எழுமின் விழிமின் – 23

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)

தமிழில்: ஆர்.கோபாலன்

வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

பாரதப் பெண்ணினமும் ஐரோப்பியப் பெண்ணினமும்* 

உங்களது அறிவுக்கூர்மை எங்கள் நாட்டுப் பெண்களுக்கும் ஏற்பட வேண்டுமென்று நான் மிகவும் விரும்புகிறேன். ஆனால் தூய்மையை விலையாகக் கொடுத்து அதைப் பெறுவதாயின் வேண்டாம்.

உங்களுக்குத் தெரிகிற பல விஷயங்களைக் கண்டு அதற்காக உங்களைப் போற்றுகிறேன். ஆனால் தீயனவற்றை ரோஜா மலரால் மூடி மறைத்து அதை நல்லது என்று அழைக்கின்ற முறையை நான் வெறுக்கிறேன். ஒருவருக்குள்ள அறிவுத் திறமை தான் மிக உயர்ந்த நல்ல குணம் என்பது தவறு; ஒழுக்க நேர்மையும் ஆத்மீக சக்தியும் தான் நாங்கள் அடைய விரும்புகிற குணங்கள். எங்கள் நாட்டுப் பெண்கள் அவ்வளவு பெரிய அறிவாளிகள் அல்ல. ஆனால் அதிகமான தூய்மை அவர்களுக்கு உண்டு. எல்லாப் பெண்களும் தமது கணவரைத் தவிர மற்றெல்லாரையும் புதல்வர்களைப் போலவே கருதுவார்கள்.

எல்லா ஆண்களும் தனது மனைவியைத் தவிர மற்றப் பெண்களைத் தாயைப் போலக் கருதுதல் வேண்டும். என்னைச் சுற்றி நடக்கிற சம்பவங்களைக் கவனித்து ஆண்மைத் தனத்தின் பேரால் ஆண்கள் பெண்களை உபசரிக்கின்ற டம்பத்தைப் பார்த்தால் எனது ஆத்மா வெறுப்பால் நிறைந்து விடுகிறது. பெண் என்கிற பால் பாகுபாட்டை ஒதுக்கி விட்டு, பொதுவான மனிதத்துவ உணர்ச்சியின் அடிப்படையில் நீங்கள் பழகக் கற்றுக் கொள்கிற வரையில், உங்கள் பெண்ணினம் வளர்ச்சியடையாது. அதுவரை அவர்கள் வெறும் விளையாட்டுச் சாமான்களாக இருப்பார்களே ஒழிய அதைவிட உயரமாட்டார்கள். திருமண முறிவுக்கும் (விவாகரத்து) காரணம் இவையெல்லாம் தான். உங்களுடைய ஆண்மக்கள் உங்களைக் குனிந்து வணங்குகிறார்கள். உட்கார நாற்காலி தருகிறார்கள். அடுத்த மூச்சில் உங்களுக்குப் பாராட்டுத் தருகிறார்கள். “பெண்ணே, உனது கண்கள் எவ்வளவு அழகாக உள்ளன!” என்று கூறுகிறார்கள். இவ்வளவு செய்ய அவர்களுக்கு உரிமை ஏது? அவ்வளவு தூரம் போவதற்கு மனிதன் எப்படித் துணிகிறான்? பெண்களாகிய நீங்கள் எப்படி அனுமதிக்கிறீர்கள்? மனிதத் தன்மையிலுள்ள கண்யக் குறைவான விஷயங்களை இத்தகைய செயல்கள் வளர்க்கின்றன. கண்யமான உயர்ந்த லட்சியங்களை நோக்கி மனிதனை அவை உயர்த்துவதில்லை.

நாம் ஆண்கள், பெண்கள் என்று நினைக்கக் கூடாது. நாம் மனிதர்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவும், பரஸ்பரம் உதவி செய்து கொள்ளவும் பிறந்துள்ளோம் என்று நினைக்க வேண்டும். ஓர் இளைஞனும் யுவதியும் தனித்து விடப்பட்டால் உடனே அவன் அவளுக்குப் புகழ்மாலை சூட்டுகிறான். ஒரு மனைவியை அவன் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் ஒருகால் அவன் இருநூறு பெண்களைக் காதலித்திருப்பான். அப்பாடா! நான் மாத்திரம் கலியாணம் பண்ணிக் கொள்கிற கோஷ்டியில் சேர்ந்திருந்தால், இந்த ஆர்ப்பாட்டமெல்லாம் இல்லாமலேயே அன்புக்கு ஒரு பெண்ணைக் கண்டுபிடித்துக் கொள்வேன்.

நான் பாரதத்தில் இருந்த போது, இந்த விஷயங்களை எல்லாம் வெளியிலிருந்து பார்த்த போது, இதெல்லாம் சரிதான் என்றும் இவை வெறும் கேலிச் செயல்கள் தான் என்றும் சொன்ன விளக்கத்தை நம்பினேன். அதன்பின் நான் பிரயாணத்துக்குக் கிளம்பினேன். உங்களது இப்பழக்கம் சரியல்ல என்று எனக்குத் தெரியும். அது தவறு தான். ஆனால் மேல் நாட்டினரான நீங்கள் உங்கள் கண்களை மூடிக் கொண்டு விட்டு அது நல்லது தான் என்று அழைக்கிறீர்கள். மேல்நாட்டிலுள்ள தேசங்களுடைய கஷ்டம் என்னவென்றால், அதை முதிர்ச்சியடையாத வாலிப நாடுகள். வாலிபம், முட்டாள்தனம், சஞ்சலமான சித்தம், ஏராளமான செல்வம் – இவை அவர்களிடம் ஒன்று சேர்ந்துள்ளன. இதுதான் கஷ்டம். இந்தக் கெட்ட குணங்களில் ஏதாவது ஒன்று இருந்தாலே எவ்வளவோ விஷமங்கள் நடந்து விடும். அப்படியிருக்க, இவை நான்கும் ஒன்று சேர்ந்து விட்டாலோ, கேட்க வேண்டுமா? ஜாக்கிரதையாக இருங்கள்!

(*நியூயார்க்கில் 1890களில் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி)

********

ஆரிய, ஐரோப்பிய நாகரிகங்களின் அமைப்பு முறை:

ஐரோப்பிய நாகரிகத்தை ஒரு துணித்துண்டுக்கு ஒப்பிடலாம். இவைதான் அதிலுள்ள பொருட்கள்: கடற்கரையிலுள்ள பரந்த, மித சீதோஷ்ண நிலையிலுள்ள மலைநாடு தான் அதற்கான தறி; பலமுள்ள, போர்க்குணங்கள் வாய்ந்த, பல இனங்களின் சேர்க்கையால் உருவான கலப்பு இனம் தான் அதற்கான பஞ்சு. தனது சொந்தப் பாதுகாப்புக்காகவும், தனது சமயப் பாதுகாப்புக்காகவும் நடக்கிற போர்முறை தான் அதன் ஊடுநூல். வாள் வீசுகிறவன் பெரியவன், வாள்வீச முடியாதவன் தனது சுதந்திரத்தைக் கைவிட்டு யாராவது ஒரு போர்வீரனுடைய பாதுகாப்பின் கீழ் வாழ்கிறான். அதனுடைய பாவு நூல்தான் வாணிபம். இந்த நாகரிகத்தின் பாதை வாள் ஆகும். அதற்குத் துணைபுரியும் படை தைரியமும் சக்தியும். அதன் குறிக்கோள், இவ்வுலகிலும் மறு உலகிலும் சுக போகங்களை அனுபவிப்பது ஆகும்.

நம் நிலை எப்படி? ஆரியர்கள் அமைதியில் ஆர்வமுள்ளவர்கள். நிலத்தைப் பண்படுத்தும் உழவர்கள். தமது குடும்பங்களுக்கு எவ்விதத் தொந்தரவும் இன்றி அதனை நிர்வகித்து வரமுடிந்தால் அவர்கள் திருப்தியடைந்து விடுவார்கள். அப்படிப் பட்ட வாழ்க்கையில் அவர்களுக்கு ஏராளமான ஓய்வு நேரம் இருந்ததால், ஆழ்ந்து சிந்திக்கவும் நாகரிகத்துடன் விளங்கவும் அதிகமான சந்தர்ப்பம் கிடைத்தது. நம்முடைய ஜனக மகாராஜா தம் கையாலேயே நிலத்தை உழுதார். அந்தக் காலத்தில் சத்தியத்தை உணர்ந்தவர்களில் அவர் மிகவும் பெரியவராக இருந்தார். நமது நாட்டில் ரிஷிகள், முனிவர்கள், யோகிகள் இவர்கள் ஆரம்ப முதலே தோன்றியுள்ளார்கள். ஆரம்ப முதலே உலகம் ஒரு மாயக் கற்பனையாகும் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். நீங்கள் கொள்ளையடிக்கலாம், கொலை செய்யலாம். ஆனால் நீங்கள் தேடுகிற இன்பம் சமாதானத்தில் தான் உறைந்துள்ளது. புலன்வழி இன்பங்களைத் துறப்பதில் தான் சாந்தி உள்ளது. உடலின் வளர்ச்சி முன்னேற்றத்தில் மட்டும் இன்ப சுகம் இல்லை, மனத்தையும் அறிவையும் பயன்படுத்துவதில் தான் உள்ளது.

காடுகளை விளைச்சல் நிலமாகத் திருத்தி மாற்றியவர்கள் ஞானிகளான முனிவர்களே தான். பின்னர், தாம் திருத்திய நிலப்பகுதியில் வேத காலத்து யாக மேடையை அமைத்தார்கள். பாரத நாட்டின் தூய வானில் யாக யக்ஞங்களின் புனிதப் புகை எழுந்தது. அமைதி நிலவும் அந்தக் காற்றில் வேத மந்திரங்களின் ஒலியும் எதிரொலியும் எழுந்தன. மாடுகளும், கன்றுகளும் மற்ற மிருகங்களும் எத்தகைய அபாயமும் அச்சமுமின்றி மேய்ந்து வந்தன. கல்வியறிவு, தர்மம் இவற்றின் கீழ் வாளுக்கான இடம் அமைக்கப் பட்டது. வாளின் வேலை தர்மத்தையும், மக்கள், கால்நடைகள் இவற்றின் உயிர்களையும் பாதுகாப்பது தான். பலமற்றவர்களை அபாய காலத்தில் காப்பாற்றுகிறவன் வீரன், க்ஷத்திரியன். உழுகிற ஏர் மீதும், வாளின் மீதும், தர்மம் – அனைவரையும் பாதுகாக்கும் சக்தி – ஆதிக்கம் செலுத்தியது. தர்மமானது மன்னர்களுக்கெல்லாம் மன்னன். உலகமெல்லாம் உறங்கும் பொழுது கூட தர்மம் எப்பொழுதும் விழித்துக் கொண்டிருக்கும். தர்மத்தின் பாதுகாப்பின் கீழ் ஒவ்வொருவரும் சுகமாக இருந்தார்கள்.

ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து படையெடுத்து வந்தார்கள் என்றும், பூர்வீகக் குடிகளிடமிருந்து அவர்களுடைய நிலங்களைப் பிடுங்கிக் கொண்டார்கள் என்றும், அவர்களை நிர்மூலமாக்கி விட்டுப் பாரதத்தில் குடியேறினார்கள் என்றும் கூறுகிறார்கள். இதெல்லாம் கலப்பற்ற பொய், முட்டாள்தனமான பேச்சு ஆகும். இப்படியெல்லாம் உங்கள் ஐரோப்பியப் பண்டிதர்கள் பேசுகிறார்கள். நமது பாரத அறிஞர்கள் கூட இத்தகைய கருத்துக்களூக்கெல்லாம் ‘ஆமாம்’ போடுவது விந்தையாக இருக்கிறது. அன்றியும், இந்த ராட்சதப் புளுகுகள் எல்லாம் நமது பிள்ளைகளுக்குக் கற்பிக்கப் பட்டு வருகின்றன. இது உண்மையில் மிகமிக மோசமான செயலாகும்.

நானே ஓர் அறிவிலி. ஏதோ புலமை இருப்பதாக நான் பாசாங்கு பண்ணவில்லை. ஆனால் எனக்குப் புரிகின்ற சிறு விஷயங்களை வைத்துக் கொண்டு பாரிஸ் மகாநாட்டில் நான் இந்தக் கருத்துக்களை வன்மையாகக் கண்டித்தேன். இந்த விஷயத்தைக் குறித்து நான் பாரதீய அறிஞர்களிடமும், மேனாட்டு வித்வான்களிடமும் பேசிக் கொண்டிருந்தேன். வாய்ப்பான நேரம் கிடைக்கும் போது, அவர்களது இந்த ஊகக் கற்பனையை விரிவாக, அணு அணுவாக எதிர்த்துப் பல ஆட்சேபங்களை எழுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு – நமது நாட்டுப் பண்டிதர்களுக்குச் சொல்லுகிறேன் – “நீங்கள் எல்லாம் கற்றறிந்த மனிதர்கள். தயது செய்து உங்களது பழைய நூல்களையும், சாஸ்திரங்களையும் துருவி ஆராய்ந்து, சொந்தமான முடிவுக்கு வாருங்கள்” என்று சொல்லுகிறேன்.

ஐரோப்பியர் தமக்கு வாய்ப்பான சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அங்கங்குள்ள பூர்வீக குடிமக்களைப் பூண்டறுத்து விட்டு, அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் சௌகரியமாகவும், வசதியாகவும் குடியேறி விடுவார்கள். ஆகவே ஆரியர்களும் அவ்வாறே செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மேல்நாட்டவர்கள் தமது சொந்த நாட்டிலேயே தங்கிக் கொண்டு, தமது உள்நாட்டு விளைபொருள் வசதிகளையே முற்றிலும் நம்பி வாழ்ந்திருப்பார்களேயானால், அவர்கள் மிக மோசமான நாடோடி மக்களாகக் கருதப் பட்டிருப்பார்கள். ஆகவே, அவர்கள் வெறி கொண்டு உலகெங்கும் ஓடிச் சென்றார்கள். பிறருடைய நிலங்களின் செழுமை வளத்தால் தம் ஊனை வளர்க்க வகை தேடினார்கள். ஆகவே ஆரியர்களும் அது போலவே செய்திருக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு கட்டுகிறார்கள். இப்படிக் கூறுவதற்கெல்லாம் சாட்சிகள் எங்கே? கற்பனைக் கதை அளக்கிறீர்களா? அப்படியாயின், உங்களுடைய விசித்திரக் கதைப்புகளை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள்.

எந்த வேதத்தில், எந்த ஸூக்தத்தில் வெளிநாட்டிலிருந்து பாரதத்தினுள் ஆரியர் வந்ததாக உங்களுக்குத் தெரிகிறது? காடுகளில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளை அவர்கள் வெட்டி வீழ்த்தியதாக உங்களுக்கு எங்கிருந்து தெரிய வந்தது? இது போன்ற மடமைப் பேச்சுகளைப் பேசுவதால் உங்களுக்கு என்ன லாபம்? நீங்கள் ராமாயணம் படித்தது வீணாகி விட்டதே.. அதிலிருந்து பெரிய, அருமையான கட்டுக் கதையொன்றை எதற்காக உற்பத்தி செய்கிறீர்கள்?

அது சரி. ராமாயணம் என்பது என்ன? தென்பாரதத்தில் இருந்த காட்டுமிராண்டிப் பூர்வீகக் குடிகளை ஆரியர்கள் தோற்கடித்ததா? ராமச்சந்திரர் நாகரிகமுள்ள ஆரிய மன்னர். யாருடன் அவர் போரிடுகிறார்? இலங்கை மன்னனான ராவணனுடன். ராமாயணத்தைச் சற்றே படித்துப் பாருங்கள். ராவணன் ராமனை விட சற்றே உயர்ந்த நாகரிகம் வாய்த்திருந்தானே ஒழிய, தாழ்ந்தவனாக இருக்கவில்லை. இலங்கையின் நாகரிகம் அயோத்தியை விட ஒருவிதத்தில் உயர்ந்து இருந்ததே ஒழிய, நிச்சயமாகத் தாழ்ந்திருக்கவில்லை. இதற்குப் பிறகு, இந்த வானரர்களும், மற்ற தென் பாரத மக்களும் எப்பொழுது தோற்கடிக்கப் பட்டார்கள்? அதற்கு மாறாக, அவர்களெல்லாம் ராமச்சந்திரரின் நண்பர்களாகவும், உடன் உழைப்பவர்களாக இருந்தார்கள். வாலி, குகன் ஆகியோருடைய எந்தெந்த ராஜ்யங்கள் ராமச்சந்திரரால் ஆக்கிரமிக்கப் பட்டு தனது பேரரசுடன் இணைத்துக் கொள்ளப் பட்டன? சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஆரிய நாகரிகமாகிற தறியிலுள்ள துணி பரந்த, உஷ்ணமான சமதள பூமியாகும். அதனிடையிலே அகலமான, போக்குவரத்துக்கு உகந்த நதிகள் ஓடுகின்றன. இந்தத் துணிக்கான பஞ்சு மிக உயர்ந்த நாகரிக நிலை, அரை நாகரிக நிலை, காட்டுமிராண்டி நிலை ஆகியவற்றைக் கொண்டது. இந்த நிலைகளிலுள்ள பெருமளவிலான ஆரிய மக்களின் வர்ணாசிரம முறை அதன் ஊடுநூல். இயற்கையில் காணப்படும் பூசலையும் போட்டா போட்டியையும் வெல்வது அதன் பாவுநூல்.

ஐரோப்பியர்களே! உங்களை நான் ஒன்று கேட்கலாமா? எந்த ஒரு நாட்டையாவது நீங்கள் மேல்நிலைக்கு உயர்த்தியிருக்கிறீர்களா? எங்காவது பலவீனமான இனத்தினரைக் கண்டால் அவர்களைப் பூண்டோடு வேரறுத்திருக்கிறீர்கள். அவர்களது நிலங்களில் நீங்கள் குடியேறி இருக்கிறீர்கள். நிரந்தரமாக அவர்கள் தீர்ந்து போனார்கள். உங்களுடைய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பசிபிக் தீவுகள், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வரலாறு என்ன? அங்கிருந்த ஆதிக் குடிமக்கள் இப்பொழுது எங்கே? அவர்கள் வேரறுக்கப் பட்டு விட்டார்கள். காட்டு மிருகங்களைப் போல அவர்களைக் கருதி நீங்கள் அடியோடு கொலை செய்து விட்டீர்கள். எங்கே அவ்வாறு செய்ய உங்களுக்கு ஆற்றல் இல்லையோ, அந்த நாடுகள் மட்டுமே தான், அந்த தேசம் தான் இன்றும் உயிருடன் இருக்கிறது.

ஆனால், பாரதம் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை. ஆரியர்கள் அன்பும், தாராள மனப்பான்மையும் வாய்த்திருந்தார்கள். அவர்களது உள்ளங்கள் கடலைப் போலப் பரந்தும், எல்லையில்லாமலும் இருந்தன. அவர்களது மூளைகள் மனித வரம்புக்கு மீறி மேதாவிலாசம் வாய்த்திருந்தன. உலகத்தில் தோன்றி மறைகிற, வெளிப்பார்வைக்கு இன்பம் போலத் தோன்றுகிற, ஆனால் உண்மையில் பார்த்தால் மிருகத் தனமான செயல்கள், அவர்களது உள்ளத்திலும் மூளையிலும் இடம் பெறவே இல்லை. எனது சொந்த நாட்டினரான முட்டாள்களே! உங்களை ஒன்று கேட்கிறேன். முதற்குடிகளின் நிலத்தில் குடியேறுவதற்காக ஆரியர்கள் அவர்களை அழித்து ஒழித்திருந்தால், வர்ணாசிரம முறையை ஏற்படுத்தியிருக்க முடியுமா? யோசித்துப் பாருங்கள்.

தாமே வாழ்வதற்காக மற்ற அனைவரையும் அழிப்பது ஐரோப்பிய மக்களின் குறிக்கோள் ஆகும். தம்முடைய தரத்துக்கு, இல்லை, தம்மையும் விட உயர்ந்த நிலைக்கு எல்லோரையும் உயர்த்துவது ஆரியர்களின் நோக்கம். ஐரோப்பிய நாகரிகத்தின் பாதை வாள். ஆரியர்களின் பாதை, மக்கள் சமூகத்தை வர்ணங்களாகப் பகுப்பதாக இருந்தது. வெவ்வேறு வர்ணங்களாகப் பகுக்கும் இந்த முறை நாகரிக நிலைக்கு ஏறிச் செல்லும் படியாகவே கட்டமைக்கப் பட்டது. ஒருவனது கல்விக்கும் பண்பாட்டுக்கும் தக்க அளவில், அவனை மேலும் மேலும் உயர்ந்து எழுந்து முன்னேறச் செய்வதாகவே இந்தப் பாகுபாட்டு அமைப்பு இருந்தது. ஐரோப்பாவில் எங்கு பார்த்தாலும் பலமுள்ளவனுக்கு வெற்றி, பலவீனனுக்கு சாவு என்பது நிலை. பாரத பூமியில் சமூகச் சட்டம் ஒவ்வொன்றும் பலவீனனின் பாதுகாப்புக்காக ஏற்பட்டதாகும்.

(தொடரும்…)

அடுத்த பகுதி >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *