தொடர்ச்சி…
யாழினி சோகமாகத் திரும்பி வருகிறாள்.
விடுதி வாசலில் யாழினியின் வரவுக்காக ஆயா காத்து நிற்கிறார்.
யாழினியை அணைத்தபடியே அதன் அறைக்கு அழைத்துச் செல்கிறார்.
விளக்கைப் போட்டுவிட்டு, ஜன்னலைச் சாத்துகிறார். கட்டிலைச் சரி செய்கிறார். பெட்ஷீட்டை உதறிப் போட்டபடியே ஆயா கேட்கிறார் : இப்ப புரியுதாம்மா… எனக்கு மட்டும் ஏன் இந்த வேதனைன்னு நீ வருத்தப்பட்டியே. வாழ்க்கைன்னா இப்படித்தான். பாத்தியா..? உன்னை மாதிரி எத்தனை பேரு இங்க இருக்காங்க. இனிமே அந்தக் கவலை உன் மனசுல நிச்சயம் வராது இல்லியா..?
யாழினி : ஆமா ஆயா… அந்தக் கேள்வி இனிமே என் மனசுல வராது.
ஆயா லேசாகச் சிரித்து அப்படித்தான் இருக்கணும் என்று சொல்லியபடியே பெட்ஷீட்டில் யானை போல் குனிந்து நடந்து ஓரங்களைச் சரிசெய்கிறார்.
யாழினி : ஆனா ஆயா… எங்களுக்கு ஏன் இப்படி நடந்துச்சு..?
பெட்ஷீட்டை சரி செய்து கொண்டிருந்த ஆயா அதிர்ந்து திரும்புகிறார். யாழினியின் கண்களில் தெரியும் வேதனையை எதிர்கொள்ள முடியாமல் மெள்ள கண்களைத் தாழ்த்திக் கொள்பவர் தளர்ந்துபோய் பெட்ஷீட்டின் சரிசெய்யப்படாத ஓரங்களை மவுனமாகப் பார்க்கிறார். யாழினி அவரை நெருங்கிச் சென்று தொய்ந்து போன ஆயாவின் முகத்தைத் தன் பிஞ்சுக் கைகளால் மெதுவாக நிமிர்த்துகிறாள்.
யாழினி : ஏன் ஆயா… இதனை பேருக்கு இப்படி ஆச்சு. நாங்க யாருமே எந்தத் தப்பும் பண்ணலியே?
யாழினியின் கேள்வியை எதிர்கொள்ளமுடியாமல் வேறு திசையை வெறித்துப் பார்க்கிறார். அவர் கண்களில் நீர் கோர்த்து நிற்கிறது. பதில் சொல்ல முடியாமல் ஆயா அறையில் இருந்து வெளியே செல்கிறார். யாழினியும் அவர் பின்னாலேயே செல்கிறாள்.
நீண்ட வராண்டாவில் இருளும் வெளிச்சமும் கலந்து காணப்படுகிறது. வீசும் குளிர் காற்றில் யாழினியின் உடல் நடுங்குகிறது. ஆயா தன் கம்பளியால் யாழினியைப் போர்த்திவிடுகிறார். இரவின் பிரமாண்ட நிசப்தத்தில் யாழினியின் ஊன்றுகோல் சத்தம் திம் திம் என சுவர்களில் எதிரொலிக்கிறது. ஆயா தன் அறையை அடைந்தது மெள்ள கதவைத் திறக்கிறார். மங்கலான விளக்கெரியும் அவருடைய அறையில் இதுபோல் பயந்து நடுங்கியபடி இன்னும் பல குழந்தைகள்.
ஊன்றுகோலை ஊன்றியபடி வரும் யாழினியைப் பார்த்ததும் ஒவ்வொரு குழந்தையும் மேலும் சோகத்தில் உறைகின்றன. ஆயா ஒரு சிறுமியை அழைத்து ஊன்றுகோலை வாங்கிக் கொள்ளச் சொல்கிறார். அந்தக் குழந்தை ஊன்றுகோலை வாங்கிக்கொண்டு தன் தோளில் யாழினியைத் தாங்கிக் கொள்கிறது. இன்னொரு பக்கத்திலும் ஒரு குழந்தை வந்து நிற்கிறது. மெதுவாக நடத்திக்கொண்டு கட்டிலில் கொண்டு சென்று அமர வைக்கிறார்கள்.
ஆயா குழந்தைகளைப் பார்த்து : நீங்க யாரும் இன்னும் தூங்கலியா..?
குழந்தைகள் பாவமாகத் தலையசைக்கின்றன.
சரி இங்க வாங்க. ஆயா கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து கொள்கிறார். எல்லாரும் அவரைச் சுற்றி அமர்ந்து கொள்கிறார்கள்.
ஆயா கதை சொல்லு ஆயா… கதை சொல்லு ஆயா… குழந்தைகள் நச்சரிக்கின்றன.
ஆயா : கதையைக் கேட்டதும் அப்படியே தூங்கிடணும் சரியா…
குழந்தைகள் சரி என்கின்றன.
ஆயா : ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்.
ஒரு குழந்தை : ஒரு ராஜா தான..?
ஆயா (குழந்தையை ஏக்கமாகப் பார்த்தபடியே) : ஆமாம் தில்ஷன். ஒரே ஒரு ராஜாதான்.
தில்ஷன் (பக்கத்தில் இருக்கும் இன்னொரு குழந்தையிடம்): ரெண்டு ராஜா இருந்தா நாடு தாங்காது.
ஆயா (அந்தக் குழந்தையை அணைத்தபடியே) : ஒரே ஒரு ராஜாதான். அவருக்குக் கண்ணு தெரியாது. அதனால அவரோட தம்பி கிட்ட ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்தாரு. அண்ணனுக்கு நூறு குழந்தைங்க. தம்பிக்கு ஐந்து குழந்தைங்க.
இன்னொரு குழந்தை (துள்ளிக் குதித்தபடி): இந்தக் கதை எனக்குத் தெரியும்… எனக்குத் தெரியும். 100 பேர் செத்துப் போயிடுவாங்க. அஞ்சு பேர் ஜெயிச்சிடுவாங்க.
ஆயா : ஆமா மதி. நான் உங்களுக்கு அந்தக் கதை ஏற்கெனவே சொல்லி இருக்கேன். இப்போ சொல்லப் போறது அதுலயே உள்ள, ஆனா உங்களுக்கு இதுவரை சொல்லாத கதை…
மதி (ஆச்சரியத்துடன்) : இதுவரை சொல்லாத கதையா..?
ஆயா : ஆமா… பத்ம வியூகத்துல மாட்டின அபிமன்யுவைப் பற்றி சொல்லப்போறேன்…
தில்ஷன் : பத்ம வியூகமா..? அபிமன்யுவா..?
ஆயா : ஆமா… உள்ள போற வழி மட்டும்தான் தெரியும். வெளிய வர்ற வழி தெரியாது…
மதி : ஐயய்யோ அப்படின்னா என்ன ஆகும்..?
ஆயா (பெருமூச்சுவிட்டபடியே) : சொல்றேன். எல்லாத்தையும் சொல்றேன். பாண்டுவுக்கு ஐந்து குழந்தைங்க இல்லையா… அதுல ஒருத்தர்தான அர்ஜுனன். அவரோடை பையன்தான் அபிமன்யு. அவரு வயித்துல குழந்தையா இருக்கும்போதே போர் புரியறது எப்படிங்கற வித்தையெல்லாத்தையும் படிச்சிட்டாரு.
தில்ஷன் : அம்மா வயத்துல இருக்கும்போதேயா..?
ஆயா : ஆமாம். அம்மா சுபத்திரை வயத்துல அபிமன்யு இருக்கும்போது அர்ஜுனன் யுத்தங்களைப் பற்றியும் யுத்தத்துல வகுக்கற வியூகங்களைப் பத்தியும் சுபத்திரை கிட்ட பேசிக்கிட்டிருந்திருக்காரு. வயத்துல இருந்த குழந்தை அபிமன்யு எல்லாத்தையும் ஒண்ணு விடாம கேட்டுட்டே வந்தது. பத்ம வியூகம் பத்தியும் விளக்கமா சொல்லிக்கிட்டிருந்தாரு.
மதி : பத்ம வியூகமா..?
ஆயா : ஆமாம். பத்ம வியூகம். அதை உலகத்துலயே ரெண்டே பேரால மட்டும்தான் தகர்க்க முடியும். ஒருத்தர் கிருஷ்ண பரமாத்மா. இன்னொருத்தர் அர்ஜுனன்.
மதி : அபிமன்யுதான் வயித்துல இருந்தே எல்லாத்தையும் கேட்டாரே. அவருக்கும் தெரியும் இல்லையா.
ஆயா : அவர் முழுசா கேக்கலை. அதனால, அபிமன்யுவுக்கு பத்ம வியூகத்துக்குள்ள நுழையமட்டும்தான் தெரியும் வெளிய வரத் தெரியாது. ஆனா, குருக்ஷேத்ரத்துல போர் நடக்கும்போது, உள்ள போய் மாட்டிக்கிடுவான். துரோணர், பீஷ்மர், துரியோதனன் அப்படின்னு எல்லா பெரிய ஆட்களும் சுத்தி நின்னு அவனைத் தாக்குவாங்க. கர்ணன் பின்னால இருந்து அம்பை விட்டு அபிமன்யுவோட வில்லை முறிச்சிடுவான்.
தில்ஷன் : பின்னால இருந்து தாக்குவாங்களா..?
ஆயா : பொதுவா, போர்ல நேருக்கு நேரா நின்னுதான் சண்டை போடுவாங்க. அதுமட்டும் இல்லாம, வில் அம்பு வைச்சிருக்கறவன் இன்னொரு வில் அம்பு வெச்சிருக்கறவன் கூடத்தான் மோதுவான். பக்கத்துலயே வாளோட ஒரு எதிரி நின்னுட்டிருந்தாலும் அவன் இவனைக் கொல்ல மாட்டான். குதிரைல இருக்கறவன் குதிரைல இருக்கறவன் கூடத்தான் சண்டை போடுவான். அந்தச் சண்டைல கூட ஒருத்தர் கையில இருக்கற ஆயுதம் கீழ விழுந்துட்டா அவனை யாரும் தாக்க மாட்டாங்க.
மதி : அய்… பொய் சொல்றீங்க. நாங்கள்ளாம் ஆயுதமே ஏந்தாதவங்கதான். வீட்லயும் பள்ளிக் கூடத்துலயும் மருத்துவமனையிலயும்தான் இருந்தோம். வெடி குண்டுங்க எங்களைத் தேடி வீசப்பட்டுச்சே.
ஆயா : ஆமாம். இந்தக் காலத்து யுத்தம் அப்படித்தான் நடக்குது. ஆனா, அந்தக் காலத்துல அப்படியில்ல. ஆயுதம் தூக்காதவங்க போர்க்களத்துக்கு வரவே மாட்டாங்க. வீடுகள்லயே இருந்துடுவாங்க. ஆயுதம் வெச்சிருக்கறவங்களும் வீடுகள்ல உள்ளவங்களை தேடிப் போயெல்லாம் தாக்க மாட்டாங்க. அந்தக் காலத்துல யுத்தத்துக்கும் ஒரு தர்மம் இருந்தது. பத்ம வியூகம் அப்படிங்கறது ரொம்பவும் மோசமான, வெல்லவே முடியாத எதிரியைக் கொல்றதுக்காக அமைக்கக்கூடியது.
தில்ஷன் : அர்ஜுனர், கிருஷ்ணர், பீமன் எல்லாரும் இருந்துமா அபிமன்யு மாட்டிக்கிட்டார்.
ஆயா : யாருமே எதிர்பாக்கலைம்மா… அர்ஜுனனும் கிருஷ்ணரும் வேற இடத்தில சண்டை போட்டுட்டு இருந்தாங்க. அபிமன்யு பச்சக் குழந்தை. பெரிய பெரிய எதிரியை வீழ்த்தத்தான் பத்ம வியூகம் வகுப்பாங்க. ஒரு பச்சக் குழந்தையைச் சுத்தி நின்னு அத்தனை பேரும் தாக்குவாங்கன்னு யாரும் எதிர்பார்க்கலை. மொதல்ல அந்த வியூகம் அர்ஜுனனைக் குறிவெச்சுத்தான் வகுக்கப்பட்டது. அபிமன்யுவுக்கு இள ரத்தம் அப்படிங்கறதால வியூகத்துக்குள்ள மாட்டிக்கிட்டாரு. உள்ள இருந்தபோதும் துணிச்சலா போராடினாரு. ஆனால், வெளில வரத் தெரியலை.
மதி : எதிரியோட பலம், வியூகம் தெரியாம சண்டை போடற எப்பவுமே முட்டாள்தனம்தான் இல்லையா..?
ஆயா : ஆனா, இந்த இடத்துல அபிமன்யு எதிரியோட பலம் தெரியாம மோதலை. ஒத்தைக்கு ஒத்தையா நின்னு போராட வேண்டிய இடத்துல ஒருத்தரை அதுவும் சின்னஞ்சிறு பாலகனை ஒரே நேரத்துல பலர் அநியாயமா சுத்தி வளைச்சுக் கொன்னுட்டாங்க. அபிமன்யுவை ஜெயிச்சது வீரத்தினால இல்லை, வஞ்சத்துனால.
மகாபாரதத்துல ஒரே ஒரு அபிமன்யு. ஈழத்துல எல்லாருமே அபிமன்யு. வெளியேறும் வழி தெரியாமல் பத்ம வியூகத்தில் மாட்டிக்கொண்ட தேசம் அது.
அப்போது வெளியில் ‘கிறீச் கிறீச்’ என்று ஏதோ சத்தம் கேட்கிறது. குழந்தைகள் ஒவ்வொருவராக என்ன சத்தம் என்று பார்க்க வெளியே செல்கிறார்கள். புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்தபடியே கடைசியாக ஆயாவும் வெளியில் வந்து பார்க்கிறார். காலியான நீண்ட வராண்டா வழியாக ஒரு தொட்டிலைத் தள்ளியபடி வார்டுபாய் வந்து கொண்டிருந்தார். ஆயாவும் குழந்தைகளும் எதிரில் சென்று பார்க்கிறார்கள். தொட்டில் முழுவதும் உலராத ரத்தத்துளிகளும் தசைத் துணுக்குகளுமாக இருக்கிறது. நடுவில் மிகப் பெரிதாக ஒரு பொத்தல் விழுந்து கிடக்கிறது.
ஆண்டவா… என்று ஆயா பெருமூச்சுவிடுகிறார்.
பின்னாலே வந்த வார்டு பாய் : முள் வேலி முகாம்ல இருந்த தற்காலிகக் கூடாரத்துல இந்தத் தொட்டில்ல ஒரு குட்டியூண்டு பாப்பாவை படுக்க வெச்சிருந்தாங்க. கூடாரத்துக்குள்ள ஒரே இருட்டா இருந்ததால பாப்பா அழுதுட்டே இருந்துச்சு. அம்மா, தொட்டிலை அப்படியே தள்ளிக்கிட்டு வெளிய வந்து நிலாவைக் காட்டினாங்க. நிலாவைப் பாத்த பிறகும் பாப்பா அழுகையை நிறுத்தலை. பக்கத்து கூடாரத்துல இருந்தவங்க பாப்பாவுக்கு என்னென்னமோ விளையாட்டு காட்டினாங்க. செல்லமா அதட்டியும் பாத்தாங்க. பாப்பாவுக்கு வேறெதுவோ தேவையா இருந்திருக்கு. அழுகை நிக்கவேயில்லை. மயானக் காடு மாதிரி இருந்த பாதுகாப்பு வளையத்தின் இரவு நேர நிசப்தத்தை குழந்தையின் அழுகைக் குரல் ரொம்பவே இம்சைப்படுத்திச்சு. திடீர்னு ஒரு விமானம் வானத்துல உதிச்சது. அதோட கருப்புப் புகை, நிலாவை கொஞ்சம் கொஞ்சமா மறைச்சிச்சு. விமானத்தில் இருந்து ஒரு ஷெல், இரையைக் கொத்த தண்ணில பாயற மீன் கொத்திப் பறவை மாதிரி சர்ருன்னு பாப்பாவின் தொட்டிலில் வந்து விழுந்தது. பாப்பாவோட அழுகை நின்னுடுச்சு. பாதுகாப்பு வளையத்தில அமைதி திரும்பிடுச்சு.
***
விடுதி வராண்டாவில் குழந்தைகள் சோகமாக உட்கார்ந்திருக்கின்றன. அவர்களின் கைகளில் இருக்கும் பொம்மைகளும் அழுது கொண்டிருக்கின்றன. சிலவற்றுக்குக் கைகள் இல்லை. சில பொம்மைகள் ஊன்றுகோலுடன் இருக்கின்றன. சில பொம்மைகள் கண் தெரியாதவையாக இருக்கின்றன. கண் தெரியாத பொம்மைக்கு கீ கொடுத்ததும், அம்மாவும் நீயே அப்பாவும் நீயே… அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே என்று முன்னால் விரிந்து கிடக்கும் வெட்ட வெளியைப் பார்த்து கைகளை நீட்டியபடி எதையோ யாசித்தபடி நடந்து செல்கிறது. குழந்தைகள் இறுக்கத்துடன் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்கள்.
தில்ஷன் : இந்தப் பிரச்னைக்கு நாம ஒரு தீர்வு கண்டுபிடிச்சாகணும்.
மதி : நம்மளால என்ன செய்ய முடியும்..?
யாழினி : நமக்கு நீதி கிடைச்சாகணும்.
இர்ஃபான் : தெய்வம் கிட்டப் போய் முறையிடுவோமா..?
யாழினி : அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்.
மதி : நாம எல்லாரும் போவோமா..?
யாழினி : வேண்டாம். எல்லாரும் போனா நல்லா இருக்காது. மொதல்ல நாம நாலு பேர் மட்டும் போய் பேசிப் பார்ப்போம். அதுக்கப்பறம் தேவைப்பட்டா எல்லாரும் போவோம்.
குழந்தைகள் வட்டமாகக் கூடி நின்று சாட் பூட் திரீ போட்டு யார் யாரெல்லாம் போவது என்று முடிவு செய்கிறார்கள்.
***
குழந்தைகள் தொட்டிலைத் தள்ளியபடியே தெய்வத்தின் அரண்மனையை நோக்கிச் செல்கின்றன. ராட்சஸ எருமை ஒன்று உட்கார்ந்திருப்பதுபோல் தூரத்தில் ஒரு அரண்மனை தென்படுகிறது. நீதி கேட்டுக் குழந்தைகள் அதை நெருங்க நெருங்க அது பின்னோக்கி நகர்ந்து செல்வதுபோல் தெரிகிறது. சாலை மருங்கில் இருக்கும் பட்டுப்போன மரங்களின் கிளைகளில் இருந்து பனித்துளிகள், கண்ணீர்போல் வழிகின்றன. ஒருவழியாகக் குழந்தைகள் அரண்மனையை நெருங்குகின்றன. அதன் உயரமான படிக்கட்டுகளில் தள்ளிச் செல்ல முடியாமல் போகவே குழந்தைகள் தொட்டிலை பாடை போல் தூக்கிச் செல்கின்றன. தொட்டிலே பாடையாகிப் போனதைப் பார்த்து அரண்மனையின் மாடங்களில் அமர்ந்திருக்கும் கழுகுகள் அலறி அடித்தபடி பறக்கின்றன.
குழந்தைகள் பிரமாண்ட அரண்மனைக்குள் நுழைகின்றன. அவர்கள் வருவது தெரிந்ததும் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த மரண தேவன் மாயமாக மறைகிறார். அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களில் பலர் மாயமாக மறைகின்றனர். சிலர் சிலையாக உறைந்துபோகின்றனர். தொட்டில் தானாக பிரமாண்ட மாளிகையில் ஒவ்வொரு அறையாக ஒரு பதிலைத் தேடி அலைகிறது. சக்கரங்கள் உருளும் சத்தம் மட்டும் பூதாகாரமாக அரண்மனையின் சுவர்களில் பட்டு எதிரொலிக்கிறது.
***
மாயமாக மறைந்த மரணதேவன் நேராக ஒளிப்பிழம்பான பரம்பொருளின் முன்னால் போய் நிற்கிறார்.
மரணதேவன் : இறந்துபோன குழந்தைகள் நீதி கேட்டு வந்திருக்கிறார்கள்.
பரம்பொருள் : இறந்தவர்களுக்கு என்ன நீதி வேண்டிக்கிடக்கிறது?
மரண தேவன் : மன்னிக்கவும். தவறாகச் சொல்லிவிட்டேன். அவர்கள் இறந்தவர்கள் அல்ல. கொல்லப்பட்டவர்கள்.
ஒளிப்பிழம்பு சிறிது மங்குகிறது.
பரம்பொருள் : சரி… அதையும் ஏன் என்னிடம் சொல்ல வந்திருக்கிறாய். அவர்களுக்கான பதில் உன்னிடம் இல்லையா என்ன..?
மரணதேவன் : இல்லை பிரபுவே…
ஒளிப்பிழம்பு மேலும் மங்குகிறது.
பரம்பொருள் : என்ன சொல்கிறாய். உன்னிடம் பதில் இல்லையா..? நீ ஒருபோதும் இப்படிக் கலங்கி நான் பார்த்ததில்லையே.
மரணதேவன் : ஒரு குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அந்தத் தொட்டிலிலேயே அது கொல்லவும்பட்டுவிட்டது. அதற்கு அவர்கள் பதில் கேட்கிறார்கள்.
பரம்பொருள் : என்ன புதிதாகக் கேள்விகள் கேட்கிறாய்..? இந்த மனிதர்கள் துள்ளத் துடிக்கக் கொன்று குவிக்கும் வெள்ளாட்டுக்குட்டிகளை, தோல் உரித்துத் தொங்கவிடும் இளங்கன்றுகளை, எண்ணெயில் பொரித்துத் தின்னும் பறவைக் குஞ்சுகளை நீ பார்த்தது இல்லையா..? கைக்கு எட்டாத தூரத்தில் கடலில் வசித்த நிலையிலும் கப்பல்களில் சென்று வலைவீசிப் பிடித்து கொடூரமாகக் கொல்லப்படும் மீன்கள் இனம் பற்றி உனக்குத் தெரியாதா..? கண்ணுக்கெட்டும் தூரம் முழுவதும் நீரால் சூழப்பட்டிருந்தும் படகில் ஒரு துளி நீருக்காக துடி துடித்து இறக்கும் மீன்களின் கதறல் உன் காதில் விழுந்ததே இல்லையா? மனித குலம், கேவலம் தன் உணவுக்காக, அதுவும் ருசிக்காகக் கொல்லும் உயிர்களின் எண்ணிக்கை உனக்குத் தெரியாதா?
மரணதேவன் : ஒரு மீனின் உயிரும் குழந்தையின் உயிரும் சமமானவையா என்ன..?
பரம்பொருள் : நீ மரணத்தின் தெய்வம்தானே… என்றிலிருந்து மனிதர்களின் தெய்வமானாய்..?
மரணதேவன் : இந்தக் குழந்தைகள் எந்த மீனையும் கொல்லவில்லை. மானையும் உண்ணவில்லை.
பரம்பொருள் : அதற்கென்ன செய்ய… மனித இனம் செய்யும் தவறுக்கு மனித இனம்தான் தண்டனை அனுபவித்தாக வேண்டும்.
மரணதேவன் : ஒட்டுமொத்த இனம் என்று பார்ப்பது அவ்வளவு சரியில்லையே. தவறு செய்தவருக்கு தண்டனை என்பதுதானே தர்மம்.
பரம்பொருள் : தர்மம் பற்றி நீ எனக்கு போதிக்க வந்திருக்கிறாயா..? ஒரு தவறும் செய்யாத உயிரினங்களைக் கொல்லும் மனித இனத்துக்கான தண்டனையை ஒரு தவறும் செய்யாத மனிதர்களுக்குத்தானே தரமுடியும். அப்போதுதானே அந்த வலி அவர்களுக்குப் புரியவரும். அதோடு, எந்த மூளை, மனிதனுக்கு இந்த பூமியில் சர்வாதிகாரத்தைத் தந்திருக்கிறதோ அதே மூளை ஏற்படுத்தும் பேதங்களால்தான் அது கட்டுக்குள் கொண்டுவரப்படவும் வேண்டும். பகலுக்கு எதுவோ அதுவே இரவுக்கும் காரணம். வரமே சாபம். போ… போய் ஆறுதல் சொல்லி அனுப்பு.
மரணதேவன் நிலைகுத்திய விழிகளை இமைக்காமல் தயங்கியபடியே நிற்கிறார்.
மரணதேவன் : இன்னும் என்ன தயங்குகிறாய். மானோ மீனோ வந்து நியாயம் கேட்டால்தான் நீ கலங்குவதில் கொஞ்சமாவது நியாயம் இருக்கும். வந்திருப்பது மனிதக் குழந்தைகள்தானே. பயப்படாதே. ஊன் உண்ணிகளுக்கு தாவர உண்ணிகள் உணவாவதுபோல் அடிப்படைவாதிகளுக்கு அப்பாவிகள் பலியாகிறார்கள். அப்பாவிகளின் எண்ணிக்கை அளவுக்கு மீறிப் பெருகினால் இயற்கைவளங்களைப் பங்கிடுவதில் போட்டி ஏற்பட்டு அது பேதங்களைப் பெரிதுபடுத்தும். அதில் ஏற்படும் சண்டையால் அப்பாவிகள் கொல்லப்பட்டு மனித இனத்துக்குள் ஒரு சமநிலை உருவாகும். மானைக் கொன்றும் பிறப்பித்தும் அல்லவோ புல்லையும் புலியையும் நிலைப்படுத்துகிறோம் இப் பிரபஞ்சத்தில்.
மரண தேவன் : தப்பு செய்தவருக்கு தண்டனை என்றால் அதை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும்.
பரம்பொருள் : என்ன நீ… புரியாமல் பேசிக்கொண்டே இருக்கிறாய். நல்லது செய்பவர்களுக்கு நன்மை… கெட்டது செய்பவர்களுக்கு தண்டனை என்பதா நம் தர்மம். அது மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை, வாழத் தகுந்ததாக ஆக்கிக் கொள்ள, தாங்களாக உருவாக்கிய ஒரு கற்பனை. அது எப்படி நம்மைக் கட்டிப் போடமுடியும். அதுவும்போக நான் ஒரு அப்பாவி என்பது எப்படி நீதி கேட்கும் உரிமையாக முடியும்? உன்னை யார் அப்பாவியாக இருக்கச் சொன்னது. எல்லாருக்கும் ஒரே மாதிரியான கைகால்கள், கண் மூக்குகள் கொடுத்துத்தானே அனுப்பி இருக்கிறோம். உன்னைக் காப்பாற்றிக் கொள்ள உன்னாலே ஒரு வழி கண்டுபிடித்துக்கொள்ள முடியவில்லையென்றால் யார்தான் என்னதான் செய்ய முடியும்?
சூழலுக்கு ஏற்ப எது தன்னை தகவமைத்துக் கொள்ளுமோ அதுவே வாழும். வெல்லும். தாக்குப் பிடிக்க முடிந்தவற்றுக்குத் தான் இந்தத் தரணி. நம் தர்மம் அதுவே. இதில் உணர்ச்சிகளுக்கு ஏது இடம். அதனால்தான் அந்தகனாக்கி உன்னை அரியணையில் அமர்த்தினேன். நீயோ அதன் பின்னும் கலங்குகிறாய். இன்று உனக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. சரி… வந்திருப்பது மனிதக் குழந்தைகள் என்று வேறு சொல்கிறாய். போ… போய் மனித தெய்வங்களில் யாரையாவது அனுப்பி பேசச் சொல்லு.
மரணதேவன் சோர்வுடன் தலையைக் குனிந்தபடி திரும்பிச் செல்கிறார்.
***
மனிதர்களுக்கான தெய்வம், குழந்தைகளைச் சந்திக்கக் கிளம்புகிறது.
நெற்றி நிறைய திருநீறை எடுத்துப் பூசிக் கொள்கிறது. கைகளில் ஸ்ரீ சூர்ணம் இட்டுக் கொள்கிறது. தலையில் தொப்பி ஒன்றை அணிந்து கொள்கிறது. சிலுவைக் குறியிட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொள்கிறது. புத்தனின் பாதக் குறடுகளை அணிந்து கொள்கிறது. சுடலைமாடனின் வீச்சரிவாளை கையில் எடுத்துக்கொண்டு புறப்படுகிறது. எதையாவது விட்டு விட்டோமா என்று யோசிக்கிறது. மேலிருந்தபடியே குழந்தை களை உற்றுப் பார்க்கிறது. வேண்டியதையெல்லாம் எடுத்துக் கொண்ட திருப்தியுடன் புறப்படுகிறது.
எதிரில் வரும் இன்னொரு தெய்வம் : என்ன கந்தரகோலம் இது?
மனித தெய்வம் : மனிதர்கள் என்னை இப்படித்தான் ஆக்கிவைத்திருக்கிறார்கள். வந்திருப்பது எந்த மதத்தின் குழந்தைகள் என்பது தெரியவில்லை. எனவேதான் இந்த முன்னேற்பாடு.
இன்னொரு தெய்வம் : குழந்தைகள் இந்தக் கோலத்தில் உன்னைப் பார்த்தால் பயந்துவிடமாட்டார்களா…
மனித தெய்வம் : மாட்டார்கள். அவர்கள் எந்த மதத்தின் கண் கொண்டு பார்க்கிறார்களோ அந்த அடையாளத்துடன் மட்டுமே நான் அவர்கள் கண்களுக்குத் தெரிவேன்.
இன்னொரு தெய்வம் : அது சரி… நாத்திகர்களுக்கான இட ஒதுக்கீடு எங்கே…
மனித தெய்வம் : இறைக் குறியீடுகள் இல்லாத இடமெல்லாம் அவர்களுக்கானதுதானே…
சிரித்தபடியே இன்னொரு தெய்வம் கடந்து செல்கிறார்.
குழந்தைகள் இருக்கும் இடம்வரை மெதுவாக நடந்துவரும் மனிதக் கடவுள், குழந்தைகளைப் பார்த்ததும் பதறியதுபோல் நடித்து வேகமாக அவர்களை நெருங்குகிறது.
மனித தெய்வம் : என்ன நடந்தது குழந்தைகளே…
குழந்தை : போரில் என் கால் பறிபோய்விட்டது.
தெய்வம் வேதனையோடு முழங்காலிட்டு அமர்ந்து குழந்தையின் காலைத் தடவிக் கொடுக்கிறது.
இன்னொரு குழந்தை : நான் கொல்லப்பட்டுவிட்டேன்.
தெய்வம் அந்தக் குழந்தையின் தலையை வருடிக் கொடுக்கிறது.
சிறுவன் : நானும் கொல்லப்பட்டுவிட்டேன்.
தெய்வம் கண்களை மூடிக்கொண்டு வருந்துகிறது.
நால்வரும் ரத்தம் தோய்ந்த தொட்டிலைச் சுட்டிக் காட்டி ஏதோ சொல்ல வருகின்றனர். தெய்வம் அவர்களைத் தடுத்து நிறுத்துகிறது. சிறிது நேரம் தொட்டிலையே உற்றுப் பார்த்துவிட்டு பெருமூச்சுவிடுகிறது.
தெய்வம் : நீங்கள் சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறீர்கள். கவலையைவிடுங்கள். உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்டுவேன். (முழங்காலிட்டு அமர்ந்திருந்த தெய்வம் எழுந்து நிற்கிறது).
குழந்தை : அது தேவையில்லை. இனிமேல் இதுபோல் நடக்காமல் இருந்தால் அதுவே போதும்.
தெய்வம் : இல்லையில்லை. தவறு செய்தவர்களுக்கு கடும் தண்டனை கொடுத்தால்தான் இதுபோல் இனிமேல் தவறுகள் நடக்காமல் தடுக்க முடியும். சரி… உங்களை பூமிக்கு அனுப்புகிறேன். உங்களுடைய நிலைக்கு யார் காரணம் என்பதை நீங்கள் கண்டுபிடியுங்கள். உங்களுக்கு நான் ஒரு வரமும் தருகிறேன். செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ளும் யாரையாவது நீங்கள் பார்த்துவிட்டீர்கள் என்றால் அந்த நிமிடமே நீங்கள் இழந்தவையெல்லாம் உங்களுக்குக் கிடைத்துவிடும்.
குழந்தைகள் : நிஜமாகவா..?
தெய்வம் : தெய்வங்கள் பொய் சொல்லாது குழந்தைகளே.
குழந்தை : படுகொலைகள் மட்டும்தான் செய்யும் இல்லையா..?
தெய்வம் (லேசாக அதிர்ந்து, பின் சுதாரித்துக் கொள்கிறது) : சரி சரி நேரமாகிறது புறப்படுங்கள்.
குழந்தைகள் : நீங்கள் எங்களுடன் வரவில்லையா…
தெய்வம் : இல்லை நான் உங்களுடனே இருப்பேன். கவலைப்படாதீர்கள்.
குழந்தைகள் : சரி…
குழந்தைகள் நம்பிக்கையுடன் புறப்படுகின்றன.
அரூபமாக நின்று கொண்டிருந்த மரண தேவன், மனித தெய்வத்தின் முன்னால் தோன்றி : என்னது. நீங்கள் பாட்டுக்கு இழந்ததையெல்லாம் தருவதாக வரம் கொடுத்துவிட்டிருக்கிறீர்கள்.
தெய்வம் : நான் அதை மட்டுமா சொன்னேன். ஒரு நிபந்தனையையும் சேர்த்துத்தானே சொல்லி இருக்கிறேன்.
மரணதேவன் : அது என்ன பெரிய நிபந்தனை. செய்த தவறை ஒத்துக்கொள்ளும் ஒருவர் கூடவா பூமியில் இல்லாமல் போய்விடப்போகிறார்கள்?
மரணதேவனின் தோளில் கை போட்டபடியே மனித தெய்வம் அர்த்தபுஷ்டியுடன் சிரிக்கிறது. இருவரும் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்புகிறார்கள்.
(தொடரும்)