ரமணரின் கீதாசாரம் – 15 (நிறைவு பகுதி)

ரமண மகரிஷி ஸ்ரீ ரமண மகரிஷியிடம் குர்ரம் சுப்பராமய்யா என்ற அடியார் ஸ்ரீமத் பகவத் கீதையைத் தினப் பாராயணத்திற்கு ஏற்றவாறு சுருக்கித் தருமாறு கேட்டதன் பலனாக மூலத்தில் உள்ள எழுநூறு சுலோகங்களிலிருந்து ரமணர் நாற்பத்திரண்டை தேர்ந்து எடுத்து அன்பரது நித்ய பாராயணத்திற்கு எனத் தொகுத்துக் கொடுத்தார். கீதை சொல்லும் கருத்துக்களை, சுருக்கமாக அந்த கீதையின் சுலோகங்கள் மூலமாகவே ரமணர் நமக்கு தந்த “பகவத்கீதாசாரம்” பற்றிய தொடர்…
முந்தைய பகுதிகள் பகுதி 1 | பகுதி 2| பகுதி 3| பகுதி 4 | பகுதி 5| பகுதி 6| பகுதி 7| பகுதி 8| பகுதி 9| பகுதி 10| பகுதி 11| பகுதி 12 | பகுதி 13| பகுதி 14

குணங்களை எல்லாம் கடந்த ஞானிக்குத் “தான் செய்கிறோம்” என்ற கர்த்ருத்துவம் இல்லாததால் அவன் செய்வதற்கும் ஒன்றில்லை; அப்படியே ஏதேனும் செய்ய நேர்ந்தால் அது அவன் செய்வதாக ஆகாது என்றும் பார்த்தோம். ஆக ஞான மார்க்கம் என்பதை தன்னைத் தேடுதல் அன்றி, தான் செய்வதை இறைவனின் ஆணையால் எனக் கொள்வதும் ஆகும். அதனால் எவருமே தனது எல்லாப் பணிகளும் இறைவனுக்காக என்று உணர்ந்து, அதனால் எல்லோருக்காகவும் என்று கொண்டால், அதுவே அவர்களை ஞான மார்க்கத்தில் கொண்டு சேர்ப்பதை உணரமுடியும்.

4-22

यदृच्छालाभसंतुष्टो द्वन्द्वातीतो विमत्सर: |
सम: सिद्धावसिद्धौ च कृत्वापि न निबध्यते ||

உற்றதாம் பேற்றில் உவப்புற்றான் தொந்தங்கள்
இற்றான் அழுக்காறு இலாதவன் – ஒற்றுமை
பெற்றவற்றும் பெறாதவற்றும் தான் செய்தல்
உற்றாலும் பந்தம் உறான்

பொருள்: யதேச்சையாகத் தானாக நிகழக் கூடிய லாபங்களில் திருப்தி அடைந்தவன், காற்று, மழை, குளிர், வெயில் இவைகளால் பாதிக்கப்படாது விருப்பு, வெறுப்பு முதலான குணங்களும் இல்லாதவன், எவரிடமும் பொறாமை இல்லாதவன், யாசிக்கும் போது மிகுதியாகக் கிடைத்தால் மகிழ்ச்சியோ, ஒன்றும் கிடைக்காத போது வெறுமையோ, உடலைப் பேணத் தானே யாசிக்க நேர்ந்தாலும், “தான் செய்கிறோம்” என்ற எண்ணம் இல்லாததனால், இவை எதனாலும் பந்தம் அடையமாட்டான்.

கிருஷ்ணனும் அர்ஜுனனும்பொதுவாக எவரும் ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும். அதன் பின் அந்தச் செயலை எடுத்துச் செய்வதற்கு என்று ஒரு முயற்சியும் இருக்கும். சில சமயம் காரணங்கள் உருவாவதற்குக் கூட முயற்சி தேவைப்பட்டிருக்கலாம். திருவள்ளுவரும் ஊக்கம் உள்ளவனுக்கே செல்வம் தானாக வந்து சேரும் என்பார். உலகு உண்மை இவ்வாறு இருக்க, ஞானிகளின் உலகமோ வேறாக இருக்கிறது. அவர்களின் அடிப்படைத் தேவைகள் கூட அவர்களின் முயற்சி என்று ஏதும் இன்றி தானாகவே அமையும். அப்படிப்பட்ட நிலையில் கிடைப்பதைக் கொண்டு ஞானி திருப்தி அடைவான்.

இயற்கை எப்படி இருப்பினும் அதை அவன் பொறுத்துக் கொள்வான். காற்று, மழை, குளிர், வெயில் என எதுவும் பொறுக்க முடியாது கடுமையாகவோ, அல்லது உடலுக்கு இதமாக மென்மையாகவோ எப்படி இருந்தாலும் அப்படி இருப்பதை அவன் பொருட்படுத்த மாட்டான். எதன் மேலும் அவனுக்கு விருப்போ வெறுப்போ இல்லாதது போல இத்தகைய இயற்கை மாறுபாடுகளின் மேலும் அவனுக்கு நாட்டம் கிடையாது. அவன்தான் இது வேறு, அது வேறு எனப் பார்க்கும் குணங்களைக் கடந்தவன் ஆயிற்றே?

செல்வம், பெயர், புகழ் என ஏனையோர் மிகுதியாக ஈட்டியிருந்தால் அது அவனுக்குப் பொருட்டு இல்லை; அதனால் அவனுக்கு அவர்கள் மேல் எந்த விதப் பொறாமை உணர்ச்சியும் இருப்பதில்லை. அத்தியாவசியத் தேவையான உணவும் அவனுக்கு மிகுதியாகக் கிடைத்தால் அவனுக்கு மகிழ்ச்சி என்று கிடையாது. அதே போலச் சில சமயம் உணவு சரிவரக் கிடைக்காது போனால் அதனால் அவன் விசனப்படுவதும் இல்லை. இருப்பது, இல்லாதது என்ற எந்த நிலையும் அவனுக்கு ஒன்றேதான்.

தானாக உணவு ஏதும் கிடைக்கவில்லை, அதனால் தானே சென்று யாசித்து வர வேண்டும் என்ற நிலை வந்தால் அதுவும் ஒரு முயற்சியே என்று நாம் நினைத்தாலும், ஞானியைப் பொறுத்தவரை “தாம் செய்கிறோம்” என்ற எண்ணம் சிறிதும் இல்லாததால், அந்தச் செயலால் அவனுக்கு எந்த வித பந்தமும் சேர்வதில்லை. “பந்தன் நான் எனும் மட்டே பந்த முக்தி சிந்தனைகள்” என்பார் ரமணர். அந்த “நான்” இல்லாதவனுக்கு பந்தம் எப்படி வரும்?

இவ்வாறாக ஞானியின் விசேஷ குணங்களை கிருஷ்ண பரமாத்மா மேலும் நமக்காகத் தெளிவுபடுத்துகிறார்.

18-61

ईश्वर: सर्वभूतानां हृद्देशेsर्जुन तिष्ठति |
भ्रामयन्सर्वभूतानि यन्त्रारूढानि मायया ||

ஈசன் உயிர்கள் எவற்றுள்ளும் சேர் இதயத்
தேசத்தில் என்றும் திகழ்கின்றான் – பாசமா
மாயையால் எந்திரம் சேர் மன்னுயிர்கள் யாவினையும்
ஓயலற நின்று உழற்றலுற்று

பொருள்: ஈஸ்வரன் உயிர்கள் எல்லாவற்றினுள்ளும் அவர்களின் இதய மையத்தில் தங்கி எப்போதும் பிரகாசித்துக்கொண்டு இருக்கிறான். பாசமாகிய மகாமாயையினால் சம்சார சக்கரமாகிய இயந்திரத்தில் உயிர்கள் அனைத்தையும் ஏற்றி எல்லோரையும் ஓய்ச்சல் ஒழிவின்றி எப்போதும் சுழற்றிக்கொண்டு இருக்கிறான்.

இறைவன் ஆகாயத்தைப்போல் இங்கங்கு என்னாது எங்கும் இருக்கிறான் என்று சொன்னாலும், தன்னையே மையமாகக் கொண்டு உலகியல்களில் ஈடுபடும் மனிதர்களுக்காக இறைவன் எங்கும் உள்ள இறைவன் உன்னுள்ளும் இருக்கிறான் என்று சொல்வதுண்டு. மேலும் உடலில் எங்கு இருக்கிறான் என்று கேட்பவர்களுக்காக உன் இதய குகையில் வீற்றிருக்கிறான் என்ற சொல் வழக்கமும் உண்டு. இந்த இதயம் என்பது நம் இடது புறத்தில் நம் வாழ்நாள் முழுதும் துடித்துக் கொண்டிருக்கும் இதயம் அல்ல; மாறாக நம் உடலின் மையக் கோட்டிற்கு வலது புறத்தில் இரண்டு நாடிகள் தள்ளி இருப்பது என்று யோகிகள் சொல்வார்கள். நம் உடலுக்குள்ளே மனத்தைக் குவிப்பதற்கு என்று குறிப்பிட்டுக் கேட்போர்களுக்காக இப்படிச் சொல்லப்படுவது வழக்கம். புறத்திலே இறைவனைத் தொழுதாலும், நம் அகத்திலும் இருப்பதை உணர வேண்டும் என்ற இந்த வழக்கம் இறுதியில் எல்லாவற்றிலும் இறைவன் இருப்பதை உணர்த்தும். இறைவன் என்றும் நம்முடன் இருந்து நம்மை நல்வழிப் படுத்துவான் என்ற நம்பிக்கை நம்மை மேலும் அவனை நேசிக்க வைக்கும்.

Merry-go-round என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் குடைராட்டினத்தில் உள்ள வெவ்வேறு குதிரை, யானை, வாத்து போன்ற வடிவத்தில் உள்ள பொம்மை இருக்கைகளின் மேல் குழந்தைகள் உட்கார்ந்து சுற்றும்போது அவர்களுக்கு அந்தந்த மிருகங்கள் மேல் சவாரி செய்வது போல்தான் தோன்றுகிறது. குழந்தைகளும் அதை எவ்வளவு ரசிக்கின்றன என்று பார்த்திருக்கிறோம் அல்லவா? அவர்கள் என்ன சுற்றும் இயந்திரத்தையா பார்க்கிறார்கள்? சுற்றுவதாகிய இயக்கம் ஒன்றுதான் அவர்களுக்குத் தெரிகிறது. இயந்திரமோ அல்லது அதை இயக்கும் சக்தியோ அவர்களுக்குத் தெரிவதில்லை. அது போலவே உலகை ஒரு மாயச் சக்கரமாக இறைவன் படைத்து நம் எல்லோரையும் அதில் சுற்றுவது போல் இடைவிடாது சுழற்றிக் கொண்டிருக்கிறான். குடைராட்டினக் குழந்தைகள் போல நாமும் உலக இயக்கத்தின் மயக்கத்தில் நம்மைச் செலுத்தும் சக்தியைக் காணத் தவற விடலாமா? உயிர்கள் பலவும் அவ்வாறு சுற்றினாலும் அவை அனைத்துள்ளும் எந்த வித சலனமுமில்லாது அமைதியாக அவன் வீற்றிருக்கிறான் என்றும், அவன் நம்முள் இல்லையென்றால் நமது சுற்றுதலும் கிடையாது என்னும்போது, எது பெரிய உண்மை – நமது சலனமா அல்லது அவனது அசலமா?

18-62

तमेव शरणं गच्छ सर्वभावेन भारत |
तत्प्रसादात्परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् ||

அவனைச் சரணம் அடைக எவ்வாற்றும்
அவனருளால் சாந்தி அடைவாய் – அவனருளால்
ஈறில்லா அப்பதமும் எய்துவாய் பாரதனே
பேறு இதனில் இல்லை பிற

பொருள்: பரத வம்ச சிரேஷ்டனே! எந்த வழியில் சென்றாலும், அவனையே அடைக்கலம் அடைவாய். அவனை அடைந்து அவனது அருளால் பரம சாந்தியை அடைவாய். அவனது அருளால் எப்போதும் உள்ள முக்தி பதத்தை அடைவாய். பெறுவதற்குள் எல்லாம் அரிய பேறு என்பது இதனினும் வேறெதுவும் இல்லை.

ஆகவே, பரத குலத்தில் உதித்த சிறப்பு மிக்கோனே! நம்மை இயக்கும் சக்தியைக் கவனி. குடை ராட்டினத்தில் உள்ள பொம்மைகளையோ, சுற்றுதலையோ பார்க்காது சுற்றுபவனைப் பார். உன் முன் நிற்கும் உற்றார்களையும், சுற்றத்தையும் மட்டுமே பார்த்து விட்டு, அவர்கள் எல்லோரையும் செலுத்தும் அந்த சுத்த ஆன்மாவைப் பார்க்காது மனம் தளர்ந்து போகாதே! அனைவருள்ளும் அவனே ஆன்மாகவாக உள்ளான் என்பதை தெரிந்துகொண்டு, அவனன்றி அணுவும் அசைவதில்லை என்ற நிதர்சனமான உண்மையை அறிந்துகொண்டு அவனே சரணம் என அவனை அடைந்து அவனது அருளால் மட்டுமே கிடைக்கக் கூடிய பரம சாந்தியை அடைவாயாக.

கீதோபதேசம்

வெளிப்படையாகத் தெரிவதை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், அதற்குத் தோற்றம்-மறைவு என்றும், அதுவே மறுபடியும் அந்தச் சக்கரத்தில் சுழன்று கொண்டு இருப்பதும்தான் தெரியும். எது தோன்றுகிறது, அதனால் எது மறைகிறது என்று பார்த்து அதற்கெல்லாம் காரணமாக இருக்கும் நித்திய வஸ்துவைத் தேடினால் தோன்றி மறைவதன் உண்மை நிலை தெரியவரும். அதற்கு என்றும் எப்போதும் நிலைத்துள்ள ஆன்மாவாகிய அவனையே நினைந்து, அவனை அடைந்து , அவனாலேதான் தானும் உள்ளோம் என்று உணர்ந்து அவனைத் தன்னிலும் அன்னியனாக நினையாது பக்தி செலுத்தினால், அவனது அருளால் மனச் சாந்தி கிடைக்கும்.

மனம் சாந்தி அடையும் போது, பல உண்மைகள் தானே தெரிய வரும். அவனன்றி எவரும் இலதால் அவனே ஆகும் பரம பதமாகிய முக்தி நிலையும் கிடைக்கும். கிடைப்பதற்கெல்லாம் பெரிய பேறான முக்தி நிலை பெற்றோர்க்கு மேலும் பெற வேண்டும் என்று எதுவும் இல்லை. அந்த நிலையை அடைந்தோர்க்கு யாவருமே அந்த நிலையிலேயே உள்ளார்கள், ஆனால் அந்த நிலையில் இருக்கிறோம் என்று தெரியாது தவிக்கிறார்கள் என்றும் தெரிய வரும். அதனால் ஞானி என்னும் நிலை ஞானியைப் பார்ப்போர்க்கே அன்றி ஞானிகளுக்கு இல்லை என்பதே உண்மை.
(முற்றும்)

பின்னுரை:

எனது முந்தையத் தொடரைப் போலவே இந்தத் தொடரையும் திருமதி. கனகம்மாள் எழுதிய “ஸ்ரீ ரமண நூற்றிரட்டு உரை”யின் துணை கொண்டே எழுதி வந்துள்ளேன். அவர்கள் வெண்பா, பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை என்று எழுதியதில் நான் பதவுரையைத் தவிர்த்து மற்றதெல்லாம் அவர்களைப் போலவே எழுதியுள்ளேன். ஒவ்வொரு வெண்பாவிற்கும் அவர் எழுதியதைப் படித்து, உள்வாங்கி, பின் எனக்குத் தெரிந்த சிலவற்றையும் சேர்த்து எழுதியிருக்கிறேன்.

முதலில் இதைப் படித்த ஒரு வாசகர், “இது என்ன ‘கோனார் நோட்ஸ்’ போல இருக்கிறதே. ஏதாவது கதைகள் சொல்லி விளக்கக்கூடாதா?” என்று மறுமொழி வாயிலாகக் கேட்டிருந்தார். சில இடங்களில் நடந்த நிகழ்வுகளையும், மனித சமுதாய வளர்ச்சிகள் பற்றிய விளக்கங்களையும் சொல்லியிருக்கிறேனே தவிர எனக்கு அதிகம் கதை சொல்லத் தெரியவில்லை என்பது ஒரு புறம் இருக்க, இதற்கு வேறு விதமான வடிவமும் கொடுக்க முடியவில்லை. அதனால் வாசகர்கள் கஷ்டப்பட்டிருந்தால் மன்னிக்கக் கோருகிறேன்.

ஆனால் மறுமொழி அனுப்பிய அவருக்குப் பதில் அளிக்கும் போது “நான் கோனார் நோட்சும் படித்தவன், அந்தத் திரு. அய்யன்பெருமாள் கோனாரிடமே நேரில் தமிழும் படித்தவன். இரண்டையுமே ரசித்தவன்” என்று சொல்லியிருந்தேன். அதைப் பற்றி ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது அவர் சொன்ன மூன்றாம் விளக்கமும் எனக்குப் பிடித்திருந்தது. “சரி, வாசகர் வேறு யாராவது இந்த விளக்கத்தைக் கொடுக்கிறார்களா என்று பார்க்கிறேன், கொடுக்கவில்லை என்றால் இறுதியில் நானே இதைச் சொல்லுகிறேன்” என்று அந்த நண்பரிடம் சொன்னேன். இதுவரை வேறு வாசகர் யாருக்கும் அது தோன்றாததால் இப்போது அவர் சொன்னதைச் சொல்கிறேன்.

“ஆஹா, இதையும் நீங்கள் சொல்லியிருக்கலாமே. அந்தக் கீதையைச் சொன்ன கிருஷ்ணரும் நம் முன் ஒரு கோனாராகத்தானே அவதரித்தார்! அவர் சொன்ன கீதையின் சாரத்தை மட்டும் எடுத்துச் சொல்லியிருப்பதால் இந்த ‘கீதா சாரம்’ ஒரு கோனார் நோட்ஸ் தான்” என்றார். ஆக தனக்கே தெரியாமல் சரியான பட்டத்தைத்தான் அந்த வாசகர் இதற்குச் சூட்டியிருக்கிறார் போலும்

music-iconரமண மகரிஷியின் பகவத்கீதாசாரம் இங்கே தரவிறக்கம் செய்து கேட்கலாம்.

2 Replies to “ரமணரின் கீதாசாரம் – 15 (நிறைவு பகுதி)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *