிகவும் நன்றி.
வணங்கி மகிழ்கிறேன்.
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்.
திரு.சோமு அவர்கள் சுவாமிஜியைப் பற்றி அருமையான தகவல்களைத் தந்து வருகிறார். படிப்பதற்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. வாழ்ந்து காட்டிய அந்த மகானைப் பற்றி அனைவரும் மேலும் தெரிந்து கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட தகவல்கள் எல்லாம் புத்தகமாக வெளியிடப்பட வேண்டும். ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
ப.கனகசபாபதி, கோவை.
ஒரு முறை ஸ்ரீ ராம கிருஷ்ண பக்தர்களின் (தமிழ்) மாநில மாநாட்டில் ஒரு துறவித் தாய் பேசும்போது, ‘வேதங்களையும் உபநிஷதங்களையும் படித்துப் புரிந்துகொள்வதில் சிரமம் காண்பவர்கள், மஹான்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படியுங்கள். அதன் மூலம் வேதங்களையும் உபநிஷதங்களையும் புரிந்துகொள்ளலாம்’ என்னும் பொருள்படப் பேசினார்.
(வருடந்தோறும் December மாதத்தில் தமிழகத்தின் ஏதாவது ஒரு ஊரில் இம்மாநாடு நடக்கிறது.) இந்த ஆண்டு ( 2012 ) திருநெல்வேலியில் நடக்க இருப்பதாக அறிகிறேன்.
உயர்ந்த விஷயங்களைப் படித்தோ அல்லது கேட்டறிந்துகொண்டோ என்ன செய்யப் போகிறோம்? அவற்றை வாழ்க்கையில் எப்படிக் கடைப் பிடிப்பது என்று பார்க்கப் போகிறோம். அதற்கு பதிலாக செயற்கரிய செய்தோரின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதும் கேட்பதுமே நமக்கு நல்வழி காட்டுமே !
ஸ்ரீ சித்பவானந்த ஸ்வாமிகளின் வாழ்வில் நிகழ்ந்துள்ள அற்புதமான விஷயங்களைத் தனது 8 கட்டுரைகள் மூலம், திருவாளர் வ. சோமு, இவ்வலைத்தள நேயர்களுக்கு அறிமுகம் செய்து புண்ணியப் பேற்றினைப் பெற்றுள்ளார்.
இதைப் படித்தவர்கள்/படிப்பவர்கள், தாம் உரையாடுவோரிடமெல்லாம் இத்தகவல்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும் இக்கட்டுரைத் தொடரைப் Print Out எடுத்து (ஆர்வமுடையவர்களுக்கு) விநியோகம் செய்வதன் மூலமும் உலகுக்கும் தமக்கும் நன்மை செய்து கொள்ளலாம்.
குறைந்தது தன்னைச் சூழ இருப்பவர்கள் 4 பேருக்காவது (திசைக்கொருவராக) இவற்றையெல்லாம் சொல்வதன் மூலம் அனைவருக்கும் நன்மை விளையும். அந்த நன்மை நடக்கட்டும்.