க.நா.சு.வும் நானும் – 3 [நிறைவுப் பகுதி]

க.நா.சு நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை

முந்தைய பகுதிகள் : பகுதி 1 | பகுதி 2

தொடர்ச்சி…

ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு முறை (14/28.7.1979) “From which soil do the Writers emerge?” என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதன் முக்கியத்துவம் கருதி அதை ‘யாத்ரா‘ பத்திரிகையில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தேன். அதிலிருந்து ஒரு பகுதியை இங்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

”ஒரு எழுத்தாளனின் பிறப்பு, சமூக மூலங்கள், இதற்கு அப்பால் அவன் இயங்கும் சமூகப் பின்னணி, அவனது இளமைக் காலம், வளர்ச்சி, படிப்பு, வேலை மற்றும் அவனது சம்பாத்திய வழிகள், சமூகத்தில் தனது வாழ்க்கை எவ்வகையில் அமைந்துள்ளன என்பன போன்றவை அவன் எழுத்தில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்… ஒரு பரந்த ஆய்வு சாத்தியமாக, நமது எழுத்தாளர்களின் விமர்சன பூர்வமான வாழ்க்கை வரலாறுகள் தேவைப்படுகின்றன. இது இப்போதும் நம்மிடையே கிடையாது.“

 

இன்னமும் வேண்டுமா? இதோ:

“இவர்களிடையே (தாழ்த்தப்பட்டோர் இலக்கியம் எழுதுபவர் களிடையே) எத்தனைபேர் அழுக்குப்படாத உடையணிவோரின் புத்திரர்கள் என்றும், என்ஜினியர், டாக்டர், தொழில் துறை மனிதர் மற்றும் இவர் போன்றோரின் புத்திரர் என்பனவெல்லாம் இந்திய எழுத்தாளர்களின் சமூக மூலங்கள் பற்றிய ஆராய்ச்சி தொடங்கப்பட்டால் மட்டுமே தெரியும்… இந்தியாவில் பாட்டாளிகள் இலக்கியம் இருந்தும்கூட அது உண்மையில் பாட்டாளிகளால் பாட்டாளிகளுக்காக எழுதப்பட்டதாக இல்லாமல் பாட்டாளிகளின் ஆதரவாளர்களால் எழுதப்படுபவை. இவ்வாதரவாளர்களோ பெரும்பாலும் தம் எழுத்துகளில் காட்டும் சித்தாந்தங்களுக்கு எதிராகவே வாழ்க்கை நடத்துபவர்கள்.”

 

வேறோரிடத்தில் அவர் சொல்கிறார்:

“தொழிலாளர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் பற்றி, கல்லூரிப் பேராசிரியர்களாகவும், உயர்மட்ட கல்வி அல்லது சர்க்கார் அதிகாரிகளாகவும் இருந்துகொண்டு கீழ்மட்டத் துறையினர் நலம் பற்றிப் பேச, எப்படி இந்த இந்திய முற்போக்கு என்று கூறிக்கொள்கிற நாவலாசிரியர்களுக்கு வாய் இருக்கிறது? சொந்த அனுபவத்திலிருந்து வந்தால் எந்த விஷயத்தையும் ஏற்றுக் கொள்ளலாம் சும்மா பேசிவிட்டு மாதா மாதம் சம்பளத்தை வாங்கிக்கொண்டு கம்யூனிஸம் பேசிக்கொண்டிருப்பதில் யாருக்கு என்ன லாபம்? (நாவல் கலை பக்-123)

இவையெல்லாம் சொல்லப்பட்டால், பாதிக்கப்படுபவர்கள், இரட்டை வாழ்க்கை வாழ்பவர்கள், “இதுக்கும் எழுத்துக்கும் என்ன சம்பந்தம்? இது Personal attack” என்றார்கள். ”என் எழுத்தை மட்டும் பார்” என்கிறார்கள். எல்லா வேஷதாரிகளுக்கும் இது சௌகரியம்தான்.

இவை எனக்குத் தெரிய வந்தவை; க.நா.சு இதையெல்லாம் எழுதியிருக்கிறாரா என்று கேட்பவர்கள், எழுதியிருந்தாலும் கண்டு கொள்ளாதிருப்பது சௌகரியம் என நினைப்பவர்கள் உண்டு. இவை நினைவில் இருப்பவை மாத்திரமே. இருப்பினும் இவை எதுவும் யார் கணக்கிலும் எடுத்துக் கொள்ளப்பட வில்லை. விமர்சகராக எத்தனை பேரை நிராகரித்திருக்கிறார்? நிராகரிப்பு என்றால் க.நா.சு.வும் கொஞ்சம் அறியட்டும் என்ற பழிவாங்கும் மனம் செயல்பட்டது போலிருக்கிறது இது. ஆனால் அப்படியல்ல. தமிழனுக்கே ஆன எதற்கும் மௌனம் என்ற பண்பாடு தான். இது பற்றி யாரும் ஒரு கணம் கூட சிந்தித்துப் பார்த்ததில்லை. சிலுவை சுமந்த வாழ்வு என்றுதான் சொல்ல வேண்டும். க.நா.சு.வின் சிஷ்யராக தன்னை காட்டிக் கொண்டவரிடமிருந்து கூட, “க.நா.சு.வாவது நாவல், சிறுகதை என்று சிலது எழுதிப் பார்த்திருக்கிறார்” என்று சொல்லும் சின்னத்தனம் தான் வெளிப்பட்டிருக்கிறது. இவரது அற்ப புத்தியும் விஷமத்தன எழுத்தும் இவரது நண்பர்கள் பாராட்டுக்காரர்களுக்கும் கூட நன்கு தெரியும். எழுதியும் இருக்கிறார்கள். க.நா.சு.வுக்கு என்று ஒரு சிஷ்யர் கூட்டம் கிடைத்திருக்கிறதே, வேதனை தான். யேசுவுக்கு ஜுதாஸ் ஒருத்தன், பன்னிரண்டு பேரில் ஒருத்தன். ஆனால் க.நா.சு.வுக்கு ஜுதாஸ்கள் அதிகம். சரி,

வேறு வகைகளும் உண்டு. ‘தாய்’ என்ற பத்திரிகையை நடத்தி வந்த வலம்புரி ஜான் (புதுமைப் பித்தன் கருத்தரங்குக்கு வலம்புரி ஜானையும் அழைத்திருந்தார் க.நா.சு.) க.நா.சு.வை வெகுவாகத் தாக்கி எழுதிக்கொண்டிருந்தவர், என்ன காரணத்தாலோ மனம் மாறி க.நா.சு. வீடு சென்று தம் தவற்றுக்கு வருந்துவதாகச் சொன்னாராம். க.நா.சு. அதற்கு எவ்வித முகச் சலனமுமின்றி, “அட சர்த்தான்யா, விடும் இப்ப என்ன அதுக்கு?” என்று வெகு அமைதியாக அவருக்கு சமாதானம் சொன்னாராம். பின், க.நா.சு. ‘தாய்’ பத்திரிகையிலும் எழுதினார் என்று எனக்குச் சொன்னார்கள்.

பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிலாவது தாம் புகழப்படாத எரிச்சலில் பேசுகிறார்கள் அல்லது வாய்மூடி இருக்கிறார்கள் என்று சமாதானம் சொல்லலாம். ஆனால் இலங்கையில் பெரிய சட்டாம்பிள்ளையாக வலம் வந்த ஒரு பேராசிரியர், பர்மிங்ஹாமில் ஜார்ஜ் தாம்ப்சனின் கீழ் ஆராய்ச்சி செய்தவர், இலங்கையில் தம்மை அண்டியவர்களுக்கெல்லாம் இலக்கிய தீக்ஷை அளித்து தம் பக்தர் கூட்டத்தைப் பெருக்கிக் கொண்டவர், ஏன் க.நா.சு.வைக் கண்டு எரிச்சல்பட வேண்டும்? இத்தகைய பட்டுப் பீதாம்பர வைர மணிகள் பதித்த கிரீடம் தரித்து ஊர்வலம் வந்தவர் ஏன் மிகவும் கீழ்த்தரமாகவும் பொய்களும் வசைகளும் நிறைந்த புத்தகம் எழுதி அதை ஏதோ தன் ஆழ்ந்த புலமையின், விமர்சன தீரத்தின் பதிவு என்ற பாவனையில் வைத்துள்ளார்? அந்த பேராசிரியர், அறிஞர், கலாநிதி கைலாசபதி, தன் புத்தகத்தில், “நவீன தமிழ் இலக்கியத் திறனாய்வில் க.நா.சு.வின் பாத்திரம்: க.நா.சு.வும் அவர் சீடர்களும்”. இது தவிர இன்னொரு கட்டுரையும் நினைவுக்கு வருகிறது. அவர் இது போன்று எழுதிய பலவற்றில். ‘க.நா.சு.வும் மைனாரிட்டி கலாசாரமும்’ கூட ஒன்று.

இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் முற்போக்குகளுக்குக் குருவாகவும் ஒரு மாமேதையாகவும் உலா வந்த இந்த கலாநிதி எத்தனை கடைத்தரமான மனிதர், எத்தனை பொய்யான திரிபு வாதங்களை முன்வைப்பவர் என்பதற்கு அவரது எழுத்திலிருந்து ஒரு சில மேற்கோள்கள். இன்னமும் இவர் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் முற்போக்குகளால் பூஜிக்கப் படுபவர்.

”என்னதான் இலக்கியக் கொள்கைகளை அள்ளி வீசினாலும், க.நா.சு.விடம் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்ற பாகுபாட்டுணர்ச்சி ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதனை அம்மணமாகக் காட்டிக்கொள்ளாத வகையில் திறனாய்வு முலாம் பூசி மெருகூட்டும் திறனும் அவருக்கு நிரம்ப உண்டு. அடிப்படையில் இது ஒரு வர்க்கப் பிரச்சினையேயாகும். எனினும் தமிழ்நாட்டு அரங்கின் பரிபாஷையில் கூறுவதானால், நிலை இழந்த பார்ப்பனர்களுக்கு நிலைபேறு தேடும் இலக்கியக் கைங்கர்யத்தை செய்து வந்திருப்பவர் க.நா.சு”.

(இம்மாதிரியான ஒரு பழியை தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர் எவருமோ கூட, மறுபடியும், பாதிக்கப்பட்ட அகிலன் போன்றோருமோ கூட க.நா.சு. மீது சுமத்தியதில்லை. இந்த மாதிரியெல்லாம் பழிசுமத்துவதற்கு மிகவும் கடைத்தரமான குணங்கள் தேவை.)

இப்படி நான் போகிற போக்கில் சொல்லக் கூடாது. பின்வரும் மேற்கோளில் க.நா.சு., ந.முத்துசாமியின் கதைகளைப் பற்றி ஒரு சக எழுத்தாளரின் கருத்தைச் சொல்லி பின்வருமாறு அதற்கு பதில் எழுதுகிறார்.

”ந.முத்துசாமியின் கதைகளில் மூத்திர வாடை சற்று அதிகமாகவே தெரிகிறது என்று அடிக்கடி என்னிடம் சொல்லி ஒரு புதுமை எழுத்தாளர் தன் புதுமணத்தையும் பரிசுத்தத்தையும் காப்பாற்றிக்கொள்ள முயல்கிறார் என்று காணும்பொழுது எனக்குச் சிரிப்பு வருகிறது. இந்தப் புது எழுத்தாளர் எழுத்தில் விபசாரம் சற்று அதிகம். மூத்திர நாற்றமானால் என்ன, விபசார நாற்றமானால் என்ன, இரண்டையும் சகித்துக்கொள்ளத் தானே சமுதாயம் இருக்கிறது? இந்த இரண்டு நாற்றங்களுக்கும் அப்பால் இலக்கியம் எப்படி அமைந்திருக்கிறது என்று காண்பதுதான் எனது நோக்கமாக நான் எண்ணுகிறேன்”

இதை மேற்கோள் காட்டி, பர்மிங்ஹாமில் கலாநிதி பட்டம் வாங்கிய, ஜார்ஜ் தாம்ப்ஸனின் கீழ் ஆராய்ச்சி செய்த, தமிழக, இலங்கை முற்போக்குகளுக்குப் பிதாமகரான கலாநிதி எம்.ஏ., பி.எச்.டி. இதற்கு பாஷ்யம் தருகிறார்– ”இவ்வாறு தனது எழுத்தில் மணக்கும் சிறுநீர் வாடைக்கு, க.நா.சு.விடமிருந்து இலக்கிய அங்கீகாரமும் பாராட்டும் பெற்றுள்ள ந.முத்துசாமி”

இப்படி ஒருவர் மூளை வேளை செய்யுமானால், இப்படி ஒருவர் காழ்ப்பும் பகையும் கொண்டு சேற்றை வாரி இரைப்பவரானால், அத்தகைய இழிபிறவியை என்ன சொல்ல? நம்மூரில், சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் படம் இருக்கும் சுவரொட்டிகளின் மேல் அவர்களிடம் கொண்ட வெறுப்பில் சாணியை எறிந்து தம் ஆத்திரத்தைத் தீர்த்துகொள்ளும் ரசிகர்களின் தரத்திற்கும் இந்த கலாநிதியின் தரத்திற்கும் என்ன வித்தியாசம்? இத்தகைய குணம் கொண்ட ஒருவரை இலக்கிய உலகில் நடமாடும் தகுதியை விடுங்கள், ஒரு சாதாரண மனிதராகக் கூட நம் சமூகத்தில் வாழும் தகுதி கூட உண்டா என்பது கேள்விக்குரிய விஷயம். தனக்குப் பிடிக்காத நடிகரின் சுவரொட்டியில் சாணி எறிபவர்கள் இருக்கிறார்களே, அவர்களோடு இவரும் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று சிலர் வாதமிடலாம். சரி நம்மூருக்குத் திரும்பலாம்.

க.நா.சு.வின் சிஷ்யகோடிகளில் ஒருவர், கைலாசபதியால் இலங்கைக்கு விருந்தினராக அழைக்கப்பட்டு கழுத்தில் அணிந்த மாலையுடன் பேசுகிறார்– ”இவரது (கைலாசபதியினது) பல தனிக்கட்டுரைகள், தொடர்கட்டுரைகளாலும் இலங்கைத் தமிழ் இலக்கிய விமர்சன உலகில் க.நா.சு.வுக்கு ஒரு நிரந்தர இடம் உண்டு. இவருடைய விமர்சனப் பாங்கில் தனி நபர் வசைபாடுதலும் அக்கப் போர்களும் இயல்பாகவே தவிர்த்துவிட முடிகிறது”.

விருந்தும், மாலையும் எப்படியும் யாரையும் பேசவைக்கும் போலும். ”க.நா.சுவாவது ஏதோ சிறுகதை, நாவல் என்று எழுதிப் பார்த்திருக்கிறார்” என்று சொன்ன வாய் இது.

கைலாசபதியாவது விமர்சன தளத்தில் தனக்குப் போட்டி என, தான் கருதுபவரை தன் இழிகுணத்துக்கேற்ப எழுதுகிறார் என்று புரிந்து கொள்ளலாம் என்றால், க.நா.சு.வின் சிஷ்யருக்கு விருந்தும் மாலையும் போதும். பார்ப்பன நிலைபேற்றுக்காகத் தரம் பேசுபவர் என்று க.நா.சு.வைக் குற்றம் சாட்டும் கைலாசபதி, க.நா.சு தரம் கண்ட ஒரு பார்ப்பனர் (ந.முத்துசாமி) எழுத்தில் மூத்திர வாடையும் நுகர்வும், இன்னொரு பார்ப்பனர் எழுத்துக்கு (அசோகமித்திரன்) இலங்கைக்கு அழைப்பும், மாலையும் விருந்தும். க.நா.சு.வுக்கு பார்ப்பனர் அடையாளம்தான் தேவை என்றால், இந்த இரண்டு பார்ப்பனரில் வேறுபாட்டுக்குக் காரணம் என்ன? இது கட்டாயம் ஜார்ஜ் தாம்ப்சனிடம் கற்றதல்ல. “வாருங்கள் நிலவிலே கதைக்கலாம்” என்று தலித் எழுத்தாளரை வீட்டுக்குள் அனுமதிக்காது வெளியே அழைத்துச் செல்லும் முற்போக்கு. இது யாருடைய நிலைபேற்றுக்கு? யாழ்ப்பாண மண்ணில் நீடிக்கும் சைவவேளாள பிரக்ஞையின் நிலை பேற்றுக்கா?

காரணம், க.நா.சு.வின் இலக்கியத் தரம் எந்த முற்போக்கையும், வணிக எழுத்தையும் நிராகரிப்பதால், இலங்கை முற்போக்கு, எம்.ஜி.ஆர்., சிவாஜி ரசிகன் செய்யும் காரியத்தை ஒரு கலாநிதி, எம்.ஏ., பி.எச்.டி செய்கிறது.

க.நா.சு.வின் விமர்சன இயக்கம் நீடித்த சுமார் 40 வருட காலம் எத்தகைய கீழ்த்தரமான தாக்குதல்களையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று எடுத்துச் சொல்ல முற்போக்குகளும் இலங்கைத் தமிழரும் இன்னமும் குரு சன்னிதானமாகப் போற்றும் கைலாசபதியின் பேச்சும் எழுத்துமே சான்று சொல்லும். தி.மு.க., தி.க. கூட இப்படிப் பேசவில்லையே. யாழ்ப்பாண சைவ வேளாள மேலாண்மைச் சாதி உணர்வு வேண்டுமோ அதற்கு?

க.நா.சு. தன் கடைசிக் காலங்களில், எண்பதுகளில் என்று வைத்துக் கொள்ளலாம்; சென்னைக்கு இடம் பெயர்ந்தார். வாழவேண்டுமே. எல்லாப் பத்திரிகைகளுக்கும் எழுதினார். அந்நாட்களில் அவர் நிறைய எழுதினார். அநேகமாக எல்லா பத்திரிகைகளுக்கும் எழுதினார். இத்தனை நாட்களாகக் கண்டுகொள்ளாத க.நா.சு.வை இப்போது எப்படி தமிழ் நாடே ஏதோ ஒட்டு மொத்தமாகக் கொண்டாட வந்துவிட்டது போல் அல்லவா இருக்கிறது என்று எனக்கு வியப்பாக இருந்தது. கண் பார்வை அவருக்கு மிகவும் மோசமாகிக்கொண்டு வந்தது. படிக்க வேண்டும். எழுதவும் வேண்டும். அதை நிறுத்த முடியாது. சில சமயங்களில் அவர் ரோடில் விழுந்து விடுவதாகக் கூட எனக்குச் செய்திகள் வந்தன. எனக்கு மிக வருத்தமாக இருந்தது தமிழ்நாட்டு தெருக்களில் விழுந்து கிடப்பது க.நா.சு என்னும் ஒரு வயோதிகர் அல்ல. தமிழ் அறிவுலகம் விழுந்து கிடக்கிறது என்றுதான் எனக்குத் தோன்றும். ஆனாலும் தனித்து வாழ, தன் எழுத்தில் வாழ வேண்டும், அந்த மங்கிய கண்களோடும் கிழண்டு விட்ட உடலோடும். அவர் எல்லா பத்திரிகைகளிலும் எழுதியதை கேலியாக, கேவலமாகப் பேசியவர்களின் குரலையும் நான் கேட்டதுண்டு. அதை அவரது சரிவாகப் பார்த்தார்களோ, அல்லது பார்க்க விரும்பினார்களோ தெரியாது. ஆனால், எங்கு எழுதினாலும் அவர் எழுதுவதைத் தான் எழுதி வந்தார். தன் நேர்மையை, தனக்குப் பட்ட உண்மையை அவர் அடகு வைத்துவிடவில்லை, தன் வயோதிக கால ஜீவனத்துக்காக. இது பற்றி, வெகு காலம் கழித்து, நான் சென்னைக்கு வந்த 2000-இல் எனக்குக் கிடைத்த ஒன்றை இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

எனக்குத் தெரிந்து வேறு எவரையும் விட (இளைய தலைமுறையினரில்) க.நா.சு.விடம் அதிகம் நெருங்கிப் பழகியவரும், க.நா.சு.விடம் விசுவாசம் நிறையக் கொண்டவரும், தனிமனிதராக இருந்து கொண்டே எந்த வசதியுமின்றி, க.நா.சு.வின் எழுத்துகளை தம்மால் இயன்றவரை பிரசுரித்தவருமான தஞ்சை பிரகாஷை அவரது கடைசி காலத்தில் பேட்டி கண்ட தஞ்சை அன்பர்கள் ‘கூடாரம்’ என்ற இதழில் அவரது பேட்டியைப் பிரசுரித்திருக்கின்றனர். அதிலிருந்து இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு பகுதியை மாத்திரம் இங்கு எடுத்துச் சொல்லியே ஆகவேண்டும் என்று தோன்றுகிறது..

சத்தியமான படைப்புக்கும் வாழ்க்கைக்குமான ஒரு மிகச் சிறந்த உதாரணமாக ஒரு சம்பவத்தை நினைவு கூறுகிறார் (பிரகாஷ்).

“கலைஞர் கருணாநிதி ஒரு தடவை, “க.நா.சு. மிகப் பெரிய, ஒரு தலை சிறந்த விமர்சகர். அவரைக் குங்குமத்திலே விமர்சனங்கள் எழுதச் சொல்லுங்க. அவரோட நாவல் கூட ரெண்டு மூணு நம்ப குங்குமத்திலே தொடரா போடலாம். அவர தொடர்ந்து குங்குமத்திலே எழுதச் சொல்லுங்க. அவர நாம ஒரளவுக்கு ஊக்கப் படுத்தலாம்” அப்படீன்னு சொல்லச் சொன்னார்.

எனக்கு ஒரே ஆச்சரியம், என்னடா இது! திடீர்னு க.நா.சு.வை இப்படி கௌரவப்படுத்தறாங்களேன்னு. அவரும் குங்குமத்திலே கிட்டத்தட்ட 64 பேரைப் பத்தி விமர்சனம் எழுதினாரு. ஓராண்டு கழிச்சி கருணாநிதிக்கு 61-ஆவது நிறைவு விழா வருது. ஒரு ரகசியத் தகவல் பாலசுப்ரமணியம் மூலமா, “பிரகாஷைக் கூட்டீட்டு வாங்க”ன்னு எனக்கு செய்தி வருது. நான் போனேன். மாறன் இருந்தாரு அங்க. உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்வாங்க. அத அனுசரிச்சு நீங்க செய்யணும்னு என்னக் கேட்டுக்கிட்டார். பாலசுப்பிரமணியம் என்னை வெளீலே அழைச்சிட்டுப் போய், “ஒன்னுமில்ல. தொடர்ந்து நாம க.நா.சு.வுக்கு மரியாதை செய்வோம். எந்தப் பத்திரிகையும் தராத அளவுக்கு கௌரவப்படுத்துவோம். தொடர்ந்து ஒவ்வொரு இதழ்லேயும் விமர்சனம் எழுதட்டும்” அப்படீன்னு சொன்னாரு. எனக்கு ரொம்ப சந்தோஷம்! அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சு, “அடுத்த மலருக்கு க.நா.சு.வோட கட்டுரை வேணும், இலக்கிய சாதனையாளர்கள்னு 60 பேரைப்பத்தி இது வரைக்கும் க.நா.சு. எழுதியிருக்கார். இந்தப் பட்டியல்லே கலைஞர் இல்ல, இந்தப் பட்டியல்ல மு.க.வோட பேரு இருக்கணும்னு ஆசைப் படறாரு. அதோட க.நா.சு. தன்னைப் பத்தி எழுதணும்னு விரும்பறாரு. அதனாலே ஏதாவது ஒரு நாவலப் பத்தி, எதையாவது பத்தி ஒரு இரண்டு பக்கத்துக்கு இருந்தாக் கூடப் போதும். அவர ஒரு சிறந்த நாவலாசிரியர் அப்படின்னு அவர கௌரவிக்கணும்னு நாங்க நினைக்கறோம். அவர் சொல்ல நாங்க விரும்பறோம். க.நா.சு.வோட வால் நீங்க. அதுனால நீங்க சொன்னாக் கேப்பாரு..” அப்படீன்னாரு.

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. ஒரு பக்கம் கஷ்டமா இருந்தது. இன்னொரு பக்கம் சிரிப்பா இருந்தது. இவங்க எவ்வளவு தூரம் வெல கொடுத்து வாங்கறாங்கன்னு.

”இதுலே நான் என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?”ன்னு நான் கேட்டேன். ‘நீங்க ஒரு கட்டுரை வாங்கிக்கொடுக்கறது உங்க பொறுப்பு. உங்களோட நாவல் கூட ஒண்ணு போட்டுடலாம். உங்களுக்கும் நல்ல சம்பளம் கொடுத்துடலாம். கலைஞர் உங்க பேர்ல நல்ல நம்பிக்கை வச்சிருக்காரு. அதனால அது ஒன்னும் சிரமமில்லே” அப்படீன்னாங்க.

நான் க.நா.சு. வீட்டுக்குப் போனேன். அப்போ அவருக்கு வயசு எழுபது இருக்கும். மெட்ராசுலே வந்து தங்கியிருக்காரு. அவரு கிட்டே போயி, “ஒரு விஷயம் சொல்லணும். நீங்க ஏன் மு.க. பத்தி இது வர ஒன்னும் எழுதலை?”ன்னு கேட்டேன்..

அதுக்கு அவரு “சொல்றதுக்கு ஒன்னும் இல்லியே. அது தான் ஒன்னும் எழுதலே”ன்னாரு

“இல்லே. நீங்க அவர் படைப்பப் பத்தி ஒரு விமர்சனம் எழுதினா நிறைய பலன் கிடைக்கற மாதிரி தெரியுது. வாரம் 5000-க்கு மேலே வருமானம் வரும்போல இருக்கு. எழுதுங்களேன்”னேன்.

“எழுபது வயசு வரைக்கும் சத்தியத்தத் தவிர வேறு எதையும் எழுதல. இனிப்போய் இந்தக் காரியத்தச் செய்யச் சொல்றியா?”ன்னாரு.

“இல்லே. உங்கள கௌரவப்படுத்தறதாச் சொன்னாங்க” அப்படீன்னேன். என்ன ஒரு மாதிரிப் பாத்தாரு. “இது வரைக்கும் சுத்தமா இருந்துட்டேன். என்னத்த பெரிசா கட்டிக்காத்த? எழுது ஒன்னும் தப்புல்லேன்னு சொல்லு. நான் எழுதறேன்”னு சொன்னாரு. நான் சுதாரிச்சிட்டேன். ஆகா! நம்ம ஆழம் பாக்கறாருன்னு.

நான் சொன்னேன். “எழுதினா எழுதுங்க. இல்ல எழுதாட்டிப் போங்க. அது உங்க விருப்பம். அவங்க சொல்லச் சொன்னாங்க. நான் சொல்லிட்டேன் அவ்வளவுதான் என் வேலை”ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன். அதுக்கப்பறமா க.நா.சு.-வோட விமர்சனக் கட்டுரைகள் குங்குமத்திலே உடனே நிறுத்தப் பட்டது.

(கூடாரம், இதழ் 3. தபால் முத்திரை தெளிவில்லை. அநேகமாக செப். 2000)

அவரது கடைசிக் காலத்தில் எழுதிப் பிழைக்க வேண்டிய நெருக்கடியில் எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதியதை கேலி செய்த புண்ணியவான்கள் அந்தப் பாப சிந்தனைக்கு வருந்துவார்களா, தெரியாது. தான் எழுதிய கதையை “விட்டேன் ஒரு குத்து” என்று அவர்களுக்கு கவர்ச்சிகரமாக தோன்றிய ஒரு தலைப்பில் குமுதம் வெளியிட, நம்ம சிறுகதை ஜாம்பவான் சந்தோஷம் சொல்லத் தாளாது. ”குமுதம்காரன் நன்னாத் தான் எடிட் பண்ணிப் போடறான்..” என்ற பாராட்டு வர அதிக நிமிடங்கள் ஆகிவிடவில்லை.

க.நா.சு.வினால் அதிக காலம் சென்னையில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சென்னைக்கும் தில்லிக்குமாக வந்துபோய்க் கொண்டிருந்தார். பெண்ணின், மாப்பிள்ளையின் ஆதரவில் இருக்கலாம்தான். ஆனால் தான் எழுத வேண்டும். சம்பாதிக்க வேண்டும். அப்படியே 76 வருட காலம் வாழ்ந்தாயிற்று.

வருடம் 1988. டிஸம்பர் மாதம் ஒரு புதன் கிழமை மதியம் இரண்டரை மணி இருக்கும். நான் கால் எலும்பு முறிந்து ஒரு வருட காலமாக நீண்ட விடுமுறையில் வீட்டில் இருக்கிறேன். வெளியில் வாசலில் நான் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். அப்போது ஒரு ஆட்டோ வாசல்முன் நிற்கிறது. அதிலிருந்து என் பத்திரிகைக்கார நண்பன் ஆர். வெங்கட்ராமன் இறங்க, பின் வெங்கட்ராமன் கைபிடித்து உதவ க.நா.சு. இறங்குகிறார். க.நா.சு. தில்லி வந்துள்ளது தெரியாது எனக்கு. அவர் வந்தது எனக்குத் திகைப்பாக இருந்தது. அப்போது எஙகளுக்குள் சுமுகமான உறவு இருக்கவில்லை. ஆனால் தொலைபேசியில் அவ்வப்போது வெகு அபூர்வமாகப் பேசுவார். ஒரு சிறுகதைத் தொகுப்பு ஆங்கிலத்தில் கொண்டு வர மூன்று கதைகள் தேர்ந்து எடுத்து மொழிபெயர்த்துத் தரச் சொன்னது அந்த மாதிரியான மனஸ்தாப காலத்தில்தான். அவ்வப்போது தூறல் விழும். பின் வெயில் அடிக்கும். எதிலும் அதிகம் தாக்கம் இராது. சுட்டெரிக்கும் வெயிலும் இல்லை. குளிர்விக்கும் தூறலும் இல்லை. ஆனால் துணைக்கு ஒரு ஆளைக் கூட்டிக்கொண்டு ஆட்டோவில் எனனைப் பார்க்க வீடு தேடி வருவதென்றால், கண் பார்வை மங்கிய தள்ளாத வயதில்?

வெங்கடராமன் உள்ளே சென்று நாற்காலிகள் இரண்டைக் கொண்டு வந்த வேளையில் “என்னய்யா மணி ரண்டரைக்கா சாப்பாடு?” என்றார் க.நா.சு. அப்படித்தான் பேச்சு தொடங்கியது.

“தில்லி வந்துள்ளது தெரியாது” என்றேன்.

“இப்படித்தான அங்கே கொஞ்ச நாள் இங்கே கொஞ்ச நாள்னு போயிண்டிருக்கு” என்றார். கசப்பின் சுவடே இல்லை. “வாய்யா ரொம்ப நாளாச்சு, சாமிநாதனைப் போய்ப் பாத்துட்டு வரலாம். ஏதோ அக்ஸிடெண்ட்லே காலொடிஞ்சு ரொம்ப நாளாக் கிடக்கறதா சொன்னான்னு வந்தேன். வெங்கட்ராமன் தான் அடிக்கடி வந்து பாத்துக்கறானாமே, சொன்னான்.” என்றார்.

பேசிக் கொண்டிருந்தோம். கடைசியில் “பழைய ஷண்முக சுந்தரம் புஸ்தகம் ஏதாவது இருக்கா, ரொம்ப நாளா அச்சுக்கு வராமே. இருக்கறது எதாவது இருந்தா கொடும். போடறேங்கறான்.” என்றார்.

யோசித்துப் பார்த்தேன். “ஒரு சின்ன புத்தகம் இருக்கு. பனித்துளி. அது தான் பழசு. இரண்டாம் பதிப்பு கூட இன்னும் வரலை. மத்தது பழசுன்னு ஒண்ணும் என்கிட்ட இல்லியே” என்று சொன்னேன்.

“சரி அதைத்தான் கொடும். போடறேன்னு ஒத்தன் சொல்றான். வரட்டுமே.” என்றார்.

அப்போது ஷண்முக சுந்தரம் மறைந்து வருடங்கள் பல கடந்தாயிற்று. பக்கத்திலேயே ட்ராயிங் அறையிலேயே எல்லாப் புத்தகங்களும் இருந்ததால் தேடி எடுத்துக் கொடுக்க முடிந்தது. “ப்ரிண்ட் ஆனதும் இதுவும் இன்னொரு புது காபியும் அனுப்பச் சொல்றேன்” என்றார்.

இரண்டு மணி நேரமோ என்னவோ பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அது ஒரு புதன் கிழமை மாலை ஐந்து அல்லது ஐந்தரை மணி. அவர் வெங்கட்ராமன் கையைப் பிடித்துக்கொண்டு போனதை வாசலிலேயே நாற்காலியில் உட்கார்ந்திருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தேன். அதுதான் அவரைக் கடைசியாகப் பார்த்ததும் பேசியதும்.

வெள்ளிக்கிழமை காலை எட்டு மணி இருக்கும். டாக்டர் ரவீந்திரன், வெங்கட்ராமன் இன்னம் யாரோ, நினைவில் இல்லை ஒரு கார் எடுத்துக்கொண்டு வந்தார்கள். “க.நா.சு. இறந்து விட்டார்; தொலைபேசியில் சொன்னார்கள். உங்களையும் அழைத்துப் போகலாம் என்று கார் எடுத்து வந்தோம்” என்றார்கள். க்ரட்சஸ்ஸோடு தான் நான் நடமாட இயலும் என்பது அவர்களுக்குத் தெரியும். சென்றோம். மாடிப்படி ஏறவேண்டும் க.நா.சு. தங்கியிருந்த மணியின் முதல் மாடி வீட்டை அடைய. க்ரட்சுஸ்ஸோடு படி ஏறிச் சென்றேன். “நீங்க என்னத்துக்கு இப்படி சிரமப் பட்டுக்கொண்டு……?” என்றார் மணி. ஹாலில் உயிர் நீத்த க.நா.சு. 76 வருஷ இயக்கம் சலனமிழந்து ஓய்ந்து கண்மூடி அமைதியாகப் படுத்துக் கிடந்த க.நா.சு.வை பார்த்துக்கொண்டே நின்றேன். 35 மணி நேரத்துக்கு முன், “ஆர்.ஷண்முக சுந்தரம் புஸ்தகம் ஏதாவது இருக்கா, பப்ளிஷ் பண்றதுக்கு?” என்று கேட்ட குரல் மௌனமாய் விட்டது. ஒரு தீவிர தீக்ஷண்ய பார்வையும் முற்போக்கு சிந்தனையும் கொண்ட ஒரு மாமேதையின் கூற்றுப்படி நிலை இழந்த பார்ப்பனருக்கு நிலைபேறு தேடித்தரும் இலக்கியக் கைங்கர்யத்தை செய்து வந்தவர் இவர். நேற்று முந்தின தினம் என் வீடு தேடி, ஆர்.ஷண்முக சுந்தரம் புத்தகம் கொடு என்று கேட்டவர்.

தில்லி சாஹித்ய அகாடமியிலிருந்து ஒருவர் மலர் வளையம் சார்த்தி மரியாதை செலுத்தினார். வீடு அமைதியாக இருந்தது. எந்தச் சடங்கும் தேவையில்லை என்று முன்னாலேயே எங்களுக்குச் சொல்லியிருக்கார், என்றார் மணி. இது ஆண்டு 2012. இன்று வரை எந்த சடங்கும் நடந்ததில்லை.”

என்ன தான் இலக்கியக் கொள்கைகளை அள்ளி வீசினாலும் க.நா.சு.விடம் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்ற பாகுபாட்டுணர்ச்சி ஆழமாகப் பதிந்திருக்கிறது என்று மாமேதை கலாநிதி கைலாசபதி சொன்னதை நினைத்துக் கொண்டேன்.

அன்று அமைதி கொண்ட குரல் இன்று வரை அமைதி கொண்டுதான் இருக்கிறது. ஒரு விமர்சன மரபைத் தோற்றுவிக்க நாற்பது வருடங்களுக்கும் மேலாக அது இயங்கிய போதும் அந்நீண்ட காலத்தில் படைப்பும் மொழிபெயர்ப்புமாக விமர்சனத்தை விட அதிகம் எழுதிய போதிலும் மற்றது மறக்கப்பட்டு விமர்சனக் குரலாகவே பார்க்கப்பட்டது. இப்போது அந்த விமர்சனக் குரலையும் நினைத்துப் பார்ப்பார் இல்லை. அந்த விமர்சனக் குரலால் அதன்பின் வந்த சீரிய படைப்பிலக்கியம் தன்னை நிறுவிக்கொண்டாலும். இன்றைய இதன் ஜீவிதம் மறக்கப்பட்ட அந்த விமர்சனக் குரல் தந்ததுதான் என்பதை அது உணர மறுக்கிறது. “க.நா.சு.வா யார் அது?” என்று கேட்கிறது.

முற்றும்.

References:

 1. Finanancial Express, New Delhi 23.9.84
 2. Hindustan Times, New Delhi 14/28.7.79 From which soil do the writers emerge? (தமிழில், “ஏழுத்தாளர்கள் எம்மண்ணிலிருந்து வருகிறார்கள்? யாத்ரா)
 3. கலாநிதி கைலாசபதி: “க.நா.சு.வும் மைனாரிட்டி கலாசாரமும்”
 4. கலாநிதி கைலாசபதி: “நவீன தமிழ் இலக்கியத் திறனாய்வில் க.நா.சு.வின் பாத்திரம்: க.நா.சு.வும் அவர் சீடர்களும்.
 5. காலத்தின் காளான்கள்: விவாதங்கள் சர்ச்சைகள் வெங்கட் சாமிநாதன் அமுத சுரபி பிரசுரம் (ப. 217 – 246)
 6. மீண்டும் பிராபல்யம் வேண்டி – வெங்கட் சாமிநாதன், சில இலக்கிய ஆளுமைகள். பிரசுரம் காவ்யா: (ப. 83 -112)
 7. கூடாரம்: இதழ் மூன்று. ஜூலை “தஞ்சை பிரகாஷ் அவர்களின் நேர் காணல்.
 8. க.நா.சு.வின் நாவல் கலை (ப. 123)

[இக்கட்டுரை மூத்த எழுத்தாளரும், பத்திரிகையாளருமான பாவை சந்திரன் தொகுத்தளிக்க இருக்கும் க.நா.சு நூற்றாண்டு விழா மலரிலும் இடம்பெற இருக்கிறது.]

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.

14 Replies to “க.நா.சு.வும் நானும் – 3 [நிறைவுப் பகுதி]”

 1. பெருமதிப்பிற்குரிய வெ.சா, இந்தக் கட்டுரை ஒரு பொக்கிஷம். நேர்மை, எப்போதும் தனக்கு உண்மையாக இருத்தல், தளையற்ற சுதந்திர நோக்கு ஆகிய குணங்களே க.நா.சு விட்டுச் சென்றுள்ள எழுத்துக்களுக்கு அவற்றுக்கான ஆதார மதிப்பை அளிக்கின்றன என்பது புரிகிறது. “உள்ளத்தில் உண்மையது உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்” என்ற பாரதி வாக்கை நினைத்துக் கொள்கிறேன்.

  ஒரு இலக்கிய மேதையின் உண்மையான மதிப்பை, அவரது போராட்டங்களை, வாழ்வின் சாரத்தை இன்னொரு மேதையின் எழுத்தில் வாசிக்கும் பேறு எங்களுக்கு சாத்தியமாகியிருக்கிறது. மிக்க நன்றி.

 2. “எனக்கு ஒரே ஆச்சரியம், என்னடா இது! திடீர்னு க.நா.சு.வை இப்படி கௌரவப்படுத்தறாங்களேன்னு. ”

  எனக்கும் அதுவேதான் தோன்றியது, என்ன இது எலி அம்மணமாக ஓடுகிறதே என்று. கண்கள் கசிய வைக்கும் நிகழ்வு.

  ‘வாழும் வள்ளுவமே’, ‘தொல்காப்பியமே’ என்றெல்லாம் போஸ்டர் பட்டங்கள் இருந்தாலும் இலக்கிய மேதையான சான்றோனின் வாயால் புகழப்படவேண்டுமேன்பதர்காக இப்படியா கீழ்த்தரமாக இறங்குவார் ஒருவர் ? எப்படியோ தனது இலக்கிய தகுதி என்ன என்று அவருக்கேனும் தெரிந்திருப்பது நல்லதுதான்.

  என்னதான் ‘மூன்று சதவீதப்பிரிவினர்’ என்று எள்ளி நகையாடினாலும், ‘நமது ஆதரவு தேடி வந்திருப்பவர்கள் என்று அந்த ‘மூன்று சதவீதப்பிரிவினரை’ கேவலப்படுத்தினாலும் தனக்கு வாழ்த்துரை வழங்க அந்த ‘மூன்று சதவீதப்பிரிவினரின்’ முன்னோடியைத்தானே நாட வேண்டியிருந்திருக்கிறது.

  மேன்மக்கள் மேன்மக்களே !

  அவருடைய படைப்புகளை தேடி படிக்க தூண்டியுள்ளீர்கள்.

  நெஞ்சு நெகிழ்ந்த நன்றிகள் பல, வெ.சா சார்.

  அன்புடன்
  பொன்.முத்துக்குமார்

 3. தமிழ் நாட்டின் சாபக்கேடு இந்த திராவிடமும் அதன் அடியாட்களும்; இவர்களால் ஏற்பட்ட நாசம், மான நஷ்ட்டம் கொஞ்சநஞ்சமல்ல.

 4. சொல்வனம் இணைய இதழின் இந்த இதழ் க.நா.சு நூற்றாண்டு சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. பல அருமையான கட்டுரைகள் உள்ளன. இலக்கிய ரசிகர்கள் கட்டாயம் படிக்க வேண்டியதொரு இதழ் –

  https://solvanam.com/?p=22106

 5. எழுத்திலும் வாழ்விலும் நேர்மையைக் கடைப் பிடித்தவர்கள் நீங்கள் எல்லாம்

 6. மனதை மிகவும் கனக்கச் செய்த ஒரு தலைமுறையின் பதிவு இது. கோர்வையாக, மிக நேர்மையாக இந்தப் பதிவை செய்திருக்கிறீர்கள் நீங்கள். “நெருப்பாற்றில் நீந்தினார்” என்று நம் கண்மணியினர் சொல்வார்களே, அதன் உண்மையான பொருள் இவருக்குத்தான் பொருந்தும். ஆனால் எந்த நெருப்பும் அவரைச் சுடவில்லை என்பதும் தெரிகிறது. சத்தியத்தை மட்டுமே ஆயுதமாக வைத்திருந்த ஒரு எழுத்தாளரின் இந்த முகத்தை எங்களுக்கு காட்டியமைக்காக அனேக நன்றிகள் ஐயா!

 7. ஒரு எழுத்தாளரை வைத்து இவ்வளவு அரசியல் பண்ண முடியுமா என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன். வெ சாவின் திறமை பளிச்சிடுகிறது இங்கே.

  ஒரு எழுத்தாளரின் நூற்றாண்டு விழாவென்றால், அன்னாரின் இலக்கியப்படைப்புக்களே முன்வைத்துப் பேசப்படும். இல்லையென்றால் என்ன பெரிய எழுத்தாளன் இவன்? இங்கோ அன்னாரின் தனிநபர் வாழ்க்கை அரசியல் நெடியோடு பேசப்படுகிறது.

  கைலாசபதி சொன்னதில் ஒரு உட்பொருள் இருப்பதை எவரும் அறிவார்கள். எங்கு பார்த்தாலும் ஜாதீய பிரிவுகளும் தூடணைகளும் அரவணைப்புக்களும் உள. தமிழகத்தைப்பொறுத்தவரை, முக்குலத்தோர், நாடார்கள், மற்றும் பார்ப்ப்னர்கள் இவர்கள் கடைபிடிக்கும் நெப்போட்டிசம் நன்கறிந்தவொன்று. முக்குலத்தோரும், நாடார்களும் எழுத்துலகில் கிடையா. பார்ப்னர்கள் மட்டுமே உண்டு. இன்றுதான் பிறர் வந்ததுண்டு. எனவே தமக்குத்தாமே என்ற நிலைபாட்டைப்பார்த்திருப்பார் கைலாசபதி. அவ்வட்டத்துக்குள் ஒருவேளை கநாசு விழுந்திருப்பதாக அவருக்குத் தெரிந்திருக்கலாம். வெ சா, பார்ப்ப்னர்களை இவ்விடயத்தில் புனிதர்கள் என்று சொல்ல முடியாது. அவர்களை அவர்களே தூக்கி விட்டபடியாலே தமிழகத்தில் பார்ப்பன தூடணை தோன்றியதென்றால் மிகையில்லை. இலக்கிய உலகில் பிரசித்தம்.

  ஹெபிசிபா ஜேசுதாசன் தீரா நதி பேட்டியில், இலக்கிய உலகம் பார்ப்ப்னர்களால் பீடித்திருப்பதை உடைத்த முதலாள் தான் எனப்தாகச் சொன்னார். அவர் கூறும் கருத்து, இலக்கியம் என்றாலே பார்ப்பனரின் சமூக மற்றும் குடும்ப வாழ்க்கையைப்பற்றிச் சொல்வதுதான். மற்றவர்கள் வாழ்க்கை இலக்கியமாகப் படைக்கப்படவில்லை. ஆக, தமிழ் இக்கால இலக்கியம் என்பது தமிழர் வாழ்க்கையில் ஒரே ஒரு பக்கத்தைக் காட்டும் கண்ணாடியே என்பதே ஹெப்சிபா யேசுதாசன் சொன்ன கருத்து. இன்றுதான் எழுத்தாளர்கள் பல சமூகதளங்களிலிருந்து வருகிறார்கள். இன்றுதான் பிறகுரல்கள் ஒலிக்கின்றன.

  கீழ்மட்ட மக்களைப்பற்றிய இலக்கியத்தைப்பற்றி கநாசு எழுதியதை வெ சா புரியவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், வெ சாவுக்கு புரியும் சக்தியில்லை. அதைப்பற்றி நான் எழுத ஒரு கட்டுரையே தேவை.

  கைலாசபதியின் விமர்சனத்தை ஒரு அன்னியப்பார்வையில் பார்க்கும் சக்தியும் வெ சாவுக்கு இல்லை. எனவே உணர்ச்சிவசப்படுகிறார். ஜாதிப்பற்றை விட்டால் மட்டுமே ஒருவன் இண்டலக்சுவல் ஆக முடியும். ஒரு இண்டல்க்சுவலைப்பற்றி இன்னொரு இண்டலக்சுவல் எழுதினால் தாவலை.

  கநாசு தமிழ்ப்பார்ப்ப்னர்களைக் கடுமையாகச்சாடிய பார்ப்ப்னர்களுள் ஒருவர். கைலாசபதி, மதிமாறனுக்கு எதிர்வாதம் வைத்த ஒரு பாரதியார் பற்றி நூலுக்கு முன்னுரையளித்து பாரதியாரை மிகவும் புகழ்ந்தவர். இதைத்தெரிய வந்தால், வெ சாவின் கதையென்ன? முன்னவரைப் பொத்தென போட்டுவிட்டு, பின்னவரைத்தான் பிடிக்கவேண்டும். ஜாதிப்பாசம் ஆழ்கடலை விட ஆழமானதன்றோ!

  கநாசுவின் சில தமிழ்க்கட்டுரைகளையும் பல ஆங்கிலக்கட்டுரைகளையும் மட்டுமே படித்தவன் யான். எனவே அவரின் எழுத்துக்களை படித்தமட்டும் வைத்துச்சொன்னால், அவர் ஒரு இண்டெலக்சுவல். பயங்கரமான சொல்லிது.

  இண்டெலக்சுவல் தனக்கென கட்டுப்பாடு சிந்தனையில் கொண்டவர்களல்ல. அவர்களுக்குத் தோன்றியதைச் சொல்லி விடுவார்கள். அவ்வளவுதான்.

  ஒரு எழுத்தாளர். ஒரு கட்டுரையாசிரியர், ஒரு தேர்ந்த ஆங்கிலப்புலமையுள்ளவர். இவ்வளவுதான் கநாசுவைப்பற்றி நாம் சொல்லவேண்டும். எப்படிப்பட்ட எழுத்தாளர் எப்படிப்பட்ட கட்டுரையாசிரியர் என்பதை தமிழ் இலக்கியத்தைத் துளைத்துப்படிப்போர் சொல்வர். எதிர்காலமும் சொல்லும். எப்படிப்பட்ட ஆங்கிலம் எப்படிப்பட்ட கட்டுரைகள் என்பதை நான் சொல்லலாம். அதன்படி சொல்ல, எவரும் எக்கட்டுரையிலும் கநாசுவை ஒரு ஆங்கில எழுத்தாளராகப்பார்ப்பதேயில்லை. இங்கிலிசு எவனுக்கும் தெரியவில்லை போலும்.

  அவரின் ஆங்கிலக்கட்டுரைகள் தொகுக்கப்பட வேண்டும். எவரேனும் செய்திருந்தால் சொல்லவும். என்ன விலை கொடுத்தாவது வாங்க நான் தயார்.

 8. இன்னும் முடியவில்லை. இக்கட்டுரையைப்பற்றி.

  கைலாசபதி என்பவர் ஒரு இலங்கை தமிழ் எழுத்தாளர். ஒரு திறனாய்வாளர். பர்மிங்க்ஹாம் பலகலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் கநாசுவைப்பற்றிப் இப்படிச் சொல்லிவிட்டாராம்:

  //என்னதான் இலக்கியக் கொள்கைகளை அள்ளி வீசினாலும், க.நா.சு.விடம் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்ற பாகுபாட்டுணர்ச்சி ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதனை அம்மணமாகக் காட்டிக்கொள்ளாத வகையில் திறனாய்வு முலாம் பூசி மெருகூட்டும் திறனும் அவருக்கு நிரம்ப உண்டு. அடிப்படையில் இது ஒரு வர்க்கப் பிரச்சினையேயாகும். எனினும் தமிழ்நாட்டு அரங்கின் பரிபாஷையில் கூறுவதானால், நிலை இழந்த பார்ப்பனர்களுக்கு நிலைபேறு தேடும் இலக்கியக் கைங்கர்யத்தை செய்து வந்திருப்பவர் க.நா.சு//

  இதற்காக சாமிநாதன் கைலாசபதியை இப்படியெல்லாம் திட்டுகிறார்:

  //இந்த மாதிரி பழிசுமத்துவதற்கு மிகவும் கடைத்தரமான குணங்கள் தேவை.//

  //இந்த இழிபிறவியை என்ன சொல்ல?’//

  //சாதாரணமான மனிதனாக வாழும் தகுதிகூட இல்லை இவருக்கு//

  அவரது சாதியையும் விடவில்லை சாமிநாதன்:

  //யாழ்ப்பான சைவ வேளால மேன்மைத்தனம்//

  கைலாசபதியின் கல்வி, அவர் இங்கிலாந்தில் செய்த ஆராய்ச்சிப்பட்டம் இவற்றையெல்லாம் நக்கலடிக்கிறார் சாமிநாதன். எல்லாம் எதற்காக?

  கநாசுவை ஜாதி சொல்லி விமர்சித்தபடியாலே.

  சரி. கைலாசபதி சொன்னாரென்றால், அவர் ஏன் சொன்னாரென்றுதானே பார்க்கவேண்டும்?

  ஒரு தேவர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஜாதி வெறி பிடித்து தன் மகளையே இன்னொரு ஜாதிக்காரனைக்கட்டியதற்காக வெட்டிக்கொல்கிறார் (திருச்சியில் உண்மையில் நடந்த சம்பவம்) என்று வைத்துக்கொள்வோம். ஒருவர் அதைச்சுட்டிக்காட்டி அத்தேவரை விமர்சிக்கிறார். அத்தேவருக்கு வேண்டிய ஆட்கள் விமர்சிப்பவரை, இவனொரு இழிபிறவி, கடைதரமான குணங்கள், இவன் படிப்பே போலி, இவன் மனிதனாக வாழத்தகுதியில்லாதவன் என்று சொன்னால் எப்படியிருக்கும்? அது மட்டுமில்லாமல், தேவர் ஜாதி முழுவதையும் திட்டினால் எப்படியிருக்கும்?

  அதைத்தான் செய்கிறார் சாமிநாதன் இங்கே.

  இன்னொன்றையும் கவனியுங்கள். கநாசுவின் எழுத்துக்கள் இங்கு கருதப்படவேயில்லை. வெங்கடேசன் மதிமாறனுக்கு கொடுக்கும் பதிலில், பாரதியாரின் பாடல்களிலிருந்தே மேற்கோள் காட்டி அவர் ஜாதித்துவேசம் இல்லாதவர் என்கிறார்.

  இங்கே சாமிநாதன் செய்வதன்ன? ஏன் கைலாசபதி அப்படி விமர்சித்தார் என்பதை எப்படி எதிர்கொள்கிறார்? கநாசுவின் எழுத்துக்களிலிருந்து காட்டி கநாசு ஜாதியைக்கடந்தவர் என்று நிருபித்தாரா? இல்லை பாரதியார் மற்ற ஜாதியினரை வீட்டுக்குள் வரவழைத்து பெண்டாட்டித்திட்டையையும் பொறுப்படுத்தாமல் சமபந்தி போஜனம் நடாத்தியதைப்போல ஏதாவது கநாசு செய்ததைக் காட்டி கைலாசபதி சொன்னது பொய் என்று நிரூபித்தாரா? இல்லை.

  Mr சாமிநாதன் செய்வதெல்லாம், //இழிபிறவி, சாதாரணமான மனிதனாக வாழக்கூட தகுதியில்லாதவன்// என்று ஒரு தமிழறிஞரைப் பழிப்பது மட்டும்தான்.

  கநாசு தனிநபர் வாழ்க்கையைத் தெரிந்தவராக இருந்தபடியாலே கைலாசபதி சொல்லியிருக்கலாமில்லையா? தனிப்பட்ட முறையில் கைலாசபதியே கசப்பான சம்பவங்களை அவரிடமிருந்து பெற்றிருக்கலாமில்லையா? ஆருக்குத் தெரியும்? இருவருக்கு மட்டுமே. அவர்கள் இருவரும் இன்றில்லை. எனவே Mr சாமிநாதன் ஒருவரைத் திட்ட இக்கட்டுரையை கநாசுவின் நூற்றாண்டைப் பயன்படுத்திக்கொள்கிறார். சிவாஜி இரசிகன் எம்ஜிஆர் இரசிகன் செயல்களை இவர் காட்டிப்பேசுவது இவருக்கே பொருந்தும் என்பதுதான் வேதனை.

  ஒன்று மட்டும் நிச்சயமாக எனக்குத் தெரிகிறது. கநாசு பார்ப்பனராக இல்லாவிட்டால் தமிழ்ஹிந்து காமில் Mr சாமிநாதன் கட்டுரைகள் வந்திருக்கா. கைலாசபதியும் திட்டுப்பட்டிருக்க மாட்டார். எல்லாம் ஜாதி என்ற அரக்கன் உள்ளிருந்து செய்யும் வேலை.

  இன்னொன்றையும் சொல்லி முடிக்கிறேன். கைலாசபதியின் தனிநபர் வாழ்க்கை, கநாசுவின் தனிநபர் வாழ்க்கை இரண்டையுமே நாமறியோம். அப்படியிருக்க எவர் சொன்னது உண்மையென்று யாமறியவியலுமா?.

  இக்கட்டத்தில் இருவருள் ஒருவர் நண்பரிடமிருந்தா நாம் உண்மையைத் தெரிய முடியும்? அவர் நணபருக்குச் சாதகமாக ஏன் அஃதிருக்க முடியாது?

  பாரதியாரின் மேலுள்ள குற்றச்சாட்டை அவர் ஜாதிக்காரர்கள் மற்றும் அவர் உறவினர்கள் மட்டுமே எடுத்துப்பொய் என்று நிரூபித்தால் அது அம்பலத்தில் ஏறாது. தங்கள் தங்கள் சாதகமாகத்தான் நீதி எழுதுவார்கள் இல்லையா? அதுதானே உலகம்? ஆனால் அவரைப்பற்றி மற்றும்பலர் அவர்கள் பலர், எழுதியிருக்கிறார்கள். சொல்லியிருக்கிறார்கள். ஜீவா சொல்லவில்லையா? பாரதிதாசன் சொல்லவில்லையா?

  எனவே கநாசு ஆர்? அவர் உண்மையிலே கைலாசபதி சொன்னது போலத்தானே என்ற பிரச்சினையின் தீர்ப்பை Mr சாமிநாதனிடமா போய்க்கேட்பது? வேலிக்கு ஓணானா சாட்சி?

 9. கநாசுவை ஒரே ஒரு முறை நேரில் பார்த்திருக்கிறேன். நான் சிவில் தேர்வெழுத தில்லியில் பிரிட்டிஸ் கவுன்சில் நூலகத்தில் உறுப்பினரானேன். சனிக்கிழமை காலை 10 மணிக்குச் சென்று மாலை திரும்புவேன். அப்போது ஒரு நாள், ஒருவர் உள்ளே நுழைந்தார். Dishevelled hair, Veshti worn coarsely. தன் தோற்றத்தில் முற்றிலும் சட்டைகொள்ளாத ஒரு முதியவர். வெள்ளை முடி. சோடாப்புட்டிக்கண்ணாடி. பல படங்களில் பார்த்த உருவம். அதற்கு முன் என் அண்ணனிடம் உள்ள தீபம் பழைய கட்டுக்களில் அவர் எழுதிய வரலாற்று ஆராய்ச்சித்தொடரைப்படித்து இவர் ஒரு வேறுபாடான சிந்தனையாளர் என்பது அறிய வந்தது. அன்று அவர் கையில் இருந்தவை, சில தடிமனான நூல்கள். அவற்றை என் பக்கத்தில் வைத்துவிட்டு, வேறு சில சஞ்சிகைகளை எடுத்துக்கொண்டு தள்ளாடி வந்தார்.
  அவர் பக்கத்தில் இருக்க பரவசமாக இருந்தது. இதிலொரு வியப்பென்னவென்றால் என்னைத்தவிர பிறருக்கு அவர் ஆரென்று தெரியாது கண்டிப்பாக. அனைவரும் வடவர்கள். தமிழ் தெரியார். அவர் நூல்களை அவருக்குத்தெரியாமல் புரட்டி நூல் பெயர் ஆசிரியர்கள். எழுதிக்கொண்டு அந்நூல்களை நான் ஒரு வருடமாக படித்தேன். அவை தற்காலத்து பிரிட்டிஸ் எழுத்தாளர்கள். அரசியல், நையாண்டி, இலக்கியம், வர்லாறு.
  A voracious and omnivorous reader.

  I went on reading his serialised essays in many journals, including New York Times, and the last ones, when he went to settle down in Chennai, in TOI. Became a fan of his English. In Tamil, I read the series of monograph on authors in Kungumam referred to in Ve Sa essay here.

  A great English writer. But no one in TN cares to say so. But I do care; am sure he will be read in English.

  His death came when I moved away from Delhi. I read all obituaries but only in English papers. Tamilians are biased fellows. They dont know how to treat intellectuals.

  TOI never publishes obituaries on front page. That day it upset its tradition and published his obituary in the front page side column. It wrote, inter alia,

  HE LIVED THE WAY HE WANTED; AND DIED THE WAY HE WOULD HAVE LOVED.

  Not exact quote though.

  But the meaning needs to be understood by you side by side with Ve Sa’s revelation in the essay that KaNaSu rejected all last rites ceremonies.

  That shows the man: Fearless intellectual: BORN FREE, LIVED FREE. This wd have been apt reply to Kailasapathi. How could such a man be confined to the narrow walls of caste? He was a harsher critics of Tamil brahmins than Subramania Bharati.

  Break, break, break,
  On thy cold gray stones, O Sea!
  And I would that my tongue could utter
  The thoughts that arise in me.

 10. மதிப்பிற்குரிய வெ.சா. அய்யா அவர்களுக்கு,

  வணக்கம்.

  க.நா.சு. குறித்த உங்கள் கட்டுரை அற்புதம். லட்சியத்துக்காக வாழ்ந்தவர்கள் குறித்து அதே லட்சியவாதிகளால் தான் துல்லியமாக எழுத முடியும் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். கட்டுரையின் பல பகுதிகள் தகிக்கின்றன. ‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்’ என்ற மகாகவி பாரதியின் அமுதமொழி தான் நினைவுக்கு வருகிறது.

  தங்களுக்கும், கட்டுரையை வெளியிட்ட தமிழ் ஹிந்துவுக்கும் நன்றி.

  – சேக்கிழான்

 11. என்னுடைய பின்னூட்டங்களை வெளியிட்டு ஒரு கருத்தை மறைக்காமல் வெளிகொணர உதவிய தமிழ்.ஹிந்து. காமிற்கு நன்றிகள்.

 12. Dear TH Team and Shri.VE.SA,
  A fitting tributute to KA.NA.SU.

  As a step further can you please provide a link containing his work so that we can re collect his rich writtings…

  Pl consider this,..

  regs

  ravi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *