எழுமின் விழிமின் – 7

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)
தமிழில்: ஆர்.கோபாலன்
வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.


<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

பல்லாயிர நூற்றாண்டுகளாக உருவான குணப் பண்பு:

இந்த தேசத்தின் ஆத்மா எங்கே உள்ளது என்று இப்பொழுது உங்களுக்குத் தெளிவாகப் புரியும். அது சமயத்திலே உறைந்துள்ளது. அதனை எவராலும் அழிக்க முடியாது. ஆகவே இந்து தேசம் பலவிதமான கஷ்டங்களையும் இடர்களையும் அனுபவித்தும் உயிர்தப்பி இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. “தேசத்தின் ஆத்மாவைச் சமயத்தில் அமைத்து வைத்திருப்பதால் என்ன பயன்? மற்ற சில தேசங்களைப் போல சமூக சுதந்திரத்திலோ, அரசியல் சுதந்திரத்திலோ அதை ஏன் அமைத்து வைக்கக் கூடாது?” என்று ஒரு பாரதீய அறிஞர் வினவுகிறார். அதுபோலப் பேசுவது மிக எளிது.

சமயம், ஆத்மீக சுதந்திரம், ஆத்மா, கடவுள், முக்தி ஆகிய எல்லாமே பொய் என்று விவாதத்திற்காகவே ஒப்புக் கொண்டாலும், அதற்குப் பிறகு நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். நெருப்பானது பலவித வடிவங்களில் தோற்றமளிக்கிறது. அது போலவே அந்த ஒரே பெரும் சக்தி பிரெஞ்சுக்காரர்களிடம் அரசியல் சுதந்திரமாகவும், ஆங்கிலேயரிடம் வியாபார சாமர்த்தியமாகவும், நேர்மைக் கொள்கையை எங்கும் விஸ்தரிப்பதாகவும், ஹிந்துக்களிடம் முக்தியில் விருப்பமாகவும் அல்லது ஆத்மீக சுதந்திரமாகவும் காட்சி தருகிறது. பற்பல நூற்றாண்டுகளாகப் பலவிதமான கால மாறுபாடுகளுக்கு இடையே ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் ஆகியோரின் குணப் பண்பானது இந்த மகத்தான தெய்வ சக்தியால் தூண்டப்பட்டு உருவாகி வந்திருக்கிறது. அத்துடன் அந்த மாபெரும் சக்தியின் உத்வேகத்தின் காரணமாக, ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகள் உருண்டோடிய பிறகு, இன்றுள்ள ஹிந்து தேசீய குணப் பண்பு உருப்பெற்றது.

நான் யதார்த்தமாகவே கேட்கிறேன். எது எளிது? ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளாக வளர்ந்து உருப்பெற்ற நமது தேசீய குணப் பண்பைக் கைவிடுவது எளிதா? அல்லது சில நூற்றாண்டுகளாக நீங்கள் ஒட்டவைக்கப் பார்க்கிற அந்நிய குணப் பண்பைக் கைவிடுவது எளிதா? ஆங்கிலேயர்கள் தமது யுத்தரீதியான பழக்க வழக்கங்களை மறந்து, போரிடுவதையும் ரத்தம் சிந்துவதையும் கைவிட்டு விட்டு, சாந்தமாக, அமைதியாக உட்கார்ந்து சமயத்தையே தமது வாழ்வின் ஒரே குறிக்கோளாக ஆக்கிக் கொள்ளுவதில் தமது சக்தி முழுவதையும் ஏன் ஒருமுகப்படுத்தக்கூடாது?

உண்மை இதுதான். நதியானது மலைகளிலிருக்கும் தனது உற்பத்தி ஸ்தானத்தை விட்டுவிட்டு ஆயிரம் மைல்கள் கீழிறங்கி வந்துவிட்டது. அது தனது உற்பத்தி ஸ்தானத்துக்கே திரும்பிப் போகுமா? போக முடியுமா? அது தனது பழைய இடத்துக்கே திரும்பிப் போக எப்பொழுதாவது முயற்சிக்குமானால் எல்லாத் திசைகளிலும் அதன் சக்தி விரயமாகி அது அப்படியே வற்றிப் போகும். எப்படியாயினும், இப்பொழுதோ நாளையோ, திறந்த அழகான சமதரையில் பாய்ந்தோ, கரடுமுரடான நிலத்தைக் கடந்தோ, அந்த நதி கடலில் விழப்போவது திண்ணம்.  நமது இந்தப் பதினாயிரம் ஆண்டு தேசீய வாழ்க்கையானது தவறாகி விட்டது என்றால் இனி மீள முடியாது. மேலும் நாம் முற்றிலும் புதியதொரு குணப் பண்பை உருவாக்க இப்பொழுது முயன்றால் அதன் விளைவாகத் தப்பாமல் மடிவது உறுதி.

நமது தேசீய வாழ்க்கையில் மறைந்துள்ள சக்தித் தீ:

நமது தேசீய லட்சியம் தவறாக ஆகிவிட்டது என்று நினைப்பது வெறும் அறிவீனமாகும். உண்மையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமை ஆகும் என்று நான் கூறுவேனாயின் என்னை மன்னித்து விடுங்கள். முதலில் பிற நாடுகளுக்குச் செல்லுங்கள். அவர்களது பழக்க வழக்கங்களையும், நிலைமைகளையும் உங்கள் கண்களாலேயே- பிறரைக் கொண்டு அல்ல- கவனமாக ஆராய்ந்து பாருங்கள்- சிந்தனைப் பாங்குள்ள மூளையுடன், அத்தகைய மூளை இருந்தால்.

பின்பு அவற்றைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அதன் பின் உங்கள் சொந்த சாஸ்திரங்களையும், உங்கள் புராதன இலக்கியங்களையும் படியுங்கள். பாரதம் முழுவதும் யாத்திரை செல்லுங்கள். பாரதத்தின் பல பகுதிகளிலும் உள்ள மக்களையும், அவர்களது வழிமுறை, பழக்க வழக்கங்களையும் புத்திசாலியான கூரிய பார்வையுள்ள பார்வையாளரின் விழிப்புள்ள கண்களுடன் – முட்டாளின் பார்வையுடன் அல்ல- கவனித்துப் பாருங்கள். அப்பொழுது இந்த தேசம் இன்னும் பத்திரமாக வாழ்ந்து கொண்டிருப்பதும், அதன் உயிர் நிச்சயமாகவே துடித்துக் கொண்டிருப்பதும் நடுப்பகலொளி போல் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

அங்கு மற்றொரு விஷயத்தையும் காண்பீர்கள்- வெளிப்பார்வைக்கு அவிந்திருப்பது போல சாம்பலால் மூடப்பட்டிருப்பினும், நமது தேசீய வாழ்க்கையின் தீயானது, இன்னமும் கனிந்து குமுறிக் கொண்டிருப்பது தெரியவரும். அன்றியும், இந்தத் தேசத்தின் ஜீவன் சமயம்தான் என்பதும், சமயமே அதன் குரல், சமயமே அதன் கருத்து என்பதும் புரியும். உங்களுடைய அரசியல், சமூகம், நகராட்சி, பிளேக் தடுப்பு வேலை, பஞ்ச நிவாரண வேலை முதலியன எல்லாம் இத்தனை காலமாக இங்கு செய்யப்பட்டு வந்தது போல் சமயத்தின் மூலமாக மட்டும்தான் செய்து முடிக்க வேண்டும். இல்லாவிடில், பரபரப்புடன் நீ கூச்சலிட்டு, கூக்குரலிட்டு வருவதல்லாம், நண்பா, ஒன்றும் இல்லாததாய் முடிந்து விடும்.

தேசீய வாழ்க்கையாகிற கீதத்தின் ஆதார சுருதியும் அதன் ராக பேதங்களும்:

ஒவ்வொரு தேசமும் தனக்கே உரித்தான வழியில் வேலை முறைகளைக் கொண்டிருக்கிறது. சில நாடுகள் அரசியல் மூலம், சில சமூகச் சீர்திருத்தங்கள் மூலம், சில வேறு வழிகள் மூலம் வேலை செய்து வருகின்றன. நமக்கு சமயம்தான் ஒரே அடிப்படை. அந்த அடிப்படையின் மீதுதான் நாம் இயங்க முடியும். அரசியல் மூலமாகக் கூட ஆங்கிலேயன் சமயத்தைப் புரிந்து கொள்ளக் கூடும். அமெரிக்கன் ஒருக்கால் சமூகச் சீர்திருத்தங்கள் மூலமாகக் கூட சமயத்தைப் புரிந்து கொள்ளக் கூடும். ஆனால் ஹிந்துவானவன் அரசியலைக் கூட சமயத்தின் மூலமாக அளிக்கும் போதுதான் புரிந்து கொள்கிறான். எல்லாமே சமயத்தின் வழியாக வந்தால்தான் அவனுக்குப் புரியும். ஏனெனில் அதுதான் மையக் கருத்து; ஆதார சுருதி. மற்றவை எல்லாம் தேசீய வாழ்வின் இசையில் ராக பேதங்கள் தான்.

அரசியல் ஆதிக்கமே ஒரு தேசத்தின் மையக் கருத்தாக இருக்கலாம். சமயமும், மற்ற அனைத்தும் வாழ்க்கையின் அந்த மகத்தான ஒரு மையக் கருத்துக்கு உட்பட்டே இருக்க வேண்டும். ஆனால் இது முற்றிலும் வேறான தேசம். இதனுடைய வாழ்க்கையின் மகத்தான மையக் கருத்து ஆத்மீகமும் துறவும்தான். ‘இந்த உலகம் முழுவதும் வெறும் வெளிமயக்கு; மூன்று நாட்களில் மறைந்து போகக் கூடியது’ என்பது தான் இந்த தேசத்தின் குறிச்சொல் ஆகும். மற்ற அனைத்துமே, அது ஞானமாயினும், விஞ்ஞானமாயினும், அதிகாரப் பதவிகளாயினும், சுகபோகங்களாயினும்,  செல்வம், பெயர் அல்லது புகழ் ஆகிய அனைத்துமே ஆயினும், அந்த ஒரு மையக் கருத்துக்குக் கீழடங்கியே இருக்க வேண்டும். உண்மையாக, ஹிந்துவின் குணப் பண்பினுடைய ரகசியம், ஐரோப்பிய விஞ்ஞானங்களையும்  கல்வியையும் அந்த ஒரே மையக் கருத்துக்கு உட்பட்டதாக்குவதில்தான் பொதிந்துள்ளது. தனது செல்வம், தகுதி, புகழ், பெயர் இவை அனைத்தும் அந்த ஒரு மையக் கருத்துக்கு உள்ளடங்கி இருக்க வேண்டும். அக்கருத்து ஒவ்வொரு ஹிந்துக் குழந்தையோடும் கூடப் பிறந்ததாகும். அதுதான் ஆத்மீகமும், மனித இனம் இயல்பிலேயே தூய்மையானது என்ற கொள்கையும்.

ஆத்மீக முறையில் உறுதியான பிடிப்பு வேண்டும்:

ஆனால் கவனத்திற் கொள்ளுங்கள். அந்த ஆத்மீக முறையை நீங்கள் கைவிட்டால், அதை ஒதுக்கி விட்டு மேலை நாடுகளின் உலகாயத நாகரிகத்தின் பின்னே செல்வீர்களானால், அதன் விளைவாக மூன்றே தலைமுறைகளில் நீங்கள் பூண்டற்ற இனமாக ஆகிவிடுவீர்கள். ஏனெனில் தேசீயத்தின் முதுகெலும்பு முறிந்து போகும். தேசீய மாளிகையின் அஸ்திவாரம் குலைந்து போகும். அதன் விளைவாக எல்லாத் துறைகளிலுமே படுநாசம்தான் ஏற்படும்.

ஆகவே, நண்பர்களே, ஆத்மீக முறையில் நாம் உறுதியான பிடிப்பைக் கொள்ளுவது நமது முதல் வேலை. தலையாய வேலை. மீளுவதற்கு அதுவே வழி. நமது தொன்மையான முன்னோர்கள் வழிவழியாக நமக்குத் தந்த விலைமதிப்பற்ற நன்கொடை, இந்த ஆத்மீக முறையாகும். நம் நாட்டில் மாபெரும் மன்னர்கள் தமது வம்சத்தின் முதல்வர் என்று அரசனைத் தேடிக் கொண்டிருக்கவில்லை; ஏழை யாத்ரிகர்களை வழிப்பறி செய்யும் பழைய கோட்டைக் குறுநில மன்னர்களின் வம்சத்தவரோ என்று பார்க்கவில்லை. ஆனால் அரை நிர்வாணமாகக் காடுகளில் வசித்த முனிவர்களில் யார் தமது வம்சத்தின் முதல்வர் என்றுதான் கண்டுபிடிக்க முயன்றார்கள். அப்படிப் பட்ட ஒரு நாட்டைப் பற்றி எங்கேயாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதுவே இந்த நாடு. மற்ற நாடுகளில் பெரிய மதகுருமார்கள், தமது பரம்பரை முதல்வர் ஒரு மன்னர் என்று ஆராய்ந்து சொல்வார்கள். இங்கே மாமன்னர்கள் ஆராய்ந்து பார்த்தால் பழைய ஆசாரியர் ஒருவரின் வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதைக் காண்பார்கள்.

ஆதலால், ஆத்மீக முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிடினும், தேசீய வாழ்க்கைக்காக, ஆத்மீக முறையை ஒரு கையால் பிடித்து வைத்துக் கொண்டு, அதனை விடாது காக்கவேண்டும். பிறகு மறு கையை நீட்டி, மற்றவர்களிடம் இருந்து உங்களால் முடிந்தவற்றை எல்லாம் கூட்டிச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆயினும், மற்ற அனைத்தும் அந்த முக்கிய வாழ்க்கை லட்சியத்துக்குக் கீழ்ப்பட்டதாக ஆக்கப்பட வேண்டும். அதிலிருந்து ஆச்சரியகரமான வருங்கால பாரதம் தோன்றும். அது நிகழப் போகிறது என்று நிச்சயமாக நான் நம்புகிறேன். முன்னர் எக்காலத்தும் இருந்ததை விட மகத்தான பாரதமாக அது திகழும்.

(தொடரும்)

அடுத்த பகுதி >>

One Reply to “எழுமின் விழிமின் – 7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *