என் பார்வையில் தமிழ் சினிமா

மிழ் சினிமாவில் இலக்கியம், எழுத்து பற்றி எழுதச் சொல்லி எனக்குப் பணிக்கப்பட்டிருக்கிறது. சைனாவில் இட்லியும் தேங்காய்ச் சட்னியும் தேடினால் கிடைக்கலாமோ என்னவோ. லாப்லாந்தில் மொந்தன் பழம் எங்கே கிடைக்கும் என்று தேடலாம். இர்குட்ஸ்க் நகரில் காலையில் எழுந்ததும் இடியாப்பமும் குருமாவும் தேடலாம். நாமும் கடந்த 90 வருட காலமாக தமிழுக்கு ஒரு ஆவேசத்தோடு தொண்டை வரள கோஷமிட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். தமிழ் வளர்ச்சியே தன் கொள்கையாகக் கொண்ட இயக்கம் அரசுக்கு வந்து இரண்டு தலைமுறை ஆன பிறகும், தமிழ் சினிமாவுக்குத் தமிழ்ப் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று ஆசை காட்ட வேண்டி யிருக்கிறது. ஒரு தமிழனுக்கு தன் இயல்பில் பேச, வாழ, வரிவிலக்கு என்ற ஆசை காட்ட வேண்டுமென்றால், தமிழ் வாழ்க்கை தன் இயல்பில் இல்லாத ஒரு போலியைத் தானே ஃபாஷனாகக் கொண்டு வாழ்கிறது என்று அர்த்தம்? அதுவும் தமிழினத் தலைவர் ஆட்சி நடக்கும் போது?.

ஒரு நீண்ட காலமாக தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் தமிழ் பேசும் கதாநாயகியைத் தேடும் முயற்சி ஒரு தொடராக வந்து கொண்டிருக்கிறது. தமிழ்ப் பெயர்கள் இப்போது ஃபாஷனில் இல்லை. தன் தமிழ்ப் பற்றை உலகுக்கு பறை சாற்றும் நோக்கில், ஒரு காலத்தில் தம் பெயரையே ஒரு மாதிரியாக தமிழ்ப் பெயர்களாக மாற்றி வந்தார்கள் நம்மில் பலர். தமிழ்ப் பெயர் என்றால் அது சங்க காலத்தில் புழங்கிய பெயர்களாக இருக்கவேண்டும் என்பது சொல்லப்படாத விதி. ஆனால் இப்போது ஸ்ரேயா, நமீதா, பூஜா, அபூ, தமன்னா, டாப்ஸி, ஹன்சிகா மோட்வானி அனூஷ்கா, ரீமா சென், குஷ்பு, ஆண்ட்ரியா என்ற பெயர்களில், தமிழ் தெரியாத வடநாட்டு நங்கைகளிடம் தான் நம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கவர்ச்சி. தமிழ் நடிகர்கள் பெயர்கள் கூட இப்போது ரொம்ப ஃபாஷனோடு, பரத், அஜீத், தனுஷ், விஜய்காந்த், ஸ்ரீகாந்த் இப்படித்தான்.

யாரையும் குறை சொல்லிப் பயனில்லை. பேச்சில் தான் தமிழ்ப் பற்று இருந்ததே தவிர, உள் மனசு என்னவோ முற்றிலும் வேறாகத் தான் ஆசை கொண்டிருந்தது.. தமிழ்த் தொலைக் காட்சிகளில் யாரும் தமிழில் பேசுவது கிடையாது. ஆங்கிலம் தமிழ் எல்லாம் கலந்த ஒரு மொழிதான் அவர்கள் பேசுவது. அதில் அவர்கள் கஷ்டப்பட்டு ஒன்றிரண்டு தமிழ்ச் சொற்களை தாளித்துக் கொள்வார்கள். சினிமாவை விட்டுத் தள்ளலாம். அது ஒரு பகட்டு உலகம். தொலைக்காட்சியோ அதிலும் பகட்டுதான் ஆட்சி செய்கிறது. அவையெல்லாம் ஒரு காட்சி மேடையில் இருப்பவை. படியிறங்கி தெருவில் நடந்தால் ஆட்டோக் காரர் கூட தமிழில் பேசுவதில்லை. ”ஸ்ட்ரெய்ட்டா போயி லெஃப்ட்லே கட் பண்ணுங்க” என்றுதான் நமக்கு உதவி வரும். “ஏன்யா, நைட் ட்யூட்டிக்கு போறேன்னு புரியும்படியா தமில்லே சொல்லேன். உனக்கென்னா கேடு வந்திரிச்சு இப்போ? என்று குடிசைக்கு வெளியே ஒரு பெண் தன் புருஷனைத் திட்டும் குரலைச் சாதாரணமாகக் கேட்கலாம்.

இது தான் தமிழ் வாழ்க்கை. இது தான் தமிழ் நாட்டில் புழங்கும் தமிழ். நம் தலைமைகள், நம் கலைகள் நம் பொது வாழ்க்கை தரும் காட்சிகள் இவை. நம் கோஷங்கள் ஒன்றாகவும் நம் உள்ளூர அடைய விரும்பும் வாழ விரும்பும் ஆசைகள் வேறாகவும் பிளவு பட்டுக் கிடக்கின்ற கோலம் இது தான் தமிழ் சினிமாவும். தமிழ் சினிமா உண்மையாக, நேர்மையாக, தமிழ் வாழ்க்கையின் அந்தராத்மாவைப் பிரதிபலிக்கிறது என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. அதுவும் ஒரு பகட்டான, உண்மை ஒன்றாகவும் சொல்வது வேறாகவும், தன் சுயம் ஒன்றாகவும் கோஷமிட்டு தன்னை வெளிக்காட்டிக்கொள்வது வேறாகவும் இருக்கும் இரட்டை முகம், தமிழ் வாழ்க்கையைப் போலவே இன்னொரு இரட்டை முகம் என்று சொல்ல வந்தேன்.

தமிழ் சினிமா என்று சொல்லப்பட்ட, பேராசையால் உந்தப்பட்டு உருவெடுத்திருக்கும் வணிக கேளிக்கையில் தமிழும் இல்லை. சினிமாவும் இல்லை. அதில் இலக்கியமும் இல்லை. கலை என்று சொல்லக் கூடியதும் எதுவும் இல்லை.

சொல்லப் போனால் நாம் சினிமா என்றால் என்னவென்றே என்றும் புரிந்து கொண்டதில்லை இன்று வரை. இடையில் வந்த ஒரு பாலு மகேந்திராவையும் அவரது வீடு, பின் தமிழ்த் தொலைக்காட்சிக்காகத் தயாரித்த கதை நேரம் சிலவற்றையும் வைத்துக்கொண்டு பெருமைப் படுவதில் பயனில்லை. வருடத்துக்கு நூறு இருநூறு படங்கள் என கடந்த 80 வருடங்களாக ஆயிரக்கணக்கில் அபத்த வணிகக் குப்பைகளை மலையாகக் குவித்துக்கொண்டு அந்தப் பல்லாயிரங்களின் குணத்தைச் சொல்ல ஒரு பாலுமகேந்திராவையும் வீடு படத்தையும் காட்டிப் பயனில்லை. அதற்கு நமக்குத் தகுதி இல்லை. அந்த பாலு மகேந்திராவிடமிருந்து நாம் ஏதும் கற்றுக்கொள்ளவு மில்லை. அவரை இங்கு வாழவிடவுமில்லை

இந்தக் குப்பைமேட்டுக் குவியலில் பாலுமகேந்திராவும், மகேந்திரனும் மூச்சு முட்டி எப்போதோ மறைந்து விட்டனர். இன்று தமிழ் சினிமாவின் குணத்தை நிர்ணயிப்பது அவர்கள் அல்ல. இதன் உச்ச கட்டம் என்று பெருமையுடன் காட்டப்படுவது எந்திரன், போன்ற மாயா ஜாலக் காட்சிகளின் தொகுப்பு. அல்லது இராவணன் போன்ற கண்ணுக்குக் குளிர்ச்சியான picture post card குணத்ததான அழகான புகைப்படக் காட்சித் தொகுப்பு. அதற்கு நடனக் காட்சிகள் தேவை. அவையும் மலைச் சரிவுகளும் அருவி நீரும் தேவை. இதெல்லாம் சினிமா அல்ல.

ஒரு காலத்தில் பார் பார் பட்டணம் பார் என்று பயாஸ்கோப் காட்டி கிராமத்துச் சிறுவர்களுக்கு ஒரு மாய உலகம் காட்டி எப்படி ஏமாற்றினோமோ அதே போல இப்போது ஒரு மாய உலக புகைப்படக் காட்சிகளைத் தொகுத்து ஏமாற்றி வருகிறோம். இவையே மசாலாக்கள் தான். இவற்றோடு இன்னொரு மசாலாவும் சேர்கிறது. போன தலைமுறையில் எக்ஸிபிஷன் என்ற சந்தையில் ரிகார்ட் டான்ஸ் என்று ஒரு ஐட்டம் இருக்கும். அதை ஏதோ சினிமா நாடகம் பார்ப்பது போல் உலகம் பார்த்திருக்க போகமாட்டார்கள். இரவு எல்லோரும் போனபிறகு கூட்டம் இல்லாத நேரத்தில் தலையில் துண்டைப் போட்டு மறைத்துக்கொண்டு போவார்கள். அது இரண்டு தலைமுறை களுக்கு முன் நடந்த சமாசாரம். இப்போது அந்த ரிகார்ட் டான்ஸ் ஆடற பெண்ணுக்கு மவுஸ் அதிகம். பணம் அதிகம். அந்த டான்ஸ்ருக்கு இப்போது பெயர் ஐட்டம் நம்பர். நாம் கலை என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறோமே அந்த மகத்தான கலையான சினிமாப் படங்களுக்கு இந்த ஐட்டம் நம்பர் கட்டாயம் தேவை. அதுக்காகவே படம் ஓடும். ஹிட் ஆகும். மலேசியாவில், சிங்கப்பூரில், டோரண்டோவில், எங்கு திரைப்பட விழா நடந்தாலும் அதிலும் இந்த ஐட்டம் நம்பர் கட்டாயம் இருக்கும். நம்மூரிலேயே திரைப்பட விழாக்கள், வெற்றி விழா கொண்டாடினாலும், நம் தமிழ் நாட்டுத் தலைவர்கள் பிறந்த விழாவோ, அல்லது ஏதற்காவது நன்றி விழாவோ நிகழுமானால் நம் அரசியல் தலைமைகள் விரும்பி ரசிப்பது இந்த ஐட்டம் நம்பர்கள் தான். இந்த ஐட்டம் ஆடும் நடனமணிகள், வெள்ளைத் தோல், குட்டைப் பாவாடை வடநாட்டு மங்கையரை மேடையிலேயே அமர்த்திவிட்டால் இன்னும் சிறப்பு.

வாழ்க்கை மதிப்புகள், பார்வைகள் மாறிவிட்டன. தர்மங்கள் மாறி விட்டன. இந்த ரிகார்ட் டான்ஸ் எப்படி ஐட்டம் நம்பர் ஆனதோ, எப்படி துண்டைத் தலைக்குப் போர்த்தி ரகசியமாகப்பார்த்தது இப்போது மேடைக்கேற்றி அழகு பார்க்க முடிந்து விட்டதோ, அப்படியே தர்மங்கள் மாறிவிட்டன. கீற்றுக் கொட்டகையில் ஆடியதை இப்போது பிரம்மாண்ட அரங்குகளில் ஆடமுடிகிறது. அதைத் தொலைக்காட்சியிலும் பார்க்க முடிகிறது. 22 நிமிடக் காட்சி அல்ல. 4 மணி நேரம் நீளும் காட்சி. நான்கு வாரங்கள் தொடரும் காட்சி. சன் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் அறிவார்கள்.

இதற்கும் நம் வாழ்க்கைக்கும் நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களுக்கும் என்ன சம்பந்தம்? எந்த அநியாயத்துக்கும் சமாதானமாக ரொம்பவுமே நியாயமாகத் தோன்றும் ஒரு பதில் ஒன்று தயாராக வைத்திருப்போமே. ”தமிழ் வாழ்க்கையிலேயே பாட்டும் கூத்தும் ஒன்று கலந்தது என்று. ஏற்றம் இறைக்கப் பாட்டு, நாத்து நடப்பாட்டு, வண்டியோட்ட பாட்டு, நலுங்குக்குப் பாட்டு……சரி. திடீரென்று நாற்பது பேர் தெருவை அடைத்துக் கொண்டு “ஓ போடு” என்று பாடுகிறார்களே, அது எப்படி? சங்கர் தன் சொந்த வாழ்வில் அவரோ அல்லது அவர் பார்க்க மற்றவர்களோ கடைசியாக 40 பேரோடு தெருவில் குத்தாட்டம் போட்டது எப்போது? குஷ்பு நாத்து நட்டுக்கிட்டே எப்போதாவது ஆடிக்கிட்டே பாடியிருந்தால் அது தமிழ் வாழ்க்கையின் யதார்த்தமாக இருக்கும். குஷ்புவின் கலரும் புஷ்டியான உடம்பும் தான் கொஞ்சம் உதைக்கும். ஆனாலும், அப்படி அவர் ஆடி நாத்து நட்டு எந்தப் படத்திலாவது பார்த்திருக்கிறோமா? இந்த மாதிரியான அபத்த காட்சிகளுக்கு இவர்கள் நியாயப் படுத்தத் தரும் அபத்த பதில்கள் ஒரு புறம் இருக்கட்டும். தமிழ் நாடு பூராவும் திரையிடப்பட்டு முதல் வாரமே 36 கோடி வசூல் காட்டுமானால் இது என்ன எந்த அபத்தத்தையும் நியாயப் படுத்தத் தோன்றும். அது கேட்டுக்கொள்ளவும் படும். மற்றவர்களை விடுங்கள். தம்மைக் கலைஞர் என்றும் மற்ற தமிழ்ப் பட டைரக்டர்களைப் போல அல்லது தொழில் நுட்பத்திலும் கலையுணர்விலும் தேர்ந்தவர் என்று பெயர் பெற்றுள்ளவரும் இந்தியாவில் எல்லா நடிக நடிகைகளும் “அவரிடம் நடிக்கும் சான்ஸுக்காக காத்திருப்பதாகப்” புகழ் பெற்றவருமான மணிரத்னம் எந்தெந்த புதிய வழிகளில் டான்ஸையும் கூத்தையும் புகுத்தலாம் என்று சிந்திப்பவர். வேடிக்கை தான். ரயில் பெட்டியின் மேலே ஒரு குத்தாட்டக் கும்பலையே ஏற்றி ”சையான் சையான்” என்று பாடி ஆடச் செய்வார். புதுமை தானே. தொழில் நுட்பம் தானே. கலைதானே. இப்படி அவர் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாகச் சிந்திப்பவராக புகழ் பெற்றவர். இப்படி ரொம்பவுமே அதீதமாகச் சிந்திக்கப் போய் தான் ராவணன் வெகு சீக்கிரம் பெட்டிக்குள் அடைபட்டு விட்டது. மக்கள் இன்னும் என் புதுமைக்குத் தயாராகவில்லை. இந்தப் புதுமைகளுக்கு தமிழ் நாடு இன்னும் இருபது வருஷங்கள் காத்திருக்கணும் என்று சொல்லிக்கொள்ள வாய்ப்பு.

காரணம்: இவர்கள் வியாபாரிகள். இவர்களுக்கு கலை என்பது பற்றிய சிந்தனையே கிடையாது. எந்த அபத்தமும் ஆபாசமும் சந்தையில் விற்பனையாகுமோ அதை கலை என்று சொல்லி தலையை நிமிர்த்தி ஆகாயத்தைப் பார்க்க இவர்களுக்கு தயக்கம் இல்லை. இன்று வரை எந்த பத்திரிகையும், பல்கலைக் கழகமும் அறிஞரும், தலைமையும் கலைஞரும் இந்த அபத்தத்தை அபத்தம் என்று சொன்னதில்லை. மாறாக புகழ்ந்து கொண்டாடியிருக்கிறார்கள்.

இன்று நேற்று அல்ல. தமிழ் சினிமாவின் தொடக்கமே இப்படித் தான். அவர்கள் புதுசாக காமிராவைப் பார்த்தார்கள். அது தரும் சினிமா என்ற் ஒரு புதிய சாதனத்தை அவர்கள் புரிந்து கொண்டதே இல்லை. அவசியமும் இருக்கவில்லை. முதல் சலனப் படத்தை எடுத்த லூமியேர் சகோதரர்கள் நமக்குக் காட்டியது அது வரை மக்கள் காணாத ஒன்றைத் திரையில் கண்டனர். விரைந்து வரும் ஒரு ரயில் வண்டி. ஒரு சில நிமிடங்களுக்கு ஓடியது. ஒரு புதிய சாதனம் ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது. தமிழில் நாம் செய்தது, எம்.கே டி. பாகவதரும் இன்னும் யாரோ ஒரு அம்மணி பெயர் நினைவில் இல்லை. நடித்த பவளக் கொடி நாடகம். அது மிகவும் புகழ் பெற்ற நாடகம். அதையே திரும்ப அவர்களையே அவர்கள் நடித்த நாடகத்தையே புகைப்படம் எடுத்தார்கள். இது தான் முதல் அடிவைப்பு. புதிதான அனுபவம் எதையும் நாம் உருவாக்க வில்லை. நாடகத்தில் இருவரும் நல்ல பாடகர்கள். ஒவ்வொரு முறையும் நேரில் அவர்கள் பாடக் கேட்பது அவர்களுக்கும் நமக்கும் புதிய அனுபவம். பாடிய பாட்டே ஆனாலும். ஜீவனுடன் நிகழ்ந்த ஒன்றை திரும்ப அதையே படமாக்கினோம். ஆக இரண்டிலும் நாடகத்தை விட இது தூர விலகிய குறைபட்ட ஒன்று. ஆனால், அதைத் தமிழகம் முழுதும் எடுத்துச் சென்று வியாபாரப் பொருளாக்கலாம். ஒரே நாளில் நூறு இடங்களில் காட்டலாம். எம்.கே.டி இனித் தேவையில்லை பவளக்கொடிக்கு. இது ஒரு பெரிய வணிக லாபம். இது தான் புதிய அனுபவம். சினிமாவில் நாம் கற்றதும் பெற்றதும்.

முதல் அடி வைப்பே தவறாயிற்று என்றால் பின்னர் நிகழ்ந்தது அனைத்தும் அந்தப் பாதையிலேயே தொடர்வதாக இருந்தது. தமிழ் நாடகத்திலும் இலக்கியம் புகவில்லை. சினிமாவிலும் கலையும் இலக்கியமும் அல்லாத நாடகமே புகுந்தது. நாடகத்தில் இருந்த கதைகளே, நடிகர்களே சினிமாவிலும் இடம் பெயர்ந்தனர். சினிமா தமிழ் நாடகமே படம் பிடிக்கப்பட்டதாயிற்று. இன்று வரை அதன் எச்ச சொச்சங்கள் தொடர்கின்றன. முழுதுமாக நம்மால் நாடகத் தனத்தை, காட்சி அமைப்பிலும், உரையாடலி லும், இருந்தாலும் அன்றைய சினிமா நமக்கு சில திருப்திகரமான, பாமரத்தனத்திலிருந்து மேம்பட்ட அனுபவத்தைத் தந்தது. அதன் சங்கீதத்தில். அது மற்ற அம்சங்களை நாடகத்திலிருந்து பெற்றது போலவே கர்நாடக சங்கீதத்தையும் எடுத்துக்கொண்டது. அது ஒன்றே பழைய தமிழ்ப் படங்களுக்கு நீடித்த ஜீவன் தருவது அதன் பாட்டுக்கள் தான்.

சிறு வயதில் நான் பார்த்த நாடகங்கள், திரைப்படங்கள், -இன்றைய தலைமுறை நம்ப மறுக்கும், அதன் கர்நாடக சங்கீதத்தில் அமைந்த பாட்டுக்களுக்காகவே படம், நாடகம் பார்த்தார்கள். அவை மிகவும் பிரபலமாயின. படங்களின், நாடகங்களின் வெற்றிக்கு காரணமாயின. தெருவெங்கும் பாடல்கள் கிராமபோனில் முழங்கின. சந்தையிலிருந்து கிராமத்துக்குத் திரும்பும் வண்டியோட்டி இரவில் பாடிச் செல்வது கர்நாடக சங்கீத பாடல்கள் தான். பாகவதரும் சின்னப்பாவும் பாடிய பாடல்கள். அவர்கள் சூப்பர் ஸ்டார்களானது அவர்களது பாட்டுத்திறத்துக்காகத் தான். அன்றைய சூப்பர் ஸ்டார்கள், சினிமாக்கள், நாடகங்கள் சாஸ்திரிய சங்கீதத்தை அதன் எளிய உருவில் பாமர மக்களுக்கும் பிரியமாக்கின. பாமர மக்கள், ”இது நமக்கில்லை,” என்று ஒதுக்கவில்லை. சினிமா/நாடகக் காரர்கள். ”இதை மக்கள் விரும்பமாட்டார்கள்,” என்று ஒதுக்கவில்லை.

எனக்குத் தெரிந்து முதல் முதலாக ஒரு சமகால எழுத்தாளரின் எழுத்து திரைப்படமாகியது கல்கியின் தியாக பூமி. காங்கிரஸ் பிரசாரம், காந்தி பிரசாரம், ஹரிஜன சேவை போன்ற பிரசாரம் செய்வதாக அன்றைய பிரிட்டீஷ் அரசு தடை செய்த படம். நான் பார்த்ததில்லை. புத்தகமும் படித்ததில்லை. ஆனால் படத்தின் ஒரு சில துணுக்குகளையும், ஆனந்தவிகடன் பத்திரிகையில் படமெடுக்கப்பட்டபோது வெளிவந்த தொடரில் சம்பு சாஸ்திரியாக பாபநாசம் சிவனும் அவர் ஏதோ ஒரு ஹரிஜன குடிசையின் முன் நின்றுகொண்டிருக்கும் படமும், படத்துணுக்கில் ஒரு காங்கிரஸ் ஊர்வலத்தில் அந்தப் படத்தின் கதாநாயகியும் அவளை முதலில் வெறுத்து ஒதுக்கிய கணவன் பின் சமாதானமாகி அவனும் காங்கிரஸ் ஊர்வலத்தில் சேர்ந்து கொள்கிறான். அது தான் படத்தின் கடைசி காட்சி என்றும் சொல்லப்பட்டது. பாபநாசம் சிவன் பெண்ணின் அப்பாவாக, ஒரு முக்கிய பாத்திரத்தில் வருகிறார். இது ஆரம்ப காலம். கே சுப்பிரமணியம் இயக்குனர். ஆக அப்பாவாக பாபநாசம் சிவனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கொஞ்ச வருடங்களுக்குப் பிறகு தரித்திரம் பிடித்து உண்ண உணவில்லாமல் தவிக்கும் அப்பாவாக நாகய்யா ஒரு வீட்டின் கூடத்து ஊஞ்சலில் ஒரு ஜரிகை வேஷ்டியும் ஜரிகை துண்டுமாக வசனம் பேசுகிறார். அவருக்கே உரிய ஸ்டைலில். அது அன்று. அதற்கு பிறகு எம்.ஜி.ஆர் ரிக்‌ஷாக்காரனாக வந்தால் பளபளக்கும் பாண்ட், ஸில்க் ஷர்ட் ஒரு தொப்பி எல்லாம் அழகாக ஒரு ஸ்டைலில் வந்து ரிக்‌ஷாமீது நின்று கொண்டு பாடுவார். பாடவேண்டும், காதலிக்க வேண்டும், அதற்கு இந்த மேக்கப் இல்லாமல் முடியாது.. தமிழ் சினிமா ரிக்‌ஷாக் காரன் அப்படித்தான் இருப்பான் தோ பிகா ஜமீன் ரிக்‌ஷாக்காரன் பால்ராஜ் ஸாஹ்னி வேண்டுமானால் நம்பும்படியாக இருக்கலாம். அதெல்லாம் தமிழ்கலாசாரத்துக்கு ஒத்து வராது.

தமிழ் சினிமாவுக்கு ஒரு சட்டகம்/சட்டம் உண்டு. அது என்றும் மீறப்படாதது. அது எந்தக் கதையானாலும் சரி. எந்தக் காலத்து கதையானாலும் சரி. பாட்டு, டான்ஸ், கவர்ச்சியான வசனம், ஒரு கதாநாயகன்,கதாநாயகி, பின் வில்லன், பஃபூன். இந்த ஐட்டங்கள் இல்லாது படம் எடுக்க முடியாது. ஓடாது. அது அவார்டு வாங்கத் தான் லாயக்கு (இதன் பொருள்; இது பைத்தியக்காரத் தனம். குப்பையில் போடத்தான் லாயக்கு என்று பொருள்.) ஒரு காலத்தில் இந்திர சபா அல்லது ராஜ தர்பார் அதில் ஏழெட்டு பெண்கள் வந்து ஆடுவார்கள். அது இன்றும் மாறவில்லை. மனிரத்னமோ, இல்லை சங்கரோ இல்லை மிஷ்கினே ஆகட்டும். எல்லாரும் சேர்ந்து ஒரு ஆட்டம் ஒன்றோ மூன்றோ ஆடித்தான் ஆகவேண்டும். அதுவும் மணிரத்னம் படத்தில் அவரதே யான தனித்வம் துலங்கும். ஒரு கூட்டம் கிழவிகள் தம் தடித்த உடம்பை ஆட்டிக்கொண்டு கல்யாணம் நடந்த முதல் இரவு என்ன நடந்தது என்று கேட்பார்கள் ருக்குமிணியை. காஷ்மீர் தகராறில் சிக்கிய படத்தில் இந்த ருக்மிணியும் 15 கிழவிகளும் எதற்கு வந்தார்கள்? இன்றைய சினிமா மேதை படத்தில் ”கட்டமரத் துடுப்பு போல் இடுப்பை ஆட்டுறா” என்று வாலிபர் கூட்டம் ஒன்று ஆடிவரும். இளங்கோவன் என்று ஒருவர் இருந்தார். அவர் இடத்தை கலைஞர் மு.கருணாநிதி பிடித்துக் கொண்டார். எதற்கு? பக்கம் பக்கமாக வசனம் அலங்கார அடுக்கு மொழித் தமிழில் வீர வசனம் பேசத்தான். இந்த வசனம் பேச சிவாஜி படும் அவஸ்தை சொல்லி முடியாது. கடுமையான வயிற்றுப் போக்கில் வரும் அவஸ்தை முகம் அது. அந்த அவஸ்தை முகத்துக்காகவே அவர் நடிகர் திலகமானார்.

அந்த வசன ஆக்கிரமிப்பிலிருந்து தப்பினால், இயக்குனர் சிகரம் படங்களில் இன்னொரு புதுமை. இங்கீஷில் ஒரு வரி பேசி பின் அதைத் தமிழிலும் எழுதித் தருவார். ஆங்கிலம் ஸ்டைலுக்கு. தமிழ் ரசிகப் பெருமக்களுக்கு. முன்னர் பாலையாவும் எம் ஜி ஆரும் போட்ட வாள் சண்டை இப்போது துப்பாக்கி எடுத்து வந்தாலும் பத்து பேரை வீழ்த்த கதாநாயகனுக்கு உள்ள ஆயுதம் தன் முஷ்டிதான். இப்போது முஷ்டி யுத்தம் பத்துப் பேருடன் படத்தில் நாலு தடவையாவது போடாத கதாநாயகன் இல்லை. படம் இல்லை. ஆள் செத்தான் என்று நினைப்போம். அவன் திரும்பத் திரும்ப வந்து முஷ்டியைத் தூக்குவான். சிவாஜி கணேசன் இந்தக் கால ஹீரோ வானால் என்ன ஆயிருக்கும் என்று நினைத்துப் பார்ப்பேன். பார்க்கில், மரத்தைச் சுத்திப் பாடுவது இன்றைய மக்கள் கலையாகாது. தெருவில் 40 பேரோடு ”ஓ போடு” ஆடவேண்டும். சாவித்திரியை “கருப்புத் தான் எனக்குப் பிடிச்ச கலரு” என்று ஆடச்சொன்னால், என்ன ஆகும்? சிவாஜியும் பத்மினியும் நம்ம சங்கரிடம் அகப்பட்டால் ஒரு மூங்கில் கழியால் இருவர் தொப்புளையும் இணைத்து ஆடிப் பாடச் சொலவார். நல்ல வேளை அவர்கள் போய்ச்சேர்ந்தார்கள்.

முன்னர் சினிமா சினிமாவாக இல்லாவிட்டாலும் இன்றும் முப்பது நாற்பதுகள் காலத்து படங்களைப் பார்க்க முடிகிறது. அன்று வசந்த கோகிலம், எம்.எஸ். ஜி.என்.பி. பி.ஜி.வெங்கடேசன், பி.யு.சின்னப்பா, எம்.கே. டி. பாகவதர் போன்றோர் பாட்டுக்கள் இன்றும் ஜீவனுள்ளவை. ஆனால் இன்று கோட்டைச் சுவர் ஏறி ஆல விழுது பற்றி அங்கு தயாராக இருக்கும் குதிரை மேல் உட்காருவதை யார் பார்ப்பார்? சிவாஜியின், பராசக்தியை யார் பார்க்கமுடியும்? ஆனால் இப்போது நாம் ரசிக்கும் அபத்தம் வேறு. தனுஷ் பத்துபேரை அடித்து வீழ்த்துவார். தனுஷின் சேஷ்டைகள் பெற்றது ரஜனியிடமிருந்தா இல்லை சிவாஜியிடமிருந்தா என்பது ஆராய்ச்சிக்கான விஷயம். அபத்தங்களின் வடிவங்கள் தான் மாறுகின்றனவே தவிர தமிழ்ப்படத்துக்கான சட்டகத்திற்கு இன்றும் அபத்தங்கள் தேவை. ஒரு பெரிய மாற்றம். சிவாஜியின் நிற்காத சிம்ம கர்ஜனையும் உடன் வரும் முக, அங்க சேஷ்டைகளும் இன்று அவ்வளவு உக்கிரத்தில் தேவை இல்லை. சிம்புவிடம் கூட மிகவாக குறைந்துள்ளது.

இந்த டான்ஸையும் பாட்டையும் முற்றிலும் ஒதுக்கி, தான் எழுத்தில் படைத்த உலகை சினிமாவில் காட்ட முயன்ற முதல் இலக்கிய எழுத்தாளர் ஜயகாந்தன். அவருக்கும் முன்னால், தமிழ் சினிமாவுக்கு லக்ஷ்மியையும் அகிலனையும் கொண்டாந்தால் என்ன என்று தோன்றியிருக்கிறது. அகிலனின் ஹீரோ அவரைப் போல ஒரு தொடர்கதைக்காரர். அவரை நான்கு பெண்கள் காதலிக்கிறார்கள். தமிழ் சினிமாவுக்கு ஏற்றது தான். ஆனால் இவர்கள் எல்லாம் ஏற்றவர்களாக இருந்தாலும் இன்னமும் சினிமா சட்டகத்துக்குள் வலிந்து நுழைக்கப்பட்டார்கள். விளைவு? இவர்களும் ஜெமினி கதை இலாகா மாதிரி ஆனார்கள்.

கதை டிஸ்கஸ் பண்றது என்று ஒரு வினோதக் காட்சி தமிழ் சினிமாவில் உண்டு. அங்கு தான் கதை படைக்கப்படுக்கிறது. அங்கு ஸ்டாருக்கு ஏத்த மாதிரி கதை தயாரிக்கப்படுகிறது. புது ட்ரெண்ட் எப்படி? அதுக்கேத்த திருப்பங்கள், மசாலாக்கள் என்னென்ன அந்தக் கதையில் சேர்க்கப்படணும் என்ற டிஸ்கஸன் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு தயாரிக்கப் படுகிறது. இதிலென்ன விசேஷம் என்றால், தமிழ் சினிமா என்ற அலங்கோலத்தில் முதல் காலடி வைப்பை நேர்மையான முறையில் செய்தவர் ஜயகாந்தன். அந்தப் படம் வெளியாகாமல் பார்த்துக்கொண்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன். வெளி யாயிற்று. அவார்டும் கிடைத்தது. அவார்ட் படத்துக்கு என்ன கதியோ அந்த கதியை அது அடைந்தது. பின்னர் அவர் தன்னைத் திருத்திக்கொள்ள முயன்ற படங்கள் தான் பின் வந்த சில. சில நேரங்களில் சில மனிதர்கள் கூட உன்னைப் போல் ஒருவனின் தொடர்ச்சி அல்ல. தன்னைத் திருத்திக்கொள்ளும் முயற்சி. வாழ்க்கையின் யதார்த்தத்துக்கும் அதற்கும் ரொம்ப தூரம். அகிலன் தன் கதாநாயகனைக் கற்பனை செய்வது போல ஜெயகாந்தனின் கற்பனை அது. இலக்கியப் பொறியும் இல்லை. தமிழ் சினிமா மசாலாவும் இல்லை. உப்புப் போடாத உப்புமா எப்படியிருக்கும்?

படங்களில் பாட்டும் நடனமும் இருக்ககூடாதா என்ன? அது “குறுக்குச் சிறுத்தவளே? பாட்டாக இராது. சத்யஜித் ரேயின் படத்திலும் பாட்டும் நடனமும் உண்டு. ஜல்ஸாகர் படத்தில் அழிந்து வரும் ஜமீன் தர்பாரில் கதக் நடனமும் ஹிந்துஸ்தானி சங்கீதமும் உண்டு. உரிய இடத்தில் அது வரும். ஞான ராஜ சேகரன் வெகு நாள் தவமிருந்து ஜானகிராமனின் மோகமுள் படம் எடுத்தார். உண்மைக்கும் பாவனைக்கும் உள்ள வித்தியாசத்தை அங்கு காணலாம். Subtlety – க்கும் crudity-க்கும் உள்ள வித்தியாசத்தை அங்கு காணலாம். நமக்கு எதையும் கொச்சைப் படுத்த, உரத்துக் கூச்சலிடத் தான் தெரியும். சமிக்ஞைகள், மெல்லிய உணர்வுகள் நம்மிடமிருந்து அன்னியப் பட்டவை. நீல பத்மனாபனின் தலைமுறைகள், தி ஜானகி ராமனின் மோகமுள் போல சிகர சாதனைகள். திருப்பு முனை சாதனைகள். ஜமுனா போல, தலைமுறைகளின் ஆச்சி (பெயர் மறந்துவிட்டது) ஒரு சிகர சாதனை. அந்த ஆச்சிவரும் துணுக்கு மாத்திரம் திரையில் பார்த்தேன். இதைப் போல யாரும் கொச்சைப்படுத்த முடியாது.

தமிழ் சினிமாவின் குணங்களைக் கேள்வி எழுப்பாமல், அதன் ஸ்டார் இயக்குனர்களின் இஷ்டத்துக்கு உடனுக்குடன் ஜிலுஜிலுப்போடு எழுதித் தந்து தன்னை ஸ்தாபித்துக்கொண்டவர் சுஜாதா. சந்தையில் விற்கும் சரக்குக்கே ஜிகினா தூவித் தருபவர். அல்லது தன் சரக்கை சந்தைச் சரக்காக மாற்றுகிறவர். எழுத்தாளராக அவர் பிரபலமானதே தன் சொந்த ஜிலுஜிலுப்போடு வாசகர் தேவையையும் பூர்த்தி செய்ததால். இயக்குனர் சொல்லும் கதைக்கு, திருப்பங்களுக்கு தன் ஜிகினாவைத் தூவிக்கொடுபபவர். சினிமா என்றால் என்னவென்று அவருக்குத் தெரியும் என்று தான் நான் நம்புகிறேன். ஆனால் நம்மூருக்கு அதெல்லாம் எடுபடாது என்றும் தெரிந்தவர். இதன் உச்ச கட்ட கேவலம் தான் அவர் பாய்ஸ் படத்துக்கு எழுதியது. கட்டில் ஆட்டும் காட்சி அவர் மூளையில் உதித்தல்ல என்று நான் நிச்சயம் சொல்வேன். அவரது எழுத்துத் திறன், சினிமா அறிவு எல்லாம் தமிழ் சினிமா சந்தைக்கு அடி பணிந்தது.

இதே கதை தான் இப்போது ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், அவர்களோடு சேர ஆசைப்படும் இரா. முருகன் போன்றோருக்கும் நிகழ்வது. இதில் கொஞ்சமாவது நம்பத் தகுந்த உரையாடல் களைத் தருபவர் ஜெயமோகன். ஆனால் கதை என்னவோ இயக்குனரது. தயாரிப்பாளரது. அவர் பெருமைப் படும் விஷயங்கள் அல்ல. விஜய் டெண்டுல்கர் என்று ஒரு மராட்டி நாடகாசிரியர். அவரும் திரைப்படங்களுக்கு கதையோ வசனங்களோ எழுதியவர் தான். அவர் நாடகங்களில் நாம் காணும் டெண்டுல்கரும், சினிமாவான கதைகளில் காணும் டெண்டுல்கரும் அவர் சினிமா உரையாடல் களில் காணும் டெண்டுல்கரும் எல்லாம் ஒரே டெண்டுல்கர் தான். இப்படி நாம் ஒரு ஜெயமோகனைக் காணமுடியாது. ஏனெனில் ஜெயமோகன் நான் மதிக்கும் ஒரு கலைஞன். தமிழ் சினிமாவுக்கு வேண்டியது அவர்களுக்கு வேண்டியதை, தயாரிப்பாளரும், இயக்குனரும், கதாநாயகரும் சொல்வார்கள். அதை எழுதித் தரவேண்டும். ஜெயமோகனை அவர்கள் ஒரு ப்ராண்டாக பயன்படுத்திக்கொள்வார்கள். அன்று ஒரு முகம் தெரியாத கதை இலாகா செய்ததை இன்று ஒரு ப்ராண்ட் ஆகிப்போன ஜெயமோகன் செய்கிறார். தமிழ்சினிமாவே சந்தைக்கு தேவை யான சரக்குகளைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை. சுஜாதா சரியாகச் சொன்ன கனவுத் தொழிற்சாலை.

இடையில் சுப்பிரமணியபுரம், வெயில், அங்காடித் தெரு, ஆடுகளம், நான் கடவுள், எங்கேயும் எப்போதும் போன்றவை மரபான தமிழ் சினிமா சட்டகத்தையும் மறக்காமல் அதற்கான மசாலாவை தாளித்துக்கொண்டு, தாம் வித்தியாசமானவர்கள் என்று பேர்பண்ணிக்கொள்ளவும் ஆசைப்பட்ட முயற்சிகள்.

வித்தியாசமானவர்களோ இல்லையோ அப்படிப் பேர் பண்ணிக் கொள்வதில் மதிப்பு வைக்கிறார்களே அதுவே பெரிய அடி வைப்பு. புரட்சி தான். இந்தப்படங்கள் ஒவ்வொன்றிலும் நான் ரசித்த காட்சிகள் உண்டு தான். கவனிக்கவும். ஏழாம் அறிவு, நந்தலாலா, தெய்வத் திருமகள் போன்றவற்றைப் பற்றி பேசவே இல்லை நான்.

முற்றிலும் ஒரு மாறிய, வறுமைப் பட்ட சமூகத்திலிருந்து வந்த ஒரு படத்தைச் சொல்கிறேன். ஒன்றிரண்டு பாராக்களில். இது தமிழ் சினிமா கலாசாரம் எட்டாத ஒரு சிகரத்தில், நினைத்துப் பார்க்க முடியாத ஒரு தூர தேசத்தில் உள்ள விஷயம். நடப்பு. ஒடிஷா படம். மொழி ஒடியா. படத்தின் பெயர் நிர்வாசன் (தேர்தல்)

படத்தில் தொடக்கக் காட்சியில் முதுமையில் தள்ளாடித் தள்ளாடி நடந்து வரும் ஒரு கிழவன். புழுதி பறக்கும் சாலை. அது பக்கத்தில் உள்ள ஒரு கல் க்வாரியால் நாசமடைந்த கிராமம். சாலை. வயல்வெளி.. விளை நிலங்களை புழுதி பரப்பி நாசமாக்கும் பிரம்மாண்ட க்வாரி. விவசாயிகள் பிழைப்பற்றுப் போகிறார்கள். தன் மூத்த மகன் க்வாரிக்கு வேலைக்குப் போவதை குடும்பத் தலைவன் விரும்பவில்லை. அங்கு பக்கத்து டவுனிலிருந்து ஒரு பணக்கார முக்கியஸ்தர் வருகிறார். ஒரு காரில் தன் படைகள் சூழ. அனைவரும் கூடி வரவேற்கிறார்கள். ஒரு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து அவர் பேசுகிறார். அவர் தேர்தலுக்கு நிற்கிறார். எல்லோரும் அவருக்கு ஓட்டு போட வேண்டும். ஒவ்வொரு ஓட்டுக்கும் அவர் நூறு ரூபாய் தருவதாகவும் வாக்களிக்கிறார். ஓட்டுப் போட்டுவிட்டு வந்தால் தருவார் அவர். வயலில் வேலை இல்லாமல் வாடும் குடும்பத்துக்கு இந்த நூறு ரூபாய் பெரிய தொகை. இவர்கள் மூன்று பேர். ரூ 300 ஆயிற்று. பின் சட்டென ஒரு யோசனை. அந்த கிழட்டுப் பிச்சைக்காரனுக்கு என்ன தெரியப் போகிறது. அவனைக் காப்பாற்றுவார் யாருமில்லை. அவனை வீட்டுக்கு அழைத்து வந்து ஓட்டுப் போட்டு காசு வாங்கும் வரை சாப்பாடு போட்டு வைத்துக்கொண்டால் இன்னொரு ரூ 100 கிடைக்குமே. அவன் எங்கோ படுத்துக்கிடக்கிறான் கவனிப்பாரின்றி. உடல் சரியில்லை. அவனை குழந்தையைத் தூளியில் சுமப்பது போல ஒரு கழியில் தூளி கட்டி அதில் அவனை உட்கார வைத்து அப்பனும் மகனுமாக வீட்டுக்குத் தூக்கி வருகிறார்கள். அவனுக்கு உபசாரம் நடக்கிறது. வீட்டுத் தலைவிக்கு அந்த பிச்சைக்காரனை கவனித்துக்கொள்கிறாள். இருக்கிறதை பங்கு போட்டுக்கொள் வதில ஆட்சேபனை இல்லை. ஆனால அவன் ஓட்டு தரும் ரூ 100 பற்றிப் பேசுவதில் அவள் அருவருப்படைகிறாள்.

பிச்சைக் காரனுக்கும் ஒரே ஆச்சரியம். இத்தனை நாளாக யாரும் சீண்டாத தன்னை இப்போது இவர்கள் விழுந்து விழுந்து ஏன் உபசரிக்கிறார்கள் என்று. அவனது ஓட்டுக்காக என்று தெரிகிறது. இருந்தாலும் கிடைக்கிற வரை அதை வேண்டாம் என்பானேன் என்று இருக்கிறான். அவனை தேர்தல் தினம் வரை உயிரோடு காப்பாற்ற வேண்டுமே. திரும்பவும் அவனைத் தூளியில் உட்காரவைத்து பக்கத்து டவுன் வைத்தியரிடம் அழைத்துச் செல்கிறார்கள். ஒவ்வொரு தடவையும் இப்படி டவுனுக்கு வைத்தியரிடம் அழைத்துச் செல்வதும் பின் கிராமத்துக்கு திரும்பக் கொண்டு வருவதும் தன் வறுமையில் அவனுக்குச் சோறு போடுவதும் அவர்களுக்குப் பெரும்பாடு. தூளியைத் தூக்கிச் செல்வதிலேயே பாதி வழியில் களைத்துப் போகிறார்கள். தேர்தல் நாள் வருகிறது. மறுபடியும் தூளியில் கிழவனை உட்கார்த்தி எடுத்துச் செல்லும் போது சுருக்கு வழியில் போகலாம் தூரமும் சிரமமும் குறையும் என்று வேறு வழியில் செல்கிறார்கள். அந்த சுருக்கு வழி க்வாரியின் ஊடே செல்கிறது. கவாரியில் வெடி வைக்கிறார்கள். எப்போதும் வெடிச் சத்தத்துக்கும் புழுதிக்கும் இடையில் வாழ்ந்து பழகியதால் இவர்களுக்கு அந்த பிரக்ஞை இருப்பதில்லை. தூர இருந்து சத்தம் போட்டு எச்சரிப்பதும் இவர்கள் காதில் விழுவதில்லை. கற்கள் நாலாபுரமும் விழுவதைப் பார்த்து உயிர் பிழைக்க இருவரும் தூளியைக் கைவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள். அவர்களும் பிழைக்கவில்லை. பிச்சைக்காரனும் பிழைக்கவில்லை. படத்தில் நாம் வெகு தூரத்தில் இருந்து கற்கள் சரமாரியாகப் பொழிவதைத் தான் பார்க்கிறோம். படம் முடிந்தது. படத்தின் பெயர் திரும்பவும் நிர்வாசன் (தேர்தல்.)

நான் விவரித்த மனிதர்களைத் தவிர ஊர், கிராமம் தவிர, எப்போதும் படர்ந்திருக்கும் புழுதியையும் மண் ரோடையும் தவிர வேறு ஏதும் இல்லை. மக்கள் ரசனையைக் கவரும் எந்த ஒரு மசாலாவும் இல்லை..

இது போன்று நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களை, வாழும் வாழ்க்கையை, அலங்காரமில்லாமல், மனித அக்கறை மாத்திரமே கொண்டு சித்தரிக்கும் படங்கள் வருடத்திற்கு ஐந்தாறு வருமானால் அவை திரையிடப்பட ஒவ்வொரு ஊரிலும் நகரங்களின் சிற்றரங்குகள் இருக்குமானால், தொலைக்காட்சிப் பெட்டிகளில் நாம் இவற்றைப் பார்க்கக் கூடுமானால், தமிழனின் இன்றைய வாழ்வில் கலாசாரத்தில் சினிமாவும் பங்கு கொள்கிறது என்று ஒப்புக்கொள்ளலாம். மிகுந்த 195 படங்களை உலகநாயகர்களுக்கும் இயக்குனர் சிகரங்களுக்கும் சூப்பர் ஸ்டார் சுப்ரீம் ஸ்டார்களுக்கும் கவர்ச்சிக் கன்னிகளுக்கும் ஒதுக்கி விடலாம். இந்த ஐந்தாறு படங்கள் தான் நம் தமிழ் சினிமாவின் வரலாறாக பதிவுறும். இவர்கள் தான் கலைஞர்களாக நினைவு கொள்ளப்படுவார்கள். மற்றவர்கள் எல்லாம் இக்காலத்திய வணிக உலகில் நடமாடுபவர்கள். கலை உலகில் அல்ல.

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.

8 Replies to “என் பார்வையில் தமிழ் சினிமா”

 1. வெங்கட் சாமிநாதனின் அங்கலாய்ப்பு சரியானதே. ஆனால் சிவாஜி கணேசன் பல நல்ல பாத்திரங்களை மிகவும் அழகாக செய்திருக்கிறார் என்பதை நடு நிலைமையோடு ஒத்துக்கொள்ளவேண்டும் உதாரணம் : ஆண்டவன் கட்டளை. மிகை நடிப்பு என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர் என்றாலும் நடிப்பு என்பது மிகைபடுத்தப்பட்ட காலக்கட்டத்தில் அவர் இருந்தார் என்பதை மறக்கக்கூடாது. இப்பொழுது கதாநாயகன் பல பேரை உதைப்பதும் மிகை நடிப்பே. கேரளத் திரைப்படங்கள் கொஞ்சம் மண்ணின் வாசனயோடுதான் வந்துகொண்டிருக்கின்றன. தமிழர்களுக்கு என்று ஷகீலா போன்றோரின் படங்களும் உண்டு. துளிக்கூட கவர்ச்சி இல்லாமல் நந்தனம் போன்ற படங்கள் மற்றும் ட்ராபிக் , இராணுவ கோர்ட் விசாரணை நடக்கும் மேல்விலாசம் போன்ற படங்கள் ஏன் தமிழில் முயற்சிக்கப் படுவதில்லை. நல்ல படங்கள் ஏன் தமிழில் வரவில்லை என்று திரு ஜெயமோஹனிடம் கேட்டதற்கு மலையாள ரசிகர்களுக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் உள்ள வேறுபாடுதான் என்றார். சினிமா தயாரிப்பாளர்கள் ஒன்றும் வியாசரோ வால்மீகியோ அல்ல. கல்லா கட்டுவதுதான் அவர்களது முனைப்பு. ஒன்றிரண்டு படங்கள் வந்தால்(நல்ல) அதில் வியாபார கட்டாயத்துக்கு குத்து பாட்டுகள் மற்றும் மத்திய பிரதேச நடனங்கள்(கதாநாயகி மற்றும் நடன மங்கையரின் தொப்புள் க்ளோஸ் அப் காட்சிகள்) கட்டாயம் இடம் பெற்றிருக்கும். சமீபத்தில் நான் பார்த்த சாட்டை என்கிற படம் வக்கிரமான காட்சிகள் ஏதுமில்லை. அந்த படத்தின் இயக்குனருக்கு பாராட்டுகள். ஆயினும் தொடர்ந்து சந்தர்ப்பம் கிடைக்குமா என்று சொல்ல முடியாது.

 2. ” தமிழர்களுக்கு என்று ஷகீலா போன்றோரின் படங்களும் உண்டு.”-

  தமிழர்களை ஒட்டுமொத்தமாக தாங்கள் இப்படி வகைப்படுத்தலாமா அய்யா ?

 3. திரு.வெ.சா அவர்கள் இலக்கிய நோக்கில், தமிழ் சினிமாவை அலசுகிறேன்
  என்று ஆரம்பத்திலேயே எழுதி விட்டார். இலக்கியத்துக்கும் எனக்கும் சம்பந்தம்
  கிடையாது. ஆகவே இது அவரின் கட்டுரைக்கு எதிர்வினையாக இல்லாமல்,
  சாமானிய மனிதனின் மனநிலையை ஒட்டி எனக்கு புரிந்ததை எழுதுகிறேன்.

  அடிப்படையில் தமிழ் சினிமாவில் இலக்கியத்தை எதற்காக தேட வேண்டும்
  என்பது எனக்கு புரியவில்லை. சினிமா இலக்கியத்துக்காக உருவான ஊடகமா?
  என்ற கேள்வியையும் கேட்டாக வேண்டும். சரி, தமிழ் சினிமாவில் இலக்கியம்
  இல்லை என்பது உண்மை என்றாலும், மற்ற மொழி சினிமாக்களில் இலக்கியம்
  இருக்கிறதா? என்ற கேள்விக்கும் எனக்கு விடை தெரியவில்லை.

  என்னைப் பொறுத்தவரை, சினிமா என்பது ஒரு கேளிக்கை சாதனம். ஒரு
  சமூகத்திற்கு கேளிக்கை என்பது மிகவும் அவசியம் என்பதை நான் கூற
  வேண்டியதில்லை.

  Arnold Schwarzinegger Terminatorல் கூறும் “I am Back” வசனத்தையும், சமீபத்தில்
  துப்பாக்கி திரைப்படத்தில் “I am Waiting” என்று நடிகர் விஜய் ஸ்டைலாக
  கூறுவதையும் நான் இரசிக்கவே செய்கிறேன்.

  “Ek Tha Tiger” திரைப்படத்தில் Salman Khan ஒரு இரயிலை நிறுத்த செய்யும்
  அட்டகாசமான வீரதீர பிரதாபங்களையும், சமீபத்தில் James Bond-Skyfall
  திரைப்படத்தில் வீடுகளுக்கு மேல் இரு சக்கர வாகனங்களை ஓட்டும்
  காட்சிகளையும் நான் ரசிக்கவே செய்கிறேன்.

  அதே நேரத்தில் சில இராணிய திரைப்படங்களையும், குழந்தைகளை
  நடிகர்களாகக் கொண்டு, அற்புதமாக Present செய்யும் திரைப்படங்களையும்
  ரசிக்கவே செய்கிறேன். என்னைப் பொறுத்தவரை, பராசக்தி பாணியில் இரண்டு
  பக்க வசனங்களை பேசும் நாயகர்களையும், அது போன்ற படங்களையும் எனக்கு
  பிடிப்பதில்லை.

  ஒன்று, சமூக அவலங்களை Message இல்லாமல், Overacting இல்லாமல்,
  குறைவான வசனத்தில், நல்ல காட்சி அமைப்பிலும், அற்புதமான பின்னனி
  இசையிலும், தரமான நடிகர்களாலும் எடுக்கப்படும் படங்கள் எனக்கு பிடிக்கிறது.

  இரண்டு, ஸ்டைலாக, சாமானிய மனிதர்களால் எட்டமுடியாத சாகசங்களை
  ஒருவித பிரமிப்புடன் காட்சிபடுத்தி, சிறிது நேரம் இந்த எதார்த்த உலகிலிருந்து
  என்னை ஒரு கற்பனை உலகிற்கு கொண்டு செல்லும் படங்களையும் நான்
  ரசிக்கவே செய்கிறேன்.

  மேற்கூறிய இரண்டு வகைகளிலும் இல்லாத, சமூக நிக்ழ்வுகளை
  மிகைபடுத்தலே இல்லாமல் சொல்லிச்செல்லும் Satyajitreவின் திரைப்படங்களை
  என்னால் ரசிக்க முடியவில்லை. ஆனால் இது போன்ற திரைப்படங்களுக்கும்
  ரசிகர்கள் உள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில், அந்த
  ரசிப்புத்தன்மையை வலுக்கட்டாயமாக புகுத்த முடியாது என்பதை மட்டும் நான்
  கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

  அமேரிக்கா போன்ற மேற்குலக நாடுகளில், இது போன்ற எதார்த்த
  திரைப்படங்கள், ஆவணப்படங்கள் போன்றவற்றை திரையிட தனியாக பல
  நகரங்களில் சிறிய திரையரங்குகள் உள்ளன. அது போன்ற கட்டமைப்புகளை
  இந்தியாவிலும், அதற்கான ரசிகர்கள் ஏற்படுத்தி தங்கள் ரசிப்புத்தன்மைக்கு தீனி
  போட்டுக் கொண்டு விடலாமே!

  ஆனால், அமேரிக்காவாகட்டும், இந்தியாவாகட்டும், பெரும்பான்மையான
  ரசிகர்கள், வர்த்தக நோக்கில் எடுக்கப்படும் படங்களையே விரும்புகின்றனர்
  என்பதை நான் கூறித்தான் ஆகவேண்டுமா?

  Why This kolaveri பாடல் பட்டிதொட்டிகளிலும் கேட்கப்பட்டது. அதே போன்று
  சமீபத்திய “நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சுருக்கேன்” என்ற சுநிதி சவ்ஹான்,
  ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடும் பாடல் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
  சங்ககால தமிழ் நூல்களில் வரும், தலைவனை பிரிந்த தலைவி, விரக
  தாபத்தில் வாடும் நிலையில் பாடுவதாக இந்த பாடல் உள்ளது. தமிழ்மக்களின்
  ரசிப்புத்தன்மை அப்படி ஒன்றும் கேவலமாக இல்லை என்பதை கூறவே இதை
  எழுதினேன்.

  பழைய படங்களில் இசை ஒன்றும் அவ்வளவு நன்றாக இருக்காது. ஆனால்
  இளையராஜா காலத்திற்கு பிறகும் சரி, தற்பொழுதைய காலத்திலும் சரி, சில
  படங்களில் இசை அதி உச்ச நிலையில் இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.
  பாடல் வரிகளும், சில பாடல்களில் அற்புதமாகவே எழுதப்படுகின்றன. காட்சி
  அமைப்புகளும், நிறைய எதார்த்த நடிப்பின் மூலமும், முதிர்ச்சிக்கு
  வந்துள்ளதாகவே நான் நம்புகிறேன்.

  இலக்கியம் என்று கூற வில்லை. ஆனால், அவ்வப்பொழுது நல்ல இசை, நல்ல
  பாடல் வரிகள், நல்ல படங்கள் வரவே செய்கின்றன. மொத்தத்தையும் கேவலம்
  என்று ஒதுக்க முடியாது என்பதே என் தாழ்மையான கருத்து.

  கடைசியாக ஒரு கொசுறு செய்தி: கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில்
  பாரதியாரின் கவிதை தொகுப்புகளை வாங்கி படிக்க ஆட்கள் தமிழகத்தில்
  இருந்திருக்கவில்லை. சென்னையின் மூர் மார்க்கெட் பகுதியில், பாரதியின்
  கவிதை புத்தகங்களை கூவி கூவி விற்கப்படுமாம். ஆனால் அங்கு வருபவர்கள்
  வேறு சில கடைகளில் மிகவும் மும்முரமாக புத்தகங்களை வாங்கிக்
  கொண்டிருப்பார்களாம். அந்த புத்தகங்கள்-ஆமாம் மஞ்சள் புத்தகங்கள்தான்.
  சமீபத்தில் படித்து தெரிந்து கொண்டேன்.

  எந்த காலத்திலும், இலக்கியம் போன்றவற்றை வாசிக்க ஆட்கள் குறைவாகவே
  இருப்பார்கள். வர்த்தக ரீதியில் எழுதப்படும் புத்தகங்களும், மஞ்சள்
  புத்தகங்களும்தான் அதிகம் விற்கப்படும். எனக்கென்னவோ, தற்காலத்தில் அதிகம்
  பேர் நல்ல புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்துள்ளனர் என்றும், தீவிரமான
  வாசகர்களாகவும் உள்ளனர் என்றும்தான் நினைக்கிறேன். கடந்த
  காலங்களைவிட இன்று நிலை நன்றாக இருப்பதாகவே உணர்கிறேன்.

 4. திரு.வெ.சா அவர்களோடு பெரும்பாலும் ஒத்துப்போகிறேன். வருடத்திற்கு இரண்டரை சதமாவது நல்ல படங்கள் வரலாமே என்ற ஆதங்கம் புரிந்துகொள்ளக்கூடியதே.

  ஆனால் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இப்போதைக்கு வணிகரீதியான படங்களும் நடுவாந்திர படங்களும் (வெயில், ஆடுகளம், அங்காடி தெரு போன்ற) கலந்து வருதலே நல்லது. வணிகரீதியான படங்கள் சினிமா என்ற தொழில் நசிந்து போகாமல் (மலையாளம் போல) காக்கும். நடுவாந்திர படங்கள் கொஞ்சம் நேர்மையான முயற்சிகள் தொடர்ந்து செய்ய துணிச்சலை அளிக்கும்.

  // இது போன்று நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களை, வாழும் வாழ்க்கையை, அலங்காரமில்லாமல், மனித அக்கறை மாத்திரமே கொண்டு சித்தரிக்கும் படங்கள் வருடத்திற்கு ஐந்தாறு வருமானால் …. //

  அங்காடி தெரு, வெயில் போன்ற படங்கள் இதுபோன்ற முயற்சிகள்தானே, அப்புறம் ஏன் ‘வித்தியாசமானவர்கள் என்று பேர் பண்ணிக்கொள்ள’ என்று விமர்சிக்கிறீர்கள் ? இன்றைய சூழலில் இதுபோன்ற திரைப்படம் வருவது வரவேற்புக்குரியதே – வணிகரீதியிலான சிற்சில சமரசங்கள் இருப்பினும்.

  இன்னொரு விஷயம், தமிழ் திரையுலகம் பெரும்பாலும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என்ற நான்கு குழுக்களால் கட்டுப்படுத்தப்படுவது.

  இவர்களை மீறி நல்ல படங்கள் வருவது அபூர்வம். (விசு தனது திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா இல்லாததால் – விசு படத்திற்கும் சில்க் ஸ்மிதா ஆட்டத்துக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்கள் ? – விநியோகஸ்தர்கள் படத்தை வாங்காமல் அழிச்சாட்டியம் செய்ததை ஒருமுறை பேட்டியில் சொல்லி இருந்தது நினைவுக்கு வருகிறது. இதையே மூன்றாம் பிறைக்கும் சொல்லிப்பார்க்கலாம்)

  சமீபத்தில் ஒரு கொரிய மொழி திரைப்படம் பார்த்தேன். கலைப்படம்தான். காது கேளாத வாய் பேச முடியாத கிராமத்தில் வசிக்கும் தன் அம்மாவிடம் தன் மகனை தற்காலிகமாக ஒப்படைத்துவிட்டு செல்கிறாள் நகரத்தில் வசிக்கும் ஒரு பெண். முதலில் பாட்டியை வெறுக்கும் பேரன் கொஞ்சம் கொஞ்சமாக அவரது நல்ல மனதை புரிந்துகொண்டு இறுதியில் அவரை நேசிக்கத்துவங்குகிறான். அவன் அம்மா வந்து அவனை கூட்டி செல்கிறார்.

  இந்த படத்தில் இரண்டே முக்கிய பாத்திரங்கள். மிக மெதுவாக நகரும் படம். எப்படி என்றால் பாட்டி நடந்து போவதை கிட்டத்தட்ட முழுதாக ஒரு நிமிட நேரம் காண்பிப்பார்கள்.

  இதை எத்தனை பேரால் பொறுமையாக அமர்ந்து பார்க்க முடியும் ?

  கலைப்படங்கள் வருமளவு நமது சமூகம் இன்னும் பக்குவப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன். (இது நுண்கலைகள் எல்லாவற்றுக்குமே பொருந்தும். காரணம் வயிற்றுப்பாட்டுக்கே பல்லாண்டுகளாக அல்லாடிக்கொண்டிருந்த சமூகம் நம்முடையது. இந்த லட்சணத்தில் கலாரசனை பற்றி கவலைப்பட யாருக்கு அவகாசம் இருக்கும் ?) அவற்றுக்கு என ரசிகர்கள் இருப்பார்களாக இருக்கும். ஆனால் அவை குறைந்த நேர படங்களாக சிறு திரையரங்குகளில் வெளியாவதே நல்லது. ஆனால் இது ஊர் கூடி தேரிழுக்கும் வேலை.

  எனவே அதுவரை வணிக திரைப்படங்களோடு நடுவாந்திர படங்களும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வரலாம்.

  அன்புடன்
  பொன்.முத்துக்குமார்.

 5. பல அவலங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. சினிமாவும் தொ(ல்)லைக் காட்சி தொடர்களும் இழைக்கும் கொடுமைகள் சமூகத்தை, கலாச்சாரத்தை (அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?) அழித்துக்கொண்டுதான் இருக்கின்றன என்பது மனசாட்சி உள்ளவர்களுக்குத தெரியும். கெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் எப்பாடு படுமோ என்று நடுங்கிக் கொண்டிருக்கின்றனர் பெற்றோர்கள். அவர்களின் மன உளைச்சல்களின் பிரதிபலிப்பே பெரியவரின் கட்டுரை. செம்மொழி தொலைக்காட்சியினரே ‘தமிள்’ உச்சரிப்பைப் பற்றி கவலைப் படுவதாகத் தெரியவில்லை. வெள்ளம், வெல்லமாகவும், மக்கள் மக்கலாகவும் ‘ல’ கரங்களும் ‘ர’ கரங்களும் ‘ந’ கரங்களும் அவற்றின் அர்த்தங்களும் படும் பாடு சொல்லி முடியாது. மிக அருமையான கட்டுரை, கருத்துக்கள் பதியவேண்டியவர்களின் மனதில் பதிந்து வருங்கால சந்ததியினருக்கு நல்லது நடந்தால், நல்லதே. பெரியவருக்கு பாராட்டுக்கள் கலந்த நன்றி.

 6. Venkat’s lament is understandable but I do not understand why we tamilians give so much importance to films & film stars.

  Recently rajanikant’s birthday was celebrated as if there was no tomorrow.

  Why, tamil films, most indian films in general are mostly masala & mindless entertainment.

 7. “நீல பத்மனாபனின் தலைமுறைகள், தி ஜானகி ராமனின் மோகமுள் போல சிகர சாதனைகள். திருப்பு முனை சாதனைகள். ஜமுனா போல, தலைமுறைகளின் ஆச்சி (பெயர் மறந்துவிட்டது) ஒரு சிகர சாதனை. அந்த ஆச்சிவரும் துணுக்கு மாத்திரம் திரையில் பார்த்தேன். இதைப் போல யாரும் கொச்சைப்படுத்த முடியாது.”- இந்த மாதிரி மாத்தி மாத்தி பேசுநீங்கன்னா என்ன சொல்ல வரீங்க என்கிறதை என்னை மாதிரி சாமானியர்கள் புரிந்து கொள்ள கஸ்டமா இருக்கு சாமி , மொத்ததுல என்ன சொல்ல வரீங்க? வாழ்த்துறீங்களா அல்லது வ்யிரீன்களா என்பதே புரீயலீங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *