தெய்வப்புலவர் திருவள்ளுவர் செய்தருளிய அறநூலான திருக்குறள் தமிழ் மொழியில் விளங்குகிற ஸ்மிருதியாகும். ஆக, மிகச்சிறப்பான இந்நூற்கருத்துக்கள் யாவும் நுணுகி ஆராயத்தக்கன. அவ்வாறு ஆராய்ந்து இந்நூற்கருத்துகளுக்கு அமைவாக நம் வாழ்வைப் பேண வேண்டும்.
எனவே, ஈரடியில் அறம் பேசும் திருக்குறளை விளக்க பற்பல ஆன்றோர்கள் காலத்திற்குக் காலம் உரையெழுதி வந்திருக்கிறார்கள். பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காலிங்கர் என்பவர்கள் தொட்டு இன்று வரை பற்பல உரைகள் தோன்றி விட்டன. இன்னும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.
என்றாலும் இன்னும் சில குறள்களின் பொருள் குழப்பமாகவே இருக்கிறது. திருக்குறள் உரைகளில் பரிமேலழகர் உரையையே அறிஞர்கள் பெரிதும் கொண்டாடி வருகின்றார்கள்.
பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள
நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ –நூலிற்
பரித்தவுரை யெல்லாம் பரிமே லழகன்
தெரித்தவுரை யாமோ தெளி.
எனினும், சிற்சில திருக்குறள்களுக்கு பரிமேலழகர் முதலான அறிஞர்கள் பலரும் கண்ட கருத்துக்கள் யாவும் ஏற்றுக்கொள்ளத் தக்கனவாகத் தெரியாத நிலை கூட இருக்கிறது. வள்ளுவர் எதை நினைந்து குறளை அமைத்தாரோ, அப்பொருளை உரையாசிரியர்கள் இவ்வாறான சிற்சில இடங்களில், சரியாக, அறிந்து கொள்ளவில்லையா? என்ற ஐயமும் உண்டாகிறது.
ஆக, என்னைத் தடுமாற வைத்த சில குறட்பாக்களை நோக்குவதும் அது தொடர்பான எனது கருத்தை முன்வைப்பதுமே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை
(குறள்- 37)
அறன்வலியுறுத்தல் என்ற அதிகாரத்தில் உள்ள ஏழாவது குறள் இதுவாகும். இதற்குப் பொருள் கண்ட பரிமேலழகர்
“அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்தல் வேண்டா, சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னாலே உணரப்படும்” என்கிறார்.
இதே கருத்தையே மணக்குடவர், பரிதியார், காலிங்கர் போன்ற உரையாசிரியர்களும் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் அறத்தின் பயனை அறிய வேண்டுமாயின், எந்த நூலையும் பார்க்கத் தேவையில்லை. தெருவில் நின்று சிவிகையை (பல்லக்கை) பார்… அதிலே, மேலே இருந்து போகிறவன் புண்ணியவான் என்றும், கீழே சுமப்பவர்கள் பாவிகள் என்றும் பொருள்பட உரைக்கின்றனர்.
இதை அப்படியே, இன்று நோக்கின் வாகனம் செலுத்துபவர்கள் (ஒரு வகையில் சிவிகை சுமப்பவர்கள் போலவே அவர்கள்) எல்லோரும் பாவிகளா..?
நகுலன் என்பான் நூறு அஸ்வமேதயாகங்கள் செய்து, இந்திரப்பதவி பெற்றான் என்றும், அவனை ஏழுமாமுனிவர்களும் சிவிகையில் வைத்துச் சுமந்து சென்றார்கள் என்றும் ஒரு கதை வழக்கில் உண்டு.
அவன் தன்னைத் தாங்கிச் செல்லும் முனிவர்களின் தகுதி மறந்து “சர்ப்ப.. சர்ப்ப..” (விரைவாக, விரைவாக) என்று வெருட்டியதால், முனிவர்களின் சாபத்துக்கு உள்ளாகி சர்ப்பமானான். (பாம்பானான்) என்று அக்கதை கூறும்.
ஆக, சிவிகை ஊர்ந்த புண்ணியவான் என்ன ஆனான்..? திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் எழுந்தருளி வந்த சிவிகையை ஆர்வமிகுதியாலும், பேரன்பினாலும் திருநாவுக்கரசர் பெருமான் தாங்கியதாகப் பெரிய புராணம் பேசுகிறது.
எனவே, இதற்கான பொருளாக, எதிர்மறைக்கருத்து எடுக்க வேண்டும். அதாவது அறம் அறிய வேண்டுமாயின் நூல்களைக் கற்றுத் தெரிக, வெறுமனே பல்லக்கில் வருபவனையும், அதனைச் சுமக்கிறவர்களையும் வைத்து அறம் இதுவென நினைக்க வேண்டாம். என்பதே வள்ளுவனார் குறளின் கருத்தாக அமைய வேண்டும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
(குறள்- 55)
இது வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்தில் அமைந்துள்ள ஐந்தாவது குறட்பாவாகும்.
இக்குறள் பல இடங்களிலும் பலராலும் விவாதிக்கப்பட்டு ஒரு பிரச்சினையாகிப் போன குறள்.
இதற்குப் பரிமேலழகர் பொருள் சொல்கிற போது, “பிற தெய்வம் தொழாது தன்தெய்வமாகிய கொழுநனைத் (கணவனை) தொழாநின்று துயிலெழுவாள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்” என்கிறார்.
ஆதிகமான உரையாசிரியர்கள் இக்கருத்தையே இக்குறளின் பொருளாக முன் வைக்கின்றனர்.
இங்கே பெண்கள் கணவனைத் தவிர, பிற தெய்வம் தொழார் என்று ஒரு கருத்து உரையாசிரியர்களால் நிறுவப்படுகிறது. ஆனால், கடவுள் வாழ்த்திலேயே பரிமேலழகர் உரையிலேயே, இறை வணக்கம் பற்றிச் சொல்லும் போது, இருபாலாருக்கும் உரிய பன்மை விகுதிச் சொற்கள் ஒன்றல்ல பன்னிரு இடங்களில் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன.
ஆக, இக்குறளுக்கு இத்தகு உரையெழுச்சி பெற்றது ஒரு வகையில், இஸ்லாமியம் போன்ற பிறசமயத்தாக்கமோ? ஏன்று கூடச் சிந்திக்கத் தோன்றுகிறது. இவ்வுரை மூலம் பெண்களின் இறைவழிபாட்டு உரிமை மறுக்கப்படுகின்றது.
எனவே, இதற்கு எதிர்மறையாகப் பொருள் கொண்டால், என்ன? வள்ளுவனார் இந்த இடத்தில் பெண்களுக்கு கட்டாயம் இறைவழிபாடு அவசியம் என்று வலியுறுத்துவதாக, இக்குறள் குறித்து உரையாடிய யாழ்ப்பாணத்துப் பருத்தித்துறை என்ற ஊரைச் சேர்ந்த ஆ.வடிவேலு என்ற தமிழாசிரியர் குறிப்பிட்டார்.
இதற்கு அவர் பரிமேலழகர் உரையிலேயே பல உதாரணங்களையும் குறிப்பிட்டார். உதாரணமாக, பரிமேலழகர்,
55ஆவது குறளில் தொழுது என்று வருகிற போது, தொழா நின்று என்கிறார்.
451ஆவது குறளில் அஞ்சும் என்று வருகிற போது, அஞ்சா நிற்கும் என்கிறார்.
527ஆவது குறளில் உண்ணும் என்று வருகிற போது, உண்ணா நிற்கும் என்கிறார்.
இப்படி முப்பதிற்கும் மேற்பட்ட குறட்பாக்களுக்கு பரிமேலழகர் எதிர்மறைப் பொருள் கொள்கிறார்.
ஆனால், 774ஆவது குறளான,
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்
என்பதற்குப் பெர்ருள் சொல்கிற போது, பறியா நகும் என்ற எதிர்மறையை “பறித்து மகிழும்” என்று பொருள் கொள்கிறார்.
எனவே, இக்குறட்பாவானது,
“தெய்வந் தொழ கொழுநற் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”
என்றாவது, இருந்திருப்பின் சிக்கலிருந்திருக்காது. அதாவது, கணவனைப் போற்றுபவள் தெய்வத்தை வேண்ட, மழை பொழியும் என்றாவது பொருள் கொண்டிருக்கலாம். ஆனால், இப்படிக் குறள் எழுதியிருந்தால், அது வெண்பா யாப்புக்கு முரணாகும். (நிரை முன் நிரை அசையாக வரக்கூடாது)
இயற்கை நிகழ்வுகளைப் பெண்களால் மாற்ற முடியுமா..? அதுவும் தெய்வத்துணை இன்றிச் செயற்படுத்த முடியுமா,.? ஆனால், உரையெழுதுபவர்கள் எல்லாம் “தெய்வம் தொழாது கணவனையே தெய்வமாகத்தொழுபவள்” என்கிறார்கள்.
திரௌபதை துகிலுரியப்பட்ட போது, தெய்வமான கண்ணனை அழைத்து வழிபட்டதும், மங்கையற்கரசியார் தன் கணவன் சமயம் மாறிய போதும் தான் மாறாமல் சைவப்பணி புரிந்ததும், புனிதவதியார் பக்திஇயக்கத்திற்கு உயிர் கொடுத்ததும் இலக்கிய ரீதியாக இறைபணியில் இல்லறத்தில் ஈடுபட்ட பெண்கள் ஈடுபட்டிருந்ததை வெளிப்படுத்துகின்றது.
இதற்கு விளக்கம் சொல்ல வந்தவர்கள் அநுசூயை என்கிற முனிபத்தினி மழை பெய்யச் செய்தாள் என்று சொல்லி நழுவுகிறார்கள்.
கலைக்கோட்டுமாமுனிவன் நாட்டுக்குள் வந்த போது, மழை பொழிந்து வளம் பெருகிற்று என்று கம்பராமாயணம் உரைக்கிறது. அப்படியாகில், ஆண்களால் மழை பொழியச் செய்ய முடியுமா..? ஆக, அநுசூயை, கலைக்கோட்டு முனிவன் ஆகிய இருவரதும் தவவலிமையையே இது காட்டுவதாகக் கொள்ளலாம்.
ஆகவே, மொத்தத்தில் இக்குறளுக்கு இப்படிப் பொருள் கொள்வது நலம் என்று நம்பலாம். அதாவது,
“கணவனையே நினைந்து கொண்டு, மனதால் வணங்கிக்கொண்டு துயிலெழுகின்றவளாகிய கற்புடைய பெண் கணவனதும் மற்றை எல்லோரதும் நலனுக்காக கடவுள் வழிபாடு செய்பவளாவாள். அவள் எல்லோரும் விரும்புகின்ற போது, பெய்த மழைக்கு ஒப்பாவாள்”
என்று பொருள் கொள்வதே நலம். எனவே, இக்குறளில் கற்புடைய மாதரையே எல்லோரும் விரும்பும் போது பொழியும் மழையாக வள்ளுவப்பெருமான் உவமித்தார் என்று சிந்திக்கலாம் அல்லவா..?
தோன்றிற் புகழொடு தோன்றுக அகிதிலார்
தோன்றலில் தோன்றாமை நன்று
(குறள்- 236)
இதற்குப் பொருள் கண்ட பரிமேலழகர்
“மக்களாய் பிறக்கின் புகழுக்கு ஏதுவான குணத்தோடு பிறக்க, அக்குணமில்லாதவர் மக்களாய் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று” என்கிறார். இவ்வாறே பலரும் பிறப்புடன் தொடர்பு பட்டதாக இக்குறளுக்குப் பொருள் விரித்துள்ளனர்.
இவ்வாறு இக்குறள் பிறப்பைக் குறித்திருந்தால் ‘மக்கட்பேறு’ என்ற அதிகாரத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இது அமைந்திருப்பதோ, புகழ் என்ற அதிகாரமாகும்.
இதுவோ, ஈகை என்ற அதிகாரத்தை அடுத்து வருவதாகும். ஆகவே, இந்த தோன்றல் என்பதைக் காட்சி என்றே பொருள் கொள்வது சிறப்பாகும் எனக் கருத வேண்டியுள்ளது.
உதாரணமாக, ஒரு போட்டி அல்லது தேர்தல் என்றால், அதில் வெற்றி பெறுபவர் புகழ் பெறுவார். தோற்பவர், புகழ், நேரம், பணம் எல்லாவற்றையும் வீணடிக்க நேரிடும். எனவே, இத்தகு நிலைமையில், தோற்கக்கூடிய நிலையிருந்தால் தோற்றாமையே நன்று. ஆக, இக்கருத்தையே இக்குறள் குறிப்பிடுகின்றதோ..? என்று கூடச் சிந்திக்கலாம்.
இம்மூன்று குறட்பாக்கள் போலவே, பல குறட்பாக்களின் பொருளை உரையாசிரியர்களின் பொருளின் மூலம் சரியாகத் தெரிந்து கொள்ள இயலாத நிலையிருக்கிறது. இவற்றுக்கு தமிழ்ப்பற்றாளர்களும் திருக்குறள் நெறி பேணுபவர்களும் விரைந்து சரியான பொருள் காட்ட வேண்டும் என்பதே எம் அவா ஆகும்.
அருமையான கருத்துகள். குறள்களின் விளக்கங்கள் புதுமையாக இருந்தாலும் ஏற்கத் தக்கவையே! பகிர்வுக்கு நன்றி.
அய்யா,
என் சிற்றறிவுக்கு எட்டியது.. சமீபத்தில் பாணினியின் இலக்கணம் பற்றி ஓர் பேராசிரியர் கூறும்போது, எதாவது சந்தேகம் இருந்தால் படித்த பண்டிதர்கள் என்ன சொல்லியிருகிரார்களோ, அதை பின்பற்றுக என்று கூறியிருப்பதாக சொன்னார். அது எனக்கு சரியாகவே படுகிறது.. பரிமேலழகர் போன்ற சான்றோர் விளக்கங்களை மறு ஆய்வு செய்வது நன்றல்ல.
தெய்வம் தொழாள் என்ற குறளில், பெண்கள் தெய்வத்தை தொழ கூடாது என்று சொல்லவில்லையே? ஒரு பெண் கணவனையே தெய்வமாக தொழுதால், மற்ற பிற அறங்கள் தானாகவே ஒரு குடும்பத்தில் சேரும். கணவனின் நற்காரியங்களுக்கு துணை நிற்பது, குடும்பத்தை நல்ல நெறியில் செலுத்துவது, விருந்தோம்பல், தானம், தர்மம், மற்றும் இன்ன பிற நற்செயல்கள் தானாகவே வந்து சேரும். அதனால் அப்படிபட்ட பெண் பெய் என்றால் மழை பெய்யும் என்பதே கருத்தாக கொள்ள வேண்டும்.
அதே போல், புகழ் என்பதற்கு பல அர்த்தங்கள் கொள்ளலாம். புகழ் மிக்க பிறப்பு வேண்டும் அன்பதில்லை. மனிதனுக்கு புகழ் அறநெறி. வாழ்ந்தால் அறனெரியொடு வாழவேண்டும்..இல்லையேல் பிறக்காமல் இருப்பதே நன்று.
இந்த கருத்தை தன சான்றோர்கள் முன்னிருதியுள்ளர்கள் என்பது என் கருத்து.
//இதற்கான பொருளாக, எதிர்மறைக்கருத்து எடுக்க வேண்டும். அதாவது அறம் அறிய வேண்டுமாயின் நூல்களைக் கற்றுத் தெரிக, வெறுமனே பல்லக்கில் வருபவனையும், அதனைச் சுமக்கிறவர்களையும் வைத்து அறம் இதுவென நினைக்க வேண்டாம். என்பதே வள்ளுவனார் குறளின் கருத்தாக அமைய வேண்டும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.//
ப்ரம்ம‚ஸ்ரீ சர்மா அவர்கள் எடுத்துக் கொண்ட முதற்குறள் அறன்வலியுறுத்தல் என்னும் அதிகாரத்தில் உள்ளது. அறநூல்கள் அறத்தினை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வலியுறுத்தும். உடன்பாட்டில் அறத்தினைக் கைக்கொண்டு அதன்வழி வாழ்வதால் விளையும் நன்மையைக் கூறும். அறன்வழி வாழாதபோனால்,- அறத்தை மறுத்து வாழ்ந்தால் அதனால் விளையும் பாவத்தின் கடுமையையும் அது உயிருக்கு விளைக்கும் துயரத்தையும் வலியுறுத்தும்.
‘சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு’ (1)
என்னும் குறள் அறனை உடன்பாட்டில் வலியுறுத்துகின்றது.
‘அறத்தினூங்கு ஆக்கமு மில்லை அதனை
மறத்தலி னூங்கில்லை கேடு’(2)
என்னும் குறள் எதிர்மறையில் அறத்தை வலியுறுத்துகின்றது.
‘அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை’ (7)
என்னும் திருக்குறளும் அறத்தின் வழி ஒழுகாமையின் கேட்டினை எதிர்மறையில் வலியுறுத்துகின்றது.
நற்செயலும் தீச்செயலும், செய்த அப்பொழுதே அழிந்துபோனாலும் புண்ணியபாவங்களாக முறையே இன்பத்துன்பங்களைத் தரும் என்பது வேதவழிப்பட்ட நம்பிக்கை. பயன் அப்பொழுதே விளைவதும் உண்டு; காலங்கழித்து விளைவதும் உண்டு; மறுபிறப்பில் விளைவதும் உண்டு. கீரைவிதையும் காய்கறி விதையும் பனை விதையும் போல. புண்ணிய பாவங்களுண்டு, மறுபிறப்புண்டு, வினைக்கேற்ற இன்பத்துன்பங்கள் உண்டு என்பதை உடன்படுவோருக்கே இக்கருத்து எளிதில் விளங்கும்.
சிவிகையில் பயணிக்கும் வளமான வாழ்க்கை அவன் முன் செய்த புண்ணியத்தின் விளைவு என்பதும், சுமப்பவனின் துன்ப வாழ்க்கை அறநெறி பிழைத்தமையின் விளைவு என்பதும் அக்குறள் வலியுறுத்தும் கருத்து என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இது வேதவழக்கு. வேதவழக்கின்படி உரை எழுதிய ஆசிரியர்களும் இந்தக் கருத்தினையே வலியுறுத்தியுள்ளனர்.
‘வையம் துரகம் மாமகுடம் சிவிகை’ முதலியனவெல்லாம் ‘ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்பு முன்பு செய்யும் தவம் உடையாருக்கு உளவாகிய சின்னங்களே’ என்று கூறிய பட்டர், ‘வண்மை குலம் கோத்திரம் கல்வி குன்றி குடில்கள்தொறும் பாத்திரங்கொண்டு பலிக்கு ‘ உழல்பவரும் இன்னார் என அறவழி தவறினோரைச் சுட்டுதல் காண்க.
நாலடியார் என்னும் அறநூல், தீவினையச்சம் என்னும் அதிகாரத்தில், ‘ இப்பிறப்பில் கைகால்களில் விலங்கு பூட்டப்பெற்று அடிமைகளாய் வேற்று நாட்டில் பிறருக்குப் பணிசெய்பவர்கள், முன்னைப் பிறப்பில் காட்டில் வாழும் சிவல், குறும்பூழ் முதலிய பறவைகளைக் கூட்டில் கொண்டுவைத்து அடைத்தவர்’ என்றும், ‘முன்பு நண்டு கோழி போன்றவற்றைக் கால் முரித்துத் தோல் உரித்துத் தின்றவர்கள்தாம் இப்பிறப்பில் ‘அங்கை ஒழிய, விரலழுகித் துக்கத் தொழுநோயராவர்’ என்றும் கூறுவது காண்க.
இக்கடுஞ்சொற்கள் அறத்தின் வழி வாழாமையால் விளையும் பெரிய குற்றத்தை வலியுறுத்துவதற்கேயாம். நல்வினை தீவினை என்பன இல்லை, புண்ணியபாபங்கள் என்பன ஏதும் இல்ல, மறுபிறப்பு என்பது இல்லை என்போருக்கு இந்த அறன்வலியுறுத்தல் ஏலாது.
திருவிளையாடற் புராணத்தில் வரும் கதையில், நகுஷன் புண்ணியம் செய்தான்; அதனால் அடைதற்கரிய பெருஞ்செல்வம் எய்தினான்; அடைந்த பெருஞ்செல்வம் அவனுடைய கண்ணை மறைத்து அகந்தையைப் பெருக்கியது; அதனால் அழிந்தான் என்ற கருத்தைக் கூறுவது. சிவபுண்ணியம் செய்யாதவன் பெற்ற செல்வம் அவனுக்குக் கேடே விளைத்தது. “அறிவிலாத அற்பமானவர்க்குச் செல்வமல்லது பகைவேறுண்டோ” என்பது திருவிளையாடற்புராணம்.
துறைமங்கலம் சிவப்பிரகாசசுவாமிகள் நால்வர் நான்மணிமாலை எனும் நூலில் திருஞானசம்பந்தசுவாமிகளைத் துதிக்குமொரு பாடலில்,
‘அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடையை – மறுத்தார்சம்
பந்தன் சிவிகை பரித்தார் திரிகுவர்மற்
றுந்துஞ் சிவிகையினை யூர்ந்து’
என இந்தத் திருக்குறளை இலக்கியச் சுவைபடச் சமத்காரமாக எடுத்தாண்டுள்ளார். அற நூல் விதிகளின்படி சிவிகையைச் சுமப்பவர் தீவினை செய்தவராவர்; தீவினைப் பயனாகச் சிவிகையைச் சுமப்பவராயினர். ஆனால், திருஞானசம்பந்தரின் சிவிகையைத் தாங்கினவர்கள் இப்பொழுதும் சிறந்த தேவர்களாகத் திரிகின்றார், ஆதலின், சம்பந்தர், அறவிதி கூறும் இத்திருக்குறளை மறுத்தார், சிவிகைபரித்தவர் புண்ணியரே, குறள் கூறுவதைப் போன்று தீவினைசெய்தவல்லர் என்று இலக்கியச் சுவைபட இச்செய்யுள் அமைந்துள்ளது.
திருநாவுக்கரசர், பிள்ளையார் ஊர்ந்து வந்த சிவிகையைத் தாங்கினார். அது குழந்தையைத் தந்தை சுமப்பது போன்று பிள்ளையார் மீது அப்பர் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடு. அதனை இக்குறட் கருத்துக்கு ஏற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை.
மனைவியும் கணவனும் ஒரே கருத்துடன் இருக்க வேண்டும் என்ற பொருளில் எடுத்து கொள்ளவேண்டும் . கணவனை தொழும் மனைவி கணவன் வணங்கும் வணங்கசொள்ளும் தெய்வத்தை வணங்கலாம் அல்லது வணங்க வேண்டாம் என்று சொன்னால் வணங்காமலும் இருக்கலாம் , அதாவது ஒத்த கருத்துடன் இருக்க வேண்டும் என்ற பொருளில் எடுத்துகொள்ளவேண்டும் . திருமணமுரிவற்ற வாழ்கைக்கு இந்த குரல் பெரிதும் பயன்படும் . தயவு செய்து தெய்வபுலவனின் பாடலை உன்றி படித்து கருதுணர்கவும். நன்றி . ஜெயகுமார் .கோவை .
ப்ரம்மஸ்ரீ சர்மா அவர்கள் சிந்திக்க எடுத்துக் கொண்ட மற்றொரு திருக்குறள்,
‘தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை’ என்பதாகும்.
தெய்வப்புலவர் திருவள்ளுவர் தம்முடைய கருத்தை வலியுறுத்த பலவுத்திகளைக் கையாண்டுள்ளார். பொதுவான அறத்தைச் சுட்டிக் காட்டி அதைக் காட்டிலும் சிறப்பு அறம் உயர்ந்தது என்று கூறுவது அவ்வுத்திகளில் ஒன்று. இது சிறப்பு அறத்தை வலியுறுத்துவதே அன்றிப் பொது அறத்தை மறுத்ததாகாது.
எடுத்துக் காட்டாக,
ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. (656).
இந்தக் குறளில் ‘சான்றோர் பழிக்கும் வினையைச் செய்யற்க’ என்பது வலியுறுத்தப்படும் சிறப்பு அறம். இதன் மேன்மையைச் சுட்டப் பொது அறத்தைக் காட்டி அதைக்காட்டிலும் இது உயர்ந்தது என்றார். வயதான தாய் தந்தையர், கற்புடைய மனைவி, குழவி முதலியோர் பசியால் வருந்தும் பொழுது தீயன செய்தாகிலும் அவர்களைக் காப்பாற்றல் வேண்டும் என்பது அறநூற்பொது விதி இந்தக் குறளின் மேலோட்டமான பொருளின் அடிப்படையில் தாய் தந்தையரைப் பட்டினி போடலாம் என்பது கருத்தாகாது. பெற்றோரைக் காப்பற்ற எஹ்தகைய தீவினையும் செய்யலாம் என்று கூறியதாகாது. சான்றோர் பழிக்கும் வினையைச் செய்யாமையே உயர்ந்தது என்பதே கருத்து.
புலால் மறுத்தலை வலியுறுத்த வந்த தெய்வப்புலவர்,
‘அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று’ (59)
இதனால் வேள்வி செய்தலைத் திருவள்ளுவர் மறுத்தார் எனப் பொருள் கொள்ளக் கூடாது. வேள்வி செய்தலைக் காட்டிலும் கொல்லாமையும் புலால் உண்ணாமையும் பெரும்பயன் தரும் என்பதே கருத்து.
எருப்பெய்தலின் சிறப்பை உணர்த்த வந்த தெய்வப்புலவர்,
‘ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு’ (1038)
இக்குறளுக்கு மேலோட்டமாகப் பொருள் கண்டு, எருவிட்டால் போதும், ஏர் உழ வேண்டுவதில்லை, களை கட்டுக் காத்தல் போதும் நீர் விடுதல் வேண்டுவதில்லை என்று பொருள் கூறக் கூடாது.
‘தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்’ என்னும் தொடருக்கும் இந்த உத்தியின்படி பொருள் காணல் வேண்டும் தெய்வம் தொழல் பொதுவிதி. மனைவிக்குக் கணவனைப் பேணுதலே சிறப்பு அறம். பொது அறத்தினும் சிறப்பு அறமே அவளுக்கு மாண்பைத் தரும். இதனால் பொது அறத்தைத் தவிர்க்க வேண்டும் என்பது கருத்தன்று.
தெய்வத்தைத் தொழுது கொண்டு கணவனின் நலனைக் கருத்தில் கொள்ளாதவள் மனைத்தக்க மாண்புடையளாகாள்; வாழ்க்கைத் துணையாகாள். தொழுதல் என்பதற்குப் பேணுதல் என்பது பொருள். எனவே, கணவனைப் பேணுதலே, ஏனைத் தெய்வத்தைத் தொழுதலைக் காட்டிலும் உயர்ந்த பெண்ணொழுக்கம் என்பதே கருத்தன்றி தெய்வத்தைத் தொழாமை சிறந்த பெண்ணொழுக்கமாகக் கூறியதாகக் கொள்ளக் கூடாது.
கற்புக் காலத்தில் கணவனுடன் சேர்ந்து இருவருமாகவே தெய்வத்தை வழிபடல் வேண்டுமேயன்றிக் கணவனின்றி மனைவி மட்டும் தனித்து வழிபடல் விலக்கப்பட்டது. “கணவன் கருத்தின்றி என்னைப் பூசித்தாலும் அந்தப் பெண் நரகம் அடைவாள்” என்று சிவன் கூறியதாக வாயு சங்கிதை 13அத்தியாயத்தில் உள்ளதாகக் கூறுவர்.
தொல்காப்பியம், கற்பியல், தோழி கூற்றாக உள்ள நூற்பாவொன்றில் (9) தலைவி தலைவனுடனான தன் காதல் (களவொழுக்கம்) பிறருக்கு புலப்படாது ஒழுகிய காலத்தில் தான் விரும்பிய தலைவனே கணவனாக அமைய வேண்டும் என்று தெய்வத்தை வணங்கியதையும், கடவுள் அவ்வாறே முடித்தமையால் கற்புக்காலத்தில் விரும்பியவாறு முடித்துக் கொடுத்த கடவுளுக்குப் பரவுக்கடன் கொடுத்தல் வேண்டும் என்றும் தோழி தலைவனிடம் கூறுகின்றாள் (அற்றம் இல்லாக் கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும்). இளமகளிர் சிறந்த கணவனைப் பெறும்பொருட்டுத் தெய்வந்தொழல் பழந்தமிழ் மரபு.
தைந்நீராடல், அம்பா ஆடல், பாவை நோன்பு என்பனவும், திருவெம்பாவை, ‘உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம், உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம், அன்னவரே எம் கணவராவார்’என்னும் தொடரும் மகளிர் நல்ல கணவன் கிடைக்க வேண்டிக் கடவுளைத் தொழும் தமிழ்ப் பெண்டிர் மரபினைக் காட்டும்
சிலப்பதிகாரம் கனாத்திறம் உரைத்த காதையில் தேவந்தி “காமவேள் கோட்டத்தில் சென்று தொழுதார் கணவரொடு தாமின்புறுவர் தையலார் உலகத்து” என்று கூறியது, பண்டைத் தமிழர் மரபு பற்றி.. ‘பீடன்று’ எனக் கண்ணகி மறுத்துக் கூறியது, ‘எதுவும் ஊழ்வினைப்படி நடக்கும்’ எனும் ஆருகமதச் சமயச்சார்பு பற்றி. கண்ணகியின் கூற்று ‘தெய்வந் தொழாஅள்’ என்னும் இக்குறள் கருத்தின்படி அன்று.
//451ஆவது குறளில் அஞ்சும் என்று வருகிற போது, அஞ்சா நிற்கும் என்கிறார்.
527ஆவது குறளில் உண்ணும் என்று வருகிற போது, உண்ணா நிற்கும் என்கிறார்.//
‘சிற்றினம் அஞ்சும்’(451), ‘காக்கை கரவா உண்ணும்(527)’ என்னும் தொடர்களில் ‘அஞ்சும்’, ‘உண்ணும்’ என்பன செய்யும் வாய்பாட்டின. ‘செய்யுமென்னும் வாய்பாட்டு வினைமுற்று நிகழ்காலம் காட்டும். அதனால், பரிமேலழகர் ‘ஆநின்று’ என்ற நிகழ்கால இடைநிலை விரித்து அஞ்சா நிற்கும் என்றும் உண்ணா நிற்கும் என்றும் பொருள் கூறினார்.
‘தொழாஅள்’ என்பது எதிர்மறை வினைமுற்று. இதில் ஆகார எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது என்பர். தொழாஅள் என்னும் வினைமுற்று முற்றெச்சமாக எழுவாள் என்னும் பெயர்கொண்டு முடிந்தது. எனவே, இங்கு ‘ஆநின்று’ என்ற நிகழ்கால இடைநிலை விரிக்க இடமில்லை.
‘ ‘தெய்வந் தொழ கொழுநற் தொழுதெழுவாள்’ என்று கொண்டால் வெண்டளை பிழைபடுமே. அதனால் அல்லவா ‘தொழாஅள்’ என அளபெழுந்தது?
முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி, ஸ்ரீமதி கீதா சாம்பசிவம், ஜெயக்குமார், சதீஸ் இவர்களுடைய கருத்துக்கு நன்றிகள்…
முக்கியமாக, முனைவர் அவர்கள் இந்த வயதிலும் மிகவும் ஆர்வத்துடன் கட்டுரையைப் படித்துத் தன்னுடைய கருத்தை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்… அவர்களுடைய அறிவு சார் கருத்திற்கும் அன்பிற்கும் நன்றிகள் பல..
//துறைமங்கலம் சிவப்பிரகாசசுவாமிகள் நால்வர் நான்மணிமாலை எனும் நூலில் திருஞானசம்பந்தசுவாமிகளைத் துதிக்குமொரு பாடலில்,
‘அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடையை – மறுத்தார்சம்
பந்தன் சிவிகை பரித்தார் திரிகுவர்மற்
றுந்துஞ் சிவிகையினை யூர்ந்து’
என இந்தத் திருக்குறளை இலக்கியச் சுவைபடச் சமத்காரமாக எடுத்தாண்டுள்ளார்.//
ஆஹா… என்ன ஒரு பதிவு.. இதே போல அடுத்த இரு குறளுக்கும் கருத்துக்கள் பரிமாறப்பட்டால் இக்கட்டுரை எழுதியதன் நோக்கம் முழுமையாக வெற்றி பெறும் என்றே நினைக்கிறேன்…
அறத்தாறு இது…எனும் திருக்குறளுக்கு
அடியேன் வரைந்த கவிதை உரை இது:
பல்லக்கைச் சுமப்பவன்
பாவியாம் என்றோ…
பல்லக்கில் மிதப்பவன்
புண்ணியன் என்றோ …
அவசரப் பட்டே
அறிவிக்க வேண்டாம்!
(உழைப்புச் சுரண்டலை
ஒத்துக் கொள்வோம் நாம்..!)
—-கவிஞர் கங்கை மணிமாறன்
தெய்வம் தொழாள் ..குறளுக்கு
அடியேன் வரைந்த கவிதை உரை..
தேவை எது என்றுணர்ந்து–
தெய்வத்தை வணங்காமல்
சேவையுடன் தன்கணவன்
திருப்பாதம் வணங்குபவள்–
தேவைக்குப் பெய்கின்ற
தேன்மழைக்கு ஒப்பாவாள்!
அந்தமழை உயிர்வளர்க்கும் :
அவளும் அதுபோல்தான்!
—கவிஞர் கங்கை மணிமாறன்
தோன்றின் புகழொடு…எனும் குறளுக்கு
அடியேன் வரைந்த கவிதை உரை!
எச்செயலை மேற்கொள்ள
எங்கேபோய் நின்றாலும்
அச்செயலைப் புகழ் தோன்ற
ஆர்வமுடன் செயவேண்டும்!
அவ்வாறு செய்யாமல்
அவநம்பிக்கையோடு
செய்யத் தோன்றுமேல்…
செய்யாமை நன்றாகும்!
இங்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் குறட்பாக்களுக்கு கட்டுரையாளர் தந்திருக்கும் விளக்கங்கள் ஒவ்வொன்றைப்பற்றியும் பேசமுடியும் அதாவது வேறுவிளக்கங்கள் தரவியலும். முதலில் சிவிகை பற்றிய குறட்பா.
குறட்பா இருவரிகள் மட்டுமே என்பதை முதலில் நாம் கணிக்க வேண்டும். சிறுகத் தரித்த குறள் என்று அதைப்பாராட்டுவோர் சொல்லவிழைவது அவ்விருவரிகள் தோன்றிய வண்ணம் எடுக்கலாகாது என்றும், அதன் இறைச்சியைத் தேடிப்பார்த்துப் புரியவேண்டும் என்றுமாம்.
அதன்படி –
சிவிகையில் பயணிப்பவன் உயர்ந்தோனா, தூக்குபவர் தாழ்ந்தோரா என்ற ஐயம் தேவையில்லை. பிறர் மெச்ச வாழ்பவன் ஒருவனைபார்த்தால் அறம் என்றால் என்ன என்று புரியவரும் என்கிறார். பிறர் மெச்ச என்னும்போது அவன் அறவழி வாழ்ந்து வழிகாட்டியவன் என்றே பொருள். ஆக, இங்கு சிவிகையில் பயணிப்பவன், சிவிகையைத் தூக்குவோர் – இவர்கள் சிம்பல்கள். அடையாளங்கள். ஒரு பேருண்மையை ஒரு சிறிய பொருளைக்காட்டிப் புரிய வைத்தல் பாவலர் வழக்கம். உவமைகள், உவமேயங்கள், அடையாளங்கள் அவர்கள் அதற்காக பயன்படுத்துவர்.
குறளுக்கு உட்பொருளை அவற்றில் சொல்லப்பட்ட அடையாளங்களை அப்படியே எடுத்துப்பார்த்தால் விபரீத எண்ணமே தோன்றும் இங்கு கட்டுரையாளருக்குத் தோன்றியது போல. உரையாசிரியர்களுக்கு அப்படித்தோன்றவில்லை பாருங்கள்.
நன்றி. வணக்கம்.
இன்னும் வரும் இப்பின்னூட்டம் வெளியிடப்பட்டால். வருகிறதா என்று பார்க்கிறேன் முதலில்.
அன்பின் Tamil, உங்கள் வரவு நல்வரவாகுக.
\\\ இங்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் குறட்பாக்களுக்கு கட்டுரையாளர் தந்திருக்கும் விளக்கங்கள் ஒவ்வொன்றைப்பற்றியும் பேசமுடியும் \\\\
எப்படி? இப்படியா!!!!!!!!
\\\\ virutcham
RV ரொம்ப சுலபாமாக நீங்கள் புரிந்து கொள்ள – பல தளங்களில் கட்டுரைகளின் போக்கை தனது பின்னூட்டக் கட்டுரைகளால் மாற்றியதால் எதிர்வினையாற்றியே ஓய்ந்து விட்டவர்களால் தாங்கமாட்டது மட்டறுக்கப்பட்டதால் காவ்யாவாகி விட்ட திருவாளர் ஜோ . \\\\
சார், பயமுறுத்தாதீர்கள்
\\\ சிறுகத் தரித்த குறள் என்று அதைப்பாராட்டுவோர் சொல்லவிழைவது அவ்விருவரிகள் தோன்றிய வண்ணம் எடுக்கலாகாது என்றும், அதன் இறைச்சியைத் தேடிப்பார்த்துப் புரியவேண்டும் என்றுமாம். \\\
அதன் *இறைச்சி* என்று நீங்கள் சொல்வது *உட்கருத்தை*யா?
இறைச்சி என்ற சொல்லாடல் தேவரீருடையதா? அல்லது வேறு யாரும் தமிழ்ச்சான்றோர்கள் *உட்கருத்தைக்* குறிக்க இப்படியான சொல்லாடல்களை ப்ரயோகித்துள்ளனரா என்று தளத்தினருக்குத் தெரிவிக்கலாமே
\\\ இன்னும் வரும் இப்பின்னூட்டம் வெளியிடப்பட்டால். \\\\
thats news and it is too bad.
Tamil என்ற Tamil பற்றுடைய அன்பரின் பின்னூட்டங்களை தமிழ் ஹிந்து தளம் வெளியிடவில்லை என்று நம்ப முடியவில்லையே?
பின்னூட்டம் வெளியிடுவதற்கு தள நிர்வாகிகள் தெளிவாக அலகீடு கொடுத்துள்ளனரே
தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது. மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த அலகீட்டின் படி பொருந்தும் ஒவ்வொரு பின்னூட்டமும் தள நிர்வாகிகளால் வெளியிடப்படுகின்றன என்றே அறிகிறேன்.
ஆடத்தெரியாத நர்த்தகி கூடம் பத்தவில்லை என்று சால்ஜாப்பு சொல்லலாம் தான்.
\\\ குறளுக்கு உட்பொருளை அவற்றில் சொல்லப்பட்ட அடையாளங்களை அப்படியே எடுத்துப்பார்த்தால் விபரீத எண்ணமே தோன்றும் இங்கு கட்டுரையாளருக்குத் தோன்றியது போல. \\\
வ்யாசத்தின் ஆசிரியருக்கு மட்டுமா இந்தக் குறளுக்கு இப்படி பொருள் கொள்ளத் தோன்றியது. ஆசிரியர் சான்றோர்களுடைய (அதில் கலைஞரும் அடக்கமாயிருக்க முடியாது என்பது என் யூகம்) உரையைத் துணை கொண்டே பொருள் கொள்ளத் துணிந்தார் என்பது என்பது என் புரிதல்.
திருக்குறள் தளத்தில் மற்றையவர்களின் உரையைப் பாருங்கள் :-
சாம்பிளுக்கு ஒரு உரை
கலைஞர் உரை:
அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.
பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். — அது எப்படி சார்?
தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள். —-
கலைஞர் என்ன சொல்ல வருகிறார் —- ஒண்ணுமே புரியவில்லை. நீங்களும் கூட. க்ஷமிக்கவும்.
கலைஞர் என்ன நாட்டாண்மையா அவர் கொடுத்த உரையை மட்டும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வதற்கு?
தமிழில்தானே எழுதப்பட்டிருக்கிறது இக்குறட்பா? அதிலுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் தெரிந்த பொருள்தானே?
அப்படியிருக்க நமக்கு எப்படி தோன்றுகிறது என்று சொன்னால் போதாதா? அப்படிச்சொல்லும்போது அவ்வுரை கட்டுரையாளரின் உரையினிருந்து மாறுபட்டாலோ, அல்லது பிற் உரைகாரகளிடமிருந்து மாறுபட்டிருட்ந்தாலோ அஃதென்ன மாபாவமா? எந்த உரைக்காரருக்கும் – அவர் பரிமேலழகராக இருந்தாட்கூட – ஏக போக உரிமையைத்தமிழ் மக்களோ தமிழ் மொழியோ கொடுத்திருக்கிற்தா? இக்கட்டுரையாளர் கூட, இப்படிக்கூட உரையெழுதுவார்களா என்றுதான் இறும்பூதெய்துகிறார்?
என் உரை கலைஞரிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது.
பல்லக்கில் பயணிப்பவர் அறவழி நடந்த ஆன்றோருவர். பல்லக்குத்தூக்கிகள் உலகமாந்தர்.
தூக்குதல் = மெச்சுதல்.
தூக்குதலுக்கு ஒரு நல்ல காரணம் மெச்சி ‘இவனன்றோ ஒரு மனிதருள் மாணிக்கம்! இவனைபோன்றல்ல உலகத்தோர் வாழ வேண்டும்? என்று காட்டுவதற்காக.
ஆங்கிலத்தில் சொன்னால் –
The person in the palanquin stands as a symbol for the person who is the embodiment of virtuous life
The palanquin bearers stand for the people of the world.
The act of lifting him stands for an effort to show him clearly to others to take him as a model of virtuous man who is admired by the whole world. Learn from him and live like him.
அறவழி நடந்தால் நம்மை உலகம் ஏத்தும் என்பதே இக்குறட்பாவின் இறைச்சி.
திருக்குறள் நூலில் உள்ள எல்லா பாடல்களும் விளக்க உரை இல்லாமல் புரிந்துகொள்ள முடிவதில்லை. இருப்பினும் பிற்போக்குத்தனமான உரைகளை எல்லோராலும் ஏற்று கொள்ள முடிவதில்லை.
தெய்வம் தொழாள் குறளில் அய்யன் வள்ளுவன் சொல்லவந்தது அரசனை நம்பி புருஷனை கைவிட்டதாக சொல்லப்படும் பழமொழியில் சொல்லப்படும் பெண்போல் மூட நம்பிக்கையில் இருக்க கூடாது என்றும் எடுத்துக்கொள்ளலாம் அல்லவா.
கணவனால் மட்டுமே குழந்தை பேரு தரமுடியும் என்பதை அறியாமல் அரச மரத்தை சுற்றிவந்து வயிற்றை தடவும் பெண்ணாக இருக்க கூடாது என்றும் எடுத்துக்கொள்ளலாம் அல்லவா.
தெய்வ வழிபாடு செய்வதிலேயே காலத்தை கழிக்காமல் கணவனையும் குடும்பத்தையும் பேனுகின்றவள், குறிப்பறிந்து தேவைகளை தீர்த்து வைப்பவள் பருவத்திற்கு பெய்கின்ற மழைக்கு ஒப்பானவள் என்றும் ஏற்றுகொள்ளலாம் அல்லவா.
முனைவர் முத்துக்குமாரசுவாமி எழுதிய பின்னூட்டத்தைப்படித்துவிட்டு இங்கு வரவும்.
ஒரே குறளில் வரும் ஒரே சொல்லுக்கு இருவேறு பொருட்கள் கொடுத்தார் வள்ளுவர் எனபது நம்ப முடியாத கதைதான்.
//தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை//
முதலில் வரும்போது தொழுதல் என்பது தெய்வத்தைத் தொழுதல் என்றும் இரண்டாமிடத்தில் அச்சொல் பேணுதல் என்ற பொருளைத்தருமெனபது நம் வசதிக்கு ஏற்படுத்திக்கொண்டதுதான் என்பது என் பார்வை.
அது சரி. இக்குறள் என்னதான் சொல்கிறது என்பார்வையில்?
தெய்வம் தொழா என்பதில் வரும் தொழா – முனைவர் முத்துக்குமாரசுவாமி தம் விளக்கத்தில் இறுதியில் சொல்லும் இலக்கணத்தின் படி, நெகட்டிவ் பாசிட்டிவாக மாறும். காக்கை கரவா கரைந்துண்ணும் என்பதை தமிழாசிரியர் இவ்விலக்கணத்தை விளக்கும்போது எடுத்துக்காட்டுவர். அதன்படி, காக்கை கரைந்து பிறகாக்கைகளை அழைத்து பகுத்துண்ணும் என்பது பொருள். கரவா = கரைந்து.
அவ்வாறாக, இங்கு தெய்வம் தொழா என்றால், தெய்வத்தைத் தொழுது என்றே பொருள்படும். தெயவம் விலக்கப்படவில்லை. அது பொது அறமே என்றாலும், வள்ளுவர் முதலிலேவைத்தார். அவர் குறள்களும் இறைவணக்கத்துடன் தொடங்குகிறது என்று நோக்கிக்கொள்க.
கொழநனைத் தொழுதல் – எனபது இக்காலத்தில் நடப்பது இல்லையாதலால், நாம் இக்கால வழக்கத்தை அக்காலக்குறளின் மேலேத்திச் சொலல நமக்கேற்ற மாதிரி திரித்துக்கொள்வதேயாம். குறள் ஒரு வரலாற்றுப்பெட்டகம் எனபதை மறக்கலாகாது. அன்றைய தமிழர்களிடமிருந்த பல வழக்கங்களைச்சொல்ல்லிச்செல்லும் இவர் பெண்ணுக்கு அன்றைய உலகம் என்ன விதி வைத்தததோ அதை மாற்றவில்லை.
அதன் படி –
கணவனைத் தொழுதெழுதாள் என்பதே வள்ளுவர் சொல்வது. காரணம், வள்ளுவர்’ உலக்த்தோடு ஒட்ட ஒழுகாமல் போனால் பலகற்றும் கல்லாரே என்று ஓங்கிய்ரைத்தவரல்லவா? பெண் விடயத்தில் மற்றும் ஏன் மாறவேண்டும்?
அக்கால வழக்கத்தின்படி – எவ்வழி ஆடவர் அவ்வழி வாழ்தல் பெண்ணுக்கு வைக்கப்பட்ட விதி. இதன் காரணம் கணவனைக் கொழுநன் என்ற விளிச்சொல்லில் புதைந்து கிடைக்கிறது. தனித்து பெண்ணால் வாழ முடியாது. அவள் கணவனைச்சார்ந்தே வாழ முடியும். அல்லது ‘வேரில் பழுத்த பலா..கேட்பாரற்றுக்கிடக்கிறது’ அண்ணே! என்று கயவர்கள் கவர நினைப்பர்.
வள்ளுவரை பெண்ணடிமைத்தனத்தைப் பேணினார் என்றும் ஆணாதிக்கததை ஏற்றுக்கொண்டார் என்றும் சொல்லுதல் அவர் குறட்பாக்கள் அனைத்தையும் ஆழ்ந்து கற்றோர் சொல்லமாட்டார்.
மாறாக –
பெண்ணே, உலகவிதிகளை நீ மீறும்போது, அதனால் உனக்கே துயரம் வருகிறது என்பது எதார்த்தமாகும். கணவனைச்ச்சார்ந்தே உன் வாழ்க்கை. அதைப்புரிதல் மட்டுமில்லாமால், அதை செவ்வனே செய்தால், அவ்வாழ்க்கை உண்மையினால் பலன்பெருவாய் என பெண்ணை எச்சரிக்கிறார் பொயாமொழிப்புலவர்.
ஏன் பொய்யாமொழிப்புலவர்?
அவர் பொய் சொல்லமாட்டார். கசப்பானதாக இருந்தாலும் எதார்த்தத்தைக் காட்டுவது ஒரு சான்றோனின் கடமை. அதையும் காட்ட வேண்டியவருக்குக் காட்டி எச்சரிப்பது மனிதாபிமானமாகும். வள்ளுவர் மனம் விரிந்தது. இரக்கமுண்டு. கோபமுண்டு. அறபத்தனங்கள் கிடையா அவரிடம்.
எனவே இறைவனைத் தொழல் பின்தள்ளிவிட்டு கணவனைத்தொழுதலை முன்வைத்து அப்படிச்செய்தால் நீ மஹா பெரிய தர்ம பத்தினி ஆவாய் எனப்து அபத்தமான விளக்கம்.
//ஆனால், கடவுள் வாழ்த்திலேயே பரிமேலழகர் உரையிலேயே, இறை வணக்கம் பற்றிச் சொல்லும் போது, இருபாலாருக்கும் உரிய பன்மை விகுதிச் சொற்கள் ஒன்றல்ல பன்னிரு இடங்களில் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன.
ஆக, இக்குறளுக்கு இத்தகு உரையெழுச்சி பெற்றது ஒரு வகையில், இஸ்லாமியம் போன்ற பிறசமயத்தாக்கமோ? ஏன்று கூடச் சிந்திக்கத் தோன்றுகிறது. இவ்வுரை மூலம் பெண்களின் இறைவழிபாட்டு உரிமை மறுக்கப்படுகின்றது.//
..பரிமேலழகர் ஆர் என்று தெரியாதவர் இப்படி ‘பிறசமயச்சார்போ அல்லது தாக்கமோ என மதி மயங்குவர்.
பரிமேலழகர், கச்சி (காஞ்சி) உலகளந்த பெருமாள் கோயில் ஊழியர் (பூசனை செய்பவர்) தீவிர வைணவப்பற்றாளர். வைதீக நெறிகளை வாழ்க்கையில் கடைபிடித்தொழுகியவர். இபபடி இவரைப்பற்றித் தெரிந்தவர்கள் – குறிப்பாக திராவிட இயக்கச்சாயலுள்ளோர் – இவர் வள்ளுவரின் குறளகளுக்கு வைதீக நெறிகள் வழியாகவே திரித்தே உரையெழதியிருக்கிறார் என்று ஒரு விமர்சனத்தை முன் வைக்கின்றனர். I can give their examples if someone asks me here. Otherwise, silence is golden.
இப்படியிருக்க, கட்டுரையாளர் பரிமேலழகர் போன்ற தீவிர வைணவரையும் ‘பிறமதத்தால் கவரப்பட்டவர்’ என்ற பொருள் படும்படி சேர்த்து எழுதியிருப்பது, unbearable insult to Parimelazhagar.
samana samaya karuththukkalodu oppttu thirukkuralai padiththal muzumaiyagappuriyum saiva karuththukkalai edaiye solli arai kuraiya padiththal ippadiththan kuzappam erpadum
நம் வள்ளுவர் சமயம் கடந்தவர். அவர் பயன்படுத்திய இந்திரன் போன்ற சொல்லும் கூட தலைவன் என்ற பொருளையே குறிக்கும்.