இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 6

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்

முந்தைய பகுதிகள்

தொடர்ச்சி..

6.1 பதவி தரும் பாடம்

முதலில் இராமர் தான் வனவாசம் செய்யவேண்டிய அவசியத்தைப் பற்றித் தன் தாய்க்கு நன்கு உணர்த்தினார். அடுத்தபடியாக தன் மனைவி சீதையிடம் சென்று அயோத்தியைவிட்டு தான் பதினான்கு வருடங்கள் காட்டில் இருக்கத் தீர்மானித்துள்ளதைப் பற்றிச் சொன்னார். காட்டில் வாழ்வது மிகக் கடுமையானது என்று சொல்லி, அதனால் அவள் அயோத்தியாவிலேயே தங்கி தன் பெற்றோர்கள், மற்றும் தம்பிமார்களான பரத, சத்ருக்கனன் எல்லோரது நலனையும் பார்த்துக்கொள்வதே அவர் விருப்பம் என்றும் சொன்னார். அப்போது இராமர் சீதைக்கு ஒரு அறிவுரை தருகிறார். பரதன் இருக்கும்போது, எப்போதும் தன்னைப் பற்றிப் புகழ்ந்து பேசவேண்டாம் என்கிறார். அப்படிப் புகழ்ந்து பேசினால், அது தன் மதிப்பைக் குறைத்து தன்னை இகழ்ந்து பேசுவதாக பரதனுக்குப் படலாம் என்றும் சொல்கிறார்.

அதிகாரத்தில் உள்ள எவருக்குமே தன்னை மற்றோரைவிடத் தாழ்த்திப் பேசுவதைத் தாங்கமுடியாது. முக்கியமாக மற்றோரை உயர்த்திப் பேசுவது அறவே பிடிக்காது.

ஸோ அஹம் த்வாம் ஆக³த​: த்³ரஷ்டும் ப்ரஸ்தி²த​: விஜனம் வனம் |
ப⁴ரதஸ்ய ஸமீபே தே ந அஹம் கத்²ய​: கதா³சன || 2.26.24 ||

விஜனம் deserted by men, மக்களால் ஒதுக்கப்பட்ட
வனம் forest, காடு ப்ரஸ்தி²த​: set to depart, போவதற்குத் தயாராக
ஸ​: அஹம் such me, என்னைப் போன்று
த்வாம் you, உன்னை
த்³ரஷ்டும் to see, பார்க்க
ஆக³த​: I have come, வந்திருக்கிறேன்
ப⁴ரதஸ்ய Bharata(அ)s, பரதனின்
ஸமீபே in the presence of, அருகில்
கதா³சன at any time, எந்த சமயத்திலும்
அஹம் I, என்னைப் பற்றி
ந கத்²ய​: not to be told, பேசக்கூடாது

பு³த்³தி⁴யுக்தா ஹி புருஷா ந ஸஹந்தே பரஸ்தவம் |
தஸ்மான்னதே கு³ணா​: கத்²யா ப⁴ரதஸ்யாக்³ரதோ மம || 2.26.25||

பு³த்³தி⁴யுக்தா​: intellectuals, அறிவாளிகள்
புருஷா​: men, மனிதர்கள்
பரஸ்தவம் praising others, மற்றவர்களைப் புகழ்ந்து
ந ஸஹந்தே ஹி cannot endure, பொறுக்காது
தஸ்மாத் for that reason, அதனால்
ப⁴ரதஸ்ய Bharata(அ)s, பரதனின்
அக்³ரத​: in front of, முன்னால்
தே those, அந்த
மம கு³ணா​: my virtues, என் நற்குணங்களை
ந கத்²யா​: should not be mentioned, சொல்லக்கூடாது.

தண்டகாரண்ய வனத்திற்குப் போவதற்கு முன்னால் உன்னைப் பார்க்க வந்திருக்கிறேன். பணம், பதவி உள்ளவர்களுக்கு மற்றவர்களைப் புகழ்ந்து பேசுவது பிடிக்காதென்பதால், பரதனின் முன்னால் என்னைப் புகழ்ந்து பேசாதே. அவனுக்கு முன்னால் என் குணங்களையும் பெருமையாகப் பேசிக்கொண்டு இருக்காதே.

அதிகாரம் என்பது அதில் உள்ள பெரும்பானவர்களை மமதை உள்ளவர்களாகவும், பிடிவாதம் படைத்தவர்களாகவும் ஆக்கி விடுகிறது. அவர்களுக்கு மற்றவர்களை உயர்த்திப் பேசுவது பிடிப்பதில்லை. பரதனுக்கு ராமனை மிகவும் பிடிப்பதோடு அல்லாமல், அவனை மிக உயர்வாகவும் மதித்தான். ராமனுக்கும் பரதன் வைத்துள்ள அன்பும், மதிப்பும் நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் மக்கள் சாதாரணமாக உலகில் எப்படி இருக்கிறார்கள் என்பதையும் மறக்கக்கூடாது அல்லவா? அப்படி ஆவதற்கு வாய்ப்பு மிகமிகக் குறைவே என்றாலும், பதவி, அதிகாரம் என்று வந்ததும் பரதன் இப்படியும் மாறக்கூடும் என்பதையும் மறுக்கமுடியாதே? அதனால் ராமன் சீதையிடம் இப்படிச் சொல்ல நேர்ந்தது. ஒருவனை வேண்டுமென்றே முகஸ்துதி செய்தால் அது சுயநலத்தனம். அதேபோல் ஒருவனை மட்டம் தட்டவென்றே, மற்றவனை வேண்டுமென்றே புகழ்வதும் தவிர்க்கப்பட வேண்டிய செயல்.

6.2 தோள் கொடுக்கும் தோழி

இராமர் காட்டிற்குப் போகும்போது அயோத்தியில் தான் மட்டும் இருப்பதற்கு சீதை ஒப்பவில்லை. ஒரு கணவனின் சுகங்களில் மட்டும் பங்கு பெற்றுவிட்டு, அவனுக்குத் துக்கம் வரும் வேளையில் அவனைத் தனியே தவிக்கவிடுதல் ஒரு நல்ல மனைவியின் இலக்கணம் அல்ல. சுக துக்கம் இரண்டிலும் கணவனுடன் கூடவே இருக்கவேண்டும் என்பதால் சீதை தான் மட்டும் அயோத்தியில் தங்காமல், ராமனுடன் கூடவே காட்டுக்குச் செல்லவேண்டும் என்கிறாள்.

ப⁴ர்துர்பா⁴க்³யம்ʼ து பா⁴ர்யைகா ப்ராப்னோதி புருஷர்ஷப⁴! |
அதஸ்²சைவாஹமாதி³ஷ்டா வனே வஸ்தவ்யமித்யபி|| 2.27.4||

புருஷர்ஷப⁴ O best of men, Rama, புருஷோத்தமரே
ப⁴ர்துர்பா⁴க்³யம்ʼ the destiny of husband, கணவனின் விதிப்படி
ஏகா only, ஒன்றாகவே
பா⁴ர்யா wife, மனைவி
ப்ராப்னோதி receives, பெற்றால்
அதஸ்²ச therefore, ஆகவே
அஹமபி I also, எனக்கும்
வனே in the forest, காட்டில்
வஸ்தவ்யமிதி should dwell, வசிக்கவேண்டும்
அதி³ஷ்டா ஏவ ordered, உத்திரவிடப்பட்டது.

புருஷர்களில் உத்தமரே, ஒரு மனைவி தன் கணவனின் விதிப்படி தானும் நடக்கவேண்டும். ஆதலால், தாங்கள் காட்டுக்குப் போகவேண்டும் என்ற உத்திரவு இருந்தால் அது எனக்கும் இடப்பட்ட உத்திரவே.

ஒருவனுக்கு நல்ல காலமும் வரும், கெட்ட காலமும் வரும். ஒரு மனைவி கணவனுடன் கெட்ட காலங்களிலும் கூடவே இருக்கவேண்டும். வால்மிகியின் இலக்கணப்படி ஒருவனின் கெட்ட காலங்களில் அவனைத் தனியே தவிக்கவிடாது, தோள் கொடுக்கும் தோழியாக ஒரு மனைவி வாழவேண்டும்.

6.3 வேப்பமரம் இனிக்கும் கனியையா தரும்?

இராமர் தசரதரிடம் விடைபெற்றுக்கொண்டு காட்டுக்கு புறப்படத் தயாராகிறார். அப்போது தசரதரின் ஓலத்தைக் கேட்டு கைகேயி சிறிதுகூடக் கலங்கவில்லை. அங்கு தசரதரின் அமைச்சர்களில் ஒருவரான சுமந்த்ரா, கைகேயியின் இரக்கமற்ற இதயத்தையும், தசரதரை அவள் கொடூரமாக அவதிக்கு உள்ளாக்கியதையும் பார்த்து மிகவும் விசனப்படுகிறார். முதலில் அவர் கைகேயியிடம் மிகவும் தாழ்மையுடன் கொஞ்சம் விட்டுக்கொடுத்து நிலைமையை சரி செய்ய வேண்டுகிறார். ஆனால் கைகேயியோ தான் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்குவதாக இல்லை. சுமந்த்ரா பொறுமையிழந்து கடுஞ்சொற்களால் அவளைத் தாக்க ஆரம்பிக்கிறார். கைகேயி தன் தாயிடமிருந்து பிடிவாதம், சுயநலம், மற்றவர் இன்னல்களையும் உணர்வுகளையும் மதிக்காமை என்றெல்லாக் குணங்களையும் சீதனமாகக் கொண்டிருக்கிறாள் என்று குத்திக் காட்டுகிறார். அவர் முன்பு நடந்த நிகழ்ச்சியைத்தான் அப்படிச் சொல்கிறார்.

ஒரு முனிவரின் தயவால், பறவைகளின் மொழியைப் புரிந்துகொள்ளும் கலையை கைகேயியின் தகப்பனார் பெற்றிருந்தார். அப்படிப் புரிந்துகொண்டதை வேறெவருக்கும் சொல்லக்கூடாது, ஒருவேளை சொல்ல நேர்ந்தால் அவர் இறந்துவிடுவார் என்ற ஒரு நிபந்தனையுடன்தான் அந்த வரத்தை அவர் பெற்றிருந்தார். ஒருமுறை பறவைகள் பேசிக்கொண்டதைக் கேட்ட அவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அப்போது அருகில் இருந்த அவரது மனைவி எதற்காக அவர் சிரிக்கிறார் என்று கேட்டாள். பறவைகள் பேச்சைக் கேட்டதும் சிரிப்பு வந்தது பற்றிச் சொல்ல, அவள் மேலும் அந்தப் பேச்சின் விவரங்களைக் கேட்டாள். அவர் முனிவரின் நிபந்தனை பற்றிச் சொல்லி மேற்கொண்டு பேச மறுத்தார். ஆனாலும் அவள் அவரைத் தொடர்ந்து கட்டாயப்படுத்திக் கேட்க, அவர் அந்த முனிவரைத் தொடர்புகொண்டு என்ன செய்வது என்று கேட்க, அவர் மனைவியை விட்டு விலகச் சொல்லிவிட்டார். அதை நினைவில் கொண்டு, கணவன் இறந்தாலும் பரவாயில்லை தான் கேட்டது வேண்டும் என்ற, அத்தகைய தாய்க்குப் பிறந்த கைகேயி மட்டும் வேறு மாதிரியாகவா இருப்பாள் என்கிறார்.

அபி⁴ஜாத்யம்ʼ ஹி தே மன்யே யதா² மாதுஸ்ததை²வ ச |
ந ஹி நிம்பா³த்ஸ்ரவேத் க்ஷைத்³ரம்ʼ லோகே நிக³தி³தம்ʼ வச​: || 2.35.17||

தே your, உன்னுடைய
ஆபி⁴ஜாத்யம் nobility of birth, பிறவிக் குணாதிசயங்கள்
மாது​: your mother(அ)s, உன் அம்மாவின்
யதா² as that of, உடையது
ததை²வ ச like that, போலவே
மன்யே thinking, யோசித்தால்
நிம்பா³த் from Nimba tree, வேப்ப மரத்திலிருந்து
க்ஷௌத்³ரம் honey, தேன்
ந ஸ்ரவேத் ஹி does not flow, வடியாது
லோகே in this world, இவ்வுலகில்
வச​: saying, பழமொழி
நிக³தி³தம் is very well known, நன்கே தெரியும்.

உனது குணமும் உன் அம்மாவின் குணம் போன்றே இருக்கிறது. ‘வேப்ப மரத்திலிருந்து தேனா கிடைக்கும்’ என்ற வழக்குச் சொல் எல்லோருக்கும் நன்கே தெரியும்.

கைகேயியைப் பற்றி குறைகூறிப் பேசும்போது, அவள் அம்மாவின் குணாதிசயங்களைப் பற்றிக் குறிப்பிடுவது என்பது ஒரு கடுமையான செயல்தான். பெற்றோர்கள் என்னதான் மோசமாக இருந்தாலும் தங்கள் குழந்தைகளும் மோசமாக வரவேண்டும் என்று விரும்புவதில்லை. மாறாக அவர்கள் நன்றாகவே வரவேண்டும் என்றும், நல்லதனமாகப் புகழப்படவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். மேலும் ஒருவனின் பெற்றோர்களைப் பார்த்து அவனை எடை போடக்கூடாது. பின்னால் வால்மீகி சொல்லப்போவதைப் படித்தால், மக்கள் தாங்கமுடியாத கோபத்திற்கு ஆளாகும்போது இப்படிக் கொடூரமாகப் பேசவும் தயங்க மாட்டார்கள் என்று ஒருவேளை வால்மீகி இங்கு சொல்ல விரும்புகிறார் போலும்.

6.4 சாக்கடையில் எறிந்த கல்

கைகேயிக்கு முதலில் அறிவுரையும், பின்பு கோபக் கணைகளும், கடைசியில் கடும் திட்டல்களுமே கிடைத்தன. முதலில் சிறிது அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த கைகேயிக்கு எல்லோரும், எல்லா திசைகளிலிருந்தும் தாக்குதல் தொடுக்கவே அவள் பொறுமையிழந்து பதிலடி கொடுக்க ஆரம்பித்தாள். தன் தாயாரைப் பற்றி வந்த கடுமையான சொற்கள், அவளைத் தூண்டிவிட்டதால் தன் பங்கிற்கு தசரதர் வம்சத்தில் வந்த அசமஞ்சனின் கதையைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள்.

தசரதரின் முன்னோர்களில் ஒரு அரசனான சாகரன் என்பவனின் மகன்தான் இந்த அசமஞ்சன். அயோத்தி மக்கள் சாகரனிடம் அசமஞ்சன் ஒரு மனோவியாதி படைத்தவன் என்று குறை கூறினார்கள். ஏனென்றால் அவன் வீதியில் விளையாடும் சிறுவர்களைப் பிடித்து சரயு நதியில் தூக்கி எறிந்துவிட்டு, அவர்கள் மூச்சு முட்டி நீரில் மூழ்கி இறப்பதைப் பார்த்து கைகொட்டி மகிழ்வான். அதைக் கேட்ட சாகரன் தன் மகனுக்குத் தண்டனையாக அவனை நாடு கடத்தினான். இது பற்றிச் சொல்லிவிட்டு, கைகேயி மகனை நாடு கடத்துவது என்பது தசரதர் பரம்பரைக்கு ஒன்றும் புதிதல்ல என்றும், அதே போல தசரதரும் தன் மகனுக்குச் செய்யவேண்டும் என்கிறாள்.

அசமஞ்சனையும், ராமனையும் ஒப்பிட்டுச் சொல்வது சரியல்ல. ஆதலால், சித்தார்த்தா என்ற இன்னுமொரு அமைச்சர் அசமஞ்சன் சிறுவர்களைக் கொன்றதால் நாடு கடத்தப்பட்டான் என்று சொல்லி, எந்தக் குற்றம் செய்ததற்காக ராமன் நாடு கடத்தப்பட வேண்டும் என்று கைகேயியைப் பார்த்துக் கேட்கிறார். அப்போது அவர் ஒரு நிரபராதியைத் தண்டிப்பது தவறு என்றும் சொல்கிறார்.

அது³ஷ்டஸ்ய ஹி ஸந்த்யாக³​: ஸத்பதே² நிரதஸ்ய ச|
நிர்த³ஹே த³பி ஸ²க்ரஸ்ய த்³யுதிம்ʼ த⁴ர்மனிரோத⁴னாத்| 2.36.29||

ஸத்பதே² in the righteous path, தர்மத்தின் பாதையில்
நிரதஸ்ய ச engaged in, ஈடுபாடு கொண்ட
அது³ஷ்டஸ்ய of an innocent, அப்பாவிக்கு
ஸந்த்யாக³​: banishment, நாடு கடத்தல்
த⁴ர்மனிரோத⁴னாத் by restraining the righteousness, அதர்மமாக
ஸ²க்ரஸ்ய அபி even Indra(அ)s, இந்திரனுடையதும்
த்³யுதிம் splendour, கீர்த்தி
நிர்த³ஹேத் will be destroyed, அழிக்கப்படும்.

தர்மத்தின் பாதையிலிருந்து சிறிதும் தவறாது சென்று, மேலும் ஒரு தவறும் செய்யாமல் இருக்கும் ஒருவனை தண்டிப்பது மிகவும் அதர்மமானது. அநீதியான ஒரு தண்டனை கடவுளுக்கும் மேலானவனைக் கூட அழித்துவிடும்.

ராமனை காட்டுக்கு அனுப்பவேண்டும் என்று கைகேயி எடுத்த முடிவு அரசியல் கலந்த ஒரு நோக்கமே. ராமன் அயோத்தியில் இருந்தால், பரதனின் அரசுக்கு எதிராக ஏதாவது கலகம் விளைவித்து அது போரில் போய் முடியலாம். அந்த மாதிரியான விளைவுகள் வராமல் இருக்க கைகேயி இப்படிச் செய்தாள். அனாவசியமாக அவளது அம்மாவின் பெயர் இங்கு இழுக்கப்படவே அவளது கோபம் முற்றி, அதனால் அசமஞ்சன் விவரங்களைச் சொல்லி பழி தீர்த்துக் கொண்டாள். “அனாவசியமாக முன்னோர்களின் கதைகளை வாதத்தின்போது எடுத்து வைக்காதே”
என்பதே இங்கு வால்மீகியின் அறிவுரை என்று சொல்லலாம்.

6.5 யானை விற்றபின் அங்குசம் எதற்கு?

கைகேயின் தாயாரைப் பற்றியும், சாகரனின் மகனைப் பற்றியும் கீழ்த்தரமான விவரங்களைக் குறித்துப் பேசியது இராமருக்குத் தர்ம சங்கடத்தை உண்டாக்கியது. அவருக்கு ஒரு கௌரவமான, அன்பு கலந்த வழி அனுப்புதலைச் செய்யாமல் தசரதரும், அவரது அமைச்சர்களும், கைகேயியும் மாறி மாறி ஒருவரையொருவர் வசைபாடியும், தூற்றிக்கொண்டும் இருந்தனர். ஆட்சியும் அதிகாரமும் தானே பாரதனுக்காகக் கேட்டாய் என்பதுபோல், தனது செல்வங்கள் அனைத்தையும் தான் இராமருக்குக் கொடுப்பதாகவும், காட்டில் அவரைக் காப்பதற்காக தன் சேனைப்படைகளையும் அவரோடு அனுப்புவதாகவும் தசரதர் சொன்னார். கைகேயி அதற்குத் தனது ஆட்சேபணையை அழுத்தமாகத் தெரிவித்தாள். கஜானாவில் செல்வமும் இல்லாமால், சேனைகள் இல்லாத படையையும் பரதன் பெறுவதற்கா அவள் ஆட்சி, அதிகாரத்தைக் கேட்டுப் பெற்றாள்? கைகேயியின் மறுதலிப்பு தசரதரின் கோபத்தை மேலும் கூட்ட, அவர் கைகேயியை தீய சக்தியின் மறு அவதாரம் என்று திட்டி, தானும் ராமனுடன் காட்டுக்குச் செல்வேன் என்றும் கூறினார்.

இராமர் அப்போது தன் தந்தையை சமாதானம் செய்து, அவரை அமைதிப்படுத்த முனைந்தார். காட்டில் செல்வத்தைக் கொண்டு தான் என்ன செய்வது என்றும், அவையெல்லாம் நாட்டிலேயே இருந்தால் மக்களுக்கு உதவ பரதனுக்குத் துணையாக இருக்குமே என்றும் சொன்னார். அவரைப் பொறுத்தவரை வனத்தில் வசிப்பதற்குத் தகுந்த, முனிவர்கள் உடுப்பது போன்ற மரவுரிகளும், கனி கிழங்குகள் பறித்து உண்ண ஒரு கைக் கோடாலியும் எடுத்துச் செல்வதாகக் கூறினார். அரசுரிமையையே வேண்டாம் என்றும், காட்டில் உள்ள தபஸ்விகள் போல வாழ்வதற்கும் தயாராய் உள்ள தான் செல்வத்தை எடுத்துக்கொண்டு போவது என்பது கேலிக்குரிய செயலாகும் என்றும் சொன்னார்.

யோ ஹி த³த்த்வா த்³விபஸ்²ரேஷ்ட²ம்ʼ கக்ஷ்யாயாம்ʼ குருதே மன:|
ரஜ்ஜுஸ்னேஹேன கிம்ʼ தஸ்ய த்யஜத: குஞ்ஜரோத்தமம்|| 2.37.3||

ய​: such a man, அப்படிப்பட்ட மனிதன்
த்³விபஸ்²ரேஷ்ட²ம் best of elephants, நல்ல யானைகளை
த³த்த்வா having given away, தானம் கொடுத்தபின்
கக்ஷ்யாயாம் rope tied to its girth, இடுப்பில் கட்டப்படும் கயிறு
மன​: mind, மனம்
குருதே will do, செய்யலாம்
குஞ்ஜரோத்தமம் best elephant, நல்ல யானை
த்யஜத​: of a man while giving up, தானம் செய்த மனிதனை
தஸ்ய to him, அவனுக்கு
ரஜ்ஜுஸ்னேஹேன attachment for the rope, கயிற்றின் மேல் ஆசை
கிம் why? ஏன்?

இருக்கும் நல்ல யானைகளை எல்லாம் தானமாகக் கொடுத்துவிட்டவனுக்கு, யானையைத் தூணில் கட்ட உதவும் அதன் இடுப்புக் கயிறை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எப்படி இருக்கும்? யானையே போனபின் அதன் கயிற்றின் மேல் ஆசை வைத்து என்ன பயன்?

காட்டில் தான் கொடுக்கும் செல்வத்தை வைத்துக்கொண்டு ராமன் சுகமாக வாழவேண்டும் என்ற விருப்பம் தசரதருக்கு இருந்தது. ஆனால் கைகேயியின் இரண்டாவது கோரிக்கைப் படி ராமன் துறவி போல காட்டில் வாழவேண்டும். ராமனுக்குப் பட்டாபிஷேகம் வேண்டாம் என்று முடி துறக்கச் சொல்லிவிட்டு, காட்டிலே அவன் வாழும் வாழ்க்கை மட்டும் சுகபோகங்களுடன் இருக்கலாம் என்று சொல்வது ஒரு கண்துடைப்பு வேலைதான்.

ஆதலால் இராமர் தன் தந்தையிடம் அமைதியாக ஆனால் உறுதியாக செல்வம் ஏதும் தனக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

(தொடரும்)

6 Replies to “இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 6”

  1. கைகேயியைப் பற்றிச் சொல்லும் போது, அவள் சோதிடத்தில் தேர்ந்தவள் என்று கூறக் கேட்டு இருக்கிறேன்.அவள் தர்கத்திலும் வல்லவள் என்பதை இந்தப் பதிவு நிருபிக்கிறது.இந்தக் கட்டம் எனக்கு என்றும் மறக்காது.நல்ல முறையில் மனதில் பதியும் வண்ணம் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.பாராட்டுக்கள்.

  2. புருஷோத்தமன் இராமனைப்பற்றி இவ்வளவு அற்புதமாக தொகுத்து வழங்கிய நீவிர் பல நலனும் பெற்று பல்லாண்டு வாழ்ந்து, இதே போல மேலும் சிறந்த பணிகளை தொடர , எல்லாம் வல்ல செல்வ முத்துக்குமார சுவாமியை வணங்கி , பிரார்த்திக்கிறேன். தமிழ் ஹிந்துவின் இந்த பணி மேலும் தொடரட்டும்.

  3. ராமபிரான் காட்டிற்கு செல்ல நேர்ந்தது அவரது அவதார காரியமாகத்தான்.
    அனாலும் அதற்கொரு காரணம் வேண்டுமல்லவா?
    அது தான் சமயம் பார்த்து அடித்த கைகேயி மற்றும் அதற்கு உதவி செய்த தசரதன் கொடுத்த வரங்கள்.
    நமக்கெலாம் பாடங்கள் என்றால் எல்லாம் பல கோணங்களில் பார்க்கலாம்.

    யுத்தத்தில் உதவி செய்தவள் மனைவிஆனாலும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்றால் கஷ்டம் தான்.மனிதர்கள் எப்போது எப்படி மாறுவார்கள் யார் அறிவார்? ஒரு மன்னன் உணர்ச்சி வசப்பட்டு கண்டிஷன் இல்லாத வரங்கள் அளிக்க கூடாது.
    சமயம் பார்த்து கணவன் உயிர் போனாலும் போகட்டும் என்று மரண அடி வரமாக மனைவி கேட்டால் இப்படிதான் ஆகும்.
    கைகேயி செய்தது அவள் பெற்றோர் பற்றி அறிந்தோருக்கு ,அவள் தாய் செய்ததை நினைவு படுத்தியதில் ஆச்சரியமில்லை.
    கைகேயி பொறுமை காத்தாள் என்றால் தான் நினைத்து நடந்தே தீரும் என்று அவளுக்கு நன்றாக தெரியும். அதனால் தான். ” பொறுமை” போன போது பொருந்தாத ஒப்பிடும் செய்கிறாள்.
    சீதை மரவுரி அணிய வேண்டும் என்று அவள் சொல்வதாக படித்தேன்.
    அதில் அவளுக்கு ஒரு சின்ன சந்தோஷம் இருந்திருக்கலாம்.
    படிக்க படிக்க பல கோணங்கள் , காட்டும் காவியத்தை முதலில் எழுதிய ஆதி கவியின் மேல் மேலும் மதிப்பு கூடுகிறது.
    சரவணன்

  4. வால்மீகியின் ராமாயணம் எத்தனை அருமையான படிப்பினைகளைக் கொண்டிருக்கிறது ! அவற்றை வெகு அழகாகத் தொகுத்து ஆங்கிலத்திலும் தமிழிலும் பொருள் தந்தமை வெகு சிறப்பு.

    //யானை விற்றபின் அங்குசம் எதற்கு?///

    இந்தத் தலைப்பில் உள்ள பத்தியை நமது தற்போதைய மடாதிபதிகளும், பீடாதிபதிகளும், ராஜகுருமார்களும் படித்திருப்பார்களா என்பது சந்தேகமாக உள்ளது. காட்டுக்கு 14 ஆண்டுகள் போகும் ராமன் என்ற சக்கரவர்த்தியே மரவுரியும் பலம் பறிக்க ஒரு கோடரியும் மட்டுமே போதும் என்று சொல்லும்போது துறவை மேற்கொண்ட நமது முனிவர்களுக்கு எதற்கு பல்லக்கு, தங்க சிம்மாதனம், தங்கக் கிரீடம், பென்ஸ் கார், பலபல சரிகை ஆடை இன்னபிற? ராஜகுரு என்று சொல்லிக் கொண்டால் ஆச்சா?

  5. புகழுரைகளுக்கு மயங்காதவர்கள் இவ்வுலகில் இருப்பது துர்லபம் என்பதைத் தம் மனைவி சீதையிடம் ‘பரதனுக்கு முன்னால் எப்படிப் பேசக் கூடாது’ என விவரித்ததன் மூலம் ஸ்ரீ ராம பிரான் நமக்கு நன்கு உணர்த்தியுள்ளார். அதிலும்கூட பரதனைப்போன்ற நல்ல உள்ளமே சஞ்சலப்படும் அளவு புகழுரை கொடியது என்பதால் சாதாரணர்களிடம் புகழுரை கூடாது என்பதை வலியுறுத்தவே இவ்விடத்தில் பரதன் முன் நிறுத்தப் பட்டிருக்கிறார். அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *