திப்பு சுல்தானின் மதவெறிச் செயல்பாடுகள்

மிழ்ஹிந்து தளத்தில் முன்பு வந்திருந்த திப்பு சுல்தான்: மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும் கட்டுரையைப் பார்த்தேன். அதன் தொடர்ச்சியாக திப்புசுல்தானின் மதவெறிச் செயல்கள் குறித்து பி.சி.என்.ராஜா என்பவர் எழுதியிருக்கும் கட்டுரையில் இருக்கும் செய்திகளையும் இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

“திப்பு சுல்தான் அவரது ராஜ்யத்தை 1782 டிசம்பர் 7 முதல் 1799 மே 4 வரை பதினாறரை ஆண்டுகள் ஆண்டார். அவரது ராஜ்யத்துக்குட்பட்டிருந்த மலபார் பகுதிகள் எட்டு ஆண்டுகள் மட்டுமே அவருடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அப்போதைய சாமர்த்தியமுள்ள அமைச்சராக இருந்த பூர்ணையா என்பவரின் உதவியும் ஒத்துழைப்பும் இல்லாமல் இருந்திருந்தால் கேரளாவிலும் கர்நாடகாவிலும் இப்போது இருப்பது போல முகமதியர்கள் இந்த அளவுக்கு இருந்திருக்க மாட்டார்கள். இந்துக்களும் தொகையில் குறைந்தும் வறுமையில் உழன்றும் இருந்திருக்க மாட்டார்கள்.

பூர்ணையா எனும் பிரதம அமைச்சரது மதியூகத்தால் 90,000 சிப்பாய்களையும், மூன்று கோடி ரூபாய் பணமும், விலை மதிப்பு சொல்லமுடியாத அளவு நகைகள், தங்கம், நவரத்தினங்கள் இவைகளைப் பெற்றுக் கொண்ட திப்புவுக்கு தான் தென்னிந்தியாவின் ஏகசக்ராதிபதியாக ஆகிவிடவேண்டுமென்கிற சபலம் உண்டாகியது. தன்னுடைய இந்த குறிக்கோளை அடைவதில் அப்போது தென்னிந்தியாவில் இருந்த ராஜாக்கள் குறிப்பாக மராத்தி, கூர்க், திருவாங்கூர் ஆகியவர்களோ அல்லது முஸ்லிம் மன்னரான நிஜாமோ தடையாக இருக்க மாட்டார்கள் என்பதை திப்பு உணர்ந்திருந்தார். தனக்கு இடையூறாக இருக்கக் கூடியவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் மட்டுமே என்ற பயம் அவருக்கு இருந்தது. அவர்களை மட்டும் இந்த மண்ணிலிருந்து விரட்டிவிட்டால் தான் தென்னிந்தியாவின் ஏகசக்ராதிபதியாகிவிட முடியும் என்று கணக்கு போட்டார். தன்னுடைய சுயநலம் காரணமாக பிரிட்டிஷ்காரர்களை திப்பு எதிர்த்த நிகழ்ச்சியை மதசார்பற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வரலாற்று ஆசிரியர்களும், முற்போக்கு எழுத்தாளர்களும் திப்புவை ஒரு சுதேச தேசபக்த வீரனாகப் படம் வரையத் தலைப்பட்டனர்.

tipu-no-heroஅன்னிய நாட்டினரை எதிர்ப்பது என்பது தேசபக்தியினால் மட்டும் ஏற்படுவதல்ல. தன்னுடைய சுயநல நோக்கங்களுக்காக தன்னை அசைக்கமுடியாத அரச பதவியில் அமர்த்திக் கொள்வதற்காக, தனக்கு இடையூறாக இருந்த பிரிட்டிஷாரைத் துரத்திவிட இந்த புண்ணிய பூமியை ஆக்கிரமித்திருந்த மற்றொரு வெளிநாட்டாரான பிரெஞ்சுக்காரர்களைத் தன்னக்கட்டிக் கொள்ள நேர்ந்தது திப்புவுக்கு. பிரெஞ்சுக்காரர்களும் பிரிட்டிஷாரை எதிர்த்துத் தங்கள் ஆதிக்கத்தை இங்கே பெருக்கிக் கொள்ள போராடிக் கொண்டிருந்த நேரம் அது. நிலைமை இப்படியிருக்கும்போது திப்புவை வெளிநாட்டாரை எதிர்த்துப் போராடிய தேசபக்தன் என்று எப்படி கூறமுடியும்? நெப்போலியனிடமிருந்தும், பிரான்ஸ் மன்னர் பதினாறாம் லூயியிடமும் ஆதரவு கேட்டு கையேந்தியவன் எப்படி அந்நியனை எதிர்த்த தேசபக்தனாகக் கொள்ள முடியும்?

அதுமட்டுமல்ல, இந்த நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவிட கங்கணம் கட்டிக் கொண்டிருந்தவன் திப்பு. அப்படி அவன் விரும்பிய இஸ்லாமிய ஆட்சியை இங்கு நிறுவ வேண்டுமானால் முதலில் பிரிட்டிஷாரைத் தோற்கடிக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காகவே திப்பு சுல்தான் பெர்ஷியா, ஆப்கானிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளின் துணையை நாடினான். திப்புவிடம் சரணடைந்து அவனுக்கு நன்றி விஸ்வாசமுடையவராக இருப்பதென்று உறுதி கூறிய கொச்சி ராஜ்யத்தின் இந்து மன்னனையோ அல்லது வேறு எந்த இந்திய மன்னனுக்கோ திப்பு தொந்தரவு கொடுக்கவில்லை என்பதென்னவோ உண்மைதான். இந்தவொரு காரணத்தினால் மட்டும் திப்பு இந்துக்களின் நண்பன் என்று கூறிவிட முடியுமா?

தென்னிந்தியாவில் நிஜாமும் திப்புவும் மட்டும்தான் முஸ்லிம் ராஜாக்கள் என்பதால் தக்ஷிணப் பிரதேசத்தில் இருந்த மற்றொரு முஸ்லிம் ராஜாவான நிஜாமிடம் திப்பு விரோதம் பாராட்டவில்லை. மேலும் தங்களிருவரின் உறவை மேம்படுத்திக் கொள்வதற்காக திப்பு நிஜாமிடம் அவருடைய மகளைத் தன் மகனுக்கு நிக்காஹ் செய்து வைக்கவேண்டுமென்று வற்புறுத்தினான். ஆனால் நிஜாமோ இந்த திப்பு பரம்பரை மன்னனுமல்ல, அரச பாரம்பரியமுமல்ல என்பதால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார். நிஜாம் பெண் தராவிட்டால் என்ன, நமக்கு வேறு ஆளா இல்லை என்று திப்பு கண்ணனூர் அரக்கல் பீவியின் மகளைத் தன் மகனுக்கு நிக்காஹ் செய்து மலபார் முஸ்லீம்களின் ஆதரவைப் பெற்றார். இந்த முடிவினால் மலபார் முஸ்லிம்கள் திப்புவின் ஆதரவாளர்களாக எப்படி மாறினார்கள் என்பதை வரலாறு சொல்லும். இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். கண்ணனூர் அரக்கல் பீபி மதம்மாறியவர் என்றாலும் அன்றைய வழக்கப்படி தாய்வழி உரிமை வழக்கத்தைக் கடைபிடிப்பவர், ஆனால் திப்புவோ இந்த முறையை மாற்ற நினைப்பவர்.

திப்புவின் குறிக்கோள் எல்லாம் பிரிட்டிஷாரை விரட்டிவிட்டுத் தான் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ள வேண்டுமென்பது தான். இதற்காக திப்பு பல ஜோதிடர்களைக் கலந்து ஆலோசித்தான். அவன் ஆட்சிபுரிந்த ஸ்ரீரங்கப் பட்டினத்தில் ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி கோயிலில் பல ஜோதிடர்கள் இருந்தனர். அந்த ஜோதிடர்கள் திப்புவுக்கு சில ஆலோசனைகளைச் சொன்னார்கள். அவன் சில பரிகார சடங்குகளைச் செய்தால் அவன் மனோரதம் நிறைவேறும் என்று சொல்லியிருந்தார்கள். ஜோதிடக்காரர்கள் சொன்னதையெல்லாம் அப்படியே நம்பிய திப்பு பிரிட்டிஷ்காரர்களை வெளியேற்றிவிட்டு தான் ஏகபோக மன்னனாக ஆகிவிடவேண்டுமெனும் ஆவலில் ஜோதிடர்கள் சொன்ன பரிகாரங்களையெல்லாம் ஸ்ரீரங்கப்பட்டினம் ரங்கநாதசுவாமி ஆலயத்தில் செய்தான். ஜோதிடர்களுக்கும் விலை உயர்ந்த பரிசுகளை அள்ளி அள்ளி வழங்கினான். இப்படி இவன் ஸ்ரீரங்கநாதருக்குச் செய்த உபயங்கள் எல்லாம் இந்து மதத்தின் மீதான மரியாதை காரணமாகச் செய்ததாக மதச்சார்பின்மையாளர்கள் எழுதுகிறார்கள். இப்படிப்பட்ட பரந்த மனப்பான்மை உள்ள நம் வரலாற்று ஆசிரியர்கள் கேட்கிறார்கள் அவன் மலபார் பகுதியில் எங்காவது ஏதேனுமொரு இந்து கோயிலையாவது இடித்தோ அல்லது சேதப்படுத்தியோ இருக்கிறானா என்று.

tipu sultan_elephantமைசூர் வரலாற்றை எழுதிய ஆங்கிலேய வரலாற்றாசிரியர் லூயிஸ் ரைஸ் என்பவர் மைசூர் சமஸ்தான ஆவணங்களையெல்லாம் தோண்டித் துருவிப் பார்த்துவிட்டுச் சொல்கிறார், “பரந்து விரிந்து கிடந்த திப்புவின் ராஜ்யத்தில், அவனுடைய சாவுக்கு முன்னால் ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டைக்குள் இருந்த இரண்டே இரண்டு இந்து கோயில்களில்தான் தினசரி பூஜா கிரமங்கள் நடைபெற்று வந்தன” என்கிறார். அதுவும் இந்தக் கோயில்களில் பூஜைகள் நடைபெற திப்பு அனுமதித்தது ஜோதிடர்கள் சொன்ன பரிகாரங்கள் காரணமாகத்தான் என்பதையும் அவர் விளக்குகிறார். திப்புவின் ராஜ்யத்தில் இருந்த அத்தனை இந்து கோயில்களின் செல்வங்களெல்லாம் 1790ஆம் ஆண்டுக்கு முன்பே திப்புவால் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது. ராஜ்யம் முழுவதும் போதை பானங்கள் (கள் முதலானவை) அருந்துவதைத் தடுத்துவிட்டதால் ஏற்பட்ட வருமான இழப்பை ஈடுசெய்யவே இந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டனவாம்.

திப்பு சுல்தானின் ஆட்சி நியாயமாகவும், மக்கள் நல்வாழ்வுக்காகவும் தீவிரமாகப் பாடுபட்டதாகச் சிலர் கூறுகிறார்கள். இந்தக் கூற்றை மறுக்கும்படியான ஒரு அறிவிப்பினை மைசூர் ராஜ்யத்துக்காரரான எம்.ஏ.கோபால் ராவ் என்பவர் வெளியிடுகிறார். பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய கட்டுரையொன்றில் அவர் கூறுவதாவது:

“திப்பு சுல்தானின் பிறமத வெறுப்பு என்பது அவனது வரி விதிப்புக் கொள்கைகளிலேயே மிகத் தெளிவாகத் தெரிகிறது. அவன் சார்ந்த முஸ்லிம்களுக்கு வீட்டு வரியோ, வாங்கும் பொருள்கள் மீதான வரியோ, வீட்டு உபயோகத்துக்கான பொருட்கள் மீதான வரியோ அறவே கிடையாது. அதுமட்டுமல்ல மற்ற மதங்களிலிருந்து இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்து கொண்டவர்களுக்கும் இந்தச் சலுகை கொடுக்கப்பட்டது. முஸ்லீம் குழந்தைகளின் படிப்புச் செலவையும் அரசே ஏற்றுக் கொண்டது. அவனது தந்தை ஹைதர் அலி இந்துக்களைத் தனது பட்டாளத்தில் பல பதவிகளில் அமர்த்தியதை திப்பு நிறுத்திவிட்டார். முஸ்லிம் அல்லாதவர்கள் மீது வெறுப்பு கொண்டிருந்தார் திப்பு. அவர் ஆண்ட பதினாறு ஆண்டுகளில் திவான் பூர்ணையா மட்டும்தான் உயர்ந்த பதவி வகித்த ஒரே இந்து. திப்பு இறப்பதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பு வரை அதாவது 1797 வரை அரசாங்கத்தின் 65 மிக உயர் பதவிகளில் மருந்துக்குக்கூட ஒரு இந்துவுக்குப் பதவி கிடையாது. 1792இல் யுத்தத்தின் போது பிரிட்டிஷார் சிறைபிடித்த ராணுவ, சிவில் அதிகாரிகள் 26 பேரில் வெறும் 6 பேர் மட்டுமே முஸ்லீம் அல்லாதவர்கள். 1789இல் ஐதராபாத் நிஜாமும் மற்ற இஸ்லாமிய அரசர்களும் அரசாங்கப் பதவிகளில் முஸ்லீம்களை மட்டுமே நியமிக்க வேண்டுமென்று முடிவு செய்ததன் அடிப்படையில் திப்பு சுல்தானும் தான் ஆண்ட மைசூர் சமஸ்தானத்தில் அதே நடைமுறையைக் கையாண்டார். ஒரு பதவிக்கு ஆட்களை நியமிக்கும்போது அவர் படிப்பறிவு இல்லாமல் இருந்தாலும், திறமை இல்லாமல் போனாலும் அவர் முஸ்லிமாக இருந்தால் போதும், அவர் முக்கியமான அரசாங்கப் பதவியில் நியமிக்கப்பட்டார். பணியில் இருக்கும்போது கிடைக்கக்கூடிய பதவி உயர்வில்கூட முஸ்லீம்களுக்கு மட்டும்தான் அது கொடுக்கப்பட்டது. முன்பு கன்னட மொழியிலும் மராத்தி மொழியிலும் கூட அரசாங்க கணக்கு வழக்குகள் எழுதப்பட்டு வந்த நிலையில், முஸ்லீம்களின் வசதிக்காக இவைகள் எல்லாம் பாரசீக மொழியில் மட்டுமே எழுதப்பட்டன. திப்புவின் ராஜ்யத்தில் அரசாங்க மொழியாக கன்னடத்துக்குப் பதிலாக பாரசீக மொழியை ஆட்சி மொழியாக ஆக்க முயற்சிகள் நடந்தன.

இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக சோம்பேறித் தனமும் பொறுப்பற்ற தனமும் உடைய பல முஸ்லீம்கள் பதவிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். இப்படிப்பட்ட அதிகாரிகளும் பணியாளர்களும் பொழுது போக்காக பதவிகளை அலங்கரித்தார்களே தவிர மக்கள் பணிகளில் கவனம் செலுத்தவேயில்லை. அவர்கள் அனைவருமே பொறுப்பற்றவர்களாகவும், திறமையற்றவர்களாகவுமே எல்லா முக்கிய பதவிகளிலும் ஒட்டிக் கொண்டிருந்தனர். மக்கள் தகுந்த ஆதாரத்துடன் அதிகாரிகளின் அலட்சியத்தையும், பொறுப்பற்ற தன்மைகளையும் எடுத்துச் சொன்னபோதும் திப்பு அவற்றை எதையும் காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை.”

இந்தக் கருத்துக்களையெல்லாம் சொன்ன கோபால் ராவ் என்பவர் இவற்றைத் தன் கருத்தாக மட்டும் சொல்லவில்லை, இவற்றுக்கெல்லாம் ஆதாரமாக திப்புவினுடைய சொந்த மகனான குலாம் முகம்மது, இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர் கிர்மானி ஆகியோரை மேற்கோள்காட்டி எழுதுகிறார். பல இடங்களுக்கு இடப்பட்டிருந்த இந்துப் பெயர்கள்கூட திப்புவுக்கு உறுத்தலாக இருந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக மங்களபுரி எனும் மங்களூரின் பெயர் ஜலாலாபாத் என்றும், கண்வாபுரம் எனும் கண்ணனூரின் பெயர் குஸானாபாத் என்றும், வைபுரா எனும் பேபூர் சுல்தான்பட்டினம் அல்லது ஃபரூக்கி என்றும், மைசூரை நஸராபாத் என்றும், தார்வார் குர்ஷீத் ஸாவத் என்றும், கூட்டி ஃபைஸ் ஹிசார் என்றும் ரத்தினகிரி முஸ்தஃபாபாத் என்றும், திண்டுக்கல் காலிக்காபாத் என்றும், கள்ளிக்கோட்டை (கோழிக்கோடு) இஸ்லாமாபாத் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கூர்க் பிரதேசத்தில் திப்பு செய்த அராஜகம் போல வரலாற்றில் வேறு எங்கும் நடந்தது கிடையாது. ஒரு சமயம் கட்டாயப்படுத்தி பத்தாயிரம் இந்துக்களை முசல்மான்களாக மதமாற்றம் செய்தார். மற்றொரு முறை ஆயிரம் கூர்க் மக்களைப் பிடித்து மதமாற்றம் செய்து ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டையில் சிறைவைத்தார். இப்படி கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்ட கூர்க் மக்கள் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது சிறையிலிருந்து தப்பித்து மீண்டும் தங்கள் சொந்த மதத்துக்கு மாறி அவரவர் ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். கூர்க் மன்னருக்குச் செய்து கொடுத்திருந்த சத்தியப் பிரமாணத்தை மீறி திப்பு சுல்தான் கூர்க் ராஜவம்சத்து இளவரசியொருத்தியைக் கட்டாயமாகக் கடத்திக் கொண்டு போய் அவள் விருப்பத்துக்கு மாறாகத் தன் மனைவியாக ஆக்கிக் கொண்டார்.

Tipu_Sultan_BLவட கர்நாடகத்தில் பிட்னூர் எனும் பிரதேசத்தைப் பிடிக்கும் முன்பும், பிடித்த பிறகும் அங்கு அவர் செய்த அட்டூழியங்கள் வர்ணனைகளுக்கு அப்பாற்பட்ட காட்டுமிராண்டித் தனமானவை. பிட்னூரின் கவர்னராக அயாஸ்கான் நியமிக்கப்பட்டார். கம்மரான் நம்பியார் எனும் பெயரில் சிரக்கல் ராஜ்யத்துக்காரரான இவரை ஹைதர் அலி கட்டாய மதமாற்றம் செய்திருந்தார். தந்தை ஹைதர் அலி மதமாற்றம் செய்து தன் நம்பிக்கைக்கு உரியவராக நடத்திய இந்த அயாஸ்கான் மீது திப்புவுக்கு பொறாமை ஆரம்பம் முதலே இருந்து வந்தது. காரணம் தந்தை ஹைதர் அலிக்கு இந்த அயாஸ்கானின் திறமை, புத்திசாலித்தனம் இவற்றின் மீதிருந்த நம்பிக்கைதான் திப்பு பொறாமைப்பட காரணம். திப்பு தன்னைக் கொல்ல சதி செய்கிறார் என்கிற செய்தியை அறிந்த அயாஸ்கான் ரகசியமாக பம்பாய்க்குத் தப்பிவிட்டார். அவருடன் ஏராளமான தங்கத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார். பெட்னூரைப் பிடித்த திப்பு அங்கிருந்த மொத்த ஜனங்களையும் இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்தார்.

மங்களூரைப் பிடித்த பின்னர் அங்கிருந்த ஆயிரக்கணக்கான கிருஸ்துவர்களை கட்டாயமாக ஸ்ரீரங்கப் பட்டினத்துக்கு அனுப்பி அங்கு அவர்களுக்குச் சுன்னத் செய்து மதமாற்றமும் செய்வித்து விட்டார். இவர் இப்படி செய்ததற்கு ஒரு சமாதானமும் சொன்னார். அது என்னவென்றால் பிரிட்டிஷார் இந்தப் பகுதியைப் பிடிப்பதற்கு முன்பு இங்கிருந்த போர்த்துகீசிய மிஷினரிகள் அங்கிருந்த முஸ்லீம்களை கிருஸ்தவர்களாக மாற்றிவிட்டார்களாம். தான் செய்த இந்தக் காரியத்தை மிகப் பெருமையுடன் பிரகடனம் செய்தார் திப்பு. போர்த்துகீசிய மிஷ்னரிகள் செய்த தவற்றுக்குத் தான் தண்டனை கொடுத்து விட்டதாக.

பின்னர் கேரளத்தின் வடபகுதியிலிருந்த கும்பளா எனுமிடத்துக்குப் படையெடுத்துச் சென்றார். போகும் வழியெல்லாம் கிடைத்த மக்களை மதமாற்றம் செய்துகொண்டே போனார். இவர் இப்படி செய்ததற்கான காரணங்களைச் சொல்லி நியாயப்படுத்தும் இஸ்லாமிய, மதச்சார்பின்மை பேசும் வரலாற்றாசிரியர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? நாட்டில் இருக்கும் மக்கள் எல்லோரும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்களாக (இஸ்லாமியர்களாக) இருந்தால்தான் ஒற்றுமையோடு பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராட முடியுமாம்!

மலபார் பகுதிகளில் திப்பு தன்னுடைய கவனத்தை இந்துக்கள் மீதும் இந்து ஆலயங்கள் மீதும் செலுத்தி அராஜகம் செய்தார். லூயிஸ் பி.பெளரி என்பவர் எழுதுகிறார்: “இந்துக்கள் மீதும் இந்து ஆலயங்கள் மீதும் திப்பு தொடுத்த அழிவு வேலை அராஜகம் வடக்கே முகமது கோரி, அலாவுதீன் கில்ஜி, நாதிர்ஷா ஆகியோர் இழைத்த கொடுமைகளைக் காட்டிலும் கொடுமையானவை.” முகர்ஜி என்பவர் தன் நூலில் திப்பு தன்னை எதிர்த்தவர்களை மட்டும்தான் மதமாற்றம் செய்தான் என்று எழுதியிருப்பதை இவர் மறுக்கிறார். பொதுவாக எந்த கொடியவனும் தன் எதிரிகளைத்தான் கொடுமைகளுக்கு ஆளாக்குவான், ஆனால் திப்பு செய்த கொடுமை, அதிலும் பெண்கள் குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான அராஜகம் எந்தவிதத்தில் நியாயப்படுத்த முடியாதவை.

மலபாரில் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த வில்லியம் லோகன் என்பவர் ‘மலபார் மானுவல்’ குறிப்பில் சொல்லும் செய்தி இது. சிரக்கல் தாலுகாவிலுள்ள திரிச்சம்பரம், தளிப்பரம்பு ஆகிய இடங்களிலுள்ள கோயில்களும், தலைச்சேரியிலுள்ள திருவங்காட்டு கோயில் (Brass Pagoda) படகாராவுக்கு அருகிலுள்ள பொன்மேரி கோயில் ஆகியவற்றை திப்பு இடித்துத் தள்ளினார். அதே மலபார் மானுவல் தரும் மற்றொரு செய்தி மணியூர் எனுமிடத்திலுள்ள மசூதி முன்பு இந்து கோயிலாக இருந்தது. அங்கிருந்த இந்துக் கோயில் திப்பு சுல்தான் காலத்தில் மசூதியாக மாற்றப்பட்டது என்பது உள்ளூர் மக்கள் கூறும் செய்தி.

வடக்கங்கூர் ராஜ ராஜ வர்ம தன்னுடைய “கேரளத்தில் சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு” எனும் நூலில் கேரளத்தில் திப்பு சுல்தான் படையெடுப்பின் போது (படையோட்டம்) நடந்த அழிவு வேலைகள், ஆலயங்கள் இடித்தது போன்ற செய்திகளைப் பற்றி சொல்வதாவது: “திப்பு சுல்தான் படையெடுப்பினால் உண்டான இந்து ஆலயங்களின் அழிவு சொல்லும் தரமன்று. ஆலயங்களைத் தீயிட்டு கொளுத்துவது, விக்கிரகங்களை உடைப்பது, கோயிலுக்கென்று நேர்ந்து விடப்பட்ட ஆடு மாடுகளின் தலைகளை வெட்டுவது போன்ற செயல்கள் திப்புவுக்கும் அவரது படை வீரர்களுக்கும் ஒரு பொழுது போக்கு விளையாட்டு போல அமைந்திருந்தது. பிரபலமான ஆலயங்களான தலைப்பரம்பு திருச்சம்பரம் ஆகிய கோயில்கள் இடிக்கப்பட்டது மக்கள் மனமுடைந்து போகச் செய்து விட்டது. அப்போது அவர்கள் செய்த அழிவை இன்றுவரை சரிசெய்ய முடியவில்லை.”

1784இல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி திப்பு சுல்தான் மலபார் பிரதேசத்தில் சுய உரிமையோடு ஆண்டு கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. அதனால் மலபார் பகுதி இந்துக்கள் வரலாறு காணாத துன்பங்களையும் அழிவுகளையும் சந்திக்க நேர்ந்ததாக திரு கே.வி.கிருஷ்ண ஐயர் என்பார் தனது கள்ளிக்கோட்டை பற்றிய புத்தகத்தில் எழுதுகிறார்.

எல்.பி.பெளரி என்பவர் எழுதுவதாவது:- இஸ்லாம் மீது தனக்குள்ள பற்றை நிரூபிக்கும் விதத்தில் கோழிக்கோடு பகுதியில் தன் கவனத்தைத் திருப்பினான் திப்பு. மலபாரில் வசித்த இந்துக்கள் தாய்வழி சொத்துரிமை பழக்கத்தைக் கைவிட மறுத்ததாலும், பெண்கள் உடை அணிவதில் மாற்றங்கள் செய்து கொள்ள விரும்பாததாலும், திப்பு அவர்களைக் கட்டாயமாக மாற்றமடையச் செய்வதற்காக அவர்கள் அனைவரையும் இஸ்லாமியர்களாக மாற்றினான். மலபார் மக்கள் பெண்கள் வீட்டினுள் அடைபட்டிருப்பதற்கும், பல தாரங்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதற்கும், சுன்னத் செய்து கொள்வதற்கும் மறுப்பு காட்டினர். கண்ணனூர் அரக்கல் பிபி குடும்பத்தில் திருமணத்துக்கும் திப்பு ஏற்பாடு செய்தார்.

அந்த காலத்தில் கோழிக்கோடு நிரம்ப பிராமண குடும்பங்களைக் கொண்டிருந்தது. 7000 பிராமண குடும்பங்கள் அங்கு வசித்து வந்தன. அப்படிப்பட்ட இடத்தில் திப்புவின் அடாவடி காரணமாக 2000க்கும் அதிகமான பிராமண குடும்பங்கள் அழிந்து போயின. தன்னுடைய கொடுமைக்கு பெண்களையும் குழந்தைகளையும் கூட அவன் விட்டுவைக்கவில்லை. பெரும்பாலான ஆண்கள் காட்டுக்குள்ளேயும், வேறு நாடுகளுக்கும் ஓடிவிட்டனர்.

1955 டிசம்பர் 25 “மாத்ருபூமி” இதழில் எலங்குளம் குஞ்சன் பிள்ளை என்பார் எழுதுகிறார்:- “முகமதியர்கள் எண்ணிக்கையில் அதிகமாகிவிட்டனர். ஆயிரக்கணக்கான இந்துக்கள் சுன்னத் செய்விக்கப்பட்டு விட்டனர். திப்பு செய்த கொடுமைகளினால் ஏராளமான நாயர்களும், சாமர்களும் (இவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்) எண்ணிக்கையில் குறைந்து விட்டனர்.”

திப்பு சுல்தான் படையெடுப்பின் காரணமாக தளி, திருவண்ணூர், வரக்கல், புத்தூர், கோவிந்தபுரம், தளிக்குன்னு முதலான கோழிக்கோட்டிலும் சுற்றுப் புறங்களிலும் இருந்த பல ஆலயங்கள் அழிக்கப்பட்டன. பின்னர் திப்புவின் தோல்வியை அடுத்து 1792 உடன்படிக்கையின்படி பல ஆலயங்கள் மீண்டும் எழுப்பப்பட்டன.
கேரளதீஸ்வரம், திரிக்கண்டியூர், வேட்டூர் ஆகிய இடங்களில் புராதன கோயில்களுக்கு உண்டான சேதங்கள் கணக்கிலடமுடியாதவை. வேதங்களைக் கற்பித்து வர பயன்பட்ட திருநவயா கோயில் அழிக்கப்பட்டது. பொன்னானியில் திருக்காவு கோயிலில் விக்கிரங்களை என்லாம் தூக்கி எறிந்து உடைத்துவிட்டு அந்த இடத்தை தன்னுடைய ராணுவத்தினரின் ஆயுதங்களை வைக்கும் கிடங்காகப் பயன்படுத்தினான்.

எண்ணற்ற கோயில்களை உடைத்தபின் திப்பு குருவாயூர் கோயிலுக்கு வந்தான். அப்படி குருவாயூருக்கு வருமுன் மம்மியூர் கோயிலையும், பாலயூர் கிருஸ்துவ தேவாலயத்தையும் உடைத்தான். குருவாயூர் கோயிலில் திப்புவின் அழிவுச் சின்னங்கள் இன்று பார்க்கமுடியாததற்குக் காரணம் ஹைடுரோஸ் குட்டி என்பவர்தான் காரணம். இவர் ஹைதர் அலியினால் இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டவர். குருவாயூர் கோயிலுக்கு நிலவரியை ரத்து செய்யவும், கோயிலுக்கு எந்த ஆபத்தும் நேராமல் பாதுகாக்கவும் இவர் ஹைதர் அலியிடம் அனுமதி வாங்கி வைத்திருந்தார். திப்புவினால் ஏற்பட்ட அழிவுகளையும் பின்னர் இவர் சரிசெய்து விட்டதால் அந்த அழிவுகள் இப்போது காணக் கிடைக்கவில்லை.

குருவாயூர் கோயிலை நோக்கி திப்பு வருவதறிந்து அங்கிருந்த புனிதமான ஸ்ரீகிருஷ்ண விக்ரகம் அம்பலப்புழா கிருஷ்ணன் கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. திப்புவின் வீழ்ச்சிக்குப் பிறகுதான் அங்கிருந்து மீண்டும் குருவாயூருக்குக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணன் ஆலயத்தில் இன்றும்கூட அன்று குருவாயூரப்பனை வைத்து வழிபட்ட இடத்தில் தொடர்ந்து வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Courtesy:
RELIGIOUS INTOLERANCE OF TIPU SULTAN
LATE P.C.N. RAJA.

4 Replies to “திப்பு சுல்தானின் மதவெறிச் செயல்பாடுகள்”

  1. திப்பு சுல்தானை விட மோசமானவர்களான சில பல ஹிந்துப் பெயர்களை வைத்துக் கொண்டு உலவும் அரசியல் தலைவர்களை முதலில் ஓரம் கட்ட வேண்டும்

  2. திப்பு என்ற கொடூரனை பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி..

    உண்மை சம்பவம் திப்புவின் ஆட்சியல் நடந்தது: எங்கள் சமுகம் கர்நாடகாவில் இருந்து தமிழகம் நோக்கி இடம் பெயர்ந்தது திப்புவின் ஆட்சியல் தான்.

    காரணம் : மதமாற்றம்

    அவனின் கொடூர செயல்களின் நினைவாக இன்றும் எங்கள் சமுகத்தில் தாலி கட்டுவதில்லை எங்கள் திருமணத்தில்…!!

  3. Tippu destroyed or deface most of temples in Kongu region. ex; Udiyoor Uddanda Velayudha Sami, etc..,

    He renamed places with ‘Islamic’ names. Ex: Salamabad for Satyamangalam

    He even changed Tamil month names with his own ‘Islamic’ Persian ones.

    He raped and chopped off the breasts of all the women he came across

    He hanged all men who opposed him by chopping of their penis and hanging them along-with their whole village

    ALL KONGU PPL WERE DEAD AGAINST TIPPU. DHEERAN CHINNAMALAI FOUGHT TIPPU.

  4. திப்புவின் அடக்குமுறையிலிருந்து எங்கள் தாத்தா வின் தாத்தா ஸ்ரீரங்கம் பட்டியலிலிருந்து தப்பி கோவை வந்தடைநாதோம்பல ஆயிரம் மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *