தொடர்ச்சி…
61. यद्भासा भास्यतेsर्कादि भास्यैर्यत्तु न भास्यते |
येन सर्वमिदं भाति तद्ब्रह्मेत्यवधारयेत् ||
யத்பாஸா பாச்யதேர்காதி பாஸ்யைர்யத்து ந பாஸ்யதே |
யேன சர்வமிதம் பாதி தத்ப்ரஹ்மோத்யவதாரயேத் ||
எதன் ஒளியினால் ஒளிருமே இரவி யாதி
எதனை அவை ஒளிர்க்க வேலாது – எதனாலே
இந்த உலகெல்லாம் இலகும் அதுதானே
அந்தப் பிரமம் அறி
(எது தரும் ஒளியால் சூரியன் முதற்கொண்டு அனைத்தும் பிரகாசமாக இருக்கின்றனவோ, எதனை அவைகள் எதுவும் ஒளிரச் செய்ய முடியாதோ, எதன் ஒளியால் இந்த உலகமெல்லாம் பிரகாசமாய் இருக்கிறதோ, அந்தப் பொருளே பிரம்மம் என்று அறிவாய்.)
நாம் காணும் ஒளி என்று தொடங்கி நம்மைக் காண வைக்கும் ஒளியைப் பற்றிய மிகவும் ஆழ்ந்த கருத்துக்கள் உடைய இந்த ஸ்லோகத்தை நாம் நன்கு புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். உலகத்தை நாம் காண்பது ஏதேனும் ஒரு ஒளியைக்கொண்டே நடக்கிறது. பகல் நேரம் என்றால் அது சூரிய ஒளியாகவும், இரவு நேரம் என்றால் சந்திரன், நக்ஷத்திரம் அல்லது ஒரு விளக்கின் துணை கொண்டோ நாம் எதனையும் காண்கிறோம். நமக்குப் பார்ப்பதற்குக் கண் இருந்து, நமது அந்தக்கரணங்களும் நம்முடன் ஒத்துழைப்பதனால் ஒன்றை நாம் காண முடிகிறது என்றாலும், ஒளி இல்லையேல் நம்மால் எதையும் பார்த்து அறிய முடியாது.
இந்தத் தத்துவத்தைத்தான் நாம் கோவிலில் சென்று இறைவனை வணங்கும்போது, நமக்குத் தீபம் அல்லது கற்பூரம் ஆரத்தி காட்டி, பின் வரும் முண்டக உபநிஷத ஸ்லோகத்தையும் சொல்லி நமது உண்மையை நமக்கு நினைவூட்டுகின்றனர்:
ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம் ந இமா வித்யுதோ பாந்தி குதோயம் அக்னி
தமேவ பாந்தம் அநுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி (2 – 2 -10)
அதன் பொருள்: அங்கே சூரியன் ஒளிர்வதில்லை; சந்திரனும் நக்ஷத்திரங்களும் ஒளிர்வதில்லை; மின்னல் ஒளிர்வதில்லை. இந்த அக்னி எப்படி ஒளிர முடியும்? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன.
ஏதோ கோவிலுக்குச் சென்றோம், அங்கு கிடைத்த தரிசனத்தை ரசித்தோம், பிரசாதத்தைப் பெற்று மகிழ்ந்தோம், வீடு திரும்பினோம் என்று நமது தினசரி நடவடிக்கைகளில் அதையும் பத்தோடு பதினொன்றாக சேர்த்துவிட்டு வெறுமனே இருந்து விடக் கூடாது. கோவிலின் தத்துவார்த்த அமைப்புகளைப் பற்றியும், அங்கு வாழ்க்கைக்கு உதவும் தத்துவங்களை உணர நடக்கும் கிரியைகளின் அர்த்தங்களையும் நன்கு மனதில் பதித்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஆரத்தியின் விசேஷம் என்னவென்றால், “ஐயா, நீ பார்த்துக்கொண்டிருப்பது சூரிய ஒளியில்லை, சந்திர, நக்ஷத்திர, மின்னலின் ஒளியுமில்லை. நீ பார்ப்பது ஒரு அக்னித் துண்டத்தின் ஒளிதான். அது தானாகவே ஒளிர்கின்றது என்று நீ நினைத்துக் கொண்டிருந்தால் அதுவும் உண்மையில்லை. நீ பார்ப்பதனால் அது அங்கு அப்படி இருக்கிறது. பார்த்துக்கொண்டிருக்கும் நீ வெறும் உடலா? நீ இருப்பதாக நினைக்கும் இந்த உலகம் உண்மையா? உடல் உணர்வு இல்லாது நீ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது எங்கே இருந்தது உலகம்? அதனால் உன் உடல் இல்லாது உன் உலகமும் இல்லை. உனக்கு உடல் உணர்வு வரும்போது, நீ வெறும் தூலமாகிய உடல்தானா? அப்போது சூட்சமமான மனம், புத்தி, மற்றும் அவைகளிலும் அதிசூட்சமமான நான் எனும் எண்ணமாகிய அகங்காரம் இவைகள் இல்லையா? ஆக அவை இல்லாமல் உடல் எங்கே இருக்கிறது? அப்போது அந்த நான் என்னும் அதிசூட்சமமான எண்ணம் வருவதற்கு முன்பேயே, நீ உன்னை நான் என்று உணர்வது இல்லையா? அந்த உணர்வே பிரம்மம், ‘அதுவே நீ’. நீ அதுவாக இருப்பதாலேயே எதனையும் காண முடிகிறது. அந்த உனது உள்ளொளியை வேறெதுவும் ஒளிர்விக்க முடியாது” என்ற உண்மையை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆரத்தியைப் பார்க்கும் நம்மில் எத்தனை பேர் இந்தக் கருத்தை உணர்கின்றோம்? இந்த சத்-சித்-ஆனந்த மய உண்மையை விடுத்து, அதனை நமக்குக் காட்ட வந்துள்ள மாயையாகிய நாம-ரூபத்தில் அல்லவா மயங்கி நிற்கின்றோம்?
இதையேதான் ரமணர் “காணும் தனை விட்டுத் தான் கடவுளைக் காணல், காணும் மனோமயமாம் காட்சி; தனைக் காணும் அவன்தான் கடவுள் கண்டானாம்” என்று சொன்னார்.
“கண்டதே காட்சி, கொண்டதே கோலம்” என்று சதா சர்வ காலமும் நாம் நமது இருப்பை விடுத்து இல்லாததில் மயங்குவதாலேயே, அந்தப் பேருண்மையை நமக்கு அவ்வப்போது நினைவூட்டுவதற்கு என்றே நமது முன்னோர்கள் கோவில்கள், குளங்கள், தீர்த்த யாத்திரை, மூர்த்தி தரிசனம், கிரியைகள், சரியைகள் என்று பலவற்றையும் உருவாக்கி, போற்றி, வளர்த்து வழிகாட்டிச் சென்றிருக்கின்றனர். இவைகளின் உண்மையைச் சரிவரப் புரிந்துகொள்ளாது, கோவில்களை வைத்துக்கொண்டு அறமில்லாச் செயல்களில் ஈடுபடுபவர்களைப் பற்றி என்ன சொல்வது?
உலகத்தையே ஒளிர்விக்கும் சூரியனின் சக்தி அணு நிலை மாற்றங்களால் ஒளியும், உஷ்ணமுமாக வெளிப்படுகின்றன என்று அறிவது உலகியல் அறிவு; ஆனால் அதைக் கண்டுபிடிப்பவனும், அந்த ஒளியையும் உஷ்ணத்தையும் அனுபவிப்பனுமான தான் இல்லாது அவை இல்லை என்று உணர்வது பேரறிவு. தனது ஒளியினாலேயே அந்தப் புற ஒளி உணரப்படுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. சூரியன் உலகையே ஒளிர்விக்கலாம்; ஆனால் அது என்னை ஒளிர்விப்பதில்லை; மாறாக எனது ஒளியால் சூரியனின் ஒளி உணரப்பட்டது என்பதையே இந்தச் செய்யுள் நினைவூட்டுகிறது.
62. स्वयमन्तर्बहिव्यार्प्य भासयन्नाखिलं जगत् |
ब्रह्म प्रकाशते वह्निप्रतप्तायसपिण्डवत् ||
ஸ்வயமந்தர்பஹிவ்யாப்ய பாஸயன்னாகிலம் ஜகத் |
ப்ரம்ம பிரகாஷதே வஹ்நிப்ரதப்தாய ஸபிண்டவத் ||
ஒளிர்த்து உலகமெல்லாம் தான் உள்வெளி வியாபித்து
ஒளிர்ந்திடும் அப்பிரமம் ஓர்வாய் – ஒளிரும்
நெருப்பினில் காய்ந்து அங்கி நேர் ஒளிரும் அந்த
இருப்புண்டையைப் போலவே
(நன்கு காய்ந்து எரியும் அக்னியில் இடப்பட்டுள்ள ஓர் இரும்புக் குண்டு, அக்னியைப் போலவே பிரகாசிக்கும். அவ்வாறு ஒளி விடும் குண்டைப் போலவே உலகில் உள்ள அனைத்தையும் பிரம்மம் பிரகாசிக்கச் செய்து, அவை அனைத்தின் உள்ளும், புறமும் வியாபித்துத் தானும் ஒளிர்விடும் என்பதை ஆராய்ந்து அறிந்துகொள்.)
முந்தைய ஸ்லோகத்தில் நாம் பார்த்த சூரியன், சந்திரன் முதலானவைகளினின்று புறப்படும் கிரணங்கள் எதன் மேல் விழுந்து தொடர்பு கொள்கின்றனவோ அவைகளை மட்டுமே பிரகாசிக்க வைக்கின்றன. அதைப் போல பிரம்மமும் தன்னுடன் தொடர்பு கொண்டவற்றை மட்டும்தானே பிரகாசிக்க வைக்கும்; எப்படி எல்லாவற்றையும் ஒளிர்விக்கும் என்று தோன்றக்கூடிய கேள்விக்குத்தான் இந்த ஸ்லோகம் அனைவர்க்கும் எளிதில் விளங்கக்கூடிய ஓர் எடுத்துக்காட்டு மூலம் பதில் அளிக்கிறது.
கொழுந்து விட்டு எரிகின்ற அக்னிப் பிழம்பில் போடப்பட்டுள்ள ஓர் இரும்புக் குண்டுதான் அந்த உதாரணம். அந்தக் குண்டிற்குச் சாதாரணமாக ஓர் உருவம் உண்டு; கருமையான நிறமும் உண்டு. அக்னிக்கோ உருவம் கிடையாது; உஷ்ணமும், நிறமும் உண்டு. அக்னியில் இடப்பட்ட குண்டு சிவப்போ, மஞ்சளோ நிறம் எடுத்துக்கொண்டு, தொடவும் முடியாதபடி தகிக்கிறது. அதனால் அந்த இரும்பை அக்னி என்றா சொல்லமுடியும்? ஆனாலும் நாம் பேசும்போது இரும்பு சுடுகிறது என்கிறோம். அதற்குச் சுடும் தன்மை அக்னியால் வந்ததுதானே? சுடுகிறது என்பதால் அக்னி உருண்டை வடிவம் கொண்டுவிட்டது என்றா சொல்லமுடியும்? அந்த வடிவம் இரும்பினால் வந்ததுதானே? அதாவது அக்னியின் உஷ்ணம், மற்றும் நிறம் ஆகிய தன்மைகள் இரும்புக் குண்டின் உள்ளும், புறமும் படர்ந்து, குண்டின் உருவத்தையும் கொண்டுள்ளது. அதேபோல, பிரம்மமும் அனைத்துப் பொருட்களின் உள்ளும், புறமும் வியாபித்துத் தனது சத்-சித்-ஆனந்தம் முதலான தன்மைகளை அந்தப் பொருட்களின் மேல் ஏற்றிக் காட்டுகிறது.
ஆக உலகியல் பொருட்கள் அனைத்திற்குமே இருப்பு என்ற நிலையோ (சத்), தாம் இருக்கிறோம் என்ற அறிவோ (சித்), தனது இருப்பையே அறிவதால் உள்ள ஆனந்தமோ தன்னளவில் எதுவுமே கிடையாது. அவையெல்லாமே பார்ப்பவனின் தன்மைகளால் வியாபிக்கப்பட்டு, அத்தன்மைகள் அந்தப் பொருட்களுக்கு இருப்பன போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதனாலேயே ஒரு பொருளின் உள்ளும், அதைக் கடந்தும் பரவியிருக்கும் அந்த உண்மையைக் “கடவுள்” என்று உருவகப்படுத்தி நாம் தொழுகிறோம். அதன் பொருளே சகல சீவராசிகளும் “அதுவே” என்பதும், உலகியலில் அதை அறிந்தோர், அறியாதோர், உணர்ந்தோர், உணராதோர் என்ற பாகுபாடுகள் இருக்கலாமே தவிர, வேறெந்தப் பாகுபாடுகளும் இருக்கின்றன என்பது உண்மைக்குப் புறம்பான கூற்றே ஆகும்.
இந்த உண்மையை ஆராய்ந்து அறிந்துகொள் என்று சொல்லி, பிரம்மத்தின் சொரூப லக்ஷணம் 54-வது ஸ்லோகத்தில் தொடங்கி இந்த 62-வது ஸ்லோகம் வரை விவரமாக விளக்கப்பட்டுள்ளது.
63. जगद्विलक्षणं ब्रह्म ब्रह्मणोsन्यन्न किंचन |
ब्रह्मान्यद्भाति चेन्मिथ्या यथा मरुमरीचिका ||
ஜகத்விலக்ஷணம் ப்ரஹ்ம ப்ரஹ்மணோன்யன்ன கிஞ்சன |
ப்ரஹ்மான்யத்பாதி சேன்மித்யா யதா மருமரிசிகா ||
பிரமம் உலகில் பிறிதாகும் அந்தப்
பிரமத்தணுவில் பிறிதாய்ப் – பிரமத்திற்கு
அன்னியம் ஏதும் அவிர்ந்தால் அது மித்தை
உன்னுக கானல் நீர் ஒத்து
(அறியும் பிரம்மம் அறியப்படும் உலகத்திற்கு மாறான இயல்பு உடையது. பிரம்மத்திற்கு அப்பாற்பட்டு வேறெந்தப் பொருளும் இல்லை. பிரம்மத்திற்கு அன்னியமாக வேறெதுவும் தோன்றினால், அது உண்மையில் இல்லாததாயினும் காட்சிக்குத் தோன்றும் கானல் நீர் போன்றதொரு பொய்த் தோற்றம் ஆகும்.)
எங்கும் எப்போதும் இருப்பது பிரம்மம் என்றால், காணப்படும் உலகப் பொருட்களைக் கொண்டே பிரம்மத்தை அறியலாகாதா என்ற சந்தேகக் கேள்விக்குப் பதில் அளிப்பது போல இந்தச் செய்யுள் விளக்கம் கொடுக்கிறது.
அனைத்தும் பிரம்மமே என்றாலும், உலகின் இயல்பும், பிரம்மத்தின் இயல்பும் வெவ்வேறானது. உலகம் நிலையற்றது; வரும், போகும் இயல்புடையது. அதனால்தான் நமது விழிப்பு நிலையில் காணப்படும் உலகம் ஆழ்ந்த உறக்கத்தில் அறியப்படுவதில்லை. நமது கனவிலோ நாம் வேறோர் உலகத்தையே உருவாக்கிக் கொள்கிறோம். உலகின் நிலை இப்படி இருக்க, பிரம்மமோ எப்போதும் உள்ளது; நிலையானது. உலகம் ஓர் அறிவற்ற ஜடம்; பிரம்மமோ அறிவுமயமானது. உலகம் துன்ப மயமானது. பிரம்மமோ ஆனந்தமயமானது. அதனால் உலகம் பிரம்மம் அல்ல. நாம் முன்பு கண்ட அனலில் இட்ட ஓர் இரும்புக் குண்டு அனலின் தன்மையை எடுத்துக்கொள்வது போல, உலகில் உள்ள அனைத்துப் பொருட்களின் உள்ளும், புறமும் பிரம்மம் வியாபித்து இருப்பதால், அவைகள் பிரம்மத்தின் தன்மைகளை எடுத்துக்கொள்கின்றன. இப்படியாக பிரம்மத்திற்கு அப்பாற்பட்டு எந்தப் பொருளும் இல்லை என்பதால், பிரம்மத்தை விடுத்து உலகத்தின் உண்மையை அறியமுடியாது. அதனால் உலகில் உள்ளவைகளைக் கொண்டு பிரம்மத்தை அறியமுடியாது.
மேலும் பிரம்மத்திற்கு அன்னியமாக உலகம் இருப்பதாகத் தோன்றினால், அது இருப்பது போலத் தோன்றும் கானல் நீர் போன்றதொரு பொய்க் காட்சியே. உண்மையை அறியாதவனுக்கு இல்லாத கானல் நீர் இருப்பதாகத்தான் தோன்றும். உண்மையை அறிய முயற்சிப்பவனுக்கே அது மாயை என விளங்கும்.
64. दृश्यते श्रूयते यद्यद्ब्रह्मणोsन्यन्न तद्भवेत् |
तत्वज्ञानाच्च तद्ब्रह्म सच्चिदानन्दमद्वयम् ||
த்ருஷ்யதே ஸ்ரூயதே யத்யத்ப்ரஹ்மணோன்யன்ன தத்பவேத் |
தத்வஞானாச்ச தத்பிரம்மா சச்சிதானந்தமத்வயம் ||
எதுவெது காணவும் கேட்கவும் ஏயும்
அது பிரமத்து அன்னியம் ஆகாது – அதுவுமே
தத்துவ ஞானத்தினால் சச்சிதானந்தமாம்
அத்துவிதப் பிரமமாம்
(எவையெவை காணும்படியாகவும், கேட்கும்படியாகவும் இருக்கின்றனவோ அவை எதுவுமே பிரம்மத்திற்கு அன்னியமானது அல்ல. தத்துவ ஞானம் கொண்டு பார்க்கும்போது அவை அனைத்துமே சத்-சித்-ஆனந்த சொரூபம் ஆகும். அதுவே இரண்டற்ற பரம்பொருளாகவும் ஒளிர்வது தெரியும்.)
“அதுவே நீ” என்ற பொருள் கொண்ட “தத் த்வம்” என்ற சொல் இருப்பவற்றுள்ளேயே உள்ள பேருண்மையைக் குறிப்பிடுவதால், தத்துவம் என்ற சொல் உண்மையை நாடுவதையே சுட்டிக் காட்டுகிறது. அதனால் எது உண்மை, எது மாயை என்று அறிய விரும்பும் சாதகன் முதலில் அறிந்துகொள்வது அவன் கண் முன்னே இருப்பதையும், செவி வழியே கேட்பதையும் தான். கண்ணால் பார்க்கப்படுவது ஓர் உருவமே, காதால் கேட்கப்படுவது ஒரு நாதமே. அவ்விரண்டிற்கும் பொருள் இருக்கும் அல்லவா? அதை நாடுவதுதான் உண்மையை அறிவது. அவ்வாறு உண்மையை நாடும் சாதகன் ஒரு தத்துவ வாதி ஆகிறான்.
அந்தத் தத்துவ ஞான வழியில் பார்க்கும் சாதகனுக்குக் காண்பதிலும், கேட்பதிலும் உள்ள பொருள்தான் மிக முக்கியமாகப்படுகிறது. எந்தக் காட்சியிலும் ஒன்று காணப்பட்டு அது ஒரு பொருளை உணர்த்துகிறது. அதேபோல எந்தக் கேள்வியிலும் கேட்கப்படும் சொல் ஒரு பொருளை அறிவிக்கிறது. ஆக வெறுமே காணப்படுவதையும், கேட்கப்படுவதையும் மட்டுமே எடுத்துக்கொண்டால் அது காட்சிக்கும், கேள்விக்கும் உரிய மாயை என்றாகி, அவை உணர்த்தும் பொருளே உண்மை என்றும் ஆகிறது. ஒரு பொருளை உணர்த்தாத வரையில் காட்சியும், கேள்வியும் இருந்தாலும் பயனில்லாது போகிறது.
அந்தப் பொருளை உணர்பவன் காணப்படும் காட்சிக்கும், கேட்கப்படும் ஒலிக்கும் வேறு என்றாலும், உண்மைப் பொருளை உணர்த்துவதற்கு அவைகள் தேவை என்பதால் காணப்படும் உருவங்களும், கேட்கப்படும் நாதமும் உணர்பவனைப் போலவே பிரம்மத்திற்கு அந்நியமானவைகளாகக் கருதப்படுவதில்லை. இருந்தாலும் தன்னளவில் அவைகளைப் பிரம்மம் என்று கருத முடியாது. ஏனென்றால் காண்பதும், கேட்பதும் ஒருவனது இந்திரியங்களால் என்னும் போது, எப்படி இந்திரியங்களே பிரம்மம் ஆவதில்லையோ, அதே போல காட்சியும், கேள்வியும் பிரம்மம் ஆவதில்லை. பிரம்மத்தின் சந்நிதானத்தில் அவைகள் விளங்குவதால் அவை பிரம்மத்திற்கு அந்நியமானவை அல்ல. அதனால் உலகம் பிரம்மத்திற்கு அந்நியமானது அல்ல என்றாலும், பிரம்மமே உலகமாக ஆகிறது என்று கொள்வது தவறு.
உணர்பவன் பொருளை உணரவில்லை என்றால், உருவங்களும் நாதங்களும் எதற்கும் பயனில்லாது போகின்றன. இவ்வாறு உணர்பவனின் பிரம்ம நிலையில் அனைத்துமே அதன் தன்மைகளான சத்-சித்-ஆனந்த சொரூபங்களாகவே விளங்குகின்றன. அந்த நிலையில் காண்பவன்- காணப்படுவது- காட்சி என்று எதனையும் பிரித்து அறிய முடியாது எல்லாம் ஏக சொரூபமாகவே விளங்கும். காணும் தனது சொரூபமே காட்சியாகி நிற்பதை உணர்வதே அறிய வேண்டியவற்றுள் எல்லாம் உயர்வான பேரறிவாகும்.
(தொடரும்)
Respected Raman jee
Namaskaram
Many many thanks for 21 st Adma Bootham. Every day I am opened this site and search your valuable article. Kindly publish 22 article at the earliest.
My personal heartily thanks for your help in this regard
Namaskaram
Meivazhi Manimozhi Ramalingam M.A., B.L.,
9710663461
உலகம் ஒரு மாயை என்ற வாதம் ஏற்புடுயது அல்ல. சித் அசித் ஈஸ்வரன் தனி தனி தன்மை கொண்டவை. இதனை பகவத் ராமானுஜர் விளக்கியுள்ளார். இதனையும் ஹிந்துவில் எழுதலாம்
கடவுள் நம்பிக்கை என்பது பிறரிடம் யாரும் சான்றிதழ் வாங்கும் விஷயம் அல்ல. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பது பெரிய உண்மை. ஏனெனில் இது வாய் வார்த்தைகளில் அடங்கும் பொருள் அன்று. மொழி என்பது ஒரு குறைபாடுள்ள விஷயம். எனவே வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல என்பதே இந்த ஆன்மீக விஷயங்களில் பொருந்தும். கடவுள் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிறருக்கு சான்றிதழ் வழங்கும் தகுதியும் யாருக்கும் கிடையாது.
” இதனையும் தமிழ் இந்துவில் எழுதலாம் “- நன்றாக எழுதுங்கள் . அனைவரும் படித்து மகிழ்வோம்.
மாயை என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பதை விட மாயை என்பதன் பொருள் என்ன என்பதை நாம் முதலில் தீர்மானிக்க வேண்டும். இந்த பொருள் என்பது எந்த மொழியிலும் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் மாறக்கூடியது.
உதாரணமாக தமிழில் நாற்றம் என்றால் நல்ல வாசனை ( good smell ) என்றும் துர்நாற்றம் என்றால் கெட்டவாசனை ( bad smell ) என்றும் சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் வழக்கில் இருந்தது. ஆனால் 2013- ஆம் ஆண்டில் தமிழில் உள்ள வழக்கு எவ்வளவோ மாறிவிட்டது. இன்று நாற்றம் என்றால் கெட்ட வாசனை ( bad smell ) என்று ஆகி விட்டது. ஆதிசங்கரரும் , ரமண மகரிஷியும் வாழ்ந்த காலக்கட்டங்களில் அவர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு , இன்றைய மொழியில் விளக்கம் தேடும் போது நாம் இதனை மனதில் கொள்ள வேண்டும்.
என் கருத்தில் “மாயா” என்பதற்கு மாறக்கூடியது என்று பொருள். அதாவது எந்த ஒரு பொருளின் வெளித்தோற்றமும் காலப்போக்கில் மாறுதலுக்கு உட்பட்டது. பனி, நீர், நீராவி என்று திட, திரவ, வாயு நிலைகளில் ஒரே பொருளுக்கு பல தோற்றங்கள் ஏற்படுவது போல , உலகில் தோற்றங்கள் நிலையானவை அல்ல. மாறுதலுக்கு உட்பட்டவை. ஆனால் இந்த தோற்றங்களுக்கு பின்னே உள்ள எலெக்ட்ரான், ப்ரோட்டான், ந்யூட்ரான் ஆகியவை என்றும் மாறாதவை. இவற்றின் மாறுபட்ட கலவையே உலகம்/ பிரபஞ்சம். நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்கள் இன்று சொல்லும் தகவல் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த பிரபஞ்சத்தில் நம் பூமியைப்போல மனித உயிர்கள் வாழத்தகுதியான சுமார் 270,00,00,000 கிரகங்கள் உள்ளன என்ற செய்திதான் அது.
மாயா என்பதற்கு அழியக்கூடியது என்று சில அன்பர்கள் பொருள் கூறுகிறார்கள். இந்த பிரபஞ்சத்தில் அழிவு என்று ஒன்றுமே கிடையாது. ஒரு பொருள் வேறு ஒன்றாக மாறுகிறது. அவ்வளவே ஆகும். தண்ணீர் குளிர்ந்தால் பனிக்கட்டியாக மாறுகிறது. இங்கு தண்ணீர் அழிவதில்லை. தோற்றம் மட்டுமே மாறுகிறது. இது போலத்தான் உலகில் அனைத்துமே. எனவே உலகம் ஒரு மாயை என்பது ஒரு முழு உண்மை ஆகும்.
பிரபஞ்சத்தில் நாம் பார்க்கும் எல்லாமே அணுத்துகள்களின் கலவை/ கூட்டு தான். எனவே மாயை என்பதற்கு மாறக்கூடியது என்று பொருள் கொண்டால் சரியாக வரும். அழியக்கூடியது என்று பொருள் கொண்டால் குழப்பம் தான் வரும். கந்த புராணத்தில் முருகப்பெருமான் சூரபத்மனை அழிக்கவில்லை, சேவலும், மயிலுமாக உருமாற்றினார் , சேவல் கொடியாகவும், மயில் வாகனமாகவும் ஆனது என்று படிக்கிறோம். ஏனெனில் அழிவு என்று ஒன்றும் கிடையாது. எதையும் யாரும் உருவாக்கவோ,அழிக்கவோ முடியாது. இருப்பது தான் பல்வேறு தோற்றங்களைப் பெறுகிறது. பழைய தோற்றங்களை இழந்து புதிய தோற்றங்களை பெறுகிறது. அவ்வளவே ஆகும்.
“…உலகம் நிலையற்றது; வரும், போகும் இயல்புடையது……. உலகின் நிலை இப்படி இருக்க, பிரம்மமோ எப்போதும் உள்ளது; நிலையானது. உலகம் ஓர் அறிவற்ற ஜடம்; பிரம்மமோ அறிவுமயமானது…” என்றே இக்கட்டுரையிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு நிலையில் நிற்காத ஒன்று மாயை எனப்படுவதால் உலகம் மாயை என்றாகிறது. ஆனால் என்றும் நிலைத்து உள்ள பிரம்மத்தின் சந்நிதானத்தில் உலகம் காணப்படுகிறது என்ற உண்மையை உணர்வதே ஆன்ம போதம். அதாவது காண்பவன் இல்லையெனில் காணப்படும் உலகம் இல்லை என்பதே அதன் தத்துவம். அது நீர் என்ற ஆதார நிலையே நீராவி போலவும், பனிக்கட்டியாகவும் ஆகிறது என்பது உண்மை என்று திரு. மாசி பெரியசாமி கூறுவது போல. ஆனால் நீருக்கும் ஆதாரம் வேறு மூலங்கள், துகள்கள் என்பதை நாம் இங்கு அலச வேண்டிய அவசியமில்லை.