இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 29

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்

29.1 சித்திர விசித்திரம்

லக்ஷ்மணன் பலத்த அடிபட்டு விழுந்திருந்தாலும் உயிரோடிருப்பதை வானரர்களின் வைத்தியன் சுஷேனா அவனைச் சோதித்துக் கண்டு பிடித்தான். அவன் அனுமனிடம் சற்றுத் தள்ளியிருக்கும் மலை உச்சியிலிருந்து ஒரு குறிப்பிட்ட மூலிகையைக் கொண்டுவருமாறும், அதை எப்படிக் கண்டறிவது என்னும் விவரங்களையும் விளக்கிச் சொன்னான். அனுமனும் அங்கு பறந்து சென்று பார்த்ததில், வைத்தியர் சொன்னதை வைத்துக்கொண்டு அந்த மூலிகையைக் கண்டுபிடிக்க முடியாததாலும், நேரம் செல்வதால் லக்ஷ்மணனுக்கு அதனால் ஏதும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதாலும், அந்த மலையின் உச்சி பாகத்தை அப்படியே பெயர்த்து எடுத்து வந்தான். சுஷேனா தானே மூலிகையைக் கண்டுபிடித்து, அதை லக்ஷ்மணனுடைய காயத்தில் வைத்துக் கட்டு போட்டார். சிறிது நேரத்தில் லக்ஷ்மணன் மூர்ச்சை தெளிந்து விழித்துக் கொண்டதும், இராமர் அவனை ஆரத் தழுவி உச்சி முகர்ந்தார்.

லக்ஷ்மணன் மூர்ச்சை போட்டுக் கீழே கிடந்தபோது அவன் இறந்துவிட்டான் என்றே தான் நினைத்ததாகவும், அதனால் போர் என்று சிரமப்பட்டது எல்லாம் வீணாகப் போய்விட்டதே என்று தான் நினைத்ததாகவும் அவனிடம் இராமர் சொன்னார். பதிலுக்கு நேரத்தை வீணாக்காமல் போரை இன்னும் மும்முரப்படுத்தி, அன்று பொழுது சாயும் முன்பாகவே ராவணனைக் கொன்றுவிட வேண்டும் என்று இராமருக்கு லக்ஷ்மணன் சொன்னான். அதன்பின் இராமருக்கும், ராவணனுக்கும் இதுவரை எவருமே, எங்குமே பார்த்திருக்காத பயங்கரமான சண்டை நடந்தது.

பலப்பல பக்கங்களில் வால்மீகி அன்று அங்கு நடந்த போரைப் பற்றி எழுதுகிறார். ஆனாலும் அப்படிப்பட்ட போர் அதுவரை நடக்காததால், அவரால் முழு திருப்தியுடன் அங்கு நிகழ்ந்ததை விவரித்து விட்டார் என்று சொல்லமுடியாது. ஆழ்ந்து பரந்து விரிந்திருக்கும் கடலைப் பற்றி எழுதவேண்டும் என்றால், அதை அந்தக் கடலுடன்தான் ஒப்பிட்டு எழுத வேண்டும், எங்கும் விரிந்துள்ள நீல ஆகாயத்தைப் பற்றி எழுதவேண்டும் என்றால் அதை அந்த ஆகாயத்துடன்தான் ஒப்பிட்டு எழுதவேண்டும். அதேபோல இராம-ராவண யுத்தத்தின் பல பரிமாணங்களைப் பற்றி எழுத வேண்டும் என்றால் அதை அந்த இராம-ராவண யுத்தத்தோடு ஒப்பிட்டு எழுதாமல் வேறு எப்படி விவரிக்க முடியும் என்று வால்மீகியே கேட்கிறார்.

गगनं गगनाकारं सागरः सागरोपमः ।

रामरावणयोर्युद्धं रामरावणयोरिव ।

एवं ब्रुवन्तो ददृशुस्तद्युद्धं रामरावणम् ।। 6.110.24 ।।

गगनं, ஆகாசம் गगनाकारं, ஆகாசத்திற்கு ஒப்பானது सागरः, சமுத்ரம்

सागरोपमः சமுத்ரத்துக்கு ஒப்பானது रामरावणयोर्युद्धं, (அவ்வாறே) ராம-ராவண யுத்தம்

रामरावणयोरिव, ராம-ராவண யுத்தத்திற்கே ஒப்பானது एवं, இவ்வாறு ब्रुवन्त:, கூறியவர்களாக

तत्, அந்த राम्रावनयुद्धं, ராம-ராவண யுத்தத்தை, ददृशु: பார்த்தனர்.

கடலைக் கடலோடுதான் ஒப்பிடவேண்டும், ஆகாயத்தை ஆகாயத்தோடுதான் ஒப்பிடவேண்டும். அதுபோல இராம-ராவண யுத்தத்தை அதே இராம-ராவண யுத்தத்தோடு மட்டும்தான் ஒப்பிட முடியும்.rama-killing-ravana

வால்மீகி போர்ச் சண்டைகளை கூர்ந்து கவனித்திருக்கிறார் என்று நம்ப இடமிருக்கிறது. ஒருவேளை அவரே ஒரு போர் வீரனாகக்கூட இருந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது. அவர் இராமாயணத்தில் எழுதியிருக்கும் போர் முறைகளும், தளபதிகள் வகுக்கும் வியூகங்களும், சண்டையில் நடக்கும் பேச்சுக்களும் வாள் வீச்சுக்களும், ஆயுதங்கள் பற்றியும் அவைகளைக் கையாளும் விதமும் என்று விதவிதமாக விவரங்கள் இருப்பதும், அதை அவர் விவரிக்கப் பயன்படுத்தும் வார்த்தைகளும் அவரைப் போரில் ஒரு கை தேர்ந்த கலைஞர் என்றுதான் காட்டுகிறது. அவரது சொற்களும், விவரிப்புகளும் ஒரு பத்திரிக்கையின் போர் நிருபரையே பிரமிக்க வைக்கும் அளவு இருக்கின்றன.

இராமாயணக் காலத்திலிருந்து இன்றைய போர் முறைகள் வெகுவாகவே மாறியிருந்தாலும், போர் புரிய வேண்டிய மனோநிலை, வேண்டிய தைரியம், திறன், முயற்சி, பொறுமை என்ற எல்லாக் குணங்களும் இன்றும் போருக்கு வேண்டிய முக்கியமான தேவைகள்தான். எடுத்த காரியத்தை முடிக்கும் போர் வீரர்களைச் சித்திரம் வரையாத முறையில், வால்மீகி தன் எழுத்துக்களாலேயே நன்றாக வரைந்து காட்டுகிறார். விவரமான அந்த போர்க் குணங்கள் இன்றும் வீரர்களிடம் நன்கு காணப்படுகின்றன. அவர் எழுதியிருப்பதைப் படிப்பவருக்கு, தான் ஏதோ போர்க்களத்திலேயே இருப்பதாகவும் ஒரு பிரமை ஏற்படும் என்று சொன்னால் அது மிகையே அல்ல.

29.2 தூய்மைப்படுத்தும் மரணம்

இறுதியில் இராமர் இராவணனைப் போரில் கொன்றார். தங்கள் தலைவனை இழந்த அரக்கர் படை வீரர்கள் போர்க்களத்தை விட்டுவிட்டு பாதுகாப்பை நாடி இலங்கைக்குள் ஓடிப் புகுந்து கொண்டார்கள். வானரர்களுக்கோ அவர்கள் தொடங்கிய போரில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்து கூத்தாட வைத்தது. சுக்ரீவன், விபீஷணன், மற்றும் எல்லா வானரத் தலைவர்களும் தங்கள் தரப்புக்கு கிடைத்த வெற்றிக்கு இராமரை வாயார வாழ்த்தினார்கள். ஆனால் வெற்றித் தரப்பில் இருந்த விபீஷணனுக்கோ ஆடிப்பாடிக் கொண்டாடும் அளவுக்கு வெற்றியை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.

இறந்திருக்கும் இராவணன் அவனது அண்ணன் என்பதால் அவனால் மகிழ முடியவில்லை. ஓர் அரசனுக்குண்டான சகல மரியாதைகளுடன் இராவணனது ஈமக் கிரியைகளைத் தானே செய்வதற்கு இராமரிடம் விபீஷணன் அனுமதி கேட்டான். இரக்கத்துடனே இராமரும் விபீஷணனுக்குத் தன் வருத்தத்தையும், இரங்கல்களையும் தெரிவித்துக் கொண்டார். அப்போது இராவணனிடம் தனக்கு எந்தவிதமான பகைமையும் கிடையாது என்று சொல்லி, ஒருவரின் இறப்போடு அவரைப் பற்றிய கோப தாபங்களும் மறைந்து விடுகிறது என்றும் விபீஷணனிடம் சொன்னார்.

मरणान्तानि वैराणि ….. ।। 6.114.101 ।।

वैराणि, (அனைத்து) எதிர்ப்புகளும் (எதிர்ப்பு மனப்பான்மைகளும்)

मरणान्तानि, மரணத்தோடு முடிவடைகின்றன (முடிவடைய வேண்டும்).

மரணத்தோடு அனைத்து எதிர்ப்பு மனப்பான்மைகளும் முடிவடைகின்றன.

வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகளால் ஒருவன் மேல் பலவிதமான கோப தாபங்கள் வளர்ந்திருக்கலாம். ஆனால் அவைகளை அவனது மரணத்திற்குப் பின்னும் சொல்லிக்கொண்டிருப்பது அர்த்தமற்ற வேலை. மரணம் என்பது ஒருவனுடைய முடிவோ இல்லையோ, அது அவனைப் பற்றிய அவதூறுப் பேச்சுக்களுக்கும், செய்திகளுக்கும் நிச்சயமாக ஒரு முடிவே.

ரமண மகரிஷி காலத்தில் ஒரு மகா மோசமான மனிதர் இருந்தாராம். அவரைப் பற்றி எந்த விதமான நல்லதும் நினைக்கவோ, சொல்வதற்கோ இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தாராம். அவர் ஒரு நாள் இறந்து போகவே, அவரது மரணச் செய்தியை ரமணரிடம் சொல்லிவிட்டு, எப்போதும் நல்லதையே நினைவு கூறும் அவர் இறந்து போன அந்த மனிதரைப் பற்றி என்னதான் நல்லது சொல்ல முடியும், ரமணர் என்ன சொல்லப் போகிறார் என்று அவரது பக்தர்கள் காத்திருந்தனர். “இறந்தவர் துவைக்கும்போது பார்க்க வேண்டுமே, என்னமாய் துவைத்து, காய வைத்து, எப்போதுமே வெளுப்பாய் கட்டிக்கொண்டிருப்பார்” என்று ரமணர் சொன்னாராம். இதுதான் தூயவர்களிடம் நாம் காண வேண்டியது.


29.3 மரணம் ஒரு முடிவா?

அரக்கர் படையின் போர் வீரர்கள் புறமுதுகு காட்டி இலங்கைக்கு ஓடி ஒளிந்தாலும், இலங்கை வாழ் பெண்டிர் அனைவரும் போர்க்களத்திற்குச் சென்று அங்கங்கு சிதறிக் கிடந்த உடல்களையும், அங்கங்களையும் பார்த்து தங்களுடைய கணவன், மகன், உறவினர், நண்பர் முதலியவர்களை அடையாளம் காண வந்தனர். சிலருக்குத் தாம் தேடியவர்களின் முழு உடல்களும் அடையாளம் காணும்படி கிடைத்தன. வேறு பலருக்கோ ஒரு கை அல்லது கால், தலை அல்லது முண்டம் மட்டும் என்றோ அடையாளம் காண முடியாதபடியோ, சின்னபின்னமாகவோ, அருகிலும் செல்ல முடியாதபடி அழுகியோ கிடைத்தன. இன்னும் சிலருக்கோ எதுவும் கிடைக்காது, வீரர்களும் எங்கும் கிடைக்காதபடியும் இருந்தது.

அனைவருமே மார்பிலோ, வயிற்றிலோ அடித்து அழுதுகொண்டும், வாய்க்கு வந்தபடி எல்லோரையும் திட்டிக்கொண்டு புலம்பியபடியும், கால் போனபடி எல்லாப் பக்கமும் சுற்றிக்கொண்டும், கையில் கிடைத்த பிணங்களைப் புரட்டிப் பார்த்துக்கொண்டும், மேற்கொண்டு என்னசெய்வது என்றறியாமலும் முழித்துக்கொண்டு இருந்தனர். இப்படியாகப் பல மணி நேரங்கள் கழிந்ததும், அவர்களுடைய அழுகையும், அரற்றலும் ஒரு வழியாகக் குறைந்துகொண்டு வந்தது. ஒரு கட்டத்தில் இப்படியாகத்தான் இவர்களுக்கு மரணம் வர வேண்டும் என்பது விதியானால், நாம் தான் என்ன செய்யமுடியும் என்று தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டும், தேற்றிக்கொண்டும் இலங்கை நகரத்திற்குத் திரும்பினார்கள்.

नैवार्थेन न कामेन विक्रमेण न चाज्ञया ।

शक्या दैवगतिर्लोके निवर्तयितुमुद्यता ।। 6.113.25 ।।

नैवार्थेन, பொருளாலோ न कामेन, ஆசைபடுவதாலோ विक्रमेण, விக்ரமத்தின் துணையாலோ न चाज्ञया, ஆக்ஞையினாலோ लोके, உலகில் दैव्गति: தெய்வ சங்கல்பம் उद्यता, (எவன்) முயன்றாலும் निवर्तयितुं, மாற்றுதலுக்கு न शक्या, இயலாதது.

இப்படித்தான் இறக்கவேண்டும் என்பது இறைவனின் நியதியானால், அதை நாம் விரும்புவதாலோ, கையூட்டுக் கொடுப்பதாலோ, சண்டை போடுவதாலோ தடுக்கவும் முடியாது; மாற்றலாம் என்று ஆணையிடவும் முடியாது. நடப்பது நடந்தே தீரும்.

மரணம் என்பது பலருக்கும் ஒரு புரியாத புதிராகத்தான் இருக்கிறது. ஆதி காலத்திலிருந்தே மரணத்தை வெல்வதற்கு மனிதன் பல முயற்சிகளை எடுத்துக்கொண்டு இருக்கிறான். அதில் மரணத்தை நிகழவிடாமல் தவிர்ப்பது என்பதும் அடங்கும். சரி, தவிர்க்கவே முடியாது என்றால் அது என்ன என்றும், மரணத்திற்குப் பின் ஒருவனுக்கு என்ன ஆகிறது என்றாவது பார்க்க முடிகிறதா? இல்லையே, என்னவென்றும் தெரியவில்லை; அப்புறம் என்ன நடக்கிறது என்பதும் தெரியவில்லை. இதுவரை நாம் அறிந்தது என்னவென்றால், மரணம் என்பது இவ்வுலகில் பிறந்த மனிதனுக்கு மட்டுமல்லாது அனைத்து சீவராசிகளுக்கும் உண்டு என்பதும், அது தவிர்க்கப்பட முடியாத நிச்சயமானது என்பதும்தான். என்றுமே உள்ள உண்மை இது என்பதும் நம் அறிவுக்கு எட்டியிருக்கிறது.

மேற்கொண்டு விளக்க வேண்டும் என்றால், உடலின் இறுதிக் கட்டமாக நாம் மரணத்தைக் காண்கிறோம். அது வாழ்நாளின் இறுதியில் வருகிறதென்றால், அதை நாம் தினந்தோறும் அனுபவிக்கும் உறக்கத்திற்கு இணையாகவும் பார்க்கிறோம். சாவுக்குப் பின் உடல் இருப்பதில்லை, உறக்க அனுபவத்திற்குப் பிறகு உடல் தொடர்கிறது என்று அவ்விரண்டுக்கும் உள்ள ஒரு வித்தியாசத்தையும் நாம் அறிந்திருக்கிறோம். ஆனாலும் நமது ஆழ்ந்த உறக்கத்தில், பிறருக்கு நம் உடல் தெரிந்தாலும், நமக்கு உடல் என்ற உணர்வும் இல்லாது போய்விடுகிறது என்கிற நுண்ணறிவையும் நாம் பெற்றிருக்கிறோம். ஏனென்றால் உடல் இருக்கிறதே என்று சொல்பவர் நாம் அல்ல, இன்னொருவர்தான்.

அப்படியானால் நம் உடலைப் பற்றி மற்றவர் அறிவும், நம் அறிவும் வேறுபடுவதன் காரணம் என்ன என்று ஆராயும்போது, நமக்கு நாம் காணும் உலகம் என்பது நம்மைப் பொருத்து அமைகிறது என்று தெரிகிறது. நாம் உலகைப் பார்க்கிறோம்; அந்த நம் உலகில் அடுத்தவரும் அடங்குகிறார் ஆனால் அந்த உலகில் நாம் இல்லை என்று தெரிகிறது. அதேபோல் நம்மைக் காண்பவர் உலகில்தான் நாம் அடங்குகிறோம் என்றும் தெரிகிறது. அதாவது உலகம் என்பது ஒன்றே ஒன்று என்பது மாயை என்று தெரிகிறது. எவ்வளவு பேர் இருக்கிறோமோ அவ்வளவு உலகம் இருக்கலாம் என்றும் புரிகிறது. அதனால் எங்கும் எப்போதும் உள்ள ஒரே உண்மை எது என்ற தேடல் நமக்கு வருகிறது.

அங்குதான் நாம் ஒரு குறுகிய உடலுக்குள்ளும், காலத்திற்குள்ளும் அடங்குவதால், அதற்கு மாறாக இங்கு மட்டும் தான், அங்கு மட்டும் தான் என்றில்லாமலும், குறிப்பிட்ட காலத்திற்கு என்று மட்டும் அடங்கிடாததும் ஆன இறைவனைக் காண்கிறோம். அதாவது முதலும் முடிவும் உண்டு என்ற Finite ஆகிய (குறுகிய) நாம் Infinite ஆகிய (விரிந்து பரந்த) இறைவனைப் பார்க்கிறோம். அப்படிப் பார்க்கும் ஒருவனுக்கு என்ன வழிகள் இருக்கின்றன? இதுவரை நமக்குத் தெரிந்தது பலராலும் புரிந்துகொள்ளக்கூடிய, புரிந்துகொண்டு செல்லக்கூடிய ஒரே ஒரு வழிதான்.

அந்த வழிதான் குறுகிய நாம், பரந்த இறைவனடியைச் சார்ந்து இருப்பது. சார்ந்து இருப்பதில் பல முறைகள் இருக்கலாம். எந்த முறையில் சென்றாலும், இறுதியில் இறைவனே எல்லாம் என்று அவனிடம் சரணாகதி அடைவதே. அப்படிச் சரணடையும் போது, சரணடைபவனுக்கு இறைவனிடம் எந்த வித சந்தேகமும் இல்லாது இருப்பதையே பரிபூரண சரணாகதி என்கிறோம். அப்படி விரிந்திருக்கும் இறைவனைச் சார்ந்தவனுக்கு, தான் இனிமேலும் குறுகியவன் என்ற எண்ணம் வருமோ? குறுகியவன் என்ற எண்ணம் இருக்கும்போதுதானே நமக்கு சாவு எண்ணம் வரும். சரணாகதி பூரணமாக இருந்தால், இறைவனிடம் சென்றாகிவிட்டது, இனி அவன் எல்லாம் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் வந்திருக்க வேண்டுமே? இதைத்தான் ரமணர் “உள்ளது நாற்பது” நூலின் மங்களச் செய்யுளில் இப்படி அழகாகச் சொல்வார்:

மரண பயம் மிக்க உள அம்மக்கள் அரணாக

மரண பவம் இல்லா மகேசன் – சரணமே

சார்வர் தம் சார்வொடு தாம் சாவுற்றார் சாவு எண்ணம்

சார்வரோ சாவாதவர்.

கட உபநிஷதத்திலும் நசிகேதஸ் “மரணத்திற்குப் பின்னால்” என்ன என்று கேட்டு, “எல்லாம் உன்னுள்” என்று அறியப்பெற்று மரண பயத்தை வெல்லும் வழி இதுதான் என்று காட்டுகிறான். இதுவரை ஒருவர் சொல்வதை மற்றொருவர் கேட்டோ, பின்பு படித்தோ தெரிந்துகொள்வது என்பதெல்லாம் நம் அறிவைக்கொண்டு அலசித் தெரிந்து கொண்டவைகளே. எப்போது “எல்லாம் உன்னுள்” என்று தெளிந்தபின், அப்புறம் அவனை இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடி அலையலாமோ? தன்னுள் பார்த்து தானாக அமர வேண்டாமோ? இதுதான் அனைவரின் வாழ்க்கை லட்சியமே என்று சொன்னால் எவ்வளவு பேர், தான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் தெய்வத்தைக் கண்டு, மரணம் வருவதற்கு முன்னால் உய்வதற்கு முயற்சி செய்வார்கள்?


29.4 தானாகக் கனிவதே கனியும், கனிவும்

அனுமன் சீதையிடம் போய் இராமர் போரில் வென்றுவிட்டார் என்றும், இராவணன் போரில் கொல்லப்பட்டு தற்போது விபீஷணனே இலங்கை அரசனாக முடிசூட்டப்பட்டுள்ளதையும் தெரிவிக்க, சீதையும் தனது துன்பகரமான நாட்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன என்று அறிந்து மகிழ்ந்தாள். தானே பல அரக்கிகள் சீதையைத் துன்புறுத்தியதைப் பார்த்ததையும், அவன் பார்க்காத இன்னும் பலர் இருக்கக் கூடும், அவர்களை எல்லாம் தண்டிக்கவேண்டும் என்று சொல்லி, அதற்கு சீதையிடம் அனுமதி கேட்கிறான். அரக்கிகளைத் தண்டிப்பது என்ற எண்ணமே சீதைக்கு ஒத்துவரவில்லை. அதை விளக்க அவள் அனுமனுக்கு ஒரு கதை சொல்கிறாள்.

ஒரு வேடனைத் துரத்திக்கொண்டு வந்த ஒரு புலியிடமிருந்து தப்பிக்க, அவன் ஒரு மரத்தின் மேல் ஏறப் பார்க்கிறான். அப்போது அதன் மேல் கிளையில் ஒரு கரடி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, தன்னைக் காப்பாற்றுமாறு அதைக் கேட்கிறான். அதற்கு அந்தக் கரடியும் அவன் தாராளமாக மரத்தின் மேல் உட்கார்ந்திருந்து புலி போனதும், அங்கிருந்து போகலாம் என்கிறது. இரவு வந்த பின் அவன் தூங்கும்போது, கரடி அவனுக்காகக் காவல் காத்தது. அப்புறம் கரடி தூங்கும்போது, அவன் அதற்குக் காவலாக விழித்துக்கொண்டு இருந்தான். அப்போது புலி அவனிடம் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், தான் அதைச் சாப்பிட்டுவிட்டு அவனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவதாகச் சொன்னது. வேடனும் ஒரு துரோகியாக மாறி கரடியை மரத்திலிருந்து கீழே தள்ளிவிடவே, அதிருஷ்டவசமாக இடையில் இருந்த ஒரு கிளையைப் பிடித்துக்கொண்டு அது தன்னைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டது. இப்போது புலி கரடியிடம் அந்த வேடன் ஒரு துரோகியாகிவிட்டதால் அவனைத் தண்டிக்கவேண்டும்; அதனால் அவனைத் தள்ளிவிடச் சொல்லி, தான் அவனைச் சாப்பிட்டுவிட்டு கரடியை விட்டுவிடுவதாக பேரம் பேசியது. அதற்கு கரடியோ வேடன் ஒரு தீய சக்திதான், ஆனாலும் தான் அவனைப் பின்பற்றி அவனைப்போல் செய்யமாட்டேன் என்றது.

लोकहिंसाविहाराणां रक्षसां कामरूपिणाम् ।

कुर्वतामपि पापानि नैव कार्यमशोभनम् ।। 6.116.46 ।।

लोकहिंसाविहाराणां, உலகிற்கு ஹிம்சை செய்வதையே விளையாட்டாகக் கொண்ட

कामरूपिणाम् , காமரூபிகளான पापानि, பாவத்தையே कुर्वतां, செய்துகொண்டிருக்கும்

रक्षसां, அரக்கர்களுக்கும் अपि, கூட अशोभनं, கெடுதலை न कार्यं, செய்யலாகாது.


கேடு செய்வார்க்கும் கேடு செய்யலாகாது.

அவர்கள் காவலில் சீதை இருந்தபோது, தங்கள் சொல்லாலும், செயலாலும் அரக்கிகள் அவளைக் கொடுமைப்படுத்தினர். சாதாரண மக்களுக்குத் தங்கள் கை ஓங்கும்போது, அப்படிக் கொடுமைப்படுத்தியவர்களை தண்டிக்கவேண்டும் என்றுதான் தோன்றும். அனுமன் அப்படி நினைக்க, சீதையோ அதை மறுத்து ஒருவர் காட்டும் கனிவு இன்னொருவர் காட்டுவதால்தான் என்று இருக்கக்கூடாது என்கிறாள். ஒருவரிடம் கனிவாய் இருப்பது இயற்கையாகத் தன் மனத்திலிருந்து வர வேண்டுமே தவிர, அங்கிருந்து வந்தால்தான் இங்கிருந்தும் என்றபடி அதை ஒரு வியாபாரப் பொருளாக ஆக்கக்கூடாது.

(தொடரும்)

3 Replies to “இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 29”

  1. தமிழில் மஹாபாரதம் | ஆதிபர்வம் 1 முதல் 61 வரை

    மேற்கண்ட லிங்கில் நான் இதுவரை மொழிபெயர்த்த மஹாபாரதத்தைப் பிடிஎப்-ஆக அளித்திருக்கிறேன். அதைப் படித்து நீங்கள் கருத்துச் சொன்னால் மிகவும் மகிழ்வேன்.

  2. “இராம”- என்ற சொல்லுக்கு ஞானி ஓஷோ ஈசாவாஸ்ய உபநிஷத்தின் விளக்க உரையில் மிக அற்புதமான விளக்கம் தந்துள்ளார். ராம என்பது ஒரு மந்திரச்சொல்லாகும். அது ராமனுக்கும் முற்பட்டது. அந்த மந்திர சொல்லின் வாழ்வியல் விளக்கமாக இந்த பூவுலகில் புருஷோத்தமன் இராமன் அவதரித்தான். அவன் வரலாறு நமக்கு நற்சிந்தனையும், நல்லொழுக்கமும் தரவல்லது. இடர் களைவது. இனிமை தருவது. வாழ்க இராமன் புகழ். இந்த தொடரை அளித்து நமக்கு இனிய காலத்தை வழங்கும் திரு ராமன் அவர்களுக்கும் நன்றி.

  3. Highly illuminating essay on various aspects of life – many sentences are quotable quotes. The logic and reasoning behind every episode are amazing. Thanks very much.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *