இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 5

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்

முந்தைய பகுதிகள்


தொடர்ச்சி…

5.1 தர்மத்தின்படி வாழ்வு

கைகேயியின் ஆளுமைக்குத் தான் உள்ளான நிலையை விவரித்து, அண்மையில் நடந்து முடிந்த தர்ம சங்கடமான நிகழ்ச்சிகளை இராமனிடம் சொல்வதற்கு வேண்டிய மனோதைரியம் தசரதருக்கு இல்லை. ஆனால் கைகேயிக்கு அது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. முன்பொருமுறை போர்க்களத்தில் தசரதர் அவளுக்குத் தந்த இரு வரங்களையும், தான் அப்போதைக்கு அல்லாது பின்னால் உபயோகிப்பதற்கு அவர் தந்த வாக்குறுதியையும் சொல்லி, தற்போது அவள் கேட்க, அவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவர் தார்மிக ரீதியாகக் கட்டுப்பட்டிருப்பதையும் இராமனிடம் சொன்னாள். அதன்படி அவளது முதல் கோரிக்கையாக இராமனுக்குப் பதில் பரதன் முடிசூட்டிக் கொள்ளவேண்டும் என்றும், இரண்டாவது கோரிக்கையாக இராமன் அடுத்த பதினான்கு வருடங்கள் வனவாசம் செய்யவேண்டும் என்றும் நாக்கூசாமல் சொன்னாள்.

இராமனோ பரதன் முடிசூட்டிக் கொள்வதற்குத் தனக்குப் பரிபூரண சம்மதம் என்றும், அதைக் கூடிய சீக்கிரம் செய்வதற்கு ஆட்களை அனுப்பி பரதனை அயோத்திக்கு உடனே வரவழைக்க வேண்டும் என்றும் சொல்லி, அதுவரை தான் அயோத்தியில் இருக்கவேண்டுமா என்று கைகேயியையே பார்த்துக் கேட்கிறான். அவளும் பரதன் வரும்வரை இராமன் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி, அதனால் இராமன் உடனே காட்டுக்குப் புறப்படலாம் என்கிறாள். ஒருவேளை இராமன் புறப்படாது அங்கு இருந்தால் ஏதாவது ஒரு வகையில் நிர்ப்பந்தம் வந்து இராமனின் மனமும் மாறலாம் என்று கைகேயி நினைத்தாள் போலும். கைகேயிக்குத் தான் சொல்லும் வார்த்தைகளில் முழுநம்பிக்கை வரவில்லை என்று இராமனுக்கு யூகிக்க முடிகிறது. அதனால் பொதுவாக எல்லோருக்கும் உள்ளது போலே தனக்குச் செல்வத்திலும், பதவி போகங்களிலும் விருப்பமில்லை என்றும், காட்டில் தவம் செய்யும் முனிவர்களின் வாழ்க்கையே தனக்கும் விருப்பம் என்றும் கைகேயிடம் இராமன் சொல்கிறான்.

நாஹமர்த²பரோ தே³வி! லோகமாவஸ்துமுத்ஸஹே |
வித்³தி⁴மாம்ருʼஷிபி⁴ஸ்துல்யம்ʼ கேவலம்ʼ த⁴ர்மமாஸ்தி²தம்|| 2.19.20||

தே³வி O devi, தேவி
அஹம் I, நான்
அர்த²பர​: interested in wealth, செல்வத்தில் விருப்பம் கொண்டவனாக
ந not, இல்லை
லோகம் this world, இந்த உலகில்
ஆவஸ்தும் to follow, பின்பற்றி
உத்ஸஹே am striving, முயற்சி செய்கிறேன்
கேவலம் only, மட்டும்
த⁴ர்மம் righteousness, தர்மம்
ஆஸ்தி²தம் devoted to, முதன்மையாக
மாம் me, என்னை
ருʼஷிபி⁴​: with ascetics, தபஸ்விகளோடு
துல்யம் similar, ஒன்றாக
வித்³தி⁴ you may know, தெரிந்து கொள்.

தேவி, செல்வத்திற்காக இந்த உலகில் வாழவேண்டும் என்ற விருப்பம் எனக்குக் கிடையாது. தர்ம சிந்தனை ஒன்றே குறிக்கோளாக வாழும் தவச் சீலர்களுக்கு ஒப்பானவன் நான், இதைத் தெரிந்து கொள்.

ஒருவன் வாழ்க்கை முறையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்கள் மிகவும் துல்லியமாக வகுத்துச் சென்றிருக்கின்றனர். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்று அவர்கள் சொன்ன நான்கையும் ஒருவன் நான்கு தூண்களாக்கி அவைகளின் மேல் வாழ்க்கை எனும் மண்டபத்தை எழுப்பினால் அவனே அறிஞன் ஆவான். அவை ஒவ்வொன்றுக்கும் அனர்த்தம் கற்பிப்பவன் வெறும் அடுக்குச்சொல் அறிஞனாகத்தான் வளர்வான். எண்ணம்-சொல்-செயல் என்ற மூன்றும் ஒன்றிய ஒழுக்கம் மிகுந்த, அனைவர்க்கும் பயன் தரும் வாழ்வை வாழ்வதே தருமமிகு வாழ்வு. அத்தகைய தர்மத்தின்படி செயல்கள் புரிந்து ஈட்டப்படும் செல்வமே அர்த்தம் எனப்படும். அந்தச் செல்வத்தைக்கொண்டு தனது ஆசைப்படி இகலோக வாழ்க்கையை நடத்துவதே காமம் ஆகும். இவை அனைத்தையும் செவ்வனே செய்து ஒருவன் பரலோக வாழ்க்கைக்குத் தன்னையும், முடிந்தால் உற்றார் சுற்றார்களையும் தயார் செய்வதே விடுதலை எனப்படும் மோக்ஷம். இப்படிச் செய்பவனுக்கே அவனது வினைகளின் பயன் அவனைத் தொடர்ந்து, மேலும் அவனை வினைக்கடலில் வீழ்த்தாது, பிறந்ததன் பயனான பேரறிவை அளித்து, பிறவிக் கடலிலிருந்து மீட்டு, என்றும் உள்ள நிலையை உணர்த்தி, ஆனந்த மயமான அந்த உன்னத நிலையில் நிறுத்தும். அதுவே விடுதலை அல்லது மோக்ஷம் எனப்படுகிறது.

அதன் அடிப்படை ஆரம்பம்தான் தருமமிகு வாழ்வு. இப்படிப் படிப்படியாக மோக்ஷத்தை அடையத்தான் நாம் அனைவரும் மறுபடி மறுபடி பிறக்கிறோம். பிறந்ததன் பயன் அறியாது குறிக்கோள் தவறும்போது, நாம் செய்யும் தவறான காரியங்களால் பரமபத சோபனம் விளையாட்டில் வரும் பாம்பு-ஏணிகள் போல, பல பிறவிகள் வந்துபோகின்றன.

5.2 தர்மம் தலை காக்கும்

காட்டிற்குச் செல்வதற்கு இராமன் ஒத்துக்கொண்டதை லக்ஷ்மணன் கடுமையாக எதிர்த்தான். அவனைப் பொறுத்தவரை வயோதிகர் ஆகிவிட்ட தசரதருக்கு புத்தி பேதலித்துவிட்டதால், அவர் கைகேயியால் தவறான வழிக்கு இழுத்துச் செல்லப்பட்டார். தான் அரசுரிமையைக் கைப்பற்றி, தசரதரைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு, இராமனுக்கு முடிசூட்டிவிடத் தான் தயாராக இருப்பதாகவும் அவன் சொன்னான். ஆனால் இராமனோ நடக்கும் எல்லாவற்றையும் தான் நீதி, நேர்மை ஒழுக்கம் மிகுந்த தர்மத்தின் வாயிலாகப் பார்ப்பதாகச் சொன்னான். அதன்படி தந்தை கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தனயனும் எல்லா விதத்திலும் உதவ வேண்டும். அவரது உயிர் போர்க்களத்தில் காப்பாற்றப்பட்டபோது கைகேயிக்கு இரண்டு வரங்களைத் தந்தார். இப்போது அவள் அந்த வரங்களைக் கேட்கிறாள். கைகேயியின் விருப்பங்கள் வேண்டத்தகாதவையாக இருக்கலாம்; ஆனால் அவைகளை நிறைவேற்ற தசரதர் மறுத்தால் அவர் இதுவரை வாழ்ந்துகாட்டிய தார்மிக நிலையிலிருந்து தவறியவராக ஆவார். ஆகவே தார்மிகம் தழைக்க ஒரு மகனும் தன் தந்தை பக்கம் நின்று அவரது கௌரவத்தைக் காக்க உதவவேண்டும் என்கிறான்.

யஸ்மிம்ʼஸ்து ஸர்வே ஸ்யுரஸன்னிவிஷ்டா த⁴ர்மோ யத ஸ்ஸ்யாத்தது³பக்ரமேத |
த்³வேஷ்யோ ப⁴வத்யர்த²பரோ ஹி லோகே காமாத்மதா க²ல்வபி ந ப்ரஸ²ஸ்தா || 2.21.57||

யஸ்மின் in which ever man, எவனொருவனிடம்
ஸர்வே all these three, இம்மூன்றும்
அஸன்னிவிஷ்டா​: ஸ்யு​: are not combined (in that state), சேர்ந்து இல்லையோ
யத​: by which, எதனால்
த⁴ர்ம​: righteousness, தர்மம்
ஸ்யாத் pervading, தழைக்கிறதோ
தத் that one, அதனை
உபக்ரமேத should be performed, செய்யவேண்டும்
லோகே in the world, இவ்வுலகில்
அர்த²பர​: a seeker of wealth, செல்வம் சேர்ப்பவன்
த்³வேஷ்ய​: is abhorred, வெறுக்கப்படுகிறான்
ப⁴வதி ஹி happens, நடப்பது
காமாத்மதாபி subjecting to fulfilment of desires also, ஆசையினால் உந்தப்பட்டுக் கூட
ந ப்ரஸ²ஸ்தா க²லு is not admired by the wise men, சான்றோர்களால் புகழப்படுவதில்லை.

நீதி, நேர்மை, ஒழுக்கம் இல்லாத வழிமுறைகளை எல்லாம் விட்டொழித்து, ஒருவன் தார்மிக முறைப்படிதான் வாழ வேண்டும். இன்பம் ஒன்றையே நாடும் மனிதனை வெறுக்கும் சான்றோர்கள், ஆசையினால் உந்தப்பட்டு செல்வம் சேர்க்கும் மனிதனையும் புகழ்வதில்லை.

தார்மிக வாழ்வு வாழும் ஒருவன் பல சமயம் சோதனைகளையும் சந்திக்கவேண்டும்; பலத் தியாகங்களைச் செய்யவேண்டியும் வரும். அப்போது தரம் மிக்க தார்மிக வாழ்வைத் தூக்கி எறிந்துவிடாது, சோதனைகளை ஏற்று, தியாகங்களையும் செய்வதே மேலான செயல்.

5.3 சமத்துவ மனப்பான்மை

மறுநாள் ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்றபோதுதான் நாம் கண்ட அனைத்து நிகழ்ச்சிகளும் நடந்தேறின. அன்றிரவு வரை ராமனிடம் எந்தவித வெறுப்பும் இல்லாது, மாறாக அவனைத் தன் மகன் போல்தான் கைகேயி பார்த்து மகிழ்ந்திருந்தாள். அதை நன்கு அறிந்த ராமனுக்கும், கைகேயி அப்படி மனம் மாறுவதற்கு என்னதான் நடந்திருக்கும் என்று புரியவில்லை. அது பற்றி யோசித்தபோது, இன்பம்-துன்பம், தைரியம்-அச்சம், லாபம்-நஷ்டம், பிறப்பு-இறப்பு என்றிவ்வாறான இருமைகள் வாழ்வில் சில சமயம் திடீரென்று தோன்றும்போது அது எதனால் அப்படி நிகழ்கின்றது என்று சொல்ல முடியாது என்றே அவருக்குத் தோன்றியது. “எல்லாம் இறைவன் செயல்” என்று சொல்வதுபோல் அவை எல்லாமே கடவுளின் செயல்தான். அதை ஏன், எதற்காக, எப்படி என்றெல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கமுடியாது. அந்தச் சமயங்களில் நடப்பது அனைத்தையும் எல்லாம் ஒன்றே என்ற சமத்துவ மனப்பான்மையுடன் பார்ப்பது ஒன்றே குணவான் செய்யக்கூடியது என்று ராமன் லக்ஷ்மணனுக்குச் சொல்கிறார். மேலும் அயோத்தியில் இருந்து ஆட்சிபாரத்தைச் சுமப்பதைவிட காட்டிற்குச் சென்று வாழ்வதே மேலானது என்கிறார்.

மா ச லக்ஷ்மண! ஸந்தாபம்ʼ கார்ஷீர்லக்ஷ்ம்யா விபர்யயே|
ராஜ்யம்ʼ வா வனவாஸோ வா வனவாஸோ மஹோத³ய:|| 2.22.29||

லக்ஷ்மண! Lakshmana,
லக்ஷ்ம்யா​: of kingdom, அரசுரிமை
விபர்யயே due to its loss, நஷ்டமாகியதே என்று
ஸந்தாபம் sorrow, துக்கம்
மா கார்ஷீ​: do not experience, அனுபவிக்காதே
ராஜ்யம்ʼ வா either kingdom, ஆள்வது அல்லது
வனவாஸோ வா or exile to forest, வனவாசம் செய்வது
வனவாஸ​: exile to the forest, வனவாசம்
மஹோத³ய​: is glorious, புகழைத் தருவது

ஓ, லக்ஷ்மணா!, அரசுரிமை போய்விட்டதே என்று வருந்தாதே. ஆள்வது அல்லது காட்டில் வனவாசம் செய்வது இவ்விரண்டில், வனவாசமே புகழைத் தரும்.

துரதிருஷ்டமோ துக்கமோ நேரும்போது மனச்சாந்தி மிக அவசியம். இருளாகிய துரதிருஷ்டத்திற்கு, ஒளிமிக்க காலை விடியும்போது, ஒரு முடிவு உண்டு. கெட்டகாலம் வரும்போது நல்ல காலம் கூடிய சீக்கிரம் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன், எல்லாம் நல்லதற்கே என்ற சமத்துவ மனப்பான்மையும் வேண்டும்.

5.4 வலிமையே வெல்லும்

கைகேயியின் மனமாற்றத்திற்கு தத்துவ ரீதியாகவோ, புரிந்து கொள்ளும்படியாகவோ எந்தவித காரணங்களும் சொல்ல இயலாததால் இராமன் அதனை இறைவனின் செயல் என்றே எடுத்துக்கொண்டார். மேலும் தனது தம்பியான லக்ஷ்மணன் சொன்னது போன்று வலிமை கொண்டு, போரிட்டு ஆட்சியைப் பிடிப்போம் என்றதையும், தந்தையின் வாக்கைக் காப்பாற்ற உதவும் கடமையிலிருந்து தவறுவதால், அது அதர்மமானது என்றும் சொல்லி மறுத்து விட்டார். ஆனால் லக்ஷ்மணனுக்கோ தர்மத்தின் பாதை என்றெல்லாம் சொல்லப்படும் சாதுவான முறைகளிலும் நம்பிக்கை இல்லை; இறைவனின் செயல் எனப்படும் காண்பதற்குப் புறம்பான சொற்களிலும் நம்பிக்கை இல்லை. தான் தனது வலிமை கொண்டு எதையும் அடையும் முறையே அவனுக்குச் சரியெனப்படுகிறது.

விக்லபோ³ வீர்யஹீனோ யஸ்ஸ தை³வமனுவர்ததே |
வீராஸ்ஸம்பா⁴விதாத்மானோ ந தை³வம்ʼ பர்யுபாஸதே || 2.23.16||

ய​: who, எவர்
விக்லப³​: one who is overcome with fear, பயத்தால் முடியாதவர்கள்
வீர்யஹீன​: a cowardly man, கோழைகள்
ஸ​: that one, அவர்கள்
தை³வம் the destiny, விதி
அனுவர்ததே follows, பின்பற்றுவார்
ஸம்பா⁴விதாத்மான​: respected souls, தன்னம்பிக்கை உடையோர்
வீரா​: valiant people, வலிமை கொண்டோர்
தை³வம் destiny, விதியை
ந பர்யுபாஸதே do not depend upon, சார்ந்திருக்க மாட்டார்கள்.

கோழைகளும், பயத்தால் முடியாதவர்களுமே விதி என்று சொல்லி செயல்களைத் தவிர்ப்பார்கள். தனது உரிமையை நிலை நாட்டக்கூடிய வலிமை கொண்டோர் விதியை எதிர்த்துப் போராடுவார்கள்.

ஆட்சியில் இருக்கும்வரை அதை உபயோகித்து தனக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்; ஆண்டவனின் விருப்பமே ஆள்பவனின் விருப்பம் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம், என்று இப்படித்தான் தோள் வலிமை, மற்றும் வாய் வலிமையில் பெரிதும் நம்புவோர் சொல்லிக் கொள்வார்கள். அப்படிச் சொல்லிவிட்டு ஏதோவொரு தவறால் ஆட்சியை இழந்து தவிக்கும்போது அவர்களே ஆண்டவனிடம் அழுதுகொண்டு உதவி வேண்டுவார்கள். அப்படித்தான் ஆண்டவனிடம் வேண்டுவோர்களில் அவர்களும் உண்டு என்று பகவான் “அர்த்தோ ஜிஞாசுர் அர்த்தார்த்தி ஞானி ச” என்று கீதையில் (7:16) கூறுகிறார்.

5.5 வாழ்க்கைத் துணையின் கடமை

இராமரின் தாயார் கௌசல்யை அவரிடம் வனவாசத்திற்குப் போகவேண்டாம் என்றுதான் முதலில் பேச ஆரம்பித்தார். ஆனால் இராமரோ தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்ததால் அவரது மனத்தைக் கலைக்க முடியவில்லை. அப்படியே போகத்தான் வேண்டுமென்றால் காட்டிற்குத் தன்னையும் அழைத்துப் போகச் சொல்லி வற்புறுத்தினார். ஆனால் இராமரோ, தசரதர் தவறு என்று என்னதான் செய்திருந்தாலும் அவரது வயோதிக நிலையில் அவரைத் தனியே விட்டு வருவது என்பது நல்லதல்ல என்றார். அவரது கடைசி காலத்தில் அவரது துணைவியாக அவரை நன்கு பராமரித்தல் அவசியம் என்றும் சொன்னார்.

ஸு²ஸ்²ரூஷாமேவ குர்வீத ப⁴ர்து​: ப்ரியஹிதே ரதா|
ஏஷ த⁴ர்ம​: புரா த்³ருʼஷ்டோ லோகே வேதே³ ஸ்²ருத​: ஸ்ம்ருʼத:|| 2.24.27||

ப⁴ர்து​: husband(அ)s, கணவரின்
ப்ரியஹிதே upon the welfare and pleasure, சுக துக்கங்களில்
ரதா an interested woman, பங்கு கொள்ளும் மனைவி
ஸு²ஸ்²ரூஷாமேவ service alone, சேவை ஒன்றையே
குர்வீத shall render, செய்வார்கள்
ஏஷ​: alone, மட்டுமே
புரா in ancient times, பாரம்பரியமாக
லோகே in this world, இவ்வுலகில்
த்³ருʼஷ்ட​: is seen, பார்க்கப்படுகிறது
வேதே³ in vedas, வேதங்களிலும்
ஸ்²ருத​: is heard, கேட்கப்பட்டிருக்கிறது.
ஸ்ம்ருʼத​: declared in Smritis, சொல்லப்பட்டிருக்கிறது,
த⁴ர்ம​: is truth, அதுவே உண்மை

ஒரு மனைவி தனது கடைமையாகத் தன் கணவரின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளவேண்டும். இது நமது பாரம்பரிய பெருமை; வேதங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது, தலைமுறைகளாகச் செவி வழியாகவும் கேட்கப்பட்டிருக்கிறது.

வாழ்வின் இறுதி நாட்களில் ஒருவன் மற்றோர்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. கணவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாலோ, முதுமையினால் தளர்ச்சி அடைந்திருந்தாலோ மனைவி அவருக்கு எல்லாவிதமான உதவிகளையும், சேவையையும் பாசத்துடனும், இன்முகத்துடனும் செய்யவேண்டும்.

வால்மீகி முனிவர் இப்படிச் சொல்வதால் இதை ஆண்களுக்கேன்றே ஒருதலைப் பட்சமாகச் சொல்வதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்தச் சூழ்நிலையில் தசரதர் முதுமையினாலும், தாங்க முடியாத துக்கத்தில் வீழ்ந்திருப்பதாலும் வெகுநாட்கள் அவர் உயிருடன் இருக்க முடியாது என்பதே உண்மை. ஆதலால் தனது தாய்க்கு அவள் தன் கணவருக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி இராமர் சொல்வதாக அமைந்திருப்பதால், இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது. வேதங்களோ, சாஸ்திரங்களோ ஆணையும் பெண்ணையும் பிரித்துப் பார்ப்பதே இல்லை. அந்தந்தச் சூழ்நிலையைத்தான் கவனிக்கவேண்டும். மனைவிக்கு இந்த மாதிரி துயரம் வந்திருக்குமானால் இதேபோல் சேவை செய்யவேண்டும் என்று கணவனது கடமையாகச் சொல்லப்பட்டிருக்கும். இங்கு காளிதாசர் குமார சம்பவத்தில் சிவன் பார்வதியிடம் “நான் உனக்குச் சேவை செய்யும் அடிமை” என்ற பொருள் வரும்படி “தவஸ்மி தாச” என்று சொல்வதாக அமைத்திருப்பதையும் கவனிக்கவேண்டும். வேதங்களையோ, சாஸ்திரங்களையோ ஆணாதிக்கத்திற்கு அடிபோடுவதாக தவறாகத் திரித்து மேற்கோள் காட்டக்கூடாது.

(தொடரும்)

One Reply to “இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 5”

  1. //கெட்டகாலம் வரும்போது, ‘நல்ல காலம் கூடிய சீக்கிரம் பிறக்கும்’, என்ற நம்பிக்கையுடன், ‘எல்லாம் நல்லதற்கே’ என்ற சமத்துவ மனப்பான்மையும் வேண்டும்.//
    வால்மீகி தந்துள்ள அருமையான பாடம் இது.

    இதனுடன், ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் வயோதிகக் காலத்தில் உறுதுணையாய் இருக்க வேண்டும் என்பதை ஸ்ரீ ராமாயணத்தின் மூலம் அவதார புருஷனின் வாக்கால் விளக்கியிருப்பது இன்னும் அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *