புருஷ சூக்தம்

ரிக்வேத சிருஷ்டி கீதங்கள் குறித்த தொடரின் இரண்டாவது பகுதி

<< முந்தைய பகுதி

புருஷ சூக்தம்
(ரிக். பத்தாவது மண்டலம், 90வது சூக்தம்)

ஆயிரம் சிரங்கள் கொண்டோன் புருஷன்
ஆயிரம் விழிகள் ஆயிரம் பாதங்கள்
புவியெங்கும் பரந்து
நிற்கிறான் பத்து திசைகளுக்கும் அப்பால்.  (1)

இவை அனைத்தும் புருஷனே
முன்பிருந்தவை இனி வருபவை எல்லாம்
அழிவற்ற பெருநிலையின் தலைவன் அவன்
பருவுலகு கடந்தோன். (2)

ஈதனைத்தும் அவனது மகிமையே
இதனினும் பெரியோன் புருஷன்
தோன்றியதனைத்தும் அவனது கால் பாகம்
அழிவற்றது முக்கால் பாகம்
அதுவே ஒளியுலகு. (3)

மேற்சென்றனன் முக்கால் பாகத்துப் புருஷன்
அவனது கால்பாகம் தோன்றியது மீண்டும் இங்கு
திசையெங்கிலும் உட்புகுந்து பரந்தனன்
அசையும் அசையாப் பொருளனைத்திலும். (4)

அவனிடத்தினின்று விராட் பிறந்தது
விராட்டிலிருந்து (பல்லுயிர்களாக) பிறந்தான் புருஷன்
பிறந்தவன் முன்னும் பின்னுமாய்
புவியெங்கும் நிறைந்தான். (5)

புருஷனே ஆகுதியாக
வேள்வி செய்தனர் தேவர்கள்
வசந்தம் நெய்யாக
கோடை விறகாக
சரத்காலம் அவியுணவாக
ஒரு வேள்வி. (6)

ஆதியில் தோன்றிய வேள்விப் புருஷன்
அவன் மீது நீர் தெளித்தனர்
நேர்வழியினர் ரிஷிகள் கூடி
வேட்டனர் தேவர்கள். (7)

அனைத்தும் எரிந்த அவ்வேள்வி
அதனின்று திரண்டது நெய்கலந்த ஊண்.
உருவாகின
காற்றால் ஆன உயிர்கள்
வனமிருகங்கள்
கிராமத்து விலங்குகள். (8)

அனைத்தும் எரிந்த அவ்வேள்வி
அதனின்று பிறந்தன ரிக்குகள் சாமகீதங்கள்
பிறந்தன சந்தங்கள்
பிறந்தன யஜுர் மந்திரங்கள். (9)

அதனின்று பிறந்தன பரிகள்
இருவரிசைப் பல் மிருகங்கள்
அதனின்று பிறந்தன பசுக்கள்
வெள்ளாடுகள் செம்மறிகள். (10)

புருஷனை வகிர்ந்த போது
கற்பித்தது எவ்வடிவில்?
முகம் எது கை எது?
தொடை எது கால் எது? (11)

பிராமணன் முகமானான்
கைகள் அரசன்
தொடைகள் வைசியன்
பாதங்களில் சூத்திரன் தோன்றினான். (12)

மனத்தினின்று சந்திரன் பிறந்தான்
விழிகளில் கதிரோன்
முகத்தில் இந்திரன் அக்னி
மூச்சில் பிறந்தது காற்று. (13)

கொப்பூழில் உதித்தது விண்வெளி
சிரத்தினின்று விரிந்தது ஆகாயம்
பாதங்களினின்று பூமி
செவிகளினின்று திசைகள்
அவ்வாறே உருவெடுத்தன
உலகங்கள் அனைத்தும். (14)

ஏழு பரிதி எனும் வேள்விக் கோல் நாட்டி
மூவேழு சமித்துக்கள் கொண்டு
வேள்வி சமைக்கும் தேவர்கள்
புருஷனை யாகப் பசுவாய்க் கட்டினர். (15)

வேள்வியால் வேள்வியை வேட்டனர் தேவர்கள்
அவையே முதல் தர்மங்கள் ஆயின.
முன்னோர் நேர்வழியினர் தேவர்கள் வாழ்
மேன்மை உலகடைவர்
அந்த (தர்மவழிச் செல்லும்) பெரியோர். (16)

*******

purusha-sukta-1வேத சம்ஹிதைகளின் மிகப் பிரபலமான மந்திரங்களில் ஒன்று புருஷ சூக்தம் எனலாம். எல்லா வைதீக சடங்குகளிலும், வேள்விகளிலும், வழிபாடுகளிலும், பூஜைகளிலும் ஓதப் பெறும் ஒரு சூக்தம் இது. முதன்முதலில் ரிக்வேத சம்ஹிதையில் தோன்றும் இந்த சூக்தத்தின் மந்திரங்கள் சில இணைப்புகளுடன் யஜுர், சாம, அதர்வ வேதங்களிலும், சில உபநிஷதங்களிலும் மீண்டும் மீண்டும் வருகின்றன. அனைத்திலும் ஊடுருவி நிற்கும் பரம்பொருளை புருஷன் என்ற பெயரால் சுட்டி, அந்தப் பரம்பொருளே சிருஷ்டியின் கூறுகளாக வியாபித்திருக்கிறார் என்று போற்றிப் புகழ்கிறது இந்த சூக்தம். பிரார்த்தனை, சடங்கு, தத்துவம் என்ற மூன்று அம்சங்களையும் கொண்டு தன்னளவில் ஒரு முழுமையான சாஸ்திரமாகவே புருஷ சூக்தம் அமைந்துள்ளது எனலாம்.

புருஷன் என்ற சொல்லில் இருந்தே தொடங்கலாம்.

முன் செல்பவன் புருஷன் (புரதி அக்ரே கச்சதி ய:)
அனைத்தையும் தன் சக்தியால் நிரப்புபவன் புருஷன் (பிப்ரதி பூரயதி பலம் ய:)
அனைத்தையும் நிறைத்தும், மறைந்திருப்பவன் புருஷன் (புரி சே’தே ய:)
ஒளிமயமானவன் புருஷன் (புர்+உஷ: )
அழியாத இன்பத்தால் நிறைந்தவன் புருஷன் (புரு+ஷ:)

இவ்வாறு இந்தச் சொல்லுக்கு வேத அகராதிகள் மற்றும் பிராமணங்களின் துணை கொண்டு பல்வேறு அர்த்தங்கள் தரலாம்.

முடிவின்மை:

“ஆயிரம் சிரங்கள், விழிகள், பாதங்கள்” என்ற வாசகம் ஆயிரம் என்ற எண்ணிக்கையை அல்ல, அளவிட முடியாமையை, அனந்தத்தைக் குறிக்கிறது. புருஷன் ஒவ்வொரு உயிரின் விழிகளாலும் பார்க்கிறான், ஒவ்வொரு உயிரின் பாதங்களாலும் நடக்கிறான் என்பது கருத்து. உபநிஷதமும், புருஷனே எல்லா உயிர்களின் முகமும் (விஸ்வதோமுக:) என்று கூறுகிறது.

தோள்களாயிரத்தாய்! முடிகளாயிரத்தாய்!
துணைமலர்க் கண்களாயிரத்தாய்!
தாள்களாயிரத்தாய்! பேர்களாயிரத்தாய்
தமியேன் பெரிய அப்பனே

என்று நம்மாழ்வாரும் இந்த அனந்த ரூபத்தைத் தான் பாடுகிறார்.

வட இந்தியாவில் ஆயிரம் கரங்கள் கொண்ட காளி கோயில்கள் உண்டு. காளியின் சிலாரூபம் அமைந்துள்ள பாறை முழுவதும் கரங்களாகவே செதுக்கியிருப்பார்கள். ஆயிரங்காத்தம்மன் என்று தமிழகத்திலும் அம்மனுக்குப் பெயர் உண்டு. அந்தத் திருவுருவங்களை நாம் பார்க்கும் போதும், வழிபடும் போதும் எல்லாம், அனந்தமான பரம்பொருளையே தியானிக்கிறோம். தாவோயிசம் என்ற பழம்பெரும் சீன சமய மரபில் Guyan Yin என்ற தேவி குறிப்பிடப் படுகிறாள். ஆயிரம் சுடர்க்கரங்கள் கொண்டு இந்த தேவியை சித்தரிக்கும் நடனத்தை இந்த வீடியோவில் காணலாம். அற்புதமும் தெய்வீகமும் ததும்பும் அழகிய நடனம்!

“நிற்கிறான் பத்து திசைகளுக்கும் அப்பால்” என்பதன் பொருள் பூமி முழுவதிலும் ஊடுருவி நின்றாலும், அதனுள் கட்டுப் படாதவன் புருஷன் என்பதாம். ”தசா’ங்குலம்” என்பது மூலச் சொல். இதனை நேரடியாக “நிற்கிறான் பத்து அங்குலத்துக்குள்” என்று மொழிபெயர்த்து, பத்து அங்குலம் அளவேயுள்ள மனித இதயத்திலும் புருஷன் உறைகிறான் என்று அர்த்தமளிக்கும் உரைகள் உண்டு. பெரிதினும் பெரிதாகவும், சிறிதினும் சிறிதாகவும் உள்ளது பரம்பொருள் என்ற கருத்திற்கு அது இட்டுச் செல்லும்.

galaxy_m31_spyral_galaxyபேரியற்கை:

அடுத்து வரும் மந்திரங்களில் ”இவை அனைத்தும்” என்பது வெளிப்பட்டு நிற்கும் பிரபஞ்சத்தை (manifested universe) குறிக்கிறது. அது புருஷனின் ஒரு சிறு பகுதி, கால் பாகம் மட்டுமே. ”முக்கால் பகுதி விண்ணில் உறைகிறது” என்பதன் பொருள் நமக்கு வெளிப்பட்டு நிற்கும் இயற்கையை விடவும், வெளிப்படாது நிற்கும் பேரியற்கை மிகப் பெரியது என்பதாம். நாம் வசிக்கும் பூமி போல, அது அமைந்துள்ள சூரியக் குடும்பம் போல, அந்த சூரியக் குடும்பம் அமைந்துள்ள பால்வீதி போல, அந்தப் பால்வீதி சுழல்கின்ற பிரபஞ்சம் (universe) போல, ஏராளமான கிரகங்களும் சூரியக் குடும்பங்களும், பால்வீதிகளும், பிரபஞ்சங்களும் கொண்டது பேரியற்கை. நவீன அண்டவியல் (cosmology) கூறும் இந்த பிரம்மாண்டத்தின் அதிசயத்தையே கவித்துவ மொழியில் இந்த மந்திரமும் கூறுகிறது.

”புருஷனிடமிருந்து ‘விராட்’ தோன்றினான்; பின்னர் ’விராட்’டிலிருந்து பல்லுயிர்களாக புருஷன் தோன்றினான்” என்கிறது அடுத்த மந்திரம். இங்கு முதலில் கூறப்பட்ட புருஷன் என்பது வெளிப்படாத பேரியற்கை (அவ்யக்தம்). இரண்டாவதாகக் கூறப்பட்டது வெளிப்பட்ட இயற்கை (வ்யக்தம்). விராட் என்பது இந்த வெளிப்பாட்டிற்கான சாதனம் அல்லது சக்தி. பிற்காலத்தில். சாங்கிய தரிசனத்தின் ஆதாரமாக விளங்கப் போகும் பிரகிருதி-புருஷ தத்துவத்தின் விதைகளை இந்த மந்திரத்தில் காண்கிறோம். இதுவே சைவ மரபில் பின்னர் சிவ-சக்தி தத்துவமாக மலர்கிறது. வேத சொற்பொருள் விளக்கங்களில் “விராட்” என்பது பெண்பாற் சொல்லாகக் கொள்ளப் படுகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

பிரபஞ்ச வேள்வி:

அடுத்து வரும் மந்திரங்கள் பிரபஞ்ச சிருஷ்டியை ஒரு மகத்தான வேள்வியாக உருவகம் செய்கின்றன. அக்னி, நெய், சமித்துக்கள், அவி ஆகியவற்றைக் கொண்டு நிகழ்த்தப் படுபவை வேள்விச் சடங்குகள். இச்சடங்குகள் இயற்கை இடர்களிலிருந்து மக்களையும் கால்நடைகளையும் காக்கவும், லௌகீக தேவைகளை நிறைவேற்றவும் தெய்வங்களை வேண்டும் ஒரு பழங்குடித் தன்மை கொண்ட பிரார்த்தனைகள் மட்டுமே என்பதாக நவீனத்துவ அடிப்படையில் பல இந்தியவியலாளர்கள் விளக்கமளித்துள்ளார்கள். ஆனால், வேத ரிஷிகள் அத்துடன் நின்றுவிடவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இந்தச் சடங்கு உடனடியாக ஒரு பிரபஞ்சம் அளாவிய குறியீடாக மாறுகிறது. அந்த கணத்தில் அங்கு ஒரு மகத்தான தத்துவப் பாய்ச்சல் நிகழ்கிறது.

யக்ஞம் என்பது sacrifice என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு, பின்னர் அந்தச் சொல் மூலமாகவே எல்லா வேத மொழியாக்கங்களிலும் பொருள் கொள்ளப் பட்டது. இது மூலச் சொல்லின் ஒரு அம்சத்தைக் குறிக்கின்றதே அன்றி அதன் முழுமையை அல்ல. அடிப்படையில் யக்ஞம் என்பது வஸ்துக்களை ஒன்றிலிருந்து வேறொன்றாக மாற்றும் ஒரு செயல்பாடாகும். பிரபஞ்ச சக்திகளான தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான கூட்டுச் செயல்பாடு யக்ஞம். இந்தக் கருத்தையே கீதையிலும் (3.10-11) நாம் காண்கிறோம் –

”முன்பு பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான்: “இதனால் பல்குவீர்கள், நீங்கள் விரும்பும் விருப்பங்களையெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும். இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர். (இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.”

தொடக்கத்தில் புருஷன் ஒருவரே இருக்கிறார். இந்த ஒன்று பலவாக ஆவதே சிருஷ்டி. அதை நிகழ்த்துவது காலம். எனவே, காலத்தின் மூன்று பரிமாணங்களான வசந்தம், கோடை, சரத்ருது ஆகியவை முறையே நெய், விறகு, அவி என்று ஆகி இந்த வேள்வி நிகழ்வதாக மந்திரம் கூறுகிறது. வேத அழகியலின் படி இந்த மூன்று பருவகாலங்களும் முறையே இந்திரன், அக்னி, வாயு ஆகிய மூன்று தேவதைகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

சிருஷ்டி:

புருஷ சூக்தத்தில் இரண்டு வகை சிருஷ்டிகள் கூறப் படுவதாக புராதன வேத உரையாளர் சாயணர் விளக்குகிறார் – பூர்வ சிருஷ்டி (முதல் படைப்பு) மற்றும் உத்தர சிருஷ்டி (அடுத்த படைப்பு). பூர்வ சிருஷ்டியில் புருஷன் பிரபஞ்சமாகவும், அதில் உள்ள உயிர்களாகவும் வெளிப்படுகிறார். இது 4-5 மந்திரங்களில் கூறப் பட்டது. உத்தர சிருஷ்டியில் அந்த உயிர்களின் வாழ்க்கைக்கான உணவு முதலிய தேவைகளாகவும், சாதனங்களாகவும், அந்த உயிர்களின் செயல்களாகவும் எல்லாம் புருஷனே ஆகிறார். 6ம் மந்திரத்திலிருந்து உத்தர சிருஷ்டி விளக்கப் படுகிறது.

image5vishwarupa”ஆதியில் தோன்றிய வேள்விப் புருஷன்” என்னும் ஏழாம் மந்திரம் புருஷனையே வேள்வியாக உருவகிக்கிறது. ”நேர்வழியினர்” என்பது ஸாத்யர்கள் எனப்படும் ஆதி தேவர்களைக் குறிக்கும்.
இந்த மந்திரங்கள் சிருஷ்டியின் கூறுகளை சம்பிரதாயமாக விரிவாக வர்ணிக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். எல்லா இயற்கைக் கூறுகளையும், மிருகங்களையும், பறவைகளையும் தேவர்களையும் மனிதர்களையும் ஒவ்வொன்றாகப் படைத்தார் என்று பட்டியலிடுவது போல இதில் வரவில்லை. ஒரு தேர்ந்த ஓவியன் தூரிகைகளால் அங்கங்கு சில அர்த்தமுள்ள கோடுகளை மட்டும் தீற்றிச் செல்வது போல சிருஷ்டியைக் கூறிச் செல்கின்றன இந்த மந்திரங்கள்.

இதில் மிருகங்களைக் குறிக்க வரும் “பசூ’ன்” என்ற சொல்லுக்கு ஞானம் என்றும் பொருள் கொள்வர். பரிகள் (அச்’வா:), பசுக்கள் (காவ:) ஆடுகள் (அஜாவய:) ஆகிய சொற்களுக்கு குறியீட்டு ரீதியாக பொருள் கூறும் விளக்கங்களும் உண்டு.

இந்திய மெய்ஞான, தாந்திரீக மரபுகளில் “வாக்கு” என்பது சிருஷ்டிக்கும் சக்தியாகவே கருதப் படுகிறது. பீஜாட்சரங்கள், மந்திரங்கள், உச்சாடனங்கள் ஆகியவற்றில் சிருஷ்டியின் அளவற்ற சக்தி ரகசியமாக உறைந்துள்ளதாகவும் (குஹாஹிதம்) இம்மரபுகள் கருதுகின்றன. சப்த பிரம்மம் அல்லது வாக்கு சிருஷ்டியின் முதல் வெளிப்பாடு என்பதையே ”ரிக், யஜுர், சாம வேதங்களும், சந்தஸ் எனப்படும் கவிதை வடிவங்களும் பிரபஞ்ச வேள்வியிலிருந்தே தோன்றின” என்ற பாடல் உரைக்கிறது. மிருகங்களுக்கு அடுத்தபடியாக உடனே மந்திரங்களும் சந்தங்களும் கூறப்படுவது பருண்மையிலிருந்து நுண்மையை நோக்கிய நகர்வைக் காட்டுகிறது.

பிரபஞ்சமும் மனித உடலும்:

அடுத்துள்ள மந்திரங்கள் பிரபஞ்சத்தை புருஷனின் உடலாகப் போற்றிப் பாடுகின்றன. சந்திரனை மனத்துடனும், சூரியனைக் கண்களுடனும், முகத்தை இந்திரன் – அக்னியுடனும், காற்றை மூச்சுடனும் தொடர்புறுத்தும் கவிதை உருவகங்கள் ஆழமானவை.

vishnu-lakshmi2முடிவற்று விரிந்து செல்லும் விண்வெளி புருஷனின் தொப்புள் என்று கூறியது அபாரமான அழகியல். இதையே மேலும் விரித்து, விஷ்ணு நாபியிலிருந்து மலர்ந்தெழும் தாமரையில் அமர்ந்து படைப்புக் கடவுளான பிரமன் தனது சிருஷ்டித் தொழிலைத் தொடங்குவதாக பிற்காலத்திய புராணங்கள் அற்புதமான கலைநயத்துடன் விவரிக்கின்றன.

“குழலழகர் வாயழகர் கண்ணழகர், கொப்பூழில்
எழுகமலப் பூவழகர் எம்மானார்”

என்று ஆண்டாள் சிலிர்ப்புடன் பாடுகிறாள். உடலியல் ரீதியாக, தாயின் கருவில் இருந்து உதிக்கும் ஒவ்வொரு உயிரின் சிருஷ்டியும் தொப்புள் கொடி வழியாகவே நிகழ்கிறது என்பதையும் இதனுடன் இணைத்துப் பார்க்கலாம்.

பிரபஞ்ச சிருஷ்டியை மனித உடலாக உருவகித்து இந்தப் பழங்கவிதை பாடுவதில் உள்ள நுட்பம் கவனத்துக்குரியது. உலகில் எல்லா கலாசாரங்களிலும் கவிதைகள் எழுதப் படுகின்றன. அவை முற்றிலும் வேறு வேறான கவிஞர்களால், முற்றிலும் வேறு வேறான இயற்கைச் சூழல்களில், சமூக சூழல்களில் எழுதப் பட்டாலும், இவை அனைத்தையும் தாண்டி நல்ல கவிதைகள் பொதுவாக புரிந்து கொள்ளவும் ரசிக்கவும் படுகின்றன. இது எப்படி நிகழ்கிறது என்பது குறித்து ஜெயமோகன் சமீபத்தில் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். அதில் அவர் கூறுகிறார் –

”சர்வதேச அளவில், மானுடப் பொதுவாக, கவிமொழியைத் தீர்மானிக்கும் பொது அம்சம் என்ன? மானுட உடல்தான் என்று எனக்குப் படுகிறது. மனித மொழியைத் தீர்மானிப்பதில் உடலுக்குள்ள இடம் மிக முக்கியமானது. உடலின் வடிவம் மூலமே பிரபஞ்சம் அளக்கப்படுகிறது. உடலின் அறிதல் மூலமே பிரபஞ்ச இயல்புகள் அடையாளப் படுத்தப் படுகின்றன. உடலினூடாக அன்றி தூலப் பிரபஞ்சத்தை அணுகுவது சாத்தியமல்ல என்பதால் உடலையே நாம் பிரபஞ்சமாக அறிகிறோம் என்றால் அது வியப்பில்லை.”

ஜெயமோகன் இங்கு கண்டடையும் இந்தக் கவி தரிசனம், வரலாறு புகமுடியாத தொல்பழங்காலத்தில் இந்த மண்ணில் காலூன்றி நின்று வேத ரிஷிகள் பாடிய மகத்தான கவிதைகளின் எதிரொலியே ஆகும்.

இந்த தரிசனத்திலிருந்து தான், இந்து மதத்தில் உருவ வழிபாடு என்பது உருக் கொள்கிறது. மனிதன் தன் உடல் மூலமாகவே பிரபஞ்சத்தை அறியமுடியும்,. அதனால் தான், பிரபஞ்ச வடிவான இறைவனை மனித வடிவிலோ அல்லது மனித –மிருக –இயற்கை சார்ந்த வடிவங்களிலோ பிரதிஷ்டை செய்தார்கள். தெய்வங்களின் உறைவிடங்களான கோயில்களையும் மனித உடலின் குறியீடாகவே அமைத்தார்கள். இந்த வகையில் தியானிப்பதும் வணங்குவதும் மனிதனை தளைபட்ட அறிதலில் இருந்து தளையற்ற பிரபஞ்ச அறிதலை நோக்கி இட்டுச் செல்லும் என்று நமது ரிஷிகள் கருதினார்கள்.

நால்வகை மக்கள்:

”பிராமணன் முகமானான் – கைகள் அரசன் – தொடைகள் வைசியன் – பாதங்களில் சூத்திரன் தோன்றினான்” என்ற மந்திரம் பல்வேறு வகையான விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகியுள்ளது. இந்து எதிர்ப்பாளர்கள் வேத காலத்திலேயே சாதி வேறுபாடுகளும், அடக்குமுறைகளும் இருந்தன என்பதற்கு சான்றாக இந்த மந்திரம் உள்ளது என்று கூறி இதனைக் கட்டுடைக்கின்றனர்.

varnasrama_dalit_casteஆனால் முழுமையாக இந்த சூக்தத்தையும், ஒட்டுமொத்தமாக ரிக்வேதத்தையும் கற்பவர்கள் அத்தகைய கருத்துக்கள் ஆதாரமற்றவை என்பவை உணர்வார்கள். நான்கு வர்ணத்தினரும் பரம புருஷனின் அங்கங்கள் என்றால் அதன் பொருள் என்ன? நான்கு வர்ணங்களும் தெய்வத் தன்மை கொண்டவை. இதில் ஒரு வர்ணம் இல்லாமல் போனாலும், விராட் புருஷன் குறைபட்டவனாக, ஊனமுற்றவனாக ஆகி விடுகிறான் என்பதே பொருள். விராட் புருஷனின் கால்களில் தோன்றியவர்கள் என்பதால் சூத்திரர்கள் தொடர்ந்து இழிவுற்றனர், அடிமைப் படுத்தப் பட்டனர் என்று ஒரு வாதம் வைக்கப் படுகிறது. அதுவும் தர்க்க பூர்வமாக இல்லை. ஏனென்றால் இதே சூக்தத்தில் இன்னொரு மந்திரத்தில் “பாதங்களினின்று பூமி தோன்றியது” என்று வருகிறது. அந்த பூமியை வேதம் வழிபாட்டுக்குரியதாக, தெய்வீக அன்னையாகத் தான் கூறுகிறதே அன்றி இழிவான ஒன்றாக அல்ல.

நான்கு வர்ணங்கள் இருந்ததற்கான சான்று இந்த மந்திரத்தில் கிடைக்கிறது என்பது உண்மையே. ஆனால் பிற்காலத்தில் வர்ணங்களை வைத்து உண்டான ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இதில் கற்பிக்கப் படவில்லை. வேதங்களில் எங்கு தேடினாலும் பிறப்பு அடிப்படையிலான சமூகப் பாகுபாடுகள் மற்றும் வர்ண ஏற்றத் தாழ்வுகளுக்கான சான்றுகள் கிடைக்காது.

ரிக்வேதத்தில் வைகறையின் தேவியான உஷையைக் குறித்த சூக்தம் (1.113) கூறுகிறது –

வீரச்செயலுக்கென ஒருவனை
புகழுக்கென ஒருவனை
மகத்தான வேள்விக்கென ஒருவனை
பலனுக்கென ஒருவனை
உழைப்பிற்கென ஒருவனை
தொழிலுக்கென அனைவரையும் என
உஷை
புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்
எழுப்பினாள்.

யஜுர்வேதம் (தைத்திரிய சம்ஹிதை 5.7.6.6) கூறுகிறது –

பிராமணர்களுக்கு நல்லொளி தருக
அரசர்க்கு நல்லொளி தருக
வைசியர்களுக்கும் சூத்திரர்களுக்கும்
நல்லொளி அளித்திடுக.

சுக்ல யஜுர்வேதம் கூறுகிறது –

நலம் தரும் இம்மந்திரங்களை
நான் உங்களுக்குக் கூறுகிறேன்
பிராமணர் அரசர் சூத்திரர்
இன்னும் மற்றுமுள்ளோர்
நம் மக்கள் அன்னியர்
அனைவர்க்கும் இவற்றைக் கூறுக.

வேதகால வர்ண அமைப்பு மூன்று காலகட்டங்களைக் கடந்து, அதற்குப் பின்னர் புராணங்களிலும் ஸ்மிருதிகளிலும் குறிப்பிடப் படும் வர்ண அமைப்பாக மாறியுள்ளதாக டாக்டர் அம்பேத்கர் கருதுகிறார். முதல் காலகட்டத்தில் வர்ணம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவரால் செய்யப்படும் தொழிலாக அமைந்திருந்தது. வாழ்க்கையின் நடுவில் ஒருவர் வர்ணத்தை மாற்றிக்கொள்ள முடியும். இரண்டாம் கால கட்டத்தில் வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒருவரது வர்ணம் நிர்ணயிக்கப்படும். ஆனால் அதனை அதன் பின்னர் மாற்றிக்கொள்ள முடியாது. மூன்றாவது காலகட்டத்திலேயே அது குல அடிப்படையில் மாறியது. இதற்கான சான்றுகளையும் தனது நூல்களில் அம்பேத்கர் எடுத்துரைக்கிறார். இதன் அடிப்படையில் புருஷ சூக்தத்தில் உள்ள இந்த சித்திரம் வேதகால வர்ண அமைப்பின் முதலிரண்டு காலகட்டங்களையே சார்ந்தது என்று கருத வேண்டும்.

ஸ்ரீ அரவிந்தர் இந்த மந்திரம் நமது பொதுப் புத்திக்குப் புலப்படுவதைக் காட்டிலும் மகத்தான பொருள் கொண்ட ஒன்று என்று கூறுகிறார் –

“இங்கு சமூகத்தின் நான்கு பிரிவுகள் சிருஷ்டிக் கடவுளின் உடலில் இருந்து, அவரது சிரம், புஜங்கள், தொடைகள் மற்றும் பாதங்களில் இருந்து உதித்ததாக சித்தரிக்கப் படுகிறது. நமக்கு இது ஒரு கவித்துவமான உருவகமாகத் தோற்றமளிக்கிறது – பிராமணர்கள் அறிவின் மக்கள், க்ஷத்திரியர்கள் ஆற்றலின் வடிவம், வைசியர்கள் உற்பத்தி செய்பவர்கள், சூத்திரர்கள் பணி செய்பவர்கள்.

ஆனால், ரிஷிகளுக்கு சிருஷ்டிக் கடவுளின் உடல் என்ற இந்தக் குறியீடு, ஒரு உருவகம் மட்டுமல்ல, அதை விட மேலானது. தெய்வீக சத்தியத்தை வெளிப்படுத்தி நிற்பது. அவர்களைப் பொறுத்த வரையில் மனித சமுதாயம் என்பது பிரபஞ்ச வடிவான புருஷனைத் தன் வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் வெளிப்படுத்தும் முயற்சியே ஆகும். ஏனெனில் புருஷனே தன்னை பௌதீக உலகமாகவும், பருவெளிக்கு அப்பாலான பிரபஞ்சமாகவும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

இங்கு நாம் காணும் கருத்து என்ன? நான்கு பிரிவுகளும் எதை வெளிப்படுத்துகின்றன? தெய்வீகத்தை அறிவாகவும், தெய்வீகத்தை ஆற்றலாகவும், தெய்வீகத்தை உற்பத்தி – துய்த்தல் – ஒத்துழைப்பு என்பதாகவும், தெய்வீகத்தை தொண்டு – பணிதல் – வேலை என்பதாகவும் அவை  வெளிப்படுத்துகின்றன. இந்த நான்கு பிரிவுகளும் நான்கு பிரபஞ்ச விதிகளுக்கு பொறுப்பாகின்றன. எல்லாவற்றின் ஒழுங்கையும், இயல்புகளையும் சிந்தித்து கட்டமைக்கிறது அறிவு என்ற விதி. அவற்றை நடைமுறைப் படுத்தி, நிலைநிறுத்தி, அதிகாரபூர்வமாக்குகிறது ஆற்றல் என்ற விதி. அதன் உறுப்புகளை சீராக அமைக்கிறது ஒத்துழைப்பு என்ற விதி. இவற்றின் ஏவல்களைச் செய்கிறது பணி என்ற விதி”.

வேள்வி – தர்மம்:

வேள்விக் குண்டத்தின் எல்லைக் கோடுகள் பரிதிகள் எனப்படுகின்றன. வேள்விச் சடங்கிற்கு முன் குண்டத்தைச் சுற்றி தர்ப்பைப் புற்களை இட்டு அதன் மேல் மரக்குச்சிகள் அல்லது கோல்களை வைத்து பரிதிகள் அமைக்கப் படும். அவ்வாறு அமைக்கப் பட்ட குண்டத்தில் சமித்துக்களையும், அவியையும் சொரிந்து வேள்வி நிகழ்த்தப் பெறும்.

ஓமம் - Homamபிரபஞ்ச வேள்வியில் “ஏழு பரிதி எனும் வேள்விக் கோல் நாட்டி – மூவேழு சமித்துக்கள் கொண்டு” என்பது சிருஷ்டியின் அடிப்படைத் தத்துவங்களைக் குறிப்பதாக வேத உரையாசிரியர்கள் விளக்கமளித்துள்ளனர்.

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்களும், இரவு, பகல் என்ற இரு பொழுதுகளும் சேர்ந்து ஏழு பரிதிகளாகின்றன. இது புற இயற்கை.

மூவேழு  சமித்துக்கள் என்பது ஐந்து கர்மேந்திரியங்கள் (கை, கால், வாய், குறி, குதம்), ஐந்து ஞானேந்திரியங்கள் (மெய், வாய், கண், மூக்கு, செவி), ஐந்து பிராணன்கள் (பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்), நான்கு அந்தக் கரணங்கள் (சித்தம், புத்தி, மனம், அகங்காரம்), இவற்றுடன் தர்மம், அதர்மம் ஆகியவை இணைந்து இருபத்தொரு தத்துவங்கள். இது அக இயற்கை.

இவ்வாறு அக, இயற்கையும் புற இயற்கையும் வேள்விக்கான விறகுகளாக ஆகின்றன.

”புருஷனை யாகப் பசுவாய்க் கட்டினர்” என்பது பிரபஞ்ச ரூபனான பரம புருஷனின் ஒரு அம்சம், இந்த வேள்வியில் தானே பலியாக ஆகி படைப்பு நிகழ்கிறது என்பதைக் குறித்து நிற்கிறது. சம்ஸ்கிருதத்தில் பசு என்பதற்குப் பொருள் மிருகம், பசு மாடு அல்ல.

”வேள்வியால் வேள்வியை வேட்டனர் தேவர்கள்” என்பது பிரபஞ்ச ஒருமையைக் குறிக்கும் வாசகமாகும். வேள்வி என்பதை செயலின் குறியீடாகக் கொண்டால், செயலும், செய்வோனும், அந்தச் செயலுக்கான கருவிகளும், செயலின் இலக்கும் பயனும் எல்லாம் ஒருமுகப் படுதலை இந்த மந்திரம் குறிக்கிறது. இதனை முன்பு விரிவாக அக்னி சூக்தம் குறித்த கட்டுரையில் விளக்கியிருக்கிறேன்.

பிரபஞ்ச வேள்வியே முதன்மையான தர்மங்களாக ஆயிற்று என்று முடிகிறது புருஷ சூக்தம். தர்மம் என்பது இயற்கையில் உள்ள மாறாத ஒழுங்கு – ரிதம். அந்த ஒழுங்கை செவ்வனே நிலைபெறச் செய்வது வேள்வி. அந்த ஒழுங்கில் இருந்தே மனித சமுதாயத்திற்கான அற நெறிகள் அனைத்தும் உருவாகின்றன. அந்த தர்ம நெறிகளைப் பின்பற்றுவோர் மேன்மையான ஆன்மீக நிலைகளை (உலகங்களை) அடைகின்றனர்.

கண்டேன் கடவுளை

சில பாரம்பரிய வேத சாகைகளில் உள்ள புருஷ சூக்தத்தில் இறுதி மந்திரத்திற்கு முன் இரண்டு கூடுதல் மந்திரங்கள் உள்ளன.

இருளுக்கு அப்பால் திகழும் கதிரொளி வண்ணன்
அனைத்திற்கும் உரு அளித்து பெயர் அமைத்து
செயல் புரிவோன்
நான் அறிவேன் அந்தப் புருஷனை பெரியோனை.

ஆதியில் பிரம்மன் அவனைக் கண்டுரைத்தான்
நாற்றிசைகளிலும் இந்திரன் கண்டறிந்தான்
இவ்வாறு அவனை அறிவோன்
இங்கேயே அழிவற்றவன் ஆகிறான்
வேறு வழி ஏதுமில்லை
விடுதலைக்கு.

இம்மந்திரங்களில், பிரபஞ்ச வடிவான பரம்பொருளை நான் மெய்யுணர்வில் கண்டறிந்தேன் என்று ரிஷி பிரகடனம் செய்கிறார். அந்தப் பரம்பொருளை அறிதேலே முற்றான விடுதலைக்கு இட்டுச் செல்லும் என்றும் உரைக்கிறார். ”கண்ணால் யானும் கண்டேன் காண்க” என்று திருவாசகம் உரைப்பது இந்த வேத ஞானத்தின் எதிரொலியன்றி வேறேன்ன?

****

புருஷ சூக்தம் வேத ரிஷிகள் தங்களது பிரபஞ்ச தரிசனத்தைக் கவித்துவமாகப் பாடிய ஒரு மகத்தான பாடலாகும். பிரபஞ்சத்திற்கு வெளியே உள்ள தேவன் (Extra Cosmic God) என்ற கோட்பாட்டை அல்ல, பிரபஞ்சத்தின் ஊடாக நிற்கும் கடவுள் (Cosmic God) என்ற இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாட்டையே புருஷ சூக்தம் முன்வைக்கிறது. இந்தப் பாடலில் உள்ள ஒவ்வொரு கருதுகோளும் இந்து மத தத்துவங்களுக்கு மட்டுமே உரிய தனித்தன்மை கொண்டவை என்பதை இதைப் படித்துணரும் எவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், சில குறுமதி கொண்ட கிறிஸ்தவ இறையியலாளர்கள் புருஷ சூக்தம் கூறும் புருஷன், விராட், பிரஜாபதி ஆகிய இறை உருவகங்களை பைபிளில் உள்ள ”ஏழு வானங்களுக்கு அப்பால்” ”ஏழு நாட்களில் உலகம்” புகழ் படைப்புக் கடவுளுடன் தொடர்பு படுத்துகிறார்கள். சாத்தான், ஆதி பாவம், சிலுவை போன்றவற்றையெல்லாம் புருஷ சூக்தத்தில் கண்டு பிடிக்கிறார்கள் இந்தப் புரட்டர்கள். இந்த மோசடியையும் பொய்ப் பிரசாரத்தையும் இந்து அறிஞர்களும், ஆன்மிகப் பெரியோர்களும் தீவிரமாகக் கண்டித்து அவற்றை நிறுத்தச் செய்ய வேண்டும். சத்தியத்தையும் நேர்மையையும் நல்லுறவையும் விரும்பும் கிறிஸ்தவ சகோதரர்களும் இந்தக் கண்டனத்தில் இணைய வேண்டும்.

ரிக்வேதத்தில் உள்ள இன்னும் சில சிருஷ்டி கீதங்களை அடுத்துப் பார்க்கலாம்.

(தொடரும்)

19 Replies to “புருஷ சூக்தம்”

 1. “பாதங்களில் சூத்திரன் தோன்றினான்” என்ற மந்திரம் பல்வேறு வகையான விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகியுள்ளது. இந்து எதிர்ப்பாளர்கள் வேத காலத்திலேயே சாதி வேறுபாடுகளும், அடக்குமுறைகளும் இருந்தன என்பதற்கு சான்றாக இந்த மந்திரம் உள்ளது என்று கூறி இதனைக் கட்டுடைக்கின்றனர்.

  ஆனால் முழுமையாக இந்த சூக்தத்தையும், ஒட்டுமொத்தமாக ரிக்வேதத்தையும் கற்பவர்கள் அத்தகைய கருத்துக்கள் ஆதாரமற்றவை என்பவை உணர்வார்கள். நான்கு வர்ணத்தினரும் பரம புருஷனின் அங்கங்கள் என்றால் அதன் பொருள் என்ன? நான்கு வர்ணங்களும் தெய்வத் தன்மை கொண்டவை. இதில் ஒரு வர்ணம் இல்லாமல் போனாலும், விராட் புருஷன் குறைபட்டவனாக, ஊனமுற்றவனாக ஆகி விடுகிறான் என்பதே பொருள். விராட் புருஷனின் கால்களில் தோன்றியவர்கள் என்பதால் சூத்திரர்கள் தொடர்ந்து இழிவுற்றனர், அடிமைப் படுத்தப் பட்டனர் என்று ஒரு வாதம் வைக்கப் படுகிறது. அதுவும் தர்க்க பூர்வமாக இல்லை. ஏனென்றால் இதே சூக்தத்தில் இன்னொரு மந்திரத்தில் “பாதங்களினின்று பூமி தோன்றியது” என்று வருகிறது. அந்த பூமியை வேதம் வழிபாட்டுக்குரியதாக, தெய்வீக அன்னையாகத் தான் கூறுகிறதே அன்றி இழிவான ஒன்றாக அல்ல.”-

  நன்றி ஜடாயு .இந்த தெளிவான விளக்கத்தை படித்த பின்னராவது சிலரது மூடிய கண்கள் திறக்கட்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறோம்.

 2. நன்றி திரு ஜடாயு

  “சாத்தான், ஆதி பாவம், சிலுவை போன்றவற்றையெல்லாம் புருஷ சூக்தத்தில் கண்டு பிடிக்கிறார்கள் ”

  “யக்ஞம் என்பது sacrifice என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு, பின்னர் அந்தச் சொல் மூலமாகவே எல்லா வேத மொழியாக்கங்களிலும் பொருள் கொள்ளப் பட்டது”

  புருஷ சூக்தம் பற்றிய ஒரு யூ ட்யூப் வீடியோவில் தன்னை தான் தியாகம் செய்த “புருஷன்” பற்றி ஒரு மறுமொழி-“நம் ஹிந்துக்கள்” இதை சரியாக புரிந்து கொள்ளவில்லை தேவையின்றி பல தெய்வ வழிபாடு செய்கிறார்கள் என்று ஒருவர் ரொம்ப வருத்தப்பட்டார். 🙂

  சாய்

 3. அருமை. பரிச்சயமான சூக்தமென்பதால் நன்றாகக் கருத்துக்களை உள்வாங்க முடிந்தது. என் சில புரிதல்கள்.

  \\\\எல்லா வைதீக சடங்குகளிலும், வேள்விகளிலும், வழிபாடுகளிலும், பூஜைகளிலும் ஓதப் பெறும் ஒரு சூக்தம் இது. \\\

  பூஜா விதானப்படி —- பதினாறு உபசாரத்திற்கு —- புருஷ சூக்த விதானமும் புழக்கத்தில் உள்ளது; சதருத்ரீயப்படியான பூஜா விதானமும் புழக்கத்தில் உள்ளதே

  \\\பிரார்த்தனை, சடங்கு, தத்துவம் என்ற மூன்று அம்சங்களையும் கொண்டு தன்னளவில் ஒரு முழுமையான சாஸ்திரமாகவே புருஷ சூக்தம் அமைந்துள்ளது எனலாம்.\\\\

  மற்றெல்லா சூக்தங்களும் கூட இந்த அலகீட்டின் படி அமைந்தவை என்பதும் என் புரிதல். பிழையானால் திருத்தவும்.

  \\\ஆயிரம் சிரங்கள், விழிகள், பாதங்கள்” என்ற வாசகம் ஆயிரம் என்ற எண்ணிக்கையை அல்ல, அளவிட முடியாமையை, அனந்தத்தைக் குறிக்கிறது. \\\\

  ஆரம்பத்தில் படித்த போது இதை நீங்கள் ப்ரஸ்தாபிக்கவில்லையே என நினைத்தேன். அருமை.

  \\\இச்சடங்குகள் இயற்கை இடர்களிலிருந்து மக்களையும் கால்நடைகளையும் காக்கவும், லௌகீக தேவைகளை நிறைவேற்றவும் தெய்வங்களை வேண்டும் ஒரு பழங்குடித் தன்மை கொண்ட பிரார்த்தனைகள் மட்டுமே என்பதாக நவீனத்துவ அடிப்படையில் பல இந்தியவியலாளர்கள் விளக்கமளித்துள்ளார்கள். \\\\

  பழங்குடி – A term, I could not comprehend with it overtones from the view points of Hindutva. Anyhow, you have specifically mentioned that it is as per opinion of Indologists.

  \\\\பிரபஞ்சத்திற்கு வெளியே உள்ள தேவன் (Extra Cosmic God) என்ற கோட்பாட்டை அல்ல, பிரபஞ்சத்தின் ஊடாக நிற்கும் கடவுள் (Cosmic God) என்ற இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாட்டையே புருஷ சூக்தம் முன்வைக்கிறது.\\\

  வைதிக தர்சனத்திற்கும் ஆப்ரஹாமிய கோட்பாட்டுக்கும் இடையேயான வேற்றுமை – in appropriate English Terminology – very nice.

  \\\\\இந்த மோசடியையும் பொய்ப் பிரசாரத்தையும் இந்து அறிஞர்களும், ஆன்மிகப் பெரியோர்களும் தீவிரமாகக் கண்டித்து அவற்றை நிறுத்தச் செய்ய வேண்டும்.\\\\ சத்தியத்தையும் நேர்மையையும் நல்லுறவையும் விரும்பும் கிறிஸ்தவ சகோதரர்களும் இந்தக் கண்டனத்தில் இணைய வேண்டும்.\\\\\

  முதல் கருத்து சாத்யமில்லாதது என்பது என் புரிதல். மோசடி மற்றும் பொய் ப்ரசாரம் ஆப்ரஹாமியத்துடன் கூடப்பிறந்த விஷயங்கள். அதை நிறுத்துதல் என்பது இயலாதது.

  இயன்ற காரியம் — ஹிந்து அறிஞர்களும் ஆன்மீகப் பெரியோர்களும் இது போன்ற மோசடிகள் மற்றும் பொய் ப்ரசாரங்களை அடையாளம் கண்டு அதை தகுந்த காரணங்களுடன் நிராகரணம் செய்ய வேண்டும். ஹிந்துக்களுக்கு மோசடிகளால் ஏற்படும் ப்ரமையை விலக்க வேண்டும். And thats a continuous process. And it should continue as long as the mischiefs of Abrahamic religions continue in this regard. Earlier such sort of mischiefs were only from the Christian camps. Now Muslims have also joined this mischivous bandwagon.

  சத்தியத்தையும் நேர்மையையும் நல்லுறவையும் விரும்பும் கிறிஸ்தவ *மற்றும் இஸ்லாமிய* சகோதரர்களும் இந்தக் கண்டனத்தில் இணைய வேண்டும்

 4. //சுக்ல யஜுர்வேதம் கூறுகிறது –

  நலம் தரும் இம்மந்திரங்களை
  நான் உங்களுக்குக் கூறுகிறேன்
  பிராமணர் அரசர் சூத்திரர்
  இன்னும் மற்றுமுள்ளோர்
  நம் மக்கள் அன்னியர்
  அனைவர்க்கும் இவற்றைக் கூறுக.
  //

  மிக்க நன்றி ஜடாயு அவர்களே. ஞான ஒளி எங்கும் பரவச் செய்வோம்.

 5. அன்புள்ள ஜடாயு,

  // “ஆயிரம் சிரங்கள், விழிகள், பாதங்கள்” என்ற வாசகம் ஆயிரம் என்ற எண்ணிக்கையை அல்ல, அளவிட முடியாமையை, அனந்தத்தைக் குறிக்கிறது. //

  இத்துடன் சங்கத் தமிழரின் பரிபாடலையும் காணலாம்:

  ” இரு கை மாஅல்!
  முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
  ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!
  எழு கையாள! எண் கை ஏந்தல்!
  ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!
  பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்!
  ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
  பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
  நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!” — பரிபாடல், 3

  // அது புருஷனின் ஒரு சிறு பகுதி, கால் பாகம் மட்டுமே. ”முக்கால் பகுதி விண்ணில் உறைகிறது” என்பதன் பொருள் நமக்கு வெளிப்பட்டு நிற்கும் இயற்கையை விடவும், வெளிப்படாது நிற்கும் பேரியற்கை மிகப் பெரியது என்பதாம். நாம் வசிக்கும் பூமி போல, அது அமைந்துள்ள சூரியக் குடும்பம் போல, அந்த சூரியக் குடும்பம் அமைந்துள்ள பால்வீதி போல, அந்தப் பால்வீதி சுழல்கின்ற பிரபஞ்சம் (universe) போல, ஏராளமான கிரகங்களும் சூரியக் குடும்பங்களும், பால்வீதிகளும், பிரபஞ்சங்களும் கொண்டது பேரியற்கை. நவீன அண்டவியல் (cosmology) கூறும் இந்த பிரம்மாண்டத்தின் அதிசயத்தையே கவித்துவ மொழியில் இந்த மந்திரமும் கூறுகிறது. //

  பெரிய சிக்கல் இந்த விளக்கத்தில் – “அம்ருதம் திவி” என்று மந்திரத்தில் இருக்கிறது. அழிவுடைய பிரபஞ்சத்தை “அம்ருதம்” என்று சொல்வது தகாது.

  “முக்கால் பாகம் உறைவதோ அழிவற்ற விண்ணில்” – இதுவும் சரியான மொழிபெயர்ப்பல்ல. “முக்கால் பாகமோ அழிவற்றது, ஒளி மண்டலத்தில் உறைவது” என்றால் சரியாக இருந்திருக்கும்.

  “அம்ருதே திவி” என்று இருந்தால் தான் “அழிவற்ற விண்ணில்” என்று மொழிபெயர்க்க முடியும். இங்கு “த்ரிபாதம் அம்ருதம் திவி” என்று சொல்லப்பட்டதில் “அம்ருதம்” என்பது “திவி” (இதற்கும் ‘விண்ணில்’ என்று மொழிபெயர்த்திருப்பதை விட ‘ஒளி மண்டலத்தில்’ என்று மொழிபெயர்ப்பதே சிறந்தது) என்பதற்கு விஷேஷணம் அன்று.

  ஆரியபடரின் சூர்ய சித்தாந்தத்தில் பனிரண்டாம் அத்தியாயம் நினைவிற்கு வருகிறது. அது முழுதும் புருஷ சூக்தத்தை ஒட்டியே வருகிறது. இதற்கு நிகராக “த்ரிபாதம் அம்ருதம் குஹ்யம்” (முக்கால் பகுதி அழிவற்றது, வெளிப்படையாகத் தெரிவதல்ல) — என்று வருவதைக் காண்க.

  // சில பாரம்பரிய வேத சாகைகளில் உள்ள புருஷ சூக்தத்தில் இறுதி மந்திரத்திற்கு முன் இரண்டு கூடுதல் மந்திரங்கள் உள்ளன. //

  தைத்திரீய சாகையில் தானே உள்ளது (தைத்திரீய ஆரண்யகம் 3.12) :-). இது ஏதோ ரொம்ப பிரபலமில்லாத சாகையைப் போல சொல்லி விட்டீர்கள் 🙂 🙂

  // இருளுக்கு அப்பால் திகழும் கதிரொளி வண்ணன்
  அனைத்திற்கும் உரு அளித்து பெயர் அமைத்து
  செயல் புரிவோன்
  நான் அறிவேன் அந்தப் புருஷனை பெரியோனை. //

  வேதாந்த சாரமாக அமைந்துள்ள பகவத் கீதை எட்டாம் அத்தியாயம் இந்த மந்திரத்தை விளக்கும் சுலோகமாக வருகிறது. “ஆதித்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத்” என்ற சொற்களும் வருகின்றன இதில். ஆங்கில மொழிபெயர்ப்பு – “He who meditates on the Omniscient, the Anceint, the Ruler, subtler than the subtle, the Ordainer of everything, of inconceivable form, effulgent like the sun, and beyond darkness-(he attains the supreme Person). ”

  இது தவிர உத்தர நாராயணீய மந்திரங்கள் ஆறு உண்டு (கடைசி மந்திரம் புருஷனை லக்ஷ்மீநாதனாகச் சொல்லும்) . அது தைத்திரீய ஆரண்யகத்தின் அடுத்த அனுவாகத்தில் வரும் (3.13) இதுவும் புருஷ சூக்தத்தின் பகுதியாகவே கருதப்பட்டு வருகிறது.

  // இவ்வாறு அவனை அறிவோன்
  இங்கேயே அழிவற்றவன் ஆகிறான்
  வேறு வழி ஏதுமில்லை
  விடுதலைக்கு. //

  மீண்டும் பரிபாடல் (பதினைந்தாம் பரிபாடல்) –

  ” நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை
  ஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்?
  அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்
  எளிதின் பெறல் உரிமை ஏத்துகம், சிலம்ப.”

 6. // இதையே மேலும் விரித்து, விஷ்ணு நாபியிலிருந்து மலர்ந்தெழும் தாமரையில் அமர்ந்து படைப்புக் கடவுளான பிரமன் தனது சிருஷ்டித் தொழிலைத் தொடங்குவதாக பிற்காலத்திய புராணங்கள் அற்புதமான கலைநயத்துடன் விவரிக்கின்றன. //

  இதற்கு நேரிடையாகவே வேதத்தில் பின்னணி உண்டு. விஸ்வகர்மா சூக்தத்தை அடுத்தது விவரிக்கப்போகிறீர்கள் என்று நினைக்கிறேன். “அஜஸ்ய நாபௌ” எனத் தொடங்கும் மந்திரத்தில் இந்த தாமரை விஷயம் மறைமுகமாக உள்ளது. “பத்மநாபன்” என்ற நாமத்திற்கு ஆதி சங்கரர் இட்டுள்ள உரையில் இந்த மந்திரத்தைக் காட்டியுள்ளார். கொப்பூழ்த் தாமரையை வேதத்தில் காண்பது பிற்காலத்திய கற்பனையும் அன்று,

  ‘அஜஸ்ய நாபௌ அத்யேகம் யஸ்மின் விச்வம் ப்ரதிஷ்டிதம்
  புஷ்கரம் புஷ்கராக்ஷஸ்ய தஸ்மை பத்மாத்மனே நம:’

  என்று மகாபாரத சுலோகம் இருக்கிறது.

  ‘வாய்மொழி ஓடை மலர்ந்த
  தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
  நீ’ என மொழியுமால், அந்தணர் அரு மறை.

  என்ற பரிபாடல் வரியையும் கவனிக்க வேண்டும்.

 7. // இந்த மோசடியையும் பொய்ப் பிரசாரத்தையும் இந்து அறிஞர்களும், ஆன்மிகப் பெரியோர்களும் தீவிரமாகக் கண்டித்து அவற்றை நிறுத்தச் செய்ய வேண்டும். //

  ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ பாஞ்சஜன்யம் ஆசிரியர்கள் இதனைத் தீவிரமாக அண்மையில் கண்டித்துள்ளனர். செப்டம்பர்’12 – நவம்பர்’12 இதழ்களைக் காணவும். இங்கு பதிவிறக்கம் செய்து படித்தேன்: https://srivaishnavasri.wordpress.com

 8. அன்புள்ள கந்தர்வன்,

  புருஷ சூக்தத்துடன் ஒப்புமை கொண்ட சங்கப் பாடல்களை அளித்ததற்கு மிக்க நன்றி.

  // பெரிய சிக்கல் இந்த விளக்கத்தில் – “அம்ருதம் திவி” என்று மந்திரத்தில் இருக்கிறது. அழிவுடைய பிரபஞ்சத்தை “அம்ருதம்” என்று சொல்வது தகாது. //

  தங்கள் விளக்கத்தை ஏற்கிறேன். “முக்கால் பாகம்” என்பது பிரபஞ்சத்திற்கும் அப்பாற்பட்டதான பேரியற்கையைக் குறிக்கிறதே அன்றி பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக, ஆனால் நமக்கு இன்னும் புலப்படாமல் இருக்கும் பேரியற்கையை அல்ல. ஆம், இந்த மந்திரம் சுட்டிக் காட்டும் பிரம்மாண்டம் என்பது பிரபஞ்சவியல் (cosmology) சுட்டும் பிரம்மாண்டத்திற்கும் அப்பால் உள்ளது.. ஆனால் முற்றிலும் யதார்த்தமான தளத்தில் எனது விளக்கம் அமைந்து விட்டது. .

 9. // “அம்ருதே திவி” என்று இருந்தால் தான் “அழிவற்ற விண்ணில்” என்று மொழிபெயர்க்க முடியும். இங்கு “த்ரிபாதம் அம்ருதம் திவி” என்று சொல்லப்பட்டதில் “அம்ருதம்” என்பது “திவி” (இதற்கும் ‘விண்ணில்’ என்று மொழிபெயர்த்திருப்பதை விட ‘ஒளி மண்டலத்தில்’ என்று மொழிபெயர்ப்பதே சிறந்தது) என்பதற்கு விஷேஷணம் அன்று. //

  சூக்தத்தின் பொருளை உள்வாங்கிக் கொண்ட பின் கவிதை ஒரு flow வில் வருகிறது. சொற்பொருள் பற்றிய துல்லியம் சில இடங்களில் பிசகுகிறது. ”அம்ருதம் திவி” என்பதை சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி..

  தோன்றியதனைத்தும் அவனது கால் பாகம்
  அழிவற்றது முக்கால் பாகம்
  அதுவே ஒளியுலகு

  என்று மாற்றி விடுகிறேன்.

 10. சும்மா பின்னிப் பெடலேடுக்கிறீர்கள் ஜடாயு சார்!!

  ஹிந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியில் தங்களை சந்தித்ததில் உண்டான அளவற்ற மகிழ்ச்சி பலநூறாகப் பெருகுகிறது இந்த கட்டுரையைப் படிக்கையில்! மென்மேலும் தங்கள் பணி சிறக்க என் உளமார்ந்த வாழ்த்துக்கள்! தமிழ் ஹிந்து வாசகன் என்ற முறையில் மிகவும் பெருமை கொள்கிறேன்!

 11. மிக்க நன்றி Prassannasundhar N. உங்களை சந்தித்தது எனக்கும் மிக்க மகிழ்ச்சியளித்தது.

 12. எந்த பாதங்களிலிருந்து சூத்ரர்கள் தோன்றினார்களோ அந்தப்பாதங்களை நாம் வணங்குகிறோம்! ஆதலால் பாதங்களில் இருந்து பிறந்தது அவர்களுக்கு கிடைத்த பாக்யமே!! ஆதனால் அவர்களுக்கு எந்த குறைவுமில்லை!!

 13. “பத்து திசைகளுக்கும் அப்பால்” என்ற மொழிபெயர்ப்பு சரியல்ல. “பத்து விரல் எண்ணிக்கைக்குள் அடங்காதவன்” என்பது தான் சரியான அர்த்தம். இது அண்ணா N சுப்ரமண்யம் எழுதிய புருஷசூக்த விளக்கத்தில் இருக்கிறது. நன்றி

 14. ஆரிய சமாஜத்தினர் வெளியிட்டுள்ள மனு எதிர்ப்பு தேவையா ? என்ற 79 பக்க நூலை படித்தேன். மனு தர்மத்தில் இடை செருகல்கள் ஏற்பட்டுள்ளன என்பதை தெளிவாக நிலை நிறுத்தி உள்ளனர் அந்த வெளியீட்டில். மேலும் பெண்களுக்கு தந்தையின் சொத்தில் சமபங்கு அளித்து மனு விதிகளை உருவாக்கியுள்ளார். மனு தர்மத்தில் பிறப்பு அடிப்படையிலான உயர்வு தாழ்வு எங்கும் சொல்லப்படவில்லை. ஆசிரியர் சுரேந்திர குமார் ஆசாரிய ஆவார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள மனுவின் சிலையை அப்புறப்படுத்தவேண்டும் என்று சிலர் வழக்கு தொடுத்தபோது , அதற்கு எதிராக மிக அற்புதமான வாதங்களை எடுத்து வைத்து , இப்போது நம் நாட்டில் உள்ள பிறப்பு அடிப்படையிலான சாதிப்பிரிவினை என்பதற்கு மனு எவ்விதத்திலும் காரணம் அல்ல என்பதை அழகாக நிறுவி உள்ளார். அதே போல புருஷ சூக்தமும் இந்து எதிர்ப்பு இயக்கங்களால் வேண்டும் என்றே தவறாக விமரிசனம் செய்யப்பட்டுள்ளது.

 15. இந்த பிரபஞ்சம் என்றுமே அழிவதில்லை. பிரபஞ்சம் மட்டுமல்ல. எதுவுமே அழிவதில்லை. உருவம் மற்றுமே மாறுகின்றன. தண்ணீர் மிக குளிந்தால் பனிக்கட்டி ஆகிறது. வெப்பம் கூடினால் அதே தண்ணீர் நீராவி ஆகிறது. தோற்றம் மாறுகிறது. அவ்வளவே ஆகும். நீராவியாய் ஆன தண்ணீர் மீண்டும் வெப்பம் குறையும் போது படிப்படியாக தண்ணீராகவும், அதன்பின்னர் பணிக்கட்டியாகவும் மாறுவதும் இயல்பே. இதற்கு விதிவிலக்காக எதுவுமே இல்லை . அழிவு என்பது உண்மையில் தோற்ற மாற்றம் மட்டுமே. இல்லாமல் போவது என்பது ஒன்றுமே இல்லை. உலக வாழ்க்கையில் எல்லோரும் இருப்பதைப் பற்றி மட்டுமே ஆராய்ச்சி செய்து வாழ்கிறார்கள். ஆனால் திக போன்ற பரிசுத்த ஆவியில் இட்டலியும், இடியாப்பமும் சுட்டு வியாபாரம் செய்யும் போலிகள் மட்டுமே , உலகில் இல்லாதது எது என்று தேடி அலைகிறார்கள். நம்மை அறியாமல் பிறரை அறிய முயற்சிப்பது ஒரு அறிவீனமே.

 16. “புருஷ ஏவேத^ம் சர்வம் …. ” என்ற வாக்கியம், “இந்த உலகில் காணப் படுவது எல்லாம் அந்த புருஷனே (கடவுளே)” என்று பொருள் கூறப் படுகிறது. மேலும் புருஷசூக்தம், அந்தப் புருஷன் ‘எனது’ ஹ்ருதயத்தில் வசிக்கிறார் என்றும் கூறுகிறது. ஆகவே ரமண மகரிஷி சொல்வது போல் நமக்குள் இருக்கும் இந்த “நானே” எல்லாமாகவும் தோன்றுகிறது என்பது தெளிவாகிறது. குறுகிய அஹங்காரத்தை விட்டு பிரபஞ்சம் முழுவதும் பரவிய ‘நான்’ ‘நான்’ என்று எப்பொழுதும் உள்ளே ஒலித்துக்கொண்டிருக்கும் ‘நானை’ அறிவதே வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை நினைவு படுத்துவதாகவே புருஷ சூக்தத்த்தை நாம் அணுக வேண்டும். மேமைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம். திருச்சிற்றம்பலம்

 17. வேத மந்திரம் என்பது ஒரு சக்தி வாய்ந்த ஒலிக்குறிப்பு மட்டுமே. அதற்கு பொருள் கூறுவோர் ஆளாளுக்கு பொருள் சற்று வித்தியாசமாய் கூறுவது தவறு அல்ல. ஏனெனில் இந்து மதம் என்பது வேதமதம் மட்டுமல்ல. வேதமில்லாத மதமும் இதுவே. All inclusive and all obsorbing – இதுவே இந்து மதத்தின் சிறப்பு. மேலும் இந்து என்ற பெயர் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியது இம்மதம். மனிதன் இனத்தின் பரிமாண வளர்ச்சி , இந்துமதத்தின் வளர்ச்சிக்கு ஒரு parallel.

  இந்துமதம் ஒரு புரோகித மதம் மட்டுமல்ல. புரோகிதம் என்பது சடங்குகளின் சங்கமம். புரோகிதத்துக்கு அப்பாலும் நீள்வது இந்துமதம். புரோகிதம் இன்மையும் இந்து மதத்தின் ஒரு பகுதியே.

  திரு ஜடாயு அவர்களின் இந்த தொடர் மிக அருமை. முக்கால் பகுதி அழிவற்றது என்றால் எஞ்சிய கால் பகுதி அழியக்கூடியதா ? இறை சக்திக்கு எல்லையும் இல்லை, தோற்றம் மற்றும் அழிவும் கிடையாது. இந்த பிரபஞ்சத்தில் தொடர்ந்து நடப்பது மாற்றம் மட்டுமே. இதனை வளர்சிதைமாற்றம் என்று விஞ்ஞானம் சொல்கிறது. இந்து மதம் பல ஆயிரம் ஆண்டு முன்னர் கண்ட உண்மைகளை, அறிவியல் சுமார் 5,000- வருட கடும் உழைப்பின் பின்னரே கண்டுபிடித்தது.

  ” மாயை “என்றாலே ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டிருப்பது என்பது பொருள். இந்தப் பிரபஞ்சம் அப்படித்தான் உள்ளது என்பதை நவீன இயற்பியல் தெளிவாக சொல்கிறது. எனவே மாற்றம் மட்டுமே உள்ளது. அழிவு என்பது எங்கும் இல்லை. இந்த மாயை, மாயம் என்ற சொற்களுக்கு சுவாமி சித்பவானந்தா அவர்கள் திருவாசக விளக்க உரையின் முன்னுரையில் மிக தெளிவாக விளக்கம் தந்துள்ளார். புரோகிதம் அழிந்துவிட்டால், இந்துமதம் அழிந்துவிடாது. ஏனெனில் புரோகிதம் மட்டுமே இந்து மதம் அன்று. இன்று வேதப் படிப்புக்கு மாணவர்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. அனைவரும் வேதம் பயில, நமது ஆன்மீக குருக்களாக விளங்கும் மடாதிபதிகளும், ஆதீனங்களும் ஏதேனும் நல்ல வழி காட்டவேண்டும்.

  இறைவனே எல்லாமாக உள்ளான் என்பதே உண்மை. இறைவனைத் தவிர வேறு ஏதோ ஒன்று உள்ளது என்று சொன்னால், எங்கும் நிறைந்தவன் என்ற இலக்கணம் அடிபட்டுப் போய்விடும். வரையறைகள் செய்து கடவுளை சுட்டுவது ஒரு அறியாமை மட்டுமே. ஈசாவாஸ்யம் இதம் சர்வம் – என்பது சத்தியமான உண்மை. ஜடாயுவின் தொடர்கள் மேலும் மேலும் நமது தமிழ் இந்துவுக்கு சுவை கூட்டுக. வையகம் வளமுடன் வாழ்க.

 18. ” பரிமாண வளர்ச்சி”- தட்டச்சுப் பிழை. ” பரிணாம வளர்ச்சி “- என்று படிக்க வேண்டுகிறேன்.தவறுக்கு வருந்துகிறேன்.

 19. பல மணி நேரங்களுக்கு விரிவான சான்றுகளுடன் உரைகள் கிடைப்பினும், கைக்கடக்கமாக குறள் போல இந்த உரை(ஹைக்கூ) குறுகத் தரித்துள்ளது. நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *