இராம காதையில் இரு தியாக தீபங்கள்

ராமகாதையிலே நாம் பல் வேறு வகையான கதாபாத்திரங்களைப் பார்க்கிறோம். ராமகாதை யிலே இடம் பெறும் இடங்கள் வடக்கே அயோத்தி முதல் தெற்கே இலங்கை வரையிலும் பரவியிருக்கிறது. மனிதர், வேடர், முனிவர், அரக்கர், வானரங்கள், பறவைகள். விலங்கு கள் என்று பல்வேறு வகையான இன மக்களும் இக்காப்பி யத்தில் இடம் பெறுகிறார்கள்.

இக்காப்பியத்திலே பல இடங்களி லும், பல காண்டங்களிலும் இடம் பெறும் பாத்திரங்கள் எப் படி நம் மனதில் நீங்காத இடம் பெறுகிறார்களோ அதேபோல் ஒன்று இரண்டு இடங்களில் மட்டும் வந்து போகும் கதா பாத்திரங்களும் நம்மனதில் நீங்காத இடம் பிடித்து விடுகிறார் கள். இராமகாதையிலே மிகச் சிறிய பங்கையே பெறும் கதா பாத்திரங்களான் சுமித்திரையும், சத்ருக்னனும் நமது நெஞ்சிலே அழியாத இடம் பெறுகிறார்கள். கம்பராமாயணம் ஆயி ரக்கணக்கான பாடல்களைக் கொண்டது.

ஆனால் இக்காப்பியத்தில் இவர்கள் இருவரும் ஒரே ஒரு தடவை தான் பேசுகிறார்கள். இவர்கள் பேசுவதாக இரண்டு பாடல்களே காணப்படுகின்றன. ஒரு வர் எவ்வளவு நேரம் பேசினார் என்பது முக்கியமல்ல. அவர் என்ன பேசினார் எப்படிப் பேசினார் என்பது தானே முக்கியம்.

”சொல்லுக சொல்லில் பயனுடைய, சொல்லற்க
சொல்லில் பயன் இலாச் சொல்”

என்று தானே வள்ளுவரும் சொல்லியிருக்கிறார்?

ராமயணத்தில் இலக்குவனை ஈன்றெடுத்தவள் என்பதைத் தவிர சுமித்திரைக்குப் பெரும்பங்கு எதுவுமில்லை.அதே போல் இலக்குவனுக்குப் பின் பிறந்தவன் என்பதைத் தவிர சத்ருக்னனுக்கும் பெரிதாக எதுவும் இல்லை. ஆனால் இந்த இருவரும் தங்கள் பேச்சால் அழையாத புகழைப் பெறுகிறார்கள்.

பாலகாண்டத்திலே வேள்வி யிலிருந்து பெற்ற பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளும் சமயத் தில் தான் நமக்கு சுமித்திரையை அறிமுகம் செய்து வைக்கி றான் கவிஞன். முதலில் ஒரு பங்கும் பின் மீதியிருந்ததை யும் பெற்றுக் கொள்கிறாள் சுமித்திரை. தசரத மகாராஜாவின் மூன்று தேவிமார்களுள் அவளையும் ஒரு மகாராணியாகவே பார்க்கிறோம். இருபங்கு பிரசாதம் பெற்றதால் இரு புதல்வர் களைப் பெறுகிறாள் சுமித்திரை.

இருவரைப் பயந்த நங்கை குருமணிச் சிவிகையேறி சீதா ராமர்களின் திருமணத்திற்குச் செல்கிறாள். மிதிலையில் இரு புதல்வர்களுக்கும் திருமணம் நடக்கிறது. தசரதன் ராமனுக்கு முடி சூட்ட நினைக்கிறான். தீய மந்தரையின் துர்ப்போதனையால் தூய தேவியான கைகேயியின் சிந்தை திரிகிறது. கோசலை அறிவு மிக்கவள். கைகேயி உணர்ச்சி மிக்கவள். ஆனால் சுமித்திரை ஞானம் மிக்கவள்.

இராமனின் பட்டாபிஷேகம் தடைபட்டதை அறிந்த கோசலை கதறுகிறாள், பரிதவிக்கி றாள். தசரதனுடைய துக்கத்தையும் கோசலையின் துன்பத் தையும் ஆற்றக் கூடியவள் சுமித்திரையே என்பதை உணர்ந்த ராமன் சுமித்திரையின் தனிக் கோயிலை அடை கிறான்.ஏனென்றால் சுமித்திரை கோசலையின் அன்புத் தோழி.

இராமனுடைய பட்டாபிஷேகம் தடைபட்ட செய்தியும், வனவாசச் செய்தியும் இலக்குவனுக் குத் தெரியவருகிறது. உடனே இலக்குவன் கோபத்தோடு போர்க்கோலம் பூண்டு, “யார் வந்தாலும் வரட்டும். அவர் களையெல்லாம் வென்று கைகேயியின் வரங்களை நிறை வேறவொட்டாமல் செய்து ராமனுக்கே முடி சூட்டு வேன் என்று வஞ்சினம் கூறி நகரைக் கலக்கித் திரிந்து வருகிறான்.

இலக்குவன் எழுப்பிய வில்லின் நாணொலி கேட்டு இராமன் விரைந்து வருகிறான். அவனு டைய போர்க்கோலத்தைப் பார்த்து, “இலக்குவா ஏன் இப்படிப் போர்க்கோலம் பூண்டு நிற்கிறாய்?” என்று கேட்ட ராமனுக்கு

“அண்ணா! உனது மகுடாபிஷேகத்தைத் தடை செய்பவர்கள் தேவர்களே யானாலும் அவர்களையும் பஞ்சு நெருப்பைச் சுட்டுப் பொசுக்குவது போல் பொசுக்கி விடுவேன்” என்கிறான்.

இதைக் கேட்ட இராமன் இலக்குவ னுக்குப் பலவித நியாயங்களைச் சொல்லி இலக்குவனைக் கொஞ்சம் கொஞ்சமாக சமாதானப் படுத்துகிறான். அவனை யும் அழைத்துக் கொண்டு ”சொல் மாண்புடைய அன்னை சுமித்திரை’’கோயில் செல்கிறான். இந்த இடத்தில் கவிஞன் சுமித்திரைக்குப் பொருத்தமான ஒரு அடைமொழி கொடுக்கிறான். பண் பான, உயர்ந்த, மாண்புடைய சொற்களைத் தவிர வேறு சொற்களைச் சொல்லாதவள் இந்த சுமித்திரை. இவள் இப் பொழுது பேசப் போகும் சொற்கள் மாண்புடையவையாக காலத்தை வென்று நிற்கும் சொற்களாக விளங்கப் போகின் றன என்பதைக் குறிப்பால் உணர வைக்கிறான் கம்பன்.

sumitra-bids-farewell-to-ram-lakshman-sita

இராமனும் இலக்குவனும் வருதைப் பார்க்கிறாள் சுமித்திரை. அவர்கள் ஒன்றும் சொல்லாமலேயே இவளுக்கு எல்லாம் தெரிந்து விடுகிறது. தண்டா வனம் செல்வதற்கே இருவரும் சமைந்தார்கள் என்பதைப் புரிந்து கொண்டு விடுகிறாள். ராமனுடன் இலக்குவனும் நிச்சயமாக வனம் செல்லப் போகிறான் என்பதை இவள் நுணுக்கமாகப் புரிந்து கொண்டு விடுகிறாள். இருவரையும் பிரிய வேண்டுமே என்ற சோகத்தில் புரண்டு அழுகிறாள். துன்பத்தின் எல்லைக்கே போய் விடுகிறாள். சுமித்திரையின் துயரத்தை தனயர் இருவரும் ஆற்றுகிறார்கள்.

இதற்குள் கைகேயியின் ஏவல் மகளிர்கள் மரவுரி எடுத்து வருகிறார்கள். வந்த மரவுரியை வாங்கி இலக்குவன் “தாயே உடன் செல்” என்று கூறி எனக்கு உத்தைரவு தர வேண்டும் என்று பணிந்து நிற்கிறான். தன் கால்களில் விழுந்து வணங்கி நிற்கும் மகனிடம் சராசரித் தாயாக இருந்தால் என்ன சொல்ல நினைப்பார்கள்? நேற்று நிச்சயிக்கப் பட்ட மகுடாபிஷேகம் இன்று நடைபெறவில்லை. இனியும் நடை பெறாது.

கைகேயி தன் வரத்தால், தன் சாமர்த்தியத்தால் ராஜ்ஜியத்தைத் தன் மகனுக்காக்கி, ராம னையும் காட்டுக்கனுப்பப் போகிறாள். அவள் தன்னையும் தன் மகன்களையும் எப்படி நடத்துவாளோ? இந்நிலையில் அருமை மகனும் அண்ணனுடன் 14 வருடம் வனவாசம் செய்யப் போகிறேன் என்றால் எந்தத் தாய்தான் சம்மதிப்பாள்? ராமன் வனவாசம் செய்யப் போகிறான் என்றால் அது அவனுக்கு இடப்பட்ட அரச கட்டளை. அதனால் அவன் வனம் செல்ல வேண்டும். ஆனால் இலக்குவன் எதற்காக ராமனுடன் செல்லவேண்டும். அவன் தனக்குத் துணையாக அயோத்தியிலேயே இருக்கலாமே?

ஆனால் சொல் மாண்புடைய சுமித்திரை அல்லவா இவள்! அந்த அடைமொழிக்குத் தகுந்த வளாகவே பேசுகிறாள். “மகனே அந்த வனமே உனக்கு அயோத்தி. உன்னிடம் மிக்க அன்புடைய ராமனே உனக்கு மன்னவனாவான். நம் சீதையே தாயாவாள். என்று எண்ணி ராமனுடன் செல்வாய். கோசலை சுமித்திரை என்ற இரு தாயாரும் சீதை என்றே எண்ணிக் கொள்” என்கிறாள் ராம னுடன் சீதையும் வனம் செல்வாள் என்பதை சுமித்திரை முன்னதாகவே உணர்ந்து கொண்டு விடுகிறாள். என்ன சொல்கிறாள் என்று கேட்போம்.

“ஆகாதது என்றால் உனக்கு அவ்வனம் அயோத்தி
மாகாதல் இராமன் நம்மன்னவன் வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம் பூங்குழல் சீதை என்றே
ஏகாய் இனி இவ்வயின் நிற்றலும் ஏதம் என்றாள்.

இலக்குவன் கேட்டது அண்ண னுடன் செல்ல அனுமதி. ஆனால் சுமித்திரை கொடுத்ததோ அனுமதி மட்டுமல்ல கட்டளை! இனி இங்கு நிற்பதும் கூடக் குற்றம் என்கிறாள். ராமனுக்கு வனவாசம் செய்ய ஆணை வந்த்து அரசனிடமிருந்து என்றால், (அப்படித்தானே கைகேயி சொன்னாள்?)

ஆழி சூழ் உலகம் எல்லாம்
பரதனே ஆள நீ போய்த்
தாழிரும் சடைகள் தாங்கித்
தாங்கரும் தவமேற் கொண்டு
பூழி வெங்கானம் நண்ணிப்
புண்ணியத் துறைகளாடி
ஏழிரண்டாண்டில் வா என்று
இயம்பினன் அரசன்’”என்றாள்

RamaSitaLakshmanaஇலக்குவனுக்கோ நேரடியாக அவன் தாயாரிடமிருந்தே கட் டளை வருகிறது. எந்தத் தாய் தன் அருமை மகனுக்கு இப்ப டிக் கட்டளை யிடுவாள்? கம்பனின் சுமித்திரை இன்னும் ஒருபடி மேலே போய் தியாகப் பெருங் கோயிலாக விளங்கு கிறாள். வனவாச காலத்தில் ராமனை மன்னனாகவும் கருத வேண்டும் என்று சொன்னவள் இலக்குவனை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறாள்.

“இலக்குவா, நீ தம்பி என்ற முறையிலோ,இளவரசன் என்ற முறையிலோ அண்ணனிட மிருந்து சலுகைகளையோ உரிமைகளையோ எதிர்பார்க்கக் கூடாது. அடியாரைப் போல ஏவல் செய்ய வேண்டும். என்று உத்திரவு போடுகிறாள். இதற்கும் மேலே மேலே போய் எவரஸ்ட் சிகரத்தின் உச்சிக்கே போய் விடுகிறாள். வனவாச காலமான 14 ஆண்டுகளிலும் இராமனுக்கு அடிமையாக இருப்பதோடு அமையாமல் இதற்கு மேலும் தியாகம் செய் யச் சொல்கிறாள்.

”14 வருடங்கள் கழிந்த பின் இராமன் அயோத்திக்கு வந்தால் அவனுடன் நீயும் வா. அப்படி வரா விட்டால், வனவாச காலத்தில் இராமனுக்கு ஏதாவது இடர் வந்தால், ஆபத்துக்கள் வந்தால் அவனுக்குத் தீங்கு நேரா வண்ணம் உன் உயிரைக் கொடுத்தாவது அத் துன்பத்தை நீ ஏற்றுக் கொள்” இராமன் இல்லாமல் நீ திரும்பி வர வேண்டாம்” என்கிறாள்

பின்னும் பகர்வாள் ‘மகனே இவன்பின் செல்; தம்பி
என்னும் படியன்று; அடியாரின் ஏவல் செய்தி
மன்னும் நகர்க்கே இவன் வந்திடில் வா அன்றேல்
முன்னம் முடி’என்றாள் வார் விழி சோர நின்றாள்.

இப்படித் தியாகப் பெருங் கோயிலாக விளங்கும் தாய் சொன்ன சொல்லை இம்மியும் பிசகா மல் 14 ஆண்டுகளாக இலக்குவன் கடைப்பிடித்து வந்தான் என்பதையும் பார்க்கிறோம். 14 ஆண்டுகளாக் இராமன் பித்ரு வாக்ய பரிபாலனம் செய்தான் என்றால் இலக்குவன் மாத்ரு வாக்ய பரிபாலனம் செய்தான் என்று சொல்லலாம். வன வாசத்தில் இலக்குவன் ராமனைக் கண்ணை இமை காப்பது போல் காத்து வருகிறான்.

கங்கை யாற்றைக் கடந்து மூவ ரும் செல்கிறார்கள். பரத்துவாஜ முனிவரைச் சந்திக்கிறார் கள். யமுனையைத் தாண்டிச் செல்ல வேண்டும். எப்படி ஆற் றைக் கடப்பது என்று யோசிக்கிறார்கள். ஆனால் இலக்கு வனோ விரைவாக பக்கத்திலுள்ள மூங்கில் காட்டுக்குள் சென்று மூங்கில் கழிகளை அளவாக வெட்டி அவற்றை மாணைக் கொடி என்ற ஒரு வகைக் காட்டுக் கொடியால் பிணைத்துத் தெப்பம் போல் கட்டி ஆற்றிலே மிதக்க விடு கிறான். அந்தத் தெப்பத்திலே சீதையும் இராமனும் இனிது இருக்க இலக்குவன் துடுப்புக் கொண்டு தெப்பம் தள்ளுவது போல் இரு கைகளாலும் நீந்திய வண்ணம் தெப்பத்தைத் தள்ளிக் கொண்டு போகிறான்.

வாங்கு வேய்ங்கழை துணித்தனன்
மாணையின் கொடியால்
ஓங்கு தெப்பமொன்று அமைத்து அதின்
உம்பரின் உலம் போல்
வீங்கு தோள் அண்ணல் தேவியோடு
இனிது வீற்றிருப்ப
நீங்கினான், அந்த நெடுநதி,
இருகையால் நீந்தி.

இராமாவதாரத்திலே யமுனை யாற்றைக் கடக்க தெப்பம் கட்டிய இலக்குவன் ஆதிசேஷ னின் அம்சம். அடுத்த கிருஷ்ணாவதாரத்திலெ இதே யமு னையை வசுதேவர் கடக்கும் பொழுது குடையாக வந்து உதவி செய்யப் போகிறான். சம்சார ஸாகரத்தைக் கடக்கத் தெப்பமாக விளங்கும் இராமனுக்கே தெப்பம் செய்து யமுனையைக் கடக்க உதவி செய்கிறான் இந்த அடியவன்!

இராமனும் சீதையும் இரவில் வானமே கூரையாகவும் பூமியில் நாணற் புல்லைப் பரப்பி அதையே பாயாகவும் கொண்டு துயின்ற போது, இவர்களுக்கு எவ்வித இடையூறும் வந்து விடக் கூடாதே என்று அதி ஜாக்கிரதையாக வில்லும் கையுமாக விடியுமட்டும் வில்லை யூன்றி இமை கொட்டாமல் காவல் காத்து நிற்கிறான், இராமனும், சீதையும் வழி நடந்த களைப்பில் அயர்ந்து தூங்கி விட அவர்களுடைய பரிதாப நிலையை நோக்கிக் கண்ணீர் சொரிந்த வண்ணம் நின்று கொண்டிருக்கிறான் இந்தக் காவல்காரன்! இதை உடனிருந்தே பார்த்த குகன் பரதனிடம் சொல்வதைக் கேட்போம்

”அல்லை ஆண்டு அமைந்த மேனி
அழகனும் அவளும் துஞ்ச
வில்லை ஊன்றிய கையோடும்
வெய்துயிர்ப்போடும் வீரன்
கண்கள் நீர் சொரியக் கங்குல்
எல்லை காண்பளவும் நின்றான்
இமைப்பிலன் நயனம்” என்றான்.

ஏனென்றால் குகனும் இரவு பூராவும் விழித்திருந்து காவல் காத்தான் அல்லவா?

இதைக் கேட்ட பரதன் துடித்துப் போகிறான். ”நாங்கள் இருவருமே ராமனுக்குத் தம்பிகளாகப் பிறந்தோம். ஆனால் நானோ,’ என்றும் முடிவில்லாத துன்பத் துக்குக் காரணமாகி விட்டேன். இலக்குவனோ அத்துன்பத் தைத் துடைத்து விடும் பேறு பெற்றான்”  என்று இலக்குவனுடைய அளவிலாத அன்பையும் தியாகத்தையும் வியந்து பேசுகிறான்.

hj_r13_ram_lakshmanசித்திரகூடம் வந்து சேர்ந்ததும் மாலை நேரமாகி விடவே இராமனும் சீதையும் மாலைக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இலக்குவன் என்ன செய்கிறான்? நீண்ட மூங்கில்களை வெட்டிக் கொண்டு தூண்களாக நிறுத்துகிறான். பின் உத்தரம் வைக்கிறான். பின்பு சட்டங்களை இறக்கி, கைகளும், குறுக்காக வரிச்சுக ளும் வைத்து, அதன் மேலே வெள்ளி போல பளபளக்கும் தேக்கிலைகளைப் பரப்பி புல்லை வேய்ந்து விடுகிறான்.

இப்படி அண்ணனுக்கு இடம் அமைத்த பின் அழகு செய்கிறான் மிதிலைப் பொன்னுக்கும் இதே போல் தனியாக வேறு இடம் அமைத்து சுவற்றில் செம்மண் பட்டை அடித்து அழகு செய்கிறான். பலநிறக் கற் களையும் சிப்பிகளையும் பொறுக்கி வந்து உட்பக்கம் கோலம் போட்டது போலப் பதித்து வைத்து அழகு படுத்துகிறான்.

இப்படி இலக்குவன் சமைத்த பர்ணசாலையைப் பார்த்த  இராமன் நெகிழ்ந்து போகிறான். இலக்குவன் எப்படி இந்தப் பர்ணசாலையைக் கட்டி முடித் தான்? என்னோடு வில்லைப் பிடித்து வில்வித்தை கற்ற கைகள் கொத்து வேலையை எப்போது யாரிடம் கற்றுக் கொண்டான்?’ என்றி உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறான்.

குன்று போலக் குவவிய தோளினாய்!
என்று கற்றனை நீ இது போல்?

என்று கண்ணீர்விட்டு அழுகிறான். இப்படிக் குறிப்பறிந்து பணிவிடை செய்கிறான் சுமித்திரை தந்த செல்வன்.

என்கடன் பணி செய்து கிடப்பதே என்று மட்டும் அமையாமல் ஆறுதல் சொல்லவும் இந்தத் தம்பியே உதவுகிறான். பாரதி, கண்ணனைச் சேவகனாகப் பெற்று எப்படி எல்லா நன்மைகளும் பெறுகிறாரோ அப்படியே இலக்குவனைப் பெற்ற ராமனும் எல்லாவிதமான உதவி களையும் பெறுகிறான். தன் மனைவியைப் பிரிந்து வந்திருக்கும் இலக்குவனிடமே ராமன் சீதையைப் பிரிந்த துயரத் தைத் தாளாமல் புலம்புகிறான். அப்பொழுதெல்லாம் ராமனைத் தேற்றி ஆறு தல் சொல்லி மேலே செய்ய வேண்டி யதைசெய்யச் சொல்லி செயல் பட வைக்கிறான் இந்த அடியவன்.

சீதையையும் தந்தைக்கு ஒப் பான ஜடாயுவையும் ஒரே சமயத்தில் இழந்த நிலையில் ராமன் பலவாறு சோகமும் கோபமும் அடைகிறான்.உலகைத் துறந்து தவம் செய்யப் போய் விடுகிறேன் அல்லது உயி ரையே விட்டு விடுவேன். இந்த இரண்டில் எதைச் செய்ய லாம் சொல் லக்ஷ்மணா? பெற்ற தந்தை இறந்துளான். இருந்துளேன் யான்! என் செய்வேன் இளவல்” என்று அழுது புலம்பும் அண்ணனைத் தேற்றுகிறான் இந்த இளையவன்.

”அண்ணா இரண்டுமே செய்யத் தகுந்தவை அல்ல. அவ்வரக்கரை நெருக்கிக் கொன்ற பின் அன்றோ வெய்ய கொடுந்துயர் குளிப்பது? அண்ணா! சீதைக்காகவே துஷ்ட நிக்கிரகம் நடை பெற வேண்டும். அதற்காக இல்லாவிட்டாலும் நம் தந்தையாகிய ஜடாயுவைக் கொன்றவனைக் கொல்ல வேண்டியது அவசியம் என்கிறான். இதைவிட வேறு தவமும் வேண்டுமோ? என்று ராமனுக்கு உத்வேகம் ஊட்டுகிறான். இதன் பிறகே ஜடாயுவுக்கு ஈமக் கடன்கள் செய்கிறான் ராமன்.

சீதையின் பிரிவுத்துயரிலே மூழ்கிவிடும் ராமனிடம் அண்ணா சீதையைத் தேடிச் செல்  லாமல் இப்படி செயலற்று இருக்கலாமா? என்று வற்புறுத்தி தேடிச் செல்கிறார்கள். திடீரென்று ஏதோ ஒரு மதிலுக்குள் அகப்பட்டுக் கொண்டதை உணர்கிறார்கள். கவந்தன் தான் அவர்களை அப்படி வளைத்துக் கொள்கிறான். ”அண்ணா இப்போது என்ன செய்யலாம்?” என்று கேட்ட தம்பியிடம், விரக்தியடைந்த நிலையிலிருந்த ராமன், நான் இந்த பூதத்திற்கு இரையாகப் போகிறேன் என்கிறான்.அவன் சொல்வதைக் கேட்போம்.

”தோகையும் பிரிந்தனள், எந்தை துஞ்சினான்
வேக வெம்பகழி சுமந்து உழல வேண்டாம்…

“இலக்குவா நான் இன்னும் எத்தனை பழிகளைச் சுமக்க வேண்டுமோ?”

ஈன்றவர் இடர்பட, எம்பி துன்புறச்
சான்றவர் துயருறப் பழிக்குச் சார்வுமாய்
தோன்றலின், என்னுயிர் துறந்த போதலால்
ஊன்றிய பெரும்பழி துடைக்க ஒண்ணுமோ?

உன்மகள் மிதிலைச் செல்வி இப்பொழுது அரக்கர் மனையில் இருக்கிறாள் என்று ஜனக மன்னனிடம் சொல்வதைவிட உயிரை விடுவதே மேல்  அதனால் இலக்குவா நான் இதற்கு இரையாகிறேன் நீ இங்கி ருந்து செல்” என்றும் அரற்றுகிறான்.

இதைக் கேட்ட இலக்குவன் “அண்ணா! உன்னோடு உடன் வந்திருக்கும் நான் மட்டும் மீண்டு போவேன் என்றால் என் அடிமைத்திறம் நன்று நன்று” என்று தன்னையே இகழ்ந்து கொள்கிறான். அண்னா அன்னை சுமித்திரை என்ன சொல்லி யனுப்பினாள்?

”… இன்னல்
பின்றாது எய்தி பேர் இசையாளருக்கு அழிவு உண்டேல்
பொன்றா முன்னம் பொன்றுதி”

என்று தானே சொல்லியனுப்பினாள். உங்களை விட்டு விட்டு நான் மட்டும் திரும்பிச் சென்றால் அன்னை சொல் காப்பாற் றாதவனாகி விடுவேனே! அது சரியா? இதை விடப் பெரிய வசையும் வேண்டுமோ? அண்ணா! இந்தப் பூதமும் நமக்கு ஒரு பொருட்டா? இந்த வாள் செய்யப் போகும் வேலையைப் பார்!” என்று சொல்லிக் கொண்டே முன்னம் முடிவோம் என்று ராமனை முந்திச் செல்கிறான். இந்த சகோதரர பாசத் தைக் கண்ட தேவர்களும் நெகிழ்ந்து போகிறார்களாம்.

அண்ணனுடைய உயிருக்கோ கௌரவத்திற்கோ இடையூறு ஏற்படும் போதெல்லாம் இந்தத்  தம்பி தன்னுயிர் கொடுக்கத் தயங்குவதேயில்லை.

இராம இராவண யுத்தம் ஆரம்பமாகி விட்டது. முதல் நாள் போரில் இராவணன் அனைத்தையும் இழந்து வெறுங்கையோடு இலங்கை சென்ற பின் மறு நாள் கும்பகருணன் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க போர்க்களம் வருகிறான் இராம பாணத்தால் கையும் காலும் இழந்து நிற் கும் நிலையில் இவன் கவலையெல்லாம் இராவணனைப் பற்றி இல்லை.

நீதியால் வந்தது ஒரு நெடுந்
தரும நெறிஅல்லால்
சாதியால் வந்த சிறு நெறி அறியாத

விபீடணத் தம்பி பற்றித்தான். எனவே இராமனிடம் தம்பி விபீடணனை அடைக்கலமாக ஒப்படைக்கிறான். ”போரில் தோல்வியே அறியாத இராவணனும் தோல்வி ஏற்பட்டதற்கு வீடணனே காரணம் என்று இவனைக் கருவிக் கொண்டிருக் கிறான். தம்பி என்றும் பார்க்க மாட்டான். இவனைக் கண்ட வுடனே கொன்று விடுவான். அதனால் உன்னிடம் அடைக் கலம் வேண்டுகிறேன்”

”உம்பியைத்தான், உன்னைத்தான்,
அனுமனைத்தான் ஒருபொழுதும்
எம்பி பிரியானாக அருளுதி”

என்று வேண்டிக் கொள்கிறான்.

கும்பகருணனும் இந்திரஜித்தும் வீழ்ந்தபின் மூலபலம் என்னும் ராவணனுடைய சேனையும் அழிந்து படுகிறது. இந்திரஜித்தின் வீழ்ச்சிக்குக் காரணமான இலக்குவனை எப்படியாவது வெல்ல வேண்டும், கொல்ல வேண்டும் என்ற வெறியுடன் மோகனாஸ்திரத்தை இலக்கு வன் மேல் ஏவுகிறாண் ராவணன். வீடணன் ஆலோசனை யின் படி இலக்குவன் அந்த அஸ்திரத்தை அழித்து விடுகிறான்.

இப்பொழுது ராவணன் ஆத்திர மெல்லாம் வீடணன் மேல் திரும்புகிறது. உடனே மயன் தந்த வேலாயுதத்தை ஏவுகிறான். இந்த வேலை யார் மீது பிரயோகித்தாலும் அவர்கள் அழிவது திண்ணம். இது தெரிந்த வீடணன் அந்த வேலைத் தாங்கிக் கொள்ள முன் வருகிறான். இலக்குவன் இதைப் பார்க்கிறான். சரணம் என்று வந்தவனைச் சாக விடலாமா? வீடணன் உயிர் துறந்தால் இராமனும் உயிரை விட்டு விடுவான். இராமன் உயிருக்கு ஆபத்து என்றால் என்ன செய்ய வேண்டும் என்று அன்னை சொல்லியிருக்கிறாள்? “முன்னம் முடி” என்று தானே!

எனவே இலக்குவன் ஓடி வரு கிறான். இதைக் கண்ட அனுமனும் அங்கதனும் கூட ஓடி வருகிறார்கள் அந்த வேலைத் தாங்கிக் கொள்ள. அங்கதனும் வாலியால் அடைக்கலமாகக் கொடுக்கப் பட்டவன் தானே! அதனால் எல்லோரையும் முந்திக் கொண்டு இலக்குவன் ஓடி வந்து வேலை ஏற்கிறான்.

hanuman-brings-medicine-for-lakshmana

மின்னும் வேலினை விண்ணவர்கள்
புடைத்து ஏங்க
பொன்னின் மார்பிடை ஏற்றனன்

வேலை ஏற்ற இலக்குவன் மயங்கி வீழ்கிறான். ஜாம்பவான் சொன்னபடி அனுமன் மருந்து கொண்டு வர இலக்குவனும் உயிர் பெற்று எழுகிறான். இலக்குவனை இராமன் தழுவிக் கொண்டு

”புறவு ஒன்றின் பொருட்டு இன் யாக்கை
புண் உற அரிந்த புத்தேள்
அறவனும் ஐய! நின்னை நிகர்க்கிலன்

தன்னைச் சரணடைந்த புறாவுக்காகத் தன்னையே அரிந்து கொடுத்து உயிரும் கொடுக்கத் துணிந்த அந்த சிபிச் சக்கரவர்த்தியும் உனக்கு நிகராக மாட்டான்” என்று மனமாரப் பாராட்டுகிறான்.

இராமனுக்குத் தம்பியாக இருந்த போதிலும் ஒரு ராஜ குமாரனாக இருந்த போதிலும் தாய் சொல்லைச் சிரமேற்கொண்டு அடியவனாக இருந்து 14 ஆண்டுகளும் பணிவிடை செய்கிறான் இலக்குவன். அண்ண னுடைய உயிருக்கும் கௌரவத்திற்கும் ஊறு நேர்ந்த காலத் தில் இவன் தன் உயிரையும் பணயம் வைக்கத் தயங்க வில்லை. நண்பனாய். மந்திரியாய், சேவகனாய். ஆறுதல் சொல்லும் அறிஞனாய் பல வழிகளிலும் இவன் உதவி செய்கிறான்.

இராம காதையிலே இந்தத் தாயும் தனயனும் என்றென்றும் அணையாது சுடர் விடும் தியாக தீபங்களாக விளங்குகிறார்கள்.

4 Replies to “இராம காதையில் இரு தியாக தீபங்கள்”

  1. கம்பனின் கைத்திறம் அவனது கவிதை. அதன் அழகு அந்த தமிழின் சிறப்பு. இராமகாதை எவ்வளவு சுவையுடைத்து என்பது இந்த கட்டுரையில் வெளிப்படுகிறது. வழங்கிய ஜெயலக்ஷ்மி அவர்களுக்கும், வெளியிட்ட தமிழ் ஹிந்துவுக்கும் நன்றி. சுமித்திரையும், இலக்குவனும் , இந்த பூவுலகு இருக்கும் வரை எல்லோராலும் போற்றப்படுவார்கள்.

  2. மிக நெகிழ்ச்சியான கட்டுரை. சுமத்திரையும், லட்சுமணனும், ஒவ்வொரு இந்துவின் மனதிலும் மேலும் ஒரு படி உயர்த்தி வைத்து பூஜிக்கப்படுவார்கள். அற்புதமான கட்டுரை. கம்பனுக்கு இணையான கவிஞர் யார் ? ராமனின் கதைக்கு இணையான சொல் சித்திரம் வேறில்லை.

  3. இந்தக் கட்டுரையை வாசித்து கண்ணீர் மல்கிப் போனேன். மிக்க நன்றி

  4. அருமை. என்னிடம் கம்ப ராமாயண காவியம் செய்யுள் வடிவில் இருக்கிறது வேண்டுமென்றே நான் உரையுடன் கூடிய கம்பராமாயணம் வாங்க வில்லை. ஒன்றுக்குப் பத்துத்தடவை வாசித்துப் பொருள் புரிய முயற்சிக்கிறேன். அருமையாகப் புரிகிறது. இந்தக் கட்டுரை என் மனதை நிறைத்தது, நெகிழவைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *