இராமாயண அறம் – ஜடாயுவின் உரை

திருப்பூரில் விஜயதசமி அன்று நடைபெறும் எழுத்தறித்தல் விழா மற்றும் சிறப்பு சொற்பொழிவுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தோம்.

அந்த நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. விஜயதசமி அன்று காலையில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன், பேரா. கனகசபாபதி, ஜடாயு ஆகியோர் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் தெய்வீகச் சடங்கைச் செய்தனர். சுமார் 200 குழந்தைகள் வந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் தேனிலும் பாலிலும் தொட்டு நாவில் “ஓம்” எழுதியது, குழந்தைகளை மடியில் அமர்த்தி பிஞ்சுக் கைகளைப் பிடித்து “அ” என்று சொல்லி எழுத வைத்தது வந்திருந்தவர்கள் அனைவருக்கும் ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது.

வந்திருந்த பெற்றோர்களில் பலர் எழுத்தறிவித்த அறிஞர்களின் கால்களைத் தொட்டு வணங்கினர். குழந்தைகளும் வணங்கினர். ஜெயமோகன் போன்ற மாபெரும் சிந்தனையாளரால் கைப்பிடித்து எழுத்தறிவிக்கப் பட்ட குழந்தைகள் பாக்கிய சாலிகள். அவர்களுக்கு சரஸ்வதி கடாட்சம் பரிபூரணமாக இறையருளால் சித்திக்கும் என்பதில் ஐயமில்லை.

வந்திருந்த அறிஞர்களும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த அறம் அறக்கட்டளை அமைப்பைச் சேர்ந்தவர்களும் மதியம் திருப்பூர் சுற்று வட்டாரத்திலுள்ள சுக்ரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர். சோழர் காலத்திய (10-11ம் நூற்றாண்டு) கற்கோயிலை தொல்லியல் துறையினர் அருமையாக கட்டமைத்துள்ளனர். கோயிலின் ஒரு புறச் சுவர் முழுதும் தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. அமைதியான சூழல். அந்தப் பகுதிக்குச் செல்பவர்கள் இக்கோயிலுக்குக் கட்டாயம் போய் வாருங்கள்.

மாலை சொற்பொழிவு நிகழ்ச்சியும் நன்றாக நடந்தது. தமிழகத்தின் 20-மணி நேர மின்வெட்டுக்கு நடுவிலும் அதிகம் இடையூறு இல்லாமல் நிகழ்ச்சியை நடத்திய அமைப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

நிகழ்ச்சி குறித்த புகைப்படங்கள் இங்கே.

ஜெயமோகன் ஆற்றிய ”அணையா விளக்கு” உரை அவரது வலைத்தளத்தில் உள்ளது.  அதன் வீடியோ இங்கே பார்க்கலாம். வழக்கம் போலவே ஆழமான கருத்துகளும் சிந்தனை வீச்சுகளும், உணர்வெழுச்சிகளும் தெறித்து விழும் உரை. இன்றைக்கு தமிழகத்தின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஜெயமோகன் முதன்மையானவர் என்றால் மிகையாகாது.

அந்த உரைக்கு முன்பாக, ஜடாயு “இராமாயண அறம்” குறித்தும், அரவிந்தன் நீலகண்டன் ”உபநிஷத அறம்” குறித்தும் சுருக்கமாக பேசினர்.

தர்மம் என்றால் என்ன என்ற அறிமுகத்துடன் ஜடாயு தனது உரையைத் தொடங்கினார். பிறகு இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு பெரும் இதிகாசங்களின் அறம் குறித்த பார்வைகள் எப்படி இணைந்தும் வேறுபட்டும் உள்ளன என்பது பற்றிக் குறிப்பிட்டார். வாலி வதம், குல தர்மம் -ஸ்வதர்மம் – உலக தர்மம், சீதையின் அறம் ஆகிய புள்ளிகளைத் தொட்டுச் சென்றது அவரது உரை. சுலோகங்களையும், கம்பராமாயணப் பாடல்களையும் இடையிடையே மேற்கோள் இட்டுப் பேசினார். உரையின் வீடியோ பதிவு கீழே –

(உரையின் நடுவில் மின்வெட்டு ஏற்பட்டதால் மின்விளக்கு போய்விட்டது. அமைப்பாளர்கள் மைக்கை உயிர்ப்பித்ததால் உரை இருளிலும் தொடர்ந்தது. சீதையின் அறம் பற்றி பேசும் தறுவாயில் நடுவில் ரெகார்டிங் நின்று விட்டது. இதற்குப் பிறகு ஒரு 3-4 நிமிடம் உரை தொடர்ந்தது. “இந்த சிற்றுரையில் ராமாயண அறம் குறித்த அறிமுகத்தையும் கோட்டுச் சித்திரத்தையுமே அளித்தேன். வாய்ப்புக் கிடைக்கும் போது இன்னும் விரிவாகப் பேசலாம்” என்று கூறி ஜடாயு முடித்தார். அந்தப் பகுதி மட்டும் கட் ஆகியுள்ளது)

2 Replies to “இராமாயண அறம் – ஜடாயுவின் உரை”

 1. அறம் அல்லது தர்மம் என்பது குறித்த ஒரு அற்புதமான விளக்கமாக அறிஞர் ஜடாயுவின் இந்த சொற்பொழிவு அமைந்திருக்கிறது.. நமக்கு தெரியாத பல செய்திகளை இச்சொற்பொழிவு மூலம் அறிந்து கொண்டோம்..

 2. // வாலி வதம், குல தர்மம் -ஸ்வதர்மம் – உலக தர்மம், சீதையின் அறம் ஆகிய புள்ளிகளைத் தொட்டுச் சென்றது உரை-தூய இந்து நிகழ்வோ? https://t.co/zKOLeqVz //

  இப்படி எம்.டி.முத்துக்குமாரசுவாமி ட்விட்டரில் கேட்கிறார் –
  https://twitter.com/mdmuthu/statuses/269359950898274304

  பதிவில் உள்ள அந்த வரிகளை வைத்து ஜடாயு சம்பிரதாயமாக சாதி -குலம் – வர்ணாசிரமம் பற்றி ஒரு “சனாதன” உரை நிகழ்த்தியிருக்கிறார் என்று இந்த சிகாமணி முடிவு கட்டி விட்டார் போல. ஆனால், உண்மையில் ஜடாயு குலதர்மம் என்ற கொள்கையை முற்றிலுமாக மறுத்து மானுட அற உணர்வு பற்றி அல்லவா பேசுகிறார்?…

  “நீதியால் வந்ததொரு நெடுந்தரும நெறியல்லால்
  சாதியால் வந்த சிறு நெறி அறியான்”

  என்று கம்பனில் இருந்து ஒரு அட்டகாசமான மேற்கோளை திரும்பத் திரும்ப சொல்கிறாரே…

  தமிழ்ஹிந்து நிருபர் கவனமாக சொற்களைப் பயன்படுத்த வேண்டும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *